சனி, மே 07, 2022

எங்கு போயின என் கிளைப்பறவைகள்?

எங்கு போயின என் கிளைப்பறவைகள?

(இன்று கிழமை வெள்ளி -4)

அமெரிக்காவில் 25 ஆவது நாள் 

(குடும்பம் ஒரு தொடர்கதை)


நடேசய்யர் என்று ஒரு ஆசிரியர் மூன்றாம் வகுப்பு முதல் எங்களுக்கு கணக்கு நடத்திக்கொண்டிருந்தார். கடப்பா கற்கள் வேயப்பட்ட தரையில்தான் உட்காருவோம்.  எப்போதும் ஜில்லென்று இருக்கும்.  மங்களூர் ஓடு வேயப்பட்ட கோபுரம் போன்ற கூரை உடைய ஒரு பெரிய ஹால்.  அதில் ஆறு கரும்பலகைகள்  இருந்தன. அதாவது ஆறு வகுப்புகள் அங்கு நடக்கும் என்று பொருள். ஒன்றாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள்,  இரண்டாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள்,  மூன்றாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள்.  ஆனால் ஆறு பிரிவுகளுக்கும்  சேர்த்து மூன்று ஆசிரியர்கள் தான் இருந்தார்கள்.  அவர்களில் ஒருவர்தான் நடேசய்யர். 


நடேசய்யருக்கு ஒரு பேரன், மூர்த்தி என்று பெயர். என் வகுப்பில் தான் படித்தான்.  ஆனால் நான் ‘ஏ’ பிரிவிலும் அவன் ‘பி’ பிரிவிலும் இருந்தோம்.  என் பிரிவில் நானும் அவன் பிரிவில் அவனும் முதல் மாணவனாக இருந்தோம்.  ஆனால் கணக்கில் மட்டும் எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அதிலும் பின்னங்களை வகுத்தல் என்பது எனக்கு எப்போதுமே சரியாக வராது. உதாரணமாக, 5/6  என்பதை 1/12 ஆனால் வகுக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஆசிரியர் “தலை கீழாகப் போட்டு பெருக்கு” என்று சொல்லியிருந்தார். ஆனால் எந்த எண்ணைத் தலைகீழாகப் போடவேண்டும் என்பது மட்டும் என் மனத்திற்குப் பிடிபடவே இல்லை. எனவே முதலில்  கொடுத்துள்ள எண்ணையே தலைகீழாகப் போடுவது என் வழக்கம். ஆகவே 5 /6 என்பதை  6 /5 என்று எழுதிக்கொண்டு நான் பெருக்குவேன்.

ஆகவே என் விடை = 6/5  x  1/12  = 1/10 என்று வரும்.

ஆனால் மூர்த்திக்கோ விடை 10 என்று வரும். ( 5/6  x  12/1) =10/1 = 10


இப்படித் தலைகீழாகப் போட்டுப்  பெருக்குவதன் ரகசியம் எனக்குப் புரிந்தபோது நான் பி.யு.சி வகுப்பில் இருந்தேன். மூர்த்தியும் என்னுடன் அதே கல்லூரியில் படித்தான். பி.எஸ்சி நான் அதே கல்லூரியில் படித்தேன். அவன் வேறு ஊருக்குச் சென்று படித்தான். பட்டப்  படிப்பு முடித்தவுடனே அவனுக்கு பூனாவில் ஏஜி’ஸ் ஆபீசில் வேலை கிடைத்துவிட்டது. இன்றுவரை அவனை நான் பார்க்கவே முடியவில்லை! 


பி.யு.சி.யில் ஸ்ரீவத்சன் என்ற நண்பன் இருந்தான். கணக்கில் அவன் புலி. நானும் புலிதான் என்றாலும் ஒரு காலில் சுளுக்குப் பிடித்த புலி. அதாவது எனக்கு திரிகோணமிதி அத்துப்படி. ஆனால், தேற்றங்கள் அடிப்படையில் “ரைடர்” என்று கணக்கு கொடுப்பார்கள் அது மட்டும் தடுமாறும். உதாரணமாக, “முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180 டிகிரி” என்ற புகழ்பெற்ற தேற்றத்தை ஒட்டி கேட்கப்படும் ரைடர்கள் எனக்குப் புரியாமலேயே இருந்தன. ஸ்ரீவத்ஸனோ முப்பது தேற்றங்களில் எந்த ரைடர் வந்தாலும் பிய்த்து உதறிவிடுவான். அவனும் பிஎஸ்சி வேறு கல்லூரியில்தான் படித்தான். பிற்பாடு அவன் சென்னையில்  எம்எஸ்சி யில் சேர்ந்தவரை நினைவு வருகிறது. அப்புறம் அவனுடைய தொடர்பு விட்டுப்போய்விட்டது. அநேகமாக வெளிநாட்டில் அறிவியல்துறையில் ஆய்வாளனாகப் போயிருப்பான் என்று சில நண்பர்கள் கூறினார்கள்.


பாலகுமார் என்ற மாணவன் ஐந்தாம் வகுப்பில் என்னுடன் படித்தான். பள்ளியிறுதி வரை ஒன்றாகப் படித்தோம். ஆற்காட்டில் ஓர் அரசமரத்தடியில் நாங்கள் கவியரங்கம் நடத்துவோம். அவன் தலைமையில் நானும் இன்னும் இரண்டு மாணவர்களும் அறுசீர் விருத்தங்கள் படிப்போம். அவனுடைய அப்பா ஆடிட்டராக இருந்தார். அவன் எங்கெல்லாம் ஆடி அடங்கினானோ தெரியாது.


என்னுடன் பிஎஸ்சி வகுப்பில் முப்பது அல்லது முப்பத்திரண்டு மாணவர்கள் படித்தார்கள். ஜெயப்பால் என்ற பெயரில் இருவர் இருந்தார்கள். என்ன ஆனார்களோ தெரியாது. பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், பின்னால் பிஎட் படித்து ஆசிரியரானான் என்ற தகவலை இன்னொரு சக மாணவனான அருங்குன்றம் வேலு என்னிடம் கூறியதுண்டு. வேலுவும் பிஎட் படித்து பட்டதாரி ஆசிரியராகி, காஞ்சிபுரத்தில் தலைமை ஆசிரியராகி, ஆசிரியர் கூட்டணியில் முக்கிய பதவியிலும் இருந்தது, அவ(ன்) ர் பணிநிறைவு பெற்று ஓய்ந்தபிறகே எனக்குத் தெரிந்தது. தான் எழுதிய ‘சித்திரச் சிலம்பு’ என்ற நாடகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்து நட்பைத் புதுப்பித்துக்கொண்டா(ன்)ர்  வேலு. அதற்கு நன்றியாக, அவ(னா)ரால் எழுதி கையெழுத்துப் பிரதியாகவே இருபதாண்டுகள் கிடந்த நாவலை தூசிதட்டி, தட்டச்சி, பிழை திருத்தி, ‘குவிகம்’ மூலம் “சுந்தரி நீயும் சுந்தரம் நானும்” என்ற பெயரில் வெளியிடச் செய்தேன். 


என்னோடு பட்டப்படிப்பில் இருந்தவர்களில் பத்து பேருக்கு குடும்பநலத்துறையில் எந்த டெஸ்டோ, இன்டர்வியூவுவோ இல்லாமல், எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவுசெய்த ஒரு மாதத்தில் வேலை கிடைத்துவிட்டது. தினந்தோறும் காலையில் நூலகத்திற்குச் சென்று தினத்தந்தியில் சிந்துபாத் கதையைத் தவறாமல் படிக்கும் நான், அதே பக்கத்தில் அந்த வேலைக்கான விளம்பரம் சிறிய எழுத்துக்களில் வரி விளம்பரமாக வந்ததை எப்படி கவனிக்கத் தவறிவிட்டேன் என்று தெரியவில்லை. அந்த வேலையின் பெயர் ‘கம்ப்யூட்டர்’ என்பது. ஆம், கம்ப்யூட்டர்கள் இந்தியாவுக்கு வராத 1970களில் அதன் பொருள் ‘கம்ப்யூட்’ செய்வது - அதாவது ‘கணக்கெடுப்பது’ என்பதாகும். வேலையின்  தன்மையைக் கேட்டால் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியும் உண்டாகும். 20 அல்லது 21 வயதுடைய இந்த இளைஞர்கள், இன்னும் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்படும் குறிப்பிட்ட தாலுக்கா எல்லைக்குள், “குடும்பக் கட்டுப்பாடு’ அறுவைசிகிச்சை இன்னும் செய்துகொள்ளாத ‘தகுதியுள்ள’ பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை சேகரிக்க வேண்டும்!     


அதற்கான படிவங்களை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்லவேண்டும். பெரும்பாலும் கிராமங்களுக்குதான் செல்லவேண்டியிருந்தது. அதற்கு முன்பு, கிராமசேவிகா அல்லது கர்ணம் / மணியக்காரர் அல்லது ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான் இந்த வேலையை ஊதியமின்றிச் செய்துவந்தார்கள். கல்லூரியிலிருந்து அப்போதுதான் வெளிவந்த பளிச்சென்ற வாலிபர்கள் இந்த வேலைக்கு வருவதை கிராமத்துப் பெண்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். ஆனால் அவர்களில் எந்தப் பெண் இன்னும் கு.க. ஆப்பரேஷன் செய்துகொள்ளவில்லை என்ற தகவலை எப்படிச் சேகரிப்பது என்று இளைஞர்களுக்குத் தெரியவில்லை. அதை விடுங்கள், திருமணம் ஆன பெண்களிடமிருந்ததுதான் அந்தத் தகவலைப் பெறவேண்டும் என்பதே ஓர் இளைஞருக்குத் தெரியவில்லை. ஓர் இளம்பெண்ணின் அழகால் கவரப்பட்டு அவர் வீட்டிற்குச் சென்று மேற்படி தகவலை அவரிடமே கேட்கவும், அந்தப் பெண் கோபத்தோடும் நாணத்தோடும் முறைக்கவும்,  பெண்ணின் முறை மாப்பிள்ளை அப்போது வந்துவிடவும், ஊர் மக்கள் தயவால் ஓரிரு அடிகளோடு அவர் தப்பினார். 


இந்தத் தகவல் பரவியதும், ‘கம்ப்யூட்டர்கள்’ அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ‘மறு’பயிற்சி தரப்பட்டதாம். அதற்குள் அடிவாங்கிய நம் இளைஞருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைந்துவிட்டது. எப்படி என்கிறீர்களா? இவர் அடி வாங்கக்  காரணமாயிருந்த பெண், இவருடைய படிப்பையும், அழகையும் கண்டு மயங்கி, “மணந்தால் கம்ப்யூட்டர் - இல்லையேல் பாழுங்கிணறு” என்ற பிடிவாதத்தை வெளிப்படுத்தினாராம். பெற்றோர்களும், எட்டாம் வகுப்பே படித்திருந்த முறை மாப்பிள்ளையைவிட இவரே மேல் என்று புரிந்துகொண்டு, சீர் செனத்தியோடு இவருக்கு அவளைத் திருமணம் செய்துவைத்து விட்டார்களாம். (உரிய காலத்தில் கு.க. செய்துகொண்டிருப்பார்கள் என்று நம்புவோம்). 


(பல ஆண்டுகள் கழித்து மங்களூரில் எனது வங்கியின் தலைமையகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘திடீர் தீயணைப்பு ஒத்திகை’யின்போது இதே போன்ற சுவையான அனுபவத்தை நேரில் கண்டேன். அலுவலகத்தில் இருந்த லிப்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.  எல்லாரும் மாடிப்படிகளையே பயன்படுத்த வேண்டும். தீயணைப்பு துறையின் சைரன் ஒலித்தவுடன் வெளியேற்றம் தொடங்கவேண்டும். ஒவ்வொரு தளத்திற்கும் ஓர் ஆர்வலர் நியமிக்கப்பட்டார். அவருடைய பணி, “ஊனமுற்றோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், பிறகுதான் மற்றவர்கள்”  என்ற வரிசையில் அனைவரையும் வேகமாக இறங்கத் தூண்டுவதாகும். சைரன் ஒலித்ததுதான் தாமதம், இந்த ஆர்வலர்கள், பரபரப்பில், பெண்களின் வயிறும் வயிறை ஒட்டிய பிரதேசமும் சற்றே பருத்திருந்தால்  அவர்களை கர்ப்பிணிகளாகக் கருதி, “ஆர் யூ பிரெக்னண்ட்?” என்று கேட்டு அடிவாங்கிக்கொண்டிருந்தார்கள்!) 


கம்ப்யூட்டராக எனக்கு வேலை கிடைப்பதற்குள் ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை கிடைத்திருந்தது. பின்னர் நான் எம்எஸ்சி படிக்கப் போய்விட்டேன். கு.க. வேலைக்கு நிச்சயம் என்னைவிட வல்லவர் ஒருவர் கிடைத்திருப்பார்.   

           

என்னுடைய சக மாணவர்களாக இருந்த ‘கம்ப்யூட்டர்’களை அதன் பின்னர் நான் சந்திக்கவேயில்லை. 


இதே காலகட்டத்தில், ஒருநாள் நூலகத்திற்குச் சென்றபோது, ‘ஹிண்டு’ பத்திரிகையின் வரிவிளம்பரப் பக்கத்தின் காலே அரைக்கால் பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. காலையில் பேப்பர் பையன் அதை சன்னலுக்குள் செருகும்போது கிழிந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.  ஒரு மாதத்திற்குப் பிறகு, என் சக பிஎஸ்சி மாணவன் ஒருவன் எனக்கு மைசூர்பாக் கொடுத்தான். “எனக்கு டெலிபோன் டிபார்ட்மெண்ட்டில் ஜுனியர் என்ஜினீயராக வேலை கிடைத்துவிட்டது. லக்னோ போகிறேன்” என்றான். 


எவ்வளவு நல்ல வேலை! எப்படி கிடைத்தது என்று விசாரித்தேன். “என்னை மன்னித்து விடுடா!” என்று முன்ஜாமீன் கேட்டுக்கொண்டு விவரித்தான். அன்று கிழிக்கப்பட்டிருந்த காலே அரைக்கால் பக்கத்தில்தான் டெலிபோன் டிபார்ட்மெண்டின் அந்த விளம்பரம் வந்திருந்ததாம். பிஎஸசி பாஸ் இருந்தாலே போதுமாம். நோ டெஸ்ட், நோ இன்டெர்வியூ. விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் வேலை. அவனுடன் என் வகுப்பில் இருந்த ஏழு பேர் விண்ணப்பித்தார்களாம். எல்லாருக்கும் கிடைத்துவிட்டதாம். நான் விண்ணப்பித்தால், தங்களில் ஒருவனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் அந்த விளம்பரத்தை நான் காணாதபடி கிழித்துவிட்டார்களாம்! 


அந்த ஜுனியர் என்ஜினீயர்களையும் அதன்பிறகு நான் சந்திக்கவேயில்லை.


என் கிளைப்  பறவைகள் ஏனிப்படி என்னைக் கண்டுகொள்ளாமல் பறந்துவிட்டன? நான் அகில இந்திய வங்கிப்  பணியில் சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நாடு சுற்றிக்கொண்டிருந்தது காரணமாக இருக்குமோ?


அதே சமயம், பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற என் மனைவி, தன்னுடன் ஒன்றாவது முதல் படித்த எல்லா மாணவிகளின் பெயரையும் இனிஷியலோடு கூறுவாள். உடன் வேலை பார்த்த சுமார் முன்னூறு ஆசிரியர்களையும் இன்றுவரை தொடர்பில் வைத்திருக்கிறாள். அது மட்டுமல்ல, அவளிடம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவிகளின் பெயர் அவளுக்கு இன்னும் மறக்கவில்லை. அந்த மாணவிகளும் அவளை நினைவில் வைத்திருக்கிறார்கள். கோடம்பாக்கம் பகுதியில் அவளுடைய மாணவிகள் அதிகம் வசிக்கிறார்கள். இப்போதும் ஏதாவது சினிமாப்பாடல் காட்சி திரையில் வந்தால், குழுநடனம் ஆடும் பெண்களில் யாராவது ஒருத்தியைக் காட்டி, ‘அவள் தான் என்னிடம் பத்தாவது படித்த பாத்திமா’ என்பாள்! அந்த அடையாளத்தில் பிழை ஏற்பட்டதேயில்லை. 


ஆசிரியைகள் ஆலமரம்போல. அதில் அமரும் பறவைகள் தங்கள் கூட்டை மறப்பதில்லை. 


 -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 


13 கருத்துகள்:

 1. பெயரில்லா7 மே, 2022 அன்று 10:56 AM

  உங்கள் ஞாபகத்திறன் பிரமிப்பூட்டூகிறது. உங்கள் நினைவலைகளை சுவை படவும் க்ரம்மாகவும் பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ரசித்தேன். நன்றி

  பதிலளிநீக்கு
 2. சார் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பொதுவாகப் பெண்கள் தங்கள் தொடர்புகளைத் துண்டிக்காமல் வைத்திருப்பதிலும் தொடர்வதிலும் வல்லவர்கள் என்று!!!!!!!

  ஆசிரியர் தொழிலிலும் கூட ஆசிரியர்களை விட ஆசிரியைகள்தான் அதிகம் நினைவு வைத்திருப்பவர்கள் தொடர்பில் இருப்பவர்களும். அதை நண்பர் துளசி சொல்லுவார் பாருங்கள்! ஹாஹாஹா (சொல்லுவார் என்று நம்புகிறேன்!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 3. கணக்கில் புலி - ஒரு கால்தான் சுளுக்கு எனக்கெல்லாம் நான்குகால்களும் வால் கூடச் சுளுக்காகத்தான் இருந்தது! இருக்கிறது.

  பொதுவாக நீங்களாகவே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்பவர் மற்றும் நல்ல முறையில் தொடர்புகளைத் தொடர்வதிலும் வல்லவர் என்பது என் கணிப்பு. எப்படி உங்களுடன் படித்தவர்களுடன் ஆன தொடர்பு இல்லாமல் போயிற்று? ஆச்சரியம் சார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. கிளைப் பறவைகள் துணைப் பறவைகளோடு எனவே மாறியன கூடு

  பதிலளிநீக்கு
 5. அப்படித்தான் தோன்றுகிறது....நீங்கள் சொன்னதை மூன்று வரிகளாக எழுதினால் இப்படி வருகிறது:

  "கிளைப் பறவைகள்
  துணைப் பறவைகளோடு!
  எனவே மாறியன கூடு"

  இது புதுக்கவிதையா?


  பதிலளிநீக்கு
 6. "(உரிய காலத்தில் கு.க. செய்துகொண்டிருப்பார்கள் என்று நம்புவோம்). "

  உங்களுக்கு எப்படித்தான் இப்படி நகைச்சுவையாக எழுத வருகிறதோ ?

  பதிலளிநீக்கு
 7. "டெலிபோன் டிபார்ட்மெண்டின் அந்த விளம்பரம் வந்திருந்ததாம். பிஎஸசி பாஸ் இருந்தாலே போதுமாம். நோ டெஸ்ட், நோ இன்டெர்வியூ. விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் வேலை."

  விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் வேலை என்பது தவறு. B.Sc., Maths or Physics Main இருக்க வேண்டும் . MAIN SUBJECT ல் D Plus வாங்கி இருக்க வேண்டும்.D Plus என்பது 85% to 100% மார்க்.

  அப்போது எல்லாம் Semester முறை கிடையாது. முதல்,இரண்டாம் ஆண்டுகளில் படித்த பாடங்களுக்கு மூன்றாம் ஆண்டு இறுதியில்தான் Exam.D Plus வாங்குவது மிக கடினம்.

  பதிலளிநீக்கு
 8. பொதுவாக ஆசிரியர்களுக்கும் அவர்களின் மாணவர்களுக்கும் தொடர்பு இருப்பது சரிதான் விதிவிலக்குகளும் உண்டு. மாணவர்கள் ஆசிரியர்களுடன் - நல்லாசிரியர்களாக இருந்தால் - மறக்காமல் தொடர்பில் இருப்பார்கள். என்றாலும் நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது மிகவும் சரி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 9. மிகவும் ரசித்துப் படித்து வருகின்றேன். சபாஷ்.

  பதிலளிநீக்கு
 10. ஐ...! கணக்கா...? மகிழ்ச்சி...

  விரைவில் கணக்கிட தயாராக இருங்கள் ஐயா...!

  பதிலளிநீக்கு
 11. கூட்டுப் பறவைகள் எங்கே சென்றன..... என்னுடன் பள்ளியில் படித்த பலர் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் கல்லூரியில் உடன் படித்தவர்களில் பாதிக்கு மேல் இப்போதும் தொடர்பில். சமீபத்தில் கூட சிலர் ஒன்று கூடி சந்தித்தோம்.

  பதிலளிநீக்கு
 12. பொதுவாக பெண்களுக்குத் தான் பள்ளித் தோழிகளோடு தொடர்பு விட்டுப் போகும்.

  பதிலளிநீக்கு