வியாழன், மே 30, 2019

மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்


மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்
அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்

-இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)

30-5-2019

மணிக்கொடி காலத்து  எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்க ஒருவர் சிட்டி என்னும்  பெ.கோ. சுந்தரராஜன். ஆங்கிலம் பயின்ற அறிஞராகவும் ஆங்கில இலக்கிய விமர்சன நூல்கள் பலவற்றைக் கற்றறிந்தவராகவும் அவர் இருந்தது அவருடைய எழுத்தை மற்ற மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து   வித்தியாசப்படுத்திக் காட்ட உதவியது.


“பொதுவாக மணிக்கொடியர்கள் கதையம்சத்தைப் பிரதானமாகக் கொண்டு எழுதியவர்கள். ஆனால் சிட்டியோ தனி மனிதனின் உணர்வுகளை படம் பிடித்துக் காட்டும் கதைகளையே பெரும்பாலும் எழுதினார்” என்பது பிரபல எழுத்தாளர் நரசய்யாவின் கருத்து. அதே சமயம் மாறிவரும் சமுதாய உணர்வுகளையும் அவர் பிரதிபலித்தார் என்கிறார்.
****
'அந்தி மந்தாரை' என்ற தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 1947இல் வெளியான இந்த நூல்  சில மாதங்களுக்கு முன்பு சென்னை சந்தியா பதிப்பகத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் பின்வருமாறு: அந்திமந்தாரை,  நிசாசர கணம், ரப்பர் பந்து, சௌந்தர்யமே சத்தியம், உடைந்த வளையல், புரியாத கதை ஆகியவை.
***
இவற்றுள் நிசாசர கணம் கிட்டத்தட்ட ஒரு பேய்க் கதையாகும்.  

விஷயம் என்னவென்றால் இவர் ஒரு சினிமா கதாசிரியர். இன்னும் ஒரு வாரத்தில் அவசரமாக ஒரு கதையை எழுதி சினிமா கம்பெனிக்குக்  கொடுத்தாக வேண்டும். அதற்காகவே முன்பின் தெரியாத ஒரு கிராமத்திற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் தனியே தங்கியிருக்கிறார். தொந்தரவு செய்வதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் கதை வேகமாக ஓடுகிறது. மாலையில் ஆரம்பித்து நீண்ட இரவில்  கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.

கதையில் சுலோச்சனாவின் வாயில் துணி அடைக்கப்பட்டிருக்கிறது அவள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவள் காதலனையும் ஒரு குகையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  அவள் எதிரில் வில்லன் ஒரு தூணின் மேல் சாய்ந்து நின்றபடி  சிரிக்கிறான். தன் கையிலுள்ள துப்பாக்கியால் அவள் உயிரைப் போக்கி விடுவதாக மிரட்டுகிறான்.

“யுத்த ரகசியம் அடங்கியுள்ள காகிதம் இருக்கும் இடத்தை உடனே சொல்லிவிடு” என்று அவளை வலியுறுத்துகிறான். ஆம், அது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அல்லவா!

தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. அதே சமயம் தன் காதலனையும் காப்பாற்றியாக வேண்டும். ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வடித்துக் கொண்டு  கண்களில் ஒளி பொங்க வில்லனைப் பார்த்து சரி என்று தலை அசைக்கிறாள். அப்போது அவள் கண்கள் அவன் தூணுக்கு மேலிருந்த உச்சியை பார்க்கின்றன. ஒரு கரும்பாம்பு மேலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
***

இந்தக் கட்டம் வரை கதை எழுதி முடிக்கும் பொழுது நள்ளிரவு ஆகிவிடுகிறது. அப்போது இருட்டிலிருந்து இரண்டு கண்கள் தன்னை நோக்கி மினுமினுத்துக் கொண்டே நெருங்கி வருவதாக கதாசிரியருக்குத் தோன்றுகிறது. அவர் மனம் பீதியில்  ஆழ்ந்து போகிறது. ஆம் கதையில் அவர் எழுதிய பாம்பு தான் இப்போது அவரை நோக்கி அறையின் மூலையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு பாம்பாட்டியும் தோன்றுகிறான். அவன் மகுடிக்கேற்ப இந்தப் பாம்பு ஆடிக்கொண்டே வருகிறது.

****
கதாசிரியர் தன் கதையில் எழுதிக் கொண்டிருந்த பாம்பு எப்படி உயிர் பெற்று அவரை நோக்கிக் கடிக்க வருகிறது என்பதுதான் கதையின் சுவாரசியமான கட்டம். இம்மாதிரிக்  கதைகளை இன்று பின்நவீனத்துவக் கதைகள் என்று வகைப்படுத்தி விடுவார்கள். ஆனால் எழுபது வருடங்களுக்கு முன்பு இது வெறுமனே சிறுகதை என்றே அறியப்பட்டது. இக்கதையில் மேலும் சில சஸ்பென்ஸ் உண்டு. வாசகர்கள் படித்து அறிய வேண்டும்.
****"

ரப்பர் பந்து என்ற கதையில் ஒரு பெண்ணுக்கும் அவருடைய முறைப்  பையனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இரு குடும்பத்தாருக்கும் அதில் விருப்பமே. சிறுவயதிலிருந்தே இருவரும் ஆடிப்பாடிப் பழகியவர்கள். ஆனால் ஜாதகம் பார்த்தபோது பொருத்தம் இல்லை என்று தெரிகிறது. பெற்றோர்கள் வேறு வரன் தேடுகிறார்கள்.

அப்போதுதான் சீனு வருகிறான். அவனும் அவளோடு சிறுவயதில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே ஊர்க்காரன். ஒரு ரப்பர் பந்து விளையாடும்பொழுது இருவருக்கும் சண்டை வருகிறது. அத்துடன் நட்பு முறிந்து போகிறது. பிறகு அவன் படிக்கப் போய்விடுகிறான். வேலையில் அமர்கிறான். பல வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருகிறான்.

அவனை இவள் பார்க்கும்பொழுது அந்த ரப்பர் பந்து ஞாபகம் வருகிறது. இவன் அல்லவா தன் மனதில் ஒரு புதுமையான உணர்ச்சியைத்  தோற்றுவிக்கிறான் என்று அவளுக்குப் புல்லரிக்கிறது. இவனோடு திருமணம் நடைபெறாதா  என்று மனம் ஏங்குகிறது. அதே ஏக்கம் அவனுக்கும் உண்டாகிறது.

ஆனால் அவளுடைய பெற்றோர்கள் இவனிடம் ஜாதகம் கேட்கும் பொழுது இவன் கொடுக்க மறுத்து விடுகிறான். காரணம் என்ன என்பதுதான் இந்தக் கதையில் சஸ்பென்ஸ்.

வேறொன்றுமில்லை. ஜாதகம் சரியில்லை என்று தங்கள் திருமணம் நின்று விட்டால் என்ன செய்வது என்று இருவருக்குமே அச்சம்.
*****

அந்திமந்தாரை என்பது அந்திப்பொழுதில் பூக்கக்கூடியது. பெரும்பாலும் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். காலைக்குள் வாடி விடும் என்பதால் பல வீடுகளில் இப்பூக்களைப் பறித்து பூஜைக்கு பயன்படுத்தும் வழக்கம் இல்லை. இதைப் பெண்கள் தலையில் அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்ததாகவும்  தெரியவில்லை. எனவே 'அந்திமந்தாரை' என்பது தன்னளவில் அழகானதாகவும் தூய்மையானதாகவும் இருந்தும் பிறரால்  போற்றப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் போய்விடும் ஒன்றின் உருவகம் என்றுதான் தோன்றுகிறது. இக் கதையில் வரும் நாயகி காமாட்சியும் ஓர் 'அந்திமந்தாரை' தான்.

'சிட்டி'யின் கதைகள் என்று பேசும்பொழுது இந்த அந்திமந்தாரை தான் பெரும்பாலும் எடுத்துக் காட்டப்படுகிறது. அந்தப் பெருமைக்கு அது பொருத்தமானதே.

கதை நடக்கும் சூழல் இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பட்டாபி, காமாட்சியைத்   திருமணம் செய்துகொண்டு மதுரை நகருக்கு வந்து  தனிக்குடித்தனம் வைத்து சிறிது காலமே ஆன நிலையில் கதை ஆரம்பிக்கிறது. பட்டாபியின்  நண்பன் சேஷாத்ரி தல்லாகுளத்தில் ஜில்லா போர்டு ஆபீசில் வேலை பார்த்து வந்தான். பட்டாபிக்கு சேதுபதி ஹைஸ்கூலில் ஆசிரியராக உத்தியோகம்.
சிட்டி என்னும் பெ . கோ. சுந்தர ராஜன்  
இருவரும் சந்தித்து ஆறு மாதம்தான் ஆகிறது என்றாலும் நேசம் முற்றிவிட்டது. தினந்தோறும் ஆற்றங்கரையில் சந்திப்பது அவர்கள் வழக்கம். இரவு ஏழு மணி வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். சேஷாத்ரி தல்லாகுளத்தில் ரூம் வைத்துக்கொண்டு ஓட்டலில் சாப்பிட்டு வந்தான். திருமணத்துக்கு முன்புவரை பட்டாபியும் ஓட்டலில்தான் சாப்பிட்டு வந்தான். இருவரும் சேர்ந்துதான் பட்டாபியின் தனிக்குடித்தனத்துக்கு அலைந்து அலைந்து வீடு தேடினார்கள். ஆனால் தனிக்குடித்தனம் வந்த பிறகு ஒரு வாரமாகியும் சேஷாத்ரியை பட்டாபி சந்திக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு வரும்படி அழைப்பு அனுப்பி இருந்தான். அலுவலகத்தில் இருந்த காகிதங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒருவழியாக அன்று பட்டாபியின் வீட்டிற்குக் கிளம்பினான் சேஷாத்ரி.
***

கதவு மூடி இருந்தது ஆனால் ஜன்னல் திறந்திருந்தது. பட்டாபி வந்திருக்கக்கூடும் என்று சேஷாத்ரி அவனைப் பெயரிட்டு அழைத்தான். பதில் இல்லை. எனவே மெல்லக்  கதவைத் திறந்தான். ஆனால் சட்டென்று பின்வாங்கினான். ஏனென்றால் திறந்த கதவின் வழியாக முற்றத்தில் அமர்ந்து கொண்டு காமாட்சி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். இவன் தலை தெரிந்ததும் அவசரமாய் எழுந்து நின்று முழங்கையால் புடவையின் மேல்பாகத்தைச் சரியாய்த் தள்ளி அமைத்துக் கொண்டாள்.

அந்தக் காட்சியை ஆசிரியரின் வார்த்தைகளில் பார்க்கலாம்:

"பட்டாபி வரவில்லையா இன்னும்?" என்றான் சேஷாத்ரி ஒரு வினாடி தயங்கியபின்.

காமாட்சி கையிலிருந்த பாத்திரத்தை பார்த்தாள். அவளுடைய உதடுகள் அசைவது போல் தெரிந்தன ஆனால் பதில் இல்லை.

மறு நிமிஷம் சேஷாத்ரி கீழே இறங்கிப் போய் விட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

எப்பொழுது வருவான் என்று கேட்காமல் போனோமே, வந்தால் ஆற்றங்கரையில் பார்க்கச் சொல்லி இருக்கலாமே என்று நினைத்தான். ஆயினும் பதில் சொல்வதற்கு சங்கோஜப்பட்ட காமாட்சியை இன்னும் கஷ்டப்படுத்த அவன் மனம் இரங்கவில்லை. தான் அவளைக் கேட்டது கூட தப்பு என்று நினைத்தான். பட்டாபியின் மனைவியை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்க்க நேரிட்டதால் புதுமனிதனாகிய தன்னிடம் அவள் பதில் சொல்லத் தயங்கியது இயற்கைதான் என்று அவனுக்குப் புலப்பட்டது.

சேஷாத்திரி போன கால் மணி நேரத்தில் பட்டாபி கடையிலிருந்து நெய்யும் சில சாமான்களையும் வாங்கிக்கொண்டு வந்தான். ஆனால் அவளுக்கு முக்கியமான கடுகை மறந்து விட்டான்.

"கடுகு மறந்து போய்விட்டேளா?"

"கடுகு சொன்னாயா?" என்றான் பட்டாபி சில்லரையைக் கணக்குப் பார்த்துக் கொண்டே.

