(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
நாடாளுமன்றத் தேர்தல் சூடு
பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவரும் ஆயிரக்கணக்கில்
மக்களைக் கூட்டிப் பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை மத்தியில்
பதவியில் இல்லாத அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் இயங்கும் நிலையில், மூன்று
தலைமுறைகளாக ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோ இன்னும் வீதிக்கு வரவில்லை.
மூத்த தலைவர்கள் பலர், இம்முறை தேர்தலில் போட்டியிட மறுத்துவருகிறார்கள். லாபம் அனுபவிக்கும்போது
கூடிநின்றவர்கள், இனி காங்கிரஸ் மீளப்போவதில்லை’ என்று தெரிந்ததும், ‘அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல்’
கட்சியைவிட்டு விலகி நிற்கப் பார்க்கிறார்கள். ப.சிதம்பரம் கூடப்
போட்டியிடப் போவதில்லை என்கிறார்கள்.
‘காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும்’ என்று மகாத்மா
காந்தி கூறினார், (இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன்.) 2014 தேர்தலில் அது
நடந்துவிடும் போலிருக்கிறது. மகாத்மாவின் கனவை நிறைவேற்றினோம் என்று சோனியாவும்
ராகுலும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
அதற்குள் கேப்டனும் மருத்துவரும் தனித்தனியாகச் சில தொகுதிகளில்
பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ‘மோடியின் கரத்தைப் பலப்படுத்துவோம்’ என்று
விஜயகாந்த் வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால் மருத்துவரோ, மோடியின் பெயரை
இன்னும் உச்சரிக்க ஆரம்பிக்கவில்லை. தனக்கும் விஜயகாந்த்துக்கும் உள்ள ஆளுமை மோதலை அவரால் தவிர்க்கமுடியாமல்
இருக்கிறது. அதே
சமயம் தருமபுரியில் அன்புமணியை ஜெயிக்கவைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு
உள்ளது. இல்லையெனில் கட்சி விரைவில் காணாமல் போகும் என்று பட்சி சொல்கிறது. ஆனால்
தருமபுரி தொகுதி அவர் கட்சிக்குக் கிடைப்பது உறுதியா என்று தெரியவில்லை.
வழக்கம்போல் பொறுமை காத்திருப்பவர் வை.கோ
தான். என்ன செய்வது, அநாகரிகத்திற்கும் அவருக்கும் காத தூரமாயிற்றே! இந்த
முறையாவது அவர் கட்சி, போட்டியிடும்
எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பம். கடமை,
கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று கொள்கைகளும் உடைய கட்சி இன்று தமிழ்நாட்டில்
ம.தி.மு.க.வை விட்டால் வேறேது?
ஸ்டாலின் – அழகிரி யுத்தம் தொடர்கிறது.
தென்தமிழ்நாட்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களைத் தோற்கடிக்க
அழகிரி வியூகம் வகுத்திருப்பதாகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்த
ஏழுபேரும் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அழகிரியைத் தாக்கி எதுவும்
பேசவேண்டாமென்று ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார் என்று இன்னொரு செய்தி
கூறுகிறது. வேலூரில் முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவாகப் பணிபுரிய மாட்டோம் என்று
துரைமுருகன் சார்பினர் அறிவித்திருக்கிறார்கள். இதேபோன்ற எதிர்ப்பு, வேறு சில
தொகுதிகளிலும் தெரிகிறது. பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டு, பேச்சாலும்
எழுத்தாலும் சினிமாவாலும் இளைஞர்களைக் கவர்ந்து சுமார் ஐம்பது ஆண்டுகளாக
இயங்கிவரும் ஒரு கட்சி, கடைசியில் வெறும் ‘குடும்பக் கட்சி’ யாகப்
பலவீனப்பட்டுப்போனதை நடுநிலையாளர்கள் வருத்தத்துடன் பார்க்கிறார்கள். தான் வளர்த்த
கட்சியைத் தானே அழித்த பெருமை கலைஞருக்கு வந்துவிடும் அபாயம் தெரிகிறது.
சற்றுமுன் வந்த செய்தி: டில்லியிலிருந்து தாஜ்மகாலைப் பார்க்க ஆக்ரா
போனால், வழியில் எதிர்ப்படும் நகரம் ம(த்)துரா. அங்கு பா.ஜ.க. சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தான் ஹேமமாலினி. தமிழச்சி!
அவரது வெற்றிக்கு நமது வாழ்த்துக்கள்.
புத்தகம்
பிரபல ஆன்மிகப் பேச்சாளரான சுகி.சிவம்,
சிறந்த எழுத்தாளரும் கூட. தமிழ்நாட்டின் பிரபலமான எல்லாப் பத்திரிகைகளிலும் இவர்
எழுதிவருகிறார். புத்தகக் கண்காட்சியில் இவரது நான்கு புத்தகங்கள் வாங்கினேன். கனவு
மெய்ப்படும், ஏமாற்றாதே-ஏமாறாதே, ஊருக்கு நல்லது சொல்வேன், பெண்ணே நீ வாழ்க –
என்பவையே அவை. (கவிதா பப்ளிகேஷன் சென்னை வெளியீடு.044-24364243/24322177. விலை ரூ.50 ஒவ்வொன்றும்.)
மனித மனம் அலைபாய்ந்துகொண்டே இருப்பது. நின்றாலும்,
அமர்ந்தாலும், படுத்தாலும், நடந்தாலும் அது மட்டும் எங்கெங்கோ திரிந்துகொண்டே
இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்துவது சாதாரணமான விஷயமல்ல. சுகி.சிவத்தின் நூல்கள்
அந்தப் பணியை அமைதியாகச் செய்கின்றன. சிக்கலில் ஆட்பட்டு, குழப்பத்தில் மூழ்கி, தெளிவில்லாது தவிக்கும் நேரத்தில் இந்த நூல்களிலிருந்து
எந்தக் கட்டுரையைப் படித்தாலும் மனம் விரைந்து தெளிவடைவதைக் காணலாம்.
‘கனவு மெய்ப்படும்’ என்பது, கல்கியில் பகவத்கீதையைப் பற்றி எழுதிய
தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஆனால் இது முழு ஆன்மிக நூல் அல்ல. நகைச்சுவை
ததும்பும் குட்டிக்கதைகள் நிறைந்த கருத்துக் களஞ்சியம். உதாரணம்:
(பக்கம் 22 – 24): டவுன் பஸ்ஸில் போகவேண்டிய
ஒருவர் கையில் சில்லறை இல்லை. ஐம்பது ரூபாய் நோட்டு மட்டும்தான். சில்லறை இல்லாமல்
ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினால் நல்லவருக்கே கோபம் வரும். ஐயாவுக்கு ஒரு யோசனை.
பக்கத்தில் இருந்த பளபள ஓட்டலில் நுழைந்தார். ‘இன்றைய ஸ்பெஷலை’ நோட்டம் விட்டார். ஆஹா,
கோதுமை அல்வா! வாங்கிச் சாப்பிட்டார். அருமை. பிறகு ஒரு வடை, காப்பி. பில்லும்
சில்லறையும் கைமாறியது. பஸ்சுக்குச் சில்லறை பிரச்சினை தீர்ந்தது என்று கவலை
போனது.
ஒரு வாரம் கழித்து அதே வழியாக வருகிறார். கையில்
சில்லறை நிறையவே இருக்கிறது. இருந்தாலும் ஷோகேசில் இருந்த அல்வா அவரைப் பார்த்து
கண்சிமிட்டியது. “நான் அல்வா அல்லவா? நீ
கொஞ்சம் உள்ளே வா!” என்று அழைப்பு விட்டது. சம்பாதித்து என்ன கண்டோம்! அல்வாவாவது
சாப்பிடுவோம் என்று முடிவு செய்தார். அதன் பிறகு எப்போது அந்த வழியாகப் போனாலும்
அல்வா அவருக்கு ஆசை காட்டியது.
அந்த அல்வாவுக்கு ஒரு விசேஷம். நாளாக நாளாக நன்றாக
இருப்பது அதன் ஸ்பெஷாலிட்டி. கொஞ்ச நாள் போனதும் நண்பர்களிடம் அவர் பெருமையாகச்
சொல்லிக்கொண்டார். ‘எப்ப இந்தப் பக்கம் போனாலும் அல்வா சாப்பிடாமல் நான் போனதே
இல்லை!’
தமது பலவீனத்தைப் பெருமை போலப் பேச ஆரம்பித்தார்.
திரு கி.வா.ஜ. சொல்வார்: “முதல் நாள்
அல்வாவை அவன் விழுங்கினான். அடுத்த நாள் முதல் அல்வா அவனை விழுங்க ஆரம்பித்தது!”
நான் அல்வா என்று நாசூக்காகச்சொன்னேன்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு பொருள் அல்வா போல் ஆட்டிவைக்கிறது.
ஆசை நமக்குள் கட்டுப்பட்டிருந்தால் குற்றம் இல்லை.
ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் முழுமையாக நாம் சிக்கிக்
கொண்டால் யாராலுமே நம்மைக் காப்பாற்ற முடியாது.
கிருபானந்த வாரியார் இன்னும் நன்றாக விளக்குவார்: “நாம் காரிலே
ஏறலாம்; கார் நம்ம மேலே ஏறக் கூடாது. 12-பி பஸ்ஸிலே நீ ஏறினால் தேனாம்பேட்டை போகலாம்.
12-பி உன் மேலே ஏறினால் கிருஷ்ணாம்பேட்டை
போவாய்” என்பார். (கிருஷ்ணாம்பேட்டை என்பது சுடுகாடு.)
சினிமா
ஆஸ்கார் பரிசு பெறவேண்டும் என்று இந்தியாவில் ஒவ்வொரு
நடிகரும் தயாரிப்பாளரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், ஆஸ்கார் வென்ற ஆங்கிலப்
படங்கள் இந்தியாவில் வெற்றிகரமாக ஓடுகின்றனவா? இல்லவே இல்லை என்கிறது
அவுட்லுக். ஒரு ஷாருக் கான் நடித்த இந்திப்படத்தைத் தூக்கிச் சாப்பிடுகிற
அளவுக்கு எந்த ஆஸ்கார் வென்ற படமும் இந்தியாவில் ஓடவில்லை என்று புள்ளிவிவரம்
தருகிறது.
2014ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும்
இந்தியாவில் அவற்றின் வசூலும் (கோடி ரூபாய்களில்):
GRAVITY: 31.2 ,
12 YEARS A SLAVE: 2.1, AMRICAN HUSTLE:3.3, THE WOLF OF WALL STREET: 6.5, CAPTAIN
PHILLIPS: 4.4.
2013ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில்
அவற்றின் வசூலும்:
LIFE OF PI:
62.1, SILVER LININGS PLAYBOOK: 2.5, DJANGO UNCHAINED: 2.6, ARGO: 2.0, ZERO DARK
THIRTY: 1.7, LINCOLN: 1.3.
2012ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில்
அவற்றின் வசூலும்:
MONEYBALL: 3.9,
THE DESCENDANTS: 3.5, THE HELP: 1.0, HUGO: 0.9.
இத்துடன் கீழ்க்கண்ட ஹிந்திப் படங்களின் வசூலை
ஒப்பிட்டுப்பாருங்களேன்:
ஜெய் ஹோ: 107 கோடி, தூம் 3: 261 கோடி, ஏக் தா
டைகர்: 184 கோடி, பாடிகார்டு: 148 கோடி, தபாங்: 141 கோடி. தமிழில் எந்திரனும் விஸ்வரூபமும் தலா 150
கோடிக்குமேல் வசூலானதாமே!
இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘சொர்க்கமே
என்றாலும், நம்மூரு போலாகுமா?’
தொலைக்காட்சி
24 மணி நேர ஒளிபரப்புகள் வந்தாலும் வந்தன,
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையே செய்தி சேகரிக்கும் போட்டி கடுமையாகி வருகிறது.
செய்திகளே இல்லையா, கவலயில்லை, இல்லாத ஒன்றையே செய்தியாக்கி விடுகின்றன இவை.
அதிலும் ஆங்கிலமொழி தொலைக்காட்சிகளின் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
‘டைம்ஸ்
னௌ’ தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் காட்டுக் கூச்சல்கள்
சகிக்கமுடிவதில்லை. விவாதத்திற்கு வரும் யாரையும் இவர் பேசவிடுவதேயில்லை.
கற்பனையாக ஒரு நிலைப்பாட்டை முன்மொழிந்து, அதில் தான் எதிர்பார்க்கின்ற முடிவு
வருகின்றவரை, இவர் விவாதம் புரிவோரின் வாயில் வார்த்தைகளைத் திணிக்கிறார். தன்னை எதிர்த்துப் பேசுவோரைப் பெரும்பாலும் அசிங்கப்படுத்திவிடுகிறார். கண்ணியமில்லாத ‘டைம்ஸ்
நௌ’ வை இனி பார்ப்பதில்லை என்று தீர்மானம்
செய்திருக்கிறேன்.
அர்னாப் கோஸ்வாமி- Times Now |
ராஜ்தீப் சர்தேசாய்- CNN-IBN |
இவர்களோடு ஒப்பிடுகையில், தமிழ்மொழி
தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதத்தை மேற்கொண்டு நடத்தும் நல்ல காம்ப்பியர்கள்
குறைவே. இருக்கிற சிலரும், தத்தம் சேனல்களின் முதலாளிகளின் லட்சியத்தின்படியே
இயங்குகிறார்கள். எனவே விவாதம் புரிவோரின் கருத்துக்களும் அதேமாதிரி முதலாளியைச்
சார்ந்தாகவே இருக்கின்றன. ‘புதிய தலைமுறை’யில் ஓரளவு நல்ல விவாதங்கள் வருகின்றன
என்றாலும் அவற்றில் வழவழா கொழகொழா விவாதங்களே மிகுதி. ‘தந்தி டிவி’யில் பாண்டே சற்று ஆக்ரோஷத்துடன் (அர்னாப்
மாதிரி, சர்தேசாய் மாதிரி) ஆழமான கருத்தாக்கம் செய்கிறார். ஆனாலும் தமிழக
முதல்வரைப் பற்றிக் குறைவாகப் பேசி அவரை நோகடிக்கச்செய்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை
உணர்வு அதிகம் தென்படுகிறது. காரணம் தெரியவில்லை.
பத்திரிகை
பிரபல பத்திரிகையாளர் ஞாநி(சங்கரன்)
ஆம்-ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவில்,
சினிமாவில் இருந்து புகழ் பெற்றவர்கள் கூட, அரசியலுக்கு வரவேண்டும் என்ற அரிப்பு
உடையவர்களே. காரணம், ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்து இயங்கினால் தான்
மக்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பார்கள். சுயேச்சைகளுக்கு
இங்கு மதிப்பில்லை. ஞாநி, சுய சிந்தனையுள்ள எழுத்தாளர். நாடகம், சினிமா
தளங்களிலும் இயங்கும் லட்சியவாதி. அவருடைய ‘ஓ பக்கங்கள்’ புகழ் பெற்றவை.
ஆனால், அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் துணிச்சல் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு
இருந்ததில்லை. விகடன், குமுதம், கல்கி என்று ‘ஓ பக்கங்கள்’ மாறிக்கொண்டே வந்து இப்போது
கல்கியில் நிற்கிறது. ஆம் ஆத்மியில் இவர் சேர்ந்துவிட்ட நிலையில் கல்கியும்
இனிமேல் இதை வெளியிடத் தயங்கலாம். ஞாநி இதெற்கெல்லாம் கவலைப்படமாட்டார். தனக்கு
நியாயம் என்று பட்டதை அவர் எடுத்துச் சொல்லத் தயங்கவே மாட்டார். ஆம்-ஆத்மிகளின்
லட்சியமும் இதுதானே!
தன் அரசியல் பிரவேசம் பற்றி
‘கல்கி’யில் அவர் எழுதியதிலிருந்து ஒரு பகுதி:
“............நான் ஏன் இப்போது
ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன் ?
இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க, தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய நான்கு
கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய, தமிழக அரசியலில் ஆரோக்கியமான
மாற்றங்கள் வரமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இந்த மாற்றத்தை இடதுசாரி
அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கமுடியும். ஆனால் தற்காலிக அரசியல் சிக்கல்களை
சந்திக்கும் போக்கால், அது நடக்காமலே போய்விட்டது.
தவிர ஒற்றை சித்தாந்த அடிப்படையில் இயங்கி மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ
என்று எனக்குத் தோன்றுகிறது.
நமக்கு காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயண குரு, பாரதி, நேரு, பகத்சிங் என்று பலரிடமிருந்தும்
எடுத்துக் கொள்ள நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடமிருந்து
எடுக்கும்போது இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும் ஒருவரிடமிருந்து மட்டுமே எல்லாம்
கிடைத்துவிடும் என்று பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை.
எனவே ஒற்றை சித்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும்
வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல்
அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத்
தோன்றுகிறது. டெல்லியில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் மாற்றாக இன்னொரு சக்தி
இருக்கமுடியும் என்று மக்கள் நம்பிக்கையை தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம்
ஆத்மிமீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது. அதே போல
தமிழ்நாட்டிலும், தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு
சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின்
குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம் ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சி
பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது.”
தமிழக அரசியலில் ஒரு புதிய அலையை இவர்
கொண்டுவருவார் என்ற நம்பிக்கையுடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்போமா?
படம்-நன்றி: தமிழ் இந்து-20.3.2014 - பக்கம் 10 |
சிரிப்பு
“கமலா, எங்க அம்மா கீழே விழுந்தப்ப நீ
பார்த்துட்டே இருந்தியாமே! ஏன் தூக்கலை?”
“டாக்டர் என்னை ரொம்ப வெயிட்டான பொருளைத்
தூக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.”
(நன்றி: ‘கல்கி’ 23.2.2014- பக்கம் 21 –
எழுதியவர்: பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால்,
கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’
அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
© Y Chellappa
Email: chellappay@yahoo.com
அண்ணாவின் கட்சி குடும்பக் கட்சியாப் போனதுக்கு நடுநிலையாளரா வருத்தப்படறீங்க. அதிலிருந்தே பிரிஞ்சு வந்த கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுக்குப் பேரெடுத்த வைகோ கட்சி மதவாதக் கட்சிக்கு வால் பிடிக்கிறதை நடுநிலையாளரா வரவேற்கிறீங்க. ஆம் ஆத்மி கட்சிக்காரங்க படம் எத்தனையோ இருக்க, அழகா ஒரு படம் செலக்ட் செஞ்சிருக்கீங்க. நல்லா அல்வா குடுக்குறீங்க அண்ணே... :)
பதிலளிநீக்குஅல்வாவை முதலில் நாம் கொடுத்தால் பிறகு அது பல்வேறு வடிவங்களில் நமக்கே திரும்பிவரும் என்பது உங்களுக்குத் தெரியாததா?
நீக்குஅனைத்தும் அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி
மிக்க நன்றி நண்பரே!
நீக்குத.ம.4
பதிலளிநீக்குசுகி.சிவம் அவர்களின் நாசூக்காக பேசும் பலவற்றை ரசிப்பேன்... மற்ற அனைத்து தகவல்களுக்கும் நன்றி ஐயா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே! ஆலோசனைகளுக்கும் நன்றி!
நீக்குகட்சிகள் எதுவும் உருப்படப் போவதாகத் தெரியவில்லை! அந்தப் படத்தில் பாருங்கள் ஆம் ஆத்மி கட்ச்சி பெருக்கும் படம்....அவர்களுக்கு சரியாக விளக்குமாற்றைக் கூடப் பிடிக்கத் தெரியவில்லை! அவர்களுக்குப் பெருக்கிப் பழக்க்மில்லை என்பது ந்ன்றாகவேத் தெரிகின்றது! எப்படிச் சுத்தம் செய்ய முடியும்? இது அவர்கள் அரசியலுக்கும் பொருந்தும்!
பதிலளிநீக்குஇப்படிப் பெரிய வீட்டுப் பிள்ளைகள் எல்லாரும்தான் (ஒருவேளை status symbol க்காக இணைந்துருப்பார்களோ?) என்றால் அவர்களால், கீழ்தட்டு மக்களின் தேவைகளையும், அவர்களது கஷ்டங்களையும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?!
ஞானியைப் பற்றித் தாங்கள் சொல்லியிருப்பது மிகச் சரியே! அவர் ஆம் அத்மியில் இணைந்திருப்பதும் சந்தோஷம்தான்! //ஒருவரிடமிருந்து எடுக்கும்போது இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும் ஒருவரிடமிருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்று பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை.// நல்ல சிந்தனை!
அப்படி என்றால் ஆம் ஆத்மி நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்யும் என்ற நம்பிக்கைதான் காரணமோ?!!! பார்ப்போம்!
சுகிசிவம் அவர்களைன் புத்தகப் பகிர்வுக்கு நன்றி!
//கிருபானந்த வாரியார் இன்னும் நன்றாக விளக்குவார்: “நாம் காரிலே ஏறலாம்; கார் நம்ம மேலே ஏறக் கூடாது. 12-பி பஸ்ஸிலே நீ ஏறினால் தேனாம்பேட்டை போகலாம். 12-பி உன் மேலே ஏறினால் கிருஷ்ணாம்பேட்டை போவாய்” என்பார். (கிருஷ்ணாம்பேட்டை என்பது சுடுகாடு.)// மிக அருமை! பொருளாதாரத்தில் கூட இப்படிப்பட்ட ஒரு வாக்கு உண்டு! "Money should not be your boss! You must be its boss!"
சிரிப்பு அருமை
தேர்வுகள் நடந்துகொண்டிருக்கும் நேரத்திலும் விரிவாக அலசி எழுதும் தில்லையாரே, நன்றிகள்! (பெரிய இடத்து பெண்கள் தரையில் இறங்கிவருவதே பெரிய காரியம் அல்லவா? நம் அனுபவத்தில், தரையைப் பெருக்கிகொண்டிருந்த குடும்பங்கள் தானே இன்று விமானக கம்பெனி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்! அது நடக்கும்போது இதுவும் நடக்கும்தானே!
நீக்குஉங்கள் ஆணையை ஏற்று மதுரையில் இருந்து மதுரா சென்று கள்ள வோட்டு போடப் போகிறேன் !
பதிலளிநீக்குஅதற்கு முன்னால்உங்களுக்கு ஒரு நல்ல வோட்டு த ம 7
'நல்ல' வோட்டு ஓட்டதற்கு நன்றி நண்பரே! வரவர 'தமிழ்மண'த்திலும் கள்ள வோட்டு போட்டு நமது மதிப்பைக் குறைத்துவிடுகிறார்கள்.
நீக்குகதம்ப மாலை மணக்கிறது!
பதிலளிநீக்குநன்றி ஐயா! நலமா?
நீக்குஅன்றாட நிகழ்வுகளின் அலசலும்
பதிலளிநீக்குபுத்தக விமர்சனமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 11
பதிலளிநீக்குதெருத்தெருவா கூடுறது பொது நலத் தொண்டு - ஊரார்
பதிலளிநீக்குதெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு!..
- இந்த நேரத்தில் அந்த பழைய பாடல் ஏன் நினைவுக்கு வருகின்றதென்று தெரியவில்லை..
சுகி சிவம் அவர்களின் புத்தகங்களைப் பற்றிய கருத்துக்கள் அருமை..
ஆசைக்குள் முழுமையாக நாம் சிக்கிக் கொண்டால் யாராலுமே நம்மைக் காப்பாற்ற முடியாது.//
வாரியார் சுவாமிகளின் விரிவுரைகளை நேரில் கேட்ட மகிழ்ச்சி மனதில் நிழலாடுகின்றது..
வாழ்க .. நலம்!..
மிக்க நன்றி நண்பரே! ஆம் அத்மிகளைப் பற்றி அப்படிச் சொல்லிவிட முடியாது. தெரு பெருக்குவது எப்படி என்று அவர்கள் கற்றுக்கொள்ள முயலுவதை நாம் தடுக்கலாமா? நாளை நம்முடைய தெருவையும் பெருக்கும்படி அழைக்கலாமே!
நீக்குதிரு. ஞானி அவர்கள் சீரிய சிந்தனையாளர்.
பதிலளிநீக்குஆம் ஆத்மியின் எதிர்காலம் என்ன என அறிய
எனக்கும் ஆவல்!
நன்றி நண்பரே! இந்தியா மிகப்பெரிய நாடு, மிகப்பல சிந்தனைகள் இங்கே நடமாடுகின்றன. ஆமாத்மிகளுக்கும் ஓரிடம் இல்லாமல் போகுமா?
நீக்குஅனைத்தும் அருமை சகோதரரே ! சுகி சிவம் அவர்களது பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.அல்வாவை சாப்பிடும் போது இனிக்கும் அல்வா நம்மை சாப்பிடும் போது தான் வாழ்வே கசக்கும்.
பதிலளிநீக்குநாம் என்ன வாழுவதற்காகவா சாப்பிடுகிறோம் இல்லையே நம்மை கொல்லுவதற்காகவல்லவா உண்கிறோம். எடஹ்ர்கும் அடிமையாக இருப்பதே மேல் முயற்சி செய்வோம். அருமை சகோதரரே! தொடர வாழ்த்துக்கள்....!
உங்கள் கருத்து அல்வாவிற்கு எதிராக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். (எனக்கு ஷுகர் இல்லை!) தங்கள் வரவுக்கு நன்றி!
நீக்குஅடடா அது எழுத்து பிழை நடந்து விட்டது சகோ மன்னித்து விடுங்கள் (அடிமையாகா) திருப்பதே மேல் என்பது தான் அது தவறுதலாக கவனிக்காமல் விட்டு விட்டேன்.
நீக்குஅதனோடு சேர்ந்து எழுதிய விடயங்கள் தான் தெளிவு படுத்துகின்றனவே. சரியான கருத்தை.
\\நாம் என்ன வாழுவதற்காகவா சாப்பிடுகிறோம் இல்லையே நம்மை கொல்லுவதற்காகவல்லவா உண்கிறோம்//.இதுவும் அதை தானே சொல்கிறது.
நான் சொல்வாது சரியா அல்லது அல்வா பிடிக்கும் என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்களோ? ஓஹோ அப்படியா விடயம் சரி இருந்தாலும் இரண்டுக்குமே
பதில் தந்துள்ளேன்.
அருமையான பகிர்வு ! சொல்வேந்தர் சுகி சிவத்தின் பேச்சுக்கு நான்
பதிலளிநீக்குஅடிமை என்பேன் ! அவரின் ஒவ்வொரு நற் கருத்துக்களும் வாழ்வுக்குந்தவை .
ஒரு முறை அவரை நேரில் சந்திக்கவும் உரையாடவும் கிடைத்த அந்த
வாய்ப்பினை நான் பெற்ற பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் .இதுவரை
அவர் ஒரு பேச்சாளர் என்று மட்டும் தான் எனக்குத் தெரியும் இன்று தான் அறிந்து
கொண்டேன் அவரது பேச்சுக்கள் எழுத்து விடிவிலும் தவளுகின்றன என்று .
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் ஆக்கங்கள்
தொடரட்டும் .
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !
நீக்குஅருமையான அபுசி-தொபசி .
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி, நண்பரே!
நீக்குசிக்கலில் ஆட்பட்டு, குழப்பத்தில் மூழ்கி, தெளிவில்லாது தவிக்கும் நேரத்தில் இந்த நூல்களிலிருந்து எந்தக் கட்டுரையைப் படித்தாலும் மனம் விரைந்து தெளிவடைவதைக் காணலாம்.//
பதிலளிநீக்குஅருமைய்யான அல்வா போன்ற நூல்களின் அறிமுகத்திற்கு நன்றிகள்..
தெருவைக் கூட்டும் கட்சியினர் சிரிப்பை வரவழைத்தார்கள்..
தெருவைக்கூட்டினார்கள் ..
அழுக்கானது அரசியல்..!
வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி!
நீக்கு//மகாத்மாவின் கனவை நிறைவேற்றினோம் என்று சோனியாவும் ராகுலும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.//
பதிலளிநீக்கு//தான் வளர்த்த கட்சியைத் தானே அழித்த பெருமை கலைஞருக்கு வந்துவிடும் அபாயம் தெரிகிறது.//
மேலே சொன்ன இரண்டு கருத்துகளும் உண்மை ஆகிவிடும் போல இருக்கிறது.
ஞானிக்கு இது வேண்டாத வேலை. ஆம் ஆத்மி நாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை.
சென்ற வார உலகம் போல, நிகழ்கால உலகத்தை அலசி இருக்கீறிர்கள். அருமை வாழ்த்துகள்!.
நன்றி நண்பரே!
நீக்குஅடுத்த இரண்டு மாதங்களுக்கு பத்திரிகைகளுக்கு தேர்தல் காரணத்தால் சுவாரஸ்யமாக பொழுது போகும்!
பதிலளிநீக்குஹேமமாலினி பா ஜ க விலா இருந்தார்? காங்கிரஸ் இல்லையோ?
சுகி சிவம் நான் ரசிக்கும் பேச்சாளர். நீங்கள் அந்தப்புத்தகத்தின் ஒரு சுவாரஸ்யமான பகுதியை கொடுத்திருக்கிறீர்கள்.
சினிமாவைப் பொறுத்தவரை நம்ம ரசனையும் ஆஸ்கார் ரசனையும் வெவ்வேறு! ஒத்துவராது.
தொலைக்காட்சியின் செய்தி நேர விவாதங்கள் என்னும் கூத்து ஆங்கிலத் தொலைக்காட்சியைப் பார்த்து தற்சமயம் தமிழிலும் காபி அடிக்கப் படுகின்றன. முதலில் எல்லாம் பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் சகிக்க முடிவதில்லை!
ஆஸ்கார் விருதுப் படங்களுடன் நமது படங்களைத் தாங்கள் ஒப்புநோக்கிய விதம் அருமை. இப்பதிவைப் படித்தபின் ஆஸ்கார் விருது பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கில தி இந்து நாளிதழில் வந்த செய்தி நினைவிற்கு வந்தது. தொழில்நுட்ப வசதியில்லாத காலத்தில் எடுக்கப்பட்ட Ten Commandments மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்தில் வெளிவந்த Titanic ஆகிய இரு படங்களும் ஒப்புநோக்கப்பட்டு, மனித முயற்சியால் அதிக விருதுகளைப் பெற்ற Ten Commandments படத்தைப் பற்றி அக்கட்டுரையில் மிகவும் சிறப்பாக கூறப்பட்டிருந்தது.
பதிலளிநீக்கு