திங்கள், மே 16, 2022

அமெரிக்காவில் ஓர் இந்திய கிரகணம்

அமெரிக்காவில் ஓர் இந்திய கிரகணம் 

(இன்று கிழமை ஞாயிறு -5)

அமெரிக்காவில் 34ஆவது நாள் 


(குடும்பம் ஒரு தொடர்கதை)

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அன்று சந்திர கிரகணம். 


இரவு எட்டு மணிக்குப் பிடித்து விடியற்காலையில் தான் விடும் என்று பாட்டி  சொல்லிருந்தார். வெளியூரிலிருந்து தற்செயலாக வந்திருந்த தூரத்து உறவினரான ஒரு கர்ப்பிணிப் பெண் பாட்டியிடம் வசமாக மாட்டிக்கொண்டார். அவ்வளவுதான்:



படம்-நன்றி-இணையம்
"இந்தாம்மா, ஏழு மணிக்கெல்லாம் நீ சாப்பிட்டுவிடவேண்டும். கிரகணம் விட்டபின், காலையில் குளித்தபிறகுதான் வாயில் தண்ணீர் விடலாம்" என்று பாட்டி சொன்னதும் அந்தப் பெண்மணி சரியென்று தலையாட்டினாள். 


"ஒன்றுக்குப் போவதானாலும் நீ வெளியில் போகக் கூடாது. நிலா வெளிச்சம் பொட்டுக்கூட உன்மேல் படக்கூடாது" என்று அடுத்த கட்டளையை வெளியிட்டார் பாட்டி. உடனே அவசரமாக அந்தக் கடமையை முடித்துவிட்டு உள்ளே வந்தாள்  அவள்.


அடுத்து மிக முக்கியமான இன்னொரு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. “நீ அந்த சின்ன ரூமுக்குள்தான் ராத்திரி தங்கவேண்டும். ஜன்னல் கதவை நான் சாத்திவிடுவேன். நீ தவறிப்போய்த் திறந்துவிடாதே. ரூம் கதவையும் வெளியில் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிடுவேன். எதானாலும் கூப்பிடு, ஆனால் கதவைத் திறக்காமல்தான் பதில் சொல்லுவேன். தெரிந்ததா?” என்றார் பாட்டி.


“ஒங்க வீட்டுல கேட்பார்  இல்லையாடி பொண்ணே? இப்படியா கிரகணமும் அதுவுமா புள்ளத்தாச்சிய பஸ்ல அனுப்புவாங்க? ஒங்கம்மாவை நேர்ல பார்த்தா நாலு வார்த்தை கேட்காமலா இருப்பேன்?” என்று பாட்டி அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


அந்தப் பெண்மணி சின்ன ரூமுக்குள் போய் ஒடுங்கிக்கொண்டார். கதவுகள் எல்லாம் சாத்தப்பட்டு, இருந்த ஒரே சிம்னி விளக்கும் அணைக்கப்பட்டு வீடே இருட்டாக்கப்பட்டது. குறித்த நேரத்துக்கு முன்பே எல்லாரும் சாப்பிட்டு முடித்துவிட, மீதமிருந்த உணவு தெருவில் வீசப்பட்டது.    


நான் அப்போது ஆறாவது படித்துக்கொண்டிருந்த நேரம். கிரகணத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். அவ்வளவே. ஆனால் கர்ப்பிணிப் பெண்களை அதன் நிலாவொளி எப்படி பாதிக்கும் என்றெல்லாம் தெரியாது. பாட்டி சொல்வதுதான் சட்டம்.


எனக்கிருந்த ஒரே பயம், அந்த ரூமில் பல்லிகள் இரண்டு இருந்ததும், அவை இந்தப் பெண்மணியின் மீது விழுந்து அதிர்ச்சி அளித்துவிடக் கூடாதே என்பதும்தான். ஓட்டுவீடானதால், கூரையில் தேள்களும் இருக்கும். ஆனால் பல்லிகள் அவற்றைப் பார்த்துக்கொள்ளும்  என்று தெரியும். எப்படிப்பட்ட நீளமான தேளையும்  ஒரு சிறிய பல்லியே சமாளித்துக் கொன்றுவிடுவதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் விதிவிலக்காக அந்தத் தேளே இந்தப் பெண்மணியைக் கடித்துவிட்டால்? அது கிரகணத்தை விடவும் கொடுமை அல்லவா? 


ஆனால் பாட்டியிடம் இதை எடுத்தச் சொல்ல எனக்கு தைரியமில்லை.  


கிரகணம் தொடங்கிவிட்டது. எல்லார் வீட்டிலும் விளக்குகள் அணைந்து இருள்மயமாக இருந்தது. ஒரு மணிநேரம் ஆகியிருக்கும், அந்தப் பெண்மணி ‘பாட்டி’ என்று அலறும் குரல் கேட்டது. 


விசுக்கென்று எழுந்துகொண்ட பாட்டி, “என்னம்மா, என்ன ஆச்சு?” என்று கதவை இலேசாகத் திறந்து நின்றுகொண்டார். 


“பாட்டி எனக்கு பயமா இருக்கு. யாராச்சும் துணைக்கு இங்க படுத்துக்கணும்” என்றாள்.


“நல்லாயிருக்குடி ஒன் பயம்! ஒன் வயசுல எனக்கு மூணு  பிரசவம் ஆயிட்டது தெரியுமா?  எத்தனை கிரகணம் பாத்துருப்பேன்? தனியாத்தான் படுத்துப்பேன்” என்றது பாட்டியின் குரல் திடமாக. “வேணும்னா இந்தச் சின்னப் பையனை வந்து படுத்துக்கச் சொல்லட்டுமா?” 

 

எனக்கு உதறல் எடுத்தது. தேளை விடவும் பல்லியைக் கண்டால் எனக்குப் பயம். அதிலும் அந்த ரூமில் இருந்த இரண்டு பல்லியும் சீனாவில் இருக்கும் டிராகன்களைப் போல் அவ்வளவு பெரியதாக இருக்கும்.  “நான் மாட்டேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.


வேறு வழியின்றிப் பாட்டியே சென்று துணைக்குப் படுத்துக்கொண்டார்.


அவர்கள் இருவரும் பத்திரமாக இருக்கவேண்டுமே என்ற கவலையில் எனக்குத் தூக்கமே வரவில்லை. 


நல்லவேளை, கிரகணம் விட்ட பிறகு, சன்னல் கதவுகளைத் திறந்தார் பாட்டி. முதலில் அவர் போய் குளித்துவிட்டு காபி ரெடி பண்ணினார். பிறகு அந்தப் பெண்மணி, அதன் பிறகு நான். அதற்குள் பொழுது புலர்ந்துவிட்டது. 


அன்று விடுமுறை நாளாகவும் இருந்ததால் நான் மறுபடியும் படுக்கையில் விழுந்தேன். இரவில் வராத தூக்கம் இப்போது கண்களை நன்கு அழுத்தியது. இட்லி சாப்பிடப் பாட்டி எழுப்பியபோது இரண்டுமணி நேரம் தூங்கிவிட்டேனாம்! 


ஆறேழு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அந்தப் பெண்மணிக்குப் ‘பெண் குழந்தை - சுகப்பிரசவம்’ என்று தபால் வந்தது.


“அவள் மட்டும் பயம் பயம் என்று நடுவில் எழுந்து வராமல் இருந்திருந்தால் நிச்சயம் அவளுக்குப் பிள்ளைதான் பிறந்திருக்கும். பாவிப்பெண், கிரகண சந்திரனின் வெளிச்சம் கொஞ்சூண்டு பட்டாலும்  ஆண்  பெண்ணாக மாறிவிடும் என்று அவளுக்கு யாரும்  சொல்லவில்லை போலிருக்கிறது” என்று பாட்டி புலம்பினாள். 


அப்படியொரு கருமாற்றம் கிரகண ஒளியால் ஏற்படுமா என்று தெரியவில்லை. சுகுமாரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அவனுடைய அம்மா ஒரு லேடி டாக்டர். 


“எப்படியோ நல்லபடியாப் பொறந்ததே, அது போதும். இல்லேன்னா என் மேல தானே எல்லாப் பழியும் விழுந்திருக்கும்?  அவளுக்கும்  ஒண்ணும் வயசாகல்லியே! அடுத்த தடவை புள்ளையாப்  பெத்துக்கட்டும்” என்று தன்னைத் தேற்றிக்கொண்டார் பாட்டி.


வீட்டு வேலை செய்யும் அஞ்சலை அன்று வந்தபொழுது சின்ன ரூமை நன்றாகச் சுத்தம் செய்து ஒட்டடை அடிக்கவைத்தேன். அப்போது தேளின் வாலைக் கவ்வியபடி ஒரு பல்லி சுவரிலிருந்து தவறி அவள்மேல் விழுந்தது. சமாளித்துக்கொண்டவள், இரண்டையும் உலக்கையால் நசுக்கிவிட்டாள். இனிமேல், அடுத்த கிரகணத்திற்கு யாரும் அந்த அறையில் படுத்தால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். 


பிற்காலத்தில் இம்மாதிரி நம்பிக்கைகளுக்கு ஓரளவு அறிவியல் ஆதாரம் இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். கிரகண காலத்தில் மட்டுமே சில கதிர்வீச்சுகள் அண்டவெளியிலிருந்து தங்குதடையின்றி பூமியை வந்தடையும் என்றும், அவற்றின் விளைவால் சிலருக்குச் சில விதமான பாதிப்புகள் நிகழ இடமுண்டு என்றும் படித்தேன்.


*** 

இன்று, இதை எழுதும் நேரத்தில், (மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை), அமெரிக்காவில் பூரண சந்திர கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது…..


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.



13 கருத்துகள்:

  1. 2000 வருடத்திற்கு முன்பே ஒரு பாட்டி 'கிளப்பி விட்ட' (அலர்) இன்று வரை தொடர்கிறது...!

    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று

    பதிலளிநீக்கு
  2. சின்ன வயதில் என் தாத்தா சொல்ல நான் ஒரு மர உலக்கையை சூரியகிரகணம் ஆரம்பித்தவுடன் வெட்ட வெளியில் நிற்க்க வைத்தேன்.

    யாருமே பிடிக்காமல் நின்றது.கிரகணம் விட்டவுடன் விழுந்து தானாக விட்டது.

    சரியாக காய்க்காத எங்க வீட்டு முருங்க மரத்தை கிரகண நேரத்துல செருப்பால் அடிக்க சொன்னார் தாத்தா. அடுத்த சில மாதங்களில் முருங்கைக்காய் காய்த்துக் குலுங்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கும் புரளி என்று ஒரு கோஷ்டி வந்துவிடப்போகிறது. நம் முன்னோர் நம்மை விட அறிவாளிகள் என்று நம்பாத கூட்டம் நிரம்பிய உலகம் இது

      நீக்கு
  3. பெயரில்லா16 மே, 2022 அன்று PM 12:34

    சிறுஅநுபவம் சின்னவயசிலே!

    பதிலளிநீக்கு
  4. சூரிய கிரகண சந்திர கிரகண அனுபவங்கள் எல்லோர் வீட்டிலும் இருக்கும்.  அதை மீறுவதே சிலரின் பொழுதுபோக்கு.  கலர்க்காகிதம் வைத்துக் கொண்டு பார்ப்பார்கள்!  அந்த நேரத்தில் வெளியே சென்று எதையாவது வாங்கி வருவது அவர்களை பொறுத்தவரை அட்வென்சர்!

    பதிலளிநீக்கு
  5. இதே போன்றுதான் எங்கள் வீட்டிலும் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் சொல்லியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சிறு வயதில் எங்கள் தெருவில் கிரகணம் போது உலக்கையை நிறுத்தி வைத்துப் பார்த்திருக்கிறேன். அது நிற்கிறதா விழுகிறதா என்று பார்க்கும் முன் வீட்டுக்குள் விரட்டிவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
  7. சந்திர கிரஹண அனுபவங்கள் எல்லோருக்கும்
    இருக்கும் என்று நம்புகிறேன். நானும் அறையில் இருட்டில் இருந்திருக்கிறேன்:)

    தூங்கும் போது இந்தக் கிரஹண்ம் கடந்தது. சௌகரியமாகக்
    குளித்து விட்டு காப்பி குடித்ததும் நிம்மதி.

    உங்கள் பதிவு மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பு. சில நம்பிக்கைகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள். ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் பல விஷயங்களை சொல்லி இருந்தாலும் சொல்லாமல் சென்ற விஷயங்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  9. பிரசவத்தை விடவும் பேறு காலத்தில் கிரகணம் வருவது மகா சோதனை..

    பதிலளிநீக்கு
  10. இன்னும் உங்களுக்கு பல்லி பயம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு