இப்படியும் மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இப்படியும் மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 17, 2022

மீண்டும் அதே கட்டிடம்!



 மீண்டும் அதே கட்டிடம்!  

(இப்படியும் மனிதர்கள்)

அமெரிக்காவில் 79ஆவது நாள் (29-6-2022)

(தாமதமாகப் பதிவேற்றும் நாள் 16-7-2022)


இதன் முந்தைய    பகுதி -" சினிமா டிக்கட், ரயில் டிக்கட், விமான டிக்கட் " படிக்க இங்கே சொடுக்கவும்.


நேற்றைய கடைசி வரிகள்........

வெளியில் வந்தவுடன் எனது போட்டியாளர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள்..... அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் ஐஓபி கட்டிடத்தை மட்டும் ஆறுமாதம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 



எதிர்பார்த்தபடியே எம்எஸ்சி (கணிதம்) இறுதித் தேர்வில் வெற்றிகரமாக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சேலத்திலிருந்து மீண்டும் இராணிப்பேட்டைக்கு வந்துசேர்ந்தேன். என்னுடைய பிஎஸ்சி நண்பர்கள் அனைவருமே ஏதாவதொரு வேலை கிடைத்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். எனவே என்னைச் சுற்றிலும் நண்பர்களற்ற வெற்றுச் சூழலாக உணர்ந்தேன். நான் இரண்டாண்டுகள் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு வந்ததை என் நண்பர்களின்  பெற்றோர்கள் பெரிய விஷயமாகவே கருதவில்லை. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறேனா இல்லையா என்பதே அவர்களின் கவலையும் எதிர்பார்ப்புமாக இருந்தது.


1970களில் 14 பெரிய வங்கிகள் தேசீயமயமானபிறகு நாடெங்கிலும் அவை ஏராளமான கிளைகளைத் திறக்க ஆரம்பித்ததால், வங்கி ஊழியர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. குறிப்பாக ஒவ்வொரு வங்கியும் அகில இந்திய அளவில் ‘ப்ரொபெஷனரி ஆபீசர்’ என்ற பதவிக்கு ஆளெடுக்கத் தொடங்கியிருந்தன. பட்டதாரி இளைஞர்கள் இதற்கான எழுத்துத் தேர்வுகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்காணலுக்கு நான் அழைக்கப்படுத்தாக ஒரு வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. அந்த வங்கி தான் ஐஓபி என்னும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்.     


ஆகவே ராகுகாலமும் எமகண்டமும் இல்லாத ஒரு வேளையில் அந்த ஐஓபி கட்டிடத்தில் இரண்டாவது முறையாக அடியெடுத்துவைத்தேன். அப்போது ஏர் இந்தியா அலுவலகமும் கண்ணில் பட்டது. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று அதை ஒதுக்கிவிட்டு வங்கியின் ரிசப்ஷன் அறைக்குள் நுழைந்தேன். பெரிய கட்டிடம். சிறப்பாக இயங்கிய வங்கி என்று பெயரும் பெற்றிருந்ததால் அதில்  அதிகாரியாக வேலை கிடைக்குமானால் நல்லது தான் என்று மகிழ்ந்தேன். 


ரிசப்ஷனில் இருந்தவர் எனது அழைப்புக் கடிதத்தைப் பார்த்து அவருடைய பட்டியலில் ‘டிக்’ செய்துவிட்டு, பெயர் முகவரியை ஒப்பிட்டுப் பார்த்தபின், இரண்டாவது, அல்லது மூன்றாவது, அல்லது  நான்காவது மாடிக்குப் போகுமாறு சொன்னார். (சரியாக நினைவில்லை). போனேன். பலர் கூடிப்  பேசுவதற்கான நீண்ட மேஜையும் பல நாற்காலிகளும் கொண்ட பெரிய அரங்கம் அது. தலைவருக்கான சிறப்பு அலங்காரம் கொண்ட நாற்காலி ஒன்றும் அதற்கு முன்னால்  ‘மைக்’ இணைப்பும் இருந்தது. 


பத்து மணிக்கு நேர்காணல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பேட்ச்சில் என்னையும் சேர்த்து ஆறு பேர் அங்கு குழுமியிருந்தோம். பன்னிரண்டு மணிக்கு அடுத்த பேட்ச். ஆனால் ஒன்பதரை வரை அந்த அரங்கம் பெருக்கப்படவில்லை, விளக்குகளும் ஏற்றப்படவில்லை.


ஒரு இளம் அதிகாரி விரைந்து வந்தார். “ஜி.எம். இப்போது வந்துவிடுவார். ஏன் இன்னும் விளக்கே போடவில்லை?’”என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்.  நாங்கள் என்ன பதில் சொல்வது? 


அங்கிருந்த இண்டர்காமில் யாரையோ தொடர்பு கொண்டார். “என்ன சார் இது! ஜி.எம். வர்ற நேரம். லைட் கூடப் போடாமல் இருக்கிறது!” என்றார். அதைச் சொன்ன நேரத்தில் அவரே ஸ்விட்ச்சைத் தட்டியிருக்கலாமே! 


பிறகு இன்னொரு நம்பரைச் சுழற்றி,”ஹாலில் ஃபேன் கூட போடவில்லை சார்! இன்டர்வியூ கேண்டிடேட்ஸ் என்ன நினைப்பார்கள்?” என்றார். அதைச் சொன்ன நேரத்தில் அவரே ஃபேன் போட்டிருக்கலாமே!  


மணி பத்து ஆகிவிட்டது. இந்த இளம் அதிகாரியும் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். சற்று நேரத்தில் இன்னொரு வயதான அதிகாரியை அழைத்துக்கொண்டு திரும்பிவந்தார். “பாருங்கள் கோபாலன் சார்! இன்டர்வியூ சமயத்தில் எப்படி நடந்துகொள்கிறார்கள்! இந்த ஹாலில் டியூப் லைட்டையும்     ஃபேனையும் போட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஏன் போடவில்லை தெரியுமா? ஹெச் ஆர் டிபார்ட்மென்ட் எப்படி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியவேண்டாமா, அதற்குத்தான்!”


மூத்த அதிகாரி அவரை அமைதிப்படுத்தினார். “முரளி, இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டுமா? சுப்பையனுக்கு போன் போட்டீர்களா?” என்றார்.


“போட்டேன் சார், இதோ வருகிறேன் என்று சொன்னார், இன்னும் வரவில்லை சார். ஒன்பது மணி டியூட்டி சார் அவருக்கு!” 


“உஷ்” என்றார் கோபாலன். “அவன் யார்னு உங்களுக்குத் தெரியும்தானே? அவன் பியூன் தான் என்றாலும் கிளரிக்கல் யூனியன் வைஸ் பிரசிடெண்ட் ஆயிற்றே! அவன்கிட்ட நாம் சட்டம் பேசமுடியுமா?” என்றவர், தானே இண்டர்காமில் யாரையோ அழைத்தார்.


“நான்தான் டிஜிஎம் பேசறேன். மிஸ்டர் சுப்பையனை தேர்டு ஃப்ளோருக்கு வரச்  சொல்றீங்களா?” 


சிறிது நேரத்தில் வெள்ளை வெளேர் யூனிபார்மில் கம்பீரமாக ஒரு ஊழியர் வந்தார். அவரைக் கண்டதும், “வாங்க சுப்பையன்!” என்றார் கோபாலன்.


வணக்கம் சொல்வதுபோல்  தலையை மட்டும் இலேசாக அசைத்த சுப்பையன், எங்கள் அனைவரையும் பார்த்து “ஏன் சார்? இன்டர்வியூ நடக்குதா?” என்றார்.


“ஆமாம் சுப்பு! பாருங்க லைட் கூட போடலை, ஃபேனும் போடலை” என்றார். “ஒன்பது மணி டியூட்டி யாருதுன்னு பார்த்து ஒடனே வரச் சொல்லுங்க. கேண்டிடேட்ஸ் வெய்ட் பண்றங்க. ஏசி போடச்சொல்லுங்க” என்றார் கோபாலன்.


உடனே சுப்பையன் தன் பாக்கெட்டிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். பிறகு சிரித்துக்கொண்டே,” ஆமாம் சார்! என்னோட டியூட்டி தான் இன்னைக்கு!   சரி நான் பாத்துக்கறேன். நீங்க போலாம் சார்!” என்று ஃபேன் ஸ்விட்ச்சைப் போட்டார்.  


பிறகு இளம் அதிகாரியைப் பார்த்து, “ஏன் முரளி சார்! இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு நேத்து எங்கிட்ட சொல்லமாட்டீங்களா? சொல்லியிருந்தா இதெல்லாம் நடக்குமா? இத்தனை பேர் எதிர்ல டிஜிஎம் என்னை எப்படிப் பேசினார்னு பார்த்தீங்க இல்லே? நான் இதைச் சும்மா விடமாட்டேன். சேர்மன் செக்ரட்டேரியட் வரை கொண்டுபோவேன்” என்று அதட்டலாகக் கூறியவர், ஹாலுக்குள் நுழையாமல் திரும்பவும் இண்டர்காமில் யாரையோ தொடர்புகொண்டார். 


பிறகு கோபாலனை நோக்கித் திரும்பி, “சார்! ஜிஎம் எப்ப வந்து இன்டர்வியூ தொடங்கறாரோ அப்ப ஏசி யைப் போட்டால் போதும்னு பிரமிஸஸ் டிபார்ட்மென்ட்ல  சொல்றாங்க! எலெக்ட்ரிக் பில் எக்கச்சக்கமா வருதாம். அதனால் நான் லைட்டையும் ஃபேனையும் மட்டும்தான் போட முடியும். அப்புறம் என்னைக் கொறை சொல்லக்கூடாது சார்!” என்று தெளிவாகச் சொல்லிவிட்டு அந்த இரண்டு வேலைகளை மட்டும் முடித்துவிட்டுச் சென்றார் சுப்பையன்.   அந்த இரண்டு அதிகாரிகளும் எங்களை ஹாலுக்கு உள்ளே அமரச் சொன்னார்கள். 


சற்றுநேரம் கழித்து ஒரு துப்புரவுப் பெண்மணி வந்தார். எங்களைப்  பார்த்து,”கொஞ்ச நேரம் வெளியில் இருக்கிறீர்களா? டேபிள் சேர் எல்லாம் டஸ்டிங் செய்யவேண்டும். உங்கள் மீது தூசி விழுமே!” என்றார்.  எல்லோரும் வெளியில் வந்து நின்றுகொண்டோம். 


சரியாகப் பதினோரு மணிக்கு ஜிஎம் வந்தார். கூடவே இரண்டு அதிகாரிகள் கையில் எங்கள் விண்ணப்ப ஃபைல்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். சுப்பையன் பந்தாவாக “குட் மார்னிங் சார்” என்று ஜிஎம் முன்பு சல்யூட் அடிக்காத குறையாகச் சொன்னார். கதவருகில் நின்றுகொண்டு “மொத்தம் ஏழு கேண்டிடேட்ஸ் வந்திருக்கிறார்கள் சார். ஒருவர் ஆப்செண்ட்” என்று ஒரு பட்டியலைப் பார்த்துச் சொன்னார்.


தன் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்ட ஜிஎம்,  அப்போதுதான் ஏசி போடாமல் இருந்ததைக் கண்டு சுப்பையனை ஏறிட்டார். “நீங்க வந்த பிறகு போட்டால் போதும்னுட்டார் டிஜிஎம்” என்று அவசர அவசரமாக ஏசி ஸ்விட்ச்சைப் போட்டார் சுப்பையன். எங்களுக்கெல்லாம் பகீரென்றது. இந்த பேங்க்கில் யார் யாருக்கு எஜமான்?  


“ஓகே ஓகே” என்ற ஜிஎம் தனது இன்டர்வியூ கடமையில் இறங்கினார்.


*** 

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தவேண்டும். மேற்படி இன்டர்வியூ நடைபெற்ற சமயத்தில் BSRB  எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம்  ஏற்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு நியதிப்படி தனக்கு வேண்டிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் எல்லாவற்றிலும் முதலில் எழுத்துத்தேர்வு, அதன் பிறகு இன்டர்வியூ  என்பது மட்டும் தவறாமல் பின்பற்றப்பட்டது. 


மேற்படி நாளன்று எங்கள் நேர்காணல் முடிந்தது. கிரீஸ் நாட்டின் தலைநகரம் எது என்பதுமுதல், இந்த வங்கியின் தற்போதைய சேர்மன் யார் என்பதுவரை, சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கும் கரண்ட் அக்கவுண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதிலிருந்து, சேவிங்ஸ் கணக்கு தொடங்க மினிமம் பேலன்ஸ் எவ்வளவு என்பதுவரை கேட்கப்பட்டது. ஏசி என்பதன் விரிவு என்ன என்ற கேள்வி அனைவரிடமும் கேட்கப்பட்டது. ஏர் கண்டிஷன் என்று பதில் சொன்னோம். இல்லை “ஆல்ட்டர்நேட்டிங் கரண்ட்” என்ற விடையைத்தான் எதிர்பார்த்தோம் என்றார்கள். தொலையட்டும்.


இன்டர்வியூ முடிந்தபிறகும் எங்களை அப்படியே இருக்கச் சொன்னார்கள். பிறகு ஓர் அதிகாரி வந்தார். “இளம் நண்பர்களே, நீங்கள் எல்லாரும் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதவேண்டும்” என்றார். “நான் நிதி மந்திரி ஆனால்…”, அல்லது, சென்னையின் பெருமைகள்”, அல்லது “நான் அண்மையில் படித்த ஆங்கில நாவல்” என்ற தலைப்புகளை கொடுக்கப்பட்டன. நான் கடைசி தலைப்பில் எழுதினேன். 


எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. எழுத்துத் தேர்வு முடிந்தபிறகுதானே  இன்டர்வியூ நடந்தது. அதற்குப் பின்னும் ஒரு கட்டுரை எழுதும் போட்டி வைத்தது ஏன்?  


கடைநிலை ஊழியரைக்  கண்டித்து ஒழுங்குமுறையை நிலைநாட்ட மேலதிகாரிகள் தயங்கியது ஏன்?


இப்படிப்பட்ட வங்கியில் வேலைசெய்வது வேறெந்த வகையிலும் சிபாரிசோ செல்வாக்கோ இல்லாத என் போன்றவனுக்குப் பாதுகாப்பானதா? 


பலநாட்கள் ஆகியும் வங்கியிலிருந்து கடிதம் வரவில்லை. சரியென்று நானாகவே ஒரு கடிதம் எழுதினேன். 


“உங்கள் பெர்பார்மன்ஸ் நன்றாக இருந்தபோதிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே அதிகாரிகள் தேர்வுசெய்யப்பட வேண்டி இருந்ததால் உங்களைப் போன்ற ஆர்வமும்  திறமையும் கொண்ட இளைஞர்கள் சிலர் விடுபட்டுப்போயினர்…” என்ற அழகான வாசகங்களுடன் பதில் வந்தது. “உங்கள் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று மறவாமல் குறிப்பிட்டிருந்தார்கள்.

     

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 


சனி, ஜூலை 16, 2022

சினிமா டிக்கட், ரயில் டிக்கட், விமான டிக்கட்



சினிமா டிக்கட், ரயில் டிக்கட், விமான டிக்கட் 

(இப்படியும் மனிதர்கள்)

அமெரிக்காவில் 78ஆவது நாள் (28-6-2022)

(தாமதமாகப் பதிவேற்றும் நாள் 15-7-2022)



சேலத்தில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது எதிர்காலம் பற்றிய கவலை மனதில் எழுந்தது. ‘ஹிந்து’வில் வரும் எல்லா விளம்பரங்களுக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.  அதேசமயம் உடனே வேலை கிடைத்து விடக்கூடாதே என்றும் இருந்தது.  ஏனென்றால் படிப்பு பாதியில் நின்று விடுமே என்ற அச்சம்.


‘ஏர் இந்தியா’ நிறுவனத்திலிருந்து சென்னைக்கு நேர்முகம் காணலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. இரவு ரயிலில் முன்பதிவில்லாத டிக்கட் வாங்கி, பெட்டியின் தரைத்தளத்தில் படுத்தபடி சென்னைக்குப் பயணமானேன். 


நான் உள்ளே நுழைந்தபோதே உட்கார இடமின்றி இரண்டுபேர் தரையில் படுத்துக்கொண்டு எல்லா இடத்தையும் தங்களுடையதேபோல் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கையில் பழைய ஹிந்து பேப்பருடன் என்னைப் பார்த்ததுமே சற்று நிமிர்ந்து தங்கள் உடம்புகளைக் குறுக்கிக்கொண்டு தாங்கள்  போட்டுப் படுத்திருந்த தினத்தந்தி மாலைமுரசு பேப்பர்களைக் கிழிந்துவிடாதபடி நகர்த்திக்கொண்டு எனக்கு இடம்கொடுத்தார்கள். தரையில் விரித்தாலும் ஆங்கிலப் பேப்பருக்குத் தனி மரியாதை இருப்பது அன்றுதான் புரிந்தது. (பழைய பேப்பர்களை எடைக்கு வாங்குபவர் கூட, தமிழ் பேப்பரை விட ஆங்கிலப் பேப்பருக்கு கிலோவுக்கு ஐம்பது காசு அதிகம் கொடுப்பார்கள்.) 


ரயில் வண்டியின் கடகடா சப்தத்தில் தூக்கம் வரவில்லை - எங்கள் மூவருக்கும். ஆனால் இரவில் பேசி மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பது சரியில்லை என்பதால் நான் பேச்சைத் தொடங்க விரும்பவில்லை. போதுமான வெளிச்சமில்லாதபோதும் தினத்தந்தியில் படுத்தவர் என்னை விடச்  சில ஆண்டுகள் பெரியவர் என்றும் மாலைமுரசுக்காரர் அவரை விடவும் கொஞ்சம் பெரியவராக இருக்கலாம் என்றும் தோன்றியது. முதலில் பேச ஆரம்பித்தவர் மாலைமுரசுக்காரர். “தம்பி, இன்டர்வியூவுக்குப் போறாப்பலே?” என்றார். 


“ஹிந்து பேப்பரை அழுக்கில்லாமல் மடிச்சு வச்சிருந்தாரே, அதிலிருந்தே தெரியலையா?” என்றார் தினத்தந்திக்காரர். 


எப்படி எளிதாக மனிதர்களை எடைபோட முடிகிறது என்று வியந்தேன்.  “ஆமாங்க” என்று பொதுவாகச் சொன்னேன். 


சீட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி தன்  கணவனைப் பார்த்து, “என்ன, உங்களுக்கு நீங்களே பேசுகிறீர்கள்?” என்று கடிந்துகொண்டாள். அரைத் தூக்கத்திலிருந்து கணவன்,” நா ஒண்ணும் பேசல்லியே” என்று முனகிவிட்டுத் தூங்கத் தொடங்கினான்.      


“என்ன இன்டர்வியூன்னு சொன்னாத் தெரிஞ்சிக்குவோம். வேணான்னா வேணாம்” என்றார் மாலைமுரசு. 


“அட, சொல்லாட்டா விட்டிருவமா? சொல்லுவார்.  அவரோட வேலைக்கு நாம்பளா போட்டி?’ என்றார் தினத்தந்தி.       


“ஒரு விமானக் கம்பெனில இண்டர்வியூ” என்றேன். தூங்கும் கணவனுக்கு அந்தப் பெண்ணால் மீண்டும் இடையூறு வரக்கூடாதே என்று மெல்லிய குரலில் பேசினேன். இப்போது அந்தப் பெண்ணுக்குப் புரிந்துவிட்டது தன் காலடிப் பகுதியில்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று. தன்  குற்ற உணர்ச்சியை ஈடுகட்டுவதுபோல் கணவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.  


விமானக்  கம்பெனி என்றதும் இருவரும் உற்சாகத்துடன் உரையாடத்  தொடங்கிவிட்டார்கள். “சம்பளம் ஆயிரத்தைத் தாண்டுமே, நீங்கள் அதிர்ஷ்டசாலி” என்றார் தந்தி.  “சந்தேகமில்லாமல்” என்றார் முரசு.


நான் சொல்வது 1971-72 ஆம் வருடம். பேங்கில் ப்ரொபெஷனரி ஆபீஸருக்கு முதல் இரண்டு வருடத்திற்கு ஸ்டைபெண்ட் நானூறு ரூபாய்தான் அப்போது. 1977இல் தான் - விலைவாசிப் புள்ளிகளின்படி பஞ்சப்படி கொடுக்கும் வழக்கத்தை சரித்திரத்திலேயே முதல்முறையாக இந்தியன் வங்கி ஆரம்பித்தபோதுதான்- பத்துவருடம் அனுபவமுள்ள அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்க ஆரம்பித்தது. எனவே விமானக் கம்பெனியில் அந்நாளில் ஆயிரம் ரூபாய் என்பது மிகமிகப் பெரிய சம்பளம்தான். 


“அட நீங்க ஒண்ணு, இருப்பது பதினைந்து வேக்கன்சி தான். அதுக்கு நானூறு பேரையாவது கூப்பிட்டிருப்பார்கள். கிடைக்கிறவனுக்குத் தான் கிடைக்கும்” என்றேன் சுவாரசியமில்லாமல்.


“அப்படிச் சொல்லாதீங்க தம்பி, நான் எம் ஏ முடிச்சிட்டு நாலு வருஷமா ஜிங்கி அடிக்கிறேன். எதிர்வீட்டுப் பொண்ணு பிஎஸ்சி முடிச்சிட்டு ஆறே மாசத்துல கோஆப்பரேட்டிவ் பேங்க்குல சேர்ந்துட்டா” என்றார் முரசு.      


“நான் மட்டும் என்னவாம், இஞ்சினீரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா அலையறேன். ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது” என்றார் தந்தி. 


அடப்பாவிகளே, நீங்கள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்ட மாளிகை. நானோ கொட்டிக்கிடக்கும் செங்கல்! இன்னும் படிப்பே முடியவில்லை என்று சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.


“பணமெல்லாம் ரெடி பண்ணீட்டிங்க தானே?” என்றார் முரசு.   ஏர் இந்தியாவில் வேலைக்குப் பணம் வாங்குவார்களா? தெரியாது. 


“இப்ப எல்லாம் வட்டம், மாவட்டம் எல்லாருக்கும் ஒரு ‘ரேட்’ உண்டு தம்பி! அதைக் கொடுத்தா மட்டும்தான் வேலை நடக்கும். அந்தப் பொண்ணு 25 ரூபா கொடுத்தாளாம்.”


“அப்படியா, கோ-ஆபரேட்டிவ் பேங்குக்கே இருபத்தஞ்சா?” என்று வாயைப் பிளந்தார் தந்தி. அது உண்மைதான் என்பது எனக்கும் தெரியும். என்னுடைய பிஎஸ்சி முடித்த தோழன் ஒருவன் அதைக் கொடுத்துத்தான் வேலூரில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் இருநூற்று நாற்பதுதான். 


“எங்கிட்ட பணமெல்லாம் கிடையாதுங்க. அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூக்குவுக்குக் கூப்பிட்டிருக்காங்க. ரயில்சார்ஜ் கொடுத்திடுவாங்க. அதனால் போறேன். கெடைக்காட்டி நஷ்டமில்லே. எப்படியும் ஆறுமாசம் இன்னும் படிக்கணுமே” என்றேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள்.


“நல்ல காரியம் பண்ணினீங்க தம்பி, படிக்கிறப்பவே வேலை தேடினா எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள கிடைச்சுடும். எங்களை மாதிரி இருக்காதீங்க” என்றார்கள் ஒரே குரலில். “காட்பாடி வரும்போது ஒங்க பேரைச் சொல்லி எல்லாரும் டீ சாப்பிடலாம், சரியா?” என்று படுத்துக்கொண்டார்கள். எனக்கு இன்னும் சற்று அதிகமாகவே படுக்க இடம் கொடுத்தார்கள்.   


ஆனால் காட்பாடி வந்தபோது மூவருமே நன்றாக உறங்கிவிட்டோம். அதனால் என் டீ காசு தப்பியது. சென்னை சென்டிரலில் நான் இறங்கியபோது பெட்டியே காலியாக இருந்தது. பாதிப்பேர் ஆவடியில், மீதிப்பேர் அம்பத்தூரில் அல்லது பெரம்பூரில் இறங்கிவிட்டிருக்கவேண்டும். அப்போதெல்லாம் எல்லா ரயிலும் பேசின்பிரிட்ஜில் ஒருமணிநேரம் நிற்கும்.    


ரயில் நிலையத்திலேயே உடலையும் முகத்தையும் கழுவிக்கொண்டு ஒரு காப்பி அருந்தினேன். எனக்கு இன்டர்வியூ நடக்கவிருந்த இடம் மவுண்ட் ரோடில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கட்டிடத்தின் தரைத்தளம்.  அந்த இடத்திற்கு எப்படிப் போகவேண்டும் என்று விசாரித்தேன். நான் சென்னைக்கு வருவது அதுதான் இரண்டாவது தடவை. அதிகம் தெரியாது. ஆட்டோவில் போகலாம் என்றார்கள். 


“வேண்டாம் தம்பி, நீங்கள் ஊருக்குப் புதியவர் என்றால் ஆட்டோக்காரர்கள் தீட்டி விடுவார்கள். பஸ்சில் போங்கள்” என்றார் ஒரு நல்லவர். ‘ஜிஎச்’ வாசலில் 11 நம்பர் பஸ் கிடைக்கும் என்றார்.  


சரி, ஜிஎச்-சுக்கு எப்படிப் போகவேண்டும்? 


ரயில் நிலையத்தில் எல்லாருக்கும் வேகம்தானே! சிலர் ரயிலை நோக்கி வேகமாகவும் பிறர், ரயிலை விட்டிறங்கி வேகமாகவும் நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். நிலையத்தின் வாசலுக்கு வந்துவிட்டேன். அப்போது சிகப்பு முண்டாசு கட்டிக்கொண்டிருந்த  ஒரு போர்ட்டரிடம் கேட்டேன்.  அலட்சியமாகப் பார்த்தார்.


“ஜிஎச் சுக்குப் போகவேண்டுமா? நேராக நடந்து போங்கள். மெயின் ரோடில் கார் பஸ் எல்லாம் போய்க்கொண்டே இருக்கும். நடுவில் புகுந்து கண்ணை மூடிக் கொள்ளுங்கள். யாராவது உங்களை ஜிஎச் சில் சேர்த்துவிடுவார்கள்” என்றார். 


அபசகுனம் மாதிரிப் பேசுகிறாரே என்று கோபத்துடன் கண்களை அகல விரித்தேன். எதிரில் தெரிந்தது General Hospital என்ற பெரிய எழுத்துக்கள்! மிகுந்த சிரமப்பட்டு சாலையைக் கடந்தேன். அப்போது ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் கிடையாது. சுரங்கப்பாதை கிடையாது. ஒரே ஒரு போலீஸ்காரர் தன் கைகளால் இயன்றமட்டும் போக்குவரத்தைச் சீர் செய்துகொண்டிருந்தார். 


எட்டரை மணிக்கு ஐஓபி கட்டிடத்தை அடைந்தேன். தரைத் தளத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒரு பக்கமும், ஏர் இந்தியா இன்னொரு பக்கமுமாகத் தங்கள் அலுவலகங்களை வைத்திருந்தார்கள்.  பூங்கொத்து  விற்கும் கடையோ அல்லது  ஜூஸ் கடையோ இருந்ததாகவும்  நினைவு. என்னைப்போலவே இன்னும் நான்கைந்துபேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். வசதியான குடும்பத்தவர்கள் என்று நடை, உடை,பாவனைகளைப்  பார்த்ததும் தெரிந்தது. இவர்களுக்கு மத்தியில் எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது! 


அவர்களில் ஒருவன் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டே என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டினான். “சாரி” என்றேன். அருவருப்பாக என்னைப் பார்த்தபடி, “சிகரெட் கூடப் பிடிக்காதவனுக்கு ஏர் இந்தியாவில் வேலை கிடைக்குமா?” என்று சிரித்தான். மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். அவர்களுக்கும் ஆளுக்கு ஒரு சிகரெட் கிடைத்தது. 


நான் இன்னும் படிப்பையே முடிக்காமல் இன்டர்வியூவிற்கு வந்ததைத் தெரிந்துகொண்டதும் அவர்கள் ஆக்ரோஷமாகிப் போனார்கள். பட்ட மேற்படிப்பு முடித்து மூன்று நான்கு வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காமல் அவர்கள் இருக்கும்போது, எனக்கு ஏன்  இவ்வளவு பேராசை என்றார்கள். “பேசாமல் திரும்பிப் போ. எங்களுக்குப் போட்டியாவது குறையும்” என்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலைச் சொல்லி மாளாது. 


இன்டர்வியூ  ஆரம்பித்தது.


நிலைய மேலாளர் (என்று தான் நினைக்கிறேன்)  நேர்காணல் நடத்தினார். தனியொருவர். மூன்று  பேராவது இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. சிறிது நேரம் கழித்து இரண்டு விமான பணிப்பெண்கள் தங்களுக்குரிய சீருடையில் திடுமென்று  உள்ளே நுழைந்தார்கள்.  நேர்காணலைப்  பற்றிக்  கொஞ்சமும் கவலைப்படாமல் மேலாளருடன் பேசமுற்பட்டார்கள். 


“நான் நேர்காணல் நடத்தவேண்டும்!” என்று  மேலாளர் கெஞ்சினார். 


“ஓகே” என்று அவர்கள் கொஞ்சலாகக் கூறியபடியே இன்னொரு அறைக்குள் சென்று மறைந்தார்கள். 


மேலாளர் என்னுடைய கல்விச் சான்றிதழ்களைப்  பார்த்தார்.  அப்போது இருவருக்கும் பெரிய கண்ணாடி டம்ளர்களில் ஆரஞ்சு ஜூஸ் வந்தது. “ஆப்பிள் ஜூஸ் வேண்டுமானாலும் கிடைக்கும்” என்றார்.  வேண்டாம் என்று ஆரஞ்சு ஜூஸ் குடித்தேன்.


“இதுவரை விமானத்தில் பயணம் செய்தது உண்டா?” என்றார். இல்லை என்றேன்.


“டோன்ட் ஒர்ரி ! நானும் இதுக்கு வேலை கிடைத்த பிறகு தான் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்தேன்”  என்று சிரித்தார்.


அதன் பிறகு, “இந்த வேலைக்கு வரவேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?” என்றார். 


நான் விளக்கினேன்.  சராசரி இந்திய இளைஞனுக்கு தான் விரும்பும் வேலைக்குச் செல்லும் ஆடம்பரம் கிடையாதே!  கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்வதுதானே அவன் முன்னால் உள்ள ஒரே வாய்ப்பு!  இந்த வேலைக்கு விண்ணப்பித்தேன்.  நேர்காணலுக்கு வரச்  சொன்னீர்கள், வந்திருக்கிறேன்.


அவர் எழுந்து என் தோள் மீது கை வைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.               “ஒருவேளை உங்களுக்கு சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை கிடைத்தால் போவீர்களா?” என்றார்.


“அதற்காகவா எம்எஸ்சி படித்தேன்?” என்றேன் எரிச்சலுடன். 


“குட்! ரயில்வேயில் டிக்கெட் கொடுக்கும் வேலை கிடைத்தால் போவீர்களா?”


“நிச்சயம் மாட்டேன்!”


“அப்படியானால் இந்த டிராஃபிக்  அசிஸ்டண்ட் வேலைக்கு மட்டும் ஏன் வந்தீர்கள்?” என்றார். 


அப்போதுதான் புரிந்தது,  நான் விண்ணப்பித்திருந்த வேலை, கவுண்ட்டரில்  அமர்ந்துகொண்டு டிக்கட் கொடுப்பது என்று!  அதற்காகவா இவ்வளவு சம்பளம்? 


"மன்னிக்க வேண்டும் சார்! நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருகிறேன். பேப்பரில் வரும் வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பம் போட்டேன். எப்படியும் வேலை கிடைக்க ஆறு மாதங்களாவது ஆகும். அதற்குள் படிப்பு முடிந்துவிடும். வெளிவந்தவுடனே வேலையில் சேர்ந்துவிட்டால் குடும்பத்தைக் காப்பாற்ற வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். ஏர் இந்தியா என்றவுடன் ஒரு கவர்ச்சி இருந்தது. வேலையின் தன்மை குறித்து  எனக்கு ஒன்றுமே தெரியாது" என்றேன்.


"உங்கள் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டுகிறேன். எங்கள் நிறுவனத்தில் இது ஒரு கிளார்க் வேலை மாதிரிதான். இதில் சேர்ந்தால் முன்னேற வழியில்லை. வேலையிலும் சவால்கள் ஏதுமில்லை. ஆறே மாதங்களில் உங்களைப் போன்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவீர்கள். உங்கள் கல்விச் சான்றிதழ்களைப் பார்த்தேன். நீங்கள் கணிதத்துறையில் முன்னேறும் வாய்ப்பு மிகுதி. எனவே ஒரு கல்லூரியில் லெக்சரராகச் சேருங்கள். பொன்னான எதிர்காலம் இருக்கும்" என்றார் அவர்.  


கல்விச் சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். நன்றி சொன்னேன். "என்னை உங்கள் மூத்த சகோதரனாக எண்ணிக்கொள்ளுங்கள்.  இந்த ஐஓபி கட்டிடத்துக்கு மறுபடியும் வராதீர்கள்!" என்று விடைகொடுத்தார் அவர்.


வெளியில் வந்தவுடன் எனது போட்டியாளர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள். நீண்ட நேரமாக எனக்கு நேர்காணல் நடந்ததால் எனக்குத்தான் வேலை கிடைத்துவிட்டது என்று அவர்கள் நம்பிவிட்டார்கள். விஷயத்தைச் சொன்னதும் அனைவருக்கும் நிம்மதி. கலகலவென்று சிரித்தார்கள். "சபாஷ்! எங்களில் ஒருவர்தான் உங்களுக்கு விமான டிக்கட் கொடுக்கப்போகிறோம்! மீண்டும் சந்திப்போம்" என்றார்கள். 


அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் ஐஓபி கட்டிடத்தை மட்டும் ஆறுமாதம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 


விதியின் விளையாட்டு! 


(நாளை முடியும்)

                                -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து  


இதன் அடுத்த    பகுதி -" மீண்டும் அதே கட்டிடம்" படிக்க இங்கே சொடுக்கவும்.


ஞாயிறு, ஜூலை 03, 2022

அன்னை இழந்தது ஆயிரம்! (தொடர்ச்சி)

அன்னை இழந்தது ஆயிரம்! (தொடர்ச்சி) 

(இப்படியும் மனிதர்கள்-3 )

அமெரிக்காவில் 77  ஆவது நாள் (27-6-2022)



பாவம், அந்த மேலாளர் என்னைவிட மிகவும் இளையவர். இந்தக் கிளையில் இன்னும் என்னவெல்லாம் மோசடிகள் வெளிவருமோ என்று நடுங்கிவிட்டார். 

நான் அவருக்கு தைரியம் சொன்னேன். வங்கிகளில் சிஸ்டம்ஸ் & ப்ரொஸீஜர்ஸ் என்ற நடைமுறை விதிகள் கடுமையானவை. அது சட்டப்புத்தகம் மாதிரி. மீறினால் ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள்.  எந்த விதிகள் மீறப்பட்டன என்பதை இந்தச் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டே நிர்ணயிப்பார்கள். 


மேலாளருக்கு இப்போது நடந்திருக்கும் விதிமீறல்கள் என்னென்ன என்று தெளிவாகிவிட்டது. உடனே தன் தலைமையகத்துக்கு போன் செய்ய முனைந்தார். 


“கொஞ்சம் பொறுங்கள்” என்று சொன்னேன். அன்றைய வவுச்சர் பண்டலை இன்னொருமுறை என்னிடம் காட்டச் சொன்னேன். 


ஆயிரம் ரூபாயும் அதற்குக் குறைவானதுமான செலான்களை எடுக்கச் சொன்னேன். மூன்று செலான்கள் இருந்தன. 200 ரூபாய், 300 ரூபாய், மற்றும் 1000 ரூபாய். மூன்றுமே சேவிங்க்ஸ் அக்கவுண்ட் செலான்கள். அந்த ஆயிரம் ரூபாய் யாருடைய கணக்குக்குப் போயிருக்கிறது என்று பார்த்தால், எங்கள் வங்கியின் இன்னொரு கிளையின் ஊழியர் கணக்கிற்கு!


மேலாளர் எழுந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார். “இதுதான் சார் எனக்கு மேனேஜராக முதல் போஸ்டிங்! நாளைக்குள் அவனை வந்து உங்கள் காலில் விழச்செய்கிறேன். தயவுசெய்து எழுத்துமூலம் புகார் கொடுத்துவிடாதீர்கள்! வங்கிக்கும் பேர் கெட்டுவிடும்! அத்துடன் உங்களுக்குத்தான் பேங்க் யூனியன்களைப் பற்றித் தெரியுமே! கிளார்க், பியூன் போன்றவர்கள் தப்பிவிடுவார்கள். ஆபீசர்கள் தான் மாட்டுவார்கள்” என்று தழுதழுத்த குரலில் கூறினார். 

 

அவரை ஆறுதல் படுத்தினேன். “என் பணம் வரட்டும். பெரிய விஷயமில்லை. ஆனால் இது மோசடியா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இரண்டு வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து செய்த காரியம் என்பதால் நாம் அஞ்சவேண்டியிருக்கிறது” என்றேன். 


அது ஹர்ஷத் மேத்தா என்ற ஸ்டாக்புரோக்கர் நாட்டிலிருந்த ஏராளமான வங்கிகளை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக விசாரணை வளையத்துக்குள் வந்திருந்த நேரம்.  இப்படிச் சிறிதுசிறிதாக பணத்தைக் கையாடி ஷேர் மார்க்கெட்டில் போட்ட வங்கி ஊழியர்களை எனக்குத் தெரியும்.   


டில்லி என்பது ஊரே அல்ல, அது ஒரு சதிக்கூடம் என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதுவார்கள். மொகலாய மன்னர்களின் நடவடிக்கைகளில் இருந்து உருவான சரித்திர உண்மை அது. நாளாவட்டத்தில் மொகலாயர்  அல்லாதவர்களும் அதை உண்மையாக்க முனைந்துவிட்டார்கள் போலும். 


பேசிக்கொண்டே இருந்ததில் வெகுநேரம் ஆகிவிட்டதால் வங்கியின் கதவைப் பூட்டிக்கொண்டு வெளிவந்தார் அந்த மேலாளர். இருவரும் அருகில் இருந்த சௌத் இண்டியன் ஓட்டலில் உணவருந்திவிட்டு அவரவர் திசையில் கிளம்பினோம். 

*** 

மறுநாள் காலை பதினொரு மணிக்கு அந்த மேலாளரே  என்னைத் தேடிக்கொண்டு வந்தார். அவருடன் அவரது காசாளரும் வந்திருந்தார். 


“மன்னிக்கவேண்டும் சார்! அன்று மாலை, உங்கள் பியூன் வந்து டிராஃப்ட்டை கேன்சல் செய்து பணம் தருமாறு கேட்டார். வங்கி நேரம் முடிந்துவிட்டதால் நான் பணம் தரமுடியாது, நாளை வாருங்கள் என்றேன். அவரோ பரவாயில்லை, பணம் தரவேண்டாம், என் கணக்கில் வரவு வைத்துவிடுங்கள் என்று செலான் எழுதிக்கொடுத்தார். அன்று காலையில்தான் தன் கையெழுத்தில் டிராஃப்ட் செலானை அவர் பூர்த்திசெய்து கொடுத்து டிராஃப்ட் வாங்கியிருந்தார் என்பதால், பணம் அவருடையது என்பது உறுதியானது. ஆகவே அவருடைய கணக்கில் வரவு வைத்தேன். நான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை சார்!” என்றார். என்றாலும் குரலில் அச்சம் இருந்தது. 


அவர் சொன்னதை கவனமாக ஆராய்ந்தேன். அவர் மீது எந்தத் தவறும் இல்லை. யார் வங்கியில் வந்து கையெழுத்திட்டு பணம் செலுத்தி டிராஃப்ட் வாங்கினாரோ, அவரே வந்து டிராஃப்ட்டைத் திருப்பிக்கொடுத்து  கேன்சல் செய்யுமாறு கோரினால் அவருக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டியதுதான் வங்கியின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். 


“நல்லது நண்பர்களே! உங்கள் மீது தவறில்லை. என்னுடைய பியூன் ஏன் இப்படிச் செய்தார் என்று நான் விசாரித்துக் கொள்கிறேன். விஷயத்தை இத்துடன் விட்டுவிடுங்கள். அடிப்படையில் தவறு என்னுடையதுதான்” என்றேன். நிம்மதியான மனத்தோடு வெளியேறினார் அந்த மேலாளர்.   


‘க’ வை அழைத்து விசாரித்தேன். தான் நேரடியாக வங்கிக்குப் போகவில்லை என்றும், அப்போது எங்கள் இன்னொரு கிளையின் முன் குறிப்பிட்ட ஊழியர் நின்றுகொண்டிருந்ததால் அவரிடம் பணத்தைக்கொடுத்து டிராஃப்ட் வாங்கிவரச் சொன்னதாகவும் கூறினார். ‘அவர் டிராஃப்ட்டை உங்களிடம் கொடுத்ததைக் கூட நான் பார்த்தேனே!” என்றார் ‘க’. 


அவர் சொன்னதும் உண்மையே. அவர்மீது எந்தத் தவறும் இல்லை. அப்படியானால் யார்மீதுதான் தவறு? என்  பணத்திற்கு யார்தான் பொறுப்பு?


சத்தியமாக என்மீதுதான் தவறு. ஒருவேளை நானே செலானை பூர்த்திசெய்து கொடுத்தனுப்பி இருந்தால் அந்த ஊழியறாள் அதை கேன்சல் செய்திருக்க முடியாது. எனவே contributory negligence என்னுடையதே. 


ஆனால், என்னுடைய பணத்தை முறையின்றிக் கையாண்டு மோசடி செய்த குற்றம் அந்த ஊழியருடையதே. ஆனால் அதற்காக என் வங்கியில் நான் யாரிடமும் புகார் செய்யமுடியாது. ஒரு தனிமனிதனின் பணத்தை இன்னொரு தனிமனிதன் திருடிவிட்டான். அவ்வளவே!


குறிப்பிட்ட ஊழியரை அவரது அலுவலகத்தில் சென்று ஒரு பிடிபிடித்தேன். காலில் விழுந்துவிட்டார். பிள்ளை குட்டிக்காரன். விசாரணையில் அவரைப் பற்றிய முக்கிய விஷயம் தெரியவந்தது. எல்லாம் ஷேர் மார்க்கெட் தான் காரணம்!


சின்னச் சின்னதாக நிறைய பேரிடம் கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் அன்றாடம் முதலீடு செய்திருக்கிறார். முதலில் சில லட்சங்களை சம்பாதித்திருக்கிறார். அதன் பிறகு ஹர்ஷத் மேத்தாவின் திருவிளையாடல் ஆரம்பித்துவிட்டதால் எல்லாப் பங்குகளும் வானளாவிய விலைக்கு உயர்ந்துவிட்டதால் அவரால் மேற்கொண்டு டிரேடிங் செய்ய முடியவில்லை. இருக்கிற ஷேர்களை உடனடியாக விற்கவும் மனமில்லை. விலை இன்னும் ஏறும், இன்னும் ஏறும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் வாங்கிய கடன்களை அடைக்க முடியவில்லை. போலியான ஷேர் சர்டிபிகேட்டுகள் மார்க்கெட்டில் வெகுவாக நடமாடியதால் இவரிடம் இருந்த ஷேர்  சர்டிபிகேட்டுகளை நம்பி வாங்க எல்லாரும் பயந்தார்கள். 


ஆகவே அன்றாடச் செலவுகளுக்கு இம்மாதிரி மோசடிகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.   


ஆசாமியிடம் ஐம்பது நூறு கூட இல்லாத வறுமை. அதற்கு முன்புவரை அவர் நல்லவர்தான். யாரையும் ஏமாற்றியதில்லை. நான்தான் அவருக்கு முதல் இரை! 


கிளை மேலாளர் மிகவும் நல்லவர். “ஆயிரம் ரூபாய் தானே, நான் கொடுத்துவிடுகிறேன். இதற்காக நீங்கள் இங்கு வரவேண்டாமே” என்றார். 


விஷயம் அதுவல்ல, மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றேன். மோசடி செய்வதில் இது புதுமாதிரியான உத்தி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றேன்.  


இது நடந்து ஒரு மாதம் இருக்கும். அந்த நபர் என் வீட்டுக்கு வந்தார். “சார் மிகவும் அவசரம், உங்களிடம் சிமெண்ட் கம்பெனி ஷேர்கள் இருக்கிறதா? உடனே விற்றுக்கொடுக்கிறேன். ஒருநாள் தாமதம் ஆனாலும் நஷ்டமாகிவிடும். அதற்காகத்தான் ஓடிவந்தேன்” என்றார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவிலும் ஆந்திரத்திலும் ஐந்தாறு சிமெண்ட் கம்பெனிகள் புதிதாகத் தோன்றி IPO என்னும் புது ஷேர் வெளியீட்டில் ஏராளமான ஷேர்களை வெளியிட்டிருந்தன. அவ்வாறு எனக்கும் பிரியதர்ஷினி சிமெண்ட், மோதி சிமெண்ட், குஜராத் அம்புஜா சிமெண்ட் போன்ற கம்பெனிகளின் தலா நூறு ஷேர்கள் பத்து ரூபாய் விலையில் கிடைத்திருந்தன. ஆனால் சிமெண்ட் கம்பெனி கட்டிமுடித்து உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் என்பதால் ஹர்ஷத் மேத்தாவின் களேபரத்தின் நடுவிலும் கூட அந்த ஷேர்கள் ஏழு அல்லது எட்டு ரூபாயைத் தாண்டவில்லை. எனவே இவர் வந்து கேட்டபோது எதற்கும் லாயக்கில்லாத அந்த சர்டிபிகேட்களை  இந்தா என்று கொடுத்துவிட்டேன். 


மூன்று நாளைக்குப் பிறகு என்னிடம் நாலாயிரம் ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தார் அவர். அதாவது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷேர்களை நாலாயிரத்துக்கு விற்று எனக்கு மூவாயிரம் ரூபாய் இலாபம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்!


அடுத்த நாளே ஷேர் மார்க்கெட் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அது மீட்சி அடையவில்லை. இவர் மட்டும் எனக்கு உதவியிராவிட்டால் எனக்கு மூவாயிரம் இலாபம் எப்படி வந்திருக்கும்?


நீங்களே நீதிபதியாக இருந்து விடை சொல்லுங்கள்: இவர் எனக்குச் செய்த ஆயிரம் ரூபாய் மோசடிக்குத்  தண்டனை கொடுப்பதா? அல்லது மூவாயிரம் இலாபத்தில் இவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுப்பதா?

          

      -இராய செல்லப்பா  நியூ ஜெர்சியில் இருந்து 


அன்னை இழந்தது ஆயிரம்!

அன்னை இழந்தது ஆயிரம்! 

(இப்படியும் மனிதர்கள்-2)

அமெரிக்காவில் 76 ஆவது நாள் (26-6-2022)


பாண்டிச்சேரியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கோட்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டது 1986ஆம் ஆண்டு. 


கர்மயோகி என்ற ஞானகுரு அப்போது ‘அமுதசுரபி’ மாத இதழில் அரவிந்தரின் தத்துவங்களைப்  பற்றி எழுதிவந்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை அமுதசுரபி அலுவலகத்தினர் தமிழில் மொழிபெயர்த்து வாசவன் என்ற எழுத்தாளருக்கு அனுப்புவார்கள். அவர் அதைத் தன்னுடைய அருமையான உணர்ச்சிமிக்க தமிழ்நடையில் திருத்திக் கொடுப்பார். அதுவே மாதாமாதம் கட்டுரைத் தொடராக அமுதசுரபியில் வெளியாகும்.


கடலூரில் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராக இருந்த கர்மயோகி அவர்கள் ஸ்ரீ அன்னை மீது கொண்ட பக்தியின் காரணமாகப் பள்ளிப் பணியிலிருந்து வெளியேறி, பாண்டிச்சேரி வந்து அரவிந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னை அவர்களின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக, அவரது நேரடி வழிகாட்டுதலில் தியானம் பயின்றவர். தமது இறுதிநாட்களில் ஸ்ரீ அன்னை தம்முடைய அணுக்கத் தொண்டர்களை எல்லாம் ஆசிரமத்திலிருந்து வெளியேறி, தான் ஆரம்பித்துவைத்திருந்த “ஆரோ-வில்” (‘அரவிந்தரின் வில்லேஜ்’) என்ற புதிய நகரின் கட்டமைப்பில் பங்குகொள்ளுமாறு ஆணையிட்டார். 


அவ்வாறு வெளிவந்த கர்மயோகி அவர்கள், அன்னையின் அனுமதி பெற்று, தனது இல்லத்திலிருந்தே தியான மார்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் அன்னையின் தியான மார்க்கமானது, மக்களுக்குப் பயன்படக்கூடிய செயல்பாட்டுக்குத் தான் முக்கியத்துவம் அளித்தது என்பதால், அன்னையின் ஆன்மிகக் கோட்பாடுகளை வர்த்தக நிறுவனங்களுக்குப் பயன்படவல்ல பொருளாதாரக் கோட்பாடுகளாக மாற்றி அமைத்து, நிறுவனங்களின் தொழில்திறனைப் பல மடங்கு அதிகரிக்க ஆலோசனை கூறும் ‘மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 


நிர்வாகவியல், வங்கித்துறை, கணக்கீட்டியல், பத்திரிகைத் துறை, கலைத்துறை என்று பல்துறைகளைச் சேர்ந்த இந்தியர், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர் சிலரைத் தன் உதவியாளர்களாக வைத்துக்கொண்டார். தனது இல்லத்திலிருந்து வெளிவராமலேயே, அவர்கள் மூலம் இந்தியாவின் மிகச்சிறந்த கம்பெனிகளுக்கு வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். 


பின்னர் விவசாயத்துறையில் சில முக்கியப் புரட்சிகளையும் நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர், சில ஆண்டுகளிலேயே தமிழில் பக்திச்சுவை சொட்டும் அரவிந்த இலக்கியங்களைப் படைத்தார். எளிய தமிழில் ஸ்ரீ அன்னையின் பெருமையை ஏராளமான புத்தகங்களாக வெளியிட்டார். அரவிந்தரின் ‘லைஃப் டிவைன்’ என்ற புரிந்துகொள்ள மிகவும் கடினமான ஆங்கில நூலை வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு நூல்களாகத் தமிழில் வெளியிட்டார்.


கர்மயோகி அவர்களைக் குருவாக ஏற்றவர்களில் நானும் ஒருவன். 1986இல் அவரது கட்டளைக்கிணங்க சென்னையில் ‘ஸ்ரீ அன்னை தியான மையம்’ என்ற அமைப்பை  ஏற்படுத்தி அதன் பொருளாளராக இருந்தேன். அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் அதன் தலைவராக இருந்தார். வாசவன் செயலாளர். ஆனால் இதெல்லாம் வெறும் பேருக்குத்தான். கர்மயோகி அவர்கள் தன்  சொஸைட்டியிலிருந்து அறிஞர் பெருமக்களை மையத்திற்கு அனுப்பித் தனது கட்டுரைகளை அங்கு படிப்பிக்கச் செய்வார். அவர்கள் சொற்படியே நிகழ்வுகள் இருக்கும்.


1989இல் நான் டில்லிக்கு மாற்றலாகிப் போனபோது, சென்னை நந்தனம் ஹவுசிங் போர்டு அதிகாரியும், ‘தீபம்’ பத்திரிகையில் நா.பார்த்தசாரதி அவர்களின் நெருங்கிய உதவியாளராக இருந்தவருமான திரு ஆர். பாலசுப்ரமணியன் அவர்கள் மையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முதலில் அடையாறு இந்திராநகர் ஹிந்து உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும், பின்னர் கிண்டி காந்தி மண்டபத்திலும், அதன் பிறகு ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியிலுமாகப் பல ஞாயிற்றுக்கிழமைகள் அவர் தியானக் கூடல்களை நடத்தினார். தான் இயற்கை எய்தும்வரை அதனைச் சிறப்பாக நடத்திக்காட்டிய தன்னலமற்ற  அன்னையின் தொண்டர் அவர்.


ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஜனவரி முதல்தேதி சிறப்பாகக் கொண்டாடப்படும். அரவிந்தருக்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்கும் பிறந்த நாளான ஆகஸ்ட் 15, அரவிந்தர் மறைந்த நாளான  டிசம்பர் 5, ஸ்ரீ அன்னையின் பிறந்த நாளான பிப்ரவரி 21, மற்றும் அவரது மறைவு தினமான நவம்பர் 17 - ஆகியவை புனிதமான  நாட்களாகக் கருதப்படுகின்றன. மேற்படி நாட்களில் வருடம் ஒருமுறையாவது ஆசிரமத்திற்குச் சென்று ஒரே பெட்டியில் அடித்தளத்தில் அரவிந்தர் பொன்னுடலும், மேல்தளத்தில் ஸ்ரீ அன்னையின் திருஉடலும் வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள புனிதமான சமாதியைத் தொட்டு வணங்கினால் ஆன்மிக சக்தியைப் பெறலாம் என்று கர்மயோகி அவர்கள் எங்களுக்கு விளக்கியிருக்கிறார்கள். அதன்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த நாட்களில் பாண்டிச்சேரிக்குச் சென்றுவருகிறார்கள்.


நானும் என் குடும்பமும் இந்த யாத்திரையைப் பெரும்பாலும் தவறவிடமாட்டோம். நான் மறந்தாலும் என் மனைவி மறக்கமாட்டார். தாய் வீட்டை யார் மறப்பார்கள்!  அவளுடைய தந்தை திரு ஆர்.சீதாராமன் அவர்கள் பாண்டிச்சேரி அருகில் கடலூரில் கர்மயோகி பணியாற்றிய அதே பள்ளியில் ஆசிரியராக இருந்து பின்னர் துணைமுதல்வரானவர். (ஆனால் அந்த நடராசன் தான் பின்னாளில் கர்மயோகி ஆனார் என்பது அவருக்குத் தெரியாது!) ஆகவே பாண்டிச்சேரி செல்லும்போதெல்லாம் என் மனைவி கடலூருக்கும் சென்று பெற்றோரைச் சந்தித்துவருவார். 


பணிமாறுதல் காரணமாக வெளியூரில் இருக்க நேர்ந்தால் மேற்சொன்ன ஏதாவது ஒரு  நாளில் ஸ்ரீ அன்னைக்குக் காணிக்கையாக என்னால் இயன்ற சிறுதொகையை டிராப்ட் எடுத்து அனுப்பிவிடுவது வழக்கம். ஆசிரமத்தில் கணக்கு வழக்குகள் மிகத் துல்லியமாக இருக்கும். நாம் அனுப்பிய தொகைக்கு ரசீதும், அன்னை அல்லது அரவிந்தரின் புகைப்படம் ஒட்டிய,  அழகிய காகிதப் பொட்டலத்தில், சமாதியில் வைத்து எடுத்து உலர்விக்கப்பட்ட ரோஜா இதழ் ஒன்றும் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் வந்து சேர்ந்துவிடும். இந்த முப்பத்தாறு ஆண்டுகளில் (1986-2022) ஒருமுறை கூட இதில் தவறு நடந்ததில்லை. 


ஆனால் ஒரு முறை மட்டும்  ரசீது வரவில்லை!  அதுதான் இன்று நான் எழுதப் போகும் விஷயம்.

**** 



நான் டில்லியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒருமுறை ஆசிரமத்துக்கு ஆயிரம் ரூபாய் காணிக்கை அனுப்ப விரும்பினேன்.  அப்போது எங்கள் வங்கிக்கு பாண்டிச்சேரியில் கிளை திறக்கப்படவில்லை என்பதால் ஆரிய சமாஜ ரோடில் இயங்கிக்கொண்டிருந்த இன்னொரு வங்கியில் டிராப்ட் வாங்கி வருமாறு செலானைப்  பூர்த்திசெய்து பணத்தோடு என் அலுவலக ஊழியர் ‘க’விடம்  கொடுத்தேன்.  


அது ஒரு சனிக்கிழமை.  பொதுவாகவே சனிக்கிழமைகளில் எனக்கு வேலை அதிகம் இருக்கும். ஆறு மணி வரை இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது. அதனால் தான்  இன்னொருவரிடம் இந்த வேலையைக் கொடுக்க வேண்டி வந்தது. 


வங்கிகளுக்கு சனிக்கிழமை அரைநாள் தான் வேலைநேரம். ஆகவே மதிய உணவு முடிந்தவுடன் எல்லோரும் வெளியேறி விடுவார்கள். எனவே அதற்கு முன்பே ‘க’  பக்கத்து வங்கிக்குச் சென்று நான் கேட்டபடி  ஆசிரமத்தின் பெயரில் டிராப்ட் வாங்கி வந்து கொடுத்து விட்டார். உடனே அவசரமாக அதற்கு ஒரு கவரிங் லெட்டர் எழுதி,   டிராப்டை இணைத்து, ஒரு கவரில் போட்டு முகவரியும் எழுதி நானே ஒட்டியும் வைத்தேன்.  அதை அவர் எடுத்துக்கொண்டு,  தான் போகும் வழியில் அஞ்சல் பெட்டியில் போட்டு விடுவதாகச் சொல்லிவிட்டுக்  கிளம்பினார். 


அப்போது டில்லியில் வேறு ஒரு கிளையில் பியூனாகப்  பணியாற்றுபவர் அங்கு வந்தார். அஞ்சலில் போடவேண்டிய அலுவலக  தபால்கள் அவரிடமும் இருந்ததால் என்னுடைய தபாலையும் சேர்த்துப் போடுவதாக இவரிடமிருந்து வாங்கி எடுத்துக்கொண்டு போனார். 

   

அத்துடன் அந்த விஷயத்தை நான் மறந்து போனேன்.  ஆனால் பதினைந்து நாள் ஆகியும் பாண்டிச்சேரியிலிருந்து ரசீது வரவில்லை. 


குறிப்பிட்ட பியூனுக்கு போன் செய்தேன்.  சனிக்கிழமையே தபாலில் போட்டு விட்டேனே என்றார் அவர்.  சரி, வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டேன். 


ஆனால் ஒரு மாதமாகியும் ரசீது வரவில்லை.  எனவே ஆசிரமத்திற்கு கடிதம் எழுதினேன். வங்கியின் பெயர் தேதி தொகை குறிப்பிட்டிருந்தேன்.  டில்லியில் இருந்து அந்த மாதிரி ஒரு டிராப்ட் நாளதுவரை வரவில்லை என்று அவர்கள் எழுதினார்கள். டிராஃப்ட் நம்பரை நான் குறிப்பிடாததைச் சுட்டிக் காட்டியிருந்தார்கள். 


அப்போதுதான் எனக்கு உறைத்தது.  அவசர அவசரமாகக் கவரை ஒட்டியபோது டிராப்ட்  நம்பரை என் டைரியில் குறித்துக் கொள்ள மறந்து விட்டேன்.  எனவே அந்த வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்றேன். 


தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஊரைத்  தலைமையகமாகக் கொண்ட வங்கி அது.  பெயர் நீளமாக இருக்கும். (அடுத்த சில ஆண்டுகளில் வேறொரு வங்கியோடு  இணைக்கப்பட்டு விட்டது). ஊழியர்கள் அனைவரும் தமிழர்களே. 


கிளை மேலாளர் அன்போடு வரவேற்றார்.  குறிப்பிட்ட தேதியின்  வவுச்சர் பண்டலைத் தானே எடுத்து வந்து ஒவ்வொன்றாகப்  பரிசீலித்தார். என்னே வியப்பு,  அன்றைய தேதியில் ஆயிரம் ரூபாய்க்கு டிராஃப்ட் எதுவுமே எடுக்கப்படவில்லை!


பிறகு ‘கேஷ் புக்’ எனப்படும் காசாளரின் பதிவேட்டை டிக் அடித்தார். அதிலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து டிராஃப்ட் யாரும் அன்று வாங்கியதாகத் தெரியவில்லை! 


“உங்களிடம் கௌண்டர்ஃபாயில் இல்லையா?” என்றார் அவர். இல்லை என்றேன். 


வேறு எப்படிக் கண்டுபிடிப்பது? அந்த பியூன் என்னிடம் அந்த வங்கியின் டிராஃப்டைக் கொண்டு வந்து கொடுத்தது உண்மையில்லையா, அல்லது அதை நான் கவரில் போட்டு ஒட்டி அவரிடம் கொடுத்தது உண்மையில்லையா? 


வங்கியில் பல்வேறு சிக்கலான கணக்குகளை நான் கண்டுபிடித்து சரிசெய்திருக்கிறேன். இது புதுவிதமாக இருக்கிறது. நிச்சயம் யாரோ மோசடிதான் செய்திருக்கிறார்கள் போலும். 


மேலாளரிடம் வங்கியின் டிராஃப்ட் புக்கைக் கொண்டுவரச் சொன்னேன். குறிப்பிட்ட தேதியின் கௌண்டர்ஃபாயில்களைப் புரட்டிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். இரகசியம் வெளிப்பட்டுவிட்டது!


அதாவது அன்றையத் தேதியில் ஆசிரமம் பெயரில் ஆயிரம் ரூபாய்க்கு டிராஃப்ட் கொடுக்கப்பட்டது உண்மையே! ஆனால் அன்றே அது கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது!


அதாவது, என்னிடமிருந்து கவரைப் பெற்றுக்கொண்டு தபாலில் போடுவதாகச் சொன்ன நபரோ, அல்லது வேறு யாரோ, அந்தக் கவரைப் பிரித்து, டிராஃப்ட்டை வங்கியில் கொடுத்து கேன்சல் செய்து பணம் பெற்றிருக்கிறார்!


ஆனால் வங்கியின் விதியின்படி,  டிராஃப்ட் வாங்கிய நபர்தான் அதை கேன்சல் செய்யுமாறு கோரமுடியும். ஆகவே, ‘க’ தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கவேண்டும் என்று புரிந்தது. பாவிப் பயல்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் புரிபவன்!


“அப்படியானால், டிராஃப்ட்டை கேன்சல் செய்யக்கோரி  எழுதிக் கொடுத்த கடிதம் இருக்கவேண்டுமே, அதை நான் பார்க்கலாமா?” என்றேன். அப்படி ஒரு ரிக்வெஸ்ட் லெட்டர் இல்லாமல் கேன்சல் செய்யமுடியாது. 


அதை வேறொரு ஃபைலில் பத்திரப்படுத்துவார்களாம். அதையும் தேடிக்கொண்டுவந்து காட்டினார். நான் தேடிய கடிதம் இல்லை!


ஆகவே ஒரு விஷயம் தெளிவானது. என் வங்கியின் ‘க’வும்  அந்த வங்கியின் அதிகாரியோ அல்லது யாரோ  ஒருவருமோ  சேர்ந்து செய்த மோசடியாக இருக்கவேண்டும் இது. இது பெரிய பனிமலையின் சிறு சிகரமாகவும் இருக்கலாம்.





(தொடரும்)


வெள்ளி, ஜூலை 01, 2022

கைக்குழந்தையுடன் கதறிய கண்ணகி

கைக்குழந்தையுடன் கதறிய கண்ணகி 

(இப்படியும் மனிதர்கள்-1)

அமெரிக்காவில் 75 ஆவது நாள் (25-6-2022)


பொழுது விடிந்தவுடன்  முதல் அழைப்பு வக்கீலிடமிருந்து. “வணக்கம், அட்வொகேட்  முத்துராஜன் பேசறேன். இன்றைக்கு நம்ப கேஸ்  வருது, தெரியுமில்லையா?”

ஒருவேளை   ‘ராங்’ நம்பரோ என்று  நினைத்தேன். ஏனென்றால் ‘நம்ப கேஸ்’  என்று சொந்தம் கொண்டாடுகிறாரே!  நான் யார்மீதும்  கேஸ் கொடுக்கவில்லை,  என் மீதும் எந்த கேசும் இருப்பதாகத் தெரியவில்லை. 

“எனக்குத் தெரியாதே! நீங்கள் யார்?” என்றேன் சற்றே கவலையுடன்.

அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். “என்ன  சார்  இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நான்தானே உங்கள் பேங்கிற்கு லீகல் அட்வைசர்?  இன்றைக்கா, நேற்றா, பதினைந்து வருஷமாக!” 

இருக்கலாம். நான் இந்தக்  கிளையில் மேலாளராகப் பதவியேற்று  ஐந்துநாள் தான் ஆகிறது. வங்கியின் பெரிய டெபாசிட்டர்களையும் பெரிய கடன்தாரர்களையும் முதலில்  சந்தித்துக் கொண்டிருக்கிறேன். “உங்களை சனிக்கிழமை சந்திக்கலாம் என்று இருந்தேன்.  சொல்லுங்கள் எந்த கேஸ்? எந்த கோர்ட்டில்?”

“அப்படியா, பழனியப்பன் இப்போது இல்லையா?” என்று வியப்போடு கேட்டார் முத்துராஜன்.

“பழனியப்பன் திண்டிவனம் கிளைக்கு மாற்றல் ஆகி விட்டார்.  ஒரு வாரம் முன்பே ரிலீவ்  ஆகிவிட்டாரே! நான் பம்பாயில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன்…”  என்று விவரம் சொன்னேன்.

 “ரொம்ப நல்ல மனுஷன்!  சரி விஷயத்துக்கு வருவோம்; போன மாதம் பழனியப்பன் கூறியபடி  75 பேர் மீது கேஸ் போட்டிருந்தோம்.  எல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே கடன் வாங்கியவர்கள்.  ஒரே ஊர்க்காரர்கள்.   ஜட்ஜ் மாற்றல் ஆகிப் போகிறார். அவருக்கு டார்கெட் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக இந்த 75 கேசையும் இன்று ஒரே நாளில் ஹியரிங் போட்டிருக்கிறார்கள். இன்றே டிஸ்போஸ் செய்து விடுவார். வங்கியின் சார்பில் நீங்கள் பவர் ஆஃப் அட்டர்னி எடுத்துக் கொண்டு ஏழாவது கோட்டுக்குப்  பத்தேகால் மணிக்குள் வந்து விடுங்கள். நான் ரெடியா

இருப்பேன்" என்று முடித்தார் முத்துராஜன்.

காலை எட்டு மணிக்கே ஆரம்பமாகும் கிளை என்னுடையது. எட்டில் இருந்து ஒன்பது மணி வரை கூட்டம் பொங்கி வழியும். ஃபீஸ் கட்டுவதற்குப் பள்ளி மாணவர்கள் திரண்டு நிற்பார்கள். ஆகவே முக்கிய வாடிக்கையாளர்கள் நேரடியாக மேனேஜர் கேபினுக்குள் நுழைந்து விடுவார்கள். அவர்களின் உடனடித் தேவைகளை கவனிப்பது தான் முக்கியப் பணியாக இருக்கும்.

மெட்ராஸ் ஹைகோர்ட் 

பத்தே கால் மணிக்குள் கோர்ட்டுக்குப் போவது முடியாத காரியம் என்று தோன்றியது. அசிஸ்டண்ட் மேனேஜர் ராகவனை அனுப்பலாம் என்று அழைத்தேன். சிரித்தார் ராகவன்.

"இதெல்லாம் அரசியல்வாதிகள்  சொன்னதால் கொடுக்கப்பட்ட  கடன்கள். ஒன்றுகூடத்  திரும்பி வராது.  கடன்காரர்கள்  யாரும் கொடுத்த முகவரியில் இல்லை.    மூன்று வருஷம் ஆனதால் டாக்குமெண்டை ரெனிவல் செய்யமுடியாமல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, வேறுவழியின்றி சூட் பைல் செய்திருக்கிறோம். ரீஜனல் ஆபீஸ் எவ்வளவு எழுதியும் ஹெட் ஆபீஸில் ஒப்புக்கொள்ளவில்லை" என்று சொல்லிவிட்டு ஸேஃப் ரூமுக்குள் போனார்.

ராகவன் எப்பொழுதுமே விலாவாரியாகத்தான் பேசுவார். நம்பிக்கையானவர். அவ்வப்பொழுது ஸ்போர்ட்ஸ் விஷயங்கள் பற்றி முகநூலில் ஆங்கிலத்தில் சிறந்த நடையில் எழுதுவார். பேசாமல் ‘ஹிந்து’வில் சேர்ந்துவிடு என்றால் கேட்கமாட்டார்.

“பதினொரு மணிக்கு கோர்ட்டில் இருந்தால் போதும் சார்! முத்துராஜன் வரமாட்டார். அவருடைய ஜூனியர் லதா ரமணி தான் வருவார். அவரிடம் நான் சொல்லிவிடுகிறேன். நீங்கள் சும்மா போய் நின்றுவிட்டு வந்தால் போதும்” என்று எனது பவர் ஆஃப் அட்டர்னி ஆவணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார் ராகவன்.

 ****   

சட்டம் என்பது இருட்டறையில் கறுப்பு பூனையைத் தேடுவது போன்றது என்பார்கள். முதலில் ஏழாவது கோர்ட் எங்கிருக்கிறது என்பதைத் தேடுவதே பெரிய வேலையாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள், அதில் கருப்பு கோட் போட்டவர்களே ஐநூறு பேர் இருப்பார்கள். யாரிடம் கேட்டாலும் ‘அந்தப் பக்கம் போங்கள்’ என்று கைகாட்டினார்களே தவிர, அவர்கள் காட்டிய திசையில் கோர்ட் நம்பர் ஏழு காணப்படவில்லை. கடைசியில், பெரிய எவர்சில்வர் டிரம்மில் காபி கொண்டுபோன ஒரு சைக்கிள் வாலிபன் நான் கேட்காமலே ஒரு காகிதக் கோப்பையில் காபியைக் கொடுத்துவிட்டு, “ஐந்து ரூபாய்” என்று சொன்னதுடன், சரியான வழியையும் காட்டினான்.  

அப்போது மணி பத்தரை. இன்னும் நீதிபதி வரவில்லை. கிளார்க்குகள் அன்றைக்கான கேஸ் கட்டுகளை ஊதி ஊதி அவருடைய மேஜை மீது  வைத்தார்கள். தூசி!

அன்று லிஸ்ட் ஆன கேஸ் நம்பர்கள் அடங்கிய தாளை ஒருவர் சுவரில் ஓட்டினார். கண்ணுக்குத் தெரியாத சிறிய எழுத்துக்கள். ஒரே இடத்தில் தினமும் அப்படி ஓட்டுவார்கள்போல. மெத்தை போட்டதுபோல் காகித அடுக்கு.

லதாரமணி என்பவள் யார்? என்னை அவளுக்கும் அவளை எனக்கும் தெரியாது. கோர்ட் அறையில் சுமாரான முகத்துடன் இருந்த சில பெண் வழக்கறிஞர்களை உற்றுப் பார்த்தேன். ஒருத்தி வேகமாக வந்து, “வணக்கம் சார்! டைவர்ஸா” என்றாள். “இல்லை, எனக்கு இன்னும் மணமாகவில்லை” என்றேன். சும்மா ஒரு இதுக்காகத்தான்! லதாரமணி யாரென்று கண்டுபிடிக்க வேண்டாமா?

விஷயத்தைக்  கேட்டுக்கொண்டபின்  “சாரி சார்! எனக்கு டைவர்ஸ் லாயர்கள்தான் தெரியும். இதெல்லாம் சில்லறை விஷயம். பேங்க் கேசில் பைசா தேராது! “ என்று நகர்ந்துவிட்டாள்.

ஒருவழியாக நீதிபதி வந்து இருக்கையில் அமர்ந்தார்.  ‘சைலன்ஸ்’ என்று கிளார்க்  சத்தம் போட்டார். உடனே வெளியில் இருந்து கூட்டமாக ஆரவாரத்துடன் கருப்பு கோட்டுகள் உள்ளே நுழைந்து நடுவிலிருந்த மேஜையைச் சூழ்ந்துகொண்டன.

ஒரு கிளார்க் நீதிபதியின் முன்னால் நின்றுகொண்டு கேஸ் நம்பர்களை வாசித்தார். வக்கீல்களுக்கு மட்டுமே புரிந்தது. ஒரு பெரிய கேஸ் கட்டை அவர் எடுத்து பேங்க்கின் பெயரைச் சொல்லி  ‘75 கேஸ்’ என்றதும்  ஒரு பெண் வக்கீல் “ஆஜர்” என்று மெதுவாகக் கூறினார். 75 என்ற வார்த்தையால் தூண்டப்பட்டு, “லதா ரமணியா?” என்றேன்.

“ஆமாம் சார்! உங்களை எங்கெல்லாம் தேடுவது?” என்று என்மீது குறைசொன்னவள், நீதிபதியைப் பார்த்து, “மைலார்ட்! பேங்க் சார்பாக மேனேஜர் வந்திருக்கிறார்” என்றாள். கேஸ்கட்டு அவருக்கு வலதுபக்கம் வைக்கப்பட்டது.

“சாரி சார்! ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் தான் லேட்” என்றாள். “பிறகு ஏன் என்னைக் குறை சொன்னீர்கள்?’ என்றேன் கோபத்துடன். 

“சாரி சார்! இந்தத் தொழிலுக்கு வந்தபின் இப்படியாகிவிட்டது. சிலசமயம் நாங்கள் உண்மை பேசுவதும் உண்டு” என்று சிரித்தவள், “எப்படியும் மத்தியானம்தான் நம்ப கேஸ் வரும். உங்களால் இருக்க முடியுமானால் சரி. இல்லையென்றால் நான் வாய்தா வாங்கிவிடுகிறேன். அல்லது எக்ஸ்-பார்ட்டி டிக்ரி வாங்கிடலாம். கடன்காரர்கள் யாரும் நிச்சயம் வரமாட்டார்கள். நீங்கள் போகலாம்” என்றாள். 

“இல்லை, நான் இதுவரை கோர்ட்டுக்கே வந்ததில்லை. ப்ரொசீடிங்ஸ் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட்டே போகிறேன்” என்றேன். இருவரும் பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டோம். 

அப்போதுதான் கைக்குழந்தையுடன் ஓர் இளம்பெண் வேகமாக என்னை நோக்கி வந்தாள். ஒரு பர்லாங்க் தூரத்தில் இருந்த பஸ் நிலையத்திலிருந்து பிசியான சாலையைக் கடந்து வேர்க்க விறுவிறுக்க வந்திருக்கிறாள். மிகவும் ஏழை என்பது பார்த்த நொடியே தெரிந்தது. கையில் சம்மன் இருந்தது. காட்டினாள்.

அந்த 75 கடன் தாரர்களில் இவளும் ஒருத்தி. பெயர் கண்ணகி. 5000 ரூபாய் கடன் வாங்கி, அதில் இருநூறு மட்டுமே செலுத்தி, பின் அப்படியே விட்டுவிட்டாள். வட்டியைத் தள்ளுபடி செய்த வங்கி, அசல் 4800 ரூபாய்க்காக கேஸ் பதிந்திருந்தது.

லதா ரமணியிடம் அவள் கெஞ்சினாள். “வக்கீலம்மா, என்னை ஜெயில்ல போட்டுடாதீங்கம்மா! இந்தக் கைக்கொழந்தைய வச்சுக்கிட்டு நான் என்னம்மா செய்வேன்! என்னக் காப்பாத்துங்கம்மா” என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

“இன்னிக்கு இருநூறு  ரூபா கட்டிடறேன். இனிமே வாராவாரம் நூறு ரூபா கட்டறேன். தவற மாட்டேம்மா! இவங்கப்பன் குடிச்சிட்டு ஒரு தொழிலும் செய்யாம தண்டமா கெடக்கறாம்மா! நான் கல்லு ஒடச்சி தான் ஒருவேளை சாப்பிடறேம்மா”  என்று என் காலிலும் லதாரமணியின் காலிலும் விழப்போனாள் கண்ணகி. பிறகு திடீரென்று எழுந்து நீதிபதியின் அருகில்போய் “என்னை ஜெயில்ல போடாதீங்கய்யா” என்று ஓவென்று அழுதாள். கோர்ட் அமைதியானது. 

நீதிபதிக்கு என்னே செய்வதென்று புரியவில்லை. கிளார்க்கிடம் ஏதோ கூறினார். அவளை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தார்கள். குழந்தை வீறிட்டு அழுதது.

நீதிபதி இறங்கிவந்தார். குழந்தைக்கு பால் வாங்கித்தரும்படி சொன்னார். கண்ணகிக்கு ஒரு காபியும்.

வக்கீல் லதாரமணியை அழைத்து விவரம் கேட்டார். அவருக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “எப்படிப்பட்ட முட்டாள் நீங்களெல்லாம்” என்று ஆங்கிலத்தில் கூறினார். “4800 ரூபாய்க்கு ஒரு கேசா! கோடிக்கணக்கில் வாங்கியவர்களை விட்டுவிடுகிறீர்கள்!” என்று கத்தினார்.

“இந்தக் கேசைத் தள்ளுபடி செய்தால் என்ன செய்ய முடியும் உங்கள் பேங்கினால்?” என்று என்னிடம் கேட்டார். நான் அமைதியாக இருந்தேன்.

பிறகு கேஸ் கட்டை அவிழ்த்து கண்ணகியின் பேப்பர்களைப் பார்வையிட்டார். ஆவணங்கள் சரியாக இருந்தன. வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டப்படி இடமில்லை என்பதைக் கண்டார்.

பிறகு கண்ணகியைப் பார்த்து, “உன் உடையையும் தோற்றத்தையும் பார்க்கும்போது நீ மிகவும் ஏழ்மையில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உண்மையா?” என்றார்.

“ஆமாங்க” என்று எழுந்து நின்றாள் கண்ணகி. பால் குடித்த குழந்தையும் இப்போது அமைதியாக இருந்தது.

“உன்னுடைய கடனைத் தள்ளுபடி செய்துவிடலாமா?” அவளை உற்றுப் பார்த்தார் நீதிபதி.

“அய்யய்யோ வேண்டாங்க அய்யா! கை நீட்டி வாங்கின பணம்யா அது! பெத்தவங்க கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா அது  கொழைந்த குட்டிங்கள பாதிக்கும்னு எங்கம்மா சொல்லுவாங்கய்யா! அதுனால வாரா வாரம் நூறு ரூபான்னு கட்டுறதுக்கு உத்தரவு போடுங்கய்யா! ஒரு வாரம் தப்பினாலும் அடுத்த வாரம் குடுத்துடுவேன்! இது சத்தியமுங்க!” என்று கைகூப்பினாள் கண்ணகி.

மொத்த கோர்ட்டும் நீதிபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. அவர் அவசரமாகத் தன் தீர்ப்பை எழுதினார்.

“கடன் வாங்கியதற்கான ஆவணங்கள் சரியாக இருப்பதாலும், கடன்காரர் கடன் வாங்கியதை மறுக்காததாலும், ஏழ்மையைக் காரணம் காட்டி அசலைத் தள்ளுபடி செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்பதாலும், இவர் தன்னுடைய பாக்கித் தொகையான 4800 ஐ செலுத்தியாகவேண்டும். ஆனால் கடன் தாரரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரே முன்வந்து சொன்னபடி  வாரம் 100 ரூபாய் வீதம் வட்டியில்லாமல் செலுத்தவேண்டுமென்று உத்தரவிடுகிறேன்...”

கண்ணகி எழுந்தாள்: “இது போதுங்க ஐயா! சொன்ன மாதிரி நான் கட்டிடுவேன். ஐயா பேருக்கு தப்பு வராதுங்க” என்று கண்களைத்  துடைத்துக்கொண்டாள். ‘நாம்ப ஜெயிலுக்குப் போகவேண்டாம்டா கண்ணு!” என்று தன் குழந்தையை முத்தமிட்டாள். 

லதாரமணியைப் பக்கத்தில் வரும்படி அழைத்தார் நீதிபதி. தன் சட்டைப்பையிலிருந்து பர்சை எடுத்தார். என்னையும் அருகில் வரச் சொன்னார். “இதோ 4800 ரூபாய்! அந்தப் பெண்ணிடம் செலானில் கையெழுத்து வாங்கி இதை அவள் கணக்கில் வரவு வைத்துவிட்டு, கடன் தீர்ந்துவிட்டதற்கு ரசீது அனுப்பிவிடுங்கள்” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் தன் சேம்பருக்குள் சென்று விட்டார். நான் திகைத்துப்போய் நின்றேன்.

இதை ஆங்கிலத்தில் அவர் கூறியதால் கண்ணகிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் கொண்டுவந்திருந்த 200 ரூபாயை நான் வாங்க மறுத்தது ஏன் என்றும் அவளுக்குப் புரியவில்லை. 

“உன் கடன் தள்ளுபடியாகிவிட்டது” என்று லதாரமணி கூறியதும்  அவளுக்குப் புரிந்துவிட்டது.

“அது தப்புங்க வக்கீலம்மா! ஜட்ஜ் அய்யவோட அட்ரஸ் குடுங்க. வாராவாரம் அங்க போய்க் குடுத்துடறேன். இன்னொருத்தார் பணம் எனக்கு வேண்டாமுங்க” என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் கண்ணகி.  கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த எங்கள் அதிகாரிகள் மாநாட்டில் இதை நான் வங்கியின் தலைவரிடம் எடுத்துக் கூறினேன். ஏழ்மையை கோர்ட்டுக்கு கொண்டுவந்தால் வங்கியின் பெயர் பாழாகும் என்று தெரிவித்தேன். அவர்களுக்குத் தெரியாததா இது? அடுத்த சில மாதங்களில்  ‘ஐயாயிரம் வரை வாங்கிய கடன்களுக்கு கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று மண்டல மேலாளர்களுக்கு அதிகாரபூர்வமான அறிவுரை  வழங்கப்பட்டது.    

கண்ணகி என்றால் நீதி கிடைக்காமல் போய்விடுமா?




-    இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து