புதன், மே 10, 2017

அம்மாவுடன் பேசினீர்களா?

பதிவு எண் 38/ 2017
அம்மாவுடன் பேசினீர்களா?
   -இராய செல்லப்பா

இன்றைய குழந்தைகள் புத்திசாலிகள். காரணம் அவர்களின் தாயார்கள் புத்திசாலிகள். (அதற்குக் காரணம் அந்தத் தாயார்களின் பெற்றோர்கள் புத்திசாலிகள் with some exceptions- அதாவது நம்மைப்போல.)

ஆனால் இன்றையக் குழந்தைகளைப் புத்திசாலியாக்குவதில்  முக்கியமான காரணியாக இருப்பது, தங்கள் குழந்தைகளுடன் அத் தாய்மார்கள் தொடர்ந்து நடத்தும் தரமான பேச்சுவார்த்தையே (க்வாலிட்டி கான்வர்சேஷன்) என்றால் மிகையில்லை.

பள்ளியில் இருந்து வந்தவுடன், லஞ்ச்பாக்ஸை திறந்து பார்த்து, மிச்சம் மீதி இருந்தால் ‘ஏன் முழுதாகச் சாப்பிடவில்லை’ என்று கேள்வி கேட்பது; மற்றப் பிள்ளைகள் முழுதாகச் சாப்பிடுகிறார்களா, மீதம் வைக்கிறார்களா, என்ன மாதிரியான உணவு கொண்டுவருகிறார்கள், நாளை உனக்கும் அதுபோலச் செய்து கொடுக்கட்டுமா என்று கேட்பது;

மீதமின்றிச் சாப்பிட்டிருந்தால், பாராட்டுவது; கூடவே சிறுநீர் கழித்தாயா, தண்ணீர் குடித்தாயா என்று கேட்பது; தரும் பதிலில் இருந்து பள்ளியின் சூழல் சரியாக இருக்கிறதா என்று அவ்வப்பொழுது தெரிந்துகொள்வது; தொடர்ந்து முன்னேற்றமில்லை என்றால், குழந்தையை வேறு பள்ளிக்கு மாற்றலாமா என்று யோசிப்பது;

வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு உதவுவது; தேர்வுகளுக்கு முதல்நாள், கேள்வி கேட்டு, பதில் சரியாக வருகிறதா என்று சரிபார்ப்பது;

விடுமுறை நாட்களில்  காலையும் மாலையும் பாட்டு, நடனம், ஓவியம் அல்லது அறிவியல், விளையாட்டு, கராத்தே, ரோபோட்டிக்ஸ் என்று படிப்பல்லாத பிற வகுப்புகளில் சேர்ப்பது; அங்கு நடந்தவற்றை விவாதிப்பது;

பத்திரிகைகளிலும், மால்களிலும் நடைபெறும் போட்டிகளிலும், க்விஸ்களிலும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வது; தொலைக்காட்சிகளில் நடக்கும் சூப்பர் சிங்கர், ஜோடி, கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிப்பது; அதற்கேற்ற பயிற்சிகளுக்கு நேரமும் பணமும் செலவழிப்பது;  

ம்மாதிரியாக, இன்றைய தாய்மார்கள், தம் குழந்தைகளுடன் தொடர்ந்த, இடைவிடாத பேச்சுத்தொடர்பில் இருப்பதால்  அம்மாவிடம் தொப்புள்கொடி உறவையும் தாண்டியதொரு அழகிய, இனிமையான, என்றும் நினைவுகூரத்தக்க உறவைப் பெறுகிறார்கள் என்றால் மிகையாகாது.
-         
  இம்மாதிரியான உறவுமுறை தந்தைக்கும் குழந்தைக்கும் பெரும்பாலும் ஏறபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையால் அதிகநேரம் வீட்டில் இருக்கமுடிவதில்லை என்பதும் தன் பிள்ளைகளின் வளர்ப்பைத் தனது முக்கியப் பொறுப்பாகப் பெண்கள் ஏற்றுக்கொண்டுவிடுவதும் காரணங்கள்.

ஆனால் சென்ற தலைமுறையில் இதெல்லாம் சாத்தியப்பட்டதா?
தாயாரின் வேலை, சமையலறையையும் பூசையறையையும்  மட்டுமே கருத்தில் கொண்டதாக இருந்தது. தனக்குத் தெரிந்த கலைகளையும் செயல்களையும்  - இசைக்கருவிகள் வாசித்தல், வாய்ப்பாட்டு, நடனம், கோலம் போடுதல், பூத்தொடுத்தல், விதவிதமான சமையல்களும் இனிப்புகளும் செய்தல், நோன்புகள் இருத்தல், பூசைகள் செய்தல், பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகள் - போன்றவற்றைத் தம் பெண் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ளும்போது நடைபெற்றதுதான் பேச்சுத்தொடர்பு. ஆண் குழந்தைகளுடன் தாயார்களுக்கு அவ்விதமான வாய்ப்புகள் குறைவு.     

வயதாக ஆக, ஆண் குழந்தையின் உலகம், வீட்டைத் தாண்டியதாக மாறுகிறது. மேற்படிப்பு, வேலை என்று அவனது பேச்சுலகில் தாயாருக்கு இருந்த பங்கு மேலும் குறைந்துபோகிறது.

காதலுக்கென்று  ஒரு பருவம் வரும். பார்க்கின்ற பொருளெல்லாம் மயங்கவைப்பதாக இருக்கும்.  ஆண்களில் (சிலருக்கு)  அதுதான் தாயாருடன் மிக நெருக்கமாகப் பேசும் வாய்ப்பைத் தரும். மகன் காதல்வயப்பட்டிருப்பதை வேறு யாரையும்விட முதலில் தெரிந்துகொள்ளும் உள்ளுணர்வு தாயாருக்கு உண்டு. அதன் விளைவாகத் துருவித்துருவிக் கேள்விகள் கேட்டு, அவள் யாரென்று கண்டுபிடித்துவிடும் தருணம் இருக்கிறதே, அதை அம்மகன் மறந்துபோக வாய்ப்பேயில்லை. தாய்-மகன் பேச்சுத்தொடர்பின் உச்சகட்டம் அது. சில மகன்களைப் பொறுத்தவரையில், தம் தாய்களுடன் பேச்சுத்தொடர்பை நிரந்தரமாக நிறுத்திகொண்ட தருணமும் அதுவாகவே இருப்பதுண்டு.

நல்லமுறையில் தாய்-மகன் உரையாடல்கள் நடைபெறும் வீடுகளிலும், அவனுக்குத் திருமணமானபிறகு, தாயானவள்  தொடர்பு எல்லைக்கு அப்பால் போகவேண்டிய கட்டாயம் நேர்கிறது. மனைவியே முழு மனதையும், நடமாடும் இடத்தையும், சிந்தனையையும் ஆக்கிரமித்துக்கொள்கிறாள். ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரையில் எழுதப்படாத சட்டம் இதுவே. ஒரே வீட்டில் வசிப்பதோ, வெவ்வேறு ஊர்களிலோ நாடுகளிலோ வசிப்பதோ இந்தச் சட்டத்தை எவ்வகையிலும் பாதிப்பதில்லை.
****
இன்றைக்கு என்ன எழுதலாம் என்று நினைத்தபோது ‘பேச்சு’ என்பதைப் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. உடனே, என் அம்மாவுக்கும் எனக்கும் ‘பேச்சு’ என்று ஒன்று நடந்ததுண்டா என்று ஆராயத் தோன்றியது. (நீங்களும் நினைவுபடுத்திப் பாருங்களேன்.)

அம்மாவுக்குப் பூஞ்சையான உருவம். காதுகள் மட்டும் சற்றே பெரிதாக இருக்கும். இரண்டு கண்களில் ஒன்றில் பூ விழுந்து, முழி சற்றே வெளியில் பிதுங்கினாற்போல் இருக்கும். குளிர்காலமானால் இருமல் வந்துவிடும். (பின்னால் சென்னைக்கு வந்தவுடன் இருமல் தானாகவே நின்றுபோயிற்று.) இத்துடன் நாங்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டதால்,  உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் அவரைக் கொண்டாடியது கிடையாது. அதற்காக அம்மா வருந்தவில்லை. தானாகவே தன்னைப் பின்வாங்கிக்கொண்டார். பேப்பர் படிப்பது, விகடன், குமுதம், கலைமகள், பேசும்படம் ஆகிய இதழ்களைப் படிப்பது என்று தன் உலகத்தை வரையறுத்துக்கொண்டார். நாவல்களைப் படிப்பது, லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், அனுத்தமா, ஆர்.சூடாமணி, தமிழ்வாணன் ஆகியோரின் எழுத்துக்களை என்னோடு பரிமாறிக்கொள்வது என்று அவரது தளம் விரிந்தது. 

மூன்றம் வகுப்பிலிருந்தே விகடன் படிக்கும் சுதந்திரம் மட்டுமல்ல, அம்மா சமையல் செய்துகொண்டிருக்கும்போது தொடர்கதையைப் படித்துக்காட்டும் வழக்கமும் எனக்கு அளிக்கப்பட்டது. தெளிவான உச்சரிப்பும், வேகமான வாசிப்பும் எனக்கு மிக இளம்வயதிலேயே அம்மா வழங்கிய கொடைகள். எப்பொழுதாவது நாலணா கொடுத்து, ‘கண்ணன்’ இதழை வாங்கிக்கொள்ளச் சொல்வார். என் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான தருணங்கள் அவை. அந்த நாலணாவுக்கு ஆயிரம் செலவுகள் இருந்தன. அதை எனக்காகத் தியாகம் செய்தவர் அவர்.   

ஆனால், அப்போதெல்லாம் கூட, அவருடன் பேசியிருக்கிறேனா? நிச்சயமாக இல்லை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ஆமாம் இல்லை என்று சில வார்த்தைகளைச் சொன்னதல்லாமல் வேறு பேசியதில்லை. ‘அம்மா, நீ சாப்பிட்டாயா, உனக்கு உடம்பு சரியில்லையே, டாக்டரிடம் போகலாமா? தீபாவளிக்கு உனக்கு ஏன் புதுப்புடவை எடுக்கவில்லை?...’ என்ற சாதாரணமான உரையாடல் கூட நிகழ்ந்ததாக நினைவில்லை.

அப்பாவின் கோபம் பிரசித்தமானது. போதிய வருமானம் இல்லாமையே முக்கியக் காரணமாக இருக்கும். இரவுநேரங்களில் அம்மாவின் விசும்பல் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்போதும்கூட, ‘அம்மா அழாதே’ என்று நான் பேசியிருக்கிறேனா? இல்லையே, ஏன்?

வீட்டில் பல வருடங்கள் பசுமாடும் கன்றும் இருந்தன. அவைகளுக்குப் பச்சைப்புல் வேண்டுமே, அம்மாவும் நானும் ஒரு கூடையும் உடைந்த சட்டுவமும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை நெடுக நடப்போம். கண்ணில் தெரிந்த புற்ளை எல்லாம் வெட்டிக் கொண்டுவருவோம். அப்போதும் ஏதாவது பேசியிருக்கிறேனா? இல்லையே! கண் பார்க்கும், கை செய்யும். வாய் மௌனமாகவே இருக்கும்.

நினைவுகளைக் கிள்ளிப் பார்த்ததில் மூன்று முறை அம்மா பேசியது மட்டும் நினைவில் இருக்கிறது.

தாத்தா (அப்பாவின் அப்பா) அப்போது தேன்கனிக்கோட்டையில் வசித்துவந்தார். பாட்டிக்கு மிகவும் உடம்பு சரியில்லாமல் இருந்ததாம். உதவிக்கு என்னை அழைத்துப் போகட்டுமா என்று கேட்டார். அது ஒரு ஜூன்மாதம் முதல்தேதி. இன்னும் சில தினங்களில் பள்ளிக்கூடங்கள் திறந்துவிடும். ‘இவன் அங்கேயே படிக்கட்டுமே’ என்றார். அப்பா சரியென்று சொல்லிவிட்டார். ஒரு வாரத்தில் டி.சி. வாங்கி அனுப்பித்தருகிறேன் என்றார். அவ்வளவுதான். அடுத்த சில மணி நேரத்தில் என் பயணம் தொடங்கிவிட்டது.

அம்மாவுக்கு அப்பாவையோ தாத்தாவையோ எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லை. என்னுடைய இரண்டு உடைகளையும் எடுத்துவைத்தார். ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்பு போகவேண்டிய தருணம். பள்ளி திறந்த முதல்நாளில்தான் இங்கு ரிசல்ட் போடுவார்கள். உடனே அடுத்த வகுப்பில் சென்று அமரவேண்டும். அப்புறம்தான் டிசி தருவார்கள்.

அதற்குள் அந்த ஊரில் பள்ளி திறந்துவிடுவார்களே, சேர்வதில் தாமதம் ஆகிவிடுமோ என்று  கவலைப்பட்டேன். (அப்படி எதுவும் இன்றி முதல்நாளே ஒரு டெஸ்ட் வைத்து ஏழாம் வகுப்பில் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.)

பஸ் கிளம்பும்போது அம்மா வந்து என்னைக் கட்டிக்கொண்டார். கண்ணிலிருந்து குபுகுபுவென்று நீர் வழிந்து என் சட்டை ஈரமாகியது. தாத்தா, பாட்டி சொல்படி நடந்துகொள்ளணும்டா ராஜா! பாட்டி ரொம்ப நல்லவா. ஒனக்கு வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும். ஒரு பருக்கையையும் வீணாக்கக்கூடாது. வீடு பெருக்கறது, கடைக்குப் போறது, எல்லா வேலையும் நீதான் செய்யணும். மத்தப் பசங்களோட ரொம்ப சேரவேண்டாம். நல்லாப் படிக்கணும். அடுத்த வருஷம் லீவு விட்டதும் வரியா? என்று முத்தமிட்டார். பிறகு யாருக்கும் தெரியாமல் என்னிடம் நாலணா நாணயத்தைக் கொடுத்தார். ‘அங்க விகடன் வரும்னு நெனைக்கிறேன். இந்த வாரம் மட்டும் காசுகொடுத்து வாங்கிக்கோ. அப்புறம் லைப்ரரில படிச்சுக்கோ. தெருவிளக்கு ரொம்ப நல்ல கதை. விட்டுடாதே’ என்றார்.

அதற்கு என்ன பதில் சொன்னேன் என்று நினைவில் இல்லை. சரிம்மா என்று தலையசைத்தேன் என்றே நினைவு.

(தேன்கனிக்கோட்டை போனதும் நாலணா கொடுத்து அந்த வாரத்து விகடன் வாங்கினேன். அவ்வளவுதான், ‘பள்ளிக்கூடம் படிக்கிறவனுக்கு ஆனந்த விகடன் கேக்குதா? கதை கிதையெல்லாம் படிச்சுட்டு பரிட்சையில் கோட்டைவிட்டால் எனக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும்’ என்று தாத்தா இடிமுழக்கம் செய்தார். நல்லவேளை, எனக்கு அடுத்த வீட்டில் இருந்த ஒரு மாமி விகடன், குமுதம், கல்கண்டு மூன்றும் வாங்கிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது கடைக்குப்போய் ரவையோ சர்க்கரையோ வாங்கிக்கொண்டு வரச்சொல்லுவார். அதற்கு ஈடாக அவர் வீட்டில் எப்போது வேண்டுமானாலும் இந்த இதழ்களைப் படிக்க அனுமதி கொடுத்தார். அவர் வாழ்க!)    

