வியாழன், மார்ச் 30, 2017

அப்பாவின் சிநேகிதிகள்

பதிவு எண்  23 / 2017
அப்பாவின் சினேகிதிகள்
-இராய செல்லப்பா

அடுப்பெரிக்க விறகுக் கட்டை அல்லது நிலக்கரி மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. 1950 – 1970 என்று வைத்துக் கொள்ளுங்களேன். இண்டேன் கேஸ், எச்பி கேஸ், பாரத் கேஸ் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலம்.

அடுப்பு என்றால் இரும்பிலோ எவர்சில்வரிலோ தயாரித்ததல்ல. சுட்ட களிமண்ணால் ஆன அடுப்புதான். கடையிலும் விற்கும். களிமண் கிடைத்தால் வீட்டுப் பெண்களே செய்து கொள்வார்கள். அம்மாவுக்கு நன்றாகச் செய்யவரும். ஒற்றை அடுப்பு செய்வார். இரண்டு பாத்திரங்களை ஒரே சமயத்தில் வைக்கும் இரட்டை அடுப்பும் செய்வார். அதைக் ‘கொடி அடுப்பு’ என்பார்கள். இரண்டிலும் விறகுக்கட்டையைத்தான் பயன்படுத்தவேண்டும். ‘குமட்டி’ அடுப்பு என்று இன்னொரு வகையும் உண்டு. அதில் நிலக்கரி மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெந்நீர் வைப்பது, காப்பி போடுவது, மிளகு ரசம் வைப்பது போன்ற சிறிய சமையல்களுக்குத்தான் பயன்படும். 

பச்சைக் களிமண்ணால் அடுப்பு செய்து அதை நிழலில் ஒரு வாரம் உலர்த்தியபின், பகல் வெயிலில் ஒரு வாரம் உலர்த்துவார் அம்மா. பிறகு பசுஞ்சாணத்தைக் குழைத்து மேல்பூச்சாகப் பூசுவார். நல்ல நேரம் பார்த்து, பொட்டு வைத்து, கற்பூரம் காட்டிய பின், முதலில் பாலைக் காய்ச்சுவார். அதன் பிறகுதான் சோற்றுக்கு உலை வைத்தல் முதலியன நிகழும்.  வேற்றுப் பெண்மணிகள் இல்லாத நேரம் பார்த்துத்தான் புது அடுப்பை ஆரம்பிப்பார். கண்பட்டுவிடுமாம். 

தனக்குச் செய்துகொண்டது போக, கிராமத்தில் இருந்து வரும் வயதான உறவினர்களுக்கும் அடுப்புகளைச் செய்து அனுப்புவார் அம்மா என்பது நன்றாக நினைவில் இருக்கிறது. அதற்கான களிமண்ணைப் பாலாற்றங்கரையில் தோண்டி, சிறிய கோணிப்பையில் வைத்து, தலைச்சுமையாக எடுத்து வந்து கொடுக்கும் பணி அடியேனுடையது. சில சமயம் அக்கா உடன் வருவாள். ஆனால் அவளது கவனம் முழுவதும்  பாலாற்றங்கரைக்குச் சற்றுமுன் இருந்த ‘பெரிய வாய்க்கால்’ தாண்டியவுடன்  வழியெல்லாம் பூத்திருக்கும் மஞ்சள் கனகாம்பரப் பூக்கள் மீதோ, அல்லது மூன்றடி உயரம் மட்டுமே இருந்த ஈச்சமரங்களில் தேன்கூடு போல் காய்த்துத் தொங்கும் சிவந்த ஈச்சம் பழங்களின் மீதோ தான் இருக்கும்.  

மாதத்தில் ஒருமுறை யல்ல, இரண்டு, மூன்று முறை கூட கோணிப்பை சுமந்த அனுபவம் உண்டு. காலில் செருப்பின்றி, முள் குத்துவதைப் பொறுத்துக்கொண்டு, களிமண் சுமந்ததைப் பிட்டுக்கு மண் சுமந்த கதையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு, பின்னாளில்.   

சராசரியாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அடுப்பில் விரிசல் விழுந்து விடும். அந்த நேரத்தில் நான் வீட்டில் இருப்பதைத் தவிர்த்துவிடுவேன். சரியான களிமண்ணைத் தேர்ந்தெடுத்து வராத குற்றம் என்மீது விழுமல்லவா? உடனடியாகப் புது அடுப்பு செய்தாகவேண்டும். அவ்வளவுதான், என்ன வேலை இருந்தாலும் பாதியில் விட்டுவிட்டுப் புதிய களிமண் கொண்டு வந்தாக வேண்டும். அவசரமாக அப்படிப் போய்வந்த ஒருநாளில், களிமண் தோண்டுவதற்காகக் கொண்டுபோன உடைந்த சட்டுவத்தை மறந்து வைத்துவிட்டு, மறுபடி போய்த் தேடியதில் அது அகப்படாமல், விசேஷமான திட்டுக்களை வாங்கிய அனுபவமும் நினைவில் இருக்கிறது.  

ஆனால், இந்தக் க(தை)ட்டுரை அடுப்பு செய்வதைப் பற்றியதல்ல, அதில் பயன்படுத்தும் விறகுக்கட்டையைப் பற்றியது என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் விறகுக்கடை வைத்திருந்த  கண்ணம்மாவைப் பற்றி நீங்கள் அறிந்தாக வேண்டும்.

கண்ணம்மா என்பவருக்கு அப்போது முப்பது அல்லது முப்பத்தைந்து வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன். (அப்போது எனக்கு வயது  எட்டு அல்லது ஒன்பதுதான். எனவே பெண்களின் சரியான வயதைக் கணிக்கும் ஆற்றல் இருந்திருக்க முடியாதல்லவா?) அவரது பெயரால் ‘கண்ணம்மா தொட்டி’ என்று அந்தக் கடைக்குப் பெயர் ஏற்பட்டிருந்தது. தொட்டி என்றால் விறகுக்கடை என்று பொருள். இராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து வக்கீல் தெருவை நோக்கி நடந்தால், இடதுபுறமாக, தபாலாபீஸ் தெரு பிரியும் இடத்தில் இருந்தது கண்ணம்மா தொட்டி.

ஒருபக்கம் சுவரும், மூன்று பக்கம்  மூங்கில் வேலியுமாக இருந்த பெரிய கடை. ‘ஐந்து கிரவுண்டு இடத்தில் விறகுதொட்டி வைத்த ஒரே ஆள் நான்தான்’ என்று கண்ணம்மா பெருமையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய தொட்டி வேறு எந்தத் தெருவிலும் இல்லை. இரண்டு கொடுக்காப்புளி மரங்கள் இருந்தன. நெடிதுயர்ந்த மரங்கள். எப்போதும் பத்துப் பதினைந்து கிளிகள் அதில் பறந்துகொண்டிருக்கும். சுருள்சுருளாக இருக்கும் கொடுக்காப்புளிக் காய்களைக் கிளிகள் தம் அலகால் கத்தரித்து எடுக்கும். சிவந்த பகுதியை மட்டும் - அதிலும் பாதியளவே - கொத்திச் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள பழத்தைக் கீழே போட்டுவிடும். பள்ளிக்கூடம்  போகும் நேரத்தில் அந்தப் பழங்களைப் போட்டி போட்டுக்கொண்டு பொறுக்குவோம். கிளி கடித்த பழம் இனிக்கும்.

அநேகமாக இரண்டு நாளைக்கு ஒருமுறை லாரியில் பெரிய பெரிய மரத்துண்டுகள் வந்திறங்கும். பெரும்பாலும் புளிய மரத்தின் அடிப்பகுதியாக இருக்கும். ஒவ்வொன்றும் ‘அம்பது அறுபது கிலோ இருக்கும்’ என்பார் கண்ணம்மா. அவரது மேற்பார்வையில்தான் லாரியில் இருந்து இறக்கவேண்டும். பிறகு இரண்டு ஆட்கள் பெரிய கனமான கோடாரிகளுடன் வந்து கட்டைகளைப் பிளப்பார்கள். பச்சை மரத்தின் வாசனை தூரத்திலேயே தெரியும்.  கட்டைகளைப் பிளந்து, ஒவ்வொன்றும் சுமார் இரண்டு முதல் இரண்டரை அடிக்குள் இருக்குமாறு சிறிய துண்டுகளாக ஆக்கி, அவற்றை அழகாக அடுக்கி வைக்கவேண்டும். ஒருநாள் கூலி ஒன்றேகால் ரூபாய். வீட்டுக்கென்று சில விறகுத்  துண்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம். டீ குடிக்க  இரண்டணாவும் தருவார் கண்ணம்மா.

ஆளுயரத்திற்கு ஒரு தராசு இருக்கும். ஒரு பக்கம் எடைக் கற்களும் இன்னொரு பக்கம் நாம் தேர்ந்தெடுக்கும் விறகுக் கட்டைகளும் வைக்கவேண்டும். தராசின் இரண்டு பக்கமும் சமமாக இருந்து எடை போட்டதாக நினைவில் இல்லை. எப்பொழுதும் ஏதோ ஒரு பக்கம் தூக்கலாகவே இருக்கும். ‘சரி, எடுத்துக்கொள்’ என்பார். விறகுக் கட்டைகளை சைக்கிளின் கேரியரில் வைத்துக் கயிற்றால் கட்டுவேன். 

புளியம் விறகுதான் விலை அதிகம். நின்று எரியும் என்பார் அம்மா. ‘எடை நாலு ரூபாய்.’ (எடை என்றால் எவ்வளவென்று தெரியாது. பத்து கிலோ இருக்குமோ?) மற்ற மரங்கள் என்றால் சீக்கிரம் எரிந்துவிடும். அதனால் விலை குறைவு. எடை இரண்டு ரூபாய் இருக்கும். இரண்டுக்கும் நடுவில் சவுக்கு விறகு. உருட்டுக் கட்டை என்றால்  எடை இரண்டரை ரூபாய். பிளந்த கட்டை என்றால் மூன்று ரூபாய்.

இரண்டு மூன்று நாளைக்குத் தேவையான அளவுதான் விறகு வாங்குவது வழக்கம். அதிகம் வாங்கி அடுக்கினால், தேளோ தேரையோ ஒளிந்து கொள்ளும் என்பார் அம்மா. அதனால் அரை எடை அல்லது முக்கால் எடைதான் விறகு வாங்குவோம். அது எனக்கும் வசதியாக இருந்தது. ‘கண்ணம்மா தொட்டியில் போய் விறகு வாங்கி வா’ என்றால் எனக்கு சர்வீஸ் சார்ஜ் ஓரணா கொடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம். எவ்வளவு நடை அதிகமோ அவ்வளவு ஓரணாக்கள் கிடைக்குமே.  மழை வரும்போல் இருந்தால்  போக மாட்டேன் என்று பிகு பண்ணினால் அது இரட்டிப்பாவதுண்டு.

விறகை அடுக்கிக்கொண்டு சைக்கிளில் நான் கிளம்பும்போது என்னைப் பார்த்து அன்பொழுக, ‘பார்த்துப் போடா கண்ணு’ என்பார் கண்ணம்மா. திடீரென்று என்னை நிறுத்தி, ‘ஒரு நிமிஷம் இரு’ என்பார். ‘டீ குடிச்சிட்டுப் போறியா?’ என்பார். வெளியில் எங்கும் நான் டீ குடித்ததில்லை. வீட்டிலும் டீ போட மாட்டார்கள்.  டீ என்ன சுவை என்பதே எனக்குத் தெரியாது. ‘வேண்டாம்’ என்பேன். ‘ஒங்க அப்பாவும் இப்படித்தான். டீயே குடிக்க மாட்டார். ஆனால் நீ அவர் மாதிரி இருக்காதே. நல்லாப் படிக்கணும். சரியா?’ என்பார். தலையாட்டுவேன். ‘என்ன படிக்கிறாய்? என்பார். ‘நான்காம் வகுப்பு’ என்று சொல்லிவிட்டு நிற்காமல் கிளம்பிவிடுவேன். நேரமானால் அம்மா கத்துவார்.

சிலநாள் கழித்து மீண்டும் போனால் அப்போதும் இதே மாதிரிதான். ‘என்ன படிக்கிறாய்’ என்பார். ‘நான்காம் வகுப்பு’ என்றால், ‘போன  வாரமும்  இதையேதான் சொன்னாய். எவ்வளவு நாள் நாலாம் கிளாசிலேயே இருப்பாய்’ என்பார். பைத்தியம் போலிருக்கிறது என்று மனதிற்குள் சிரிப்பேன்.

விறகு வாங்குவதோடு என் வேலை முடிந்தது. பணம் என்னிடம் கேட்க மாட்டார் கண்ணம்மா. சின்னதாக இருந்த நோட்டுப் புத்தகம் ஒன்றில் அப்பா பெயர் எழுதிய பக்கத்தில், தேதி போட்டு என்ன விறகு எவ்வளவு எடை என்று எழுதிக்கொள்வார். மாதம் ஒருமுறையோ, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ பணம் கொடுப்பார் அப்பா என்று நினைக்கிறேன்.

கண்ணம்மா, நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருப்பார். கறுப்பு மையால் ஆனது. அப்போதெல்லாம் ஸ்டிக்கர் பொட்டுக்கள் கிடையாது. குங்குமம் அல்லது சாந்துப் பொட்டுதான். (ஈரமில்லாத கொட்டாங்கச்சி, கொஞ்சம் விளக்கெண்ணெய், சிறிய பெட்ரூம் விளக்கு அல்லது அகல் விளக்கு - இந்த மூன்றும் இருந்தால் சாந்து செய்துவிடலாம்.) கண்ணம்மா ஏன் குங்குமம் வைத்துக் கொள்வதில்லை என்று தெரியாது. வேர்வையில் அழிந்திருக்கலாம் என்று எண்ணிக்கொள்வேன்.

ஆறு பேர் கொண்ட பெரிய குடும்பம் எங்களுடையது. அப்பாவின் வருமானம் நிலையில்லாதது. எனவே, கண்ணம்மாவின் பாக்கி அவ்வப்பொழுது தீர்க்கப்படாமல் நின்றுவிடும். ஆனால்  நான் விறகு வாங்கப் போனால் இல்லை என்று சொன்னதில்லை கண்ணம்மா. ‘அப்பா ஊர்ல இல்லையாப்பா’ என்று மெதுவாகத்தான் கேட்பார். கேள்வியின் அர்த்தம் எனக்குப் புரியும். ‘ஆமாம், மெட்ராஸ் போயிருக்கார்’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்வேன். சில சமயம் நான் பள்ளிக்கூடம்  போகும் சமயம் என்னை அழைப்பார். ‘அப்பா ஊர்ல தான இருக்காரு? கண்ணம்மா கேட்டாங்கன்னு சொல்லு’ என்பார். ஒரு நாளாவது கடுமையான சொற்கள் அவர் வாயிலிருந்து வந்ததில்லை.  

அம்மாவிடம் கேட்பேன், கண்ணம்மாவுக்கு இன்னும் பணம் கொடுக்க வில்லையா என்று. அம்மாவுக்கும் சரியான விவரம் தெரியாது. ஆனால் பாக்கி சற்றே அதிகம் என்பது தெரியும். ‘ஒன்கிட்ட கேட்டா அடுத்த மாசம் கணக்கு தீர்த்துடறோம்னு சொல்லு’ என்பார்.

சில சமயம் அம்மாவுக்கு அழுகையாக வரும். பணமில்லாத குறைதான். ‘நம்ம வீட்டுல அடுப்பு எரியறதே கண்ணம்மாவோட கருணையால  தான்’ என்பார். ‘அக்னியை ஏமாற்றக் கூடாது’ என்பார். கூடத்திலிருந்து அப்பா வந்து  ‘கவலைப்படாதே, கண்ணம்மாவோட பாக்கியை முழுசா தீர்த்துடலாம்’ என்று உறுதியளிப்பார். எப்போது என்பதற்கு அவரிடம் பதில் இல்லை.

ஆள் நடுத்தர உயரம்தான், மெலிந்த உடல்தான், என்றாலும் கண்ணம்மாவின் குரலுக்கு ஊரில் தனி மரியாதை இருந்தது. ஒருதரம் ஓட்டல்காரர் ஒருவர் நிறைய பாக்கி வைத்துவிட்டு பதிலே சொல்லாமல் ஏய்த்துக் கொண்டிருந்தாராம். கேட்டுக் கேட்டுப் பார்த்துப்  பொறுமை இழந்த கண்ணம்மா, நேராக  ஓட்டலுக்கே போய், கதவை இழுத்துப் பூட்டி விட்டாராம் - உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்பட. உரிமையாளரின் வீட்டில் இருந்து யாரோ வந்து கணக்கை முழுதுமாகத் தீர்த்தபிறகுதான் கதவைத் திறந்தாராம்.

