திங்கள், மே 23, 2022

ராஜீவ் காந்தி படுகொலையும் விதியின் எட்டு விளையாட்டுகளும்

ராஜீவ் காந்தி படுகொலையும் விதியின் எட்டு விளையாட்டுகளும்

(இன்று கிழமை ஞாயிறு-6)

அமெரிக்காவில் 41 ஆவது நாள்

(மணித்திருநாடு)

விளையாட்டு -1


உண்மையில் தமிழ்நாட்டில் வைத்து ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை.. ராஜீவ்காந்தி கொலையை செய்து முடிக்கும் பொறுப்பு பொட்டுஅம்மான் என்பவரிடம் வழங்கப்பட்டிருந்தது.  அவர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒற்றைக்கண் சிவராசனை இதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். 


அப்போது-  மார்ச் 1991 -  இந்தியாவில் பொதுத்தேர்தல் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.  அதைக் கண்டு சிவராசன் மகிழ்ச்சி அடைகிறார்.  தேர்தல் பிரச்சாரத்திற்காக பல இடங்களுக்கு ராஜீவ் வருவார் அவரை எப்படியும் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று திட்டமிடுகிறார்.


ஆனால் பொட்டு அம்மானோ, "டெல்லியில் வைத்துச் செய்ய முடியாதா?" என்று கேட்கிறார். தலைவர் உத்தரவிடும் போது மறுக்க முடியுமா சரி என்று அதற்கான ஏற்பாட்டைச் செய்ய முற்படுகிறார் சிவராசன். ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஆடுகளத்தைத் தமிழ்நாட்டுக்கு மாற்றிவிட்டார் பிரபாகரன்.


விளையாட்டு - 2 


இம்மாதிரி சதித் திட்டங்களுக்கு ஏற்ற இடம் கொடைக்கானல் தான்.  உல்ஃபா  போன்ற  வடகிழக்கு மாநில தீவிரவாத இயக்கங்கள் கூட கொடைக்கானலையே தங்கள் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறது.  காரணம் யாரும் எளிதில் ஊடுருவ முடியாத அளவுக்கு அடர்த்தியான  மலைப்பகுதி.  மக்கள் தொகையும் குறைவு. விடுதலைப்புலிகளும் இதே எண்ணத்தில் தான் இருந்தார்கள். 


தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கக் கட்டிகளைப் பணமாக மாற்றி ஒரு பண்ணை வீட்டை வாங்கித் தங்கள் தீவிரவாத திட்டங்களுக்கு அதை அலுவலகமாக மாற்றிவிடவும், மலையில் வசிக்கும் ஆதிவாசிகளுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் ராஜீவை கொலை செய்துவிட்டால் தங்கள் மீது பழி வராது என்றும் திட்டமிட்டார்கள். 


ஆனால் இந்த விஷயம் பிரபாகரனின் கவனத்திற்குச் சென்ற உடன் கடுமையாக அவர்களைக் கண்டித்தார்.  ராஜீவ் காந்தி கொலையில் இந்தியர்கள் யாருக்கும் தொடர்பு இருக்கக் கூடாது.  புலிகளின் தற்கொலைப் படையே அதை முன்னெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


விளையாட்டு - 3


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக  இருந்தவரும், ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவருமான வாழப்பாடி ராமமூர்த்தி மட்டும்  தேர்தல் பிரச்சாரத்திற்குதித் தமிழ்நாட்டுக்கு ராஜீவ் வரவேண்டியதில்லை என்று ஆரம்பம் முதலே கூறிவந்தார். ஆனால்  மயிலாடுதுறையில் போட்டியிட இருந்த மணிசங்கர் அய்யர் மட்டும் எப்படியும் ராஜீவ் காந்தி தன்னுடைய தொகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.  அப்படி அவர் வருவதானால் அங்கேயே இந்தக் கொலையை நிகழ்த்துவதற்கு சிவராசன் தயாராக இருந்தார்.  அங்கிருந்து கடல்வழி மிகவும் அருகில் இருந்ததால்  கொலை செய்த பிறகு தப்பி ஓடுவது எளிது என்பது அவருடைய எண்ணம்.


விளையாட்டு - 4


ராஜீவின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்கான பொறுப்பாளராக இருந்தவர் மார்கரெட் ஆல்வா.  அவரால் ராஜீவ் காந்தியின் தமிழ்நாட்டுப் பயணத்திற்கு ஒன்றரை நாள் மட்டுமே ஒதுக்க முடிந்தது. ஆகவே மூன்று தொகுதிகளில் மட்டுமே ராஜீவ் பிரச்சாரம் செய்ய முடியும்:  1 வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதி,  2 மணி சங்கர் ஐயர் போட்டியிடும் மயிலாடுதுறை,  3 ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை. 


இந்தப் பட்டியல் ராஜீவ் கைக்குப் போனவுடன் அவர்  தன் கைப்படவே இப்படி எழுதினார்: Please include Aunty’s constituency. அதாவது 'ஆண்ட்டி" என்று அவரால் அழைக்கப்படும் மரகதம் சந்திரசேகர் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும் தான் போயாக வேண்டும் என்ற உத்தரவே அது. முன் அனுமதி பெறாமல் இந்திராகாந்தி குடும்பத்தில் எப்போது வேண்டுமானாலும் வரவும் போகவும் ஆண்ட்டிக்கு சலுகை இருந்தது.  அந்த அளவுக்கு அக்குடும்பத்தின் மீது பாசம் கொண்டிருந்தார் மரகதம் சந்திரசேகர். 


இதன்படி ராஜீவின் பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.  முதல்நாள் புவனேஸ்வரில் பயணம் செய்யும் ராஜீவ் மறுநாள் விசாகப்பட்டினத்தில் இறங்கி, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து, 21 ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் மரகதம் சந்திரசேகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து, அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் பாண்டிச்சேரி வழியாக மயிலாடுதுறை;  பின்னர் அங்கிருந்து சிவகங்கை;  அதன்பிறகு கிருஷ்ணகிரி;  அங்கிருந்து பெங்களூர் நேரடியாக டெல்லி -என்று பயணத்திட்டம் அமைந்தது.


கொலை திட்டம் தீட்டிக் கொண்டிருந்த சிவராசன் மயிலாடுதுறையில் பகல் நேரத்தில் ராஜீவ் பேசுவதாக அமைந்துவிட்டதால் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.  அதாவது இரவு நேரப் பொதுக்கூட்டம் ஆன ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திலேயே தன் சதியை நிறைவேற்றுவது எளிது என்று முடிவு செய்து கொண்டார்.


விளையாட்டு -5


மரகதம் சந்திரசேகரின் மருமகள் ஒரு இலங்கைப் பெண்மணி. இதுவும் விதியின் விளையாட்டு தானே! இதைத் தெரிந்து கொண்ட சிவராசன்,  அவர் மூலம் காங்கிரஸ் நிதிக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கச் செய்தார்.  அதற்கு நன்றியாக பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு மாலை போடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொள்ளப்பட்டது. 


விளையாட்டு -6


சம்பவ தினத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதி பேசும் கூட்டம் ஒன்று மாலை 4 மணிக்கு நடைபெற அனுமதி பெற்றிருந்தது. ராஜீவ்காந்தி பேசும் கூட்டம் மாலை 6 மணிக்கு என்று தற்செயலாக அமைந்து விட்டது.  குறுகிய கால இடைவெளியில் இரு பெரும் தலைவர்களின் கூட்டம் அமைந்தது, போலீஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய  சவாலாக இருந்தது. அதனால் பெருத்த எண்ணிக்கையில் போலீஸ் படையைக் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் கருணாநிதியின் கூட்டம் ரத்தாகி விட்டதாக உள்ளூர் திமுகவினர் போலீசாருக்குத் தெரிவித்தனர். இதற்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை. ஆனால் இது போலீசாருக்கு ஒருவகையில் நிம்மதியை அளித்தது.  கூடுதலான போலீஸ் படையைக் கொண்டு ராஜீவ் கூட்டத்தை நல்ல முறையில் பாதுகாப்பாக நடத்த முடியும் என்று அவர்கள் கருதினார்கள்.


விளையாட்டு -7 


புவனேஸ்வரில் இருந்து  கிளம்பிய ராஜீவ் மாலை 5 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்தார்.  அவர் கிளம்ப வேண்டிய சென்னை விமானத்தில் கடைசி நேரத்தில் ராடார் கருவி பழுதாகிவிட்டது.  விமானி தன்னால் முடிந்தவரை முயற்சித்தும் பயனில்லை.  பதில் கருவி வந்தால் தான் கிளம்ப முடியும்  என்ற நிலை.  அது விமானியான ராஜீவுக்கும் புரிந்தது. பதிலுக்கு வேறு விமானத்தில் வேண்டுமானாலும் சென்று ஆண்ட்டியின் தொகுதியில் நிச்சயம் பேசியாக வேண்டும் என்று விரும்பினார் ராஜீவ். அது முடியாததால் வேறுவழியின்றி விசாகப்பட்டினத்தில் அரசு மாளிகைக்குப் புறப்பட்டார்.  ஆனால் பாதி வழியில் அவர் இருக்கும்போதே கருவி சரியாகி விட்டதாக  விமானி தெரிவித்ததால் வண்டியைத் திருப்பிக்கொண்டு விமானத்தில் ஏறினார் ராஜீவ்.


விளையாட்டு -8


ஸ்ரீபெரும்புதூரில் எட்டு மணிக்கு வந்திருக்கவேண்டும் ராஜீவ்.  ஆனால் இப்போது பத்து மணி ஆகிவிட்டது.  மக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர்.  கூடவே சிவராசனும்  அவனது சதியாட்களும்.  விசித்திரம் என்னவென்றால்,  ராஜீவ் எத்தனை மணிக்கு விசாகப்பட்டினத்தில் கிளம்புவார் என்ற தகவலே இங்கிருந்த போலீஸ் உயரதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லையாம். ஆனால் சிவராசனுடைய ரகசிய டைரியில் மட்டும் அந்த சரியான நேரம் எழுதப்பட்டிருந்ததாம்! அதேபோல,  ராஜீவ் காந்திக்கு மாலையிட அனுமதிக்கப்பட்டவர்களின்  பெயர்கள் சரியாக பட்டியலிடப்படாமல் ஒரு துண்டுச் சீட்டில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததாம்!  இது விஐபிக்களின்  பாதுகாப்பு பொறுப்பில் இருந்த அதிகாரியின் மோசமான கடமைப் பிறழ்வாகும்! அதை விடவும் மோசம், மாலையிட வந்த யாரையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதிக்க வில்லையாம்!


சதி நிறைவேறியது!


இலங்கைப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பி அதற்கான பணியை முன்னெடுத்த ராஜீவ் காந்தியை, அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழகத்தில் 1991 மே 21ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகள் தீர்த்துக் கட்டியதன் மூலம், உலக அரங்கில் தங்களுக்கு இருந்த ஒரே கடைசி ஆதரவான தமிழ்நாட்டின் ஆதரவை ஒட்டுமொத்தமாக இழந்துவிட்டார்கள். அதன்பிறகு நடந்த முள்ளிவாய்க்காலுக்குத் தங்களைத் தாங்களே பழித்துக்கொள்வதைத் தவிர வேறு யாரையும் காரணிகளாக்க முடியாது.


புலன் விசாரணை அதிகாரி கே. ரகோத்தமன்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ புலன் விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு முக்கிய முடிச்சுகளை அவிழ்த்தவர், ரகோத்தமன். உள்துறை, உளவுத்துறை, மாநில போலீஸ் துறை மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மிக்க தலையீடு ஆகிய  வலைப்பின்னல்களின் நடுவே புகுந்து புறப்பட்டு 'மெய்ப்பொருள் கண்ட'  போற்றுதலுக்குரிய அதிகாரி.  இந்த வழக்கில் தன்னுடைய அனுபவங்களை  ஒரு நூல் வடிவில் ஆதாரப்பூர்வமாக வழங்கியிருக்கிறார் ரகோத்தமன்.  அந்த நூலின் பெயர் : "ராஜீவ் கொலை வழக்கு -  மர்மம் விலகும் நேரம்"  என்பதாகும்.


தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் நவீனத்தன்மையையும், உலகத் தரத்தையும், புத்தகங்களை சந்தைப்படுத்துவதில் புதுப்புது வழிகளையும் அறிமுகப்படுத்திய பத்ரி சேஷாத்ரி அவர்களின் "கிழக்கு பதிப்பகம்" 2009 இல் வெளியிட்ட  நூல் இது. 232 பக்கம் , அப்போதைய விலை 100 மட்டுமே.


(அந்த ஒருவரை மட்டும் விடுதலை செய்தது சரியா, அவரோடு தண்டனை பெற்ற மற்றவர்களையும் விட்டுவிடலாமே- என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. நாட்டின் தலைவரைக் கொன்றவனுக்கு, ஒரு தியாகிக்குத் தரும் வரவேற்பை அரசியல் சட்டத்திற்கு உடன்பட்டு நடப்பதாக சத்தியப் பிரமாணம் செய்த அரசியல் குழுவினரே தருவது சட்ட விரோதம் அல்லவா என்று இன்னொரு தரப்பு - இது தான் நாட்டில் பெரும்பகுதி- கொந்தளிக்கிறது.  யார் மீதும் பழியில்லை, எல்லாம் விதியின் விளையாட்டு என்று இரு தரப்புமே அமைதியடையட்டும் என்பதற்காகவே ரகோத்தமனின் புத்தகத்தை அலசி ஆராய்ந்து இக்கட்டுரையை எழுதினேன். இனிமேலாவது இந்த நூலில் அவர் கூறியிருக்கும்  முக்கிய ஆலோசனைகளை அரசு அதிகாரிகள் சார்பு மனப்பான்மை  இல்லாமல் செயல்படுத்தவேண்டும், அதன்மூலம் நாட்டின் அரசியல் தலைவர்களின் உயிர்களுக்கு முறையான, மேம்பட்ட, தவறிப்போகாத, பாதுகாப்பை வழங்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.)


  -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

10 கருத்துகள்:

  1. சிறப்பான தொகுப்பு ஐயா!.. அன்றைய நிகழ்வுகள் பலவும் நினைவுக்கு வந்து சென்றன..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா23 மே, 2022 அன்று 11:17 AM

    இந்தப் புத்தகம், கார்த்திகேயனின் புத்தகம் மற்றும் இன்னும் சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். விடுதலைப்்புலிகள் முழுமையாகத் துடைக்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரக் குடியினராகவேண்டும் என்ற விதி இருக்கும்போது யாரைக் குறை சொல்ல?

    பதிலளிநீக்கு
  3. விதியின் விளையாட்டுதா. ஆன்டி அவர்களுக்காகப் பேச வேண்டும் என்று நிர்பந்தம், விமானத்தில் பழுது, அதன் பின் சரியாதல் மறுநாள் என்றிருந்திருந்தால் கூட நடந்திருக்காதோ? சரியானாலும் அடுத்து கூட்டத்தில் பரிசோதனை இல்லாமை இப்படி ஒவ்வொன்றாய் அவருக்கு எதையோ மறைமுகமாக உணர்த்தியிருந்தாலும், அவர் தன் பயணத்தைத் தொடர்ந்திட, விதி எப்போதும் தன் காரியத்தை சாதிக்க இப்படிச் சிலருக்கு அனுகூலமாகச் செயல்பட்டு தன் காரியத்தை நடத்திவிடும்தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. விதி என்று எவ்வளவு எளிதாகச் சொல்லிக் கடந்துவிட முடிகிறது இல்லையா?

    நீங்கள் சொல்லியிருக்கும் விதம் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது. வேறொரு புலன்விசாரணை அதிகாரியும் புத்தகம் எழுதியிருக்கிறார் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், டி ஆர் கார்த்திகேயன் 'ராஜீவ் காந்தி படுகொலை- புலனாய்வு" என்ற பெயரில் ராதா வினோத் ராஜு என்பருடன் இணைந்து எழுதிய புத்தகம் -கலைஞன் பதிப்பக வெளியீடு.

      நீக்கு
  5. அவரின் இறப்பிற்கு பின் பயனடைந்தவர்கள் (யார் யாருக்கு என்னென்ன பதவிகள் கிடைத்தன, கட்சி இணைப்பு என பல - முக்கியமாக இன்று வரை) என்பதை அறிந்தால், ஒரு தீவிரவாத இயக்கத்தை அறியலாம்...

    பதிலளிநீக்கு
  6. விதி அவரை எப்படியும் அங்கு சென்றே ஆகவேண்டும் என்று துரத்தி இருக்கிறது.  வேறென்ன சொல்ல?  என்னிடம் இவர் புத்தகமும், கார்த்திகேயன் புத்தகமும், திருச்சி காங்கிரஸ் எம் பி - சட்டென பெயர் நினைவுக்கு வரவில்லை - எழுதிய புத்தகமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு நூல் அறிமுகம். விதம் விதமான அரசியல் விளையாட்டு….. ஒரு மனிதரை இப்படி இறக்கச் செய்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் கொடுமையான ஒரு சம்பவம். ராஜீவ் காந்தி படுகொலை நடந்த பிறகு துக்ளக் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் இந்த படுகொலை நடக்கும் முன் கேரளாவில் ஒரு கோவிலில் பிரசஸ்னம் பார்த்த பொழுது ராஜீவ் காந்திக்கு மிகவும் மோசமான நேரம் என்றும் அவர் தென்னிந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் வந்ததாம். அந்த செய்தி ராஜீவின் கும் அனுப்பப்பட்டதாம். ஆனால் ராஜீவ் அதை அலட்சிய பண்படுத்தி தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டார் என்று தகவல்கள் இருந்தன. எழுதிச் செல்லும் விதியின் கைகள் சென்று கொண்டேதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு