செவ்வாய், ஜூன் 09, 2015

எழுதுகோல் பிடித்தவன், எப்போதுமே ஊருக்கு இளைத்தவன் தானா?

பதிவு 07 / 2015
ஜோ-டி-குரூஸுக்கு வந்த சோதனை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றனர் தமிழ் சான்றோர்கள். மாபெரும் கடற்படை கொண்டு கடாரம் வென்றனாராம், சோழ மன்னர்கள். ரோமாபுரியிலிருந்து குதிரைகளைக் கொண்டுவந்து, பாண்டிய முத்தைக் கொள்முதல் செய்தனராம் அராபிய வணிகர்கள். சங்க இலக்கியம் முதல் இன்றுவரை கடலையும் கடற்கரையையும் காதலின் வளர்ப்பிடங்களாகக் கூறாத கவிஞர்கள் குறைவு.

ஆனால், கடலோடிகளான மீனவர்களின் உண்மையான சரித்திரத்தை எவ்வளவு பேர் இலக்கியத்தில் வடித்திருக்கிறார்கள்?

196௦ களில் 'கடலுக்கு அப்பால்' என்ற நாவலை எழுதினர் ப. சிங்காரம். 'கலைமகள்' மாத இதழில் தொடராக வந்தது. அதன் பிறகு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜோ டி குரூஸ் தான் கடல்சார்ந்த வாழ்க்கையைப் படம்பிடிக்கும் இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். முதலாவது 'ஆழிசூழ் உலகு'. இரண்டாவது 'கொற்கை'.

அவரே அளித்த ஒரு பேட்டியிலிருந்து:

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

'ஆழிசூழ் உலகு' நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில்கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. 

ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். 

கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.


மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. 'ஆழி சூழ் உலகு' நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே 'கொற்கை'யை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”.
*****

நான் வங்கி அதிகாரியாகப் பணியில் இருந்தபோது  கடலூருக்கு அருகாமையில் இருந்த, மீனவக் கிராமங்களைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சிற்றூரில் மேலாளராக இருந்திருக்கிறேன். கடலூர், பரங்கிப்பேட்டை முதல் நாகப்பட்டினம் வரையிலும், பின்னர் காசிமேடு ராயபுரம் போன்ற சென்னையின் மீனவப் பகுதிகளிலும் விரிவாகப் பழகியிருக்கிறேன். அப்போது நான் கண்ட உண்மை ஒன்றுண்டு. அதுதான், மீனவ நண்பர்கள் தங்கள் உடல் உழைப்பை எந்த அளவுக்கு நம்புகிறார்களோ அதே அளவுக்கு  சில வாழ்வியல் கோட்பாடுகளையும் நம்புகிறார்கள் என்பது. இந்துவாக இருந்தாலும், மீனவர்களுக்கு தெய்வம் அன்னை வேளாங்கண்ணி தான். அரசியலைப் பொறுத்தவரை அவர்களுக்கு எம்ஜிஆர் தான் ஒரே தலைவர். வேறு கட்சிகளுக்கு அவர்களிடம் இடமில்லை.  கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த விஷயங்களில் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

*****
தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதிவிட்டதாக இப்போது மீண்டும் ஜோ டி குரூஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'கொற்கை' நாவல்மீதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. இன்றைய  டைம்ஸ் ஆப் இந்தியாவில் (ஜூன் 9, 2015 - சென்னை பதிப்பு - பக்கம் 6 ) வந்துள்ள கட்டுரையைப் பாருங்கள்.
*****

'மாதொருபாகன்' நாவலை எழுதியதற்காகப்  பெருமாள் முருகன் மீது எதிர்ப்புப் போராட்டம் வலுக்கக் காரணமாக இருந்தவர்கள், நாமக்கல் - ராசிபுரம் பகுதியில் ஆண்டுக்கு மூன்று லட்சம் வரை பணம் வசூலிக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் என்பதை மக்கள் அறிவர். இந்தக் கல்வி வியாபாரிகளுக்கு எதிராகப் பெருமாள் முருகன் தொடுத்த போரே, அவர்மீது  முழுவீச்சுடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. திருச்செங்கோட்டிலிருந்து சென்னைக்கு ஊர்கடத்தப்பட்டார் பெருமாள்முருகன்.

இப்போது ஜோ டி குரூஸ் மீது அதே மாதிரியான காரணங்களை சொல்லிப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான காரணம்,  தற்போது ஆர்.கே. நகரில் நடக்கவிருக்கும் இடைதேர்தல்தான். என்று எனக்குத் தோன்றுகிறது.

அதிமுகவின்  தீவிரமான ஆதரவாளர்களான  மீனவர்கள் நிரம்பிய பகுதி, ஆர்.கே. நகர். சாக்கடை நீரும் குழாய் நீரும் ஒன்றுகலந்து பரிணமிக்கும் சுகாதாரம் நிரம்பிய தொகுதி.  ஐந்துமுறை ஒரே கட்சி வெற்றி பெற்றிருந்தபோதும் மக்கள் நலத்திட்டங்கள் போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இப்போது முதல்வரே அங்கு வேட்பாளராக போட்டியிடுவது, அத்தொகுதி மக்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி  இருக்கிறது. எப்படியும் அவரை பெருத்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பதற்க்காக ஆளும்கட்சியின் வலிமைமிக்க ஆசாமிகள் அத்தொகுதியில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்துப் போட்டியிட எந்தக் கட்சிக்குமே இன்று தைரியம் இல்லாதுபோய்விட்ட நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான  திமுக எப்படியாவது ஓட்டுக்களைப் பிரிக்கவேண்டும் என்று பாடுபடுவது கண்கூடு. தனது  பரம எதிரிகளான மீனவர்களை எப்படியாவது கணிசமான அளவில்
தன்பக்கம் இழுத்துவிட வேண்டும், இப்போதில்லாவிடினும் அது 2016 பொதுத்தேர்தலுக்கும் மிகவும் உதவும் - என்று கணக்குப் போட்டுக் காய் நகர்த்துகிறது அக்கட்சி. அதன் வெளிப்பாடுகளுள் ஒன்றுதான் ஜோ டி குரூஸ் மீது  தொடங்கப்பட்டுள்ள  எதிர்ப்பு. ( நரேந்திர மோடியின் செயலாற்றலைப் பாராட்டி ஜோ டி குரூஸ் பேசியதை நினைவில் கொள்க. )

****

டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகிறது. ஜோ டி குரூஸுக்கு ஆதரவாக ஏன் யாரும் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்று. அவரால்  ஆதரிக்கப்பட்ட மோடியின் கட்சியினர் கூட ஏன்  பேசவில்லை என்கிறது.

பெருமாள் முருகன் விஷயத்திலும் அவரை ஆதரித்தவர்கள் பொதுவுடமைக் கட்சியினரும் அதே சார்புள்ள கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களும்தான். அவரது பதிப்பாளரான காலச்சுவடு சம்பந்தப்பட்ட சில எழுத்தாளர்கள் மட்டும் சிறிதுகாலத் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, தாங்கள் காலச்சுவடால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தினால் பிற்பாடு ஆதரவு கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர்.  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர். 'எப்படியும் வழக்கு நீதிமன்றம்வரை போய்விட்டது. தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம்' என்ற மனோபாவத்தின் வெளிப்பாடு.

ஜோ டி குரூஸ் விஷயத்தில் இந்த அளவுக்குக் கூட ஆதரவாளர்கள் திரளமாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன்.  பெருமாள் முருகனை விட பொருளாதார ரீதியிலும் சமுதாய அந்தஸ்திலும் மிக்கவர் குரூஸ். எனவே தன்னைத்  தானே காப்பாற்றிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது. மேலும், இது அரசியல் ரீதியாக ஆளும்கட்சிக்கு எதிரான சக்திகள் ஆடும் விளையாட்டு என்பதும் அனைவருக்கும் புரிந்துவிட்டது.

****
எப்படியோ, ஊருக்கு இளைத்தவன் தமிழ் எழுத்தாளன் தான் என்பது மீண்டும்
மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. நூலகங்களுக்கு நிதி வழங்காமல் ஏமாற்றுகிறது, அரசு.  புத்தங்களை வாங்காமலும், வாங்கிய நூல்களுக்கு உரிய கால அட்டவணைப்படி பணம் தராமலும் ஏமாற்றுகிறது நூலகத்துறை. எழுத்தாளனைப் பகடைக்காயாக்கி ஏமாற்றுகின்றனர் பதிப்பாளர்கள். புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு வருகை தந்தாலும் கை நீட்டிக் காசுகொடுத்துப் புத்தகம் வாங்காமல் (எழுத்தாளன் செலவில்) காப்பி அருந்தி, வாய்நிறைய வாழ்த்து (மட்டும்) சொல்லி ஏமாற்றுகின்றனர்  வாசகர்கள். இதெல்லாம் போதாது என்று அவ்வப்பொழுது எதிர்ப்புக்குரல் கொடுத்து எழுத்தாளனை ஆட்டம் காண வைக்கின்றனர், இன மற்றும்  அரசியல் சதியாளர்கள்.

இதே நிலைமை நீடித்தால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து  இனிமேல்                 'சங்ககாலத்தில் ஊறுகாய்', 'மலேசியாவில்  பிரியாணி வகைகள்', 'கோதுமையோ மைதாவோ இல்லாமல் சப்பாத்தி செய்வது எப்படி?'  போன்ற நூல்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.

விதியே விதியே, தமிழச் சாதியை 
என்செயக் கருதி இருக்கின்றாயடா?
***
(C) Y Chellappa
email: chellappay@yahoo.com

வியாழன், ஜூன் 04, 2015

ஆப்கனிஸ்தானத்தில் பட்டம் விரட்டும் போட்டி பார்த்ததுண்டா?

பதிவு 06/15 – ஜூன் 04, 2015
ஆப்கனிஸ்தானத்தில் பட்டம் விரட்டும் போட்டி பார்த்ததுண்டா?

காலித் ஹுசைனியின் நாவல்: 
‘பட்ட விரட்டி’  – The Kite Runner by Khaled Hosseini

பலூசிஸ்தானில் ஒரு கரடியுடன் எந்த ஆயுதமும் இல்லாமல் வெறுங்கையுடன் எனது அப்பா சண்டையிட்டிருந்தார். இந்தக் கதை வேறு எவரைப் பற்றியதாகவோ இருந்திருந்தால் அப்போதே அது கட்டுக்கதை என்று ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் எதனையும் மிகைப்படுத்திக் கூறுதல் ஆப்கானிய குணம் என்பது வருத்தமான ஒன்று. எவராவது தனது மகன் ஒரு டாக்டர் என்று கூறினால், அவரது குழந்தை உயர்நிலைப் பள்ளியில் நடந்த உயிரியல் பாடத் தேர்வில் தேறியிருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால் எனது அப்பாவைப் பற்றிய கதைகளின் நம்பகத்தன்மை பற்றி எவரும் எப்போதும் சந்தேகித்ததில்லை. எனது அப்பாவின் முதுகில் இருக்கும் மூன்று தழும்புகளும் சந்தேகங்களைத் தெளிய வைக்கும். எனது அப்பா மல்யுத்தமிடுவதை எண்ணற்ற முறை நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். என், கனவுகள் கூட கண்டிருக்கிறேன். (பக்கம் 18).
***

இந்தப் பட்டம் விடும் போட்டி ஆப்கானிஸ்தானின் மிகப் பழைய குளிர்கால பாரம்பர்ய வழக்கம். அது போட்டி நடக்கும் காலைப் பொழுதில் துவங்கி வெற்றி பெற்ற ஒரு பட்டம் மட்டும் வானில் பறக்கும்வரை நடக்கும். ஒரு ஆண்டு பகல் பொழுது முடிந்தும் போட்டி தொடர்ந்துகொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. தங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்த சாலை முழுவதும் மாடிகள்மீதும் மக்கள் கூடி இருப்பார்கள். தெருக்கள் முழுவதும் தங்களது கண்ணாடி நூல்களை (‘மாஞ்சா’) வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டு வானத்தில் படத்தை ஏற்றிக்கொண்டே தனகளது போட்டியாளனின் கண்ணாடி நூலை அறுப்பதற்காந நிலையை முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு போட்டியாளனுக்கும் ஒரு உதவியாளன் கையில் நூல் பந்தைப் பிடித்துக்கொண்டிருப்பான். எனக்கு ஹஸன் உதவியாளனாக இருந்தான்.....
(பட்டம் விடும் போட்டியில்) விதிகள் மிக எளியவை. அதாவது விதிகளே இல்லை. பட்டத்தை விடு, எதிரிகளின் பட்டத்தை அறு. வாழ்த்துக்கள். அவ்வளவுதான்.

அதனுடன் முடிந்துவிடுவதில்லை. உண்மையான வேடிக்கையே பட்டம் அறுபட்டவுடன்தான் தொடங்கும். அது, அறுபட்ட பட்டம் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு எவருடைய வீட்டுக் கொல்லைப்புறத்திலோ, ஏதாவது மரத்திலோ அல்லது எவர் வீட்டுக் கூரையிலோ தங்கும்வரை அதனை பட்டம் விரட்டும் சிறுவர் கூட்டம் விரட்டிச்சென்று எடுப்பதாகும். கூட்டம் கூட்டமான சிறுவர்கள் தெருக்களில் அப்படிச்செல்வது, தள்ளுமுள்ளுகளில் ஈடுபடுவது நான் எங்கோ படித்த ஸ்பெயின் தேசத்து காளைச் சண்டை போன்றிருக்கும்.ஒருமுறை ஒரு பட்டத்தை எடுப்பதற்காக பக்கத்து வேட்டுச் சிறுவன் ஒரு பைன் மரத்தின் மீதேறினான். அவன் ஏறிய கிளை முறிந்து முப்பது அடி உயரத்திலிருந்து விழுந்தான். அவன் முதுகெலும்பு முறிந்துவிட்டது. அவனால் அதற்குப் பின்னர் எப்போதுமே நடக்க முடியவில்லை. ஆனால் அவன் கைகளில் பட்டம் இருந்தது. ஒரு பட்டவிரட்டியின் கையில் பட்டம் பிடிபட்டால் அதனை அவரிடமிருந்து எவராலும் பிடுங்க முடியாது. அது சட்டவிதி அல்ல, தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்…….

பல ஆண்டுகளாக நிறைய பட்ட விரட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவர்களிலேயே ஹசன்தான் சிறந்த பட்டவிரட்டி. அவனுக்கு எதோ ஓர் உள்ளறிவு இருந்ததைப்போன்று பட்டம் எங்கு விழும் என்பதை அவன் மிகச் சரியாக கணிப்பது பயங்கரமானதொரு உண்மையாகும். (பக்கம் 62-64).
***
இதில் ‘நான்’ எனப்படுபவன் பெயர் அமீர். ஹஸன், என்பவன் அவனுக்கு சமவயதுள்ள இன்னொரு சிறுவன். அமீர் வீட்டிலேயே வளர்கிறான். அவனுடைய தாயார், ராணுவ சிப்பாய்களுக்குக் களிப்பூட்டுபவளாகத் தொழில்செய்திருக்கக்கூடும் என்று கதையில் வருகிறது. பிறகு என்னவானாள் என்று தெரியவில்லை. தாயில்லாத ஹஸனை அமீரின் தகப்பனார் அன்போடு வளர்க்கிறார். இது ஆரம்பக் கதை.

பிறகு ஆப்கனில் தாலிபான்கள் ஆதிக்கம் கொள்ளத் தொடங்குகிறார்கள். அடக்குமுறையும் உள்நாட்டுப் போராட்டங்களும் அன்றாட நிகழ்வுகளாகின்றன. அமைதியை விரும்பிய பல ஆப்கானியர்களும் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பறக்கத் தொடங்கினார்கள். அமீரின் அப்பா அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி மருத்துவராக்குகிறார். ஹஸன் ஆப்கனிலேயே தங்கிவிடுகிறான். தாலிபான்களுடன் சேர்ந்துவிடுகிறான். முதலில் தாலிபன்களுக்குப் பால்சோறுபோட்டு வளர்த்த அமேரிக்கா, பின்னாளில் அவர்களின் எதிரியாகிவிடுகிறது. ஒசாமா பின் லேடன் செய்தசதியால், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைக் குறிவைத்து விமானத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பின்னர், இருநாடுகளுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போகிறது. அமெரிக்கா என்றாலே ஆப்கனில் குரோத உணர்வு ஏற்பட்டுக் கொந்தளிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அமீர், தன் நண்பன் ஹசனைத் தேடி, தன் அமெரிக்க மனைவியோடு வருகிறான்.

மற்றதெல்லாம் அண்மைக்காலச் சரித்திரம். ஹசன் உயிரோடில்லை. கத்தி எடுத்தவனுக்குக் கத்தியில்தான் மரணம் அல்லவா? எப்போதோ கொல்லப்பட்டுவிட்டான். அமீர் கண்ணில் படுவதெல்லாம் வறுமையும், கட்டிட இடிபாடுகளும், தாலிபான்களின் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்டுப்பாடுகளும்தான்.   அமீரும் அவர் மனைவியும் மீண்டும் அமெரிக்க செல்லவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். முற்போக்கான அமெரிக்காவின் சுதந்திரமான வாழ்க்கைக்குப் பழக்கமாகிவிட்ட அமீரால்   பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தன் குடும்பத்தையும் தன் தாய்நாட்டையும் சிறிதும் சகித்துக்கொள்ள இயலாமல் போகிறது. அமெரிக்க மனைவியின் பாடோ கேட்கவே வேண்டாம். வேதனைதான். இறுதியில், இடைத்தரகர்களுக்குப் பெருந்தொகை வழங்கி, இருவரும்   ‘விடைகொடு எங்கள் நாடே’ என்று கண்ணீரோடு அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்றடைகிறார்கள்.
 ****          
ஒரு மனிதனுக்கு ஏற்படும் துக்கங்களிலேயே மிகப்பெரிய துக்கம், தானிப் பெற்றெடுத்த தாய்நாட்டை இழப்பதுதான். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் ரத்தம்படிந்த கண்ணீர்க் கதையை நாம் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம்.   ஆனால், இரு ஏகாதிபத்தியங்களின் விளையாட்டுப்பொருளாகவும், ஆயுதம் ஏந்தியோரின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிவிட்ட ஓர் ஏழை நாடான ஆப்கனிஸ்தானத்தின் கதையை அவ்வளவு விளக்கமாக இன்னும் உலகம் அறியவில்லை என்றே தோன்றுகிறது. காலித் ஹுசைனியின் உணர்ச்சிமிக்க நாவலான ‘பட்டம் விரட்டி’ அந்த வகையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது. 55  மொழிகளில் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ள நாவல் இது.
***
இந்த நாவல் அதே பெயரில் (The Kite Runner )ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. பத்து துண்டுகளாக யூடியூபில் கிடைக்கும் இதன் முதல் துண்டு இதோ:
****
ஆப்கன் நிலைமையை அடிப்படையாக வைத்து இவர் எழுதியுள்ள நாவல்கள் மொத்தம் மூன்று. அவையாவன:  The Kite Runner, A Thousand Splendid Sons,  And The Mountains Echoed. 

காலித் ஹுசைனி பற்றியும் அவரது பிற எழுத்துக்கள், தாய்நாட்டின் மறுமலர்ச்சிக்காக அவர் நிறுவியுள்ள 
அமைப்பு ஆகியவை பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டுமானால் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கலாம்: http://khaledhosseini.com
****
யூசுப் ராஜாவின் மொழிபெயர்ப்பு மிக அருமையானது. தெளிந்த நீரோட்டம்போல, மூல நாவலின் உணர்ச்சிப் பரவசத்தைச் சற்றும் குறைக்காமல் தருகின்ற திறனை அவரது எழுத்தில் காண முடிகிறது. அனைவரின் நூலகங்களிலும் இடம்பெறவேண்டிய நூல் இது என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் யூசுப் ராஜா!

காலித் ஹுசைனியின் நாவல்: 
‘பட்ட விரட்டி’  – The Kite Runner by Khaled Hosseini
தமிழ் மொழிபெயர்ப்பு: எம்.யூசுப் ராஜா. 
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பக்கம் 384, விலை ரூ. 250.

© Y Chellappa
Email: chellappay@yahoo.com  

திங்கள், ஜூன் 01, 2015

எது வேண்டும் சொல் தோழா-BLOG ஆ, FACEBOOK ஆ ?

கடந்த நான்கு மாதங்களாக  உங்களை BLOG வழியாகச் சந்திக்காமல் இருந்துவிட்டேன் தோழர்களே. மன்னித்துவிடுங்கள். காரணம் என்ன தெரியுமா?

ஃபேஸ்புக் என்னும் முகநூலில் எப்படியோ இணைந்துவிட்டேன். எனக்குத் தெரியாமலேயே எனது பொன்னான நேரம் முழுதும் வீணாகிக்கொண்டிருக்கிறது. (உதாரணம் சொல்லவேண்டும் என்றால் விஜய் டிவியில் கோபிநாத் நடத்தும் 'நீயா நானா' பார்க்கும் அனுபவம் மாதிரி.)

ஒன்றா இரண்டா என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் போக, இப்போது ஆயிரக்கணக்கில் நட்பு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஓரளவுக்கு அழைப்பாளர்களின் முகநூல் பக்கத்திற்குச் சென்று விசாரித்துவிட்டுத்தான் அழைப்பை ஏற்கிறேன். என்றாலும் சிலரை மறுக்கவேண்டியிருக்கும்போது மனது சங்கடப்படுகிறது. அதே சமயம் எனது நட்புவட்டத்தில் எழுதுபவர்களும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். அவர்களின் படைப்புகளைப் பார்வையிடுவதில் அதிக நேரம் கழிந்துபோகிறது.

பெரும்பாலும் அரட்டை அடிப்பவர்கள்தான் மிகுதி என்றாலும்,  முகநூலை BLOGGER மாதிரியே பயன்படுத்தும் மேலானவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். செங்கோட்டை  ஸ்ரீராம், கீழாம்பூர் முதலிய பத்திரிகையாளர்களின் முகநூல் பதிவுகளும் புகைப்படங்களும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் போன்ற ரகம். ஹோசூர் கண்ணன் ஒரு நாளைக்கு நான்குமுறையாவது ஜோக்குகளை அள்ளித் தெளிக்கிறார். அரவிந்த அன்னை, ரமண மகரிஷி, வியாழக்கிழமைதோறும்  ஷீரடி சாயிபாபா -என்று  ஆன்மிகப் பக்கங்கள் பலரால் நடத்தப்படுகின்றன. காலையில் விழிக்கும்போதும் இரவில் படுக்கப்போகும்போதும் பக்திபூர்வமான இம்முகநூல் பதிவுகளைப் பார்க்கும்போது  மனதுக்கு எவ்வளவு ஆறுதல் கிடைக்கிறது தெரியுமா?

நாள்தோறும் ஒரு திருக்குறளை அதன் பொழிப்புரையுடன் ஒருவர் தருகிறார். இன்னொருவரோ, திருக்குறளை அழகான பாடலாக்கித் தினமும் அளிக்கிறார். அண்மையில் ஒரு பேராசிரியர், தான் பழகிய தமிழ்ச்சான்றோர்களைப் பற்றி தினம் ஒருவர் வீதம் வரலாற்று ஆவணம்போல அறிமுகப்படுத்திவருகிறார்.

கவிஞர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. BLOG கவிஞர்கள் எல்லாருமே அநேகமாக முகநூலுக்குத் தாவிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நொடிக்குநொடி ஐந்துமுதல் பதினைந்துவரையான வரிகளில் கவிதைகள்  அருவி மாதிரி கொட்டுகின்றன. அந்தக் கவிதைகளுக்கு அவர்கள் இணைக்கும் அழகிகளின் படங்கள் ...அம்மம்மா... அவற்றின் தரமே தனி!

சிலர் இப்போது தொடர்கட்டுரைகளையும் தொடர்கதைகளையும்கூட முகநூலில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

குமுதம், விகடன் முதல் பெரும்பாலான  இதழ்களும் இப்போது முகநூலின் வழியாகப் படிக்கவும் விமர்சிக்கவும் கிடைக்கின்றன.

அதெல்லாம் விடுங்கள்.  தொலைக்காட்சியைவிட வேகமாகச் செய்தியைத் தாங்கிவரும்    சாதனமாக முகநூல் உருவெடுத்துவிட்டது. தனக்குப் போட்டியாக வளரவிருந்த 'வாட்ஸ்-அப்'பை  19 பில்லியன் டாலர்கள் கொடுத்து வளைத்துப்போட்டுவிட்ட மேதாவித்தனம் நம்மை அசரவைக்கிறது.

அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய விவாதங்கள் சுடச்சுட நம்மை வந்துசேருவது முகநூல் மூலமாகத்தான். சிலசமயம், பின்னூட்டப் போர்கள், ஆயுதம்தாங்கிய போர்களைவிட அனல்பறக்கும் வகையில் நிகழ்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தோழர்களே சொல்லுங்கள், BLOG களுக்கு எதிர்காலம் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது, BLOG எழுதும் நாமெல்லாம் இனி முகநூல் மூலமாகவே பேசிக்கொள்வது  சிறப்பானது என்று கருதுகிறீர்களா?

"BLOGஐ படிக்காமல் இருந்துவிடலாம். ஆனால், FACEBOOKஐ படிக்காமல் இருக்கமுடியுமா? எனவே, FACEBOOKஐ நாம் விரும்பியவண்ணம் பயன்படுத்திக்கொண்டு மேல்நோக்கி நகர்வதுதானே அறிவுடைமை?" என்று ஓர் அறிவார்ந்த நண்பர் கூறினார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? BLOG ஐ  ஒரேயடியாக மூடிவிட்டு FACEBOOKஐ வளர்த்தால் அது தவறாகுமா?

தயவு செய்து எனக்கு ஆலோசனை தாருங்கள். பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் கருத்தை வைத்தே நான் இனிமேல் BLOG ஆ, FACEBOOK ஆ என்று முடிவெடுக்கவேண்டும்.
செய்வீர்களா? செய்வீர்களா?

அன்புடன்,

இராய செல்லப்பா, சென்னை
(செல்லப்பா  யக்யஸ்வாமி)
chellappay@yahoo.com