புதன், செப்டம்பர் 18, 2019

வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி


வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப்  பகுதி
(வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி)

(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் குறைந்தது பதினைந்து நாளைக்காவது ஒளித்திரையைப் பார்க்க வேண்டாமென்று மருத்துவர்கள் அறிவுரைத்ததால், வலைப்பதிவை உடனே எழுத முடியவில்லை. தாமதத்திற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.)

அடுத்த சில நாட்களில் இரண்டு பில்டிங் கமிட்டி ஆட்களும் சென்னை சென்று விட்டனர். அதன் விளைவாக எனக்கு அன்றாட சாப்பாட்டு பிரச்சினை ஆரம்பித்து விட்டது. சொரகொளத்தூரில் இருந்தபோது அய்யாக்கண்ணு என்ற ஓவிய ஆசிரியரும் குபேந்திரன் என்ற வந்தவாசியைச் சேர்ந்த ஆசிரியரும் எனக்கு ஓரளவுக்கு சமையற்கலையைக் கற்றுத் தந்திருந்தார்கள். அது இப்போது உதவிக்கு வந்தது.

குண்ட்டூர் நகரம் குண்டு மிளகாய்க்குப் பெயர்போனது!

ஒருநாள் மாலை திடீரென்று மூத்த அரசியல் தலைவர் ஒருவர் மரணமடைந்ததால் மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆகவே  நானும் என்னைப்போலவே தனியராக இருந்த இன்னொரு ஆசிரியரும் (குமார்) ஆரணிக்குச் சென்று இரவு படம் பார்த்துவிட்டு (பெயர் ஞாபகம் இல்லை - மலையாளப்  படம் அல்ல!) அங்கேயே  அவரது நண்பர் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் மாலை ஊர் திரும்புவதென்று தீர்மானித்தோம். வறுத்த வேர்க்கடலையைக் கொறித்தவாறே கூட்டுரோடு வரை நடந்துசென்று பஸ் ஏறுவது என்று ஏற்பாடு.

அறைக்கதவை நான் பூட்டும்போது அந்த வளைக்கரம் வேகமாக ஓடி வந்தது. அப்போதுதான் அவளை முழுமையாகப் பார்த்தேன். நன்றாக வளர்ந்த பெண். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இடைநின்றுவிட்ட பெண்ணாக இருக்கலாம். இரண்டு மூன்று பெரிய பைகள் அவளிடம் இருந்தன. 3 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அவற்றில் இருந்தன. கடையில் இருந்து வாங்கி வர வேண்டிய  சாமான்கள் பட்டியல் அடங்கிய ஒரு துண்டுச் சீட்டும்  இருந்தது.

குண்டு மிளகாய் 1 கிலோ
தணியா அரை கிலோ
அரப்புத்தூள் அரை கிலோ
ந.எண்ணை 1 லிட்டர்
க.எண்ணை 1 லிட்டர்
தே.எண்ணை கால் லிட்டர்

இதெல்லாம் வாங்கி வர வேண்டுமாம். பெரியநாயகி அம்மா அனுப்பினார்களாம்.

குமாரை  ஏறிட்டுப் பார்த்தேன். நாம் வாத்தியார் வேலைக்கு வந்தோமா, அல்லது கடைகண்ணிக்குப் போய்,  வீட்டுச் சாமான்கள் வாங்கி வரும் வேலைக்கு வந்தோமா என்று கண்களாலேயே கேட்டேன். அவரும் கண்களாலேயே பேசாமல் இருங்கள் என்றார். வளைக்கரத்தை நோக்கி "சரி வாங்கி வருகிறோம் என்று அம்மாவிடம் சொல்லி விடு" என்றார். வளைக்கரம் பதில் சொல்லாமல் ஓடிப் போய்விட்டது.

குமாரைக்  கேள்விகளால் துளைத்தேன். "இந்த ஊரில் இது தான் வழக்கம்" என்றார் அவர். அந்த அம்மா ரொம்ப நல்லவராம். முக்கிய நாட்களில் அவர் வீட்டில் இருந்து எல்லா ஆசிரியர்களுக்கும் பலகாரங்கள் வருமாம். அதனால் யார் ஆரணிக்குப் போனாலும் அவர்களிடம் இந்த மாதிரி பைகளும் பாட்டில்களும் துண்டு சீட்டும் அவ்வப்போது தரப்படுமாம். யாரும் மறுக்க மாட்டார்களாம். மறுக்கவும் முடியாதாம்.

நியூ ஜெர்சியில் என் மகள் வீட்டுத் தொட்டியில் விளைந்த குடைமிளகாய்

"இந்த விஷயத்தில் உங்களுக்கு அனுபவம் அதிகம் போல" என்றேன். "இல்லை இல்லை, அந்த அம்மா என்னைப் போல பழைய ஆசிரியர்களை நம்புவதில்லை. இளமையான புதிய ஆசிரியர்களை நம்பித்தான் வேலை கொடுப்பார்கள்" என்று சிரித்தார் குமார்.

