ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5 (கடைசிப் பகுதி)

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5

 (குறுநாவலின் கடைசிப் பகுதி)

 -இராய செல்லப்பா 


இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்


(12)

பதினோரு மணிக்குப்  பொன் ஃபைனான்ஸின் கிளைமேலாளர்கள் வந்தபோது  தன் சூத்திரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டாள் பொன்னி.

 தன்னோடு வங்கியிலிருந்து விருப்ப ய்வுபெற்று  சென்னையில் வசிக்கும் சுமார் இருநூறு பேரை முறையாகச் சந்திக்கவேண்டும்.  ஓய்வுப்பலனாக ஒவ்வொருவரும் குறைந்தது முப்பதிலிருந்து ஐம்பது லட்சம் வரை பெற்றவர்கள். ஆக மொத்தம்  60 கோடி முதல் 100 கோடி வரை அவர்களிடம் இருக்கும்.  பெரும்பாலும் அவை, மற்ற வங்கிகளில் குறைந்த வட்டிக்கு பிக்சட் டெபாசிட்டுகளாக இருக்கலாம். அதில் நாலில்  ஒருபங்கை பொன் ஃபைனான்சுக்குத் திருப்பினாலே  15 முதல் 25  கோடி சேர்ந்துவிடும். இதுதான் பொன்னியின் திட்டம். 

அடுத்த முப்பது நாட்களுக்குள் ஒவ்வொரு கிளைமேலாளரும் இவர்களிடமிருந்து மட்டும் குறைந்தது ஐந்து கோடியாவது டெபாசிட் திரட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தாள். இவர்களின் டெபாசிட்டுக்கு அரை சதவீதம் கூடுதல்  வட்டியும்,  ஒருவேலை அவர்களுக்கு நகைக்கடன் தேவைப்படுமானால் வட்டியில்  அரை சதவீதம் தள்ளுபடியும் கொடுப்பதாக, அதிகம் விளம்பரப்படுத்தாமல் தெரிவிக்கச் சொன்னாள். கிளைமேலாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப புதிய போனஸ் திட்டத்தையும் அறிவித்தாள்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரே மாதத்தில் நாற்பது கோடி ரூபாய்போல புதிய முதலீடு கிடைத்துவிட்டது! திட்டமிட்டபடி ‘ஐயா’ வின் பணம் இப்போது அவருக்குக் கொடுக்கப்படப் போகிறது. ஆனால் அதற்குள்?

 (12)

 மலர்வண்ணன் தன் ஆபீசுக்கு வருவாரென்று வாசு கனவிலும் நினைத்ததில்லை.

 “ரொம்ப அவசரம். ‘ஐயா’ வோட பணத்தைத் திரும்பக்  கொடுத்துவிட்டீர்களா?”  என்றார் மலர்.

 “இன்னும் இல்லை, என்ன விஷயம்?” என்றான் வாசு திகைப்புடன்.

“கொடுத்துவிடாதீர்கள். அவர் எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கப்போகிறார். அதனால் அவருக்கு உதவிசெய்தால் நீங்கள் ஆளும்கட்சிக்கு எதிரியாகி விடுவீர்கள்.”

வாசு சிரித்தான். “இது என்ன தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலா மலர்வண்ணன்? அவருடைய டெபாசிட்டை அவர் திருப்பிக் கேட்கிறார். நாங்கள் ஒரு நிதி நிறுவனம். கொடுக்காமல் இருக்க முடியுமா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் வாசு! உங்களை விடப்  பெரிய ஃபைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் கொடுக்க மறுத்துவிட்டார்களே, அது எப்படி?”

பொன்னி தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவரிடம் காட்டினாள். “அவர் பணம் அவருடைய வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டது. இனிமேல் நாங்கள் எதுவும் செய்ய இயலாது. மன்னிக்கவும்” என்று கூறிவிட்டுத்   தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.

"காபி குடிக்கிறீர்களா மலர்வண்ணன்? இங்கு உங்கள் தோட்டத்து டீ கிடைப்பதில்லை” என்று சிரித்தான் வாசு. கறுப்புப்பணத்தைக் கையாளும் பினாமிக்கு எவ்வளவு துரோக புத்தி!

ஆவேசத்துடன் எழுந்த மலர்வண்ணன், “உங்கள் கம்பெனியை உண்டு இல்லை என்று ஆக்குகிறேனா இல்லையா பாருங்கள்” என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார்.

வாசுவும் பொன்னியும் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். தங்கள் கம்பெனியில் எந்த விதமான குளறுபடிகளும் கிடையாது. நகைக் கடன்களிலும் எந்தக் குறைபாடும் கிடையாது என்று தணிக்கை அறிக்கையும் உள்ளது. டெபாசிட்டர்களுக்கு உரிய தேதியில் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்தது கிடையாது. லாப நஷ்டக் கணக்கிலும் ஒரு ரூபாய் கூட பொய்க்கணக்கு எழுதியது கிடையாது.

 “ஆனாலும் நாம் இப்போது பயப்படத்தான் வேண்டும்” என்றாள் பொன்னி. “நாம் இருவரும் சாதாரணக் குடும்பங்களில் இருந்து கிளம்பி வந்து, இந்தக் கம்பெனியை உருவாக்கி நல்ல பெயரோடு வளர்த்திருக்கிறோம். இவர்கள் நினைத்தால் இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக நமக்கு எத்தனையோ வழிகளில் கெட்ட  பெயரை உண்டாக்க முடியும். அதனால் …”

“அதனால் இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அதற்கு என்னுடைய பழைய வங்கியின் சேர்மனை உடனே சந்திக்கவேண்டும்.  அவரிடம்  பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு ரிப்போர்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் நீங்கள் அவரிடம் அப்பாயிண்மெண்ட்  ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றாள் பொன்னி. 

பிறகு தன் மயிலாப்பூர் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வியை அழைத்து “உடனே கிளம்பு. அந்த எடிட்டரிடம் பேசு. நம்மைப்பற்றித் தவறான தகவல் வராமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்” என்று அவளிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்தாள். 

(13)

 பிரபல பொருளாதார நாளேட்டின் விருது பொன் ஃபைனான்சுக்குக் கிடைத்தபோது முதலில் வந்த வாழ்த்துச்செய்தியே பொன்னியின் பழைய வங்கியின் சேர்மனிடம் இருந்துதான். “இன்னும் சில வாரங்களில் உங்களைச்  சந்திக்க விரும்புகிறேன்” என்றும் சொன்னார். அந்தச் சந்திப்புதான் இன்று  நிகழப்போகிறது.

“வாங்க வாங்க மிஸ் பொன்னி! மிஸ்டர் வாசு!” என்று எழுந்து நின்று வரவேற்றார் பிரதீப்குமார். சேர்மன்.  “எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இவ்வளவு வெற்றிகரமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது எங்களுக்கு மிகுந்த பெருமை யளிக்கிறது” என்று பாராட்டினார்.

 “ஒரு காலத்தில் நகைக்கடன் கொடுக்கும் வங்கிகள் என்றாலே ரிசர்வ் பேங்க்கில் மரியாதை கொடுக்க மாட்டார்கள். இப்போது அதையே  வீட்டுக்கடன், வாகனக்கடன் மாதிரி ஒரு முக்கியமான கடன் துறையாக அங்கீகரித்துவிட்டார்கள். அதற்கான காரணங்களில் உங்கள் அணுகுமுறையும் ஒன்று” என்றார் அவர்.

 பொன்னியும் வாசுவும் ஒரு புன்சிரிப்பின் மூலம் அவரின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு பொன்னி தன் கையிலிருந்த ஃபைலை சேர்மனிடம் கொடுத்தாள். அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தங்களைப் பற்றி அவதூறு கிளப்ப முற்படுவதை அதில் சுட்டிக்காட்டி இருந்தாள்.

 சேர்மன் அதை படித்துவிட்டு கலகலவென்று சிரித்தார்.  “நாங்கள் மகாராஷ்டிராவில் பார்க்காத அரசியல் தலையீடா!  நமக்குள்ள கடமைகளை நேர்மையாக நிறைவேற்றினால் எந்த அவதூறுக்கும் அஞ்சவேண்டியதில்லை. எதற்கும் உங்களுக்கு விருது கொடுத்த பத்திரிகையின் காதில் இந்த விஷயத்தைச் சொல்லிவைப்பது நல்லது” என்றார்.

“எங்கள் சார்பாக தமிழ்ச்செல்வி அந்த எடிட்டரிடம் இப்போது அதைத்தான்  பேசிக்கொண்டிருப்பாள்” என்றாள் பொன்னி.

 “சரி, இப்போது இந்தக் கடிதத்தைப் படியுங்கள். இது சுவாரஸ்யமானது” என்று அவளிடம்  ஒரு கடிதத்தை நீட்டினார் சேர்மன். அதைப் படித்த பொன்னியும் வாசுவும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போனார்கள்.

 “பொன்னி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்டு உற்சாகமடைகிறோம். நாங்களே நகைக்கடன் வழங்கும் துணை நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக இருந்தோம். ஆனால் அதற்குப் பதிலாக, உங்கள் நிறுவனத்தில் முதல் தவணையாக 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய விரும்புகிறோம். இது உங்களுக்கு ஏற்புடையதென்றால் எங்கள்  எக்சிகியூடிவ் டைரக்டரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்றது அக்கடிதம்.

 பொன்னி உற்சாக மிகுதியால் எழுந்து நின்றாள். “உங்கள் ஆஃபரை  ‘இன்-ப்ரின்சிபிள்’ ஆக இப்போதே ஒப்புக்கொள்கிறோம். அதிகாரபூர்வ பதிலை  நாளை அனுப்புகிறோம்” என்றாள் வாசுவைப் பார்த்துக்கொண்டே.

 (14)

 மறுநாள் இந்தியாவின் எல்லாப் பொருளாதார நாளேடுகளிலும்  பொன்னி-வாசுவின் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் வெளிவந்தன. “இந்தியாவின் பிரபல தனியார் வங்கி, பொன்னி ஃபைனான்சில் 500 கோடி முதலீடு” என்ற தலைப்பில் மேற்படி வங்கியின் முன்னாள் ஊழியரான பொன்னி, எவ்வாறு விருப்ப ஒய்வு பெற்றபின் ஒரு தங்கநகைக் கடன் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார் என்று மூன்று பத்திகளில் செய்தி வெளியிட்டன. 

 இவர்களுக்கு விருது கொடுத்த நாளேடு மட்டும், ‘அரசியல் தலையீடு இல்லாதவரை இம்மாதிரி புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நன்றாக வளரமுடியும்’ என்று பொடிவைத்து எழுதியது.

அடுத்த சில வாரங்களில் அந்த வங்கி வேகமாகச் செயல்பட்டது. தாங்கள் செய்யப்போகும் 500 கோடி முதலீட்டுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

முதல் நிபந்தனை, வாசுவிடமிருந்து பொன்னி, அந்த நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டராகப் பொறுப்பேற்கவேண்டும். இரண்டாவது நிபந்தனை, வாசு, ராஜினாமா செய்துவிட்டு, மும்பையில் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேர்ந்து, வட இந்தியாவை இலக்காக வைத்து, தங்கநகைக் கடன் நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதன் சேர்மனாக இருக்கவேண்டும்.

 இரண்டாவது நிபந்தனை சாந்திக்கு மிகவும் பிடித்துவிட்டது. சரண்யாவையும் பாலுவையும் அழைத்துக்கொண்டு மும்பைக்குச் செல்வதென்று அவள் மனதளவில் தயாராகிவிட்டாள். 

“நல்ல பள்ளிக்கூடமாகப் பாருங்கள். வீடும் பக்கத்திலேயே இருந்தால் நல்லது” என்று நாணத்தோடு புன்னகைத்தாள் சாந்தி.

“வேறு வழி?” என்று அவளுடைய வலதுகரத்தைப் பற்றினான் வாசு.

“என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றாள் பொன்னி, கண்களில் ஆனந்தக்கண்ணீர் மின்ன.

அப்போது அவளுடைய அலைபேசி ஒலித்தது. ‘ஐயா’வின் குரல்!

“வணக்கம் சார்! நானே உங்களைப் பார்க்கவேண்டும் என்று இருந்தேன். உங்கள் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று மலர்ச்சியோடு சொன்னாள் பொன்னி. “அல்லது மலர்வண்ணனை அனுப்பிவைக்கிறீர்களா?”

“அந்த துரோகியின் பெயரைச் சொல்லாதீர்கள்! நானே வருகிறேன்” என்று போனை வைத்தார் ‘ஐயா.’

வாசுவைப்பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள் பொன்னி.

 **** முற்றும் ****    

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 4

 வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 4

(குறுநாவல்)

  -இராய செல்லப்பா 


  இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 3  " படிக்க இங்கே சொடுக்கவும்.

(8)


நாட்கள் வேகமாக நகர்ந்தன. 
ஐயா வாக்களித்தபடி முப்பது கோடி ரூபாய் முதலீடு வந்துசேர்ந்தது. பொன் ஃபைனான்ஸ் இப்போது பத்துக் கிளைகளைக் கொண்டதாக வளர்ந்தது. தங்கள் பழைய வங்கியின் செல்வாக்கான வாடிக்கையாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கொண்டுவந்துவிட்டார்கள் கிளை மேலாளர்கள். அதனால் டெபாசிட் தொகை அதிகரித்துக்கொண்டே வந்தது. மீதமுள்ள கையிருப்பை எப்படி லாபகரமாகப் பயன்படுத்துவது என்றுதான் வாசு யோசிக்கவேண்டி இருந்தது.

மலர்வண்ணன் அடிக்கடி போன்செய்து மேற்கொண்டு நிதி வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் வாசு உறுதியாக மறுத்துவிட்டான். அரசியல்வாதிகளின் தொடர்பை ஓரளவுக்குமேல் வளர்ப்பது கம்பெனியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நினைத்தான்.

இதைப்போல விளம்பரம் செய்தார்களா பொன்னி பைனான்ஸ்?


ஆனால்,  மே - ஜூன் கல்வி மாதங்கள் வந்தபோது கடனுக்காகக் கூட்டம் அலைமோதியது. எல்கேஜி வகுப்புக்கே ஐம்பதாயிரம், லட்சம் என்று கட்டணம் வாங்கும்போது, மத்தியதர குடும்பத்தினரின் முதல் புகலிடம் நகைக்கடன் தானே! மக்களிடம் இவ்வளவு தங்கம் இருக்கிறதா என்று மலைக்கும்  அளவுக்கு தினந்தோறும் நகைக்கடனுக்கு கிராக்கி ஏற்பட்டது.   கையிருப்பு மூலதனம் வேகமாகக் குறைந்து நிதி நிலைமை நெருக்கடிக்கு உள்ளானது. சில தினங்களில் ஆடிப்போய்விட்டான் வாசு. அவன் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.

 பொன்னிதான் அவனுக்கு தைரியம் கொடுத்தாள். தன் பழைய வங்கியிடம் பேசினாள்.  உரிய ஆவணங்களையும் தங்கள் வரவுசெலவு கணக்குகளையும், எதிர்காலத் திட்டங்களையும் காட்டினாள். அதுவரை அடைந்த லாபத்தையும், எதிர்காலத்தில் வரக்கூடிய லாபத்தையும்  விளக்கிக் கூறினாள். தங்கள் கம்பெனிக்கு, ரிசர்வ் பேங்கின் விதிகளுக்கு உட்பட்டு, ஓவர்டிராப்ட் என்னும் தொடர்-கடன் கேட்டாள் பொன்னி.

இருபது வருடங்களுக்குமேல் தங்கள் வங்கியில் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றிய அவளையும் அவளுடைய கம்பெனியின் ஆஸ்திகளையும் நம்பிக் கடன் கொடுப்பதில் வங்கிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஐந்துகோடி கிடைத்தது. 

 தீபாவளி சீசன் வரையில் இனி கவலையில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது. எனவே, முன்பே நினைத்தபடி சாந்தியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்குச் சுற்றுப்பயணம் போனாள் பொன்னி. அவர்கள் மூவருக்கும் அதுதான் முதல் ஊட்டிப் பயணம்.

 சரண்யாவுக்கு குஷியோ குஷி. பாலுவுக்கோ அந்தக் குளிர் அற்புதமாக இருந்தது. “ஒரு மாதம் இங்கேயே இருக்கலாமா பெரியம்மா?” என்று ஏக்கத்துடன் கேட்டான். “ஆசை, ஆசை” என்று அவனைக் கிண்டல் செய்தாள் சரண்யா. “பள்ளிக்கூடம் போகாமல் தப்பிக்கப் பார்க்கிறான்!” என்று அவன் கன்னத்தில் மெதுவாகக் கிள்ளினாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பொன்னிக்கு வாழ்வில் தான் இழந்தது ஏராளம் என்று புலப்பட்டது. ஹும், காலம் கடந்துவிட்டது…. சாந்தியின் குழந்தைகள்தான் இனி தன் குழந்தைகள். 

 சாந்திக்கும் தான் இழந்துவிட்ட வாழ்க்கையைப் பற்றிய நினைவலைகள் எழுந்தன. சில வருடங்களே வாழ்ந்து மறைந்த கணவரின் முகம் முன்பெல்லாம்  கனவில் வருவதுண்டு. ஆனால் அதன்  பின்னணியில்  இன்ப நினைவு ஒன்றுகூட இல்லை. வறுமை, நோய், தொழிலில்  தோல்வி, மீண்டும் அதிக வறுமை, அடிக்கடி வீடு மாறல், பள்ளி மாறல். …இப்படித்தான்.

பொன் ஃபைனான்ஸ் தொடங்கியபின் வாசு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தன்னிடம் தனியாக ஏதாவது பேசமாட்டானா என்று மனம் ஏங்கும். நூலிழையில் தவறிப்போன பந்தம் தான் என்றாலும் இப்போது தொடர நினைப்பது  சரியா என்று அதே மனம் கேட்கவும் செய்யும். இரண்டு வளர்ந்த குழந்தைகளுடன் ஒரு கைம்பெண்ணை நேசிக்க, மணமாகாத ஒருவனால் முடியுமா என்று இன்னொரு பெரிய கேள்வியும் மனதில் விஸ்வரூபம் எடுக்கும். அதற்குப் பதில் சொல்லத்  தெரியாமல் விசும்புவாள்.

 ஊட்டிக் குளிரில் வாசுவின் முகம் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றிச் சித்திரவதை செய்தது. அதே சமயம் பொன்னியின் நிலையையும் எண்ணினாள். வாசுவும் அவளும் நெருக்கமாகப் பழகும் நிலையில் ஒருவேளை அவனுக்குப் பொன்னிமீது பற்றுதல் வந்திருக்குமோ என்றும் மனதின் ஓரத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் பொன்னியின் வயதின் மீதும்  மனஉறுதி மீதும் அவளுக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை.

மனதை இறுக்கி மூடிக்கொண்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள் சாந்தி.

(9)

அந்த ஆண்டு சிறப்பாக இயங்கும் தனியார் நிதி நிறுவங்களுக்கான விருதை  ‘பொன் ஃபைனான்சு’க்கு வழங்குவதாகப் பிரபல பொருளாதார நாளேடு அறிவித்தபோது, தான் பிறந்த பலனை எய்தியதாகவே கருதினாள்  பொன்னி.  வாசு என்ற ஒருவனைச் சந்திக்காமல் போயிருந்தால் இந்தப் பெருமை கிடைத்திருக்குமா என்று யோசித்தாள். கண்ணியமானவன். நேர்மையானவன். விடாமுயற்சி கொண்டவன்.

“வாசு, இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணம் நீங்கள்தான்” என்று பாராட்டினாள். 

“நிச்சயமாக இல்லை. அனுபவமும், மன உறுதியும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கையும் கொண்ட நீங்கள்தான் காரணம்” என்று அவளைப் பாராட்டினான் வாசு. 

விருது வழங்கும் விழா முடிந்து அன்றிரவு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்தின்போது ‘ஐயா’வை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

 அறுபதைக் கடந்தவர். ஆளும்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவர். பலமுறை முயன்றும் இன்னும் எம்எல்ஏ சீட் கிடைக்கவில்லை. என்றாலும் தலைவருக்கு மிகவும் வேண்டியவர் என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. பல நிதி நிறுவனங்களின் சிஈஓ-க்கள் அவரைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

 மலர்வண்ணனும் இருந்தார். வாசுவையும் பொன்னியையும் ‘ஐயா’வுக்கு அறிமுகப்படுத்தினார். “வணக்கம்மா” என்று முதலில் பொன்னியை நெருங்கிப் பேசியவர், பிறகே வாசுவுக்குக் கை கொடுத்தார். கொஞ்சம் ஆரஞ்சு ரசம் மட்டும் அருந்திவிட்டு, “இன்னொரு நிகழ்ச்சி இருக்கிறது. உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் மலரிடம் கேளுங்கள். செய்வார்” என்று கிளம்பினார். 

அன்று மாலை தொலைக்காட்சியில் ‘ஐயா’வின் மாவட்டத்தில் நடக்கவிருந்த ஓர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.  சில நிமிடங்களில் மலர்வண்ணனிடமிருந்து வாசுவுக்கு போன் வந்தது. “ஐயா உங்களிடம் பேசவேண்டுமாம். தூங்கிவிடாதீர்கள்” என்றார். வாசு விளக்கைப் போட்டுவிட்டுக் காத்திருந்தான்.

‘ஐயா’வின் போன் வந்தபோது நள்ளிரவு கடந்துவிட்டது.  அது வாசுவின் நிம்மதியைச் சீரழித்து நித்திரையைச் சீர்குலைத்தது. உடனே பொன்னியிடம் பேசத்  துடித்தான். ஆனால் அவளாவது கொஞ்சம் தூங்கட்டுமே என்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான். 

(10) 

விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் பொன்னியின் வீட்டு அழைப்புமணியை அழுத்தினான் வாசு. 

வழக்கமாகத் தரைத்தளத்தில் படுத்திருக்கும்  சாந்திதான் எழுந்து வாசல் கதவைத் திறப்பாள். இன்றோ அவளும் குழந்தைகளும் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பொன்னிதான் திறந்தாள்.

நிச்சயம் பெரிய சிக்கலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் வாசு இவ்வளவு காலையில் ஏன் வரவேண்டும்?

‘உள்ளே வாருங்கள்’ என்று சைகையாலேயே அவனை அழைத்து உட்காரவைத்துவிட்டு மாடிக்குப் போனாள் பொன்னி. சிலநிமிடம் கழித்து சூடான காபியுடன் இறங்கிவந்தாள்.

“முதலில் காபி, பிறகு பேச்சு” என்றாள்.

 பொன்னியின் அருகாமையே தனக்கு பலத்தைக் கொடுப்பதாக உணர்ந்தான் வாசு. காபியை மெல்லக் குடித்தான். அவளும் குடிக்கட்டும் என்று காத்திருந்தான். பிறகு நடந்ததைச் சொன்னான்.

‘ஐயா’ கட்சி மாறப்போகிறாராம். வரும் இடைத்தேர்தலில் இன்னொரு கட்சி சார்பில் நிற்கப் போகிறாராம். தேர்தல் செலவுக்குப் பணம் வேண்டுமாம். தான் பொன் ஃபைனான்சில் போட்ட முப்பது கோடியும் உடனே வேண்டுமாம்.

அது மட்டுமன்றி, தன் சொத்துக்களை அடமானமாக வைத்துக்கொண்டு ஐம்பது கோடி உடனடியாகத் தர முடியுமா என்றும் கேட்டாராம்.

“பணத்துக்கு எங்கே போவது?” என்று திகைப்புடன் கேட்டான் வாசு.

இப்படியொரு சூழல் ஏற்படும் என்று பொன்னியால் நம்பமுடியவில்லை. ஆனால் ஏற்பட்டுவிட்டதே!

“ஐயா முக்கியமான புள்ளி. அவர் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரட்டும். போட்ட டெபாசிட்டை அவர் கேட்கும்போது கொடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் கம்பெனியின் மானம், மரியாதை  போய்விடும். அப்புறம் இழுத்து மூடவேண்டியதுதான்” என்றான் வாசு. 

பொன்னிக்குப் புரிந்தது. “இதற்கா இவ்வளவு சோகம்?  ரொம்ப சிம்பிளான சொல்யூஷன் இருக்கிறதே” என்றாள் புன்முறுவலுடன்.

வாசு ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“ஆமாம்! முப்பது கோடி ரூபாய் உடனே டெபாசிட் செய்யக்கூடிய புதிய ஆசாமி ஒருவரை நாம் கண்டுபிடிக்கவேண்டும். அவ்வளவுதானே” என்று இன்னும் பலமாகச் சிரித்தாள் அவள்.

 “வெறுத்துப்போய் நிற்கிறேன். விளையாடுகிறீர்களே!”

பொன்னி எழுந்து நின்றாள். “மன்னிக்கவேண்டும் வாசு! நமது பிரச்சினை முப்பது கோடி ரூபாய் வேண்டும் என்பதுதானே! அதை இப்படிப் பாருங்களேன் -  ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் போடும் முப்பது பேர் வேண்டும்; அல்லது, ஆளுக்கு 50 லட்சம் போடும் 60 பேர் வேண்டும்; அல்லது, ஆளுக்கு 25 லட்சம் போடும் 120 பேர் வேண்டும்- சரிதானே?”

வாசுவுக்கு அவளுடைய பகுத்தறியும் திறன் பிரமிப்பூட்டியது. மிகப் பெரிய சிக்கலை எவ்வளவு எளிதாக உடைத்துப் போடுகிறாள்!  அவனும் எழுந்து நின்றான்.

“அதாவது அந்த 120 பேரைக் கண்டுபிடித்துவிட்டால் நம் சிக்கல் தீர்ந்துவிடும் இல்லையா? ஆனால் எப்படி அவர்களை உடனடியாகக் கண்டுபிடிப்பது?”

பொன்னி மீண்டும் சிரித்தாள். “சென்னை நகரின் ஜனத்தொகை எத்தனை லட்சம்? அதில் வெறும் 120 பேரை உங்களால் உடனே கண்டுபிடிக்க முடியாதா?”

வாசு வெறுப்பின் உச்சிக்கே போய்விட்டான். “பேசுவது சுலபம் பொன்னி! காரியம் கைகூட வேண்டாமா?”

“கூட வைக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் இரண்டுமாதம் இருக்கிறது.  முதலில் ஐயாவிடம் பேசுங்கள். வாரம் ஐந்து கோடி வீதம் கொடுப்பதாகச் சொல்லுங்கள். அவரால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அத்துடன் ஆளும்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குப் போவதால் அவருடைய செல்வாக்கு இனிமேல் பூஜ்யம்தான்” என்று உறுதியான குரலில் சொன்னாள் பொன்னி.

“இன்று காலை பதினோரு மணிக்கு நம் கிளைமேலாளர்களை அழைத்துப் பேசலாம். என்னிடம் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது பலிக்காமல் போகாது”  என்று அவனை சஸ்பென்ஸில் இருக்கவைத்துவிட்டு மீண்டும் மாடிக்குப் போனாள்.

(11)

அரைமணி கழித்து இறங்கிவந்தவள், பொன்னி இல்லை, சாந்தி! கையில் இட்டிலி, சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி இருந்தன. சரண்யா ஒரு பெரிய எவர்சில்வர் தட்டையும், பாலு ஒரு பெரிய எவர்சில்வர் தம்ளரில் குடிநீரும் கொண்டுவந்தார்கள்.

“நான் குளிக்காமல் சாப்பிடுவதில்லையே!” என்று தயங்கினான் வாசு.

“நாங்களும் குளிக்காமல் தானே பரிமாறுகிறோம்” என்று சிரித்தாள் சாந்தி. குழந்தைகளும் சிரித்தார்கள். அந்தக் கூட்டுச் சிரிப்பில் தன் கவலையெல்லாம் பறந்துவிட்டதுபோல் உணர்ந்தான் வாசு.

நேரம் ஆயிற்று. பொன்னி இறங்கிவருவதாகத் தெரியவில்லை. சாந்தி தான்  மீண்டும் வந்தாள்,  காபியுடன்.

“வந்தவுடன் காபி குடித்துவிட்டேனே” என்று தயங்கினான் வாசு.  

“இது நான் போட்ட காபி. வேண்டுமா வேண்டாமா?” என்று சற்றே அதட்டலாகக் கேட்டாள் சாந்தி. அந்த அதட்டல் அவனுக்குப் புதுமையாக இருந்தது.

“வேண்டாம் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றான் விளையாட்டாக.

“நானே குடித்துவிடுவேன்” என்று சிரித்தாள்.

“சரி, வேண்டும் என்றால்?”

ஒருகணம் அவனை ஆழமாகப் பார்த்த சாந்தி, “பாதி மட்டும்தான் குடிப்பேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள். அவள் முகத்தில் நாணம் பூத்திருந்தது.

(தொடரும்) 

(அடுத்த பகுதியுடன் முடிவடையும்)



இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 5  " படிக்க இங்கே சொடுக்கவும்.