செவ்வாய், மே 16, 2017

இது நியாயமா...?

பதிவு எண்  39/2017
 இது நியாயமா...?
-இராய செல்லப்பா

பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி.

அப்போதெல்லாம் தமிழகப் பள்ளிகளில் பேஸ்பால் (ஆம், அமெரிக்காவின் BASEBALL தான்!) விளையாட்டு இடம்பெற்றிருந்தது. சதுரமான விளையாட்டுத்தளம். நான்கு மூலைகளிலும் நான்கு மட்டையாளர்கள் நிற்கவேண்டும். கிரிக்கெட் மட்டையைப் போல் அல்லாமல் உருண்டையாக இருக்கும் மட்டையால், பந்தை அடிக்கவேண்டும். கிரிக்கெட் பந்தைவிட இரண்டுமடங்கு பெரிதாக ஆனால் அவ்வளவு அழுத்தமாக இல்லாத பந்து. பந்தை ஒருவன் வீசுவான். நாம் அடித்துவிட்டு, மட்டையைத் தரையில் போட்டுவிட்டு, சதுரத்தின் அடுத்த மூலையை நோக்கி ஓடவேண்டும்.

தொங்குவது தினத்தந்தியா?

அன்று பந்து வீசியவன், பந்தைப் போலவே பெரிய உருவம் கொண்டவன். ஆகவே பந்து சற்றே வேகமாக வந்து விழுந்தது - மட்டையின்மேல் அல்ல, என் தலைமேல்! வலியென்றால் அவ்வளவு வலி. தலைசுற்றிக் கீழே விழுந்துவிடுவேன் போல் கண்கள் இருண்டுகொண்டுவந்தது.  அடுத்த நிமிடம், மட்டையைக் கீழே எறிந்தேன், தரையில் இருந்து கல் ஒன்றை எடுத்து அவன் மேல் எறிந்தேன். எப்படியோ குறிதவறாமல் அது அவனது நெற்றியைப் பதம் பார்த்துவிட்டது. அவன் ‘ஐயோ’ என்று அலறினான். துடிதுடித்தான்.

பந்துபட்ட வலியால் துடித்தபடி நான் கீழே விழுந்தேன். கல் தாக்கிய வலியால் அவன் கீழே விழுந்தான். பி.டி.மாஸ்டர் ஓடிவந்து என்னை ஓங்கி ஓரடி கொடுத்தார். அவனையோ, அன்போடு தூக்கியெடுத்து உபசரித்தார். நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

இன்றுவரை எனக்கு விளங்கவேயில்லை: முதலில் அடிபட்டவன் நான். வலியால் முதலில் துடித்தவனும் நான்தான். எனக்கு மேலும் ஒரு தர்ம அடி கிடைத்தது. ஆனால் அவனுக்கு ஏன் அடிக்குப் பதில் அன்பு கிடைக்கிறது? இதுதான் நியாயமா?

ஒருவேளை, அவனுக்கு முன்பாக நானும் அலறித்துடித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தால், எனக்கும் அதே அன்பு கிடைத்திருக்குமோ?
****

என்னுடைய ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ கதையில் ஒரு தோட்டம் வருமே, அதில் ஒரு புளியமரம் இருந்தது. அதில் ஊஞ்சல் கட்டி ஆடுவோம். சற்றுத் தொலைவில்  ஒரு மாமரமும் இருந்தது. ஆனால் அதில் ஊஞ்சல் கட்டுவதில்லை. காரணம் தெரியாது. ஆனால் அந்தப் புளியமரம் அடுத்த வருடம் வெட்டப்பட்டு விட்டதாம். வீட்டில் புளியமரம் வைக்கக்கூடாதாம். வைத்தால் அந்த வீடும் நிலமும் கையைவிட்டுப் போய்விடுமாம்.

ஒவ்வொருமுறை அந்தப் புளியமரத்தை வெட்டவேண்டும் என்று நினைக்கும்போதும் அதில் காகங்கள் கூடு கட்டியிருக்குமாம். கூடுகளை அழிக்கவேண்டாமே என்று மரத்தை வெட்டாமல் விடுவார்களாம். கடைசியாக ஒரு சமயம், காகத்தின் கூடுகள் இல்லாத நிலை வந்தவுடன், மரத்தை வெட்டினார்களாம். காக்கைகளின் கூடுகளை மட்டுமல்ல, குளவிக்கூடுகளையும் அழிக்க உடன்படமாட்டார் பாட்டி. குடிசையின் வெளிப்புறச் சுவரின் இடுக்குகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குளவிக்கூடுகள் இருக்கும். அருகில் போவதற்கே சிறுவனான எனக்குப் பயமாக இருக்கும். பெரிய குளவி ஒன்று அடிக்கடி ரீங்காரமிட்டபடி சுற்றிச்சுற்றி வரும். கொஞ்சநாள் பொறுத்தால், கூட்டை உடைத்துக்கொண்டு குஞ்சுக்குளவி வெளியே போய்விடும், அதுவரை பக்கத்தில் போகாமல் இரு என்பார் பாட்டி.

புளியங்கொட்டையைப் பார்க்கும்போதெல்லாம் இந்தக் கேள்வி என் மனத்தில் எழுந்துகொண்டே இருக்கும்:  காக்கையின் கூட்டையும், குளவியின் கூட்டையும் காப்பாற்ற நினைப்பவர்கள், புளியமரத்தை வெட்ட நினைப்பது சரியா? நியாயமா?
****

எங்கள் வீட்டருகில் ஒரு தேநீர்க்கடை இருந்தது. காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் கடை திறந்துவிடும். உடனே கூட்டம் சேர்ந்துவிடும். குறைந்தது பத்துப் பேராவது இருப்பார்கள். தேநீர் தம்ளரைக் கையில் பிடித்தபடி அன்றைய ‘தினத்தந்தி’க்காக ஆவலோடு காத்திருப்பார்கள். பேப்பர் வந்தவுடன் அதை நான்குபேர் பிரித்துப் பங்குபோட்டுக் கொண்டு படிப்பார்கள். சிலர், தன் கையில் மூன்றாவது பக்கம் இருந்தாலும், அடுத்தவர் கையில் இருக்கும் முதல் பக்கத்தையே எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதும் உண்டு. அதுவரை தேநீர் மட்டுமே அருந்தியவர்கள், பேப்பர் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு பொறையோ, ‘பன்’னோ ஆர்டர் செய்வதும் உண்டு. சிலர், எதுவுமே சாப்பிடாமல் வெறும் பேப்பரையே கையில் வைத்துக்கொண்டு ஒருமணிநேரம் பொழுதுபோக்குவதும் உண்டு.

பகல் உணவுக்காகப் பள்ளியிலிருந்து நான் வரும்போது பேப்பர் படிக்கப்போவேன். அப்போது பேப்பரின் வடிவம் சிதைந்திருக்கும். கண்டபடி மடிந்திருக்கும். கசங்கியிருக்கும். ஓரங்களில் எண்ணெய்ப் பசையும் கலந்திருக்கும். நடுவில் சில பக்கங்கள் கிழிந்திருக்கும்.

மாலையில் பஜ்ஜி போடுவார் கடைக்காரரின் மனைவி.  உடனே கடைக்காரர், மீதியிருக்கும் தினத்தந்தியின் பக்கங்களைப் பதினாறாக மடித்துக் கிழிப்பார். கிழித்த துண்டுகளை ஒரு நீண்ட இரும்புத்தண்டில் செருகுவார். பஜ்ஜி கேட்போருக்கு இந்தத் துண்டுப் பேப்பரில்தான் பஜ்ஜியை வைத்துச் சுற்றித்தருவார். பஜ்ஜியைச் சாப்பிட்டவர்கள், அந்த எண்ணெய்ப் பசையைப் போக்க மேலும் சில தினத்தந்தித் துண்டுகளை விரும்பிக்கேட்டு, கை துடைத்து, எறிவார்கள்.

மாலையில் நான் போய், ‘மாலைமுரசு’ படிப்பேன். அப்போது மீதியிருக்கும் தினத்தந்தித் துண்டுகள் என் கண்ணில்படும். ஒன்றில் ‘சதக் என்று குத்தி’ என்று பெரிய எழுத்தில் இருந்தது. ‘குத்தி’ என்று இருந்ததே, குத்தி’னானா’, குத்தி’னாளா’ என்று அறிய ஆவலாக இருக்கும். ஆனால் மீந்திருக்கும் எந்தத்துண்டிலும் அதனுடைய தொடர்ச்சிப் பகுதி இருக்காது. யார், யாரைக் குத்தினார்கள், எந்த ஊரில், என்ன தகராறு  என்று தெரிந்துகொள்ளாவிடில் தலை வெடித்துவிடும் போலிருக்கும். உடனே பக்கத்தில் இருக்கும் வேறு ஏதாவது தேநீர்க்கடைக்குப் போய் அன்றைய தினத்தந்தியைத் தேடுவேன். அங்கும் இதே நிலைதான். காலை தினத்தந்தி, மாலைக்குள் துண்டுதுண்டாகி இருக்கும். அது மட்டுமல்ல, அங்கிருந்த ஒரு துண்டில்  ‘வரும் திங்கட்கிழமை ஆறுமணிக்கு’ என்ற வாசகம் கண்ணில் படும். அதன் தொடர்ச்சித்துண்டு இருக்காது. அந்த ஆறுமணிக்கு என்ன நடக்கப்போகிறது, எந்த இடத்தில் நடக்கப்போகிறது  என்று தெரிந்துகொள்ளாமல் தூக்கம் வராதுபோல் ஆகிவிடும்.

அப்படி ஒருநாள் மாலைமுரசு படித்துக்கொண்டிருந்தபோது, பஜ்ஜி வாங்கவந்த ஒருவருக்கு, தினத்தந்தியின் கிழித்த துண்டு இல்லாததால், அன்றைய முரசின் ஒரு பகுதியையே கிழித்து, அதில் பஜ்ஜியைச் சுற்றிக் கொடுத்தார் கடைக்காரர். வந்தவர் பஜ்ஜியைச் சுவைத்துவிட்டு, ‘நேற்று மாதிரி டேஸ்ட்டா இல்லையே’ என்று முகம் சுளித்தார். கடைக்காரருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமோ, அல்லது உண்மையைத்தான் சொன்னாரோ தெரியவில்லை. சொன்னார்: ‘அதொண்ணும் இல்லீங்க! நேற்று ‘தந்தி’ பேப்பரில் சுற்றிக்கொடுத்தேன். இன்று ‘முரசு’ பேப்பரில் கொடுத்தேன் இல்லையா, அதாங்க டேஸ்ட்டு வித்தியாசப்படுது.’

அறிவுச்சுவையை ஊட்டுவதற்காக ஆரம்பித்த பேப்பரை, இப்படி பஜ்ஜிக்கான பேப்பராக மாற்றுவது நியாயமா? ஆதித்தனார் பார்த்தால் என்ன சொல்லுவார்?

© Y Chellappa

37 கருத்துகள்:

  1. நல்ல மனசு எப்போதும் அநியாயங்களை ஏற்றுக் கொள்வதில்லை...

    ஆனாலும் அந்த "டேஸ்ட்டு " - ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே! வெயிலின் கடுமை போலும், தங்கள் தளத்தில் சில நாட்களாகப் பதிவுகளைக் காணோமே!

      நீக்கு
  2. பி இ டி மாஸ்டர் செய்தது
    சரிதான் இல்லையோ
    அவன்செய்தது தெரியாமல்
    நீங்கள் செய்தது பழிவாங்கல் இல்லையோ

    டீக்கடைக்காரரின் நகைச்சுவை
    உணர்வு அருமை

    நினைவை விட்டு நீங்காத நினைவுகளைப்
    பகிர்ந்த விதம் அருமை

    பகிர்வுக்கும் த்டரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. மூன்று நிகழ்ச்சிகளையும் தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன், தங்கள் பாணியில் சொல்லியுள்ளது அருமை. பாராட்டுகள்.

    பஜ்ஜிக்கடை நிகழ்வுகள் சூப்பரோ சூப்பர் !

    பதிலளிநீக்கு
  4. ஐயா.. விபத்தால் அடிபட்டவருக்கும், வேண்டுமென்றே கோபத்தின் விளைவால் அடிபட்டவருக்கும் வித்தியாசம் உண்டுதானே!

    புளியமர நம்பிக்கை சரியா என்று தெரியவில்லை. எங்கள் காம்பௌண்டில் ஏகப்பட்ட புளியமரங்கள்!

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. பேஸ்பால் விளையாட்டை எனது பள்ளி நாட்களில் பார்த்திருக்கிறேன் ஐயா
    இப்பொழுது தங்கள் பதிவில் பார்த்ததும்தான் அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன
    ஏன் அந்த விளையாட்டு மெல்ல மெல்ல மறைந்துபோனது என்பது புரியாத புதிர்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்பால் என்பது வெளிநாட்டு விளையாட்டு என்பதால் அதற்குப்பதில் நம்நாட்டு விளையாட்டான ஹாக்கியை கொண்டுவந்தார்கள். தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. அனுபவத்தை பகிர்ந்ததுக்கு நன்றி. இலங்கையில் பேஸ் போல் போன்ற விளையாட்டை எல்ல என்பார்கள்
    உங்கள் தேனீர் கடை கதை எனக்கு நான் எழுதிய சந்திக்கடை சங்கரபிள்ளை கதை என் நினைவுக்கு வருகிறது. அன்புகிறேன் வாசிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் கதையை படித்தவுடன் தெரிவிக்கிறேன். நன்றி.

      நீக்கு
  7. நல்லவேளை ஆதித்தனார் "போய்" விட்டார்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  8. உடற்பயிற்சி ஆசிரியர் செய்தது நியாயமே...

    தேநீர் கடை விவகாரம் மத்திய அரசின் காதுக்கு எப்படியோ சென்று விட்டது. ஆகையால் செய்தித்தாள்களை பயன் படுத்தக் கூடாது என்று தடை விதித்து உள்ளார்கள்.. நடைமுறைப்படுத்துவார்களா என்று பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா, நகைச்சுவையான தங்கள் கருத்துரைக்கு என் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. >>> சிலர், தன் கையில் மூன்றாவது பக்கம் இருந்தாலும், அடுத்தவர் கையில் இருக்கும் முதல் பக்கத்தையே எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதும் உண்டு..<<<

    அப்படியே அச்சு அசலாக டீக்கடை வாசம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரசித்த வரிகள் ஜி

      செல்லில் எழுதுவதால் விரிவாக கருத்துரை இட முடிவதில்ஸை.

      நீக்கு
  10. முதல் நிகழ்வு....ஆமாம் சார் அப்போதெல்லாம் பள்ளியில் பேஸ் பால் உண்டு. நான் அந்த அணியில் வேறு இருந்தேன். எறிபந்து அணியிலும் இருந்தேன். நான் எறிந்த பந்து எதிர் அணியில் இருந்த மாணவியின் முகத்தை நன்றாகப் பதம் பார்த்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அதை அவள் சரியாகப் பிடிக்கவில்லை என்றால் அது யாருடைய குற்றம்? இதெல்லாம் விளையாட்டில் சகஜம் தானே! அவள் தன் முகத்தைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்ததும் நான் உடனே சென்றேன் ஆசிரியை என்ன சொல்லுவார் என்று பார்த்துக் கொண்டே சென்றதால்... அவள் அதே பந்தை எடுத்து என் மீது எறிந்ததும் நான் நிலைகுலைந்து போனேன்....கவனிக்காததால் ஆனால் அன்று எங்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியை அந்தப் பெண்ணைத்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டு முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றார். நான் பந்தை எறிந்தது விளையாட்டில் அல்லாமல் அவள் மீது எறிய வேண்டும் என்றில்லை....ஆனால் அவள் எறிந்தது? என் மீது வேண்டுமென்றே எறிந்தது....இது என்ன நியாயம்??!! இதில் தொடக்கத்தில் பந்தை எறியும் போது சொல்லுவது "லவ் ஆல்!!"

    புளியமரம் வெட்டியது பற்றி உங்களுக்கு எழுந்த அதே கேள்வி என் மனதிலும் பல சமயங்கள் எழுந்ததுண்டு இப்போதும் எழுவதுண்டு.

    பஜ்ஜி.. ஹஹஹஹ...வாசித்துக் கொண்டு வரும் போதே அவரது பதில் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க...அவரும் அதையே பதிலாகச் சொல்லியிருக்கிறார். அல்லது நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள்!!

    ரசித்து வாசித்தேன் சார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே, லவ் ஆல் -என்பதற்கு இப்படியொரு அர்த்தமா! தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  11. பேஸ்பால் - நீங்கள் எழுதியபின்புதான் இது நினைவுக்கு வருகிறது. நான் பேஸ்பால் Batஐ எல்லாப் பள்ளிகளிலும் பார்த்திருக்கிறேன்.

    சில விஷயங்களை நீங்கள் எழுதும்போது, ஆமாம் அப்படி நடந்ததே என்று நினைக்கிறேன். பெண் உண்டாகியிருந்து வீட்டுக்கு வந்திருந்தால், வீட்டில் எந்த மாறுதலும் செய்யமாட்டார்கள் (குளவிக்கூடு, சிட்டுக்குருவிக்கூடு போன்ற எதையும் தொட மாட்டார்கள்). வீட்டில் வேம்பு, மா இருப்பது நல்லது. புளியமரம் நல்லதில்லை (ஒரு வேளை.. வேர் ஊன்றி வீடைக் கெடுக்குமா அல்லது சூடு ஜாஸ்தியான்னு தெரியலை). பிசாசுகள்லாம் உட்காருகிற (?) மரம் என்று புளியமரத்தைத் தவிர வேறு மரத்தைச் சொல்லிக் கேள்விப்பட்டதில்லை.

    'படத்தில் உங்கள் கேள்வி தினத்தந்தியா' - என் கேள்வி, வெளியே சட்டை தெரிகிறதே அது நீங்களா? டீக்கடை Observation ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் உள்ள கை என்னுடையதல்ல நண்பரே! பிரதமர் ஆகும் நோக்கம் இல்லை என்பதால் நான் இன்னும் எந்தக்கடையிலும் டீ ஆற்றவில்லை. அது இணையத்திலிருந்து எடுத்த படம். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  12. பேஸ்பால் நானும் விளையாடியிருக்கேன் ,ஆனால் உங்கள் அனுபவம் எனக்கு ஏற்படலே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  13. உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்.

    // அதுவரை தேநீர் மட்டுமே அருந்தியவர்கள், பேப்பர் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு பொறையோ, ‘பன்’னோ ஆர்டர் செய்வதும் உண்டு. //

    இதில் பொறை என்று எதனைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'பொறை' என்பது பிஸ்கட்டின் தம்பி. ரொட்டியின் அண்ணன். புரியவில்லையா? உடனே தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு டீக்கடையிலும் சென்று கேளுங்கள். கொடுப்பார்கள். மொறுமொறுவென்று இருக்கும். டீயில் நனைத்துச் சாப்பிடுவார்கள். தனியாகவும் சாப்பிடஅனுமதி உண்டு. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  14. நாங்கள் திருச்சியில் இருந்து எங்கள் வீட்டுக்கு பெங்களூரில் குடி வந்தபோதுகாபௌன்ட் ஔவர் அருகே ஒரு அத்திமரம் இருந்தது அது வேறு நன்றாய் வளர்ந்து இருந்தது சுவருக்கு கேடு என்று அந்த மரத்தை வெட்ட ஆட்களைக் கூப்பிட்டேன் அத்திமரத்தை ( சாமி மரம் ) வெட்டக் கூடாது வெட்டினால் உயிருக்கு ஹானி என்றார்கள் யாருமே முன்வராதபோது என்னையே அதில் மூன்று முறை வெட்டச் சொன்னார்கள் இறந்தால் நாந்தானே இறப்பேன் நான் வெட்டியபின் அதை வெட்டச் சம்மதித்து வெட்டினார்கள் மக்களின் அறியாமைக்கும் மூட நம்பிக்கைக்கும் ஒரு சாம்பிள் சின்ன வயதில் பத்திரிக்கை படிக்க முடி வெட்டும் சலூனுக்குப் போவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளியமரத்தில் பிசாசுகள் அமருமாம். அதனால் வெட்டுவார்களாம்.நெல்லைத்தமிழன் யூகம். அத்திமரத்தை வெட்டுவது பற்றி எனக்குத்தெரியாது. சரி, அத்திப்பழங்களை என்ன செய்தீர்கள்? அத்தி மரத்தை வெட்டிய அனுபவம்தானோ, எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதுகிறீர்கள்? தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஜி.எம்.பி சார் சொன்னதைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது. எங்களது பெங்களூர் இடத்தில் (1/2 கிரவுண்ட்) பக்கத்து வீட்டிலிருந்து தென்னை வளர்ந்து எங்கள் இடத்தில் நெடுக இருந்தது (பக்கத்து வீட்டில் 6 அடி, மீதி 50 அடி எங்க இடத்துல). கர்னாடக மக்கள் தென்னையைப் புனிதமாகக் கருதுவர். அதனால் அதை விட்டுவிட்டு வீட்டைக் கட்டினோம். அப்புறம் அது தொந்தரவாக இருந்ததால் நாங்களே ஆளை வைத்து வெட்டினோம். அவர்கள் அதற்கு மறுப்பு சொல்லவில்லை, ஆனால் அவர்கள் வெட்டமாட்டோம் என்று சொல்லிவிட்டனர்.

      நீக்கு
    3. எருக்கஞ்செடிகளையும் முருங்க மரத்தையும் வீரசைவர்கள் சிவனாகவே வழிபடுவதால் அவற்றை வெட்டமாட்டார்கள். ஹுப்ளி, தார்வாடு, குல்பர்கா பகுதிகளில்.

      நீக்கு
  15. சுவை கூடலுக்கு இதுவும் ஒரு காரணமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் என்றுதான் நினைக்கிறேன். பல கைகள் பட்டு தினத்தந்திக்கு ஒரு சுவை(!) உண்டாகிவிடுகிறது. மாலையில் வரும் முரசி அவ்வளவு கைகள் உரசுவதில்லையே!

      நீக்கு
  16. சம்பங்களைச் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    "இந்த வாரம் என்னைப் பற்றி நான்" பகுதியிலும் கூட.
    உங்கள் படிப்பின் ஆர்வத்திற்கு என் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  17. தேனீர்க்கடை முன்றலில்
    நாளேடுகள் படித்த வாறு
    சுடச் சுடக் கடித்துச் சுவைத்து
    தேனீர் அருந்தும் வேளை
    இருக்கிற சுகம் இருக்கே - அதை
    என்னால மறக்க முடியல...

    பதிலளிநீக்கு
  18. first incident enakkum erpatirukku ..

    bajji soaken paper ai ulakam pura padippangka polirukku haha athu nan mattum seirennu ninaichirunthen :)

    பதிலளிநீக்கு
  19. தினத்தந்தி எப்படி விற்பனையில் சிகரம் தொட்டது என்னும் ரகசியத்தை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன் ... எல்லாமே டீக்கடை கைங்கர்யம் தனா? /// கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு