சனி, மே 30, 2020

பொன்னித் தீவு-15

 பொன்னித் தீவு-15

    -இராய செல்லப்பா

             இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

             முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(15) அகிலா அகிலா

 ‘வாட்டர் டிவைனர்’ என்று சிலபேர் இருப்பார்கள். புதிய வீடு கட்டுபவர்கள் இவர்களை அணுகினால் எந்த இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளை தோண்டினால் நல்ல நீர் கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்கள். கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு மனை முழுவதும் சுற்றிவந்து  திடீரென்று ஓரிடத்தில் குச்சியை வைப்பார்கள். அது வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். எந்த இடத்தில் ஊற்று அதிகம் இருக்குமோ அங்கு அதிகமாகச் சுழலும். இவ்வாறு ஊற்றைக் கண்டுபிடிக்கும் சக்தி அவர்களுக்கு இயற்கையில் வந்ததாகும்.

 அபிநவ்விற்கும் அதேபோன்ற இயற்கையான சக்தி இருந்தது. அதுதான், தான் எதிர்பார்க்கும் வேலையை மறுக்காமல் செய்துதருபவர்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல்.

 பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியைக் கண்டுபிடித்து அதில் தங்கள் ஊழியர்களைத் தங்கவைக்க விரும்பினான். அவன் சந்தித்த முதல் கல்லூரியே ஆர்வத்துடன் உதவ முன்வந்தது.  அதற்கு மிகவும் துணையாக இருந்தவன் ராஜா. உண்மையில் ராஜாவின் வீட்டுக்கு அருகில்தான் அந்தக் கல்லூரி இருந்தது.

 அன்று இரவே சுமார் பதினைந்து அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடம் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விளக்குகள் போடப்பட்டன. தங்கள் அறைகளை இவர்களே தூய்மைப்படுத்திக்கொண்டார்கள். கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொசுத்தொல்லை மிகுதி என்பதால் ஜன்னல்களுக்கு அவசரமாகக் கொசுவலையும் அடித்தார்கள். எல்லாம் அபிநவ்வின் சொந்தக் செலவில். கழிப்பறைகளுக்குத் தண்ணீர் வருமென்பதை உறுதிசெய்துகொண்டார்கள்.

 கம்பெனியின் மற்ற ஊழியர்கள் தத்தம் இருப்பிடத்திலேயே இருப்பதாக ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும் ‘இன்னல் படி’ -ஹார்ட்ஷிப் அலவன்ஸ்-ஆக  மாதம் ஐந்நூறு ரூபாய் கொரோனா முடியும்வரை தருவதாக அபினவ் சொன்னபோது அவர்கள் நெகிழ்ந்துதான் போனார்கள்.

 ராஜாவும் அபிநவ்வும் அன்று இரவுபோல வேறெந்த இரவிலும் அவ்வளவு நிம்மதியாகி உறங்கியிருப்பார்களா என்பது ஐயமே.

****

 விடியற்காலையில் ராஜா எழுந்திருக்கத் தயாராகும் வேளையில் கதவை யாரோ தட்டுவது கேட்டது.

 வாசலில் நின்றிருந்தவன் கணேஷ் பிராதார். கம்பெனி ஊழியன். அவன் தோற்றத்திலும் முகத்திலும் பதற்றம் தெரிந்தது.

 “ராஜா சார், நீங்க தான் ஹெல்ப் செய்யணும். என் மனைவிக்கு உடனே ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டுமாம்” என்றான்.

 அவனுடைய மனைவி மீராபாயும் கம்பெனியில் ஊழியரே. அவள் கர்ப்பமாக இருந்தது தெரியும். “என்ன, இப்பொழுதேவா வலி எடுத்துவிட்டது? இன்னும் ஒருமாதம் ஆகலாம் என்று கேள்விப்பட்டேனே!” என்று அவசரமாகக் கேட்ட ராஜா, செம்பகத்தை எழுப்பினான்.

 “சீக்கிரம் முகம் கழுவிக்கொண்டு வா. மீராபாய்க்கு வலி எடுக்கிறதாம். ஆஸ்பத்திரிக்குப்  போகவேண்டும்” என்றான். அப்படியே அவளும் தயாரானாள்.

 கொரோனா காரணத்தால் ஆட்டோக்கள் கிடைக்கவில்லை. பழக்கதோஷத்தால் கல்லூரியருகே நின்றிருந்த ஷேர்-ஆட்டோ ஒன்று உதவிக்கு வந்தது.

 ராஜாவை அந்த ஆஸ்பத்திரியில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.  ஆஸ்பத்திரியின் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கும் அவனுடைய கம்பெனிதான் ஒப்பந்ததாரராக இருந்தது.

 ஆனால் அங்கு சிகிச்சைக் கட்டணங்கள் அதிகம். மருத்துவக் கடவுளான தன்வந்திரியே நோயாளியாக வந்தாலும் முதலில் அட்வான்ஸ் தொகை இருபத்தையாயிரம் கட்டினால்தான் மருத்துவர் வந்து பார்ப்பார். அதுவரை வரவேற்பறையில் காற்றுவாங்க வேண்டியதுதான்.

 ராஜாவிடமும் இத்தகவல் கூறப்பட்டது. பிரசவ கேஸ் என்பதால் லேபர் வார்டுக்கு மீராபாய் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் ஒருமணி நேரத்திற்குள் ஐம்பதாயிரம் கட்டவேண்டும்.

 உள்ளே போய்வந்த செம்பகம், “இன்னும் அரை மணியில் பிறந்துவிடுமாம்” என்று சைகையில் சொன்னாள்.    

 ராஜாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆஸ்பத்திரியின் தலைவரிடம் பேசலாமென்றால் அவர் பத்து மணிக்குத்தான் வருவார். இந்தக் காலைப்பொழுதில் டியூட்டி டாக்டர் என்ற பெயரில் ஓர் இளம்பெண்தான் இருந்தாள். அவளோடு இவனுக்குப் பரிச்சயமில்லை.

அபிநவ்வுக்கு போன் செய்தான். அவர் எடுக்கவில்லை. அவருடைய இன்னொரு எண்ணில்  அழைத்தான். அதற்கும் பதில் இல்லை. எப்படியும் அவராகத் திரும்ப  அழைப்பார். நிச்சயம் பணம் தருவார். அதற்குள் வேறு எங்காவது புரட்டியாகவேண்டும்.

ஒருமணி நேரத்திற்குள் ஐம்பதாயிரத்திற்கு அவன் எங்குப் போவான்? வங்கிக்  கணக்கில் ஆயிரம்தான் இருக்கும். அதுவும் மினிமம் பேலன்ஸ் என்று வங்கியால் கட்டாயப்படுத்தப்பட்ட தொகை என்பதால்.          

வரவேற்பறையில் கூட்டமில்லை. பிராதார் காற்றாடிக்கு நேர்கீழாகப் பார்த்து உட்கார்ந்தான்.

இருப்புக்கொள்ளாமல் தவித்த கணவனைப் பார்த்து செம்பகம், ‘என்ன கவலை?’ என்பதுபோல் கண்களாலேயே கேட்டாள். எழுதிக்காட்டுவதற்கு ஒரு பேனாவும் சிறிய கையடக்க நோட்டும் கொண்டுவர மறந்துவிட்டிருந்தாள்.

“ஒன்றுமில்லை” என்றவன், சைக்கிளில் காப்பி கொண்டுவந்த வியாபாரியை நிறுத்தி மூன்று பேருக்கும் பேப்பர் தம்ளரில் சூடான காப்பி வாங்கினான்.

“பிராதார்! நீ இங்கேயே இரு. செம்பகமும் இங்கேயே இருப்பாள். நான் போய்ப் பணத்துக்கு ஏற்பாடுசெய்து வருகிறேன்” என்று கிளம்பினான் ராஜா. பிரதாரின் மொபைல் எண்ணைக் கேட்டுச் சேமித்துக்கொண்டான்.

அவன் கிளம்ப எத்தனித்தபோது செம்பகம்  தானும் வருவதாக அவனுடைய ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டாள். தன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போவதாக பிராதார் கவலையோடு அருகில் வந்தான்.

செம்பகம் தனது சைகை மொழியில் அவனுக்கு உறுதியளித்தாள். போய்விட்டு உடனே வந்துவிடுவோம் என்றாள்.

***

ராஜாவின் மனதில் ஹரிகோபாலின் முகம்தான் நினைவுக்கு வந்தது. பொறுப்பான பதவியில் இருப்பவர். ராஜாவின் தொழில்பக்தியில் அவருக்குப் பூரணமான திருப்தி உண்டு. அசோஸியேஷனில் செயலாளராக இருப்பதால் எப்படியும் கைவசம் ஐம்பதாயிரமாவது இருக்கும். ஓர் ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்காக என்றால் நிச்சயம் கொடுப்பார்.  அவரிடம் கைமாற்றாக வாங்கி ஆஸ்பத்திரியில் கட்டிவிட்டால் இன்று மாலைக்குள் அபிநவ்விடம் இருந்து பணம் வந்துவிடும். திருப்பிக்  கொடுத்துவிடலாம்.

 செம்பகமும் ராஜாவும் ஹரிகோபால் வீட்டை அடைந்தபோது கதவில் பூட்டு தொங்கியது!

 அதே சமயம் வக்கீல் மாமி செம்பகத்தைப் பார்த்து “என்னடி, சீக்கிரமாக வந்துவிட்டாய்?” என்று ஆச்சரியப்பட்டார்.

ராஜாவுக்கு இவரிடம் கேட்டுப்பார்க்கலாமா என்று தோன்றியது. ஆனால் செம்பகம் அவன் கையைப் பிடித்துப்  பின்னால் இழுத்தாள். எச்சில் கையால் காக்கையை மட்டுமல்ல, புறா, மைனாவையும் கூட ஓட்டாதவர் அந்த அம்மையார்.

அப்போதுதான் கடவுளே நேரில் வந்ததுபோல் அங்குத் தோன்றினாள்  அகிலா. செம்பகத்தை அவளுக்குத் தெரியும்.

“செம்பகம்! ரொம்ப நல்லதாகப் போயிற்று. உன் கணவரிடம் சொல்லி எனக்கு அவசரமாக ஓர் உதவி செய்வாயா?” என்றாள் அகிலா.

 மீராபாயைச் சேர்த்திருந்த ஆஸ்பத்திரியின் பெயரைச் சொல்லி, “என்னை அங்கு விடச் சொல்கிறாயா? என்னுடைய வண்டியில் பெட்ரோல் இல்லை. ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் நர்ஸ்கள் இல்லையாம். அங்கு வேலை செய்யும் என் தோழி உதவிக்கு அழைக்கிறாள். ப்ளீஸ்! சீக்கிரம்!” என்றாள்.

 செம்பகத்திற்கு அவளுடைய அவசரம் புரிந்தது. அவளிடம் காகிதமும் பேனாவும் வாங்கி, தான் வக்கீல் மாமி வீட்டிற்குப்  போவதாகவும், ராஜா அகிலாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகுமாறும்  எழுதிக்காட்டினாள். செம்பகத்திற்குப் பேச்சு வராது என்ற செய்தி அகிலாவுக்கு அப்போதுதான் தெரிந்தது.      

 புன்முறுவலோடு அகிலாவை ஏற்றிக்கொண்டு கிளம்பினான் ராஜா. மருத்துவக் கல்லூரி மாணவி என்பதால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளாகத்தான் இருக்கவேண்டும். இவளிடம் உதவி கேட்கலாமா? ஆனால் ஓரிருமுறை அந்தக் குடியிருப்பில் பார்த்ததைத்தவிர பரிச்சயம் இல்லையே!

 கனத்த மனத்தோடு அவளை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுப் பணம் தேடும் முயற்சியில் வேறெங்கோ புறப்பட்டான் ராஜா.

****

மீராபாய்க்கு சிசேரியன்தான் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.  

மொத்தச் செலவு எண்பதாயிரத்தைத் தாண்டும். நர்ஸ் இல்லாததால் அகிலாவே வெளியில் வந்தாள். பிராதாரின் தோற்றத்தில் இருந்தே அவன்தான் மீராபாயின் கணவனாக இருக்கலாம் என்பதை ஊகிக்க முடிந்தது. இவனிடம் அவ்வளவு பணம் இருக்குமா?

 “இன்னும் அட்வான்ஸ் ஐம்பதாயிரமே அவங்க கட்டலை” என்றாள் வரவேற்பில் இருந்த காசாளர்.

 அவனுக்காகத்தான் ராஜா பணம் தேடிக்கொண்டிருப்பது அகிலாவுக்கு எப்படித்தெரியும்?  

 ஆனால் காரியம் கைமீறிக்கொண்டிருந்தது. உடனே ஆப்பரேஷன் நடந்தாகவேண்டும். இல்லையெனில் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று டாக்டர் விமலா சொன்னார். அகிலாவுக்கும் அது புரிந்தது. கல்லூரியில் பிரசவ கேஸ்களில்  தானாகவே முன்வந்து உதவிசெய்து விஷயங்களைக் கற்றுக்கொண்டிருந்தாள் அவள்.

 ஆனால் வைட்டமின் ‘ப’ அல்லவா வேண்டியிருக்கிறது?

 ஆஸ்பத்திரியின் தலைவருக்கு அகிலாவைத் தெரியும். சில செமினார்களில் அவள் வழங்கிய பேச்சுகளும்,  கேள்வி-பதிலின்போது வெளிப்பட்ட  புத்திக்கூர்மையும் அவரைக்  கவர்ந்திருந்ததாகத் தனது பேராசிரியர் ஒருவர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது.

 உடனே தலைவரிடம் பேசினாள்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்குள் பணம் கட்டினால் போதும் என்றும், அகிலாவுக்காக மொத்தக் கட்டணத்தில் பதினைந்து சதம் தள்ளுபடி செய்வதாகவும், ஆனால் பணத்திற்கு அவள்தான் பொறுப்பு என்றும் தலைவர் கூறினார். அன்றுபோலவே எதிர்காலத்திலும் அவசர உதவிக்கு அவளை எதிர்பார்ப்பதாகவும் அந்த நம்பிக்கையை அவள் காப்பாற்றவேண்டும் என்றும் நினைவுபடுத்தினார்.

 அடுத்த அரைமணி நேரத்தில் ‘குவா, குவா’ சத்தம் கேட்டது. அகிலா ஓடிவந்து பிராதாரிடம் ‘ஆண் குழந்தை’ என்று சந்தோஷமாகக் கூறிவிட்டு உள்ளே போனாள்.

 சிறிது நேரத்தில் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு வந்தவள், வேகமாக ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேறினாள்.  

 ராஜாவுக்கு உடனே தகவல் சொன்னான் பிராதார். ஓடிவந்தான் ராஜா. ‘யார் பணம் கட்டியிருப்பார்கள்?’

 ***

“எனக்கு உடனே பணம் வேண்டும்” என்றாள் அகிலா. “பிரசவ ஆஸ்பத்திரிக்குக்  கட்டவேண்டும்.”

 பாரஸ்மல் இம்மாதிரி அவசரங்களைப் பார்த்தவர். உண்மையில் மனிதர்களின்  தேவைகளைப் புரிந்துகொண்டு தாமதமின்றிப் பண உதவி செய்வதால் மட்டுமே அதிக வட்டியையும் பொருட்படுத்தாமல் மக்கள் மார்வாடிக் கடையைத் தேடி வருகிறார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?  

 கைப்பையில் இருந்து நெக்லஸை எடுத்தாள் அகிலா.

 சந்திரன் கொண்டுவந்து கொடுத்தது. செல்வத்திற்குச் சொந்தமானது. ஆச்சியிடம் ஏமாற்றி எடுத்துவந்தது. இப்போது அவசரத்திற்கு உதவுகிறது. அப்பாவிடம் சொன்னால் அடுத்த மாதமே மீட்டுக்கொடுத்துவிடுவார். இதெல்லாம் அவருக்குச் சின்னத் தொகை.

 “ஆனால் என்னிடம் இப்போது நாற்பதாயிரம்தான் ரொக்கம் இருக்கிறது” என்றார் பாரஸ்மல். “பேங்க் பத்துமணிக்குத்தானே திறக்கும்?”

 “இருப்பதைக் கொடுங்கள்” என்று பெற்றுக்கொண்டாள். “ஆஸ்பத்திரிக்கு உடனே கட்டவேண்டும்” என்று கிளம்பினாள். 

 “ஆதார் கார்டு ஜெராக்ஸ் வேண்டும்” என்றார் பாரஸ்மல். சரியென்று தலையசைத்தாள். பிறகு, “என்னுடைய பெயரில் வேண்டாம். செல்வம் என்ற பெயரில் இருக்கட்டும். ஆதார் கார்டுடன் அவரை அனுப்பிவைக்கிறேன்” என்றாள்.

 அகிலாவின் அப்பாவை பாரஸ்மல்லுக்கு நன்றாகத் தெரியும்.

 பத்துமணி சுமாருக்குச் சந்திரன் வந்தான். “அகிலா மேடம் அனுப்பினார்கள். என் பெயர் செல்வம்” என்றான். செல்வத்தின் ஆதார்கார்டு பிரதியைக் கொடுத்தான். தான் ஒரு சமயம் தங்கியிருந்த செம்பரம்பாக்கம் முகவரியைக் கொடுத்தான். வேண்டிய இடங்களில் அவனுடைய கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தார் பாரஸ்மல். அவரைப் பொறுத்தவரையில் அகிலாதான் செல்வம். தனக்கு வேண்டியவர்களுக்கு உதவிசெய்கிறாள் போல.

 செல்வத்தின் நெக்லஸை செல்வத்தின் பெயரிலேயே அடகுவைத்ததில் தன்னுடைய குற்ற உணர்வில் இருந்து விடுபட்டதாகத் தோன்றியது சந்திரனுக்கு.

***

ராஜாவின் கால்களில் விழுந்து கும்பிட்டான் பிராதார். “உங்களால்தான் என் குழந்தை உயிரோடு வெளிவந்திருக்கிறது. நீங்கள்தான் என் தெய்வம். அதனால் குழந்தைக்கு ‘ராஜா’ என்று உங்கள் பெயரையே வைக்கப் போகிறேன்” என்றான்.

 (தொடரும்)     

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வியாழன், மே 28, 2020

பொன்னித் தீவு-14

பொன்னித் தீவு-14

    -இராய செல்லப்பா

       இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

      முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(14) ராஜா  ராஜா

 காலை நாலு மணிக்கே விழிப்பு வந்துவிடும் ராஜாவுக்கு. காரணம், காலை ஐந்தரைக்கு அவன் ஆபீசில் ஆஜராகிவிடவேண்டும். சென்னையின் மையமான பகுதிகளில் சுமார் நூறு குடியிருப்புகளில் அவன் கம்பெனிக்குக் குப்பை அகற்றும் ஒப்பந்தம் இருந்தது. காலை ஆறரை மணிக்குள் அந்தக்  குடியிருப்புகளில் இருந்து முதல்நாள் குப்பையை அகற்றியாகவேண்டும். கம்பெனிக்குச் சொந்தமான குப்பைக் கூண்டுகள் போதுமான அளவில் ஒவ்வொரு குடியிருப்பிலும் வைக்கப்பட்டிருந்தன. அதற்கான ஆட்கள் அந்தந்தப் பகுதியிலிருந்தே நியமிக்கப்பட்டிருந்ததால் தாமதமின்றி வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஆனாலும் காலை ஷிஃப்டுக்கு அதிகாரி என்ற முறையில் ராஜாவுக்கு முக்கியப் பொறுப்பு இருந்தது.  பத்து நிமிடத் தாமதம் மட்டுமே - அதுவும் மாதத்தில் ஒருநாள் மட்டுமே - அனுமதிக்கப்படும். எனவே காலை ஐந்தே முக்காலுக்குள் அப்படி வராத ஊழியர்களுக்குப் பதிலாகத் தற்காலிக ஊழியர்களை அனுப்பும் கடமை ராஜாவினுடையது.  விடிந்தும் விடியாத பொழுதில் மணித்துளிகளோடு போட்டிபோட்டுக்கொண்டு முடித்தாக வேண்டிய அப்பணியில் ராஜா என்றுமே சோடை போனதில்லை.             

 அன்றும் அப்படித்தான். காலை ஆறுமணி சுமாருக்கு அட்டெண்டன்ஸ் எடுத்தான் ராஜா. என்றும் இல்லாத அதிர்ச்சியாக அன்று சுமார் ஐம்பது குடியிருப்புகளில் அவனது ஆட்கள் வேலையைத் தொடங்கவில்லை என்று சம்பந்தப்பட்ட குடியிருப்பு நலச் சங்கங்களில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

 உடனே தன் உதவியாளரிடம் விளக்கம் கேட்டான்.

 “தலைமை அதிகாரியைத்தான் கேட்கவேண்டும். நேற்று இரவு பத்துமணியளவில் சுமார் இருபது ஊழியர்கள் கூட்டமாக வந்து அவரிடம் ஏதோ பேசியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் இது. மற்றப்படி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் அந்த இளைஞன். 

 உடனே தலைமை அதிகாரி அபிநவ்வைத் தொடர்புகொண்டான் ராஜா. இணைப்பு கிட்டவில்லை. ஆனால் சில நிமிடங்களில் இன்னொரு ஊழியரின் போன் மூலம் அவரே பேசினார்.

 “ராஜா,  திடீரென்று ஒரு சிக்கல் உண்டாகியிருக்கிறது. உன்னிடம் நேராகப் பேசவேண்டும். நீ அண்ணா நகருக்குக் கிளம்பி வா.  அதற்கு முன்னால், எந்தெந்தக் குடியிருப்புகளில் இன்று நமது சேவைகள் தடைப்படுமோ, அவர்களிடம் பேசி பொறுத்துக்கொள்ளச் சொல். மாலைக்குள் சரிசெய்துவிடுவோம் என்று உறுதி கொடுத்துவிடு” என்றார் அபினவ்.   

 ***

அண்ணா நகரின் ஒரு வளமையான பூங்காவில் ராஜாவை வரவேற்றார்  அபினவ். அவருடன் இன்னும் சில அதிகாரிகளும் இருந்தார்கள். எல்லாரும் ராஜாவின் அந்தஸ்தில் இருப்பவர்களே. எதிரில் சுமார் இருபது முப்பது ஊழியர்கள் கம்பெனியின் சீருடையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

 “ராஜா, இப்போது நாம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறோம். அதற்கு நீயோ, நானோ, இவர்களோ காரணமில்லை…” என்று இழுத்தார் அபினவ். ஐ.ஐ.ட்டி.யில் பொறியியலும் ஐ.ஐ.எம்.அகமதாபாத்தில் எம்பிஏ வும் படித்து சுமார் ஐந்தாண்டுகள் இந்துஸ்தான் லீவரில் பணியாற்றியபின் சொந்தத் தொழிலாக இதைத்தொடங்கியவர். அறிவொளி வீசும் களையான முகம். நம்பிக்கையூட்டும் உடலசைவுகள். கொஞ்சமாகப் பேசியே  எதிராளியை வசப்படுத்தும் உத்தி இயற்கையாகவே அவருக்கு இருந்தது. தன்னை சி.ஈ.ஓ. என்றோ சார் என்றோ அழைப்பதைவிட, அபினவ் என்றே அழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டதில் ஊழியர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது.

 ஊழியர்கள் சீருடையில் இருந்தது ராஜாவுக்குச் சற்றே நிம்மதியளித்தது. சுலபத்தில் தீர்த்துவிடக்கூடிய சிக்கலாகத்தான் இருக்கவேண்டும்.    இல்லையேல் சீருடையில்  ஏன் வரவேண்டும்?

 பூங்காவின் மையத்தில் இருந்த பசுந்தரையில் உட்கார்ந்தார் அபினவ்.  அவரைத் தொடர்ந்து அனைவரும் அமர்ந்தார்கள்.

 அனைவருக்கும் சூடான காப்பி வந்தது. சிலர் டீ தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள். சைக்கிளில் வந்த வியாபாரிக்கு அன்று திடீர் அதிர்ஷ்டம்.

 “ராஜா, நாடு முழுவதும் கொரோனா பரவ ஆரம்பித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். நமது ஊழியர்களில் பலர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். குடும்பத்தைப் பிரிந்து வசிப்பவர்கள். அதிலும் சில பெண் ஊழியர்கள் கர்ப்பமாகவும் இருக்கிறார்கள். ஆகவே தொழிலை விடவும் தங்களின் பாதுகாப்பையே  முக்கியமாகக் கருதவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கான வாக்குறுதியை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இந்த நிமிடமே அந்த நம்பிக்கையை ஊட்டினால்தான் இன்று தொழிலுக்குப் போவார்கள். எஞ்சியிருக்கும் ஊழியர்களும் இவர்களின் செயலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். அதனால் நாளை நமது தொழில் முழுவதுமாக முடங்கிவிடக்கூடும்”  என்று ஆங்கிலத்தில் ராஜாவிடம் கூறினார் அபினவ், முகத்தில் கவலையோடு.

 ஊழியர்கள் ராஜாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

 ராஜா எழுந்து நின்றான். “அன்புள்ள நண்பர்களே! “ என்று எப்போதும்போல் ஆரம்பித்தான். அனுபவ்வின்  பேச்சுக்களில் இருந்து அவனுக்கும் ஓரளவு பேச்சுத்திறன் வந்திருந்தது.

 “கொரோனாவின் காரணமாக நீங்கள் பயம் கொண்டிருப்பது நியாயமானதே. ஆனால் இப்படித் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தால் நமது தொழில் என்ன ஆகும்? நம்மை நம்பி நூறு குடியிருப்புகளும் ஒவ்வொன்றிலும் டன்  கணக்கில் குப்பைகளும்  நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. நாம் மனிதர்களை ஏமாற்றலாம். குப்பைகளை ஏமாற்றலாமா? நமக்குச் சோறு  போடுவதே அக்குப்பைகள் தானே!...” என்று கூறி நிறுத்தி அவர்களின் முகங்களை  ஆராய்ந்தான். கம்பெனியில் இருக்கும் ஒவ்வொரு ஊழியனுடைய பெயர், வயது, குடும்பம் உள்பட ராஜாவுக்குத் தெரியாத தகவல் இல்லை என்பதால் ராஜாவின் கண்களைச் சந்திக்க முடியாமல் அவர்களின் கண்கள் தாழ்ந்தன. கர்ப்பமாக இருந்த இரண்டு பெண் ஊழியர்கள் மட்டும் ‘உடனே ஏதாவது செய்யுங்கள்’ என்று கண்களால் கெஞ்சினார்கள்.

 ராஜாவால் இந்தச் சிக்கலை நிச்சயம் சமாளிக்க முடியும் என்று நம்பினார் அபினவ். ஆகவே அடுத்து அவன் பேசப்போவதை உன்னிப்பாகக் கவனித்தார்.

 “ஆகவே நண்பர்களே, எனக்காகத் தயவுசெய்து நாளை மாலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள்.  நானும் அபிநவ்வும் முதலில் கலெக்டரையும் பிறகு முதலமைச்சரையே கூட சந்திக்கமுடியுமா என்றும் பார்க்கிறோம். நமது கைகள் குப்பையை அள்ளினாலும் நமது உள்ளம் தூய்மையான அன்பினால் ஒன்றாகி இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்குமே யன்றித் தாழ வைக்காது. எனவே அமைதியாக இன்று உங்கள் அலுவல்களைக் கவனியுங்கள். இது என் சார்பாகவும் அபினவ் சார்பாகவும் அதே சமயம் உங்களால் பயன்பெற்றுக்கொண்டிருக்கும் குடியிருப்புகளில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சார்பாகவும் செய்யப்படும் வேண்டுகோள் ஆகும்” என்றான் ராஜா.

 பெரும்பாலானவர்கள் எழுந்து கலையத் தொடங்கினார்கள். சிலர் மட்டும் எழவேயில்லை.

 “உங்களுக்கு என்மீது நம்பிக்கை இல்லை என்று தோன்றுகிறது. அப்படித்தானே?” என்றான் ராஜா.

 விசுக்கென்று அனைவரும் எழுந்தனர். “ராஜா சார்! இது உங்களைப் பற்றிய விஷயம் அல்ல. கொரோனா எப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது. இத்தாலியிலும் ஸ்பெயினிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் விழுவதைப் பார்த்தால் எங்களுக்கு உலகத்தின்மீதே நம்பிக்கை போய்விடுகிறது. யாரும் இல்லாத அனாதைகள் நாங்கள்!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

 அபிநவ்வும் ராஜாவும் அவனைச் சமாதானப்படுத்தினார்கள். “இன்று வேலைக்குப் போங்கள். நாளை இரவுக்குள் ஒரு முடிவு கிடைத்துவிடும்” என்றான் ராஜா.

 தற்காலிகமாகச் சிக்கல் தீர்ந்தது. ஊழியர்களும் பிற அதிகாரிகளும் கலைந்து சென்றனர். அபினவ் ராஜாவைப் பாராட்டினார். இருவரும் தங்கள் தலைமை அலுவலகத்திற்குப் புறப்பட்டனர்.

 ****

அவர்கள் நிறுவனம் குப்பை அகற்றும் பணியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் கலெக்டரின் மனைவியின் மூத்த சகோதரி வசித்துவந்ததால், அவர்மூலம் உடனே கலெக்டரைச் சந்திக்க முடிந்தது ராஜாவால். 

 “இவ்வளவு அவசரம் என்?  நம் நாட்டில் கொரோனாவின் தாக்கம் இத்தாலி, ஸ்பெயின்  அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்று சுகாதாரத்துறை கருதவில்லை. ஆகவே இன்னும் ஒரு வாரம் பொறுங்கள். அதன்பிறகு யோசிக்கலாம்” என்றார் கலெக்டர்.

 புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் முதல் மாவட்டமாகத் தன் மாவட்டம் அமைந்துவிட்டால் முதல்வரின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமே என்ற அச்சம் அவருக்கு.

அபிநவ்வுடன் ஆலோசித்தான் ராஜா. “நமக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று இவர்களை இங்கேயே இருக்குமாறு வற்புறுத்தவேண்டும். அல்லது, இவர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல உதவிசெய்யவேண்டும்” என்றான்.

