(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
1962 பொதுத் தேர்தலின்போது நான் பள்ளி
மாணவன். தேன்கனிக்கோட்டையில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம்வகுப்பு
படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் வீதியெங்கும் வரிசையாக ஏராளமான
மாட்டுவண்டிகள். ஒவ்வொன்றிலும் சுமார் ஆறரை அடி உயரமுள்ள காளைமாடுகள். முன்னூறு
வண்டிகள் என்று ஞாபகம். வண்டிகளின் அணிவகுப்புக்குப் பின்னால், “உங்கள் ஓட்டு காங்கிரசுக்கே” என்று உற்சாக
முழக்கமிட்டபடி ஏராளமான சைக்கிள்களில் இளைஞர்கள் வரிசை வரிசையாக
வந்துகொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று
கேட்டேன்.
|
இவை புதிய காளைகள் |
“பொதுத்தேர்தலில் போட்டியிடும்
காங்கிரஸ் வேட்பாளர், ஓட்டு சேகரிப்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்” என்றார்,
தாத்தா. “காங்கிரசின் தேர்தல் சின்னம், இரட்டைக் காளை என்பதால், காளைகள் பூட்டிய
மாட்டுவண்டிகளில் வந்துபோகிறார்கள்” என்றார். அப்போது அந்தத் தொகுதியில் (ஓசூர்)
போட்டியிட்டு வென்றவர், அமரர் ராஜாஜியின் குமாரர், நரசிம்மன் அவர்கள்.
|
எம்.ஜி.ஆர்., மதியழகன், அண்ணாதுரை, ராஜாஜி, கருணாநிதி
(1967 புகைப்படம்) |
இந்திரா காந்தியின் பெருமுயற்சியால் காங்கிரஸ்
பேரியக்கம் இரண்டாகத் துண்டாடப்பட்டவுடன், அந்த இரண்டு காளைகளை யாருக்குத் தருவது
என்று சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஏறின காளைகள். “A TALE OF TWO BULLOCKS” என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அந்த
வழக்கை வருணித்தன. இறுதியில் இரட்டைக் காளைகளும் நிஜலிங்கப்பா/காமராசர்
தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சிக்கே சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்
அதற்குள்ளேயே, ‘தன் கையே தனக்குதவி’ என்று நம்பிய இந்திரா காந்தி அம்மையார், தன் ‘கை’யையே
தன் கட்சியின் சின்னமாக அறிவித்தார். ஸ்தாபன காங்கிரசும் தன் கட்சிக்கு ‘ராட்டை’
சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அத்துடன் இரண்டு காளைகளும்
மறக்கப்பட்டுவிட்டன.
எதற்குச் சொல்கிறேன் என்றால்,
ஓட்டு கேட்கவரும்போது மிகப்பெரும் படையுடன் வந்து மக்களைச் சந்திப்பது
அப்போதெல்லாம் வழக்கமாக இருந்தது. பின்னாளில் சினிமாக் கவர்ச்சியோடு தேர்தலைச்
சந்தித்த தி.மு.க.வோ, இன்னும் ஒருபடி மேலேபோய், வேட்பாளர் மனு தாக்கல்
செய்யும்போதே அத்தகைய ரத, கஜ, துரக,
பதாதிகளுடன், அட்டகாசம் செய்தபடி, போக்குவரத்தை நிறுத்தச் செய்யும் அளவுக்குச்
சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டும் பட்டாசு வெடித்துக்கொண்டும் போகும் புதிய
கலாச்சாரத்தை ஆரம்பித்துவைத்தது. தேர்தல் என்றாலே, அந்த ஒன்றிரண்டு மாதங்களில்
வாடகைக் கார்களோ, ஆட்டோக்களோ, ஏன், வாடகை சைக்கிள்களோ கூட பொதுமக்களுக்குக்
கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.
|
அரசியல்வாதிகளை நடுநடுங்கவைத்த ட்டி.என்.சேஷன் |
நல்ல வேளையாக, ட்டி.என்.சேஷன்
என்ற தேர்தல் கமிஷனர் வந்தாலும் வந்தார், இந்த மாதிரி ‘புது கலாச்சாரம்’
முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனானப்பட்ட லல்லு பிரசாத் யாதவின்
தொகுதியிலேயே அவர் தன் கண்டிப்பைக் காட்டி நேர்மையான தேர்தல் நடைபெற வைத்தார். பிறகு
வந்த தேர்தல் கமிஷனர்களும் இன்றுவரை அவர் கிழித்த கோட்டைத் தாண்டவில்லை.
அதனால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இன்று சாலைகளில் எந்தத்
தொந்தரவுமின்றி நடமாட முடிகிறது.
நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனை:
உத்தரப் பிரதேசம், மீரட்
பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், நடிகை நந்திதா. தனது
வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு கலெக்டர் அலுவலகத்திற்குத் தன் ஆதரவாளர்களுடன்
சென்றார். அப்போதுதான் அவருக்கு அந்தச் சோதனை ஏற்பட்டது.
என்னதான் காங்கிரஸ், தோற்கப்போகும்
கட்சி என்றாலும், நடிகை என்றால் கூட்டம்
வராமல் இருக்குமா? நந்திதாவுடன் ஏராளமான
ஆதரவாளர்கள் இருந்தனர். எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர்.
உ.பி.யில் ஆள்வது காங்கிரசுக்கு எதிரான சமாஜ்வாடி கட்சி அல்லவா? வெறும்
ஐந்து பேருக்குத்தான் அனுமதி என்று மற்றவர்களை வெளியே தள்ளிவிட்டார்கள் கலெக்டர்
அலுவலகத்தினர். உள்ளே போன நந்திதாவுக்கு அதிர்ச்சி! அவருடைய வேட்பு மனுவையும், தொடர்புடைய
ஆவணங்களையும் யாரிடம் கொடுத்திருந்தாரோ அந்த ஆதரவாளர் உள்ளே வர முடியாமல்
வெளியிலேயே நின்றுவிட்டார்! பிறகென்ன, ‘இன்றுபோய் நாளை வா’ கதைதான்!
“போலீசார் வேண்டுமென்றே என்னை,
வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து, கட்சி மேலிடத்
தலைவர்களிடம் புகார் அளிப்பேன். மீண்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வேன்”
என்றார் பதற்றத்தில் இருந்து மீளாத நந்திதா.
|
'காதலன்' |
நந்திதாவின் முழுப்பெயர்: நந்திதா
மொரார்ஜி. (ஆனால் இவருக்கும் அமரர் மொரார்ஜி தேசாய்க்கும் தொடர்பு கிடையாது.)
நந்திதா, ரஜினியுடன் ‘பாட்சா’ படத்திலும், பிரபுதேவாவுடன் ‘காதலன்’
படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். அப்படங்களில் அவருடைய பெயரை ‘நக்மா’
என்று மாற்றிவிட்டிருந்தார்கள்!
இதை நீங்கள் படித்து
முடிப்பதற்குள் நக்மா தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டிருக்கலாம். ஊழல்
எதுவும் செய்யாதவர், தமிழ்ப் படங்களில் நடித்துத் தமிழர்களுக்குக் களிப்பூட்டியவர்
என்ற காரணங்களுக்காகவே இவரை வெற்றி பெற
வாழ்த்தலாமே!
விஜயகாந்த்தின் மனமாற்றம்:
பா.ஜ.க.வை விட்டால் புகலிடம் இல்லை
என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விஜயகாந்த் – என்று பத்திரிகைகள்
எழுதுகின்றன. ‘கூட்டத்தினரை அச்சுறுத்தும் சொற்களைப் பயன்படுத்தாமல், அவரின்
சொற்பொழிவு அமைவதில்லை; வேட்பாளரின் பெயரையே சிலநேரம் மறந்துவிடுகிறார்; தற்பெருமை
பேசுகிறார்’ என்று வேண்டாதவர்கள் அவரைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால், இப்போது
அவரிடம் வரவேற்கத்தக்க மாற்றம் தெரிவதை மறுப்பதற்கில்லை.
தன்னையோ தன் பெருமைகளையோ முன்னிலைப்படுத்தாமல், “மோடி
தான் பிரதமர். அவரால்தான் ஈழப் பிர்ச்சினை, மீனவர் பிரச்சினை முதலியவற்றைத் தீர்க்க முடியும்” என்று விஜயகாந்த்
மேடைகளில் பேச ஆரம்பித்திருக்கிறார். 2016இல் தமிழக முதல்வர் நான்தான் என்று அவர்
இப்போது சொல்வதில்லை. (ராமதாசும் கூட!). தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும்
இது நல்ல விளைவை ஏற்படுத்தப்போகும் மனமாற்றமே.
புத்தகம்
காளிதாசர், எனக்கு மிகவும் பிடித்த ‘பண்பட்டமொழி’
(சமஸ்க்ருதம்) கவிஞர். அவரது சாகுந்தலம், மாளவிகா-அக்னிமித்ரம், குமார சம்பவம்
காவியங்களைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கிறேன். (அக்காலத்து
‘அல்லயன்ஸ்’ வெளியீடு. இப்போதும் அந்தப் பதிப்பகம் இருக்கிறது-சென்னை மயிலாப்பூர்
குளத்தின் எதிரே. ஆனால் அந்த நூல்கள் கிடைப்பதில்லை.) பின்னாளில் ரகுவம்சம்
படித்தேன். ஆனால், அளவில் சிறியதான ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இப்போதுதான்
படிக்க நேரம் வந்தது. ‘ருது சம்ஹாரம்’ என்பதன் மொழிபெயர்ப்பு, ‘பருவ காவியம்’ என்பதாகும். (பருவ காவியம் என்றவுடன் ஜொள்ளு வழிவதைத் தவிர்க்கவும்.) இது, வசந்தகாலம், கோடைகாலம்,
மழைக்காலம், பனிக்காலம் போன்ற ஆறு பருவகாலங்களை வருணிக்கும் காவியமாகும். ஆனால் காளிதாசன் தன் கட்டிளம் பருவத்தில் எழுதிய
காவியம் என்பதால், இளமைக்கே உரிய ‘பருவ’ எழுத்துக்கள் அதிகம் இடம்பெற்ற நூல் இது.
மொத்தம் நூற்று நாற்பத்து நான்கு செய்யுட்கள்
உள்ளன. இவை ஆறு பருவங்களின் பெயரால் அமைந்த ஆறு அதிகாரங்களில் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு அதிகார முடிவிலும், “நண்பனே, உனக்கு இந்தப் பருவகாலம் நனமையைச் செய்வதாக!”
என்று முடியும் இறுதிச் செய்யுளை அமைத்திருக்கிறார். காதல் காட்சிகளைவிட இயற்கை
எழிலையே முதன்மையாக வருணிக்கும் சிறிய காவியம் இது. என்றாலும், காளிதாசன்
என்றால் ‘காதல் கவிஞன்’ என்றுதானே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்!
எனவே இன்றைய பதிவில் ருது சம்ஹாரத்தின் சில காதல் பதிவுகளை மட்டும் பார்ப்போமா?
(எச்சரிக்கை: எனது மொழிபெயர்ப்பு அவ்வளவு துல்லியமானதல்ல; ஆனால் எடுத்துக்கொண்ட
செய்திக்கு இது போதும் என்று கருதுகிறேன்.)
கோடைப் பருவம்:
(1)
என் அன்பே! இதோ, கோடைப்பருவம்
வந்துவிட்டது! கதிரவன் மிகவும் கடுமையாக இருக்கிறான். (எனவே) குளிர்ந்த நிலவை
மக்கள் விரும்புகின்றனர். முப்பொழுதும், குளிர்ந்த நீர்நிலைகளில் மூழ்கிக்
குளிப்பதை நாடுகின்றனர். பகல் முடிந்து இரவு மலரும் தருணமே மக்களுக்கு மகிழ்ச்சி
தருவது. (கோடையின் தாக்கத்தால்) காதல் உணர்ச்சி சற்றே தணிந்துள்ள பருவம் இது.
(3)
நறுமணம் ஊட்டப்பெற்ற
(வீட்டின்) மேல்தளங்களையும் (மொட்டை மாடிகளையும்), கிண்ணங்களில் ஊற்றப்பட்டு,
காதலியருடன் சேர்ந்து பருகும்போது அவர்தம் மூச்சுக்காற்றால் அசையும் இனிய
மதுவையும், யாழிலிருந்து ஒலிக்கும் இன்னிசையையும் (தம் காதல் உணர்வைத்
தூண்டிடவேண்டி) மக்கள் நாடும் பருவம் இது.
|
'மகாகவி காளிதாஸ்' - சிவாஜி கணேசன் |
(4) பட்டாடை மீது மேகலை அணிந்த இடையினராய், முத்துமாலை
அணிந்து, சந்தானம் மணக்கும் மார்பகத்தினராய், (நறுமணப் பொடிகள் பூசிக்) குளித்தலால்
நறுமணம் பூண்ட கூந்தலினராய் விளங்கும் பெண்களின் பேரெழில் ஒன்றே, காதலர்களின் கோடை
வெம்மையைத் தணிக்கவல்லதாகிறது.
(5) இப்பருவத்தில், தம் மென்பாதங்களில் செம்பஞ்சுக்
குழம்பை அதிகமாகப் பூசிச் சிவக்க வைக்கின்றனர் பெண்டிர். கால்களில் சிலம்பொலிக்க அவர்கள்
எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் அன்னம் நடக்கும் ஓசையை ஒத்திருக்கிறது.
(6)
இத்தகைய இடையழகும்
மார்பழகும் எவனுடைய மனத்தைத்தான் ஆசையுறச் செய்யாது?
(7)
பருவப் பெண்கள்,
தடிப்பான ஆடைகளை நீக்கி மெல்லாடைகளை உடுத்துகின்றனர்.
(8)
(அவர்கள்
பயன்படுத்தும்) சந்தன நீர் தெளித்த விசிறிகளிலிருந்து எழும் இளங்காற்றும், முத்துமாலை அணிந்த அவர்தம்
மார்புகளும், அவர்கள் வாசிக்கும் யாழின் இசையும், ஆண்களின் மனத்தில், உறங்குபவன்
போல் அசைவற்றிருக்கும் காமனை எழுப்புகின்றன.
(9)
இரவு முழுவதும் (நிலவொளியால்)
வெண்ணிறமான மாளிகையின் மேல்தளத்தில்,
திறந்த வெளியில், சுகமாக உறங்குகின்ற (அப்பெண்களின்) முகங்களை, அவர்கள்
அறியாதவாறு, ஏக்கத்துடன் (ஆர்வத்துடன்) வெகுநேரம் பார்த்துப் பார்த்து
வெட்கமுற்றவன்போல் சந்திரனானவன், விடியற்காலையில் வெளிறிப்போய்க் காண்கிறான்.
(10) கோடை வெப்பத்தினால் தரை கடும் சூடாகிறது. புழுதி
மண்டலம் காற்றில் எழுகிறது, காதலியரைப் பிரிந்து (அதனால் வெம்மையடைந்தவர்களாய்) வேற்றூரில் வசிக்கும் காதலர்கள், இத்தரையைக்
கண்கொண்டு காணவும் முடியாதவர்களாகிறார்கள்.
(12) நிலவு ததும்பும் முன்னிரவு, கேளிக்கைகளில் இயல்பாகவே
நாட்டம் கொண்ட ஆண்கள் மனத்தில் காம உணர்வைத் தூண்டுவதுபோல், காமம் விரும்பிய
பெண்டிர், தம் மனம் கவர் செயல்களாலும்,
கடைக்கண் புன்னகையாலும் காமத்தைத் தூண்டுகின்றனர்.
இதன் பிறகு, இயற்கை வருணனைகள் வருகின்றன. (அதைப்
பிறகு பார்க்கலாம்.) இனி, இந்த அதிகாரத்தின் கடைசிப் பாடல்:
(28) கடும் கோடையிலும் காடுபோல் தாமரை பூத்துள்ள குளங்களில் நீர் இருக்கும். பாதிரிப்பூக்கள் மணம்பரப்பிக் கோடையை
இனிப்பாக்கும். நீரில் அமிழ்ந்த குளியல், சுகம் தரும். நிலவும், முத்துமாலைகளும்,
இதம் தரும். உள்ளம்கவர் பெண்டிர் உடனிருந்தால், கோடை முழுதும் மகிழ்ச்சி தரும்.
இன்னிசை மிதக்கும் மாளிகையின் மேல்தளத்தில் உறங்கும் (பேறு பெற்ற) நண்பனே, உனக்கு இக்கோடைப் பருவம் இனிமையே
செய்வதாகட்டும்!
LIFCO பதிப்பகத்தில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு
கிடைக்கும். என்னிடம் இருக்கும் 1987ஆம் வருடப் பதிப்பின் விலை நான்கு ரூபாய்.
மொழிபெயர்த்தவர்: திரு. வேங்கடராகவாச்சாரியார் அவர்கள். சென்னை விவேகானந்தாக்
கல்லூரியின் முன்னாள் பண்பட்டமொழி (சம்ஸ்க்ருத) பேராசிரியர்.
சினிமா
எழுத்தாளர் ராஜு முருகன் எழுதி இயக்கி
இருக்கும் கன்னி முயற்சியான குக்கூ திரைப்படம் வெளியாகியுள்ளது. எல்லா
விமர்சனங்களும் ஒரே கருத்தைப் பிரதிபலிக்கின்றன. ராஜு முருகன் மீது இருந்த ஆற்றாமையை
வட்டியும் முதலுமாக அறுவடை செய்துவிட்டர்களோ என்று தோன்றுவதைத் தவிர்க்க
முடியவில்லை.
இணையங்களில் வரும் பெரும்பாலான விமர்சனங்கள், குழு
மனப்பான்மையுள்ளவர்களால் எழுதப்படுவது தெரிந்ததே. எனவே ‘ஹிந்து’ விமர்சனத்தைக் கவனிக்கலாம்.
(தமிழ் இந்து அல்ல, ஆங்கில ஹிந்து.) விமர்சனத்தின் சுருக்கம் இதுதான்:
“ஒருதலைக் காதல், முக்கோணக் காதல் என்று சிக்கல்கள் நிறைந்த கதைபோல
ஆரம்பிக்கிறது இப்படம். காதலை எதிர்க்கும் அண்ணன், புகலிடம் கொடுக்கும் நண்பர்கள்
என்று தொடர்கிறது. ஆனால் இதில் எந்த ஒன்றும் திரைக்குப் புதிதல்ல.
பார்வையற்றவர்கள் நாயக நாயகி ஆவதும் புதிதல்ல. அவர்கள் ரயிலில் சந்திப்பதும்
புதிதல்ல. ‘பழசாகிப்போன இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இன்னும் பழசாக்கிவிட்டார்கள். டைட்டில்கள்
வரும் ஆரம்பக்காட்சி ஒன்றை மட்டுமே சிறப்பானதாகச் சொல்லமுடியும். மற்றக்
காட்சிகளும் இதைப் போலவே இருந்திருக்கக்கூடுமானால்?...” என்று முடிகிறது
விமர்சனம்.
நல்ல எழுத்தாளர்கள், நல்ல இயக்குனர்களாக இருக்கமுடிந்ததில்லை:
உதாரணம்: கோவி.மணிசேகரனும் ஜெயகாந்தனும். இப்போது ராஜு முருகனும். ஆனால் இவர் இளைஞர். காலம் இவருக்கு
முன்னே இருக்கிறது. அனுபவம் என்னும் உளி இவரைச் செதுக்க அனுமதித்தால் இனிவரும் காலங்களில்
நல்ல திரைப்படங்கள் இவர் மூலம் உருவாக முடியும்.
|
22-3-2014 விஜய் டிவியில் 'குக்கூ' பற்றிய நிகழ்ச்சியில்
கண்ணாடியுடன் ராஜு முருகன் |
ஒன்றை மறக்கவேண்டாம்: எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி ஒரு படம் வெற்றி பெறவும் கூடும். ஏனெனில், படம் பார்ப்பவர்களில் பலர், விமர்சனங்களைப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களில்லை.
(அது சரி, திரைக்கதை இவ்வளவு பழசு என்பதை,
சில கோடிகளை இறைத்துப் படமாக்கியிருக்கும் தயாரிப்பாளருக்குக் கூடவா முன்பே
தெரியவில்லை? என்னடா இந்தத் தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!)
தொலைக்காட்சி : (அடுத்த இதழில் பார்க்கலாம்!)
பத்திரிகை
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு
செய்துவிட்ட நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேலி செய்து கருத்துப்படங்களும்
கட்டுரைகளும் வந்துகொண்டே இருக்கின்றன பத்திரிகைகளில். சிதம்பரத்தைப் பற்றிய
விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடு வெளியாக இன்னும் சில வருடங்களாவது ஆக வேண்டும். அவருடைய
செயல்பாடுகளை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு, வங்கித் துறையில் உள்ளவர்களுக்கு
உண்டு. அவ்வகையில், வங்கி அதிகாரியான எனக்கு அவரைப் பற்றிய, சீர்தூக்கிப்
பார்த்தபின் புலப்படும் மதிப்பீடு இதுதான்:
(1) மாதச் சம்பளம் வாங்கும் அனைவரின்
நன்றிக்கும் உரியவர், சிதம்பரம். இன்றுள்ள மிகக் குறைந்த வருமானவரிக்
கட்டமைப்பைச் சாத்தியமாக்கியவர் அவரே. இதற்கு முன்னால், வருமானவரி செலுத்தியதுபோக
மீதமிருந்த வருமானம், வங்கியில் காப்பி, டீ விநியோகம் செய்யும்
வியாபாரியின் வருமானத்தைவிடக் குறைவானதாகும்.
(2) நாடு முழுவதும் பரவலாக வீட்டுக்கடன்
வழங்கும் கொள்கையை அமுலாக்கியவர் அவரே. வீட்டுக் கடன் பெற்றுவிட்டு,
திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களை வழிக்குக் கொண்டுவர, வீடுகளை,
நீதிமன்றத்துக்குப் போகாமலேயே, ஏலத்துக் கொண்டுவரும் சட்டத்தை இயற்றிட அவரே
காரணம். இந்தச் சட்டம் மட்டும் வந்திராவிட்டால், எந்த வங்கியிலும் பொதுமக்கள்
வீட்டுக்கடன் பெறுவது இயலாமல் போயிருக்கும்.
(3) நாடு தழுவிய அளவில், கல்விக்கடன்
வழங்கும் கொள்கையை மிகுந்த முனைப்புடன் வங்கிகள் அமுலாக்கிடத் தூண்டுகோலாய்
இருந்தவர் அவரே. அவர் மட்டும் இல்லாதிருந்தால், கடன்தொகைக்குப் பிணையாக
சொத்துக்களையோ, பிற நபர்களின் ஜாமீனையோ, அடைமானம் தர வசதியற்ற லட்சக்கணக்கான மாணவர்கள், கல்லூரி வாசலையே மிதித்திருக்க முடியாது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் (என் மகன் உட்பட) வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி
பயின்றிருக்க முடியாது. இதன் இன்னொரு முகமாக, போதுமான மாணவர்கள் இன்றிப் பல
தொழிற்கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் அபாயம் நிகழ்ந்திருக்கும்.
(4) இன்று அனைத்து வங்கிகளும் கணினி
மயமாக்கப்பட்டுள்ளன. (கூட்டுறவு வங்கிகள் உள்பட.) இதற்கு அடிப்படையான காரணம்
தொழிற்போட்டி. இதைத் தீவிரப்படுத்தியவர் சிதம்பரமே. தனியார் துறையில்
வங்கிகள் தோன்றவும் தொழில்நுட்பத்தில் வளரவும் அவரே காரணம். எச்.டி.எஃப்.சி.
வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யு.ட்டி.ஐ. வங்கி (இப்போது ஆக்சிஸ்), போன்ற
வங்கிகள் வந்திருக்காவிட்டால், அரசுத் துறை வங்கிகளில் கணினி நுழைந்திருக்க
முடியுமா? இன்று நாட்டிலேயே பரவலாக அதிக எண்ணிக்கையில் ஏ.ட்டி.எம்.கள் திறந்துள்ளதே
ஸ்டேட் பேங்க், இது நடந்திருக்குமா?
(5) சென்ட்ரல் எக்சைஸ் போன்ற மறைமுக
வரித் துறைகளின் அதிகாரிகளுக்கும்
ஊழியர்களுக்கும் நிரந்தரமாகக் கிடைத்துவந்த லஞ்சத்தை ஒரே கையெழுத்தின் மூலம்
ஒழித்தவர் இவரே: அதாவது, மறைமுக வரிகளைப் பெருமளவுக்குக் குறைத்தார்.
முன்பெல்லாம் எந்தப் பொருளுக்கு எவ்வளவு சதம் வரி என்பது வரித்துறை
ஆடிட்டர்களுக்கு மட்டுமே தெரியும். தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல்
இருந்தது. இன்றோ, மிகச் சில இனங்களுக்கு மட்டுமே வரி என்பதால், தெளிவுநிலை (TRANSPARENCY) ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி
இறக்குமதிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மை புரிந்துள்ளது.
(6) கறுப்புப் பணத்தைப் பெருக்கி, வருமான
வரி எய்ப்பு செய்து வந்த வியாபாரிகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான
காரியங்களை முடுக்கிவிட்டவர் இவரே. வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான
பணம் போட்டாலோ, எடுத்தாலோ பான்கார்டு வேண்டும் என்றும், பங்குச் சந்தையில் முதலீடு
செய்தால் வரி செலுத்தவேண்டும் என்றும், பங்குச் சந்தையில் ஊழல் நிகழ்த்துவோரை
‘செபி’ மூலம் தண்டிக்கவும் சட்டங்கள் கொண்டுவந்ததுடன்,
அவற்றை வன்மையாக அமுல்படுத்தவும் செய்தவர் இவரே. இணையத்தின் மூலம் வருமானவரி
செலுத்திடவும், அதிகம் செலுத்திய வரியை, அதிகாரிகளுக்கு லஞ்சம் தராமலேயே வங்கிகள்
மூலம் NEFT வழியாகப் பெற்றிடவும் காரணகர்த்தர்
இவரே. இதற்கு முன்னால், சென்னையில் வருமானவரியைத் திரும்பப் பெறவேண்டுமானால்,
அது முன்னூறு ரூபாயாக இருந்தாலும் அதற்கு இருநூறு ரூபாய் லஞ்சம் கேட்பது வழக்கம்.
(என் சொந்த அனுபவம்.)
வருமான வரிக்கான அடிபடைச்சட்டவடிவம் ( CODE) ஒன்றையும் இவர் கொண்டுவந்துள்ளார்.
அது அமல்படுத்தப்பட்டால், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஏற்படும் வரி-மாற்றங்கள்
மிகக் குறைந்த அளவே இருக்கும். பெரும்பாலான வரிகள், பல ஆண்டுகளுக்கு
மாறாதவையாக இருக்கும். இது, நாட்டில் தொழிலும், வணிகமும், சேவைத்துறையும் நிலைத்து
வளர மிகவும் அவசியமாகும்.
(7) இன்று, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களின்
முக்கிய வருத்தமே, தங்களுடைய கருப்புப் பணத்தைப் பெருக்க முடியாமல் கண்ணில்
விளக்கெண்ணெய் விட்டு ஆட்டும்படியான கட்டமைப்பை உருவாக்கிவிட்டாரே
என்பதுதான். இவர்களில்
பெரும்பாலானோர், அரசியல்வாதிகளும், சினிமாத்துறையினரும், வியாபாரிகளும்,
ரியல் எஸ்டேட் அதிபர்களுமே. அதாவது, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களில்,
ஏழைகளோ, நடுத்தர வர்க்கத்தினரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
பணவீக்கம், உயர் வட்டிவிகிதம், பற்றாக்குறை மூன்றையும்
எதிர்த்துத் தனியொரு மனிதனாகப் போராடினார்
ப.சிதம்பரம் |
ஒவ்வொரு நிதியமைச்சரும்
தன் கட்சிக்கும் பிரதம மந்திரிக்கும் உட்பட்டுத்தான் செயலாற்றவேண்டும். ஆனால்
அந்தச் செயல்பாட்டிலும் தனது சுதந்திரத்தன்மையை நிலைநாட்டி, தனது துறையில் எண்ணற்ற
சீர்திருத்தங்களைக் கொணர்ந்து, நாட்டிற்கு மிகப்பெரும் தொண்டு புரிந்தவர் சிதம்பரம்
என்பதை நாளைய பொருளாதார வரலாறு உறுதி செய்யும். இந்தச் செயல்பாட்டில் அவர் தன்னைத்
தீவிரப்படுத்திக்கொண்டதால், பொது மக்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகிப்போனார்.
அதனால் ஒரு கருணாநிதி போலவோ, வைகோ போலவோ, அவருக்கு மக்களுடன் தொடர்பில்லாமல்
போனது. இன்று அரசியலிலிருந்து அவர் விலகவும் அதுவே காரணமாயிற்று.
ஆனால் நிலக்கரி
மூலமோ, அலைக்கற்றை மூலமோ கொழுத்த கறுப்புப் பண மூட்டைகளைச் சம்பாதிக்கச் சிலர் முயன்றபோது,
அதைத் தடுக்கும் வன்மையை அவர் பிரயோகித்துவிடாதபடி அவரது கைகள் கட்டப்பட்டுவிட்டதுதான், என்னைப் போலவே அவருக்கும் மீதமுள்ள வேதனையாக இருக்கும்.
சிரிப்பு
“இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்ததற்குத்
தண்டனையாக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் என்னைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்
எதிர்க்கட்சியினர்.....நாங்கள் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை;
பயங்கரவாதத்துக்கு எதிராகத்தான் போரிட்டோம்.” – இலங்கை அதிபர் ராஜபக்சே பேச்சு.
(நன்றி: தினமலர்-24.3.2014- சென்னை பதிப்பு- பக்.16 – மூன்றாம் பத்தி.)
|
கண் திறந்தபடி செய்த பாவங்களுக்கு,
கண்மூடிப் பிராயச்சித்தம் வேண்டல்? |
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால்,
கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’
அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
© Y Chellappa
Email: chellappay@yahoo.com