புதன், மே 25, 2022

பள்ளிகளில் துப்பாக்கி சூடு - அமெரிக்காவில் நடப்பது என்ன?

 பள்ளிகளில் துப்பாக்கி சூடு - அமெரிக்காவில் நடப்பது என்ன?

(இன்று கிழமை செவ்வாய்-7)

அமெரிக்காவில் 43 ஆவது நாள்


(அட்லாண்டிக் கடலோரம்)

ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியாக இருக்கும் அரசியல் கட்சி, மதுக்கடைகளை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளிப்பது வழக்கம். அதே கட்சி வெற்றி பெற்று ஆளும் கட்சியாக வரும்பொழுது மது விற்பனையை அதிகரிப்பதற்கு அதிகாரிகளுக்கு  இலக்கு நிர்ணயிப்பதுதான்   வழக்கம். எனவே தமிழ்நாட்டு மக்கள் பெருகி ஓடும் மது என்னும் அருவியோடு வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நம் தலைமுறையில் டாஸ்மாக் அடியோடு அகற்றப்படும் என்று சுய அறிவுள்ள  தமிழன் எவனும் நம்புவதில்லை. 



இதன் காரணமாகவே தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பல இடங்களில் நடைபெற்று வரும் கொலைகள், கற்பழிப்புகள், தீயிட்டு எரித்தல், போன்ற குற்றங்களை செய்தித்தாளிலோ, தொலைக்காட்சியிலோ, சமூக ஊடகங்களிலோ காணும்பொழுது தமிழர்களின் சொரணையை அது குறைந்தபட்சமாகக் கூடத் தொடுவதே இல்லை. செத்துப் போனது ஆணோ பெண்ணோ, முதியவரோ பச்சிளம் குழந்தையோ, யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படாமல் தமிழர்கள் கடந்து போகிறார்கள்.


அமெரிக்காவிலும் இதே தான் நடக்கிறது.  


தமிழ்நாட்டில் சாராய வியாபாரிகள் போல,  அமெரிக்காவில் துப்பாக்கி வியாபாரிகள் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் வல்லமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பள்ளி மாணவர்களிடம் துப்பாக்கிகள் சகஜமாக நடமாடுகின்றன.  "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவோம்"  என்று கென்னடி முதல் ஒபாமா வரை  வாக்குறுதி கொடுத்தாலும்,  ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி வியாபாரிகளைப்  பகைத்துக் கொள்ளும் சக்தி இவர்களுக்கு இல்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 


18 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கி விற்கக்கூடாது என்ற சட்டத்தைக் கொண்டுவருவதாக (பல ஆண்டுகள் முன்பு) அரசாங்கம் அறிவித்தபோது, அதை எதிர்த்து பத்திரிக்கைகளில் ஆயுத வியாபாரிகள் கொடுத்த விளம்பரத்தின் வாசகம் இன்றளவும் என் மனதில் அழியாமல் நிற்கிறது: "IF GUNS ARE OUTLAWED, ONLY OUTLAWS WILL HAVE GUNS!” என்ற அந்த விளம்பரத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசினில் நான் பார்த்திருக்கிறேன்.  இவ்வாறு பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருவதன் மூலம் மறைமுகமாகப் பத்திரிக்கைகளைத் தங்களுக்கு ஆதரவாக ஏற்படுத்திக்கொண்டு ஆயுத வியாபாரிகள் செயல்படுகிறார்கள்.


இந்தத் தலைப்பை நான் எழுத எடுத்துக் கொண்டதன் காரணம் இன்று (24-5-2022 செவ்வாய்) பகல் 11.30 மணி அளவில்  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் யுவால்டே (Uvalde) என்னும் சிற்றூரில் "ராப் (Robb) எலிமெண்டரி ஸ்கூல்" என்ற பள்ளியில்  பத்தொன்பது குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் ஆக 21 பேர் அதன் அருகில் இருந்த உயர்நிலைப் பள்ளியின்  18 வயது மாணவனால் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக வந்த செய்திதான். உடனடியாக ஓடி வந்த போலீசார் இந்தக் கொலைகார மாணவனான ஸால்வடார் ராமோஸ் என்பவனைச் சுட்டுத் தள்ளினார்கள் என்றாலும் அது யாருக்கும் ஆறுதல் அளிப்பதாக இல்லை. 


மேற்படி பள்ளி மாணவர்களைச் சுட்டுத் தள்ளுவதற்குத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போகும் முன்பு,  அந்த ராமோஸ் தன்னுடைய பாட்டியையும் சுட்டுத் தள்ளி விட்டுப் போயிருக்கிறான் என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்.


இந்த மாணவன் பகல் நேரத்தில் wendy's என்னும் உணவங்காடியில்  வேலை செய்து கொண்டே இரவுப் பள்ளியில் படித்து வந்ததாகத்  தெரிகிறது.  யாரிடமும் அதிகமாகப் பழகமாட்டான் என்று உணவங்காடி மேலாளர் கூறுகிறார். 


அதே மாநிலத்தில் மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் 2018இல் இதே போல ஒரு மாணவன்  17 பேரைச் சுட்டுக் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது உரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தால்  இன்றைய டெக்ஸாஸ் படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று 2018இல் கொல்லப்பட்ட  மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.   


நம்மூரில் இப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் உயிர் ஒன்றுக்கு ஐந்து லட்சமோ பத்து லட்சமோ விலை நிர்ணயம் செய்து அரசாங்கம் உடனே வழங்கி நிலைமையின் தீவிரத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துவதுண்டு. ஆனால் அமெரிக்காவில் செத்தவனுக்கு அரசாங்கப் பணத்தை வாரிக்கொடுக்க அனுமதி கிடையாது. செத்தவன் பாவம் செத்தவனே. 


மேற்படி கொலைகார மாணவன் எங்கிருந்து துப்பாக்கி வாங்கினான், என்ன மாதிரியான துப்பாக்கியை வாங்கினான் என்றெல்லாம் இனி ஆராய்வார்கள். ஆனால் முடிவில் உருப்படியான முடிவுகள் எதுவும் செயல்முறைக்கு வருமா என்றால், இதற்கு முன் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களைப் பார்க்கும்போது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. 


அப்போதிருந்த ஆளும்கட்சித் தலைவர், "ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி வழங்கி, அவர்களுக்குத் துப்பாக்கி சுடுவதிலும் பயிற்சி அளிக்க, சுமார் .....டாலர்கள் ஒதுக்கப்படும்"  என்ற விசித்திரமான தீர்வை வெளியீட்டு மக்களின் கண்டனத்திற்கு ஆளானார். வேறு எதுவும் நடக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டு அவர்களின் சமாதிகளில் மலர்க்கொத்துகள் வைக்கப்பட்டதோடு சரி.


இன்று கொல்லப்பட்ட 21 பேரின் சமாதிகளுக்கும் மலர்க் கொத்துகள் தயார். கண்ணீரும் கம்பலையுமாக அவர்களின் பெற்றோர்கள் கருப்பு ஆடையோடு துக்கம் அனுசரிக்க வரிசையில் நிற்கத் தயார்.  மக்கள் வேறென்ன செய்ய முடியும்? குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க முடியுமா? ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் இருக்க முடியுமா? 


இன்றைய அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் இளைஞர்கள். இவர்களின் குழந்தைகளே எலிமெண்டரிப் பள்ளிகளில் அதிகமாக இடம்பெறுகிறவர்கள், அல்லது இடம்பெறப் போகிறவர்கள். இவர்களில் உங்கள் பேரக்குழந்தைகளும் என்னுடைய பேரக்குழந்தைகளும் இருக்கக்கூடும். எனவே இது அமெரிக்காவை மட்டுமே குறித்த விஷயமல்ல; அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் அனைத்து நாட்டு மக்களையும் பாதிக்கும் விஷயமாகும். 


எல்லா நாட்டுத் தலைவர்களும் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கடமையாற்றவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.


12 கருத்துகள்:

  1. இதுபோன்ற நிகழ்வுகள் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகின்றன. மாணவப்பருவத்தில் சரியான பக்குவமும், சமூக அக்கறையும் ஏற்படும்போது வாழ்நாள் முழுமைக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய அடிப்படையை உருவாக்கவேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

    பதிலளிநீக்கு
  2. சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தியும், நல்ல Morals குழந்தைகளுக்கு கற்று தர வேண்டியது அவசியம் .

    பதிலளிநீக்கு
  3. கு.மா.பா.திருநாவுக்கரசு25 மே, 2022 அன்று 11:25 AM

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரமும், கறுப்பினத்தவர் தாக்கப்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இன்னும் சிறார்களைக் கடத்துவதும் சில பகுதிகளில் உண்டு. தாங்கள் சொல்வதுபோல் எந்த அரசும் இந்த அச்சுறுத்தும் தொடர்கதைக்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை.இத்தனைக்கும் குழந்தைகளை அமெரிக்க நாட்டில் மிகுந்த பாசத்தைக் கொட்டி, அவர்கள் ஆளாகும் வரை, கோபம் வருமளவிற்கு தவறிழைத்தாலும் நம் மக்கள் போல் அடித்துத் துன்புறுத்தாமல் வளர்க்கிறார்கள். எப்படி மூர்க்கத்தனம் வருகிறது?

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கட்டுரையின் இறுதி வரிகள் யோசிக்க வைக்கிற வரிகள் . ஒரு கூட்டுக் குடும்பமாக இந்த உலகம் ஆன பின்பு (குளோபல் வில்லேஜ் ) , நாம் எல்லோரும் தொடர்பு உடையவர்கள் . எங்கோ உக்ரைனில் யுத்தம் என நாம் சும்மா இருக்க முடியாது, அந்த யுத்தம் நம் எல்லோரையும் பாதிக்கிறது . அது போல , அமெரிக்காவின் இந்த துப்பாக்கி கலாச்சாரம் நம் எல்லோரையும் கட்டாயம் பாதிக்கும் ,பாதிக்கிறது .அதனால் ,நீங்கள் எழுதியது போல , மற்ற நாட்டுத் தலைவர்களும் இது பற்றி பேச வேண்டும், யோசிக்க வேண்டும், செயல்பட வேண்டும் . புவி வெப்பமயமாதல் எப்படி உலகப் பிரச்சனையோ , அது போல இந்த துப்பாக்கிக் கலாச்சாரம் .

    பதிலளிநீக்கு
  5. படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது செல்லப்பா சார். அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் மனம் என்ன பாடுபடும்? அந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரின் துயருக்கு யாரால் ஆறுதல் கூற முடியும்? வல்லரசு நாடு நல்லரசு நாடாவது எப்போது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வல்லரசு நாடு நல்லரசு நாடாவது எப்போது?//

      ​நல்ல கேள்வி.

      நீக்கு
  6. சார் அதிர்ச்சியாகிவிட்டது.

    உங்கள் வேண்டுகோளை டிட்டோ செய்கிறேன் சார். கண்டிப்பாக இது உலக நாடுகள் முழுவதும் இணைந்து எடுக்க வேண்டியது.

    இங்கு மதுவை ஒழிக்க முடியுமா சார்?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இது நிச்சயமாக ஒரு உலகளாவிய பிரச்சினை.

    பதிலளிநீக்கு
  8. என்ன கொடுமை. இது கண்டிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை. பெற்றோர் எப்படித் தைரியமாகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியும்?
    ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. பதறவைக்கும் செய்தி. என்ன சொல்ல.. போனது போயாச்சு.. நிறுத்தவும் வக்கில்லாத அரசாங்கங்கள்..

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா28 மே, 2022 அன்று 1:13 PM

    அடுத்த கட்டுரை இந்தியாவில் துப்பாக்கிகளை அனுமதித்தால் எப்படியிருக்கும் என்று கற்பனைச் சிறகை விரிக்கலாம்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு