திங்கள், டிசம்பர் 16, 2013

“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதக்கூடாதா?” (‘அபுசி-தொபசி’- 15)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடைசியில் குரங்கு கையில் கொடுத்த பூமாலையாகிவிடுமோ, அரவிந்த கேஜ்ரிவாலிடம் கொடுத்த வெற்றி?
 
பா.ஜ.க. ஆட்சியமைக்க மறுத்துவிட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியை கவர்னர் அழைக்கிறார்.  ஆனால் கேஜ்ரிவால் முதலில் மறுத்துவிட்டார். காங்கிரசோ, எப்பாடுபட்டாவது பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, தாங்கள் கேஜ்ரிவாலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளது. கெஞ்சினால் மிஞ்சுவது அரசியல்வாதிகளின் பண்பு. அதை இவ்வளவு விரைவில் கேஜ்ரிவால் கற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமே! முதலில் தான் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றார். இப்போதோ, ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, இதையெல்லாம் நிறைவேற்றினால் தான் உங்கள் ஆதரவை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.
 
அந்தப் பதினெட்டு நிபந்தனைகளையும் நிறைவேற்ற இன்னும் நூறு வருடங்களாவது பிடிக்கும் என்பது சுதந்திர இந்தியாவின்  கடந்த அறுபத்தாறு வருட சாதனைகளைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.  பாவம் காங்கிரஸ்! ஆம் ஆத்மி கட்சியின் வாசலில் நின்றுகொண்டு குழம்புகிறது- நாம் ஆதரவு கொடுக்க வந்தோமா, இல்லை கேட்க வந்தோமா என்று! டெக்கன் கிரானிக்கிள் (15-12-1013) பெங்களூர் பதிப்பில் வந்த கருத்துப்படம்.
 
புத்தகம்
வங்கி அதிகாரிகளில் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு சேது மாதவனும் ஒருவர். ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரில் அவர் டிஜிஎம் ஆக இருந்தபோது (நான் பணியாற்றிக்கொண்டிருந்த) கார்ப்பொரேஷன் வங்கிக்கு ஜிஎம் ஆக டெபுடேஷனில் வந்தார். மூன்றாண்டுகள் இருந்தார் என்று நினைக்கிறேன். மலையாள இலக்கிய உலகில் இவரை ‘சேது’ என்கிற பிரபல நாவலாசிரியராக அறிவர். ‘அடையாளங்கள்’ என்ற மலையாள நாவலுக்காக 2007  இல் சாகித்ய அகாடெமி பரிசுபெற்றவர்.

இவரை எனது வங்கியின் தலைமை அலுவலகத்தில், ஒரு குளிரூட்டப்பட்ட தனியறையில்  நான் சந்திக்கவிருந்த வாரத்தில் இவரது சிறுகதையொன்று மலையாள மனோரமாவில் வந்திருந்தது. மூங்கிலாலான ஏணிகளுக்கு ஐந்தாம்படிக்கும் ஏழாம்படிக்கும் இடையில் ஆறாவதுபடி எப்போதும் இருப்பதில்லை யல்லவா, அது பற்றிய புனைகதை அது. அப்போதுதான் நான் மலையாளம் கற்றுக்கொண்டிருந்தேன். எனவே எளிமையாக எழுதப்பட்டிருந்த இக்கதையைப் படிப்பது சிரமமாயிருக்கவில்லை. கதையைப் படித்துவிட்டு அவருடன் விவாதித்தேன். தன் எழுத்தைப் படித்து ஆர்வத்துடன் விவாதிக்கும் வாசகனை எந்த எழுத்தாளருக்குத்தான் பிடிக்காது? அடுத்துப் பலமுறை அவருடன் அலுவலக நிகழ்வுகள்பற்றிப் பேச வாய்ப்பிருந்தும் இலக்கியம் பற்றிப் பேசும் வாய்ப்பு அதிகம் கிட்டவில்லை. (பிறகு அவர் தன் பணிக்காலம் முடிந்து ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூருக்கே சென்றுவிட்டார்.)
 
‘இனிய உதயம்’ மாத நாவலில் மொழிபெயர்ப்பாக வந்த  சேதுவின் ‘கையெழுத்து’, ‘ஒற்றையடிப்பாதைகள்’  என்ற இரண்டு கதைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது நக்கீரன்.(2009இல்). அதை அண்மையில் மறுவாசிப்பு செய்தேன்.
 


 கையெழுத்து’ ஒரு தொழிற்சங்கத் தலைவரைப் பற்றிய கதை. கம்பெனியின் முதலாளியைவிட அதில் பணிபுரிந்து தொழிற்சங்கத்தலைவனாகிய கே.ஆர்.கே அதிக ஈடுபாட்டோடு உழைத்தவர். கம்பெனியும் தன் சக தொழிலாளர்களும் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர். ஒரு கட்டத்தில் கம்பெனியின் பொருளாதாரம் சோர்ந்துபோகிறது. இவர்களின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்குகிறார்கள். எனவே முதலாளிகள் தொழிலைக் கொஞ்சகாலத்துக்கு மூடிவிடக்கூடும் என்ற அச்சம் கே.ஆர்.கே.விற்கு உண்டாகிறது.  அதைச் செயல்படுத்தும் விதமாக முதலாளிகளின் துணையுடன் (முன்பு கே.ஆர்.கே. தலைமையில் துவங்கப்பட்ட)   சங்கத்தைப் பிளக்க முற்படுகிறார்கள். வயதாகி, தலைமைப் பதவியில் இருந்து விலகி நிற்கும் அவருக்கு இது பெருத்த வேதனையைக் கொடுக்கிறது. தற்போதைய தன் தோழர் ஒருவருடன் மனம் திறந்து பேசுகிறார்.

“உனக்குத் தெரியுமா எனக்கு இது ஒரு தொழில் அல்ல. இவ்வளவு காலப் பொதுத் தொண்டுக்குப் பிறகும், நான் இப்போதும் ஒரு வாடகைக் கட்டிடத்தில்தான் இருக்கிறேன். பலரின் விஷயங்களும் அப்படி இல்லையே! பலருக்கும் பல லாபங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இடையில் அவ்வப்போது சர்வதேச மாநாடுகளில் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது...ஜெனிவாவிலோ, வியன்னாவிலோ, டோக்கியோவிலோ அது நடக்கலாம். அத்துடன் நீண்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய பயணம். பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு உண்டாக்குதல்...குறைந்த பட்சம் ஒரு ஐந்தெட்டு முறைகளாவது உலகத்தைச் சுற்றிப்பார்க்காத ஏதாவதொரு பெரிய தொழிலாளர்களின் தலைவரை உன்னால் சுட்டிக் காட்ட முடியுமா? இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரிதான்  இருக்கின்றன. நான் பார்த்த மிகப்பெரிய வெளியூர் நகரம் எது என்று உனக்குத் தெரியுமா?  கல்கத்தா. அதுகூட கட்சியின் மாநாட்டிற்காகப் போனபோது நான் பார்த்ததுதான். அங்கிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்கள் – இரண்டு கதர் குர்தாக்கள், ஒரு ஜோடி செருப்பு ...பிறகு..என் தாய்க்கு ஒரு கம்பளிப் போர்வை”.

ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தொழிற்சங்கவாதிகளை விமர்சிக்கும்படியான ஒரு எழுத்தை மேற்கொள்ளுவது அரிதான காரியம் அல்லவா? சேதுவுக்கு அது இயல்பாகவே கைவருகிறது.
 
‘ஒற்றையடிப்பாதைகள்’ என்பது சுமார் எண்பது பக்கமுள்ள கதை. வெகு நுட்பமான பாலியல் உணர்வுகளை நாசூக்காகக் கையாண்டிருக்கிறார் சேது. தி. ஜானகிராமன் தனது ‘அம்மா வந்தாள்’-இல் கையாண்டிருந்த எழுத்துத் தொழில்நுட்பத்தில் ஐம்பது சதம் இதில் தெரிகிறது. படித்துப் பார்க்கவேண்டிய கதை.

மொழிபெயர்ப்பாளர் சுரா நமது பாராட்டுக்குரியவர். (ஆனால் ஒரு பணிவான வேண்டுகோள்: அரசாங்கத் துறைகளில் புழங்கும் சில  சொற்றொடர்கள்  விளங்காதபோது அத்துறைகளில் பணிபுரிபவர்களிடம் சரியான அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மொழிபெயர்ப்பது அவசியம்.)     

 நா.பார்த்தசாரதியின் 'பொன்விலங்கு'
இந்த வாரம் நான் மறுவாசிப்பு செய்த இன்னொரு காவியம், நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு. ஒரு  காலத்தில் கல்கியில் தொடராக வந்தபோது கட்டம்கட்டி அருகில் ஒரு பொன்மொழியைப் போடுவார்களே, அதைத் தவறாமல் நோட்டுப்புத்தகத்தில் எழுதிவந்து (பள்ளியில்) அசெம்பிளியில் படிப்பதுண்டு. ஒவ்வொரு எழுத்தும் அட்சரலட்சம் பெரும் என்பார்களே அப்படிப்பட்ட எழுத்து.
 
அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்து பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமான்னு கேட்டாராம் பத்திரிக்கை முதலாளி. அதுதான் சமயமென்று பக்கத்திலிருந்து ஒருவன் ‘இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்ச ஆளாகவும் வேறு வந்து சேர்ந்திருக்கிறான்’ என்று சொன்னானாம். அதனால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான் ஓவியன்  குமரப்பன்.

“ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்யமுடியாது. அந்தச் சுயகௌரவத்தைகூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதைவிட நடந்துகாட்டிவிடுவது மேல் என்று நடையைக் கட்டிவிட்டேன்...” என்கிறான் குமரப்பன்.

“நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்துவிட்டு நம்மை அடக்கி ஓடுக்கி ஆளவிரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிறபோதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்துவிட்டதாகத்தான் உணர்கிறேன்...” என்று மேலும் விளக்குகிறான்.
 
எடுத்தால் முடிக்காமல் விட முடியாத நூல்களுள் ஒன்று, பொன்விலங்கு.

சினிமா & தொலைக்காட்சி
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம்தான்  மங்களூருக்குப் போகவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நாலு வருடங்களில் ஊர் நன்கு முன்னேறியிருந்தது – விலைவாசியில்! (ஆனால் கொட்டையுள்ள கருப்பு திராட்சை கிலோ முப்பதே ரூபாய்க்குக் கிடைத்தது.)

சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் வரை  ஓட்டல் அறையில் தனியாக அமர்ந்து (படுத்துக்கொண்டு?) தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. மலையாள ஒளிபரப்பான ‘கைரளி’ தொலைக்காட்சியில் ஓர் அழகிய முகம் தெரிந்தது. பத்மப்ரியா என்ற நடிகையின் பேட்டியாம். ‘பொக்கிஷம்’ என்ற தமிழ்ப் படத்தில்கூட  நடித்திருக்கிறாராம். தாய்மொழி மலையாளம். ஆனால் பிறந்தது பஞ்சாபில். அருமையான மலையாளத்தில் கிளிகொஞ்சும் வார்த்தைகள்.
 
நிறைய மலையாளப்படங்களில் நடித்திருந்தும் பத்மப்ரியாவுக்கு ஒரு பெரிய மனக்குறை இருக்கிறதாம். தன்னை ரொமான்ட்டிக் பாத்திரங்களில் நடிக்க வைப்பதில்லையாம். ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கக் கூப்பிடுவதில்லையாம். இப்படிப்பட்ட அழகான, அறிவுள்ள, இளமை ததும்பும் கதாநாயகியை இப்படிக் கொடுமைப்படுத்தாலாமா, மலையாள இயக்குனர்களே? 

 பாருங்கள், பத்மப்ரியாவின் சில முகபாவங்களை! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். (இல்லையேல் தமிழ்நாட்டில் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்! இங்கு மலையாளப் பெண்குட்டிகளுக்கு ராஜபோகமான வரவேற்பு தரப்படுவதை யார் மறுக்க முடியும்?)
பத்திரிகை
மங்களூரில் இருந்தபோது மாறுதலுக்காக ஒரு கன்னட மாத இதழ் வாங்கினேன். 2013 டிசம்பர்  மாதத்திய ‘மயூரா’ என்ற இலக்கிய இதழ். தரத்தில் ‘கலைமகளு’க்கு ஒப்பிடலாம். 160 பக்கங்கள், விலை பன்னிரண்டே ரூபாய்!



பிரபல மலையாள நாவலாசிரியரான வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மனைவி ஒரு கதை மாதிரி எழுதியிருக்கிறார். பஷீருடைய ‘இவளே’ என்ற தலைப்பில், மலையாளத்தில். என்.எ.எம். இஸ்மாயில் என்பவரால் அந்நூலின் சில பகுதிகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் முதல் பகுதி இம்மாதம் வெளியாகியுள்ளது. ஜனரஞ்சகமான மொழிபெயர்ப்பு. கன்னடத்தில் படிக்கும்போதே சுவை நெஞ்சைத்தொட்டது. ஒரிஜினல் மலையாளத்தில் படித்தால் எப்படியிருக்குமோ? ('காலச்சுவடு'க்காரர்கள் தமிழில் கொண்டுவராமலா போவார்கள்?)  
பஷீரின் மனைவி எழுதுகிறார்: (கன்னடத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடையது).
 
பெண்வாசனை என்றால் பஷீருக்கு மிகவும் பிடிக்கும். பெண்ணாகப் பிறந்த எல்லோர்மீதும்  அவர் அளவின்றிப் பிரியம்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு  வேறெந்த நோக்கமும்  இருக்கவில்லை. பெண்ணிடம்தான் நல்லகுணங்கள் அதிகம் உண்டு என்று அவர் ஏனோ கருதினார். ஒருதடவை நான் அவரிடம் சொன்னேன்: “நான் எதோ ஒன்று எழுதப்போகிறேன்”.
“என்னது? உனக்கு எழுத வருமா?”

அவர் அப்படிக் கேட்டதில் அர்த்தம் உண்டு. எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாருக்குமே இலக்கியம் படைப்பது சாத்தியமாகிவிடுவதில்லை. இதுபற்றி அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதப்போகிறேன்.  ஏன், நான் எழுதக்கூடாதா?”
“இவளே” என்று சத்தமிட்டுச் சிரித்தபடி சொன்னார் பஷீர்: “நீ எழுதப்போவது இலக்கியமல்ல, அது ஒரு சுலைமானி! (‘சுலைமானி’ என்றால் பால் கலக்காத தேநீர்.) ஃபிளாஸ்க் நிறைய உன்னுடைய சுலைமானி இலக்கியத்தை நிரப்பிக்கொண்டுவந்து  தா! அவ்வப்பொழுது நான் குடித்து இளைப்பாறுகிறேன்”.
***
பஷீருடன் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இது சாதாரணமான வாழ்க்கையில்லை. மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளரின் வாழ்க்கைத்துணைவி நான் என்று உள்ளுக்குள் கர்வம்  கொண்டதும் உண்டு. ஆனால் இத்தகைய கர்வங்களுக்கு அவரது வாழ்க்கையில் வாய்ப்பே  இருக்கவில்லை. ‘நான், நம்மவர்கள்’ என்று அவர் ஒருபோதும் எண்ணியவரே அல்லர். புகழ்பெறவேண்டும் என்ற ஆசையில் அவர் எதுவும் செய்ததில்லை. யாரையும் அழைக்கவுமில்லை. ஆனால் அவர் செய்யும் எல்லாக் காரியங்களும் புகழ்பெறவே செய்தன. அவருடைய எழுத்துக்களை வாசித்த ஒவ்வொருவரும் அவ்வெழுத்தாளரைப் பேட்டி காணவேண்டுமென்று விரும்பினர். இவ்வாறு வாசகர்கள் கூட்டம் கூட்டமாகப் பேட்டி காணவருவது வேறெந்த எழுத்தாளருக்காவது நடந்திருக்கக்கூடுமா? வைலோலி கிராமத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் பிரியமான படைப்பாளியை வாசகர்கள் சந்திக்க முடிந்ததே! பஷீர் யாரையும் எப்போதும் காக்கவைத்தவர் இல்லை.
 
மங்குஸ்தான் மரநிழலில் அமர்ந்துகொண்டு தம்மைப் பார்க்கவந்து போவோரின் வயதையோ பின்னணியையோ கவனிக்காது  தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருப்பார் பஷீர். அவரோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் தொகுத்திருந்தால் அதுவே ஒரு பெரிய புத்தகமாகியிருக்குமோ என்னவோ! அவர் என்னவெல்லாம் பேசிக்கொண்டிருப்பார் – கடவுள், மரம், மனிதர்கள், காதல், அரசியல், கலை, அறம், சின்னச்சின்ன ஆற்றாமைகள் என்றபடி உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன்  பேசிக்கொண்டிருப்பார். அவர் அப்படி மங்குஸ்தான் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்  அங்குதானே நடமாடிக்கொண்டிருப்பேன் நான்! அப்போதெல்லாம் என் மனதில் மூண்டெழுந்த கேள்வி ஒன்றே தான்: இவ்வுலகில்  இதற்கு முன் இப்படிப்பட்ட ஒருவர்  இருந்திருக்கக்கூடுமா? ஒரு மரத்தின் வேரில் அமர்ந்துகொண்டு, வந்தவர்களுக்கெல்லாம் ‘சுலைமானி’யை ஊற்றிக்கொடுத்தபடி, கதைகளை எழுதிக்கொண்டிருந்ததும், பல வருடங்களாக அதே மரத்தடியில் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்ததும் அந்த ஒருவரே! இடையிடையே என்னை அழைப்பார் “இவளே!’ என்று.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம். போதுமல்லவா?

சிரிப்பு
‘பஜனைக்கு பக்தர்கள் முக்கியம். அதைவிட சுண்டல் முக்கியம்’ என்ற ஒரு கருத்து பரவலாக பழங்காலத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்சமயம் பெரிய பெரிய மண்டபங்களில், ஹால்களில், அரங்குகளில், பஜனை நடப்பதால் யாரும் சுண்டலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை..
 
நமது முன்னோர் பழக்கவழக்கம் என்னவென்றால் எந்த ஒரு பகவத் ஆராதனை என்றாலும் முடிவில் பிரசாதம் என்று சிறிதளவாவது வழங்கவேண்டும். தற்காலத்தில் அவரவர் வசதிக்கும் ருசிக்கும் தக்கபடி பஜனை அரங்கத்தில் இருக்கும் கேண்டீனில் புகுந்து புறப்பட்டுக்கொள்கிறார்கள்.

பஜனைப் பாடகர்கள் பக்தி சிரத்தையாகப் பாடினாலும், கேட்டு ரசிக்கும் பக்தர்களுக்கு அவர்களது பக்தியைக் குறைப்பது போல தொண்டையில் வெண்பொங்கல் நெய்ருசியும் ஓம்காரத்துக்குப் பதில் மிளகுக்காரமுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும்....

“சீதாப்பாட்டி-அப்புசாமி புகழ் பாக்கியம் ராமசாமியின் சிரிப்பும் சிந்தனையும்” என்ற நூலிலிருந்து. (பக்கம் 22) வானதி பதிப்பகம் வெளியீடு. நவம்பர் 2012.    88 பக்கம் ஐம்பது ரூபாய்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

திங்கள், டிசம்பர் 02, 2013

நடிகர் சிவகுமார்- தமிழ்த் திரையுலகின் அதிசயம் ( ‘அபுசி-தொபசி’- 13)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல் 

அரசியல் அநீதிகளைத் தட்டிகேட்கும் தைரியம் இல்லாதிருந்த பத்திரிகைகளுக்கு நடுவே எரி நட்சத்திரம் மாதிரிக் கிளம்பி வந்தது, ‘தெஹெல்கா’ .கூடவே சமுதாய பிரச்சினைகளையும் மேலெடுத்துப் போராடிய பெருமையும் அதற்கு உண்டு. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் தெஹெல்காவுக்குத் தனியான வாசகர் வட்டமே உண்டு. இதெல்லாம் ஒருவாரம் முன்புவரை.


(பழைய இதழ் மேலட்டை. இப்போதைய நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லை)
தன்கீழ்ப் பணியாற்றும் பெண்செய்தியாளரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தருண் தேஜ்பால் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைது ஆவதை எப்படியாவது தவிர்ப்பதற்காக அவர் ஆடிய ஆட்டமும், மத்திய ஆளும்கட்சி அவர்சார்பாகச் செய்ததாகச் சொல்லப்படும் முயற்சிகளும் முன்னுக்குப் பின் முரணான அவரது அறிக்கைகளும் இவ்வளவு காலம் தெஹெல்கா சேர்த்துவைத்திருந்த புகழை அடியோடு அழித்துவிட்டன என்றால் மிகையாகாது. வழக்கின் முடிவு எப்படியிருந்தாலும், இனி தெஹெல்காவின் ஆயுள் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. 


ஒரு கற்பனை: இதேபோன்ற நிகழ்ச்சி வேறொரு பத்திரிகையில் நடைபெற்றிருந்தால், தெஹெல்கா எப்படியெல்லாம் குதித்துக்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கும்! இந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டே நாற்பது வாரங்கள் இதழை ஓட்டியிருப்பார்கள், மற்றும், நாலுமுறை தேஜ்பாலின் அமெரிக்கப் பயணமும் நடந்திருக்குமே!

அருமையான துப்பறியும் இதழாக விளங்கிக்கொண்டிருந்த தேஹெல்காவின் வீழ்ச்சிக்கு அதனுடைய அண்மைக்கால  காங்கிரஸ்சார்பும் அதன் காரணமாகக் கிடைத்த அசட்டுத்துணிச்சலும் முக்கியக் காரணங்களாக இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். (எதற்கென்று தெரியாமலே தெஹெல்காவுக்கு ஐந்துலட்சம் கொடுத்தாராமே கபில் சிபில்!)

புத்தகம்

நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) – லாவண்யா சுந்தரராஜன்
(வெளியீடு: அகநாழிகை,மதுராந்தகம்/சென்னை. 64 பக்கம் ரூபாய் 40. இணையத்தில் வாங்க: www.aganazhigaibookstore.com)

லாவண்யா என்ற இளம்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு. ‘முதல்’ என்று போட்டதால் தான் இது முதல் படைப்பு என்று தெரியும். இல்லையெனில் ஒரு தேர்ந்த கவிஞரின் படைப்பு என்று மிக எளிதாகக் கொள்ளப்பட்டுவிடும். அவ்வளவு ஆழமான கவிதைகள். கவிஞர் கலாப்ரியாவின் முன்னுரை இந்த நூலை மிகவும் உயரத்திற்குக் கொண்டுபோவதில் வியப்பில்லை. மாதிரிக்குச் சில வரிகள்:

உனக்காக காத்திருக்கையில்
கடந்துபோகும் எத்தனை கேள்விகளுக்கு
போலியாகப் புன்னகைப்பது? (ப.35)
**
எல்லாம் இருந்தும்
நகர்ந்து கொண்டு இருந்தது
யாருமற்ற நதி. (ப.37)
**
எதைக் கொண்டும்
நிரப்ப முடிவதில்லை
யாரோவாகிப்போன
நீ தந்த
நிராகரிப்பின் ரணத்தை. (ப. 41)
**
எப்போதும் நேர்த்தியாகவே
இருக்கின்றன
நமதற்ற வரவேற்பறைகள். (ப.50)
**
உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான். (ப.56)
**
வாசல் தாண்டி
உள் வருவதில்லை
அழகிய கோலங்கள் கூட. (ப.60)
 
வெகுவிரைவில் மிகச்சிறப்பான கவிஞராக மலரப்போகிறவர், லாவண்யா சுந்தரராஜன். வாங்கிப் படியுங்கள்!

சினிமா

ஒரு சினிமா நடிகரின் புத்தகம் இந்த வாரம்.
என் செல்லக் குழந்தைகளுக்கு – (சொற்பொழிவு)- நடிகர் சிவகுமார்
(வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4. 120 பக்கம் ரூபாய் 65)

நடிகர் சிவகுமாருக்கு ஒருமுறை பணமுடை ஏற்படவே, (எம்ஜிஆரை வைத்துப் படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த) சாண்டோ சின்னப்பதேவரிடம் கடன் பெற்றாராம். சிறிது காலம் ஆனபிறகு அதைத் திருப்பிக் கொடுக்கப் போனபோது தேவருக்கு ஆச்சரியம். எம்ஜிஆர் உள்பட யாருமே அவரிடம் வாங்கிய கடனைப் பணமாகத் திருப்பித் தந்ததில்லை. படத்தில் நடித்துத்தான் கடனைக் கழித்திருக்கிறார்கள். எனவே சிவகுமாரிடம் ‘பணம் வேண்டாம், நடித்துக் கழித்துவிடலாமே’ என்றாராம். ஆனால் சிவகுமார் நடிக்கும்படியான படங்களை அப்போது தேவர் எடுக்கும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியவில்லை. எனவே சிவகுமார், ‘மன்னிக்கவேண்டும், கடனை முதலில் கழித்துவிடுங்களேன்” என்று உறுதியாக நின்று பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போனாராம். திரை உலகில் இது அதிசயமான நிகழ்ச்சி என்றார்கள். சுய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாகத்திகழும் நடிகர் என்றால் தமிழில் நினைவுக்கு வரும் முதல் நடிகர் சிவகுமாரே.

நூறு பூக்களின் பெயர்களை ஒரு தசாவதானியின் நினைவாற்றலோடு சிவகுமார் ஒப்புவிக்கும் சொற்பொழிவை நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். அந்தச் சொற்பொழிவு தான் இந்தப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. எளிதில் படிக்கத்தக்க பெரிய எழுத்துருவில், வரிக்கொரு பத்தியாக, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் புரிந்துகொள்ளும்விதமாகப் பதிப்பித்திருக்கிறார்கள். எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து ‘டின்க்கிள்’ வாங்கிக்கொடுக்கும் பெரியோர்கள், அதிலும் பத்து ரூபாய் குறைவில் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தால் நிச்சயம் சிறுவர்களின் தமிழ் அறிவு மேன்மையடையும். உருக்கமானதொரு எடுத்துக்காட்டு:

எங்க நடிப்பு ஜாதியைச் சேர்ந்த ஒரு அம்மா. தன் பையனை கொண்டுபோய் ஏற்காடுல போட்டாங்க! (போர்டிங் பள்ளியில்)
3..4.. வயசுலேயே போட்டுட்டாங்க. அந்தப் பையனுக்கு அம்மா ஏக்கம். அம்மா...அம்மா...ன்னு சொல்லி அழுதுகிட்டே இருப்பான்.. ஏக்கம் குறையவே இல்ல! ‘ஹோம்சிக் வேற...இந்த அம்மா ஏக்கம் வேற. அப்படியே இருந்தான்...படிக்கவே முடியல..

ஒவ்வொரு வகுப்பா தூக்கி தூக்கி போட்டாங்க! தூக்கி போட்டு...+2 பாஸ் பண்ணல..! அங்கிருந்து துரத்திவிட்டாங்க! வீட்டுக்கு வந்தான். அம்மா கதறிக் கதறி அழுதா..!

பையன் சொன்னான்..அம்மா..நீ அழுவாதே! உன் அழுகையைப் பாத்து எனக்கு அழுகை வரல..!

சின்ன வயசில உன்னைக் கட்டி பிடிச்சிட்டு ...ராத்திரி தூங்கனும்னு ஆசைப்பட்டேன். காலைல எழுந்தவுடனே.. நீ என்னை குளிப்பாட்டி விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

தலை சீவி விட்டு..சோறு ஊட்டி விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

சாயங்காலம் ..வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ..பீச்சுக்கு கூட்டிட்டு போவ..ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன்னு ஆசைப்பட்டேன்!

லீவு நாள்ல மகாபலிபுரம் போகலாம்னு ஆசைப்பட்டேன்!

ஒருநாள் உன் மடில உட்கார்ந்து சினிமா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்!

எதுவுமே நீ செய்யலியே! இப்ப நீ அழுகிறத பார்த்து எனக்கு எப்படி அழுகை வரும்?

ஆடு..மாட அடைக்கிற மாதிரி..போர்டிங்கில கொண்டுபோய் அடைச்சுப்புட்ட.. 14  வருஷம் எங்கயோ இருந்துட்டுதான் வந்தேன்!.. எனக்கு அம்மா பாசம் எங்கேயிருந்து வரும்..??” –அப்படின்னு சொன்னான்!  (பக்கம் 85-86-87)

தொலைக்காட்சி
‘புதுயுகம்’ சேனலில் டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு ‘வினா-விடை வேட்டை’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நான்கு அணிகளுக்கிடையில் போட்டி. பொது அறிவுக் கேள்விகள் தான். வாய்மொழிக் கேள்வி, ஆடியோ-விடியோ கேள்விகள் எனப் பலதரப்பட்ட கேள்விகள். மாணவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டும்.
 


வேற்று மொழிக்காரர்களான குஷ்புவையும் சிம்ரனையும் அழைத்துத் தமிழ்ப் பயிருக்கு நீரூற்றும் வேலையைச் செய்tதுவரும்  தொலைக்காட்சிகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு பெண் இந்த நிகழ்ச்சியை நடத்த நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதுவே ஆச்சரியம் தானே! 
நடிகை கஸ்தூரி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுபவரா!
 (இப்பவும்கூட இவ்வளவு அழகாக இருக்கிறாளே – என்று வீட்டில் சொன்னார்கள். ஆமாம் என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன். பின்விளைவுகளைத் தாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறதல்லவா?)

பத்திரிகை

அந்நிய சக்திகள், பன்னாட்டு நிறுவனங்களின் போர்வையில் இந்தியாவில் அரசியல் சூத்திரதாரிகளாக விளங்கமுற்படுவது புதிய விஷயமல்ல. ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிதித்துறை நிறுவனம் அத்தகைய செயலில் இறங்கியிருப்பது ஆட்சேபகரமானது என்கிறது ‘அவுட்லுக்’ வார இதழ்.   (25-11-2013 பக்கம்: 38-39)

டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களில் வீழ்ச்சி அடைந்தவுடன், இந்தியாவின் நம்பகத்தரத்தைக் (Credit Rating)  குறைத்து அறிவித்த நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ். இப்போது நாடு முழுதும் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடும்போன்ற தோற்றம் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மோடி பிரதமரானால் இந்தியாவின் நம்பகத்தரம் உயரும்’ என்று அறிக்கை விடுகிறது அந்த நிறுவனம்! “மே  2014இல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சி, மோடியின் தலைமையில் பதவியேற்கும் என்றும்,  மோடியை மாற்றங்களைக் கொண்டுவரும் காரணியாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்” என்றும் அது தெரிவித்திருக்கிறது.

இது நியாயமா என்கிறது அவுட்லுக். 2004  தேர்தலின்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து, வெற்றி பெறுவதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த  பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்து அப்போது ஒன்றும் சொல்லாத இந்நிறுவனம்,   2009 இல் காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கக்கூடும் என்று ஒருவார்த்தை சொல்லாத நிலையில், இப்போதுமட்டும் மோடிக்கு ஆதரவாகச் சந்தையில் நேர்மறைக் கருத்தை உருவாக்க வந்திருப்பதின் அரசியல் பின்னணி என்ன என்கிறார், கட்டுரை ஆசிரியர் லோலா நாயர்.

சிரிப்பு

எந்த வயதில் தான் காதலிப்பது? பாக்கியராஜின் பதில். (நவம்பர் 29-டிசம்பர் 5   பாக்யா’ வார இதழில் பக்கம் 14-15.)
15 வயதுக்கு உட்பட்டவர்னா: “முளைச்சு மூணு இல விடல, அதுக்குள்ளே உனக்கு லவ் கேக்குதோ?”

16-20 வயதுன்னா: “படிக்கிற வயசுல கழுதைக்கு லவ் கேக்குதோ?”

21-28 வயது என்றால்: “வேல வெட்டி இல்லாத துடப்பக்கட்டை! நீயே தண்டம். உனக்கு ஒரு தண்டமா?”

36-45 வயதுன்னா: “பிள்ளை குட்டிகள் லவ் பண்ற வயசுல உனக்கெல்லாம் காதலா?”

46-60 வயதுன்னா: “பேரன் பேத்திய காண்ற வயசுல கிழடுக்கு காதல் கேக்குது”

60க்கு மேல்: “காடு வாவாங்குது, வீடு போபோங்குது, இந்த வயசுல காதலா?”

(அது சரி, 28-35 வயதைப் பற்றி ஏன் கூறவில்லை? அது தான் காதலிக்கச் சரியான தருணமா? அல்லது, அப்போது தான் அவர் பூர்ணிமாவைக் காதலித்தாரா? உங்கள் அனுபவம் என்ன? –சொல்லக்கூடியதானால் மட்டுமே!)
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள  'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது  ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

திங்கள், நவம்பர் 25, 2013

“என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்கிறாள் ஆர்த்தி ( ‘அபுசி-தொபசி’- 12)

“என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்கிறாள் ஆர்த்தி (அபுசி-தொபசி- 12)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த  பி.மோகன் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெறப்பட்ட வெற்றி அது என்பது வாதம். இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்ட மோகன் உயிரிழந்ததால், அவரது தேர்தல் முகவரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான லாசர் வழக்கைத் தொடர்ந்து நடத்தினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு வழக்கு தோற்றுப்போய், அழகிரியின் வெற்றி நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலமே ஐந்தாண்டுகள் தான். அதிலும் அழகிரி தனது அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார். கட்சியிலும் அவருக்கு இன்று செல்வாக்கு குறைந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில் இந்த வழக்கின் வெற்றி அவருக்கு எந்த வகையில் பயன்படும் என்று தெரியவில்லை.

இதுகூடப் பரவாயில்லை. பன்னிரண்டு வருடத்துப் பழைய நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்போது நீதிமன்றத்தில் உயிரூட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது தான் விந்தை.

கடந்த 2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு  தொகுதிகளில் போட்டியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அல்லவா, அவ்வாறு  இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்குதல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று அப்போது தி.மு.க. எம்.பி.யாக இருந்த குப்புசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கைச்  சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றியது. அதன்படி வழக்கு நடைபெற்று வருகையில் குப்புசாமி காலமாகிவிட்டார். மனுதாரரின் மரணத்தைக் காரணம் காட்டி சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் தாக்கல் செய்துள்ள மனு இப்போது விசாரணைக்கு வந்துள்ளது.


 
விசாரணையின்போது (பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து) எந்த  அடிப்படையில் இம்மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

2001-ம் ஆண்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து மறைந்த குப்புசாமியுடன் இணைந்து ஏ.கே.எஸ்.விஜயனும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும் இந்த விஷயத்தில் தற்போதைய  மனுதாரர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இவ்வழக்கைத் தொடர அனுமதிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த மனுவின் மீது மேலும் விசாரணை தொடரும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீசு வழங்குமாறு உத்தரவிட்டனர். நான்கு வாரங்களுக்குப்பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்றார் பாரதிதாசன். நமது நீதியமைப்பிலோ பழையதோர் உலகை மீட்டெடுக்கவே பல வருடங்கள் தேவைப்படுகிறது.

இதுபற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “எப்படி மருத்துவர்கள் தொடர்ந்து பிழைப்பதற்கு ஏற்றாற்போல் நமது உடல் சிக்கலாகப் படைக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல, வாதிகளும் வழக்கறிஞர்களும் தொடர்ந்து பிழைப்பதற்கென்றே நமது அரசியல் சட்டம் சிக்கலாக அமைக்கப்பட்டுள்ளது!”

புத்தகம்
இந்த வாரத்திற்காக வேறு இரண்டு புத்தகங்களைக் குறித்துவைத்திருந்தேன். ஆனால் “என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்று  ஆர்த்தி கண்ணீர்விட்டுக் கெஞ்சும்போது நான் என்ன செய்வது? ஆர். வெங்கடேஷின் ‘இடைவேளை’ நாவலைத்தானே சொல்லியாகவேண்டும்?

‘இருவர்’ என்ற நாவலை முதல் முதலில் படித்தபொழுது (இணையத்திலா?) அதை எழுதியவர் நிச்சயம் இன்னொரு சுஜாதாவாகத்தான் ஆகப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் அப்போது நான் வலைத்தளத்தில் இல்லாததால் ஆர். வெங்கடேஷ் பற்றி யாரிடமும் விமர்சிக்க முடியாமல் போயிற்று. சினிமாவிலோ அல்லது பத்திரிகையிலோ நுழையவேண்டுமென்ற கனவுகளுடன்  சென்னை வந்த இரண்டு இளைஞர்கள் இவ்விரு கனவுத்தொழிற்சாலைகளிலும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தத்தை உஷ்ணவரிகளால் தகித்திருந்தார் வெங்கடேஷ்.     

‘இருவர்’, வெங்கடேஷின் முதல் நாவல். இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்குப் பின் வந்த முதல் நாவல். ‘புனைகதையின் ஊடாகச் சமகால வரலாற்றைப் பதிவுசெய்ய முயன்றதாக’த் தன் முன்னுரையில் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் அம்முயற்சியின் சவால்களையும் அவர் தெரிந்துகொள்ளாமல் இல்லை. “சமகால வரலாறு என்பதில் தீர்வுகளையோ, மதிப்பீடுகளையோ உருவியெடுக்க முடியாது. விமர்சனங்களை வைக்கவும் காலம் கனிந்திருக்காது. போக்குகளையும் திசைகளையும் மட்டுமே தொட்டுக்காட்ட முடியும்”.  

எனவே இவரது அடுத்த நாவலை நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ‘கல்கி’யில் தொடராக வந்தபோது ‘இடைவேளை’யைப் படித்தேன். ஆனால் தொடரமுடியவில்லை. அவ்வளவு வேகமாகக் காட்சிகளின் ஓட்டம். திரைப்படத்திற்கென்றே  எழுதிய மாதிரி பாத்திரங்கள் கண்ணுக்கு முன்னால் வந்து நின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இன்று நடமாடிக்கொண்டிருக்கும் ஐ.டி.த்துறை இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையில்லாமையை மில்லிமீட்டர்களில் அளக்கும் துல்லியம். அமெரிக்க நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்மையைத் தோற்றுவித்துவிட்ட ‘சப்-பிரைம் கிரைசிஸ்’ என்ற ஆக்டோபஸ், தன் எட்டுக்கரங்களால் ஐரோப்பாவில் தொடங்கி பெங்களூர் வரை   எட்டுத்திக்கிலும் ஐ.டி.ப்பணியாளர்களின் வேலையிழப்புக்குக் காரணமானதும் அதனால் சராசரி இந்திய இளம்குடும்பங்களின் சுயநம்பிக்கை சுரண்டப்பட்டதும்தான் இத்தொடர்கதையின் உயிரோட்டமான கருத்து. நாவலாகப் படிக்கிறபோது நெஞ்சம் கனக்கிறது.

கதையின் ஒரு சிறு பகுதியைக் கோடிட்டுக் காட்டாமல் முடிப்பதற்கில்லை. காதலனா, இல்லை, கணவனாகப் போகிறவனா என்று தெரியாமல், ஆனால் எல்லை மீறாமல் ஆர்த்தியுடன் பழகுகிறான் நோயல். அவள் ஒருத்திதான் குடும்பத்திற்கே படியளக்கவேண்டும். அவளுக்கு வேலை போய்விடுகிறது. தகப்பனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்....

“வேலையில் இருந்தவரை, அலுவலகத்தில் மெடிக்ளைம் இருந்தது. அப்பாவையும் அம்மாவையும் அதில் சேர்த்திருந்தாள். வெறும் அடையாள அட்டையை மட்டும் நீட்டிவிட்டு, மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி. இன்று இல்லை. சொந்தமாக மருத்துவக் காப்பீடு எதுவும் எடுத்திருக்கவில்லை. பர்சனல் லோன் போடலாம். கடுமையான வட்டிவிகிதம் பயமுறுத்தியது. முதலில் வேலையில் இருந்தால்தான் லோன் போடமுடியும்.

“யாரைப் போய் கேட்கமுடியும்? எவர் உதவுவார்கள்? திட்டமிடாமல், மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டோமா? சிக்கனம், சேமிப்பு என்று கையை இறுக்கிப் பிடித்து வாழ்ந்தவள் ஆர்த்தி. மனதோரம் இப்படி ஓர் இக்கட்டு எந்நேரமும் ஏற்படலாம் என்ற பயம் இருந்ததுண்டு. ஆனால், அதற்குத் தான் தயாராகவில்லை; முன்னேற்பாடுகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இத்தனை மாதங்களாக, தன்னுடைய சேமிப்பில் இருந்துதான் வாழ்ந்தாள். இன்று அதுவும் தீர்ந்து போயிருந்தது.

“வேலையும் சம்பளமும் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் சாதாரண மத்தியவர்க்க குடிமகள். பெரிய கனவுகளுக்கு இடமில்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததெல்லாம் வெற்றுத் திமிர்த்தனம்....

வாசலில் நோயலின் கார் நின்றது. ஆர்த்தியின் தந்தையிடம் போய்த் தேறுதல் சொன்னான். தாயிடமும் கைபிடித்து ஆறுதல் சொன்னான். “எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்திருந்தாள் ஆர்த்தி. இவனை என்னவென்று புரிந்து கொள்வது? இவனது கரிசனமும் கனிவும் பொய்யில்லை. அக்கறை போலியில்லை. ஆனால், மனத்துக்குள் என்னவோ குழப்பம்.

“அறையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டாள் ஆர்த்தி. ஜன்னலுக்கு வெளியே சாலையில் மாலை நேரத்து பிரகாசம். ஒன்றிரண்டு கார்கள் போகும்போது கூடுதல் வெளிச்சம் சாலையை அலசும். உள்ளடங்கிய சாலையின் மௌனம், அவளது சிந்தனைகளைப் போன்றே, காற்று மெல்ல கரைந்து சென்றது. சற்று நேரத்தில் நோயல் வந்து நிற்பது தெரிந்தது. மனத்தில் பொங்கிய உணர்வுகள் இன்னதென்று இனம்புரியாமல் தத்தளித்தன. தவறுகள், எதிர்பார்ப்புகள், பயம், ஆதரவு, கருணை,கனிவு என்று என்னென்னவோ காட்சிகள், காட்சிகள். தான் பெற்றதைவிட, இழந்தவையே அதிகம் என்ற எண்ணம் சட்டென மேலோங்கியது. தொடர்ந்து அடி, வழுக்கல், சரிவு. வாழ்க்கை, குவிந்த கையில் நழுவும் நீரென ஏமாற்றிக்கொண்டே இருந்தது.   

“ஏன் பேசமாட்டேன்கற ஆர்த்தி? என்னாச்சு?”

அவனுடைய அண்மை, அவள் வார்த்தைகளைத் தொலைக்க வைத்தது. நிமிர்ந்து பார்த்தவள், அவனைப் புதுசாகப் பார்ப்பது போல் பார்த்தாள். அப்பா, அம்மா போல்  (இவனும் நானும்) என்றும் நீடித்து வாழ முடியும் என்று அவள் மனது அழுத்திச் சொன்னது. உடலும் மனசும் கனிந்து குழைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. அவன் கைகளை எடுத்து விரல்களைக் கோத்துக்கொண்டவள், குரல் கம்ம, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினாள், “என்னைச் சீக்கிரம்  கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்”.

வேலை போனவுடன் தனி மனிதர்கள் எப்படிச் சிதறிப்போனார்கள் என்று சொல்வதுதான் வெங்கடேஷுக்கு முக்கியம். (ஐ.டி.த்துறையில்) “பல இளைஞர்களின் கற்பனைகள் தகர்ந்து போயின. திடீரென்று காலுக்குக் கீழே பூமியைச் சரித்துவிட்டார்கள். சிலர் மனநிலை பிறழ்ந்து போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். சுயபிம்பம் சுக்குநூறானது. சமூக மதிப்பு புரிந்துபோனது. கனவுகள் தொலைந்துபோனது.”

“குழப்பங்கள் நீடிக்கின்றன. பிரச்சினைகள் தொடர்கின்றன. மதிப்பீடுகளும் தம்மைப் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. என்னால் முடிந்ததெல்லாம் இவையனைத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவுசெய்வதே” என்று ‘இருவரி’ன் முன்னுரையில் வெங்கடேஷ் எழுதினார். ‘இடைவேளை’க்கும் அது பொருந்தும். வெங்கடேஷ் பதிவு செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது....

(‘இடைவேளை- நாவல்-  152 பக்கம், ரூபாய் 100, வெளியீடு: ‘நேசமுடன்’. கிடைக்குமிடம்: வேத பிரகாசனம்,  142 முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை- 600028. தொலைபேசி:   044-24641600.)  

சினிமா & தொலைக்காட்சி
புதுயுகம்’ என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியிடமிருந்து  புதியதொரு சேனல் கிளம்பியுள்ளது. இதற்கு நான் இன்னும் சந்தா செலுத்தவில்லை என்றாலும் திடீரென்று இன்று மாலை ரிமோட்டை அழுத்தியவுடன் திரையில் வந்தது. ஒருவேளை, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இலவசமாகக் காட்டுவார்களோ என்னவோ!

தமிழில் தொலைக்காட்சியின் தரத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டுசென்ற பெருமை, ‘புதிய தலைமுறை’யையே சாரும். அவ்வகையில் ‘புது யுகம்’ நிச்சயம் ஒரு புதுயுகத்தைப் படைக்கும் என்று நம்பலாம். ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமாவையே சார்ந்துள்ளதாகத் தெரிகிறது.      அடிக்கடி பெரியதிரையில் வர வாய்ப்பளிக்கப்படாத, இன்னமும் உடலமைப்பைக் கவர்ச்சிகரமாகக் கொண்டுள்ள, தமிழில் நல்ல பேச்சுத்திறனும் பார்வையாளர்களை ஈர்க்கும் சிரிப்பும் இயல்பாகக் கொண்ட,  அதிகம் வயதாகிவிடாத, முன்னாள் நடிகையர் சிலரும் புதுயுகத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ஆறுதலான விஷயமே.

பத்திரிகை
பொதுவாக ஆங்கில ‘இந்து’வின் சென்னைப் பதிப்பில் முன்பெல்லாம் தமிழைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை தந்ததில்லை என்பது தெரிந்ததே. (மாறாக, பெங்களூரில் வெளியாகும் இந்துவின் பதிப்பில் வாரம் ஒருமுறையாவது கன்னட மொழி பற்றியோ, கன்னட இலக்கியம் பற்றியோ, கன்னட எழுத்தாளர்களின் நிகழ்ச்சிகள் பற்றியோ பெரிய அளவில் வருவதை ஆறு ஆண்டுகள் பார்த்திருக்கிறேன்.) இதற்குப் பிராயச்சித்தமாகத்தானோ என்னவோ, தமிழ்’இந்து’வில் மொழியும் இலக்கியமும் பற்றி  வேறெந்த தினசரிகளைவிடவும் அதிக அளவிலும், வித்தியாசமாகவும், உலகத்தரமாகவும் கட்டுரைகளும் செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. விகடனும், குமுதமும், கல்கியும், இந்தியாடுடே-தமிழ்ப்பதிப்பும்   இனி போட்டியிடவேண்டியது தங்களுக்குள் அல்ல, தமிழ் இந்துவுடன் தான் என்று தோன்றுகிறது.  

தினத்தந்தி-சிந்துபாத் கதைக்குப் போட்டியாக இரண்டாம் பக்கம் மேல்பகுதியில் ஏழு-பத்தி அளவில் வெளியாகும்  சித்திரத்தொடரை
விரைவில் முடித்துவிட்டு, அதன் பிறகு,  ‘சிலப்பதிகாரம்’ அல்லது ‘மணிமேகலை’ போன்ற காவியக்கதைகளைச் சித்திரத்தொடராக வெளியிட்டால் ஆங்கில மீடியம் படிக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் விளக்கிச் சொல்லித் தமிழ் கற்பிக்க  உதவி செய்ததாகும். குறைந்தபட்சம், கண்ணகி மதுரையை எரிக்கும்வரை அல்லது மணிமேகலையின் அட்சயபாத்திரம் காலியாகும்வரை சந்தாதாரர்கள் தொடர்ந்து வாங்குவார்கள் என்பது உறுதி.

சிரிப்பு
“என் நண்பருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது எழுப்பும் எல்லா ஓசைகளையும் பதிவுசெய்துகொண்டு வருகிறேன். ஏனென்றால் என்றாவது ஒருநாள் அவன் எழுப்பிய ஓசைகளுக்கு என்ன அர்த்தம் என்று  கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?” – ஸ்டீவன் ரைட், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியப் பதிப்பு, நவம்பர் 2013, பக்கம் 63. இருவருக்கும் நன்றி.  

சந்திப்பு
இந்த வாரம் மூத்த பதிவர்களில் ஒருவரான திரு எஸ். ரமணி (“தீதும் நன்றும் பிறர்தர வாரா”) அவர்களைச் சந்திக்கவும் உடனமர்ந்து உணவருந்தவுமான நல்வாய்ப்பு, வலைப்பூ  நண்பர் கவியாழி கண்ணதாசனின் தகவலால் கிடைத்தது. பின்னர் நாங்கள் மூவரும் இன்னொரு மூத்த பதிவரான புலவர் இராமானுஜம் அவர்களைச் சந்தித்தோம். இந்தச் சந்திப்பைப்பற்றித் தமது ‘கவியாழி’ வலைப்பூவில் கண்ணதாசன் அவர்கள் எழுதக்கூடும் என்று தெரிவதால், நான் அளவோடு நிறுத்திக்கொள்கிறேன். (புகைப்படங்களும் அங்கு வரும்.)

ரமணி அவர்கள், குடியிருப்பால் மதுரைவீரன். ஆனால் சரியான காரணங்களுக்காக அடிக்கடி பெங்களூருக்குப் பயணிப்பவர். (சென்னைக்கும், அதே காரணங்களுக்காக.) அவருடன் நான் இருந்த சிறிது நேரத்திற்குள் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள அவருக்கு வாய்ப்பில்லை என்றாலும் ஒரு முக்கியமான தகவல் அவரையும் மீறிக் கசிந்தது: அவர் ஒரு தேர்ந்த சோதிடராம்.  சொன்னதெல்லாம் பலிக்கிறதாம். (பதிவர்களுக்கு முன்னுரிமை உண்டா?)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com