அம்மா சொன்ன ‘ஒரு பருக்கையையும் வீணாக்கக்கூடாது’ என்ற வார்த்தைகளை நான் இன்றும் மறக்கவில்லை. என் குழந்தைகளுக்கும் அதையே அடிக்கடிச் சொல்வேன்.
*****
அம்மாவுக்கு ஒரு கண்ணில் பூவிழுந்து பார்வை போய்விட்டது. சின்ன வயதிலிருந்தே இரண்டாவது கண்ணில்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கண்ணில் ஒருநாள்  கேடராக்ட் வந்துவிட்டது. எப்போதோ வந்திருக்கவேண்டும். யாரிடமும் சொல்லவில்லை. ஒருநாள் என்னிடம் வந்து ‘என்னால முடியலேப்பா. கண்ணு கொஞ்சம் கூடத் தெரியலே’ என்றார். அப்போது அவருக்கு வயது அறுபத்து மூன்று இருக்கலாம்.

என் மூத்த மகள் பள்ளியிறுதி முடித்து, கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு எழுதப்போகும் சமயம். அருகில் இருந்த இரண்டு மருத்துவர்கள் கண்ணைப் பரிசோதித்துவிட்டு, ‘முதலில் பல்லில் உள்ள சொத்தைகளை அகற்றி வந்தால்தான் கண் ஆப்பரேஷன் செய்யமுடியும்’ என்று கூறிவிட்டார்கள். ஆப்பரேஷனுக்குப் பிறகு கண்பார்வை கிடைக்குமல்லவா என்று கேட்டதற்கு, உறுதியாகச் சொல்லமுடியாது என்றார்கள். ஆப்பரேஷன் செய்து, இருக்கின்ற மங்கலான பார்வையும் பறிபோய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் அம்மாவைத் தொற்றிக்கொண்டது. பல் டாக்டரிடம் போனோம். இரண்டுமாத டிரீட்மென்ட் செய்யவேண்டும் என்றார். அப்படியானால் அதற்குப்பிறகுதான் கண்ணில் கைவைக்க முடியுமா? அதுவரை என்ன செய்வது?

அப்போது டாக்டர் ராகவன் என்ற புதிய கண் டாக்டர் அறிமுகமானார். வயது அறுபத்தைந்துக்குமேல் இருக்கும். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். அவர் சிரித்தார். ‘இந்த சிவில் டாக்டர்களே இப்படித்தான். பயந்தாங்கொள்ளிகள். பல் சரியில்லை, டயபெட்டிஸ் இருக்கிறது என்று தள்ளிப்போடுவார்கள். நான் போர்முனையில் இருந்தவன். ஒருவனுக்குக் கண்ணில் குண்டு பாய்ந்துவிட்டது என்றால் பல்லையும் மற்றதையும் பார்த்துக்கொண்டிருக்கமுடியுமா? அடுத்த நிமிடம் ஆபரேஷன் செய்தாகவேண்டுமே!அதனால், நீங்கள் பயப்படவேண்டாம் அம்மா! நான் ஆப்பரேஷன் செய்கிறேன். நாளை மறுநாள் காலை ஆறுமணிக்கு வந்துவிடுங்கள்.  நிச்சயம் உங்களுக்குக் கண்பார்வை கிடைக்கும்’ என்று கம்பீரமாக அவர் சொன்னபிறகுதான் அம்மாவின் பயம் நீங்கியது. 

அதேபோல் ஆப்பரேஷன் நடந்து. கண்பார்வை கிடைத்தது. ஆனால், கண் தெரிய ஆரம்பித்ததும் அம்மா செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

வீட்டுக்கு எதிரில் ஒரு பழைய பேப்பர் கடை இருந்தது. அங்குபோய், பத்து ரூபாய் கொடுத்து, இருபது முப்பது தினத்தந்தி பேப்பர்களை வாங்கிக்கொண்டுவந்தார். கொஞ்ச நாளைக்கு கண்களுக்கு அதிக வேலை கொடுக்கவேண்டாம் என்று டாக்டர் சொன்னதை அறவே மறந்தார். இரண்டு மூன்று நாளில் எல்லாப் பேப்பர்களையும் ஒருவரி விடாமல் படித்துமுடித்துவிட்டார்!

அதாவது, தனக்குக் கண்பார்வை வந்ததைக் கொண்டாடும் விதமாகவும், ஆப்பரேஷன் செய்த கண் எந்த வகையிலாது தன்னைக் கைவிட்டுவிடுமோ என்று சோதிப்பதற்காகவும் அப்படிச் செய்தாராம்.

‘நான் பயந்துண்டே இருந்தேன். எனக்கு நீதாண்டா  கண்ணைக் கொடுத்தே’ என்றார் அம்மா. அந்த வார்த்தைகள் நினைவில் இருக்கிறது.
***
ஏற்கெனவே தளர்ந்திருந்த உடல். கண் ஆப்பரேஷனைத் தாங்கும் சக்தி இல்லை. கண்ணுக்கும் அம்மா அதிகப்படியான வேலை கொடுத்துவிட்டார். எல்லாமாகச் சேர்ந்து ஒருநாள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்நிலைக்குக் கொண்டுபோனது.

ஒரேவாரம் இருந்தார். ஒரு குழந்தைபோலானார். நான்தான் உடன் இருந்தேன். ‘நிச்சயம் நான் பிழைக்கமாட்டேன்...’ என்றார். பிழைக்கவில்லை. எனக்கு உடல் ஊனமுற்ற தங்கை ஒருத்தி இருந்தாள். ‘அவளைப் பார்த்துக்கொள்’ என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை.
****
இப்போது எழுத முடிகிறது. அப்போது பேச முடியவில்லையே ஏன்? இத்தனைக்கும் அம்மா, அப்பா தனியாக வேறொரு வீட்டில்தான் குடியிருந்தார்கள். போய்ப் பேசுவதை மனைவியோ, மற்றவர்களோ தடுக்கப்போவதில்லை. ஆனால் பேசவில்லையே ஏன்?

புளியம்பழமும் ஓடும் போலப் பிரிந்துவிடுவதுதான் மனித உறவா? விடை தெரியவில்லை.
****
© Y Chellappa

49 கருத்துகள்:

  1. உண்மைதான் ,இந்த கால குழந்தைகளுக்கு மம்மிதான் எல்லாம் ,அப்பா டம்மிதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க, நாம எல்லாருமே மம்மியைவிடக் கம்மி தான்! காலம் கேட்டுப் போச்சுங்க!..தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  2. படித்து முடித்ததும்
    கண் கலங்கியதைத் தவிர்க்க முடியவில்லை
    நானும் அப்படி இருந்ததாலா எனத்
    தெரியவில்லை

    மனம் தொட்டப் (சுட்டப் ) பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே -
    நினைத்துக் கொண்டேன்..

    கலங்க வைக்கப் போகின்றது - பதிவு என்று!...

    தாயிற் சிறந்த கோயிலுமில்லை!..
    - என்று சொல்லிவிட்டு கோயிலுக்குப் போகும் வழியறியாமற் போனது..

    பதிலளிநீக்கு
  4. ஆரவாரம் இல்லாமல் அன்பைப் பொழியும் அம்மா கடவுளே தான். செல்லப்பாவின் தாயும் அதைப்போலத்தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பைக் குறைக்காமல் யாருக்கும் உபத்திரவம் கொடுக்கக்கூடாது என்று தீர்மானமாக இருக்கும் தாய்க்குலம் கண்ணீரால் நனைக்கப்பட வேண்டியவர்கள்.தினமும் நினைக்கப்பட வேண்டியவர்கள். ஆமாம், Ex Army கண் டாக்டர் தவறு செய்து விட்டார் என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியில்லை. 'கண்பார்வை கிடைத்து விட்டது'என்ற மகிழ்ச்சியுடன் அவர் தனது மீதமுள்ள நாட்களைக் கழிக்கட்டுமே என்று டாக்டர் கூறினார். உயிரா, கண் பார்வையா என்றால், கண்பார்வை வேண்டும் என்றுதான் யாரும் விரும்புவார்கள் என்றார். அம்மாவுக்கும் அதுவே விருப்பம் என்று தோன்றியது. மீண்டும் கண்ணொளி கிடைத்த மகிழ்ச்சியை அவர் கொண்டாடியவிதம் இன்றும் என் கண் முன்னால் நிற்கிறது....

      நீக்கு
  5. அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பெரும்பாலும் குழந்தைகள் அதிகம். கூட்டுக் குடும்பம். சமையல் வேலை இதர வேலைகளுக்கே பெண்களுக்கு நேரம் சரியாயிருக்கும். அதேபோல் குழந்தைகளுக்கும் ஏகப்பட்ட படிப்பு அது இது என்று கிடையாது. அதையும் தற்போதைய போட்டி உலகத்தையும் கம்பேரே பண்ணமுடியாது. தற்போது ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் அடுத்தவருடைய மகனைவிட இன்னும் நன்றாக இருக்கவேண்டும் என்ற போட்டியும், ஓரிரு மகன்களாக இருப்பதால் கூடுதல் கவனமும் செலுத்தமுடிகிறது. (கடைசியில் பையன் சம்பந்தமில்லாத வேலைக்குச் செல்வதும் நிகழ்கிறது)

    பதின்ம வயதினைக் கடந்த பையனுடன் அவனுக்குச் சரியாக பேசும், அவனுடைய உலகில் உள்ள விஷயங்களைப் பேசும் அளவு, தாய் இருப்பதில்லையென்பதால், அவனுடைய துணைவியோடே அவனுடைய உலகம் ஆரம்பிக்கிறது. அதற்கப்புறம் தாயிடம் பேசும் சப்ஜெக்ட் மிகவும் குறைந்துவிடுகிறது (என்ன சௌக்யமா, சாப்டயா என்பதோடு முடிகிறது. மூத்த உறவினர்களைப் பற்றியோ அக்கம்பக்கத்தாரைப் பற்றியோ தாய் பேசும்போது அவனுக்கு அந்த சப்ஜெக்ட் அன்னியமாகத் தெரிகிறது)

    வெகு சிலர்தான், பெற்றோர்களோடு நேசமுடன் அவர்களோடு பேசி Engage செய்யும் கலையைக் கற்றிருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள், மனதில் அன்பிருந்தாலும், வெளியே காண்பிக்கும் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள்.

    ஒவ்வொருவரும், தங்கள் ராஜ்ஜிய பாரத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக்கொண்டதும், ஒதுங்குவதுதான் அல்லது அடுத்த தலைமுறையை லீடராக மனதளவில் ஏற்றுக்கொள்வதுதான் சரி.

    "புளியம்பழமும் ஓடும் போல் பிரிந்துவிடுவதுதான் மனித உறவா" - ரொம்ப ரசித்த, புதிய வரிகள். ஒரு வாக்கியம் அனுபவத்தின் contentஐச் சொல்லிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் ஏன் இன்னும் எழுதாமல் இருக்கிறீர்கள்? விரைவில் வலைப்பூ தொடங்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

      நீக்கு
  6. பிள்ளைகளின் மானஸீக அன்பு பெற்ற தாய்க்கு வேண்டும். மருமகள்கள்தான் யாவும் செய்ய வேண்டி வந்தாலும், பிள்ளைகள் தன்தாயின் அன்பைப் போற்றும் விதமாக நடந்து காட்டினால்தான் முதுமையில் தனக்கு யாவும் நன்கு நடப்பதாக உணர்வாள்.
    தள்ளாமை வந்து விட்டால் தள்ளி விடாது தாயின் அன்பை நினைவு கூர்பவனே தாய்மையைப் புரிந்து கொண்டவன். உங்களம்மா பலவிதங்களில் அந்தக்கால அம்மாதான். நல்ல பகிர்வு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தாயின் கண்ணோட்டத்தில் அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு
  7. இப்போல்லாம், பதிவுன்னு ஒண்ணு இருந்தா படமும் இருக்கணும்னு நிறையபேர் சொல்லறதுனால, ஒவ்வொரு இடுகைக்கும் உங்கள் படங்களைச் சேர்க்கிறீர்களா? :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாம்னு பார்த்தாலும் முடியலீங்க. படம் இருந்தால்தான் முகநூல், ஜி + , வாட்ஸ்-அப் -இவற்றில் எல்லாம் போடமுடிகிறது. படம் இல்லையேல் வெறும் எழுத்துதானே வரும், யாரும் படிக்கமாட்டர்களோ என்ற கவலை உண்டாகிறது. அதுவும் அல்லாமல், நம்முடைய படத்தை நாம் போடாமல் வேறு யார் போடுவார்கள் என்ற சுயபச்சாதாபமும், படம் போடாவிட்டால் நம்மை எல்லாரும் மறந்துவிடுவர்களோ என்ற சந்தேகமும் அடிக்கடி உண்டாகிறதே!

      நீக்கு
  8. எல்லா உறவுகளும் காகிதச் சங்கிலிகள் அல்ல.ஆயினும் பல நேரங்களில் சூழ்நிலைகள் சதி செய்து விடலாம்.எனக்கு அம்மாதான் தந்தையுமானவள்.
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு மிக்க நன்றி ஐயா! தாயே தந்தையுமாவது மிகப்பெரும் பேறு.

      நீக்கு
  9. மனம் கனத்து விட்டது நண்பரே..

    த.ம. 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயைப் பற்றி யார் எழுதினாலும் அது உணர்ச்சிகளைத் தூண்டி விடும் என்பது உறுதி. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  10. அருமை

    நிறைய விஷயங்கள் இங்கு பதிய வேண்டும் என்று தோன்றுகிறது. வேண்டாம். முக்கியமானவற்றை மட்டும் சொல்கிறேன்.

    எனக்கு வயது 61. நான் போன தலை முறை என்றால் முதல் நான்கு - ஐந்து பத்திகளில் நீங்கள் குறிப்பிட்டவற்றை நானும் செய்திருக்கிறேன் வேலைக்கும் சென்று கொண்டு. இப்பொழுது பேத்திகளுக்கு செய்கிறேன்.

    இன்றும் என் கணவருக்கு சிறிது மனத்தாங்கல் உண்டு அவரை விட பிள்ளைகளுக்கு அதிகப் பிரியம் என்று. அது அவர் கருத்து.

    இன்றும் மகன் பொதுவான விஷயங்கள் பற்றி என்னுடன் விவாதிப்பதும் உண்டு. அவனுடன் பணி புரிபவர்களைப் பற்றி சொல்வதும் உண்டு. அதே போல் மருமகளும் வேலைக்குச் சென்ற காலங்களில் என்னுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வாள்.

    பொதுவாக அப்பாவை விட அம்மாவிற்கு மகனிடமோ, மகளிடமோ பொறுமையாக கேட்கும் எண்ணம் உள்ளது.

    நானும் என் பாட்டி மற்றும் அம்மாவிடம்தான் அதிக ஒட்டுதலுடன் இருந்தேன்.

    உங்கள் தாயைப் பற்றி நீங்கள் எழுதியதை படித்ததும் மனம் கனத்துப் போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பின்னூட்டம் எனக்குள்ளும் மிகுந்த அதிர்வலைகளை எழுப்புகிறது. தாய்க்கும் மகனுக்கும் பேச்சு குறைந்துகொண்டே வருவது, இன்றைய நாகரிகத்தின் ஒரு விளைவா என்று எண்ணினேன். அது இல்லை என்று தெரிகிறது. சில குடும்பங்களில் வழிவழியாக இம்மாதிரி பேச்சுத்தொடர்பின்மை தொடர்ந்து வருகிறது. ஆனால் பொதுவாகவே, மகன்களுக்கு, தம் தாயன்பை அவரிடமே அடிக்கடி வெளிப்படுத்தும் பழக்கம் இருப்பதில்லை என்று புரிகிறது. அப்படிப்பட்ட மகன்களையும் தாய்மார்கள் புறம்தள்ளுவதில்லை; சுபாவம் அப்படித்தான் என்று எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  11. நானும் அம்மாவை நினைக்கிறேன். அம்மாவுடன் பேசியிரூந்திருக்கலாம். இப்போது பேச ஆசை அம்மா இல்லை

    பதிலளிநீக்கு
  12. நானும் அம்மாவை நினைக்கிறேன். அம்மாவுடன் பேசியிரூந்திருக்கலாம். இப்போது பேச ஆசை அம்மா இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருள் தேடவும், சமூகத்தில் நமக்கொரு இடம் தேடவும், நாம் நடத்தும் போராட்டத்தில் நமக்குள் புதைந்திருக்கும் குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குச் சரியான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அம்மாக்களுக்கு நிச்சயம் புரியும் நாம் யாரென்று! அவர்களுக்கும் நம்மைபோலவே சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். தங்கள் வரவுக்கு நன்றி.

      இராய செல்லப்பா நியூஜெசி (விரைவில் சென்னை)

      நீக்கு
  13. தஙங்கள் பதிவு ஒரளவு எனக்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வின் பெரும்பகுதியை ஆசிரியர்களின் நன்மைக்காகவே அர்ப்பணித்தபிறகு, உங்கள் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அரிதாகவே கிடைத்திருக்கும். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  14. சார் மனதைத் தொட்டுவிட்டது. ஒரு சில நீங்கள் சொல்லியிருப்பது போல் எனது அனுபவமும். அம்மா அப்பா அவர்களது இறுதிக் காலம் வரை என்னுடன் இருந்தார்கள். அப்பாவுடனும் அதிகம் பேசியதுண்டு. அம்மாவுடனும். சில சமயங்களில் அவர்களுடன் பேசவில்லை என்றாலும் உணர்வு பூர்வமாக ஒன்றி இருந்தேன் என்றுசொல்லலாம். சில சமயங்களில் அவர்களிடம் கோபமும் பட்டுள்ளேன். அவர்களது மறைவிற்குப் பிறகு, குறிப்பாக அம்மாவின் மறைவிற்குப் பிறகு நான் பல வருடங்கள் அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்திருக்கிறேன். ஏதோஒன்று என்னை விட்டுச் சென்றது போன்று. இப்போதும் அவர்களை நினைத்துத் தினமும் தொழுவது உண்டு. அவர்களது ஆசீர்வாதத்தை வேண்டி. உங்கள் பதிவு மனதை மிகவும் தொட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையும் தந்தையும் தானே...என்ற தியாகராஜ பாகவதர் பாட்டு நினைவுக்கு வருகிறது. எப்படி அவர்களை மறக்கமுடியும்? தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  15. எனக்கும் என் அம்மாவிற்கும் உள்ளான உறவு சற்று இடைவெளி உடையதாக இருந்தது. மனதிற்குள் அன்பு இருந்தாலும் ஏனோ இடைவெளி இருந்தது. இங்கு எழுதினால் பெரிய பதிவு போன்று ஆகிவிடும் என்பதால் நான் ஏற்கனவே அம்மா என்ற தலைப்பில் பாதிக்கும் மேல் எழுதி வெளியிடாமல் வைத்திருக்கும் பதிவை முடித்து வெளியிடப் பார்க்கிறேன்... ஆனால் ஒரு வேளை வெளியிட்டால் உறவினர் யாரேனும் படிக்க நேர்ந்து பிரச்சனைஆகுமோ என்று தயங்கி வெளியிடாமல் உள்ளேன். இரண்டாவது..சமீபத்தில் ஒரு சில தாய்மார்கள் மிகவும் வேதனையுடன் தங்கள் மகன் தங்களைக் கண்டு கொள்வதில்லை என்று ஆதங்கப்பட்டனர். அதை மனதில் கொண்டு தலைப்பு வைக்காமல் கிட்டத்தட்ட உங்கள் பதிவின் இதே கருத்துடனான கதை ஒன்றும் எழுதி வைத்துள்ளேன். இன்னும் முழுமையாக எடிட்டிங்க் செய்யவில்லை. செய்து வெளியிட முயற்சி செய்கிறேன்...

    என் அம்மாவிடமிருந்து நான் கற்ற பாடம்...என் மகனிடம் நான் எப்படி இருக்க வேண்டும் என்பது. நானும் மகனும் இப்போதும் கூட நிறைய பேசுவோம். இப்போதைய காலகட்டம்!

    பொதுவாக எனக்கொரு ஆதங்கம் உண்டு, அம்மா மகள் உறவைச் சிலாகித்துக் கவிதைகள் கதைகள் எல்லாம் உண்டு. அது போன்று அப்பா மகன் உறவு என்றும் பேசப்படுவதுண்டு. திரைப்படமே வந்தது. ஆனால், அம்மா மகன் உறவு மட்டும் கவிதயாகவோ, கதையாகவோ யாரும் எழுதியதில்லையோ?! எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் தன் அம்மாவைப் பற்றி எழுதியதுண்டு... இப்போது நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டு பதிவு எழுதியிருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும்... நிறைய இல்லை என்பதே ஆதங்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். இனியாவது நமது குழந்தைகளோடு முடிந்த வரை நன்கு உரையாடவேண்டும்... தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  16. தாயவள் அன்பு - அந்த
    ஆண்டவரும் தரமாட்டார்.
    தாய்க்கு நிகர் தாயே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையைப் போலொரு தெய்வமில்லை! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  17. மனம் தொட்ட பகிர்வு. நான் அம்மாவிடம் நிறைய பேசுவேன். அப்பாவிடம் [எங்கள் சிறுவயதில்] பயம் அதிகம் - அவருக்குக் கோபம் அதிகம் என்பதால்!

    புளியம்பழமும் ஓடும் - நல்ல எடுத்துக்காட்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்பாவிடம் பயம் அதிகம்...தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  18. எதுவும் நம்மோடு இருக்கும்வரை அருமை தெரிவதில்லை, கை விட்டுப் போனபின்பே நினைத்து நினைத்து வருந்துவதுதான் மனித இயல்பென்றாகிவிட்டது.

    பதிலளிநீக்கு

  19. முழுக்க முழுக்க உண்மை! தங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. உங்களோடு ஒரு விஷயம் பகிர விரும்புகிறேன் என் உறவுகள் என்ன்னும் பதிவில் எழுதிய கருத்து பெண்கள் குறிப்பாகத் தாய்மார்கள் தனது கணவன் வீட்டு உறவை விட தன் குழந்தைகளுக்கு தன் வீட்டு உறவுகளையே அதிக தெரிவிக்கிறாள் இதனால் பிள்ளைகளுக்குத் தகப்பன் உறவுகளை அதிகம் தெரிவதுஇல்லை மதிப்பதும் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கணவனைச் சார்ந்த உறவுகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களோடு பழகவும் தன குழந்தைகளை எந்த மனைவியும் அனுமதிப்பதில்லை என்பது உலகம் முழுதும் உள்ள பிரச்சினையே. அப்படி அனுமதித்தாலும், அவர்களால் எந்த அளவுக்குப் பலன் இருக்கிறது என்று அடிக்கடி ஆராய்ந்துகொண்டே இருப்பார்கள். வாழ்க்கைச் சக்கரத்தில் தானும் இன்றுள்ளதற்கு எதிரான பாத்திரத்தை எதிர்காலத்தில் வகிக்கநேரும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

      நீக்கு
  21. உங்கள் தாயாரை கண் முன் கொண்டு நிறுத்தி விட்டீர்கள். கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று அன்னையர் தினம். தங்கள் கருத்து என்னையும் கலங்கவைக்கிறது. அன்னையைப் போலொரு தெய்வமில்லை. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  22. (அதற்குக் காரணம் அந்தத் தாயார்களின் பெற்றோர்கள் புத்திசாலிகள் with some exceptions- அதாவது நம்மைப்போல.)...இத்தொடரை அதிகம் ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒன்றை நினைத்து எழுதினால் அதை மற்றவர்கள் வேறுமாதிரியாகப் புரிந்துகொள்கிறார்களே! எனவே பணிவோடு எழுதுவதே சரி என்று உணர்ந்துவிட்டதால் அம்மாதிரி எழுதினேன் ஐயா! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  23. அருமையான பதிவு. உங்கள் தாயைப் பற்றி நீங்கள் எழுதியதை படித்ததும் மனம் கனத்துப் போயிற்று. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்மை எப்போதுமே கனமானது அல்லவா?தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  24. எழுத்தின் ஊடாக பேசும் நண்பர்களுக்கு, வாய் வழியாக பேசுவது அருஞ்செயலே.. அவர்கள் பேசியதை காது கொடுத்து கேட்டிருக்கிறீர்கள், அதுவே நீங்கள் அவருக்கு செய்த அன்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு