(இன்று கிழமை புதன்-4)
அமெரிக்காவில் 23 ஆவது நாள்
(குடும்பம் ஒரு தொடர்கதை)முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியே எழுதலாம் என்று பார்த்தால் விதி நம்மை விடுகிறதா?
நண்பர் ஹெச். என். ஹரிஹரனின் சிறுகதை “பிரம்படி வாத்தியார்” கல்கி (ஏப்ரல் 29, 2022) இதழில் வெளியாகியிருந்த தகவல் கிடைத்தவுடன், கல்கி ஆன்லைனைத் திறந்தேன். தப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாணவர்களைப் பிரம்பால் பிளந்து தள்ளும் வாத்தியார் ஒருவரைப் பற்றிய கதை. ஊரையும் பேரையும் மாற்றிவிட்டால் உங்களுக்கும் எனக்கும் கூட அப்படியொரு வாத்தியார் வாய்த்திருந்தது நினைவுக்கு வரலாம். அப்படிப்பட்ட பிரம்படி வாத்தியார் ஒரு நாள் தன் பிரம்பை ஒடித்துப்போட்டு விட்டு இனிமேல் யாரையும் அடிப்பதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அது ஏன் என்பதுதான் கதை. கதையின் முடிவில் வாத்தியாருடன் நாமும் அழுவோம். வழக்கம்போல் ஹரிஹரனின் இன்னொரு மணியான கதை. வாழ்த்துக்கள் ஹரிஹரன்!
கல்கி ஆன்லைனில் ‘மங்கையர் மல’ரும் ‘தீபமு’ம் சேர்ந்து படிக்கக் கிடைக்கின்றன. அச்சு இதழுக்கும் இந்த ஆன்லைன் இதழ்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லாத அழகான வடிவமைப்பு. கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. வாழ்த்துக்கள் ரமணன்!
மங்கையர் மலரைப் புரட்டியபோது ‘வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க’ என்று ஒரு பகுதியைக் கண்டேன். அங்குதான் விதி என்னைப் பார்த்து சிரித்தது, “உடலுக்கு ஏற்ற கத்திரிக்காய்” என்ற கட்டுரை வடிவத்தில்! அதைப் படித்தவுடன் எனக்கு நன்கு தெரிந்த ஒரு புது மாப்பிள்ளை கதை நினைவுக்கு வந்துவிட்டது. அதை முதலில் எழுதிவிடலாம், அமெரிக்காவுக்கு என்ன அவசரம் என்று மனம் சொல்லியது.
***
புது மாப்பிள்ளை என்றாலே ஏழை வீடாக இருந்தாலும் நல்ல கவனிப்பு உண்டுதானே! அதிலும் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் என்றால் கேட்கவா வேண்டும்? மாப்பிள்ளை, பெண் இருவருமே நல்ல வேலையில் இருந்தார்கள். மாமனாரும் நல்ல பதவியில் இருந்தார்.
நமது இந்தியப் பண்பாட்டின்படி, திருமணம் ஆன சில வாரங்களுக்குப் பிறகு புது மாப்பிள்ளை தன் மனைவியுடன் சில நாள் தங்கி ஓய்வெடுப்பதற்காக மாமனார் வீட்டுக்கு வந்தார். உபசாரத்திற்குக் கேட்கவேண்டுமா? மாமனார் தான் ஆபீசுக்குப் போகும்வரை கவனமாகக் கவனித்துக் கொண்டார். பிறகு மனைவியை அழைத்து, “மாப்பிள்ளையை நனறாகக் கவனித்துக்கொள். உன் பெண்ணையும் எந்த வேலையும் செய்யவிடாதே. வேளாவேளைக்கு நன்றாகச் சமைத்துப்போடு. எண்ணெய்ப் பண்டம் அதிகமாகக் கொடுக்காதே. மாப்பிள்ளைக்கு என்னென்ன பிடிக்கும் என்று உன் பெண்ணைக் கேட்டு அதற்கேற்ப நடந்துகொள்” என்று அறிவுரை கூறிவிட்டுப் புறப்பட்டார்.
காலை உணவு இட்லி, வடை, பூரி. அதற்கு நான்கு வண்ணங்களில் தனித்தனி சட்னி. அத்துடன் சாம்பார், மற்றும் மிளகாய்ப்பொடியுடன் எண்ணெய்.
போதும் என்று மாப்பிள்ளை சொன்னால் விட்டால்தானே! “என்னடி பொண்ணே, இந்த மாப்பிள்ளை சாப்பிடுகிற லட்சணம்? சின்ன வயசில் வயித்துக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடவேண்டாமா? நீயும் ஒண்ணும் சொல்லாமல் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாயே! இப்படி இருந்தால் உனக்கு மட்டுமா கெட்ட பேர்? என் பிள்ளை இளைத்து துரும்பாகி விட்டானே என்று சம்பந்தி அம்மா என்னையும் இல்லே வசை பாடுவார்?” என்று மாமியார் அன்பு மிகுதியால் மேலும் மேலும் இட்லிகளை வைத்துக்கொண்டே இருந்தார். அம்மாவின் அறிவுரையால் உந்தப்பட்ட மகளும் தன் பாட்டுக்கு மேலும் இரண்டு பூரிகளை கணவனின் தட்டில் சுமத்தினாள்.
பாவம், மாப்பிள்ளை. விழுங்கவும் முடியாமல், மீதம் வைக்கவும் முடியாமல், தட்டை ஒரு வழியாகக் காலி செய்து எழுவதற்குள் அவனுக்கு ‘தாவு’ தீர்ந்துவிட்டது.
உண்ட களைப்பில் மாப்பிள்ளை வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தார். மாமியார் மிகுந்த நாணத்துடன், “ஏன் மாப்பிள்ளை, ப்ரேக்பாஸ்ட எப்படி இருந்தது? ஒன்றுமே சொல்லவில்லையே! ஒருவேளை உங்கள் டேஸ்டுக்கு ஏற்ற மாதிரி இல்லையோ?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.
நல்ல வேளை, பெண் தன் கணவனுக்குக் கைகொடுக்க முன்வந்தாள். “எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தது அம்மா! வயிறுதான் சற்று சின்னதாக இருந்துவிட்டது” என்று சிரித்தாள்.
அவனுக்குப் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் சிரமப்பட்டு வாயைப் பொத்திக்கொண்டான். அதிகப்படியாக உட்கொண்ட இட்லித் துண்டோ, பூரி விள்ளலோ, புதினா சட்னியோ, தேங்காய் சட்னியோ அவனை மீறிக்கொண்டு வெளியேறும் அபாயத்தை ஒருவாறு தடுத்து நிறுத்தினான்.
“ஆனாலும் இவ்வளவு கூச்சப்படக் கூடாது மாப்பிள்ளை! உங்களுக்கு என்ன காய்கறிகள் பிடிக்கும் என்று சொன்னால் நானும் இவளும் சேர்ந்து சூப்பராகச் சமைத்துப் போடுவோம். நாலைந்து நாளாவது ஆபீஸ் தொல்லை இல்லாமல் சந்தோஷமாக இருங்களேன்” என்கிறார் மாமியார்.
ஊஞ்சலின் அசைவில் உணவுக் குழலில் இருந்து கொஞ்சம் உணவு கீழே இறங்கிவிட்டதால் ஒருவாறு அவனால் பேச முடிந்தது. ஆனால் தனக்கு என்ன காய்கறிகள் பிடிக்கும் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு பிஎஸ்சி பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை சென்று முதல் நாள் நண்பன் ஒருவனுடன் பச்சையப்பன் கல்லூரி விடுதியில் தங்கியபோது, உணவில் பரிமாறப்பட்ட சாம்பாரில் இருந்த காய் மிகவும் நன்றாக இருந்ததாக அவனுக்குத் தோன்றியதும், அதன் பெயர் பரிமாறியவருக்கே தெரியாமல் போக, நண்பன் ஓடிப்போய், கேன்டீன் வெளிப்புறம் இருந்த ‘மெனு’ பலகையைப் பார்த்து ‘இன்று கத்தரிக்காய் சாம்பார்’ என்று உரக்க அறிவித்ததும், அதன் பிறகும் மற்ற மாணவர்கள் அதை கத்தரிக்காய் தான் என்று ஏற்க மறுத்ததும்….
“எனக்குக் கத்தரிக்காய் பிடிக்கும்” என்று மாமியாரை நோக்கிக் கூறினான்.
“அப்பாடா, ஜமாய்த்துவிடலாம்! ஒன்றுக்கு மூன்று வகை கத்தரிக்காய்கள் நேற்றுத்தான் வாங்கிவந்தார்” என்று மாமியார் பகல் உணவைத் தயாரிக்கும் பணியில் உள்ளே போனார்.
உடனடியாக அவர் மனதில் ஒரு பட்டியல் தயாராகிவிட்டது:
கத்தரிக்காய் பொரியல்
கத்தரிக்காய் பிட்லை
கத்தரிக்காய் துவையல்
கத்தரிக்காய் சாம்பார்
கத்தரிக்காய் தயிர்ப் பச்சடி
கத்தரிக்காய் ஊறுகாய்
கத்தரிக்காய் வெங்காயம் கலந்த சாதம்
போதாதற்கு அவருடைய மகள் தனக்குத தெரிந்த ‘ரெசிபி’ களையும் சேர்த்துக்கொண்டாள்:
கத்தரிக்காய் வெஜ் பிரியாணி
பைங்கன் கா பார்த்தா
ஆலு பைங்கன் சப்ஜி
பர்வா பைங்கன்
காலிப்ளவர் பைங்கன் கறி
பயத்தம்பருப்பு சேர்த்த கத்தரிக்காய் கூட்டு
ஆனால் மாப்பிள்ளை தங்கியிருக்கப் போவதோ இன்னும் மூன்றே நாட்கள்! அதற்குள் இந்தப் பதின்மூன்று ஐட்டங்களையும் அவரால் எப்படிச் சாப்பிடமுடியும் என்று மாமியார் ஏங்கினார். கணவரிடம் தொலைபேசியில் பேசினார்.
அதற்கு மாமனார் ஒரு திட்டம் தயாரித்துக் கொடுத்தார்.
மாப்பிள்ளையை தினமும் காலை ஐந்து மணிக்கே எழுப்பிவிடுவது; விளையாட்டு மைதானத்தில் ஒருமணிநேரம் நடைப் பயிற்சி அல்லது சைக்கிளிங் செய்வது. இதன் மூலம் அவருக்கு காலையிலேயே அதிகப் பசி உண்டாகிவிடும். எனவே எட்டு மணிக்கு ப்ரேக்பாஸ்டில் கத்தரிக்காயின் இரண்டு ஐட்டங்களைத் தள்ளிவிடலாம்.
ஒன்பதுமணிக்கு அவரை மீண்டும் பூங்காவில் நிழலான பகுதியில் மனைவியோடு நடக்க வைப்பது. திரும்பி வந்தவுடன் மீண்டும் இரண்டு ஐட்டங்களை உள்ளே தள்ளுவது.
பன்னிரண்டு மணிக்கு பகல் உணவில் மூன்று கத்தரிக்காய் ஐட்டங்களையாவது சேர்க்கவேண்டியது. சாப்பிட்டு அரைமணி ஆனதும் அவரை மாமனாரின் அலுவலகத்து வரச்சொல்வது. அங்கு நிழல்மிகுந்த ஐந்து ஏக்கர் வெட்டவெளியில் நடக்கவைப்பது. அதனால் நன்றாக
ஜீரணம் ஆவதுடன் மேற்கொண்டு பசியும் எடுக்க ஏதுவாகும்.
மாலை ஐந்து மணி டிபனுக்கு நார்த் இந்தியன் ஐட்டம் இரண்டை அவர் எடுத்துக்கொள்ளலாமே! மறுபடி இரவு எட்டுமணிக்கு வழக்கம்போல கத்தரிக்காய் வெஜ் பிரியாணி சாப்பிடட்டும் என்றார் மாமனார்.
இதேபோல செய்தால் மூன்று நாளைக்குள் 13 ஐட்டங்களை அவருக்குப் பண்ணிப்போட்ட சாதனையை செய்துவிடலாம் என்று மகளும் தாயும் முடிவுசெய்தனர்.
அப்போதுதான் மகளுக்குத் தன் டில்லி நண்பி ஒருத்தியின் நினைவு வந்தது. அவளிடம் ஆலோசனை கேட்டாலென்ன என்று தோன்றியது.
பிரிஞ்சால் - கத்தரிக்காய் என்றதும் அவள் துள்ளிக் குதித்தாள். சபாஷ் என்றாள். கத்தரிக்காயைக் கொண்டு முப்பது ரெசிபிகள் தயாரிக்கலாமே என்றாள்.
இவளுக்குத் தலை சுற்றும்போலாகி விட்டது. சரி, நீ தயாரிப்பு முறைகளை வாட்சப்பில் அனுப்பு என்று பேச்சை முடித்தாள்.
மறுநாள் பொழுது விடிந்தது.
காலை ஐந்து மணிக்குக் கணவனை எழுப்பவேண்டும் என்ற கவலையோடு தூங்கப்போனவள், ஆறு மணிக்குத்தான் எழுந்திருந்தாள்.
தன்னைத் தானே நொந்து கொண்டவளாய், கணவனைத் தொட்டு எழுப்ப முயன்றாள். “என்னங்க டியர் …ப்ளீஸ் எழுந்திருங்க…நேரமாச்சு..” என்றாள். அவன் அசையவில்லை. எழுந்து விளக்கைப் போட்டாள்.
என்ன இது, அவரைக் காணவில்லை! சைக்கிள் இருக்கும் இடம் காலியாக இருந்தது. ஓ, தனக்கு முன்னாலேயே எழுந்து சைக்கிளிங் போய்விட்டாரோ? நல்லது என்று பல்துலக்கக் கிளம்பினாள்.
சற்று நேரத்தில் மாமனார் வந்தார். “மாப்பிள்ளை மிகவும் சுறுசுறுப்பானவர்! சைக்கிள் எடுத்துக்கொண்டு போய் கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் ஆகிறது. எததனை ரவுண்டு போனாரோ! சீக்கிரம் பிரெக்பாஸ்ட் ரெடி பண்ணு. பாவம் ரொம்ப பசியோடு வருவார். முதலில் சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு குளிக்கப்போகட்டும்” என்றார்.
பிறகு மனைவியிடம் “நம்ப லிஸ்ட் படி எல்லா ஐட்டமும் செய்துவிடுவாய் அல்லவா? கத்தரிக்காய் என்றால் மாப்பிள்ளைக்கு மிகவும் பிடிக்குமாம். அவருக்கு நாம் குறைவு வைக்கலாமா?” என்றார். “எப்பொழுதும் உங்களுக்கு என்மீது சந்தேகம்” என்று அம்மணி குறைபட்டுக்கொண்டார்.
ஆனால் மேலும் ஒரு மணிநேரம் ஆகியும் மாப்பிள்ளை வரவில்லை. அதற்குப் பதில் மாமனாரின் அலுவலகத்து வாட்ச்மேன் தான் சைக்கிளில் வந்தார்.
“ஐயா, உங்க சைக்கிளையும் இந்தக் கடிதத்தையும் யாரோ ஒருவர் நம்ப ஆபீசில் வந்து என்னிடம் கொடுத்துவிட்டு டாக்சியில் ரயில்வேஸ்டேஷனுக்குப் போய்விட்டார்” என்றார் வாட்ச்மேன்.
கடிதத்தின் சுருக்கம் இதுதான்: அவசரமாக அவரை அலுவலக வேலையாக உடனடியாக மதுரைக்குப் புறப்படச் சொன்னார்களாம். லீவு கேன்சல் ஆகிவிட்டதாம். ஆகவே சொல்லாமல் கிளம்பவேண்டி நேரிட்டதாம். இல்லையென்றால் ரயிலைத் தவறவிடவேண்டி இருக்குமாம்.
“எனக்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு தயாரித்த 13 கத்தரிக்காய் ஐட்டங்களையும் அடுத்த வாரம் வரப்போகும் உங்கள் மூத்த மாப்பிள்ளைக்கு கொடுத்து உபசரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு பின்குறிப்பும் இருந்தது!
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
********
மங்கையர் மலரில் வந்த முழு கட்டுரை இதோ:
உடலுக்கு ஏற்ற கத்திரிக்காய்
கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் கொண்டது. வாதநோய், சளி, பித்தம், தொண்டைக்கட்டை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. முற்றிய பெரிய கத்திரிக்காய்களை விட பிஞ்சு கத்திரிக் காய்கள் மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இதனை பத்திய சாப்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.
பிஞ்சு கத்திரிக்காய் மூளை செல்களை பாதுகாக்கும். இதில் விட்டமின் C, A, பொட்டாசியம், பைபர் உள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்ள அனிமியா என்ற இரும்பு சத்து குறைபாட்டை தடுக்க முடியும். இதில் உள்ள காப்பர் அதிக சிவப்பு ரத்த செல்களை உற்பத்தி செய்ய உதவுவதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்.
******
வேலூரிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் சிறிய முட்களுடன் கூடிய இலவம்பாடி கத்தரிக்காய்
பதிலளிநீக்குகிடைக்கும்அருமையான சுவை..கத்தரிக்காய் ஒரு ஏழை பங்காளன்..
சாப்பிட்டு நாளாயிற்று நண்பரே! இலவம்பாடி கத்தரிக்காய் கிடைக்கும் நாளில் போன் செய்யுங்கள். வந்து வாங்கிக்கொள்ளுகிறேன்!
நீக்குபதிவிற்கு வரும் முன்னரேயே கல்கியில் கதையை வாசித்துவிட்டேன் சார். கடைசியில் கண்ணில் நீர் பனித்தது. பதிவுக்கு வந்தால் பதிவின் ஆரம்பமே கதை பற்றி. கதையை வாசித்ததும் எனக்கும் என் ஐந்தாம் வகுப்பு நினைவுக்கு வந்தது. பிரம்படி வாங்கியது உட்பட.
பதிலளிநீக்குசுஜாதாவும் வெளிநாடும் என்ற பகுதி வருகிறதே அதை வாசிக்கப் போன போது இந்தக் கதையும் கண்ணில் பட்டது.
ஆம் கல்கியுடன் கூடவே மங்கையர் மலரும், இருக்கிறதுதான்.
கீதா
வருகிறதே - இருக்கிறதே
நீக்குகீதா
கதையை வாசித்து சிரித்து முடியலை சார் முடிவு எதிர்பார்த்ததுதான் அதாவது மாப்பிள்ளை எப்படியோ தப்பித்து தன் வீட்டிற்குச் சென்றுவிடுவார் என்று நினைத்தேன்! நிஜமாகவே இந்த புதுமாப்பிள்ளை உபசாரம் என்பது தர்மசங்கடமான ஒன்று. இரு வருடம் முன்பு ஒரு புதுமாப்பிள்ளை உபசாரம் அந்தப் பையன் திணறி...போதுமடா சாமி என்று.. அதிருக்கட்டும் ஏன் இப்படி புதுமருமகள் உபசாரம் என்பது வழக்கத்தில் இல்லையோ?!!! என்று என் மனதில் இதைச் சார்ந்து ஒருகதை அப்போது எழுந்தது.
பதிலளிநீக்குமங்கையர் மலருக்குள் பெரும்பாலும் போவதில்லை.
கீதா
புது மருமகளுக்கு இப்படி உபசாரம் செய்வதில்லையா? எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள் நண்பரே? மருமகன் என்றால் சிலநாள் தங்கிவிட்டுப் போய்விடுவார். அதனால் தான் அவருக்கு எக்ஸ்டிரா உபசாரம். மருமகள் நிரந்தரமாகத் தங்குவதற்கு மட்டுமல்ல, மாமியாரின் அதிகாரத்தைப் பறித்துக்கொள்ளவும் அல்லவா வருகிறாள்! அதிகாரமே கிடைக்கும்போது, வெற்று உபசாரம் எதற்கு?
நீக்குஹ ஹ ஹா!கதைமுடிவு கடைசியில்
பதிலளிநீக்குஉப்ப,காரம் குறைந்த எண்ணைக்
கத்திரிகாயாகிவிட்டதே!
அருமையான நடை.
அடடா, எண்ணெய்க் கத்தரிக்காய் என்று இன்னொரு ஐட்டத்தை அவர்கள் சேர்க்காமல் விட்டார்களே, என்ன அநியாயம்?
நீக்குNice
பதிலளிநீக்குமாமியாருக்கு அடுத்து சாமியார் சாப்பிட்ட மாங்கொட்டை கதை வருமா?
பதிலளிநீக்குஆஹா, என்னமா லீட் கொடுக்கிறீர்கள்!
நீக்குஇதைப் படிக்கும் போது நான் பட்ட புது மாப்பிள்ளை அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. மிகவும் நகைச்சுவையாக இருந்தது.
பதிலளிநீக்குமேலும்
சில ஐயிட்டங்களை விட்டு விட்டீர்களே .
14. கத்திரிக்காய் பஜ்ஜி
15.பெரிய குண்டு கத்திரிக்காய் சுட்டு கொத்சு.
16. கத்திரிக்காய் & வேர்கடலை போட்டு துவரம் பருப்பு, புளி ஊற்றி கூட்டு.
"எங்கள் வீட்டில் நான் மட்டும்தான் கத்தரிக்காய் சாப்பிடும் ஆள்" என்று நானிட்ட கமன்ட் நேற்று வெளியிடப்பட்டது என்று கண்ணிலும் தெரிந்தது. இப்போது காணோம்!
பதிலளிநீக்குஅப்படியா? என் வலைத்தளத்தை யாராவது ஹேக் செய்கிறார்களா?
நீக்குஒருவேளை எழுத்துப் பிழைகளை நான் திருத்தும் கணத்தில் உங்கள் கருத்தை வெளியிட்டு, நான் அப்டேட் செய்யும்போது மறைந்திருங்குமோ?
பதிலளிநீக்குஇல்லை, சில நாட்களாகவே எல்லா தளங்களிலும் இருக்கும் படுத்தல். முன்பு வெங்கட்டுக்கும் உங்கள் தளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நானே சொல்லி இருந்தேன்.
நீக்கு"வாங்கி பாத்" விட்டுப்போய் விட்டதே அந்த லிஸ்ட்ல
பதிலளிநீக்குகத்திரி வெயில் தாக்கத்தில் பல முனை கத்தரிக்கா ரெசிபி.
ஜோர் ஜோர்
ஆமாங்க, ரொம்ப சுவையாக இருக்குமே வாங்கி பாத்! அவசரத்தில் விட்டுப் போயிருக்கும், பாவம்!
நீக்குஇது தான் கத்திரி வெயில்...!
பதிலளிநீக்குஹாஹாஹா! என் மாப்பிள்ளைக்கும் கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குபாவம், அந்த ஆரம்ப நாட்களில் அந்த அப்பாவியை என்னமாய்ப் படுத்திற்றோ உங்கள் கத்தரிக்காய்!
பதிலளிநீக்கு