(இன்று கிழமை சனி -5)
அமெரிக்காவில் 33ஆவது நாள்
சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். ( 9 ஜூன் 1964 - 11 ஜனவரி 1966)
மே 27, 1964இல் ஜவகர்லால் நேரு என்னும் இமயம் சாய்ந்த பொழுது, அவரைப் போன்ற ஆளுமை கொண்ட இன்னொரு தலைவர் அரசியல்வெளியில் தெரியவராத நிலையில், ‘இனி இந்தியா என்ன ஆகுமோ’ என்று நாடும் உலகமும் திகைத்துநின்றபோது, காமராஜ் என்னும் சுயநலமற்ற காங்கிரஸ் தலைவரால் அடையாளம் காணப்பட்டவர் லால் பகதூர்.
ஜவஹர்லால் நேருவைப் போலவே லால்பகதூர் சுதந்திரப் போராட்டத்திற்காகப் பல முறை சிறை சென்றவர் தான். ஆனால் இருவருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. இங்கிலாந்தில் ஜவஹர்லால் நேரு இளம்வயதில் படித்துக்கொண்டிருந்த பொழுது அவர் தினந்தினம் அணியும் ஆடம்பர உடைகளையும் வந்து இறங்கும் கார்களையும் பார்த்த இங்கிலாந்து மகாராணியின் வாரிசு ஒருவர், தனக்கும் அதே போன்ற ஆடம்பரங்கள் வேண்டும் என்று கேட்ட பொழுது, “ நான் ஜவஹர்லால் நேருவின் தந்தையைப் போல ஒரு பணக்காரி இல்லையே” என்றாராம். அந்த அளவுக்குத் தன் வக்கீல் தொழில் மூலம் பெரும் பொருள் ஈட்டிய குடும்பத்தின் வாரிசு ஜவகர்லால். ஆனால் பிறப்பிலேயே ஏழ்மையான குடும்பம் லால்பகதூர் உடையது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியால் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காகப் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அரசியலுக்கு வந்தவர் லால்பகதூர். லாலா லஜபதி ராயின் மக்கள் சேவகர் இயக்கத்தில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக முசாபர்பூரில் அவர் ஆற்றிய தொண்டு பெரிதும் பாராட்டப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக (1951-56) பணியாற்றினார்.
ஜவஹர்லால் நேரு பதவியில் இருக்கும்போதே சீனப் படைகள் இந்தியாவின் எல்லைப் பகுதியில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்து இருந்தன. அந்தப் போரில் இந்தியா அனேகமாக தோல்வியடைந்ததாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் நேரு இறந்த பிறகு பாகிஸ்தான் தனது நீண்டகால விரோதத்தைக் காட்டும் பொருட்டு நம்முடன் போரில் இறங்கியது. இதில் இந்தியாவை வழிநடத்தியவர் லால்பகதூர். அப்போது அவர் வைத்த கோஷம் தான் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்பது. அப்போது துண்டு படாது இருந்த சோவியத் ரஷ்யா நடுவராக இருந்து இந்தியா பாகிஸ்தான் இடையே தாஷ்கண்ட் நகரில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாள் ஜனவரி10, 1966. ஆனால் அதற்கு அடுத்த நாளே அதே நகரில் லால்பகதூர் மாரடைப்பினால் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
நாடும் சரி, லால்பகதூரின் குடும்பத்தினரும் சரி, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவே கருதினார்கள். இதுபற்றி இரண்டு அரசாங்கங்களின் அளவிலும் விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் முடிவு எதுவும் வெளியிடப்படவில்லை. காரணம் உலக அரங்கில் நமக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்த வல்லரசு சோவியத் நாடு மட்டுமே என்பதால், அந்த நாட்டின்மீது குற்றத்தைச் சுட்டிக்காட்டும் விரலை எழுப்ப இந்திய அரசு முன்வரவில்லை.
அதன் பிறகு பிரதம மந்திரியாக ஆன இந்திரா காந்தி அவர்களுக்கு இது பற்றிய உண்மைகள் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் மக்கள் மனதில் இருந்து லால்பகதூர் மறக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காமராஜரும் மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தன்னைப் பிரதமர் ஆக்காமல், தன்னைப் போலவே நேருவிடம் அமைச்சராக இருந்த இன்னொருவருக்கு (லால்பகதூருக்கு) மகுடம் சூட்டியதை தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே அவர் பார்த்தார். காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, ‘இந்திரா காங்கிரஸ்’ என்ற கட்சியை அவர் கைப்பற்றியதும், பின்னர் எமர்ஜென்சி என்னும் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததும் அவருடைய அடைத்து வைக்கப்பட்டிருந்த நீண்டகால ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆகவே லால்பகதூரின் மரணத்தை ஆராயப்போய், அல்லது ஏற்கெனவே அரசாங்க அளவில் சேகரிக்கப்பட்ட உண்மைகளை வெளியிடப்போய், மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாப அலை உருவாகிவிட்டால் அது இந்திராவின் அரசியல் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்காது என்று இந்திராவிடம் அவரது அணுக்கத்தொண்டர்கள் கூறாமலா இருந்திருப்பார்கள்? ஆகவே விஷயம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதுபற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இதுபற்றி சில புத்தகங்களும் அரசியல் நோக்கர்களால் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கமே சொன்னால்தானே அது இறுதியானதாக இருக்கும்?
இதற்கிடையில், மர்மமாக மரணமடைந்தவராகக் கருதப்படும் இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் இந்த விஷயத்திற்கு இழுக்கப்பட்டிருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா கல்கத்தா பதிப்பு - இணையதளம் - செய்தி- தேதி: டிசம்பர் 12, 2015)
எப்படி என்றால், தாஷ்கண்ட்டில் 1966இல் நடைபெற்ற மேற்படி அமைதிப் பேச்சு வார்த்தைகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இந்திய, பாகிஸ்தான், ரஷிய தலைவர்களுடன், ஓரமாக, கண்ணாடி அணிந்த ஒருவர் காட்சியளிக்கிறார். அவர்தான் சுபாஷ் போஸ் என்று கருத இடமிருப்பதாக முக அமைப்பு ஆய்வாளர்கள் (face mapping experts) தெரிவித்திருக்கிறார்கள் என்று இந்தச் செய்தி கூறுகிறது. இந்த விஷயம் மேற்கு வங்கத்தில் சூடாக எழுப்பப்பட்டதால், பிரதமர் மோடி ரஷ்யாவிடம் மேலதிக விவரங்களைக் கோரியிருக்கிறார் என்று தெரிகிறது.
நேதாஜியின் மறைவைப் பற்றி இதுவரை இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒன்று, அவர் 1945ஆம் வருடம், தைஹோக்கு (Taihoku) மலைச்சரிவில் விமான விபத்தில் மரணமடைந்தார் என்பது; இன்னொன்று, 1950இல் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினால் தூக்கில் இடப்பட்டார் என்பது. லால்பகதூர் அருகில் இருப்பது நேதாஜிதான் என்பது ஏற்கப்படும் பட்சத்தில், இந்த இரண்டு கருத்துக்களும் பொய்யென்பது உறுதியாகிவிடும். ஆனால் மேற்கொண்டு எப்போது நேதாஜி மரணமடைந்தார் என்ற விஷயம் புதிய சிக்கலை உண்டாக்கக்கூடும்.
பொதுவாகவே, அரசியல் அரங்கில், இருநாட்டு நுட்பமான உறவுகள் சம்பந்தப்பட்டிருக்கும் இதுபோன்ற விஷயங்களில் உண்மைகள் வெளிவருவது அபூர்வமே. வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் லால்பகதூரைப் போன்ற எளிமையான, சுயநலமற்ற, ஆசைகளற்ற தலைவருக்கு இப்படிப்பட்ட துர்மரணம் ஏற்பட்டிருக்க வேண்டாம் என்பதே.
ஏனெனில் லால்பகதூர் சாமான்யரல்ல. ஒரு மாமனிதர். நேரு பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் லால்பகதூர் ரயில்வே மந்திரியாக இருந்தபோது, தமிழ்நாட்டின் அரியலூரில் ஒரு பெரும் ரயில் விபத்து ஏற்பட்டது. நவம்பர் 23, 1956 அன்று ஏற்பட்ட இவ்விபத்தில் “142 பயணிகள் இறந்தனர். 110 பேர் காயமடைந்தனர். பலர் காணாமல் போயினர்” என்று இணையம் கூறுகிறது.
அந்த விபத்து நடந்த விதம் எப்படி?
விபத்துக்கு முதல்நாள் இரவு ஒன்பதரை மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வண்டி எண் 603 சுமார் 800 பயணிகளுடன் புறப்பட்டது. நீராவியால் இயங்கும் ரயில் அது. கொட்டும் மழையில் கிளம்பியது. அந்த ரயிலுக்கு முன்பாக திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றிருந்தன. மொத்தம் 13 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சென்ற பாதை எல்லாம் இடைவிடாமல் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. நள்ளிரவில் ரயில் விருத்தாசலம் வந்த போது ரயிலின் கடைசி பெட்டி கழற்றப்பட்டது. அது சேலம் செல்லும் இணைப்பு ரயிலில் மாற்றுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது.
பின்பு 12 பெட்டிகளுடன் ரயில் தூத்துக்குடியை நோக்கி பயணமானது. மழை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. அதிகாலை ஐந்தரை மணிக்கு ரயில் அரியலூரைத் தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. காவிரியின் கிளை ஆறான மருத ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலத்தை மூழ்கடித்த வண்ணம் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த அபாயகரமான பாலத்தை தான் ரயில் கடந்து செல்ல வேண்டும் ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் ரயிலை இயக்கிய என்ஜின் டிரைவர் துரைசாமி, நிலக்கரியை எரிய வைக்கும் பயர்மேன்கள் முனுசாமி கோதண்டன் எவருக்கும் வெள்ளத்தின் அபாயநிலை கண்ணுக்குத் தெரியவில்லை.
வேகமான நீரோட்டத்தால் பாலத்தின் தூண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. ரயில் எஞ்சின் பாலத்தை கடக்க முற்பட்டபோது தண்டவாளம் ஆட்டம் கண்ட.. ரயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறி சென்ற நிலையில் பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது. ரயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எஞ்சினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால் அதில் பயணித்த பெண்களும் குழந்தைகளும் தான் அதிக அளவில் மாண்டு போனார்கள். மீட்புக்குழுவினர் இரண்டு நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு 150 சடலங்களையே மீட்க முடிந்தது.
ரயில்வே அமைச்சர் என்ற முறையில் இந்த விபத்துக்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார் லால்பகதூர். இன்றைய அரசியல்வாதிகளில் இப்படிப்பட்டவர்கள் யாராவது உண்டா?
இக்கட்டுரையின் தலைப்பு “சின்னதொரு வெள்ளி தம்ளர்” அல்லவா? இன்னும் தம்ளர் வரவில்லையே என்றால், இருங்கள், அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் எனக்கும் லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் இருந்த “தொடர்பை”ச் சொல்லிவிடுவதுதான் நியாயம் அல்லவா?
1965 இந்தியா பாகிஸ்தான் போரின் போது, பள்ளிகள் மூலம் யுத்த நிதிக்கு வசூல் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் உண்டியல்கள் வழங்கப்பட்டிருந்தன. அப்படி வசூலான மொத்த தொகையும் பள்ளித் தலைமைஆசிரியரின் அதிகாரபூர்வக் கணக்கிலிருந்து ஒரே காசோலையாக எழுதப்பட்டு, வசூலின் முழுவிவரமும் அதேபோல் ஒரு அதிகாரபூர்வமான கடிதத்தில் எழுதப்பட்டு, தலைமையாசிரியர் கையொப்பமிட்ட சீல்வைத்த உறையில் வைத்து, பள்ளி மாணவர் தலைவனும் டிரில் மாஸ்டரும் அதை எடுத்துக்கொண்டு சென்னை சென்று, கடற்கரையில் குறிப்பிட்ட நாளன்று நடைபெறவிருந்த மாபெரும் பேரணியில் உரையாற்றப்போகும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் நேரடியாக ஒப்படைக்கவேண்டும் என்று கல்வித்துறையின் ஆணை.
அதன்படி, இராணிப்பேட்டை போர்டு ஹைஸ்கூலில் இருந்து நான் அனுப்பட்டேன். காசோலையும் கடிதமும் எங்கள் டிரில் மாஸ்டர் தன்னுடன் வைத்துக்கொண்டார். இருவரும் முதல்நாள் மாலை வேலூர் சென்று காட்பாடி ஜங்க்ஷனில் காத்திருந்தோம். வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் முப்பது அல்லது நாற்பது பெரிய பள்ளிகளில் இருந்து இதேபோல் பிரதிநிதிகள் அங்கு திரண்டு வந்தார்கள். அனைவரும் ஒரே ரயில் பெட்டியில் ஏறிக்கொண்டோம். பொழுது புலரும் முன்பே சென்டிரல் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டோம். ஆனால் அந்த ஜனக்கூட்டத்தில் எங்கள் டிரில் மாஸ்டர் எங்கே போனார் என்று எனக்கும் நான் எங்கே போனேன் என்று அவருக்கும் தெரிந்திருக்கமுடியாது.
என் கையில் ஒரு மஞ்சள் பைதான் இருந்தது. (ஆம், மஞ்சள் பைதான்! எல்ஜி பெருங்காயப்பை). ஆகவே பிளாட்பாரத்தில் கடைசி மனிதன் வெளியேறும்வரை அங்கேயே நின்றேன். டிரில் மாஸ்டரைக் காணோம்! பகீரென்றது எனக்கு. ஏனென்றால் நான் சென்னைக்கு வருவது அதுதான் முதல்முறை. அத்துடன் தனியாக வருவதும். நான் எங்கு போகவேண்டும் என்பதும் தெரியாது. டிரில் மாஸ்டர் எதுவும் கூறவில்லை. கூறியிருந்தாலும் முன்பின் தெரியாத சென்னையில் நான் என்ன செய்யமுடியும்!
நான் வெகு நேரமாக அங்கேயே நிற்பதைக் கண்ட ஒருவர் - அவரும் ஓர் ஆசிரியராகத் தெரிந்தார்-என்னிடம் விசாரித்தார். கவலைப்படாதே என்று தேற்றினார். காசோலைகள் எல்லாம் கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் தான் கொடுக்கவேண்டும் என்றும், மாணவர்கள் யாரும் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கிடையாது என்றும் உத்தரவு வந்திருப்பதாகக் கூறினார். ஆகவே நான் ‘சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று மாலைவரை தங்கிக்கொள்ளலாம் என்றும், அங்கு எல்லா ஆசிரியர்களும் வந்திருப்பரைகள் என்றும், அங்கிருந்து கடற்கரை கூட்டத்திற்குச் என்று பிரதமர் பேசுவதைக் கேட்டபின் ஊர் திரும்பலாம் என்றும் வழிகாட்டினார்.
அதன்படியே நடந்தது. ஒரு மாமனிதரை நேரில் பார்த்தேன் என்று சொல்லிக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் போயிற்று!
லால்பகதூர் அமரரான பிறகு அவருக்காக ஒரு நினைவாலயம புதுடில்லியில் அமைக்கப்பட்டது. பின்னர் அவரது துணைவியார் லலிதா சாஸ்திரி அவர்கள் மரணமடைந்தபிறகு அவரிடமிருந்த ஞாபகார்த்தப் பொருட்களும் இங்கு வைக்கப்பட்டனவாம். அதில் ஒன்றுதான் இந்தச் சின்னதொரு வெள்ளி தம்ளர்! அதன் கதையைக் கேட்டால் மெல்லிய மனம் படைத்தவர்களுக்குக் கண்ணீர் வரவும் கூடும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் பலமுறை சிறைக்குச் சென்றவர் லால்பகதூர். அவரது குடும்பம் வசதியான குடும்பம் அல்ல என்று முன்பே கூறினோம். சிறைவாசம் காரணமாக குடும்பத்தின் நிலைமை மேலும் மோசமானது. ஏற்கனவே மெலிந்த உடலமைப்பைக் கொண்ட லலிதா சாஸ்திரி, இப்போது அதிக வறுமையின் காரணமாக மேலும் மெலிந்து விட்டார். சிறைச்சாலையில் தன்னை பார்க்க வந்த மனைவியின் நிலைமையை கண்டு மிகவும் வருந்தினார் லால்பகதூர். அவருடைய உடல் நலத்தை முன்னிட்டு தினமும் ஒரு டம்ளர் பால் அருந்தும்படி கூறினார் கணவர். சோற்றுக்கே தாளம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் குடிப்பதற்குப் பாலுக்கு எங்கே போவார் மனைவி? சோகத்தை புன்முறுவல் ஆக்கிக்கொண்டு 'ஆகட்டும்’ என்றார். லால்பகதூர் விடவில்லை. ‘என்னை ஏமாற்றக் கூடாது. தினமும் பால் அருந்துவதாக வாக்குறுதி கொடுக்க வேண்டும்’ என்று வற்புறுத்தினார். மனைவியும் அப்படியே வாக்குறுதி கொடுத்தார்.
அதை நிறைவேற்றும் விதமாக, குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் பாலோடை போன்ற மிகச் சிறிய வெள்ளி தம்ளர் ஒன்றை வாங்கினார். தேனீர் தயாரிப்பதற்காக வாங்கும் பாலில் சிறிதளவை இந்த தம்ளரில் ஊற்றிக் கணவரின் நினைவாக தினமும் அருந்தினார். கணவர் பிரதமர் ஆனபிறகும் இந்த தம்ளரை பத்திரமாக வைத்திருந்தார். அதுதான் இப்போது லால்பகதூர் நினைவாலயத்தில் இடம்பெற்றுள்ளது!
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
அறியாத அரிய தகவல்கள் நிறைய அறிந்தேன் நன்றி.
பதிலளிநீக்குஅன்று நன்றியுணர்வு உள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல! மக்களும் வாழ்ந்தார்கள்.
சசிகலாவை தியாகத்தலைவி என்ற மூடர்கள் வாழும் காலமிது.
மனதைநெருடும் வரலாற்றுக்குறிப்பினை தந்தமைக்கு
பதிலளிநீக்குநன்றி.
எங்கள் பள்ளியில் இருந்து நாங்கள் மவுண்ட் ரோடு, பீச் ரோடில் ஊர்வலமாக போனோம்.
பதிலளிநீக்குலால்பகதூர் மகத்தான மாமனிதர். அவர் மறைந்த விஷயம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதுதான். ஆனால் வெளியில் வராது.
பதிலளிநீக்குஇத்தனை வருடங்கள் கழித்து வருமா? உண்மை? பார்ப்போம். நேதாஜியின் மரணமும் மர்ம முடிச்சுதான்.
லால்பகதூர் ஸாஸ்திரி போன்றவர்கள் எல்லாம் அரிது. இப்போதைய அரசியல் தலைவர்களை நினைக்கும் போது....
கீதா
மனித நேயத்திற்கு மட்டும் அல்ல, பலவற்றுக்கும் துணைவி அவசியம்...
பதிலளிநீக்குஆனால் ஙெங்கோலனுக்கு அவசியமில்லை... காரணம் மூலம் அல்லது வித்து - பலமுறை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உருவாக்கம்... அதன் வழி ஓரே + + + சாவு...
+ ஓரே சுடுகாடு...
நேதாஜி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பற்றிய நினைவலைகளை அழகாக, மனதைத் தொடும் விதம் பகிர்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குவெள்ளி டம்ளர் சஸ்பென்ஸைக் கடைசிவரை கொண்டு சென்றது ராப செல்லப்பா ஸ்டைல்.
வாழ்த்துக்கள்.
வெள்ளி டம்ளர் தகவல் நன்று. அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் இரு வித அரசியல்வாதிகள். சுவையான தகவல்கள்.
பதிலளிநீக்குஇந்திய அரசியல் பற்றி உங்கள் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டேன்.உங்களுக்கு எழுந்த எண்ணங்கள் எனக்குள்ளும் எழும்.ஆனால் உங்களைப்போல் சாந்தமாக என்னால் தெரிவிக்க இயலாது.
பதிலளிநீக்கு1905 ல் கங்கையில் தவறி விழுந்து காணாமல் பொய் மறுபடி கிடைத்த குழந்தையும் லால்பகதூர். அதுவும் சிபாரிசு விஷயத்தில் அவர் தனது குரு கோவிந்தா வல்லப பந்த் போல இரண்டு டைரிகள் வைத்துக்கொள்வார் என்றும் படித்திருக்கிறேன், பகிர்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅற்புதம்....
பதிலளிநீக்குஅருமையான தலைவர் லால்பகதூர் சாஸ்திரி. அவர் இறந்த பொழுது அம்பாசிடர் கார் வாங்கிய கடன் பாக்கி இருந்ததாம்.
பதிலளிநீக்குஇன்றைய அரசியல் வாரிசுகள் சொகுசு கார்களை நிறுத்துவதற்காக ஓ.எம்.ஆரில் நிலம் வாங்கியிருக்கிறார்கள்.
பழைய அரசியல்வாதிகளைப் பற்றிப் படித்து... இப்படிப்பட்டவர்களும் இந்த மண்ணில் இருந்திருக்கின்றார்களே என்று ஆச்சர்யப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
பதிலளிநீக்குதன்னலமற்ற தியாக தலைவர் திரு சாஸ்திரி. குறுகிய காலத்தில் அவரை இழந்தது நம் துரதிர்ஷ்டம். நம் இளைய சமுதாயத்திற்கு இத்தகைய தலைவர்களின் வரலாறுகள் போதிக்கப்படுவதில்லை என்பதும் வருந்தத்தக்கது.
பதிலளிநீக்குஅரிய தகவல்கள் மறைந்த மாமனிதரைப்பற்றி.இப்படியும் இந்நாட்டில் பிரதமர் உண்டு!!
பதிலளிநீக்குதிரும்பத் திரும்ப எழுதப்பட வேண்டிய தியாகசீலர். மறக்கக் கூடாத மாணிக்கம்
பதிலளிநீக்கு