பணத்தைக் கொடுக்காமல் பொருளை மட்டும் வாங்கி வரச் சொன்னால் எப்படி என்று கேட்டேன். "கவலைப்படாதீர்கள், மாதம் ஒருமுறை கணக்குத் தீர்த்து விடுவார்கள்" என்று மீண்டும் சிரித்தார் குமார்.
***
விடுமுறை நாளானதால்  ஆரணி நகரை  முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு என் அறைக்குத் திரும்பியபோது மாலை ஆறுமணி ஆகிவிட்டது. கூட வந்த குமார் ஆரணியில் தங்கிவிட்டார். மறுநாள் காலை நேரடியாகப்  பள்ளிக்கு வந்து விடுவார்.

நான் வருவதை எதிர்பார்த்து ஒரு பெரிய கூட்டமே என் அறை வாசலில் காத்திருந்தது. வளைக்கரம் ஓடிவந்து கையில் இருந்த பைகளைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது. "ஏன் சார் இவ்வளவு லேட் பண்ணி விட்டீர்கள்? இராத்திரியே  வந்து விடுவீர்கள் என்று தானே உங்களிடம் குண்டு மிளகாய் வாங்கி வரச் சொன்னார்கள்? காலையில் வெயிலில் காயவைத்து மிளகாய்ப்பொடி அரைக்க வேண்டாமா? உங்களால் எனக்குக் கெட்ட பெயர் ஆகிவிட்டது" என்று கூறியபடியே ஓடினாள்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெரியம்மா, "சார் புதுசு. அதான் விஷயம் தெரியல. முன்னாடி இருந்த வாத்தியார்கள் எல்லாம் பெரியநாயகி அம்மா என்றால் பார்த்ததுமே நடுங்கிப் போவார்கள். சார்  எதற்கும் அந்த அம்மா கிட்ட போய்  இப்பவே சமாதானம் சொல்லிவிடுவது நல்லது. இல்லைன்னா நாளைக்கு ஹெட் மாஸ்டர் வந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும், இல்லடி அஞ்சலை?" என்றார். கூட இருந்த ஏழெட்டு அஞ்சலைகள்  ஆமாம் என்று  தலையாட்டினார்கள்.

இப்படி ஒரு விசித்திரமான ஊரை நான் பார்த்ததில்லை. தாட்சண்யத்திற்காக என் கைக்காசைப்  போட்டு மளிகை சாமான்களை வாங்கி வந்திருக்கிறேன். அதற்குப் பணம் எப்போது வருமோ தெரியாது. இந்த இலட்சணத்தில் அந்த அம்மையாரிடம் நான் போய் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம்!

நான் பதில் பேசாமல் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டேன். அதைச்  சற்றும் எதிர்பார்க்காத அப்பெண்கள் ஆச்சரியத்தோடு சிறிது நேரம் குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிவிட்டுப்  பின்  கலைந்து போனார்கள்.
****
காலை ஏழு மணிக்கே என் அறைக்கு வந்துவிட்டார் பியூன் பஞ்சாட்சரம். வரும்போதே இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் தேநீர் வாங்கி வந்திருந்தார். எனக்கு ஒன்று அவருக்கு ஒன்று.

"சார், அந்த அம்மா கிட்ட கொஞ்சம்  ஜாக்கிரதையா இருக்கணும். நேத்து மளிகை சாமான் வாங்கி வர ரொம்ப லேட் பண்ணிட்டீங்களாமே! தெரிந்தால் ஹெட்மாஸ்டர்  ரொம்ப கோவித்துக் கொள்வார்!" என்றார் பஞ்சாட்சரம்.

எனக்கு வந்த கோபத்தில் தேநீரைக் குடித்துவிட்டு கண்ணாடி கிளாசைத் தூக்கி வீதியில் எறிந்தேன். அது எந்த ஓசையும் எழுப்பாமல் ஒரு முட்புதரில் போய் உட்கார்ந்து கொண்டது என் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

"பஞ்சாட்சரம், என்ன மாதிரியான ஊர் ஐயா இது! வாத்தியார்களை மளிகை சாமான் வாங்கிவரும் எடுபிடிகளாக நடத்துகிறார்கள். நீங்களும் அந்தப் பொம்பளையை பூதம் பிசாசு ரேஞ்சுக்கு பில்ட்-அப் கொடுக்கிறீர்கள்! முதலில் போய்  மளிகை சாமான்களுக்கு 40 ரூபாய்  ஆயிற்று, அதை வாங்கி வாருங்கள்" என்று சற்றே குரல் எடுத்துப் பேசினேன்.

பஞ்சாட்சரம் சிரித்தார். "பூதம் பிசாசு என்றால் சமாளித்துவிடலாம் சார், இது அதற்கும் மேலே" என்றார். "நம்ம ஹெட்மாஸ்டருக்கு இது ரெண்டாவது சம்சாரம்" என்றார்.

எனக்குப்  பகீரென்றது. அப்படியானால் என்னுடைய நாற்பது ரூபாய் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணிக் கொண்டேன். (அது பெரிய தொகை! அப்போது பட்டதாரி ஆசிரியர்களின் மாதச் சம்பளம் ரூ.180க்கும் குறைவுதான்.)

"பஞ்சாட்சரம், மாணவர்களுக்குப் பாடம் சொல்வதுதான் என்னுடைய வேலை. யாருக்கும் மளிகை சாமான் வாங்கி வருவது அல்ல. ஆகவே என் மீது எந்தத்  தவறும் கிடையாது. அந்த ஹெட்மாஸ்டர் ஏதாவது சொன்னால் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள்" என்று கோபமாகக்  கூறிவிட்டு, குளிப்பதற்குக் கிணற்றடிக்குப் போனேன்.
****
வேண்டுமென்றே ஐந்து நிமிடம் லேட்டாகப் பள்ளிக்குள்  நுழைந்தேன். என்ன ஆச்சரியம்! ஹெட்மாஸ்டர் அறையில் சற்றே பருமனான ஒரு பெண் மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

என்னைப் பார்த்தவுடன் ஹெட்மாஸ்டர் "சபாஷ் யாராலும் சாதிக்க முடியாததை சாதித்து விட்டீர்களே!" என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது அப் பெண்மணி என்னைப் பார்த்து, "ஆமாம் தம்பி, இதுவரை எத்தனையோ வாத்தியார்களை குண்டு மிளகாய் வாங்கிவரச் சொல்லியிருக்கிறேன். உங்களை மாதிரி நல்லா பதமா, சூப்பரான ஐட்டமாய்ப் பார்த்து யாரும் வாங்கிக்கொண்டு வந்ததில்லை. அதான் நேரில் பாராட்டலாம்னு  வந்தேன்" என்றார். ஓஹோ இதுதான் ஹெட் மாஸ்டரின்  இரண்டாவதோ?

இதுதான் சாக்கு என்று ஹெட் மாஸ்டர் அவளைப் பார்த்து, "மழைக்காலம் வருவதற்குள் என்னென்ன மளிகை சாமான் வேண்டுமோ, சாரை அனுப்பி வாங்கிக்கொண்டு விடு. வேணுமானால் அவர் ஒருநாள் லீவு எடுத்துக் கொள்ளட்டும். அப்புறம் என்னை குறை சொல்லக்கூடாது. சரி, நீ வீட்டுக்குப் போகலாம்" என்று அவளை வழியனுப்பினார்.

என்னுடைய நாற்பது ரூபாய் பற்றி இருவரும் பேசக் காணோம். ஆகவே  நானே வாய்திறந்து அந்த அம்மையாரிடம் "40 ரூபாய்?" என்றேன்.  உடனே அவர் "கவலைப்படாதீங்க, ஹெட்மாஸ்டர் உங்க பேர்ல ஒரு கணக்கு ஆரம்பிச்சுருவாரு. மாசம் பொறந்தா கேட்டு வாங்கிடுங்க. சமயத்தில் அவர் மறந்தாலும் மறந்துடுவார்" என்று காற்றில் யாரிடமோ சொல்வதுபோல் சொல்லிக்கொண்டே நடையைக்கட்டினார்.

ஹெட்மாஸ்டர் அதைக் கவனிக்காதது போல் பதினொன்றாம் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடம் எடுக்கக் கிளம்பிவிட்டார்.

***
என்னுடைய 40 ரூபாய் போனது போனதுதான்! எப்படி என்கிறீர்களா?

அடுத்த சில நாட்களில் நான் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த (எம்.எஸ்.சி கணிதம்) பட்ட மேற்படிப்பிற்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் எனக்கு இடம் அளித்திருப்பதாக அரசாணை வந்தது. அன்று ஹெட்மாஸ்டர் ஊரில் இல்லை. மேற்படிப்புக்காக வேலையை ராஜினாமா செய்வதாகக் கடிதம் எழுதி அவர் மேசையில் வைத்து, அது பறக்காமல் இருப்பதற்காக வருகைப் பதிவேட்டை  அதன்மீது வைத்து, பஞ்சாட்சரத்திடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, இரவோடு இரவாக அறையைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.

அதன் பிறகு அம்மையாருக்கு எந்த ஆசிரியர் தன் சொந்தக் காசில் குண்டு மிளகாய் வாங்கிக்கொடுத்தாரோ தெரியாது. அதேபோல் பில்டிங் கமிட்டியாரும், வளைக்கரமும் என்ன ஆனதென்றும் எனக்குத் தெரியாது. 
****
© இராய செல்லப்பா