திங்கள், ஜனவரி 30, 2017

சுபாவதாரம் (2) சற்றே நீண்ட சிறுகதை

 சுபாவதாரம் (2)
சற்றே நீண்ட சிறுகதை

- இராய. செல்லப்பா
சுபாவதாரம்-1 படிக்கவில்லையா? இங்கே சொடுக்கவும்

ருபதுபேர் கொண்ட  வங்கிக்கிளையில் அன்று ஆஜராகியிருந்தவர்கள் பதினைந்துபேர்தான்.  ஆளுக்கு நூறு ரூபாய் போட்டதில் ஒரு ஸ்வீட் காரம் காப்பிதான் ஏற்பாடு செய்யமுடிந்தது, ஜெயராமனின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு. தன் பழைய நண்பன் என்பதால் ஜி.எம். மல்ஹோத்ரா ஒரு பெரிய பரிசுப் பொட்டலத்தைக் கொண்டுவந்திருந்தார். வங்கியின் சார்பில் ஒரு பொன்னாடை மட்டுமே.

கிளைமேலாளர் முதலில் பேசினார். ஓய்வு பெறப்போகும் ஜெயராமனை விடவும் வந்திருந்த ஜி.எம்.மைப் பற்றியே அதிகம் பேசினார். பெரிய பதவியில் இருந்தும், பழைய நட்பை மறவாமல் வருகை தந்தது எவ்வளவு  பெருந்தன்மை என்றும், அம்மாதிரியானவர்கள் இன்றைய வாழ்வில் மிகவும் குறைவு என்றும் மல்ஹோத்ரா ரசிக்கும்படி பேசித் தனது  அடுத்த பதவி உயர்வை உறுதிப்படுத்திக்கொண்டார்.

“என் இனிய நண்பர்களே” என்று தமிழில் பேசத் தொடங்கினார் மல்ஹோத்ரா. “நான் சென்னையில் நான்கு ஆண்டுகள் ஜெயராமனுடன் ஒரே அறையில் தங்கியிருந்து ஒரே கிளையில் பணியாற்றியவன். சொல்லப்போனால் எனக்குத் தமிழ் மட்டுமல்ல, வங்கிப்பணிகளின் சில நுட்பங்களையும் சொல்லிக்கொடுத்தவர் ஜெயராமன்தான் என்பதை இந்தச் சமயத்தில்  நன்றியோடு கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றதும் கிளைமேலாளர் எழுந்துநின்று கைதட்டினார்.

“ஆனால் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாகவேண்டும். ஜெயராமன் திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் திருமணத்திற்காக அவர் முயற்சிக்கவேயில்லை என்று எண்ணிவிட வேண்டாம்...” என்று மல்ஹோத்ரா ஜெயராமனின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

“ஜெயராமனின் அம்மா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் எப்படியாவது அவனை அழைத்துக்கொண்டுபோய், பெண் பார்த்துவிட்டு வருமாறு ஒரு பம்பாய் முகவரியைக் கொடுத்திருந்தார். ஜெயராமனுக்குத் திருமணத்தில் இஷ்டமில்லை. என்றாலும் என் வற்புறுத்தலுக்காக வந்தார். இரண்டுநாள் லீவில் பம்பாய் போனோம். ஆனால் பெண்ணைத்தான் பார்க்க முடியவில்லை. ஏனென்றால்...” என்று ஜெயராமனின் முகத்தை நோக்கினார்  மல்ஹோத்ரா.

ஜெயராமன் பேசத் தொடங்கினான்.  “மேற்கொண்டு நான் சொல்கிறேன். பம்பாயில் இறங்கியதும் ஓர் ஆட்டோவில் ஏறினோம். பல சந்துபொந்துகளைக் கடந்து மெயின்ரோடுக்கு வந்த ஆட்டோ, திடீரென்று ஒரு கல்லில் இடறித் தலைகுப்புறக் கவிழ்ந்தது. நல்லவேளை யாருக்கும் அதிகக் காயம் இல்லை. ஆனாலும், நல்ல விஷயத்திற்குப் போகும்போது விபத்து ஏற்பட்டால் அது அபசகுனம் அல்லவா? எனவே நாங்கள் அடுத்த ரயிலில் திரும்பிவிட்டோம். அந்தப் பெண் வீட்டில் பாவம், காத்திருந்து ஏமாந்திருப்பார்கள். அதன்பிறகு  எவ்வளவோ வரன்கள் வந்தாலும் இந்த அபசகுனமே கண்ணில் நின்றதால் நான் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டேன்” என்று உட்கார்ந்தான்  ஜெயராமன்.

“காலாகாலத்தில் நடக்கவேண்டியது நடந்தால்தானே நல்லது? நானும் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்துவிட்டேன். இவன் மசியவில்லை... அந்தப் பெண்ணுக்கு வேறிடத்தில் திருமணமாகிப் பிள்ளை குட்டிகளோடு இருப்பாள் என்று நினைக்கிறேன். எல்லாம் விதி! ... இப்போது பேசி என்ன பயன்? காட் ஈஸ் கிரேட். அமைதியான ரிட்டையர்ட் லைஃப் அமைய  ஜெயராமனுக்கு என் வாழ்த்துக்கள் “ என்று கைகுலுக்கினார் மல்ஹோத்ரா.   

ஒருவர் பின் ஒருவராக எல்லா ஊழியர்களும் பேசினர். அந்த வங்கிக்கிளைக்கே அவன்தான் உயிர்நாடி என்பதுபோல் புகழாரம் சூட்டினர். உள்ளுக்குள் சிரிப்பு வந்தது ஜெயராமனுக்கு. எல்லாமே போலி. அடுத்தவாரம் இதே வங்கிக்கு வந்தால் தன்னை ஒருவரும் கவனிக்கப் போவதில்லை என்று அவனுக்கா தெரியாது? ஆனாலும் புன்சிரிப்போடு அவர்களுக்கு நன்றி சொன்னான்.

அவர்களின் ஒத்துழைப்பே தன்னுடைய வெற்றி என்றான். 

விடைபெறும்போது மல்ஹோத்ரா அவனிடம் சில காகிதங்களை நீட்டினார். “என்னப்பா இது! பென்ஷன் பாரத்தில் நாமினேஷன் போடவில்லையாமே  நீ? உனக்குப் பிறகு எல்லாமே அரசாங்கத்திற்குப் போய்விடும், தெரியுமா?”

ஜெயராமன் தயக்கத்துடன் கேட்டான்: “எனக்குத் தான் குடும்பமே இல்லையே! யார் பெயரைக் கொடுப்பது?”

“முதலில் நீ கையெழுத்து போடு. பாரம் என்னிடம் இருக்கட்டும். ஒரு வாரத்திற்குள் யார் பெயரையாவது சொல். எழுதி டிபார்ட்மெண்ட்டில் கொடுத்துவிடுகிறேன். இல்லையென்றால் நீ அலட்சியமாக இருந்துவிடுவாய்” என்று உரிமையுடன் அவனிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டார் மல்ஹோத்ரா.
****
ன்று சிறப்பான முகூர்த்த நாள். அதனால் லாக்கர் சேவைக்குக் கூட்டம் அதிகம் இருந்தது. நந்தினியும் வந்தாள். அவளுக்கு இரண்டு லாக்கர்கள் இருந்தன. வழக்கமாக அவளுடன் உதவியாக ஓர் இளம்பெண்ணும் வருவாள். சுபா என்று பெயர். ஏழ்மை நிரம்பிய முகம். ஆனால்  நந்தினியைவிட அழகு.

லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து அணிந்துகொண்டு கிளம்பினார்கள் நந்தினியும் சுபாவும். பிற்பகல் மூன்றுமணி சுமாருக்குத்  திரும்பி வந்தார்கள். நகைகளைக் கழற்றி வைத்து, லாக்கரை மூடிவிட்டு நந்தினி முன்செல்ல,  பின்தொடர்ந்த சுபா,  பிறகு என்னவோ நினைத்தவள்போல் திரும்பி வந்து, “ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி, அவனை உற்றுப் பார்த்துவிட்டுப் போனாள்.

“நன்றி” என்று மனதிற்குள்ளேயே முனகிக்கொண்டான் ஜெயராமன். சுபாவின்  ஏழ்மை அவன் மனதை உறுத்தியது. நந்தினி இவளிடம் இன்னும் கொஞ்சம் தாரளமாக நடந்துகொள்ளலாமே என்று தோன்றியது.

மாலையில் லாக்கர் அறையை மூடுவதற்கு முன்னால் உள்ளேபோய், எல்லா விளக்குகளையும் போட்டு, தரையில் யாராவது நகையையோ அல்லது வேறு பொருளையோ தவறவிட்டுப் போனார்களா என்று பார்ப்பது  ஜெயராமனின் பழக்கம். அன்றும் அப்படிப் பார்த்தபோது சுவரின் இருண்ட மூலையில் கிடந்தது, ஒரு சிறிய நகைப்பெட்டி. ஆவலுடன் பிரித்தான். உள்ளே ஒரு வைர மோதிரம்!

அதிர்ச்சியுடன் நகைப்பெட்டியை ஒரு தடித்த காகித உறையில் வைத்து மூடுவதற்குள் அவன் கைகள் நடுங்கின. வைரமோதிரம் என்றால் லட்சக்கணக்கில் விலைபெறுமே,  யார் தவற விட்டிருப்பார்கள்?
அன்று காலையிலிருந்து சுமார் இருபதுபேர் லாக்கர்களைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அவர்களில் யாருடையதாகவும் இருக்கலாம். யாரிடம் போய்க் கேட்பது?

திடீரென்று நந்தினியின் ஞாபகம் வந்தது. அவள் விரலில் இதுபோன்ற வைரமோதிரம் இருந்ததைப் பார்த்த ஞாபகம் வந்தது. அவள்தான் தவற விட்டிருப்பாளோ? 

வங்கியில் அவனையும் இன்னொரு அதிகாரியையும் தவிர எல்லாரும் போய்விட்டிருந்தனர். மணி ஆறரை. மழைக்கால மாதலால் வெளியே வானம் இருண்டிருந்தது. தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. தன் மற்ற வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்புவதற்கு ஜெயராமனுக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் ஆகலாம். அதுவரை பொறுக்கலாம். தொலைத்தவர்கள் போன் செய்யக்கூடுமே!  அதற்குள், அலுவலக ஒழுங்குமுறைப்படி தன் கிளைமேலாளருக்குப் போன் செய்து விஷயத்தைக் கூறினான். “பத்திரமாக எடுத்து உள்ளே வையுங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று பதில் வந்தது.

ஜெயராமனுக்கு உதறலாகவே இருந்தது. வங்கியின் பணம் எத்தனையோ கோடிகளை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு எடுத்துப் போகும்போதெல்லாம் எந்தப் பயமும் இருந்ததில்லை. ஆனால்,  யாருக்கோ சொந்தமான இந்த  வைர மோதிரம்  தன்னை எந்தச் சிக்கலிலாவது  மாட்டிவிடுமோ என்று பயந்தான்.

அப்போது டெலிபோன் மணி ஒலித்தது. “தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும் சார்!” - சுபா பேசினாள். ஜெயராமனுக்கு அப்போதுதான் உயிர் வந்தது.

“சார், உங்கள் லாக்கர் அறையைக் கொஞ்சம் திறக்கமுடியுமா? நந்தினி மேடத்தின் வைரமோதிரம் அங்கே தவறியிருக்கவேண்டும்” என்றாள் சுபா பதற்றத்துடன். “நீலக்கலரில் சிறிய நகைப்பெட்டி. கும்பகோணத்தில் போன ஆகஸ்ட்டில் வாங்கியது. ரசீதும் பெட்டியில் இருக்கும்”.

ஜெயராமன் நகைப்பெட்டியைத் திறந்தான். அவள் சொன்னதெல்லாம் சரியே. இது நந்தினியின் மோதிரமே. அப்பாடா, ஒரு கவலை தீர்ந்தது என்று நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான். “இங்குதான் இருக்கிறது. கவலைப்படவேண்டாம். நாளை வந்து பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்” என்றான்.

“ஐயய்யோ” என்று அலறினாள் சுபா. “அந்த மோதிரம் இப்போதே வேண்டும் சார். மேடம் நாளை அதிகாலை கல்கத்தா போகிறார்கள். நான் வந்து பெற்றுக்கொள்கிறேன். நீங்கள் இன்னும் அரை மணிநேரம் அங்கேயே இருப்பீர்களா, ப்ளீஸ் எங்கும் போய்விடாதீர்கள்”  என்றபோது குரலில் பதற்றமும் அழுகையும் கலந்திருந்தன.

“வாங்க, ஒங்களுக்காக வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு நகைப்பெட்டியைத் தன் தோல்பையில் வைத்துக் கொண்டான் ஜெயராமன். லாக்கர் அறையின் கனத்த கதவை மூடினான்.  உடனிருந்த அதிகாரி தன் இரண்டாவது சாவியால் கதவைப் பூட்டிவிட்டு “குட்நைட்” சொல்லிக் கிளம்பினார்.  

பிறகுதான்  ஜெயராமனுக்குப் புரிந்தது, தான் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட இருக்கிறோம் என்று. தானோ மணமாகாதவன். நேரமோ இரவு. வங்கியில் வேறு யாருமில்லை. வரப்போகிறவளோ அழகான இளம்பெண். யாராவது பார்த்துவிட்டால்? தன்னுடன் அந்தப் பெண்ணுக்கும் அல்லவா கெட்டபெயர் வந்துவிடும்?

அவசரமாக எழுந்தான். வங்கியின் வெளிக்கதவுகள் இரண்டையும் பூட்டினான். சுபா வருவதற்குள் தானே சென்று நந்தினி வீட்டில் கொடுத்துவிடுவதென்று கிளம்பினான்.
****
ழைப்புமணியை அழுத்தினான் ஜெயராமன்.  சுபா வந்து திறப்பாள் என்று எதிர்பார்த்தால் வந்தவள் நந்தினி.

இரவுநேர உள்ளாடையில் அவள் வழக்கத்தைவிட அழகாக இருப்பதாகத்  தோன்றியது.  “உள்ளே வாருங்கள் ஜெயராமன்! என்ன விஷயம்? இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்கள்?” என்றாள் ஆச்சரியத்துடன்.

“சுபா இல்லையா?”

“வந்துவிடுவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் வந்தீர்களா?”

ஏதோ நெருடியது அவனுக்கு. அப்படியானால் வைரமோதிரம் தவறியது    இவளுக்குத் தெரியாதா?

நகைப்பெட்டியை அவளிடம் கொடுத்தான். “சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வைரமோதிரம். லாக்கர் அறையில் தவறவிட்டு விட்டீர்கள். நல்ல வேளை சுபாதான் போன்செய்து அடையாளம் காண உதவினாள்..” என்றான்.

“சுபா என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே!” என்று சந்தேகத்தோடு  புருவத்தைச் சுருக்கியவள், “எனிவே, உங்களுக்கு மில்லியன் தேங்க்ஸ். இதன் விலை இரண்டு லட்ச ரூபாய்” என்று மோதிரத்தை எடுத்து முத்தமிட்டபடி விரலில் அணிந்துகொண்டாள். “என்ன சாப்பிடுகிறீர்கள் - ஸாஃப்ட் டிரிங்க்ஸ் ஆர் பியர்?”

வேண்டாம் என்றவன், மோதிரத்தைப் பெற்றுக்கொண்டதன் அடையாளமாக அவளிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு கிளம்பினான் ஜெயராமன். அவன் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் சுபாவின் ஸ்கூட்டர் வந்து சேர்ந்தது. வங்கியின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஏமாற்றமும் கலவரமும் அடைந்தவளாகத் திரும்பி வந்திருந்தாள் சுபா. ‘நந்தினி மேடம் என்ன சொல்லப்போகிறாளோ?’
****
ரவு பதினோரு மணிக்கு ஜெயராமனுக்கு ஒரு போன் வந்தது. பேசியவள் சுபா. “ஏன் சார் இப்டி பண்ணினீங்க?” என்று ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்டாள்.

“ஏன்..என்ன விஷயம்.. மோதிரத்தைத் தான் நந்தினி மேடத்திடமே கொடுத்துட்டேனே,  சொன்னாங்களா இல்லையா?” என்று  பரபரப்போடு கேட்டான் ஜெயராமன். 

“சொன்னாங்க. அத்தோட இன்னொண்ணும்  சொன்னாங்க...” என்று பொருமினாள்.

“என்ன?”

“இனிமே ஒனக்கு வேலை இல்லைன்னு! வீட்டை விட்டே தொரத்திட்டாங்க. இப்ப என் தோழியோட ரூம்ல இருந்துதான் பேசறேன்..” வார்த்தைக்கு வார்த்தை விம்மினாள். “எல்லாம் ஒங்களால வந்த வெனை”.
ஜெயராமனுக்குத் திக்கென்றது.

“ஒங்களுக்கு நந்தினியைப் பற்றித் தெரியாது சார்! ரொம்ப மோசமான லேடி. எங்கிட்ட  எல்லா வேலையும் வாங்கிப்பாங்க, சம்பளம் மட்டும் ஏத்தவே மாட்டாங்க. லீவும் குடுக்கமாட்டாங்க. வேலையை விட்றதுக்கும்  அனுமதிக்கமாட்டாங்க. முக்கியமான ஆஸ்பத்திரி செலவுன்னாக் கூட கடன் கொடுக்கமாட்டாங்க. அவங்களப்  பழிதீர்க்கணும்னுதான் இந்த வைரமோதிரத்தை லாக்கர் ரூம்ல ஒளிச்சி வச்சேன். ராத்திரிக்குள்ள நானே வந்து ஒங்ககிட்டருந்து வாங்கிட்டு ஊரைவிட்டே போய்டலாம்னு திட்டம் போட்டேன். எல்லாத்தையும் பாழாக்கிட்டீங்களே” என்றாள் சுபா.
 (தொடரும்)

சுபாவதாரம்-3 படிக்க இங்கு சொடுக்கவும்


சனி, ஜனவரி 28, 2017

சுபாவதாரம் (1) (சற்றே நீண்ட சிறுகதை)

பதிவு 05/2017
சுபாவதாரம் -1
(சற்றே நீண்ட சிறுகதை)
- இராய. செல்லப்பா
(1)

வேளச்சேரி  நூறடி சாலையில் பெருத்த விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்படிருந்த அமெரிக்க காப்பிக்கடையில் கூட்டம் இல்லாத மேசையாகப் பார்த்து உட்கார்ந்த  ஜெயராமன், தன் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தை மூன்றாவது முறையாகப் படித்தான்.

“எங்கள் பதிவேட்டின்படி, வரும் ஜூலை 31 அன்று தங்களுக்கு அறுபது வயது நிறைவடைவதால், அன்று மாலையுடன்  தாங்கள் பணி ஓய்வு பெறுவீர்கள் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்துகிறோம்.......- எம் கே மல்ஹோத்ரா, பொது மேலாளர்”.

அன்றுதான் ஜூலை 31.

அவனோடு ஒரேநாளில் வங்கியில் சேர்ந்த அதிகாரிகள் நாற்பதுபேர். அதில் மூன்றுபேர் இப்போது பொதுமேலாளர்கள்- மல்ஹோத்ரா உள்பட. எவ்விதமான பதவி உயர்வுமின்றி வெறும் “ஸ்கேல்-ஒன்” அதிகாரியாக ஓய்வு பெறப்போவது அவன் மட்டுமே.

மல்ஹோத்ரா எவ்வளவோ சொன்னார். “இன்டர்வியூவிற்கு சும்மா வந்து நின்றுவிட்டுப் போ. புரமோஷன் வந்தால் டிரான்ஸ்பர் வருமென்று பயப்படாதே. உன்னைச் சென்னையிலேயே போஸ்ட் செய்கிறேன்” என்றார். “விரும்பியிருந்தால் என்னைப்போல நீயும் ஜி.எம். ஆகியிருக்கமுடியும். வாழ்க்கையை வீணாக்கிவிட்டாய்” என்றார். ஜெயராமனின்  பதில் “சரிதான் போடா” என்பதாகவே இருக்கும். அண்ணா சாலையில் எல்ஐசி சந்தில் அவருடன் எவ்வளவோ நாட்கள் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட நட்பாயிற்றே!      

யூனிபாரம் அணிந்த பணியாள், ஒரு பூங்கொத்தை நீட்டும் பாவனையில் மெனுகார்டை நீட்டினார். காப்பி – சிறிய கோப்பை: ரூ.75, பெரிய கோப்பை ரூ.120.  சிறிய கோப்பையே போதும்தான். ஆனால் இன்று அவன் ஓய்வு பெறப்போகும் நாளல்லவா? “காப்பி - ஒரு பெரிய கோப்பை” என்றான்.   

பத்துமணிக்குத்தான் வங்கி ஆரம்பம். ஆனால் ஒன்பதேகாலுக்கே சென்று திறந்துவிடுவான் ஜெயராமன். அதற்கு வசதியாக அருகிலேயே வீடு பார்த்திருந்தான். இன்றோ உடம்பெல்லாம் பரபரப்பு. ஒன்பதுக்கே வந்துவிட்டான். இதுதானே கடைசி கதவுதிறப்பு! காப்பிக்குச் செலவிடக் கால்மணிநேரம் ஒதுக்குவதில் தவறில்லை.

“என்ன ஜெயராமன் சார்! இனிமே பேங்க்கில் உங்களைப் பார்க்க முடியாதாமே?” என்றபடியே வந்தார் ராமநாதன். அந்த வர்த்தக வளாகத்தின் உரிமையாளர்.

“என்ன செய்வது? அறுபது வயதாகிவிட்டது, வீட்டுக்குப் போன்னு துரத்துறாங்களே!” என்று சிரித்தான் ஜெயராமன். “சாருக்கும் ஒரு பெரிய கோப்பை” என்று உள்பக்கம் திரும்பிக் கையசைத்தான்.

காப்பி வந்தது.  “நீங்க அதிர்ஷ்டசாலி ஜெயராமன்! இனிமே ஆபீஸ் போகாம பென்ஷன் வாங்கிட்டு நிம்மதியா இருக்கலாம். என்னெப் பாருங்க. சாகற வரைக்கும்  ஓய்வு கிடையாது. எப்பவும் பிசினஸ், பிசினஸ்னு அலையறேன்” என்றார் ராமநாதன்.

அப்போதுதான் தன்னைக் கவனித்தான் ஜெயராமன். தனக்கு இன்னும் தலை முழுதாக நரைக்கவில்லை.  இன்றும் வேளச்சேரியிலிருந்து நந்தனம் வரை எளிதாக நடக்கமுடிகிறது. எல்.ஐ.சி.-யின் எட்டாவது மாடிக்கும் படியேறிச் செல்லமுடிகிறது.... பென்ஷனைக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளி விடலாம்தான். சொந்த வீடு என்ற பெயரில் ஒரு பழைய வீடு நெய்வேலியில் இருந்தது. அப்பாவின் உழைப்பு.

“அது சரி, ரிடையர் ஆனப்புறம் எங்க செட்டில் ஆகப் போறீங்க? பிள்ளைங்க படிச்சு முடிச்சிட்டாங்களா?”

“பிள்ளைகளா?” கடகடவென்று சிரித்தான் அப்போதுதான் அங்கு வந்த எஸ்.கே. கிருஷ்ணன். ஜெயராமனின் உடன்பணியாளர். “சாருக்குக் கல்யாணமே ஆகலை சார்! பெண்கள்னாலே அரைமைல் தூரம் ஓடிடுவார்!” என்றான். ஜெயராமன் முகத்தில் கூச்சம் நெளிந்தது. ஆம்,  தன்னை “சாமியார்” என்றுதானே சக ஊழியர்கள் அழைப்பார்கள்!

அதற்குள் அவரது அலைபேசி ஒலிக்கவே, “சாயங்காலம் வந்து பாக்கறேன்” என்று கிளம்பினார் ராமநாதன்.
*****
காலையிலிருந்து வாடிக்கையாளர்கள் ஒருவர் விடாமல் அவனைச் சந்தித்து கைகொடுக்க வந்தார்கள். “ஹாப்பி ரிடயர்மெண்ட்” என்றார்கள்.

ஏஜிஸ் ஆபீசிலிருந்து இருபதுவருடம் முன்பு ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர், “உங்களுக்காகத் தான் இந்த வங்கிக்கு வந்தேன். நீங்கள் போய்விட்டால் ஒருபயல் என்னை ஏனென்று கேட்க மாட்டான். நோ கஸ்டமர் சர்வீஸ் வில் பி அவைலபிள்” என்று வருந்தினார். “வயதான காலத்தில்தான் பேச்சுத்துணை அவசியம். பேசாமல் கோயம்புத்தூர் போய் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுங்கள்” என்று ஆலோசனை சொன்னார்.

ஜிப்பாவும் சந்தனப் பொட்டுமாக வந்தார் ஏ.கே.பி.சத்யன். டிவி புகழ் ஜோதிடர். ‘சனிப் பெயர்ச்சி’க்கும், ‘குருப் பெயர்ச்சி’க்கும் புத்தகம் போடுபவர். “ஜெயராமன், உங்க விருச்சிக ராசிக்கு இப்போ ஜென்ம சனி. கொஞ்சம் படுத்தும். ஆனாலும் வசதி கொறையாது. இன்னைக்கு ரிட்டையர் ஆறீங்களாமே! ஜாதகம் குடுங்க. விரிவான பலன் தபால்ல அனுப்பி வெக்கிறேன்” என்றார். “ஹேப்பி ரிட்டையர்மெண்ட்” சொன்னவர், “என் அக்கவுண்ட்ல இருநூத்தம்பது ரூபா கிரெடிட் பண்ணிடுங்க. ஒங்களுக்கு ஃபிஃபடி பர்செண்ட் டிஸ்கவுண்ட்” என்று நினைவுபடுத்த மறக்கவில்லை.       

இளமுதுமையை மறைக்கும் அதீத ஒப்பனைகளுடன் ஒரு பெண்மணி நேராகக் கிளைமேலாளர்  அறைக்குள் நுழைந்தாள். கவுண்ட்டரில் நிற்பதைக் கௌரவக் குறைவாகக் கருதும் “கேபின் கஸ்டமர்” ரகம். கிளைமேலாளர்  இன்னும் வராததால், அங்கிருந்தபடியே ஜெயராமனின் இருக்கையை உற்று நோக்கினாள். அதற்குள் ஜெயராமனே அவரைப் பார்த்து மென்னகைத்தபடி உள்ளே நுழைந்தான். “வணக்கம் நந்தினி மேடம்”.

“வணக்கம் ஜெயராமன்! உண்மையில் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இன்றுடன் ஓய்வு பெறுகிறீர்களாமே!” என்றார் நந்தினி. தலையாட்டினான்.

“முன்பே தெரிந்திருந்தால் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பேன். உங்களை மாதிரி பொறுப்புணர்ச்சியோடு பணியாற்றுபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவிக்க வேண்டாமா?”

ந்தினியை முதன்முதலில் சந்தித்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவுக்கு வந்தது.

பிஸியானதொரு சனிக்கிழமை பகல் பதினொன்றரை மணிக்கு கேஷ் கவுண்ட்டரில் இருந்த கியூவை முந்திக்கொண்டு, ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டிச் சில்லறை கேட்டாள் நந்தினி. அன்று கேஷியராக இருந்த மாதவன், மற்ற வாடிக்கையாளர்களின் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று, புன்னகையுடன் பத்து நூறுகள் கொடுத்தான். பதில் புன்னகையை எதிர்பார்த்தான். அவளோ, அதில் இரண்டைத் திருப்பிக் கொடுத்து, பத்து ரூபாய்களாகக் கேட்டாள். திடீரென்று இன்னொரு ஆயிரம் கொடுத்து ஐந்து ரூபாய் புதிய நோட்டுகள் வேண்டுமென்றாள். அன்று அந்த நோட்டுக்கள் ஸ்டாக் இல்லை. உடனே கோபத்துடன் “வாட் எ பேங்க் இஸ் திஸ்?” என்று குரலை உயர்த்தியபடி வெளியேறினாள். தன் புன்னகை வீணாகிவிட்ட ஏமாற்றம் மாதவனின் முகத்தில் தெரிந்தது. இதைக் கண்ணாடி அறைக்குள்ளிருந்து பார்த்துகொண்டிருந்த கிளைமேலாளர், ஜெயராமனை நோக்கி அவளைச் சமாதானப்படுத்து என்று சைகை செய்தார். முக்கியமான டிபாஸிசிட்டர்.   

நந்தினியை நோக்கி வேகமாக நடந்தான் ஜெயராமன். அவள் இன்னும் காரில் ஏறவில்லை. “மேடம், சமீபத்தில் நீங்கள் நேப்பாள் போயிருந்தீர்களா?” என்றான்.

“வொய்?” அற்பப் புழுவைப் பார்ப்பதுபோல் இருந்தது அவள் பார்வை.

“இல்லை மேடம், இதே மாதிரி ஸாரியை நேப்பாளில் வாங்கியதாக ஐஸ்வர்யா ராய் பேட்டி கொடுத்திருந்தார். அதான்...” என்று வார்த்தையை முடிக்காமல் இழுத்தான்.

அடுத்தநொடியே அவள் முகம் வெளிச்சமானது. “தாங்க்ஸ் ஃபார் த காம்ப்ளிமெண்ட். ஆனால், இதை மைசூர்ல வாங்கினேன். ரெண்டு வருஷம் ஆச்சு”.

“ரெண்டு வருஷப் பழசா? நம்ப முடியலயே!” என்ற ஜெயராமன்  அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு  அவளை மேலிருந்து கீழ்வரை ஆழமாகப் பார்த்து முடித்தான். கழுத்தில் வைர நெக்லஸ், விரலில் வைர மோதிரம். “மேடம், நாளைக்கு வருவீங்களா? நீங்க கேட்ட புதுநோட்டுக்கள் எடுத்து வெக்கிறேன். இன்னிக்கு தரமுடியாம போனதுக்கு மன்னிக்கணும்” என்றான்.

அவளுக்கு உச்சி குளிர்ந்திருக்க வேண்டும். “நோ நீட்! ஜஸ்ட் லைக் தட் கேட்டேன்” என்று காரில் ஏறிகொண்டாள். பிறகு அவனை நோக்கி ஆவலோடு “அந்த ஐஸ்வர்யா ராய் பேட்டி எந்தப் பத்திரிகையில் வந்தது?” என்றாள்.

“ஹிந்துவா எக்ஸ்பிரஸ்சா என்று ஞாபகமில்லை. பார்த்துவிட்டுப் போன் செய்யட்டுமா?”

சரி என்றது அவள் புன்னகை.

“ஆனால் ஒரு விஷயம்..” என்று அவள் முகத்துக்கருகில் சென்றான் ஜெயராமன். “ஒரு வாடிக்கையாளர் உங்களைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?”

“என்ன சொன்னார்?”  

“கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துகொண்டால் இவர்கள் இன்னும் அழகாக இருப்பார்கள் என்று!” உணர்ச்சியை வெளிக்காட்டாமல் சொன்னான் ஜெயராமன்.

முகத்தில் நூற்றுப்பதினேழு ரோஜாக்கள் மலர்ந்ததை மறைக்கமுடியாமல், “அப்படியா? ரொம்பச் சரி. எதற்கும் உங்களைப் பற்றி மேலிடத்திற்குப் புகார் செய்யவேண்டியதுதான்” என்று சிரித்துக்கொண்டே காரை நகர்த்தினாள் நந்தினி.   

அப்படித்தான் ஆரம்பித்தது. பிறகு... ஹூம், அதையெல்லாம் நினைக்க இது நேரமில்லை. இன்றுதான் கடைசி நாள். இனிமேல் அவள் யாரோ நான் யாரோ.

“சம்பளம் கொடுக்கிறார்கள். வேலை செய்கிறோம். இதற்கெல்லாம் பார்ட்டி எதற்கு மேடம்?” என்று பணிவோடு கேட்டான் ஜெயராமன்.

“அப்படியில்லை. என்னப் பொறுத்தவரை நீங்க ஒரு ஸ்பெஷல் நண்பர். நான் பார்ட்டி  கொடுத்தே ஆகவேண்டும். சனிக்கிழமை வெச்சுக்கலாமா?”

அலுவலகத்தில் அவளோடு விவாதம் நடத்த விரும்பவில்லை ஜெயராமன். “நோ இஷ்யூ. தேங்க்ஸ்” என்றான்.

புன்னகையுடன் எழுந்த நந்தினி, “உங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்மணியும் பார்ட்டிக்கு வருவாங்க” என்றாள் குறும்பாகப் பார்த்தபடி.

நெற்றியைச் சுருக்கினான். “யாரைச் சொல்கிறீர்கள்?”

“சுபா” என்று சிரித்தபடியே அவனது  எதிர்வினைக்குக் காத்திராமல் வெளியேறினாள் நந்தினி.

சுபாவா? சனிப்பெயர்ச்சி நிச்சயம் படுத்தும் என்று புரிந்துவிட்டது.  
***

“ஜெயராமன் சார்! ஒங்கள மறக்கவே மாட்டேன். நீங்கதான் எனக்கு இந்த கூரியர் வேலையை வாங்கிக்குடுத்து என் வாழ்க்கைல  வெளக்கேத்தினீங்க....” என்று உணர்ச்சி வசப்பட்டான் அஸ்லாம். கிளியரிங்கிற்குப் போகும் அவசரத்தில் இருந்தான். அவன் கைகளைப் பற்றிகொண்டு  அமைதிப்படுத்தினான் ஜெயராமன். “எல்லாம் நல்லபடியாக நடக்கும். உனக்கு ஒரு குறைவும் வராது” என்றான்.

அப்போது இன்ட்டர்காம் ஒலித்தது. “ஜி.எம்.  மல்ஹோத்ரா திடீரென்று சென்னை வந்திருக்கிறார். உங்கள் ஃபேர்வெல் பார்ட்டியில் கலந்துகொள்ளப் போகிறார். மூன்று மணிக்கு வருவார். வெளியில் போய்விடாதீர்கள்” என்றது  கிளைமேலாளர்  குரல்.

வங்கியைத் துப்புரவு செய்யும்  பகுதிநேர ஊழியரான சுப்பம்மா வந்து நின்றாள். “இனிமே ஒங்களப் பாக்க முடியாதுன்னு நெனக்கிறப்ப ரொம்ப வருத்தமா இருக்குங்க. நீங்க ரொம்ப நல்லவருங்க” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். பிறகு இன்னும் சற்றே நெருங்கிவந்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஒங்களத்தான் மலைபோல நம்பிட்டிருக்கா சுமதி. கைவிட்டுற மாட்டீங்களே?” என்றாள் உறுதியான குரலில்.