“முதல் வழிதான் நல்லது. ஏனென்றால், இவர்களைப் போக விட்டுவிட்டால்  மறுபடியும் எப்படி வரவழைப்பது? கொரோனா எப்படித் தாண்டவமாடும் என்று யாருக்கும் தெரியாது. போனவர்கள் வராமலே இருந்துவிட்டால்? உள்ளூர் ஆட்கள் நம் தொழிலுக்கு வரமறுக்கிறார்கள். வந்தாலும் கீழ்ப்படிதல் குறைவு!” என்றார் அபினவ். 

ராஜாவுக்குத் தலையே சுழல்வதுபோல் இருந்தது. ஒரே சமயத்தில் இவ்வளவு பேர்கள் தொழிலைவிட்டுப் போய்விட்டால், பதிலுக்கு அதே போன்ற பயிற்சிபெற்ற ஆட்களை எங்கிருந்து கொண்டுவருவது? அதிலும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும்போது அசுத்தமான தொழிலுக்கு யார் முன்வருவார்கள்?

“இல்லை அபினவ்! இவர்களை நாம் விட்டுவிடக்கூடாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் கொரோனா இரண்டு மூன்று மாதங்கள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்! அதுவரை இவர்களை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் நம் செலவில் குடியிருக்க வைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமே! குடியிருப்பு சங்கங்களில் பேசினால் அவர்களும் முடிந்தவரை உதவி செய்யக்கூடும்” என்று யோசித்தான் ராஜா.

அபினவ் ஆமோதித்தார். “ஆனால் நம்மிடம் அந்த அளவுக்கு நிதி வசதி இல்லையே! சுமார் முன்னூறு பேர்களை அவ்வளவு காலம் சாப்பாடுபோட்டு இருக்க இடம் கொடுப்பதென்றால் பல லட்சங்கள் செலவாகுமே, அதைக் கவனித்தீர்களா?” என்றார்.

ராஜா சிரித்தான். “விஷயம் அவ்வளவு பெரியதில்லை அபினவ்! நாம் பிற மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் சுமார் அறுபது பேர்களை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும். மற்றவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுக்கு  வீடு வாசல் உண்டு” என்றான் ராஜா.

“அப்படியா?” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அபினவ். “ஆமாம், அவசரத்தில் அதை மறந்தே போனேன். உண்மையில், பிற மாநிலத் தொழிலாளர்களை மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எடுக்கவேண்டாம் என்று அப்போது ஆலோசனை கொடுத்ததும் நீங்கள்தானே! உங்களுக்கு என் விசேஷமான நன்றிகள்!”

****

ராஜா வீடு திரும்பியபோது இரவு மணி பத்து.

எந்த ஊழியரும் தங்கள் மாநிலத்திற்குத் திரும்பவேண்டாம் என்றும் கொரோனா பிரச்சினை தீரும்வரையில் இங்கேயே தங்குவதற்கு கம்பெனி செலவில் -உணவு உள்பட- சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பினான்.

செம்பகம் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் அவனை வரவேற்றாள். “ஓ, இன்று வெள்ளிக்கிழமையா?” என்று அவள் கன்னத்தை மெல்லத் தடவினான் ராஜா. வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை மணத்தில் மயங்கி அவளை முத்தமழையில் நனைப்பது ராஜாவின் பழக்கம்.

 விளக்கு அணைந்தது. செம்பகம்  தானே ஒரு மாலையாய் அவனைச் சுற்றிக்கொண்டாள்.

(தொடரும்)  

 

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

திங்கள், மே 25, 2020

பொன்னித்தீவு-13


பொன்னித்தீவு-13

 -இராய செல்லப்பா
(13) சந்திரன் சந்திரன்

அகிலாவிடமிருந்து போன் வருமென்று சந்திரனுக்குத் தெரியும். உண்மையில் ஆச்சியிடமிருந்து மிஸ்டு கால்கள் இருந்தபோதே அவனுக்குப் புரிந்துவிட்டது, தன்னைத் தேடுகிறார்கள் என்று.

இது அவனாக விரும்பி மாட்டிக்கொண்ட சிக்கல் அல்ல. அவன்மேல் திணிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதிலிருந்து காயம்படாமல் வெளிவருவது முடியக்கூடிய காரியமாக அவனுக்குத் தோன்றவில்லை. தன்னுடைய எதிர்காலமே ஆபத்தில் இருப்பது புரிந்தது.

அப்படி அன்று என்னதான் நடந்தது என்று மனதிற்குள் அசைபோட்டான்.
 
மார்ச் முதல் வாரத்திலேயே பாடங்களை முடித்துவிட்டார்கள். ஏப்ரலில் வரும் செமெஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டுமானால் இப்போதிலிருந்தே படித்தாகவேண்டும். ஆனால் சில என்ஜினீயரிங் பாடங்கள் எளிதில் புரிகிற மாதிரியில்லை. கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆர்வமில்லாத நிலை. பாவம், அவர்கள் கையெழுத்துப் போடுவது ஒரு சம்பளம். கணக்கில் கிரெடிட் ஆவதோ அதில் பாதியளவுதானே!

மொட்டை மாடியில் நடந்துகொண்டே படித்தால் கடினமான பாடமும் மூளையில் நன்றாகப்  பதிந்துவிடுமென்று நண்பர்கள் சொன்னது ஒரு நம்பிக்கைக்  கீற்றாக அவன் கண்ணில் தெரிந்தது.

காலை ஆறுமணிக்கே மெயிண்ட்டனன்ஸ் ஆபீசில் இருந்து சாவியைப் பெற்றுக்கொண்டு, மொட்டை மாடியின் கதவைத் திறந்தான். தனது நோட்ஸ்களையும், சில  தடிமனான என்ஜினியரிங் புத்தகங்களையும் கையிலெடுத்துக்கொண்டு வந்திருந்தான். முதலில் ‘டெக்ஸ்ட் புக் -பிறகு நோட்ஸ்’ என்ற வரிசைப்படி நடந்துகொண்டே படிக்கலானான்.

கிழக்கில் உதித்த இளஞ்சூரியன் இன்னும் கடுமை காட்டத்  தொடங்கவில்லை. சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த கொன்றை மரங்கள் இலேசான காற்றைத் தூவிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமமின்றி மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டான் சந்திரன். நண்பர்கள் சொன்னபடியே பாடங்கள் எளிதாக மனதில் ஏறத் தொடங்கிவிட்டன. அடடா, இவ்வளவுநாள் இந்த இரகசியம் தெரியாமல் போய்விட்டதே!

ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவனுக்குப் பின்னால் ‘தொப்தொப்’பென்று  ஐந்தாறு குரங்குகள் கொன்றை மரங்களில் இருந்து குதித்தன.  ஆண்குரங்கு, பெண் குரங்கு, குட்டிக்குரங்குகள் என்று ஒரு குடும்பமே அங்கிருந்தது. சந்திரனுக்கு நடுக்கமெடுத்தது. தனியொருவனாக அந்த வானரப்படையை எப்படிச் சமாளிப்பதென்று அவனுக்கு விளங்கவில்லை.

திடீர் யுக்தியாகத் தன் கையிலிருந்த தடித்த புத்தகத்தைக் கீழே போட்டான் சந்திரன். அதனால் எழுந்த ஓசையில் அதிர்ச்சியடைந்த குரங்குகள் வேகமாகப் பின்வாங்கி ஓடின. அவர்கள் பற்றிக்கொண்ட கொன்றை மரத்தின் கிளைகள் ஆவேசமாக அசைந்தன.

அதற்குமேல் மொட்டைமாடியில் நிற்பதற்கு சந்திரனுக்குத் துணிச்சல் இருக்கவில்லை.  மொட்டை மாடியில் படிக்கச் சொன்ன நண்பர்கள், குரங்குகளைப் பற்றி சொல்லாதது ஏன் என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது. 

ஒருவேளை அவர்கள் குடியிருப்புகளை குரங்குகள்  ஆதரிப்பதில்லையோ என்னவோ!

விறுவிறுவென்று இறங்கினான். அவசரத்தில் மாடிக்கதவைத் தாழ்போட மறந்துவிட்டான்.

***
வக்கீல்  மாமிக்காக மொட்டைமாடியில் வடாம் உலர்த்த வந்தாள்  செம்பகம்.   லிஃப்டில்   நான்காம் தளத்தை அடைந்ததுமே மொட்டைமாடிக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். யாராவது ஆண்கள் இருக்கக்கூடும். தனியாகப் போவது பாதுகாப்பற்றது.

ஆகவே, வடாம் தட்டுக்களைக் கையிலிருந்து இறக்காமல், அதே தளத்தில் இருந்த ஆச்சியின் வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவைத்திறந்த ஆச்சியிடம் கண்களாலேயே விஷயத்தைச் சொன்னாள்.

“இரு செம்பகம், எனக்கும் மிளகாய் வற்றல் உலர்த்தவேண்டும். எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று ஆச்சி தானும் இரண்டு பெரிய தட்டுகளில் மிளகாயுடன் மொட்டை மாடிக்கு வந்தார்.

மாடியில் அப்போது யாரும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சந்திரன் பெயர் எழுதப்பட்ட ஒரு நோட்டு அங்கே இருந்ததால் அவன் வந்துபோயிருக்கவேண்டும் என்று நினைத்தார் ஆச்சி. அதைக் கையில்  எடுத்துக்கொண்டார்.

அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த தட்டுகளை நன்றாக வெயில் வரும் இடமாகப் பார்த்து வைத்தார்கள்.

“சரி, நீ போகலாம் செம்பகம்! நான் கதவைச் சாத்திக்கொண்டு போகிறேன். நாலு மணிக்கு வா, அதற்குள் இதெல்லாம் நன்றாக உலர்ந்துவிடும்” என்றார் ஆச்சி.

புன்னகையின் மூலம் பதில் சொல்வதுதானே வாய்பேச முடியாத செம்பகத்தின் வழக்கம்! ஆச்சியைப் பார்த்துப் புன்னகைத்தபடி கதவுப்புறமாகத் திரும்பினாள். அப்போது அவள் கண்ணில் பட்டது, சுற்றுத் தொலைவில்  சிதறிக்கிடந்த பல பொருட்கள். குரங்குகளின் வேலை. ஆச்சியிடம் காட்டினாள்.

தேங்காய்மூடிகள், மேகி நூடுல்ஸ் பேக்குகள், சில ஸ்பூன்கள், நெய் வைத்த கிண்ணங்கள்,  ஒரு கிழிந்த துணிப்பையும் அதிலிருந்து சிதறிக்கிடந்த வேர்க்கடலைகளும்  ….. என்று என்னென்னவோ தென்பட்டன. அவற்றைத்தாண்டி அட்டைப்பெட்டி ஒன்றும் கிடந்தது. அதைக் கொண்டுவந்து ஆச்சியிடம் கொடுத்தாள் செம்பகம். அது ஒரு நகைப்பெட்டி என்பதும், நகைக்கடையின் பெயர் அதன்மீது எழுதப்பட்டிருப்பதும்  அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆச்சி விஷயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “பாருடி செம்பகம், இந்தக் குரங்குகள் பண்ணும் அட்டகாசத்தை! ஊரில் இருக்கும் குப்பையை எல்லாம் இங்கே கொண்டுவந்து கொட்டிவிட்டது! நான்தான் இதையெல்லாம் க்ளீன் பண்ணவேண்டும். தலைவிதி!” என்று அலுத்துக்கொண்டார்.

வழக்கம்போல் புன்னகையுடன் செம்பகம் லிஃப்டை நோக்கி நடந்தாள். 

அந்த அட்டைப் பெட்டியை மட்டும் தூக்கியெறிந்துவிட்டு, உள்ளிருந்த நகையை -அது ஒரு நெக்லஸ்- புடவைக்குள் மறைத்துக்கொண்டு மாடிக்கதவைச்  சாத்தினார் ஆச்சி.

பிறகு சந்திரனுக்கு போன் செய்தார்.

***
“ஆச்சியம்மா, என்னை வம்பு வழக்கில் மாட்டிவிட மாட்டீர்களே?” என்று தயக்கமும் பயமுமாகக் கேட்டான் சந்திரன்.

ஆச்சியின் கையில் ஒரு நெக்லஸ் இருந்தது. “இதோ பார் சந்திரா! இந்த நகையை ஒரு குரங்கு எடுத்துவந்து மொட்டை மாடியில் போட்டது என்றால் யாராவது நம்புவார்களா?”

மாட்டார்கள் என்றுதான் சந்திரனுக்குத் தோன்றியது.

“ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் இது யாருடையது தெரியுமா?”  
          
“உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.   இதுமாதிரி ஒரு நெக்லஸை யமுனாவிடம் பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அவள்தான் நகைகள் விஷயத்தில் எப்போதுமே அலட்சியமாக இருப்பாள்!”
 
சந்திரன் துள்ளிக் குதித்தான். “இப்பவே நான் போய் இந்த நெக்லஸை யமுனா அக்காவிடம் கொடுத்துவிடுகிறேன். அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா?”

அவனை ஏளனமாகப் பார்த்தார் ஆச்சி. “முட்டாள்தனமாகப் பேசாதே! இந்த நெக்லஸ் காணாமல் போனதே அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ! அதனால் இதைக் கொண்டுபோய்க் கொடுத்தால் உன்னைத்தான் திருடன் என்று நினைத்துக்கொள்வாள். அது மட்டுமல்ல, வேறு என்னென்ன ஐட்டம்களைத் திருடினாய் என்று கேள்விவரும்!  உன்னை  போலீஸ் பிடித்துக்கொண்டுபோகும்!”
  
“ஏன்? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்றான் சந்திரன் வெகுளியாக. “நீங்கள்தானே சொன்னீர்கள்,  குரங்குதான் தூக்கிக்கொண்டுபோட்டதென்று.”

“ஆனால் குரங்கை ஜெயிலில் போட முடியாதே! ஆகவேதான் உன்னைப் பிடிப்பார்கள்” என்று சிரித்தார் ஆச்சி.

சந்திரனுக்குப் பயம்போய்,  பைத்தியம் பிடிக்கும்போல் ஆகிவிட்டது. “ஆச்சியம்மா, நீங்கள் இதை என்னவாவது செய்துகொள்ளுங்கள். நான் போகிறேன்” என்று கிளம்ப  முற்பட்டான்.

“அவ்வளவு எளிதாக உன்னைப் போக விடுவேனா?” என்றார் ஆச்சி. “நீ போய்விட்டாலும் என்றாவது ஒருநாள் யமுனா நகை காணாமல் போனதைக் கண்டுபிடிக்கும்போது உன்னைத்தான் பிடிப்பார்கள் என்பதை மறந்துவிடாதே! நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன்!” என்று கோபத்துடன் கத்தினார்.

“அப்படியானால் நான் என்னதான் செய்யவேண்டும்?” என்று விரக்தியுடன் கேட்டான் சந்திரன்.

பீரோவில் இருந்து தனது லாக்கர் சாவியை எடுத்தார் ஆச்சி. “நமது குடியிருப்பிலேயே  லாக்கர் சர்வீஸ் இருப்பது தெரியுமல்லவா? இதோ இந்த நகையை நீயே போய் எனது லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டு  சாவியைக் கொடு” என்றார். நெக்லஸை ஒரு புதிய அட்டைப்பெட்டியில் வைத்துக்கொடுத்தார்.

பிறகு லாக்கர் சர்வீஸ் மேனேஜருக்குப் போன் செய்தார். தான் நேரில் வரமுடியாததால் தன் மகனை அனுப்புவதாகவும் அவனை அனுமதிக்கும்படியும் கூறினார். அந்தக் குடியிருப்பிலுள்ளவர்களுக்கு மட்டுமேயான லாக்கர் சர்வீஸ் என்பதால் இம்மாதிரி கோரிக்கைகளை மேனேஜரால் மறுக்கமுடிவதில்லை. சரியென்றார்.

கால்மணி நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு ஆச்சியிடம் சாவியைத் திருப்பிக்கொடுத்தான் சந்திரன்.

ஆனால் நெக்லஸ் பெட்டியை அவன் உள்ளே வைக்காமல் தன்னிடமே வைத்துக்கொண்டது ஆச்சிக்குத் தெரியவா  போகிறது?

ஆனால் அகிலாவுக்குத் தெரிந்துவிட்டது. நெக்லஸை அவளிடம்தானே கொடுத்தான் சந்திரன்!

(தொடரும்)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

சனி, மே 23, 2020

பொன்னித்தீவு-12

பொன்னித்தீவு-12

 -இராய செல்லப்பா

(12) ஆச்சி ஆச்சி


சதுர அடிக்கு இரண்டு ரூபாய் வீதம் மாதாமாதம் மெயின்டனன்ஸ் சார்ஜ் வசூலிக்கும் குடியிருப்பு அது. காலை ஏழு மணி முதலே மெயின்டனன்ஸ் ஆபீஸ் என்ற பெயரில் ஒரு ஆபீஸ் இயங்கிக்கொண்டிருக்கும்.  நானூறு  சதுர அடியில் நான்கைந்து பேர் பணிபுரிந்து கொண்டு இருப்பார்கள். குடியிருப்பாளர்கள் அங்கிருந்த பெரிய ரிஜிஸ்டரில் தங்கள் குறைகளை எழுதி வைத்து விட்டுப்  போகலாம். வரிசைக் கிரமப்படி அந்தக் குறைகளை ஆள் அனுப்பிச் சரி செய்வார்கள். 

அந்த ஆபீஸில் ஆச்சிக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. காரணம் அவருடைய வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் அங்கு பணி புரிந்தார்கள். தான் செய்யும் இனிப்பு வகைகளையும், பரிசோதனை முயற்சியாகச் செய்து பார்க்கும் பிற தின்பண்டங்களையும் அவர்களுக்கு மிகுந்த அன்போடு கொடுப்பார் ஆச்சி. மறுநாள் அவர்கள் உடல்நலத்தோடு பணிக்கு வந்தார்களா என்று நேரில் வந்து தெரிந்தும் கொள்வார். அதன்மூலம் தொலைக்காட்சியில் நடிகைகள் தயாரித்துக்காட்டும் புதிய உணவுப்பண்டங்களைத் தானும் தயாரித்துப் பார்க்கும் தன்னம்பிக்கை மேலும் மேலும் அவருக்கு ஏற்பட்டது.  

முதல் நாள் இரவு ஹரிகோபால் குழுவினருடன் மொட்டை மாடிக்கு யமுனா சென்று வந்ததைக் கேள்விப்பட்ட ஆச்சி, விடிந்ததும் விடியாததுமாக மெயின்டனன்ஸ் ஆபீசுக்கு ஓடினார்.

ஆபீஸ் கதவு வழக்கம்போலவே அடையா நெடுங்கதவாகத் திறந்திருந்தது. முழுவேகத்தில் இரண்டு காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. மூன்று இளைஞர்கள் லுங்கி, பனியனோடு தரையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை விரித்து அதன்மேல் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பாமல் பூனைபோல நடந்து சென்று, கம்ப்ளெயிண்ட் ரிஜிஸ்டரைத் திறந்தார் ஆச்சி.

முதல் பக்க அட்டவணையில் எட்டாவது பொருளாகமொட்டை மாடிஇருந்தது. அந்தப் பக்கத்தைத் திருப்பினார்.

கடந்த நான்கு மாதங்களில் மொட்டை மாடிக்குப் போன ஒரே ஆள் யார் என்பதைத் தெரிந்து கொண்டார். சற்றே அதிர்ச்சியடைந்தார். "மொட்டை மாடியில் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை அகற்றிச் சுத்தப்படுத்த வேண்டும்" என்று அந்த நபர் எழுதிக் கையொப்பமிட்டு இருந்தார். அந்தப் புகார் இன்றுவரையும் தீர்க்கப்படாமல் இருந்தது. ஏனெனில் தீர்க்கப்பட்டிருந்தால் புகார் எண் சுழிக்கப்பட்டு சிவப்பு மசியால் 'குறை தீர்த்த தேதி' எழுதப்பட்டிருக்கும். 

