செவ்வாய், மே 17, 2022

அமெரிக்கா ஏன் போரடிக்கிறது?

35 அமெரிக்கா  ஏன் போரடிக்கிறது?  

(இன்று கிழமை திங்கள்-5)

அமெரிக்காவில் 35 ஆவது நாள் 

(அட்லாண்டிக் கடலோரம்)


இந்தியாவில் எனக்கு நண்பர்களே இல்லை என்று தோன்றுகிறது. 


காரணம் ஒன்றும் இல்லை,  கொரோனா பெரும் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை  மீண்டும் தொடங்கப்பட்டதோ இல்லையோ, என்னுடைய சென்னை நண்பர்கள் கூட்டம் கூட்டமாக அமெரிக்கா ஆஸ்திரேலியா துபாய் கனடா நெதர்லாந்து நார்வே என்று பறந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் ஒரு மிகச்சிறந்த நல்ல குணம் உண்டு.  எப்போது சென்னையிலிருந்து கிளம்புகிறார்கள் என்று யாரிடமும் சொல்ல மாட்டார்கள்.  நாமாக  அவர்கள் வீட்டிற்கு அலைபேசி மூலம் அழைத்தால் “உஷ்!  குழந்தை தூங்குகிறது.  அப்புறம் பேசுகிறேன்” என்று ‘காதோடுதான்  நான் பேசுவேன்’  பாணியில் பதில் வரும். 

படம் கொஞ்சம் பழசு! 2005 இல் !


இதற்கு என் மனைவியிடமிருந்து இருவகைப்பட்ட எதிர்வினைகள் எழும் வாய்ப்பு உண்டு. ஒன்று,  “தனக்குக் குழந்தை பிறந்ததை அவர் ஏன் இதுவரை கூறவில்லை? உங்கள் நண்பர் உங்களுக்குத் தரும் மரியாதை இதுதானா? இனியொருமுறை அவர் இந்த வீட்டு வாசற்படியை மிதிக்கக்கூடாது!”  இரண்டு,  “அவருடைய மனைவி குழந்தை பெறும் வயதைத் தாண்டி விட்டாளே,  எப்படிக் குழந்தை பிறக்கும்? அவள் வீம்புக்காரி ஆயிற்றே, ஒருவேளை டாக்டர் கமலா செல்வராஜிடம் போய் அட்மிட் ஆனாளோ?”


இதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் இருக்கும் தன் சக ஆசிரியையின் டாக்டர் மருமகளுக்குப் போன்  செய்து ‘ஒரு பெண் எத்தனை வயதுவரை செயற்கை முறையில் கருத்தரிக்க முடியும்?’ என்று கேட்பாள். அந்தப் பெண்ணும் மிகவும் மரியாதையுடன் நமஸ்காரம் சொல்லி, ‘இப்போது பிஸியாக இருக்கிறேன் டீச்சர்!  மாலைக்குள் வாட்ஸ்அப்பில் பதில் அனுப்புகிறேன்’ என்று முடிப்பாள். அதன்படியே நூறு பக்கத்துக்குக் குறையாத பிடிஎப் கோப்புகளின் தொகுப்பு  இரவின் நிசப்தத்தில் ‘டிங்’கென்று வந்து விழும். அதில் என்ன இருக்கிறதென்று அந்த டாக்டர் பெண்ணுக்கே தெரியுமோ என்னவோ! ‘ சுருக்கமாக ஒரு பதில் சொல்லத் தெரியாதவள்! என்ன படித்து என்ன பயன்?’ என்ற புலம்பலோடு அந்த விஷயத்தை விட்டுவிடுவாள் என் மனைவி. 


(இந்த இடத்தில் வங்கிகளின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஒரு  தமாஷ் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டியிருக்கிறது.  ரிசர்வ் பேங்க்,  ஸெபி, நிதி அமைச்சகம் போன்ற அதிகார பீடங்களிலிருந்து, ஐம்பதிலிருந்து நூறு பக்கம் உள்ள  சர்க்குலர்கள் ஜெனரல் மேனேஜரின்  பெயருக்கு வந்திருக்கும். அதுவும் பட்ஜெட் சமயத்திலும், நிதியாண்டின் இறுதியிலும் அடிக்கடி அப்படி வரும். தன் உதவியாளர்களை அழைத்து, “சர்க்குலர்களை ஆழமாகப் படித்து உடனே நம் கிளை அலுவலகங்களுக்கு  என் கையெழுத்தில் இங்கிருந்து சர்க்குலர் அனுப்பிவிடுங்கள்” என்பார்.  அது மட்டும் இல்லை, “நான்  5மணி பிளைட்டில் பம்பாய் போக வேண்டும் தெரியுமல்லவா?  அதற்குள் என் கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்பார். அவர் சொல்லும்போதே மணி மூன்றரை ஆகியிருக்கும்.


அதிமுக்கியமான ஆணைகள் அடங்கிய  சர்க்குலர்களை எப்படி ஒரு மணி நேரத்தில் படித்துப் புரிந்துகொண்டு, வங்கியின் கிளைகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளைப் பட்டியலிட  முடியும்? அதே சமயம் ஜெனரல் மேனேஜரின் ஆணையையும் புறக்கணிக்க முடியாதே! இதற்காகவே இந்திய நிர்வாகத்துறை ஒரு வழிமுறையைக் காலம்காலமாகக் கடைப்பிடித்துவந்தது. அதாவது, நாங்கள் பிறப்பிக்கும் சர்க்குலரில், ’இத்துடன் இணைத்துள்ள ரிசர்வ் பேங்க் ( அல்லது ஸெபி..)  சர்க்குலர் நம்பர்../தேதி .. யைக் கவனமாகப் படித்து ஆவன செய்யவும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற நாலே வரிகள் தான் இருக்கும்! சம்பந்தப்பட்ட சர்க்குலரின் நகல் இணைக்கப்படும். நீளமான சர்க்குலர்களை யாரும் படிப்பதில்லை.)


முதலிலேயே தான் அமெரிக்கா வந்து விட்டதாக நண்பர் கூறியிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் வந்திருக்குமா? தூங்கிக்  கொண்டிருப்பது அவரது பேரக்குழந்தைதான் என்று தெரிந்துவிட்டிருக்காதா?


இன்னொரு நண்பர் நள்ளிரவில் போன் செய்து “என்ன, வழக்கம்போல் மார்னிங் காப்பி ஆகிவிட்டதா?” என்றார். “ஆறிவிட்டது” என்றேன். இரவில் சில நாட்கள் படிக்கும் வேலை அதிகமிருந்தால் ஒரு சிறிய தம்ளரில் காப்பி அருந்தும் பழக்கம் எனக்கு உண்டு. அது எனது தூக்கத்தை எப்போதும் பாதித்ததில்லை. இன்றும் என் மனைவி காப்பியைக் கொண்டுவந்து வைத்திருக்கிறாள். நான் கவனிக்காததால் ஆறிவிட்டது. அதைக் கேட்ட பின்புதான் நண்பருக்கு நான் அமெரிக்கா வந்தது நினைவுக்கு வந்தது. “நான்  சிட்னியில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். “எல்லாரையும் விசாரித்ததாகச் சொல்லவும்” என்று முடித்தேன். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அல்லவா நம் கொள்கை! 


என்னுடைய வலைப்பதிவுகளை அன்றாடம் சுமார் 120 முதல் 150 பேர் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. இவர்களில் சென்னையிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்கா, கனடா வந்திருப்பவர்கள் ஐம்பது பேராவது இருப்பார்கள். எல்லாருடனும் வாட்ஸ்அப்பில் பேச என் வீட்டில் சுதந்திரம் உண்டு. ஆனால் “குழந்தை தூங்குகிறது”, “சம்பந்தி யம்மா தூங்குகிறார்”, “மருமகளின் புதிதாக மணமான தங்கையும் கணவனும்- நிலவுத்தேனுக்காக வந்தவர்கள்-தூங்குகிறார்கள்”, “மகள் ஒர்க் ஃபிரம் ஹோம்- சப்தமாகப் பேசாதீர்கள்” என்று தான் பதில் கிடைக்கிறது. போகட்டும், நமது நண்பர்களால் எப்போது பேச முடிகிறதோ அப்போதாவது பேசலாமல்லவா? அதுதான் இல்லை. அந்த நேரத்தில் தானே அவர்களின்  மனைவிமார் தூங்க ஆரம்பிக்கிறார்கள்!  


உடனே எனக்கெதிரில் சுவரில் மாட்டியிருக்கும் படத்தைப் பார்ப்பேன்: சுதந்திர தேவியின் சிலை! அடடா, அமெரிக்காவில் விசிட்டிங் இந்தியர்களுக்குத்தான் எவ்வளவு சுதந்திரம் போங்கள்! 


இந்த நாட்டில் காகிதங்களைக் கழிப்பறை அம்சங்களுக்காகச் செலவழிக்கும் அளவுக்கு  தினசரி பத்திரிகைகளாகச் செலவழிப்பதில்லை. அது அவசியமாகவும் தெரியவில்லை. ஏனெனில் எல்லாச் செய்திகளும் ஒளிவடிவில் திரையில் வந்துவிழுகின்றன, பெரும்பாலும் இலவசமாக. நமக்குத்தான் தொலைக்காட்சித் திரை, கணினித்திரை, அலைபேசித்திரை என்று ஒவ்வொரு விஷயத்திற்கு ஒரு திரையைப் பார்த்து கண்கள் பூத்துவிடுகின்றன. (“அலிபாபாவும் நாற்பது திரைகளும்” என்று 500 வார்த்தையில் யாராவது கதைப்போட்டி வைக்கலாம். நான் நடுவராக இருக்கத்தயார்). 


காகித விளம்பரங்களுக்கு  மாற்றாக சமூக ஊடகங்கள் ஒவ்வொன்றிலும், குறுஞ்செய்தியிலும், தொலைக்காட்சியிலும், நொடிக்கொரு விளம்பரம் தோன்றி மறைகிறது! உள்ளூர் அடையாறு ஆனந்த பவனில் ‘பக்கெட் பிரியாணி’ ஆர்டர் செய்து இரண்டே நிமிடத்தில் நியூஜெர்ஸி, நியூயார்க்கில் இருக்கும் பிரியாணிக் கடைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அலைபேசித்திரையில்  வந்துபோகின்றன!யூடியூபில் கவிதா, வனிதா அல்லது பபிதா அந்த பிரியாணியைத் தயாரித்தே காட்டிவிடுகிறார்கள்!  ‘செயற்கை நுண்ணறிவு’ எப்படியெல்லாம் பயன்படுகிறது! 


கணினித்துறை வளர்ந்து, நம் பிள்ளைகள் அதே துறையில் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு, பாட்டி முதல் பிஞ்சுக் குழந்தைவரை கணினிசார் தொழில்நுட்ப வலையில் அகப்பட்டே தீரவேண்டியுள்ளது. நேரடிப் பேச்சுக்கு ஆளும் இல்லை, நேரமும் இல்லை. போரடிக்காமல் என்ன செய்யும்?  


இந்த ‘போரி’லிருந்து - அதாவது அலுப்பிலிருந்து- விடுபடவேண்டுமென்று உண்மையிலேயே என் நண்பர்கள் விரும்பினால், எளிமையான வழி ஒன்று உண்டு. என்னுடன் வாட்ஸ் அப்பில் பேசுங்களேன்! எனக்கும் கொஞ்ச நேரம் போரடிக்காமல் பொழுது போகுமல்லவா?


 • இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து. 

20 கருத்துகள்:

 1. வழக்கம் போல் நகைச்சுவை இழைகிறது. நானும் இந்த 'சும்மா இரு, சொல்லற' நாட்களைக் கழித்திருக்கிறேன். மொபைல் போனைத் தோண்டித் துருவி, பல நாட்களாக (மாதங்களாக) பேசாத நண்பர்களைக் கூப்பிட்டு, 'உன் குழந்தை என்ன பண்றா?' என்று கேட்க, 'அவ தன்னோட குழைந்தையைப் பாத்துக்கறா' என்று அப்டேட் செய்ய, நாமும் 'கங்கிராஜுலேஷன்' சொல்ல, 'அவ குழந்தைக்கு ஆறு வயசுப்பா' என்று மேலும் அப்டேட் செய்ய.. 'ஓ அப்படியா?' என்று ஆச்சரியப்பட.. வெயிட் பண்ணுங்க செல்லப்பா சார்.. நானும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வருகிறேன். பேச்சுத் துணை எனக்கும் தேவைப்படுகிறதே.. நண்பர்களும் உஷார் !!

  பதிலளிநீக்கு
 2. இதை எதற்கு முதலில் டெஸ்ட் செய்தீர்கள்?!!

  வங்கி நடைமுறை மட்டுமல்ல, (தமிழக அரசின் நடைமுறையும் அதுதான்!   ஒரு முக்கியமான தேவைப்பட்டியல் அனுப்பி இதனை 18 ம் தேதிக்குள் அனுப்பவும் என்று தபால் வரும்.  தபால் வரும் நாள் 18 தாண்டி நாலு நாட்கள், 22 ஆம் தேதி வரும்!  அதற்கும் பதில் அனுப்பா விட்டாலும் மெமோ வரும்.  அனுப்பினாலும் நாம் கேட்டது வராது!!

  பதிலளிநீக்கு
 3. முழுதும் உண்மை கலந்த நகைச்சுவை..

  பதிலளிநீக்கு
 4. "என்னுடன் வாட்ஸ் அப்பில் பேசுங்களேன்! எனக்கும் கொஞ்ச நேரம் போரடிக்காமல் பொழுது போகுமல்லவா? " என்று சொல்லி இருக்கிறீர்களே உங்க வீட்டில் குழந்தை தூங்கிக்கிட்டு இருக்காதா?

  இதற்கான காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் நம் வீடுகள் எல்லாம் செங்கற்கலால் கட்டப்பட்டவை.நல்ல உறுதியான மர கதவுகள். நாம் எவ்வளவு பேசினாலும் நம் அறையின் கதவு சாத்தி இருந்தால் அடுத்த அறைக்கு அவ்வளவாக கேட்காது.

  இந்த ஊரில் எல்லாம் மர சுவர்கள். வலிமை அற்றவை. கொஞ்ச கத்தி பேசினால் கூட மற்றவர்களுக்கு நாராசமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை நீங்கள் பேசும்போது மறுக்க முடியுமா?

   நீக்கு
  2. இங்கு மட்டும் என்ன ? இங்கும் குழந்தைகள் தூங்கும் போது அலல்து வயதானவர்கள் தூங்கும் போது வீட்டில் சத்தம் கூடாது என்று சொல்லப்படுவதுதானே. சிறிய வீடுகளாக இருக்கும் போது என்ன செய்ய? (ஆமாம் பின்ன கஷ்டப்பட்டுத் தூங்க வைச்சிருப்பாங்க குழந்தைகளை...அப்பத்தானே வீட்டுப் பெண்கள் வீட்டில் வேலை செய்ய முடியும்!!!!)

   இங்கும் எல்லார் வீட்டுச் சண்டைகளும் அம்பலமாகத்தான் செய்கிறது. ரோட்டிலேயே சண்டை. மாடியில் நடந்தால், கீழுள்ளவர் வந்து உங்க வீட்டுல டங்க் டங்குனு நடக்கறீங்க (சாதாரணமாக வீட்டி நடப்பதுதான்) மெதுவா நடங்க என்று கேட்கும் வீடுகளும் இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கு உபத்திரவமாக இருக்குமே என்று யாராவது சத்தமாகப் பேசாமல், சுத்தியலால் தட்டாமல் இருக்கிறார்களோ? சத்தமாகப் பாட்டு போடாமல் இருக்கிறார்களோ?
   சாதாரண குறுக்குத் தெரு. வண்டிகளின் சத்தம் அதுவும் குடியிருப்புத் தெருக்களிலேயே 40, 50 கிமீ வேகத்தில் செல்கிறார்கள், ஹார்ன் சத்தம் காதைப் பிளக்கும். எதற்கோ தினமும் கொட்டுச் சத்தம். லவுட் ஸ்பீக்கர் சத்தம். நாம் போய் வைக்காதே, கொட்டு தட்டாதே, உங்கள் வீட்டில் பாட்டை இவ்வளவு சத்தமாக வைக்காதே, எங்கள் வீட்டில் வயதான நோயாளி இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

   எல்லா ஊர்களிலும், நாடுகளிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. எல்லா இடங்களிலும் நல்லவை இருக்கு, கெட்டவையும் இருக்கு. எங்கிருக்கிறோமோ அந்த இடம் சொர்கம்! if we are in Rome lets do as Romans! (Of course without losing our culture!!!)

   கீதா

   நீக்கு
 5. பெயரில்லா17 மே, 2022 அன்று 12:46 PM

  உண்மைதான்!

  பதிலளிநீக்கு
 6. இங்கேயே இருந்தால் எல்லாம் பழகிவிடும்.

  பதிலளிநீக்கு
 7. சார் அமெரிக்கா செல்லும் நட்புகள் என்றில்லை, உறவுக்குள்ளேயே இப்படித்தான் இருக்கிறது. போவதும் வருவதும் தெரியாது. பேச்சுகள் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. அழைப்புகள் இருப்பதில்லை. எப்பொழுது உலகம் சுருங்கிவிட்டதோ அப்போதே மனிதர்களும் சுருங்கிவிட்டார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் கனவுலகில் சஞ்சரித்து (வாட்சப், யூடியூப்) புதிய விஷயங்களோ இல்லை அக்கப்போர்களையோ தெரிந்துகொள்கிறார்கள். இதில் இன்னொருவருடைய போன் அழைப்பே இடைஞ்சலாக இருக்கிறது என்று சொன்னால் அது உண்மைதான். அது சரி.. இந்தியாவில் தொலைக்காட்சி சீரியல்களின்போது விருந்தினர்களுக்கு கதவைத் திறக்காமலிருக்கும் கலாச்சாரம் 25 வருடங்களாக இருக்கிறதே...அப்புறம் நாம் எப்படி மற்றவர்களைக் குறை சொல்லமுடியும் (வெளிநாட்டில் இருப்பவர்களை)

   நீக்கு
 8. ஹாஹாஹா! அதனால்தான் அமெரிக்கா வந்திருக்கும் இந்தியர்களுக்கு ஃபோன் செய்தால் அதிக நேரம் பேசுகிறார்களோ? நான் ஒரு மணிநேரம் தான் பேசுவேன்.:))

  பதிலளிநீக்கு
 9. அடடா... தலையை பிய்த்துக் கொள்ளாமல் கணக்கியலில் இறங்கினால், வருடங்கள் போதாது...!

  பதிலளிநீக்கு
 10. நல்ல கட்டுரை. நெல்லைத்தமிழன் சொல்வது போல தொலைக்காட்சி தொடர் பார்க்கும் ஒருவர் வீட்டிற்கு சென்றால் நமக்குக் கிடைக்கும் வரவேற்பு..... என்ன சொல்ல இதை அனுபவித்து இருக்கிறேன். செயற்கை நுண்ணறிவு படுத்தும் பாடு - அய்யகோ என்னத்த சொல்ல!

  பதிலளிநீக்கு
 11. ரசித்து படித்தேன்.வழக்கம்போல சுவைபட எழுதி இருக்கிரீர்கள்.பழையதாக இருந்தாலும் தம்பதி சமேதரான நிழல் படம் அருமையாக இருக்கிரது.

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா20 மே, 2022 அன்று 7:58 AM

  40 திரைகளுடன் மார்ஜியானாவும் இருக்க அலிபாபாவுற்கு எப்படி போரடிக்கும்? - சுந்தரராஜன்

  பதிலளிநீக்கு
 13. அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவது கலை. அதுதங்கள் வசம் உள்ளது. இது இருக்கும்போது பொழுதுபோவது எளிதுதான்.
  10, 15 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் இல்லை. ஆனால் ஒய்வு பெற்றவர்களுக்கு அது ஒரு வரப் பிரசாதமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு