இன்று கிழமை திங்கள் -3
அமெரிக்காவில் 21ஆவது நாள்
(அட்லாண்டிக் கடலோரம்)
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தங்க நகை வியாபாரிகளும் தொலைக்காட்சி சேனல்களும் சில முக்கிய ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தொடங்கிவைத்த வியாபார சூது தான் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற பெரும் கூச்சல்.
கொரோனாவுக்கு முந்திய காலங்களில் அட்சய திருதியைக்கு இரண்டு நாள் முன்பிருந்தே சென்னை தி நகர்- உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு போன்ற பகுதிகளில் தங்கம் வாங்குவோரின் கூட்டம் சொல்லிமாளாது.
அட்சய திருதியையின் பண்பாகக் கூறப்படுவது, அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதாகும். இதை அனுபவத்தில் கண்டவர்கள் யாராவது சொன்னால் தேவலை. அதுவரையில் கீழ்க்கண்ட சிறிய கணக்கை மனதில் வைப்பது நல்லது.
கையில் பணம் கொண்டுபோய் தங்கம் வாங்கினால் கடைக்காரர்கள் நம்மிடம் வசூலிக்கும் ‘சேதாரம்’ 12 சதம் முதல் 18 சதம் ஆகும். சராசரியாக 15 சதம் என்று வைத்துக்கொள்ளலாம்.
பழைய நகையைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாகவும், அல்லது கூடுதல் பணம் கொடுத்தும் புதிய நகை வாங்குவதாக இருந்தால், பழைய நகையை உருக்கும்போது 12 சதமும், அதற்கு விலை போடும்போது இன்னொரு 15 சதமும் சேதாரமாகக் கழிக்கப்படும். மொத்தம் சராசரியாக 25 சதம் என்று கொள்ளலாம்.
இவ்வாறாக, நகை வாங்கும்போதே அதன் மதிப்பில் 15 முதல் 25 சதம் அளவுக்கு நஷ்டத்தை உண்டாக்குவதுதான் அட்சய திருதியை! எவ்வாறு ஆண்டு முச்சூடும் அது நகையை வளர வைக்கும்?
அட்சய திருதியை என்றில்லை, நீங்கள் எந்த நாளில் தங்கம் வாங்கினாலும் அது நகைக்கடைக்காரர்களுக்கு அட்சய திருதியை தான்! காரணம் மேற்படி ‘சேதாரம்’ என்ற ‘இன்-பில்ட்’ இலாபம் தான்!
‘தங்க நகை வாங்குவது ஆபத்துக்காலத்திற்கான காப்பீடு’ என்ற நடுத்தர வர்க்கத்தின் தவறான புரிதலை அரசு எவ்வளவோ முயன்றும் நீக்க முடியவில்லை. உங்களிடமுள்ள நகைகளைக் கொண்டுவாருங்கள், அரசாங்கமே அதை உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, உங்கள் பெயரில் ‘கோல்டு டெபாசிட் ‘ ஆக ஏற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட வ்ருடங்களுக்குப் பிறகு அதைத் தங்கமாகவே பெற்றுக்கொள்ளலாம், அல்லது பணமாகவும் பெறலாம் -என்ற திட்டம் பல ஆண்டுகளாகவே நிரந்தரத் திட்டமாக வங்கிகள்மூலம் அமலில் உள்ளது. ஆனால் கோவில்கள், சில சர்ச்கள் தவிர தனி நபர்கள் யாரும் அதிக அளவில் இதில் நாட்டம் செலுத்தவில்லை.
அதன்பிறகு இன்னொரு புதுமையான, ஆனால் மக்களுக்கு உண்மையிலேயே அதிகப் பயனுள்ள ‘சாவரின் கோல்டு பாண்டு திட்டம்’ என்ற எட்டு ஆண்டு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அரசு அறிவித்தது. இதில் வங்கிகள் மற்றும் தபால் ஆபீஸ் மூலம் நீங்கள் பணம் போடலாம். உங்களிடமுள்ள நகைகள் எதையும் நீங்கள் தரவேண்டாம். வங்கியில் பணம் போடுவதுபோல இதில் பணத்தைத்தான் போடவேண்டும். ஒரே விஷயம், உங்களுக்கு எத்தனை கிராம் தங்கம் வேண்டுமோ, அதற்குச் சமமான தொகையை பிக்சட் ஆகப் போடவேண்டும். ஒரு கிராமின் மதிப்பு எவ்வளவு என்பது அவ்வப்பொழுது ரிசர்வ் பேங்கினால் அறிவிக்கப்படும். (மார்ச் 4, 2022 அன்று அமலான சீரிஸ்-10 இல் ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் (24 கேரட் ) விலை ரூ.5109 ஆக இருந்தது.) நீங்கள் ஒரே ஒரு கிராமுக்கு சமமான தொகையைக் கூட இந்த டெபாசிட்டில் போடலாம். இதற்கு ஆறு மதத்திற்கு ஒருமுறை 2.5% வட்டியும் வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் முடிவில், இந்த டெபாசிட் முதிர்ச்சி பெறும் தேதியில், அதற்கு ஒரு வாரம் முன்பு சொக்கத் தங்கத்தின் (24 கேரட்) சராசரி விலை என்னவோ, அதை நீங்கள் பணமாகவே பெற்றுக்கொள்ளலாம். (தங்கமாக அல்ல!).
இது ஓர் அருமையான திட்டம். இதில் முதலீடு செய்தால் அவர்கள்தான் அட்சய திருதியையை உண்மையில் அனுபவிக்கமுடியும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் வங்கிகளை அணுகலாம். அல்லது கூகுள் மூலம் ‘சாவரின் கோல்டு பாண்டு’ என்று தேடித் பெறலாம்.
****
தாங்கள் தொடங்கிவைத்த அட்சய திருதியை என்னும் மாயை, மக்களைப் பலவகையிலும் சீரழிப்பதைக் கண்ட சில நல்ல ஜோதிடர்கள், தங்கள் வழியிலேயே இதற்கு ஒரு தீர்வையும் கூறினார்கள். எவ்வளவு பேர் பின்பற்றுகிறார்களோ தெரியாது.
அவர்கள் கூறியதாவது: அட்சய திருதியை அன்று வெள்ளை நிறத்தில் ஏதாவது பொருளை வாங்கினால் போதும். தங்கம் தான் வாங்கவேண்டும் என்றில்லை. உப்பு அல்லது சர்க்கரை வாங்குவது மிகவும் சிறப்பு.
இதனால் பெரிதும் பயனடைந்தவர்கள் மளிகைக்கடைக்காரர்களே. தங்களிடமிருந்த பழைய சரக்குகளை எல்லாம் விற்றுத் தீர்த்தார்கள். அப்போது என் நண்பர் ஒருவர் கூறினார், ஆவின் பாலும் வெள்ளை நிறம்தானே, அதை இன்று வழக்கத்தைவிட அதிகமாக வாங்கினால் அதுவும் வளருமல்லவா என்று. அவர் வழக்கமாக ஒரு பாக்கெட் வாங்குவதை அன்று இரண்டாக வாங்கினார். மறுநாள் அவருடைய எதிர்வீட்டு மாமி, தான் திடீரென்று இரண்டுநாள் வெளியூர் போவதால், தனக்குப் போடும் பால் பாக்கெட்டுகளை இவர் பெற்றுக்கொள்வாரா என்று கேட்டாராம்! திருப்பித்தர வேண்டாம், இவரே பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொன்னாராம். அவருடைய ‘தினம் இரண்டு’ பாக்கெட்டுகள் இவருக்கு அந்த இரண்டு நாளும் கிடைத்தன!
அட்சய திருதியை அவருக்கு ஓரளவு பலித்துவிட்டது.
***
நான் மாற்றி யோசித்தேன். அடுத்த சில மாதங்களில் நான் அமெரிக்கா போகும் திட்டம் இருந்தது. நம்முடைய அழுக்குப் படிந்த அல்லது பயன்பாட்டினால் நிறம் மாறிய ஜட்டி, பனியன்களை வேறு நாட்டிற்கு கொண்டுசென்று காட்சிப்படுத்துவதில் மற்ற தமிழர்களைப் போலவே எனக்கும் மிகுந்த தயக்கம் இருந்ததால், ஆறுமாதப் பயணத்தை முன்னிட்டு ஆறு பனியன், ஆறு ஜட்டி புதிதாக வாங்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தேன். அப்போதுதான் அட்சய திருதியை வந்தது. அன்று வெள்ளை நிறத்தில் ஜட்டியும் பனியனையும் வாங்கினால் பயணத்திற்கும் ஆகும், அது பெருகுகிறதா என்று ஆராயவும் வாய்ப்பாக அமையும் அல்லவா என்று யோசித்தேன். வாங்கினேன்.
சில மாதங்கள் கழித்து என்னுடைய பீரோவை வேறு எதற்காகவோ துழாவும்போது, அதுவரை கண்ணில் படாத ஒரு பழுப்புநிறக் காகிதப் பொட்டலம் கண்ணில் பட்டது. அதில் இரண்டு புதிய பனியன்கள், இரண்டு ஜட்டிகள் பிரிக்கப்படாமல் இருந்தன! (நிறம் மட்டும் வேறு, அதனாலென்ன?) ஆர்வத்தால் உந்தப்பட்டு பீரோவை மட்டுமன்றி, என்னுடைய துணிகளை அடுக்கி (?!) வைக்கும் அலமாரியையும் துழாவினேன். என்ன ஆச்சரியம், எனக்கு யாரோ எப்போதோ பரிசாக வழங்கிய ஒரு புதிய வேட்டி, துண்டு, டீ ஷர்ட் அடங்கிய ஒரு மஞ்சள் பை வெளிச்சத்துக்கு வந்தது! கூடவே சுருளாக ஆறு கைகுட்டைகள் கொண்ட ஒரு பொட்டலமும் கிடைத்தது!
***
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அலுவலகத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்ட விஷயம் இது. (ஆதாரம் கொடுப்பதற்கில்லை). அட்சய திருதியைமீதும் அதே சமயம் தன்னுடன் பணிபுரியும் ஓர் அழகிய மங்கையின்மீதும் (குமாஸ்தா) நம்பிக்கை வைத்திருந்த இளம் அதிகாரி ஒருவர், ஒரு வெள்ளைத்தாளில் தன் உள்ளக் கிடக்கையைக் காதல் கடிதமாக வடித்து, அதை ஓர் வெள்ளை நிற உறையில் வைத்து, அந்தப் பெண்ணின் டிராயருக்குள் வைத்தார். (எந்த அலுவலகத்திலும் குமாஸ்தாக்கள் வரும் முன்பே அதிகாரிகள் வந்துவிடும் வழக்கத்தால் இது சாத்தியமாகியது).
அவருக்கு உத்தரவாதம் அளிப்பதுபோலவோ என்னவோ, அன்று அந்தப் பெண், பாரதிராஜா படத்தில் வரும் தேவதை மாதிரி வெள்ளைப் பூப்போட்ட சேலையில்
வந்தாராம்! எல்லாவற்றையும் வளர்ச்சி அடையவைக்கும் அட்சய திருதியை தன் காதலையும் வளர்த்துத்தரும் என்பதன் சூசகமாகவே அதை எடுத்துக்கொண்ட அந்த அதிகாரி, ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தாராம். அதைக் கொண்டாடும் பொருட்டு, ஆனால் காரணத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், தன் உள்வட்டத் தோழர்களை அழைத்துக்கொண்டு மதிய உணவுக்கு கேன்டீனுக்குச் சென்றாராம். அட்சய திருதியையை முன்னிட்டு அன்று உணவில் ஓர் இனிப்பு வழங்கப்பட்டதாம். ஜவ்வரிசி பாயசம்! வெள்ளைவெளேர் நிறத்தில்! அவருக்குப் புளகாங்கிதம் தாளவில்லை!
அடுத்த சில நாட்கள் அவர் மனம் பட்ட பாடு இருக்கிறதே, சொல்லி மாளாது! அதற்கு விரைவிலேயே பதில் கிடைத்துவிட்டது.
அது ஒரு மாலை நேரம். மறுநாள் ஏதோ ஒரு பண்டிகை. ஆகவே பல ஊழியர்கள் அனுமதி பெற்றுக்கொண்டு முன்னதாகவே கிளம்பிவிட்டார்கள். இந்தப் பெண்ணும் அவரும் தான் இருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக அவள் இவரிடம் வந்து, “நீங்கள் உடனே கிளம்பி விடுவீர்களா? இல்லை நேரமாகுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
அதற்காகத் தானே ஏங்கிக்கொண்டிருக்கிறார் நம்மவர்! விடுவாரா சந்தர்ப்பத்தை? “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது. கிளம்ப நேரமாகும்….” என்று இழுத்தார். குரலில் பயமும் தயக்கமும் தெரிந்தது. தன் காதல் கடிதத்தை அவள் படித்தாளா, அதன் ரியாக்ஷன் என்ன என்பது அவர் மனதை அரித்துக்கொண்டிருந்தது.
“நல்லதாகப் போயிற்று. உங்களுடன் தனியாக ஒரு விஷயம் பேசவேண்டும். இப்போது பேசலாமா?” என்று அருகில் வந்து அமர்ந்தாள் அவள். அன்றும் அவள் வெள்ளை நிறத்தில் சுடிதாரிணியாக இருந்தது அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. அட்சய திருதியையை நம்பியது சரியே என்று தோன்றியது.
ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தவள், “இதை யாருக்கும் சொல்ல மாட்டீர்கள் என்றால் தான் பேசுவேன்” என்றாள். இவன் பூம்பூம் மாடுபோலத் தலையாட்டினான்.
“என் மனதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதை நீங்கள் தீர்த்து வைப்பீ ர்களா?” கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டாள் அப்பேதை.
அப்பொழுதே தீர்த்துவிடுபவன்போல் அவசரமாக எழுந்து அவள் அருகில் நின்றுகொண்டான் அவன். அதைக் கண்டு அவளும் நாணத்துடன் எழுந்து நின்றாள்.
“அட்சய திருதியை அன்று எனக்கு ஒரு கடிதம் வந்தது…”
அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. “வெள்ளை நிற உறையில் வந்த கடிதமா?” என்று தன்னை மறந்து கேட்டுவிட்டான். பிறகு பல்லைக் கடித்துக்கொண்டான்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்? சார் சொன்னாரா?” என்று கிளைமேலாளரின் கண்ணாடிக் கூண்டைக் காட்டிக் கேட்டபோது அவள் முகத்தில் அந்திவெயில் வண்ணம்போலச் செம்மை பூத்தது.
திகைத்துப் போய் நின்றான் அவன். இந்த ஆள் வேறு போட்டிக்கு வந்துவிட்டானா? அவனுக்கும் அட்சய திருதியை மீது நம்பிக்கை இருக்குமா? அதனால்தான் அன்று வெள்ளை பேண்ட், மினிஸ்டர் ஒயிட்டில் வந்தானா? பாவி!
“உண்மையைச் சொல்லுங்கள். என்னைப் பற்றி சார் என்ன சொன்னார்?”
திகைப்பிலிருந்து மீளாமல் நின்றான். அவள் தொடர்ந்தாள். “ஒரு தமாஷ் பார்த்தீர்களா, அன்று அவர் நேரில் என்னிடம் கொடுத்த கடிதம் இதுதான்.”’
அவன் எழுதிய கடிதம்! கீழே அந்த மேலாளர் கையெழுத்து இருந்தது!
“வணக்கம் இருவருக்கும். இன்னும் வேலை முடியவில்லையா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார் கிளைமேலாளர். இன்னும் மணமாகாத அழகிய இளைஞன். அவனைக் கண்டதும் அவளுக்கு வியர்த்துவிட்டது. இவனுக்கோ கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “ஓ அந்தக் காதல் கடிதமா? ரொம்ப நன்றாக எழுதியிருந்தீர்கள் மிஸ்டர்! ஆனால் கையெழுத்து மட்டும் போடவில்லையே நீங்கள்! அதுதான் நான் போட்டுவிட்டேன்!” என்றான் சிரித்துக்கொண்டே.
“நீங்கள் அவளுக்குத் தெரியாமல் கடிதத்தை டிராயரில் வைத்ததைக் கண்டேன். நீங்கள் சற்றே நகர்ந்தவுடன் நான் எடுத்துக்கொண்டேன். என் கையொப்பத்துடன் தீரமுள்ள ஆண்பிள்ளையாக அதை அவளிடம் நேரில் கொடுத்தேன்! வீரத்தைத் தானே காதல் துணையாகக் கொள்ளும்! வெற்றி எனக்கு!“ என்றான் அவன்.
நம்மவர் இனி அடுத்த அட்சய திருதியையை எதிர்பார்ப்பாரா என்று தெரியவில்லை.
இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
Nice
பதிலளிநீக்குஅடப்பாவமே!😫
நீக்குஅட்சய திருதியை அன்று உங்களிடம் சிக்கிக் கொண்ட அட்சய திரிதியை.
பதிலளிநீக்குநல்லாவே எழுதுகிறீர்கள்.
நீங்களும் உங்கள் வலைப்பதிவில் எழுதுங்களேன்! பல்துறை அறிஞராயிற்றே நீங்கள்! ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!
நீக்குஅட்சய திருதியை தினத்தன்று உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. பதிவில் இழையோடும் நகைச்சுவையை ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளில் 'அறு'சுவையும் இருக்கும். என் பதிவில் இந்த ஒரு சுவைதான் - 'நகைச்'சுவைதான் இருக்கும்! ரசித்தத்ற்கு நன்றி நண்பரே!
நீக்குஅட்சய திரிதியை எல்லாம் பிஸினஸ். பல இடங்களில் சிரித்துவிட்டேன். பீரோவில் எதையோ தேடினால் இப்படியான பழைய பொட்டலங்கள் நிறைய கிடைக்கும்.
பதிலளிநீக்குகடைசில பாவம் அந்த நபர், அட்சய திரிதியை இப்படித் திரித்துவிட்டதே. இதுக்குத்தான் எல்லாத்துக்கும் கையொப்பம் ரொம்ப முக்கியம்னு சொல்றாங்க போல.
கீதா
காதலுக்கும் கையெழுத்து வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா? அதே சினிமாக் காதல் என்றால், சாட்சிக்கு இரண்டு பக்கமும் பத்துப் பத்து பேராவது வேண்டும்! அப்படித்தானே பாடல் காட்சிகளில் காட்டுகிறார்கள்!
நீக்கு"இன்று கிழமை திங்கள் -3) " திங்கள் - 2 தேதி அல்லவா? 3 என்று குறிப்பிட்டு இருப்பது எதனால் ?
பதிலளிநீக்குஅக்ஷ்ய திருதியை,தன் தேரஸ் என்று இவைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை உண்டு.
மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர் சொல்வதை நம்பமாட்டேன் .
"திங்கள்-3 " என்றால் திங்கட்கிழமை அன்று எழுதிய மூன்றாவது பதிவு என்று பொருள். 11-4-2022 முதல் இன்றுவரை எத்தனை திங்கட்கிழமை வந்தது என்று பாருங்கள். புரியும்! நன்றி நண்பரே!
நீக்குபுரிந்து கொண்டேன்.விளக்கத்தற்க்கு நன்றி.
நீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குதிருவள்ளுவர் இரண்டு வரிகளில் எழுதினார். திண்டுக்கல்லாரோ இரண்டே எழுத்துக்களில் பேசுகிறார்! நன்றி நண்பரே!
நீக்குபாவம் அட்சயதிரிதியை. ஒரு காதல் கருகவும், ஒரு வில்லன் ஜெயிக்கவும் காரணமாகிவிட்டது. ஆமாம், அதில் யார் வில்லன்?
பதிலளிநீக்குஎல்லாம் திடீரென்று நேர்ந்துவிட்டது! நொடிப்பொழுதில் முடிவெடுத்த அந்தப் பெண்ணைத் தான் பாராட்டவேண்டும்!
நீக்குஹாஹாஹா! அட்சய திருதியை அன்று எடுத்த காதல் முயற்சி நல்ல வேளையாக பலிக்கவில்லை. பலித்திருந்தால் காதல் மன்னனாகியிருப்பாரே?
பதிலளிநீக்குஉள் அர்த்ததுடன் நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நானே தான் அந்தக் கிளை மேலாளர் என்று எண்ணுகிறீர்களோ? அதெல்லாம் இல்லை. சும்மா ஒரு 'இது'க்காக என் இளமைக்காலப் படத்தை வெளியிட்டால் இப்படியா எனக்குச் சிக்கலை ஏற்படுத்துவது?
நீக்கு@ஸ்ரீராம்: இது முக்கோணக்காதல். நோ வில்லன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி வில்லனா?
பதிலளிநீக்குஅந்த அப்பாவி அதிகாரிக்கு ஆதரவாக ஒருவரும் எழுதமாட்டேன் என்கிறீர்களே!
நீக்குநடுவில் என்னை வசீகரித்த வார்த்தை சூடி தாரிணி
பதிலளிநீக்கு