வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

கண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்!


கண்ணன் பிறந்தான் 

(ஸ்ரீமன் நாராயணீயம் 38,39 அத்தியாயங்கள்)


இன்பமே வடிவாகிடப் பெற்ற இறைவனே! நீ அவதரிக்க வேண்டிய நன்னாள் நெருங்கியபொழுது, வானத்தில் கவிந்திருந்த மழைமேகங்களெல்லாம் நின் மேனிநிறமாகவே ஒளிர்ந்ததன்றோ? (38-1)

பூமியின் எல்லாத் திசைகளிலும் மழை பொழிந்து குளிர்ச்சியை ஊட்டியது. நல்லோர் மனமெல்லாம் தாம் விரும்பிய ஒன்று நிகழவிருக்கிறது என்று ஆனந்தம் கொண்டன. வானில் மேல்நோக்கி நிலவு எழுந்திடும் நடு இரவில், மூவுலகங்களின் துயரங்களையும் போக்கும்விதமாக நீ கிருஷ்ணனாக அவதரித்தனை.  (38-2)

சிறையில், குழந்தை வடிவில் வெளிவந்த நீ, அடுத்த கணமே, உலகின் அழகனைத்தும் கொண்டவனாக, ஒளிவிடும் மணிமுடியும், கைவளை, தோள்வளை,   முத்துமாலைகள் இவற்றுடன், சங்கு, சக்ரம், கதை, தாமரைப்பூ  ஆகியவற்றைக் கரங்களில் தாங்கி நீலவண்ணக் கண்ணனாக மிளிர்ந்தனை அன்றோ!   (38-3)
வாட்ஸப்பில் வந்த படம்

மகிமை பொருந்திய திருமகளாம் லக்ஷ்மி நினது மார்பினில் சுகமாக வீற்றிருந்தாள். நின்னையே நோக்கியிருந்த அவளது அழகிய கடைக்கண் பார்வையில் கொஞ்சிய நாணத்தின் ஒளியானது, சிறைச்சாலையின் அசாதாரணமான சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்குரியதாக்கியது.    (38-4)

கண்ணா! சிறையில் இருந்த வசுதேவர், இத்தகைய மேன்மைமிக்க வடிவத்தில் நின்னைக் கண்டதுமே மயிர்க்கூச்செறிந்தார். ஆன்றவிந்த ஞானியர்க்கும் காணக் கிடைக்காத நின் எழில்வடிவம், தன் கண்ணெதிரே தோன்றியதும், அவரது குரல் தழுதழுத்தது. தேனைக் கண்ட வண்டுபோல் நின் வடிவத்தின் இனிமையைக் கண்களால்  பருகினார். பின் கனிவோடு நின்னை வணங்கினார்.   (38-5)

இறைவனே, எனது துன்பமாகிய கொடியினை நினது வாள் போன்ற விழிகளால் அறுத்தெறிய மாட்டாயா? , பரம்பொருளே, நினது கருணை பொங்கும் விழிகளால் எனது துயரங்களை நீக்க மாட்டாயா?’ என்று கண்ணீர் வழிய ஆனந்தக் கூத்தாடினார் வசுதேவர்.  (38-6)

அதுவரை நின்னைக் கருவில் தாங்கிப் பெற்றெடுத்த தேவகி, நின்னை மகனாகக் கொண்ட மகிழ்ச்சியில், ஆனந்தக் கண்ணீரால், மழையில் நனைந்த கொடிபோல் ஆனாள். நின் புகழைப் பாடினாள்.  நீ அவர்களின் முன்னிரண்டு பிறவிகளைப் பற்றிப்  பேசினை.   அவர்கள் இருவருக்கும் மகனாக நீ பிறக்கும் மூன்றாவது பிறவி இது என்று விளக்கினை. போதும், நீ மானிடக் குழந்தையாக மாறிவிடுஎன்று தேவகி கேட்டதால் உடனே அப்படியே ஆயினை.    (38-7)

இறைவனே, பிறகு நந்தகோபரிடம் இக்குழந்தையைக் கொடுத்துவிட்டு, அங்கு பிறந்திருந்த பெண் குழந்தையைச் சிறைச்சாலைக்குக்  கொண்டுவருமாறு வசுதேவரைத் தூண்டினை அன்றோ?  ஞானியரின் நெஞ்சுக்கினிய நீ,   தாமரை மலரில் அமரும் அன்னப்பிள்ளைபோல், வசுதேவரின் கரங்களில் அமர்ந்துகொள்ள, அவர் சிறைச்சாலையில் இருந்து கிளம்பினார்.   (38-8)

அதே சமயம், நந்தகோபரின் மனையில் பெண் குழந்தையாகப் பிறந்திருந்த யோகமாயை யானவள், தனது யோகசக்தியால்  உடனே, அந்தப் பகுதியில் இருந்த எல்லா மனிதர்களையும் உறக்கத்தில் ஆழ்த்தினாள். வசுதேவர் குழந்தையோடு வெளியேறுவதற்கு வசதியாகச் சிறைச்சாலையின் கதவுகளும் தாமாகவே திறந்துகொள்ளச் செய்தாள். (38-9)

அந்த நள்ளிரவில், ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன் நின்மீது மழைத்துளி படாமல் தன் தலைகளையே குடையாக்கி, தலை மேலிருந்த நாகரத்னங்களையே விளக்காக்கி, வழிகாட்டிக்கொண்டு உடன்வர, வசுதேவர் நின்னைக் கோகுலத்திற்கு எடுத்துச் சென்றார். அத்தகைய மகிமைமிக்க செயல்கள் புரிந்த குருவாயூரப்பனே, எனது நோய்களை நீக்கி அருள வேண்டும்.   (38-10)

39ஆம் பத்து - மாயையின் விளையாட்டு


கண்ணா, நின்னைக் கையில் ஏந்திக்கொண்டு யதுகுலத் தலைவராகிய வசுதேவர் கோகுலத்தை நோக்கிச் செல்கையில், யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததைக் கண்டார். ஆயின், மந்திரஜாலம் செய்தாற்போல, யமுனையில் அவர் கால்வைத்த கணமே அது, அவரது கணுக்கால் அளவே ஆகுமாறு குறைந்தது.  என்னே வியப்பு!    (39-1)

கோகுலத்தில் நந்தகோபர் வீட்டை வசுதேவர் அடைந்தபோது, கதவுகள் எல்லாம் திறந்தே கிடந்தன. பெண்டிர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஒரு பெண் குழந்தை மட்டும் அழுதுகொண்டிருந்தது. நின்னை அக் குழந்தையின் படுக்கையில் கிடத்திவிட்டு, அந்த மாயப் பெண்குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு விரைந்து நடந்தார், சிறைச்சாலையை நோக்கி.              (39-2)

சிறைச்சாலையில் தேவகியின் கையில் குழந்தையைக் கொடுத்தார் வசுதேவர். அது உடனே அழ ஆரம்பித்துவிட்டது. அதைக்கேட்டவுடன் குழந்தை பிறந்துவிட்டதுஎன்று காவலர்கள் கம்ஸனிடம் தெரிவிக்கவும், அவன் அவசரமாகத் தலைவிரி கோலத்தில் ஓடி வந்தான். தன் தங்கையின் கையில் தான் எதிர்பார்த்த ஆண் குழந்தைக்குப் பதில் ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தான்.                (39-3)

தன்னை ஏமாற்ற விஷ்ணு செய்த மாயமே இது என்று கம்ஸன் ஐயம் கொண்டான். நீரிலுள்ள தாமரைத்தண்டை ஓர் யானை எவ்வாறு அலட்சியமாகப் பறிக்குமோ, அவ்வாறு மிகுந்த சினத்தோடு, அப்பெண் குழந்தையைத் தன் தங்கையின் கையிலிருந்து பிடுங்கினான். பிறகு, அக்குழந்தையைக் கல்சுவற்றின் மேல் மோதி அறைந்தான்.   (39-4)

இறைவனே, எப்படி நினது அன்பர்கள் மரணத்தின் பிடியில் இருந்து விரைவாகத் தப்புவார்களோ அதுபோல், அப் பெண்குழந்தையாக வந்த யோகமாயை, கம்ஸனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பூமியில் எங்கும் படாமல், வானத்தை அடைந்து, ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களை உடையவளாக இன்னொரு புதிய வடிவம் மேற்கொண்டாள்.     (39-5)

ஓ கம்ஸா, கொடியவனே! என்னை அறைந்து கொல்வதால் நீ அடையப்போவது என்ன? நின்னை அழிக்கப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான். நீ ஓடிப்போய் நின்னைக் காத்துக்கொள்என்று கூறிவிட்டு அந்த மாய உருவம் மறைந்துவிட்டது. அந்த யோகமாயை, பின்னர் கோவில்களில் வைத்து வழிபடும் தகுதி பெற்றாள். (39-6)

அடுத்த நாள் காலையில் கம்ஸன், தனது பூதகணங்களான பிரலம்பன், பாகன், பூதனை ஆகியோரிடம் இவ்விஷயத்தைக் கூறினான். உடனே அவர்கள் செயலில் இறங்கினார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகள் எங்கிருந்தாலும் உடனே கைப்பற்றிக் கொன்றார்கள். இரக்கம் என்பதே இல்லாதவர்கள் எதைத்தான் செய்யமாட்டார்கள்?  (39-7)


முகுந்தனே! யாதவர் தலைவன் நந்தகோபனின் மனைவி  யசோதையின் படுக்கையில் கிடந்த நீ, இளம்கால்களை உதைத்துக்கொண்டு மென்குரலில் அழுதனை. உடனே, கோகுலமே விழித்துக்கொண்டது. அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதை அனைவரும் அறிந்துகொண்டனர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையுண்டோ?   (39-8)

கண்ணா, நின்னைக் காணவேண்டுமென்று தவம் செய்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், அவர்களுக்குக் கிட்டாத புண்ணியம்  இந்த யசோதைக்குக் கிடைத்துவிட்டதே! தன் அருகில்  புத்தம்புது  காயாம்பூப் போல் கிடந்த நின் மேனியை யசோதை கண்ணால் கண்டு மகிழ்ந்து,  கையில் எடுத்து ஆனந்தித்து, மார்பில் இட்டுப் பாலமுதம் ஊட்டினாள்.  தொட்டுத்தொட்டுக் கொஞ்சினாள். (39-9)

நந்தகோபன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நினது நன்மையை முன்னிட்டு அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். அவனது குடிமக்களும் நின் பொருட்டு பல்வேறு யாகங்களையும் நற்கருமங்களையும் செய்வித்தனர். அப்படிப்பட்ட,  மூவுலகிலும் இன்பத்தை வழங்கும் குருவாயூரப்பனே,  நோயிலிருந்து என்னைக் காப்பாயாக.  (39-10)

- நாராயண பட்டத்திரி (மூல நூலாசிரியர்)
***** 
எனது மேற்படி தமிழ் உரையுடன் வெளியான 'நாராயணீயம்' -மூலமும் உரையும்- கிடைக்குமிடம்: 

தங்கத் தாமரை பதிப்பகம், 
37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், 
அடையாறு, சென்னை -600020 
அலைபேசி: 7305776099 & 044-2441 4441 
விலை ரூ.500


புதன், ஆகஸ்ட் 21, 2019

வாத்தியார் கதைகள் - 1 -மனோ சார்


வாத்தியார் கதைகள் - 1

மனோ சார்

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து சில நாட்கள் ஆகியிருக்கும். தேர்வின் சுமை  நீங்கியதன் வெளிப்பாடாக நூலகத்தில் சென்று இளைப்பாறிக் கொண்டு இருந்தேன். கடந்த ஒரு வாரமாக நூலகத்திற்கு வராததால் பார்க்க முடியாமல் போன பத்திரிகைகளை  இப்போது ஆர்வமாகப் புரட்டிக் கொண்டிருந்தேன். ரீடர்ஸ் டைஜஸ்ட், இம்பிரிண்ட், கலைமகள், அமுதசுரபி ஆகிய  பத்திரிகைகளை வந்தவுடன் படிக்கும் முதல் வாசகனாக நான் இருந்ததால், நான் வராத நாட்களில்  அவை தபாலில் வந்தால் கவரைப் பிரிக்காமலேயே வைத்திருப்பார் நூலகர். என்மீது  அன்புமிகக்  கொண்டவர். அப்படி மூன்று பத்திரிகைகள் புத்தம் புதிதாகக் கிடைத்தன. அவற்றை ஓர் இரவு கொண்டுபோய் அடுத்த நாள் காலையில் திருப்பித் தந்துவிடும் விசேஷ அனுமதியும் அவர் கொடுத்திருந்தார். அதற்குப் பிரதியுபகாரமாக இரவு 8 மணிக்கு நூலக நேரம் முடியும்போது அவருக்கு உதவியாக நாளிதழ்களையும், வார-மாத-   பத்திரிகைகளையும்  ஒழுங்காக அடுக்கி வைத்து, ஜன்னல்களை சாத்தி, கதவைப் பூட்டி, சாவியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். சில நேரம் காற்றுப்  போயிருக்கும் அவருடைய சைக்கிளுக்குக்  காற்று அடித்துக் கொண்டு வரும்   தொண்டையும் நான் ஏற்கவேண்டி வரும்.
நானும் ஒருகாலத்தில் வாத்தியார் தான்!

அன்றும் அப்படித்தான் நூலகத்தை மூடிவிட்டு, உரிய அனுமதியோடு கையில் சில பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு, நான் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, எதிர்ப்புறம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மனோ சார் என்னைப் பார்த்தவுடன் நின்றார். "என்னப்பா பரீட்சை எல்லாம் நன்றாக எழுதி இருக்கிறாயா?" என்றார்.

நான் அவருக்கு வணக்கம் சொல்லி, "நன்றாக செய்து இருக்கிறேன் சார்" என்றேன்.

மனோ சார் எங்களுக்கு சோஷியல் ஸ்டடீஸ் பாடம் எடுக்கும்  ஆசிரியர். மனோகரன் என்ற அவருடைய பெயர்  மிகவும் நீளமாக இருந்ததால் மனோ என்று சுருக்கப்பட்டதாகப் பேசிக்கொண்டார்கள். அவருடைய வகுப்பில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு அழகாக பாடம் எடுப்பார்.

மாணவர்களை அவர் மீது மையல் கொள்ளச் செய்த இன்னொரு இயல்பு, அப்போதைய சினிமாத் துறையைப் பற்றி அவருக்கிருந்த  விரிவான அறிவு. அவர் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். ஏதாவது ஒரு வருடத்தைச் சொன்னால் போதும், அந்த வருடத்தில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை எம்ஜிஆரின் எந்தெந்த படங்கள் வெளியாகின, அவற்றில் யார் யார் கதாநாயகி, படம் வெற்றியா தோல்வியா என்ற தகவல்கள் அவரிடம் விரல் நுனியில் இருக்கும்.

"ரொம்ப நல்ல விஷயம். சரி என்னுடைய பாடத்தில் எப்படிச் செய்திருக்கிறாய்?" என்று கேட்டார் மனோ சார்.

"ரொம்ப நன்றாகச் செய்து இருக்கிறேன் சார். ஒழுங்காகத் திருத்தினால் 90 மார்க் வரும். ஆனால் ஸோஷியல் ஸ்டடீஸ்- இல் 75-க்கு மேல் போட  மாட்டார்களே" என்று வருத்தத்துடன் கூறினேன்.

மனோ சார் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார். "கவலைப்படாதே, மார்க்குகள் முக்கியமில்லை. நீ நன்றாக எழுதி இருக்கிறாய் என்ற திருப்தி உனக்கு ஏற்பட்டால், அது போதும். 40 மார்க் எடுத்தாலும் பாஸ், 90 மார்க் எடுத்தாலும் பாஸ் - இல்லையா? தன்னம்பிக்கை தான் முக்கியம்" என்று சொன்னவர், "என் ரூம் உனக்குத் தெரியும் தானே? நாளை காலை 7 மணிக்கு வந்து விடு. கொஞ்சம் பேப்பர்கள் திருத்த வேண்டும். உதவி செய்வாய் அல்லவா? ஆனால் விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது" என்று என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் முடிந்தவுடன் யாராவது ஒரு ஆசிரியருக்கு அம்மாதிரி உதவிகள் செய்வது என்னுடைய கடமையாகவே ஆகியிருந்தது. அதில் எனக்கு உற்சாகம் ஏற்படுவதுண்டு. ஆகவே "சரிங்க சார்! வந்துவிடுகிறேன்" என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன்.

***
மனோ சார் குடும்பம் வேலூரில் இருந்தது.ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை வேலூரிலிருந்து இராணிப்பேட்டைக்கு பஸ்ஸில் வருவார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சனிக்கிழமை வரை தங்குவதற்காகப் பள்ளிக்கு அருகில் இருந்த  நவல்பூரில் ஒரு மாடி அறையை வாடகைக்கு எடுத்து இருந்தார். சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வேலூர் போய்விடுவார்.

நான் போனபோது ரூம் கதவு திறந்தே இருந்தது. "சார்" என்று அழைத்துக் கொண்டே நுழைந்தேன். எனக்கு முன்னால் அங்கே இருந்தான் என் வகுப்பு மாணவன் பன்னீர். அவன் கையில் ஒரு சில விடைத்தாள்கள் இருந்தன. தரையில் அமர்ந்தபடி சிகப்பு கலர் பென்சிலால் அவனும் விடைகளைத் திருத்திக் கொண்டிருந்தான். சிறிய அறைதான்.  மேஜை எதுவும் இல்லை. ஒரே ஒரு நாற்காலி இருந்தது. தரையில் பாய் போட்டு இரட்டைத் தலையணையில் சாய்ந்தபடி அவனுக்கு உத்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார் லுங்கி பனியனில் இருந்த மனோ சார்.

பன்னீர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவன் கையால் விடை திருத்தப்படும் மாணவர்கள் மீது தான் வருத்தம் ஏற்பட்டது. ஏனென்றால் எந்தப்  பாடத்திலும் பன்னீர் 50 க்கு மேல் மதிப்பெண் எடுத்தது கிடையாது. அந்த அறிவை வைத்துக்கொண்டு மற்றவர்கள் அறிவை எப்படி அவனால் எடை போடமுடியும்  என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆகவே தயக்கத்தோடு நின்றேன்.

"வாப்பா செல்வம், நீயும் உட்கார். பன்னீர் எட்டாம் வகுப்பு சோஷியல் ஸ்டடீஸ்  திருத்துகிறான். அவனுக்கு ஏதாவது டவுட் வந்தால் நீ தான் கிளியர் பண்ண வேண்டும். சரியா?" என்றார். எட்டாம் வகுப்பு தானே பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டேன். கடவுள்  இருக்கின்றார். பலமாகத் தலையசைத்தேன். உட்கார்ந்தேன்.

"இந்தா இதெல்லாம் பத்தாம் வகுப்பு பேப்பர்கள். நீ நன்றாகப் படிப்பவன் என்பதால் தான் உன்னை அழைத்தேன். மிகவும் சரியாகத் திருத்த வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நம்பியார்மீது  எம்ஜிஆர் மாதிரி நீ செயல்பட வேண்டும்" என்றார் மனோ சார்.

இதுதான் சாக்கு என்று அவரை ஒரு பிடி பிடித்தேன். சில மாதங்கள் முன்பு ஒரு சமயம் பள்ளியில் இலக்கிய வகுப்பின் பொழுது எம்ஜிஆரா சிவாஜியா என்ற விவாதத்தை அவராகவே எழுப்பி, வசூல் மன்னன் என்றால் எம்ஜிஆர்தான் என்று நிரூபித்து இருந்தார். அப்போது எம்ஜிஆரின் 'படகோட்டி' படம் வெளியாகி யிருந்தது. (1964 நவம்பர் 3- தீபாவளி ரிலீஸ்). அதற்குப் போட்டியாக சிவாஜி கணேசனின் இரண்டு படங்கள் 'நவராத்திரி', 'முரடன் முத்து' வெளியாகியிருந்தன. ஆனால்  ‘படகோட்டி’ வசூலில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. "இனிமேல் சிவாஜி சினிமாவை விட்டுவிட்டு சூரக்கோட்டைக்குப் போய்க் குதிரை மேய்க்க வேண்டியதுதான்"  என்று அவர்  கம்பீரமாக சொல்லிச் சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.   (சூரக்கோட்டை யில் சிவாஜிக்கு பெரிய பண்ணையும், பல குதிரைகளும்  இருந்ததாகச் சொல்வார்கள்). 

ஆகவே சொன்னேன்: "சாரி சார்,  எம்ஜிஆர் மாதிரி என்னால் திருத்த முடியாது. சிவாஜிதான் படிக்காத மேதை. அதுவே சிவாஜி மாதிரி திருத்தட்டுமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"ஓ படுபாவி, நீ சிவாஜி ரசிகனா? தொலைந்து போ. ஒழுங்காக மார்க் போடு. டவுட் இருந்தால் என்னிடம் கேட்டுக் கொள்" என்று  எழுந்தார் மனோ சார்.  கீழ் போர்ஷனில் போய் அவர் குளித்துவிட்டு வருவதற்குள் 20 பேப்பர்கள் திருத்திவிட்டேன்.

அதுவரையில் ஆங்கிலப் பேப்பர்களும் கணக்குப் பேப்பர்களும்தான் நான் திருத்தி இருக்கிறேன். அதில் எது சரியான விடை, எது தவறான விடை என்று சுலபமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதுவே வேலை எளிதாக இருந்தது. ஆனால் இங்கோ சோஷியல் ஸ்டடீஸ். ஒவ்வொரு மாணவனும் சொந்தமாகக் கதை அளந்து இருந்தான். அதாவது பரவாயில்லை. ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்: "ஐயா நான் மூன்றாவது வருடம் இந்தத் தேர்வை எழுதுகிறேன். என்மேல் இரக்கப்பட்டு பாஸ் மார்க்  போடுங்கள்" என்று.

இன்னொரு மாணவன்  கொஞ்சம் மேலே போய், "ஐயா, எனக்கு அதிக  மார்க்கு வேண்டாம், ஐம்பதிலிருந்து அறுபது போடுங்கள் போதும். 35, 40 போட்டு விடாதீர்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள். என் அப்பாவும் ஒரு வாத்தியார் தான்" என்று எழுதி இருந்தான். இது வேண்டுகோளா மிரட்டலா என்று தெரியவில்லை.

குளித்துவிட்டு வந்த பிறகு மனோ சார் முகம் மிகத் தெளிவாக இருந்தது. அந்த இரண்டு விடைத்தாள்களையும் அவரிடம் காட்டினேன். "தொலைந்து போகிறார்கள். பாவம்! அவனுக்கு நாற்பதும் இவனுக்கு 62 ம் போட்டுவிடு" என்றார். மிகுந்த சிரமப்பட்டு அந்த மார்க் வரும்படி ஒவ்வொரு கேள்விக்கும் கொஞ்சம் கூடுதல் மார்க் கொடுத்தேன்.

மனோ சார் பன்னீரைப் பார்த்து மூணு பேருக்கும் பொங்கல் வடை மசாலாவும்,  பிளாஸ்க்கைக்  கொடுத்து  காப்பியும் வாங்கி வரச் சொல்லிப் பணம் கொடுத்தனுப்பினார். 

காலை உணவு உள்ளே போனதும் உற்சாகம் பிறந்தது. பகல் ஒரு மணிக்குள் மேலும் 50 பேப்பர்கள் திருத்திவிட்டேன். நல்ல வெயில். அறையைச்  சுற்றிலும் வெளிப்புறத்தில் மரங்கள் எதுவும் கிடையாது. எனவே  அனல் தகித்தது.

சிறிது நேரத்தில் மனோ சார் எழுந்து பேண்ட் சட்டை அணிந்து கொண்டார். "டேய் பன்னீர், நீ திருத்தியது போதும். உங்க ரெண்டு பேருக்கும் பிரிஞ்சியும் பரோட்டாவும் வாங்கிக்கொண்டு வா. நாலு மணி போல நான் வந்து விடுவேன். அதற்குள் இரண்டு பேரும் எல்லாவற்றையும் முடித்து விடுங்கள். நான் வெரிஃபை செய்து கொள்கிறேன். ரூம் சாவி இந்தா!" என்று என்னிடம் சாவி கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

பன்னீர் என்னைப் பார்த்து, "செல்வம் இப்பவே போகட்டுமா, இல்லை ஒரு மணி நேரம் ஆகலாமா?" என்றான்.  எப்படியும் அவன் போய் சாப்பாடு வாங்கி வர ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவனை உடனே அனுப்பினேன். நெற்றியிலும்  கழுத்திலும் வழிந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டு செயலில் இறங்கினேன்.

அப்போதெல்லாம் அந்தப் பாடத்தில்  35 மதிப்பெண் எடுத்தால் பாஸ். மனோ சார் ரொம்பவும் இரக்கம் உள்ளவர். "யாரையும் பெயிலாக்கி விடக்கூடாது" என்று உத்தரவு போட்டிருந்தார். ஆனால் சில மாணவர்களின் விடைத்தாள்கள் எனக்கு சவாலாக இருந்தன. 

அக்காலத்தில் சோஷியல் ஸ்டடீஸ் பாடத்தில் சிறிய வினாக்கள் Part A வில் 15, பெரிய வினாக்கள் Part B இல் 7 என்று எழுத வேண்டும். Part A  வினாக்களுக்கு தலா 2 மதிப்பெண். Part B வினாக்களுக்கு தலா 10 மதிப்பெண்கள். ஆக 30 + 70  = மொத்தம் 100.

ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு எப்படித்தான் கருணையோடு மார்க் போட்டாலும் 30 தான் வந்தது. இன்னும் ஐந்துக்கு எங்கே போவது? Part B இல் தான் மார்க்குகளைக் கொஞ்சம் உயர்த்துவதற்கு வழி உண்டு. ஆகவே அவற்றைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பலமுறை படித்தேன். 10 மார்க் கேள்விகளுக்குக் குறைந்தது 10 வரிகள் கூட எழுதவில்லை அவன். அப்படி இருந்தும் அவன் எழுதிய நான்கு கேள்விகளுக்கும் தலா 5 மதிப்பெண் முதலிலேயே கொடுத்துவிட்டேன். யார் பெற்ற பிள்ளையோ! வேறு வழி இல்லாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை மார்க்கு, ஒரு மார்க்கு என்று உயர்த்தினேன். அப்படியும் மொத்தம் 34 வந்தது. இன்னும் ஒரு மார்க்கு வேண்டும்.

Part A வில் தான் இனி கை வைக்க வேண்டும். அவனுடைய அதிர்ஷ்டமோ அல்லது என்னுடைய அதிர்ஷ்டமோ, ஒரு கேள்விக்கு மார்க் போடாமல் X போட்டிருந்தேன். அதாவது பூஜ்யம். அந்த விடையை மறுபடியும் படித்தேன். "முதலாம் பானிபட் போருக்குக் காரணம் யாது?" என்ற 2 மார்க் கேள்வி அது. மாணவனின் பதில்: "இருதரப்புக்கும் இடையில் இருந்த கருத்து வேற்றுமையே காரணம்!"

இது சரியான விடை இல்லை என்பது தெளிவு. ஆனால் அவனுக்கு எப்படியும் ஒரு மார்க் கொடுத்தாக வேண்டுமே! இல்லையெனில் பெயில் ஆகிவிடுவான். "கருத்து வேற்றுமை யினால்தான் போர் உண்டாகிறது" என்ற சிந்தனை, அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற அறிஞர்களுக்கே உரிய சிந்தனை அல்லவா! அதை ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் வெளிப்படுத்தினால் கௌரவப்படுத்த வேண்டாமா? ஆகவே அந்த  விடைக்கு அவனுக்கு 2 மதிப்பெண் கொடுப்பதில் அறப்பிறழ்வு ஏற்படாது என்று நம்பினேன். அப்பாடா, ஒருவழியாக 36 கிடைத்துவிட்டது. அவன் பாஸ் ஆகி விட்டான்.

சிறுநீர் கழிப்பதற்காக நான் மாடியில் இருந்து இறங்கிக் கீழ் போர்ஷனுக்கு போய்த் திரும்பினேன். அதற்குள் பாயின்மீது பிரிஞ்சியும் பரோட்டாவும் கமகமத்துக் கொண்டிருந்தன. அதாவது பன்னீர் அவற்றை வைத்துவிட்டு, சொல்லிக் கொள்ளாமல் நழுவிவிட்டான் என்று பொருள்!

அடுத்த இரண்டு மணி நேரத்தில் என்னிடம் இருந்த எல்லாப்  பேப்பர்களும் தீர்ந்து விட்டன. எனவே பன்னீர் பாக்கி வைத்திருந்த பேப்பர்களையும் எடுத்து நானே திருத்தினேன். மாலை மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மனோ சார் வருவதாகக் காணோம்.

நான் பகல் உணவுக்கு வரவில்லையே என்று வீட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள். மனோ சார் வீட்டுக்கு தான் போய் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் பரவாயில்லை. ஆனால் இப்போது மாலையும் ஆகி விட்டதே!

செய்வதற்கு வேறு வேலை இல்லாததால் அறையை நோட்டமிட்டேன். அதிகம் பொருள்கள் இல்லை. ஒரு சில சினிமா பாட்டுப் புத்தகங்கள் இருந்தன. அட்டையில் எம்ஜிஆர் போட்ட 'பேசும் படம்' ஒன்று கண்ணில் பட்டது. அதைப் படித்து முடித்தேன். இன்னும் மனோ சார் வரவில்லை. ஆறரை மணி ஆகிவிட்டது. சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. விளக்கைப் போடலாம் என்று பார்த்தால் பல்ப் ஃப்யூஸ் ஆகியிருந்தது. 

மெழுகுவர்த்தி  இருக்குமா என்று  தேடப் போனதில் பழையகுமுதம்இதழுக்கு நடுவில் மேலட்டை இல்லாத மிகவும் பழைய புத்தகம் ஒன்று தென்பட்டது. மாடிப் படியில் இறங்கி நின்றுகொண்டு தெருவிளக்கின் ஒளியில் அதைப் புரட்டினேன்.
 ஆங்கிலத்தில்  இருந்ததால் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற எண்ணம்  எழவில்லை. சில படங்கள் இருந்தன. மேலோட்டமாக ஏதோ தெரிந்தாலும் தெளிவாக இல்லை. வயது வந்தவர்கள் படிக்கும் புத்தகங்களில் ஒன்று என்று கல்லூரியில் சேர்ந்த சில வருடங்களுக்குப் பிறகு தெரிந்தது.
கீழ் போர்ஷன் உரிமையாளர் படியேறி வந்தார். வயது அறுபதுக்குமேல் இருக்கும்.ஏன் இன்னும் நிற்கிறாய், அப்பா? சார் வரும்வரை நீ இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு நீ போகலாம், நான் பூட்டிக் கொள்கிறேன். சார் ஒன்றும் சொல்லமாட்டார்”  என்றார். அப்படியே செய்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு, பன்னீரைக் கடைத்தெருவில் பார்க்க நேர்ந்தது. ஆர்வமாக ஓடிவந்தான்.படித்து முடித்துவிட்டாயா?” என்றான். எதை என்றேன். அந்தப் புத்தகத்தை  என்றான்.இல்லையே, அதை அங்கேயே வைத்துவிட்டேனேஎன்றேன்.சரிதான், யாரோ லவட்டிக் கொண்டுவிட்டார்கள் போல் இருக்கிறது. சார் என்னிடம் கேட்டார். நீ எடுத்துக்கொண்டு வருவாய் என்றுதான் நான் விட்டுவிட்டு வந்தேன். இல்லாவிட்டால் நானே  கொண்டுவந்திருப்பேன். நல்ல சான்ஸ் போய் விட்டதே! இப்படி யாருக்கும் இல்லாமல் பண்ணிவிட்டாயேஎன்று புலம்பினான். எனக்கென்னவோ அந்தக் கீழ் போர்ஷன் உரிமையாளர்மீது சந்தேகப்படுவது நியாயமாகப் படவில்லை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம், ஆனால் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது எனபது தானே அறம்!
****
அடுத்த வருடம் பள்ளி திறந்து நாங்கள் பதினொன்றாம் வகுப்பிற்குப் போனபோது மனோ சார் வரவில்லை. வேலூரில் - சொந்த ஊரில் - மிகப்பெரிய தொழில் நிறுவனத்தில் மேலாளராக அவருக்கு வேலை கிடைத்துவிட்டதாம். அந்த உற்சாகத்தில் அவர்  எம்ஜிஆரை மறந்து விட்டிருக்கலாம்.  பன்னீர் மட்டும் (அந்த!) ஆங்கிலப் புத்தகத்தை மறக்கமுடியாமல் புலம்பிக்கொண்டே இருந்தான். அதற்காகவே வேகமாகவும் நன்றாகவும் ஆங்கிலம் கற்றுக்கொண்டான் என்று கேள்வி. 

(c) இராய செல்லப்பா     



புதன், ஆகஸ்ட் 14, 2019

இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா?


இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா?

1967 இல் அமெரிக்காவில் ஒரு காதல் (சினிமா)

Guess Who Is Coming to Dinner என்ற ஹாலிவுட் திரைப்படம் நகைச்சுவை கலந்த சீரியஸ் படமாகும். டைரக்டர் ஸ்டேன்லி க்ராமர். கதாசிரியர் வில்லியம் ரோஸ்.

இன்றைக்கு 52 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் என்றாலும் அதில் அடங்கி இருக்கும் கருத்து இன்றளவும் அமெரிக்காவில் உயிரோடு இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக்  கட்சி சார்பில் வெள்ளையரல்லாத மூன்று பெண்மணிகள் போட்டி போட முன்  வந்திருப்பதும், அவர்களில் இருவர் இந்திய வம்சாவளிப் பெண்கள் என்பதும், இந்த மூன்று பேரையும் வர விடாமல் தடுப்பதற்காக, அதே கட்சியில் முன்பு ஒபாமாவிடம் உதவி ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடன் என்ற வெள்ளையரை முன்னுக்குக் கொண்டுவர வெள்ளை இன உணர்வு கொண்டவர்கள் திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகக் கூறப்படும் சூழ்நிலையில் இத்திரைப்படம் நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

படத்தின் மிக முக்கியமான அம்சம் அதனுடைய ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். பாத்திரங்களுக்கு ஏற்ற பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதும், வசனங்கள் அற்புதமாக எழுதப்பட்டு இருப்பதும், சுவாரஸ்யம்  குறையாமல் படத்தின் இறுதிவரை சஸ்பென்ஸ் கொண்டு போகப்பட்டிருப்பதும் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்  படம் மக்கள் கவனத்தில் இருப்பதற்குக் காரணம்.

இந்தப் படம் முழுவதுமாகவும் துண்டு துண்டாகவும் யூட்யூபில் கிடைக்கிறது. அமேசான், நெட்ஃப்ளிக்ஸிலும் உண்டு.
நாயகன் - நாயகி படம்-நன்றி: இணையம்
நடிகர்கள் கதாநாயகன் ஸிட்னி பாய்ட்டியர் (Sydney Poitier), கதாநாயகி கேதரின் ஹவ்ட்டன் (Katharine Houghton), கதாநாயகியின் தந்தை ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி (Spencer Tracy), கதாநாயகியின் தாய் கேதரின் ஹெபர்ன் (Katharine Hepburn, கதாநாயகனின் தந்தை ராய் கிளென் (Roy Glenn), கதாநாயகியின் தாய் பியா ரிச்சர்ட்ஸ் (Beah Richards).

சிறந்த அசல்  திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது பெற்ற படம் இது. கதாநாயகி யின் தாயாக நடித்த கேதரின் ஹெபர்னுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்தது. கதாநாயகியின் தந்தையாக வரும்  ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி யும் சிறந்த நடிகருக்கான ஆஸ்காரை இரண்டுமுறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியின் தாயும் தந்தையும் -நிஜத்திலும் ஜோடி. படம்-நன்றி: இணையம் 

சிட்னி பாய்ட்டியர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் கறுப்பின ஹாலிவுட் நடிகர் ஆவார். (1964இல் “Lilies of the field” படத்திற்காகக்   கிடைத்தது.) “In the heat of the night”, “To Sir, with love”, “A raisin in the sun”  முதலிய படங்களில் நடித்தவர்.  ஃபிளாரிடாவில்  மையாமியில் இப்போது வசிக்கும் அவருக்கு வயது 92.

சாவித்திரி - ஜெமினி கணேசன் மாதிரி, விஜயகுமாரி - எஸ்.எஸ்.ஆர். மாதிரி, புஷ்பலதா - ஏவிஎம் ராஜன் மாதிரி இந்தப் படத்தில் கதாநாயகியின் பெற்றோராக வரும் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானவர்கள் - கேதரின் ஹெபர்ன் (Katharine Hepburn), ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி (Spencer Tracy). ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு இரண்டு நாள் முன்பே ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி  காலமாகிவிட்டார் (ஜூன் 10, 1967).  ஆனால் அந்த இறுதிச் சடங்கிற்கும் ஹெபர்ன் போகவில்லை. “அவருடைய குடும்பத்தினர் என்ன நினைப்பர்களோ என்றுதான் போகவில்லை” என்று விளக்கினார் ஹெபர்ன். ஹாலிவுட் -ஆஸ்கார்  சரித்திரத்திலேயே இவருக்குத்தான் 12 முறை ஆஸ்காருக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டனவாம். அதில் நான்குமுறை விருது கிடைத்திருக்கிறது. 

கதாநாயகியாக நடித்திருக்கும் பெண் கேத்தரினா ஹவ்ட்டனுடைய சொந்த அத்தை தான் அவருக்கு அம்மாவாக நடிக்கும் இந்த கேதரின் ஹெபர்ன் . இந்த படத்திற்காகவே தேர்வு  செய்யப்பட்ட இளம் நடிகை என்பதால் முதல் படமான இதன் போஸ்டர்களில் கேத்தரின் ஹவ்ட்டன் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. அதன்பிறகு, ஹவ்ட்டன், விட்டு விட்டு சில படங்களில் நடித்தார்.  கடைசியாக 2010இல் நம் பாண்டிச்சேரிக்காரரான மனோஜ் நைட் சியாமளன் தயாரித்த The Last Airbender என்ற படத்தில் பாட்டியாக நடித்தார். ஆனால் பிராட்வேயில் நடைபெறும் நாடகங்களில் 60க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுயமாக நாடகங்கள் எழுதியதுடன் பிற மொழிகளிலிருந்து நாடகங்களை நடிப்பதற்கு ஏற்றவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.

முதற் காதலில் விழுந்து விட்ட இளம்பெண்ணின் மனோபாவத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் ஹவ்ட்டனின் துடிப்பும் துள்ளலும் மறக்க முடியாதவை.

கதையைப் பார்க்கலாமா?

கலிபோர்னியாவில் ஸான் ஹோஸேயில் பத்திரிகை அதிபராக இருக்கும் வெள்ளை நிறத்தவர்களான பெற்றோர்களின் ஒரே மகள் ஜொயானா. வயது 23. அதே கலிபோர்னியாவின் ஸான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் கறுப்பு இனத்தவரான ஓய்வு பெற்ற தபால்காரின் மகன் ஜான். (ஜான் பிரெண்ட்டிஸ்) வயது 38. மருத்துவ டாக்டர் பட்டம் பெற்று ஆப்பிரிக்காவில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். மருத்துவ ஆராய்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாடுகளுக்கும் சென்று வருபவர். திருமணமானவர். ஆனால் மனைவியும் குழந்தையும் ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட, கடந்த 8 ஆண்டுகளாக அன்புக்காக ஏங்கித் தனிமையில் வாழ்பவர்.