ஒரு நாள், விறகு முழுதும் தீர்ந்துவிட்டது. அவசரமாக வாங்கியாக வேண்டும். பாக்கி தீர்க்காமல் தருவாரோ மாட்டாரோ என்று மிகுந்த தயக்கத்துடன் கண்ணம்மா தொட்டிக்குப் போனால், அன்று கடை பூட்டியிருந்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது. வேறு கடைக்குப் போய் வாங்கலாம் என்றால் கையில் பணமில்லையே! அப்பாவும் ஊரில் இல்லை.

அம்மாவுக்கும் எதுவும் தோன்றவில்லை. சிறிது நேரம் கழித்து என்னை அழைத்து, ‘கண்ணம்மா வீட்டிற்குப் போய்ப் பார்த்து வா’ என்றார். ‘இந்த கூஜாவில் ஒரு டம்பளர் காப்பி ஊற்றித் தருகிறேன், கொண்டு போ’ என்றார்.  அடுத்த தெருதான். தனியாக வாழ்ந்து வந்தாராம் கண்ணம்மா. கடை திறக்கவில்லை என்றால் ஒன்று, அவர் ஊரில் இல்லை என்று அர்த்தம். அல்லது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அர்த்தம் என்றார் அம்மா.

நினைத்தபடியே, கண்ணம்மாவுக்கு உடம்பு சரியில்லை தான். என்னைப் பார்த்ததும் மெதுவாகப் படுக்கையில் இருந்து எழுந்தார். ‘மன்னிக்கனுண்டா ராஜா! ஜுரமா இருக்குது, எழுந்துக்கவே முடியலே, அதான் கடை தெறக்கலே. இரு வரேன்’ என்றார்.

‘இந்தாங்க காப்பி’ என்று கூஜாவை மேசைமீது வைத்துவிட்டு நான் வெளியில் வந்து நின்றுகொண்டேன்.  

என்னைப் பார்த்ததும் கடன்காரன் வந்திருக்கிறான் என்பதுபோல் ஏதேனும் சொல்வாரோ என்று பயந்தேன். அப்பாவைக் குறை சொல்வாரோ என்று கலங்கினேன். இல்லை. வழக்கம் போலவே இருந்தார் கண்ணம்மா. கடையைத் திறந்து ஒரு எடை விறகை எனக்குக் கொடுத்த பிறகு பூட்டிக்கொண்டு வீட்டிற்கே போய்விட்டார். ஜுரத்தால் நடக்க முடியாமல் நடந்தார்.

எனக்கு மனத்தில் குற்ற உணர்ச்சி படுத்த ஆரம்பித்தது. பாக்கியை ஒழுங்காகச் செலுத்தாத வாடிக்கையாளருக்கு எந்தக் கடைக்காரர், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும், பூட்டிய கதவைத் திறந்து மறுபடியும் கடன் கொடுப்பார்?

அப்பாவிடம் சொன்னேன். இன்மேல் நான் கண்ணம்மா தொட்டிக்குப் போகமாட்டேன். பாக்கித் தொகை முழுவதும் பைசல் செய்தால் தான் போவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

அன்று மாலை, திடீரென்று கண்ணம்மா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். சரிதான், இன்று கடன் பாக்கிக்காக நிச்சயமாகக்  கூச்சல் போடத்தான் போகிறார் என்று தோன்றியது. அம்மாவுக்கும்  சற்றே வியர்த்தது. என்றாலும் காட்டிக்கொள்ளாமல், ‘வாங்க கண்ணம்மா, உடம்பு பரவாயில்லையா?’ என்றார்.

அதைக் கண்டுகொள்ளாமல், என்னைப் பார்த்து, ண்டா கண்ணா, காப்பி கொண்டுவந்து கொடுத்தாயே, கூஜாவைத் திருப்பி  எடுத்துக்கொண்டு போக வேண்டாமா? என்று சிரித்தார். அம்மாவுக்கு உயிர் வந்தது. கூஜாவைப் பெற்றுக்கொண்டார்.

‘உட்காருங்க. காப்பி தர்றேன்’ என்று உள்ளே போனார்.

கண்ணம்மா ஒரு திண்ணையில் உட்கார்ந்தார். எதிர்த் திண்ணையில் நான் உட்கார்ந்தேன். ‘ஒங்க வீட்டு காப்பி ரொம்ப நல்லா இருக்குது’ என்றார்.

அவராகக்  கடன் பாக்கியைப் பற்றிப் பேசுவதற்குள் நானாக ஏதேனும் சொல்லிவிடலாம்  என்று தோன்றியது. அப்பா இன்னும் வரலே. எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் கொடுத்துவிடுவார் என்றேன். அதற்குள் அம்மா காப்பியுடன் வந்தார்.

காப்பியைக் குடித்தபடி கண்ணம்மா பேசினார். ஏண்டா ராஜா, என்னை வெறும் வெறகுக் கடைக்காரின்னு நெனக்கறியா? பாக்கி வசூல் பண்ண வந்தேன்னு பார்த்தியா? நான் ஒங்க அப்பாவோட கிளாஸ்மேட்டு டா என்றார்.  

அப்படியா? எனக்கு அதுவரை தெரியாத செய்தி. அம்மாவுக்கும் தான்.

அந்தக் காலத்துல நடராஜ வாத்தியார்னு இருந்தார். அவர்தான் எங்களுக்கு மூணாங்கிளாசு வரைக்கும் வாத்தியார். எல்லாரும் தரையில் தான் ஒக்காரணும். ஒங்கப்பா மொத வரிசையில் இருப்பார். நான் மூணாவது வரிசை.  பெண்கள் மூணாவது வரிசையில தான் இருப்பாங்க என்று தொடர்ந்தார் கண்ணம்மா.

ஒருநாள் வாத்தியார் கேட்டார்: நாலையும் மூணையும் பெருக்கினால் எவ்வளவுன்னு. நான் ஏழுன்னு சொன்னேன். ஒங்கப்பா நாப்பத்தி மூணுன்னார்.... 

எல்லாரும் சிரித்தோம். அப்ப யாருக்குமே கணக்கு தெரியாது. நாலாங்கிளாஸ் போனபிறகுதான் நடேசய்யர்னு புது வாத்தியார் வந்தார். அவர் தான் எங்களுக்கு கணக்கு நல்லாப் புரிய வச்சார்.. என்று கண்ணம்மா பழைய நினைவுகளில் மூழ்கினார்.

அந்த வருஷமே எனக்குக் கல்யாணம் பண்ணிட்டாங்க. வேலூர்ல தான் குடுத்தாங்க. ஹும்..எல்லாம் ரெண்டே வருஷம் தான். அவரு மஞ்சக் காமாலைன்னு ஒருவாரம் படுத்தார். எழுந்துக்கவே இல்லே. அப்பா அம்மா இருக்கறவரைக்கும் கூடவே இருந்துட்டேன். அப்புறம்தான் இந்த வெறகு தொட்டி ஆரம்பிச்சேன்...  என்றார். கண்களைத் துடைத்துக்கொண்டார்.
எழுந்தார். அதுனால, எனக்கு எப்பவும் நீ என் நண்பரோட புள்ளைதான். நீ கடன்காரன் இல்லே. நான் கடைக்காரியும் இல்லே. புரிஞ்சுதா? ஒங்கப்பா எப்ப குடுக்கறாரோ அப்ப வாங்கிக்கறேன். நீ நல்லாப்  படிக்கணும். படிச்சிருந்தா நான் இப்படி இருப்பேனா? உங்கப்பாதான் இப்படி கஷ்டப்படுவாரா?  அதனால எவ்வளோ கஷடம்னாலும் தாங்கிக்கிட்டு நீ படிக்கணும். வரட்டுமா? என்று கிளம்பினார் கண்ணம்மா.

அம்மாவிடம் திரும்பி, எங்கிட்ட நூறுபேர் வியாபாரம் பண்றாங்க. ஆனா, எனக்கு ஒடம்பு சரியில்லேன்னு வீடு தேடிவந்து காப்பி கொடுத்தது நீங்க மட்டும் தாம்மா..என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

அன்று இரவே அப்பா மெட்ராசிலிருந்து வந்துவிட்டார். அம்மா என்னைப் பார்த்து  கண் ஜாடை காட்டிவிட்டு, அப்பாவிடம் கேட்டார்:

நாலையும் மூணையும் பெருக்கினால்  எவ்வளவு?

நாப்பத்தி மூணு என்று சத்தமாகச் சிரித்தேன் நான்.

ஒன்றும் புரியாமல் விழித்தார் அப்பா.

****
(பின்குறிப்பு: அப்பாவின் சிநேகிதர்கள் என்ற கதையால் புகழ் பெற்ற அமர எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு அஞ்சலி.)

© Y Chellappa

திங்கள், மார்ச் 27, 2017

இலஞ்சம் என்னும் அழகு தேவதை

பதிவு எண்   22/2017
இலஞ்சம் என்னும் அழகு தேவதை 
-இராய செல்லப்பா

சென்னை.
வாலாஜா சாலையும் அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில், எல்லிஸ் சாலை துவங்கும் இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஓட்டல் அது.தரமான, சுவையான, சைவ உணவு கிடைக்கும். எதிர்ப்புறம் ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம், எம்.எல்.ஏ ஹாஸ்டல் போன்ற அரசு அலுவலகங்களும், பாரகன் - சாந்தி- அண்ணா-தேவி தியேட்டர்களும், ஏராளமான வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் இருந்ததால், பகல் உணவு நேரத்தில் இந்த ஓட்டலில் கூட்டம் சொல்லி மாளாது.

எங்கள் வங்கிக்குப் பகல் உணவு இடைவேளை 2-2.30 வரையான அரைமணி நேரம். ஆனால் இந்த ஓட்டலுக்குச் சென்று இடம் பிடித்து அமருவதற்கே பத்து நிமிடம் ஆகும். என்ன வேண்டும் என்று பணியாளர் வந்து கேட்கப் பத்து நிமிடம், பண்டங்கள் வந்து சேரப் பத்து நிமிடம், சாப்பிடப் பத்து நிமிடம், சாப்பிட்டுவிட்டு பில் வாங்கப் பத்து நிமிடம் என்று ஐம்பது நிமிடமாவது ஆகிவிடும். இதனால் உணவு இடைவேளை முடிந்து வங்கிக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதாகப் புகார்கள் எழுந்தன.

அவ்வாறு தினசரி ஓட்டலுக்குச்  சென்று உணவு அருந்துபவர்கள் ஏழு அல்லது எட்டு பேர் இருந்தனர். வங்கி மேலாளர் என்ற முறையில் அவர்களுடன் இதுபற்றி விவாதித்தேன். வேறு நல்ல ஓட்டல்கள் அருகில் இல்லையாதலால் மேற்படி ஓட்டல்தான் கதி என்றும், கால தாமதத்தைக் குறைக்க ஏதேனும் ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஓட்டலுக்குப் போனவர்கள் சரியாக 2.30க்குள் வங்கியில் இருந்தார்கள். பல மாதங்கள்வரை இது நீடித்தது. சரிதான், ஓட்டல் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

தற்செயலாக ஒருநாள் நானும் அவர்களுடன் அந்த ஓட்டலுக்குச் சென்றேன். எங்களைப் பார்த்ததுமே ராஜ மரியாதை போங்கள்! சமையலறையில் இருந்து உணவுப் பண்டங்களை எடுத்துவரும் இடத்தில் இருந்த முதல் இரண்டு மேசைகளை எங்களுக்காகவே முன்பதிவு செய்துவிடுவார்களாம். அருகிலேயே கைகழுவும் அறை இருந்தது. ஓ, இதனால் தான் நேரம் மிச்சமாகிறது என்று புரிந்தது.

இருக்கைகளில் அமர்ந்த அடுத்த நொடியே, நாங்கள் என்ன வேண்டும் என்று கூறாமலேயே, பணியாளர்கள் பண்டங்களைக் கொண்டுவந்து வைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மசால் தோசை அல்லது வெங்காய ஊத்தப்பம் வந்தது. அத்துடன் தயிர் வடை. அதன் பிறகு காப்பி. எல்லாம் இருபது நிமிடங்களில் முடிந்து வங்கிக்குத் திரும்பிவிட்டோம். பில் பணத்தையும்,  பணியாளருக்கு டிப்ஸ் ஐம்பது ரூபாயும் ஒருவரே கொடுத்தார். வங்கிக்கு வந்தபின் மற்றவர்களிடம் வசூல் செய்துகொள்வாராம். 

என் பங்கு பதினைந்து ரூபாய் என்றார். அவ்வளவு குறைவாக இருக்காதே, ஒரு மசால் தோசை, ஒரு தயிர் வடை, ஒரு காப்பி என்றால் எப்படியும் இருபத்திரண்டு ரூபாய் ஆகுமே என்றேன். சிரித்தார். ‘அது அப்படித்தான்’ என்றார். ‘பணியாளருக்கு ஐம்பது ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறோமே எதற்காகவாம்?’ என்றார். குழம்பினேன்.

இன்னொருவர் வந்து விளக்கம் கொடுத்தார். ஓட்டலுக்குக் கிளம்பும் முன்பே, நமக்கு வேண்டிய பண்டங்கள் இன்னதென்று போனில் தெரிவித்துவிட்டால், நாம் போய்ச்சேர்ந்தவுடன் தாமதமில்லாமல் கொண்டுவந்துவிடுவார்கள். டிப்ஸ் ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் கொடுக்கவேண்டும். அவ்வளவு அதிகமான டிப்ஸ் கொடுப்பதற்குப் பிரதியுபகாரமாக, பணியாளர்கள் நமக்கு ஒரு நன்மை செய்வார்கள். எப்படி என்றால், மசாலா தோசை சாப்பிட்டால், சாதா தோசைக்கான பணத்தையே பில் பண்ணுவார்கள்.  இரண்டு வடை கொண்ட தயிர் வடை கொடுத்துவிட்டு, ஒற்றை வடைக்கான பணத்தையே கணக்கிடுவார்கள். ஏழெட்டுப் பேர் காப்பி சாப்பிட்டால், மொத்தமாக ஐந்து காப்பி மட்டுமே கணக்கில் சேர்ப்பார்கள்...இப்படி ‘டிஸ்கவுண்ட்’ சிஸ்டத்தை அமல்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

‘நமக்கு மட்டுமா, இல்லை எல்லாருக்குமே இந்த சிஸ்டம் உண்டா?’ என்றேன் அதிர்ச்சியுடன். இனி இவர்களுடன் சேர்ந்து அங்கே போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். வழக்கமாக ஒரே அலுவலகத்தில் இருந்து ஒரே நேரத்தில் வந்து உணவருந்தினால் மட்டும் இந்த ஏற்பாடாம். அதுவும் குறிப்பிட்ட சில பணியாளர்களுடன் மட்டுமே செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தமாம்.

அடுத்த ஆறுமாதத்தில் அந்த ஓட்டல் மூடப்பட்டு விட்டது!
****
சென்னையில் கூட்டுறவு வங்கி ஒன்றில் என் தகப்பனாருக்குச் சேமிப்புக் கணக்கு இருந்தது. அவர் இறக்கும்போது அதில் ரூபாய் இருபத்தையாயிரத்துச் சொச்சம் இருந்தது. அவரது வாரிசு என்ற முறையில் அந்தத் தொகையை எனக்குத் தருமாறு உரிய படிவங்களில் விண்ணப்பித்தேன். மரணச் சான்றிதழையும் இணைத்திருந்தேன். வங்கி மேலாளர் எனக்குத் தெரிந்தவர்தான். தனது மேலிடத்திற்கு அனுப்பி விடுவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு வந்து சந்திக்குமாறும் கூறினார். சில நாள் கழித்து, அவரே அழைத்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து வாரிசு சான்றிதழ் பெற்றுத்தரவேண்டும் என்று கூறினார்.


அதுவரை தாலுகா அலுவலகத்திற்கு நான் போனதில்லை. போக வேண்டிய காரணம் உருவாகவில்லை. இப்போது போனேன். தாசில்தாரைப் பார்த்தேன். வாரிசு சான்றிதழுக்கான படிவங்களைப் பூர்த்திசெய்து வைத்திருந்தேன். என்னை ஏறிட்டுப் பார்க்காமலேயே ‘கன்சர்ன்டு கிளார்க்கைப் பாருங்கள்’ என்றார். சம்பந்தப்பட்ட குமாஸ்தாவும் என்னை நேராகப்  பார்க்காமலேயே, என் கையில் இருந்த படிவத்தின் நீள அகலங்களை ஓரக்கண்ணால் அளந்தபடி, ‘லீகல் ஹேர்ஷிப் சர்டிபிகேட் தானே? மாலை ஐந்து மணிக்கு வாருங்கள்’ என்றார். மாலையில் போனபோது, படிவங்களை வாங்கிப் பார்த்தார். வெளியில் விற்கும் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஒட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

ஒரு பழைய பெட்டிக்கடைதான் ஸ்டாம்ப் விற்கும் இடம். இரண்டு ரூபாய் ஸ்டாம்பிற்கு மூன்று ரூபாய் கேட்டார் கடைக்காரர். ‘என்னையா இது கொள்ளை லாபம் அடிக்கிறீர்?’ என்று வாதிட்டேன். அரை ரூபாய் குறைத்துக்கொண்டார்.

குமாஸ்தாவிடம் வந்தேன். மீண்டும் படிவங்களைப் பார்த்தார். ‘இறந்து போனவர், வேறு சொத்துக்கள் ஏதும் விட்டுச் சென்றாரா? அப்படியானால் அதையும் இந்தப் படிவத்திலேயே சேர்த்துவிடுங்கள்’ என்றார். ஏதுமில்லை என்றேன். மீண்டும் படிவத்தைப் பார்த்தார். இடையில் தேநீர் வந்தது. குடித்தார். மீண்டும் என்னைப் பார்த்தார். இறந்து போனது யார் என்றார். என் தகப்பனார் என்றேன். உங்களுக்கு சகோதரிகள் இருந்தால் அவர்களிடம் நோ-அப்ஜெக்சன் வாங்கிவர வேண்டும் என்றார். அதையும் இணைத்திருப்பதைச் சுட்டிக்காட்டினேன். முகம் மலர்ந்தார். ‘சரியாகத்தான் செய்திருக்கிறீர்கள். சில பேர்கள் இதற்கே நாலுமுறை வந்து போவார்கள். எங்கள் நேரம் வீணாகும்’ என்றார்.  எனக்கு மகிழ்ச்சி. சரி, வாரிசு சான்றிதழ் நாளை கிடைத்துவிடும் என்று எண்ணினேன்.

‘ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரது ஸிக்னேச்சர் வாங்கிவந்து நாளை இதே நேரம் என்னைப் பாருங்கள்’ என்று எழுந்தார் குமாஸ்தா. 

அப்படி ஒரு அதிகாரியை நான் அறிந்ததேயில்லை. அவரை எங்கே பார்க்கலாம் என்றேன். ‘கிராமங்களில் மணியக்காரர் என்பார்கள். நகரங்களில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர். காலை வேளைகளில் இதே ஆபீசில்தான் இருப்பார். வந்து பாருங்கள்’ என்றார். 

மறுநாள், காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தேன். ‘ஆர்.ஐ. சார் தானே? இதோ வருவார், அங்கே சர்வேக்குப் போயிருக்கிறார்..’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். குமாஸ்தாவிடம் வந்தேன். ‘எதற்கும் நாளை வந்து பாருங்கள்’ என்று பற்றற்றவராய்ப் பதில் சொன்னார்.

மறுநாளும் ஆர்.ஐ. வரவில்லை. குமாஸ்தா என்மீது பெரிதும் கருணை கொண்டவராய், உட்காருங்கள் என்றார். உங்களுக்கு இரண்டு நாள் வீணாகிவிட்டது அல்லவா என்றார். அதற்குள் தாசில்தார் அழைப்பதாக அறைக்குள் போனார். வரும்போது கையில் தபால் ஸ்டாம்ப்கள் நிறைய ஒட்டிய மாதிரி ஒரு பெரிய அட்டையைக் கொண்டு வந்தார். அதில் இந்திய ராணுவத்தின் கொடியானது ஸ்டாம்ப் வடிவத்தில் இருந்தது. ஒரு பக்கத்தில் நூறு ஸ்டாம்ப்கள் போல் இருந்தன.

‘கொடிநாள் வருகிறதல்லவா? மூவாயிரம் கொடிகள் விற்கவேண்டும் என்று தாசில்தார் கூறிவிட்டார். இருக்கிற வேலையில் இதை யார் செய்வது? செய்யாவிட்டால் தூக்கி யடிப்பார்கள். சொல்லிப் புண்ணியமில்லை’ என்றார். ‘சரி, நீங்கள் எவ்வளவு வாங்கிக் கொள்கிறீர்கள்? ஒரு கொடி பத்து ரூபாய்’ என்றார்.

ஆண்டுதோறும் கொடிநாள் வருவது தெரியும். எனது அலுவலகத்திலும் கொண்டுவந்து விற்பார்கள். ‘அதற்கென்ன, பத்து கொடிகள் கொடுங்கள்’ என்றேன்.

அவர் சிரித்தார். ‘என்னங்க இது? இருபத்தையாயிரம் ரூபாய் கிளெய்ம் செய்கிறீர்கள். இரண்டாயிரம் ரூபாய்க்காவது கொடி வாங்கவேண்டும்’ என்றார்.

நான் எழுந்தேன். ‘அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சரி போகட்டும், பத்துக்குப் பதில் இருபதாகக் கொடுங்கள்’ என்றேன். முணுமுணுத்தார். கடைசியில் ஐம்பது கொடிகள் - அதாவது ஐநூறு ரூபாய் - என்று பேரத்தை முடித்தார். ‘ஆனால், வாரிசு சான்றிதழ் நாளை கிடைத்தாக வேண்டும்’ என்றேன். ‘கவலைப்படாதீர்கள். நாளை ஆர். ஐ. வந்தால் நானே கையெழுத்து வாங்கிவிடுகிறேன்’ என்றார். கொடியின் விலை  ஐநூறு ரூபாய் பெற்றுக்கொண்டார். நாளை வரும்போது மறக்காமல் ரிஜிஸ்டரில் எண்ட்ரி போட்டுவிட்டு கொடிகளை வாங்கிக்கொள்ளம்படி கூறினார்.

மறுநாள் போனேன். அலுவலகம் மூடியிருந்தது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையாம்!

அதன் பிறகு திங்கட்கிழமை என்னால் போக முடியவில்லை. வெள்ளிக்கிழமைதான் போக முடிந்தது. குறிப்பிட்ட குமாஸ்தா அன்று விடுமுறையில் இருந்தார். நான் அடிக்கடி அவரிடம் வந்துபோனதை நேரில் அறிந்திருந்த பியூன் ஒருவர் ஓடிவந்தார். ‘சார், ஒங்க சர்ட்டிகேட்டு ரெடியா இருக்குது. நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தாரு. இன்னும் ஒருவாரம் அவர் லீவு. அதான் எங்கிட்ட  குடுத்துட்டுப் போனாரு’ என்று ஒரு கவரை நீட்டினார். எனக்கான வாரிசு சர்டிபிகேட் அதில் இருந்தது.  ஆனால் ஐநூறு ரூபாய்க்கான கொடி-ஸ்டாம்ப்கள் இல்லை. கேட்டேன்.

கொடிநாள் ஸ்டாம்ப்புகளா? எங்கிட்ட ஒண்ணும் சொல்லலியே! சார்கிட்ட தான் இருக்கும். எங்க போயிடும்! இன்னொருநாள் வந்து வாங்கிக்குங்க என்றார் பியூன்.

காப்பி சாப்பிடுங்க என்று ஐந்துரூபாய் கொடுத்தேன். அப்போது காப்பி விலை இரண்டு ரூபாய்தான்.

பத்து நாள் கழித்துத்தான் மீண்டும் போக முடிந்தது. குமாஸ்தா என்னை அதற்குமுன் பார்த்ததே இல்லை போல் ஒரு பார்வை பார்த்தார். ‘கொடி’ என்றேன். ‘என்னது’ என்றார். ‘கொடிநாள் ஸ்டாம்ப்’ என்றேன். 

புரிந்துகொண்டவர் போல, வேகமாக தாசில்தார் அறைக்குள் போனார். பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தார். ‘உங்களுக்காக எடுத்து வைத்ததை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்கள் போல் இருக்கிறது. நீங்கள் உடனே வந்திருக்கவேண்டும். இப்போது ஸ்டாக் தீர்ந்துவிட்டது. அடுத்த வாரம் புது ஸ்டாக் வந்ததும் என்னை வந்து பாருங்கள்’ என்று கூறிவிட்டு வெளியில்போயே விட்டார். 

*** 
இலஞ்சம் என்பவள் அழகான தேவதையாம். யாரும் அறியாமல் வருவாளாம், யாரும் அறியாமல் போவாளாம். எப்படி, எந்த வடிவத்தில் வருவாள் என்பது அவளைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியுமாம். தன்னை நம்பியவர்களைப் பெரும்பாலும் கைவிடுவதில்லையாம்.

****
© Y Chellappa

செவ்வாய், மார்ச் 21, 2017

இளையராஜாவின் மாபெரும் தவறு

பதிவு எண்  21/2017
 இளையராஜாவின் மாபெரும் தவறு
-இராய செல்லப்பா

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாகச் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி இதுதான். இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ்த் திரையுலகுக்கு ஏராளமான இனிய பாடல்களை வழங்கியுள்ளனர்.
Picture courtesy: the Net
எஸ்.பி.பி. திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து SPB-5 என்ற பெயரில் இசை  நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:

அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் கடந்த வாரம் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார்.

என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.

அதில், இளையராஜாவிடம் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால், அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்குப் பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை துவக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

ஏற்கெனவே கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை. அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தருணத்தில், எனது வேண்டுகோள் எல்லாம் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது மட்டுமே. இது கடவுளின் கட்டளை என்றால் அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன்.

பல்வேறு வெற்றி பாடல்களைக் கொடுத்த இளையராஜா- எஸ்.பி.பி. கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவினையால் இசை ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

****
இது பற்றிக் கவிஞர் தாமரை கூறுவதைப் பார்ப்போமா?

திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின்படி இப்போதுள்ள சட்ட நிலைமையைக் கவிஞர் தாமரை ஒரு முகநூல் பின்னூட்டத்தில் இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளார்: ‘ஒரு பாடலின் வருமானத்தில் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே காப்பிரைட் சட்டத்தின்படி பங்கு உண்டு: ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு’.
அதாவது, இந்த மூவரைத் தவிர மற்றவர்களுக்கு உரிமை கிடையாது.
குறிப்பாக, திரைப் பாடகருக்கு, தான்  பாடிய திரைப்படலின் மீது காப்பிரைட் கிடையாது. ஏனெனில் அந்தப்பாடலைப் பாடுவதற்கு அவர் ஏற்கெனவே சம்பளம் வாங்கியாகிவிட்டது. பாடும்போது தன் குரலைப்  பயன்படுத்திப் பாடியதற்குத்தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது உரிமை முடிந்துவிட்டது. (His rights became extinguished.) ‘எனக்கே உரிய தனிப் பாணியில் பாடினேன், ஆகவேதான் பாடல் சிறப்பாக வந்தது, நான் பாடவில்லை என்றால், இளையாராஜாவே தன் சொந்தக்குரலில் அப்பாடலைப் பாடியிருந்தால், அப்பாடல் பிரபலம் அடைந்திருக்குமா? எனவே, ஒரு பாடலைப் பிரபலப்படுத்துபவன் பாடகன் தான். அவனுக்கு காப்பிரைட்டில் பங்கு உண்டு’ என்று வாதாடுவதற்குச் சட்டத்தில் இடமில்லை.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுவே நிலை. ஆகவேதான் எஸ்.பி.பி. தன் ரசிகர்களைப் பொறுமை காக்குமாறு கூறியிருக்கிறார். இளையராஜாவின் மீது கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

தான் இசையமைத்த பாடல்களைத் தன்னுடைய அனுமதியின்றிப் பாடுவதற்கு, சம்பந்தப்பட்ட பாடகர்களுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று இளையராஜா சொன்னால், அவரை ஏதோ மாபெரும் தவறு செய்துவிட்டவர் மாதிரி  முகநூலிலும் வாட்சப்பிலும் நமது வழக்கமான அரைகுறை ஆசாமிகள் வாங்குவாங்குவென்று வாங்குவதில் எந்த அர்த்தமும் கிடையாது. சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இளையராஜா சொல்லியிருக்கிறார். அவரை எதிர்த்து எந்தப் பாடகர் எந்தக் கோர்ட்டுக்குச் சென்றாலும்- குமாரசாமியே நீதிபதியாக இருந்தாலும்- அது செல்லாது என்பது தெளிவு.

கும்பலோடு கோவிந்தாவாக, இன்னொரு சினிமாக் கவிஞரான மதன் கார்க்கி (வைரமுத்துவின் மகன்), இதுதான் சாக்கு என்று இளையராஜா மீது இன்னொரு குற்றச்சாட்டை வைக்கிறார்.  பாடலின் காப்பிரைட்டுக்கு அந்த மூவர்தானே சொந்தம், அப்படியானால் பாடலாசிரியருக்கு உரிய காப்பிரைட் பங்குப் பணத்தை இளையராஜா கொடுத்திருக்கிறாரா என்கிறார். அதாவது, வைரமுத்துவுக்கு வரவேண்டிய பங்குத்தொகை இன்னும் இளையராஜாவிடமே இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இது சரி என்றால், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மீது சுற்றம் சாட்டும் இளையராஜா, தன்மீதுள்ள குற்றத்தை உடனே களைய முற்படவேண்டும். 

வைரமுத்துவுக்கும், முத்துலிங்கத்துக்கும் தராவிட்டாலும் பரவாயில்லை, அமரராகிவிட்ட வாலிக்கும், நா.முத்துக்குமாருக்கும் மட்டுமாவது பாக்கியைத் தீர்த்துவிடவேண்டும். அதுதான் சட்டப்படி சரியான நடவடிக்கை. ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கின்.. என்கிறார் வள்ளுவர். அவரும் பாவம், ராயல்டி வாங்காமலே போய்விட்டவர்தானே!
****
சூலமங்கலம் சகோதரிகளின் வழக்கு(1999)

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஆகிய இரண்டு பக்திப் பாடல்களையும்  முதன்முதலில் இசையமைத்துப் பாடி மக்களிடையே பரப்பியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி. ஆவர். இப்பாடல்கள் முதலில் இசைத்தட்டுக்களாகவும்,  பிறகு கேசட்டுகளாகவும், பிறகு சி.டி.க்களாகவும் HMV என்றழைக்கப்படும் ‘கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா’வினால் வெளியிடப்பட்டு, 1975 முதல் இன்றுவரை, உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்து வந்துள்ளன. இன்றும், காலையில் திருப்பதி வேங்கடவனின் சுப்ரபாதமும், சூலமங்கலத்தின் கந்த சஷ்டி கவசமும் ஒலிக்காத பயண வண்டிகள் கிடையாது. அன்றாடம்  குறிப்பிட்ட நேரத்தில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சூலமங்கலம் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

நல்ல பொருள் ஒன்று வந்தால், உடனே போலிகளும் வருவதுதானே இயற்கை! சூலமங்கலம் சகோதரிகளின் படத்தை மேலுறையில் போட்டு, அவர்கள் பாடியதை  அப்படியே பிரதி எடுத்து,  போலியான சி.டி.க்களைச் சில நிறுவனங்கள் தயாரித்துக் கடைகளில் விற்பனை செய்யலாயினர்.

வேறு சில நிறுவனங்களோ, சூலமங்கலம் பாடிய அதே ராகம் மற்றும் பின்னணி இசையில், வேறு பாடகிகளைப் பாடவைத்து, மேலுறை மட்டும் HMVயில் உள்ள மாதிரியே சூலமங்கலத்தின் படத்தைப் போட்டு விற்பனை செய்தனர். உள்ள பாடியிருப்பது வேறுநபர்கள் என்ற தகவல் மேலுறையில் வெளியிடப்படவில்லை.

இசைத்தட்டுக்களைப் பொறுத்தவரையில் மிகவும் விலை குறைந்த காசெட்டுகளும், சி.டி.க்களும்தான் அதிகம் விற்பனையாகும். உதாரணமாக, HMV-இன் சி.டி. 22 ரூபாய்க்கு விற்றபோது, போலி சிடிக்கள் பத்து ரூபாய்க்கே கிடைத்தன. இதனால் பெருத்த இழப்புக்கு ஆளான சூலமங்கலமும், HMVயும் அந்தப் போலி  நிறுவனங்களைக் கையும் களவுமாகப் பிடித்து வழக்குத்  தொடர்ந்தனர். (ராஜலட்சுமி முன்பே காலமாகிவிட்டதால், அவர் சார்பாகவும் தன் சார்பாகவும்)  ஜெயலட்சுமி இசையமைப்பாளர் என்ற முறையிலும்,  HMV நிறுவனம் தயாரிப்பாளர் என்ற முறையிலும் இந்த வழக்கைத் தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கில் இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய மூவருக்குமான காப்பிரைட் சட்டம் பற்றிய ஆழமான விவாதம் நடைபெற்றது.

போலிகளை வெளியிட்ட நிறுவனங்கள் பின்வரும் வாதத்தை முன்வைத்தன:

1. சி.டி.யின் ஒரு பக்கம் கந்த சஷ்டி கவசமும் மறுபக்கம் கந்த குரு கவசமும் பாடப்பட்டுள்ளன. இவற்றில், கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் தேவராய சுவாமிகள். பல ஆண்டுகளாக மக்களின் செவிவழியே பாடப்பட்டுவரும் பக்திப்பாடல் இது. அவர் துறவி. மறைந்தும் விட்டார். எனவே இப்பாடல், சூலமங்கலத்தின் காப்பிரைட் ஆக முடியாது.

2. மறுபக்கத்தில் இடம் பெற்றுள்ள கந்த குரு கவசம், புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள் இயற்றியது. அவர் ஒரு துறவி. பாடலோ பக்திப்பாடல். உலகையே துறந்துவிட்ட ஒருவருக்கு அவரே எழுதிய பாடலின் மீது மட்டும் எப்படி உரிமை இருக்கமுடியும்? எனவே இப்பாடல் அனைவருக்கும் உரிமை உள்ளதாகவே கருதவேண்டும். இந்தப் பாடலுக்கும் சூலமங்கலம் காப்பிரைட் கோர முடியாது.

3. மேற்படி இரண்டு பாடல்களுக்கும் தானே மெட்டமைத்துப் பாடியிருப்பதால் அவற்றின் காப்பிரைட் தனக்கு வரும் என்று அவர் கோரமுடியாது. ஏனெனில், அவர் பயன்படுத்தியிருப்பது, கர்நாடக இசையின் ராகம், தாளம் போன்றவை.  பல்லாயிரம் ஆண்டுகளாக இலவசமாக இருந்து வருபவை.

சூலமங்கலம் சார்பில் கொடுக்கப்பட்ட வாதம் இது:

1. கந்த சஷ்டி கவசம் என்ற பாடல் மீதல்ல, பாடலுக்கு அமைத்த இசையின்மீதுதான் உரிமை கோருகிறோம்.

2. கந்த குரு கவசம் என்ற பாடலின் மீது எங்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில், சாந்தானந்த சுவாமிகள் எங்களை அழைத்து, அப்பாடலைப் பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டு, அப்பாடலின் உரிமையை எங்களுக்கு ஒப்பந்தம் மூலம் அளித்துள்ளார். அதன் பேரில் இசையமைத்துப் பாடியுள்ளோம். எனவே, பாடல், இசை இரண்டுக்கும் எங்களுக்கு முழு உரிமையுள்ளது.

3. நாங்கள் தமிழ்ச் சமூகத்தில் பிரபலமான பாடகிகள். அதன் காரணமாகவே, நாங்கள் இசையமைத்துக் கொடுத்த மேற்படி இரண்டு பாடல்களையும் HMV நிறுவனம் வெளியிட ஒப்புக்கொண்டது. இதற்கான எழுத்துமூலமான ஒப்பந்தம் உள்ளது. எனவே, மேற்படி இரண்டு பாடல்களையும் ஒரே இசைத்தட்டாகவோ, கேசட்டாகவோ வேறு வடிவிலோ வெளிடும் உரிமையை  HMVக்கு மட்டுமே வழங்கியிருக்கிறோம்.

இந்த வழக்கை மிகுந்த ஆர்வமுடன் விசாரித்தார் நீதிபதி கற்பகவிநாயகம் அவர்கள். (தம்பி முருகனின் பாடல் வழக்கை அண்ணன் (கற்பக) விநாயகம் விசாரிப்பது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!) 

போலி நிறுவனங்கள் வெளிட்ட சிடிக்களையும், சூலமங்கலத்தின் மூல சிடியையும் தனித்தனியே கவனமுடன் கேட்டுக்கொண்ட நீதிபதி, சூலமங்கலம் -HMV சிடி யின் நகல்தான் இப்போலி நிறுவனங்கள் வெளியிட்டிருப்பது என்று முடிவு செய்தார். மேற்கொண்டு அவர்கள் இம்மாதிரி போலித் தயாரிப்புகளை வெளியிடத் தடை உத்தரவு பிறப்பித்தார். கந்த சஷ்டி கவசம்-கந்தகுரு கவசம் இசைத்தட்டின் காப்பிரைட் HMV-சூலமங்கலம் இவர்களுக்கு  மட்டுமே உண்டு என்றும் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பின்போது காப்பிரைட் சட்டத்தின் பல பிரிவுகளை அவர் விளக்கமாக ஆராய்ந்தார்.

இந்திய காப்பிரைட் சட்டம் 1957 பிரிவு 2 (p) யில் இசை அமைப்பு -Musical Work என்றால் என்ன என்று வரையறுக்கப்பட்டுள்ளது: அது இசையின் எந்த வடிவமாகவும் இருக்கலாம், இசைக்குறிப்புக்களும் (notations) அதில் அடங்கும். ஆனால் இசைக்கான எழுத்துவரிகளோ (lyrics), எப்படி இசைக்கவேண்டும் என்பதற்கான வழிமுறைகளோ அதற்குள் அடங்காது.
பிரிவு 2(d) இல் ஆக்கியோன்/இயற்றியவன் -Author என்பதற்கான வரையறை தரப்பட்டு உள்ளது.
(i) இலக்கியம், நாடகம் எனில், அதை எழுதியவனே, ஆக்கியோன் ஆகிறான்.
(ii) இசை அமைப்பு (Musical work) எனில், இசைத்தொகுப்பாளனே (Composer) அதன் ஆக்கியோன் ஆகிறான்.
இசைத்தொகுப்பாளன் -Composer -என்பதன் வரையறையை, பிரிவு 2(ffa) தருகிறது: இசையைத் தொகுப்பவன்  யாரோ அவனே இசைத்தொகுப்பாளன். (அதாவது மெட்டமைத்து, பாடக்கூடிய விதத்தில் உருவாக்கம் செய்பவன்.) அந்த இசையை அவனேயோ அல்லது வேறு யாரோ பதிவு (record) செய்திருக்கலாம் அல்லது இசைக்குறிப்புக்கள் (notations) எழுதியிருக்கலாம்.

எந்தெந்த ஆக்கங்களுக்கு காப்பிரைட் சட்டம் அமலாகும் என்பதைப் பிரிவு 13(i) கூறுகிறது. முதல்முறையாக ஆக்கப்பட்ட இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்கள்’ -works- அனைத்திற்கும்- இந்தியா முழுமைக்கும்- இந்தச் சட்டம் பொருந்தும் என்கிறது.

எல்லாம் சரி, காப்பிரைட் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம், என்ன வரையறை? அதைப் பிரிவு 14 கூறுகிறது.

14 (a) இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்களை’ -works-பொறுத்தவரை, காப்பிரைட் என்றால் மேற்படி ஆக்கங்களில் முழுதாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பகுதிக்கோ,  கீழ்க்கண்ட செயல்களை (தானே) செய்யவும் அல்லது செய்யுமாறு (மற்றவர்களுக்கு) உத்தரவிடவுமான விசேஷ உரிமையாகும் (exclusive right):
(i) அந்த ஆக்கத்தைப் பிரதி எடுப்பது (reproduction); மின்மயமான (electronic) அல்லது வேறொரு ஊடகத்தில் சேமித்துவைப்பது.(storing).
(iv) அந்த ஆக்கத்தையோ, அல்லது அதன் பகுதியையோ, திரைப்படமாக்குதல் அல்லது ஒலிப்பதிவு (sound record) செய்தல்.

14 (e) ஒலிப்பதிவு செய்வதானால்:
 (i) original ஒலிப்பதிவுடன் வேறெந்த (பின்னணி முதலிய) ஒலிப்பதிவுகளைக் கலத்தல்.
 (iii) அப்படிச் செய்த ஒலிப்பதிவை மக்களுக்கு வெளியிடல்.

காப்பிரைட்டின் உரிமையாளர் யார் என்பதை இன்னும் வரையறுக்கவில்லையே! அதைப் பிரிவு 17 செய்கிறது. முன்னர் பிரிவு 2(d) இல் ‘author’ -ஆக்கியோன்- என்பதை வரையறுத்தோம் அல்லவா, அந்த ஆக்கியோனைத்தான் காப்பிரைட்டின் முதல் உரிமையாளன் -First Owner of Copyright - என்று பிரிவு 17 சொல்கிறது.

(முதல் உரிமையாளனிடமிருந்து முறையாக ஒப்பந்தம்செய்து கொண்டு இன்னொருவன் அந்த உரிமையைப் பெறலாம். அப்போது அவன் இரண்டாவது உரிமையாளன் என்று அழைக்கப்படுவான்.)

இனி வருவதை முக்கியமாகக் கவனியுங்கள்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருக்கிறீர்கள். அப்போது அந்த நிறுவனம் சொன்னதற்கேற்ப, நீங்கள் எந்த work - even creative work - செய்தாலும், அதன் மீது உங்களுக்கு காப்பிரைட் கிடையாது. அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. உங்கள் நிறுவனத்திற்காக ஓர் ஆவணப்படம் எடுக்கலாம், அல்லது, கையேடுகள் அல்லது செய்தி -இதழ்கள் கொண்டுவரலாம், அல்லது நிறுவன ஆண்டுவிழாவில் புதிய நாடகம் ஒன்றை அவர்களுக்காக நடத்திக் கொடுக்கலாம். அவை எதிலும் உங்களுக்கு காப்பிரைட் கிடையாது.

பத்திரிகைகளில்- உதாரணமாக குமுதத்தில்,  உங்கள் கதை  வெளியாகிறது என்றால், அவர்கள் வெளியிட்டபின்,  அதையே இன்னொரு பத்திரிகைக்கு வெளியிடக் கொடுப்பதற்கான  காப்பிரைட் உங்களுக்கு கிடையாது. குமுதத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், மேற்படி கதைக்கு சன்மானம் ஏதும் பெறவில்லை என்றால்  உங்களுக்கே காப்பிரைட் சொந்தம். (பிறகு எப்போதாவது புத்தகமாக வெளியிடும்போது, வடிவ மாற்றம் பெறுவதால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.)

ஜூனியர் சிங்கர் போட்டிக்காக ஒரு புதிய பாட்டை  அவர்கள் மேடையில் நீங்கள் அரங்கேற்றினால், அதற்குப் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கே விடியோ-காப்பிரைட் சொந்தம். அவர்களின் அனுமதி பெறாமல் நீங்கள் அதை யூடியூபில் வெளியிடமுடியாது. ஆனால் அதை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த நீங்கள் விற்கலாம். அந்த உரிமை உங்களுக்குத்தான் உண்டு.

உங்களுடைய காப்பிரைட் உரிமையை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுப்பது பற்றி பிரிவு 18 கூறுகிறது.

காப்பிரைட் உரிமை உள்ள ஒருவர், தனது உரிமையை முழுதுமாகவோ, அல்லது ஒரு பகுதியையோ, ஒருவருக்கோ அல்லது பலருக்கோ, நிபந்தனை இன்றியோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டோ, காப்பிரைட் காலம் முழுதிற்குமோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமோ, மாற்றிக்கொடுக்கலாம். (assignment of right).

இனி, காப்பிரைட் என்பது எவ்வளவு வருடங்களுக்குச் செல்லுபடியாகும் என்று பார்க்கலாம்.

பிரிவு 22 : இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்களைப் பொறுத்தவரை, அவை, ஆக்கியோன் உயிருடன் இருக்கும்போதே வெளியிடப்பட்டிருந்தால், அவர் இறந்து அறுபது வருடங்கள் வரை அதற்கான காப்பிரைட் உரிமையானது, அவரிடமே இருக்கும். (அதன் பிறகு பொதுவுடைமையாகிவிடும்.)  

பிரிவு 27: ஒலிப்பதிவுகளை (sound recording)  பொறுத்தவரையில், 
அவையும் வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகள் வரை இருக்கும்.

(ஒரு சந்தேகம் எழலாம்: நாவலாசிரியர் இறந்தபிறகு ஒரு நாவல் வெளிவந்தால் அதற்கு எவ்வளவு காலம் காப்பிரைட் இருக்கும்? இதற்குப் பதிலளிப்பது  சுலபமே: ஆக்கியவர் இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அல்லவா காப்பிரைட் உடையவர்கள்? ஆகவே, அவர்கள் இறந்த பின் 6 ஆண்டுகள் வரை காப்பிரைட் இருக்கும்.)

(ஒரு புதிர்: பொன்னியின் செல்வனை இப்போது பலர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காப்பிரைட் எவ்வளவு காலம்?  

பூஜ்ஜியம். ஏனெனில், அது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல். யாருக்கும் 
காப்பிரைட் கிடையாது. அரசுக்கு மட்டுமே உண்டு. அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக்கொண்டே இருக்கலாம்.)
****
மேற்படி பிரிவுகளை விவரமாக ஆராய்ந்த பின்னர் நீதிபதி சொல்கிறார்:

1. இசைத் தொகுப்பாளன் - கம்போசர் - தான் ஒரு பாடலின் காப்பிரைட் உரிமையாளன் என்று தெளிவாகிறது. சூலமங்கலம் சகோதரிகள் தான் காப்பிரைட் உடையவர்கள். எனவே அப்பாடலை சிடி யாக வெளியிடும்படி HMV க்கு உத்தரவிட அவரகளுக்கு காப்பிரைட் சட்டம் அனுமதிக்கிறது. எனவே, சூலமங்கலமும் HMVயும் தான் கந்தசஷ்டி-கந்தகுரு கவசம் இசைத்தொகுப்புக்கு காப்பிரைட் உடையவர்கள். மற்றவர்கள் அல்லர்.

2. கந்த சஷ்டி கவசம் மீது யாருக்கும் தனிஉரிமை கிடையாது. அது பல்லாண்டுகளாகப் பாடப்பட்டு வரும் பக்தி இலக்கியம். ஆனால், கந்த குரு கவசம், அதை ஆக்கியவரால், அப்பாடலை இசையமைத்துப் பாடிப் பிரபலப்படுத்துமாறு,  சட்டப்படி சூலமங்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. (assigned.) அவர் துறவி என்பதால், இலக்கியப் படைப்பாளிக்குள்ள காப்பிரைட்டை அவருக்கு இல்லை என்று சொல்ல சட்டத்தில் வழியில்லை.

3. பிரதிவாதிகளின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சிடிக்களை நான் கேட்டேன். அவற்றின் மேலுறைகளையும் பார்த்தேன். அவை சூலமங்கலம்-HMV-யின் படைப்பை நகல் எடுத்தவாறு போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வருகிறேன். பிரதிவாதிகளின் வாதங்களும் தவறானவையாகவும் பொய்யானவையாகவும் இருக்கின்றன.  
எனவே, கந்தசஷ்டி கவசம் மற்றும் கந்தகுரு கவசம் ஆகிய இரண்டு இசைப் படைப்புகளுக்கும் காப்பிரைட் சூலமங்கலம் சகோதரிகளுக்கே உரியது என்று தீர்ப்பளிக்கிறேன்.

சூலமங்கலம் ராஜலட்சுமி vs மெட்டா மியூசிக்கல்ஸ், சென்னை
(AIR 2000 Mad 454 – Bench: M. Karpagavinayagam – Date of Judgement: 16 June, 2000)
****
எனவே, வேறு யாரும் அவற்றைப் பயன்படுத்துவதானால் சூலமங்கலத்தின் அனுமதியோடுதான் பயன்படுத்தமுடியும் என்று தெளிவாகிறது. 

அதேபோல், இளையராஜாவின் இசையமைப்புகளை வேறு யாரும் பயன்படுத்துவதானால், இளையராஜாவின் அனுமதியைப் பெற்றே பயன்படுத்தவேண்டும் என்பது தெளிவாகிறது.  எஸ். பி. பி. அவரது இனிய நண்பராக இருக்கலாம், ஆனால் சட்டத்தின்படி தான் அவரும் நடந்தாகவேண்டும்.  மேற்படி  நிகழ்ச்சிகளின் மூலம்  எஸ்.பி.பி. பல்லாயிரம் டாலர்கள் சம்பாதிக்க இருப்பதால் அதன் ஒரு பகுதி இளைராஜாவுக்குச் சேர்ந்தாகவேண்டும். (அதுவே, இலவச நிகழ்ச்சி என்றால் இளையராஜா வக்கீல் நோட்டீசுக்காகப் பணம் செலவு செய்திருக்க மாட்டார்.)
****
அப்படியானால், பாத்ரூமில் கூட இளையராஜாவின் இசையைப் பாடக்கூடாதா என் மனைவி- என்றால் பாடலாம். ஆனால் அப்படிப் பாடுவதன் மூலம் அவருக்குப் பணவசூல் நடப்பதாகத் தெரிந்தால் இளைராஜாவிடம் அனுமதி பெற்றுவிடுவதே புத்திசாலித்தனம்.
****
எப்போதும் அண்ணனை எதிர்த்துக் கருத்துக்களை வெளியிடும் கங்கை அமரன், இப்போதும் அதையே செய்திருக்கிறார். தியாகராசரின் கர்நாடகப் பாடல்களைப் பாடுகிறோமே, அவருக்கு ராயல்டி கொடுத்தோமா என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை எழுப்புகிறார். சட்டப்படி இளையாராஜா மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இளைராஜா செய்துள்ள மாபெரும் தவறு ஒன்றுண்டு. ஒன்றே ஒன்று. வயதான பிறகும் தன் சொந்தக்குரலில் சில பாடல்களைப் பாடிவிடுகிறாரே அதுதான்! (‘ஜனனி..ஜனனி’ மாதிரியான பாடல்களைச் சொல்லவில்லை.)
****
© Y Chellappa

Email: chellappay@gmail.com 

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.