புதுடில்லிப் புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுடில்லிப் புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 07, 2022

நிலமே நீ வாழ்க!

 நிலமே நீ வாழ்க!

(அமெரிக்காவில் 148 வது நாள்)

புதுடில்லிக்கு மாற்றலாகி, கரோல்பாக் ஆரிய ஸமாஜ் ரோட்டில் இருந்த மண்டல அலுவகத்தில் நான் பணியில் சேர்ந்த புதிதில் நடந்த கதை இது. 


நேருபிளேஸ் என்ற வர்த்தக மையம் அப்போதுதான் உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சிறுசிறு கடைகள் எல்லாம் திடீரென்று இடிக்கப்பட்டு அவற்றின் தொகுதியாகப் பெரிய வர்த்தக வளாகங்கள், ஏழெட்டு மாடிகளைக் கொண்டனவாய் எழும்பத் தொடங்கின. நொய்டா (New Okhla Industrial Development Authority) என்ற பேரில் ஓக்லாவில் தொழில் வளாகம் தோன்றியதும் அக்காலமே. மண்ணோடிய குறுகலான சாலைகளுக்குப் பதில், நான்கு வழிச் சாலைகளும் அவற்றின் தொடர்ச்சியாகப் பல்வேறு பாலங்களும் அசுரகதியில் உண்டாக்கப்பட்டன. எதற்கும் லாயக்கில்லாத நிலங்களும் லட்சக்கணக்கில் விலைபேசப்பட்டு, நகரின் முக்கிய வர்த்தகக் குடும்பங்களால்  போட்டிபோட்டுக்கொண்டு வாங்கப்பட்டன. 


அந்தப் பகுதியில் எங்கள் வங்கியின் கிளையொன்று திறக்கப்பட்டு,  திறந்த வேகத்திலேயே பலகோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெற்றுவிட்டது. (அப்போதெல்லாம் தென்னிந்திய வங்கி என்றால் டில்லியில் மிகவும் நல்ல பெயர்). தானாக வரும் டெபாசிட் (‘வாக்கிங் டெபாசிட்’) கொட்டோ  கொட்டென்று கொட்டியது। லாக்கர்கள் அனைத்தும் இரண்டே நாளில் நிரம்பிவிட்டன. கிளை மேலாளர்களும் வங்கியின் வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருந்ததால், வாடிக்கையாளர் சேவைக்கு இலக்கணமாகத திகழ்ந்தது அந்த வங்கி. எனவே சேவிங்க்ஸ் கௌண்டர் எப்போதும் பிஸியாக இருந்தது.    



ஆனால் தில்லியைப் போன்ற தொழில்வளம் மிக்க நகரத்தில் வங்கிக் கிளையை ஆரம்பித்த நோக்கமே, தொழில்துறையினருக்கு அதிகக் கடன்களை வழங்கவேண்டும் என்பதுதான். அவர்களிடமிருந்து பெறும் வட்டியில் தான் வங்கியின் செல்வ வளமே அடங்கியிருக்கிறது. ஆகவே, மேலாளர்கள்  அருகாமையில் எழுந்திருந்த வணிக வளாகத்தை ஒரு கோவிலாகக் கருதி ஒரு நாளைக்குப் பலமுறை சுற்றிவருவார்கள். அங்கிருந்த ஒவ்வொரு கடையும் ஒரு கரண்ட் அக்கவுண்டு தொடங்கி,  கூடவே ஒரு வர்த்தகக் கடனும் பெறும்வரையில் ஓயமாட்டார்கள். அப்படித்தான் அந்த 70 வயது வர்த்தகரை சந்தித்தார் விவேக், வங்கியின் கிளைமேலாளர். 

அந்த வர்த்தகரின் பெயர் மறந்துவிட்டது. (ஏதோ ஒரு அரோரா அல்லது அகர்வால்). அகர்வால் என்றே வைத்துக்கொள்வோம். அவர் தன் தொழிலில் பழம் தின்று கொட்டைபோட்டு, பின்னர்  அவற்றிலிருந்து மரங்கள் முளைத்து அவையும் பழமாகி நிற்பதைக் கண்டு அனுபவித்தவர். நான்கு தலைமுறைகளாக அவர்கள் அரிசி ஏற்றுமதித் தொழிலில் மட்டுமே   இருந்தார்கள். வேறு எத்தனையோ கவர்ச்சிகரமான தொழில்கள் அடுத்தடுத்த தலைமுறையில் காணப்பட்டாலும், தங்கள் ஆதாரமான அரிசி ஏற்றுமதியை மாற்றிக்கொள்ள  அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் அதனால் எந்த நஷ்டமும் இல்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் திருமகளின் அருள் வேண்டியமட்டும் கிடைத்தது. பஞ்சாபில் ஒரு சிற்றூரில் இருந்தபடியே தொழில் நடத்தியவர்கள், மூன்றாவது தலைமுறையில் டில்லியில் குடியேறினார்கள்.  


அந்த வரிசையில் நமது அகர்வால் (70) கோதுமை வண்ணத்தில் ஆஜானுபாகுவான மேனியும், சுருக்கம் விழாத முகமும் ஓரளவே நரைத்த தலைமுடியுமாக எப்போதும் புன்சிரிப்பைத் தாங்கிய வெற்றிகரமான வர்த்தகராக இருந்தார். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் விவேகமும் நல்லெண்ணமும் பின்னிப் பிணைந்திருந்தன. யாராலும் அவரை ஏமாற்ற முடியாது. அவரும் யாரையும் ஏமாற்றியதில்லை.       


‘ராஜேஷ் அகர்வால் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் முதல் கரண்ட் அக்கவுண்ட்டைத் தொடங்கினார் அவர். ராஜேஷ் அவருடைய கடைசி மகன். தனது நான்கு மகன்கள் பெயரிலும் ஆளுக்கொரு பிஸினஸ் தொடங்கப்போவதாகச் சொன்னவர், முதலில் இளைய மகன் பெயரில் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று கேட்டேன்.  நாம் தோட்டம் போடும்போது, சிறு குழந்தையின் கையில் செடியைக் கொடுத்து நடச் சொல்வோமே அதே காரணம்தான்! இளையவர்கள் பெயரில் தொடங்கினால் வேகமாக வளருமாம். 


அடுத்த சில நாட்களில் மற்ற மூன்று பிள்ளைகளின் பெயரிலும் கணக்குகள் தொடங்கப்பட்டன. பெரியவர் அகர்வாலும் தனது கணக்கை ‘ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்’-லிருந்து எங்கள் வங்கிக்கு மாற்றிக்கொடுத்தார். 


ஆனால் வங்கியில் கடன் பெறுவதைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. நல்ல வர்த்தகர் ஒரு வங்கியில் கடன்பெற்று அவருடைய செக்குகள் வர்த்தகர்களிடையே  புழங்க ஆரம்பித்தால்தான் மற்ற வர்த்தகர்களும் அந்த வங்கிக்கு வரத்  தொடங்குவார்கள். எனவே அவரை எப்படியாவது கடன் வாங்க வைத்துவிட வேண்டுமென்று  கிளை மேலாளர் விவேக் எப்போதும் கடன் விண்ணப்பத்தைக் கையில் ஏந்திக்கொண்டு அவரை வலம் வந்து கொண்டிருந்தார்.  


சில மாதங்கள் ஆயின. ஆனால் கடன் விண்ணப்பம் மட்டும் வருவதாயில்லை. 


பங்குதாரர்களின் சொத்து விவரங்கள், ஆடிட் செய்யப்பட்ட ‘பேலன்ஸ் ஷீட்’,  இலாப நஷ்டக்  கணக்கு, வருமானவரிப் படிவங்கள் போன்ற முக்கியத் தகவல்களைக் கொடுத்தால் எந்த வங்கியும் கடன் கொடுப்பது எளிது. ஆனால் டில்லியைப் பொறுத்தவரை, (அநேகமாக வட இந்தியா முழுவதுமே என்றும் கூறலாம்), வர்த்தகர்கள் இந்த விவரங்களை முதல் எடுப்பில்  கொடுக்க மாட்டார்கள்.  வங்கிக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, தங்கள் கரண்ட் அக்கவுண்ட்டில் தொடர்ந்து சில மாதங்கள் வரவு-செலவு நடத்துவார்கள். அனுபவப்பட்ட மேலாளர்கள் அதைப் பார்த்தாலே வர்த்தகத்தின் தன்மையைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். வர்த்தகரின் எதிர்பாராத தேவைகளுக்கு மேலிடத்தின் அனுமதி பெறாமலேயே இந்த வரவு செலவின் அடிப்படையில் ‘தற்காலிக ஓவர்டிராப்ட்’ கொடுப்பதுண்டு. அவ்வாறு கொடுத்த கடனை ஒரு வாரத்திற்குள்ளோ, அல்லது, வர்த்தகத்தின் தன்மையைப் பொறுத்து  ஒரு மாதத்திற்குள்ளோ  மேலாளர் வசூல் செய்துவிடவேண்டும். அந்த விவரம் மேலதிகாரிக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட வேண்டும். 


இவ்வாறு தற்காலிக ஓவர்டிராப்ட் பெறுவதும் அதைக் குறிப்பிட்ட தவணைக்குள் திரும்பிச் செலுத்துவதும்தான் நல்ல கடன்தாரருக்கான  அறிகுறிகள். இவ்வாறு ஒருசில முறைகள் அனுபவப்பட்டபிறகே கிளைமேலாளர்களுக்கு அந்த வர்த்தகர்மீது பெரிய தொகையை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதற்கு தைரியம் பிறக்கும்.  


