சனி, ஏப்ரல் 30, 2022

பாஸ்போர்ட் என்னும் பாசச் சங்கிலி-1 இன்று கிழமை வெள்ளி -3

 பாஸ்போர்ட்  என்னும்  பாசச் சங்கிலி-1

இன்று கிழமை வெள்ளி -3


அமெரிக்காவில் 18ஆவது நாள் 

(பெங்களூர் எக்ஸ்பிரஸ்)


பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ஒரு காலத்தில் பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது இந்தியாவில். 


1998/99 இல் நான் மங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தேன்.  பாஸ்போர்ட் துறை கணினிமயம் ஆகாத நாட்கள்.  எங்கள் வங்கியின்  தலைமை அலுவலகத்திற்கு எதிரில் இருந்த மங்களூர் (பாண்டேஸ்வர்)  போஸ்ட் ஆபீஸில் விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து அங்கேயே பணம் செலுத்தும் வசதி அப்போது இருந்தது. 


எல்லா விண்ணப்பங்களிலும் இருப்பதுபோலவே, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் ‘தற்போதைய முகவரி’ மற்றும் ‘நிரந்தர முகவரி’ என்று இரண்டு விவரங்கள் கேட்டிருந்தார்கள். எனது நிரந்தர முகவரி சென்னை; தற்காலிக முகவரி மங்களூர் என்று பூர்த்தி செய்தேன். தெரிந்த நபர்கள் இருவரின் பெயர்  முகவரி கேட்டிருந்தார்கள். கொடுத்தேன். அரசுத்துறையில் பணிசெய்வதால், அலுவலகத்திலிருந்து ‘என்ஓசி’ இணைக்கவேண்டி இருந்தது. செய்தேன். மங்களூரில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லாததால், பெங்களூருக்கு என் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. 


ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒற்றைத்தாளில் ‘உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என்ற கடிதம் வந்தது. ‘உங்கள் நிரந்தர முகவரி சென்னை என்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.  


அதற்குள் எனக்கு பெங்களூருக்கே மாற்றலாகி விட்டது. மேலும் உடனடியாக வெளிநாடு செல்லும் எந்தத் திட்டமும் என்னிடம்  இல்லை. எனவே பாஸ்போர்ட் பற்றிய கவலையை அப்போதைக்கு ஒதுக்கிவைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டு என்னை அமெரிக்கா வரச்சொல்லி மகள் அழைத்ததால், மீண்டும் விண்ணப்பிக்க நேர்ந்தது. இம்முறை பெங்களூர் பாஸ்போர்ட் ஆபீசுக்கு விண்ணப்பிக்காமல், அவர்கள் ஏற்கெனவே அறிவுரைத்தபடி,  என் நிரந்தர முகவரிக்குட்பட்ட சென்னை பாஸ்போர்ட் ஆபீசுக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன்.


ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு நிராகரிப்புக் கடிதம் வந்தது! இம்முறை காரணம் என்ன தெரியுமா? ‘உங்கள் தற்போதைய முகவரிக்குட்பட்ட பெங்களூர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்காமல், சென்னைக்கு விண்ணப்பித்தது தவறு’ என்று கடிதம் கூறியது!


இதென்னடா இழவு என்று பெங்களூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். அங்கிருந்த அதிகாரி எங்கள் வங்கிக்குத் தொடர்பில் இருந்ததால், அவரிடம் விஷயத்தை விளக்கினேன். இப்போது விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘தற்போதைய முகவரி’ தான் எந்த பாஸ்போர்ட் அலுவலகம்  என்பதை முடிவுசெய்யும் காரணி என்றும் தெரிவித்தார். எனவே மீண்டும் ஆத்திச்சூடியிலிருந்து ஆரம்பித்தேன். பதினைந்து நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றும் வராவிட்டால் தன்னை மீண்டும் சந்திக்கும்படியும் கனிவுடன் கூறினார். 


அதன்படியே பதினைந்தாவது நாள்  வந்தது. பாஸ்போர்ட் அல்ல, வெறும் கடிதம்! ‘உண்மைத் தகவலை மறைத்து விண்ணப்பித்த காரணத்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், இதுபற்றி, தேவைப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்று கடிதத்தில் இருந்தது!


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த உண்மையை நான் மறைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. விண்ணப்பத்தில் இருந்ததெல்லாம், என்னுடைய பெயர், பிறந்த நாள், தந்தை-தாய் பெயர், பணிபுரியும் அலுவலகம், இதற்கு முன்பு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டேனா, வழக்குகள் என்மீது நிலுவையில் உள்ளனவா என்ற விவரங்கள்தான். இதில் எதையும் மறைப்பதற்கே வழியில்லையே!


எனவே சற்றே அச்சத்துடன், பாஸ்போர்ட் அதிகாரியோடு நெருங்கிய தொடர்பில் இருந்த எனது வங்கியின் மண்டலா அலுவலக நண்பர் ஒருவருடன் சென்று பாஸ்போர்ட் ஆபீசரைச் சந்தித்தேன். 


“வாருங்கள், பாஸ்போர்ட் வந்துவிட்டதல்லவா? என்ன சாப்பிடுகிறீர்கள், காபியா டீயா?” என்றார்.


எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே என்னுடைய ஃபைலை எடுத்துவரச் சொன்னார். அதை பார்த்தவுடன் அவர் முகத்திலும் சற்றுக் கடுமை படர்ந்தது. “எதையோ நீங்கள் மறைக்கிறீர்கள் போல் தெரிகிறதே!” என்றார்.

 

நானும் நண்பரும் எதுவுமில்லை என்று பலமாகத் தலையாட்டினோம். “இல்லை! உங்கள் விண்ணப்பங்கள் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பில் இருக்கிறதே! சென்னை ஆபீஸ் ஒருமுறையும் இதே பெங்களூர் ஆபீஸ் ஒருமுறையும்! ஆனால் நீங்கள் இதற்குமுன் என்னைப் பார்த்தபோது ஒன்றும் கூறவில்லையே! இப்போதாவது எல்லா உண்மையையும் சொல்லிவிடுங்கள். நிச்சயம் என்னால் உதவமுடியும்” என்றார்.


“பாஸ்போர்ட் என்பது மிகவும் முக்கியமான ஆவணம். ஆகவே சின்னச் சின்னத் தவறுகள் கூட நிலைமையைச் சிக்கலாக்கிவிடும்” என்று மேலும் எச்சரித்தார்.


நல்லவேளையாக, ஏற்கெனவே வந்திருந்த இரண்டு கடிதங்களையும் கையோடு கொண்டுபோயிருந்தேன். பார்த்தார். உடனே விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதற்குள் காபி வந்தது. “குடியுங்கள், விஷயம் தெரிந்துவிட்டது. நாளைக்கே உங்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்துவிடுகிறேன். கவலைவேண்டாம்” என்றார்.


அதன்பிறகு விளக்கினார். “அதிகார எல்லை (ஜூரிஸ்டிக்ஷன்) சம்பந்தப்பட்ட காரணத்தால்தான் உங்கள் முந்தைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. இது முழுக்க முழுக்க சிஸ்டம் செய்த தவறு.  அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அவருடைய பெருந்தன்மைக்கு வணக்கம் சொல்லிக் கிளம்பினேன்.   


சொன்னபடியே மூன்றாவது நாள் என் கையில் பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது!


 

பாஸ்போர்ட் பத்துவருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நாளில் எனது ‘ரினியூவல்’ விண்ணப்பத்தை அனுப்பினேன். இப்போது நான் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். அத்துடன் 40 வருடமாக இருந்த முகவரியில் இருந்து வீடு மாறி, அடுத்த மாவட்டத்தில் ஒரு கிராமியச் சூழலில் இருந்த நகர்ப்புறக் குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக ஒரு அடுக்குவீடு வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். எனவே ரினியூவல் + முகவரி மாற்றம் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்தேன். 


இன்னும் கணினிமயமாகவில்லை பாஸ்போர்ட் ஆபீஸ்கள். எனவே தாமதம் தவிர்க்கமுடியாது என்று தோன்றியது. ஆனால் இப்போது ஏற்பட்ட தாமதம் புதுமாதிரியானது.


நமது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும். காவல் நிலைய அதிகாரி நம் வீடுதேடி வந்து விசாரணை நடத்தி அவர்முன்னால் நாம் ஒரு படிவத்தில் கையொப்பம் இட  வேண்டும் என்பது விதி.  


ஆனால் விதி என்பது வேறு, தலைவிதி என்பது வேறு அல்லவா? 


காவல் அதிகாரி நம் வீட்டுக்கு வரமாட்டார். மாறாக நம்மை அவருடைய அலுவலகத்திற்கு அழைப்பார். ‘நம்மை நன்கு தெரிந்த இருவர்’ (ரெஃபரன்ஸ்) என்று யாரைக் குறிப்பிட்டிருந்தோமோ அவர்களிடமிருந்து ஒரு படிவத்தில் கையொப்பம் வாங்கிவரச்சொல்லி நம்மிடமே அனுப்புவார். அவற்றைப் பூர்த்திசெய்துகொண்டு போனால் அந்த அதிகாரி தன் இருக்கையில் இருக்கமாட்டார்.  காவல்துறையில் நிமிடத்துக்கு நிமிடம் உத்தரவுகள் வந்துகொண்டே இருக்கும் என்பதால் அந்த அதிகாரி எப்போது மீண்டும் வருவார் என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியாத சூழல் இருக்கும். 


இதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது. அவர் வந்த பிறகு, நம்மிடம் ஒரு லெட்ஜரில் கையொப்பம் பெற்றுக்கொண்டு நமது விண்ணப்பத்தை மாவட்ட காவல் அதிகாரிக்கு அனுப்பிவைப்பார். அவர்கள் அதை பதிவுசெய்துகொண்டு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்புவார். எல்லாம் சரியாக இருந்தால் ஒரு வாரத்தில் புதிய பாஸ்போர்ட் வந்துவிடும்.    


என்னுடைய விஷயத்தில் மேற்கொண்டு புதிய தாமதம் ஒன்றும் நேர்ந்தது. அதை நீங்களோ நானோ எதிர்பார்த்திருக்க முடியாது! 


நான் குடிவந்த கிராமத்திற்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்திற்கு போலீஸ் நிலையம் புதிதாக சாங்க்ஷன் ஆகியிருந்ததாம். அந்த அலுவலகம் சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டதாம். எங்கள் குடியிருப்பையும் அந்த போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் சேர்த்துவிட்டார்களாம். அதற்கான உத்தரவு அன்றுதான் வந்ததாம். ஆகவே, எனது பாஸ்போர்ட் பற்றி விசாரணை செய்து தகவல் அனுப்பவேண்டியது அந்த நிலையத்தின் அதிகாரியுடைய வேலைதானாம்! ஏற்கெனவே பழைய போலீஸ் நிலையத்தில் செய்து முடிக்கப்பட்ட விசாரணை செல்லாதாம்! 


“அவர் உங்கள் வீட்டுக்கே வந்து பேசுவார். ஆனால் நீங்கள் புதிதாக எந்த பேப்பரும் தரவேண்டாம். நாங்கள் கையொப்பம் இட்ட அதே பேப்பரில் அவர் உறுதிசெய்யும் விதமாக இன்னொரு கையெழுத்து போடுவார். அவ்வளவுதான். இதனால் உங்கள் விஷயம் சில நாட்கள் தாமதப்படும். பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பழைய நிலைய அதிகாரி.


பொறுத்துக்கொண்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு பாஸ்போர்ட் ரினியூவல் செய்யப்பட்டு வந்துசேர்ந்தது!


(கதை இத்துடன் முடியவில்லை. நாளை தொடரும்.)


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.



வெள்ளி, ஏப்ரல் 29, 2022

இருந்தும் இல்லாத அமெரிக்கா (இன்று கிழமை வியாழன்-3)


இருந்தும்  இல்லாத  அமெரிக்கா

இன்று கிழமை வியாழன்-3


அமெரிக்காவில் 17ஆவது நாள் 

(அட்லாண்டிக் கடலோரம்)


முதல்முறையாக சுதந்திரதேவி சிலையைப் பார்ப்பதற்காக நியூயார்க் லிபர்ட்டி ஐலண்டுக்குப் போனபோது விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. 


சுற்றுப்பயணிகள் ஏராளமாகக் குழுமியிருந்தனர். கப்பலுக்கான டிக்கட் வேகமாக விற்றுக்கொண்டிருந்தது. இணையத்தில் முன்பதிவுசெய்தவர்களும் இருந்தார்கள். நூற்றுக்கு எழுபத்தைந்துபேர் வெளிநாட்டவர்களே. அவர்களிலும்  அமெரிக்காவுக்குப் புதியவர்கள் அதிகம்பேர் இருக்கக்கூடும்.  


தூரத்திலிருந்தே பச்சைவண்ணத்தில் காட்சியளித்த சிலையை ஆர்வத்தோடு பார்த்தேன் நான். நியூஜெர்சியிலிருந்து ரயிலும் பஸ்சும் நடையுமாக நானும் மனைவியும் மகளும் அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்தோம். சிட்டிபேங்க் அதிகாரி என்பதால் அவளுக்கு டிக்கட் கட்டணத்தில் முப்பது சதம் தள்ளுபடி இருந்தது. (குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும்). அங்கு மட்டுமல்ல, அமெரிக்காவில் பல மியூசியங்களிலும் பூங்காக்களிலும் கூட அத்தகைய தள்ளுபடி உண்டு. சிட்டிபேங்க் அங்கெல்லாம் பெரிய அளவில் நன்கொடை வழங்கியிருந்ததாம். 


மகள் பெற்றோருக்கு ஆற்றிய உதவி-
 மாடிக்கு லிப்ட்

இன்னும் இரண்டு கப்பல்கள்  புறப்பட்டபிறகுதான் எங்களுடைய கப்பல் கிளம்பவேண்டும். அதற்கு அரைமணியாவது ஆகும். எனவே சற்று நிதானமாக நடந்தோம். சாலையில் நாங்கள் பார்த்த காட்சிகள் திகைப்பையே அளித்தன.


நடைபாதையின்மீது ஆளுக்கொரு அட்டைப் பெட்டிக்குள் நபர்கள் -பெரும்பாலும் ஆண்களே- அமர்ந்துகொண்டு கிடார், கிளாரினெட், டிரம்பெட் போன்ற இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் சாக்பீஸால் எழுதப்பட்ட அட்டைகள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. “ஹெல்ப்” என்றும் “கிவ் மீ 10 டாலர்” என்றும் எழுதப்பட்டிருந்தன.


அவர்களைச் சற்றுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அமெரிக்காவிலும் பிச்சைக்காரர்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வந்தேறிகள் என்பதை அவர்களின்  நிறமும் குணமும் தெளிவாகக் காட்டியது. பார்வையாளர்கள் போடும் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் தங்கள் தொப்பிகளை அவர்கள் பரப்பி வைத்திருந்தார்கள். சிலருடைய தொப்பிகளில் பண நோட்டுகள் நிரம்பி வழிந்தன. சிலரதில் மிகவும் குறைவு. 


நான் ஒரு டாலர் போடலாமா என்று மகளை பார்த்தேன். அவள் வேண்டாம் என்றாள். பத்து டாலருக்கு குறைவாகப் போட்டால் கோபம் வருமாம். நமக்குத் புரியாத மொழியில் திட்டுவார்களாம். சிலபேர் நம்முடைய பர்ஸைப் பிடுங்கிக்கொள்வதும் உண்டாம்.


எங்களது விவாதத்தை எப்படியோ புரிந்துகொண்டுவிட்ட ஒரு பிச்சைக்காரர், அமர்ந்த கோலத்திலிருந்து எழுந்தார். “டுவெண்ட்டி டாலர்?” என்றார். இல்லையென்று தலையாட்டினேன். “டென் டாலர்?” என்றார். இல்லையென்றேன்.  “ஃபைவ் டாலர்?” என்றார். சரியென்று கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.


வேடிக்கை பார்ப்பவர்களில் பத்தில் ஒருவராவது  ஏதாவது உதவி செய்யத் தவறவில்லை. நாங்கள் கப்பலில் ஏறும்வரை அவர்களின் வாத்திய இசை கேட்டுக்கொண்டிருந்தது.


நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க் எதிரே இருந்த ஒரு சர்ச் வாசலில்  பகல் பன்னிரண்டு மணிக்கு சில பிச்சைக்காரர்கள் படுத்துக்கொண்டிருப்பதைப்  பார்த்தோம். ஆனால் இவர்களை ‘வீடிழந்தவர்கள்’ -’ஹோம்லெஸ்’ என்கிறார்கள். இவர்கள் தொப்பியை வைத்து பிச்சை கேட்கவில்லை. யாரும் இவர்களுக்கு உதவிசெய்யவும் இல்லை.  


பின்னர் ஒரு பயணத்தின்போது பாஸ்டன் நகருக்குச் சென்றபோது, ஹார்வர்டு பல்கலைக்கழகம் அருகிலிருந்த ஹார்வர்டு ஸ்கொயரில் பூங்காவின் திட்டுக்களில் சூட்கேஸ் சகிதம் வசதியான இரவலர்கள் பலர் காலை நீட்டி வசதியாகப் படுத்துக்கொண்டிருந்ததைக் கண்டோம். இவர்களில் பலர் நல்ல வேலைகளில்   இருந்து அவற்றை இழந்தவர்களாம். நாள்கணக்கில் அங்கேயே  படுத்திருப்பார்களாம். சில சமயம் அவர்களாகவே வந்து சிலரிடம் காபி வாங்கித்தருமாறு கேட்பதைக் கண்டோம். பொதுவாகவே பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில்  இரவலர்கள் தங்கிக்கொள்ள அனுமதி உண்டாம். சிலர் தங்கள் கார்களையே வீடாக்கித் தங்குவதும் உண்டாம்.


நியூஜெர்சியில் நான் தினமும் நூலகத்திற்குச் செல்லும் வழியில் பணிப்பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி இருந்தது. அருகிலிருந்த உழவர் சந்தையில் பணிசெய்பவர்களாக இருக்கலாம். ஒருநாள் எதிர்பாராத ஒரு திருப்பத்தில் ஒரு முதிய பெண்மணி வேகமாக என்னைத் தடுத்து நிறுத்தினாள். ஆங்கிலம் தெரியாதவள் என்று முகத்தில் எழுதியிருந்தது. “டாலர்?” என்றாள். 


நான் ஒன்றும் புரியாமல் “வாட்?” என்றேன். அவள் மீண்டும் “டாலர்?” என்றாள். அப்போதுதான் புரிந்தது, அவள் உதவி கேட்கிறாள் என்று. என்னிடம் உண்மையில் டாலர்கள் இல்லை. இந்தியாவிலிருந்து கிளம்பும்போது தாமஸ் குக்கில் ஆயிரம் டாலர்கள் வாங்கி வந்திருந்தேன். அதில் ஏர்போர்ட்டில் டிராலிக்கு ஆறு டாலர் செலவானது போக மீதியை பாஸ்போர்ட்டுடன் பத்திரமாக வீட்டில் வைத்திருந்தேன். பேண்ட் பையில் பர்ஸ் இருந்தாலும் அதில் கிரெடிட் கார்டு தான் இருந்தது. இந்திய ரூபாய்கள் கொஞ்சம் இருந்தன. இரண்டாலும் அவளுக்குப் பயனில்லை. 


அதற்குள் அவள் அச்சமூட்டும் அளவுக்கு என்னை நெருங்கிவிட்டாள். இப்போது அழகான ஆங்கிலம் பேசினாள். “யூ ..வித்தவுட் டாலர்?” என்றாள்  கோபமாக. (“யூ..ட்டு ப்ரூட்டஸ் ?” மாதிரி). அப்போது சாலையில் நான்கைந்துபேர் நடந்து வந்துகொண்டிருந்ததைக் கவனித்த அந்தப் பெண்மணி தனக்குள்  ஏதோ  முனகியபடி நகர்ந்துவிட்டாள். ஒருவேளை “இன்றுபோய் நாளை வா” என்கிறாளோ?


நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிலநாட்கள் பிரெஞ்சுத் திருநாள் கொண்டாட்டத்தின்போது தங்கியிருந்தோம். கடல்போல் பரந்திருந்த மிஸிஸிப்பி நதியின் கரைகளில் அழகாய்ப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த செவ்வரளி, வெள்ளை அரளிப் பூக்களைக் கைகளால் தடவியபடி நதியிலிருந்து எங்களை நோக்கி வீசிய மெல்லிய காற்றை அனுபவித்தபடி நடந்துகொண்டிருந்தோம். அப்போது சில இளைஞர்கள் நாங்கள் ஏதாவது தருவோமா என்பதுபோல் நின்று எங்களையே உற்றுப் பார்த்தார்கள்.  பரிதாபமாக இருந்தது. இரவு உணவுக்காக நாங்கள் வாங்கியிருந்த இந்திய உணவுகள் ஒரு பையில் இருந்தன. அதை வாங்கிக்கொள்வார்களா என்று கேட்டறிந்தோம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் முன்னாலேயே அதை பிரித்துப் பகிர்ந்து உண்டார்கள். அவர்களின் பசி கொஞ்சம் தணிந்திருக்கும். பார்க்க  நிம்மதியாக இருந்தது.


உலகம் எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இந்தியாவானால் என்ன, அமெரிக்காவானால் என்ன? மனிதர்கள் வாழும் இடம் எதுவானாலும் இல்லாமை என்னும் ஆமை இல்லாத இடமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதனால் தானோ அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதினார், “MILES TO GO BEFORE I SLEEP” என்று?    


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.                    

வியாழன், ஏப்ரல் 28, 2022

நட்சத்திர ஓட்டலும் குஜராத்தி மெஸ்சும் (இன்று கிழமை புதன்-3)

 நட்சத்திர ஓட்டலும் குஜராத்தி மெஸ்சும் 

இன்று கிழமை புதன்-3


அமெரிக்காவில் 16ஆவது நாள் 

(நான்கு தூண்கள் நகரம்)



ஒரு மாறுதலுக்காக இன்று ஹைதராபாத் கதை ஒன்றை எழுதட்டுமா?


நாடெங்கிலும் கிளைகள் கொண்ட வங்கிகளுக்கு, மாநிலங்களில் மண்டல அலுவலகங்கள் இருப்பதுண்டு. ரீஜினல் ஆபீஸ், ஜோனல் ஆபீஸ் என்ற பெயர்களில் அவை அழைக்கப்படும். சில வங்கிகளில் ரீஜினல் ஆபீஸ் மட்டும் இருக்கும். சிலவற்றில் ஜோனல் ஆபீஸ் மட்டுமே இருக்கும். இந்த இரண்டுமே இருக்கும் பெரிய வங்கிகளில், ஜோனல் ஆபீசின் கீழ் ரீஜினல் ஆபீஸ் இயங்குவதாக இருக்கும். மண்டலங்களின் தலைமை அதிகாரிக்கு மண்டல மேலாளர் என்று பெயர் இருக்கும்.  


ஒவ்வொரு மண்டல மேலாளரும் தன் கீழுள்ள கிளைகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றசராகவே மதிக்கப்படுவார். (அரசியல் கட்சிகளில் தளபதி என்பார்களே அதுபோல.) மதிக்கப்படவேண்டும் என்று அவரும் எதிர்பார்ப்பார்.


பொதுவாக, ஒரு மண்டலத்திற்குப்  புதிய மேலாளர் நியமிக்கப்படும்போது அல்லது மாற்றலாகிவரும்போது, அவர் பதவியேற்கும் அதே நாளிலோ அல்லது அடுத்துவரும் சனி, ஞாயிறுகளிலோ அவருக்கு ‘பட்டாபிஷேகம்’ நடைபெறும். முதலில் அந்த மண்டலத்தின் முக்கிய கிளைமேலாளர்கள் மட்டும் தங்களுக்குள் கலந்துபேசி மண்டல மேலாளரை  ‘உரிய முறையில்’ வரவேற்று உபசரிப்பார்கள். சிறிய குழுவாக இருப்பதால்  மண்டல மேலாளர் அவர்களுடன் மனம்விட்டுப் பேசித் தன்னுடைய இலக்குகளைத் தெரிவிப்பார். (‘தன்னுடைய’ என்பதைக் கவனிக்கவும்.) ‘மண்டலத்தின் வெற்றிக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்; வங்கியின் தலைவரின் தீர்க்கதரிசனமான திட்டங்களை நாம் முழுமனதோடு நிறைவேற்றுவோம்’ போன்ற சம்பிரதாயமான வாசகங்களோடும், (வங்கியின் செலவில் வாங்கப்படாத) சில வண்ணமயமான திரவப் பொருட்களோடும் கூட்டம் இனிது முடிவடையும். 


அடுத்த கட்டமாக, மண்டலத்திலுள்ள எல்லாக் கிளைமேலாளர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். இது அநேகமாக வேலை நாட்களிலேயே நடைபெறும். மண்டல அலுவலகத்திலேயே நடைபெறும். அநேகமாக ஒரு வார முன்னறிவிப்பில், சுமார் நூறு ஏ-4 தாள்களில் அடங்கும்  அளவுக்குப் புள்ளிவிவரங்களை மண்டல அலுவலகத்தின் அனுபவமிக்க அதிகாரிகள் மாங்குமாங்கென்று தயாரித்து, பளபளக்கும் ஸ்பைரல் பைண்டிங்கில் ஒவ்வொரு கிளைமேலாளரிடமும் தருவார்கள். அவர்களும் வழக்கம்போல அதை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொள்வார்கள். படிப்பதற்கு ஏது நேரம்?   (படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது வேறு விஷயம்.) ஏனென்றால் தங்கள் கிளையின் லட்சணம் ஒவ்வொரு மேலாளருக்கும்  தெரியாதா என்ன? அத்துடன், புதிதாக வந்திருப்பவர் நாகரிகத்தை முன்னிட்டாவது முதல் கூட்டத்தில் தங்களை அவமதிக்கமாட்டார் என்று அவர்களுக்குத் தெரியும். (குறிப்பாக வைப்புநிதி இலக்கை எட்டியிராதவர்களுக்கு.) ஆகவே எல்லாரும் மாமியார் வீட்டுக்கு வந்தமாதிரி குஷியாக இருப்பார்கள். 


இந்தக் கூட்டத்தின்போது, முன்சொன்ன திரவப்  பொருட்களோடு மண்டல மேலாளரைச் சந்தித்து முடித்துவிட்ட  கிளை மேலாளர்கள் சற்றே காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பந்தா காட்டுவார்கள். தங்களுக்குப் பிடிக்காத அல்லது தங்கள் கிளையிலிருந்து டெபாசிட்டை அபகரித்துவிட்ட மேலாளர்கள் மண்டல மேலாளரைச் சந்தித்துவிடாதபடி அவருடைய கண்ணாடிக்கதவின்முன்பு  காவல்செய்வார்கள். அப்படி முதல் நாளில் தனது  கண்ணாடிக்கூண்டுக்குள் நுழைந்து தன்னைச் சந்திக்காத மேலாளர்களைப் பற்றி மண்டல மேலாளர் அன்று பிற்பகல் நடக்கவிருக்கும் கூட்டத்தில் தன் அதிருப்தியைத் தெரிவிப்பது வழக்கம். அத்துடன் அந்த அதிருப்தியாளர்கள் கட்டம் கட்டுப்படுவார்கள். தங்களுடைய தனித்திறமையால் அன்றி அவர்கள் மண்டல மேலாளரின்  ‘நல்ல புத்தகத்தி’ற்குள் நுழையமுடியாது.


இருங்கள், அன்று மண்டல அலுவலகத்தில் மிகச் சாதாரணமான ஓட்டலில் இருந்துதான் உணவு வரவழைக்கப்படும். பெரும்பாலும் நின்றுகொண்டே சாப்பிடும் நிலைதான் இருக்கும். (அலுவலகத்தின்  தளப்பரப்பையும் ஆட்களின் எண்ணிக்கையையும் பொறுத்து.)


சில சமயம் மண்டலம் சார்ந்த வாடிக்கையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யலாமா, முக்கிய வாடிக்கையாளர்களை நான் தெரிந்துகொள்ள வேண்டாமா என்று அந்தப் புது மண்டல மேலாளர் கூறுவார். உடனே எல்லாரும் ஆரவாரத்துடன் ‘As the Regional Manager rightly said..’ என்று ஆமோதிப்பார்கள்.  அந்தக் கூட்டத்தை ஏதேனும் ஒரு ஐந்து நட்சத்திர அல்லது நான்கு நட்சத்திர ஓட்டலில்தான் நடத்தவேண்டும் என்று வங்கியின் தராதரத்தை ஒட்டி முடிவுசெய்யப்படும். அழைக்கப்படவேண்டிய முக்கிய வாடிக்கையாளர்களின்  சிறுபட்டியல் உடனே தயாரிக்கப்படும். வங்கியில் ஏராளமாகக் கடன்வாங்கிவிட்டுத் திருப்பிச்செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஏனென்றால் அவர்களின் திருமுகத்தை வேறு எப்போது பார்க்கமுடியும்? எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தனித்தீவை விலைக்கு வாங்கிக்கொண்டு தலைமறைவாகலாமே! 


மேற்படி கூட்டத்தில் வங்கியின் தலைவர், செயல் இயக்குனர், நிர்வாக இயக்குனர் மற்றும் முக்கிய பொதுமேலாளர்கள் தங்கள் வசதியைப் பொறுத்து கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்திற்கான செலவுகளை வங்கியின் விதிகள் அனுமதிக்குமா, இல்லையென்றால் எப்படி அதைச் சமாளிக்கிறார்கள் போன்ற அற்பமான கேள்விகளுக்கு இந்தப் பதிவில் இடமில்லை என்பதை அறிக.


நான் மேலே சொன்னதெல்லாம் பெரிய பெரிய வங்கிகளுக்குத் தான் பொருந்தும். நான் குறிப்பிடும் காலத்தில் நான் பணியாற்றிய வங்கி அப்படியொன்றும் பெரியதில்லை. எனவே    இம்மாதிரி நடைமுறைகளை நான் சந்திக்கவில்லை.


என்றாலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு கிளைமேலாளர் மாநாட்டைப் பற்றி நான் குறிப்பிட்டாகவேண்டும்.


அப்போது அந்த வங்கிக்கு அந்த மண்டலத்தில் அதிகம் கிளைகள் கிடையாது. சுமார் 25 தான் இருக்கும். மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், மற்றும் டிரைவர்கள் உள்பட சுமார் 55 பேர்கள் அன்றைய கூட்டத்தில் இருந்தார்கள். ஹைதராபாத்தின் சிறப்பான நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள சைவ உணவகம் ஒன்றில் நடந்த கூட்டம் அது. சென்னையில் இருந்து மாற்றலாகி வந்த மண்டல மேலாளருக்கு வரவேற்பளிக்கும் கூட்டம்.


மனிதர் மிகவும் நல்லவர் என்று ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தது. கனிவானவர், அதிர்ந்து பேசாதவர், நாணயமானவர். தலைமை அலுவலகத்திலும் அப்படிப்பட்டவர்களே அதிகம் இருந்த காலம். ஆகவே  இனிமையாக நிர்வாகம் செய்யும் பக்குவம் அவருக்கு இருந்தது.


வழக்கமான அறிமுக உரை, மற்றும்  புகழுரைகளுக்குப் பிறகு, மாலை சுமார் எட்டு மணிக்கு உணவு தொடங்கியது. கிட்டத்தட்ட எல்லாருமே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதால் யார்வேண்டுமானாலும் யாருக்கு அருகிலும் அமர்ந்துகொண்டார்கள். உணவரங்கில் மொத்தம் அறுபது இடங்கள்தான் இருந்தன.  நாங்கள் அமர்ந்தபின்னும் சில இடங்கள் காலியாக இருந்தன. 


மண்டல மேலாளர்  தன்  அறைக்குச் சென்று குளித்துவிட்டு குறைந்தபட்ச அலங்கரிப்புடன் பளிச்சென்று வந்தார். மிலிட்டரிப் பச்சை வண்ண சபாரியில் தான் அவர் வருவார். அன்றும் அப்படித்தான். பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை இராணுவ அதிகாரியாகவே எண்ணிக்கொண்டார்கள்.


சில இடங்கள் காலியாக இருப்பதை பார்த்த மண்டல மேலாளர்,  ‘இந்த இடங்களையும் நிரப்பிவிடலாமே’ என்று கூறியதும் எங்கிருந்தோ வந்து அவ்விடங்களை ஆக்கிரமித்தனர் சில கடைநிலை ஊழியர்கள். மொத்தக் கூடமும் நிரம்பிவிட்டது. 


உள்ளிருந்தே தட்டுக்களில் உணவு வகைகளை  நிரப்பி எடுத்துக்கொண்டு வந்தார்கள். அறுபது தட்டுக்களையும்  வைத்து முடிப்பதற்குள் ஆரம்பித்த தட்டுக்களில் அமர்ந்தவர்கள் பாதிக்குமேல் காலி செய்துவிட்டார்கள். மும்முரமாக விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.


ஆனால் தற்செயலாக, வங்கியின் தலைவரிடமிருந்து  மண்டல மேலாளருக்கு  போன் வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவர் ஓட்டல் ரிஸப்ஷனுக்குச் செல்லவேண்டி வந்தது. (அலைபேசி இல்லாத காலம்!) அவருக்கு உதவியாக நானும் இன்னொரு அதிகாரியும் விரைந்தோம்.


நல்லவேளை, மண்டல மேலாளரும் சரி, நாங்களும் சரி இன்னும் கை நனைக்கவில்லை.  ஆனால் மற்றவர்கள்பாடு தான் திண்டாட்டம்.  அவர்கள் மேற்கொண்டு சாப்பிடலாமா, அல்லது மண்டல மேலாளர் திரும்பிவரும்வரை காத்திருப்பதுதான் நாகரிகமா என்று தெரியவில்லை. 


நானும் அந்த இன்னொரு அதிகாரியும் மிகுந்த பசியோடிருந்தோம். ஆனால் என்ன செய்வது?


வங்கியின் தலைவர் மிக நல்லவர்தான். பாதிச்  சாப்பாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் ‘சரி, நாளை பேசலாம்’ என்று போனை வைத்திருப்பார். ஆனால் நம்மவர் அவரைவிட நல்லவராயிற்றே!


சுமார் கால்மணி நேரம் போனில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. இடையில் இணைப்பு தடைப்படவே, நிலைமையைப் புரிந்துகொண்டமண்டல மேலாளர்  ‘எல்லாரும் சாப்பிடுங்கள். எனக்காகக் காத்திருக்கவேண்டாம். தலைவர் ஒரு முக்கிய விஷயத்திற்காக அழைத்திருக்கிறார். நாங்கள் பிறகு சாப்பிடுகிறோம்’ என்று அனுமதித்தார்.


மீண்டும் இணைப்பு கிடைத்து மண்டல மேலாளர்  பேசிமுடித்துத் திரும்பும்போது  ஒன்பதே முக்கால் ஆகிவிட்டிருந்தது. நாங்கள் இருவரும் பசி மீறிப் போய்விட்டோம்.  எங்களிடம் மிகவும் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார், சாப்பாட்டில் ஏற்பட்ட தாமதத்திற்காக.  அவருக்கும் தான் அசுரப் பசி.                     


அப்போதுதான் ஒரு சுவாரஸ்யமான தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஓட்டல் இரவு ஒன்பதரைக்கு மூடப்படுமாம். ஆகவே, உணவுப்பகுதி ஒன்பதேகாலுக்கே மூடப்பட்டுவிட்டதாம். விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டதாம்.  எங்களுக்குச்  சாப்பிட ஏதுமில்லையாம்!


மண்டல அலுவலகத்தின் மற்ற அதிகாரிகள் சிலர் அதனால்தானோ என்னவோ அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தில் தரமான சைவ உணவகங்கள் அந்த நேரத்தில் ஏதும் திறந்திருக்கவில்லை. 


செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஓடிவந்தார். அலங்கார் தியேட்டர் அருகில் ஒரு குஜராத்தி மெஸ் இப்போதும்  இருக்கும், அங்கு போகலாமா, மண்டல மேலாளர் ஏற்றுக்கொள்வாரா என்று விசாரித்தார். 


அன்று இரவு அருமையான சப்பாத்தியும் பாலக் பன்னீரும் கெட்டித் தயிருமாக எங்கள் மூவரின் உணவு அமைந்துவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் கிளைக்கு மண்டல மேலாளர் வரும்போதெல்லாம் அந்த குஜராத்தி மெஸ்ஸுக்குப் போவது வாடிக்கையாகிவிட்டது.


பாவம், அந்த நான்கு நட்சத்திர ஓட்டல் மீண்டும் எங்கள் உணவுத் திட்டங்களில்   இடம்பெற முடியவில்லை. சகுனம் சரியில்லையே!


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து. 


புதன், ஏப்ரல் 27, 2022

அமெரிக்காவில் குப்பை கொட்டுவது எப்படி?

அமெரிக்காவில் குப்பை கொட்டுவது எப்படி?

இன்று கிழமை செவ்வாய்-3

அமெரிக்காவில் 15ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)


திருமணமான தமிழ்ப் பெண்களுக்கு மிகவும் பிடித்த சொற்றொடர்களில் ஒன்று "குப்பை கொட்டுதல்" ஆகும். அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும், கணவனின் பிறந்த நாளன்றோ, அல்லது, தங்கள் திருமண நாளன்றோ "இத்தனை வருடம் உங்களோடு  குப்பைகொட்டி என்ன பயன்?" என்ற கேள்வி தவறாமல் எழுப்பப்படுவதும், அதற்கு கணவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் (அல்லது பதில் சொல்லி மேலும் இக்கட்டில் சிக்கிக் கொள்ளாமல்) திருதிருவென்று விழிப்பதும் வழக்கமான நிகழ்ச்சிகள். ஆறுமுகம் முதல் அம்பானி வரை இதில் மாற்றமில்லை.


(ஒரு மாறுதலுக்காகக்கூட எந்தக் கணவரும் தன் மனைவியைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டதாகத் தகவல் இல்லையே ஏன்?)


அது மட்டுமல்ல, சங்கத் தமிழிலிருந்த எவ்வளவோ  சொற்கள் வழக்கொழிந்து போனாலும், 'குப்பை கொட்டுதல்' போன்ற குப்பையான சொற்கள் அழியாமல் நிரந்திரமாக இருக்கின்றன என்றால் அந்தக் குப்பையில் ஏதோ பொக்கிஷம் இருக்கத்தானே வேண்டும்!

இதைப்பற்றி நன்கு சிந்தித்து வையுங்கள். ஏதாவது தமிழ்த் தொலைக்காட்சியில் இரவுநேர விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ளுது உங்களைச் சிறப்பு விருந்தினராக  அழைக்க சிபாரிசு செய்கிறேன்!  

இப்போது நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குள் போகலாம்.


அன்றாடம் நம் வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைகளைக் கொண்டு காம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம்; பிளாஸ்டிக் உறைகளையும் பொருட்களையும் தனிமைப்படுத்தினால்  மறுசுழற்சி செய்வோருக்கு விற்பனை செய்யலாம். வீணாகிப் போன மின்னணுப் பொருட்களை அவற்றை வாங்குவதற்கென்றே விளம்பரப்படுத்தும் நபர்களை போனில் அழைத்து விற்பனை செய்யலாம். வந்த வரை இலாபம் தானே! குப்பையில் மாணிக்கம்!


ஆனால் அமெரிக்காவில் குப்பையை விற்க முடியாது. கண்ட இடத்தில் குப்பையைப் போடவும் முடியாது, அதேபோல் நினைத்த நேரத்தில் மூட்டை கட்டி வாசலில் வைக்கவும் முடியாது.


ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு குப்பையில் என்று சம்பந்தப்பட்ட நகர சபை முடிவு செய்கிறது. உதாரணமாக நியூ ஜெர்சியில் பல ஊர்களில் திங்கட்கிழமைகளில் காகிதங்கள் மற்றும் அட்டையிலான பொருட்கள் மட்டுமே தெருக்களில் கொண்டு வந்து வைக்க வேண்டும். நகர சபை வண்டி அவற்றை எடுத்துச் செல்லும். ஆனால் அவற்றை அலங்காரமாகக் கட்டிவைக்கவேண்டும். டிவி, பிரிட்ஜ் பேக்கிங்கில் வரும் பெட்டிகளைத் தட்டையாக மடிக்கவேண்டும். அவற்றுடன் வரும் தெர்மகோல்களைத் தனியாக எடுத்து செவ்வாய்க்கிழமையன்று தான் போட வேண்டும் (பிற பிளாஸ்டிக் பொருட்களுடன்).


சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் நடந்து கொண்டிருந்தபோது, அதிகாலை நேரத்தில் மாணவர்கள் தெருத்தெருவாகப் போய், வீட்டு வாசல்களில் குவிக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்களை நோண்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அவற்றுடன் பழைய கம்ப்யூட்டர்கள் ஏராளமாகக் கிடந்தன. அவற்றை ஸ்குரூடிரைவர் கொண்டு கழற்றி, தங்களுக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்!


ஒரு மணிநேரம் கழித்து அதே தெருவுக்குத் திரும்ப வந்தபோது நடைபாதைகள்
துடைத்து வைத்தது போல் சுத்தமாக இருந்தன. நகராட்சி குப்பை வண்டி அவற்றைக் கொண்டு போய்விட்டது!


வீடு காலி செய்பவர்கள்,  பெரும்பாலும் தங்களிடம் இருக்கும் மரச்சாமான்களை வீதியிலேயே எறிந்து விடுவதுதான் வழக்கம். தேவையானவர்கள் தேவையானதை அங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு கிராக்கி இல்லை.


ஆனால் நியூஜெர்ஸியில் இம்மாதிரி வீதியில் எறியப்பட்ட சாமான்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனம் இதற்கான விளம்பரத்தை சில வருடங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் பெரிதாக வெளியிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, குப்பையில் இருந்து ஒரு பிரிண்ட்டரை  எடுக்க முயன்ற மாணவனுக்கு  அபராதமும் விதிக்கப்பட்டது!


கிழிந்து போன மற்றும் பழையதான துணிகளை என்ன செய்வது என்பதுதான் இங்குள்ள பெரிய பிரச்சினை. முதியோர் இல்லம் போன்ற உதவியேற்கும்  நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம்தான். ஆனால் துணிமணிகள் சுத்தம் செய்யப்பட்டு இஸ்திரி போடப்பட்டு, முன் அனுமதி பெற்று, நாமே அங்கு நேரடியாகச் சென்று கொடுத்தால்தான் பெற்றுக் கொள்வார்கள். அதிலும் பாதிப் பொருட்களை ஏற்பதற்குத் தகுதியில்லை என்று திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.


இந்தியாவிலும் இதே போன்ற நிலைமை தான். குறிப்பாகத் தமிழ்நாட்டில். பழைய துணிகளை வாங்கிக்கொள்ளும் ஏழைகள்  யாரும் இல்லை. 'உதவும் கரங்கள்' போன்ற பெரிய அளவிலான அற நிறுவனங்கள் கூட, பழைய துணிகளை ஏற்பதில்லை. உணவுப் பொருள் அல்லது பணம் இரண்டை மட்டுமே ஏற்கிறார்கள். இலவசங்களின் தயவாலும், தேர்தல் நேரத்தில் பொழியும் பணமழையாலும் ஏழைகளே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகிக் கொண்டு வருகிறது. தெருவெங்கும் கோலோச்சும் மதுக்கடைகளை அகற்றிவிட்டால் தனிநபர் வருமானம் மேலும் அதிகரிப்பது உறுதி.


மூன்றாண்டுகளுக்கு முன்னால் நான் வைத்துவிட்டுப் போன மெல்லிய ஈரிழைத்துண்டு, மேலும் சிதிலமடைந்து கிடப்பதை மகள் வீட்டில் கண்டேன். ஒரு பனியனும் வேட்டியும் மஞ்சளும் பழுப்புமாகிப் பயன்படுத்த முடியாமல் போயிருந்தன. இம்முறை நாடு திரும்பும் போது அவற்றை எடுத்துச் சென்று இந்தியக் குப்பையில் எறிய வேண்டும்.   அமெரிக்காவில் நம்மால் குப்பை கொட்ட முடியாது!


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

செவ்வாய், ஏப்ரல் 26, 2022

ஆவின் பாலும் ஆரியகவுடர் சாலை அங்காடியும் (இன்று கிழமை திங்கள்-2)

ஆவின் பாலும் ஆரியகவுடர் சாலை அங்காடியும்

(இன்று கிழமை திங்கள்-2) 

அமெரிக்காவில் 14ஆவது நாள்

(இப்படியும் மனிதர்கள்)

 (இன்று முழுவதும் பேரனோடு விளையாடிக்கொண்டு இருந்ததில் புதிய பதிவு எழுதமுடியவில்லை. எனவே அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' இதழில் வெளிவந்த ஓர் கவர்ச்சிகரமான அனுபவத்தை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.) 

மாமபலத்திற்குக் குடிவந்த புதிதில் விடியற்காலை நாலரைக்கு மேல் ஐந்து மணிக்குளாலான சுப முகூர்த்த வேளையில் நான் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் ஆவின் பால் கிடைக்காது. தினமும் மூன்று பாக்கெட் ஆவின் பால் இல்லையென்றால் எங்களுக்குக் கட்டுப்படியாகாது. மொத்தம் ஆறுபேர் கொண்ட குடும்பம். (எனக்கு அப்போது மணமாகவில்லை என்பதை அறிக).

முதலில் கோவிந்தன் ரோடு 9ஆம் நம்பரில் குடிவந்தோம். சில மாதங்களிலேயே மூர்த்தி தெருவில் எண்பதோ எண்பத்தொன்றோ வீட்டின் நடு போர்ஷனுக்குப் போகவேண்டியதாயிற்று. காரணம், இரண்டு வருட மின்சார பில் கட்டாததற்காக பீஸ் பிடுங்கிவிட்டார்கள். ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கியாம். இருந்த நான்கு குடித்தனக்காரர்கள் கவலைப்படாமல் சிம்னி விளக்கில் குடித்தனம் செய்யப் பழகிக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு வருட வாடகையைப் பாக்கி வைத்திருந்தால், பாவம், வீட்டு உரிமையாளர்தான் என்ன செய்வார்? இருட்டிலேயே இருங்கள் என்று விட்டுவிட்டார். நாங்கள் அப்படி இருக்க முடியாததால் வீடு மாறினோம்.

அக்காலத்தில் ஆரியகவுடர் தெருவில் இருந்த ஆவின் அங்காடி தான் மாம்பலத்தில் பாதி ஜனத்தொகைக்குப் பால் வழங்கும் உரிமம் பெற்றிருந்தது. ஆகவே  விடியற்காலையில் நான் அங்கே ஆஜராகிவிடுவேன். (இப்போதும் அதே இடத்தில் அந்த அங்காடி உள்ளது. சாரதா ஸ்டோர்ஸ் எதிரில்).

ஆனால் எனக்கு முன்னால் இருபது ஆயாக்களாவது அலுமினிய அண்டாக்களுடன் பிரசன்னமாகி இருப்பர். வீட்டில் தூங்கவே மாட்டார்களோ! பூஞ்சையான உடம்பாக இருந்தாலும் இருபத்தைந்து கிலோ எடையுள்ள ஐம்பது பாக்கெட்டுகளை அனாயாசமாகத் தூக்குவதை ஆச்சரியத்துடன் பார்ப்பேன்.    

அங்காடியின் மங்கலான விளக்கொளியில், விடியற்காலத்திற்கே உரிய மென்னிருளில், சிறிது நேரத்திற்குள் கியூ வரிசை உருவாகிவிடும். முன்னால்  வந்த நான் எப்படியோ ஐந்தாவது ஆறாவது ஆகியிருப்பேன். வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என் வழக்கம் ஆயிற்றே!

அங்காடி குத்தகைதாரர் ஓர் அடாவடிப் பேர்வழியாக இருந்தார். ஒரு ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்பார். ஐந்து ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்பார். நாளை வந்து மீதியை வாங்கிக்கொள்ளுங்கள் என்பார். மறுநாள் வந்தால், உங்களை இதற்குமுன் பார்த்ததே இல்லையே என்பார். யாராவது ஒரு ஆயாவை அழைத்து, ‘ஏம்மா, இவர் நேத்து வந்தாரா?  பாத்தியா?’ என்பார். பாவம் அந்த ஆயாவுக்குப் பகலிலேயே பார்வை சற்றுக் குறைவு. இருட்டில் என்னைப் பார்த்ததாக எப்படிச் சொல்வார்? எட்டணா சில்லறைக்காக சுய மரியாதையை இழக்கமுடியாமல், ஒரு கோபப்பார்வையை அந்த ஆள்மீது வீசிவிட்டு, மூன்று பாக்கெட் பாலுடன் கிளம்பிவிடுவேன்.

சிலநாள் கழித்து எனக்கு ஆதரவாக ஒரு குரல் கேட்டது. பெயர் ஜானகியாம். வேறு எந்தப் பெயரானாலும் ஆட்சேபித்திருக்க மாட்டேன். அழகாக இருந்தாள். அழகியாகவும் இருந்தாள். ‘வெண்ணிற ஆடை ஜெயலலிதா மாதிரி இருக்கியே, இன்னுமா ஒனக்கு மாப்ள பாக்கலே?’ என்று ஓர் ஆயா அவளிடம் பேசியபோதுதான், அவளைப் பார்க்காமலேயே அவளைப் பற்றிய கனவுகள் எனக்குள் தூண்டப்பட்டன.  

தினமும் நான் நிற்கும் வரிசையில் இரண்டு ஆள்விட்டு நிற்பாளாம். அவளும் தினம் மூன்று பாக்கெட்தான் வாங்குவாளாம். அங்காடிக்காரனிடம் எதற்கு அக்கப்போர் என்று சரியான சில்லறை கொண்டுவருவாளாம். நானும் அவளைப் பின்பற்றக்கூடாதா என்று ஓர் ஆயா மூலம் அறிவுரைத்தாள். ஏற்கெனவே நானும் அதே முடிவில் இருந்ததால் சரியென்று தலையாட்டினேன்.

அவள் முகத்தைச் சரியாகப் பார்க்கும் அளவுக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் நிழலோவியமாக நின்றிருந்தாள். குரல் நிச்சயம் இனிமையாகத்தான் இருந்தது. தம்பையா ரோட்டில் சங்கீதம் கற்றுக்கொள்கிறாளா என்றெல்லாம் கேட்கும் அளவுக்கு அவளும் மாம்பலமும் எனக்கு அப்போது பழக்கமாகவில்லை.

அடை மழை பெய்தாலும், அல்லது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் நூறு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தாலும்,  அவளும் நானும் ஆவின் அங்காடிக்கு வராமல்   இருக்கமாட்டோம். ஆனால் இருவருக்கும் இடையில் இரண்டு ஆள் இடைவெளி இருந்துகொண்டே இருந்தது.  எனக்குத் தன்னம்பிக்கை குறைவா, அவளுக்கு நாணம் அதிகமா, தெரியவில்லை. 

அன்றும் அப்படித்தான். உரிய சில்லறை கொடுத்தேன். பால் கிடைத்தது. அவளும் அதே சில்லறை கொடுத்தாள். பாலைப் பெற்றுக்கொண்டாள். ஆனால் போகும்போது மெதுவாக என்னை நெருங்கி, தணிவான குரலில் ஏதோ  சொல்ல வந்தாள். முதல் நாள் கனவில் அதே போன்ற ஒரு காட்சி அரங்கேறியிருந்தது. கனவு நிஜமாகிறதோ?

அதற்குள் இருவருக்கும்  இடையில் ஓர் ஆயா ஓடிவந்தார். ‘என்னம்மா, ஜானகி, எக்ஸ்டிரா பால் வேண்டுமா? நான் தாரேன், அவர் கிட்ட ஏன் கேக்குறே?’ என்று அவளைக் கையோடு இழுத்துக்கொண்டுபோய், தன் அலுமினிய அண்டாவிற்குள் கைவிட்டார்.  (அப்போதெல்லாம் ஆவின் பால் மிகவும் கிராக்கி!)

அதன் பிறகு ஜானகியை நான் பார்க்கவில்லை. இரண்டு காரணங்கள்.

ஒன்று,  நான் ஆவின் அங்காடிக்குப் போவது நின்றுவிட்டது. யாரோ ஓர் ஆயா என் அம்மாவின் மனத்தைத் திருப்பி, என் வீட்டுக்குப் பால் சப்ளை செய்யும் குத்தகையைப் பெற்றுவிட்டார்.

இரண்டு, என்னிடம் இரு சக்கர வாகனம் இல்லை. வேலையில் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தது! வண்டியில்லாத நடைராஜா மீது வனிதையர் கவனம் செலுத்துவாரோ!

சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்குப் பால் சப்ளை செய்யும் ஆயா, முகத்தில் மிகுந்த சோகத்தை வரவழைத்துக்கொண்டு என்னிடம் கேட்டார்: “ஏம்ப்பா, அந்த ஜானகிப்பொண்ணு பாவம், உன்னைப் பாக்காம எவ்ளோ வருத்தப்பட்டா தெரியுமா? எப்பவாச்சும் என்கிட்ட கேக்கும், நீ எப்டி இருக்கேன்னு! பாவம், தாயில்லாத பொண்ணு! உனக்குத்தான் குடுத்து வைக்கலே! கல்கத்தாவுல கட்டிக்குடுத்துட்டாங்க!” என்றாள்.

சில மாதங்களில் எனக்கும் வெளியூருக்கு மாற்றலாகிவிட்டது! அவளுடைய ஞாபகார்த்தமாக ஓர் உறுதி எடுத்துக்கொண்டேன்: இனிமேல் எக்காரணத்தை முன்னிட்டும் ஆவின் அங்காடிக்குப் போய் கியூவில் நிற்பதில்லை என்று!

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 

திங்கள், ஏப்ரல் 25, 2022

மூட்டுவலிக்கு மில்லியன் டாலர்! (இன்று கிழமை ஞாயிறு-2)

 
மூட்டுவலிக்கு மில்லியன் டாலர்!

(இன்று கிழமை ஞாயிறு-2)


அமெரிக்காவில் 13ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)

நியூஜெர்சியில் எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்ததாக இருந்த குடியிருப்பின் வாசலில் ஒரு சக்கர நாற்காலியில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை ஒன்பது மணிக்கு வந்து அமர்வார். நான் வழக்கமாக நூலகத்திற்குச் செல்லும் நேரம் அது.  மூன்று மணி நேரம் கழித்து நான் திரும்பி வருவேன். அப்போதும் அவர் அங்கேயே அமர்ந்திருப்பார். உயரமான மரங்கள் அருகில் இருந்ததால் வெயிலின்  சூடு தெரியாது. 


முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது 'ஹாய்' சொல்லிக் கொள்வது அமெரிக்கர்களின் பழக்கம். ஆனால் வெளிநாட்டுக்காரர்களிடம்  அவ்வாறு நடந்து  கொள்வதில்லை. நாம் ஹாய் சொன்னாலும் அவர்கள் கவனிக்காத மாதிரி சென்று விடுவார்கள். இதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம்.


ஆனால் இந்த நண்பரோ என்னை தினமும் பார்த்துக் கொண்டிருப்பதால், அதுவும் அடுத்த குடியிருப்பில் இருந்து நான் இறங்கி வருவதையும் திரும்பிச் செல்வதையும் தெரிந்து கொண்டதால், ஒரு நாள் காலையில் நான் அவரை கடந்து செல்லும் போது என் கண்களை அவர் கண்களால் சந்தித்து ஹாய் என்றார். மலர்ச்சியோடு கைகளை ஆட்டினார்.


நான் நின்று அவருக்கு குட் மார்னிங் சொன்னேன். இருவரும் பெயர்களைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால் இருவர் மனதிலும் அது நிற்கவில்லை. "இண்டியன் நேம்ஸ் ஆர் டிஃபிகல்ட் டு புரோநௌன்ஸ்" என்றார் சிரித்துக்கொண்டே.


"தினமும் இதே நேரத்திற்கு எங்கே போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் தாமஸ். 


மெயின் ஸ்ட்ரீட்டில்  உள்ள லைப்ரரிக்குச் செல்வதைக் கூறினேன். 


"மிகவும் அழகான கட்டிடம். உள்புற கட்டமைப்பும் கவர்ச்சியாக இருக்கும். புதிய  புத்தகங்களை அவர்கள் வகைப்படுத்திக் அடுக்கி வைத்திருக்கும் அழகே தனி. தலைமை லைப்ரரியன் லூசி மிகவும் திறமையானவர்" என்றார் தாமஸ். "இப்போதும் அவர் இருக்கிறாரா?"


அந்தக் கேள்வியில் இருந்து அவர் லைப்ரரிக்குச் சென்று பல நாட்கள் ஆகிறது என்று தெரிந்தது. "லூசிதான் இப்போதும் இருக்கிறார். வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்" என்றேன்.


பிறகு அவரே  கூற ஆரம்பித்தார். அந்தக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் சொந்தக் குடியிருப்பில் வசித்து வருபவர்தான் தாமஸ். ஐக்கியா போன்ற மரப்பொருட்கள் விற்பனைசெய்யும் நிறுவனங்களுக்குத் துணைப்பொருட்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். அதிக இலாபம் இல்லாவிடினும், போதுமான வருமானம் வந்தது. இரண்டு பிள்ளைகள். அமெரிக்கப் பண்பாட்டை ஒட்டி,  அந்த இருவரும் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனியாகக் கிளம்பிப்போய்விட்டார்கள்.  அப்போதுதான் தாமஸ் தன்னைத் தனியாளாக உணரத் தொடங்கினார். ஏனென்றால் அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய இரண்டாவது மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டு இவருடைய உறவினர் ஒருவரையே திருமணம்  செய்துகொண்டுவிட்டார். 

பாதிக்கப்பட்ட மூட்டு 


மனைவி போனதால் அவருக்குப் பொருளாதார நஷ்டம் ஏதுமில்லை. ஏனென்றால் அவள் வேலை செய்து சம்பாதித்தவள் அல்ல. அதே சமயம் ஊதாரியும் அல்ல. முடிந்தவரையில் அவள் நல்ல மனைவியாகத்தான் வாழ்ந்தாள். ஆனால் உடல்ரீதியாக அவளுக்கு வேட்கை அதிகம் இருந்தது. அதற்கு தாமஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவே மணமுறிவுக்குக் காரணமானது.


இந்த மாதிரியான  விஷயங்களை மூன்றாமவரிடம் சொல்வதற்கு அவர் கூச்சப்பட்டிருக்க வேண்டாமோ? இல்லவே இல்லை. அதுதான் அமெரிக்கர்களின் குணம். உடலியல் சங்கதிகளில் அவர்கள் மனவிகாரத்தைக் காட்டுவதில்லை.


தந்தைக்கு இருந்த ஒரு நோய்க்கூறு தாமஸுக்கும் இருந்தது.  அதுதான் மூட்டு வலி! இரண்டு கால்களிலும் நடக்கும்போது விண்ணென்று தெறிக்கும். முட்டிகள்  இரண்டும் வீங்கினாற்போல் ஆகிவிடும். குனிந்து இரண்டு கிலோ எடையுள்ள பொருளைக்கூட தூக்கமுடியாது. நடந்தால் கால்கள் சற்றே வளைந்தாற்போல் பார்ப்பவர்களுக்கு  விநோதமாகப் படும்.

மூட்டு மாற்றப்பட்ட பிறகு


அவருடைய தொழிற்சாலையில் மொத்தம் ஏழுபேர்தான் தொழிலாளர்கள். அவர்களோடு இவரும் சேர்ந்து எட்டாவதாக உழைத்தால்தான் வேலை நடக்கும். மரம் சார்ந்த தொழில் என்பதால் பொருட்களைத் தூக்கிவைக்கவும் இடம் மாற்றவும் ஆரோக்கியமான உடல் தேவைப்பட்டது. இவரது கால்கள் இப்போது மூட்டுவலியால் சோர்ந்து போய்விட்டதால் வேலையில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே சில ஆண்டுகளாக ஒத்திவைத்திருந்த ‘மூட்டு மாற்று அறுவைசிகிச்சை’யை உடனடியாக மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


மனைவி குழந்தைகள் எல்லாருமே பிரிந்துவிட்ட நிலையில் மனமும் பலவீனப்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சையின்போது அவருக்குத் தெம்பூட்ட யாரும் இல்லை. ஒருவார சிகிச்சை வெற்றியடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இரண்டு மாதங்கள் இயன்முறை சிகிச்சை (பிசியோதெரப்பி) எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். 


இங்கு ஆஸ்பத்திரியில் சேரும்போது, இன்ஷுரன்ஸ் இருக்கிறதா என்று கேட்டுத்தான் உள்ளே அனுமதிப்பார்கள். (இவரிடம் இருந்தது.) ஒருவேளை, இன்சூரன்ஸ் கொடுக்கும் தொகையையும் மீறி  அதிகம் கொடுக்கவேண்டி இருந்தால், தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்தோ அல்லது, கடன் அட்டையிலிருந்தோ  அதை எடுத்துக்கொள்ளுமாறு   அனுமதிக் கடிதம்  கொடுத்தால்தான் சிகிச்சையைத் தொடங்குவார்கள். (இவரும் கொடுத்தார்.) முழுச்செலவின் விவரம் தெரிய சில மாதங்களாகும்.


அப்படித்தான் மூன்று மாதங்களுக்குப் பிறகு தன் வங்கிக்கணக்கைப்  பார்த்தவருக்கு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இன்சூரன்ஸ் கொடுத்ததற்கு மேல் எட்டு லட்சம் டாலர் அவருடைய கணக்கில் இருந்து ஆஸ்பத்திரி எடுத்துக்கொண்டிருந்தது. ஒரு லட்சம் டாலர்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் அவரால் தட்டிக்கேட்க முடியாது. ஆஸ்பத்திரி விதிகளில் அதற்கு இடமில்லை. அத்துடன் இன்சூரன்ஸ் கம்பெனிமீது வழக்குத் தொடுத்து வெற்றியடைந்தவர்கள் குறைவு. 



இரண்டு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு, கையிலிருந்து ஆன செலவு  எட்டு லட்சம் டாலர் என்பது அவரை ஏழையாக்கி விட்டது. அவருடைய ஊழியர்கள் அந்த நேரத்தில் வாடிக்கையாளர்களைச் சரிவர கவனிக்காமல் இருந்ததால் ஒரு பெரிய ஆர்டர் ரத்தாகிவிட்டது. இனி அவரோடிருந்தால் முன்னேறமுடியாது என்று அனுமானித்த ஊழியர்கள் ஒருவர்பின் ஒருவராக விலகிப்போனார்கள். மிச்சம் மீதி இருந்தவற்றை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு, தனது சக்கர நாற்காலியே துணையாக, தன்னை விடச் சிறிய தொழில்முனைவர் ஒருவரிடம் கிடைத்த சம்பளத்திற்கு ஆலோசகராகச் சேர்ந்துவிட்டார் தாமஸ். 



“இந்தியாவில் இதுபோன்ற சிகிச்சைகள் குறைந்த செலவில் கிடைப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா?” என்று கேட்டார்.


சரியான ஆளாகப் பார்த்துத்தான் கேட்டார் போங்கள்! பத்து வருடங்களுக்கு முன்பே என் இரண்டு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்துகொண்டிருந்தேன். சென்னையில் இதற்கென்றே உள்ள பிரபலமான ‘மியாட்’ மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றேன். ஒருவார ஆஸ்பத்திரி வாசம். அப்புறம் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வு. வலி இருந்தால்   அன்றுமட்டும் ஒரே ஒரு ‘டோலோ 650’ மாத்திரை. அதிக வலி இருந்தால் மட்டும் பிசியோதெரபி. வேறு மருந்துகளோ வைட்டமின்களோ தேவையில்லை. தினமும் மொத்தம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரும் அளவுக்கு, விட்டு விட்டு, தரையில் நடக்கவேண்டும். மாடிப்படிகளில் ஒரு நாளைக்கு நான்குமுறை ஏறி இறங்கவேண்டும். (ஒரு தடவைக்கு இருபது படிகளாவது.) வழக்கமான சாப்பாடு. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிவுரை. 


இன்னொரு முக்கிய அறிவுரை, எக்காரணம் கொண்டும் ‘வாக்கர்’ அல்லது கைத்தடி பயன்படுத்தக்கூடாது. அது சுயமாக நாம் இயங்குவதைத் தாமதப்படுத்திவிடும் என்றார் ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் மோகன்தாஸ். (எனது அறுவை சிகிச்சை நிபுணர் பெயர் டாக்டர் ரொசாரியோ. மங்களூர்க்காரர்.)


மூன்றாவது வாரம் நான் பழையபடி வேலைக்குத் திரும்பிவிட்டேன். இந்தப் பத்தாண்டுகளில் ஒரு சிறிய வலியோ, வேதனையோ கிடையாது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை இரண்டும் இந்த சிகிச்சையால் கிடைத்தது. என்னைப் பார்த்து என்னுடைய நண்பர்கள் நிறையப்பேர் அதே ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சையை மேற்கொண்டு நலமாக இருக்கிறார்கள்.

இந்த விவரங்களை அவரிடம் சொன்னேன். 


அவர் அசந்துபோனார். அவருடைய நைஜீரிய நண்பர் ஒருவர் அப்போதே சொன்னாராம் இந்தியாவுக்குப் போ என்று. ஆனால் அமெரிக்க மருத்துவத்தைவிட இன்னொரு நாட்டில் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்பதை அவரால் அப்போது நம்பமுடியவில்லை. ஆகவே நியூயார்க்கில் ஒரு மிகச் சிறந்த மருத்துவமனைக்கே போனார். இன்சூரன்ஸ் கம்பெனியிடமிருந்து ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் சேர்த்துக்கொண்டால் மொத்தத் செலவு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டிவிட்டதாம்! அன்றைய டாலர்-ரூபாய் பரிவர்த்தனை விகிதப்படி இது சுமார் ஏழு கோடி ரூபாய்!


எனக்கு ஆன செலவு எவ்வளவு என்று கேட்டார். ஒரு காலுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் ஐந்து லட்சம் ரூபாய் என்றேன். அதாவது எட்டாயிரம் டாலருக்கும் குறைவு!


அதிர்ச்சியோடு என்னைப் பார்த்த தாமஸ், மனதிற்குள் ஏதோ கணக்கு போட்டபடி “ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு நான் மேற்கொண்ட பிஸியோதெரபிக்கும் இந்த வீல்சேருக்கும் ஆன தொகையே அதைவிட அதிகம்!” என்றவர், “உங்கள் நாட்டில் எப்படி முடிகிறது இவ்வளவு குறைந்த செலவில்?” என்று ஆர்வத்தோடும் மரியாதையோடும் கேட்டார். 


பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்துறை நிறுவனங்களும் ஒருவர்மீது ஒருவர் போதுமான கண்காணிப்பைச் செலுத்துவதால்தான் இது சாத்தியம் என்பதைச் சொன்னேன். அதே சமயம் இந்தியர்களைப் பொறுத்தவரையில் இதுவே அதிகமான செலவாகத்தான் கருதப்படுகிறது என்பதையும், பெரிய தனியார்துறை ஆஸ்பத்திரிகள் தங்களைக் கொள்ளையடிப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள் என்பதையும் சொன்னேன். 


“உங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி” என்ற தாமஸ், காலை உணவிற்காகக் கிளம்பினார்.  நானும் ‘பை’ சொல்லிவிட்டு நூலகத்திற்குப் புறப்பட்டேன்.  


ஒன்றரை ஆண்டு கழித்து நான் மீண்டும் நியூஜெர்சி வந்தபோது, அந்தக் குடியிருப்பில் அவர் இல்லை. வீட்டை விற்றுவிட்டு வேறொரு மாநிலத்திற்குப் போய்விட்டதாகக் குடியிருப்பின் கண்காணிப்பாளர் கூறினார்.


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

உலக புத்தக தினம் : ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ ஒரு மதிப்பீடு

 
உலக புத்தக தினம்: அமெரிக்காவில் 12ஆவது நாள் (இன்று கிழமை சனி-2)

‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ ஒரு மதிப்பீடு

ஹரணி
(முனைவர் க அன்பழகன்)
தமிழ்ப் பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைகழகம்,
சிதம்பரம்.



                      மானுட மதிப்பைப் புதுப்பிக்கும் கதைகள்..                                 இராய செல்லப்பாவின் 
‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’

மானுட வாழ்வின் பல்வேறு இருத்தல்கள் விதிக்கப்பட்ட ஒன்றாகவே அழுத்தமுறுகின்றன. பிறப்பும் இறப்பும் எனும் இவையிரண்டுக்குமான இடைவெளிகளில் மானுடப் பிறப்பெடுத்துவிட்ட உயிர் அலைக்கழிக்கப்பட்ட சூழமைவுகளாலேயே கட்டமைக்கப்படுகின்றன. இவற்றின் சூட்சுமத்தை யுணர்ந்துகொள்ளும் மனங்கள் சிலவே அலைக்கழிப்பை அவைக்களித்த வரமாக்கிக்கொண்டு வாழ்ந்துவிடுகின்றன. உணராத பலவோ உயிரின் கடைசித் தருணத்தைச் சுகிக்கும் வேளையில் முடிந்துபோகின்றன, சொல்ல முடியாமல். இருப்பினும் வாழ்தல் என்பது மிகமிக முக்கியமானது, அது எப்படியான வடிவத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும் சரி, அல்லது தக்க வைத்துக்கொண்டிருந்தாலும் சரி, அதற்காகப் போராடிக் கொண்டிருந்தாலும் சரி. ஒரு படைப்பாளியின் பிறப்பில் இவையனைத்தும் நிறைக்கப்பட்டு அவ்வக்காலத்தில் பூவிலிருந்து வாசம் இழைவதுபோல வெளிப்படுகிறது. ஆகவே படைப்பாளியாகப் பிறந்துவிட்டவன் பாக்கியவான். மனிதனாக இருந்துகொண்டே அந்த மனிதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வரத்தையல்லவா அவன் வாங்கிப் பிறந்திருக்கிறான்.

கதைகள் என்பவை மனிதனிடமிருந்துதான் உருவாகின்றன. மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றன. மனிதாபிமானத்தோடுதான் அவை உயிர்பெறுகின்றன. கடைசி வரையிலும் மனிதக் கூட்டத்தின் கடைசி மனிதன் வரைக்கும் அவை உதவவும் வாழ்ந்துகொண்டேயிருக்கின்றன, அழியாமல். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கைச் சுற்றில் ஓர் இடப்பெயர்ச்சி முக்கியமான பின்னலாக அல்லது திருப்பமாக அல்லது ஒட்டுமொத்த அவனது வாழ்வின் இணைப்பாக அமைவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இதுவும் விதிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவே அழுத்தமடைகிறது. அது பல்வேறு தேவைகளை முன்னிறுத்தும், நிறைவேற்றும் கட்டாயத்தில் தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது.

இப்படித்தான் தமிழ் மண்ணில் பிறப்பெடுத்து அயல் மண்ணில் இருத்தலை ஊன்றுகிற மனிதர்களிடம் இடப்பெயர்வு அமைகிறது. என்றாலும் அவர்களின் வேர் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் அது தாயின் பண்புகளோடு வாசத்தோடு மணந்துகொண்டேயிருக்கிறது யுகங்களாய். இப்படித்தான் ஒரு வாசத்தை செல்லப்பாவின் கதைகளில் கண்டறியமுடிகிறது, என்னால்.

இது அவரின் முதல் தொகுப்பு என்று என்னால் நம்ப முடியாமல் போகிறது. கண்களும் உள்ளமும் ஒருமித்தியங்கவேண்டும். அப்போதுதான் அங்கே ஓர் உயிர்ப்பான படைப்பைப் பிரசவிக்கமுடியும் என நம்புகிறேன். தேர்ந்துவிட்ட கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இந்தச் சிறுகதைகள் எனக்குத் தருகின்றன இயல்பாகவே. தொடர்ந்த பல்லாண்டுகள் வாசிப்பின் தைரியத்தில் இப்போதெல்லாம் கதையின் கரு பற்றிய சிந்தனையை அவ்வளவாக ஏந்திக்கொள்வதில்லை. அதற்காகப் பொருண்மையின் எந்தவொரு தளத்தையும் மனம் பதிக்காமலும் தாண்டுவதில்லை. ஆகவே புதிதாக ஒரு பொருண்மையின் தளத்தைக் கண்டுபிடித்துவிடமுடியாது என்கிற அழுத்தமான இயற்கை விதியினை உள்வாங்கிக்கொண்டுதான் நான் செல்லப்பாவின் கதைகளுக்குப் பயணிக்கத் தொடங்கினேன். சுகமான பயணம். எப்போதும் சிறுகதைகள் வாசிப்பில் சுகம் காண்பவன். 

இத்தொகுப்பின் 12 கதைகளும் பல்வேறு தருணங்களில் மனிதனின் இருப்பைப் பரிசோதிக்கின்றன. அதற்குப் பல்வேறு செயற்பாடுகளைச் சோதனையாக அறிவிப்பும் செய்கின்றன. என்றாலும் ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் சோர்வற்று மனத்தைப் புடம்போடுகின்றன. ஒரு குழந்தைக்குத் தாய்மையின் மேன்மையை உணர்த்தும் கதையில் கதை சொல்லத் தொடங்கித் தொகுப்பு இயங்க ஆரம்பிக்கிறது. எங்கிருந்தாலும் இயற்கை இயற்கையாகவே இருக்கும், அதற்கான ஆளுமைப் பண்புடன் என்பதுபோலப் பிறந்த மண்ணின் பண்பாட்டுத் தெளிவுகளுடன் வெளிநாட்டு சூழமைவுகளில் கதையை நகர்த்தும் செல்லப்பா மனத்திற்குள் உயர்ந்துபோகிறார். 

கதையெழுதுவதால் என்ன பயன்கதைகள் என்ன சொலல வருகின்றனஅல்லது முயற்சிக்கின்றனஅவற்றின் சமூகத் தேவையென்னகதைகளில் என்ன விடியலைத் தருவித்துக் காட்டிவிடமுடியும்இப்படி ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்கலாம். இது எதுவும் இல்லை. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக்கொண்டதை இயல்பான போக்கில் ஒவ்வொரு கதைக்குள்ளும் பத்திரப்படுத்தி அதைத் தேவைக்கேற்ப வாசிப்பின் உள்ளத்திற்குள் விதைத்துவிடும் திறனை இக்கதைகளில் காணமுடிகிறது.

பல விழுமியங்களைக் கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. தன்னுடைய ஈடு செய்யவியலாத இழப்பைப் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உள்ளங்காட்டும் மருத்துவர்.....அன்னையின் மேன்மையை அச்சில் வார்க்கும் ரயில் பயணத்தில் பலகாரம் விற்கும் அந்த உள்ளம்......வாழ்க்கை என்பது நம்பிக்கைகளால் ஆனது எனும் உயர்மதிப்பைச் சிதைக்கும் ஓர் உள்ளத்தின் காயத்தைக் கழுவிட மாமருந்தாய் வரும் இன்னொரு உள்ளம்ஆயிரமானாலும் தாயின் இயல்பென்பது தானீன்ற உயிர்களுக்காவே...பிரதிபலனும் மெய்வருத்தமும் பாராதது என இறந்தும் வெட்டுண்ட பழத்துண்டுகளினூடாகப் புதுப்பிக்கும் தாய்.... உள்ளத்தனையது உயர்வென்ற வள்ளுவனின் வாய்மையைப் புலப்படுத்தும் சாஸ்திரியின் வாய்மையும் ஒழுக்கமும்.... ‘முடிவற்ற தேடலி’ல் வெளிப்படும் குடும்ப அமைப்பின் முறிந்துவிடாத அச்சாணி - என இப்படியாக மனித மதிப்புக்களை மதிப்புக்குறையாமல் சேகரித்து நிற்கின்ற கதைகள் அல்ல இவை. வாழ்க்கை. திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், வாழ்வின் இருப்பை மனிதாபிமானத்தோடு தக்கவைக்கும் சிறுகதைகளை செல்லப்பா நியாயமான பொறுப்புணர்ச்சியோடு, ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்.

‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ தாத்தா நமக்களிக்கும் நலந்தரும் விழுமியங்களின் அடையாளம். அவை இந்த மானுடத் தோட்டததில் எப்போதும் எவ்விதப் பூச்சியரித்தலுக்கும் ஆளாகாமல் விளைந்திருக்கும் வெள்ளரிக்காய்கள்தாம். ஆளுக்கொரு வெள்ளரிக்காய் வேண்டாம் அங்கங்கே ஒரு சிறு துண்டு.. ஒரு விள்ளல்.. ஒரு சிறு சுவைப்பு போதும் இந்த சிறுகதைகளின் பலம் அதுதான். சிலவற்றில் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விடுமோ என்கிற பதைப்பில் என்ன சொல்லவருகிறேன் என்கிற சொற்கள் நீண்டு விடுகின்றன. போகட்டும் நல்லதை சற்று நீட்டித்தால்தான் என்ன?  செல்லப்பாவின் இந்த மனிதத்தைத் தக்கவைக்கும் முயற்சி தலைமுறைகளைத் தாண்டிப்போகும் பயணத்தைத் துணிவுடன் கையெடுத்திருக்கின்றன. 
                                                               அன்புடன்
                                                                ஹரணி
  தஞ்சாவூர், டிசம்பர்  06, 2013

இந்த நூல் மின்பதிப்பாக அமேசானில் கிடைக்கும்.  'Raya Chellappa' என்று search செய்க.                 

(மேற்படி நூலுக்கு வழங்கப்பட முன்னுரை இது.) (மீள்பதிவு)