(இன்று கிழமை செவ்வாய்-5)
அமெரிக்காவில் 29ஆவது நாள்
வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே தொடங்கிவிட்ட கவலை இது:
இனி எத்தனை நாளைக்கு ஒருமுறை முகச்சவரம் செய்யவேண்டும்?
வங்கியில் சேர்ந்த ஆரம்பகாலங்களில் வாரம் இரண்டுமுறையாக இருந்த வழக்கம் (திங்கள் மற்றும் வியாழன்), சில வாரங்களில் சில விசேஷங்களை முன்னிட்டு வாரம் மும்முறையாகவும் தன்னை நிறைவேற்றிக்கொள்வதுண்டு. மற்ற வங்கிகளின் உயர் அதிகாரிகளைப் பார்ப்பதற்கோ, அல்லது ரிசர்வ் பேங்க் சென்று வருவதற்கோ, அல்லது ஆடிட்டர்களைப் பார்ப்பதற்கோ அவசியம் நேர்ந்தால் அன்று காலையில் முகச்சவரம் தேவைப்படுவதுண்டு.
சிட்டி யூனியன் வங்கியின் தி.நகர் கிளையில் பணியாற்றியபோது அதே தெருவில் குடியிருந்த ஓர் இளம் நடிகை புதன் அல்லது சனியன்று வங்கிக்கு வருவதாகத் தகவல் கிடைக்கும். தகவல் திலகமாக விளங்கியவர் எமது கடைநிலை ஊழியர் அல்லர். தற்காலிக மேலாளராக இருந்தவர்தான்! (இன்னொரு வங்கியிலிருந்து ஒய்வு பெற்றபின் இந்த வங்கியில் சலுகைச் சம்பளத்தில் சில மாதங்களுக்கு நியமிக்கப்பட்டவர்). அத்தகவலை அவர் எங்களுக்குப் பயன்படும் விதமாக முதல்நாள் மாலையே தெரிவித்துவிடுவார்.
அதற்கேற்ப எல்லா ஆண்களும் வீட்டிலிருந்து கிளம்பும்போதே முகச் சுத்தத்தைக் கடைப்பிடித்து வந்திருப்பார்கள்.
“நேற்று தானே ஷேவிங் செய்துகொண்டீர்கள்? இன்று மறுபடியும் எதற்கு? இன்னொரு தடவை யாரையாவது பெண் பார்க்கப் போகிறீர்களா?” என்று சில மனைவிகள் தம் கணவன்மார்களைக் கேட்பதுண்டு. திருக்குறள் படித்த சில மனைவிகள், தம் கணவரின் தோழர்களுக்குத் தொலைபேசி (verb), ‘மெய்ப்பொருள் காண’வும் முற்படுவதுண்டு. ஒரு டாக்டர் இன்னொரு சக டாக்டரைக் காட்டிக்கொடுப்பாரா? ஒரு வங்கி ஊழியர் சக வங்கி ஊழியரைக் காட்டிக் கொடுப்பாரா? “சிஸ்டர்! இன்னைக்கு மேலதிகாரிகள் வருகிறார்கள். உங்க ஹஸ்பண்டும் மேனேஜரும்தான் அவர்களோடு விசிட் போகிறார்கள். அவர் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று தர்க்கரீதியான பதில் கொடுக்கப்படும்.
மேலாளர் நல்லவர்தான். பொய் சொல்ல மாட்டார்தான். ஆனால் அவரால் வருவதாகச் சொல்லப்பட்ட அன்று அந்த இளம் நடிகைக்கு பதில் அவருடைய தாயார் (சில சமயம் மட்டும்) அதே போன்ற ஒப்பனையோடு வருவதுண்டு. “பேபி ஸ்டோரி டிஸ்கஷனுக்குப் போயிருக்கு” என்பார்.’பேபி’ யாரென்று உங்களுக்குத் தெரியும். ஒரு முகச்சவரம் வீணான கவலை சிலருக்கு ஏற்பட்டதுண்டு.
சில மாலை நேரங்களில் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், ஜுனியர் சேம்பர், பேங்கர்ஸ் கிளப் போன்ற கூட்டங்கள் இருக்கும். அந்த நாட்களில் காலையில் முகத்தைச் சுத்தப்படுத்தியிருந்தாலும் மாலையும் மறுசுத்தம் தேவைப்படலாம். அதே போல, ஏதாவது ரிஸப்ஷனுக்குப் போகவேண்டியிருந்தாலும், மனைவியும் கூட வரும் நிகழ்ச்சியானால் முக ஒப்பனைக்கு அதிக அளவு ஒத்துழைப்பு அவர்கள் தரப்பிலிருந்து கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. .
வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்ட பிறகு, முகச்சவரம் எந்த ஒழுங்குமுறைக்கும் உட்படாத ஓர் அட்டவணையின்படி இயங்குகிறது. அந்தரங்கம் மிக்க மனைவிகள் கூட, தம் ஓய்வுபெற்ற கணவர்கள் முகஅழகில் பிரகாசிப்பதை ஆதரிப்பதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது. ‘கண்ணுக்கு மை அழகு’ என்பதைக் கைவிடாத முதிய பெண்கள் கூட, தங்கள் கணவர்களின் நரைத்த தலைகளுக்குச் சாயம் பூசப்படுவதை விரும்புவதில்லை என்றும் அதே சர்வே கூறுகிறது. சாய மைகளின் விலை தாறுமாறாக ஏறியிருப்பதும் ஒரு காரணமாம்.
பிளேடுகள் விலையும் எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. எல்லா பிளேடு கம்பெனிகளையும் ஜில்லட்காரன் விலைக்கு வாங்கிவிட்டானே! அதை முறியடிக்கவே சில ஆண்கள் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். முழுதாடி இல்லாவிடினும், முகவாய்க்கட்டையின் கீழ் மட்டும் வளர்ப்பவர்களும் உண்டு. இளைஞர்களுக்கு அந்தக் குறுந்தாடி பரவாயில்லை. ஆனால் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அது பாந்தமாயிருப்பதற்காகத் தெரியவில்லை என்றும், வெண் குறுந்தாடி ஒருவரை மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் அடையாளச் சிக்கல் ஏற்படுவதாகவும் எங்கள் குடியிருப்பில் சில பெண்கள் பேசிக்கொள்வதுண்டு.
அமெரிக்காவில் இந்தப் பிரச்சினை அவ்வளவு கடுமையாயில்லை. (அதாவது நம்மைப் போன்று அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கப்போகிற ஆண்களுக்கு). எப்படியும் நமது வெளி நடமாட்டம் சனி, ஞாயிறுகளில் தான் இருக்கும். அல்லது அபூர்வமாக வரும் சில விடுமுறைநாட்களில் தான். எனவே வெளியே கிளம்புவதற்கு ஒருமணி நேரம் முன்பு முகத்தில் கை வைத்தால் போதும்.
நமது கோவில்களுக்குப் போவதானால் முகத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. எல்லாரும் நம்மவர்களே அல்லவா! ஆனால் “குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காக்களுக்குச் செல்லவேண்டி இருந்தால் முகத்தூய்மை மிகவும் அவசியம்” என்றார் எனது நண்பர். (அவரும் ஓய்வு பெற்றவர்தான்.)
குழந்தைகளுக்குத் துணையாக தாத்தா பாட்டிகளும் வருவதுண்டு. “அந்தப் பாட்டிகளில் சிலபேர் ஆண்ட்டிகளைப் போல் ஒப்பனை செய்துகொண்டு வருவார்கள்” என்றார். அவர் காரணம் அவருக்கு! (டெக்சாஸில் அப்படி இருக்கும்போல!)
(முதலில் சொல்லப்பட்ட இளம் நடிகை பலமுறை அறிவிக்கப்பட்ட தினங்களில் சரியாக வந்ததுண்டு. ஆனால் பத்து நிமிடத்திற்குமேல் தங்கமாட்டார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் அப்போதுதான் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே அவர் காரிலிருந்து இறங்கினால் கூட்டம் திரண்டுவிடும். துரதிர்ஷ்டவசமாக ஒரு விமான விபத்தில் அடுத்த சில மாதங்களில் தன் 27ஆவது வயதில் அவர் மரணமடைந்துவிட்டார். அவர் நடித்த படம்: பத்ரகாளி. அவர் பெயர் ராணி சந்திரா. ‘நெல்லு’, ‘ஸ்வப்னாடனம்’ ஆகிய மலையாள படங்களும் அவருக்குப் புகழ்சேர்த்தவை).
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
எந்த அளவிற்கு உங்கள் நகைச்சுவை தென்றலாக மனதை வருடிச்சென்றதோ அதே அளவு மனதைக்கனக்கச் செய்தன கடைசி வரிகள்..நல்ல திறமை வாய்ந்த ராணி சந்திராவின் மரணம் மறக்க முடியாதது..