பெரியவர் அகர்வாலுக்கு எங்கள் வங்கியின்மீது மிகுந்த மரியாதை உண்டு. பஞ்சாபில் ஒரு முக்கிய நகரத்தில் அவருடைய சகோதரர்  எங்கள் வங்கியில் நல்ல தொடர்பு வைத்திருந்தாராம். ஆனால் இந்த நேரு பிளேஸ் வங்கியின் கிளைமேலாளர் விவேக் அதே போன்ற ஒத்துழைப்பைத் தருவாரா என்று அவருக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை போலும். 


அதற்கும் ஒரு சரியான சந்தர்ப்பம் அவருக்குக்  கிடைத்தது. 


அன்றைய க்ளியரிங்கில் பெரியவரின் கணக்கில் அவர் கொடுத்த நான்கைந்து செக்குகள் வந்திருந்தன. மொத்தம் பத்து லட்ச ரூபாய் தேவை. அவர் கணக்கில் இருந்ததோ ஒரு லட்சம்தான்! 


கிளைமேலாளர் விவேக் ‘குதிரைஉணர்வு’ (‘ஹார்ஸ் ஸென்ஸ்’)  கொண்டவர். யாருக்குத் தற்காலிக ஓவர்டிராப்ட் தரலாம், யாருக்குத் தரக்கூடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் அனுபவ அறிவுதான்.  மங்களூர்க்காரர் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் அவர் வழக்கமாகக் குடித்த   கொள்ளு ரசமும் ஒரு காரணமாக இருக்கலாம். தன் உதவியாளரை அழைத்து “எல்லா செக்கையும் பாஸ் செய்துவிடுங்கள். தற்காலிக ஓவர்டிராப்ட் ரிப்போர்ட்டை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.    


பிறகு பெரியவர் அகர்வாலுக்கு போன் செய்தார். “உங்கள் செக்குகள் வந்துள்ளன. பாஸ் செய்துவிட்டேன். ஒரு வாரத்துக்குள் பணம் கட்டிவிடுவார்கள் அல்லவா?” என்று கேட்டார். “இன்னும் நீங்கள் கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவில்லையே!” என்றும் நினைவுபடுத்தினார்.


அகர்வால் அதிர்ச்சி அடைந்தவர்போல் பேசினார். “இல்லையே, இந்த வாரம் என்னுடைய செக் எதுவும் வராதே!” என்றவர், “கொஞ்சம் பொறுங்கள், என் கணக்கப்பிள்ளையைக் கேட்டுவிட்டு லைனில் வருகிறேன். எதற்கும் செக் நம்பர்களைச் சொல்லுங்கள்” என்று குறித்துக்கொண்டார். 


சற்று நேரம்  கழித்து அகர்வால் பேசியபோது அவரது குரலில் காரம் அதிகமாக இருந்தது.  “இந்த செக்குகளை அடுத்த மாதம்தான் போடச் சொல்லி இருந்தேன். அதற்குள் அந்த ஆள் போட்டிருக்கிறான்! எல்லாவற்றையும் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறிவிட்டுப் போனை அணைத்துவிட்டார். 


(இந்த விஷயம் கிளைமேலாளரைத் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது).


விவேக்கிற்கு  ஒரு நிமிடம் மூச்சு ஒடுங்கிவிட்டது. ஏனென்றால், செக்குகளைத் திருப்பி அனுப்புவதற்கான நேரம் கடந்துவிட்டது. அத்துடன், பணம் இல்லாமல் செக்குகளைத் திருப்பி அனுப்பினால் அது சந்தையில் வங்கிக்கிளையின் மீதும் அவமதிப்பை உண்டாக்கும். எனவே அகர்வாலை நேரடியாகச் சென்று சந்திக்கக் கிளம்பினார். 


ஆனால் அகர்வால் ஒருவாரம் வரமாட்டார், பஞ்சாப்  சென்றுவிட்டார் என்று தகவல் கிடைத்தது. பஞ்சாபில் அவருடன் பேசுவதற்கு போன் நம்பர் தெரியவில்லை. அவருடைய மகன்களையும் சந்திக்க முடியவில்லை. விவேக்  மிகவும் சோர்ந்துபோய்விட்டார். பத்து லட்ச ரூபாய் அல்லவா ஆபத்தில் இருக்கிறது? 


குதிரைஉணர்வு என்று சொன்னேன் அல்லவா? அது இப்போது அவரை உந்தித் தள்ளியது. அகர்வால் யார் யாருக்குச் செக் கொடுத்திருந்தார் என்று பார்த்தார். வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்று தெரிந்தது. அவர்களுடைய வங்கியில் சென்று மேற்கொண்டு விவரம் சேகரித்தார்.  


டில்லிக்கு மிக அருகில் ‘பிளாட்’ போட்டு விற்றுக்கொண்டிருந்த  புதிதாக நிலம் விற்கும் ஒரு குழுமம் அது. அதில் நமது அகர்வால் ஐந்து பிளாட் முன்பதிவு செய்திருக்கிறார். அதற்கான தொகையைத்தான் செக் மூலம் கொடுத்திருக்கிறார். உடனே அந்த பில்டரை நேரில் சந்தித்தார் விவேக். 


“எனக்கு இரண்டு பிளாட் வேண்டும். நிலத்தைப் பார்வை யிடலாமா?” என்றதுதான் தாமதம், பில்டர் சௌதரி தானே ஓடிவந்து இவரை அழைத்துச்சென்று காட்டினார். நல்ல இடம், ஒரு சில ஆண்டுகளிலேயே விலை மூன்று மடங்காகிவிடும் என்று விவேக் புரிந்துகொண்டார். பிறகு தன்னை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டார். 


வங்கியின் பெயரைச் சொன்னதும் சௌதரி உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். “ராஜேஷ் அகர்வால் உங்கள் வங்கியின் கஸ்டமர் அல்லவா? அவர் என்னிடம் ஐந்து பிளாட் வாங்கியிருக்கிறார்! மேலும் ஐந்து வேண்டுமென்று கேட்டார். பணம் கொண்டுவருவதற்கு பஞ்சாப் போயிருக்கிறார்” என்றார். 


விவேக்கின் குதிரைஉணர்வு இப்போது வெளிக்கிளம்பிப் பிரகாசித்தது. சௌதரியுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதாவது, அவரிடம் பிளாட் வாங்க வருபவர்களை அவர் விவேக்கிடம் அனுப்பவேண்டும். அவர்கள் எல்லாருக்கும்  பிளாட் விலையில் 50 சதம் தொகை கடனாக வழங்கப்படும். 


அடுத்த சில நாட்களில் நாற்பது பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. அவ்வளவு பேர்களுக்கும் விவேக் சொன்னபடி கடன் கொடுத்தார். அந்த நாட்களில், காலிமனைக்குக் கடன்கொடுக்கும் திட்டம் வங்கிகளில் கிடையாது. ஆகவே இவர்கள் அனைவரையும் கரண்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி, ஒவ்வொருவருக்கும்  தற்காலிக ஓவர்டிராப்ட் கொடுத்தார். நிலம் பதிவுசெய்யப்பட்டதும், பத்திரங்கள் வங்கியின் வசம் ஒப்படைக்கப்படும் என்று பில்டரிடம் எழுதிவாங்கிக்கொண்டார். கடனுக்கான வங்கியின் ஆவணங்களையும் ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு வாங்கிவைத்தார். 


இந்த விஷயத்தை முறைப்படி மண்டல அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினார். 


சூட்டோடு சூடாக, ராஜேஷ் அகர்வால் வாங்க ஒப்பந்தம் செய்துகொண்ட பிளாட்களுக்கான பத்திரங்கள் மீதும் வங்கிக்கு ‘லீன்’ இருப்பதாகவும், அந்தப் பத்திரங்களையும் வங்கியிடமே ஒப்படிப்பதாகவும் பில்டரிடம் எழுதிவாங்கினார் விவேக். பிறகு தான் அவருக்கு நிம்மதியான உறக்கம் வந்தது. 


அகர்வால் தானாகப் போன் செய்யட்டும் என்று விட்டுப் பிடித்தார் விவேக். 


மேலும் ஒரு வாரம் கழித்து அகர்வால் போன் செய்தார். “விவேக், அந்தச் செக்குகளைத் திருப்பி அனுப்பிவிட்டீர்களா?” என்றார். 


“ஆமாம் அகர்வால் ஜி! நீங்கள் சொன்னபிறகு செய்யாமல் இருப்பேனா?” என்று பதிலளித்துவிட்டு அவரது எதிர்வினைக்காகக் காத்திருந்தார். 


“அப்படியா?” என்றார் அகர்வால் நம்பமுடியாதவராக. 


“ஆமாம், வேறு ஏதாவது பேச வேண்டுமா? கவுண்ட்டரில் கூட்டமாக இருக்கிறது” என்று போனை வைத்துவிட்டார் விவேக். 


அவர் எதிர்பார்த்தபடியே அகர்வால் அடுத்த அரைமணி நேரத்தில் வந்துவிட்டார். 


“மிஸ்டர் விவேக், அந்த செக்குகளை நிஜமாகவே திருப்பி அனுப்பிவிட்டீர்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார். 


அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, “ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் விவேக். 


“தயவுசெய்து அவற்றை அதே தேதியில் பாஸ் ஆனதாகச் செய்யமுடியுமா? இல்லையென்றால் எனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும்” என்று வேண்டினார் அகர்வால். அவர் குரலில் மிகுந்த பணிவு இருந்தது. 


உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட விவேக், இருவருக்கும் பாதாம்பால் வாங்கிவரச் சொல்லி பியூனை அனுப்பினார். பிறகு வேண்டுமென்றே அகர்வாலைப் புறக்கணிப்பதுபோல் எழுந்து கவுண்ட்டருக்குப் போய் மற்ற வாடிக்கையாளர்களைக்   கவனிக்கத் தொடங்கினார்.


பாதாம்பால் வந்தது.  ஒரு பாலை அகர்வாலுக்குக் கொடுக்கும்படி கை காட்டிய விவேக், தான் மட்டும் கவுண்ட்டரிலேயே நின்றுகொண்டு பாலருந்தத் தொடங்கினார். அதுவும் மெதுவாக, மிக மெதுவாக. 


கிட்டத்தட்ட அரைமணி நேரம் காத்திருந்த அகர்வால் பொறுமை யிழந்தவராக எழுந்து விவேக்கை நோக்கி நடந்தார். 


“மிஸ்டர் விவேக், நீங்கள் ஏதாவது செய்து அந்த செக்குகளை பாஸ் செய்துகொடுக்க வேண்டும். இதோ பத்து லட்ச ரூபாய் என் கணக்கில் செலுத்துகிறேன்” என்றார். செலுத்தினார். 


இப்போது பந்து தன் வசம் வந்துவிட்ட திருப்தியோடு, விவேக் அவரை எதிர்கொண்டார். 


“அகர்வால் ஜி, நீங்கள் பிஸினஸ்மேன். நாங்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள். உங்கள் பெயரையும் உங்கள் தொழிலின் கௌரவத்தையும் நம்பி நாங்கள்  தற்காலிக ஓவர்டிராப்ட் கொடுக்கிறோம். ஆனால், நீங்களோ, பணமே இல்லாமல் செக்கைக் கொடுத்துவிட்டு, எங்களை உங்கள் வீட்டு வேலைக்காரன் மாதிரி, செக்கைத் திருப்பி அனுப்பச்  சொன்னீர்கள். இன்றோ பாஸ் பண்ணவேண்டும் என்கிறீர்கள். இது சரியா என்று நீங்களே கூறுங்கள். அதன் பிறகு என்ன செய்யவேண்டுமோ நான் செய்கிறேன்” என்று போடுபோட்டார் விவேக். 


அகர்வால் நெருங்கிவந்து விவேக்கின் கைகளைப் பிடித்துக்கொண்டார். “விவேக் ஜி, என்னை மன்னித்துவிடுங்கள். என் மூத்த மகன், என்னிடம் கூறாமல் இந்த செக்குகளைக் கொடுத்திருக்கிறான். அதனால் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என் கணக்குப் பிள்ளைக்கும் விஷயம்  தெரியவில்லை” என்றவர், “நல்ல இடத்தில் பிளாட் விலைக்கு வருகிறது என்றவுடன், கார்னர் பிளாட்களாகப் பார்த்து புக் செய்திருக்கிறான். அப்போதே செக் கொடுத்தால் ஒரு விலையும், பத்துநாள் கழிந்தால் 25 சதம் உயர்ந்துவிடும் என்றும் பில்டர் சொன்னதால் அப்படிச் செய்திருக்கிறான். மறுநாளே அவன் மலேசியாவுக்கு வேறு வேலையாகச் சென்றுவிட்டான். அதனால் என்னிடம் அவன் விவரம் கூறவில்லை” என்று சொன்னார். 


“இப்போது பில்டர் அதன் விலையை 30 சதமாக உயர்த்திவிட்டார். நல்ல டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது. ஆகவே எனக்கு தயவு செய்யுங்கள்” என்று கெஞ்சினார் அகர்வால். 


விவேக் சிரித்துக்கொண்டே, பில்டருக்கு போன் செய்து அவரை நேரில் வரவழைத்தார்.


பில்டர் நடந்த விவரங்களைச் சொல்லச் சொல்ல, விவேக் மீது அகர்வாலுக்கிருந்த மரியாதை ஆயிரம் மடங்கு அதிகரித்தது. தன்னுடைய பிளாட்கள், தான் ஒப்பந்தம் செய்திருந்த விலையிலேயே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டவுடன், அதையும் மீறி, இந்த வங்கியில் வடிக்கையாளர் மீது மேலாளர்கள் காட்டும் கரிசனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. 


உடனே வேறு வங்கியில் இருந்த தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கணக்குகளையும் இந்த வங்கிக்கு மாற்றிக்கொடுத்தார். அவருக்குத் தெரிந்த வர்த்தகர்கள் பலரையும் அப்படியே செய்யவைத்தார். அதனால் வங்கியின் மொத்த பிஸினஸ் இரண்டே வருடத்தில் நூறு கோடியாக உயர்ந்தது. அக்காலத்தில் இது ஒரு அபூர்வ சாதனையாகும்.   


எல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணம், நிலம்! அதாவது காலிமனை!  விவேக் பல ஆண்டுக்காலம் இதை மறக்கவில்லை. வர்த்தகர்களுக்கு எந்தக் கடன் கொடுத்தாலும், காலிமனை அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றாவது  நிச்சயமாக  ஈடு (‘கொலேட்டரல் செக்யூரிட்டி’)  வைக்கப்படவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லிவிடுவார். அவர் ஓய்வு பெறும்வரையில் அவர் கொடுத்த கடன்கள் எதுவும் வாராக் கடனாக ஆகவில்லை என்பதில் ஆச்சரியமென்ன? 


  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 

     

வெள்ளி, ஜூன் 24, 2022

பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)

 பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)

(புதுடில்லிப் புராணம்- 7 )

அமெரிக்காவில் 71 ஆவது நாள் (21-6-2022)


நேற்று நடந்தது:

“இவளைத் தங்கை என்றுதானே அறிமுகப்படுத்தினான் பாபு?” என்று மெல்லக் கேட்டார் நண்பர். முதல்முறையாக பாபுவிடம் ஏதோ தவறு இருப்பதாக என் மனதில் ஒரு சந்தேகக்கீற்று தோன்றியது.      





சரி, நமது சந்தேகங்களைப் பிறகு வைத்துக் கொள்ளலாம், பாபு எப்படியிருக்கிறான் என்று பார்ப்பதல்லவா முக்கியம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன்.


பாமாவைப் பார்த்து "எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார்?" என்றேன். சொன்னாள். அங்கு விரைந்தோம்.


டில்லியில் அரசாங்க ஆஸ்பத்திரிகள் எப்படியிருக்கும் என்று தெரியுமா? சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரி மாதிரிதான் இங்கும். மத்திய அரசோ, ஒன்றிய அரசோ, ஆஸ்பத்திரிகள் மட்டும் மாநில அரசு மாடல்தான்.


காதல் திருமணம்- மற்றபடி கதைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை!


எங்கள் வங்கியின் மண்டல மேலாளருக்கு அதிகாரபூர்வ டிரைவர் ஒருவர் இருந்தார். 'கிஷண்' என்று பெயர். 'கிஷன்' என்றும் எழுதலாம். ஒரு சுழியில் என்ன ஆகிவிடப்போகிறது! கிருஷ்ணன் என்பதன் இந்தி வடிவமே அது. ஆசாமி இளைஞர். ஆறடி உயரம். இராணுவ அதிகாரிக்குரிய நடையும் பாவனையும் இருக்கும்.  வெள்ளைவெளேர் என்றிருப்பார்.  அவருக்குத் தன்னைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. ஆகவே, மண்டல மேலாளர் சொல்வதைக் கேட்கமாட்டார். ஆனால், தலைமை அலுவலகத்திலிருந்து வருபவர்களுக்கு உழவாரப்பணி செய்யவும் தயங்கமாட்டார். நிதி அமைச்சகம், ரிசர்வ் பேங்க், பாராளுமன்றக் கட்டிடம், பிரதமர் அலுவலகம் என்ற உயர்மட்ட அலுவலகங்களுக்கு மட்டும் அவர் இல்லாமல் போகமுடியாது. இவரைப் பார்த்ததும் இவர்தான் வங்கியின் சேர்மன் போலும் என்றே நம்பிவிடுவார்கள். அந்த அளவுக்கு 'மேக்னட்டிக் பெர்சனாலிட்டி!' 


அன்று எங்களுடன் வந்தவர் கிஷன் தான். சிக்கலான நிலைமைகளில் விரைந்து செயல்படுவார். டோக்கன் கொடுக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த பெருங்கூட்டத்தை 'ஹேய், சலோ சலோ' என்று சத்தமிட்டபடி தன் பெரிய கைகளால் கலைத்து எங்களை உள்ளே அழைத்துக்கொண்டு போனார். டோக்கனுக்கு ஐந்துரூபாய் இல்லாமல்  யாரையும் உள்ளே விடும் சரித்திரமே இல்லாத ஆஸ்பத்திரியாம் அது. 


15 ஆம் நம்பர் படுக்கை என்றார்கள். போனோம். அப்போது டாக்டர் உள்ளே இருந்ததால் வெளியில் நின்றோம். காப்பி, டீ எடுத்துக்கொண்டு கேனுடன் வந்த ஒருவனை கிஷன் இடைமறித்து ஐந்து டீ ஆர்டர் செய்தார். நாங்கள் மூன்றுபேர், பாபு ஒன்று ஆக நான்குபேர்தான். ஆனால் ஐந்து டீ ? கிஷனுக்கு எல்லாம் இரண்டு வேண்டுமாம். (மனைவியுமா என்பீர்கள். ஆஸ்பத்திரியில் பேசுகிற விஷயமா அது!)


டாக்டர் வெளியேறியதும் நாங்கள் உள்ளே போனோம். ஒரே அதிர்ச்சி. அங்கே காயங்களுடன் படுத்திருந்தது பாபு அல்ல, அவன் ஒன்றுவிட்ட தம்பியான முத்து! பட்டுச் சட்டையும் பட்டு வேட்டியுமாக இருந்தான். அப்படியானால் பாமாவுக்கும் முத்துவுக்கும்தான் கல்யாணம் ஆனதா!  இவனைத்தான் ‘அவர்’ என்றாளா பாமா! அப்படியானால் பாபுவிடம் எந்தத் தவறும் இல்லை. மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஆனாலும் வேறு கேள்விகள் இருந்தன. 


முத்துவின் கால்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கைகளில் சிராய்ப்புகளுக்கு ஏதோ கிரீம் தடவியிருந்தார்கள். நெற்றியில் காயம் இருந்தது. எங்களைப் பார்த்ததும் லேசாகப் புன்னகைக்க முயன்றான். பக்கத்திலிருந்த மலையாள நர்ஸ் 'அவரால் பேச முடியாது. தொந்தரவு செய்யாதீர்கள்' என்றாள். பேசாவிட்டால் பாபு எங்கிருக்கிறான் என்பதை எப்படி அறிவது?


டில்லி ஆஸ்பத்திரிகளில் அப்போதெல்லாம் மலையாள நர்ஸ்கள் அதிகம் இருப்பார்கள். அவர்களிடம் ஓர் ஒற்றுமை இருந்தது. எல்லோருமே பள்ளியில்  இந்தி படித்தவர்கள். அதனால் இந்தி பேசுபவர்களிடம் தன்மையாகப் பேசுவார்கள். தமிழர்கள் என்றால் இளக்காரமாக நடத்துவார்கள். நமக்குத்தான் இந்தி தெரியாதே! வேண்டுமென்றே நம்மிடம்  இந்தியில்தான் பேசுவார்கள். தமிழை அவர்களால் பேசமுடியும், புரிந்துகொள்ளவும்  முடியும். ஆனால் மாட்டார்கள். புரியாததுபோல் நடிப்பார்கள். சரியான நேரத்துக்கு மருந்து தரமாட்டார்கள். டாக்டர் வந்தால், நோயாளி ஒத்துழைக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டுவார்கள். இவர்களுக்கு கிஷன் தான் சரி. 


ஒரே அதட்டலில்  அவளிடமிருந்து விஷயத்தைக் கறந்துவிட்டார் கிஷன். பாபு என்பவர்தான் முத்துவை இங்கு கொண்டுவந்து அட்மிட் செய்தாராம். அவருடன் இன்னும் இரண்டு ஆண்களும்  காயங்களுடன் வேறொரு தளத்தில் அட்மிட் ஆகியிருக்கிறார்களாம். பாபு ஒருவேளை அவர்களுடன் இருக்கலாமாம். 


அது இரண்டாவது தளம். சற்றே மோசமான சூழலில் இருந்த ஒரு மூலையில் ஜன்னலருகே ஒரு கட்டிலின் முன்பு  பாபு நின்றுகொண்டிருந்தான். அந்தக் கட்டிலில் ஒரு பெரியவர் படுத்திருந்தார். அவரைப் பார்த்தால் அடிதடியில் இறங்குபவராகத் தெரியவில்லை. அதற்குப் பக்கத்துக் கட்டிலில் சுமார் முப்பது வயதுள்ள  ஓர் இளைஞன் தலையில் சிறிய பிளாஸ்திரியுடன் தெரிந்தான்.  பாபு இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.


“இங்க பாருங்க அய்யா, நடந்தது நடந்து போச்சு. முத்துவும் பாமாவும் திடீர்னு டில்லிக்கு வந்து நின்னப்ப எனக்குக் கையும் ஓடலை. காலும் ஓடலை. கடவுள் புண்ணியத்துல எனக்கு பாங்க்குல நல்ல ஆதரவு கெடைச்சு இப்போ டில்லியில கால் ஊனிட்டேன். மாசம் எப்படியும் செலவுபோக இருவதாயிரம் எனக்கு வருது. ரெண்டே வருஷத்துல இந்தர்புரில வீடுவாங்கிடுவேன். பேங்க்குல லோன் குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க. முத்துவும் பாமாவும் எங்க வீட்டுலயே இருக்கட்டும். அவங்களுக்கும் கடவுள் நல்ல வழி காட்டாமப் போகமாட்டான். அதனால நீங்க அவங்கள மன்னிச்சி வாழ்த்தணும். அவங்க எதிர்காலத்துக்கு நான் கேரண்ட்டி!...” என்று பாபு சொல்லிக்கொண்டிருந்தான். 


நான் சற்றே பின்வாங்கி நின்றேன். 

மலை மந்திர் முருகன் கோயில்-புதுடில்லி

அடுத்த கட்டிலில் இருந்தவன் எழுந்துகொள்ளாமல், அதே சமயம் கோபத்துடன் கத்தினான். “இங்க பாரு பாபு! உனக்கும் இவர்களுக்கும் என்னடா சம்பந்தம்? எதுக்கு நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறே?” என்றவன், பெரியவரைப் பார்த்து, “நைனா! இவன் நல்லவன்தான். தங்கமானவன். சந்தேகமில்லே. இவன் மட்டும் நம்ப பாமாவைத் திருட்டுத்தாலி கட்டியிருந்தாலும் நான் ஏத்துக்கிட்டிருப்பேன். ஆனா அந்த ஒண்ணுமில்லாத பய, முத்துவயில்ல அவ இழுத்துக்கிட்டு ஓடிவந்திருக்கா? நம்ம சாதிசனம் காறித் துப்பமாட்டாங்க? ரெண்டுல ஒண்ணு பாத்துட்டுதான் மறுவேலை!” என்றான்.


இப்போது எனக்கும் என்னுடன் வந்த தமிழ் நண்பருக்கும் விஷயம் விளங்கிவிட்டது. இது பாரதிராஜாவின் வழிகாட்டலில் நடந்த சினிமாப்பாணியிலான பள்ளிக்கூடக் காதல். முத்துவும் பாமாவும் வெவ்வேறு சாதி. அதில் முத்து கொஞ்சம் தாழ்ந்த சாதி. முத்துவின் பெற்றோர் தினக்கூலி ஊழியர்கள். பாமா வீடு வசதியான வீடு. தாயில்லை. தந்தையும் மணமாகாத அண்ணன் முருகேசனும் தான். முத்துவும் பாமாவும் ஒரே பள்ளியில் ஒன்பதாவது படித்தபோது ஏற்பட்ட காதல். வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் செய்தி கேட்டு அண்ணன் முருகேசன் ஊரில் இல்லாத சமயத்தில் சென்னை வந்து பெரியம்மா வீட்டில் தங்கி, அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் டில்லிக்கு வந்துவிட்டனர் இருவரும்.


பெரியவர் சற்றே  நிமிர்ந்து உட்கார்ந்தார். “பாபு! பாமா செய்த காரியம் தப்புதான். ஆனா நாங்க ஒன் பேங்க்குல வந்து லீவு நாளில ஒன்னைப் பத்தி விசாரிக்கறோம்னு தெரிஞ்சதுமே நீ அவசர அவசரமா மலை மந்திர் முருகன் கோவில்ல ஒரு நல்ல டைம் பாத்து இவங்களுக்குத்  தாலிகட்ட வெச்சே பாரு, அப்பவே நீ பாமாவுக்கு நிஜமான அண்ணனாயிட்டே!  எங்க சாதி சனம் எப்படியோ ஒழியட்டும். சோத்துக்கில்லேன்னா அவனுகளா வந்து போடுவாங்க?“ என்றார். பாபுவைத் தன் கைகளால் அள்ளி  அணைத்துக்கொண்டார்.


அண்ணன்காரன் பொருமினான். “நைனா, நமக்கு எவ்ளோ அவமானத்தை உண்டுபண்ணிட்டா இந்தப் பொண்ணு, அவள நீ மன்னிச்சாலும் நான் மன்னிக்கமாட்டேன்” என்று கத்தினான். 


“என்னடா பண்ணுவே? இது டில்லி, தெரிஞ்சிக்கோ! நம்ம ஊர் இல்ல. பொம்பளைகிட்ட தகராறு பண்ணினா, அவ ஒன் தங்கையாவே இருந்தாலும் உள்ள தள்ளிடுவாங்க! மரியாதையா நாளைக்கு ஊருக்கு கிளம்பணும். பாபு, எங்களுக்கு டிக்கட் வாங்கிடு. நான் பணம் தர்றேன்” என்று பெரியவர் அவனை அடக்கினார்.


“எம்பி கோட்டால டிக்கட் நான் வாங்கித் தர்றேன்” என்று முன்வந்தார் கிஷன். 


அப்போது பாபு செய்ததுதான் எல்லோரையும் நெகிழ வைத்தது. பாமாவின் அண்ணனிடம் நெருங்கி அவன் கைகளைப்  பிடித்துக்கொண்டான். “சாமி முன்னிலைல ஒங்க தங்கையும் முத்துவும் கணவன் மனைவி ஆயிட்டாங்க. அதைப் பிரிக்கப்போறீங்களா? வேண்டாங்க. அவங்க இங்கயே இருந்து முன்னேறி நல்லா வந்தப்பறம் ஊருக்கு வரட்டும். பெரிய மனசு பண்ணுங்க. நீங்க என் அண்ணன் மாதிரி!” என்றான்.  “வேணும்னா ஒங்க காலையும் பிடிக்கத் தயார்” என்று கண்களில் நீர்துளிக்க நின்றான். 


முருகேசன் சட்டென்று எழுந்துகொண்டான். அவனுக்கு உண்மையில் பெரிய காயம் ஒன்றுமில்லை. “இன்னைக்கு பொண்ணுங்கறதால எங்க நைனா அவ செஞ்சத சரின்னுட்டார். அதையே நான் செஞ்சிருந்தா ஒத்துக்கிடுவாரா?” என்றான். “அவங்க ஏழைங்க, நாம நாலு ஏக்கர் நெலம் வெச்சிருக்கோம்னு சொன்னீங்களா இல்லையா?”


பாபு ஒன்றும் புரியாமல் நின்றான். பெரியவரும் தம்மை ஒருவழியாக நிலைப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றார். “முருகேசா! வயசுக்கு வந்த பொண்ண வீட்டில வச்சுக்கிட்டு புள்ளைக்கு மொதல்ல கல்யாணம் பண்ணுவாங்களாடா? அதனால தான் அப்படிச் சொன்னேன்.”


“அப்படீன்னா பாபுவோட அக்காவை நான் பண்ணிக்கிறதுக்கு சம்மதம்னு சொல்றீங்களா” என்று வெளிப்படையாகவே கேட்டான் முருகேசன்.


ஆச்சரியத்தில் பாபுவின் விழிகள் உயர்ந்தன. அவனுடைய அக்காவைத்தான்  முருகேசன் விரும்புகிறானா? முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த சரோஜாவுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. எல்லாம் வைட்டமின் ‘ப’ இல்லாததுதான் காரணம். இப்போது கடவுள் அருளால் காரியம் கூடி வருகிறதா?


“முருகேசா! நீ உண்மையைத்தான் பேசுகிறாயா? அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுகிறேன்” என்றான் பாபு நம்பமுடியாமல். 


அதற்குள் ஒரு டாக்டர் உள்ளே நுழைந்தார். “இந்த ரெண்டுபேரையும் டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள். பெரிய கேஸ்களுக்கு பெட் கிடைக்காமல் தவிக்கிறார்கள்” என்று அங்கிருந்த மருத்துவ அட்டையில் ஏதோ எழுதிவிட்டுப் போனார். 


கிஷனுக்கு மொழி புரியாவிட்டாலும் கதை புரிந்துவிட்டது. “பாபு தோஸ்த்! தும் லக்கி லடுகா ஹோ” என்று  கை கொடுத்தார். பிறகு சொன்னார்: “இவர்களை டிஸ்சார்ஜ் செய்து நம்ம பேங்க்கு பக்கத்துல இருக்கும் ‘சதரன்’ ஹோட்டலுக்கு போவோம். அங்க ரெண்டுநாள் தங்கட்டும். நான் அட்டென்டன்சுல கையெழுத்து போட்டுவிட்டு  இவங்களுக்கு டில்லியைச் சுத்திக் காட்டறேன். அப்படியே எம்பி கோட்டால டிக்கட்டுக்கும் ஏற்பாடு பண்றேன். மத்த காரியங்களை நீ பாத்துக்க.” 


இப்படியாகத்தானே பாபுவின் கதையின் முதல் பாகம் முடிந்தது. இரண்டாம் பாகத்தை நான் நேரில் பார்க்கவில்லை. என்றாலும், கேள்விப்பட்டவரையில் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: 


சில மாதங்களில் பாபுவுடைய அக்காவுக்கும் முருகேசனுக்கும் அதே டில்லி மலைமந்திரில் திருமணம் நடைபெற்றது. முருகேசனின் தந்தை தன்னுடைய நிலத்தை விற்றுவிட்டு டில்லிக்கே வந்துவிட்டார். காரணம், முருகேசனுக்கு டில்லியில் நிரந்தரமான வேலை கிடைத்துவிட்டது! 


கிஷனுடைய உறவினன் ஒருவன் சிண்டிகேட் வங்கி மண்டல மேலாளருக்கு டிரைவராக இருந்தவன், திடீரென்று பம்பாய்க்குப் போய்விடவே, முருகேசனை அவருக்குத் தற்காலிக டிரைவராக வேலைக்கு அமர்த்திவிட்டார் கிஷன்.  தன்  தொழில் திறமையாலும் பழகும் தன்மையாலும், விரைவிலேயே இந்தி பேசக் கற்றுக்கொண்டு விட்டதாலும் நிரந்தர டிரைவராக ஆக்கப்பட்டான் முருகேசன்!     -சுபம்-


  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 






வாங்க, டில்லிக் குளிரில் டீ சாப்பிடலாம்!

வாங்க, டில்லிக் குளிரில் டீ சாப்பிடலாம்!

(புதுடில்லிப் புராணம்- 6 )

அமெரிக்காவில் 70 ஆவது நாள் (20-6-2022)


சுப்பையா சுப்பையா என்றொருவர் எங்கள் தெருவில் வசித்து வந்தார். ஊரில் இருந்த பிரிட்டிஷ் காலத்து தொழிற்சாலை தனது பணியாளர்களுக்காகப் புதிய நகரை உருவாக்கியபோது அங்கிருந்த பெரிய ஆலமரத்தை ஒன்றும் செய்யாமல் விட்டார்கள். அந்த மரத்தடியில்தான் சுப்பையா உட்கார்ந்திருப்பார். 


வயது நாற்பதுக்குமேல் இருக்கும் என்று தங்கவேல் சொன்னான். சக வகுப்பன். அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். சினிமா நடிகைகளின் படத்தை தினத்தந்தியில் பார்த்தே வயதைத் துல்லியமாகச் சொல்லும் அவன் திறமையை ஆசிரியர் ஸ்வாமிதாஸ் வியப்பார். எதிர்காலத்தில் சினிமாக்காரர்கள் வீட்டில் தோட்டக்காரனாகும் யோகம் அவனுக்கு உண்டு என்றும் ஆரூடம் சொன்னார்.


வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருப்பவர் சுப்பையா  என்று கேள்வி. சைக்கிள் வண்டியில் நடமாடும் டீக்கடை ஆசாமி வரும்போது எப்படியாவது தாஜா செய்து டபுள் டீ வாங்கிக் குடித்துவிடுவார். பணம் கொடுத்தாரா என்று தங்கவேலுவுக்குத்தான் தெரியும்.  


காலை எட்டரைமணிக்கு நாங்கள் புத்தகப் பையுடன் செருப்பில்லாத கால்களுடன் பள்ளிக்கு  ஓட்டமும் நடையுமாகச் செல்வதை அலட்சியமாகப் பார்த்துச் சிரிப்பார் சுப்பையா.


“பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை. நீங்களெல்லாம் மாங்கு மாங்கென்று ஓடுகிறீர்களே, உங்களுக்கு எதிர்காலத்தில் என்ன வேலை கிடைக்கும் தெரியுமா?” என்பார்.


நாங்கள் ஒருகணம் நின்று அவர் வாயையே பார்ப்போம்.


“நான் அடுத்த வருஷம் ஒரு டீக்கடை ஆரம்பிக்கப் போறேன். அதில் ஐந்து பேருக்குப் பயிற்சி அளிக்கப்போறேன்.   உங்களில் யாரெல்லாம் வர்றீங்க? அப்பா அம்மா கிட்ட கேளுங்க. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள சொல்லிடணும். இல்லேன்னா அப்புறம் இடம் காலி இருக்காது. டீ போடக்  கற்றுக்கொண்டால் வாழ்நாளில் உங்களுக்கு தோல்வியே கிடையாது” என்று கம்பீரமாகச் சிரிப்பார். 


அன்று முழுதும் பள்ளியில் இதே விவாதம்தான். டீக்கடைக்கு ஆளெடுக்கிறார் சுப்பையா என்று தலைமை ஆசிரியருக்குச் செய்தி போயிற்று. எங்களில் சிலபேருடைய பெற்றோர்களும் சுப்பையாவை வந்து பார்த்தார்கள்.


“படிக்கிற பிள்ளைகளைக் கெடுக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாயா?” என்று ஆளாளுக்கு அடி கொடுக்காத குறைதான்.   


ஆனால் சுப்பையா அதற்கெல்லாம் அசரவில்லை. எங்களை அவர் தொடங்கப்போகும் டீக்கடையில் சேருமாறு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.


எங்கள் சக வகுப்பாளிகள் யாரும் அவர் வலையில் சிக்காததுடன், நாங்கள் பள்ளியிறுதி முடித்து கல்லூரிக்குப் போகும் வரையில் அவருடைய டீக்கடை தொடங்கப்படவே இல்லை என்பதும் வரலாற்று உண்மையாகும்.

*** 

பாபுவுக்கும் அவனுடைய ஊரில் ஒரு சுப்பையா இருந்திருப்பார்போல. 


பாபுவின் தாய் சின்னாளப்பட்டியில் பிழைக்க வழியில்லாமல், இன்னும் சில பெண்களுடன் டில்லிக்கு ரயிலேறிவந்து கரோல்பாகிலும் மயூர் விகாரிலும் லஜ்பத்நகரிலும் வீட்டுவேலை செய்பவராகச் சில ஆண்டுகள் இருந்தார். ஒரு தேர்தல் சமயத்தில் உள்ளூர் காங்கிரஸ் எம்பி ஒருவர் இவளையும் இவளைப் போன்ற அனாதையான தமிழ்க் குடும்பங்களையும் இந்தர்புரி, திரிலோக்புரி மற்றும் சில ‘புரி’களில் திடீர்க் குடிசைகளை ஏற்படுத்தித் தங்கவைத்து, அவர்களுக்கு வாக்குச்சீட்டுகளுக்கும் வழிசெய்தார். தேர்தலில் அவர் சொல்லும் வேட்பாளருக்கு இவர்கள் வாக்களிக்கவேண்டும். செய்தார்கள்.


ஆனால் தேர்தலில் வென்றபிறகு அந்த வேட்பாளர் இவர்களைத் திரும்பிப் பார்க்க விரும்பாதத்துடன், போலீஸைக் கொண்டு குடிசைகளைப் பிரித்துப் போட்டு அவர்களைச்  சிதறிப்போகவும் காரணமானார். 


கரோல்பாகில் சாஸ்திரி பார்க் என்ற பூங்கா இருந்தது. நான் டில்லிக்கு வந்தபோது அது பூங்காத்தனத்தை முழுதும் இழந்து, ஓடாமல் நிற்கும் பழைய கார்கள், பைக்குகளின் புகலிடமாக மாறிவிட்டிருந்தது. நடுநடுவே இருந்த காலி இடங்களில் தார்பாலின் கூரையின் கீழ் இந்த அனாதைத் தமிழர்கள் பனி, வெயில், மழையென்று பாராமல், வீசி எறியப்பட்ட வெங்காயப் சிறகுகளைப்போல் சுருண்டும் உலர்ந்தும் சுருங்கியும் கிடந்தது கண்களில் இரத்தத்தை வரவழைப்பதாக இருந்தது. இவர்களில் பாபுவின் தாயும் ஒருவர். (தந்தை எப்பொழுதோ விட்டுப் பிரிந்துவிட்டாராம்). இந்த நிலையில்தான் தாய்க்கு உதவியாக டில்லிக்கு வந்தான் பாபு. எட்டாவது வரை படித்திருந்தான். ஏதோ ஒரு சுப்பையாவின்  கடையில்  டீ  போடவும் பாய்லரைக் கழுவவும் கற்றுக்கொண்டிருந்தது  டில்லியில் அவனுக்கு எங்கள் வங்கியில் டீ வழங்கும் வேலையைப் பெற்றுக்கொடுத்தது. அதாவது, காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் வங்கியில் நுழைய அனுமதி கொடுக்கப்பட்டது. டீ  மற்றும் பிஸ்கட் சப்ளை செய்யலாம். மற்ற நேரங்களில் எடுபிடி வேலையும் செய்யலாம். ஆனால் வங்கிக்கும் அவனுக்கும் அதிகாரப்பூர்வமாக சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்பட்டிருந்தது. 


எங்கள் வங்கியில் அப்போது சுமார் ஐம்பது பேர்களுக்கு மேல் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். எனவே, வங்கியில் ஒரு கேண்டீன் ஏற்படுத்தவேண்டும் என்று ஊழியர் சங்கம் வற்புறுத்தியது. ஆனால் அதை முறைப்படி செய்வதென்றால்  பல்வேறு அனுமதிகளைப் பெறவேண்டும். சிலசமயம் அனுமதி கிடைக்காமலும் போகலாம்.  எனவே கள நிலவரத்தைப் பொறுத்து மண்டல மேலாளர்கள்  முடிவெடுப்பதே வழக்கம். தலைமை அலுவலகத்திற்கும் இது ஏற்புடையதாகவே இருந்தது. ஏனென்றால், ஏதேனும் தவறு நிகழுமானால், மண்டல அலுவலகத்தைப் பொறுப்பாக்கிவிட முடியுமல்லவா?


பாபு இயற்கையிலேயே நல்ல பண்புடையவன். நேர்மையானவன். எல்லாருக்கும் இசைந்தவனாகப் பணி செய்தான். ஆகவே வங்கியின் மூன்று தளங்களில் அதிகம் பயன்படாமல் இருந்த ஒரு தளத்தின் மூலையில்  அங்கேயே தங்கி தேநீர் தயாரிக்கத்  தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள அதிகாரபூர்வமற்ற  அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஊழியர்களில் நொறுக்குத் தீனி மற்றும் சோடா,லஸ்ஸி போன்ற தேவைகளை உணரத் தொடங்கியதும் அவற்றையும்  அங்கேயே தயாரிக்க ஏற்பாடு செய்தான். இதனால் பாபுவிடம் செலவு போக மாதம்தோறும் சில ஆயிரங்கள் சேர ஆரம்பித்தன. எங்கள் எல்லோருக்கும் அதில் மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டது. அனாதையாக வந்த குடும்பம் இப்போது சக்தி நகரில் ஓரிடத்தில் வாடகைக்கு நல்ல குடிசை கிடைத்து வயிறார உண்ணமுடிந்தது. அவன் தாய்க்குப் பல வருடங்கள் கழித்து மகனின் உழைப்பால் நல்ல துணிமணிகள் கிடைத்தன. யார் கண்ணும் பட்டுவிடக் கூடாதே என்பதே என் கவலையாக இருந்தது.    


பனிக்காலம் தொடங்கினால் பாபுவுக்கு வேலை அதிகம் ஏற்பட்டுவிடும். தேநீர் கொதிக்க அதிக நேரம் வேண்டும். ஒரே நிமிடத்தில் ஆறிவிடும். இதற்கிடையில் ஆரிய ஸமாஜ் ரோடில் இருந்த இன்னும் இரண்டு மூன்று வங்கிக்கிளைகளிலும் பாபுவுக்கு தொடர்ந்து பிஸினஸ் கிடைத்தது. வருமானம் அதிகரித்தாலும் தனி ஒருவனாகச் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு யாரை வைப்பது என்று தவித்தான். ஏனென்றால் வேலை கற்றுக்கொண்டு தனக்கே துரோகம் செய்துவிட்டு தொழிலைப் பிடிங்கிக்கொண்டுவிட்டால் என்ன செய்வதென்ற பயம் எழுந்தது. 


டில்லியில் பாபுவுக்கு வேலை கிடைத்து ‘ராஜா மாதிரி’ இருப்பதாக யாரோ தம்பட்டம் அடித்துவிட,  அதனால் ஊரிலிருந்து இரண்டு பேர் - ஒரு பெண்ணும் ஒரு ஆணும்- அவனை நம்பி சாஸ்திரி பார்க்கில் படுத்து நட்சத்திரங்களைப்  பார்க்கும் ஆசையில் முன்தகவல் இல்லாமல் வந்துவிட்டார்கள். ஆனால் பாபுவின் அதிரஷ்டமே அது. அவன்  அவர்களைக் கைவிடவில்லை. அவர்கள் பாபுவுக்கு ஒன்றுவிட்ட தம்பியும் தங்கையுமாம். மறு நாள்முதல் அந்தப் பெண் - பாமா- பாபுவுக்கு உதவியாக எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிட்டாள். அந்தப் பையன் -முத்து- மற்ற மூன்று வங்கிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு பாபு  அவனுக்குப் பயிற்சியளித்தான்.


இது இரண்டு வருடக் கதை!


முன்பெல்லாம் எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரி வந்தாலும் அவர்களிடம் தனக்கு சிபாரிசு செய்து ஒரு கடைநிலை ஊழியன் பணியாவது வாங்கிக்கொடுக்குமாறு தொந்தரவு செய்வான் பாபு. இப்போதோ, தேநீர் வேலையிலேயே தனக்கு அதைப் போல மூன்று மடங்கு வருமானம் கிடைப்பதாகவும்  அதனால் எக்காரணம் கொண்டும் வேறு வேலைக்குப் போகமாட்டேன் என்றும் கூறினான். இன்னும் சில வருடங்களில் கரோல்பாகில் ஒரு சௌத் இண்டியன் ரெஸ்டாரண்ட் தொடங்குவதே தன்னுடைய கனவு என்றும் கூறினான். 


எல்லோரும் அவனை வாழ்த்தினோம். நல்லவன், உழைப்பாளி, இந்தி படிக்காதே என்று அறிவுறுத்தும் மாநிலத்திலிருந்து வந்து, தானாகவே இந்தியும் கற்று, சுயதொழிலும் செய்து முன்னேறிக்கொண்டிருப்பவனை யார்தான் வாழ்த்தாமல் இருக்க முடியும்!


ஆனால் ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு வந்த ஒரு விடுமுறை நாளில் எங்கள் மண்டல மேலாளருக்கு ஒரு தகவல் வந்தது. உடனே அவர் தன்னுடைய டிரைவரிடம் காரைக் கொடுத்தனுப்பி, ‘பாபுவைப் பார்த்து வாருங்கள்’ என்றார். நாங்கள் இருவர் கிளம்பினோம், சக்தி நகருக்கு. 


சரியான முகவரி இருந்ததால், குடிசைப் பகுதியாக இருந்தபோதும்   இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். பாபுவின் தாய் அழுதுகொண்டிருந்தார். சுற்றிலும் தமிழறியாத கூட்டம். ஒன்றும் புரியவில்லை. எங்களைக் கண்டதும் குடிசையில் இருந்த பாமா தயக்கத்துடன் வெளியில் வந்தாள். 


“அவரை  யாரோ அடித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்” என்றாள், அவளும் தன்பாட்டுக்கு அழுதுகொண்டே. எப்போதும் ‘பாபு’ என்று பெயர் சொல்லி அழைப்பவள், இன்று ஏன் ‘அவர்’ என்கிறாள் என்று மனதில் சுருக்கென்றது எனக்கு. 


“எல்லாம் இவளால் வந்ததுதான். பாருங்க இவ கழுத்துல தாலி தொங்கறதை!” என்றார் பாபுவின் தாய்.        


அப்போதுதான் கவனித்தோம். பாமாவின் முகத்திலும் கழுத்திலும் மஞ்சள்கோலம் பளபளத்தது. காலில் மெட்டி ஏறியிருந்தது. அணிந்திருந்த புடவையும் புதியதாக இருந்தது. 


“இவளைத் தங்கை என்றுதானே அறிமுகப்படுத்தினான் பாபு?” என்று மெல்லக் கேட்டார் நண்பர். முதல்முறையாக பாபுவிடம் ஏதோ தவறு இருப்பதாக என் மனதில் ஒரு சந்தேகக்கீற்று தோன்றியது.      


(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 

 




ஞாயிறு, ஜூன் 19, 2022

கவரும் கவரும் சந்தித்தால் காதல் பிறக்குமா?

கவரும் கவரும் சந்தித்தால் காதல் பிறக்குமா?

(புதுடில்லிப் புராணம்- 5)

அமெரிக்காவில் 68 ஆவது நாள் (18-6-2022)




கவிதா கொடுத்த கவரை அப்படியே பத்திரமாக திருக்குறள்-பரிமேலழகர் உரை நூலுக்குள் வைத்தேன். அந்த நூலை என் பிரீஃப்கேசில் வைத்தேன். நிச்சயம் அது காதல் கடிதமாகத்தான் இருக்கவேண்டும். எவ்வளவு ஆசை இருந்தால் ஒரு பெண் தானே முன்வந்து காதல் கடிதம் கொடுப்பாள்? உடனே படிக்க ஆசை எழுந்தாலும் ஏதோ ஒன்று மனத்துக்குள்ளிருந்து ‘நில், நில், நில்’ என்று மூன்று முறை சொன்னது. 


மோனிகா என்ற ஆண்டாள் என்ற கவிதா இப்படிச் செய்யலாமா? அதிகம் தெரியாத ஒருவனுக்குக் காதல் கடிதம் கொடுப்பது சரியா? 


அப்படியானால் நீ மட்டும் அவளுக்குக்  'கவர்' கொடுத்தாயே அது சரியா என்கிறீர்களா? சரியில்லை போலத்தான் தோன்றும். சில சூழ்நிலைகளை முன்னிட்டு நாம் சில வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறோம். அதில் இந்தக் கவரும் ஒன்று. முதலில் அவள் திறந்து பார்க்கட்டுமே! அதன் பிறகு நாம் அவளுடையதைப்  பார்த்தால் போயிற்று! 

*** 


அடுத்த பத்து நாட்கள் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வருகையினால் மிகவும் சுறுசுறுப்பாகக் கழிந்துபோயின. என்மீது அனைவருக்கும் பரம திருப்தி. ஏனென்றால் அந்த ஆண்டின் அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இலக்கை 200 சதவீதமாக நான் எட்டியிருந்தேன். இதனால் வங்கியின் இலாபம் சுமார் பத்து கோடி ரூபாய் வரை அதிகரிக்கவிருந்தது. 


சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அலுவலகத்தில் வெற்றியடைந்தால்தானே வெளியிலும் மரியாதை கிடைக்கும்? ஆகவே நான் சிலகாலம் ரஷ்ய மொழிபேசும் பெண்களிடமிருந்து விலகியே இருந்தேன். அலுவலகப் பணியில் முழு மனதையும் செலுத்தினேன். 


ஒரு மாலை நேரம் சற்றே ஓய்வெடுக்க எண்ணி, தரைத்தளத்திற்கு வந்தேன். அங்கு வெள்ளரிக்காய், பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி, பப்பாளிப்பழம் இவை கலந்த சாலட் -ஐ வாங்கிச் சாப்பிட்டேன். டில்லியில் இதுதான் குளிர்காலச் சிற்றுண்டி.  அதே வண்டிக்காரரிடம் தேநீரும் இருந்தது. ஆனால் நான் வெளியில் தேநீர் சாப்பிடுவதில்லை. குளிர் காலத்தில் தேநீர் தயாரிப்பதற்கு அதிக நேரம்  காத்திருக்க வேண்டும். எங்கள் அலுவலகத்திலேயே சிறிய உணவுக்கூடம் (‘பேண்ட்ரி’) இருந்தது.  அங்கு பாபு என்ற தமிழ்ப்பையன் அருமையாகத் தேநீர் போடுவான். அங்குதான் சாப்பிடுவேன்.


“பாபு, ஒரு ஸ்பெஷல் ஜிஞ்சர் டீ போடு” என்று சொல்லிக்கொண்டே என் டேபிளுக்கு வந்தேன். அடுத்த நிமிடமே இரண்டு கோப்பைகளில் தேநீர் வந்தது. இரண்டாவது யாருக்கு என்று அவனை ஏறிட்டேன். 


“உங்களைத் தேடிக்கொண்டு மதுரையில் இருந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். பாத்ரூம் போயிருக்கிறார். அவருக்கு” என்றான் பாபு. குறிப்பறிந்து காரியம் செய்வதில் பாபுவுக்கு இணை பாபுதான்.


பெரியவர் வந்தார். அண்மையில் அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும். தும்பைப்பூ மாதிரி வேட்டியும் சட்டையும், கண்ணாடி அணியாத முகமும், அதிகம் நரை விழாத கூந்தலுமாக ‘வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார் குமாரசாமி.  டில்லிக் குளிருக்கு சூடான தேநீர் இதமாக இருந்திருக்கவேண்டும். ஒரே மூச்சில் அருந்தினார். “இன்னொரு டீ சொல்லட்டுமா? நாங்கள் சில சமயம் இரண்டு, மூன்று கூட அடுத்தடுத்துக் குடிப்போம்” என்றேன் எழுந்து நின்று வணக்கம் சொல்லியபடியே.


சிரித்துக்கொண்டே, “எல்லாம் வயசுக் கோளாறு தம்பி” என்றார் அவர்.


எனக்குத்  திக்கென்றது. மதுரையில் இருந்து வந்திருக்கிறாரா? ஒருவேளை மோனிகா என்கிற ஆண்டாள் என்கிற கவிதாவுக்குச் சொந்தமோ?


ஆபீஸ் முடிந்து கிளார்க்குகள் எல்லாரும் சென்றுவிட்டார்கள். சீனியர் மேனேஜர்கள் ஓரிருவர்தான் இருந்தார்கள். என் தளத்தில் நான் ஒருவன்தான். ஆகவே அவர்  சுதந்திரமாக உணர்ந்தாற் போலிருந்தது.


“நீங்கள் அனுப்பிய ஜாதகத்தை  கவிதா எனக்கு அனுப்பியிருந்தாள்.  அவளுக்கு மனப்பூர்வமான சம்மதம் என்று கூறினாள்.  விஷயம் புரிந்தது. நல்ல ஜோசியரிடம் காட்டினேன். பத்தில் எட்டுப் பொருத்தம் இருக்கிறது, முடித்து விடுங்கள் என்றார். அதுதான் வந்தேன். மேற்கொண்டு பேசுவதற்கு உங்கள் பெற்றோர்களின் முகவரியும் போன் நம்பரும் வேண்டும்" என்றார் குமாரசாமி.


நான் புன்முறுவல் பூத்துக் கொண்டே, "என் பெற்றோர்களின் முகவரியும் போன் நம்பரும் உங்களுக்கு எதற்காக?" என்றேன்.


"என்ன தம்பி விளையாடுறீங்க? உங்க கல்யாணத்துக்கு உங்க பெற்றோர்களிடம்தானே பேசவேண்டும்?" 


நான் கலகலவென்று சிரித்தேன். "அப்படியானால் என் மனைவியிடம் பேச மாட்டீர்களா?" என்று பர்ஸிலிருந்து அவளும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டினேன்.


குமாரசாமி அதிர்ந்து போனார். "உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? பின்னே எப்படி கவிதா சம்மதம் சொன்னாள்?" டில்லிக் குளிரிலும் அவருக்கு வியர்த்தது. "ஒரு போன் செய்து கொள்ளட்டுமா?" என்றார்.


கவிதா லைனில் வந்தாள். தன்னிடம் சொல்லாமல் என்னை வந்து சந்தித்ததற்குத் தகப்பனாரைக் கண்டித்தாள். பிறகு என்னிடம் பேசினாள்.


"நீங்கள் எவ்வளவு மோசமானவர்! திருமணம் ஆனதை என்னிடம் மறைத்து விட்டீர்களே,  நியாயமா?" என்று கத்தினாள்.


"மறைத்ததும் அல்லாமல் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்வதற்காக ஜாதகத்தை வேறு  கொடுத்தீர்களே, என்ன நெஞ்சழுத்தம் உங்களுக்கு? இப்பொழுதே உங்கள்மீது போலீசில் புகார் செய்ய முடியும் என்னால்!”


“பாருங்கள் மோனிகா!..” என்று நான் ஆரம்பிப்பதற்குள் “யார் அந்த மோனிகா?” என்று போனைப் பிடுங்க வந்தார் குமாரசாமி.  


“மோனிகாவும் அவள்தான்! ஆண்டாளும் அவள்தான்! கவிதாவும் அவள்தான்!” என்று இன்னும் பலமாகச் சிரித்தேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பாபு இதுதான் வாய்ப்பு என்று இருவருக்கும் மீண்டும் ஜிஞ்சர் டீ கொண்டு வைத்தான்.


“ஆண்டாள்  அவர்களே! அந்த ஆண்டாள் யாரைத் திருமணம் செய்துகொண்டாள்? ஏற்கெனவே பலமுறை திருமணம் ஆன கண்ணனைத்தானே?”


“கண்ணன் தெய்வப்பிறவி! நீங்கள் ஓர் அசிங்கமான மனிதப்பிறவி! மனைவி உயிரோடிருக்கும்போதே இன்னொரு கல்யாணம் கேட்கிறதா உங்களுக்கு? இப்போது நீங்கள் மட்டும் என் முன்னால் இருந்தால் அப்படியே கழுத்தை நெரித்திருப்பேன்!” 


விவாதம் விபரீதமாகப் போவதைப் புரிந்துகொண்ட குமாரசாமி போனை வாங்கிக்கொண்டு “கவிதா, இனி நீ இவருடன் பேசவேண்டாம். டில்லி ஆசாமிகள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்வது வழக்கம். ஏதோ  ஜாதகத்துடன் விஷயம் நின்றதே, கடவுள் புண்ணியம்! இனிமேல் இவருடன் எந்தப் பேச்சு வார்த்தையும் வேண்டாம்!” என்று போனை வைத்தார்.


ஒரு ஆழமான வெறுப்புப் பார்வையை என்மீது வீசினார். தேநீரைக் குடியுங்கள் என்று கை காட்டினேன். அதை வேகமாக எடுத்தவர், கைகழுவும் குழாயருகில் போய்க் கொட்டினார். “வணக்கம், நான் வருகிறேன்” என்று கிளம்பினார்.


“ஏன் வர வேண்டும்? போகிறேன். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. என் பெண்ணைத்தான் சொல்லவேண்டும்” என்று பையைக் கையில் எடுத்துக்கொண்டார். நான் சிரித்தேன். “பாபு நீயும் கொஞ்சம் சிரியேன்” என்றேன். சிரித்தான்.


“என்ன கிண்டல் பண்ணுகிறீரா?” என்று வெகுண்டார் குமாரசாமி.


“விஷயத்துக்கு வரலாமா? நான் அனுப்பிய ஜாதகம் யாருடையது என்று பார்த்தீர்களா? ஜாதகம் இப்போது உங்களிடம் இருந்தால் காட்டுங்கள்” என்றேன்.


எடுத்தார். “ரங்கநாதன் குமாரன் மாதவன் சுப ஜனனம்” என்று இருந்தது.


“ஆமாம் நீங்கள் தானே மாதவன்?”


நான் சிரிக்கவில்லை. பாபுதான் பலமாகச் சிரித்தான். “மாதவன் சார் ….வங்கியில் ஆபீசர். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதே டில்லியில் பிறந்தது வளர்ந்தவர்..அடிக்கடி இவரைப் பார்க்க வருவார்” என்று ஒப்பித்தான்.


அப்பாடா, குமாரசாமியின் முகத்தில் ஏற்பட்ட நிம்மதியைப் பார்க்கவேண்டுமே! மகள் சொன்னதை நம்பி டில்லிக்குப் புறப்பட்டு வந்தவர், ஜாதகனின் பெயரைக்கூடச் சரியாகப் பார்க்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு!


“மன்னிக்கவேண்டும் தம்பி! இது என்னுடைய பிழைதான். ஆனால் என் மகளுக்கும் மாதவனுக்கு ஜாதகப் பொருத்தம் சரியாக இருப்பதால், நாம் மேற்கொண்டு பேசலாமா? மாதவனின் பெற்றோர்களை நான் சந்திக்க ஏற்பாடு செய்வீர்களா? நான் பெண்ணைப் பெற்றவன். என்னுடைய கவலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். 


நான் நினைத்தது நடக்கப்போகிறது. மாதவனுக்கு ஒரு நல்ல பெண்ணைத்  தேடித்தரும்படி  அவனுடைய அம்மா  பலமுறை என்னைக் கேட்டிருக்கிறார். 


“நல்லது சார், மாதவனின் பெற்றோர்களை நாம் சந்திக்கலாம்! கவிதா மாதிரி ஒரு அறிவுள்ள பெண் கிடைக்க மாதவன் நிச்சயம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்!” என்றேன் மகிழ்ச்சியுடன்.


“நில்லுங்கள், நில்லுங்கள்! கவிதாவா? ஜாதகம் பார்த்துக்கொண்டிருப்பது கவிதாவின் அக்கா பவித்ராவுக்கு என்று தெரியாதா உங்களுக்கு?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் குமாரசாமி.


இது என்னடா புதிய குண்டைத் தூக்கிப்போடுகிறாரே என்று அவரை ஆழமாக நோக்கினேன். கவிதாவும் ஒரு வார்த்தை கூட என்னிடம் கூறவில்லையே, தனக்கு ஒரு அக்கா இருப்பதாக, ஏன்? 


ஏதோ ஒன்றால் உந்தப்பட்டவனைப்போல் என் பிரீஃப்கேசை எடுத்தேன். பரிமேலழகரைப் பிரித்தேன். கவிதா கொடுத்த கவருக்குள் இருந்து விழுந்தது ஒரு ஜாதகம்! பவித்ராவின் ஜாதகம்! 


“ஆஹா, அழகான பெண்கள் அரை நிமிடத்தில் ஆண்களை  முட்டாளாக்கி விடுவார்கள்” என்று ஷேக்ஸ்பியரோ, டால்ஸ்டாயோ, வேறு யாரோ சொல்லியிருக்கிறார்களே, எவ்வளவு சாத்தியமான வார்த்தை!


கவிதாவுக்கு போன் செய்தேன். “நானும் உங்கள் அப்பாவும் நேராக உங்களைப்  பார்க்க வருகிறோம். என்னைக் கழுத்தை நெரிக்கப்போகிறீர்களா, அல்லது மாதவன் வீட்டுக்கு எங்களோடு வருகிறீர்களா திருமணம் பேச?” என்று அதிகாரத் தொனியில் கேட்டேன்.   


“ஆமாம் அம்மா! நீங்கள் இரண்டு பேரும்  ஜாதகம் யாருடையது என்று பார்க்காமலே பேசிக்கொண்டு இருந்திருக்கிறீர்கள். நானும் ஜாதகனின் பெயரைப் பார்க்காமலே கிளம்பி வந்துவிட்டேன். இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது. ரொம்ப நன்றிடா கண்ணு ! அக்கா தான் தங்கைக்கு வரன் பார்ப்பாள். நீயோ உங்க அக்காவுக்கு வரன் பார்த்துக் கொடுத்துவிட்டாய்! நான் செய்த புண்ணியம்” என்று நாத் தழுதழுக்கப் பேசினார் குமாரசாமி. 


கவிதா என்னிடம் பேசினாள். "சார், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைப் பார்த்தவுடனே, என் அக்காவுக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால் நீங்கள் மணமானவர் என்பதை என்னிடம் கூறவில்லையே! நீங்கள் கொடுத்தது உங்கள் ஜாதகம்தான் என்று எண்ணியே அப்பாவுக்கு அனுப்பினேன். எல்லாம் என் முட்டாள்தனத்தால் ஏற்பட்ட பிழை. சரி, நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் இருவரும் வாருங்கள். ஐஎன்ஏ மார்க்கெட்டில் எல்லாப் பழங்களும் கிடைக்கும். மாதவன் வீட்டுக்குப் போகும்போது வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் வருவதற்குள் வெற்றிலை பாக்கு, பூ எல்லாம் நான் வாங்கி வைக்கிறேன்" என்றாள் கவிதா புதிய குதூகலத்துடன். அவளுக்கு இனி லைன் க்ளியர் ஆகிவிடுமல்லவா, அந்தக் குதூகலம்தான்!

 

(இப்படியாகத்   திடீர்த் திருப்பங்களுடன் கூடிய சப்தார்ஜங்க் மோகினி கதை நீங்கள் எதிர்பாராதபடி, ஆனால் சுபமான முடிவை எட்டிவிட்டது. திருப்தி தானே!)


(நாளைய பதிவு: டீ பாபுவைப் பற்றியதாக இருக்கலாம்.)


  •  இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து...