சனி, ஜூன் 20, 2020

பொன்னித் தீவு-19 (நிறைவுப்பகுதி)

பொன்னித் தீவு-19

      -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்     

  முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(19) நெக்லஸ்.நெக்லஸ்

வாசுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையின் உரிமையாளரோ,   அல்லது வாடிக்கையாளர்கள் யாராவதோ பாம்பைப்  பார்த்து விட்டால் போதும், உடனே தாவிப் பிடித்து, நாலு காசு பார்த்து விடலாம். ஆனால் ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. நேரம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அந்தப் பாம்பு அசையாமல் அதே இடத்தில் இருந்ததே ஆச்சரியம்தான்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக ஆப்பிள் பழங்கள் இருந்த இடத்திற்குப் போன வாசு, யாரும் கவனிக்காத விதமாக, தலையைக் கீழே குனிந்து கொண்டு “ஐயோ, பாம்பு! பாம்பு!”  என்று அலறினான். அத்துடன் ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கருவேப்பிலைக் குவியலின் மீது யாரும் அறியாதபடி வீசினான்.

அவ்வளவுதான், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடலானார்கள். அதுதான் சாக்கு என்று வாசு ஓடிச்சென்று தன்னுடைய பாம்பைத் தானே கெட்டியாகப் பிடித்து வெளியே எடுத்தான். அதற்குள் கடை உரிமையாளர் ஓடி வந்தார். வாசுவின் கையில் பாம்பைப் பார்த்தவுடன் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது.

"யாரப்பா நீ?  உனக்கு பாம்பு பிடிக்கத் தெரியுமா? சரி சரி, உடனே வெளியே போ" என்று பின்வாசல் வழியாக அவனை முன்னே தள்ளிக்கொண்டு, தான் பின்னே போனார். பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது போதாதா வாசுவுக்கு?

கடவுள்தான் காப்பாற்றினார் என்று மிகுந்த சந்தோஷத்துடன் “ரொம்ப நன்றிங்க! நல்லவேளை நான் ஆப்பிள் வாங்க வந்தேன். இந்தப் பாம்பைப்  பிடிச்சேன். இல்லாவிட்டால் எந்தக் குழந்தையை  இது கடித்திருக்குமோ, என்ன ஆகியிருக்குமோ?" என்று மிகவும் கவலை கொண்டவன் போலப் பேசிவிட்டு வேகமாக நடையைக் கட்டினான்.

ஒரு முள் புதரில் பதுக்கி வைத்திருந்த தன் பாம்புக் கூடையை எடுத்து அப்பாம்பை அதில் அடைத்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன் தாயிடம்,"அம்மா பாம்புக்கு மாஸ்க் போட மாட்டாங்களா?"  என்றான்.

***

கையில் மாம்பழங்களுடன் செம்பகமும் அகிலாவும் யமுனா வீட்டினுள் நுழைந்தார்கள். பாம்பு களேபரத்தில் தனக்கு வேண்டிய கறிவேப்பிலையை எடுக்க மறந்த ஆச்சி, தன் பங்குக்குச் சில மாதுளம் பழங்களை வாங்கி வந்திருந்தார். செல்வம் அனைவரையும் வரவேற்றான். ராஜா வாசலிலேயே நின்று கொண்டான்.

வாய் பேச முடியாத செம்பகம், தன் முக பாவத்தின் மூலமும் சைகையின்  மூலமும் யமுனா கருவுற்றிருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகத்  தெரிவித்தாள்.

அகிலா தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக யமுனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். "அக்கா, நீங்கள் அம்மா வீட்டுக்குச் செங்கல்பட்டுக்குப் போகும்வரையில் உங்களை வாரம் ஒருமுறை நான் வந்து கவனித்துக் கொள்வேன்" என்றாள்.

"ரொம்ப நன்றி அகிலா" என்றான் செல்வம்.

கொஞ்ச நேரத்தில் சந்திரனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். தன்னை எதற்காக அகிலா  வரச்சொன்னாள் என்று அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. ஆச்சியும் இருப்பதைப் பார்த்தவுடன் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் இருந்தது. அதேசமயம், நெக்லஸ் விஷயத்தில் தனக்கு எந்த இலாபமும் ஏற்படவில்லை என்பதால் பழி சுமக்கும் வேலையும் தனக்கு இருக்காது என்று நம்பினான்.

அவனை விடவும் அகிலாவின் நெஞ்சம்தான் குற்ற உணர்வால் குறுகுறுத்துக்கொண்டிருந்தது. யமுனாவின் நெக்லஸை பாரஸ்மல்லிடம் விற்றவள் அவள்தானே! இப்போது பணம் தன்னிடம் இருக்கிறது; ஆனால் அந்த நெக்லஸை பாரஸ்மல் யாருக்கோ விற்றுவிட்டாராமே!

அகிலா எழுந்து உள்ளே போனாள். அனைவருக்கும் யமுனா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோளில் கை வைத்து, "அக்கா ஒரு விஷயம் உங்களிடம் பேச வேண்டும், வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று குசுகுசுத்த குரலில் கூறினாள்.

பெரிய பாத்திரத்தில் டிகாக்ஷனில் பாலைக் கலந்து சர்க்கரை போட்டு ஆற்ற ஆரம்பித்த யமுனா, அகிலாவை உற்றுப்பார்த்தாள்.

"அக்கா,  உங்கள் நெக்லஸ்  தொலைந்து விட்டதாமே, உண்மையா?" என்று கேட்டாள்.

யமுனாவின் முகத்தில் சற்றுமுன்வரை இருந்த மகிழ்ச்சி மறைந்து ஆழமானதொரு வருத்தம் படரத்தொடங்கியது. ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

அதற்குள் அங்கு வந்த செல்வம், "இவள் போய் போலீசில் புகார் வேறு செய்திருக்கிறாள். அவர்கள் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாக என் மாமனார் வந்து விஷயத்தை முடித்து வைத்தார்" என்றான்.

முழு கடப்பாரையைச் சோற்றில் வைத்து விழுங்கும் திறமைசாலியான ஆச்சி, "அப்படியில்லை செல்வம்! புஷ்பா வந்தபோது நான்தான் அவளிடம் பேசி, கொடுப்பதைக் கொடுத்து விஷயத்தை முடித்தேன்" என்றார். யமுனாவும் ஆம் என்று தலையசைத்தாள்.

"அப்படியா ஆச்சியம்மா?" என்று கிண்டலாகக் கேட்டான் சந்திரன்.

ஒருவேளை,  தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று ஆச்சிக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்வதற்காக, "அது ஒரு பெரிய கதை! நீ படிக்கிற பையன், உனக்கு  ஏன் அதெல்லாம்?" என்று கண்டித்தார்.

யமுனா அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். தானும் காப்பி  டம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

அகிலாவும் செம்பகமும் தன்னிடம் மாம்பழங்களைக் கொடுத்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி தெரிவித்தாள்.

ஆனால் ராஜா, "மேடம் அதற்குள்ளாகவே நன்றி சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

செம்பகமும் சைகையால் அதையே சொன்னாள். அவள் கையில் சிறிய துணிப்பை இருந்தது.

அகிலாவும் யமுனாவைப் பார்த்து,"ஆமாம் அக்கா, எனக்காகவும் நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும். ஒரு விஷயம் இருக்கிறது" என்று தன் கைப்பையைக் காட்டினாள்.

செல்வம் ஆச்சரியத்துடன் அகிலாவையும் செம்பகத்தையும் மாறிமாறிப் பார்த்தான்.

அகிலா முந்திக் கொண்டாள். "செல்வம் சார்! தொலைந்துபோன நெக்லஸைக்  கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அது பணமாக மாறி விட்டது" என்று தன் கைப்பையிலிருந்து ரப்பர் பேண்ட் போட்ட ரூபாய் நோட்டுக் கற்றையை வெளியே எடுத்தாள்.

உடனே ராஜா, "அது எப்படி முடியும்? அந்த நெக்லஸ் கொஞ்சமும் அலுங்காமல் நசுங்காமல் என்னிடம் இருக்கிறதே!" என்றான்.

யமுனாவும் செல்வமும் சந்தோஷ மிகுதியால் இவர்கள் பேசுவதை ஆர்வத்தோடு கேட்க முற்பட்டார்கள். ஆனால் ஆச்சியோ, தன் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் உணர்ந்தவராக, சந்திரனைக் கூப்பிட்டு, "ஒரு பத்து நிமிடம் என் வீட்டுக்கு வந்து போயேன்! சுவர்க் கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற வேண்டும்" என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்.

யமுனாவின் நெக்லஸ் ராஜாவிடம் இருப்பதான செய்தியைக் கேட்டதும் அகிலாவுக்குப் புல்லரித்தது. "ராஜா நீங்கள் சொல்வது உண்மையா? பாரஸ்மல் லிடமா வாங்கினீர்கள்?" என்றாள் மகிழ்ச்சியுடன்.

ராஜா விஷயத்தை விளக்கினான். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் புரிந்த சேவைக்காகத் தன் கம்பெனி கொடுத்த பரிசுத் தொகையில் அந்த நெக்லஸை வாங்கி, செம்பகத்தின் ஒரே நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியதைச் சொன்னான்.

செம்பகம் ஒரு பேப்பரை எடுத்து "ஆமாம் அகிலா! யமுனா அக்காவின் நெக்லஸைத் தான் அவர் எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்" என்று எழுதிக்காட்டினாள்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது அகிலாவுக்கு. தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக் கற்றையை ராஜாவிடம் கொடுத்தாள்.

"ராஜா, தயவுசெய்து இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நெக்லசை என்னிடம் கொடுங்கள். மேற்கொண்டு பணம் தேவை என்றாலும் நான் தந்து விடுகிறேன். இது யமுனாவுக்குச் சேரவேண்டியது" என்று பணிவோடு கூறினாள்.

ராஜாவும் செம்பகமும் சிரித்தார்கள். "நாங்களும் அதற்காகத்தான் வந்திருக்கிறோம். இதை மிஸ்டர் செல்வம் ஒரு மார்வாடி இடம் அடகு வைத்திருந்தார். பிறகு அவருக்கே விற்றுவிட்டார். அதைத்தான் நான் பணம் கொடுத்து வாங்கி வந்தேன். இது செல்வம் வீட்டு நெக்லஸ் தான்" என்றான்.

"ஆனால் இந்த நெக்லஸைத் திருப்பிக் கொடுப்பதற்காக எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாம்" என்று அவன் சொன்னதும் அகிலா ஆச்சரியத்துடன் யமுனாவைப் பார்த்தாள்.

தனக்குத் தெரியாமல்  நெக்லஸை அடகு வைக்கும் அளவுக்குத் தன் கணவனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்திருக்க முடியும் என்று யமுனா திகைத்தாள். இது ஒன்று மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது நகைகளையும் அடகு வைத்து இருக்கிறானா என்று அவநம்பிக்கை எழுந்தது.

செல்வம் துடித்துப் போனான். "மிஸ்டர் ராஜா! வார்த்தையை அளந்து பேசுங்கள். நான் எதற்கு என் வீட்டு நகையையே திருடி அடமானம் வைக்க வேண்டும்? என்ன உளறல் இது?" என்று அவனை அடிக்கவே போய்விட்டான்.

உடனடியாக அவன் அருகில் வந்து சமாதானப்படுத்தினாள் அகிலா. "இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!" என்று கூறி நிறுத்தினாள்.

அப்போது சந்திரனும் ஆச்சியும் வந்து சேர்ந்தார்கள்.

நிச்சயம் தன்னுடைய பெயரைத்தான் சொல்லப் போகிறாள் என்று ஆச்சி நடுநடுங்கி விட்டார். நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. சந்திரனும் அச்சத்தில் ஆழ்ந்தான்.

"மனிதனும் மிருகமும் சேர்ந்த செய்த காரியம் இது" என்று சிரித்தாள் அகிலா.

"ஆமாம் யமுனா! மொட்டைமாடியில் நானும் சந்திரனும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குரங்குப் பட்டாளம் நிறைய வீடுகளில் இருந்து பல சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து போட்டது. அதில் இந்த நெக்லசும் ஒன்று. அதனால் இதை யாருடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? யார் வேண்டுமானாலும் தங்களுடையது என்று கூறலாமே! ஆகவே உண்மையைக்  கண்டுபிடிக்கும் வரை என்னிடமே இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டேன்" என்று அகிலா முடித்தவுடன் ஆச்சி மறுஉயிர்  பெற்றவர் போலத் தெம்புடன் நெற்றியைத் துடைத்துக் கொண்டார். சந்திரனும் அதுபோலவே உணர்ந்தான். எப்படியும் அகிலா தன்னை காட்டிக் கொடுக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.

அதன் பிறகு நடந்ததை எல்லாம் வரிசையாகச் சொன்னாள் அகிலா. ஓர்  ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி கட்டணம் செலுத்துவதற்காக நகையை வைத்து பணம் பெற்றதையும், தகப்பனாரிடம் இருந்து பணம் வந்தவுடன் அதை மீட்டு விடலாம் என்று இருந்ததையும் ஆனால் மேற்கொண்டு செலவு ஏற்பட்டபோது நகையை விற்றுவிட நேரிட்டதையும் வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அந்தப் பெண் தொழிலாளிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளை ராஜாவின் கம்பெனி முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டதால், அந்தப் பணத்தை இப்போது யமுனாவுக்குக் கொடுப்பதற்காகவே இங்கு வந்ததாகவும் அகிலா கூறினாள்.

செல்வத்துக்கு மட்டுமல்ல ராஜாவுக்கும் இந்த விஷயம் இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. ஒரு திருட்டுப் பழியைத் தன்மேல் சுமந்துகொண்டு அகிலா மனத்தாலும் தொழில் திறமையாலும் மீராபாய்க்கு  ஆண் குழந்தை நலமாகப் பிறப்பதற்குக் காரணமாக இருந்ததை எண்ணும்போது அவனுக்கும் செம்பகத்திற்கும் கண்கள் பனித்தன.

"ஆனால் இந்த நெக்லஸை உங்கள் பணத்திற்கு நாங்கள் விற்பதாயில்லை. அப்படித்தானே செம்பகம்?" என்று மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான் ராஜா. அவளும் ஆமாம் என்பதுபோல் மலர்ச்சியோடு சிரித்தாள்.

தன்மேல் வரவிருந்த பழி எப்படியோ விலகிப் போனதை அறிந்த ஆச்சி, நெக்லஸ் விஷயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று துடித்தார். 

"ஏன் அப்படிச் சொல்கிறாய் செம்பகம்? உன் கணவர் எவ்வளவு ரூபாய்க்கு இந்த நெக்லஸை மார்வாடியிடம் இருந்து வாங்கினாரோ,  அந்தப் பணத்தை அகிலாவிடம் இருந்து நீ வாங்கிக் கொள்ள வேண்டும் தானே! அதில் என்ன சிக்கல்?" என்றார் ஆச்சி.

"சிக்கல் இதுதான் ஆச்சியம்மா! இந்த நெக்லஸை யமுனா அக்காவுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரிசாக அளிக்கப்போவதாகச் செம்பகம் முடிவு செய்திருக்கிறாள்" என்று ராஜா சொன்னவுடன் அங்கிருந்த அனைவர் முகத்திலும் நம்ப முடியாத ஆச்சர்யம் தோன்றியது.

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னுடைய நெக்லஸ் தன்னிடம் வந்து சேர்ந்தால் போதும் என்று தோன்றியது. தன்  கணவன்மீது  எந்தக் குற்றமும் இல்லை என்பதே அவளுக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது. 

ராஜா கூறினான்: "செல்வம் சார்! நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எப்போதும் மற்றவர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள். இந்தக்  கொரோனா காலத்தில் எங்கள் கம்பெனியில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நான் செய்த மனப்பூர்வமான சேவைக்காக கம்பெனி எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறது. அதில்தான் இந்த நெக்லசை வாங்கினேன்.

"ஆனால் இந்த நெக்லஸ் வந்த சில நாட்களிலேயே கடவுள் எங்களுக்கு இன்னொரு பரிசையும் கொடுத்துவிட்டார். ஆகவேதான் அந்த இரண்டாவது பரிசை நாங்கள் வைத்துக்கொண்டு,  முதல் பரிசை யமுனா அக்காவிற்கே கொடுத்து விடுவது என்று முடிவு செய்தோம்" என்றான்.

யமுனா, செம்பகத்தின் நல்ல மனதை அப்போதுதான் புரிந்து கொண்டவளாக, அருகில் வந்து அவளைக் கட்டிக்கொண்டாள். "செம்பகம், அந்த இரண்டாவது பரிசு என்னவென்று சொல்ல மாட்டாயா?" என்றாள்.

"போங்க அக்கா" என்று சொல்வதுபோல் செம்பகத்தின் உதடுகள் அசைந்தன. முகத்தில் நாணம் படர்ந்தது. உடனே அதைப் புரிந்துகொண்ட ஆச்சி, "அப்படியா விஷயம்? கள்ளி! நீ உண்டா யிருப்பதைச் சொல்லவே இல்லையே!" என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினார்.

செம்பகம் தன் பையிலிருந்து நெக்லஸை எடுத்து யமுனாவிடம் கொடுத்தாள். அவள் அதை செல்வத்திடம் கொடுத்தாள்.

அகிலா முடியவே முடியாது என்பது போல் தலையை ஆட்டினாள். "இந்தப் பணம் அந்த நெக்லசுக்கான விலை. இதை  ராஜா பெற்றுக் கொண்டே ஆகவேண்டும்" என்று அவன் கையில் திணித்தாள்.

"ஆமாம் ராஜா! உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கிறது. கடவுள் உனக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தில் புது நெக்லஸ் வாங்கிச் செம்பகத்துக்குப் போடு!" என்று முடித்து வைத்தார் ஆச்சி.

குடியிருப்பு சங்கத்தின் செயலாளரான ஹரிகோபால் செல்வத்தோடு பேசுவதற்காக வந்தவர், இதுவரை நடந்த சுவாரசியமான உரையாடலை கவனித்துக்கொண்டிருந்தார்.  "ராஜா செல்வம் நீங்கள் இரண்டு பேரும் செய்ய வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் நாளை வியாழக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு போய் ஒரு வடை மாலை சாத்தி விடுங்கள். இல்லையென்றால் இந்த நெக்லஸை ஞாபகம் வைத்துக்கொண்டு மறுபடியும் அந்த ஆஞ்சநேயர் நம் குடியிருப்பில் ஏதாவது விளையாட ஆரம்பித்து விடுவார்" என்றார்.

எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

செல்வம் தன் கையாலேயே நெக்லஸை யமுனாவுக்கு அணிவித்தான். "இனிமேலாவது ஜாக்கிரதையாக இரு" என்றான்.

சந்திரன் சற்றே சத்தமாக "யாராவது உடனே ஐந்நூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். "நாளைக்கு வடைமாலை என்றால் இன்று போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டாமா?"

செம்பகம் கருவுற்றிருப்பதை அறிந்த வக்கீல் மாமிக்கு அளவற்ற சந்தோஷம். அகிலாவைப் பார்த்து, "நீ எம்பிபிஎஸ் முடிப்பதற்குள்ளேயே கைராசியான டாக்டர் ஆகிவிடுவாய் போலிருக்கிறதே! வாரம் ஒரு முறை யமுனாவைப் பார்க்க வரும்போது செம்பகத்தையும் பார்த்துவிடவேண்டும், சரியா?" என்றார்.

அகிலாவின் முகத்தில் சம்மதப்  புன்னகை மிளிர்ந்தது.

(முற்றும்)

வெள்ளி, ஜூன் 12, 2020

பொன்னித் தீவு-18

பொன்னித் தீவு-18

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்                                              முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(18) வாசு வாசு

தன் பெயரை வாசு என்று மாற்றிக்கொண்ட பிறகு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வந்துவிட்டதாகவே தோன்றியது சுள்ளானுக்கு.

இருக்காதா பின்னே? வாசு என்ற பெயரில் தன் தொழிலைத் தொடங்கிய அன்றே அவனுக்கு ஆயிரம் ரூபாய் முதல் வருமானம் கிடைத்துவிட்டதே!

அவனுடைய மூலதனம் மூங்கிலால் செய்யப்பட்ட  இரண்டு வட்ட வடிவப்  பெட்டிகள்  மற்றும் ஒரு சாக்குப்பை, கொஞ்சம் கயிறு. அவ்வளவே.  பாம்பு பிடிப்பவனுக்கு வேறென்ன வேண்டுமாம்?

பாம்பின் வாலைப் பிடித்துக்கொண்டு,  இலாவகமாக அதன் தலையை மூங்கில் பெட்டியின் மேல்மூடியினால் மெல்லத் தட்டினால் அது கொஞ்சம் எதிர்த்துவிட்டு அடுத்த கணம் பெட்டியின் அடிப்பகுதியில் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துவிடும். தானாகப் பெட்டியைவிட்டு எழாது.

இரண்டு பாம்புகளுக்குமேல் பிடிக்கவேண்டிய தேவை பெரும்பாலும் இருக்காது என்பதால் அந்த இரண்டு மூங்கில் பெட்டிகளே வாசுவுக்குப் போதுமானதாக இருந்தது.

அன்றைய வருமானத்துக்குக் காரணம் ராஜா தான்.

ராஜா, தன் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஒரு கல்லூரி வளாகத்தில் இருத்தினான் அல்லவா, அங்கு பாம்புகள் உலவுவதாக ஒரு சந்தேகம் எழுந்தது.

நெடுஞ்சாலையில் இருந்து கல்லூரியின் உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரம் அலங்கரிக்கப்படாத இயற்கை மிளிர்ந்துகொண்டிருந்தது. மரங்களும் செடிகளும் சீராகவே நடப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் சில இருந்தன. கல்லூரி விடுதியின் பின்புற எல்லையில் ஒரு நீண்ட வயல்பரப்பு இருந்தது. எலிகளைப்  பிடிக்க வரும் பாம்புகள் சிலநேரம் கல்லூரிக்குள்ளும் எட்டிப்பார்ப்பதுண்டு. மாலையில் கல்லூரி முடிந்ததில் இருந்து, காலையில் கல்லூரி திறக்கும்வரை மனித நடமாட்டம் குறைவு என்பதால் பாம்புகள் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருந்தன.

உள்ளூர்ப் பாம்புகளுக்கு ஆங்கிலம் தெரியாததாலும், பொறியியல் படித்தால்  சரியான வேலை கிடைக்காது என்பதாலும்தான் பாடம் நடக்கும் நேரத்தில் பாம்புகள் வருவதில்லை என்று விடுதி  மாணவர்கள்  நம்பினார்கள்.

தன்னுடைய தொழிலாளர்களின் நலத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்த ராஜா, தனக்குத் தெரிந்த ஒரு குடியிருப்பில் வழக்கமாகப் பாம்பு பிடிப்பவனான  வாசுவை அழைத்து வந்தான். 

பாம்பு பிடிக்கும் தொழிலில் வாசு மூன்றாவது தலைமுறையாளன். ஆகவே, சில மணி நேரத்திலேயே அலைந்து திரிந்து ஐந்து பாம்புகளைப் பிடித்துவிட்டான். அரைநாள் வேலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டான். “கொரோனாவால எங்கேயுமே போகமுடியலீங்க. ரெண்டு மாசமா வருமானமே இல்லீங்க. பெரிய மனசு பண்ணிக் கொஞ்சம் போட்டுக்குடுங்க” என்று கெஞ்சினான்.

அத்துடன் பாம்புகள் வராமலிருக்க சில புதர்களையும் அவனே அகற்றிக்கொடுத்தான்.

ராஜா நன்றியுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினான்.

ஐந்து பாம்புகளும் அதிக விஷமில்லாதவை. நீளமும் குறைவு. ஆகவே இரண்டே பெட்டிகளில் அடங்கிவிட்டன. அவற்றை எடுத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு கிளம்பினான் வாசு.

சாலையில் ஒரு தேநீர்க்கடை கூடத்  திறக்கவில்லை. நல்லவேளை சைக்கிளில் வந்த நடமாடும் தேநீர் வியாபாரி கருணை செய்தான். காகித டம்ளர் மிகவும் சிறியதாக  இருந்ததால் மூன்று டம்ளர் தேநீர் வாங்கி அருந்தினான். பெட்டியில் அடங்கியிருந்த பாம்புகள் மனித அரவத்தால் சற்று அசைவதுபோல் இருந்தது. இலேசாகப் பெட்டியைத் தட்டி அவைகளை அடக்கினான். நல்ல வருமானம்  சம்பாதித்த திருப்தியில் ஒரு பீடியைப் புகைக்க ஆரம்பித்தான்.  

அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் போன ஒரு காய்கறி வேனில் இருந்து “டேய் சுள்ளான்!” என்று அழைத்தபடி கீழிறங்கினான் அஜித்மாடன். அவனும் பாம்பு  பிடித்துக்கொண்டிருந்தவன்தான். மாடன் என்ற பெயரை, அஜீத் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தவுடன் ‘அஜீத்மாடன்’ என்று மாற்றிக்கொண்டு முன்னங்கையில் அஜீத்தின் உருவத்தைப் பச்சையும் குத்திக்கொண்டவன். 

இரண்டு பாம்புகளை வைத்துக்கொண்டே மாதம் இரண்டாயிரம், மூவாயிரம்  சம்பாதித்துக்கொண்டிருந்தான் அஜீத்மாடன்.  எப்படியென்றால், ஒரு பாம்பை கலெக்டர் ஆபீஸிலும் இன்னொன்றை அதற்குப் பக்கத்திலுள்ள தபாலாபீஸ் அல்லது பேங்க் போன்ற  இன்னொரு அரசாங்க அலுவலகத்திலும் காலை நேரத்தில் இரகசியமாக விட்டுவிடுவான். அவை தப்பியோடி விடாதபடி அந்த இடத்திலேயே பிள்ளைபெற்ற பூனை மாதிரி அலைந்துகொண்டிருப்பான். காலையில் வாசல் பெருக்கவரும் பெண்களிடம் பேச்சுக் கொடுப்பான். ‘டீல்’ போடுவான்.

அதாவது, அவர்கள் பெருக்குவதை நிறுத்திவிட்டுச் சும்மா நிற்கவேண்டும். முதலில் வரும் அதிகாரியிடம் ‘சார், ஒரு பாம்பு உள்ளே இருக்கு சார்’ என்று பயத்துடன் கூறவேண்டும். அவ்வளவே. அதற்கு இருபது ரூபாய் பரிசு கிடைக்கும். அதிகாரி உடனே தன்னுடைய மேலதிகாரிக்கு போன் போடுவான். அவர் இரண்டாயிரம் வரை ‘சேங்ஷன்’ செய்வார். அடுத்து நகரசபை துப்புரவுத் தொழிலாளர்களின் துணையோடு பாம்பு பிடிப்பவனைக் கண்டுபிடிக்கவேண்டும்.

இங்குதான் அஜீத்மாடனின் மக்கள்தொடர்பு சாமர்த்தியம் வெளிப்படும். பாம்பு விஷயமாக யார் அவனை அழைத்தாலும் பத்து சதவிகிதம் கமிஷன் என்று உறுதிப்படுத்தியிருந்தான். குறைந்தபட்சம் நூறு  ரூபாய். ஆகவே அவர்களே அவனுடைய ‘பிசினஸை’ ரேட் பேசி முடிவெடுத்து, வாங்கியும் கொடுத்துவிடுவார்கள். அதன்றியும், பாம்பைத் தேடுவதாக ஆபீஸ் முழுவதையும் மேல்கீழாக்கி விடுவான். அதை மறுபடிச் சீரமைக்கும் வேலையில் பேரம் பேசும் திறமைக்கேற்ப அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். ‘வாழ்-வாழ விடு’ என்ற உயரிய தத்துவம் அங்கே புலப்பட்டது.

சில சமயம், தான் விட்ட பாம்பை உயிரோடு பிடிக்க முடியாமல் போவதும் உண்டு. அப்போது தொடர்ந்து தொழில் நடத்துவதற்குப் புதிய பாம்புகளைத் தேடிப் பிடித்துக்கொடுக்க சுள்ளான் என்கிற வாசுவின் உதவியை நாடுவான். ஒரு பாம்புக்கு நூறு ரூபாய் கொடுப்பான்.            

திருமணமாகாத சுள்ளானுக்கு அதுவே பெரிய தொகை. ஆனால் மாடனின் மனைவிக்கோ அந்தத் தொழிலே பிடிக்கவில்லை. “ஒரே பாம்பை வைத்து ஊரை ஏமாற்றுகிறாயே, உனக்கு ஒட்டுமா?” என்பாள். “தொழிலை மாற்றுகிறாயா, இல்லை தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு இன்னொருவனுடன் போகட்டுமா?” என்று திமிராகக் கேட்பாள். அவள் அப்பன் கசாப்புக்கடை வைத்திருந்தான். இந்தக் காரணங்களால் அவளை எதிர்க்கமாட்டாமல், காய்கறி வண்டி நடத்தும் வேலைக்குப் போனான் மாடன் என்கிற அஜீத்மாடன்.

“மாடா! என்னை சுள்ளான் என்று கூப்பிடாதே! இப்போது என் பேர் வாசு” என்றான் இவன்.

“அதேதான்! நீயும் என்னை இனிமேல் அஜீத்மாடன் என்றே கூப்பிடவேண்டும்” என்றான் அவன்.

சைக்கிள் தேநீர் வியாபாரி இவர்களின் நட்பான பேச்சைப் பார்த்து, தானாகவே தலா இரண்டு தேநீர் டம்ளர்களை நிரப்பிக்  கொடுத்தான்.    

வாசு தன்னுடைய முதல்நாள் பெயர்மாற்ற அதிர்ஷ்டத்தை அவனுக்கு விளக்கினான். கைவசம் ஐந்து பாம்புகள் இருப்பதாகவும் மாடன் விலைக்கு வாங்கிக்கொள்வானா என்றும் கேட்டான்.

“அந்த கசமாலம் வேலையெல்லாம் செய்யமாட்டேன். நான் இப்போ வெஜிடபிள் மர்ச்சண்ட் ! தெரியுமா?” என்றான் மாடன்.

“சரி, வேறு யாருக்காவது வேண்டுமான்னு சொல்லேன்.”

வாசுவை ஏளனமாகப் பார்த்தான் மாடன். “உன்னைப்போல முட்டாள் யாராவது இருப்பானா? இந்த ஓ எம் ஆர் ரோடில் எவ்வளவு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன! ஒவ்வொன்றிலும் ஒரு பாம்பை விட்டுவிடு. ஐந்தில் இரண்டு பேராவது உன்னைக் கூப்பிடுவார்கள். வாட்ச்மேனோடு டீல் பண்ணுடா!” என்றான்.

பிறகு, “கோயம்பேடு மார்க்கெட்டை இப்போது திருமழிசைக்கு மாற்றிவிட்டார்கள். ரன்னிங் டைம் அதிகம். கத்திரி வெயில் வேறு. காய்கறிகள் வாடிவிடும். நான் வரட்டுமா?” என்று கிளம்பினான். தன்னுடைய புது நம்பரைக் கொடுத்தான்.

கொரோனா காரணமாகக்  குடியிருப்புகளில் மனித நடமாட்டம் அதிகமில்லாததால் வாசுவால் பாம்பை யாருக்கும் தெரியாமல்  விடுவது சிரமமாக இருந்தது. மிகுந்த வெறுப்புடன் நாலு பாம்புகளை ஒரு சாக்கடையில் வீசினான். ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சிந்தித்தபடியே கிளம்பினான்.

கையில் இருந்த பணம் வேறு  அவனை என்னவோ செய்தது. வழியில் திறந்திருந்த ஒரு டாஸ்மாக்கில்  இருநூறு ரூபாயைச் செலவு செய்தபிறகு   புதிய தெம்புடன் நடந்தான்.

அதோ, ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு! அதுதான் யமுனாவின் குடியிருப்பு. ஆயிரம் வீடுகள் இருக்கும். நிறைய தோட்டங்கள், பூஞ்செடிகள், மரங்கள். நடுவில் ஒரு சூப்பர் மார்க்கெட். அந்தக்  குடியிருப்புக்காகவே இயங்கிக்கொண்டிருந்தது. வாசுவுக்கு வழி தெரிந்துவிட்டது.

அந்தக் கடையின் பின்வாசல் அருகே நின்று கவனித்தான். ஊழியர்கள் அதிகம் இல்லை. காய்கறிப் பிரிவு பெரியதாக இருந்தது. எல்லாவிதமான காய்கறிகளும் பழங்களும் குவிந்திருந்தன. கறிவேப்பிலை, கொத்தமல்லி  மற்றும் கீரைகள் ஏராளமாக இருந்தன. ஒரு சன்னலும் திறந்திருந்தது. அதுதான் சரியான இடம் என்று தோன்றியது வாசுவுக்கு. மெல்லப் பாம்பை சன்னல்வழியாக உள்ளே இறக்கிவிட்டான். அது கறிவேப்பிலைக் குவியலுக்குள் போய் ஒளிந்துகொண்டது. மனித வாசனையை நுகர்ந்தால் அது வெளியில் வராது. ஐந்தாறு பெண்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக வந்து முன்வாசலில்  நுழைந்தான் வாசு. ‘தேங்காய் இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொண்டே பாம்பு இருந்த பக்கம் போய் ஓரமாக நின்றுகொண்டான்.

****

கையில் பணத்தைச் சுமந்துகொண்டு அகிலாவும் அந்தக் குடியிருப்புக்கு வந்தாள். இன்று எப்படியும் யமுனாவிடமும் செம்பகத்திடமும் பேசி நெக்லஸ் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணவேண்டும் என்ற உறுதியோடு அவள் இருந்தாள்.         

செல்வத்திடமும் பேசினாள். இன்று முழுவதும் வீட்டில்தான் இருப்பதாகப் பதில் வந்தது. ராஜாவையும் வரும்படி கேட்டுக்கொண்டாள். சந்திரன் முக்கிய சாட்சி என்பதால்  அவனையும் வரச் சொன்னாள்.

யமுனாவுக்கு போன் செய்தபோது அவள் சூப்பர்மார்க்கெட்டில் பழம் வாங்கப் போயிருப்பதாகத் தெரிந்தது. எனவே அகிலாவும், அவளுக்குப் பின்னாலேயே சந்திரனும் அந்தப் பகுதிக்கு விரைந்தார்கள். கர்ப்பிணியாக இருக்கும் யமுனாவை வெறும்கையோடு பார்ப்பது சரியில்லை என்று பழங்கள் வாங்க முடிவு செய்தாள்  அகிலா.

செம்பகமும் அதே காரணத்திற்காகத் தானும் யமுனாவிற்குப் பழங்கள் வாங்க விரும்பினாள்.

கருவேப்பிலைக் குவியலுக்கு அருகில்தான் பழங்கள் விற்கும் பகுதி இருந்தது. விட்டுவிட்டு அந்தக் குவியலில் இருந்து ஏதோ அசைவது தெரிந்தது. ஆனால் யாரும் குறிப்பாகக் கவனிக்கவில்லை.    

வாசு காய்கறிப் பகுதிக்குள் இங்கும் அங்குமாக ஏதோ  காய்களை வாங்கவந்தவன்போல் எடுப்பதும் பொறுக்குவதுமாக  நடித்துக்கொண்டிருந்தான். கடை உரிமையாளர் அந்தப் பக்கம் வரவேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குள் பாம்பு எந்தப்பக்கம் நகருமோ என்று பதற்றத்துடன் இருந்தான். விஷமில்லாத பாம்புதான். ஆனால் மனிதர்கள் சாவது விஷத்தால் அல்லவே, பாம்பென்ற பயத்தினால்தானே!

ஆச்சிக்கு எப்படி மூக்கில் வேர்த்தது என்று தெரியவில்லை. அவரும் கையில் ஒரு பையுடன் அங்கு வந்தார். ஆனால் அவருக்கு அன்று அவசரமாகத் தேவைப்பட்டது கறிவேப்பிலைதான்….

செம்பகத்தையும் யமுனாவையும் அகிலாவையும் அந்த இடத்தில் ஒருசேர பார்த்த ஆச்சி வியப்புடன், “என்னடி கூத்து இது! மூணு பேரும்  இங்க கூட்டம் போடறீங்க!” என்றவர், “நானும் வந்துடறேன். கறிவேப்பிலை மட்டும் எடுத்தா போதும்!” என்று  கறிவேப்பிலையை நெருங்கினார்.

வாசு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கறிவேப்பிலையில் அசைவு அதிகரித்தது.

(தொடரும்) 

                     

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செவ்வாய், ஜூன் 09, 2020

பொன்னித் தீவு -17

பொன்னித் தீவு-17

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்           
                  

 (17) புஷ்பா - யமுனா

முன்னோர்களுக்குத் திதி கொடுக்க இராமேஸ்வரம் போவதென்று புஷ்பாவின் தந்தை விநாயகம் முடிவெடுத்ததுதான் அவளுடைய வாழ்க்கைப் பாதையையே புரட்டிப்போட்டுவிட்டது.

விடியற்காலை இரயிலில் இருந்து இறங்கி, அவசரம் அவசரமாக ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு விநாயகமும் புஷ்பாவும் தங்கினார்கள். ஆறுமணிக்கு வேனில் வந்து அவர்களை தனுஷ்கோடிக்கு அழைத்துப் போவதாக இராமநாத அய்யர் (புரோகிதர்)  சொல்லியிருந்தார். அதற்குள் அரைமணிநேரம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, அறையிலேயே குளித்துவிட்டுக் கிளம்பவேண்டும்.

இங்குதான் ஸ்ரீராமர், மணலால் சிவலிங்கம் பிடித்து, அதற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தாராம். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன தெரியுமா?” என்றார் அய்யர்.

அய்யர் சொன்னபடி, மணலை  எடுத்துக் கடல்நீரைவிட்டுப்  பிசைந்து ஒரு லிங்க உருவை அமைத்திருந்தார் விநாயகம். அய்யர் சொன்ன மந்திரங்களை, அர்த்தம் தெரியாமலும், வார்த்தைகள் புரியாமலும் உச்சரித்தபடி அந்த லிங்கத்திற்கு வில்வமும் பூக்களும் தூவிக்கொண்டிருந்தவர், “தெரியாது சாமி!” என்றார்.

இது கூடத்  தெரியாதா என்பதுபோல அவரைப் பார்த்த அய்யர், “ரொம்ப சிம்பிள்! இங்கு இப்படி ஒரே ஒரு முறை லிங்க பூஜை செய்தால் போதும், இராம பக்தர்களுக்கும் பிரார்த்தனை பலிக்கும், சிவ பக்தர்களுக்கும் பலிக்கும்! அதுதான் விசேஷம்!” என்று விளக்கினார்.

 பூஜை முடிந்தபிறகு தனுஷ்கோடியை விட்டுக் கிளம்பினார்கள். “இராமேஸ்வரம் கோவிலில் ஒன்பது மணிக்கு இருந்தால் போதும். அதற்குள் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, கோவில் வாசலில் என்னுடைய பெயர்ப்பலகை இருக்கும். அங்கு வந்துவிடுங்கள். நாழிக்கிணறுகளில் ஸ்நானம் முடித்துவிட்டு, திதி கொடுத்துவிடலாம். பிறகு நம் வீட்டில் உணவு தயாராக இருக்கும்” என்றார் அய்யர்.          

விடுதியின் அறையை அடைந்தபோது சுற்றுலாத் தலங்களுக்கே உரிய ‘புரோக்கர்’ பட்டாளம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலுடன், அதற்கான வாகனவசதிகள் பற்றிய முழு விவரத்துடன் அவர்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். அப்துல்கலாம் நினைவிடத்தை மறக்காமல் பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைவுபடுத்தினார்கள்.

விதி யாரை விட்டது? அவர்களில் ஒரு நபர் மட்டும் புஷ்பாவிடம் நெருங்கி “வணக்கம் தங்கச்சி! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?” என்று மெதுவாகக் கேட்டார். சுமார் முப்பது வயதிருக்கும். படித்த இளைஞர். பெயர் பூபதி என்று சொன்னார்.   

அதற்குள் விநாயகம், “பிளஸ் டூ முடிச்சிருக்கு. சர்வீஸ் கமிஷனுக்கு அப்ளை பண்ணியிருக்கு” என்றார்.

அவ்வளவுதான், பூபதியின் முகத்தில் தோன்றிய ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தோன்றியது புஷ்பாவுக்கு.

"கவலையை விடுங்கள் சார்! உங்கள் நல்ல காலம்தான் இன்று நீங்கள் இராமேஸ்வரம் வந்ததும்  என்னைப் பார்க்க நேர்ந்ததும்! சர்வீஸ் கமிஷன் போஸ்டிங் எல்லாம் இராமேஸ்வரத்தில்தான் முடிவுசெய்வதாக  வாட்ப்பில் வைரலாகி இருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்றார் பூபதி.  

மேலும் தொடர்ந்தார். “நமக்கு வேண்டிய அண்ணன் ஒருவர், சென்னையில் அரசாங்க டிரைவராக இருக்கிறார். ரொம்ப செல்வாக்குள்ளவர். திமுக வானாலும் சரி, அதிமுக வானாலும் சரி, அவ்வளவு ஏன், பிஜேபி யிலும் கூட அவரால் நமக்கு வேண்டியதைச் செய்துகொடுக்க முடியும். நீங்கள் சென்னையில் இருப்பது வசதியாய்ப் போயிற்று. நீங்கள் ரூமுக்குப் போங்கள். நான் அண்ணனிடம் பேசிவிட்டு  அய்யர் வீட்டுக்கு வந்து மற்ற விஷயங்களைத்      தெரிவிக்கிறேன். ஆனால் ஒன்று, காரியம் முடிகிறவரையில் நமக்குள் இது இரகசியமாக இருக்கவேண்டும்!” என்று கூறிவிட்டு பூபதி அவசரமாகக் கிளம்பினார்.

சடங்குகள் முடிந்து பகல் உணவும் முடிந்து அய்யர் வீட்டு மாமியிடம் மொத்தச்  செலவுக்கும் ‘செட்டில்’ செய்த பிறகு, வெளியில் வந்தனர் விநாயகமும் புஷ்பாவும். பூபதி அவர்களுக்காகக் காத்திருந்தார்.

சில முக்கிய விவரங்களைச் சொன்னார். அதற்கான செலவையும் சொன்னார். விநாயகத்திடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் ஒரு ஏக்கர் புன்செய் நிலம் தரிசாக இருந்தது. “அது  போதுமே! அண்ணனிடம் இப்போதே  பேசுகிறேன்” என்று பூபதி சற்றுத் தொலைவு சென்று அலைபேசியில் பேசினார். பிறகு மகிழ்ச்சியோடு ஓடி வந்தார்.

நீங்கள் சென்னை வந்தவுடன் இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொன்னார் அண்ணன். அநேகமாக இரண்டே மாதத்தில் உங்களுக்கு ஆர்டர் வந்துவிடுமாம்!” என்று உத்தரவாதமளித்தார் பூபதி.

புஷ்பாவுக்குத் தெரியாமல் பூபதியின் கையில் நான்கு ஐந்நூறு ரூபாய்களை  வைத்து அழுத்தினார் விநாயகம்.

ஒரு நல்ல நாளில் போலீஸ் துறையில் உதவியாளராகச் சேர்ந்தாள் புஷ்பா.

விநாயகத்தின் நிலம், அண்ணன் சொன்ன  மகளிர் அணிச் செயலாளர் ஒருத்தியின் பெயரில் கிரயம் செய்யப்பட்டது. மிகுந்த அன்போடு விநாயகத்தின் கையிலும் பத்தாயிரம் ரூபாய் தரப்பட்டது. கைச்செலவுக்கு வேண்டுமல்லவா?

புஷ்பா வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தவளே அல்ல. அதேசமயம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. தூங்குவதிலும்தோழிகளோடு பேசுவதிலும், சினிமா பார்ப்பதிலும் கொஞ்சகாலம் கழித்து விட்டு, திருமணமாகி செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதே அவள் கனவாக  இருந்தது.

இராமேஸ்வரம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதிலும் அவளுக்குப் பிடிக்காத போலீஸ் துறையில் அவளைக் கொண்டு வந்து நுழைத்து விட்டது.

***

"உனக்கு என்னடி புஷ்பா, போலீஸ் துறையில் இருக்கிறாய்! உட்கார்ந்த இடத்திலேயே  ஆயிரக்கணக்கில் வரும்! ரெண்டே வருடத்தில் சொந்த வீடு கட்டி விடுவாய்" என்று பொறாமைப்பட்டாள் தோழி மோகனா. வேலையில்லாதப் பட்டதாரி. (அவள் இதுவரை இராமேஸ்வரம் போனதில்லை.)

எரிச்சலாக வந்தது புஷ்பாவுக்கு. "சொல்லமாட்டாயா பின்னே? ஒரு கிராமத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். இன்ஸ்பெக்டருக்கு நான் தான் டீ போட்டுக் கொடுக்க வேண்டும். சம்பளத் தேதியில் கைமாற்று வேறு வாங்கிக்கொண்டு விடுவார். திரும்பிவராது! நானாவது வீடு கட்டுவதாவது!"

மோகனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். மேலதிகாரிகளைப் பார்த்து நீ 'தொழில்'நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதன்பிறகு பாரேன், மாதமொரு நெக்லஸ் செய்துகொண்டு விடுவாய்" என்று நம்பிக்கை அளித்தாள் மோகனா.

நெக்லஸ் என்றவுடன் 'செல்வம்- யமுனா- ராஜா' என்ற முக்கோணம் புஷ்பாவின் மனதில் நிழலாடியது.

யமுனாவின் புகாரை விசாரிப்பதற்காக அவள் வீட்டுக்குப் போன இன்ஸ்பெக்டர் கண்ணன்திரும்பி வந்து புஷ்பாவிடம், "டைம் வேஸ்ட்! நெக்லஸ் பிரச்சினை தீர்ந்து விட்டதாக யமுனாவின் தகப்பனார் கூறிவிட்டார்" என்று சுரத்தில்லாமல் தெரிவித்திருந்தார்.

அந்தப் பின்னணியில் மோகனாவின் பேச்சைக் கேட்டவுடன் புஷ்பாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல், தானே போய் யமுனாவிடமும் மற்றவர்களிடமும் விசாரணை செய்தால் என்ன? இன்ஸ்பெக்டரும் அப்படித்தானே, மற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமல், தானே சில விஷயங்களைக் கையாள்கிறார்? சில கேஸ்களில் சமரசமும் செய்து வைக்கிறார்?

சும்மாவா வந்தது இந்தப் பதவி? இரண்டு ஏக்கர் நிலம் அல்லவா அதற்கான விலை? அந்தப் பணத்தை எப்படித்தான் மீட்பது?

***

கதவைத் திறந்த யமுனாவுக்குப் புஷ்பாவைக் கண்டதும் ஆச்சரியம் மட்டுமல்ல,  அதிர்ச்சியாகவும் இருந்தது. அன்று போலீஸ் ஸ்டேஷனில் சாதாரண உடையில் இருந்தவள், இன்று போலீஸ் யூனிபாரத்தில் வந்திருந்தது யமுனாவுக்குச் சற்றே பயத்தையும் ஊட்டியது.

அந்த நேரம் பார்த்து அவளைத்தவிர யாருமே வீட்டில் இல்லை. பரமசிவமும் பார்வதியும் அதே குடியிருப்பில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். செல்வம், அவசரமாக அழைக்கப்பட்டு அவனுடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.

வாங்க புஷ்பா!” என்று அவளை அமரச் செய்த யமுனா, “என்ன குடிக்கிறீர்கள்? டீயா இல்லை ப்ரூ காப்பியா?” என்றாள்.

சற்றே மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றைப் பார்த்து விஷயத்தை ஊகித்தவளாக, “விசேஷம் போல் இருக்கிறதே! கங்கிராஜுலேஷன்ஸ்!” என்ற புஷ்பா, “எனக்குக் காப்பிதான் பிடிக்கும்” என்றாள்.  

வெட்கம் கலந்த புன்னகையைப் பதிலாக அளித்த யமுனா இருவருக்கும் காப்பி கொண்டுவந்தாள். அருந்தியபின் புஷ்பாவிடம் “நீங்களும் போலீஸ் உமனா? நான் யாரோ என்று இருந்தேன்” என்றாள்.

அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள் புஷ்பா. “அதிருக்கட்டும், உங்கள் கணவர் இல்லையா?” என்றாள்.

ஒருமாதமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் தான், இன்றுதான் அவசர வேலையாக ஆபீஸ் போயிருக்கிறார்.”

நல்ல சமயம், இதை நழுவ விடாதே என்று புஷ்பாவின் உள்மனது சொன்னது. எழுந்து நின்றாள்.

சரி, விஷயத்துக்கு வரட்டுமா?  நெக்லஸ் தொலைந்துபோனது பற்றி புகார் கொடுக்க வந்தீர்களேஅப்புறம் என்ன ஆயிற்று? உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?”     

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நெக்லஸ் இன்னும் கிடைக்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால், தன்  கணவரை அழைத்து இவள் விசாரிக்கக்கூடும். கிடைத்துவிட்டதென்று பொய் சொல்வதற்கும் துணிச்சல் வரவில்லை.

அன்றைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அப்பாவிடம்தான் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு எல்லா விஷயமும் தெரியுமே” என்று விட்டேற்றியாகப்  பதில் கூறினாள்.

இப்போது புஷ்பாவுக்கு இலேசான பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை இன்ஸ்பெக்டரே இந்த வழக்கை ‘ஒருவாறு’ முடித்துவிட்டிருந்தால், தான் வந்து போனது அவருக்குத் தெரிந்துவிட்டால் பிரச்சினையாகிவிடுமே!

ஆமாம், ஆனால் கேஸை நாங்கள் முடிக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் கேட்கிறேன். நெக்லஸ் ஒன்றுதான் காணாமல்போனது என்றும் அதுவும் கிடைத்துவிட்டது என்றும் நீங்கள் ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எங்கள் வேலை முடிந்துவிடும். அதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பினார்” என்று சமாளித்தாள் புஷ்பா.

ஒரு நிமிடம்” என்று பால்கனிக்குப் போனாள் யமுனா. “இந்தப் பாழாய்ப்போன குடியிருப்பில், பால்கனியில்தான் டவர் கிடைக்கிறது”  என்றபடி அப்பாவுக்குப் போன் செய்தாள்.

மணியொலிப்பது கேட்கிறது, ஆனால் எடுப்பாரில்லை. மீண்டும் முயற்சித்தாள். அப்போதும் பலனில்லை.             

அப்பா வரும்வரை உட்காருங்களேன். அவரில்லாமல் நான் எதுவும் எழுதித்தர இயலாது” என்றாள் யமுனா.

தன் நிலைமையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாத புஷ்பா, “இல்லை யமுனா! நான் இன்னும் மூன்று கேஸ்களை விசாரிக்கவேண்டும். நேரமில்லை. சரி, நாளை வருகிறேன். உங்கள் கணவரை விசாரித்தே ஆகவேண்டும்” என்று மிடுக்கோடு கிளம்ப எத்தனித்தாள்.

அவரை ஏன் விசாரிக்கவேண்டும்? இன்ஸ்பெக்டரே கேஸ் முடிந்துவிட்டதாகக் கூறினாரே!” என்று தயக்கத்தோடு சொன்ன யமுனாஅவள் வெளியே போகாதபடி கதவருகில் நின்றுகொண்டாள்.

அந்தநேரம் பார்த்துதானா ஆச்சி வரவேண்டும்!

வாங்க போலீஸ்காரம்மா! நெக்லஸ் விஷயமா வந்தீங்களா? செல்வம் சார்கிட்டப் பேசினீங்களா?” என்று எடுத்துக்கொடுத்தார் ஆச்சி.

இவர் யார் என்பதுபோல் ஆச்சியைப் பார்த்தாள் புஷ்பா. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஆச்சி, “ஒரு நிமிஷம் இரும்மா!” என்று சமையல் அறைக்குள் நுழைந்து யமுனாவுக்குக் கண்சாடை காட்டினார்.

பிறகு மெல்லிய குரலில், “இங்க பாரு, இந்த போலீஸ்காரங்க இப்படித்தான் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டே  இருப்பாங்க. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் வந்தாரு, இன்னிக்கி  இவளை மட்டும் அனுப்பியிருக்காருன்னா காரணம் புரியல்லியா ஒனக்கு?” என்று யமுனாவைக் கேட்ட ஆச்சி, மெல்லிய குரலில், “ஒரு ஐந்நூறு இருந்தால் குடுத்து அனுப்பிடலாம். விஷயம் முடிந்துவிடும். இல்லாட்டி ஒங்க வீட்டுக்காரர் கம்பெனிக்கே போய் விசாரிக்கணும்னு நிப்பாங்க! எவ்வளவு அசிங்கம் பாரு!” என்றார்.

ஐந்நூறு கைமாறியது. “இதெல்லாம் எதுக்குங்க” என்று நாணத்தோடு கேட்பதுபோல் கேட்டாலும், கொடுத்ததை வாங்கிச் சட்டையின் உள்பையில் பத்திரமாக அழுத்திக்கொண்டாள் புஷ்பா.

ஒன்றும் இல்லாத விஷயத்துக்கே ஐந்நூறு ரூபாயா என்று அதிசயித்தாள். மனம் மோகனாவுக்கு நன்றி சொன்னது. அடுத்த விசிட் எங்கே போகலாம் என்று மனதிற்குள் தேடலானாள்.

மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு ஆச்சி யமுனாவிடம் இரகசியமாகக் கூறினார்: “இதையெல்லாம் உன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிராதே! இவரைத் தெரியும் அவரைத் தெரியும் என்று விஷயத்தைப் பெரிதாக்கிவிடுவார். அப்புறம் உன் கணவன் பேர்தான் ரிப்பேர் ஆகும்!”

பிறகு, “அயன்காரனிடம் நேற்று நாலு சேலை கொடுத்தேன். பொறுப்பில்லாதவன்!  இன்னும் கொண்டுவரவில்லை. நான் வரட்டுமா?” என்ற ஆச்சி, துக்கம் விசாரிப்பவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “யமுனா, அந்த நெக்லஸ் எங்கதாம்மா போச்சு?” என்றார்.

 பதில் தெரியாமல் பரிதாபமாக விழித்தாள் யமுனா.

 (தொடரும்) 

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வியாழன், ஜூன் 04, 2020

பொன்னித் தீவு-16

பொன்னித் தீவு-16 

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்           

 (16) அகிலா -சந்திரன் - ராஜா

 “ரொம்ப நன்றி மேடம்” என்றான் ராஜா, அகிலாவைப் பார்த்து.

 அப்போதுதான் அகிலாவுக்குத் தெரிந்தது, பிரசவத்திற்காக மீராபாயை ஆஸ்பத்திரியில் சேர்த்தது ராஜாதான் என்று.

 "நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், சரியான நேரத்தில் எனக்கு லிஃப்ட் கொடுத்ததற்காக. பார்த்தீர்களா, ஆண் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்றாள் அகிலா.

 அப்போது பிராதார் வந்து, ராஜாவின் கம்பெனியில் தான் ஓர் ஊழியன் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டான். 

 "இன்னும் இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்" என்றாள் அகிலா. பிறகு ராஜாவிடம் திரும்பி, "இவருக்கான மொத்தச் செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். கவலைப்பட வேண்டாம்" என்றாள்.

 "எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எங்கள் கம்பெனியின் தலைவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து இந்தப் பணத்தை  வாங்கிக் கொடுத்து விடுகிறேன். ஒன்றிரண்டு நாள் தவணை கொடுங்கள்" என்று பணிவோடு கேட்டுக் கொண்டான் ராஜா.

 ***

ஒரு வாரம் கழித்து  மீண்டும் அகிலாவைச் சந்தித்தான் ராஜா.

 "மன்னிக்கவேண்டும் மேடம்! எங்கள் கம்பெனியின் தலைவர் அபிநவ் உடல்நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.  கொரோனாவாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்கள். அதனால் அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. உங்களுக்குச் சேர வேண்டிய தொகையை விரைவில் வாங்கிக் கொடுத்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றான்.

 அகிலாவுக்குச் செம்பகத்தை நன்றாகத் தெரியும். செம்பகத்தின்  கணவன் ராஜா மிகவும் நாணயமானவன் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறாள். ஆகவே "உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு"  என்று புன்சிரிப்புடன் கூறினாள்.

 ஆனால் ராஜாவின் முகத்தில் ஆழ்ந்த கவலை இருப்பதைப் புரிந்து கொண்டவளாக, "இதற்காகத்தான் வந்தீர்களா?" என்றாள்.

 உண்மையில் ராஜா வந்தது தொழிலாளர்களுக்குத் தேவையான செலவுகளுக்காக அவசரக் கடன் கேட்பதற்குத்தான். அபினவ்வைச் சந்திக்க முடியாமல் தவித்தான் ராஜா. அவர் உடல்நலம் தேறி வரும்வரையில் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ராஜா தானே பொறுப்பு!

 முதலில் தயங்கினாலும் ஒருவாறாகத் தனது தேவையை அகிலாவுக்கு உணர்த்த முடிந்தது ராஜாவால்.

 சிறுவயதிலிருந்தே மற்றவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலை அகிலாவுக்கு ஏற்பட்டு இருந்தது. பாக்கெட்மணியில்  பெரும்பகுதியைத் தன் ஏழைத் தோழிகளுக்காகவே செலவழிப்பாள். அதேசமயம் பொறுப்புணர்ச்சியுடனும்  செயல்படுவாள். அவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு இம்மாதிரி மனிதநேயச் செலவுகள் அதிகரித்த போதிலும் அவருடைய தந்தை தடை சொன்னதில்லை.

 மீராவின் பிரசவச் செலவு மற்றும் இப்போது ராஜாவுக்குத் தேவையான தொகை இரண்டையும் சேர்த்தால் ஒன்றேகால் லட்சம் ஆகிறது. வேறு வழியில்லை, பாரஸ்மல் கடைக்குத்தான் போயாக வேண்டும். சந்திரனை அனுப்பினாள். அதற்கு முன்னால் அவரிடம் பேசி, அடகு வைத்த நகையை அவரையே  விலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.

 அதன்படியே சந்திரன் போய் மீதித் தொகையை வாங்கிவந்து ராஜாவிடம் கொடுத்தான்.

 எப்படியோ கேட்டதில் முக்கால்வாசியாவது கிடைத்ததே என்று ராஜா சந்தோஷப்பட்டான். "அனைத்திற்கும் நான் பொறுப்பு" என்று மீண்டும் சொல்லிவிட்டுச் சென்றான்.

 அவன் போன பிறகு சந்திரன் அகிலாவிடம் வந்து, "நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறல்லவா?" என்றான்.

 "யமுனா அக்காவின் நெக்லஸைக் குரங்கு எடுத்தது. குரங்கிடம் இருந்து ஆச்சிக்கு வந்தது. ஆச்சியிடமிருந்து என்னிடம் வந்தது. நான் உங்களிடம் கொடுத்தேன். இப்போது அதை விற்றே விட்டீர்கள். அப்படியானால் நெக்லஸுக்கு  நீங்கள் தானே பொறுப்பு? ஆனால் ஆச்சி என்மீதுதானே குற்றம் சாட்டுவார்? அவருக்கு என்ன பதில் சொல்வது?" கையைப் பிசைந்தான் சந்திரன்.

 கலகலவென்று சிரித்தாள் அகிலா. "சந்திரன், நீ ஒரு முட்டாள் என்பதை மறக்கவே மாட்டாயா?" என்றாள்.

 "ஆச்சி லாக்கரைத் திறந்து பார்த்தால் தானே விஷயம் தெரியும்? அப்போதும் கூட, திருடனுக்குத் தேள் கொட்டியது போலத்தான் இருக்கும்.  யாரிடமும் இந்த விஷயத்தை அவரால் பேச முடியாது. கவலைப்படாதே!"

 சந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. "என்றாவது ஒருநாள் நகை தொலைந்து போனதை யமுனா அக்கா கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்களுக்கு நீங்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்! இல்லையென்றால் உங்களை நான் சும்மா விடமாட்டேன்!" என்றான் நியாயமான கோபத்துடன்.

 "அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ராஜா தன் முதலாளியிடம் இருந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் முதல் வேலையாக நானே போய் யமுனாவிடம் எல்லா விஷயத்தையும் விளக்கிச் சொல்கிறேன். நகைக்கு உண்டான பணத்தை அவளிடம் கொடுத்துவிடுகிறேன். பயப்படாதே" என்று அவனுடைய உள்ளங்கையைத் தொட்டு உத்தரவாதம் அளித்தாள் அகிலா.

 அவள் கையை எடுத்துவிடாதபடித் தன் மறுகையால் மூடினான் சந்திரன். உடனே வேகமாகத் தன் கையை இழுத்துக்கொண்ட அகிலா, அவனை முறைத்துப் பார்த்து, "முதலில் அரியர்ஸ் இல்லாமல் இன்ஜினியரிங் பாஸ் செய்வதில் கவனம் வை. தமிழ் சினிமாக்களைப் பார்த்துக் காதல் கீதல் என்று விழுந்து விடாதே! அதற்கு இன்னும் இரண்டு வருடம் போகட்டும்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டுக் கிளம்பினாள். 

***

ஆனால் கொரோனாவில் இருந்து அபிநவ் பதினைந்தே நாளில் குணமாகி வீடு திரும்பியதையும், தான் இல்லாதபோது பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு கம்பெனியின் தொழிலையும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலத்தையும் காப்பாற்றி வைத்ததற்காக ராஜா செலவு செய்த தொகை முழுவதையும் அபினவ் திருப்பி கொடுத்ததையும் தெரிந்து கொண்டபோது ஆக்கில்லா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்குச் சேர வேண்டிய கடன் முழுவதையும் ராஜா கொடுத்துவிட்டான்.

அது மட்டுமல்ல, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் கடினமான பணியை அரசாங்கத்தின் தலையில் கட்டாமல், அவர்களை தமிழ்நாட்டிலேயே இருத்தி வைத்துக்கொண்டு நல்வாழ்வு கொடுத்ததை பாராட்டும் விதமாக தமிழக முதல்வரின் ஒரு லட்ச ரூபாய் பரிசு அபிநவ்வின் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. அதே தலைமை அதிகாரிகள் ஒருமனதாக தெரிவித்தபடி ராஜாவுக்கே கொடுத்துவிட்டார் அபிநவ்.

 அப்பணத்தில் தான் பாரஸ்மல்  இடமிருந்து அந்தப் பழைய நெக்லஸை வாங்கி செம்பகத்துக்கு அணிவித்துவிட்டான் ராஜா.

 இப்போது அகிலாவின் நிலைமை இக்கட்டாகி விட்டது. பணம் வந்தவுடன் பாரஸ்மல் இடம் எப்படியாவது பேசி, அதே நெக்லஸை வாங்கி, யமுனாவுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.

 ராஜாவிடம் உண்மையைக் கூறி அதே  நெக்லஸைப் பணம் கொடுத்து  வாங்கிக் கொள்வதென்றால், ஆச்சியையும் சந்திரனையும் குற்றவாளிகளாக்க வேண்டிவரும். ஆச்சியை விட, மாணவனான சந்திரனின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்க முயன்றதாகத் தன்மீதும் பழி வரும்.

 தீராத குழப்பங்கள் வரும்போதெல்லாம் ஸ்ரீஅரவிந்த அன்னையின் படத்தின் முன்பு அமைதியாக தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அகிலா. இன்றும் அதேபோல் அன்னையிடம் தஞ்சம் ஆனாள்.

 ராஜா திருப்பிக் கொடுத்த பணத்தை ஒரு கவரில் போட்டு அன்னையின் படத்தின் பின்புறம் பத்திரமாக வைத்தாள். கண்மூடி, எண்ணங்களை எல்லாம் வெளியேற்றி, மனதை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்தாள்.

 "தாயே, நான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. மீராபாய் பிரசவத்திற்கு உதவி செய்தேன். மொழி தெரியாத பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்தேன். இப்போது என் கையில் இருக்கும் பணம் யமுனாவுக்குச் சேர வேண்டியது. யாருடைய பெயரும் கெடாமல் யமுனா இழந்த நகை அவளுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். அதற்கு அருள் செய்வாய் தாயே" என்பதே அவள் பிரார்த்தனையாக இருந்தது.

 அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்குத் தானோ என்னவோ, மறுநாள் தற்செயலாக  யமுனாவைச் சந்தித்தாள் புஷ்பா. போலீஸ் நிலைய ஊழியர்.

 (தொடரும்)

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்