பதிலளிநீக்குஆம் நண்பரே! இளம் வயது மரணங்கள் மிகவும் கொடுமையானவை.
நீக்குஅமிதாப் பச்சனுக்கு வெள்ளை குறும் தாடி பாந்தமாக இருப்பதாய் கருத்து.நான் தேவைக்கு ஏற்ப கறுந்தாடி வைப்பது ஷேவ் பண்ண வேண்டிய பரப்பளவை குறைப்பதற்காகத்தான்.மேலும் முகரையில் ஷேவ் செய்வது கன்னத்தில் ஷேவ் செய்வதை விட கடினம்.
பதிலளிநீக்குஉண்மை தான். நமக்குறிய சேவைகளை நாம் தான் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்.
நீக்குமுக சவரம் பற்றிய ஒரு ஆராய்ச்சியே செய்து விட்டீர்களே!
பதிலளிநீக்குஒரு சின்ன நெருப்பு பொறி கிடைத்தால் போதும் அதைக் கொண்டு காட்டுத் தீயையே மூட்டி விடுகின்றீர்களே. என்ன ஒரு அபார எழுத்து திறமை தங்களுக்கு.
தினமும் ஏதாவது ஒரு தலைப்பு கிடைத்து விடுகிறதே தங்களுக்கு, அலசி அசை போட.
நாளைக்கு எதுவோ...Waiting ( தளபதி விஜய் Style ல் )
நாளைக்கு என்ன எழுதலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கலாமே!
நீக்குஇழையோடும் நகைச்சுவை நடை
பதிலளிநீக்குகைவந்தகலை போலும்!
அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா! ஏதோ கிறுக்கினேன். அதை நகைச்சுவை என்கிறார்கள்.
நீக்குNo comments.
பதிலளிநீக்குமுகச்சவரம் குறித்த விரிவான பதிவு. தில்லியில் தினம் தினம் முகச்சவரம்! இராணுவத்திலும் அப்படியே! ஒரு நாள் செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட, “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டு விடுவார்கள்! :) கடைசி வரிகள் :(
பதிலளிநீக்குஇராணுவத்தில் முகச்சவரம் செய்யாவிடில் செங்கல்லைக் கன்னத்தில் வைத்துத் தேய்ப்பார்களாமே! கல்லூரிக் காலத்தில் என் சி சி சார் சொல்லுவார்.
நீக்குராணி சந்திராவும் கமலும் இனைந்து ஆடிய ஒரு பாடல் காட்சி இரண்டு நாட்களுக்குள் பார்த்தேன். என்ன பாடல் என்று மறந்துவிட்டது.
பதிலளிநீக்குrambha praveshamo என்ற மலையாளப் பாடலில் ராணி சந்திரா ஆடுகிறார். கமல் இல்லை.
நீக்குபடம் தேன் சிந்துதே வானம் - எழுதாத பாடல் ஒன்று பாடல்.
நீக்குஆண்களின் ஒரு பிரச்சனையை நகைச்சுவை இழையோட அலசியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநான் தலைக்கு சாயம் பூசிக் கொள்வதை நிறுத்தி பாட்டியாகி அதிக நாட்களாகி விட்டது. என் தோழிகள் இன்னும் ஆண்டிகளாகவே இருக்கிறார்கள்.
நல்ல தோழிகள்! என் டெக்சாஸ் நண்பர் மகிழ்ச்சி அடைவார்!
நீக்குபணிநிறைவு பெற்றபின்னரும்கூட தினமும் முகச்சவரம் தொடர்கிறது, எனக்கு. பத்ரகாளியில் ராணிசந்திராவின் நடிப்பை வியந்து பார்த்துள்ளேன்.
பதிலளிநீக்குநேரம் காலமின்றிப் பல இடங்களிலும் முகம் காட்டும் உங்களது பணிகளைப் பார்க்கும்போது, முகத்திற்கும் அளிக்க உங்களிடம் நேரம் உண்டா என்று தோன்றுகிறது!
நீக்குதங்கள் கணவர்களின் நரைத்த தலைகளுக்குச் சாயம் பூசப்படுவதை விரும்புவதில்லை என்றும் அதே சர்வே கூறுகிறது. //
பதிலளிநீக்குஅந்த சர்வேயில் என்னைப் போன்றவர்கள் விடுபட்டுள்ளார்கள் என்று தெரிகிறது! சர்வே மாறியிருக்கும்.
துளசிதரன்
சர்வே நீங்கள் ஊரில் இல்லாத நேரம் பார்த்து எடுக்கப்பட்டிருக்கலாமோ?
நீக்குசிரித்து விட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இப்போதெல்லாம் ஆண்களும் பெண்களுக்கு நிகராக வயதானவர்களைத்தான் 50 தாண்டியவர்களைச் சொல்கிறேன்.. அழகு நிலையத்துக்குப் (சலூன் இப்போதெல்லாம் அழகுநிலையமாக மாறியிருக்கிறதே!. )போகிறார்கள். சவரம் செய்வதற்கும் சேர்த்துத்தான். கூடவே தாடி மீசை லேட்டஸ்ட் ஸ்டைலில் ட்ரிம் செய்துகொள்வதற்கு. பெண்களைப் போல் முகத்திற்கு மசாஜ், Face pack எல்லாமும் தான். சென்னையில் இருந்த போது சில வயதான இளைஞர்கள் பேசிக் கொண்ட போது கேட்டது!
பதிலளிநீக்குஹப்பா தலைச்சாயம் விலை கூடியதற்குக் காரணமான பட்டியலில் நான் இல்லையாக்கும்!
கீதா
ஆம், வயதான ஆண்களை சிலசமயம் நம்ப முடிவதில்லை. பெண்கள் முடிதிருத்தும் நிலையமாகப் பார்த்து, அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று போய், தங்களை அழகுபடுத்திககொள்கிறார்கள். துரோகிகள் என்று சொல்லலாமா?
நீக்கு[8:47 am, 11/05/2022] Dr J Bhaskaran Writer & Health Centre: வாசித்த பிறகு கை வைத்துப் பார்த்தேன்…. இரண்டு வார தாடி… வெண்தாடி!! முழுவதும் மழிப்பதா, மீசை மட்டும் வைத்துக் கொள்வதா என மனதுக்குள் பட்டி மன்றம் !!
பதிலளிநீக்கு[8:48 am, 11/05/2022] Dr J Bhaskaran Writer & Health Centre: உங்கள் ப்ளாக்கில் கமெண்ட் பதிவிட முடியவில்லை…
பட்டிமன்றம் என்று சொல்லிவிட்டீர்களே! கல்யாணமாலை ஆசாமிகளுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்துவிட்டீர்களே!
நீக்குMuthuswamy G in Kuvikam -WhatsApp:
பதிலளிநீக்குசிவாயநம. பணி ஓய்வு பெற்றவர்களின் கவலைகளில் முக்கியமான ஒன்று முகச்சவரம் தான் போலும்! எளியேன் பணி ஓய்வு பெற்ற பின் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் முகத்தை கில்லெட் வெக்டரால் தொடுவது என்று வைத்துள்ளேன். (அதைத் தவிர வேறு யார் நம் முகத்தை தொடப் போகிறார்கள்? ). சனிக்கிழமை காலை - ஏனென்றால் சனிக்கிழமை மாலை குவிகம் கவிதை நேசிப்புக் கூட்டத்தில் நண்பர்களுக்கு முகம் காட்ட வேண்டுமே? ஞாயிறு குவிகம் கூட்டத்திற்கும் முகம் தாக்குப் பிடிக்கும்! புதன்? வ.வெ.சு சார் தானே பேசுவார்! நம் முகத்தை யார் பார்க்கப் போகிறார்கள்? 😀 செல்லப்பாவின் கற்பனைகள் வெல்லப்பா(கு)!😊
வவேசு அவர்களும் இதைப் படிப்பார்கள் என்பது நினைவில் இருப்பது நல்லது!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஒரு சாதாரண விஷயத்தை (முகச்சவரம் சாதாரண விஷயமா என கேட்டு விடாதீர்கள். ஒரு வேளை அது சமயங்களில் முகத்தில் ரணங்களை ஏற்படுத்துவதினால் ஆரம்பம் முதல் அப்பெயர் பெற்று நிலைத்து விட்டதோ?) அருமையாக அலசி பதிவை நகைச்சுவையாக தந்துள்ளீர்கள்.இன்றுதான் முதல் முறையாக தங்கள் தளம் வருகிறேன் நகைச்சுவை உங்கள் எழுத்தில் இயல்பாக வந்து விழுகிறது. . இவ்விதமான நகைச்சுவை எழுத்துக்களை நானும் விரும்பி ரசிப்பேன். இனி உங்கள் தளம் அவசியமாக தொடர்வேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
என் தளம் வந்து கருத்துரைகளில் மூலம் அறிவுரைகள் தந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் வரவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!
பதிலளிநீக்கு