திங்கள், அக்டோபர் 28, 2013

மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே – என்று கவிபாடி எச்சரித்த பிரதமர் ( ‘அபுசி-தொபசி’-8)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல் 

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர் அ(ட்)டல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள். இரண்டுமுறை பிரதமராக இருந்தவர். இக்கட்டானதொரு சூழ்நிலையில் நிச்சயமற்ற அரசியல் சதிக்கு நடுவே மகாபாரதத்தில் தருமர் மாதிரியான சமநிலையோடு 16 நாட்கள் மட்டுமே (16-5-1996 முதல் 01-6-1996 வரை)  இந்தியாவின் 11-ஆவது பிரதமராக இருந்தது முதல்தடவை. பின்னர்  19-3-1998  முதல் 22-05-2004 வரையான  6 வருடம்  64 நாட்கள் பிரதமராகி நாடுபோறும் ‘தங்க நாற்கரம்’ என்னும் நாடு தழுவிய நெடுஞ்சாலை வசதி முதலியவற்றைத் தந்தது, இரண்டாம் தடவை.

வாஜ்பாய் அவர்களின் ஹிந்திச் சொற்பொழிவைக் கேட்டால் அறிஞர் அண்ணாவின் தமிழ்ச் சொற்பொழிவைக் கேட்பதற்குச் சமம். (இதைவிட வேறு வார்த்தைகளில் அவரது பேச்சாற்றலை யாரும் வருணித்துவிட முடியாது என்பது உறுதி.) சொல்லப்போனால் அண்ணாவை விடவும் கம்பீரமான மொழிநடை அவருடையது.

இந்திராகாந்தியின் இளையமகனான சஞ்சய்காந்தி, புதுடில்லி சப்தார்ஜங் விமானதளத்தில் நிகழ்ந்த ஒரு  விபத்தில் சோகமரணம் அடைந்த சில நாட்களில் ஹைதராபாத்தில் வாஜ்பாய் அவர்களின் பேச்சை முதன்முறையாகக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மிகச்சில வார்த்தைகளில் மகனை இழந்த தாயின் துக்கத்தை அவர் வருணித்தபோது கண்ணீர் விடாதவர் இல்லை. “அப்பெண்மணி அத்தகைய துயரத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் நாம் அரசியல்பேதத்தால் அவரைச் சாதாரணமாக எதிர்த்தாலும் அது அவரது வேதனையைப் பெருக்குவதாகும். எனவே, சிறிது காலம் பொறுக்கவேண்டும்” என்று தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். 1967 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோற்று, பெரியார் ஈ.வெ.ரா. அவர்களால் “கண்ணீர்த்துளிகள்” என்றும், பக்தவத்சலம் அவர்களால் “விஷக்கிருமிகள்” என்றும் குறிக்கப்பட்ட  தி.மு.க. பதவிக்கு வந்தபோது பெருந்தலைவர் காமராஜர் சொன்னாரே, “அவர்களுக்கு ஆறு மாதம் கொடுப்போம். அதுவரை விமர்சிக்கவேண்டாம்” என்று, அதுபோன்ற பெருந்தன்மையான அரசியல்மொழிகள் அவை. “இன்றுபோய் நாளை வா” என்று இராமன் இராவணனுக்குச் சொன்னமாதிரி.

தமது அரசியல் வாழ்க்கையை ஒரு பத்திரிகையாளராகவே துவக்கியவர் வாஜ்பாய். முடிந்தபோது கவிதைகளும் எழுதினார். அவற்றில் சிறந்த 51 கவிதைகளைத் தொகுத்து “எனது 51 கவிதைகள்” (மேரி இக்யாவன் கவிதாயேம்) என்ற நூலாக ஹிந்தியில் வெளியிட்டனர். அப்போது அவர் பிரதமராகவும் இருந்ததால் எல்லா மொழியிலும் போட்டிபோட்டுக்கொண்டு இந்நூலை உடனடியாக மொழிபெயர்த்தார்கள். தமிழில் பிரபல பத்திரிகையாளர் வாமனன் “வாஜ்பாய் கவிதைகள்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். 2000ஆம் ஆண்டில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட முதல் பதிப்பு.  அதிலிருந்து சில எடுத்துக்காட்டுக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

Blades of Grass  என்று வால்ட் விட்மன் கவிதை எழுதினார். வாஜ்பாய் என்ன சொல்கிறார் தெரியுமா? நிரந்தரமான சூரியனை ரசிக்கமுடிகிறபோது, சில கணங்களே உயிர்வாழ்ந்து அச்சூரியகிரணத்தினால் மரணமடையப்போகும் பனித்துளிகளையும் ஏன் ரசிக்கக்கூடாது?

 புல்லின் இதழ்களில்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
இதோ இருந்தன
இப்போது இல்லை.

எப்போதும் நம்முடன்வரும்
இனிமைச் சுகங்கள்
என்றும் இருந்ததில்லை
எங்கும் இல்லை.

பனிக்கால கர்ப்பத்தினின்று
கிளம்பிவரும் குழவிச் சூரியன்
கிழக்கின் மடியில்
தவழத் தொடங்கும் போது
என் தோட்டத்தில்
ஒவ்வொரு இலையிலும்
பொன்னொளி சுடர்விடுகிறது.

முளைத்தோங்கும் சூரியனை
எதிர்கொண்டு கும்பிடுவேனோ,
கதிர்வீச்சில் தொலைந்துபோன
பனித்துளியை தேடுவேனோ?

சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை என்ன முடியாது.
ஆனால் பனித்துளியும்
ஒரு சத்தியம் தானே.

கணநேர சத்தியம்
என்பது வேறு விஷயம்.
அந்தக் கணங்களை நுகரவே
நான் ஏன் வாழக்கூடாது?

கணத்திற்குக் கணம்
ஒவ்வொரு துளியிலும்
பரந்து கிடக்கும்
சௌந்தர்யங்களை
ஏன் பருகக்கூடாது?

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
எல்லாப் பருவங்களிலும்
காண இயலாது.

உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கில் மருத்துவமனையில் இருந்தபோது வாஜ்பாய் எழுதிய “மரணத்தோடு மோதிவிட்டேன்” என்ற தீரமான கவிதையின் சில பகுதிகள்:

மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?

மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.

தமிழ் தெரிந்தவர்கள் இந்த நூலையும், ஹிந்தி தெரிந்தவர்கள் மூல நூலையும் படித்துப் பார்க்கலாம். சிறிய நூல் தான். எத்தனை நாடுகளில் பிரதம மந்திரிகள் இதுபோல் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள்?

புத்தகம்
ரிலையன்ஸ் அம்பானி காதலுக்கு எதிரியா?

ரிலையன்ஸ் நிறுவனர் (அமரர்) திருபாய் அம்பானி, புதுமை விரும்பி. உலகின் எந்த மூலையில் புதிய தொழில்நுட்பம் கிடைப்பினும் உடனே வாங்கிவந்து தன் தொழிற்சாலையில் செயல்பட வைப்பார். அப்படிப்பட்டவர், தனது இளைய மகன் அனில் அம்பானி ஒரு திரைப்பட நடிகையை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது என்ன செய்தார் தெரியுமா?

சென்னை, ஸிக்ஸ்த்-சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (தொலைபேசி:  044-24342771, 044-65279654)  வெளியீடான “ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை” என்ற ம.லெனின் எழுதிய, அழகிய தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூலில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. (பக்கம் 158-159):

அனில் அம்பானி, வார்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். ரிலையன்சின் அடுத்த தலைமுறை வாரிசுகளில் சமபங்கு வகிப்பவர். இத்தனை பெரிய சிறப்பைக் கொண்ட இளைஞர் ஒருவர் திரைப்பட நடிகை ஒருவரைக் காதலிக்கிறார் என்று கேள்விப்பட்டால் ஒரு தந்தை உள்ளம் என்ன பாடுபடும்?

தொழிலில் எப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவாரோ அதே போல்தான் தன் சொந்த வாழ்க்கையிலும், அனில் தனது காதல் விவகாரத்தில் ரொம்பவும் உறுதியாக இருந்தார்.

(தந்தை) அம்பானிக்கே இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லப்பட்டது. ரொம்பவும் கட்டுப்பாடுகள் நிறைந்த, பாரம்பரிய முறைகளை மதிக்கும் குடும்பம். அதிலும் இந்தியாவின் பணக்காரக் குடும்பம்.

அனிலின் நடவடிக்கைகளால் குடும்ப கெளரவம் பாதிக்கப்படக் கூடாது என்று அம்பானி நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் அனிலின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும்.

(கடைசியில்) மகனின் வாழ்க்கையில் தான் குறுக்கே நிற்க வேண்டாம் என்று நினைத்திருப்பார் (போலும்). அனில் – டீனா காதல் வெற்றிகரமாகத் திருமணத்தில் முடிந்தது. டீனாவும் அம்பானிகளின் பெருமையைக் காப்பாற்றும் வகையில் ஒரு பொறுப்புள்ள குஜராத்திக் குடும்ப மருமகளாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா
‘மந்திரிகுமாரி’ படம் பற்றி...

தி.மு.க. பேச்சாளர் / எழுத்தாளர், மு.கருணாநிதி மேடை ஏற்றியிருந்த ‘மந்திரிகுமாரி’, குண்டலகேசியை அடிப்படையாகக் கொண்ட கதை. ஐந்நூறு ரூபாய் மாதச் சம்பளத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் இவரை கதை வசனகர்த்தாவாக நியமித்தார். அப்போது கருணாநிதி, ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றிருந்தார். இப்படத்தில் ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடலுக்கு ஜி.கிருஷ்ணவேணி என்ற ‘ஜிக்கி’ யை அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் ஜி..ராமநாதன். இப்பாடல் அவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தி ஜிக்கியை தமிழின் நிரந்தரமான திரைப்பாடகியாக ஆக்கியது.
அதே படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல், ஜி. ராமநாதன் சொன்னபடி குறிப்பிட்ட கட்டத்தில் கதையில் இடம்பெற்றது. இதை சம்பந்தப்பட்டவர்களே விரும்பவில்லை. ‘உச்சகட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை’ என்று யாரோ அதைக் கூறிவிட, டி.ஆர்.சுந்தரத்திற்கு அந்த சந்தேகம் வந்துவிட்டது. பாடலைக் கத்தரித்துவிடலாம் என்று எண்ணத் தொடங்கினார்.

 இசை அமைப்பாளர் ராமனாதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் மிகுந்த உற்சாகத்துடன் அமைத்த பாடல் அது. உச்சக்கட்டத்திற்கு பாடல் இன்னும் மெருகூட்டுவதாக  ராமநாதன் நம்பினார். மருதகாசி எழுதிய அப்பாடலில் வரும் சிலேடைகள், காதலைக் குறிப்பதுபோலவே அமைந்து சாதலையும் அழகாகச் சுட்டின. ‘முடிவிலா மோன நிலையை, மலை முடியில் காணலாம் வாராய், புலிஎனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய், இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்’ என்றெல்லாம் இனிக்கவும் இரட்டை அர்த்தத்துடனும் பேசி பலிபீடத்திற்கு மந்திரிகுமாரியை அழைத்துச் செல்லும் நேர்த்தி தான் அழகே தவிர, மேலிருந்து தலைகுப்புற விழுவதா! கொல்லநினைத்தவனே கொல்லப்படுவதும், குறிவைக்கப்பட்டவன் குறிவைத்தவனைக் கொல்வதும் தான் உச்சக்கட்டத்தின் வெற்றித்திருப்பங்கள்.

“படம் வெளியானதும் முதல்நாள் மட்டும் இந்தப் பாடல் இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்” என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒருநாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படம் பார்த்து விட்டுச் சென்ற ரசிகர்கள் ‘வாராய் நீ வாராய்’ என்று முணுமுணுத்துக்கொண்டு சென்றார்கள். லோகநாதனின் இசை விலாசத்தை அறிவிக்கும் பாடலாக அமைந்த ‘வாராய்’ கத்தரியிடமிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.

(இசை அமைப்பாளர் அமரர் ஜி.ராமனாதனின் வாழ்க்கை வரலாறு – ‘சங்கீத சக்ரவர்த்தி ஜி.ராமனாதன்’ –வாமனன் எழுதியது- மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு 2006 – பக்கம் 192-194)

தொலைக்காட்சி
ஒரு வாரமாகச் சரியாகத் தொலைக்காட்சி பார்க்கமுடியவில்லை. எனவே இப்பகுதியை  அடுத்த வாரம் ஈடுகட்டிவிட உத்தேசம்.  மன்னித்து விடுங்கள்.

பத்திரிகை
தமிழ்நாட்டில் நான்கு பதிப்பாளர்கள் கூடினால் உடனே பேசப்படும் தலைப்பு, அரசு நூலகங்களில் புதிய புத்தகங்களுக்கு இன்னும் ஆர்டர் வரவில்லையே என்பதுதான். அரசின் கவலைகள் இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையானால், இதோ இணைத்துள்ள படத்தையும் செய்தியையும் பார்க்கலாமே!  (நன்றி- ‘தினமலர்’ சென்னை, அக்டோபர் 26, காஞ்சிபுரம் இணைப்பு)
சூணாம்பேடு ஊர்ப்புற நூலகத்தில் ‘ரேக்’குகள் இல்லாததால் புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டு உள்ளன.  
சித்தாமூர் ஒன்றியம், சூணாம்பேடு கிராமத்தில் ஊர்ப்புற நூலகம் உள்ளது. இங்கு 2400 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்க ரேக்குகள் இல்லாததால் தரையில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மழைக்காலம் தொடங்கி உள்ளதால், தரையில் கிடக்கும் நூல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாசகர்கள் கூறியதாவது:
“கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு முழுநேர நூலகம் செயல்பட்டு வந்தது. என்ன காரணத்தாலோ, இங்கிருந்த நூல்கள் வேறு நூலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. தற்போது, குறைந்தளவு புத்தகங்களுடன், ரேக்குகள் கூட இல்லாமல் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டடத்தில் மின்வசதியும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது”.

காஞ்சிபுரம் மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:
“இந்த கட்டடம், தனியாரிடம் தானமாக பெறப்பட்டு உள்ளது. இதை கையகப்படுத்தி தர, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். கையகப்படுத்தப்பட்ட உடன், மின் இணைப்பு வசதி செய்து தரப்படும். புத்தகங்கள் அடுக்க அடுத்த வாரத்தில் ரேக்குகள் அனுப்பிவைக்கப்படும். கூடுதல் புத்தகங்களும் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.”

அது சரி, இந்தப் புத்தகங்களை முதலில் வெறும் தரையில் யார் எடுத்து வைத்தார்களோ, அவர்களுக்கு உறைக்கவில்லையா, குறைந்தபட்சம் நாலு செங்கல்களை வைத்து, ஒரு தடியான காகித அட்டையின்மேல் சணல்பைகளையாவது போட்டு அதன் மேல் வைத்திருக்கலாமே! ஒரு வேளை, ‘கற்றது கைம்மண்ணளவு’ என்பதைச் சொல்லிக் காட்டுகிறார்களோ?

மூடிக்கிடக்கும் நூலகங்கள், வெறுந்தரையில் (தள்)ளாடிக்கிடக்கும் நூல்கள் என்ற உண்மைநிலைக்கு நடுவே, எந்த நம்பிக்கையில் தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? பதிப்பாளர்கள் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்?

சிரிப்பு

விருப்பங்கள்- (புதுக்கவிதை -1977)

 அடுத்த வீட்டு அலமேலு
அடிக்கடி என்னைப் பார்த்துக்
கண்களால் சாடை காட்டிக்
காதல் தீயை என் நெஞ்சில் மூட்டிப்
புன்னகைப் பூக்களை உதிர்த்துப் போகணும்.

எதிர்த்த வீட்டு இராமன் மனைவி
மொட்டை மாடியில் துணிகாயப் போடும்
சாக்கில் என்னைக் கண்களால் சந்தித்து
உதட்டில் சிரிப்பை உரசிப் பார்க்கணும்.
 
அதோ அந்த ஆங்கிலோ இந்தியப்
பெண்மணி குளியல் அறைக்குள் நிற்கையிலே
என்னைப் பார்த்துக் கைகளை அசைக்கணும்.
 
என்மனைவி....என்மனைவி.....அவள்
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்றபடியே வீட்டுக்குள் கிடக்கணும்!
    - குருவிக்கரம்பை சண்முகம் (‘பூத்த வெள்ளி’-1977)

மணிவாசகர் பதிப்பகம் மே-1984 இல் வெளியிட்ட, பேராசிரியர் ஆ செகந்நாதன் தொகுத்த “நூறு பூக்கள்” என்ற புதுக்கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. பக்கம் 101.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com.

திங்கள், அக்டோபர் 21, 2013

வழக்கறிஞர்களின் மூன்றாவது தொழில் ( ‘அபுசி-தொபசி’-7)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கேள்வி: கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் பத்திரிகைகளை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே? (என்.காளிதாஸ்,சிதம்பரம்)

பதில்: நியாயம் தானே? பத்திரிகைகள் நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்து எழுதும்போது, அது கட்சித் தொண்டர்களைச் சிந்திக்கவைத்துவிடும். போஸ்டர் ஒட்டி, கோஷம் போடுவதுடன் நில்லாமல் விழிப்படைந்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இதையெல்லாம் எப்படி அனுமதிக்கமுடியும்? அதனால்தான், தி.மு.க. ஆதரவு பத்திரிகைகள் தவிர வேறு எதையும் படிக்கவேண்டாம் என்கிறார் கருணாநிதி! (நன்றி: கல்கி-27-10-2013 – தராசு பதில்கள்-பக்கம் 35)

புத்தகம்
இப்போதெல்லாம் சில வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்குப் போவதை முதலாவது தொழிலாகவும், நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருடன் கைகலப்பதை இரண்டாவது தொழிலாகவும் வைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும்  சில வழக்கறிஞர்களோ நீதிமன்றத்திற்குப் போவதுடன்  மூன்றாவதாகவும் ஒரு தொழிலைப் பின்பற்றுகிறார்கள். அது தான், புத்தகம் எழுதுவது அல்லது பதிப்பிப்பது அல்லது இரண்டுமே.

பொன். வாசுதேவன் முதலும் மூன்றாவதும் செய்பவர். சென்னை சைதாப்பேட்டையில், அண்ணாசாலையில்,  ‘வாசன் கண் மருத்துவமனை’ அருகில், முதல்மாடியில்,  அண்மையில் இவர் தொடங்கியிருக்கும் ‘அகநாழிகை’ புத்தக நிலையம் குறுகிய காலத்தில் புகழ்பெற்றுவிட்ட ஒரு நிறுவனம்.

உயிர்மைப் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அவரது முதல் கவிதைத்தொகுதி, ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’. முதல் தொகுதி என்ற எண்ணமே எழாதவாறு முதிர்ச்சிமிக்க கவிதைகளைத் தொகுத்தளித்திருக்கிறார், பொன். வாசுதேவன். ‘பலூன்’கவிதைகளும், ‘பிரியக்’கவிதைகளும் ‘மழைக்’கவிதைகளும் அதிகமிருந்தாலும் பசியையும் பக்குவத்தையும் வெளியிடும் கவிதைகளும் நிறைய உண்டு. மானிட உறவுகளின் நுட்பமான இழைகளைக் கொண்டு செதுக்கிய கவிதைகளும் உண்டு. என்னையும் உங்களையும் கவரும் சில கவிதைகள் இதோ:

என்ன செய்யப் போகிறீர்கள்
நிரம்பிய கோப்பையானாலும்
வழியவில்லையேவென
வருத்தம் தொக்கி நிற்கிறது.

கலயங்களில் குவித்தும்
சேர்க்காத செல்வம் குறித்த
பிரியம் விரிந்தழைக்கிறது.

சலிக்காமல் தழுவியும்
மறுபடி மறுபடி மனமேங்குகிறது
மழலைக் கொஞ்சலுக்காய்

புணர்ச்சி முடிதலின்
கடைசிக் கணங்களில்
மறக்காமல் துளிர்க்கிறது பெருங்காமம்

வற்றாத சுனையொன்றின்
நீர்சொரி காம்புகளைக்
கவ்வியபடி அடிமனதில் எப்போதும்

மிதந்து கொண்டேயிருக்கிறது தாகம்
காலம்தோறும் அப்படித்தான்
இருக்கிறதென்பதை யாரேனும்
உரக்கச் சொல்லிவிடுங்களேன்.
***
தொடர்மழை
சிறு மழை பெரு மழை
அடை மழை இடி மழை
புயல் மழையென

அடிக்கடி பெய்து கொண்டுதானிருக்கிறது
உனக்கு எனக்கு எல்லோருக்குமாக
......
பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்துச்
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.

என்னிடம் வந்த இந்த நாள்
தாழப் பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்து செல்கிறது இந்த நாள்.

இன்னும் ஒரு கவிதையைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை. மனைவியின் ‘கசிந்து வழியும் வெளிர்மார்பில்’ தாயின் சுவட்டைக் காணும் பிள்ளைமைக் கவிதையை இதற்கு முன்னால் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை:

முலைச்சூடு
.........
ஓசையின்றிப் பிரிந்திருந்த
உன் இரவிக்கையின்
தையல் இடைவெளியில்
கசிந்து வழிகிறது உன் வெளிர் மார்பு

கண் மூடி வாய் புதைந்து
தாழ்மையோடு யாசிக்கிறேன்
உன் முலைகளின் வாசலில்

வேண்டி வேண்டி அழுதும் ஆனந்தமாயும்
என் வாயுறுஞ்சிய
தாயின் முலைச்சூடுகளை
மீட்டுப் பெற வேண்டி.

அடுத்த பத்தாண்டுகளில் தமிழின் சிறந்த கவிதைநூல்களின் பட்டியல் கணிக்கப்படும்போது அதில் தவறாமல் இடம்பெறப்போகும்  ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’ யின் 87 கவிதைகளுக்கு விலை  70 ரூபாய் தான். அதாவது ஒரு கவிதை 81 பைசா. வேறு எந்த மொழியில் இவ்வளவு மலிவாகக் கிடைக்கும் கவிதை? உடனே வாங்குங்கள்.

சினிமா
மிஷ்கின்னின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” நல்ல படம் என்கிறார்களே, பார்த்தீர்களா?

தொலைக்காட்சி
இந்த வாரம் டிடி-பாரதியில் 87 வயதான மூத்த வங்காளி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் வாழ்வு பற்றிய ஆவணப்படம் பார்த்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நன்கறிந்த சில கல்வியாளர்கள் மூலம் அவரின் இலக்கியச் சிறப்பம்சங்கள் வெளிக்கொணரப்பட்டன. தனது நூல் பகுதிகள் சிலவற்றையும் அவர் வாசித்துக்காட்டினார். சாகித்ய அகாதெமி விருதும், ஞானபீட விருதும் பெற்றவர். அடித்தட்டு மக்கள், மலைசாதியினர் பற்றி அதிகம் எழுதியவர்.

டாக்காவில் பிரபல வங்காளிக் கவிஞர் மனீஷ் காட்டக்கின் மகளாகப் பிறந்தவர் மகா. சாந்திநிகேதனில் பட்டப்படிப்பும் கல்கத்தா பல்கலையில் மேற்படிப்பும் பயின்றவர். (இவரது மகன் நபருண் பட்டாச்சார்யா இப்போது வங்காளியில் பிரபல நாவலாசிரியர் ஆவார்). மகாவின் சில முக்கிய படைப்புகள்: ஹஜார் சுராஷிர் மா, அரண்யேர் அதிகார், டிட்டு மீர், என்பன. அவர் எழுதிய  ஜான்சி ராணியின் வாழ்க்கைச் சரித்திரம் ஆங்கிலம் உள்படப் பலமொழிகளில் வெளியாகியுள்ளது. அவருடைய கதைகள் திரைப்படங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன: சங்கர்ஷ், ருடாலி, ஹஜார் சுராஷிர் மா, மாத்தி மாய், கங்கோர்.

 பலவருடங்களுக்கு முன் நான் தில்லியில் இருந்தபோது அடிக்கடி சந்திக்கமுடிந்த தமிழ் நாவலாசிரியையும் பின்னாளில் சென்னை வந்து தமிழ்-இந்தியா டுடேயின் இதழாசிரியராகப் பணியாற்றியவருமான வாஸந்தி அவர்கள், ஒருமுறை மகாஸ்வேதா தேவி பற்றிய தனது ஆற்றாமையைப் பின்வருமாறு கூறினார்: “அந்தம்மா எழுதினால் வங்காளத்தில் முதல் பதிப்பே பத்தாயிரம் போடுகிறார்களாம். தமிழில் யார் எழுதினாலும், இரண்டாயிரம் பிரதிகள் விற்க மூன்றாண்டுகள் ஆகிறதாமே!” இருபது வருடங்களுக்குப் பின்னாலும் நிலைமை மாறியதாகத் தெரியவில்லை. விதியே, விதியே, தமிழச் சதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?

அன்றே, தினமணி(.)காமில் செய்திகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, ஜெயகாந்தனைப் பற்றிய குறும்(ஆவணப்)படம் நான்கு பகுதிகளாக அதில் இணைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அறுபது-எழுபதுகளில் உங்களைப் போலவே எனக்கும் ஆதர்ச எழுத்தாளராக இருந்தவர் ஆயிற்றே, பார்க்காமல் விடமுடியுமா? சொடுக்கினேன். கவிஞர் ரவி சுப்பிரமணியன் எடுத்த படம். பலமுறை முயன்றும் படம் திறக்கவில்லை. கடைசியாக முயன்றபோது  “for private viewing only” என்று வந்தது. பிரைவேட்டாகப் பார்ப்பதற்கு இதென்ன (அந்தக் கால) சரோஜாதேவி புத்தகமா என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. எதற்கும் நீங்களும் முயன்று பார்த்துவிட்டுப் பின்னூட்டுங்களேன்!

 பத்திரிகை
உமாமகேஸ்வரி என்ற ஆசிரியை ஒரு மாணவனால் வகுப்பறையிலேயே கொல்லப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. சுரேஷ் என்ற பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் அவரது வளாகத்திலேயே கொல்லப்பட்டு சில நாட்களே ஆகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்க அரிதான இரண்டு முயற்சிகளைக் கைக்கொண்டு வருகிறது, விகடன் குழுமத்து சிறுவர் இதழான ‘சுட்டி விகடன்’.

(044-66802905) என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் போதும், தினந்தோறும் ஒரு பள்ளி ஆசிரியர் நம்மோடு பேசுவார். நான் ௨௦-௧௦-௨௦௧௩ (20-10-2013) ஞாயிறு காலை மேற்படி எண்ணைத் தொடர்பு கொண்டேன்...... பென்னாகரம் – கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை எஸ். மைதிலி சங்கரன் பேசினார். தங்கள் ஊரில் மட்டுமே தெரியப்பட்டிருந்த சிற்றூர் ஆசிரியர்களைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கவைக்கும் விகடனின் பணி போற்றுதலுக்குரியது.

இரண்டாவது, நல்ல ஆசிரியர்களை இனம் காட்டுவது. இந்த இதழில் ‘கனவு ஆசிரியர்’ என்ற பெயரில் எம். ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை, சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திரு பழனிவேல் அவர்களைப் பற்றியதாகும். இவரை ‘தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர்’ என்று சுட்டி-விகடன் பாராட்டுகிறது.

வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் வகையில் சுழற்கோப்பை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார் பழனிவேல். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்வகுப்பு மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை அறிவிப்புப் பலகையில் ஓட்டுகிறார். பள்ளியில் தையல் மெஷின் ஒன்று உண்டு. மாணவர்களின் சட்டையில் தையல் பிரிந்திருந்தாலோ, பொத்தான் இல்லாமல் இருந்தாலோ, உடனடியாக இத்தையல் மெஷின் இயக்கப்பட்டு குறை தீர்க்கப்படும். மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கவும் ஆசிரியைகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சைக்கிள்கள் பஞ்ச்சர் ஆனாலும் கவலை இல்லை. அதற்கும் காற்றடிக்கும் பம்ப், பங்ச்சர் ஓட்டும் பேஸ்ட் எல்லாம் இப்பள்ளியில் உண்டு.

இன்னும் எத்தனையோ பழனிவேல்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும். எதிர்வரும் நாளில் அவர்களும் சுட்டிவிகடன் மூலமோ வேறுவழிகளிலோ  வெளிப்படலாம். அவர்கள் எல்லோருக்கும் எனது முன்கூட்டிய வணக்கங்கள்!
சிரிப்பு

தில்லியில் நான் பணியாற்றிய காலத்தில் என்னைத் தனது அன்புக்கும் நட்புக்கும் உரிமையாக்கிகொண்டவர், தில்லி எழுத்தாளர், திரு. ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். நவம்பர்-டிசம்பர் குளிர்நாட்களில் தமிழ்ச்சங்கப் பணிகள் முடிந்துவருகையில் தம் இல்லத்தில் சூடான சப்பாத்திகளுக்கும் எனக்கும் ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்திவைத்தவர். அவரது துணைவியாரின் பெயர் தான் ஆனந்தம். (அதைக் கணவரின் எழுத்துப்பெயராக்கிக்கொள்ள நிபந்தனையற்ற உரிமை வழங்கிவிட்டாராம்.)

 ‘தீபம்’ நா.பார்த்தசாரதியின் அன்புக்குப் பாத்திரமானவர் திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். சிறந்த இலக்கிய எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், இவ்விரண்டுக்கும் ஈடாகும் அளவுக்கு நாடக நடிகராகவும், இந்தி-ஆங்கிலம்-தமிழ் என்னும் மும்மொழிகளுக்கும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவராகவும், விளங்குபவர். தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளியிலிருந்து கணவன் மனைவி இருவரும் ஓய்வு பெற்றுவிட்டநிலையில், தமிழ்நாட்டின் வெயில் குறைவான ஓய்வுநகரொன்றில் அமைதியை அனுபவித்துவருபவர்.

அவருடைய‘ஓசையிடும் மௌனங்கள்’ என்ற குறுநாவல் தொகுதியைப் புத்தகமாக வெளியிட நான் காரணமாக இருந்தேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அதில் வெளியான ‘ஒரு கழுதையின் கதை’ யின் சிறு நகைச்சுவை பகுதி இதோ:

விஞ்ஞான ஆசிரியர் ஆரோக்கியசாமி. அவருடைய மாணவன், துணிவெளுக்கும் சின்னய்யன். அவரைப் பல வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது இருவருக்கும் நடக்கும் உரையாடல் இது:

"ஆனா சார், டவுன் ஐஸ்கோல்லே பத்துக்கிளாஸ் படிக்கிறவரைக்கும் எண்ணைத் தூக்கிப் போட்டுகிட்டே வந்தப்போ, ஏலே, நீ களுதை மேய்க்கத்தாண்டா லாயக்குன்னு நீங்க வாய்க்கு வாய் சொல்லிக்கிட்டே இருந்தது இப்போ நெசமாவே பளிச்சுப் போயிருச்சு பாத்தீங்களா?” என்று சின்னய்யன் சிரித்ததும் ஒரு கணம் ஆட்டங்கண்டுவிட்ட ஆரோக்கியசாமி சட்டென்று சமாளித்துக்கொண்டு, “ஏலே, பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டிருந்தப்போ நீ வெறும் உருப்படாக் கழுதைடா. உன்னைத்திருத்தி மனுஷனா மாத்தினதே நான்தாண்டா” என்று கம்பீரமாய் மழுப்பிவிட்டு, அதற்கு மேலும் அங்கே நின்று அவனுடன் விவாத்தித்துக்கொண்டிருப்பது விவேகமாகாது என்கிற உள்ளுணர்வினால் உந்தப்பட்டு லேசாய் இருமிக்கொண்டே அங்கிருந்து அகல யத்தனித்தார்.

 ஆனால் அவன் விடுகிறதாயில்லை. ‘இருங்க சார், எத்தினி நாள் கழிச்சுப் பார்த்திருக்கோம். உருப்படாக் களுதையா  இருந்த என்னை உருப்படியான மனிசனா மாத்தினது ஒரு பிரமாதமான வித்தை தான். அதே மாதிரி இந்த என்னோட அசல் களுதையையும் உங்க விஞ்ஞான விந்தையினாலே மனிசனா மாத்திக்காட்டுங்க, எனக்கு ரொம்ப உபயோகமாயிருக்கும். உங்களுக்கும் எனக்கு உதவி செஞ்ச புண்ணியங் கிடைக்கும்” என்று சர்வ சாதாரணமாய்ச் சொன்னான். அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

 இவன் விளையாடுகிறானா இல்லை, நம் தொழிலுக்குச் சவால் விடுகிறானா? என்று உடனடியாய் ஒருமுடிவுக்கு வரமுடியாமல் அவர் உளைந்தார்.....அடுத்த நாள் காலை அவன் வந்து சொல்கிறான்: “அதான் சார், இந்தக் கழுதை மட்டும் மனிசனா மாறிடுச்சுன்னா, என் கஷ்டமெல்லாம் வடிஞ்சுரும் சார். இதுவே வீட்டுக்கு வீடு போயி துணிமணிகளை வாங்கியாரும். இஸ்திரி இழுத்து மடிச்சுவெக்கும். பட்டுவாடாப் பண்ணிக் கணக்கு வளக்கையும் கவனிச்சுக்கும்...” தன் கழுதையை அவர் வீட்டுத் தூணில் கட்டிவிட்டுப் புறப்படுகிறான்.

 (விஞ்ஞான ஆசிரியரால் கழுதையை மனிதனாக ஆக்க முடிந்ததா இல்லையா என்பதை மேற்படி நூலைப் படித்து அறிவீர்களாக.)

 © Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.

திங்கள், அக்டோபர் 14, 2013

ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போவது யார்? ‘அபுசி-தொபசி’ (6)(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
ஒரு வழியாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது. சிரியாவில் போர் நிகழாமல் தடுக்கக் காரணமாயிருந்த ரஷிய அதிபர் புடினுக்கோ, அல்லது தாலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்பிழைத்து இப்போது பெண்கல்விக்காகக் குரல் கொடுத்துவரும் பாகிஸ்தானியப் பெண் மலாலாவுக்கோ வழங்கப்படலாம்  என்று பலமாக வதந்திகள் உலவியநிலையில், நெதர்லாந்தில் இருந்து இயங்கிவரும் ரசாயன ஆயுதத் தடுப்பு நிறுவனமான OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) க்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றிருப்பவர்  82 வயதான கனடிய சிறுகதை எழுத்தாளர், அலிஸ் மன்றோ என்ற பெண்மணி. (மூதாட்டி?) இவருக்கு நோபல் பரிசு கிடைத்தாகவேண்டும் என்று தனது ஒவ்வொரு எழுத்திலும் விடாமல் சொல்லிக்கொண்டேயிருந்த இன்னொரு கனடிய (தமிழ்) எழுத்தாளரான அ.முத்துலிங்கம் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சிறுகதை என்ற வடிவத்தை நோபல் குழு ஓர் இலக்கிய வடிவமாக அங்கீகரித்ததன் அடையாளம் இது என்று பெருமிதத்துடன் முத்துலிங்கம் எழுதிய கட்டுரையை ('அம்மா நீ வென்றுவிட்டாய்') சரியான நேரத்தில் வாங்கிப் பிரசுரித்திருக்கிறது, தமிழ் ஹிந்து. (முத்துலிங்கத்தின் நேர்காணல்கள் அடங்கிய “தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை” என்ற புத்தகத்தைப்  படிக்க எடுத்திருக்கிறேன். பிறிதொரு அபுசிதொபசியில் இதுபற்றி எழுதுவேன்.)

புத்தகம்
‘நம்ம சென்னை’ மாத இதழைப் படிப்பவர்களுக்கு அதன் ஆசிரியர்  அரவிந்தனின் அறிமுகம் தேவையில்லை. சிறந்த எழுத்தாளர். அவரது மொழிபெயர்ப்பில் வெளியான “ராணியுடன் ஒரு தேநீர் விருந்து--வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்” என்ற ராயல் அளவு 150 பக்கமுள்ள, ரூ.90 விலையுள்ள  நூல் அண்மையில் வாங்கினேன். (காலச்சுவடு வெளியீடு. முதல் பதிப்பு நவம்பர் 2011).

2009 இல் வேல்ஸ் லிட்டரேச்சர் எக்ஸ்சேஞ்ச் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியப் பயிலரங்கில் கலந்துகொண்ட அரவிந்தன், அதன் உத்வேகத்தினாலும், பதிப்பாளருக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய உதவித்தொகையினாலும் இந்த நூலைக் கொண்டுவந்திருக்கிறார்.

தங்களை ஆதிக்கம் செலுத்தும் ஆங்கில மொழியை எதிர்த்துக்கொண்டு முன்னுக்கு வரப் போராடும் பத்து லட்சத்திற்கும் குறைவானவர்களே பேசும் மொழி, வெல்ஷ் மொழி  ஆகும். வேல்ஸ் மாகாணத்தில் எங்கும் ஆங்கில அறிவிப்புப் பலகைகளைக் காணவில்லையாம். எல்லாமே வெல்ஷ் மொழியில் தானாம்!

பன்னிரண்டு எழுத்தாளர்களின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூலின் தலைப்பிலான கதையை எழுதியிருப்பவர், மிஹான்கல் மார்கன் (Mihangel Morgan). தன்னை ஒரு ராணியாகக் கருதிக்கொண்ட மனப்பிறழ்வு கொண்ட ஒரு பழம்பணக்காரியின் கதை. “அன்புள்ள சாம், அடுத்த வாரம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு இயான்டோவிற்குத் தேநீர் அருந்த வர முடியுமா?” என்று அழைக்கிறார். சாம் போகிறார். இயான்டோ என்பது அரண்மனையல்ல, ஒரு சாதாரணக் குடிசை என்று தெரிகிறது. சுற்றிலும் வீடுகள் இடிந்துபோய்க் கிடக்கின்றன. கடலை ஒட்டிய பகுதி. இவர் மட்டும் அந்தக் குடிசையில் ஏன் தனிமையில் இருக்கிறார் என்பது சாமுக்குப் புதிராக இருக்கிறது.

மூதாட்டி, தன்னை ஒரு ராணியாகக் கருதிக்கொண்டே பேசுகிறார். கதையின் இறுதிப்பகுதி உணர்ச்சிகரமானது. தன்னை விட்டு ஓடிப்போன தன் மகளை அவள் நினைவுகூர்கிறார். “அவள் திரும்பி வருவாள் என்று நான் இன்னமும் எதிர்பார்க்கிறேன். அதனால் தான் இங்குள்ள வீடுகளையெல்லாம் அவர்கள் இடித்துவிட்டாலும் இங்கிருந்து வெளியேறாமல் இருக்கிறேன்” என்கிறார்.

மீண்டும் ஒருநாள் அந்த ராணி தன்னை தேநீருக்கு அழைப்பர் என்றும்  அப்போது இன்னும் சில புதுக்கதைகள் கிடைக்கலாம் என்றும் சாம் நம்புகிறார்...

1950இல் வெளியான ‘ஸன்செட் புலிவார்டு’ (SUNSET BOULEVARD) என்ற ஹாலிவுட் திரைப்படத்தை நினைவூட்டுகிறது இந்தக்கதை. மூன்று ஆஸ்கார்களை வென்ற படம். மிகச்சிறந்த நூறு அமெரிக்கப் படங்களுக்கான பட்டியலில் கட்டாயம் இடம்பெற்றாகவேண்டும் என்று விமர்சகர்களால் குறிக்கப்படுவது.
கலிபோர்னியாவில் பீவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலையின் பெயர்  ஸன்செட் புலிவார்டு. பேசாத திரைப்படங்களில் கதாநாயகியாக இருந்த ஒரு நடிகை, பேசும்படங்கள் வந்துவிட்ட நிலையில் திரைத்துறையால் புறக்கணிக்கப்பட்டு, அதனால் மனப்பிறழ்வுக்கு ஆளாகி, தனது சமையல்காரக் கணவனுடன், ஸன்செட் புலிவார்டில் அரண்மனை மாதிரியான ஒரு பழைய மாளிகையில் வாழ்கிறார். தன்னை இன்னும் இளமையும் உற்சாகமும் கொண்ட, வரவேற்புக்குரிய, முதன்மைக் கதாநாயகியாகவே கருதிக்கொண்டு ஷூட்டிங் நடக்கும் இடங்களில் தடபுடல் செய்வதும், எல்லாருடைய ஏளனத்திற்கும் இலக்காகவதும்தான் படத்தின் மையக் கருத்து. கதாநாயகியாக அற்புதமாக நடித்திருக்கிறார், க்ளோரியா ஸ்வான்சன் என்ற நடிகை. டைரக்டர் செசில் பி டி’மில் (Cecil B. DeMille) அதே பெயரில் நடிகராகவும் வருகிறார். மனித உணர்வுகளை அருமையாகச் சித்திரிக்கும் இப்படத்தை  இதுவரை பார்த்திருக்கவில்லை என்றால் இப்போது பார்த்து விடுங்கள். (யூடியூபில் இல்லாததா!)

"ராணியுடன் ஒரு தேநீர் விருந்து--வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்”,  பிறமொழிக் கதைநூல்களில் இன்னொரு கௌரவமான நூல். அழகான மொழிபெயர்ப்பு.

சினிமா
அனுஷ்கா என்ற நடிகைக்கு முப்பத்தொன்று வயதாகிவிட்டது, ஆகவே அவர் வீட்டில் அவருக்குத் திருமணத்திற்கு ஆள் பார்க்கிறார்கள் என்ற செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்துகொண்டிருக்கிறது. சில பதிவர்களும் இதுபற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். (இன்னொரு சம வயதினரான த்ரிஷாவுக்கும் இதே நிலை: அவருக்கும் ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். இவருக்கும் சில பதிவர்களின் கவனிப்பு உண்டு.)

பொதுவாகவே ‘கா’ என்று முடியும் நடிகைகள் நல்ல நடிப்புத்திறன் கொண்டவர்களாயிருப்பது ஆராய்ச்சிக்குரியது.

தேவி’கா’வை மறக்க முடியுமா? ‘ஆனந்தஜோதி’யில் ‘நினைக்கத் தெரிந்த மனமே’ பாடல் காட்சியிலும், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’  படத்தில் ‘சொன்னது நீ தானா’ பாடல் காட்சியிலும் தேவிகாவின் நடிப்பை யாரவது மிஞ்சமுடியுமா? வானம்பாடியில் 'கங்கைக்கரைத் தோட்ட'த்திலும் 'தூக்கணாங்குருவிக்கூட்'டிலும்  அவர் அசைவுகள் மறக்கமுடியுமா?

இன்னொருவர் சினே’கா’. ஆட்டோகிராபிலும் அச்சமுண்டு அச்சமுண்டிலும் இன்னும் பல படங்களிலும் இந்தப் புன்னகை இளவரசியின்  நடிப்பைப் புகழாதவர்கள் யார்?

இந்த வரிசையில் மூன்றாவது ‘கா’ நடிகையாக வளர்ந்துகொண்டிருந்தவர் அனுஷ்’கா’. தெலுங்கில் இவரது நடிப்பு வெளிப்பட்ட அளவுக்குத் தமிழில் இன்னும் வெளிப்படாத நிலையில் இவர் திருமணம் செய்துகொண்டு திரைத்துறைக்கு முழுக்குப்போடப் பார்ப்பது  ரசிக இளைஞர்களை (என்னை அல்ல!) அதிகம் வருந்தவைக்கும் என்பது உறுதி.

தொலைக்காட்சி
திருநெல்வேலி கீழ வல்லநாடு பகுதில் இயங்கிவரும் இன்பண்ட்ஜீசஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ், அதே கல்லூரியின் மூன்று மாணவர்களால் கல்லூரி வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தார் என்னும் கொடும்செய்தி தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்ததில் வியப்பில்லை. தென்றலுக்கும் தமிழுக்கும் பெயர்போன திருநெல்வேலி இப்போதெல்லாம் அரிவாளுக்கும் அடியாட்களுக்கும் பெயர் பெற்றுவிட்ட கோலத்தை என்சொல்வது!


பிச்சைக்கண்ணு, டேனிஸ், பிரபாகரன் என்ற அந்த மூன்று மாணவர்களும் உடனே கைது செய்யப்பட்டிருப்பது, இக்கொலையில் அரசியல் சம்பந்தம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதுவரை வந்த செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, கல்லூரியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டது தான் கொலைக்கான ஆத்திரத்தை உண்டுபண்ணி யிருக்கலாம் என்று தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் கலைக் கல்லூரிகள் அநேகமாக இல்லாமல்போய்விட்ட நிலையில்,  35 மதிப்பெண் எடுத்தாலே பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்ற அபத்தமும், அரசுடைமை வங்கிகளை மிரட்டிக் கல்விக்கடன் பெற்றுவிடும் அரசியல் சூழலும், ஆங்கிலமே தெரியாமல் பிளஸ்-டூ வரை வந்துவிட்டு, பொறியியல் கல்லூரியின் ஆங்கிலவழி போதனைக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள ஏலாத மாணவர்களின் தன்னிரக்கமும் – ஆக, பலவிதமான அபாயங்களுக்கிடையே ஆசிரியர்கள் தங்கள் தொழிலை நடத்திச் செல்லவேண்டியவர்களாகிறார்கள்.   

முன்பு சென்னையில் ஓர் பள்ளி ஆசிரியை வகுப்பறையிலேயே மாணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இப்போது ஒரு கல்லூரி முதல்வர் கொல்லப்பட்டிருக்கிறார். இனி யார் யாரோ? ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போவது யார்? அதைவிட முக்கியம், உயிர்ப்பயத்தால் வகுப்பறையில் மென்போக்கைக் கடைபிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்  ஆசிரியர்களாலும், எது செய்தாலும் தப்பிவிடலாம் என்ற சூழலில் வளரும் முரட்டு மாணவர்களாலும், பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கைகழுவிவிடும் பொறுப்பற்ற பெற்றோர்களாலும் திட்டமிட்டு அழிபட்டுக்கொண்டிருக்கும் கல்விக்குப் பாதுகாப்பு வழங்கப்போவது யார்?

பத்திரிகை
அறுபத்தாறு வருடங்களாக விடாமல் வந்துகொண்டிருக்கிறது, மாதப் பத்திரிகை ‘மஞ்சரி’. இந்த மாதம்-அக்டோபர் 2013-இதழில் மேலட்டையில் ஜும்ப்பா லாஹிரி சிரித்துக்கொண்டிருக்கிறார்.  (வேறெந்தத் தமிழ் பத்திரிகையின் மேலட்டையில் ஒரு எழுத்தாளரின் படம் வரும்?) இன்னும் இரண்டு நாளில் புக்கர் பரிசு பெறும் வாய்ப்புள்ள இவர் தான் அடுத்த சல்மான் ருஷ்டி என்று பத்திரிகைகள் கருதுகின்றன. 

தி.ஜ.ர.வும் த.நா.சேனாபதியும் இருந்தபோது ‘மாதத்தின் சிறந்த மலர்க்கதம்பம்’ என்ற முத்திரை வரிகளைக் கொண்டிருந்த மஞ்சரி, இப்போது ‘பழமையின் இனிமையும் புதுமையின் வளமையும் இணைந்த தனித்துவம் மஞ்சரி மகத்துவம்’ என்ற விளக்கவரிகளுடன் வருகிறது. வரிகள் மாறினால்  என்ன, மஞ்சரி, மஞ்சரி தான்!

மிகவும் தரமான, பிற இதழ்களில் சுலபமாகக் காணமுடியாத அல்லது கண்டு மறந்துவிட்ட, செய்திகளைக் கவனமாகப் பதிப்பிக்கிறார்கள். மாதத்திற்கு இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளாவது வருகின்றன. இளைஞர்களைக் கவரும் விதத்தில் இதழின் வடிவமைப்பும் உள்ளடக்கமும் கண்ணைக் கவருகின்றன. ஆசிரியர்: குருமனோகரவேல். (புனைபெயராக இருக்குமோ?) பதினேழும் இருபதும் கொடுத்து ஆஞ்சநேயர் படமும் ராசிபலனும் பார்த்துவிட்டுத் தூக்கி எறியப்போகும்  ஆன்மிகப் பத்திரிகைகள் வாங்கும் அதே கடையிலிருந்து  பத்தே ரூபாய்க்கு மஞ்சரி வாங்கினால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நாம் அறிவுச்சுடர் ஏற்றியவர்கள ஆவோம். ஆண்டு சந்தா ரூபாய் நூற்றி இருபது மட்டுமே. முகவரி: மஞ்சரி, எண் 1, சமஸ்கிருத கல்லூரித் தெரு, மயிலாப்பூர், சென்னை -600004.தொலைபேசி 24983099, 24983799.

கலைமகள் குழுமத்தில் இருந்து மூன்று இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றில் கலைமகளும் மஞ்சரியும் தான் தொடர்ந்து வருகின்றன. ‘கண்ணன்’ என்ற சிறுவர் இதழ் பல ஆண்டுகள் முன்பே நின்று போனது, என் வாழ்நாளின் துடைக்கமுடியாத துக்கம். தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மீடியம் வந்ததின் விளைவன்றி வேறென்ன? ‘ஆர்வி’யின் ஆசிரியத்துவத்தில் ‘ரேவதி’ போன்ற பெரும் எழுத்தாளர்கள் எழுதிய இதழ் அது. பள்ளிப் பருவத்தில் நான் எழுதி வெளியான துணுக்கிற்கு ஒரு தீபாவளி நேரத்தில் மூன்று ரூபாய் மணியார்டர் பள்ளி முகவரிக்கே வந்ததும், அந்தாண்டு முழுவதும் நான் ஹீரோவாக இருந்ததும்...ஹூம்...! (அந்த மூன்று ரூபாய்க்கு வாங்கிய பட்டாசை இரண்டு நாள் தொடர்ந்து வெடித்தேன். இப்போது அதே அளவுக்கு வாங்க வேண்டுமானால் குறைந்தது ஆயிரம் ரூபாய் வேண்டும். உலகம் எங்கே போகிறது சார் ?)

சிரிப்பு
பம்மல் சம்பந்த முதலியார், தமிழின் ஈடிணையற்ற நாடகாசிரியர் என்பது தெரிந்ததே. ஆனால் அவரது நாடகங்களை நாம் இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதில்லையே!

சென்ற வாரம் சென்னையின் ஒழுங்கற்ற போக்குவரத்தும் வேர்வைத் துளிகளைத் தொடர்ந்து உதிர்க்கும் காலைவெயிலும்  விடாமல் துரத்திய ஒருநாளில் சைதாப்பேட்டை ‘அகநாழிகை’ புத்தகக் கடையில் பொன்.வாசுதேவனைச் சந்திக்கப் போனபோது அவர் வரச் சிறிது நாழிகை ஆகும் என்றார்கள்.  (‘கடை’ என்று சொல்வது தவறு. அருமையான தமிழ் நூலகம் என்று தான் சொல்லவேண்டும்.) தினசரிகளைப் புரட்டினால் வடசென்னையிலிருந்து திருப்பதி இறைவனுக்குக் குடைகள் கொண்டுசெல்லும் செய்தி கண்ணில் பட்டது. சரி, புத்தகங்களைப் பார்க்கலாமே என்று முயன்றபோது திடீரென்று கண்ணில் பட்டது, சந்தியா பதிப்பகம் (044-24896979) வெளியிட்ட பம்மல் சம்பந்தம் எழுதிய “தீட்சிதர் கதைகள்” என்ற இருபத்தெட்டு நகைச்சுவை கதைகள் அடங்கிய நூல். ௭௨(72) பக்கம் விலை ரூபாய் ௫௫ (55). 1936 இல் வெளியான நூலின்   2012  ஆம் வருட முதல் (மறு) பதிப்பு. கட்டாயம் வாசகர்கள் படிக்கவேண்டிய heritage  நூல் இது. பம்மல் சம்பந்தனார் இவ்வளவு சிறந்த எழுத்தாளர் என்பதை இவ்வளவு நாள் அறியாமல் போனோமே என்று வருத்தம் ஏற்பட்டது.

பீர்பால், தெனாலிராமன், மரியாதைராமன் மாதிரி இதில் வரும் தீட்சிதரும் ஒரு விசேஷமான கேரக்டர். மாதிரிக்கு ஒரு கதை:

ஒருமுறை ஒரு டிராம் கண்டக்டர் நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான். இதைப் பாராது வாங்கிக்கொண்ட அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபொழுது தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய் “ஆகட்டும், இதற்குப்பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு, பாரிஸ்கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார். ஏறும்பொழுது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதை கவனித்து அதற்கு எதிர்ப்புறமாக ஏறினார். டிக்கட் விற்கிறவன் மற்றவர்களுக்கெல்லாம் டிக்கட் கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்துவிட்டது.(குறிப்பு: அப்போது பச்சையப்பன் கல்லூரி பாரிஸ்கார்னரில் தான் இருந்தது.)  பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஒரு இரண்டணாவை எடுத்துக்கொடுத்து “ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார். கண்டக்டர் “ஓய்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீழே இறங்குங்கு அய்யா!” என்றான். உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கிவிட்டார்.

கொஞ்சம் பொறுத்து மயிலாப்பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்டபடியே கவனித்து ஏறிக்கொண்டார். இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட்டுக் கேட்கவே முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக்கொடுத்து “ஒரு டிக்கட் வண்ணாரப்பேட்டை” என்று கத்தினார். கொஞ்சமாவது சுளிக்காமலும், சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லாரும் நகைத்தனர். “ஏய்! நாட்டுப்புறம்! கீழே இறங்கு, படிக்கத் தெரியாது? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா?” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கி விட்டான். இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.

இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக்கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்! பிறகு மறுநாள் சென்னையில் திருப்பதிக்குடை வைபவத்தைக் காண வந்து அந்த திருப்பதி வேங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார். “இந்தப் பெருமாள் தானே அந்த நாமம் போட்ட கண்டக்டர் எனக்கு நாமம் போடச் செய்தார்! ஆகவே அந்த செல்லாத காசை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று தன் மனதைத் திருப்தி செய்துகொண்டார்.    
 
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?