மூன்றுதரம் சொன்னதாக அவள் சொல்கிறாள். இவனோ அவள் சொல்லவில்லை என்று சாதிக்கிறான். அவள் கோபிக்கிறாள். "சரி அம்மா, நாளைக்கு வாங்கிட்டு வந்துடுறேன். இப்போ காபி உண்டா இல்லையா?" என்று சமாதானம் ஆகிறான்.
***

திருமணமான எல்லா ஆண்களுக்கும் இம்மாதிரி நிகழ்ச்சிகள் தங்கள் வீடுகளிலும் எப்போதாவது  நடந்தது நினைவிருக்கும்.

சரி, சேஷாத்ரியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கவனிக்கலாமா? 

***
காமாட்சி அவ்வளவு கர்நாடகமான பெண்ணாக இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. ஒருவேளை வேண்டும் என்றே பதில் பேசாமல் மௌனமாக இருந்தாளோ  என்று கூட நினைத்தான். அதே சமயம் புதிதாகக் குடித்தனம் வைத்திருக்கும் இளமபெண் தன் கணவன் தன்னோடு தான் அதிக நேரம் கழிக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை தானே என்றும் தோன்றியது.

எனவே சேஷாத்திரி நேராக ஆற்றங்கரைக்குச் செல்கிறான் மனைவி மூலம் கேள்விப்பட்டு பட்டாபி தன்னைத் தேடிக் கொண்டு வருவான் என்று வெகுநேரம் காத்திருக்கிறான். ஆனால் அவன் வரவில்லை.

சேஷாத்திரி வந்ததைக் கணவனிடம் காமாட்சி கூறவில்லை. ஏனென்றால் மறந்துபோய்விட்டாள். சேஷாத்ரியை அவள் அதற்கு முன் பார்த்ததில்லை. அத்துடன், கணவன்  வீட்டிற்கு வந்தவுடன் தன்னை எங்காவது வெளியில் அழைத்துக் கொண்டு போக மாட்டானா என்று ஆவலோடு காத்திருக்கிறாள். அவனும் அவளுக்கு ஏதோ சாக்கு போக்கு செல்வது போல வார்த்தையாடி விட்டுக்  கடைசியில் இருவருமாக சினிமாவுக்குக் கிளம்புகிறார்கள்.

ஆற்றங்கரையில் இவனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போன சேஷாத்திரியும் அதே சினிமாவுக்கு வருகிறான். ஆனால் படம் முடிந்து வெளியில் வந்து ஜட்கா வண்டியில் ஏறும் பொழுதுதான், சேஷாத்ரியின் தலை தெரிவதை பட்டாபி பார்க்கிறான். வண்டியை நிறுத்திக்  கையை அசைத்து சேஷாத்ரியை அழைக்க  முயற்சிக்கிறான். ஆனால் அவன் இவனை கவனிக்காமல் சென்று விடுகிறான். அப்போதுதான் காமாட்சிக்கு  நினைவு வருகிறது. "ஐயையோ மறந்தே போயிட்டேன். நீங்க கடைக்கு போய்ட்டு வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னேதான் அவர் வந்துட்டு போனார்" என்கிறாள்.

அவனுக்குக் கோபம் ஏற்படுகிறது. வீட்டுக்கு வருபவர்களை இப்பொழுதே விரட்ட ஆரம்பித்து விட்டாயா என்கிறான். அந்தக் கோபம், வண்டி வாடகைக்கு மேல்  இனாம் எதிர்பார்க்கும் ஜட்கா வண்டிக்காரன் மேல் பாய்கிறது. இவனுடைய கோபத்தைக் கண்டு பயந்து கொண்டே காமாட்சி வீட்டிற்குள் செல்கிறாள்.
***
அன்று இரவு பட்டாபியும் சாப்பிடவில்லை காமாட்சியும் சாப்பிடவில்லை. அவள் இரண்டு மூன்று முறை அழைத்தும் தனக்குப் பசிக்கவில்லை என்று சீறி விழுந்தான். அவன் சாப்பிடாததால் அவளும் சாப்பிடவில்லை.

மறுநாள் காலையில் அரை மனதாக சாப்பிட்டுவிட்டு பட்டாபி ஆபீசுக்கு கிளம்பினான். ஆனால் பேசவில்லை. அவள் தலை குனிந்தவாறு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். கால் கட்டை விரலில் 2 துளி கண்ணீர் சொட்டின.

அவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். அவள் மீது திடீரென இரக்கம் தோன்றியது. ஆயினும் தன்னுடைய பொய் கவுரவத்தை விட மனம் வரவில்லை.

காமாட்சியின் நிலைமையை ஆசிரியர் விவரிக்கிறார்: நண்பர் வந்ததைப்பற்றி முன்னாலேயே நினைவு வந்திருக்கக் கூடாதா என்று வருந்துகிறாள். இருந்தாலும் புதிதாகப் பார்க்கும் ஒரு ஆண் மகனிடம் தான் எப்படிப்  பேசியிருக்க முடியும் என்ற ஆட்சேபணையும் அவள் மனதில் தோன்றியது. கணவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் நடுவில் தான் நிற்பதாகப் பாவித்து விட்டானே என்றுதான் அவளுக்குச் சகிக்கவில்லை.

சேஷாத்திரியும் நடந்ததை மறுபரிசீலனை செய்கிறான். தான் வந்துவிட்டுப் போனதை எப்படியம் மனைவி சொல்லியிருப்பாள், ஆனாலும் பட்டாபி ஆற்றங்கரைக்கு ஏன் வரவில்லை என்று தோன்றுகிறது. இளம் மனைவியா அல்லது நண்பனா என்ற கேள்வியில் மனைவி முக்கியமாகப் போய்விட்டது போலும் என்று எண்ணுகிறான்.

அதனால் என்ன மறுபடியும் பட்டாபியின் வீட்டுக்கு போய்ப் பார்க்கலாம் என்று இன்னொரு நாள் வருகிறான்.

அதேசமயம் ஆபீஸில் இருந்து நேராக சேஷாத்ரியின் ஆபிசுக்கு போய் அவனை அழைத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிய பின் வெளியில் எங்காவது சாப்பிட்டு விட்டுப் பிறகு வீட்டிற்கு போகலாம் என்று பட்டாபி கிளம்புகிறான். அதுதான் காமாட்சிக்கு சரியான தண்டனை என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால் அங்கு போன பின்தான் தெரிகிறது சேஷாத்ரி முன்னதாகவே கிளம்பி விட்டான் என்று.

ஆக இப்போது சேஷாத்ரி மீண்டும் பட்டாபியின் வீட்டில் வந்து நிற்கிறான். அவனைக் கண்டதும் ரேழிக்கு விரைந்து வந்த காமாட்சி ஏதோ பேச வாய் எடுத்தாள், ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அதற்குள் சேஷாத்ரி 'இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுக்கொண்டே நகர ஆரம்பித்தான்.

காமாட்சியின் நெஞ்சம் பதறிற்று. தைரியமாக வாயைத்திறந்து கதவு மறைவில் இருந்தபடியே "இப்போ வந்து விடுவார், வந்தா இருக்கச் சொன்னார்" இன்று பெரிய பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஏமாற்றத்தை எதிர்பார்த்திருந்த சேஷாத்திரி வியந்து நின்றான். அதற்குள் காமாட்சி ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டு உட்காரச்சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

ஆனால் வீடு திரும்பிய பட்டாபிக்கு நாற்காலியில் அமர்ந்திருக்கும் சேஷாத்ரியை கண்டவுடன் அசடு வழிகிறது. சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நண்பனை வீட்டில் சாப்பிடச் சொல்ல வேண்டும் என்று பட்டாபிக்கு ஆசை. ஆனால் மனைவியுடன் முதல் நாள் ஏற்பட்ட கோபம் இன்னும் அடங்கவில்லையே, எப்படி அவளிடம் கேட்பது?

சேஷாத்ரிக்கு வேறு மாதிரியான சங்கடம். அன்று இரவு பட்டாபி வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் ஏதோ ஒரு எண்ணம். அதற்கேற்ப காமாட்சி நாற்காலி போட்டு உட்கார வைத்து விட்டாள். ஆனால் ஒருமணி நேரம் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லையே! "சரி நான் வரட்டுமா?" என்று ஏமாற்றத்துடன் கிளம்புகிறான்.

ஆனால் அது பட்டாபிக்கு நிம்மதியை உண்டாக்குகிறது. "சரி, சரி, எப்படியும் அடுத்த சனிக்கிழமை சாப்பிடுவதற்கு வந்துவிடு" என்று நண்பனை வேகமாக  ஏறக்கட்டுவதற்கு முற்படுகிறான். அப்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது.

கூடத்தில் இரண்டு இலைகள் போடப்பட்டு அருகில் பலகைகளும் போடப்பட்டிருந்தன. காமாட்சி கூஜாவில் இருந்து 2 வெள்ளி டம்ளரில் வெந்நீர் வார்த்துக்கொண்டு இருந்தாள். பட்டாபி நிற்பதைக் கண்டு தலை நிமிர்த்திய காமாட்சி தன் வெற்றிப் புன்னகையை மறைத்துக்கொண்டு ‘நண்பரை  சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லுங்கள்’ என்றாள்.

***
பட்டாபிக்கு ஏற்பட்ட எதிர்பாராத வியப்பில் ஒன்றும் தோன்றவில்லை அவனுடைய வைராக்கியம் மனதில் மிக ஆழத்திலிருந்து ஈனஸ்வரத்தில்  கத்தியது அவனுக்குக் கேட்கவில்லை. இருந்தாலும் தன் பெருமையை விட்டுக் கொடுக்காமல், "முன்னாலேயே சொல்றதுக்கென்ன, அவன் போகணுமாம்" என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தான்.

"நான்தான் அவரை இருக்கச் சொன்னேன். நீங்க சொன்னதா சொன்னேன். சாப்பிடாது அனுப்பினால் ஏதாவது நினைச்சுக்கப் போறார்" என்றாள் காமாட்சி.

பட்டாபி முகத்தில் முன்னைவிட அதிகமாக அசடு வழிந்தது.வெளியில் போகக்  கிளம்பிவிட்ட சேஷாத்ரியை அழைத்து "வா, வா, சாப்பிட்டு விட்டுப் போகலாம், சமையல் ஆயிடுத்தாம்" என்றான்.

சாப்பாடு சுவையாக இருந்ததாக திருப்தியோடு சேஷாத்ரி கிளம்புகிறான். பட்டாபி அப்போதுதான் உண்மையைப் போட்டு உடைக்கிறான். "ரெண்டு நாளா எங்களுக்குள்ளே சண்டை. இப்போ சாப்பாடு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. நீ வந்த பின்னாலே ஒருவாறாய் சண்டை நின்றுவிட்டது. இனிமேல் சண்டை வந்தால் சொல்லி அனுப்புகிறேன்" என்கிறான்.

காமாட்சி வெற்றியின் பலனான அலட்சியத்துடன் இந்த சம்பாஷணையைக்  கேட்டுக் கொண்டிருந்தாள். பட்டாபி தன்னைப் பார்ப்பதைக் கண்டு பாசாங்குக்  கோபமும் உண்மைப்  புன்னகையும் சேர்ந்து பிரகாசிக்கும் தன் முகத்தைத்  திருப்பிக் கொண்டாள்.

***

இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கக்கூடிய நிகழ்ச்சிதான். கணவனின் மனதைப் புரிந்து கொள்ளாமல் தவறு நேர்ந்து விட்டால் அதைச் சரியான சமயத்தில் சரிசெய்து எவ்வாறு அவனுடைய அன்பை மீண்டும் பெறுவது என்பதை இயற்கையாகவே பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று கதாசிரியர் அழகாக விளக்குகிறார்.

இது உண்மையில் ஒரு ‘ரொமாண்டிக்’ கதைதான். ஆனால், கதையில் எந்த இடத்திலும் காமாட்சியின் அழகை சேஷாத்ரி கவனித்ததாக எழுதவில்லை. கணவனின் நண்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக காமாட்சியின் பார்வையிலும் அவர் ஏற்றிச் சொல்லவில்லை. புதிதாகத் திருமணமான இளம் மனைவியின் வெகுளித்தனத்தையும், அதைப் புரிந்துகொள்ளாமல் செயல்படும் புதுக்  கணவனின் பேதைமையையும் அதேசமயம் அந்த இருவரின் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளத் தெரியாத திருமணமாகாத இளைஞனின் அசட்டுத்தனத்தையம் ஆசிரியர் இக்கதையில் தெளிவாகக்  கொண்டு வந்திருப்பது அக்காலத்தில் மிகவும் பேசப்பட்டது.

சிறுகதை வளர்ச்சியின் ஆரம்பகாலத்தில் வெளியான கதை இது. உண்மையில் கதையம்சத்தை விட, ஏதோ ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்து மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கோப்பிற்குத்தான் சிறுகதை என்று பெயர் என்பதை ஆங்கில மொழியில் எழுத்தாளர்கள் இலக்கணமாக வகுத்திருந்தார்கள். ஆங்கில மொழியறிவின் காரணமாக அம்மாதிரிக் கட்டமைப்பைத் தமிழிலும் கொண்டுவருவது சிட்டிக்குச் சாத்தியமாகியிருக்கிறது. சிட்டியின் எல்லாக் கதைகளையும் மீண்டும் வெளியிட்டால் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றிற்கு அணிசேர்க்கும் என்றே தோன்றுகிறது.

இன்றும் கூட, பெண்களின் நிலைமை யில் அதிக மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. இப்போதும்  பல வீடுகளில் காமாட்சியைப் போன்ற அந்திமந்தாரைகள் பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அல்லது, திருமணம் ஆகி, கணவனுடன் சரியான புரிதல் ஏற்படும்வரையில் அவர்கள் அந்திமந்தாரைகளாகவே இருக்க நேரிடுகிறது என்றும்  சொல்லலாம்.
****

சென்னை அடையாறு அரசினர் நூலகத்தில் 30-5-2019 அன்று நிகழும் நூல் அறிமுக விழாவில் படிப்பதற்காக நான் எழுதி அனுப்பிய விமர்சனம் இது. இதை என் சார்பில் படிப்பித்த மூத்த எழுத்தாளர் திரு. வையவன் அவர்களுக்கு என் நன்றி!      - இராய  செல்லப்பா  (தற்பொழுது நியூ ஜெர்சியில்).
****

ஞாயிறு, மே 12, 2019

கு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்

கு. அழகிரிசாமி - யின் சிறுகதைகள்

-      இராய செல்லப்பா

(11-5-2019 சென்னை குவிகம்  இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய தலைமை உரை)

தமிழ் மொழியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கு அழகிரிசாமி. 1923 செப்டம்பர் 23இல் பிறந்து 1970 ஜூலை 5 ஆம் நாள் மறைந்தார். அதாவது 47 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தவர். இவர் மறைந்த ஐம்பதாம் ஆண்டு இது.

கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்தவர் அழகிரிசாமி. அதே ஊரைச் சேர்ந்த பின்னாளில் பிரபலமான இன்னொரு எழுத்தாளரை உங்களுக்கு தெரிந்திருக்கும்: கி ராஜநாராயணன். ஆம் அவரும் இவரும் சமகாலத்தவர்கள். நண்பர்களும் கூட. ‘நாங்கள் இரண்டு பேரும் ஒரே தெருவின் புழுதியில் கட்டிப் புரண்டவர்கள்’ என்கிறார் கி.ரா. புதுமைப்பித்தன், வல்லிக் கண்ணன், தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரும் இவருடைய சமகாலத்தவர்களே.


அக்காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஒரு சில மாணவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். தன் இருபதாவது வயதில் 'உறக்கம் கொள்ளுமா'  என்ற முதல் சிறுகதையை ஆனந்தபோதினி மாத இதழில் எழுதினார்.

ரஷ்ய இலக்கியங்களோடு இவருக்கு மிகுந்த பரிச்சயம் உண்டு. மாக்சிம் கார்க்கியின் நாவல்களை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவரே.

அக்காலத்தில் கழுதை மேய்த்தாலும் அரசாங்கக் கழுதையை மேய்க்க வேண்டும்  என்ற பழமொழி வழக்கத்தில் இருந்தது. அதன்படி அழகிரிசாமி அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தார்.  வட்டாரத் தமிழைத்  தன்னுடைய எழுத்துக்களில் பத்திரப்படுத்தி வைத்த இவருக்கு அப்போது கிடைத்த உத்தியோகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வது! அவருடைய  பதவியின் பெயர்  ‘எழுத்தர்’ என்பது. ஆனால் எழுத்தராக இருப்பதைவிட எழுத்தை ஆளுபவராக  இருப்பதுதான் அவருக்கு விருப்பமாக இருந்த காரணத்தால், அந்தப் பதவியை விலக்கிவிட்டு ஆனந்தபோதினி அலுவலகத்தில் வந்து சேர்ந்தார். ஆனந்த போதினியின்  சக பத்திரிகையான பிரசண்ட விகடனில் உதவியாசிரியரானார்.
 
இராய செல்லப்பா, கடற்கரய் மற்றும் வாசகர்கள்  
பின்னர் தமிழ்மணி என்ற அரசியல் வார இதழிலும் அதன் பிறகு வை. கோவிந்தனின் ‘சக்தி’ மாத இதழிலும் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி.ஜ.ரங்கநாதன் (பின்னாளில் மஞ்சரியின் ஆசிரியரானவர்).

சக்தி இதழில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மலேசியா சென்றார் அழகிரிசாமி. அங்குதான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அங்கு ‘தமிழ் நேசன்’ இதழில் பணியாற்றினார். ஆனால் போதுமான ஒத்துழைப்பு இன்மையால் திரும்பவும் தமிழ்நாட்டுக்கே வந்தார். வந்தவுடன் சில ஆண்டுகள் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு சுமார் 5 ஆண்டுகள் நவசக்தி இதழில் இருந்தபோது ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற நாடகத்தை எழுதிப் பெயர் பெற்றார்.

பிறகு நவசக்தியில் இருந்தும் விலகி தனிப்பட இயங்கத் தொடங்கினார். அக்காலத்தில் அவர் கடிதம் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். அவருடைய  கடிதங்களை கி ராஜநாராயணன் தொகுத்து அழகிரிசாமியின் கடிதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
வெளியீடு-சாகித்ய அகாதெமி
விலை ரூ.550.

அழகிரிசாமி அவர்களின் சிறுகதைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்றான ‘அன்பளிப்பு’ என்ற தொகுப்பிற்கு சாகித்ய அகடமி விருது 1970இல் கிடைத்தது.ஆனால் அதை நேரில் சென்று பெற்றுக் கொள்ளமுடியாமல் போயிற்று. காரணம் அவரது மறைவிற்குப் பிறகுதான் விருது வந்தது

இவருடைய சிறந்த சிறுகதையாக 'ராஜா வந்திருக்கிறார்' என்ற கதை மேற்கோள் காட்டப்படுகிறது. ரஷ்ய மொழி உள்பட பல மொழிகளில்  இக்கதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் முதல் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 2019 பிப்ரவரி 17-ஆம் தேதி இதழில் சாயாவனம் கந்தசாமி அவர்கள் எழுதும் போது அழகிரிசாமியின் இந்தக் கதையைக் குறிப்பிடுகிறார்.

அழகிரிசாமியின் கதைகளைப் பற்றிய இன்றைய உரையாடலுக்கு ராஜாக்கள் யாராவது வந்து இருக்கிறார்களா என்றால் இல்லை, எல்லோரும் சாமானியர்களே.
வெளியீடு- சாகித்ய அகாதெமி 
விலை ரூ.50

நான்கு  புதினங்களும், இரண்டு சிறுவர் இலக்கிய தொகுப்புகளும்,  இரண்டு  நாடகங்களும், நான்கு கட்டுரைத் தொகுப்புகளும் அழகிரிசாமி அவர்களின் பெயரால் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புகளைப் பொருத்தவரையில் லெனினுடன் சில நாட்கள், அமெரிக்காவிலே, மற்றும் மாக்சிம் கார்க்கியின் பல நூல்கள் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் திண்ணை  இணைய வார இதழில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் ஒரு வாசகரால் வழங்கப்பட்டிருந்தது. அதில் முதல் 13 ஆவது இடத்தில் அழகிரிசாமி யின் ‘ராஜா வந்திருக்கிறார்' இடம்பெற்றிருந்தது.  முதல் பன்னிரண்டில் இருந்த சிலர் :  கு ப ராஜகோபாலன், புதுமைப்பித்தன், அம்பை, மௌனி, தி ஜானகிராமன், பி எஸ் ராமையா முதலியவர்கள்.
கு.அழகிரிசாமி அவர்களின் புதல்வர் திரு ராமச்சந்திரன் எனக்கு மிகவும் பழக்கமானவர். பல இலக்கிய விழாக்களில் தவறாமல் அவரை நான் சந்திப்பது உண்டு. அப்படி ஏற்பட்ட பழக்கம் மிக நெருங்கிய பழக்கம் ஆகி விட்டது.
****
கு அழகிரிசாமி அவர்களின் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்  புத்தகவடிவில் கிடைக்கின்றன. இன்றைய நிகழ்வில் மதிப்பிற்குரிய கட்டுரையாளருமான கடற்கரய் அவர்கள் அக்கதைகளைப் பற்றியும் அழகிரிசாமியின் மற்ற எல்லா படைப்புகளைப் பற்றியும் தனது மதிப்பீட்டை உங்கள் முன் வைக்க இருக்கிறார்.

அதற்குமுன்னால் அவசரமாக அழகிரிசாமியின் ஒரு சில சிறுகதைகளைப்  பற்றிய அறிமுகத்தை நான் உங்களுக்குத் தராவிட்டால் இந்த நிகழ்வுக்கு நான் நியாயம் செய்தவனாகமாட்டேன். கடற்கரய்  அவர்கள் என்னைப் பொருத்தருளலாம்.
கு. அழகிரிசாமியின் மைந்தர் ராமச்சந்திரன் இடது கோடியில்  

ஒரு மூத்த எழுத்தாளருக்கு நாம் காட்டும் மரியாதை, அவருடைய எழுத்தைத் தேடிப்பிடித்துப் படிப்பதே. ஆனால் அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. காரணம் சம்பந்தப்பட்ட நூல்கள் இப்போது அச்சில் இல்லாமல் இருக்கலாம். அருகிலுள்ள நூலகங்களிலும் கிடைக்காமல் போகலாம். இதை மனதில் கொண்டு, அழகிரிசாமியின் கதைகளைப்  பற்றிப்  பேசும்போது அவருடைய வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறேன். என்னுடைய வார்த்தைகள் தடிமன் எழுத்தில் உள்ளவை.

(1) ‘தியாகம்’ சிறுகதை  


இது ஒரு மளிகைக் கடைக்காரரைப் பற்றிய கதை. கடைக்காரரின் குணாதிசயத்தை அழகிரிசாமி வர்ணிக்கும் விதமே இக்கதையைச் சுவையுள்ளதாக ஆக்குகிறது.

கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார்…. அன்று காலை 10.25 க்கு கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும்போது  முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ, ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்து கொள்ள வேண்டும், அப்படி வைத்து கொண்டார். அந்த முகபாவத்தின் பிரதான அம்சம் கடுகடுப்பு; பிரதானம் இல்லாத அம்சம் ஒரு மாதிரியான விறைப்பு. இந்த முகபாவத்தை கடையில் உட்கார்ந்து இருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டார். நண்பர்களோ அந்தஸ்து மிக்க வாடிக்கைகாரர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றி விடுவார்.


*****

பிறகு செட்டியார் முகத்தை திருப்பி, பெட்டியைத் திறந்து அங்கே கிடக்கும் சில்லறைக் காசுகளை கையால் துழாவி விட்டு கடைச் சிப்பந்திகளை அந்த நான்குப் பேரையும் மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தார். இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்! எதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே கணம் தான் சாக்குக் கிடைத்து விட்டது ….

ஏன்டா.தடிப்பயல்களே ! நீங்க என்ன பரதேசிகளா, சன்யாசிகளாடா!  எருமை மாட்டுப் பயல்கள் ! விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப் போறப் பிச்சைக்காரப் பயல் கூட இப்படி சாம்பலை அள்ளி பூச மாட்டானேடா ? தரித்திரம் புடிச்ச பயல்களா! நீங்க வந்து கடையிலே நொளைஞ்சிகளோ இல்லையோ யாவாரம் ஒண்ணுக்கு பாதியாய்ப் படுத்து போச்சு. இன்னும் மிச்சம் மீதியையும் படுக்க வெச்சிட்டு போகவாட இப்படி நெத்தியில அள்ளி பூசிட்டு வந்திருகீங்க, சாம்பலை!….”

****
(அன்று) பையன்கள் விபூதி பூசி வந்ததைக் கண்டுச் சீறி விழுந்ததைப் பார்த்தப் புதுப் பையன், மறு நாள் வெறும் நெற்றியோடு வந்து விட்டான். அவ்வளவு தான்: நீ என்னடா சைவனா? இல்லை, வேதக்கரானா? (கிறிஸ்துவனா?) என்னலே முழிக்கிற? உன் மூஞ்சியப் பார்த்தா எவண்டா கடைக்கு வருவான்?… நெத்தியை சுடுகாடு மாதிரி வெச்சுகிட்டு ….”

போய் விபூதியை எடுத்துப் பூசுஎன்று கணக்கு பிள்ளை அவனுக்குப் புத்தி சொன்னார். செட்டியார் திட்டுவதை உடனே நிறுத்தி விட்டார்.
****
செட்டியாரின் நண்பர், சண்முகம் பிள்ளை. தாம் வெகு நாட்களாகக் கேட்க நினைத்ததை அன்று அப்பட்டமாக கேட்கத் துணிந்தார்:

இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க, ஊரிலேயும் உங்களைப்பத்தி பெருமையா பேசிக்கிறாங்க. கடைப் பையன்களுக்கு உங்கள போல சம்பளம் குடுக்கறவங்க இல்லையன்னும் எனக்கு தெரியும், எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா,ஏன் இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கடைப் பையன்களை திட்டிகிட்டே இருக்கீங்க? எப்போ வந்து பார்த்தாலும், எவனையாவது நிப்பாட்டி வெச்சுகிட்டு பொரியரீங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்ல?”

அண்ணாச்சி, அன்பாதரவா இல்லையன நான் திட்டுவனா ? அதைக் கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க. பயகளை நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லில கடைய விட்டு வெளியே ஏத்திபுட்டு மறு சோலி பார்க்க மாட்டனா? சொல்லுங்க, இந்த முப்பது வருசத்துல ஒருத்தனை நான் வேலைய விட்டுப் போகச் சொல்லியிருக்கேனா? பயக விருத்திக்கு வரணும்னு தானே தொண்டத் தண்ணி வத்த வெச்சுகிட்டு இருக்கேன்? கத்தி கத்தி என் உசிரும் போகுது

ஏன் கத்தணும் ? நல்லபடியா ஒரு சொல் சொன்னாப் பத்தாதா?”

அப்டியா சொல்றீங்க, அண்ணாச்சி? சரி தான் ! நல்லபடியாக சொன்னாப் பயகளுக்கு திமிர் இல்ல ஏறி போகும்? ஒடம்பு வளையுமா? அந்த காலத்திலே நான் கடைப் பையனா இருந்தப்போ எங்க மொதலாளி பேசினதை நீங்க கேட்டிருக்கணும்…. ஹும், அதிலே பத்திலே ஒரு பங்கு கூட நான் பேசியிருக்க மாட்டேன்; பேசவும் தெரியாது.

அப்ப்பேர்ப்பட்டமுதலாளியா அவரு!

என்னங்கறீங்க? என்ன பத்தி மட்டுமா? என் தாயி, தகப்பன்,பாட்டன் அத்தனை பேரையும் சேர்த்து கேவலமா பேசுவாரு. புளுத்த நாய் குறுக்கேப் போகாது. ஒரு நாள் என் மூஞ்சில அஞ்சு பலப் படிய தூக்கி வீசிட்டாரு. தலையக் குனிஞ்சேனோ, தப்பிச்சேனோ ! அப்படியெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைன்னு வெச்சு, யாவரம் பண்ணி, இவ்வவளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாம நிர்வாகம் பண்ணிட்டு வரேன்…”

சண்முகம்பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனாலும் அப்பறம் சிரித்து கொள்ளலாம் என்று அதை அடக்கிக் கொண்டு செட்டியாரையா உங்க மேல தப்பில்ல ; உங்க முதலாளிய சொல்லணும். உங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காரு

****

(2) சுயரூபம் – சிறுகதை


இக்கதையில் நெடுஞ்சாலை உணவகம் நடத்தும் ஒருவரின் செயல்பாட்டைப்  புலப்படுத்துகிறார் அழகிரிசாமி.

மங்கம்மாள் சாலை என்பது இந்நாள் டிரங்க் ரோடாகும். சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் செல்லும் அந்தச் சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் ஒரு விலக்குப் பாதை பிரிகிறது. அரை மைலுக்கு மேற்கில் இருக்கும் வேப்பங்குளத்துக்குச் செல்லும் அந்தப் பாதையும் மங்கம்மாள் சாலையும் சந்திக்கும் இடத்தில், முருகேசம் பிள்ளையின் பலகாரக்கடை என்ற ஒற்றைத் தனிக்குடிசை ஒன்று இருக்கிறது.

பஸ்ஸுக்காகப் புளியமரத்து நிழலில் வந்து காத்திருக்கும் பிரயாணிகளையும், தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் செல்லும் மாட்டு வண்டிகளையும் மற்றும் பாதசாரிகளையும் நம்பி அவ்விடத்தில் இருபது வருஷங்களுக்கு முன் நிறுவப்பட்ட அந்தக் கடை, முருகேசம் பிள்ளைக்கு ஐந்நூறு ஏக்கம் புன்செய் நிலத்தையும், சிமிண்டுத் தளம் போட்ட ஓர் ஓட்டுவீட்டையும் சம்பாதித்துக் கொடுத்ததுமல்லாமல், அவருடைய மூன்று பெண்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்திருக்கிறது.

***
பஸ் வந்தது. அதிலிருந்து ஒரே ஒரு பிரயாணி மட்டும் இறங்கினான். அவனை வரவேற்றுச்  சாப்பிட அழைத்தார் பிள்ளை. அவன் பசி இல்லைஎன்று சொல்லி அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றான். அகப்பட்டுக்கொண்டால் அரை ரூபாயோ முக்கால் ரூபாயோ கணக்காகிவிடும் என்று அவனுக்குப் பயம். ஆனால் பிள்ளையா விடுகிறவர்? ஓடிப்போய் அவன் கையைப் பிடித்து இழுத்தார்.

கையை விடுமையா! பசிச்சா வரமாட்டான், மனுஷன்? கடன்காரன் மாதிரி வந்து கையைப் பிடிச்சு இழுக்கிறீரே!என்று கோபமாகச் சொல்லி, கையையும் உதறிவிட்டு அவன் ஊரைப் பார்த்து நடந்தான்.

பாவம், வியாபாரம் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது!
****

(3) அன்பளிப்பு – சிறுகதை


ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் எழுத்தாளர் கூறுவதாக அமைந்த கதை. அழகிரிசாமியின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும்  ஒன்றாகக் கருதப்படுகிறது.

*****

ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என் பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில் நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டின் ஒரு பகுதியிலே தான் எங்கள் குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும் சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது, பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது இப்படிப் பொழுது போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும் புத்தகங்கள் சிலவற்றை எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம் கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன. குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள் அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத் தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப் புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப் புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள் தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு வரவேண்டும்என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு திரும்பினால் ஒரே கலாட்டாதான்.
***
சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல அன்பளிப்புஎன்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும், என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன.
******
சாரங்கன் என்ற பையன் வயதில் சிறியவன். அவனுக்கு இந்த எழுத்தாளருடன் இருந்த நட்புதான் எவ்வளவு புதிரானது! அவனுடைய உளவியலை அழகிரிசாமி வெளிப்படுத்தும் விதத்தில்தான் இக்கதை சிறப்புப் பெறுகிறது.
*****
சாரங்கன் அவரை அழைக்கிறான்.  எங்கள் வீட்டுக்குப் போவோமா?”

உங்கள் வீட்டுக்கா?”

ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல  வில்லையா?”

சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”

எதற்கோ? நீங்கள் வாருங்கள்என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து இழுத்தான்.

அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின் வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம் வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி? போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?
………..

நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல் மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.

சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான் பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு வரமாட்டீர்களாஎன்று தடுமாறும் குரலில் கேட்டான்.

……………………………….
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்என்று படபடப்பாக இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின் சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து வாருங்கள்என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.

சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று விட்டது.

ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”

சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும் சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக் கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய் வைக்கப் போனான் சாரங்கன்.

இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள் என்னைக் கஷ்டப்படுத்துவதனாலாவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது அமானுஷிகம்என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.

சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என் முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான். …….. பிறகு அவன் வலது கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.

அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம் பேனாவை என் கையில் கொடுத்து எழுதுங்கள்என்றான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன எழுத?” என்று கேட்டேன்.

"என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று எழுதுங்கள்.
****

(4) ராஜா வந்திருக்கிறார் – சிறுகதை


ஏழ்மையின் பரிதாப நிலையையும் அதைப்  பொருட்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளையும், தங்களிடம் இல்லாதபோதும் இருப்பதில் சிறிதளவையாவது தங்களைவிட ஏழ்மையானவர்களோடு பங்கிட்டுக் கொள்ளும் பண்பாட்டையும் அந்தநாளில் சிறப்பாக வெளிப்படுத்திய கதை இது.

அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.

ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, ”இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு" என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள். எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், "உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே!" என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.

வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.

ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.

அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா?’ என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, "எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா?" என்று கேட்டான்.

****
இந்தப் போட்டி இத்துடன் முடியவில்லை. அடுத்த சில நாளில் தீபாவளி வருகிறது. ஓர் ஏழைக் குடுமபம் தீபாவளிக்குத் துணி எடுக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக வர்ணிக்கிறார் அழகிரிசாமி.
****

(குழந்தைகள்) பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, ‘இது யாருக்கு இது யாருக்குஎன்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.

துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டு யாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: "துண்டு யாருக்கும்மா?"

"ஐயாவுக்கு" என்றாள் தாயம்மாள்.

"அப்படின்னா உனக்கு?" என்று மங்கம்மாள் கேட்டாள்.

தாயம்மாள் சிரித்துக்கொண்டு, "எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?"

"ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்?" என்றாள் மங்கம்மா.

"வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே!. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது?" என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.
***
இரவு அனைவரும் தூங்கப்போகிறார்கள். மண்தரையில் தான் படுக்கை.
****
தம்பையா, அண்ணனைப் பார்த்து, "துணைக்கு வர்ரயா?" என்று கூப்பிட்டான். இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது……...

அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால்  மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இலை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கறி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.

****
இந்தக் குழந்தைகள் அந்த ஏழைச் சிறுவனைத் துரத்துகிறார்கள். அவன் போக மறுக்கிறான். அழுகிறான். கடைசியில் அவர்களின் அம்மா வந்து விசாரிக்கிறாள்.
****

"நீ சாப்பிட்டாயா?" என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

"அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்!" என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். "இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே!" என்று அதட்டிவிட்டு, "நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு?" என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.

"விளாத்திகுளம்" என்றான் சிறுவன்.

அவனுக்குத் தாய் தகப்பன் இல்லை. உடன்பிறந்தவர்களும் இல்லை. கழுகுமலையில் இருப்பதாகச் சொல்லப்பட்ட அத்தை வீட்டிற்குப் போவதற்காக அவன் அந்த வழியாக வந்திருக்கிறான்.

அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மைல்  பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான். மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மைல் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை. எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், ‘அங்கே போஎன்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.

"உன் பேரு என்ன?" என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.

"ராஜா" என்றான் சிறுவன்.

அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.
 ****

அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப்  பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள். …. ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள்.  ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.
"அரப்புக் காந்தும்; நான் மாட்டேன்." என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.

"அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்"

"ஊஹும்."

"தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நான் தேய்ப்பனா? – வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா" இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான். 

ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா!…" என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள்……

யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."

அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். ……….புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.

அவன் கௌபீனத்தோடு நின்றான்.

தாயம்மாளுக்குப் பகீர்என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், "ஒரு துண்டு வாங்க வழியில்லையே!" என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.

தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.

"என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ" என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.

அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.

"பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!"

கொடுக்கப்பட்டது.

அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்

"எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!"

ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள். முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது  நடந்த போட்டிதான் அவள்  ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய பெருமையை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.

அதனால் ஒரு அரை அடி முன்னால் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.

"ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு."

*****

அழகிரிசாமி வட்டார மொழியில் எழுதினார் என்றால் கூட கி. ராஜ நாராயணன் மாதிரியோ  நாஞ்சில்நாடன் மாதிரியோ இல்லாமல்  எல்லா தரப்பு மக்களுக்கும்  புரியும் வகையிலான சொல்லாக்கங்களையே பெரிதும் பயன்படுத்தினார் என்பது சாயாவனம் கந்தசாமியின் கருத்து.

திறமை உள்ள இலக்கியவாதிகள் ஐம்பது வயதிலேயே மறைந்து போவது தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு. ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் இறவாத இலக்கியங்களை அவர்களால் படைக்க முடிந்திருப்பது தமிழின் பாக்கியமே. அதற்கு சாட்சியாக நிற்கிறார் கு. அழகிரிசாமி.
******