அவசரமாக யமுனாவைச் சந்தித்தார் ஆச்சி. சந்திரனுக்கு ரீடைரக்ட் ஆகி வந்த கடிதத்தை அவன் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிந்தது. அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். கடந்த மூன்று நாட்களாகவே அவன் தன் அறைக்கு வரவில்லை. கொரோனா  கெடுபிடியில்  வேறு எங்கு போயிருப்பான்?

இந்தக் குடியிருப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் போனாலே அடுத்த மாவட்ட எல்லை வந்துவிடும். ஒருவேளை மாவட்ட எல்லையில் இவனைத் தடுத்துத்  தனிமைப்படுத்திவிட்டார்களோயாரிடம் கேட்பது?

"ஆல்பகோடாப் பழம் சாப்பிட்டாயா?" என்று சம்பிரதாயத்திற்காக யமுனாவிடம் கேட்டுவிட்டுத் தன் வீட்டுக்கு விரைந்தார் ஆச்சி.

சந்திரனை அலைபேசியில் அழைத்தார். மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அப்போது 'நீங்கள் அழைத்த நபர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற பதிவுச்செய்தி  வந்தது.

'ஒரு வேளை…?' என்று அலைபேசியில் இன்னொரு எண்ணை அழைத்தார் ஆச்சி. அந்த எண்ணும் 'பிசி'யாகவே இருந்தது.

ஆச்சியின் சந்தேகம் உறுதியானது. 

அரைமணிநேரம் கழித்து அதே இரண்டு எண்களை அழைத்தார். மறுபடியும் அதே பதில்: ‘ ….வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கிறார்களோ

மொட்டைமாடி விஷயம் தீவிரமாவதற்குள் சந்திரனைப் பார்த்துவிட வேண்டும் என்று துடித்தார் ஆச்சி. அல்லது  அகிலாவையாவது.    

*** 
அகிலா அட்ரஸ் எனக்குத் தெரியும்என்றான் ஸ்ரீவாஸ்தவா. அதே குடியிருப்பில் வாடகைக்கு இருந்துகொண்டு மருத்துவம் பயிலும் பல மாணவர்களில் ஒருவன். வங்காளி. இந்த மூன்று வருடங்களில் தமிழை  நன்றாகப் பேசப் பழகிக்கொண்டுவிட்டவன். அகிலா முதலாம் ஆண்டு மருத்துவம் படிப்பவள். மடிப்பாக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். 

ஸ்ரீவாஸ்தவாவின் காரில் டாக்டருக்கான இலச்சினை ஒட்டப்பட்டிருந்ததாலும், அவனுடைய கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் தொங்கிக்கொண்டிருந்ததாலும்  கொரோனா போலீஸ் வழியில் பல இடங்களில் இடைமறித்தாலும்  அவனது பயணம் தடைப்படவில்லை. 

ஆனால், லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்த பின்தான் தெரிந்தது, அது மூடப்பட்டு ஒருமாதம் ஆகிவிட்டதும், தங்கியிருந்தவர்கள் எல்லாரும் சொந்த ஊர்களுக்குப் போய்விட்டதும்!    

ஆமாம் ஆண்ட்டி! எங்கள் காலேஜ் மூடியே ஒரு மாதம் ஆகிவிட்டதே! எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே! சாரிஎன்றான் ஸ்ரீவாஸ்தவா. 

எப்படியாவது அவளைக் கண்டுபிடிக்கவேண்டும். போன் செய்தாலும் எடுக்கமாட்டேன் என்கிறாள்!என்றார் ஆச்சி.  “வேறு ஏதாவது ஐடியா தோன்றுகிறதா உனக்கு?”

அதற்குள் ஸ்ரீவாஸ்தவா இன்னொரு மாணவனுக்குப் போன் செய்தான். அவனிடம் ஆச்சி நம்பரைக் கொடுத்து உடனே அகிலாவைப் பேசுமாறு தகவல் அனுப்பச் சொன்னான். அவனுடைய  டீமில்தான் அகிலா ப்ராஜக்ட் செய்துகொண்டிருந்தாள்.ஆகவே கட்டாயம் போனை எடுப்பாள்என்றான் ஸ்ரீவாஸ்தவா.

அடுத்த சில நிமிடங்களில் ஆச்சியின் அலைபேசியில் வந்தாள் அகிலா. சொந்த ஊருக்குப் போக இரயிலோ பஸ்சோ இல்லாததால் தனது தூரத்து உறவினர் வீட்டில் வேளச்சேரியில் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்தால் தன்னைச் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தாள். ஸ்ரீவாஸ்தவாவும் சரி என்றான். 
*** 
வேளச்சேரியில் சாக்கடையும் சதுப்புநிலமும் கொசுக்களின் படையும் சூழ்ந்திருந்த  பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் பின்னணியில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஏழுமாடிக் குடியிருப்பின் ஐந்தாம் மாடியில் அகிலாவைப் பார்த்தார் ஆச்சி.  

ஊரெங்கும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும் வேளையில் ரிஸ்க் எடுத்துக்கொண்டு ஆச்சியம்மா தன்னைப் பார்க்க வரவேண்டிய அவசரம் 
என்னவாக இருக்கும் என்று அகிலாவுக்குப் புரியவில்லை.

நான்கு படுக்கையறை கொண்ட வீடு. அகிலாவுக்குத் தற்காலிகமாக ஒரு தனியறையைக் கொடுத்திருந்தார்கள். 

ஸ்ரீவாஸ்தவாவை ஹாலில் உட்காரவைத்துவிட்டு ஆச்சியுடன் தன்  அறைக்குச் சென்றாள் அகிலா.

ஆச்சி அவளுடைய காதருகில் நெருங்கி மெல்லிய குரலில் ஆனால் திடமாகப் பேசினார்:அகிலா, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா? எத்தனை முறை நான் உன்னை எச்சரித்திருக்கிறேன்?”

ஒருவாறு புரிந்தது அகிலாவுக்கு. சந்திரன் விஷயமாகத்தான் ஆச்சி வந்திருக்கிறார்.  

ஆச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டு புன்னகைத்தாள் அகிலா.அம்மா, நான் உங்களை மீறி நடப்பேனா? உங்களை என் அம்மாவைப் போலவே மதிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.

இல்லை. இல்லை. எனக்குத் தெரியாமல் என்னென்னவோ நடந்திருக்கிறது. இப்போது அவன் எங்கிருக்கிறான்? மூன்று நாட்களாக அவன் அறைக்கே  வரவில்லை. போனையும் எடுக்க மறுக்கிறான்.

சந்திரனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா! அவன் பத்திரமாகத்தான் இருப்பான். அவனுக்கும் ராஜா என்பவருக்கும் ஏதோ பிரச்சினையாம். போலீஸ்வரை போயிருக்கிறதாம். அதனால்தான் அவன் போன் நம்பரைக்கூட மாற்றியிருக்கிறான். சீக்கிரம் அவனை உங்களுடன் பேச வைக்கிறேன்என்றாள்  அகிலா.

சீக்கிரம் அவன் பேசாவிட்டால் மொட்டைமாடிக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ள  பிரச்சினையும் போலீசுக்குப் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டார் ஆச்சி.  

அகிலா ஆச்சியைக் கட்டிக்கொண்டு விடைகொடுத்தாள்.கவலை வேண்டாம் அம்மா, எல்லாம் நன்றாகவே முடியும்என்றாள்.   

பிறகு இருவருக்கும் லெமன் ஜூஸ் கொடுத்தாள். தன்  சீனியரான ஸ்ரீவாஸ்தவாவுக்கு நன்றி சொன்னாள். அவனுடைய பெற்றோர்களைப்  பற்றியும், தங்கள் கல்லூரியைப் பற்றியும், முடிவில் கொரானாவைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினாள்.   

சந்திரனிடம்  உடனே பேசு. நாளை வரைதான்  பொறுத்துக்கொள்வேன் என்று சொல்என்று எழுந்தார் ஆச்சி. 

அகிலா, உனக்கு மீண்டும் சொல்கிறேன். நீ அந்தஸ்துள்ள பெண். உன் அப்பா பெரிய வியாபாரி. சந்திரன் குடும்பமோ ரொம்ப சாதாரணமானது. அத்துடன் நீ மெடிக்கல் படிக்கிறாய். அவனோ எதற்கும் பயனில்லாத ஒரு எஞ்சினீரிங்கில் இருக்கிறான். உங்கள் இரண்டு பேருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. புத்திசாலியாக இரு. அவ்வளவுதான் சொல்லமுடியும்.” 

அகிலாவின் முகம் சற்றே இருண்டது. 

(தொடரும்)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வியாழன், மே 21, 2020

பொன்னித் தீவு-11

பொன்னித் தீவு-11

   -இராய  செல்லப்பா
(11) பரமசிவம் பரமசிவம்

“இது உங்கள் மகள் வீடா? அப்படியானால் யமுனாதான் உங்கள் மகளா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

“ஆமாம், என் மருமகன் செல்வம் ஒரு ஐ.ட்டி. கம்பெனியில் வேலைசெய்கிறார். அது சரி, யமுனாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று பரமசிவமும் அதே ஆச்சரியத்துடன் கேட்டார்.

அப்போது அந்தக் குடியிருப்பின் செயலாளர் ஹரிகோபால், “யமுனா இருக்கிறார்களா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார்.  இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், “வணக்கம் மிஸ்டர் கண்ணன்! எங்கே இவ்வளவு தூரம்?” என்றார்.
 
கண்ணனை முந்திக்கொண்டு பரமசிவம் பதில் சொன்னார்: “சார் எங்க ஊர்தான்! ரொம்ப நல்ல மனுஷர்! தராதரம் தெரிந்தவர்! நாலு பேருக்கு நல்லது செய்வதென்றால் இவருக்கு கற்கண்டு சாப்பிடுவதுபோல!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஹரிகோபால் சார்!  நம்ப கடமையை நாம செய்யறோம், அவ்வளவுதான்!” என்றார் கண்ணன்  சற்றே குழைந்த குரலில்.

“இன்று அசோசியேஷனில்  அவசரமான மீட்டிங் இருக்கிறது. பக்கத்து பிளாக்கில்தான் நடக்கிறது. வழக்கமாக யமுனா மேடம்தான் இந்த பிளாக் பிரதிநிதியாக வந்து கலந்துகொள்வார். இன்னும் அரைமணியில் வந்தால் போதும். அவரிடம் சொல்கிறீர்களா? நான் மற்றவர்களையும் ரிமைண்ட் செய்யவேண்டும்” என்று பரமசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஹரிகோபால்.

ஹாலில் பேச்சரவம் கேட்டு யமுனா மெதுவாக எழுந்துவந்தாள். அவளைப் பார்த்து இன்ஸ்பெக்டர் “வணக்கம் மேடம்! எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது, நீங்கள் பரமசிவம் சாரின் மகள் என்பது! வெரி சாரி” என்றார்.

பிறகு, ராஜாவை வெளியே நிற்கும்படி கூறிவிட்டு, இன்னொரு அறைக்குள் சென்று பரமசிவத்துடன் பேசினார் கண்ணன். “சார், நெக்லஸோ என்னவோ காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அதுதான் வருத்தமாக இருக்கிறது. அதைப் பற்றிப் பேசலாமா?” என்றார்.

பரமசிவம் திடுக்கிட்டார்.

யமுனா போலீசுக்குப் போன விஷயம் பரமசிவத்துக்குத் தெரியாது. அதே போல, பரமசிவம் மார்வாடியிடம் சென்று நெக்லஸைப் பற்றி விசாரித்து, விஷயம் சேகரித்தது இன்ஸ்பெக்டருக்குத் தெரியாது.

ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு, “அந்த விஷயம் சரியாகிவிட்டது. நெக்லஸ் கிடைத்துவிட்டது! இப்போது யமுனா கர்ப்பமாயிருக்கிறாள் என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. ஆகவே மற்ற விஷயங்களை விட்டுவிடலாம்!” என்றார் பரமசிவம் பொத்தாம்பொதுவாக.

இன்ஸ்பெக்டர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.  யமுனாவை உற்று நோக்கினார்.

தகப்பனாரின் பேச்சு அவளுக்கும் திகைப்பாகவே இருந்தது. நெக்லஸ் கிடைத்துவிட்டதா? எப்படி? அது செம்பகத்தின்  கழுத்தில் அல்லவா இருக்கிறது? ஆனாலும் தகப்பனார் சொன்னதில் ஏதாவது காரணம் இருக்கும் என்று புரிந்தவளாக, “ஆமாம் சார்! இந்த விஷயத்தை நீங்கள் க்ளோஸ் பண்ணிவிடுங்கள். சரி, என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா, இல்லை ஜுஸா?” என்றாள்.

காப்பி வந்தது. பரமசிவம் இன்ஸ்பெக்டரிடம் தணிந்த குரலில் சில நிமிடங்கள் ஏதோ பேசினார். “அப்படியானால் சரி! விஷயம் உங்களுக்குத் திருப்தியாக முடிந்துவிட்டால் போதும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ராஜாவை இனிமேல் விசாரிக்க வேண்டாம் அல்லவா? மீண்டும் அவன்மீது புகார் வராதல்லவா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இல்லை இல்லை. அவனை விட்டு விடுங்கள். பாவம் அவனுடைய மனைவிக்குப் பேசவராது என்று எனக்கே இப்போதுதான் தெரிந்தது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறான். அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று இன்ஸ்பெக்டரை வழியனுப்பிவைத்தார் பரமசிவம். 
 
கிளம்புமுன்பு பரமசிவத்தின் கைகளைப் பிடித்து நன்றி சொன்னான், ராஜா.

அவர்கள் போனதும் யமுனா, அசோசியேஷனின்  அவசரக் கூட்டத்துக்குப்  புறப்பட்டாள்.  செல்வம் ஒரே ஒரு நிமிடம் வெளியேவந்தவன், “இன்னும் அரைமணிநேரம் என்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று மீண்டும் உள்ளேபோய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டான்.

பார்வதி கணவனிடம் வந்தாள். பேசவில்லை. ஆனால் அவள் பார்வையில் ‘நெக்லஸ் கிடைத்துவிட்டதாக ஏன் பொய் சொன்னீர்கள்’  என்ற கேள்வி இருந்ததைப் பரமசிவம்  புரிந்துகொண்டார்.  ‘உஷ்!’ என்று வாய்மேல் விரலை வைத்து அவளை அடக்கினார்.

செல்வத்தின்மீது போலீசின் சந்தேகக்குறி விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்பதை அவளுக்குப் பின்னால் விளக்கினால் போயிற்று. குடும்ப கௌரவம்தானே முக்கியம்! 

***
அன்றைய அவசரக் கூட்டத்தின் தேவையை ஹரிகோபால் உறுப்பினர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

“கொஞ்ச காலமாகவே நமது குடியிருப்பில் குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும். நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும்,  அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் புதிய ஹாஸ்டல் கட்டுவதற்காகவும் பல மரங்களை வெட்டிப்போட்டுவிட்டார்கள். அதனால் குரங்குகளின் வாழ்வாதாரம் சிதைந்துவிட்டதால், வேறு வழியின்றி அவை உணவுக்காக நமது குடியிருப்பிற்குள் குடும்பம் குடும்பமாகப்  படையெடுத்து வருகின்றன. இதை எப்படிச் சமாளிப்பது என்று ஆலோசிக்கத்தான் நாம் கூடியிருக்கிறோம்!” என்றார்.

“முன்பு தெருநாய்களின் பிரச்சினை இருந்தது. ப்ளூகிராஸில் சொன்னோம். பார்த்துக்கொண்டார்கள். பாம்புகள் பிரச்சினை இருந்தது. சுற்றுப்புறத்தைத் தூய்மைசெய்தவுடன் அது முடிந்துவிட்டது. ஆனால் குரங்குகளை என்னசெய்வது?” என்றார் ஒரு முதியவர்.

“என்னால் கிச்சன் சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. பெரிய குரங்கு வெளியே நின்றுகொண்டு, குட்டிக்குரங்கை உள்ளே அனுப்பிப்  பழங்கள் மற்றும் பொருள்களைப் பறித்துக்கொண்டு போகிறது” என்றார் ஒரு பெண்மணி.

“ஹாலில் புகுந்து என்னுடைய பர்ஸை ஒருநாள் தூக்கிக்கொண்டு போய்விட்டது. நல்லவேளை, கொஞ்ச தூரம் போய் வீசியெறிந்துவிட்டது. பிடித்துக்கொண்டேன்!” என்றாள் ஓர் இளம்பெண்.
 
வழக்கமாக நான்காம் மாடியின் மேல் இருக்கும் மொட்டைமாடியின் கதவு பூட்டப்பட்டே இருக்கும். சாவி அசோஸியேஷனிடம்தான் இருக்கும். யாருக்காவது அப்பளம், வடாம் அல்லது மிளகாய் வற்றல், ஊறுகாய் போன்றவை உலர்த்த வேண்டியிருந்தால் காலையில் சாவியைக் கேட்டு வாங்கி, மாலையில் பூட்டியபின் திருப்பித்தந்துவிட வேண்டும்.

“சமீப காலமாக யாரும் மொட்டை மாடியைப் பயன்படுத்தவில்லைபோல் தெரிகிறது. இன்று மாலை நான் தற்செயலாகப் போய்ப் பார்த்தபோது ஏராளமான பொருள்கள் இறைந்து கிடந்தன. மருந்து பாட்டில்களும் அட்டைப்பெட்டிகளும் பிஸ்கட் போன்றவையும் இருப்பதைப் பார்த்தால் குரங்குகள்தான் அவற்றைக் கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே, சிரமம் பார்க்காமல் எல்லாரும் ஒருமுறை என்னுடன் இப்போதே மொட்டைமாடிக்கு வந்து பார்த்துவிடுங்கள். முக்கியமான பொருள்கள் கிடைத்தாலும் கிடைக்கும்!” என்றார்  ஹரிகோபால்.   

அவர் சொன்னது உண்மைதான். ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை அணிந்துகொள்வதற்காக டைனிங் டேபிள் மீது வைத்ததாக யமுனா கருதிக்கொண்டிருந்த நெக்லஸ் அட்டைப்பெட்டி கொஞ்சம் சிதைந்த நிலையில் அங்கே இருந்தது!

ஆர்வத்துடன் அதை எடுத்தாள் யமுனா.

அட்டைப்பெட்டி மட்டும்தான் இருந்தது. உள்ளே நகையைக் காணோம்!

(தொடரும்) 

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செவ்வாய், மே 19, 2020

பொன்னித்தீவு -10


பொன்னித்தீவு -10
  
    -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(10) ஆச்சி ஆச்சி 

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியதும், ஆதார் கார்டின் எண்களை ஒப்பிட்டுப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமசிவம், செல்வத்தை அழைக்கும்படி யமுனாவிடம் சொன்னார்.

அவன் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ செய்துகொண்டிருந்தான். குறிப்பாக, அந்த நிமிடம்தான் லேப்டாப் மூலம் ஒரு வெளிநாட்டு கான்ஃபரன்ஸ் காலில் இணைந்திருந்தான். ஆகவே எழுந்து கதவைத் திறக்கமுடியவில்லை.

யமுனா மிக லேசாகக் கதவைத் தட்டினாள். அதிகம் தட்டினால் அவனுடைய வேலை தடைப்படுமோ என்று பயந்தாள். ஆனால் அடுத்த ஒருமணி நேரம் அவன் திறக்கவேயில்லை. பிறகு அவனாகவே வெளிவந்தான்.

அதுவரை யமுனா பொறுமையிழந்தவளாகக் கதவருகிலேயே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தாள். பரமசிவமோ இன்னொரு சூடான காப்பியைக் குடித்துவிட்டுத் தயாராக இருந்தார், அவனை  எதிர்கொள்வதற்கு.  

“சாரி யமுனா! கான்ஃபரன்ஸ் காலில் இருந்தேன். ஒரு நல்ல செய்தி தெரியுமா? எனக்கு புரொமோஷன் கொடுத்திருக்கிறார்கள்” என்றான்.

பரமசிவம் மகிழ்ச்சியோடு அவனருகில் வந்தார். “அப்படித்தான் நடக்கும். குழந்தைச் செல்வம் என்பது எப்போதும் தனியாக வராது. கூடவே பெற்றோர்களுக்குச் சீரும் சிறப்பையும் கொண்டுவரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்” என்று யமுனாவைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.

செல்வம் அவனுடைய கம்பெனியின் அம்பத்தூர் கிளைக்கு மேலாளராகப்  போகவேண்டுமாம். கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சாதாரணமான பின் போய் ‘சார்ஜ்’ எடுக்கவேண்டும்.  பதவி உயர்வு என்பதால் சில ஆயிரங்கள் சம்பள உயர்வும் கிடைக்கும். கார் அலவன்ஸ் என்று ஆறாயிரமும் உண்டாம். சில வியாபார நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு நாள் விடுமுறையாகத் தெற்காசிய நாடுகளுக்கு மனைவியுடன் சென்றுவரும் சலுகையும் கிட்டுமாம்.  செல்வம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்துகொண்டிருந்தான்.

இந்த நேரம் பார்த்து நெக்லஸ் விஷயம் பேசுவதா என்று யோசித்தார் பரமசிவம். சரி, மாலையில் பேசலாம் என்று ஒத்திப்போட்டார்.

“பதவி உயர்வு என்றால் சுகமான சுமை என்று உன் தாத்தா சொல்வார். முதலில் சுமக்கத் தயாராகவேண்டும். அதுவே பழகிப்போய் சுகமாக முடியும். ஆனால் எல்லாரிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருங்கிய நண்பர்களே ஆனாலும் ஆராயாமல் நம்பிவிடக் கூடாது. அதே சமயம் கண்மூடித்தனமாக மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவும் கூடாது. ஏனென்றால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள்  நம்மை ஆபத்தில் சிக்கவைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று தன் அனுபவ அறிவைச் செல்வத்துடன் பரிமாறிக்கொண்டார்.

செல்வம் அவரை நன்றியுடன் பார்த்தான். யமுனா அதற்குள் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்தவள், கையில் இரண்டு தம்ளர்களில் சேமியா பாயசத்துடன் வந்தாள். “இது புரொமோஷன் பாயசம் -அட்வான்ஸாக!” என்றாள்.

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆச்சியம்மாவுக்கு எப்படியாவது மூக்கில் வேர்த்துவிடும். இலேசாகத் திறந்திருந்த வாசற்கதவின்மேல் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளேவந்தார். அவர் கையில் ஒரு கடித உறை இருந்தது. இருவரும் பாயசம் குடிப்பதைக்கண்டு வியப்போடு பார்த்தார். யமுனா அவருக்கும் ஒரு தம்ளரில்  கொடுத்தாள்.

“மாப்பிள்ளைக்கு புரொமோஷன் வரப்போகிறது!” என்றார் பரமசிவம் புன்சிரிப்புடன்.

“வாழ்த்துக்கள்” என்று செல்வத்தைக் கைகுலுக்கப் போன ஆச்சி, கொரோனாவை நினைத்துப் பின்வாங்கினார்.

அதற்குள் செல்வத்திற்கு மீண்டும் ‘கால்’ வரவே, உள்ளே நுழைந்து கதவைச்  சாத்திக்கொண்டான்.

அங்கிருந்த நாற்காலியில் சுதந்திரமாக அமர்ந்து கொண்டார் ஆச்சி. “யமுனா வா, உட்காரும்மா” என்று கனிவுடன் அவளைத் தன் அருகில் இருத்திக்கொண்டார். “உங்க அம்மா செங்கல்பட்டில் என்ன செய்கிறார்? இப்படிப்பட்ட சமயத்தில் பொண்ணைத் தனியாக விடலாமா? பார்த்துப்  பார்த்துச் செய்யவேண்டாமா? ஆசைப்பட்டதைச் சமைத்துப் போடவேண்டாமா? பாவம், உனக்கு மாமியாரும் இல்லையே ….” என்றார்.

“நீங்கள் சொல்வது நியாயம்தான். இன்னும் சில வாரங்களுக்குப் பார்வதி இங்கேயே இருந்து பார்த்துக்கொள்வாள்” என்றார் பரமசிவம்.

“அதுதான் நல்லது” என்ற ஆச்சி, “யமுனா, எனக்கொரு உதவி செய்கிறாயா? நான் 72 பிளாக்கில் ஒரு துக்கம் விசாரிக்கப் போகவேண்டும். ரொம்ப வேண்டியவர்கள். திரும்புவதற்கு இராத்திரி ஆகிவிடும். அதனால் இந்த லெட்டரை சந்திரன் வந்து கேட்டால் கொடுத்துவிடுகிறாயா?” என்று கடித உறையை அவளிடம் கொடுத்தார். “அவனுடைய பழைய முகவரிக்கு வந்ததை யாரோ ரீ-டைரக்ட் செய்திருக்கிறார்கள்!”

அதை வாங்கிக்கொண்ட பரமசிவம், “யார், அந்த செகண்ட் இயர்  எஞ்சினீரிங் பையனா? தெரியுமே! வந்தால் கொடுத்துவிடுகிறேன்” என்றார். 

ஆச்சி கிளம்பியவுடன் ஏனோ அதன் மேலிருந்த முகவரியைப் பார்க்கவேண்டும்போல் தோன்றியது. செம்பரம்பாக்கம் முகவரி. அதைச் சிவப்பு மசியால் அடித்துவிட்டு, இந்த முகவரியை எழுதியிருந்தார்கள்.  

துணுக்குற்ற பரமசிவம், பாரஸ்மல் இடமிருந்து எழுதிக்கொண்டுவந்த முகவரியை எடுத்துப் பார்த்தார். அதே முகவரிதான்! வீட்டு எண்ணும் அதே, தெருப்பெயரும் அதே, பின்கோடும் அதே!  

அப்படியானால்…நெக்லஸை பாரஸ்மல் கடையில் அடகுவைத்தவன் சந்திரனா?  வேண்டுமென்றே பெயரை மட்டும் மாற்றிக் கொடுத்திருக்கிறானா? அவனுக்கு எப்படி நெக்லஸ் கிடைத்தது?

ஒருவேளை செல்வமே இவனிடம் கொடுத்து அடகுவைக்கச் சொல்லியிருப்பானோ? அந்த அளவுக்குச் செல்வம் துணிய மாட்டான் என்பதுடன், யமுனாவுக்குத் தெரியாமல் அவனுக்கு எந்தப் பெரிய செலவும் ஏற்பட்டிருக்கமுடியாது என்றும் பரமசிவத்துக்குப் புரிந்தது.

அப்படியானால், ஒரே வழி, சந்திரனே இந்த நகையைத் திருடியிருக்கவேண்டும்.

பரமசிவத்திற்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. சந்திரனை ஓரிருமுறை பார்த்திருக்கிறார். பெற்றோர்கள் கிராமத்தில் இருப்பதாகவும், இவனும் சில நண்பர்களும் ஓர் அறை எடுத்துக்கொண்டு இதே குடியிருப்பில் இன்னொரு பிளாக்கில் இருப்பதாகவும் கேள்விப்பட்டதுண்டு.

மாலை ஆறுமணி ஆயிற்று. அதுவரை சந்திரன் வரவில்லை. பரமசிவத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. அந்தக் கடிதத்தை எடுத்துச் சட்டை பாக்கெட்டில் மடித்துவைத்துக்கொண்டு அவனுடைய அறையை நோக்கி நடந்தார்.

***
பரமசிவம் அந்த அறையைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவில்லை. நான்காம் மாடியில் இரண்டோ மூன்றோ அல்லது நான்கோ மாணவர்கள் வாடகைக்குத் தங்கி இருப்பதாகவும், இரவில் அவர்கள் அடிக்கும் கொட்டத்திற்கு அளவில்லை என்றும், பலமுறை எச்சரித்தும் பயனில்லை என்றும் அவர்களின் கல்லூரிக்கே புகார் எழுதியிருப்பதாகவும் ஒரு பெரியவர் சொன்னார்.

சந்திரன் மட்டுமே எஞ்சினீரிங் மாணவன் என்றும், மற்றவர்கள் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் என்றும் தெரிந்தது. இரவு டியூட்டி முடிந்து வரும்பொழுது சில மாணவிகளையும் அவர்கள் அழைத்துக்கொண்டுவருவதாக இன்னொரு பெண்மணி கூறினார். அவர்கள் சிலமணி நேரம் இருந்துவிட்டுப் போய்விடுவார்களாம்.

பரமசிவம் திடுக்கிட்டார். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைப் பற்றியே அவர்களின் கவனம் இருந்ததால் சந்திரனைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. 

கொரோனா ஊரடங்கின் காரணமாக மருத்துவக் கல்லூரி மூடப்பட்டுவிட்டதால், மாணவர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்களாம். சந்திரன் மட்டும்தான் தற்போது இருக்கிறானாம்.

அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்திரன் எப்போதுவருவான் என்று யாரிடம் கேட்பது?  எனவே ஒரு காகிதத்துண்டில் ‘சந்திரன், ப்ளீஸ் காண்டாக்ட் மீ’ என்று தன் அலைபேசி எண்ணை எழுதித் தாழ்ப்பாளில் செருகிவைத்துவிட்டுக் கிளம்பினார், பரமசிவம்.

அவர் வீடு திரும்பியபோது, இன்ஸ்பெக்டர்  கண்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து ராஜாவும் இறங்கினான்.

பரமசிவத்தைக் கண்டதும், ஆச்சரியத்துடன், “குட் ஈவினிங் பரமசிவம் சார்! என்ன இது திடீர் விசிட்?” என்றார் கண்ணன்.

“அதை நானல்லவா கேட்கவேண்டும்? இதுதான் என் மகள் வீடு! உள்ளே வாருங்கள்” என்று அழைத்துப்போனார் பரமசிவம்.

செல்வம் இன்னும் ‘காலில்’ இருந்தான். அறைக்கதவு திறக்கப்படவில்லை. யமுனா சதியோடு உறங்கிக்கொண்டிருந்தாள்.

முள்மேல் நிற்பதுபோல் அமைதியற்ற மனநிலையில் ராஜா இருந்ததை  அவன் முகம் தெளிவாகக் காட்டியது.   

(தொடரும்) 


இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்