அட்லாண்டாவில் ஓர் 'அரசனின்' மாளிகை
(இன்று கிழமை செவ்வாய்-6)
(அட்லாண்டிக் கடலோரம்)
அமெரிக்காவில் 36 ஆவது நாள்
அட்லாண்ட்டாவில் மகன் வீட்டில் பன்னிரண்டு நாட்கள் செலவழித்தபோது மனநிறைவளித்த நிகழ்ச்சி, 1929ஆம் வருடம் ஜனவரி 15ஆம் நாள் அட்லாண்ட்டாவில் பிறந்து, 1968 ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம் நாள் கொலையாளி ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான காந்தீயப் போராளி, கறுப்பினத் தலைவர், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) வீட்டில் சில மணி நேரம் செலவழிக்க முடிந்தது தான்.மார்ட்டின் லூதர் கிங் நினைவகத்தில் உள்ள படம் |
கிங் வசித்த ஆபர்ன் தெரு
அமெரிக்காவின் தென்கிழக்கில் இருக்கும் ஜியார்ஜியா மாநிலத்தின் தலைநகர், அட்லாண்ட்டா. இங்கு ‘ஆபர்ன் அவென்யூ’ (Auburne Avenue) என்ற தெருவில் ‘மார்ட்டின் லூதர் கிங்’ வீடு அமைந்துள்ளது.
கிங் வீட்டு முன் நான்
அட்லாண்ட்டாவில் ‘ஜூனியர்’ என்றால் அது மார்ட்டின் லூதர் கிங்க் ஜூனியரை மட்டுமே குறிக்கும். (நம்மூரில் ‘அறிஞர்’ என்றால் சி.என். அண்ணாதுரை, ‘கலைஞர்’ என்றால் மு.கருணாநிதி, ‘கவிஞர்’ என்றால் கண்ணதாசன் மாதிரி.)
ஜூனியருக்கு மக்களும் அரசும் செலுத்தும் மரியாதையை எண்ணும் போது பிரமிப்பாக இருக்கிறது. அவர் வாழ்ந்த வீடு மட்டுமல்லாது தெருவையே மாற்றமில்லாமல் பாதுகாக்கின்றனர். அத்தெருவில் உள்ள வீடுகளை இடிக்கவோ, மாற்றிக் கட்டவோ அனுமதியில்லையாம்.
அவரது வீட்டிலிருந்து நூறடியில் அவரும் அவருடைய தகப்பனாரும் தாய்வழிப்பாட்டனாரும் பாதிரியாராகப் பணியாற்றிய ‘எபினேசர் பாப்டிஸ்ட் சர்ச்’ (Ebenezer Baptist Church) உள்ளது. இதுவும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே சமயம் தொடர்ந்து சர்ச்சாகவும் இயங்கி வருகிறது.
சர்ச்சின் உட்புறம்
கிங் குடும்பமும் சர்ச்சும் பற்றிய வரலாற்றுப பதிவுகள்
சர்ச்சின் அடுத்த கட்டிடம் “Martin Luther King Centre for Non-violent Social Change” . இது தான் அவருடைய அலுவலகமாக இருந்திருக்கிறது. அவர் சுற்றுப்பயணத்தில் இருக்கும்பொழுது அவருடைய மனைவி இதை மேற்பார்வை செய்து வந்தாராம்.
அவரது நூல்கள் மற்றும் ஆடியோப் பதிவுகள், அவரது இயக்கம் பற்றிய வெளியீடுகள் போன்றவற்றை விற்பனை செய்யும் பகுதியும் இங்குள்ளது.
காந்தியும் மார்ட்டின் லூதர் கிங்கும் இணைந்திருக்கும் ஓவியம் ஒன்று சுவரில் தொங்குகிறது.
மேல் மாடியில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
“அகிம்சை என்பது பலவீனர்களின் ஆயுதம், கோழைகளின் ஆயுதம் என்று சொல்லப்பட்டதை மகாத்மா காந்தி வன்மையாக மறுத்தார். அது வீரர்களின் உத்தி, வீர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஆயுதம். அச்சத்தினாலோ, கோழைமையினாலோ அகிம்சையைக் கடைப்பிடிப்பதை விட, சண்டையிட்டுப் பார்ப்பதே மேல் என்றார்".
கிங்கின் பெட்டியில் அவர எழுதிய நூல்கள்
கிங் கடைசியாக அணிந்திருந்த ஷூக்கள்
கிங் கடைசியாகத் தங்கிய ஓட்டல் அறையின் சாவி.
இங்கு தான் அவர் கொலையுண்டார்
இரண்டாவது பிரிவில் மார்ட்டின் லூதர் கிங்கின் மனைவியும் போர்த்தோழியுமான திருமதி கோரெட்டா ஸ்காட் (Coretta Scott) பயன்படுத்திய பொருட்களும், இருவரும் பம்பாய்க்கு வருகை தந்த போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சேலை முதலிய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
பம்பாயில் கிங்கும் மனைவியும் (சேலையில்)
பம்பாயில் கிங் தம்பதிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்
பம்பாயில் திருமதி கிங்கிற்கு அளிக்கப்பட்ட சேலை
திருமதி கிங்கும் ஒரு எழுத்தாளர். அவரது நூல்.
மூன்றாவது பிரிவில் மார்ட்டின் லூதர் கிங்கின் அகிம்சை வழியிலான அரசியல் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர் மகாத்மா காந்தி. அவரது நினைவாக காந்தியடிகள் பயன்படுத்திய கை ராட்டினம், நூற்ற நூல், அதற்கான பஞ்சுத்திரி, காலணி, கைத்தடி, மூன்று குரங்கு பொம்மைகள் போன்றவையும் தூய்மையும் அழகும் கௌரவமும் குறையாத வகையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
காந்தியடிகளின் கைராட்டை
காந்தியடிகளின் காலணி, கைத்தடி, கதர்த்துணி
மாடியின் எதிர்ப்பக்கம் நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இன்னொரு கடை உள்ளது.
சர்ச்சுக்கும் நினைவாலயத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் நீச்சல்குளம் போன்ற நீண்டதொரு நீர்ப்பரப்பு உள்ளது. இதை “Freedom Way” என்கிறார்கள். இதன் நடுப்பகுதியில் மார்ட்டின் லூதர் கிங்கின் சமாதியும், அவரது மனவியின் சமாதியும் உள்ளன. இதற்கு நேர் எதிர்ப்பக்கம் அணையாச்சுடர் ஒன்று எரிந்தவண்ணம் இருக்கிறது.
Freedom Way என்னும் நீர்ப்பரப்பு
மார்ட்டின் லூதர் கிங் தம்பதிகளின் சமாதிகள்
கிங் (1929-1968) மரணம் 39 வயதில்;
மனைவி கொரெட்டா (1927-2006) மரணம் 79 வயதில்
சமாதிகளின் எதிரில் அணையாச்சுடர்
இதில், சம உரிமை கோரி அமெரிக்கக் கறுப்பினத்தவர் நடத்திய போராட்டங்களின் பல காட்சிகள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும், கணினிக்காட்சிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான மார்ட்டின் லூதர் கிங்கின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி, இரு கழுதைகள் மர வண்டியில் இழுத்து வந்தன. அவ்வண்டி, நினைவுச் சின்னமாக இங்கு வைக்கப்பட்டுள்ளது.
சவப்பெட்டியைச் சுமந்து வந்த வண்டி
நீண்ட சுவற்றில் மக்கள் போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
மார்ட்டின் லூதர் கிங்குக்குப் பிரியமான அகிம்சைக் கொள்கையை உலகுக்கு வழங்கிய மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் கோலேந்தி நிற்கும் காந்தியின் கருப்புச்சிலை தோட்டத்தில் கம்பீரமாக நிற்கிறது.
காந்தியடிகளின் சிலை முன்னால் மனைவி, மகன், மருமகள், நான்
மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவை மேலும் போற்றும் விதமாக அவரது பெயரால் ஒரு தெருவும், அவென்யூவும், ‘டிரைவும்’ ( a Street, an Avenue and a Drive) அழைக்கப்படுகின்றன. ஒரு சமுதாயத்தையே புரட்டிப்போட்ட சாமான்யனுக்கு இந்த தேசம் செலுத்தும் மரியாதை புல்லரிக்க வைக்கிறது.
மார்ட்டின் லூதர் கிங்கின் பிரபலமான வாசகம்

நினைவாலயத்தை விட்டு வந்தபிறகும், அங்கு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் மார்ட்டின் லூதர் கிங்கின் சொற்பொழிவு ஆடியோக்கள் நம் காதைவிட்டு நீங்குவதில்லை.
****
அவர் ஆற்றிய கடைசி உரை, மெம்பிஸ் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசியது. அதன் முக்கியமானதொரு பகுதி இதோ எனது மொழிபெயர்ப்பில்: பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. உங்களுக்குத் தெரிந்தது தான். நியூயார்க் நகரில் நான் எழுதிய முதல் புத்தகம் வெளியானபோது, நான் ‘ஆட்டோகிராப்’ செய்துகொண்டிருந்தபோது மனநிலை பிறழ்ந்த ஒரு பெண்மணி எதிரில் வந்தாள். “நீங்கள் தானே மார்ட்டின் லூதர் கிங்?” என்றாள். குனிந்து எழுதிக் கொண்டிருந்தவன், “ஆமாம்” என்றேன்.
அடுத்த நிமிடம் எனது மார்பில் ஏதோ ஒன்று பலமாக விழுந்ததை உணர்ந்தேன். இன்னதென்று புரியும் முன் அவளுடைய கத்தியால் குத்தப்பட்டு விட்டேன். ஹார்லம் (Harlem) ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டுபோகப்பட்டேன். அது ஒரு சனிக்கிழமையின் இருளான பிற்பகல் நேரம். கத்தியின் கூர்முனை ஆழமாகப் பொதிந்து இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான மகாதமனியின் (Aorta) அருகாமை வரை போய்விட்டிருந்ததை எக்ஸ்ரே காட்டியது. அது மட்டும் துளைக்கப்பட்டிருந்தால் நம் ரத்தத்திலேயே நாம் மூழ்கியிருப்போம். அத்தோடு சரி. ஒரு தும்மல் போட்டிருந்தால் போதும், என் உயிர் போயிருக்கும் என்று மறுநாள் காலை ‘நியூயார்க் டைம்ஸி’ல் வந்தது.
அறுவை சிகிச்சையில் மார்பு திறக்கப்பட்டு கத்தி வெளியில் எடுக்கப்பட்டு சுமார் நான்கு நாட்கள் ஆனபின் சக்கர நாற்காலியில் அமர்ந்து ஆஸ்பத்திரியைச் சுற்றிவர அனுமதித்தார்கள். எனக்கு வந்த சில கடிதங்களைப் படிக்கவும் அனுமதித்தார்கள். அமெரிக்க மாநிலங்கள் மற்றும் உலகெங்கிருந்தும் வந்த கடிதங்கள் அவை. சிலவற்றைப் படித்தேன். ஒரு கடிதத்தை மட்டும் என்னால் மறக்க முடியாது. ஜனாதிபதியிடமிருந்தும் துணை ஜனாதிபதியிடமிருந்தும் தந்திகள் வந்திருந்தன. அவ்வாசகங்கள் மறந்து விட்டன. நியூயார்க் மானில கவர்னர் வந்திருந்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். அதன் வாசகமும் மறந்து விட்டது.
ஆனால் அந்த இன்னொரு கடிதம், ‘ஒயிட் பிளெயின்ஸ் ஹைஸ்கூல்’ (White Plains High School) மாணவியான ஒரு சிறுமியிடமிருந்து வந்தது. ஒருமுறை தான் பார்த்தேன். மறக்கவே யில்லை. “அன்புள்ள டாக்டர் கிங்! ஒயிட் பிளெயின்ஸ் ஹைஸ்கூலில் ஒன்பதாவது வகுப்பு படிப்பவள் நான்” என்று ஆரம்பித்தது அக்கடிதம். “நான் ஒரு வெள்ளை யினப் பெண் என்பது இங்கு சொல்லவேண்டுமா என்று தெரியவில்லை. உங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டத்தையும் துயரத்தையும் செய்தித்தாள்களில் படித்தேன். ஒரு தும்மல் போட்டிருந்தால் நீங்கள் உயிர் இழந்திருப்பீர்கள் என்பதையும் படித்தேன். நீங்கள் அவ்வாறு தும்மவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்லவே இக்கடிதத்தை எழுதுகிறேன்” என்றாள் அவள்.
நான் தும்மவில்லை யென்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான் என்று கூற விரும்புகிறேன். ஏனென்றால், ஒருவேளை நான் தும்மியிருந்தால், இந்த 1960இல் அனைத்து தென் மானில மாணவர்களும் (கறுப்பினத்தவரின் சம உரிமைக்குப் போராடும் விதமாக) உணவு இடைவேளையில் அமர்ந்திருந்து (எதிர்ப்பு தெரிவிப்பதை) நான் பார்த்திருக்க முடியாது. அப்படி அமர்ந்திருப்பதன் மூலம் தங்கள் ‘அமெரிக்கக் கனவி’ன் (“American Dream”) சிறந்த அம்சங்களுக்காக அவர்கள் எழுந்து நின்றதையும், ‘சுதந்திரப் பிரகடன’த்திலும் (Declaration of Independence), ‘அரசியல் சட்டத்தி’லும் (Constitution) ஜனநாயகம் (Democracy) என்னும் ஊற்றுக்களை ஆழமாகத் தோண்டி வைத்தார்களே நமது தேச நாயகர்கள் (Founding Fathers), அவ்வூற்றுக்களை நோக்கி நாடு முழுதுமே திரும்புமாறு வழி நடத்தியதையும் கண்டேன் என்பதே உண்மை.
அன்று மட்டும் நான் தும்மியிருந்தால், 1961இல் (பஸ், ரயில் முதலிய) போக்குவரத்து வாகனங்களில் (விரும்பிய இடத்தில் அமரும்) சுதந்திரம் வேண்டியும் (Right to Free Ride), (கறுப்பினத்தவருக்குத் தனியிடம் என்ற) பிரிவினைக் கொள்கையை (“Segregation”) எதிர்த்தும் நாம் போராடியபோது நான் இங்கே இருந்திருக்க மாட்டேன்.
அன்று மட்டும் நான் தும்மியிருந்தால், 1962இல் ஜியார்ஜியா மானிலத்தின் ஆல்பனி (Albany) நகரில் கறுப்பினத்தோர் தங்கள் வளைந்த முதுகை நிமிர்த்திட முடிவு செய்தபோது இங்கே இருந்திருக்கமாட்டேன். முதுகை நிமிர்த்தியவன் தனது இலக்கை நோக்கிப் பயணிக்கிறான். முதுகு வளையாதிருக்கும்வரை இன்னொரு மனிதன் உங்கள் முதுகில் பயணிக்கமுடியாது.
அன்று மட்டும் நான் தும்மியிருந்தால், 1963இல் நாட்டின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி, அதனால் ‘குடியுரிமைச் சட்டம்’ (Civil Rights Bill) கொண்டுவரப்படக் காரணமாக இருந்த அலபாமா மாநில பர்மிங்காம் (Birmingham) நகரக் கறுப்பினத்தோரின் போராட்டத்தை நான் பார்த்திருக்க முடியாது.அன்று மட்டும் நான் தும்மியிருந்தால், ‘எனக்கொரு கனவு இருந்தது’ (“I have a Dream”) என்ற (புகழ்பெற்ற ) சொற்பொழிவை அதே ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க மக்களுக்கு நான் நிகழ்த்தியிருக்க முடியாது.
அன்று மட்டும் நான் தும்மியிருந்தால், அலபாமா மாநிலத்தின் செல்மா (Selma) நகரில் நிகழ்ந்த (நமது) மாபெரும் கிளர்ச்சியை நான் கண்டிருக்க முடியாது.
அன்று மட்டும் நான் தும்மியிருந்தால், துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்காக மெம்ப்பிஸ் (Memphis) நகரில் ஒரு சமுதாயமே அணிதிரண்டதை நான் பார்த்திருக்க முடியாது.
எனவே நான் தும்மவில்லை யென்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான்.
இன்று காலை நாங்கள் ஆறுபேர் அட்லாண்ட்டாவிலிருந்து விமானத்தில் கிளம்பினோம். (விமானம் தாமதமாகக் கிளம்பியது). விமானி தனது ஒலிபெருக்கியில் கூறினார்: “தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். ஏனென்றால் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் (நம்முடன்) பயணிக்கிறார். எல்லாப் பைகளும் சோதிக்கப்பட்டு, விமானத்தில் எந்த (பாதுகாப்பு) குறைபாடும் இல்லை என்பது மீண்டும் சரிபார்க்கப்படவேண்டி யிருந்தது. நேற்று இரவு முழுதும் இவ்விமானம் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது என்பதையும் தெரிவிக்கிறேன்” என்றார்.
நாங்கள் மெம்ப்பிஸ் நகரை வந்தடைந்தோம். எதிர்ப்புணர்வு கொண்ட சில வெள்ளைச் சகோதரர்களால் எனக்கு ஆபத்து நேரலாம் என்றும் அதற்கான வதந்திகள் நிலவுவதையும் எனக்குச் சுட்டிக்காட்டினார்கள்.
ஆம், இனி என்ன நிகழும் என்று தெரியாது. வரப்போகும் நாட்கள் கடினமானவை யென்று தோன்றுகிறது. ஆனால் அது ஒரு பொருட்டல்ல எனக்கு. மலை உச்சிக்கு நான் போய் வந்தாயிற்று. எனவே கவலையில்லை. எல்லாரையும் போல் அதிக நாட்கள் வாழ எனக்கும் ஆசை உண்டு. நீண்ட ஆயுளும் தேவை தான். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் இப்போது நான் இல்லை. இறைவனின் வழிப்படியே நான் இயங்க விரும்புகிறேன். அவன் தான் என்னை மலை உச்சிவரை இட்டுச் சென்றவன். மலை மீதிருந்து பார்த்துவிட்டேன், நமக்கு வாக்களிக்கப்பட்ட நாடு எத்தகையது என்று. உங்களோடு அங்கு வர என்னால் இயலாமல் போகலாம். ஆனால் இந்த இரவில் உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்லுவேன், அந்த நாட்டை நாம் அடைந்தே தீருவோம். ஆகவே (தான்) நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதைப் பற்றியும் எனக்குக் கவலை யில்லை. எந்த மனிதனைக் கண்டும் எனக்கு அச்சமில்லை. இறைவன் நம்மை நோக்கி வரும் பெருமிதமான காட்சியை என் கண்கள் கண்டுவிட்டன. (இனிக் குறையேதுமில்லை.)
****(மெம்ப்பிஸ் நகரின் ஒரு சர்ச்சில் (Bishop Charles J.Mason Temple) 1968 ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி இச்சொற்பொழிவை நிகழ்த்தினார், மார்ட்டின் லூதர் கிங். இரவு ‘லோரேய்ன் மோட்டல்’ என்ற விடுதியில் தங்கினார். (Lorraine Motel & Hotel, 408-Mulberry Street, Memphis, Tennessee). மறுநாள் காலை அதே விடுதியில் நின்றுகொண்டிருந்தபோது ஜேம்ஸ் எர்ள் ரே (James Earl Ray) என்ற பள்ளியிறுதி வகுப்பும் படிக்காத, ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட, சாதாரணமானதொரு திருடனால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
தன் கைரேகைகள் படிந்த, சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும், தான் ஏற்கெனவே சிறையில் இருந்தபொழுது கொடுக்கப்பட்ட அடையாள அட்டையுடன் கூடிய டிரான்சிஸ்டர் ரேடியோவையும் சுட்ட இடத்திலேயே விட்டுச் சென்றானாம் அக் கொலைகாரன். யார் செய்வார்கள் இப்படி ?
உண்மையில் அப்போது அமெரிக்க உளவுத்துறையின் முதல் மற்றும் நீண்டகாலத் தலைவராக இருந்த எட்கர் ஹூவர் [first Director of the Federal Bureau of Investigation (FBI)] மற்றும் யுத்தத் தளவாடங்கள் விற்கும் சில வெள்ளையினத்து கார்ப்பரேட் சதிகாரர்கள் செய்த திட்டமிட்ட கொலைதான் இதுஎன்ற நிரூபிக்கப்படாத ஐயம் இன்றும் நிலவுகிறது. ஜனாதிபதியாக இருந்து கறுப்பினத்தாருக்குச் சார்பாகச் செயல்புரிந்த ஜான் கென்னடியும் இதே ரீதியில் தான் இதற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கொலையின் முடிச்சும் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. (மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியாவைப் பார்க்கவும்).
© Y.Chellappa
Email: chellappay@gmail.com
சார் ஜீனியர் வீடு மற்றும் அவர் தொடர்புள்ளவை எல்லாம் எப்படிப் பராமரிக்கப் படுகின்றன என்பது பற்றி மிகச் சிறந்த தகவல்கள்.
பதிலளிநீக்கு//அத்தெருவில் உள்ள வீடுகளை இடிக்கவோ, மாற்றிக் கட்டவோ அனுமதியில்லையாம்.//
வியப்பாக இருக்கிறது.
கீதா
ஆம், உண்மை தான்!
நீக்குஅருமை
பதிலளிநீக்குமகாத்மா காந்தி என்பது போல அவரை மகாத்மா ஜூனியர் என்று அழைக்கலாம் போல் இருக்கிறது.
பதிலளிநீக்குமகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் சென்று வந்த பிரமையை ஏற்படுத்தியது தங்கள் கட்டுரை.
விரிவான தகவலுக்கும் தங்களுடைய புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி.
ஆம் அந்த இடத்தின் பராமரிப்பு அவ்வளவு தூய்மையாக இருக்கிறது.
நீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குமகாத்மாவின் வரிகள் உண்மை...
ஆம் அமெரிக்காவில் வெள்ளையர்களும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை அந்த அளவுக்குப் போற்றுகிறார்கள்.
நீக்குசுவாரஸ்யமான பதிவு. அகிம்சா வழி நடப்பவர்களுக்கு நேரும் இதுபோன்று கொடூர மரணங்கள் சகிப்பின்மையின் உச்சம்.
பதிலளிநீக்குசிறப்பான கட்டுரை. தகவல்கள் அனைத்தும் நன்று. உங்கள் வழி ஒரு சிறந்த தலைவரின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அறிந்து கொண்டோம். நன்றி.
பதிலளிநீக்கு