செவ்வாய், பிப்ரவரி 28, 2017

தோளுக்கு ரோஜா - தோழனுக்கும் ரோஜா

பதிவு எண் 14/2017
தோளுக்கு ரோஜா - தோழனுக்கும் ரோஜா 
-இராய செல்லப்பா

ஜெயப்பிரகாஷ், அமைதியான சுபாவம் உடையவன். அதிர்ந்து பேச மாட்டான். மிக அருகில் வந்துதான்  பேசுவான். அடுத்தவருக்குக் கேட்காதபடி பேசுவான். அன்றும் அப்படித்தான்.

நண்பா, இந்த இரண்டு மாலைகளில் ஒன்றை நான் எடுத்துக் கொள்ளட்டுமா? என்று மெல்லிய குரலில் கேட்டான்.
கட்டுரை இவரைப் பற்றியதல்ல!

இரண்டும் ரோஜா மாலைகள்.

மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்துகொண்டிருந்தது. கல்லூரி ஆரம்பித்த இரண்டாம் ஆண்டு. புகுமுக வகுப்பும் சரித்திரப் பாடத்தில் இளங்கலை வகுப்பும்தான் அப்போது தொடங்கப்பட்டிருந்தன. நான் புகுமுக வகுப்பு மாணவன். கணிதப் பிரிவில் இருந்தேன். ஜெயப்பிரகாஷ் சரித்திரப் பிரிவில் இருந்தான்.

முத்தமிழ் விழாவில் இயலும் இசையும் நடந்து முடிந்துவிட்டிருந்தது. கட்டுரைப் போட்டியில் எனக்கு முதல்பரிசு கிடைத்திருந்தது. ஒரு சான்றிதழும் ரோஜா மாலையும் கிடைத்தன. அடுத்து, கவியரங்கம். (அமரர்) கவிஞர் சுரதா தலைமையில் நடந்தது. அதில் ஏழு பேரில் ஒருவனாக எனது முதல் கவிதைப் பயணம். ஒரு சான்றிதழும் மீண்டும் ஒரு ரோஜா மாலையும். இரவு எட்டு மணிக்கு நாடக விழா. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் வருகிறார்கள். அதிலும் எனக்கு பரிசு இருந்தது.  இன்னும் ஒரு மாலை  விழும்.

அப்போதெல்லாம்  விழாக்களில் பூமாலை அணிவிப்பதுதான் மரியாதையாகக் கருதப்பட்டது. மாலைக்குப் பதில் பணமாகக் கொடுங்கள் என்று அறிஞர் அண்ணாவே கேட்டுக்கொண்டாலும், மணக்க மணக்க ரோஜா மாலையைக் கொண்டுவந்து அணிவித்து அவர் கோபத்தைப் பெற்றுக்கொள்ள ஆட்கள் இருந்தார்கள் மாலைக்குப் பதில் துண்டு போடுவதும், அத்துண்டுகளை மீண்டும் வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்துப் பணமாக்கிக் கொள்வதும் இன்னும் வழக்கத்துக்கு வந்திராத நேரம்.
படம்: நன்றி: இணையம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இலக்கிய, அரசியல் கூட்டங்களில் நான் கலந்துகொள்வதுண்டு. முக்கியப் பேச்சாளருக்கு மாலை அணிவிக்கும் பொறுப்பு எனக்கு வருவதுண்டு. விழாத் தொடங்கும் முன்பாகவே என்னிடம் ரோஜா மாலை கொடுக்கப்படும். அரசியல் கூட்டமானால், ‘இத்தனையாவது வட்டத்தின் சார்பாக இந்த மலர்மாலையை எங்கள் இதயமாலையாக அணிவிக்கிறோம்’ என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லி மாலையை அணிவிக்குமாறு அறிவுறுத்தப்படும். மாற்றிச் சொல்லிவிட்டால் அடுத்த கூட்டத்தில் மாலை அணிவிக்கும் பாக்கியம் தரப்படாது. (இதயமாலை என்றால் என்ன என்று கேட்கும் வாய்ப்பு கிட்டியதில்லை.) இருப்பதிலேயே குறைந்த விலையுள்ள மாலையாக வாங்கியிருப்பார்கள்.  அணிவிக்கப்படும் முன்பே பாதிக்குமேல் உதிர்ந்துபோய், பேருக்குத்தான்  ரோஜாமாலையாய்க் காட்சி தரும். மேடையில் ஏறி, உரியவருக்கு அணிவிக்கும்வரை மீதமிருக்கும் இதழ்கள் உதிர்ந்துவிடக் கூடாதே என்ற பரபரப்புடன் இருப்பேன்.

எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் எஸ். ஹமீது அவர்கள். சிறிது காலம் மலேசியாவில் பணியாற்றிவிட்டு வந்தவர். அவர் அழகா, அவர் உடை அழகா, அவர் நாவில் கொஞ்சி விளையாடும் தமிழ் அழகா என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். (பின்னாளில் சென்னை புதுக்கல்லூரியிலும், கடைசியாக தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனிலும் பணியாற்றி மறைந்தவர் அவர்.)

தான் நடத்தும் முதல் விழா என்பதால் உச்சகட்ட ஒழுங்குமுறையும் தாராளமான செலவுமாக விழாவை நடத்தினார் அவர். முக்கியமாக, ரோஜா மாலைகள், குறைந்தது மூன்று மணிநேரமாவது உதிராமல் இருக்கும்படி அழுத்தமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மாலையைப் பார்த்த மாத்திரத்திலேயே பேச்சாளர்கள் அசந்துபோய்விட வேண்டும் என்பார். ரோஜாவின் மணம் மேடையைத்தாண்டி முதல் ஐந்து வரிசைகளுக்காவது எட்டவேண்டும் என்பார். தலைமை தாங்குபவருக்கு மட்டும் ரோஜா மாலையும், மாணவர்களுக்கு சம்பங்கி மாலையும் போட்டால் என்ன என்ற கேள்வி வந்தபோது, முத்தமிழுக்கு முன் அனைவரும் சமம் என்றார். எல்லாருக்குமே ஒரே அளவுள்ள ஒரே விலையுள்ள ரோஜா மாலைதான் போடவேண்டும் என்றார்.

ஜெயப்பிரகாஷுக்கு மாலை விழும் வாய்ப்பு இருக்கவில்லை. எந்தப் போட்டியிலும் அவன் கலந்துகொள்ளவில்லை. எனவே ஆசையாக வந்து அவன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. அத்துடன், எல்லா ரோஜா மாலைகளையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் நான் ஆறுமைல் பயணிக்கவேண்டும்.(மேல்விஷாரம்  to இராணிப்பேட்டை.) எப்படியும் மாலை உதிர்ந்துவிடும். நாடகவிழா தொடங்கவே எட்டுமணி என்றால், முடிந்து, விழாக்குழுவினர் கலைந்துசெல்வதற்கு எப்படியும் பத்துமணியாகிவிடும். வீடு சேரும்போது பதினோரு மணி. அதன்பிறகு அந்த ரோஜா மாலைகளால் என்ன லாபம்?

ஒன்று என்ன, இரண்டையுமே எடுத்துக்கொள் என்று கூறினேன். 

ஜெயப்பிரகாஷுக்கு முகத்தில் மின்சார வெளிச்சம். தினத்தந்தி பேப்பரை விரித்து அதில் இரண்டு மாலைகளையும் சுருட்டிக்கொண்டான். நாடக விழாவில் எனக்கு என்ன வேலை? நான் கிளம்பிவிடுகிறேன் என்று புறப்பட்டான்.
*****
கொத்தமங்கலம் சுப்பு அவர்களை அன்றுதான் நேரடியாகப் பார்க்கிறேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே விகடன் வாசகன் நான். அவருடைய ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடரை, பைண்டு செய்த நாவலாகப் படித்து பிரமித்திருக்கிறேன். அப்போது ‘ராவ்பகதூர் சிங்காரம்’ என்று தொடரை எழுதியிருந்தார். (அதுவே ‘விளையாட்டுப் பிள்ளை’ என்ற திரைப்படமாக வந்தது.) ஜெமினி ஸ்டூடியோ தயாரிக்கும் எல்லாப் படங்களுக்கும் திரைப்படக் குழுவின் தலைவர் அவர்தான். ஓளவையார் படத்தின் இயக்குனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் போட்டி நடனப்பாடலை இயற்றியவர் அவர்தான். ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார். நாடக அரங்கத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.

சுமார் ஆறடி உயரம். ஜிப்பா-வேஷ்டி அணிந்திருந்தார். கையில் வெள்ளியாலான வெற்றிலை-சீவல் பெட்டி. அடிக்கடி அதைத் திறந்து மூடினார். மாணவர்களைப் பார்த்து செல்லமாகச் சிரித்தார். நாடக விழா என்பதால் தனது நாடக அனுபவங்களை அழகாக நடித்துக் காட்டினார். பெண்கள் மேடைக்கு வராத காலமாதலால், ஆண்களே ‘ஸ்திரீ பார்ட்’ எனப்படும் பெண் வேடம் தாங்கி நடித்ததை அபிநயித்துக் காட்டினார். எம்ஜியாரும் சிவாஜியும் எப்படிப் பெண் வேடத்தில் அசத்துவார்கள் என்பதை அவ்வளவு அழகாகச் செய்துகாட்டினார். ஹமீது அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தனது பாடலில் இருந்து

அடியேக் கண்ணு, அஞ்சலே, - நீ
அடிக்கடி ஏன் வந்து கொஞ்சலே?

என்பதை ஆடிக்காட்டினார். கண்கொள்ளாக் காட்சி அது.

விழா முடிந்து என் சைக்கிளை நகர்த்தும்போது சரியாகப் பத்துமணி ஆகிவிட்டது. எனக்கு விழுந்த மூன்றாவது ரோஜா மாலையை ஆசிரியர்கள் அறையில் தொங்கவிட்டது நினைவுக்குவர, திரும்பி ஓடினேன். அதற்குள் கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். சரி, அதனால் என்ன நஷ்டம், எப்படியும் உதிர்ந்துவிடப் போவதுதானே என்று வீடு நோக்கித் திரும்பினேன்.

****
அம்மா கதவைத் திறந்தார். என்னடா இவ்வளவு நேரம் என்றார். முத்தமிழ் விழா இல்லையா, அதுதான் நேரமாகிவிட்டது என்றேன். என் கழுத்தையும் கைகளையும் பார்த்தார். உனக்கு மாலை கீலை எதுவும் போடவில்லையா? என்றார்.

ன் கேட்கிறாய்? என்றேன். போட்டார்கள். ஒன்றல்ல, மூன்று மாலை! எல்லாம் ரோஜா மாலை, தெரியுமா? உதிர்ந்துவிடும் என்பதால் கொண்டுவரவில்லை. கல்லூரியிலேயே விட்டுவிட்டேன் என்றேன். அம்மாவின் கண்களில்  என்மீது நம்பகத்தன்மை குறைவதைப் பார்த்தேன்.

ஜெயப்பிரகாஷ் வந்திருந்தான். கழுத்தில் இரண்டு ரோஜாமாலை போட்டுக் கொண்டிருந்தான். விழாவில் அவனுக்கு இரண்டு முதல் பரிசு கிடைத்ததாமே! ரொம்ப மரியாதையாமே! மாலையைக் கழற்றாமலேயே நண்பர்களோடு காலனி முழுதும் சைக்கிளில் போனான்! எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அப்படி அவன் என்ன தான் செய்தான்? என்றார்.

இராணிப்பேட்டையில் என் வீட்டைத் தாண்டிக்கொண்டுதான் அவன் வீட்டிற்குப் போயாகவேண்டும். அது தான் விளையாடி இருக்கிறான்.
'கல்யாணப்பரிசி'ல் தங்கவேலு செய்த வேலை!

அப்படியா சங்கதி? அதெல்லாம் நாளை பேசலாம், முதலில் சாப்பாடு போடு. பசிக்கிறது என்று பேச்சை மாற்றினேன்.
****
புகுமுக வகுப்பிற்குப் பிறகு நான் அதே கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் சேர்ந்தேன். ஜெயப்பிரகாஷ் சென்னைக்குப் போனான். எந்தக் கல்லூரியில் சேர்ந்தான் என்று நினைவில்லை. படிப்பில் அவனுக்குக் கவனமே இல்லை, அரசியல் கூட்டங்களுக்குத்தான் அதிகம் போகிறான், எப்படி உருப்படப் போகிறானோ என்று அவன் தாயார் அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாராம். அம்மா சொல்வதுண்டு. அவனைப் பார்க்கவே முடியவில்லை. தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டான்.

பத்து வருடங்கள் ஆகியிருக்கும். சென்னை  தி.நகரில்  இருந்த ஒரு அலுவலகத்திற்கு வங்கிப்பணி காரணமாக நான் போக நேர்ந்தது. மத்திய அரசு நிறுவனம். அவர்கள் விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கு ஒரு அறிவிப்பு பலகை வரவேற்பறையில் மாட்டப்படவேண்டும். இருந்தது.

தலைவர்: ஜெயப்பிரகாஷ் என்று இருந்தது. இனிஷியல் அவனுடைய இனிஷியல்தான். ஒருவேளை அவனே  தானோ?

அருகில் இருந்த மேசையில் தொழிற்சங்கத்தின் மாத இதழ் கிடந்தது. புரட்டினேன். அதே ஜெயப்பிரகாஷ் தான்.  சில மாதங்களுக்கு முன்புதான் அத்தொழிற்சங்கத்தின் தலைவனாகப் பொறுப்புக்கு வந்திருக்கிறான். பதவியேற்பு புகைப்படம் முழுப்பக்க அளவில் வந்திருந்தது. அதே சிரித்த முகம். அதே சுருட்டையான கூந்தல். 

கழுத்தில் ? மிகமிக அடர்த்தியானதொரு ரோஜா மாலை!
**** 

புதன், பிப்ரவரி 22, 2017

மனைவி அமைவதெல்லாம்....

பதிவு எண் 13/2017
மனைவி அமைவதெல்லாம்....  
-இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து

காஸ் தீர்ந்துவிட்டது; மின்சாரம் இல்லை. ஓட்டலில் இருந்து உணவு தருவித்துக்கொள்ளலாம் என்றால் உடனே ஒப்புக்கொள்ளவேண்டாமா? அரைமணி நேரம் விவாதம் நடத்தவேண்டுமா? போகட்டும், சாப்பிட்டபிறகு அந்த  பிளாஸ்டிக் டப்பாக்களைக் குப்பைக்கூடையில் போடாமல் அடுக்களையிலேயே சேகரித்துவைக்கவேண்டுமா? ஏற்கெனவே பல வருடங்களாய் சேர்த்துவைத்ததை என்ன செய்வதாக உத்தேசம்?

சில பாடல்கள் மனைவிகளுக்குப் பிடிக்கலாம். சில பாடல்கள் கணவர்களுக்குப் பிடிக்கலாம். ‘சரவணபவ என்னும் திருமந்திரம்- தனை- சதா ஜெபி என் நாவே’ என்ற பாடலை அடிக்கடி பாடவேண்டும் என்று  கணவன்  எதிர்பார்க்கலாம்.  அதே சமயம் ‘வெங்கடாசல  நிலயம் – வைகுண்ட்ட புர வாசம்’ என்று அவன் எப்போதாவது முணுமுணுக்கும்போது   கண்களை உருட்டி மிரட்டலாமா? புரந்தரதாசர் கோபித்துக்கொள்ள மாட்டாரா?

தகப்பனார் கொடுத்த பொருட்களை ஆசையோடு பராமரிப்பது நல்லதுதான். அதற்காக அவர் கொடுத்த டயாபெட்டீசையும் விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டுமா?  மூன்று வேளை உணவை ஐந்து வேளையாகச் சாப்பிடுங்கள் என்று டாக்டர் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டாமா? காலை உணவை எட்டு மணிக்குள் சாப்பிடவேண்டாமா? அட ராமா, இதை யாரிடம்போய்ச் சொல்வது?    
 
வீட்டுத் தொட்டியில் விளைந்த ரோஜா - மனைவியின் உழைப்பு
சில மனைவிகள்,  சன் டிவியின் அழுகை சீரியல்களைப் பார்ப்பதில்லை. ஆனால், பிள்ளைகளும் பெண்களும் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக எப்போதும் மொபைலில்  விளையாடிக் கொண்டிருக்கலாமா? மூளை விளையாட்டு நல்லதுதான், அல்செய்மர் போன்ற மறதிவியாதிகளை கொஞ்சகாலத்திற்குத்  தள்ளிவைக்கும்தான், என்றாலும், விரல்களுக்கும் கண்களுக்கும் வேறு வேலை கொடுக்கலாமே!

சில கணவர்கள் இதை (வெளிப்படையாக) ஒப்புக்கொள்ள மறுக்கலாம், என்றாலும், ஓட்டல் சாப்பாட்டை விட, மனைவி கையால் சாப்பிடுவது சுகமானதே என்று  ஒரு சில கணவர்கள் கருதுவதுண்டு அல்லவா? அதை உணர்ந்து செயல்படும் மனைவிமார்கள் எத்தனை பேர்? இன்று என்ன சமைக்கவேண்டும் என்பதை உங்கள் வீட்டில் நிர்ணயம் செய்பவர் யார்?   பழனிச்சாமி முதல்வராக இருக்கலாம், ஆனால், பரப்பன அக்ரஹாரா அல்லவா முடிவுகளை எடுக்கிறதாம்? மாதம் ஒருமுறைதான் பொங்கல்-வடை செய்வது, திடீர் திடீரென்றுதான்  அப்பளம் போட்ட வத்தல் குழம்பு வைப்பது, எப்போதாவதுதான் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது - போன்ற முடிவுகளை எடுப்பது யார்?

அவ்வப்பொழுது கணவனை முதுகு தேய்க்கும் கருவியாகப் பயன்படுத்துகிறார்களாம் சில மனைவிகள். தொலையட்டும், கணவனுக்கும் முதுகு உண்டு என்பதை அவர்கள் உணர்வதுண்டா?

கூவத்தூரில்  எம் எல் ஏக்கள்  அடைபட்டுக்கிடக்கும் செய்தியை அதிர்ச்சியோடு டிவி-யில் பார்த்துக்கொண்டிருக்கும்போது  ‘அவளுக்குப் பேரன் பிறந்திருக்கிறானாம்’ என்று மனைவி சொன்னால்  ‘அவள்’ என்பது யாரைக் குறிக்கும் என்று இவனுக்குப் புரியுமா? திருதிருவென்று முழித்தால் அதற்காக அவனை வெருட்டுவது சரியா? இவளைத்தவிர வேறொரு பெண்ணை மனத்தாலும் நினைக்கமாட்டேன் என்று மணமான முதல் நாளே சபதம் செய்தவனாயிற்றே! அதை கடைப்பிடிப்பது தவறா?

நல்ல பழக்கங்கள் உடைய கணவர்கள் நாட்டில் அபூர்வம் என்பார்கள் பெரியவர்கள். நானும் ஓர் அபூர்வப் பிறவி என்று உங்களுக்குத் தெரியும்தானே! உதாரணமாக, இன்று என் மனைவிக்குப் பிறந்தநாள். (பிப்ரவரி 22). ஆனால், எத்தனையாவது பிறந்தநாள் என்று சொன்னேனா? பெண்களின் வயதை வெளியில் சொல்லக்கூடாது என்ற நல்ல பழக்கம் என்னிடம் இருக்கிறதல்லவா?

ஹாப்பி பர்த்டே டு யூ, விஜயலட்சுமி!

நியூயார்க்  மெட்ரோ மியூசியம் - 2௦௦5

**** 

திங்கள், பிப்ரவரி 20, 2017

கடவுளும் கண்ணதாசனும்

பதிவு எண் 12/2017
கடவுளும் கண்ணதாசனும்
-இராய செல்லப்பா

“நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா?
நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா?”

என்ற பாடலை எழுதியபோது கவிஞர் கண்ணதாசன் நாத்திகவாதம் பேசும் குழுவினரோடு அடைக்கலமாயிருந்தார்.

“சீரங்க நாதரையும் தில்லைநட ராசரையும்
பீரங்கிவைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?”

என்ற கூச்சல்  தெருமுனைகளில் கேட்டுக்கொண்டிருந்த காலம். எனவே தெய்வத்திற்கே   எதிர்க்கேள்வி கேட்கும் சூழ்நிலையைக் கவிதையில் அவர் பயன்படுத்திக்கொண்டதில் வியப்பில்லை.
படம்: நன்றி: தமிழ் இந்து -இணையத்தில் இருந்து

இருந்ததை எல்லாம் வஞ்சகர்களிடம் இழந்து, நடுத்தெருவுக்கு வந்துவிட்ட கதாநாயகனாக ட்டி.ஆர்.மாகாலிங்கம் பாடும் பாடல் அது.

படம்: கவலை இல்லாத மனிதன்

“எனக்கென்று தாய்தந்தை யாருமில்லை
உனைப்பெற்ற தாயார்க்குப் பேருமில்லை -பசி
எடுத்தாலும் எனேக்கேதும் தருவாரில்லை – பிறர்
கொடுத்தாலும் தாய் உனக்குப் பசியேயில்லை

“பணம்காசு கடன் தந்து வீட்டை எடுத்தான்- உனக்கு
பால் பழம் கடன் தந்து  கண்ணை மறைத்தான் -இனி
நடைபாதை தனில் எந்தன்  திருநாளம்மா -அது
நடமாட முடியாத உனக்கேதம்மா?”

****

இன்னொரு பாடலில்  கடவுளுக்குச் சாபமிடும் அளவுக்குப் போய்விடுகிறார் கவிஞர். காதலில் தோல்வியடைந்தவன் யாரைத்தான் சாபமிடமாட்டான்!

படம்: வானம்பாடி

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும் -அவன்
பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்”

“எத்தனை பெண் படைத்தான்
எல்லார்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசை எனும்  விஷம் கொடுத்தான் -அதை
ஊரெங்கும் தூவி விட்டான் –
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்

“அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா, ஆடு என்று
ஆடவைத்துப் பார்த்திருப்பேன்
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்திவைப்பான்”                     
**** 

பிற்காலத்தில், கண்ணதாசன்  என்ற தன் பெயருக்கேற்ப ஆத்திகனாகி, கண்ணன் பெயரில் பக்திப்பாடல்களும் எழுதிக்கொண்டிருந்த நிலையில், கடவுளை நேரடியாக எதிர்கொள்வதுபோல் ஒரு பாடலை எழுதுகிறார்: “நான் படைப்பதனால் என் பேர் இறைவன்” என்று.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு – இசை
பாடலிலே என் உயிர்த்துடிப்பு-நான்
பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

படம்: இரத்தத் திலகம்

“காவியத்தாயின் இளைய மகன்
காதல்பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்-நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

“மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்-அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணம் இல்லை”

படம்: நன்றி: இணையத்தில் இருந்து

இதைப் பார்க்கின்றபோது வித்யாகர்வம் என்னும் கல்விச்செருக்கு வெளிப்படுவதாகவே கொள்ளவேண்டும். ஆனால் அதையும் தாண்டி, அவர், தன்னை இறைவனாகப் பாவித்துக் கொள்வதற்குரிய தகுதியை எப்படிப் பெறுகிறார் என்பதை இன்னொரு  பாடலில் இருந்து தெரிந்துகொள்ளலாம்:

படம்: சுமைதாங்கி

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

“வாரிவாரி வழங்கும்போது
வள்ள லாகலாம்
வாழை போலத் தன்னைத்தந்து
தியாகி யாகலாம்
உருகுயோடும் மெழுகு போல
ஒளியை வீசலாம்

(மனிதன் என்பவன் தெய்வமாகலாம்)

“ஊருக்கென்று வாழ்ந்த  நெஞ்சம்
       சிலைக ளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம்
       மலர்க ளாகலாம்
யாருக்கென்று  அழுதபோதும்
      தலைவ னாகலாம்

(மனம்-மனம்-அது கோவிலாகலாம்)

“மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்தச்
சுமையும் தாங்கலாம்

(குணம் -குணம் – அது கோவிலாகலாம்)”

****

கவிஞர், அரசியலில் உயர்பதவிகளைப் பெற்றாரில்லை. ஆனால் அரசியல் தலைவர்களை விடவும் மற்றவர்களுக்காக அழுதவர் அவர். மனித உணர்ச்சிகளின் ஒவ்வொரு சிறு துகளையும் தன பாடல்களில் அவர் பளீரிட வைத்திருப்பார்.

இளைஞனோ, இளைஞியோ, குடும்பத்தலைவனோ, முதியவரோ, யாராயினும் தமது நிறைவேறாத, சொல்லமுடியாத, நெருங்கிய நட்புக்கும் தெரிவித்துவிடமுடியாத,  உணர்ச்சிகளைக்  கவிஞரின்  ஏதாவது ஒரு பாடலில் நிச்சயமாகச் சந்திக்கமுடியும். அவர்களின் ஆசைகளை, ஏமாற்றங்களை, கோபங்களை, பொறாமைகளை, வீரத்தை, வெற்றிகளை, வீழ்ச்சிகளை, ஆற்றாமையை, அழுகுரலை, தன் பாடல்களில் இடம் கிடைத்தபோதெல்லாம் அவர் பதிவுசெய்து வந்திருக்கிறார். குடும்பக்கதையோ, புராணக்கதையோ,  சரித்திரக்கதையோ எதுவானாலும் தனது  பாடல்களில் பொருத்தமானதொரு  தத்துவக் கருத்தை அவரால் நுழைத்துவிட முடிந்தது. அந்தப் படங்களின் ஆயுளைவிடவும் அவரது பாடல்களின் தத்துவங்களுக்கு ஆயுள் அதிகமாக இருந்தது. பின்னாளில் வந்த ‘வானம், மேகம், ஜன்னல், நிலா’ கவிஞர்களுக்கும் அவருக்கும் இருந்த முக்கிய வேறுபாடு இதுவே.

“யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்” – என்ற வரிகளை அவர் வாழ்ந்தே காட்டியிருக்கிறார். கதாசிரியனாய், வசனகர்த்தாவாய், கவிஞனாய் மட்டுமே நின்றிருந்தால் அவருக்கு இந்த அனுபவம் சாத்தியப்பட்டிருக்காது. அதையும் மீறி, ஒரு திரைப்படத் தயாரிப்பாளனாய், அரசியல்வாதியாய், வாரப் பத்திரிக்கை என்று தொடங்கி, மாத இதழ் நடத்தி, தினசரிப் பத்திரிக்கை வரை நடத்திக் காட்டிய அனுபவங்கள் இந்தியாவிலேயே வேறெந்தக் கவிஞனுக்கும் வாய்த்ததில்லை. அந்த முயற்சிகளில் பெரும்பாலானவை, பொருளாதார  ரீதியாகத் தோல்வியில் முடிந்தன. ஆனால், தான் தொட்ட எதிலும் தனக்கே உரிய முத்திரையைப் பதிக்க அவர் தவறியதில்லை.

வணிகப் பத்திரிகைகள் விற்கும், ஆனால், இலக்கியப் பத்திரிக்கை விற்குமா என்று தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த  ஆனந்தவிகடன், தன்னுடைய எழுபத்தைந்து வயதில்தான் ‘தடம்’ என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கும் தைரியத்தைப் பெற்றது. ஆனால், அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, அதே தடிமனான அளவில் ‘கண்ணதாசன்’ என்ற 160 பக்கமுள்ள மாத இதழைக் கொண்டுவரும் விவேகமும் துணிச்சலும் கண்ணதாசனுக்கு இருந்தது. ஆனால்,  திரைப்பாடல்களை ரசித்துப் போற்றமுடிந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு, அவருடைய நல்ல எழுத்துக்களை உடனே அடையாளம் கண்டு ஆதரிக்கும் அளவுக்கு இலக்கியத்தேடல்  அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, அந்த மாத இதழ் சில மாதங்களுக்குப் பிறகு மூடுவிழா கண்டது. ஆனால், அவரது இறப்பிற்குப் பிறகு அவருடைய நூல்கள் ஒவ்வொன்றும் விற்பனையில்     தங்கச் சுரங்கமாக விளங்குவது கண்கூடு.
   
****

இன்னொரு பாடலும் குறிப்பிட வேண்டியது:

“தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே – வேறெங்கே?


தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே

படம்: சரஸ்வதி சபதம்

“பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு

“ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவ தில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபா டில்லை

“இசையில்  கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு -தெய்வம்
ஏற்கும் உனது தொண்டு”
****

“இசையில்  கலையில் கவியில்... இறைவன் உண்டு” என்று சொன்னதால், கவிஞனான தன்னிடம் அந்த இறைவன் இருப்பதாகவே கண்ணதாசன் கருதினார் எனலாம். “நான் படைப்பதனால் என் பேர் இறைவன்” என்று சொன்னதும் அதனாலேயே.

****
தமிழ்க் கவிஞர்களுக்கும் இறைவனுக்கும் எப்போதுமே  நல்ல தொடர்பு இருந்துவந்திருக்கிறது. ‘பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா’ என்று பாண்டிய மன்னன் சந்தேகமுற்றபோது, தருமியின் மூலம் ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ என்று வண்டுக்குக் கூறுவதுபோல் அரசனுக்கு விளக்கமளித்த இறைவன், தலைமைப் புலவர் நக்கீரனோடு தமிழில் விளையாடவே தான் வந்ததாகக் கூறுவார் அல்லவா?

இறைவனின் இந்த விளையாட்டுப் புத்தி காரணமாகவோ என்னவோ, பக்திக் கவிஞர்கள் பலபேர் இறைவனை நேரடியாகவும் வஞ்சப்புகழ்ச்சியாகவும் ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். பட்டினத்தாரும்  அருணகிரிநாதரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

கந்தவேளின் அருள்வேண்டிக் கதறுகிறார்  அருணகிரிநாதர். சிங்கார மடந்தையர் சுகத்திற்கு ஏங்கி ஏங்கித்  தன் வாழ்வே பாழானதே என்று புலம்புகிறார். இறைவனின் திருவடி நிழலில் தனக்கு இடம் தரக்கூடாதா என்று கோவில் கோவிலாகச் சென்று பாடுகிறார். எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் யாரும் தடுக்கமுடியுமா என்று கேட்கிறார்.

“ஆதாரம் இலேன் - அருளைப் பெறவே
நீ தான் ஒரு சற்று(ம்) நினைந்திலையே”

என்று கந்தனைக் கண்டிக்கின்றார் (கந்தர் அநுபூதி 26)

“இல்லே யெனும் மாயையில் இட்டனை நீ,
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே”

என்று அழுகிறார். (29)

இனியும் நான் பொறுக்கமாட்டேன், முருகா, என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு இப்படிப் பேசுகிறார் அருணகிரி:

மானிட வாழ்க்கையென்னும்  நரகத்தில் நான்  உழன்று அழிந்தாகவேண்டும், நீ மட்டும் உன்னுலகில்  நலமாக இருந்தாகவேண்டும் என்று நீ முடிவு செய்துவிட்டபின், நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முருகா, எப்போது உன்னை உணர்ந்தேனோ, அப்போதிலிருந்து தாழ்வானவற்றை நான் செய்ததில்லையே, இருந்தும் நீ என்னைச் சோதிக்கிறாயே!  “நன்றாக இரு, முருகா, நீ நன்றாக இரு!” என்று மனம் துவண்டு வாழ்த்துகிறார். “வாழ்வாய், இனி நீ “ என்று மயில்வாகனனைப் பார்த்துக் கூறுகிறார்.

பாழ்வாழ் வெனும் இப் படுமா யையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே,

தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய், இனி நீ, மயில்வா கனனே. (31)

இப்படி எல்லாம் பகடி செய்தால் அந்த இறைவன் கோபித்துக்கொள்ள மாட்டானோ? இல்லவே இல்லை. தமிழ்க் கடவுளல்லவா முருகன்! என்றென்றும் அழியாத தமிழ்க்கவிதைகளை மேலும் மேலும் வழங்கும்படி அருணகிரிக்கு வற்றாத கவிதைவளத்தை அளித்தான் என்பதுதானே வரலாறு!

(இன்றைய கவிஞர்களிடம் இப்படியெல்லாம் இறைவன் விளையாடுவதாகத் தெரியவில்லையே, ஏன்?)
**** 

புதன், பிப்ரவரி 15, 2017

14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்

பதிவு எண் 11/2017

14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்
 -இராய செல்லப்பா

சென்னையில் இருந்தபோது  முப்பது நாட்களுக்கு ஒருமுறை நூற்று இருபத்தெட்டு ரூபாய் செலவழிக்கவேண்டிய காரியம் ஒன்றை நான் செய்யவேண்டிவரும். ஒரு சில நாட்கள் தாமதமானாலும் என்னவோ போலிருக்கும். எல்லாரும் நம்மையே ஒருமாதிரியாகப் பார்ப்பதாகத் தோன்றும்.

ஆனால் அந்தக் காரியத்தை விரும்பியபோது செய்துவிட முடிகிறதா? செவ்வாய்க்கிழமையா, கூடாது: சனிக்கிழமையா கூடாது , மாலை நேரமா, கூடாதுஎன்று எத்தனை நெருக்கடிகள்! எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கிளம்பினால் நமக்குப் பழக்கப்பட்ட கலைஞர் அங்கே இருக்கமாட்டார். வடகிழக்கு மாநிலத்திலிருந்து குள்ளமான வெள்ளைவெளேர் இளைஞர் ஒருவர் நம்மை வணக்கத்தோடுஆயியேஎன்பார். பெரும்பாலும் நம்மிடம்தான் அவர் தொழில் கற்றுக்கொள்ளபோகிறார் என்று அப்போதே தெரிந்துவிடும். (கிரீன்  டிரெண்ட்ஸ்என்ற சிகையலங்காரக் கூடத்தில் அடிக்கடி ஆள் மாறிக்கொண்டே இருப்பார்கள்). வந்ததுதான் வந்தோம், இந்த இளைஞனே செய்யட்டுமே என்று துணிவோடு முடிவெடுத்துத் தலை கொடுத்தால் அடுத்த சில நாட்களுக்குக் கண்ணாடியில் நம் உருவம் வேறுமாதிரியாகத் தெரிவதாகப் பிரமை ஏற்படும்.
ஒரு எழுத்தாளர் முடி இன்னொரு எழுத்தாளர் கையில்

மேற்கு மாம்பலத்தில் இருந்தவரை வேறு மாதிரி சிக்கல். வீட்டருகே மூன்று முடிதிருத்தும் நிலையங்கள் இருக்கும். காலையில் ஆறுமணிக்குச் சரியாகக் கிளம்பி,  கூட்டம் குறைவான கடைக்குள் நுழையவேண்டும். பத்து நிமிடம் தாமதமானாலும் மேற்கொண்டு கூட்டம் வந்துவிடும். அலுவலகம் செல்பவர்கள் அதிகம் உள்ள இடமாயிற்றே! எப்படியும் ஒருமணி நேரமாவது முடிதிருத்தும் அழகியலுக்குச்  செலவிட்டாக வேண்டும். சில சமயம் நம்மைவாங்க சார்என்று  பலமாக வரவேற்று தொழில்-நாற்காலியில் உட்கார்த்தி, சற்றே வாடையடிக்கும் ஒரு கறுப்புத் துணியை மேலே போர்த்தி, அது நகர்ந்துவிடாமல் இருக்க ஒரு வெள்ளைப் பட்டையைக் கழுத்தில் சுற்றி அழுத்திவிட்டு,  ‘ரெண்டே நிமிஷம் சார்! ஒரு டீ குடித்துவிட்டு வந்துவிடுகிறேன்என்று கலைஞர் போவதுண்டு. அரைமணி நேரத்திற்குப் பிறகே வருவார். அதுவரையில் கடைக்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு அவர் எங்கே போயிருக்கிறார் என்று பதில்சொல்லும் பொறுப்பு நம்மைச் சேர்ந்ததாகிவிடும்.

ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு கடையாக மாறிவிடுவதால், தலைமுடியின் தனித்தன்மையை இழந்துவிட்டதுபோல் மனத்திற்குள் உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதை ஆமோதிப்பதுபோல் வீட்டிற்குத் திரும்பியவுடன், ‘இந்த லட்சணத்திற்குத் தான் அவனுக்கு நூறு ரூபாய் அழுதீர்களா? இதை நானே இலவசமாகச் செய்திருப்பேனே!’ என்ற பாவனையில் இல்லத்தரசியார் பார்வையால் கொதிப்பார். விடுங்கள், இதெல்லாம் நீங்கள் அனுபவிக்காததா?

நியூஜெர்சி வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. கடும் பனிப்பொழிவு அவ்வப்பொழுது ஏற்படுகிறது. மற்றபடி பூஜ்ஜியம் முதல் ஐந்து டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகிறது.   இன்று போகலாம், நாளை போகலாம் என்று தள்ளிப்போட்டதில் இரண்டு காதுகளும் மறையும்  அளவுக்கு வளர்ந்துவிட்டது. வேறு வழியில்லை, இன்று மாலைக்குள் நடத்திவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

இரண்டுவருடங்கள் முன்பு நியூஜெர்சியில் சீனப்பெண்கள் நடத்தும் அழகு நிலையத்தில் முடிதிருத்திக்கொண்டது நினைவுக்கு  வந்தது. சுமார் நாற்பது நாற்காலிகள் இருக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பேதமும் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் அமரலாம். சில ஆண்கள்  சரியான நேரம் வரை பொறுத்திருந்து, இரண்டு பக்கமும்  பெண்கள் அமர்ந்தபிறகு நடுவிலிருக்கும் நாற்காலியை  ஓடிச்சென்று கைப்பற்றுவதுண்டு. முடிதிருத்தும் கலைஞர்கள் அனைவரும் பெண்களே. அவர்கள் பேசும் சீன-ஆங்கிலம்  வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. இவர்கள் பேசுவது  அவர்களுக்குப் புரியாது. என்றாலும் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துவார்கள். ‘ஷார்ட்டா, லாங்கா?’ என்று கேட்பார்கள். ஏதோ ஒன்று செய்வார்கள். முடிந்துவிட்டது என்பார்கள். தலைக்கு முன்னும் பின்னும் கண்ணாடி காட்டுவார்கள். டிப்ஸ் மூன்று டாலர் கொடுக்கவேண்டும். வெளியில் பில் போடுபவரிடம் பன்னிரண்டு டாலர் கொடுக்கவேண்டும். எல்லாம் பதினைந்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அந்த இடத்திற்கே போகலாம் என்று முடிவுசெய்தேன்.
விட்டோ வின் முன்னால் இருப்பது அவரது கதை-நோட்டு
அப்போதுதான் அன்றைய உள்ளூர் செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட முடிதிருத்தும் கலைஞரைப் பற்றி வந்திருந்த செய்தியைக் கவனித்தேன். அவர் பெயர் விட்டோ (VITO) க்வாட்ட்ரோச்சி  (QUATTROCCHI). நியூஜெர்சியில் கார்ல்ஸ்டட்  (KARLSTADT) என்ற பகுதியில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவருகிறார். இத்தாலிக்காரர். மிக முக்கியமான விஷயம், அவர் இதுவரை பதினான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார் என்பதே!

இதுவரை எழுத்தாளர்களுடன்  உணவருந்தியிருக்கிறேன்ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறேன். சுற்றுப்பயணம் போயிருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரிடம் முடிதிருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியதில்லை. இன்று அமெரிக்காவில் கிட்டப்போகிறது. அழைத்துப்போக ஒப்புக்கொண்டார் மருமகன்.  

*****
க்வாட்ரோச்சியின் பெற்றோர், இத்தாலியின் சிசிலி நகரில் இருந்து நியூயார்க்கில் குடியேறிய சில வருடங்களில் விட்டோ பிறந்தாராம். ஏழு வயதில் சிசிலிக்கே சென்று விட்டாராம். ஆனால் அங்கிருந்த சூழ்நிலை பிடிக்காமல் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிவிட்டாராம். அப்போதெல்லாம் நியூயார்க்கில் வந்து நுழையும் வசதியற்ற இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் ஒரே இடம், முடிதிருத்தும் நிலையங்கள் தானாம். பெரும்பாலும் இத்தாலி, ஸ்பெயின், மெக்சிக்கோ நாட்டவர்களால் நடத்தப்படுபவை.. அப்படியாகத்தான் இவர் முடிதிருத்தும் தொழிலில் இறங்கினாராம். அதுவே பிடித்துப்போய்விட்டதால், முதலில் ரூதர்போர்டு என்ற இடத்தில் வாடகைக்கு நாற்காலி பிடித்துத் தொழில் செய்தாராம். பிறகு சொந்தமாகக் கடை துவங்கினாராம். மணமாகி,மூன்று குழந்தைகள். (‘எல்லாரும் பெரியவர்களாகி விட்டார்கள்-  பறந்துவிட்டார்கள்’).  விட்டோவிற்கு வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஐம்பது வருடங்களாக அமெரிக்க வாசம். கடந்த பதினைந்து வருடங்களாக கார்ல்ச்ஸ்டட்டில் கடை வைத்திருக்கிறார்.

அழகியல் அமைப்போடு அமைந்த கடை. நான்கு நாற்காலிகள் இருந்தன என்றாலும் தொழில்செய்பவர் விட்டோ ஒருவரே. வாடிக்கையாளர்களிடம் பக்குவமாகப் பழகுபவர் என்பதாலும், பல வருடங்களாக அதே இடத்தில் இருப்பவர் என்பதாலும், தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் வேறு எவரிடமும் போவதில்லை. ஆனால் அதிக வருமானம் வருவதாகச் சொல்வதற்கில்லை. ஆண்டுக்கு ஐம்பதாயிரம் டாலர் வரும் என்றார். நடுத்தர மக்களின் வருவாயை விடச் சற்றே குறைவுதான். ‘ஆனால் எனக்குச் செலவு குறைவுதான்! கடை உரிமையாளரும்  வாடகையை ஏற்றுவதில்லை. ஒருவாறு சமாளிக்கிறேன் என்றார்.

நியூஜெர்சியில் முடிதிருத்தும் தொழிலில் கடை திறக்க வேண்டுமானால், அதற்குரிய
படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். தொழிலில் 1200 மணி நேர அனுபவம் இருக்கவேண்டும். அப்போதுதான் உரிமம் கிடைக்குமாம். ‘இப்போதெல்லாம் பெண்கள்தான் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். அழகுக்கலை நிபுணர்கள் என்ற பெயரில் கடையைத் திறப்பவர்கள், அதன் ஒருபகுதியாக முடிதிருத்துவதையும் வைத்துக்கொள்கிறார்கள். எனவே என்னைப் போன்றவர்கள் தொழில் நடத்தி வெற்றிகாண்பது இனிமேல் முடியாத காரியமேஎன்கிறார் விட்டோ.

என் தலையைப் பார்த்தவர் , ‘குறைவாகவா? சுமாராகவா?’ என்றார். ‘சுமாராகவே இருக்கட்டும். அடுத்த மாதமும் உங்களைப் பார்க்க வர விரும்புகிறேன்என்றேன்தொழிலைத் தொடங்கினார். பத்து நிமிடத்தில் கச்சிதமாக வேலை முடிந்தது. தொழில் செய்துகொண்டே பேசினோம்.

******
நான்: இன்றைய செய்தித்தாளில் உங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

விட்டோ: (சற்றே வெட்கத்துடன்): ஆமாம், நண்பர்கள் சொன்னார்கள். நான் பத்திரிக்கை வாங்குவதில்லை. இணையத்தில் படிப்பேன்.
முதல் நாவல் அவர் கையில்; பதினான்காவது நாவல் என் கையில்!
உங்களுடைய பதினான்காவது நாவல் என்று போட்டிருந்தார்கள்! ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு எழுத்தாளன் தான். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். சென்னை என்ற ஊர்.

விட்டோ: தென் இந்தியாவா? என்னுடைய சர்ச்சில் சில இந்தியர்கள் வருகிறார்கள். அவர்கள் மலையாளம் பேசுகிறார்கள்.

தென் இந்தியாவில் நான்கு பெரிய மொழிகள் உண்டு. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் . தமிழ் பேசுகிறவர்கள்  ஏழு கோடி மக்கள். அதாவது எழுபது மில்லியன் மக்கள். ஒன்பது நாடுகளில் இருக்கிறார்கள்...

விட்டோ: தெரியுமே! கனடாவில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவில் இருந்து நியூயார்க்கில் தொழில் செய்கிறார்கள்.

எழுத்துத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்? முடிதிருத்துதல், எழுதுதல் என்று இரட்டைக் கலைஞராக எப்படி இயங்க முடிகிறது?

விட்டோ: சிறு வயதில் இருந்தே எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டு. என்னுடைய சிசிலி நகருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்கள் ரவுடித்தனம், போதை மருந்து விற்பனை, திருட்டுக்கள் என்று வாழ்க்கை நடத்துவதைக் கண்டேன். கொலை என்பது சர்வசாதாரணம். ‘காட்ஃபாதர்’  படம் பார்த்திருபீர்களே!  ‘மாஃபியாஎன்ற இத்தாலி வார்த்தை இப்போது உலகம் எங்கும் பிரபலம் அல்லவா? அந்த மாஃபியா கும்பல் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும். ஒரு கும்பலுக்கும் இன்னொரு கும்பலுக்கும் ஆகாது. மோதல் ஏற்பட்டுவிட்டால், அது யாருடைய மரணத்திலாவதுதான் முடியவேண்டும். பத்து பன்னிரண்டு வயதிலேயே ஒருவன் ஏதேனும் ஒரு மாஃபியாவில் உறுப்பினராகி விடுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது என்னை மிகவும் பாதித்த விஷயம்அமெரிக்காவில் வரும் திரைப்படங்களில் பாதிக்குமேல் இந்த மாஃபியா படங்களாகவே இருக்கும். என்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் கலந்து நாவலாக எழுதவேண்டும், அதை யாராவது படமாக எடுக்கவேண்டும்  என்ற பேராசை -அடங்காத ஆசை இருந்துகொண்டே இருந்தது...

முதல் புத்தகத்தை எழுதத்தூண்டிய பொறி எதுவாக இருந்தது?

விட்டோஜார்ஜ் பெரினி (GEORGE PERENI) என்பவர் எனது இளம்வயது நண்பர். வாடிக்கையாளர். அப்போது ஃபார்லே டிக்கின்ஸன் (FARLEIGH DICKINSON) பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தார். பல்கலை வெளியீடான LUNCH என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். நான் அப்போதுதான் வியட்நாமில் இருந்து திரும்பிவந்திருந்தேன்...

பொறுங்கள், நீங்கள் வியட்நாம் யுத்தத்தில் கலந்துகொண்டீர்களா?

விட்டோ: ஆமாம். வெளிநாட்டுக்காரர்கள் யார் வந்தாலும் உடனே வியட்நாம் போகிறாயா என்பார்கள். சரி என்றால் உடனே ராணுவத்தில் சேர உத்தரவு கொடுத்துவிடுவார்கள். குடியுரிமை கொடுப்பார்கள். போர் முடிந்து நான் அமெரிக்கா திரும்பியபோதுதான் இந்த இலக்கிய நட்பு ஏற்பட்டது. LUNCH பத்திரிகையின் ஆசிரியரைப் பார்க்கவேண்டும் என்று ஃபார்லே டிக்கின்ஸன் போனேன். எனது எழுத்தார்வம் அப்படித்தான் வளர்ந்தது. அன்றுமுதல் ஜார்ஜ் பெரினியும் நானும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவர் ஒரு கவிஞர். ஆனால் 2007-இல் தான் எனது முதல் புத்தகம் வெளியாகியது. ‘SINS OF THE FATHERS’ என்ற அந்த நாவல், சிசிலி நகரத்து மாஃபியா கும்பல்கள் தோன்றியதற்கான  மூலகாரணம், அவர்களின் தந்தையர்களின் ஒழுங்கற்ற வாழ்வே என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஓரளவுக்கு அது எனது வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களால் நிறைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

விட்டோ: எல்லா நேரமும் எனக்கு வாடிக்கையாளர்கள் வருவதில்லையே! அப்போதெல்லாம் இந்த நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் எழுதிக்கொண்டே போவேன். ஆரம்பிப்பதுதான்  தெரியும், எப்போது முடிப்பேன் என்று தெரியாது. (நோட்டுப் புத்தகத்தைக் காண்பிக்கிறார். மணிமணியாக, அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து). இப்படித்தான் இந்த பதினான்காவது நாவலை எழுதிமுடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின! THE RISE AND FALL OF THE SEWER KING என்பது தலைப்பு. என்னுடைய எல்லா நாவல்களுமே சிசிலி நகரத்தையும் அங்குள்ள மாஃபியா சூழ்நிலையையும் பற்றியதாகவே இருக்கும்.

ஒரே மாதிரி கதைக்களத்தை எடுத்துக்கொண்டால் வாசகர்களுக்கு போரடிக்காதா?

விட்டோ: அப்படி அவசியமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மாஃபியா. மேலும், இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் என் புத்தகம் வரும். வாசகர்களும் மாறிவிட்டிருப்பார்கள் அல்லவா?

உங்களுக்கு எந்த மாதிரியான வாசகர்கள் இருக்கிறார்கள்? உதாரணமாக, அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பிய, மெக்சிக்க, ஆசிய, ஆப்ரிக்கக்  குடியேறிகள் இருக்கிறார்கள். எந்த வகையறாவிடம் உங்கள் புத்தகங்கள் போய்ச் சேருகின்றன?

விட்டோ: (திகைப்புடன்): அப்படியெல்லாம் நான் சிந்தித்ததே கிடையாது! உண்மையைச் சொல்லப்போனால், அந்த விஷயமே எனக்குத் தெரியாது! என்னுடைய பதிப்பாளரைத்தான் கேட்கவேண்டும்.
***** 
அவரது பதிப்பாளர், www.LULU.com என்ற ஆன்லைன் பதிப்பாளர். அதாவது  on-demand self- publishing house. அதாவது, விட்டோ, ஒரு நாவலை எழுதியவுடன் லுல்லு விற்கு அனுப்பிவிடுவார். அவர்களே படித்து, பிழை திருத்தம் செய்து, அட்டைப்படமும் தயாரித்து, தங்களின்  இணையதளத்தில் வெளியிட்டுவிடுவார்கள். மின்னூலாக வாங்கலாம். அல்லது கிண்டில் போன்ற கருவிகளில் மாத வாடகைக்குப் படிக்கலாம். அல்லது, அச்சிட்ட பிரதிதான் தேவை என்றால், இணையத்தில் பணம் செலுத்தியவுடன், மூன்றாது நாள் புத்தகம் உங்கள் வீடுவந்து சேரும்! இம்மாதிரி self- publishing house நிறுவனங்கள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் நீங்கள் முன்பணம் செலுத்தவேண்டும். உங்கள் புத்தகப் பிரதியைப் படிக்க ஒரு கட்டணம், பிழை திருத்த ஒரு கட்டணம், பக்க வடிவமைப்புக்கு ஒரு கட்டணம், அட்டைப் படத்திற்கு ஒரு கட்டணம், முதலாவது மாதிரிப் பிரதி தயாரித்துக் கொடுக்க ஒரு கட்டணம் என்று, முன்னூறு பக்கமுள்ள நூலின் முதல் மாதிரிபிரதியைப் பெறுவதற்கு நீங்கள் சுமார் இராண்டாயிரம் டாலர்கள் செலுத்தவேண்டி வரும். செலுத்தினால் ஆறு அச்சுப்பிரதிகள் உங்களுக்கு அன்பளிப்பாகத் தருவார்கள். அமேசான் முதலிய பல்வேறு தளங்களில் விற்பனையாகுமாறு வசதிசெய்து தருவார்கள். சுமார் நானூறு புத்தகக் கடைகளுக்கு அறிமுகம்செய்து வைப்பார்கள். உங்கள் புத்தகத்தைப் பற்றி நீங்களே பேசுவதுபோல் ஒரு விடியோ தயாரித்து அதையும் புத்தக விற்பனைத் தளத்தில் இணைப்பார்கள்...அது சரி, எழுத்தாளனுக்கு வருமானம் கிடைக்குமா என்றால், கிடைக்கும். விற்பனையாகும் மின்னூல்களின் விலையில்  ஐம்பது சதமும், அச்சுப் பிரதிகளின் விலையில் அறுபது சதமும்   ராயல்ட்டியாகக் கிடைக்கும். காப்புரிமை, எழுத்தாளருடையதே.

ஆனால், விட்டோவுக்கு இவ்வளவு செலவு செய்து தன் புத்தகத்தை வெளியிடும் வசதி இல்லையே! எனவே தான் லுல்லுவைத் தேர்ந்தெடுத்தார். கையெழுத்துப் பிரதியை அவர்களுக்கு அனுப்புவதோடு வேலை தீர்ந்தது. ஆரம்பத்தில் பல திருத்தங்கள் செய்துதரச் சொல்லி திருப்பி அனுப்புவார்களாம். மூன்றாவது புத்தகத்தில் இருந்து அம்மாதிரி திருத்தங்கள் வராதபடி எழுதுவது இவருக்குப் பழகிவிட்டதாம். ஆனால் ஒரு பிரதியை அனுப்பினால் எப்போது வெளியிடுவார்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தன்னால் அழுத்தம் கொடுக்க முடிவதில்லை என்றார் விட்டோ.

பதினான்கு புத்தகம் எழுதியிருக்கிறீர்களே, எவ்வளவு பிரதிகள் விற்றிருக்கும்? வருமானம் வருகிறதா?

விட்டோ: எவ்வளவு விற்கிறது என்று தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை கணக்கு அனுப்புவார்கள். இரண்டாயிரம், மூன்றாயிரம் டாலர்கள் வரும். பிரபலமான பதிப்பாளராக இருந்தால் நிறைய விற்கும். நிறைய வருமானம் கிடைக்கும். எனக்கு அவ்வளவு பிரபலம் இன்னும் வரவில்லையே! மேலும் நான் இணையத்தின் மூலமாகத்தானே விற்கிறேன்!

*****
சுயமாக எழுத்துத்தொழிலை மட்டுமே மேற்கொண்டு வாழக்கை நடத்துவது உலகில் எங்குமே முடியாத காரியமாகத்தான் இருக்கிறது. தமிழில் ஐந்நூறு புத்தகம் எழுதியவர்கள்  குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது  இருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் சொல்லிக்கொள்ளும்படியான வசதியில் இல்லை. ஆங்கிலத்திலும் இதேபோல் தான். மிகவும் பிரபலமான இருபது எழுத்தாளர்களை விட்டால் மற்றவர்கள், சோற்றுக்காக இன்னொரு தொழிலைத்தான் செய்யவேண்டியிருக்கிறது. சினிமா, அரசியல் போன்ற  பளபளப்புகள்  இல்லாதவர்கள் எழுதிச் சம்பாதிப்பது அரிதாகவே உள்ளது. எனவே விட்டோ க்வாட்ரோச்சி, இன்னும் முடிதிருத்தும் தொழிலை விடாமல் இருப்பதில் ஆச்சரியமென்ன?

எழுத்தாளர் என்ற முறையில் உங்களுக்கு  ஏதேனும் மனவருத்தம் உண்டா?” என்று கேட்டேன்.

அதற்குள் அவரது வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர் நுழைந்தார். “Hi, how do you do?”  என்று என்னைப் பார்த்தார். அமெரிக்காவில் ஒருவர் மற்றவரை முதலில் பார்க்கும்போது கேட்கும் சம்பிரதாயமான வார்த்தைகள்.  “I’m good. How are you?” என்றேன். விட்டோவின் பதினான்காவது நாவலைப் பற்றி பத்திரிகையில் வந்த செய்தியைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்; இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன்என்றேன்.

ஆமாம், இவர் நிறைய எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால்  ஒரு  நாவலையும் படிக்கக் கொடுக்க மாட்டேன் என்கிறார்என்று சொன்னவர், “நாளை வருகிறேன்விட்டோஎன்று நகர்ந்தார்.

பாருங்கள் சார்! இப்படித்தான் சிலபேர் இருக்கிறார்கள். காசுகொடுத்துப் புத்தகம் வாங்குவதே இல்லை. சிலபேர் இங்கேயே பலமணி நேரம் உட்கார்ந்து முழுப் புத்தகத்தையும் படித்துவிடுவார்கள். முடிவெட்டிக் கொள்வது கூட கிடையாதுஎன்று சிரித்தார் விட்டோ. அந்தச் சிரிப்பில் இருந்த ஆழ்ந்த கவலை  தமிழ் எழுத்தாளர்களுக்குப் புரியாததா? ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதில் முன்னூறு பிரதியை நண்பர்களுக்கு இலவசாகக் கொடுக்கும் வர்க்கம் அல்லவா நம்முடையது? இந்த வர்க்கம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தானே?

****
விட்டோவின் கடைக்கு நாங்கள் போனபோது பகல் மணி பன்னிரண்டு. இப்போது மணி  ஒன்றே முக்கால். பேரனைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வரவேண்டிய நேரம் ஆகிவிட்டது. மருமகன் எழுந்தார்.

திடீரென்று  மாஃபியா, க்வாட்ரோச்சி என்ற வார்த்தைகள் எதையோ நினைவூட்டுவதுபோல் தோன்றியது. கேட்கலாமோ கூடாதோ என்ற தயக்கத்துடனேயே கேட்டேன்: “நண்பர் விட்டோ, இந்த க்வாட்ரோச்சி என்ற பெயரில் எங்கள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியோடு சமபந்தப்பட்ட ஒரு இத்தாலியர் இருந்தாரே, ராணுவத் தளவாடங்களுக்கு கமிஷன் ஏஜண்ட்டாக இருந்தார் ... உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

தெரியாமல் என்ன நண்பரே! அவர் என்னுடைய தூரத்து உறவினர்தான். இறந்துவிட்டார். ‘க்வாட்ரோச்சிகுடும்பம், இத்தாலியின் மிகக் கொடூரமான மாஃபியா கும்பல் என்பது உலகிற்கே தெரியுமே! மற்றபடி, எனக்கு ராஜீவ் காந்தி பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதுஎன்றார்.

அவருடைய பதினான்காவது நாவலின் ஒரு பிரதி அவரிடம் இருந்தது. அதைக் கேட்டு வாங்கினேன். இருபது டாலர் என்றார். கையொப்பமிட்டுக் கொடுக்கச் சொன்னபோது அவருக்கு உடல் புல்லரித்தது. அவர் ஆட்டோகிராப் செய்ததே இல்லையாம்! யாரும் கேட்டிருக்கவில்லை போலும். ‘பை’ சொல்லிவிட்டு வெளியேறும்போது அவசரமாக என்னிடம் வந்தார். “என்னுடைய சில நாவல்களை ஒரு நண்பர் ஹாலிவுட் தயாரிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். சினிமா இல்லையென்றாலும் டிவி சீரியல்-ஆவது வருமா என்று பார்க்கலாம்” என்றார். வாழ்த்தினேன்.

*****
வீட்டிற்குத் திரும்பினேன். கதவைத் திறந்த துணைவியார் ஒன்றும் சொல்லாமல்  முதலில் என் தலையையும், பிறகு என்  கையில் இருந்த க்வாட்ரோச்சியின் தடிமனான நாவலையும் வியப்போடு பார்த்துப் புன்னகைத்தார்புத்திசாலித்தனமான காரியங்களை நான் செய்யும் அபூர்வ நேரங்களில் உதிரும் புன்னகை அது.

*****
email: chellappay@gmail.com