செவ்வாய், ஜூலை 15, 2014

(பதிவு 101) பெண் ஜோதிடரும் ஆண் ஜோதிடரும் ..( தொடர்ச்சி)


அடுத்த நாள்.

தமிழர்களாகிய நமக்குக் காலையில் எழுந்ததும் இரண்டு விஷயங்கள்தானே நிரந்தரம்? ஒன்று, காப்பி குடித்தல். இன்னொன்று ‘ஹிந்து’ படித்தல்.

நான் ஹைதராபாத், பெங்களூர், டில்லி போன்ற பெருநகரங்களில் இருந்திருக்கிறேன். அங்கெல்லாமும் ‘ஹிந்து’ வரும். ஆனால் படிக்கச் சகிக்காது. முதல் நான்கு பக்கங்கள் பெரும்பாலும் அந்தந்த ஊரிலுள்ள  ஆசிரியர்களால் நிர்வகிக்கப்பட்டதால், உள்ளூர் செய்திகளே அதிகம் வரும். ஆனால், ஒரு சில பத்திகளைத்தவிர, மற்றவை படிக்க சுவாரசியமாக இராது. காரணம், சென்னை ‘ஹிந்து’வின் எழுத்துப்பாணி அங்கே இருக்காது! அதனால், சென்னை வரும்போதெல்லாம், காலையில் ‘ஹிந்து’வை எழுத்துவிடாமல் படித்து ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.


ஹிந்துவும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டுதான் வருகிறது. முன்பெல்லாம் தினத்தந்தியில் மட்டுமே வரும் ‘சதக் என்று குத்தினான்’, ‘ஷூட்டிங்கில் நடிகையின் சேலை கிழிந்தது’  போன்ற செய்திகள் இப்போது ஹிந்துவிலும் வருகின்றன. ஏழுதலைமுறை சித்த வைத்தியர் விளம்பரமும், ரப்பானி வைத்தியசாலை விளம்பரமும்தான் இன்னும் வரவில்லை என்கிறார்கள்.

அப்படித்தான் அன்று ஒரு ஜோதிடரின் விளம்பரமும் வந்திருந்தது. முதியவரான ஆண் ஜோதிடர். அறுபது வருட அனுபவம் என்று போட்டிருந்தது. பார்க்க நம்பிக்கையூட்டும் உருவம். தி.நகரில் முக்கியமான ஒரு பள்ளியின் அருகில் அவரது முகவரி இருந்தது. ‘இவரைப் போய்ப் பாருங்களேன்’ என்று அடுப்பங்கரையிலிருந்து சிபாரிசு வந்தது. காப்பியை விரைந்து குடித்துவிட்டு, ஹிந்துவை மடித்துக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பினேன்.   

அந்தக் காலத்தில்தான் தி.நகரில் எவ்வளவு பெரிய பரப்பளவில் வீடுகள் கட்டியிருக்கிறார்கள்! இந்த ஜோதிடரது வீடு குறைந்தது மூன்று அல்லது நான்கு கிரவுண்டு இருக்கும். உள்ளே இருபது கார்கள் நிறுத்தலாம். பந்தல்போட்டு அதன் கீழ் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் ஒரு பெண்மணி. ஜோதிடரின் மனைவி. என்னைப் பார்த்ததும் வேகமாக எழுந்து,  “வாருங்கள்” என்று முகமலர்ந்து சொன்னார். “பூஜையில் இருக்கிறார். இன்னும் கால்மணி ஆகும். இங்கேயே இருக்கிறீர்களா, உள்ளே வந்து பூஜையைப் பார்க்கிறீர்களா?” என்றார்.

நல்ல சகுனமாகப் பட்டது எனக்கு. உள்ளே போனேன். பதினைந்துக்குப் பதினெட்டு அளவுக்குப் பெரிய பூஜை அறை. சுவரின் நாற்புறமும் கடவுளர்களின் பெரிய பெரிய படங்கள். மடி ஆச்சாரத்துடன் ஒரு முதிய அய்யங்கார் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தார்.  வழுவழுப்பான சுத்தமான தரையில் அமர்ந்தேன். கற்கண்டும் பழங்களும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்தபிறகு எழுந்தார். என்னைப் பார்த்தவுடன் புன்னகையுடன் பிரசாதத்தை நீட்டினார். பூஜை தீர்த்தம் கொடுத்தார். ‘சேவிக்கலாம்” என்றார். வணங்கினேன். எனக்காகவும், என் நண்பரின் மகனுக்காகவும்.


சற்று நேரத்தில் தன் அறைக்கு வந்தார். “உட்காருங்கள்” என்று அருகில் இருந்த சோபாவைக் காட்டினார். அவருடைய முகத்தில் வயோதிகத்துக்கே உரிய கம்பீரமும், பக்தியின் தூய்மையால் விளையும் ஒளியும் தெரிந்தன. இவர்மூலம் அந்தப் பையனுக்கு நல்லது விளையும் என்று என்னையறியாமலேயே நம்பிக்கை ஏற்பட்டது.  கையிலிருந்த ஜாதகத்தை எடுத்து அவரிடம் கொடுக்கப் போனேன். அதற்குள் ‘நில்லுங்கள்’ என்பதுபோல் கையால் ஜாடை காட்டினார். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு தியானித்தார். பிறகு கண்களைத் திறந்து “ஒரு பையனின் கல்வி தடைப்பட்டது குறித்துப் பேச வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்றார்.

நான் ஜோதிடர்களுடன் அதிகம் பழகியதில்லை. அவர்களில் சிலர் முகக்குறிப்பு உணர்தல் என்னும் Face Reading இல் வல்லவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் அனுபவிப்பது இதுவே முதல்முறை. “ஆமாம் ஐயா” என்று பணிவுடன் சொன்னேன். ஜாதகத்தை வாங்கிக்கொண்டார். பையனைப் பற்றிய விவரங்களைச் சொன்னேன்.

அனுபவப்பட்டவர் அல்லவா? சில நிமிடங்களிலேயே கடகடவென்று கூறத் தொடங்கினார்: “பையனுக்குப் படிப்பு உண்டு. ஆனால் இட மாற்றம் அவசியம். இன்னும் ஒன்பது மாதங்களுக்கு வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு இங்குவந்து விடுவான். ஒரு பட்டப் படிப்பு முடித்துவிடுவான். கவலை வேண்டாம்” என்றார்.

“பையன் மீது எந்தக் குற்றமும் இல்லை. சகவாச தோஷம்தான். சனிதசையில் சனிபுக்தி இன்னும் சிலமாதங்களில் முடிந்துவிடும். அதன்பிறகு நல்ல காலம்தான். கவலைப்படவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்றார். அதற்குள் அவர் மனைவி ஒரு டபரா-தம்ளரில் காப்பி கொண்டுவந்து கொடுத்தார்.

என்ன சொல்லப் போகிறாரோ என்று கலக்கத்துடன் வந்த எனக்கு மிகப் பெரிய பாரம் இறங்கியதைப் போல் இருந்தது. நன்றியுடன் அவரைப் பார்த்தேன். “அவனைப் பற்றி இன்னும் ஏதாவது கேட்கலாமா?” என்றேன். “வேண்டாம். படிப்புதானே இப்போது முக்கியம்? மற்றதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்றார். 

"பரிகாரம் செய்யவேண்டுமானால் தயவு செய்து சொல்லுங்கள்" என்றேன். “அவர்களுக்கு வசதி இருந்தால் இந்த இரட்சையை வாங்கி அவன் கையில் கட்டச் சொல்லுங்கள். சிலபேரால் தினசரி முறையாகப் பூஜையோ, தியானமோ, பிரார்த்தனையோ செய்ய இயலாமல் போகும். அவர்களுக்கு இந்த இரட்சை சிறந்த பரிகாரமாகும். விலை அறுநூறு ரூபாய். ஆனால் வாங்கவேண்டுமென்று கட்டாயமில்லை” என்று ஒரு தாயத்தை எடுத்து மஞ்சள் குங்குமம் தடவி ஒரு சிறிய காகிதப்பையில் வைத்துக் கொடுத்தார். வாங்கிக்கொண்டேன். அது பெரிய தொகையல்லவே!

“தங்களுக்கு எவ்வளவு தர வேண்டும்?” என்றேன் தயக்கத்துடன்.

அவர் சிரித்தார். “என் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். திரும்பிவர மாட்டேன்  என்கிறார்கள். இதோ பார்க்கிறீர்களே, வீடு, நானும் மனைவியும்தான் இருக்கிறோம். நாலு கிரவுண்டு காலிமனை பதினைந்தாயிரத்துக்கு வாங்கினேன். கட்டுவதற்கு நாற்பதாயிரம் ஆயிற்று. இன்று ஐந்து கோடி பெறும். யாருக்காக நான் பணம் சேர்க்க வேண்டும்? நீங்கள் விரும்பினால் கற்பூரத்தட்டில் ஏதாவது வையுங்கள். எந்தக் கட்டாயமுமில்லை” என்றார் புன்னகை மாறாமல்.

நூறு ரூபாய் வைத்தேன். அவரை வணங்கி எழுந்தேன். ஒரு எஸ்.ட்டி.டி. பூத்திற்குச் சென்று நண்பரின் மனைவியிடம் தகவல் சொன்னேன். “என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்” என்று சற்று நிம்மதியோடு பேசினார்.

(பின்கதைச் சுருக்கம்-1: அந்த ஜோதிடர் அடுத்த சில மாதங்களில் இறைவனடி சேர்ந்தார். என்னுடைய ஜாதகத்தை அவரிடம் காட்டவேண்டுமென்று எண்ணினேன். நடக்காமல் போனது.)

(பின்கதைச் சுருக்கம்-2: தாயத்து, பையனின் கைக்குப் போயிற்று. அதைத் தோள்பட்டையருகில் அணிந்துகொண்டான். அவன் மனநிலையில் நல்ல தெளிவு ஏற்பட்டது. சிலமாதம் வெளிநாடு போய் உறவினர்களுடன் இருந்தான். கணினிகளில் பயிற்சி பெற்றான். அடுத்த கல்வியாண்டில் இந்தியாவிலேயே வேறொரு பல்கலையில் சேர்ந்து பட்டம் பெற்றான். போதை மருந்துகள் அவனிடம் எட்டியும் பார்க்கவில்லை. இன்னொரு மாநகரத்தில் வேலையில் சேர்ந்தான்.)
 ***
உலகில் எத்தனை வகை மனிதர்கள்?

நேற்று என்னை ஏளனமாகச் சிரித்த பெண்-ஜோதிடரையும் இன்று இன்முகத்தோடு வழியனுப்பும் இவரையும் மனம் தன்னையறியாமலேயே ஒப்பிட்டுப் பார்த்தது. அவரும் வசதியானவர்தான். இவரும் வசதியானவர்தான். ஆனால் பொருளீட்டும் மனநிலையில்தான் எவ்வளவு வேற்றுமை?  

ஆனால், நான் வந்த வேலை நல்லபடியே முடிந்துவிட்டதால்,  அந்தப் பெண்மணிமேல் நேற்று எழுந்த ஆத்திரம் பாதிக்குமேல் கரைந்துபோய்விட்டது. மீதமுள்ள ஆத்திரத்தைக் கொண்டுதான் அவரை நாளைக்குச் சமாளிக்கவேண்டும். மனதிற்குள் ஏற்கெனவே போட்டிருந்த திட்டத்தை மனதிற்குள்ளாகவே மீள்பார்வை செய்துகொண்டேன்.
***
மறுநாள் காலை எட்டுமணி இருக்கும். என் தொலைபேசி அழைத்தது. பெண் ஜோதிடரின் செயலாளர்! என்னடா இது ஆச்சரியமாக இருக்கிறதே என்று எடுத்தேன். “வணக்கம் சார்” என்றாள் அந்தப் பெண்.

“சார் நீங்கள் எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்றார். சரிதான், நம் வழிக்கு வருகிறார் என்று தெம்பு வந்தது. “என்னங்க அவசரம்? விமானத்தில் வருகிறார் அவர். எப்படியும் பதினோரு மணிக்குள் வந்துவிடுவார்” என்றேன் அலட்சியமாக.

“கோபித்துக் கொள்ளாதீர்கள் சார்! அம்மா கேட்கச் சொன்னார்கள்” என்று போனை வைத்தாள்.

நான் சிரித்துக்கொண்டேன். பதினோரு மணிக்கு நானே அவர்களைத் தொடர்புகொண்டேன். மீண்டும் “வணக்கம் சார்” பெண்மணிதான் எடுத்தார். “அவர் விமான நிலையத்தில் இருக்கிறார். ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாம். சற்றுத் தாமதம் ஆகலாம். பரவாயில்லையா?’ என்றேன் வருத்தம் தெரிவிக்கும் பாவனையில்.

‘அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்ற பதிலை எதிர்பார்த்தேன். ஆனால் இவரோ, “அதனால் என்னங்க? வரட்டும், பரவாயில்லை” என்று தொலைபேசியை வைத்துவிட்டார்.

நான் மீண்டும் சிரித்துக்கொண்டேன்!
***
ஒரு மணி சுமாருக்கு அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பாவம், ஏமாந்து போயிருக்கிறார்கள்.  நான் எடுக்கவில்லை. விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. நான் விடாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். பிறகு பகல் உறக்கம் கண்களைத் தழுவிக்கொண்டது.
***
மணி நாலு.  அதற்குள் இரண்டுமுறை அழைத்திருக்கிறார்கள். பாவம், தங்களைச் சந்திக்க யாரோ ஒரு பணக்காரர் வரப்போகிறார் என்று  நம்பி, காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

உண்மையில் நான் திட்டமிட்டிருந்தது வேறு; இப்போதோ, அவர்கள் மீது கழிவிரக்கமே உண்டாயிற்று. அந்தப் பெண்மணி உண்மையிலேயே நல்ல ஜோதிடராகவும் இருக்கக்கூடும். ஆனால் ஒரு நல்ல மனிதர் அல்லர். இங்கிதம் தெரிந்தவர் அல்லர். அவ்வளவே. அதற்காக அவரை நான் பழிதீர்க்க வேண்டுமா?

ஒரு டாக்டரிடம் போகிறோம். மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறோம். கேட்ட பணம் தருகிறோம். அவர் எழுதும் மருந்துகளை மறுவார்த்தையின்றி வாங்குகிறோம். நோய் குணமாவதில்லை. அதற்காக அவரைப் பழிதீர்க்க நினைக்கிறோமா?

லஞ்சம் கொடுத்த பிறகும் அரசு அலுவலகங்களில் நடையாய் நடக்கவிடுகிறார்களே, அவர்கள்மீது யாராவது கைவைக்க முடிகிறதா? புகார் கொடுத்தாலும் பாதகம் நமக்குத்தானே?

இந்தப் பெண்ஜோதிடரை நான் இப்படி அலைக்கழிக்கவைப்பது தவறு என்று மனம் சொன்னது. ஒருவேளை இவரை நான் சந்தித்திருந்தால், இன்னும் விலை உயர்ந்த பரிகாரங்களைச் சொல்லி அதிகப் பணச்செலவு ஏற்படுத்தியிருப்பாரோ என்னவோ! அதனால் தான் அந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டதோ?

நம் இந்தியநாட்டில், அறிவுக்கு மரியாதை தருபவர்கள் குறைவு. அதனால்தான் அதை இலவசமாகவே எதிர்பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் எந்த ஒரு கூட்டத்திற்கும் நுழைவுக் கட்டணம் கொடுத்தால்தான் உள்ளே விடுவார்கள். இங்கோ, காசு கொடுப்பார்களோ இல்லையோ என்ற அவநம்பிக்கையுடனேயே அறிஞர்கள் தம் அறிவை இறக்கிவைக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய பின்னணியில், வக்கீல்களைப்போல, ‘முதலில் பணத்தை வை, பிறகு உள்ளே வா’ என்று ஜோதிடர்கள் கூறினால் அதில் என்ன தவறு இருக்கமுடியும்?

கூப்பிட்ட இடத்திற்கு வர மறுக்கும் உரிமை ஓர் ஆட்டோ ஓட்டுனருக்கு இருக்குமானால், தன் சேவைக்கு உரிய பணத்தைத் தரக்கூடியவனாகப் பார்த்து, அவனுக்கு மட்டுமே ஜாதகம் பார்க்கமுடியும் என்று சொல்லும் உரிமை ஒரு ஜோதிடருக்கு இல்லாது போகுமா? அதற்கு நான் ஏன் ஆத்திரப்படவேண்டும்?    

ஒவ்வொரு ஆணின் மனத்திலும் ஒரு துரியோதனன் ஒளிந்துகொண்டிருக்கிறான். ஒரு பெண்ணால் இலேசாக அவமதிக்கப்பட்டாலும், உள்ளிருக்கும் துரியோதனன் “அன்று நகைத்தாளடா! – உயிர் மாமனே!..” என்று புலம்பத் தொடங்கிவிடுகிறான் என்ற மனோதத்துவம் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

ஒரு காகித உறையில் ஐநூறு ரூபாய்களை இட்டேன். ஜோதிடர் வீட்டை நோக்கி நடந்தேன்.
****
செயலாளப் பெண்மணி இருந்தார். “என்ன சார் ஆயிற்று? அவர் வரவேயில்லையே?” என்றார். “அம்மா ரொம்ப நேரம் அவருக்காகவே இருந்தார்கள். இப்போதுதான் மார்க்கெட்டுக்குப் போனார்கள். வர முடியவில்லை என்றால் சொல்லியிருக்கலாமே! பாவம் நீங்கள்தான் என்ன செய்வீர்கள்? பெரிய மனிதர்களே இப்படித்தான்...” என்றார்.

