ஞாயிறு, மே 08, 2022

ஒருவர் அதிக பட்சம் எத்தனை வருடம் பென்ஷன் வாங்கலாம்?

ஒருவர் அதிக பட்சம் எத்தனை வருடம் பென்ஷன் வாங்கலாம்?

(இன்று கிழமை சனி-4)

அமெரிக்காவில் 26ஆவது நாள்

(விட்டுப் போன கட்டுரைகள்)

(நூற்றாண்டு விழாக் காணும் தி.ஜானகிராமனின் 'துணை' என்ற சிறுகதையைப் பற்றி)

-இராய செல்லப்பா

 தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாத சிம்மாசனம் தி.ஜானகிராமனுடையது. (‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள் புகழ்).  வட்டார வழக்கு என்னும் சங்கிலிப் பிணைப்பு இல்லாத பொதுமையான மொழி நடை அவருடையது. பாத்திரங்களையும் சூழ்நிலைகளையும் வர்ணிக்கும்பொழுதும் தேவையற்ற சிக்கல்கள் இல்லாத  எளிய முறையில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார்.   

அதிகார வர்க்கத்தின் நெளிவு சுளிவுகளைப் போகிற போக்கில் நையாண்டி செய்வதும், மனிதர்களின் சாதாரணமான நம்பிக்கைகள் கூட எளிதில் நிறைவேறுவதில்லை என்பதை நகைச்சுவையோடு காட்டுவதும் தி.ஜா.வுக்குக் கைவந்த கலை.


'துணை' என்னும் இக்கதையில் யாருக்கு யார் துணை? முதியவருக்கு இளைஞன் துணையா, இளைஞனுக்கு முதியவர் துணையா?  என்று கேள்வி எழுப்புகிறார் தி.ஜா. 

கதை சொல்லியாக வருபவன், கிருஷ்ணசுவாமி. ஒரு சப் ரிஜிஸ்டிராருடைய பிள்ளை.

கதையில் ஒரு கிழவர், அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை. அவருக்கும் ஒரு பிள்ளை. ஆக மொத்தம் ஐந்து தலைமுறை வருகிறது.

பெரிய கிழவர் தன்னுடைய மகனை "சின்னக்குழந்தை - சின்னக்குழந்தை"  என்று அழைப்பாராம். அந்தச் சின்னக் குழந்தைக்கு இப்போது 79 வயசு! அப்படியானால் பெரிய கிழவருக்கு? “அப்பாவின் வயது 98” என்கிறார் சின்னக் குழந்தை. (ஆனால் நிச்சயம் 102 அல்லது 103  இருக்கும் என்கிறார் சப்-ரெஜிஸ்டிரார். சரியான வயதைச் சொன்னால் கண் திருஷ்டி பட்டுவிடுமாம்!)

அந்த 102 வயதுக் கிழவருக்கு அந்த நாளில் 'லேடிக் கிழவர்' என்று பெயராம். காரணம்,  அவருக்குத் தலையில் கருகருவென்று சுருட்டை முடி தொடையில் வந்து இடிக்குமாம். 'மத்தியானம் படுத்தால் அந்த மயிரையே பந்தாக முடிஞ்சு தலைக்கு அடியிலே தலையணையாய் வைத்துக்கொண்டுவிடுவார்.' பளபளவென்று இருப்பார். அசாத்திய பலம். இருட்டு பிரிவதற்கு முன்னால் எழுந்து கிளம்பிவிடுவார். தன் நண்பன் வீட்டுக்கு போய் அவனுடன் ராட்சச கர்லாக் கட்டையை எடுத்து இந்தக் கையில் 400, அந்தக் கையில் 400  என்று சுத்துவார். 200 தண்டால் எடுப்பார். 300 பஸ்கி எடுப்பார். என்றுமே அவர் வெந்நீரில் குளித்தது கிடையாது.


"அவர் வருவதற்குள் பழைய சோற்றில் புளித்த தயிரைப் போட்டு, பிசைந்து, எரிச்ச குழம்பையும் வைத்துக்கொண்டு காத்திருந்து  ஆனை ஆனையாக உருட்டி அப்பா கையில் சாதத்தைப் போடுவாள் பாட்டி" என்கிறார் 79 வயது சின்னக் குழந்தை.

பென்ஷன் வாங்குபவர்கள் வருடாவருடம் கஜானாவிற்குச் சென்று தாங்கள் உயிரோடு இருப்பதை நேரடியாக நிரூபிக்கும் சடங்கிற்கு அந்நாளில்  'மஸ்டர் டே' என்று பெயர். (இப்போதும் உண்டு. அதற்கு  'லைப் சர்டிபிகேட்' கொடுக்கும் சடங்கு என்று பெயர்.) 

50 வருடங்களுக்கு மேல் பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கும் லேடிக் கிழவரும்,  22 வருடமாக பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கும் அவருடைய பிள்ளையான சின்னக்குழந்தையும், கடந்த நான்கு வருடமாகப் பென்ஷன் வாங்கும் சின்னக் குழந்தையின் மகனும் ஆகிய மூவரும் மஸ்டர் டே அன்று ஒற்றை மாட்டு வண்டியில் ஒன்றாகப் போய் வருவது வழக்கம். இந்த வருடம் அந்த இளையவர் தன் மனைவியோடு காசியாத்திரை போய்விட்டார். ஆகவே இந்த இரண்டு கிழங்களுக்குத் துணையாக கிருஷ்ணசுவாமியை  அழைத்துக்கொண்டு போவதற்காகச் சின்னக்குழந்தை வந்திருக்கிறார்.

"எல்லாம் உங்க பேரன் மாதிரி அவனும்னு  நினைச்சுக்கோங்க” என்னும் கிருஷ்ணசாமியின் தந்தை, அவனிடம், ”ஏய், ஜாக்கிரதையா அழைச்சிண்டு போயிட்டு வா" என்றார்.

"சரி, பத்தேகால் மணிக்கு வந்து விடுகிறேன்" என்று கிருஷ்ணசாமி சொன்னதும், சின்னக்குழந்தை கைத்தடியை எடுத்துக் கொண்டு, கால்கட்டையை மாட்டிக்கொண்டு, படியிறங்கினார்.

சொன்ன நேரத்துக்கு கிருஷ்ணசாமி அவர்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். அவனைப் பார்த்த லேடிக் கிழவர், அவனுடைய வயது 27 என்றதும் "இன்னுமா கல்யாணம் செய்து கொள்ளாமல் சும்மா இருக்கிறாய்?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

அவருக்கும் சரி, சின்னக் குழந்தைக்கும் சரி 17 வயதிலேயே சாந்தி கல்யாணம் முடிந்துவிட்டதாம். காசி யாத்திரை போய் இருப்பவருக்குத் தான் கொஞ்சம் லேட்டாக 20 வயதில் திருமணம் நடந்ததாம். (அவருக்கு ஒரு மகன். நோயாளி. தாசில்தார் ஆக இருக்கிறான். அவனுக்கு 25 வயதில் தான் திருமணம் நடந்ததாம்). (இந்தக் கதை எழுதப்பட்ட வருடம் 1950).

வாடகைக்கு ஒரு மாட்டு வண்டியைப் பேசி, வண்டியின் முன்புறம் லேடிக்கிழவரும், அடுத்து சின்ன குழந்தையும்,  பின்பக்கமாக கிருஷ்ணசாமியும் உட்கார்ந்து கொண்டார்கள்.

கஜானா என்னும் ஹுசூர் டிரஷரி ஆபீஸில் வண்டி நுழைந்தது. எக்கச்சக்கமான கூட்டம். ஏராளமான மரங்கள். எங்கெங்கே விருட்சம் (நிழல்) இருந்ததோ அங்கெல்லாம் கிழங்கள் படுத்துக்கொண்டு இருந்தன என்கிறார் தி.ஜா.

தன்னுடைய நீண்ட கால நண்பர்களை அங்குச் சந்திக்க முடிந்ததில் லேடிக் கிழவருக்கு எக்கச்சக்கமான சந்தோஷம். அவர்களுக்கோ இவருடைய நீண்ட ஆயுள் மீது பொறாமை. ஆஸ்துமா தவிர வேறு வியாதிகள் இல்லை. கண் தெரியவில்லையே தவிர, காது நன்றாகக் கேட்கிறது. பொறாமைக்காரர்களுக்கு வேறென்ன வேண்டும்?

மஸ்டர்டே வேலைகள் முடிந்து இரண்டு தாத்தாக்களும் கிருஷ்ணசாமியும் வண்டியில் ஏறினார்கள். காம்பவுண்டு தாண்டியதும் மாடு பறந்தது. 'மெயின் ரோடைக் கண்டால்தான் நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம்' என்றான் வண்டிக்காரன். நல்ல மேற்கத்திக் காளை. வண்டிக் குடமும் நல்ல அழுத்தமான குடம். வண்டியின்  ஓட்டம் காதில் இனிமை  ஊற்றியது  என்கிறார் தி.ஜா.

அதன்பிறகு என்ன ஆயிற்று என்று கிருஷ்ணசாமிக்குத் தெரியாது.

***  

அவன் தரையில் கிடந்தான். அவன்மேல் சின்னக்குழந்தையும் லேடிக் கிழவரும் கிடந்திருக்க வேண்டும். வண்டி பின்பக்கமாகக் குடை சாய்ந்து விட்டது. ஏர்க்கால் ஆகாயத்தை எட்டியது. மாட்டின் கழுத்துக் கயிறுதான் அறுந்திருக்க வேண்டும்.

அப்பொழுதும் லேடிக் கிழவரின் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது. "வண்டியைத் தூக்குடா" என்கிறார் வண்டிக்காரனை நோக்கி.

கிருஷ்ணசாமி என்னும்  இளைஞனாகிய அவனால் எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைந்திருந்தது. இரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

இரத்தத்தைப் பார்த்ததுதான் கிருஷ்ணசாமிக்குத் தெரியும். கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று. டாக்டர்- நர்ஸ்- ஜெனரல் ஆஸ்பத்திரி.

எக்ஸ்ரே எடுத்தார்கள். எலும்பைப் பொருத்தி, பாரிஸ் பிளாஸ்திரி போட்டு, கையைக் கழுத்தோடு மாட்டிவிட்டார்கள். வேறு ஒரு வண்டியில் தூக்கி உட்கார வைத்தார்கள்.

சின்னக்குழந்தையின் நெற்றியில் ஒரு சிறிய குறுக்கு பிளாஸ்திரி தான். லேடிக் கிழவருக்கு முகத்தில் மாத்திரம் அடியாம்,  வேறு காயமில்லை.

அம்மா போட்ட மெத்தையில் படுத்துக்கொண்டான் கிருஷ்ணசாமி. "மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டு விடு" என்றாள் அம்மா.

"எங்களோடு வந்ததுக்குத் தண்டனை உங்க குழந்தைக்கு! படுகிழவர்கள் இருக்கோமே, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ? ராஜா மாதிரி அழைச்சிண்டு போனான் குழந்தை.." என்றார் சின்னக்குழந்தை.

"……நாம் அழைச்சிண்டு வந்துட்டோம்" என்று முடித்தார் லேடிக் கிழவர்.

*****

 17 வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து நியூஜெர்சி செல்லும் வழியில் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில், வண்டி மாறுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த ஓர் அதிகாலைப்பொழுதில்  தி.ஜானகிராமனின் 'சிலிர்ப்பு’  என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றிருந்த இக்கதையைப் படித்துக்கொண்டிருந்தபோது என்னை அறியாமல் பலமுறை சிரித்து விட்டேனாம். சுற்றியிருந்தவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்களாம். என் மனைவி சொன்னாள். இது உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

  -இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து.

14 கருத்துகள்:

  1. சிரிக்க வைத்த சிறுகதை 'துணை ' சிந்திக்கவும் வைத்தது. வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் மனது இருபதுக்குள் இருக்கும்படி வைத்துக் கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  2. நல்ல விவரணம். சிரிக்க சிந்திக்க என்று கதையே கதையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா8 மே, 2022 அன்று AM 10:48

    அற்புதமான எழுத்தாளர்!சென்னை
    மயிலாப்பூர் ராக்கியப்பநாயக்கன்
    தெருவில் ஒருவீட்டில் எதிரெதிரே
    சுமார் ஒருவருஷம் வசித்தோம்.
    1961 என நினைக்கிறேன்,என் வயது
    15 இருக்கலாம்.அவரின் நாலுவேலி
    நிலம்கதை கல்கியில் வந்து ,
    ஸேவாஸ்டேஜ் குழுவினர் மேடை
    நாடகமாக இருந்த சமயம்.
    பின்னர் திரைப்படமாகவும் வந்தது.
    உங்கள் விமர்சனம் நன்குள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அப்போது இருந்த எழுத்தாளர்களில் இவரெல்லாம் உயர் வர்க்கம்.  கவர்மெண்ட்டு உத்தியோகம்.  எம் வி வி, கரிச்சான், கரிச்சான் குஞ்சு, பு பி போன்றோர் வறுமை எழுத்தாளர்கள்!  தி ஜாவின் எத்தனை கதைகள் படமாகி இருக்கின்றன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் பிரபலமான படம் 'மோகமுள்.' தவிர நான்கைந்து சிறுகதைகள் படமாகியுள்ளதாகத் தகவல்.

      நீக்கு
  5. இளசுகளின் கதை (விமர்சனம்) நல்லாயிருக்கு...!

    பதிலளிநீக்கு
  6. பல இடங்கள் சிரிக்க வைத்தது. யார் யாருக்குத் துணை நல்ல கேள்வி. 102 வயது லேடிக்கிழவர் திடன். 27 கி சா கை ஒடிந்து அப்போதே இப்படி என்றால் இப்போதோ?!! நல்ல கதை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் 'அந்த நாள் ஆண்டவன்' படைப்பு! ஆகவே திடகாத்திரமானவர்களாக இருந்தார்கள். இளைஞர்களோ பிற்கால ஆண்டவன் படைப்பு. ஆகவே சற்று ரிலாக்ஸ் ஆகிய இருக்கிறார்கள்.

      நீக்கு
  7. தி. ஜா. அவர்களின் கதை வாசிப்பு அனுபவம் நன்று. அவரது சில கதைகள் ரசித்து படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! உங்களின் விரிவான வாசிப்பு பாராட்டுக்குரியது.

      நீக்கு
  8. "பென்ஷன் வாங்குபவர்கள் வருடாவருடம் கஜானாவிற்குச் சென்று தாங்கள் உயிரோடு இருப்பதை நேரடியாக நிரூபிக்கும் சடங்கிற்கு அந்நாளில் 'மஸ்டர் டே' என்று பெயர். "

    "மஸ்டர் டே " என்ற புதிய தகவலை தங்கள் கதை மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    இக்கால இளைஞர்களுக்கு இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தெரியுமா என்பது தெரியவில்லை. புத்தகம் படிப்பது என்பது முற்றிலுமாக அழிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  9. தி.ஜா.வின் கதையை யாராவது இப்படி சுருக்கி சொன்னால் உடனே மூலக்கதையை படிக்க வேண்டும் என்று தோன்றி விடும்.

    பதிலளிநீக்கு