இந்த இருவரும் ஜெர்மனியில் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். காதல் ஏற்பட்டதே தவிர இன்னும் அவர்களுக்குள் உடல் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் பெற்றோரிடம் நேரில் தெரிவித்துவிட்டு வந்து திருமணம்  செய்துகொள்வதாக ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

தன் காதலனைத்  தன் வீட்டாருக்கு அறிமுகப்படுத்துவதற்காக வரவழைக்கிறாள் ஜொயானா. உண்மையில்  அது ஜானின் ஏற்பாடு. வெள்ளை இனத்துப் பெண்ணைத் தனக்கு மணம்  புரிவிக்க அவளுடைய பெற்றோர்களுக்கு சம்மதம் இருக்கிறதா என்பதை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜெர்மனியில் இருந்து நியூயார்க் போகும் வழியில்  ஜொயானா  வீட்டுக்கு வருகிறான் ஜான்.

படத்தின் ஆரம்பத்தில் தாயாருக்குப் போன் செய்கிறாள் ஜொயானா. "அம்மா இன்று நம் வீட்டிற்கு இரவு விருந்துக்கு வரப்போகும் விருந்தினர் யார் தெரியுமா?" என்கிறாள். அதுதான் படத்தின் தலைப்பு.

“இருபதே  நிமிடங்களில் அவர்மீது  காதல் கொண்டுவிட்டேன், ஆச்சரியமாக இல்லை?” என்று வெகுளியாக ஜோயானா கேட்கும்போது அவள் கண்களில் பளிச்சிடும் மின்னலைப் பார்க்கவேண்டுமே! ஆனால் அதைப்  பொறுமையாகக் கேட்ட தாய், “காதலில் விழுவதற்கு அவ்வளவு நேரம் தேவையா?” என்று சிரித்துக்கொண்டே அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்.

நேரில் ஜானை அம்மாவிடம் அறிமுகப்படுத்தும் வரையில் அவன் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்லாமல் ஆச்சரியப்படுத்துகிறாள். ஜானை நேரில் பார்த்ததும்  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தாயாக வரும் ஹெபர்ன் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அதைப் படம் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும். மகள் வருவதைக் கேட்டு அலுவலகத்தில் இருந்து வரும் தந்தை ஸ்பென்ஸர் ஸ்டிரேஸியும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். ஒரு கறுப்பரைக் காதலிப்பதாக முன்கூட்டியே சொல்லாமல் அவரை நேரில் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும் மகளை அவளுடைய  வெகுளித்தனத்திற்காக மனதிற்குள் கோபம் பொங்கி வந்தாலும் அந்தக் காதலில் அவள்  எந்தப்  பாசாங்கும் இல்லாமல் முழுமனதோடு விழுந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று மனதிற்குள்ளேயே தவிக்கும் ஸ்டிரேஸியின் நடிப்பும் அற்புதமானது.

அதற்குள் ஜான் தன் காதலைப் பற்றித் தன் பெற்றோர்களுக்கு போன் செய்கிறான். எட்டு வருடங்களாக மனைவியை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மகன் இப்பொழுதாவது ஒருத்தியைத் தேடிக் கொண்டானே  என்று அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அந்தப் பெண் ஒரு வெள்ளை இனத்தவள் என்பதை ஜான் தெரிவிக்கவில்லை.

கோல்ப் விளையாடி விட்டு வந்துவிடுவதாக வெளியில் கிளம்பிய ஸ்டிரேஸி,  மனதை மாற்றிக்கொண்டு மாடிக்குச் சென்று விடுகிறார். அங்கு ஜானைச் சந்திக்கிறார்.
எதிர்கால மாமனாரை சந்திக்கும் நாயகன். படம்- நன்றி: இணையம்

“உங்களிடம் தனியாகப் பேசவேண்டும் “ என்கிறான். ஜொயானாவுக்குத்  தெரியாமல் அவருக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறான். "பெற்றோர்கள் சம்மதம் இல்லாவிட்டால் நான் இந்த திருமணத்திற்கு உடன்படப் போவதில்லை" என்கிறான். ஆனால் “இதை அவளிடம் சொல்ல வேண்டாம்” என்கிறான்.

இரவு விருந்துக்கு அனைவரும் தயாராகும்பொழுது ஜானுக்கு போன் வருகிறது. மகனைப் பல வருடங்களாக நேரில் பார்க்கவில்லை என்பதால், இப்போது அவன் இருக்கும் நகரம், வெறும் 40 நிமிட விமானப் பயண தூரத்தில் தான் இருப்பதால் தாங்கள் இருவரும் உடனே கிளம்பி வருவதாகத் தெரிவிக்கிறார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஜான்  திகைத்துப் போகிறான். ஆனால் ஜொயானாவும் அவள் தாயும் அவர்கள் வரவை ஆவலோடு  எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது தந்தையைப் பார்த்து "அப்பா இன்று இரவு விருந்துக்கு வரப்போவது யார் என்று தெரியுமா?" என்கிறாள் ஜொயானா. அவருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதுவும் ஜோயானா-ஜான் செய்த தந்திரமாக இருக்குமோ என்று யோசிக்கிறார்.

அவர்கள் வீட்டில் சமையல் கட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் கருப்பினத்தவள் ஜானிடம் வந்து அவன் செய்யப்போகும் காரியம் தகாத காரியம் என்று எச்சரிக்கிறாள். அதே சமயம் ஜொயானாவின்  தந்தையுடன் வழக்கமாக கோல்ப் விளையாடும் சற்றே சுதந்திரமான சிந்தனை உடைய ஒரு பெரியவர், அன்று மட்டும் ஜொயானாவின் தந்தை  விளையாட வராத காரணத்தைத் தெரிந்துகொள்வதற்காக அங்கு வருகிறார். ஜொயானாவைச் சின்னக் குழந்தையில் இருந்து தெரிந்தவர் அவர். வேற்றினத்தவன் மீது அவளுடைய காதலைத் தெரிந்து கொண்டதும் அவளுக்குத் தன் ஆதரவைத் தெரிவிக்கிறார். இரவு விருந்துக்கு அவரும் அழைக்கப்படுகிறார்.

இரவில் அவர்கள் ஒவ்வொருவரும் கனத்த மனத்தோடு சந்திக்கிறார்கள். ஜானின் தந்தை "33000 மைல்கள் நடந்து உன்னை வளர்த்தேன். இப்படி விவரம் தெரியாமல் நடந்து கொள்கிறாயே" என்று சத்தம் போடுகிறார். “நீ தபால்காரனாக இருந்து நடந்தாய் என்றால் அது நீயாகத் தேடிக்கொண்ட தொழில். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? நானாக வந்தா பிறந்தேன்? நீதானே என்னைப் பெற்றெடுத்தாய்?” என்று சீறுகிறான் மகன். 

"என் மகள் எந்த முடிவு எடுத்தாலும் அவளுடைய தந்தையே எதிர்த்தாலும், என் மகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன்" என்கிறாள் ஜொயானாவின் தாய்.
நாயகனின் பெற்றோர் நாயகியுடன். படம் -நன்றி: இணையம் 

"நீங்கள் இருக்கலாம், ஆனால் எங்களைச் சேர்ந்தவர்கள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள். ஆகவே எனக்கு சம்மதமில்லை" இன்று ஜானின் தாய் மிகவும் மென்மையாக ஆனால் அழுத்தமாகப் பேசுகிறார்.

அற்புதமான விஷயங்கள். தர்க்க ரீதியான வாதங்கள். ஜொயானாவின் தந்தையாக வரும் ஸ்டிரேஸி பல்வேறு முக பாவங்களுடன் வசனங்களைச்  சற்றும் செயற்கை இல்லாமல் தன் முடிவு என்ன என்பதைக் கடைசி வரை சொல்லாமலே, ஆனால் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே போகிறார். சரி, இவர்களின் காதல் வெற்றி பெறப் போவதில்லை என்றுதான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

அப்போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் ஜொயானாவின் தந்தை. அப்போது அமெரிக்காவில் 17 மாநிலங்களில் கறுப்பு இனத்தவரும் வெள்ளை இனத்தவரும் திருமண உறவு கொள்வது சட்டப்படி தடுக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. "எனவே நீங்கள் திருமணம் செய்து கொண்டு ஜெயிலுக்குப் போகப் போகிறீர்களா?" என்கிறார்.

இந்த படம் வெளியாவதற்கு ஆறு மாதங்கள் முன்பு அந்தப் பதினேழு மாநிலங்களிலும் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. (as per ruling by Supreme Court in LOVING vs VIRGINIA, 1967). அதாவது இரு இனத்தவரும் திருமண உறவு கொள்வதில் தவறில்லை என்று ஆகியது. ஆனால் இந்த விஷயத்தையே கிளைமேக்ஸாக டைரக்டர் அமைத்திருந்ததால்  அவசரம் அவசரமாக அந்த வசனத்தை மாற்ற வேண்டி வந்ததாம். அதை  எப்படி மாற்றினார்கள் தெரியுமா?

"நீங்கள் திருமணம் செய்து கொண்டு இந்த 16 மாநிலங்களில் இருந்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும். சமீபத்தில் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றாலும் மக்கள் மனதில் மாறுதல் ஏற்படுவதற்கு இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ? அந்த ஆபத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?" என்று வசனம் மாற்றப்பட்டு விட்டது.

அப்போதும் அவர் ஜொயானாவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா அல்லது மறுக்கிறாரா என்று நமக்குத் புரிவதில்லை.

பணிப்பெண் சாப்பாட்டு மேஜையில் தட்டுகளில் விருந்தைப் பரிமாறி முடித்துவிட்டாள். சாப்பிட வரலாம் என்று சைகை செய்கிறாள். அந்த நிமிடம் தான் அந்த இரகசியத்தைப் போட்டு உடைக்கிறார் ஸ்டிரேஸி. "பெண்ணைப் பெற்றவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் நான் இவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஜான் என்னிடம் சொன்னார்"

இந்த அதிர்ச்சியான தகவலை ஜொயானாவால்  நம்ப முடியவில்லை. ஜானை ஆவேசமாக உற்றுப் பார்க்கிறாள். அவன் தலையைக்  குனிந்து கொள்கிறான்.

ஸ்டிரேஸி மேலும் பேசுகிறார்: "ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்தால் அவன் கவலைப்பட வேண்டியது பெண்ணைப் பெற்றவர்களின் சம்மதத்தைப் பற்றி அல்ல. அவள் மீது அவன் வைத்த அன்பு உண்மையானது என்றால் அவளைத் திருமணம் செய்து கொண்டே தீருவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருந்திருப்பேன்.  அந்த உறுதி ஜானிடம் இருக்கிறதா?" என்கிறார்.

அப்போதுதான் நமக்குப் புரிகிறது.

உடனே பணிப்பெண்ணைப் பார்த்து,  "நல்லது,  சாப்பிட வரலாமா?" என்கிறார் ஸ்டிரேஸி. அனைவர் முகத்திலும் அதிர்ச்சியான சந்தோஷம்.  இன வேற்றுமையைக் கடந்த காதலின் வெற்றி அந்த விருந்தில் பரிமளிக்கிறது.

ஒரு நொடி கூடப்  பார்ப்பவர்களின் பொழுதை வீணாக்காத வகையில் (ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் மாதிரி) விறுவிறுப்பாகவும்  உணர்ச்சி ததும்பும் விதத்திலும் அமைந்த படம் இது. அந்நாளில் இது ஒரு புரட்சிப்படமாகக் கருதப்பட்டது. காரணம், கறுப்பின ஆணும் வெள்ளையினப் பெண்ணும் காதலித்தும், காதலில் அவர்கள் வெற்றியடைந்ததாகக் காட்டப்பட்ட முதல் ஹாலிவுட் படம் இது தானாம்!

சிட்னி பாய்ட்டியரின் வாழ்க்கைத் கதையை அவரது சொற்களிலேயே படிக்க விரும்பினால் உங்களுக்கான புத்தகம் இது:  The Measure of a Man : A Spiritual Autobiography (2000) -HarperCollins.

-       இராய செல்லப்பா


வெள்ளி, ஆகஸ்ட் 09, 2019

காத்திருப்பான் கமலக்கண்ணன் -உண்மை + கதை


காத்திருப்பான்  கமலக்கண்ணன்  -உண்மை + கதை

கமலக்கண்ணன் கதை கொஞ்சம் பரிதாபகரமாக இருக்கும் என்பதால் தான் இவ்வளவு நாள் எழுதாமல் தவிர்த்தேன். இனிமேல் அது முடியாது போலிருக்கிறது. ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 

அண்மையில் நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் கோவிலைப் போலவே  பெரிதாக இருந்த கேன்டீன் அருகில் நின்று கொண்டு குல்ஃபி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்  கமலக்கண்ணன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கும் ஒரு குல்பி வேண்டுமா என்று கண்களால் கேட்டபடியே சட்டை மீது குல்ஃபி வழிய  என்னை நோக்கி வியப்புடன் வேகமாக அவர் வந்தபோதுதான் நம்பினேன்.
நியூ ஜெர்சி -அக்ஷர்தாம் ஸ்வாமி நாராயண பெருமாள் கோவில் நுழைவு வாயில் 
"சுவாமி நாராயணப் பெருமாளை விடவும் உங்களைப் பார்த்ததுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று மனப்பூர்வமாகச் சொன்னார் கமலக்கண்ணன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். அதனாலேயே வாழ்க்கையில் பல முக்கிய வாய்ப்புகளை இழந்தவர். அதைப் போகப்போகச் சொல்கிறேன்.

நான் நியூ ஜெர்ஸி வருவதற்கு ஒரு மாதம் முன்பே அவர் வந்து விட்டதாகவும், சிக்காகோவில்  சில வாரங்களுக்கு முன்புதான்  நடைபெற்று முடிந்த  பன்னாட்டுத் தமிழ்ச்சங்க மாநாட்டில் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியையான அவரது மாமியார் கட்டுரை படிப்பதைக்  கேட்பதற்காகவே வந்ததாகவும்  இல்லையென்றால் மனைவி கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் கூறினார். மாமியாரும்  இன்னும் ஐம்பதுபேரும் தமிழக அரசின் செலவில் வந்ததாகவும் தான் மட்டும் சொந்த செலவில் வந்ததாகவும் கூறினார்.

கேன்டீனில் குல்ஃபி விற்கும் இடத்தில் சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோடை காலம் அல்லவா, பள்ளிகளுக்கு விடுமுறை. "இருங்கள் உங்களுக்கு ஒரு குல்ஃபி வாங்கி வந்து விடுகிறேன்" என்று அந்த  வரிசையை நோக்கி முன்னேறத் தொடங்கினார். "இப்போது வேண்டாம், நேரம் ஆகிவிடும், எனது முகவரியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த சனிக்கிழமை மாலை ஆலிவ் கார்டனில் சந்திக்கலாம்" என்று முகவரி அட்டையைக் கொடுத்தேன். ஆலிவ் கார்டன் என்பது இந்த மாநிலத்தில் ஏராளமாகக் கிளைபரப்பி இருந்த இத்தாலிய உணவு விடுதி ஆகும். நாங்கள் அடிக்கடி போவதுண்டு. உணவுகளில் இலை, தழைகள் நிரம்பியிருக்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு!
நியூ ஜெர்சி -அக்ஷர்தாம் ஸ்வாமி நாராயண பெருமாள் கோவில் பிராகாரம் 

"சரி" என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு கமலக்கண்ணன் கை கழுவச் சென்றார். குல்பி முடிந்திருந்தது. அதன் குச்சியைக் குப்பைக் கூடையில் வீசி விட்டு, சட்டையில் படிந்திருந்த வழிசலைத்  துடைத்துக்கொண்டார். “பார்த்து ஏழெட்டு வருடம் ஆகிவிட்டதே, நிறையப் பேசவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே  இராமாயணக் காட்சிகளைச்  சிற்பங்களாக வடித்து இருந்த தூணை நோக்கிச் சென்று விட்டார். என் மனமோ அவரோடு பழகிய பல ஆண்டுகளை நோக்கி முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.
****

கமலக்கண்ணன் நான் பணியாற்றிய ஊரில் தான் கிட்டத்தட்ட அதே சமயம் இன்னொரு வங்கியில் பணியில் சேர்ந்தார்.  சேர்ந்த  புதிதில் (எல்லாரையும்  போலவே) கொஞ்சம் ஆங்கில அறிவு மட்டு என்பதைத் தவிர வேறு குறைகள் இல்லை. ஆனால் அவர் சேர்ந்த வங்கிக்கு அதுவே  அதிகபட்சம்  என்பதையும்,  அதனால் மொழிவளர்ச்சிக்கு முக்கியத்துவம்  தேவையில்லை என்றும் புரிந்துகொண்டார். எந்த வேலையையும் எளிதாகக் கற்றுக்கொண்டுவிடும் கற்பூர புத்தி. உடன் பணியாற்றும் எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவார். குமாஸ்தாவாக இருந்து அதிகாரியாகிப் பிறகு மேனேஜர் ஆனவர். யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல மனம் படைத்தவர். இப்படி அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆந்திராவில் ஒரு சிறுநகரத்தில் இருந்த தன் வங்கிக்  கிளையில் அவர் மேனேஜராக இருந்தபோது உள்ளூர் ஜமீன்தார் ஒருவரின் வீட்டுத்  திருமணத்திற்குப் போயிருந்தார்.

"ஆந்திராவில் மூன்று பேர் மீது  ஜமீன்தார்களுக்கு அதிக மரியாதை" என்று என் ஆந்திர நண்பர் ஒருவர் கூறுவதுண்டு. ஒருவர் என். டி. ராமராவ், இரண்டாமவர் நடிகை ஜெயமாலினி, மூன்றாமவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொள்ளாத வங்கி மேனேஜர்கள்  என்றார் அவர்.  என். டி. ராமராவ் தொடர்ந்து கிருஷ்ணராக வேடம் போட்டு  ஆந்திர மக்களிடையே தனக்கென்று ஒரு தெய்வீக பிம்பத்தை உண்டாக்கி இருந்தவர். ஜெயமாலினியின் (நடன)த் திறமை உங்களுக்கே தெரியும். ஜமீன்தார் வீட்டுத் திருமணங்களில் முதல் நாள் இரவு நண்பர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் ‘மது‘ நிறைந்த களியாட்டத்தில் ஜெயமாலினி அழைக்கப்படவில்லை என்றால் தம் ஜமீன் பரம்பரைக்கே தீராத அவமானம் என்று கருதினார்கள். ஆனால் இந்த மூன்றாவது வகையினர் எப்படி ஆந்திராவில் முக்கியத்துவம் பெற்றார்கள் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.

ஆந்திராவில் ஜமீன்தார்கள் அதிகம். எவ்வளவுதான் பினாமி ஒழிப்புச் சட்டங்கள் இருந்தாலும், அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் அவற்றைப் புறந்தள்ளி, மிகப் பெரிய நிலப்பரப்புகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு எம்.எல். ஏ.வாகவும், எம்.பி.யாகவும், ஏன், அமைச்சராகவும் கூட அந்த ஜமீன்தார்கள் இருந்தார்கள். மாநிலத்தில் இருந்த பல்வேறு தொழில்களும் சினிமா அரங்குகளும் பெரும்பாலும் இவர்கள் கையில் இருந்தன. ஆகவே கணக்கில் வராத பணம் கணக்கில்லாமல் புழங்கியது. அதை எங்கே கொண்டு போய் வைப்பது? உள்ளூர்க்காரர்கள் ஆன தங்கள் மொழி பேசும் சகோதர வங்கி மேனேஜர்களை அவர்கள் நம்புவதில்லை. காரணம் பாம்பறியும் பாம்பின்கால் என்ற பழமொழி தான்.  ஆகவே வெளியூரிலிருந்து வந்து மூன்றாண்டுகளில் மாற்றலாகிப் போய்விடும் பிறமொழி பேசும் வங்கி மேனேஜர்களுக்கு இந்தப்  பணக்காரர்கள் மரியாதை கொடுத்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பார்கள் என்று அந்த நண்பர் விளக்கம் சொன்னார்.

திடீர் திடீரென்று மூட்டைகளிலும் சூட்கேஸ்களிலும் இரவு நேரங்களில் அந்த மேனேஜர் வீடுகளில் பணம் வந்து இறங்குமாம். எந்தப் பெயரில் அந்தப் பணத்தை வங்கியில் போட வேண்டும் என்பதை வங்கி மேனேஜரே முடிவு செய்து கொள்ளலாமாம். ஜமீன்தார் போன் செய்யும் போது கேட்கும் பணத்தை எதிர்க் கேள்வி கேட்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவே. எந்த இடத்திலும் ஜமீன்தாரின் கையெழுத்து இருக்காது.  ஆதார் கார்டு இல்லாத நேரம். பான் கார்டும் பழக்கத்தில் வராத காலம். ஆகவே வங்கி மேனேஜர்களால் இம்மாதிரிக் கோரிக்கைகளுக்குச்  செவிசாய்க்க முடிந்தது.

ஒருவேளை மேனேஜர்களே ஊழல் செய்து  பணத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டு விட்டால் என்ன ஆகும் என்று கேட்கவேண்டாம். காரணம் ஜமீன்தார் விஷயத்தில் கை வைத்தால் தங்களுடைய இரண்டு கைகளும் இரண்டு கால்களும் ஒரு தலையும் நீங்கலாக வேறெந்த உறுப்புக்கும் சேதாரமில்லை என்று வங்கிப்பணியில் இருந்த அனைவருக்கும் தெரியும். எது எப்படி இருந்தாலும் இந்த ஒரு காரணத்தால் மட்டுமே ஆந்திராவில் இருந்த எல்லா வங்கிகளிலும் எராளமான மேனேஜர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த டெபாசிட் இலக்குகளை சுலபமாக அடைந்து பெயரும் மேற்பதவியும் பெற முடிந்தது என்பதைப்  பின்னால் நான் தெரிந்துகொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில் தான் கமலக்கண்ணன் ஜமீன்தாரர் வீட்டுத் திருமணத்திற்குப் போனார். ஜமீன்தார் பெயர் ஆந்திர வழக்கப்படி நாலைந்து இனிஷியலைக் கொண்டதாக இருந்தது. (கே.வி., ஆர்.வி., எம்.கே., பி.கே., ரெட்டி என்று வைத்துக்கொண்டால் போயிற்று). திருமணத்தில் என்ன நடந்தது, கமலக்கண்ணனை  எப்படி கவனித்தார்கள், என்னென்ன விருந்து பரிமாறினார்கள் என்பதெல்லாம் இப்போதே சொல்லிவிடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.   அதற்கு முன்னால்   அடுத்த வருடம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் போகவேண்டி யிருக்கிறது.
***
அந்த வருடம் கமலக்கண்ணன் தன் உயர் பதவிக்கான புரமோஷன் இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக வங்கியின் தலைமையகத்துக்குப் போனார். அப்போது அவர் இருந்தது மூன்றாவது கிரேடு. அதிலிருந்து நான்காவது கிரேடுக்குப் போக வேண்டும். போனால் அவருக்குக் கார் கொடுப்பார்கள். கிராமத்திலிருந்து பெரிய நகரத்திற்கு மாற்றல் கிடைக்கும். அது பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது.

இங்கு இன்னொரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். இந்த மூன்றாவது கிரேடுக்கு  வருவதற்கே அவருக்கு மூன்று முயற்சிகள் தேவைப்பட்டன. முதல் முயற்சியின்போது இன்டர்வியூவில் "பீகாரில் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ஊர் எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கும் வங்கித் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கமலக்கண்ணனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் காந்தியடிகளின் அடிப்படை சித்தாந்தம் அவருக்குத் தெரிந்திருந்ததால், "பீகாரில் எந்த ஊரில் ஏழைகள் அதிகம் 
வாழ்கிறார்களோ அந்த ஊர்தான் காந்தியடிகளுக்குப் பிடிக்கும்" என்று சமயோசிதமாகக் கூறினார். பொதுவாக இம்மாதிரி இன்டர்வியூக்களில் யாருக்கு புரமோஷன் தர வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிடுவார்கள். அவர்களுக்கு மட்டும் எளிதான கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக "நீங்கள் குழந்தையாக இருந்தபோது  உங்களுக்குத் தாலாட்டு பாடியவர் யார்?" என்று கேட்பார்கள். “அம்மா” என்று பதில் சொல்வீர்கள்.  "பரவாயில்லையே, உங்களுக்கு நல்ல நினைவாற்றல் இருக்கிறது" என்று தலைவர் கூறவும், “ஆமாம், ஆமாம்” என்று மற்ற உறுப்பினர்கள் ஆமோதிக்கவும், அவருக்கு புரமோஷன் கிடைத்து விடும். அவ்வாறு முதல் இரண்டு முறையும் கமலக்கண்ணனுக்குப் புரமோஷன்  கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் நம்பர் 1 என்று வைத்துவிட்டார்கள். அதுவே அவருக்கு வங்கி கொடுத்த மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்த வருடம்  முழுவதும் மெரிட் லிஸ்ட்டில் இருந்த எவரும் மரணம் அடையவில்லை; வேலையை விட்டுப் போகவும் இல்லை என்பதால் அவர் காத்திருப்போர் பட்டியலிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அதுவே அவருக்குக் "காத்திருப்பான் கமலக் கண்ணன்" என்ற பட்டப் பெயரை வாங்கிக்  கொடுத்தது. 

மூன்றாவது முறை அவர் புரமோஷன் இன்டர்வியூவிற்குப் போனபோது  "இந்தியாவில் சாதிக் கலவரம் அதிகமுள்ள ஊர் எது?" என்று கேட்கப்பட்டது. விடை தெரியாவிட்டாலும் உடனே  சமயோசிதமாக "அனேகமாகத்  திருநெல்வேலி மாவட்டம் ஆக இருக்கலாம்" என்று சொல்லி வைத்தார். உடனே தலைவருக்குக் கோபம் வந்தது. "சமீபத்தில் நடந்த விஷயம் கூட உங்களுக்குச் சரியாகத் தெரியாதா?" என்று சீறினார். அருகில் இருந்த பொதுமேலாளர் ஒருவர் அவரை அமைதிப்படுத்தினார். கேள்வியை திசைமாற்றி "அப்படி ஒரு ஊருக்கு  உங்களை புரமோஷன் கொடுத்தால்  போவீர்களா?" என்றார். நம்ம ஆசாமி "உடனே போவேன் சார். ஐ லவ் சேலஞ்சஸ்" என்று பதில் கூறியிருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், தலைமையகத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு ஊரில், வங்கியின் கிளை இருந்தது. அந்த மேனேஜருக்கும் அங்கு வேலை செய்துகொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளினி   ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வேறு மாநிலத் தலைநகருக்குப் போய் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக உள்ளூர்ப் பத்திரிகையில் செய்தி வந்தது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், அது மதக் கலவரமாக ஆகிவிடும்போல் இருந்தது. உடனடியாக அந்த மேனேஜரை அங்கிருந்து வெளியூருக்கு மாற்றிவிட்டார்கள் ஆனால் கலவரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள், மத்தியக்கிழக்கு நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளினியின் கணவனுக்கு விஷயம் தெரிந்து, அடுத்த விமானம் ஏறி, ஆயுதங்களுடன் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கே வந்தபோதுதான் மதக் கலவரமாக ஆரம்பித்தது சமூகக் கலவரமாக மாறிவிடும் தீவிரத்தில் இருப்பது புரிந்தது. உடனே வங்கியில் இருந்த எல்லா ஊழியர்களையும் இடம் மாற்றிவிட்டார்கள். அந்த ஊருக்கு இப்போது ஒரு சரியான மேனேஜர் வேண்டும். யாரும் போகத் தயார் இல்லை. ஆகவேதான் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நம்ம ஆசாமி போகத் தயார் என்று கூறிய உடனே தலைவர் மறுவார்த்தை பேசாமல், "சரி உங்களுக்கு புரமோஷன் கொடுத்தாகிவிட்டது. ஆர்டர் வந்த அடுத்தநாளே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள்" என்று கைகுலுக்கி வழியனுப்பினார். அப்படித்தான் மூன்றாவது முயற்சியில் புரமோஷன் கிடைத்து இப்போதைய ஊரில் இருக்கிறார் கமலக்கண்ணன். தன் மென்மையான அணுகுமுறையால் ஊர் மக்களின் நன்மதிப்பை மீண்டும் வங்கிக்குக் கொண்டு வந்தார். எனவே இந்த முறை அவருக்குப்  புரமோஷன் நிச்சயம் என்று பொதுமேலாளர்களே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது கமலக்கண்ணனுக்கும் தெரியும். ஆகவே உற்சாகமாக இருந்தார்.

அந்த வருடம், முன்னரே சொன்னபடி ஜமீன்தார்களின் உதவியோடு தன்னுடைய டெபாசிட் இலக்குகளை வெற்றிகரமாகக் கடந்து இருந்தார். அது மட்டுமல்ல மண்டல மேலாளர் கேட்டுக்கொண்டபடி, மேலும் இரண்டு கிளைகளுக்கும் தன் ஊரில் இருந்து பெரிய டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொடுத்திருந்தார். அதனால் மண்டலத்தாருக்கும் அதே வருடம்  ஜி.எம். ஆகப் புரொமோஷன் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டிருந்தது. ஆகவே கமலக்கண்ணனின் புரமோஷனை  யாராலும் தடுக்கமுடியாது என்று எல்லாருமே நம்பினார்கள்.
 **** 

இனி இன்டர்வியூ அறைக்குள் போவோம். "வாருங்கள், வெற்றியாளரே" என்று தலைவர் இன்முகத்தோடு வரவேற்றார். பொதுவாக, ஒருவரைத்  தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்றால் அவர் நுழையும்போது தலைவர் அவர் முகத்தை ஏறெடுத்தும் பாராமல் மேஜையில் இருக்கும் காகிதங்களைப்  பார்த்தபடியோ அல்லது காப்பி அருந்தியபடியோ தான் இருப்பார். அல்லது கடுகடுப்பாக உறுமுவதும் உண்டு. எனவே கமலக்கண்ணனுக்கு நம்பிக்கை பிறந்தது. "உங்களுக்கு முன்னால் இருந்த இரண்டு மேனேஜர்களும் செய்ததை விட அதிகமாக நீங்கள் சாதனை செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்” என்கிறார் தலைவர். “உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?" என்று புன்சிரிப்போடு கேட்டார்.

இப்படிக் கேட்டால் என்ன பதில் கூற வேண்டும் என்று கமலக்கண்ணனுக்கு உள்ளுணர்விலேயே தெரியும். "மன்னிக்க வேண்டும்  ஐயா! இந்தப் பாராட்டுக்கு நான் ஓரளவுதான்  தகுதி உடையவன்…” என்று  தவறுக்கு வருந்துபவன் போல முகபாவத்தை வைத்துக்கொண்டு கூறி, நிறுத்தவேண்டும். உடனே அனைவரும் ஆர்வமாகப் பார்ப்பார்கள். “என்னுடைய  மண்டல மேலாளர் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் இது சாத்தியமானது” என்று கூற வேண்டும். சிலசமயம் மண்டல மேலாளருக்கும் வங்கியின் தலைவருக்கும் பனிப்போர் தொடங்கி இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கித் தலைவருக்கு மிகவும் வேண்டிய பொதுமேலாளர் ஒருவர் பெயரைக் கூறிவிட வேண்டும். "அவர் கொடுத்த சில குறிப்புகளால்தான் என்னால் சாதிக்க முடிந்தது" என்று பணிவோடு கூறவேண்டும். 

இந்த இரண்டாவது விதியைப் பின்பற்றி நம் கமலக்கண்ணன் கூறினார்: "ஐயா, இந்த வெற்றியில் பெரும்பகுதி என் பொது மேலாளர் திரு….... அவர்களையே  சாரும். அவருடைய வழிகாட்டுதல் மட்டும் இல்லையென்றால் மிகவும் சிரமப்பட்டிருப்பேன்" என்றார். தலைவரின் முகபாவம் இன்னும் அதிக விவரத்தை எதிர்பார்த்ததுபோல் இருந்ததால், அந்தப் பொதுமேலாளர் எப்படி இரண்டுமுறை ஜமீன்தாரின் வீட்டு விசேஷங்களுக்கு வந்துபோனார் என்பதையும், எவ்வாறு இன்னும் சில நண்பர்களையும் தனக்கு  அறிமுகப்படுத்தினார் என்பதையும் விளக்கமாகக் கூறினார்.

உண்மையில் அந்தப் பொதுமேலாளருக்கும் இவருடைய கிளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால்,  தலைவரின் மகளுக்குச் சென்ற வருடம் நடைபெற்ற திருமணத்தில் எல்லாச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்கொடுத்ததாக அந்தப்  பொதுமேலாளருக்கு ஒரு 'இது' உண்டு. ஆகவேதான் அவருடைய பெயரைச் சொல்லி வைத்தார் கமலக்கண்ணன்.

தலைவர் முகத்தில் புன்னகை மின்னியது. மற்ற உறுப்பினர்களிடம் "பார்த்தீர்களா, தனக்குத் தொடர்பில்லாத கிளையாக இருந்தாலும் கூட எவ்வளவு ஆர்வமாக உதவி செய்திருக்கிறார் அந்தப் பொதுமேலாளர்" என்று பாராட்ட, உடனே அவர்கள் எல்லாம் ‘ஆமாம், ஆமாம்’ என்று தலையசைக்க, "நல்லது, கமலக் கண்ணன், நீங்கள் போகலாம்" என்றார் தலைவர் உற்சாகமாக.

ஆனால் இரண்டு நாள் கழித்து புரமோஷன் லிஸ்ட் வெளியானபோது அதில் கமலகண்ணன் பெயர் இல்லை! வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் 1 இல் அவர் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. வழக்கம்போலக்  'காத்திருப்பான் கமலக்கண்ணன்' ஆனார்.

கமலக்கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்டர்வியூவில் கேட்கப்பட்டது ஒரே ஒரு கேள்விதான். அதற்கு இவர் சொன்னதும் சரியான பதில்தான். உண்மையான பதில்தான். அன்று ஜமீன்தார் வீட்டுத் திருமணத்திற்கு சென்றபோது, அந்தப் பொதுமேலாளரும் வந்திருந்தார். அவர் வருவதுபற்றி இவருக்குத் தெரியாது. பெரிய இடத்து விஷயம் அல்லவா! ஜமீன்தாரிடம் கமலக்கண்ணனைச்  சிறப்பாக அறிமுகப்படுத்தி ஏதோ பேசினார். அதன் பிறகுதான் ஒரு மிகப் பெரிய தொகை டெபாசிட்டாக கிடைத்தது. அப்படியிருந்தும் தனக்கு புரொமோஷன் கிடைக்காமல் போனதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று புரியவில்லை. யாரிடம் கேட்பது?

நேராக மண்டல மேலாளரிடம் போனார். தனக்கு ஆறுதலாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தால் வழக்கத்திற்கு மாறாக அவர் கோபமாக இருந்தார். "கமலக்கண்ணன், இனிமேல் இந்த வங்கியில் உங்களுக்கு புரமோஷனே கிடைக்காது. நீங்கள் எந்தப் பொதுமேலாளர் பெயரை இன்டர்வியூவில் கூறினீர்களோ, அவர் இருக்கும் வரை கிடைக்காது" என்று எழுந்து நின்று ஆத்திரமாகக் கூறினார்.

கமலக்கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப்  பொதுமேலாளரைப் பற்றித் தான் தவறாக ஏதும் கூறவில்லையே, தனக்கும் அவருக்கும் வேறு எந்த விரோதமும் இல்லையே! பிறகு என்னதான் நடந்தது?
***** 

தனக்குத் தெரிந்த இரகசியத்தை மண்டல மேலாளர் இவரிடம் கூறி விடுவாரா? 

கல்கத்தாவில் ஜமீன்தாரின் மருமகன் தொடங்கவிருக்கும் ஒரு தொழிலில் தன் மருமகனைப் பங்குதாரராகச்  சேர்ப்பதற்கு வங்கியின் தலைவர் முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, இந்தப்  பொதுமேலாளர் அதை எப்படியோ மோப்பம் பிடித்து, தன்னுடைய மகனை அந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆக்கிவிட்டார் என்பதும் அதற்காகத்தான் வங்கித் தலைவருக்குத்  தெரியாமலேயே இரண்டுமுறை ஜமீன்தாரின் கிராமத்திற்கு  வந்திருக்கிறார் என்பதும் வெளியில் சொல்லக்கூடிய விஷயங்களா? ஆகவே, அவரைப் பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுப்பதற்கு இரகசியமாக ஆதாரம் தேடிக்கொண்டிருந்தார் தலைவர். அப்போதுதான் கமலக்கண்ணன் கொடுத்த விவரங்கள் அவருக்கு வசதியாகப் போய்விட்டன. அனுமதி பெறாமல் தலைமையகத்தை விட்டு ஆப்சென்ட் ஆனதற்கும், வாடிக்கையாளரின் செலவில் விமானப்பயணம் மேற்கொண்டதற்கும் விளக்கம்கேட்டு, விசாரணை நடத்தி, அவரைப் பதவியிறக்கம் செய்துவிட்டார்கள். எல்லாம் இரண்டே நாளில் நடந்து முடிந்துவிட்ட விஷயம்  கமலக்கண்ணனின் காதுகளுக்கு இன்னும் வந்துசேரவில்லை.

எப்படியோ, மீண்டும் "காத்திருப்பான் கமலக்கண்ணன்" என்று ஆகிவிட்டதில் நம்மவருக்கு ஏற்பட்ட துக்கம் ஆறுவதற்கு வெகு நாட்களாயிற்று. அதன் பிறகு அவர் பிரமோஷனுக்கே  போவதில்லை என்று முடிவுசெய்து அதே கிரேடில் ஓய்வு பெற்றார். அந்தப் பொதுமேலாளரும் ஒரே மாதத்தில் விருப்ப ஓய்வு பெற்றுகொண்டு வடமாநிலம் போய்விட்டார்.

****
ஆலிவ் கார்டனில் உணவு அருந்தியபடி கமலக்கண்ணனிடம் கேட்டேன்: “எப்படி  அமெரிக்கா வந்தீர்கள்?" என்று. மனிதர் உற்சாகமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

"என் மகளுக்குத் திருமணமாகி விட்டது. மருமகன் நியூயார்க்கில் வேலை பார்க்கிறார். ஒரு குழந்தை இருக்கிறது. அதைப் பார்த்துக் கொள்வதற்காக ஆறுமாதம் வந்திருக்கிறேன்" என்றார். மருமகனைப் பற்றி மேலும் விசாரித்தேன். அவர் சொல்லக் சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எந்தப் பொதுமேலாளரால் இவருக்குப் புரமோஷன் கிடைக்காமல் போனதோ, அவருடைய இரண்டாவது மகன் தான் இவருக்கு மருமகனாம்! காதல் திருமணமாம்!

"சரிதான், காத்திருந்தது வீண்போகவில்லை" என்று சிரித்தேன் நான்.
******

(நல்லவேளை, என்னுடைய வங்கியில் இந்த மாதிரியெல்லாம் நடப்பதில்லை!)

© இராய செல்லப்பா