(இன்று கிழமை திங்கள்-6)
அமெரிக்காவில் 42 ஆவது நாள்
(அட்லாண்டிக் கடலோரம்)“குழந்தைகள் எப்போதுமே குழந்தைகள்தான். அமெரிக்காவில் இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்களைக் குழந்தைகளாக இருக்க விடுவதுதான் பெரியோர்களின் முதல் கடமை” என்று இதுவரை யாராவது சொல்லியிராவிட்டால் அந்தப் பெருமையை ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை.
ஆனால் அதைச் செயல்படுத்துவது மிகக் கடினமாக இருப்பதாகவே இளம் பெற்றோர்கள் கருதுகின்றனர்.
திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் போன தம்பதிகளுக்குக் குழந்தை பிறந்தால், அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தால், இரு தரப்பிலிருந்தும் குழந்தையின் தாத்தா பாட்டிகள் முன் வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது பெரும்பாலும் நிகழ்கிறது. இந்தியாவில் இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் இது சாத்தியமே.
பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத திருமணமாக இருந்தாலும், பேரக்குழந்தைகள் பிறக்கும்போது பெண்களுக்கே உரிய கருணை உணர்வினால் இரண்டு பாட்டிகளில் ஒருவராவது குழந்தையைப் பார்த்துக்கொள்ள முன்வருவது இயற்கையே.
ஆனால் முதுமையினாலோ, ஆரோக்கியம் இன்மையினாலோ பாட்டிமார்கள் யாரும் முன்வராவிட்டால் அந்தக் குழந்தையை வளர்ப்பது இளம் பெற்றோர்களுக்கு சவாலான காரியமே.
குழந்தையின் தாய் அலுவலகப் பணிக்குச் செல்லாதவளாக இருந்தால் இந்தப் பிரச்சினையை ஒருவழியாகச் சமாளித்துவிடலாம்.
குழந்தையின் பெற்றோர்கள் இருவருமே அலுவலகப் பணியாளர்களாக இருந்தால், பேறுகால விடுமுறை பெண்ணுக்கு மட்டுமின்றி ஆணுக்கும் வழங்கப்படுவதால் அது உள்ள வரையில் ஓரளவுக்கு நிம்மதியான குழந்தை வளர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இருவருமே அல்லது அந்தப் பெண் மட்டுமாவது ‘இ. இ. ப.’ வாக இருந்துவிட்டால் நிலைமை சிக்கலாகாமல் இருக்க வழியுண்டு. ( ‘இ. இ. ப.’ என்றால் இல்லத்தில் இருந்து பணியாற்றுவோர் - Work From Home வகையினர்).
அப்படியில்லாதவர்கள் பாடு கடினமே. ஆனால் இந்தியாவை விட அமெரிக்காவில் இந்த பிரச்சினைக்குச் சிறந்த தீர்வு உள்ளது அதுதான் “பேபி சிட்டர்”களைப் பணிக்கு அமர்த்திக்கொள்வது. இந்தியாவில் பெங்களூர், மும்பை போன்ற சில நகரங்களில் இந்தச் சேவைகக்கான ஏஜன்சிகள் உள்ளன. சென்னையில் உண்டா என்று தெரியவில்லை. அச்சேவையில் ஈடுபடும் பெண்மணிகளுக்குத் தேவையான பயிற்சியை வழங்கும் நிலையங்களும் சென்னையில் இருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பேபிசிட்டிங் என்னும் பணி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக இருப்பதால், அதில் பணியாற்ற வரும் பெண்களும் சரி, அவர்களைப் பணியமர்த்திக் கொள்ளும் பெண்களும் சரி, அந்தத் தொழிலை எவ்வாறு சரியாக எதிர்கொள்வது என்று தெரிந்திருக்கிறார்கள். ஆகவே அப்பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியமும் கண்ணியமானதாகவே உள்ளது. எனவே உரிய பயிற்சியை மேற்கொண்டு இத்தொழிலுக்கு வருகிறார்கள்.
சொல்லப்போனால், பேபிசிட்டர்கள் கிடைப்பதுதான் மிகவும் கடினம் என்று தெரிகிறது. அதிலும் குழந்தையின் தாய்மொழி தெரிந்தவளாக ஒரு பேபிசிட்டர் கிடைப்பது சாத்தியமே இல்லையாம். பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழி பேசும் பெண்களே எளிதில் கிடைக்கிறார்கள். சமீபகாலமாக, வேலைக்குச் செல்ல விசா கிடைக்காமல் வீட்டில் தாங்கள் முடங்கிப் போவதை விரும்பாத சில இந்தியப் பெண்களும் பேபிசிட்டர்களாகப் பணியாற்ற முன்வருவதாகத் தெரிகிறது. நியூ ஜெர்சி போன்ற மாநிலங்களில் இதற்கு அதிக சாத்தியமுண்டு.
இந்தியாவிலும் இத்தொழிலை ஊக்குவிக்கும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ‘இ. இ. ப.’ அல்லாத இளம்பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். நர்சிங் தொழில் போன்றே இத்தொழிலுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள். கூடவே சமையல்கலையிலும் இப்பெண்கள் திறமையை வளர்த்துக்கொண்டால் நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இங்கு எனக்கு நன்கு தெரிந்த ஒரு வீட்டில் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணியை பேபிசிட்டராக நியமித்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கிலத்தை இவர்களும் இவர்களுடைய ஆங்கிலத்தை அவரும் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கிறதாம். ஆனால் ஒன்றரை வயதுகூட ஆகாத அந்தக் குழந்தைக்குத் தன்னுடைய பேபிசிட்டரின் ஸ்பானிஷ் மொழியைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமும் இல்லையாம்! இன்னும் ஆறுமாத காலம் இதே பெண்மணி தொடர்ந்து இருந்தால், குழந்தை பேச ஆரம்பிக்கும்போது ஸ்பானிஷ் மொழியிலேயே பேச ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
‘நீ ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்’ என்று குழந்தையை வழியுறுத்தினால், அவனிடமிருந்து ஸ்பானிஷ் மொழியில் இம்மாதிரி பதில் கிடைக்கலாம்:
“Te cortaré la nariz ..”
இதற்கு அர்த்தம் வேண்டுவோர் Google Translate இல் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
என்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் ஊதியம் பெறாத பேபிசிட்டராக இருந்த, ‘பமேலா’ என்று எங்களால் அன்போடு அழைக்கப்பட்ட, என் மனைவியின் பாட்டி, திருமதி செல்லம்மாள் அவர்கள் இந்தச் சொற்றொடரால் தான் குழந்தைகளை மிரட்டிவைப்பார்கள். (“உன் மூக்கை நறுக்கி விடுவேன்”).
(2009 இல் அமரத்துவம் எய்திவிட்ட அவரை, என்னுடைய 46 ஆவது திருமண ஆண்டுநிறைவு நாளான இன்று 24-5-2022 நினைவுகூர்வதன் மூலம் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்).
படத்தில்: என் மைத்துனர், மாமியார், மனைவி, நான் |
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
சார் என்னதான் சொல்லுங்கள் தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வளர்ப்பில் வரும் குழந்தைகள் தனிதான். நானும் தாத்தா பாட்டிகளின் அன்பில் வளர்ந்தவள்,
பதிலளிநீக்குஉங்கள் பேரன் பேத்தி எல்லாம் லக்கி சார். நான் கண்டிருக்கிறேனே. நீங்களும் மாமியும் குழந்தைகளுக்காகச் செய்வது. மாமி பேத்தியை இசைப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுண்டே..
கீதா
மிக்க நன்றி நண்பரே!
நீக்குஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சார் !
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குMany more Happy returns of the day. With grace of God, Your 46th wedding anniversary day may multiply to reach centum.
பதிலளிநீக்குS.Ramaswsmy
மிக்க நன்றி நண்பரே!
நீக்குபேபிசிட்டர் என்பதை தமிழில் வளர்ப்புத் தாய் அல்லது செவிலித்தாய் என்று கூறலாமா? அமெரிக்காவில் Day care வசதிகளும் உண்டல்லவா? தங்களுக்கும் தங்கள் இல்லத்தரசிக்கும் திருமணநாள் நிறைவு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு- கு.மா.பா.திருநாவுக்கரசு
பேபிசிட்டர்கள் பெரும்பாலும் இளம்வயதினராய் இருப்பதால் அவர்களை 'தாய்' என்ற வகையில் சேர்ப்பது சரியல்ல என்கிறார்கள். சில குறிப்பிட்ட ஊர்களில் டே கேர் வசதி உண்டு. தங்கள் வாழ்த்துகளுக்கு எனது நன்றி நண்பரே!
நீக்குஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குTe cortaré la nariz - உன் மூக்கை வெட்டுவேன் (https://translate.google.com/)
பதிலளிநீக்குசரி தான்...!
எனக்குத் தெரியும், நிச்சயம் நீங்கள் ஒருவராவது சோதித்துப் பார்ப்பீரகள் என்று! 'மெய்ப்பொருள்' கண்டதற்கு நன்றி!
நீக்குWish you a long and happy married life.
பதிலளிநீக்குThe best wish was sent by usha subramanian.
பதிலளிநீக்குபழம்பெரும் எழுத்தாளரான தங்களின் வாழ்த்து மகிழ்ச்சியைத் தருகிறது அம்மா!
நீக்குமனமார்ந்த மண நாள் வாழ்த்துகள் !!!. ஒரே பதிவில் எத்தனை செய்திகள் !!!. நம்மூரில் ஆயா எனச் சொல்வார்கள் .
பதிலளிநீக்குஎதையும் ஆய்ந்து குழந்தைக்கு நல்லவற்றைச் சொல்லித் தருவதால் 'ஆயா' என்ற பெயர் வந்ததா என்பதை ஆய வேண்டும் - அதாவது ஆராய வேண்டும்! தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
நீக்குமண நாள் வாழ்த்துகள். ஒரு நூலுக்கான செய்திகள் தொடர்ந்து வருகின்றன. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎழுத்தனுபவத்தில் மிக்க தங்களுடைய வாழ்த்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா!
நீக்குHappy wedding day.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குமிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குஅருமைத் தாய்கள், அருமைப் பாட்டி ஆகிறார்கள்.
இந்த ஊரில் பேபி சிட்டர்களை விட அதிகம் க்ரெஷ்
தான் இருக்கிறது. அப்படியே நர்சரி, ப்ரைமரி என்று
வளரும் குழந்தைகளைப் பார்க்கிறேன்.
அம்மா கவனத்தில் வளருவதை விட ,
அவர்களின் கவனிப்பில்
ஒரு குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது:)
இப்போது அதன் ஒரிஜினல் க்ராண்ட்மா வந்து விட்டார்,.
ஆம், பேபிசிட்டர்கள் மூலம் குழந்தைக்கு மிகவும் இளம் பருவத்திலேயே நல்ல ஒழுங்குகள் பழகிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. தங்கள் வாழ்த்துக்கு நன்றி உடையேன்!
பதிலளிநீக்குகுழந்தை வளர்ப்பு - மிகவும் கடினமான ஒன்று தான். கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது. மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குHappy wedding anniversary!
பதிலளிநீக்குசென்னையிலும் பேபி சிட்டர்களை ஏற்பாடு செய்து தரும் ஏஜென்சிகள் இருக்கின்றன. என் அக்காக்கள் அதன் மூலம்தான் தங்கள் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆட்களை அமர்த்திக் கொண்டனர்.
பதிலளிநீக்குஇங்கே (கனடாவில்) என் மகள் தன் குழந்தையை விடுவதற்காக பேபி சிட்டிங் கில் பதிவு செய்து விட்டு காத்திருக்கிறாள். நான் ஊருக்கு திரும்பும் முன் கிடைத்து விட்டால் நன்றாக இருக்கும்.