திங்கள், ஆகஸ்ட் 15, 2022

மணிகர்ணிகா (16) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (16) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  113 வது நாள்:  02-8-2022)


வீடியோவில் தன் தங்கை மகள் மணிகர்ணிகாவைப் பார்த்தபோது மறைந்துபோன தன் உடன்பிறந்த தங்கையைப் போலவே அச்சு அசலாக அவள் இருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் ரங்கநாத்.   அவருடைய மனைவி சாமுண்டீஸ்வரியும் ஆமோதித்தாள். 


“மணிக்கா, இப்பவே ஓடிவந்து உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது எனக்கு” என்றார் ரங்கநாத். “எனக்கும்தான், கண்ணம்மா!” என்றாள் சாமுண்டீஸ்வரி. ஒரு ஸ்டார் ஹோட்டலின் அறையிலிருந்து அவர்கள் பேசினார்கள்.


பிரிந்த குடும்பம் ஒன்றுசேரப்போகும் தருணம் என்பதால் மாதவி வீடியோவில் வராமல் தூரமாக நின்றுகொண்டு அவர்கள் பேசுவதைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். நவீன் ஆனந்தப் பரவசத்தில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. 


பெர்த் நகரம், ஆஸ்திரேலியா 

“மணிக்கா, ஒன்று கேட்கட்டுமா? நீ எப்போது உன்னுடைய சொத்துக்களை ஏற்றுக்கொள்ளப் போகிறாய்? அதை உன்னிடம் கொடுத்தால்தான் எங்கள் மனத்திலுள்ள பாரம் நீங்கும். விஜயவாடாவில் பதினாலு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒரு பிசினஸ் பார்க் கட்டவேண்டுமென்று நவீன் விரும்புகிறான். நீ அதைப் பார்க்கவேண்டாமா? அல்லது உன் விருப்பம் வேறாக இருந்தால் அதன்படியே செய்யலாம்…..” என்று ரங்கநாத் தொடர்ந்தார். 


“நீ தாண்டா கண்ணு எங்க வீட்டுக்கு ராணி! நீ என்ன சொல்றியோ அதையே நவீன் செய்வான். அதனால் நீ ஒருதரம் விஜயவாடா  போய், இடத்தைப் பார்த்துவிடு. அப்புறம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் நம்ப வீட்டையும் பார்க்கவேண்டும்….” என்றாள் சாமுண்டீஸ்வரி.     


இருவர் கண்ணிலிருந்தும் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டுதான் இருந்தது. 


மணிகர்ணிகாவின் முகத்தில் உணர்ச்சி வசப்பட்டதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை. தெளிவாக இருந்தாள். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டபின் பேச ஆரம்பித்தாள்.


“மாமா, மாமி! உங்களையெல்லாம் சந்திக்க முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஓர் அற்புதம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்தப் புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் எனக்குத்  தயக்கமாக இருக்கிறது. காரணம் பெற்ற பெண்ணையே கொல்லத்  துணிந்தவர் தாத்தா என்னும்போது, அவருடைய ரத்தக்கறை படிந்த சொத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? இருபது வருடம் தந்தை தாயின் அன்பையே காணாத எனக்கு, இந்தச் சொத்தை ஏற்றுக் கொள்வதால்  இழந்த அன்பெல்லாம் திரும்பக் கிடைத்து விடுமா?  எனக்கு வேண்டவே வேண்டாம். அதில் பிசினஸ் பார்க் கட்டினாலும் சரி, பெரிய அரண்மனையே கட்டினாலும் சரி, அது உங்கள் இஷ்டம். ஆனால் நான் ஒரு  முடிவுக்கு வந்திருக்கிறேன்..” என்று நிறுத்தினாள். மூவரும் அவள் முகத்தையே கவனமாகப் பார்த்தார்கள்.


மணிகர்ணிகா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். முகத்தில் உறுதியை வரவழைத்துக்கொண்டாள். பிறகு பேசினாள்:


“மாமா, மாமி, நவீன் உங்கள் மூவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் இத்தனை வருடமாக என்னைத் தேடிக் கொண்டிருப்பதும், சொத்தைப் பாதுகாத்து வைத்திருப்பதும், நவீனுக்கு என்னைத் திருமணம் செய்ய முன்வந்திருப்பதும்   வேறு எந்தக் குடும்பத்திலாவது நடக்குமா என்று தெரியாது. முகமே தெரியாத ஒருத்திக்காக நவீனும் இவ்வளவு நாட்கள் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருப்பதும் அதிசயமான விஷயமே. அந்த ஒரே ஒரு காரணத்திற்காக ….” என்று ஒருகணம் நிறுத்தி, நவீனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். மாதவியும் அவள் சொல்லப்போவதைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக்கொண்டாள்.


“சொல்லும்மா, சொல்லும்மா” என்றார்    சாமுண்டீஸ்வரி.


“அந்த ஒரே காரணத்திற்காக நவீனைத் திருமணம் செய்துகொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால்…” 


சாமுண்டீஸ்வரி பரபரப்புடன், “நீ  சம்மதிச்சதே போதும்டி கண்ணு! ஒன் கண்டிஷன் என்னவா இருந்தாலும் நாங்க ஏத்துக்கறோம். தெளிவாச் சொல்லிடும்மா” என்றாள். 


“நான் இப்பத்தான் கல்லூரியில்  இருந்து வெளி உலகுக்கு வந்திருக்கிறேன். ஒரு வேலையில் சேர்ந்து என் சொந்தக் காலில்  நிற்கவேண்டும். அதன் பிறகுதான் திருமணத்திற்கு என் மனம் தயாராக முடியும். அத்துடன் நவீன் என்பவரைப் பற்றி ஆனா ஆவன்னா கூட எனக்குத் தெரியாது. அதே போல் என்னைப் பற்றி, என்னுடைய குணாதிசயங்களைப்  பற்றி, என் வாழ்க்கையின் லட்சியங்களைப் பற்றி அவருக்கோ உங்களுக்கோ எதுவும் தெரியாது. ஆகவே முதலில் நாங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவேண்டும்…”


ரங்கநாத்துக்கு மெய் சிலிர்த்தது. “மணிக்கா, ஒங்க அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கே நீ! அவளும் இப்படித்தான். ஒரு வார்த்தை பேசினாலும் அதையே கடைசி வரை உறுதியா பேசுவா. அவளை மாத்தவே முடியாது…” என்றவர், “அந்தப் பிடிவாத குணம்தானே அவளுக்கு எமனா முடிஞ்சுது! அதனால கொஞ்சம் விட்டுப் பிடிக்கிற குணம் இருக்கணும்மா..” என்றார்.


அதற்குள் சாமுண்டீஸ்வரி குறுக்கிட்டு, “கொழந்தை என்ன சொல்றாளோ கேளுங்களேன், என்ன அவசரம்?” என்றாள்.


மணிகர்ணிகா தொடர்ந்தாள். “அதற்கு எங்களுக்கு மூன்று வருடம் தேவைப்படும் என்று தோன்றுகிறது. அதுவரை பொறுப்பாரா மிஸ்டர் நவீன்?” என்றாள் அவனைப் பார்த்து, புன்னகையுடன்.


‘சபாஷ்! நீ புத்திசாலி!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மாதவி.


நவீன் “உனக்காக மூன்று வருடம் காத்திருப்பது எனக்கொன்றும் பெரிய விஷயமில்லை. நீதான் பார்த்தாயே, இப்போது இருநூறு என்ஜினீயர்களை ரெக்ரூட் செய்திருக்கிறேன். கம்பெனியை விரிவுபடுத்தியாகவேண்டும். அதற்கு நிச்சயம் மூன்று வருடம் எனக்கும் தேவைப்படும்தான். ஆனால்…” என்று தன் தந்தையை நோக்கினான். “ஆஸ்திரேலியா…” என்றான்.


“ஆமாம், மணிக்கா, உன்னுடைய முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இத்தனை வருடம் உனக்காகப் பொறுத்திருந்தோம், இன்னும் மூன்று வருடம் பொறுக்கமாட்டோமா? பொறுக்கிறோம். ஆனால் எங்கள் பொறுமைக்காக நீ ஒரு சலுகையை வழங்கவேண்டும்” என்றார் ரங்கநாத். 


நவீன் தொடர்ந்தான். “மணிக்கா, என் கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது. அதே போல் துபாயிலும் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவைக் கவனிக்க வேண்டும். அதற்கு உன்னுடைய சலுகை வேண்டியிருக்கிறது” என்றான். 


மணிகர்ணிகா புரியாமல் விழித்தாள். 


“ஆஸ்திரேலியாவுக்குப் போவதென்றால் விசா வாங்கவேண்டும். தனி நபர் விசாவை விட கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விண்ணப்பித்தால்  ‘ஃபேமிலி விசா’ கிடைப்பது சுலபம். அதனால்….”


“அதனால்?” என்றாள் மணிகர்ணிகா.


“அதனால் எனக்கு உடனடியாக  ஒரு ஃபேமிலி வேண்டும்” என்றான் நவீன். அப்போதுதான் மணிகர்ணிகாவுக்குப் புரிந்தது.


“உங்கள் அவசரத்தைப் பார்க்கும்போது எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது. எப்படியாவது என்னை உங்கள் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது, மிஸ்டர் நவீன்!”


மாதவி அலுத்துக்கொண்டாள். ‘அடி அசட்டுப் பெண்ணே! அனாதையாக இருந்தவளுக்கு அதிர்ஷ்டம் கூடிவருகிறது. விலகி விலகிப் போகிறாயே!’


ரங்கநாத் நிலைமையைப் புரிந்துகொண்டார். தானே நேரில் வந்து மணிகர்ணிகாவைச் சந்தித்தால்தான் மேற்கொண்டு காரியங்கள் நடக்கும். “இரண்டே நாள் பொறு, மணிக்கா! நானும் உன் மாமியும் பெங்களூர் வருகிறோம். நேரில் பேசினால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும். அதுவரை நீ தங்குவதற்கு பெங்களூரில் சரியான இடம் இருக்கிறதா? இல்லை, சர்வீஸ் அபார்ட்மெண்ட் நல்லதாகப் பார்த்து ரிசர்வ் செய்யட்டுமா?”


தன்னை மீறிக்கொண்டு  விஷயங்கள் வேகமாக  நடப்பது மணிகர்ணிகாவுக்கு வியப்பாகவும் திகைப்பாகவும் இருந்தது. மாதவி ஏதாவது ஆலோசனை சொல்வாளோ என்று அவளைத் தேடினாள்.


“இன்னும் ஒருவாரம் என்னோடு நீ தங்கலாம். அடுத்த வாரம் தான் நான் மும்பாய் போகிறேன்” என்றாள் மாதவி.


****

சொன்னபடியே நேரில் வந்தார்கள் மாமாவும் மாமியும். அவர்களைப்  பார்த்தவுடன், தான் பார்த்தறியாத தந்தையையும் தாயையும் பார்த்ததுபோலவே இருந்தது மணிகர்ணிகாவுக்கு. அவர்களின் பாசத்தில் நெகிழ்ந்து போனாள். 


தான் ஒரு வங்கியில் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக இருப்பதாகச் சொன்னார் ரங்கநாத். அது எப்படிப்பட்ட பதவி என்று அவளுக்குத் தெரியவில்லை. “அப்படியா, உங்கள் வங்கியில் எனக்கு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன்” என்றாள் பெருமிதத்துடன். 


சாமுண்டீஸ்வரிக்கு அவளுடைய அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பு வந்தது. “மணிக்கா, நீ நினைத்தால் அதை இரண்டு லட்சம் ஆக்கலாம், ரெண்டு கோடி ஆக்கலாம். நீ பணக்காரி என்பதை மறந்துவிடாதே” என்றாள். “ஆனால் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும்.  நவீன், தாமதம் பண்ணாம ஆகவேண்டியத கவனி.”


நவீன் அவளருகில் வந்து உட்கார்ந்தான்.   அது ஏர்போர்ட் அருகில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல். காலை ஒன்பதுமணி. சர்வரிடம் “பொங்கல் வடை, வெங்காய ஊத்தப்பம்” என்றான். 


“எனக்கு ஆர்டர் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு?” என்றாள் மணிகர்ணிகா.  


“அப்படியா? உங்களுக்கும் அதுதான் பிடிக்குமா?” என்று ஆச்சரியப்பட்டான் நவீன். “நான் எனக்காகத்தான் ஆர்டர் செய்தேன். பரவாயில்லை, இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப்போகிறீர்களே!” என்றவன், “பொங்கல் வடை, வெங்காய ஊத்தப்பம் இன்னொரு செட்” என்று சர்வரிடம் கூறினான்.  


“நவீன், என்னை நீ என்று சொன்னாலே போதும். நீங்கள் எல்லாம் வேண்டாம். அது சரி, என்னை எதிலும் ஒத்துப்போகாதவள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.


“உஷ், உன்னுடைய மாமா, மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மெதுவாகப் பேசு. நான் சண்டை போடுவதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது.”


“அதற்காக? நான்தான் சொல்லிவிட்டேனே, கல்யாணத்திற்கு இன்னும் மூன்று வருடம் வேண்டும் என்று? பிறகு ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?”


“பொங்கல் அருமையாக இல்லை?” என்று பேச்சை மாற்றினான் நவீன். “இந்த இஞ்சியையும் முழு மிளகையும் ஒரு கடி கடித்துவிட்டுப்  பொங்கலைச் சுவைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது தெரியுமா?”


அவனை ஒரு வெட்டு வெட்டினாள் மணிகர்ணிகா. “அப்படியா, இந்தாருங்கள், என்னுடைய இஞ்சியையும் மிளகையும் நீங்களே கடித்துக்கொள்ளுங்கள்” என்று ஸ்பூனை அவனிடம் நீட்டினாள்.    

 

அவனோ அதை லபக்கென்று தன்  வாய்க்குள் போட்டுக்கொண்டு ஸ்பூனைத் திருப்பிக்கொடுத்தான். 


“என்ன இது, உன்னுடைய மிளகிலும் இஞ்சியிலும்  காரமே இல்லை! இனிப்பாக அல்லவா இருக்கிறது? என்ன அதிசயம்!” என்றான் அவள் முகத்துக்கு அருகில் தன்  முகத்தை வைத்துக்கொண்டு.


அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. மெல்லிய குரலில், “போதும், நான் இன்னும் உங்கள் மனைவியாகி விடவில்லை என்பது நினைவிருக்கட்டும். இந்த அசட்டு உளறல்களை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றாள்.


“அதானே, உண்மையைச் சொன்னால் பெண்கள்  ஒப்புக்கொள்ள  மாட்டார்கள் என்று காந்தியடிகள் சொன்னது நிஜமாகிறது” என்றான் நவீன் குறும்பாக. 


“அப்படியா, காந்தியடிகள் எங்கே, எப்போது, யாரிடம் சொன்னார் என்று ஆதாரம் காட்ட முடியுமா?”


“விடு, காந்தியடிகள் இல்லாவிட்டால்  கண்ணதாசன் சொல்லியிருப்பார். எங்கோ படித்தது. இதையெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கக் கூடாது….சரி, இனிப்பான மிளகும் இஞ்சியும் இன்னொரு ஸ்பூன் கிடைக்குமா?” என்றான்.


“டொக்கு” என்று வலதுகை ஆள்காட்டி விரலை மடக்கிக் காட்டினாள் மணிகர்ணிகா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவர் மற்றவரைக் கேலிசெய்யும் விதம் அது.


அதற்குள் தங்கள் காலை உணவை முடித்துவிட்ட ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் அவர்களை நெருங்கி, “இன்னும் முடியவில்லையா? அவசரமில்லை, நிதானமாகச் சாப்பிடுங்கள். நாங்கள் அறையில் காத்திருக்கிறோம்” என்று கிளம்பினார்கள்.


மறுநாள் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடமையைப் பற்றி மன ஒற்றுமையோடு நவீனும் மணிகர்ணிகாவும் அங்கிருந்து எழுந்திருக்க மேலும்  ஒரு மணிநேரம் ஆயிற்று. 


மறுநாள் அனைவரும் கோலார் கிளம்பிச் சென்றார்கள். ரங்கநாத்தின் வங்கிக்கிளையின் மேலாளர் ஜான் நாயுடு அவர்களை வரவேற்று, திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வங்கியின் கடைநிலை ஊழியராக இருந்த ராஜா சாட்சிக் கையெழுத்திட்டார். பத்தே நிமிடத்தில் முடிந்துவிட்ட சடங்கின் முடிவில் நவீனும் மணிகர்ணிகாவும் கணவன்-மனைவி ஆகிவிட்ட சான்றிதழ் கிடைத்து, அடுத்த பத்து நாட்களில் அவர்களுக்கு ஆஸ்திரேலியா செல்வதற்கு ஃபேமிலி விசா கிடைத்துவிட்டது. 


ராஜாவுக்கு அவர் கேட்டபடியே சென்னைக் கிளைக்கு மாறுதல் கிடைத்துவிட்டது. ஜான் நாயுடுவுக்குச் சென்னை மண்டலத்தின் ரீஜினல் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைத்தது.  மணிகர்ணிகாவின் பதிவுத் திருமணம் ரகசியமாக இருக்கவேண்டிய விஷயம் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன? 


அடுத்த மாதம் நவீனுடைய மென்பொருள் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தன் அலுவலகத்தைத் தொடங்கியது. குடியிருப்பதற்கு ஈஸ்ட் பெர்த் பகுதியில் ஒரு அழகான வீட்டை வாடகைக்கு எடுத்தான் நவீன். சமையலறையும் வரவேற்பறையும் நூலகமும் தரைத்தளத்தில் இருந்தன. முதல் மாடியில் நவீனும் இரண்டாவது மாடியில் மணிகர்ணிகாவும் தனித்தனியாகத் தங்கினார்கள். மூன்று வருடம் முடியும்வரை அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதுதானே அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்?


(தொடரும்)

       -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 

    


  


சனி, ஆகஸ்ட் 13, 2022

மணிகர்ணிகா (15) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (15) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  112 வது நாள்:  01-8-2022)

    

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.“அப்படியானால் மணிகர்ணிகா பெரிய பணக்காரி என்று சொல்லுங்கள்.  எனக்குப் பொறாமையாக இருக்கிறது!”  என்று மணிகர்ணிகாவை அணைத்துக்கொண்டாள் மாதவி. 


நவீன்  தன் அத்தை- அதாவது மணிகர்ணிகாவின் தாய்- எப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையில் இறந்தார் என்பதையும் தன் தாத்தா எப்படி சொத்துக்களையெல்லாம் மணிகர்ணிகா மேல் எழுதி வைத்தார் என்பதையும், தானும் மணிகர்ணிகாவும் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அந்தச்  சொத்துக்களைப்  பெற முடியும் என்பதையும் விரிவாகச் சொன்னவுடன் முதலில் பேசியவள் மாதவி தான். 


மணிகர்ணிகாவோ  ஒரு நிமிடம் அவனை  ஏறெடுத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து கொண்டாள். பிறகு, “மாதவி,  சொத்துக்காகத்தான் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார் இல்லையா?” என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே. 


“சீச்சீ, அற்பத்தனமாக பேசாதே! யாரோ செய்த தவறுக்காக நவீன என்ன செய்ய முடியும்?  பாவம், முகமே தெரியாத உனக்காக எத்தனை வருஷமாக ஏங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார். உன் மாமா மாமியும்  உன்னை இப்படி பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் தெரியுமா?  ஆதரவில்லாமல் வளர்ந்ததால் உன் மனம் விரக்தி அடைந்து இருக்கிறது.  அதை விட்டு வெளியில் வா.  ஒன்று செய்,  நீயும் நவீனும் பேசிக் கொண்டிருங்கள். நான் அரை மணி நேரம் வாக்கிங் போய்விட்டு வருகிறேன்”  என்று மாதவி விலகினாள்.                  


மணிகர்ணிகாவுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. அவள்  ஆண்களோடு அதிகம் பழகியதில்லை.  நவீன் பேசப்பேச அது உண்மையா, பொய்யா, மாயமா என்று திகைத்துப் போனாள். தன் தாயின் புகைப்படத்தை அவன் காட்டியபோது அவள் தன்னைப் போலவே இருப்பதைக்கண்டு துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதாள். நவீனும் அழுதான். 


எப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்  தாய் வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்யயும் முடிவை எடுத்தாள் என்று அறிய ஆவலாய் இருந்தாள். ஆனால் நவீனுக்கும் அது தெரியவில்லை. தன் தந்தையின் புகைப்படத்தையாவது பார்க்க விரும்பினாள். ஆனால் கோபத்தினால் தாத்தா அவருடைய புகைப்படத்தை ஒன்றுவிடாமல் அழித்துவிட்டார் என்றான் நவீன்.


“மணிக்கா, என்னை நீ நம்புகிறாயா? இல்லை, சந்தேகப்படுகிறாயா?” என்று நெகிழ்வோடு கேட்டான் நவீன். அந்த நிமிடம் வரையில் அவளுடைய விரல்களைக் கூட அவன் தீண்டவில்லை. 


அவளும் அதே நெகிழ்ந்த நிலையில்தான் இருந்தாள். தன்னை அனாதையாக்கிவிட்டு மறைந்துபோன தாய் தந்தை மீது அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் வாழக்கையில் எதையும் அனுபவிக்காமல்  அவர்களும் அனாதையாகத்தானே இறந்துபோயிருக்கிறார்கள் என்ற பரிதாபமும் பீறிட்டது.


பூங்காவில் பல ஜோடிகள் கைகோர்த்துக்கொண்டும், அணைத்துக்கொண்டும், செடிமறைவில் முத்தமிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.  தன் தாயும் தந்தையும் கூட இப்படித்தானே வாழவேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பார்கள்! பெற்ற மகள் என்றும் பாராமல்  முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டாரே தாத்தா! அவருடைய சொத்தை நான் பெற்றுக்கொண்டால்  அம்மாவின் ஆன்மா மன்னிக்குமா? இளமையெல்லாம் ஏழைப் பெண்ணாக வாழ்ந்தாயிற்று. இப்போது கையில் படிப்பு இருக்கிறது. எப்படியும் நல்ல வேலை கிடைத்து நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அம்மாவை வேண்டாம் என்றவர்களின் சொத்தை நான் ஏன் ஏற்கவேண்டும்?


“ஒரு கொலைகாரரின் சொத்து எனக்கு வேண்டாம், மிஸ்டர் நவீன்!” என்று அழுத்தமான குரலில் கூறினாள் மணிகர்ணிகா. நடந்துகொண்டிருந்த ஒரு முதியவரின் காதில்  அது விழுந்திருக்கவேண்டும். ஒரு நிமிடம் நின்று அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு நடந்தார். 


“தாத்தாவுடன் பாட்டியும் தானே அம்மாவின் கொலைக்கு உடந்தையாக இருந்திருப்பார்?”


நவீன் வேகமாக அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டான். “மணிக்கா, பாட்டி அன்று உயிரோடிருந்தால் அத்தைக்கு இப்படி நடக்க விட்டிருப்பாரா? அவர் இறந்து இரண்டு வருடம் கழிந்த பிறகுதான் இது நடந்தது. தாயில்லாத பெண்ணான அத்தைக்கு வழிகாட்ட யாரும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.” மணிகர்ணிகா அவனிடமிருந்து தன் கைகளை விடுவித்துக் கொள்ளவில்லை. 


“மணிக்கா, உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்தச் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருமம் செய்துவிடு. ஆனால் என்னை மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிடாதே. உனக்காகவே நான் உயிரோடிருக்கிறேன். அத்தைக்கு நடந்த அநீதிக்குப்  பிராயச்சித்தமாக நான் உன்னை மணந்துகொண்டுதான் ஆகவேண்டும்.   வேறு வழியில் இந்த வினை தீராது என்று என் அம்மா சொல்கிறார்…” என்ற நவீன் சட்டென்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பைத் தளரவிடும் நினைப்பு அவளுக்கும் இல்லை. ஆனால் கண்கள் மட்டும் ஆறாய்ப் பொழிந்தன.       

  

இப்போது பூங்காவில் ஒரு சில விளக்குகள் மட்டுமே எரிந்தன. பூங்கா மூடும் நேரம் ஆகிவிட்டது. இலேசான குளிர்காற்றும் வீசத் தொடங்கியது. அணைப்பின் வெப்பம் அவளுக்கு இதமாக இருந்தது. 


“மணிக்கா, பேச மாட்டாயா?” என்றான் அணைப்பை விடாமல்.


அதற்கு விசும்பல் பதிலாக வந்தது. 


வலது கையால் அவளுடைய முகத்தை ஏந்திக்கொண்டு, “மணிக்கா, உன்மீது எனக்கு உரிமை இருப்பது உண்மையானால், ஒன்று செய்வாயா?” என்றான்.


ஒரு கணம் கண்களை விரித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டாள். 


“எனக்குள்ள உரிமை உனக்கும் என்மீது உண்டுதானே?” என்றான். 

அவளுக்குப் புரியவில்லை.  


“பொதுவாக, பெண்களுக்குத் தானே முன்னுரிமை?” என்றான். 

அவள் கண்களைத் திறந்தாள்.  


“என்னதான் சொல்கிறீர்கள்? புதிர்போடவேண்டாம். எனக்கு விடுகதைகள் பிடிக்காது” என்றாள் பொய்க் கோபத்துடன்.


“சரி, சொல்லிவிடுகிறேன். எனக்கு அவசரமாக ஒரு முத்தம் தருவீர்களா?”


அவள் தன்னையறியாமல் களுக்கென்று சிரித்துவிட்டாள். “என்னை அவ்வளவு அற்பமாக நினைத்து விட்டீர்களா?” என்று அவன் கைகளிலிருந்து தன்னை வேகமாக விடுவித்துக்கொண்டாள். 

“உங்களைப் பற்றி நான் எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும்” என்று நடக்க ஆரம்பித்துவிட்டாள். 


அவன் வேகமாக அவளைக் கடந்து முன்னால் போய்  நின்றான். “நான் தவறு செய்து விட்டேனா?” என்றான் பரிதாபமாக.


“இல்லை, ஆனால்,  நான் தவறு செய்ய விரும்பவில்லை என் அம்மாவைப் போல!” என்றாள். குரலில் உறுதி தொனித்தது.


“சபாஷ்!” என்று  கை தட்டியபடி  வந்தாள் மாதவி.  “மிஸ்டர் நவீன், இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே, மணிக்கா?”


அவள் மௌனமாக இருந்தாள். 


“நல்லது, இரவு சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டது. எம்.ஜி. ரோடு போகலாம். சாப்பிட்டபிறகு அவள் தன்  மாமா, மாமியோடு பேசட்டும். அப்போதுதான் அவளால் நிம்மதியாக ஒரு முடிவெடுக்க முடியும்” என்று மாதவி ஓர் ஆட்டோவை  அழைத்தாள்.

**

போலீஸ் ஸ்டேஷன் என்றதும் பயத்தால் வியர்த்துப்போகிற மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்தவள் அல்ல, பரமேஸ்வரி. ஒரு படத்தில் போலீஸ்கார வடிவேலுவையே அலற வைத்த ரவுடிப்பெண் போன்றவள் அவள். இல்லையென்றால் ஐந்துவருடமாக வட்டிக்குப் பணம்கொடுக்கும் தொழிலில் கொடிகட்டமுடியுமா? 


மாமியாரை மிரட்டி அவருடைய நகைகளை விற்றுக் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயை மூலதனமாக வைத்துத் தொழிலில் இறங்கினாள் பரமேஸ்வரி. ஆரம்பத்தில் தன்னோடு வேலைசெய்யும் தையல் தொழிலாளிகளுக்கு இரண்டு வட்டி வீதம் ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்து சிறிய அளவில் பிசினஸைத் தொடங்கியவள், நாளடைவில் குறைந்த கடனே ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயித்துக்கொண்டாள். அதில் ஐநூறு ரூபாயை வட்டிக்காக முன்கூட்டியே பிடித்துக்கொண்டு நாலாயிரத்து ஐந்நூறு தான் தருவாள். அந்த ஐந்நூறு ரூபாயைத் தன் மாமியாரிடம் கொடுத்துவிடுவாள். அப்படிச் சேர்ந்த தொகையில் ஒரே வருடத்தில் மாமியாருக்குப் புதிய நகைகளாக வாங்கிக்கொடுத்துவிட்டாள். அதன் பிறகும் கூட, மாமியாரிடம் அவ்வப்பொழுது சிறிது பணத்தைக் கொடுப்பதை வழக்கமாகக்  கொண்டிருந்தாள். இதன்மூலம் மாமியார்-மருமகள் உறவில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் பரமேஸ்வரி வைத்ததுதான் சட்டம் என்று ஆனது. 


மருமகளின் தொழில் பாணியைப் பின்பற்றி மாமியாரும் சிறிய அளவில்

போராடித்தால் வடை சாப்பிடுங்கள்

பூக்காரிகளுக்குத் தினசரிக் கடன் கொடுக்க ஆரம்பித்தார். காலையில் ஐந்து மணிக்கு ஒரு பூக்காரி ரூ.450 கடனாகப் பெற்றால், இரவு ஒன்பது மணிக்குள் அதை 500 ஆகத் திருப்பித் தரவேண்டும் என்பது ஏற்பாடு. இது பூக்காரிகளுக்கு மிகவும் வசதியாகவும் குறைந்த வட்டியாகவும் புலப்பட்டது. ஏனென்றால், கையில் எந்த மூலதனமும் இல்லாமல் ரூ.450 கிடைக்கிறது. அதுவும் சூரியன் உதிப்பதற்கு முன்னால். உடனே கோயம்பேடு பூமார்க்கெட்டுக்குப் போனால் முதல் போணியாகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யமுடியும். அந்தப் பூவை  எப்படியும் 700 ரூபாய்க்குக் குறையாமல் விற்கமுடியும். அசலும் வட்டியுமாக  500 ரூபாயைக் கொடுத்தாலும் நிகர லாபம் 200 ரூபாய் கிடைக்கும். மழைநாட்களில் விற்பனை குறையும். அப்போது லாபமும் குறையும். என்றாலும் 100 ரூபாயாவது லாபம் வந்தே தீரும். 


இவ்வாறு பூக்காரிகளுக்கு மட்டுமே கடன்கொடுத்து ஒரே வருடத்தில்  ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டார் அந்த மாமியார். அதில் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிரவுண்டு நிலமும் வாங்கிப்போட்டார் என்றால் அவர் திறமைதான் என்னே! 


எனவே, ‘ஏசிபி கருணாமூர்த்தி கூப்பிடுகிறார்’ என்று தகவல் வந்தவுடன், பரமேஸ்வரி அலட்சியமாக, “இந்தா ஏட்டு, ஆபீஸ் நேரத்துல நான் வெளிய வர முடியாது. என் மாமியாள அனுப்பிவைக்கறேன். என்னான்னு அவகிட்ட சொல்லக் சொல்லுங்க” என்று மாமியாரை அனுப்பினார்.


கிரீஷ் தனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு லாக்கப்பில் உட்கார்ந்துவிட்டதால் கொதித்துப் போயிருந்த கருணாமூர்த்தி, பரமேஸ்வரியும் தன்னை மதிக்காமல் மாமியார்க் கிழவியை அனுப்பிவைத்ததும் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்.        

ஏட்டை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.


“ஒரு சாதாரணப் பொம்பளையை விசாரித்து அழைத்துவரக்கூட முடியாமல் ஏன்யா டிபார்ட்மெண்ட்டுக்கு வந்தே?” என்று ஏசினார்.

உடனே உள்ளே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள் வந்து, அவர் காதில் மட்டும் கேட்கும்படியாக,”இந்த பரமேஸ்வரிகிட்ட கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும் சார்! எங்களுக்கு அவசர முடைன்னா   ஒரு வட்டிக்கே பத்தாயிரம் குடுப்பா சார்! சொல்லப்போனா அவகிட்ட கடன் வாங்காதவரு  நம்ம ஸ்டேஷன்ல நீங்க ஒருத்தர் மட்டும்தான் சார்” என்றார்கள்.  


இவளை வேறுமாதிரியாகத்தான் ‘டீல்’ செய்யவேண்டும் என்று தெரிந்துகொண்ட கருணா, “ஒங்க மருமக நல்லா  இருக்காளாம்மா? ஒரு விஷயம் பேசணுன்னு கூப்பிட்டேன். வரத்துக்கு வசதிப்படல போலிருக்கு. பரவாயில்ல, நான் வேறே எடத்துல ஏற்பாடு பண்ணிக்கறேன்னு சொல்லிடுங்க” என்று எழுந்து தன் பைக்கைக் கிளப்ப ஆயத்தமாவதுபோல் பாவலா காட்டினார்.    


மாமியார்க்காரி தான் தொழில்நுணுக்கத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டாரே, கருணா மாதிரி நல்ல கடன்காரர் அகப்பட்டால் விடுவாளா? அவர் பின்னாலேயே போனாள். “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார்! எவ்ளோ வேணும்னு சொல்லுங்க. வட்டி கழிக்காமலே குடுக்கச் சொல்றேன். ஒங்களுக்கு இல்லாம யாருக்குத் தரப்போறா என் மருமவ?” என்று பணிவாகச் சொன்னாள். 


தன் திட்டம் பலிப்பதைக் கண்ட கருணா, அவளருகில் நெருங்கி வந்து,”இதெல்லாம் நமக்குள்ள இருக்கணும். ஸ்டேஷன்ல மத்தப் பசங்களுக்குத் தெரியக்கூடாது. கேவலமா நினைப்பாங்க” என்றார்.   

“அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்களா? எவ்ளோன்னு சொல்லலியே” என்றாள் அவள்.


“ஒரு முப்பது ரூவா வேணும்னு தோணுது.”  


“நீங்க அஞ்சு மணிக்கு தானே வீட்டுக்கு கெளம்புவீங்க? அதுக்குள்ளே பரமேஸ்வரி பணத்தோட வருவா” என்று உறுதியளித்துவிட்டுக் கிளம்பினாள் கிழவி.


கருணா தன் அடுத்த திட்டத்துக்குத் தயாரானார். இந்த கிரீஷை ஒருவழி பண்ணியாகவேண்டும்…


“அந்த விநோதான்னு ஒரு மேடம் 20,000 செக் திருட்டுப்போச்சுன்னு சொன்னாங்களே, அவங்க வீட்டுக்குப் போய், அந்தத் திருடனைக் கண்டுபிடிச்சிட்டோம், நீங்க ரைட்டிங்கல கம்ப்ளெயிண்ட் கொடுத்தா போதும், ஒடனே பணம் ஒங்களுக்கு வந்துடும்னு சொல்லி, அந்தக் கம்ப்ளெயிண்ட் லெட்டரை கையோடு வாங்கிட்டுவா” என்று  ஏட்டை அனுப்பினார்.  

(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.


திங்கள், ஆகஸ்ட் 08, 2022

மணிகர்ணிகா (14) இன்று வர மாட்டாள்-தொடர்கதை

மணிகர்ணிகா (14) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  111 வது நாள்:  31 -7-2022)இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (12) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி "மணிகர்ணிகா (13) இன்று வரமாட்டாள்" படிக்க இங்கே சொடுக்கவும்.கோரமங்களாவில் தன்னுடைய நண்பி மாதவியின் வீட்டுக்கு வந்தாள் மணிகர்ணிகா. கல்லூரியில் மாதவி  அவளுக்கு இரண்டு வருடம் சீனியர். இப்போது பெங்களூர் ஐஐஎம்-இல் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தாள். இறுதி செமஸ்டர் பிராஜெக்ட்டுக்கான சர்வேயில் ஈடுபட்டிருந்ததால்  பாதிநேரம் வீட்டில்தான் இருப்பாள். “இன்று நவீன்னு ஒருத்தனை மீட் பண்ணினேன்..” என்று ஆரம்பித்தாள் மணிகர்ணிகா. 


“யாருடி அவன்? எத்தனை நாளாக எனக்குத் தெரியாமல் மறைக்கிறாய்?” என்று பொறாமையோடு முறைத்தாள் மாதவி.  “இந்த பெங்களூர் பசங்களை நம்பாதே! ரெண்டு மாசம் லவ் பண்ணிட்டு எச்-1 பி யில் அமெரிக்கா போய்விடுவார்கள்! இதுவரை மூன்று தரம் தோல்வியடைந்துவிட்டேன்.“


மணிகர்ணிகாவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்துவிட்டது. “லவ்வும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை…” என்று நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னாள். முழுதும் கேட்டுக்கொண்ட மாதவி ஆனந்தம் தாங்கமுடியாமல் குதித்தாள். “நீ ரொம்ப லக்கிடி! லவ் பண்றவனே ஒனக்கு வேலையும் வாங்கிக்கொடுத்து,  தாலியும் கட்டப்போரான்னு சொல்லு!”


“சும்மா இருடி. எனக்கு மாமான்னு ஒருத்தர் இருக்கிறதே இன்னிக்கி வரை தெரியாது. அப்படி இருந்திருந்தா எங்க அம்மா இறந்தப்பவே வந்து என்னை டேக்-ஓவர் பண்ணியிருக்க மாட்டாரா?” என்று கூறும்போதே அவள் கண்கள் கலங்கின. முகத்தைத் துடைத்துக்கொள்ள பாத்ரூமுக்குப் போனாள். 


அப்போது மேஜையில் இருந்த அவளது மொபைல் ஒலித்தது.  எண் மட்டும் தெரிந்தது. பெயர் இல்லை. புதிய ஆசாமியாக இருக்கவேண்டும். மாதவி மொபைலை எடுத்து, “வணக்கம், யார் நீங்கள்?” என்றாள். 


“மன்னிக்கவேண்டும், இது மிஸ் மணிக்கா அவர்களுடைய போன் தானே?”


“இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தங்கள் பெயர்?” என்று வேண்டுமென்றே இடக்காகப் பேசினாள்  மாதவி. 


“மன்னிக்கவேண்டும், என் பெயர் நவீன். நீங்கள் அவருடைய நண்பியா?”


“இருக்கலாம், இல்லாமலும் போகலாம். என்னைப் பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?”


“மீண்டும் மன்னிக்கவேண்டும், உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”


“இருக்கலாம், இல்லாமலும் போகலாம்..” என்று வாய்வந்துவிட்டது மாதவிக்கு. உடனே பல்லைக் கடித்துக்கொண்டு, “இன்னும் ஆகவில்லை, மிஸ்டர்!  ஆனால் எனக்கு நீங்கள் மாப்பிள்ளை பார்க்கவேண்டாம். நானே பார்த்துக்கொள்வேன்” என்று கோபமாகக் கூறினாள். 


அவன் விடவில்லை. “ஆனால் உங்கள் நண்பிக்கு அந்த அளவுக்குத் தன்னம்பிக்கை இல்லை போலிருக்கிறதே!” என்று சிரித்தான். 


அதற்குள் பாத்ரூமிலிருந்து வந்த மணிகர்ணிகா, “யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்? உன் லவ்வரா? இரு உன் வண்டவாளத்தை எல்லாம் அவனிடம் சொல்லிவிடுகிறேன்” என்று வேகமாக மொபைலைப் பிடுங்கினாள். ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.   “இங்க பாருங்க மிஸ்டர், மாதவியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அவளை மேனேஜ் செய்வது ரொம்ப கஷ்டம். அதனால் வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று சற்றே அதிகாரத் தோரணையில் பேசினாள். 


அவள் குரல் நவீனுக்குப் புரிந்திருக்கவேண்டும். “உங்கள் அட்வைசுக்கு நன்றி மேடம். அதனால்தான் மணிக்கா என்ற பெண்ணை நான் லவ் பண்ணுவதாக இருக்கிறேன். என் செலக்ஷன் பரவாயில்லையா? அவளிடம் சொல்லி இன்று மாலை என்னைச் சந்திக்க வைப்பீர்களா?” என்று போனை வைத்துவிட்டான். 


பகீரென்றது அவளுக்கு. மணிக்காவாம் மணிக்கா! இவன்தான் எனக்குப் பெயர் வைத்தானா? 


“மாதவி, நீ ஏண்டி போனை எடுத்தாய்? அவன் ஏதேதோ பேசுகிறானே! சிக்கலில் மாட்டிவிடுகிறாயே, நியாயமா?” 


அவளை இறுக அணைத்துக்கொண்டாள்  மாதவி. “முட்டாள், முட்டாள்! பெரியவங்க என்ன சொல்லி யிருக்காங்க தெரியுமா? நீ விரும்பறவனை விட,  உன்னை விரும்பறவன் எவனோ அவனையே கட்டிக்கொள் என்று! அதனால, அவனை கப்பன் பார்க்குக்கு ஏழு  மணிக்கு வரச்சொல்லி மெசேஜ் குடு. ஒருமணிநேரம் நல்லாப் படுத்துத் தூங்கு. ஃபிரெஷ்ஷா ஆயிட்டுக் கெளம்பலாம்.  நானும் கூட வர்றேன்.”


“ஆகட்டும்” என்றாள் மணிக்கா. 


*** 

நவீன் ஆறரை மணிக்கே கப்பன்பார்க் வந்துவிட்டான். அங்கிருந்த நூலகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். அல்லது படிக்க முயன்று கொண்டிருந்தான். ‘கிரேக்கர் காலத்து திருமணச் சடங்குகளும் வேத கால நாகரிகமும்’ என்ற இரண்டு தலையணை அளவிலான ஒரு பழங்காலப் புத்தகம் அவன் முன்னால் திறக்கப்படாமல் கிடந்தது. லண்டனில் வெளியான புத்தகம். 


தன் நிலைமையை எண்ணியபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆரக்கிள் மென்பொருட்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தை அவன் நடத்திவந்தான். அவனுக்குக் கீழ் நாற்பது என்ஜினீயர்களும் ஜூனியர் என்ஜினீயர் என்ற பெயரில் முன்னூறு  குமாஸ்தாக்களும்  பணியில் இருந்தார்கள். அவர்களில் இருநூறுபேர் பெண்கள். படித்தவர்கள். இளமையானவர்கள். அழகானவர்கள். அவர்களில் ஒருத்தியை அவன் மனம் நாடினால் என்ன? மணிகர்ணிகா என்ற தன் அத்தைமகளைத்தான் மணம் முடிப்பது என்ற கட்டாயம் உண்டானது எப்படி? 


தந்தையின் கடுமையான உத்தரவினால்தான் அந்த நிலை. தாயாருக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால் கணவனை எதிர்த்துப் பேசும் பாரம்பரியம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவள் அவள்.     


நவீனுக்கு ஒரே ஒரு அத்தை இருந்தாள். அப்பாவின் தங்கை. நவீனின் தந்தை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது, அவருடைய தங்கை, அதாவது நவீனின் அத்தை,  குடும்பத்தின் ஒப்புதல் இன்றி வேறொரு இனத்தைச் சேர்ந்த பையனைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டாள். இரண்டு தரப்பிலும் இனப்பற்று சூடாகி இனவெறியாகப் பாய்ந்து முதலில் அந்தப் பையனையும், இரண்டு வருடம் கழித்து அவளையும் பலிகொண்டது. ஆனால் அதற்குள் அவளுக்குப் பிறந்துவிட்ட பெண்  குழந்தைதான் மணிகர்ணிகா. 


ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் நிறுவனம் ஒன்று அவளை எடுத்து வளர்த்தது. இந்த ஆணவக் கொலைகளுக்குக் காரணமாக இருந்த மணிகர்ணிகாவின் தாத்தா, தன் இறுதிக்காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாமல் படுக்கையில் கிடக்க நேர்ந்தபோது, மனம் மாறி, தன் சொத்துக்களை எல்லாம் மணிகர்ணிகாவுக்கே எழுதி வைத்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்,  தன் பேத்தியான மணிகர்ணிகாவும் பேரன் நவீனும்  திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று!                

 

பரந்துபட்ட இந்திய நாட்டில் மணிகர்ணிகா என்ற குழந்தையை, அவளுடைய புகைப்படம் கூட இல்லாமல் எப்படித் தேடுவது? நவீனின் தந்தை ஆன மட்டும் முயற்சி செய்து தோற்றுப் போனார். சில கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காகவே அன்றி, தன் சகோதரியின் நினைவாகவேனும்  அக்குழந்தையைக் கண்டுபிடித்து அவளுக்கு நல்வாழ்க்கையைத் தரவேண்டும் என்று மனதார விரும்பினார்.  


நவீனும் அதே ஞாபகத்தில் இருந்தான். அவனுக்கு அத்தையின் முகம்  புகைப்படங்கள் மூலம் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டிருந்தது. அதனால் இப்போது மணிகர்ணிகா உயிரோடு இருந்தால், கல்லூரிப் படிப்பு முடித்திருந்தால் அநேகமாக அத்தையைப் போலவே தோற்றத்தில் இருக்கக்கூடும் என்று நினைத்தான். ஆகவே ஒவ்வொரு முறை நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும்போதும் விண்ணப்பிக்கும்  இளம்பெண்களின் புகைப்படங்களைத் தானே எடுத்து ஆராய்வான். அவர்களது பிறந்த ஆண்டு என்ன என்று பார்ப்பான். அப்படித்தான் மணிகர்ணிகாவின் விண்ணப்பத்தைக் கையில் எடுத்தவுடனே ஷாக் அடித்தமாதிரி உணர்ந்தான். அந்த அளவுக்கு அவள் தன் அத்தையைப் போலவே இருந்தாள். பரபரப்புடன்,  பிறந்த ஆண்டைப் பார்த்தான். அதுவும் பொருந்தி வந்தது. தாய் தந்தையின் பெயரைப் பார்த்தான். அதுவும் பொருந்தியது. கண்டேன் சீதையை என்று ஆனந்தப் பரவசம் அடைந்தான். இண்ட்டர்வியூ தினத்தன்று வாசல்மீதே கண்வைத்துக் காத்திருந்தான். அவள் வந்த சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்துவிட்டான். கையில் வேலைக்கான ஆர்டரும் கொடுத்துவிட்டான். 


இதோ இப்போது வந்துவிடுவாள். ஒருவருக்கொருவர் இதுவரை தெரியாமல் இருந்த விஷயங்களைப் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு தன் தாய்  தந்தையுடன் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம். 


மாதவியும் மணிகர்ணிகாவும் கப்பன் பார்க்கை  அடைந்தபோது இரவு மணி ஏழரை. வேண்டுமென்றே தாமதமாகப் போகலாம் என்று திட்டமிட்டவள் மாதவிதான். காரணம், நவீன் எப்படி எதிர்வினை செய்கிறான் என்று பார்க்கும் ஆவல்தான். 


மணிகர்ணிகா தனியாக வருவாள், மனம் திறந்து பேசலாம் என்றிருந்த நவீனுக்கு அவளோடு  ஒரு தோழியும் வருவது என்னமோ போலானது. நூலகத்திலிருந்து எழாமலேயே மணிகர்ணிகாவுக்கு ஒரு குறுஞ்செய்தி  அனுப்பினான். "நீங்கள் வந்ததற்கு நன்றி. உங்கள் தோழி யார்? அவர்கள் முன்னிலையில் நாம் பேசுவது சரியா?"


குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை மணிகர்ணிகாவின் மொபைலில் எழுந்ததுமே சட்டென்று அதைப் பிடுங்கினாள் மாதவி. அவளே பதில் அனுப்பினாள்: "விஷயம் சரியானதாக இருந்தால் பேசலாம். தயங்க வேண்டாம். அவளால் பிரச்சினை இல்லை."


புன்முறுவலோடு அவர்களை நோக்கி நடந்தான் நவீன்.

*** 


இரண்டு நாட்களாக கிரீஷ் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கோபம் கருணாமூர்த்தியின் மனதில் பொங்கிக்கொண்டுவந்தது.  மயூரியிடமிருந்து பல லட்சங்களை நஷ்ட ஈடாக  இவனுக்கு வாங்கித்தருவதற்கு அல்லவா தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! இதுவரை அவனால் பைசா லாபமும் இல்லையே!


கிரீஷின் மொபைலுக்கு போன் செய்தார். மணி அடிக்கும் ஓசை கேட்டது. ஆனால் அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தார். மணி ஒலித்தது. ஆனால் அவன் எடுக்கவில்லை. அயோக்கியன், என்னிடமே விளையாடுகிறானா என்று விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார்.      


கடைசியில் யாரோ போனை எடுக்கும் ஓசை கேட்டது. “யாருய்யா இது? விடாம போன் பண்றது? இனிமே பண்ணாதே. இது போலீஸ் ஸ்டேஷன்” என்று அந்தக் குரல் போனை அணைத்துவிட்டது. 


கருணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிரீஷின் போன் போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படி வந்தது? ஒருவேளை போன் தொலைந்துபோய் போலீஸிடம் கிடைத்திருக்குமா? அல்லது ஒருவேளை அவனே விபத்தில் மாட்டிக்கொண்டானா? புரியாமல் சைபர் கிரைம் துறைக்குப் போன் செய்தார். கிரீஷின் நம்பரைக் கொடுத்து, அது எந்த இடத்தில் இருந்து பேசப்பட்டது என்று கண்டுபிடிக்கச் சொன்னார். பதில் கிடைத்தது. உடனே கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார். 


கருணாவைப் பார்த்ததும் கிரீஷ் “சார், காப்பாற்றுங்கள்” என்று பதறினான். பனியன்-அண்டர்வேர் தவிர மற்றதெல்லாம் கழற்றப்பட்டிருந்தது. எஃப்ஐஆர் பதிந்துவிட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் கூறியதால் அதில் தலையிட விரும்பாமல், கிரீஷின் முகத்தைக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினார் கருணா. 


பிறகு ஆஸ்பத்திரிக்குப் போன் செய்து திலகாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார். “பணம் கட்டாததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்” என்று பதில் வந்தது. “அவளுடைய கணவருக்கு போன் செய்தோம். ரெஸ்பான்ஸ் இல்லை” என்றார்கள். 


திடீரென்று எழுந்த சந்தேகத்தால் அவர், மயூரியின் பைக் இருக்குமிடத்திற்குப் போய்த் தேடினார். அங்கு வேறு சில ஸ்கூட்டர்கள் தாம்  இருந்தன!  கேஸ் பதிவு செய்யாததால் பைக் காணாமல் போனதற்கு போலீஸ்காரர் எவரையும் பொறுப்பாக்க முடியாது.  


அவருக்கு உள்ளங்கை வியர்த்தது. போலீஸ்காரனையே ஏமாற்றுகிறானா இந்த கிரீஷ்?  ஸ்டேஷனுக்குள் போய் உட்கார்ந்தார். ஒரு டம்ளர் ஐஸ்வாட்டர் குடித்தார். மின்விசிறியை முழு வேகத்தில் போடச் சொன்னார். ஒரு போலீஸ்காரரை அழைத்து, “அந்த ரெடிமேட் ஆடை நிறுவனத்துக்குப் போய் பரமேஸ்வரியை வரச் சொல்” என்றார். 


(தொடரும்)

 - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (15) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2022

மணிகர்ணிகா (13) இன்று வர மாட்டாள்- தொடர்கதை

மணிகர்ணிகா (13) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  110 வது நாள்:  30 -7-2022)

 

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (11) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (12) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த மணிகர்ணிகா மிகவும் குழம்பிப் போயிருந்தாள். நவீன் என்கிற தனி மனிதனின் நடவடிக்கைக்காக ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைத்த வேலை வாய்ப்பை வேண்டாம் என்று சொன்னது முட்டாள்தனமாக இருக்குமோ என்று  எண்ணினாள்.  அதேசமயம் பெங்களூரில் இதேபோல் ஆயிரக்கணக்கான கம்பெனிகள் உண்டு,  வேறு வேலை கிடைக்காமலா போய்விடும் என்று மனதின் ஒரு பகுதி தைரியம் சொன்னது. 

விரைவில் முடிக்கவேண்டும்
இத்தொடரை 

ஆனால் அந்தக் கட்டிடத்தில் அப்போது குழுமியிருந்த சுமார் 2000 இளைஞர்களைப் பார்த்தபொழுது கம்ப்யூட்டர் துறையில் வேலை கிடைப்பது அவ்வளவு சாமானிய காரியம் அல்ல என்றும் தோன்றியது. 


யார் இந்த நவீன்?  இத்தனை பெரிய கூட்டத்தில் தன்னை மட்டும் கண்டுபிடித்து அழைத்துச் சென்று அப்பாயிண்மெண்ட் ஆர்டர் கொடுத்தானே  அது எப்படி?  அவனை எனக்குத் தெரியாது.  ஒருவேளை என்னை அவனுக்குத் தெரியுமோ?  அல்லது என் அழகில் மயங்கி விட்டானோ?  அப்படிப் பார்த்தால் அந்தக் கூட்டத்தில் எவ்வளவோ பெண்கள் தன்னைவிட அழகானவர்கள் இருந்தார்களே!  இதில் ஏதோ விஷயம் இருக்கிறது.  வேலை கிடைப்பது  ஒரு பக்கம் இருக்கட்டும்.  இவன் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அதுதான் முக்கியம்.  ஒரு நீண்ட நாற்காலியின் ஒரு மூலையில்  அமர்ந்தாள்.


அப்போது “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல் கேட்டது. ஓகே கண்மணி!


“நீங்கள் இன்று இன்டர்வியூக்கு வந்தீர்கள் அல்லவா?  என்னோடு வாருங்கள்” என்று  கண்மணி அவளை அழைத்துக்கொண்டு போனாள்.  அது அந்த அலுவலகத்தின் கேஃப்டீரியா. மணிகர்ணிகாவின் கையில் ஒரு டோக்கன் கொடுத்தாள்.


“உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் சாப்பிடலாம்“ என்று கூறிவிட்டு கண்மணி நகர்ந்தாள். 


மணிகர்ணிகாவுக்கு எரிச்சலாக இருந்தது.  இவன் யார்,  தன்னை  விடாமல் துரத்துகிறான்? இவன் சொல்வதற்காக இங்கு சாப்பிடத்தான்  வேண்டுமா? அப்பாயிண்மெண்ட் ஆர்டரைக் கிழித்துப் போட்ட மாதிரி  டோக்கனையும் கிழிக்கலாமா என்று கை பரபரத்தது. 


அதற்குள் மேலும் பல பேர் அங்கு நுழைந்து தங்கள் விருப்பம் போல் உணவுகளை எடுத்து சாப்பிடத் தொடங்கினார்கள்.  எல்லோருக்குமே யாராவது ஒரு நண்பர் இருந்தார்.  இவளுக்குத்தான்  இல்லை.  தான் தனிமையாக இருப்பதை முதல்முறையாக உணர்ந்தாள் மணிகர்ணிகா. 


பசி இல்லாதவர்களுக்கும் பசியை உண்டாக்கி விடும் அழகான வடிவமைப்பில் அந்த கேஃப்டீரியா இருந்தது.  வண்ணமயமான உணவுப் பண்டங்கள் புதுமையான வேலைப்படுகளைக்கொண்ட பீங்கான் கிண்ணங்களில் இடப்பட்டிருந்தன. உயர்தரமான பிளாஸ்டிக்கினால் செய்த தட்டுகளும் கிண்ணங்களும் குவளைகளும் ஸ்பூன் முதலிய கரண்டிகளும் அழகியலோடு மிளிர்ந்தன. அழகான வீணை இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது. 


அவளுக்கு உண்மையிலேயே பசி எடுத்தது. அவளுக்குப் பின்னால் வந்தவர்கள் இரண்டாவது எடுப்பு உண்ணத் தொடங்கியிருந்தார்கள். எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்றியது. காஷ்மீரி புலாவும், நவரத்தின குருமாவும்,  சில  துணை உணவுகளும்,  ஒரு பெரிய டம்ளரில் மாம்பழ ஜூசும் எடுத்துக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். 


பழமும் பழச்சாறும் உணவுக்கு முன்பு தான் அருந்த வேண்டும் என்ற அறிவியல் உண்மை அவளுக்கு மிகவும் பிடித்தமானது.  எனவே மாம்பழ ஜூசை முதலில் காலி செய்தாள். அது பசியை இன்னும் தூண்டியதால் பரபரவென்று தட்டைக் காலி செய்தாள். பசி அடங்கிவிட்டது. என்றாலும் புதிய ஐட்டங்களை ஒரு கை பார்க்கலாமே என்ற ஆசை உண்டானது. மெல்ல எழுந்தாள்.


அதற்குள் ஓடோடி வந்தாள் ஓகே கண்மணி. “ப்ளீஸ், என்ன வேண்டுமோ சொல்லுங்கள், நானே சர்வ் செய்கிறேன்” என்றாள். 


மணிகர்ணிகாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. எதற்காகத் தன் மீது இவ்வளவு அக்கறை காட்டப்படுகிறது? 


ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையால், “தேங்க்யூ! கொஞ்சம் ப்ளெய்ன் ரைசும், பருப்பு அல்லது ரசமும் வேண்டும். கொஞ்சம் சிப்ஸ் கூட” என்றாள். புன்சிரிப்போடு கொண்டுவந்தாள் கண்மணி. அதுமட்டுமல்ல, அவளுக்கு அருகிலேயே அவள் எழுந்துவிடாதபடி நெருக்கமாக அமர்ந்துகொண்டாள். தனக்கென்று ஒரு ருமாலி ரொட்டியும் குருமாவும் கொண்டுவந்திருந்தாள். 


மணிகர்ணிகாவுக்குப் புரிந்துவிட்டது. இது நவீனின் ஏற்பாடுதான். தன்னை இங்கேயே கொஞ்சநேரம் இருக்கவைத்துவிட்டு, அவனும் வந்து அமர்ந்துகொண்டு, பேசத் தொடங்கலாம். ஒருவேளை புதிதாக அப்பாயிண்மெண்ட் ஆர்டரை  டைப் செய்து கொண்டு வந்து கொடுக்கலாம்.  அதற்கு முன்னுரையாக கண்மணி இப்போது பேசுவாள் என்று எதிர்பார்த்தாள் அவள். 


அப்படியே நடந்தது. அவள் அறியாதவண்ணம் வந்து, ஓசைப்படாமல் நவீன் அவளுக்குப் பின்னால் நின்றான். கண்மணியைப் பார்த்து, “இனிமேல்  உணவை டேஸ்ட் பார்ப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறிப்பாக காஷ்மீர் புலாவும், நவரத்ன குருமாவும் சூப்பராக இருக்கவேண்டும. மாஸ்டர் செஃப்பிடம் சொல்லிவையுங்கள்” என்றான், மணிகர்ணிகாவைக் கொஞ்சமும் கண்ணெடுத்துப் பார்க்காமல்.  


“புரிந்தது நவீன்! மேங்கோ ஜுசும் தானே?” என்று புன்முறுவலுடன் கேட்டாள் கண்மணி, தானும் மணிகர்ணிகாவைப் பார்க்காமலேயே. 


அவர்கள் இருவரும் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரிந்ததும்  மணிகர்ணிகாவின் கன்னம் தானாகவே சிவந்தது. தன்  பின்னால் நின்ற நவீனைப் பார்ப்பதற்காக எழ முயன்றாள். வலது கையைத் தட்டில் ஊன்றிக்கொண்டு இடதுகையை மேலே நீட்டினாள்.  அதில் அவளுடைய அப்பாயிண்மெண்ட் ஆர்டர் அடங்கிய உறையை வைத்துவிட்டு, சட்டென்று கூட்டத்தில் மறைந்து விட்டான் நவீன். 


ஓகே கண்மணி “தட் ஈஸ் ஓ.கே.” என்று கலகலவென்று சிரித்தாள்.

அது மணிகர்ணிகாவை  என்னவோ செய்தது.  இந்த இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு ஏதோ நாடகம் நடிக்கிறார்களா?


என்ன தான் ஆகிறது, பார்க்கலாம்   என்று எண்ணியவளாக மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தாள். குழாயில் வந்த வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவிக் கொண்டு,  பேப்பர் டவலில் துடைத்துக்கொண்டு, நீராவி மெஷினில் கைகளைச் சூடாக்கிக்கொண்டு கண்மணிக்காக  நின்றாள்.  


ஐந்தே நிமிடம்தான்! அதற்குள் அவளை சிசிடிவியில் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நவீன் என்பது கண்மணிக்கு மட்டும்தான் தெரியும்.


கை துடைத்துக் கொண்டு வந்த கண்மணி, “யூ ஆர் வெரி ஃபார்ச்சுனேட் மணிக்கா !” என்றாள்.


தன் பெயரை யாராவது சுருக்கினால் அவளுக்குப் பிடிக்காது. “யார் என்னை மணிக்கா என்பது?” என்று சிடுசிடுத்தாள்.


“மிஸ்டர் நவீன் தான் அப்படிச் சொல்வார். என்ன இருந்தாலும் அத்தை மகள் மீது அவருக்கு அந்த உரிமை கூடவா கிடையாது?” என்று சிரித்துக்கொண்டே கூட்டத்தில் மறைந்து போனாள் கண்மணி.


‘அத்தை மகளா ? அப்படியானால் இவன் எனக்கு மாமன் மகனா?’ திகைத்து நின்றாள் மணிகர்ணிகா.

*** 


பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்களை போலீஸ் ஸ்டேஷன் அருகில் அழுகிய காய்கறிகளைப் போல் கொட்டிவைப்பது வழக்கம். அதனால் அந்தத் தெருவே இடைஞ்சலுக்கு ஆளாகும். நாய்களும் பூனைகளும் எலிகளும் அங்குதான் உறங்கும். சில மாதங்களில் வாகனங்களின் சக்கரங்கள் தவிர மற்ற பாகங்கள் களவுபோய்விடும். மழையிலும் வெயிலிலும் நனைந்தும்  உலர்ந்தும் துருப்பிடித்து உருத்தெரியாமல் போய்விடும். அந்த வாகனங்கள் பற்றிய புள்ளிவிவரம் தேடினாலும் கிடைக்காது. 


ஆரம்ப காலத்தில், வாகனத்தின் மீது கேஸ் நம்பரை சாக்கட்டியால் எழுதிவைப்பார்கள். அடுத்த நாளே அழிந்துபோய்விடும். கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது வாகனம் நல்ல நிலைமையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படும். கேஸ் முடிந்து வண்டியைத் திருப்பித்தரும் நாளில் ‘நல்ல முறையில் வண்டியைப் பெற்றுக்கொண்டதாக’ கையொப்பம் பெறப்படும். உருத்தெரியாத அந்த வண்டியை யாரும் வீட்டுக்கு எடுத்துப்போவதில்லை. காயலான் கடை தான் அதற்குப் புகலிடம்.   


இதை ஒரு சுகாதாரப் பிரச்சினையாக சமூக ஆர்வலர்கள்  கையில் எடுத்த பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், பறிமுதல் செய்த வாகனங்களை அப்பொழுதே திருப்பித் தந்துவிடவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அப்படியொரு சுற்றறிக்கை இருப்பதே பலருக்கும் தெரியாது. 


ஆனால் தங்கராசுவுக்குத் தெரியும். நேராக அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார். நல்லவேளையாக மயூரியின் என்பீல்டு பைக் பத்திரமாகவே இருந்தது. தன் கையிலிருந்த டூப்ளிகேட் சாவியைப் போட்டு அதைக் கிளப்பினார். கொஞ்சம் பெட்ரோல் இருந்ததால் பைக் சொன்னபடி கேட்டது. பின்னர் தான் கொண்டுவந்திருந்த அழுக்குத் துணியால் நன்றாகத் துடைத்தார். பிறகு அதை ஸ்டேஷன் வாசலில் நிறுத்தினார். அதன்மீது அமர்ந்துகொண்டு, “இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா?” என்றார். பதில் இல்லை. சில நிமிடம் கழித்து அதே கேள்வியைக் கேட்டார். பதில் இல்லை. மூன்றாவது முறை கேட்கவில்லை. அரைமணி நேரத்தில் மயூரியின் கார் பார்க்கிங்கில் வண்டி இருந்தது. 


“ரொம்ப தேங்க்ஸ் தங்கராசு சார்! இதனால் ஒன்றும் பிரச்சினை வராதே ?” என்றாள். 


“ஒன்றும் வராது, ஏனென்றால் இன்சூரன்ஸை ரினியூவல் செய்துகொண்டு வந்துவிட்டேன். ரெண்டே நாளில் ஆர்சி புக்கை ஸ்டேஷனில் இருந்து கொண்டுவந்துவிடுவேன். மொத்தமாக மூவாயிரம் கொடுங்கள்” என்று கேட்டார் அவர்.


“இந்த வண்டி மீது எந்த கேசோ, எப்ஐஆரோ  பதிவு செய்யாததால்  கடவுளே வந்தாலும் கவலையில்லை யம்மா!” என்று இன்சூரன்ஸ் பேப்பர்களைக் கொடுத்தார். “உங்களுக்கு பிரச்சினை வரும்போல சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள், ரெண்டே நாளில் நல்ல விலைக்கு விற்றுக் கொடுக்கிறேன். சனியன் தொலைந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு நடந்தார் தங்கராசு. அவர் சென்ற திசையை நோக்கிக் கும்பிட்டாள் மயூரி.

கணவனை உடனே சென்னைக்கு வரும்படி போன் செய்தாள்.

(தொடரும்)

- இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து  


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.