“மன்னிக்க வேண்டும் அம்மா! என்னிடமும் அவர் சொல்லவில்லை. வழியில் ஏதாவது ஆகியிருக்கவேண்டும். தயவுசெய்து அம்மாவிடம் நான் வருத்தம் தெரிவித்ததாகச் சொல்லிவிடுங்கள்” என்றேன். காகித உறையைக் கொடுத்தேன் - அவர் முகத்தைச் சரியாகப் பார்க்காமலேயே  

“என்ன சார் இது? “ என்று புருவத்தை உயர்த்தினார்.

“ஒன்றுமில்லை. இதை அம்மாவிடம் கொடுத்துவிடுங்கள். என்றாவது ஒருநாள் என் நண்பர்  வரக்கூடும். அப்போது தாமதிக்காமல் அவரை ஜாதகம் பார்க்கச் சொல்லுங்கள். வரட்டுமா?” என்று கிளம்பினேன்.

(பின்கதைச் சுருக்கம்-3: ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த வீட்டருகில் செல்ல நேர்ந்தது. பெண் ஜோதிடர் மறைந்துவிட்டாராம். மகன் பெயரில் கணினிப் பயிற்சிநிலையம் நடப்பதாகப் பலகை சொல்லியது.)

(பின்கதைச் சுருக்கம்-4: மேற்படி அனுபவங்களுக்குப் பிறகு, நாமே ஜோதிடம் பயின்றால் என்ன என்ற அரிப்பு ஏற்பட்டதன் பேரில், கடினமாக உழைத்து ஜோதிடத்தில் சிறிது பரிச்சயம் பெற்றதும், அந்த அளவில என்னிடம் வந்த நெருங்கிய நண்பர்களுக்கு நான் சொன்ன சிலவிஷயங்கள் பலித்ததும், தனிக்கதை.  ஆனால் என்னுடைய ஜாதகத்தை நானே பார்த்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. காரணம் நான் பிறந்த சரியான நேரம் குறித்துவைக்கப் படவில்லை!)

(பின்கதைச் சுருக்கம் 5: என் நண்பரின் மகனுடன் எனக்குத் தொடர்பு விட்டுப் போனது. வேறோருவர்மூலம் கேள்விப்பட்ட செய்தி இது: வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, துரதிர்ஷ்டவசமாக ஒரு வாகன விபத்தில் அவன் அகால மரணம் அடைந்துவிட்டானாம்! அதனால் தானோ என்னவோ, “இன்னும் ஏதாவது கேட்கலாமா?” என்றதற்கு அந்த ஜோதிடர், “வேண்டாம். படிப்புதானே இப்போது முக்கியம்? மற்றதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினார்? மரணம் பற்றிய தகவல்களை எவ்வளவு திறமையான  ஜோதிடரும் வெளிப்படையாகக் கூறுவதில்லையே!)

 © Y Chellappa 

40 கருத்துகள்:

  1. ஜாதகம் என்பதை
    சாதகம் என்று கூறுவார்கள் ஐயா
    நமக்கு சாதகமானதைக் கூறுதல்
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதகமானதை கேட்கத்தானே ஜோதிடரை நாடுகிறோம்! ஜோதிடர் மட்டுமா, டாக்டர்களையும் கூட! ஒரு ஜோதிடரோ , டாக்டரோ நமக்குப் பாதகமான கருத்தைச் சொல்லிவிட்டால், அதை நம்பாது, second opinion தேடி அல்லவா நாம் போகிறோம்! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  2. அலைக்கழிக்கவைப்பது தவறு என்று நினைத்து, சொன்னதனைத்தும் சிந்திக்கத்தக்கவை... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. சங்கீதத்தை விட இங்கிதமே அதிகம் ஈர்க்கும் ..என்பார்கள்..!

    நண்பர் மகனின் அகால மரணம் வருத்தப்பட்வைத்தது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், Appeal to the Heart; then appeal to Reason என்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறதே! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    நாம் இந்துக்கள். எமது மதநம்பிகைப்படி ஜோதிடம் பார்க்கும்வழக்கம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும் சிலவிடங்கனை உண்மையாக சொல்லுகிறார்கள் சில விடயங்களை பொய்யாக சொல்லுகிறார்கள் என்னை பொறுத்த மட்டில் இதில் நம்பிகை குறைவு என்றுதான் சொல்வேன்.
    அளவையியல் கால்பொப்பர் தனது அறிவியல் கோட்பாட்டில் செல்லுகிறார் இவைகள் அனைத்தும் மூட நம்பிக்கை என்று சொல்லுகிறார்.... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய ஜோதிடம் என்பதை மூட நம்பிக்கை என்று தள்ளிவிடமுடியாது. அது கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவானது. ஓரளவு ஜோதிடம் பயின்ற என்னாலேயே சில எதிர்கால நிகழ்வுகளைச் சரியாகச் சொல்லமுடியும் என்னும்போது, அனுபவமும் ஆராய்ச்சியும் நிறைந்த ஜோதிடர்கள் நிச்சயமாக நமக்கு உதவியான கருத்துக்களைக் கூறமுடியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால், இந்திய மருத்துவம் போலவே (சித்தா, ஆயுர்வேதம், யூனானி) ஜோதிடமும் தொடர்ந்து ஆராயப்படவேண்டிய ஒன்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் மக்களைச் சென்று சேரவேண்டியதும் அவசியம்.

      நீக்கு
  5. தன் இறப்பையே அறியாத ஜோதிடர்கள் அந்த பையனின் இறப்பை எப்படி அறிந்திருக்க முடியுமென தோன்றுகிறது !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படித்தான் நினைத்தேன் நண்பரே! இயற்கை தன் முக்கிய முடிவுகளை மனிதனின் கண்களில் இருந்து மறைத்துவிடுவதே வழக்கம். தன்னுடைய இறப்பை எந்த ஜோதிடரும் கணிக்கவே இயலாது என்பதும் அத்தகையா முடிவே.

      நீக்கு
    2. அப்படி அல்ல சார். இறப்பை சரியாகக் கணிக்கமுடியும். ஒரு தடவை நான் யதேச்சயாகப் பார்த்த வெளி'நாடுகளெல்லாம் பயணம் செய்யும் ஜோதிடர் என்னிடம் அவரின் வாழ்வு நிகழ்வுகளைச் சொல்லியுள்ளார். ஆனால், அப்படி ஜோதிடம் பார்ப்பதற்கு பல்வேறு சட்டங்களெல்லாம் (RULES) சரியாகத் தெரிந்திருக்கவேண்டும்.

      விதியான செயல்களை, இயற்கை அறியவிடாது என்பது உண்மை. நாளை விபத்தில் மரணிக்கவேண்டும் என்றால் அதனை இயற்கை அறியவிடாது. எனக்குத் தெரிந்த எங்கள் அப்பா மிகவும் நம்பிய திருச்சி ஜோதிடர் ஒருவர், அவருடைய மகள் திருமணத்துக்குக் கஷ்டப்பட்டு (ஆராய்ந்து) தேர்வு செய்த மணமகன், குறைந்த காலத்தில் இறந்துபட்டார். மகள், கணவனை இழந்துவிட்டாள் என்பதே அவருடைய வயதான காலத்தில் வாழ்க்கையின் பற்றை விட்டுவிடச் செய்தது.

      நீக்கு
    3. நானும் பாத்திருக்கிறேன். ஆனால் அதற்கு மிகுந்த பயிற்சியும் ஞானமும் பற்றற்ற தன்மையும் தேவை என்று ஒரு ஜோதிடர் கூறினார். திமுக விலிருந்து முக்கிய பிரமுகர் வெளியேறுவார், அதனால் கட்சி உடையும் என்று 1967 அல்லது 1968 இல் என்று நினைக்கிறேன், ஜோதிடர் B V ராமன் எழுதினார். அதை யாரும் நம்பவில்லை. மூன்றாண்டுகள் கழித்து எம்ஜிஆர் விலகி அண்ணா திமுக வைத் தொடங்கினார். இதுவும் மரணம் பற்றிய முன்னறிவு தான். பாமரர்களால் இதையெல்லாம் நம்ப முடிவதில்லை.

      நீக்கு
  6. தன் இறப்பைக் கணிக்கும் ஜோதிடரும் உண்டு திரு பகவான் ஜி. எங்கள் கல்யாணத்திற்குப் பொருத்தம் பார்த்த ஜோதிடர் அப்படித் தான் தான் எவ்வாறு இறப்போம் என்று முன்கூட்டியே சொல்லி இருந்தார். அம்மாதிரியே அவர் சொன்ன அதே மாதம், நாள், வருடம் இறந்தார். அதற்குப் பின்னர் அப்படி ஒரு ஜோதிடரை இன்று வரை பார்க்கவில்லை. என் தாத்தாவும் அருமையாக ஜோதிடம் பார்ப்பார். ஆனால் மேற்சொன்ன ஜோதிடர் போல இறப்பு சம்பந்தமான விஷயங்களைச் சொல்ல மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறப்பைச் சரியாகக் கணக்கிடும் முறைகளும் ஜோதிடத்தில் உண்டு. ஆனால் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள அனுபவமும் வாழ்க்கையில் பக்குவமும் தேவை. இறையருள் இருந்தால் மட்டுமே அத்தகைய வல்லமையைப் பெறமுடியுமாம்.

      நீக்கு
  7. அந்த இளைஞனின் எதிர்பாரா முடிவு வருத்தத்தில் ஆழ்த்தியது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திடீரென்று அந்தப் பையனின் நினைவு வந்தது. அவனுக்காகவே இந்தப் பதிவினை எழுதினேன்.

      நீக்கு
  8. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்ல. இருந்தாலும், உங்க ஜோதிட அறிவை பரிட்சித்துப் பார்க்கனும்போல இருக்கு. எனக்கு தெரிந்த ஒருவருடைய பிறந்த நாள், தேதி, இடம், வருடம் அனுப்புறேன். கணிச்சுச் சொல்றீங்களா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை இப்போதெல்லாம் குறைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ளலாமா?

      நீக்கு
  9. ஒரு டாக்டரிடம் போகிறோம் . காத்திருந்து மருந்து வாங்குகிறோம் உடல் நலமாகாவிட்டால் டாக்டரைக் குறை சொல்ல முடியுமா? அதேபோல் நம்பிக்கையுடன் ஒரு ஜோசியரை அணுகுகிறோம் . சொன்னது பலிக்க வில்லை என்றால் குறை கூற முடியுமா. ?நான் ஜோசியம் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வது நடக்குமா என்பதைவிட நல்லது சொல்ல மாட்டார்களா என்னும் நம்பிக்கையே முக்கியத்துவம் பெறுகிறது. நடக்கப் போவது தெரிந்து விட்டால் வாழ்க்கையின் த்ரில் போய்விடும். நூறாவது ( இது நூற்றொன்றாவதா) பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா! யாராவது நமக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கமே எதிர்காலம் பற்றிய உண்மையை அறிந்துகொள்ளத் தூண்டுகிறது. அதற்கேற்ப, பெரும்பாலான ஜோதிடர்கள், நமக்கு நல்லவற்றையே கூறுவதைப் பார்க்கிறோம்.

      நீக்கு
  10. சில ஜோதிடர்களுக்கு கெட்ட விஷயங்கள் மட்டுமே முதலில் கண்ணில் படும்! சில ஜோதிடர்கள் இவரைப்போல. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஜாதகம் பார்க்கக் காசு வாங்கினால் சொல்லும் பலன் பலிக்காது என்பார். மேலும் ஜோதிடர்களுக்கு சொன்னதெல்லாம் பலிக்கும் 'வாக்குக் காலம்' என்றும் உண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது போல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எதிர்காலம் என்பது இறைவனின் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடியது. அதை எந்த மனிதனாவது தெரிந்துகொண்டுவிட்டால் உடனடியாக அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று ஒரு குரு கூறியிருக்கிறார். அரவிந்தரோ, எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்கிறார். " A foreknowledge is an added pain" என்று அவரது சாவித்திரி காவியத்தில் எழுதுகிறார்.

      நீக்கு
  11. நம் இந்தியநாட்டில், அறிவுக்கு மரியாதை தருபவர்கள் குறைவு. அதனால்தான் அதை இலவசமாகவே எதிர்பார்க்கிறார்கள். // உண்மையே!

    நீங்கள் சொன்னது போல ஜோதிடர்கள் இறப்பு பற்றிச் சொல்வதில்லை அவர்களுக்கு அது தெரிய வந்தாலும்! மேலும் டாக்டர்களுக்குள் எப்படி டயாக்னாசிஸ் வேறு படுகின்றாதோ அது போன்று சோதிடர்களுக்குள்ளும் கருத்துக்கள், பலன் மாறுபடுகின்றதே! ஆனால், சோதிடருக்கும் மேலே, சோதிடம் கணிதம், வானவியல் அடிப்படையில் இருந்தாலும்,இதற்கெல்லாம் மேலாக ஒருவன் சக்தி வாய்ந்தவன் இருக்கின்றானே பரம்பொருள்! அவன் நினைப்பதுதான் நடக்கும்! இல்லையா சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக! 'அவன்' நினைப்பதுதான் நடக்கும். ஒரு திருமணத்தில் பெருங்காய வாசனையுடன் ரசம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. எனக்குப் பரிமாறும் நிலையில், வாளியைக் கைதவறிக் கீழே விட்டுவிட்டார் பரிமாறுபவர். எல்லாம் தரையில் கொட்டிப்போனது! வெறும் ரசத்துக்கே இப்படி என்றால், வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளுக்கு 'அவன'ன்றி யாரைப் பொறுப்பாக்குவது?

      நீக்கு
  12. I know that Astrologer. I have also been to him almost 12 years back. His younger brother was living upstairs on the same house.
    Surya

    பதிலளிநீக்கு
  13. படித்து முடித்தவுடன் ஏதோ வெறுமை எனக்குள் படர்கிறது அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இப்படிச் சொன்னதன்மூலம் நான் எழுதிய பயனைப் பெற்றுவிட்டேன் நண்பரே!

      நீக்கு
  14. ஐயா , சரியான குறும்புக் காரர்தான் நீங்கள். ஒரு சுவாரசியமான கதை போலவே இருந்தது

    பதிலளிநீக்கு
  15. //என்னுடைய ஜாதகத்தை நானே பார்த்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. காரணம் நான் பிறந்த சரியான நேரம் குறித்துவைக்கப் படவில்லை!)//

    அதனாலென்ன. எண் சோதிடர்கள் பெயரைத் தேவைக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வதில்லையா?

    ஒவ்வொரு பஞ்சாங்கமும் வெவ்வேறு நேரம் காட்டுவதில்லையா?

    தோதுபட்டால் கடவுளையே மாற்றிக்கொள்ளலாமே. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவருடைய வெற்றிக்கு அதுதான் காரணமாமே?

    எதற்கும் மட்டுப்படவில்லை என்றால் சில புத்திசாலித்தனமான வியாக்கியானங்களை முன் வைக்கலாமே?.
    இப்படித்தான், சோதிடத்தில் பெரும் புகழ் வாய்ந்த சோடி மிகச்சிறந்த அரச யோக முகூர்த்தத்தில் திட்டமிட்டு குழந்தை பெற்றார்களாம். ஆனால் பிள்ளை எப்போதும் மற்றவர் சேவகம் செய்யும்படி குறையோடு பிறந்துவிட்டதாம்.

    சில ஆண்டுகளுக்கு முன் சுபமுகூர்த்தத்தில் பந்தல் தீபிடித்து மணமகன் உட்பட பலர் இறந்ததுகூட சோதிடத்தின் தவறோ சோதிடரின் தவறோ அல்லவாம். மணமகள் அதிட்டக்கட்டையானதுதான் காரணமாம்.

    பூசையில் சாட்ச்சாத் அனுமனோடேயே நேரில் பேசுகிறேன், நான் யுரேனஸ், புளோட்டோ சஞ்சாரத்தையும் சேர்த்து கணிக்கிறேன், நான் நடிகை சொன்னதை கடவுள் சொன்னதாக சோழி உருட்டுகிறேன், என்று பல கோமாளிகள்; பல கொட்டகைகள். கடவுள் புண்ணியத்தில் எல்லோருக்கும் வியாபாரம் நன்றாகவே நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. ஜோதிடம் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் நிறையவே உண்டு. எனினும் ஜோதிடத்தில் நம்பிக்கை வைப்பவர்கள் அதைவிட அதிகம் இருக்கிறார்கள். ஒரு பிரபல அரசியல் தலைவர் சில ஆண்டுகளாகவே மஞ்சள் துண்டு அணிந்துகொண்டிருப்பது பற்றியும் இதே போன்ற விமர்சனம் உண்டு. ஜோதிடத்தைப் பழிப்பவர்களில் பலர், தங்கள் மனைவியர்மூலம் ஜோதிடர்களை அணுகிப் பரிகாரங்களைச் செய்வதாகப் பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டதுண்டு. ஆகவே, என்ன தெரிகிறதென்றால், ஜோதிடம் போன்ற கருத்துக்களை ஏற்பதும் விடுவதும் தனி மனிதனின் இயல்புக்கு ஏற்றமாதிரியான நிகழ்வு என்பதே. தங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பெண் ஜோதிடரைப் பழி வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டது சிறப்பு. ஆனால், ஃபோன் செய்து நண்பர் வரவில்லை என்பதைத் தெரிவி்டுவிட்டு , ரூபாய் 500~ஐக் கொடுக்காமல் இருந்திருக்கலாமே?

    பதிலளிநீக்கு
  18. அது அவரது நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்! (பெண்பாவம் பொல்லாதது என்பார்களே!)

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்புக்கும் பரிந்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  20. ஜோதிடம் பலரின் நினைவுகளையும், சிந்தனைகளையும் மாற்றி விடுகிறது. ஜாதகம் கேட்டு பலனடைபவர்களும் உள்ளனர். மர்றுபட்ட நிகழ்வுகளைத் தாங்கள் கொணர்ந்து நிலையைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
    மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  21. தகவல் தெரிவித்த நட்புக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  22. பதிவின் முடிவு மனதை கணக்க வைத்துவிட்டது.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு