வெள்ளி, அக்டோபர் 19, 2018

செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்


பதிவு 07/2018

செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்

ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்தோம். நாங்கள் என்பது மூன்று பேரைக் குறிக்கும்: நான், எனது நண்பர் இளைய தாமு, மற்றும் இன்னும் சரியாக அறிமுகமாகாத ஒரு பெரியவர். என்னைவிடவும்  பத்து வயது கூடுதலானவர்.

‘இளைய தாமு’ என்ற பெயருக்கு விளக்கம்:  இவர் இளைஞர். சமையற்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். செஃப் தாமு மாதிரியே உடல்வாகு கொண்டவர். அவரைப் போலவே புகழ்பெறவேண்டும், தொலைக்காட்சியில் தோன்றி, புதுப்புது சமையல் முறைகளைத் தெரிவித்து, சற்றே பருமனான, நடுத்தர வயதுக் குடும்பத்தலைவியர்  மத்தியில் பிரபலமாகவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டவர். ஆகவே தன் பெயரை கெஜட்டில் அறிவித்து இளைய தாமு என்று மாற்றிக்கொண்டவர்.

அந்தப் பெரியவரைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள்:  நாங்கள் நுழையவிருந்த பூங்காவின் வாயிலில் நுழைவுச்சீட்டு  பரிசோதகராக இருந்தவர் அவர். காக்கி பேண்ட்டும் நீல அரைக்கை  சட்டையும் அணிந்திருந்தார். வீட்டு நாய்களுக்குக் கட்டுவோமே அதுபோன்ற நீளமான பட்டி ஒன்று அவர் கழுத்தில் இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள் நிறைய இருந்தன. படிக்கமுடியவில்லை. 

ஒருவேளை அந்தப் பூங்கா நிர்வாகத்தின் பெயராகவோ, அல்லது அவரை அங்கு நியமித்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயராகவோ இருக்கலாம். அல்லது மறந்துபோய் ஐ.டி.த்துறையில் பணியாற்றும் தன் மகனின் அடையாளப்பட்டையை மாட்டிக்கொண்டு வந்தாரோ தெரியாது. எங்கள் இருவரின் நுழைவுச்சீட்டையும் பரிசோதித்தவர், ‘மன்னிக்கவேண்டும். எனக்கு இன்னும் சற்றுநேரத்தில் வேலைநேரம் முடிந்துவிடும். நானும் உங்களுடன் வரலாமா?’ என்று பணிவுடன் கேட்டார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பெண்மணி, ‘இவரை அழைத்துப் போவது நல்லது. விஷயம் தெரிந்தவர்’ என்று சிபாரிசுசெய்யவே நாங்களும் சரியென்றோம். எங்கள் பின்னாலேயே வந்தார்.

மாலை மணி ஐந்தரை. நன்றாக இருட்டிவிட்டது. பூங்காவிற்குள் எங்களைத்தவிர யாரும் இல்லை. வந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டிருந்தனர். பூங்காவின் நடுவிலிருந்த  உயரமான கம்பத்தில் ஐந்து விளக்குகள் இன்னும் ஏற்றப்படவில்லை. இ.தாமு பெரியவரை நோக்கி, ‘அந்த விளக்குக்கு சுவிட்ச் எங்கிருக்கிறது? சொன்னால் நான் போடுகிறேன்’ என்றான்.

பெரியவர் சிரித்தார். ‘இளைஞரே, அது மின்விளக்கல்ல. இயற்கை எரிவாயுவினால் இயங்குவது. கோபர் கேஸ் இணைப்புக்குழாயில் நேற்று காலை ஏற்பட்ட கசிவினால் அதன் இயக்கம் தடைபட்டுள்ளது. நாளை காலைவரை பொறியாளருக்காகக் காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அதை விட்டால் பூங்காவில் வேறு விளக்குகள் இல்லை’ என்றார்.

‘அப்படியானால் சீக்கிரம் வெளியேறிவிடலாம் வாருங்கள். நாம் தங்குமிடத்திற்குப் போகலாம். விரும்பினால் நீங்களும் எங்கள் கேம்ப்பில் தங்கலாம்’ என்றேன் நான். ‘இரவு ஏழுமணிவரை பூங்காவில் இருந்துவிட்டுப் பிறகு காட்டினுள் நுழைவதாக இருந்தோம். பரவாயில்லை, அந்த நேரத்தை கேம்ப்பில் செலவிடலாம். இல்லையா தாமு?’

தாமுவுக்கு விருப்பமில்லை என்பது அவன் தலையசைப்பின் தோரணையிலிருந்து தெரிந்தது. ‘நாம் சொல்லியிருந்த நேரத்தைவிட முன்னதாகவே காட்டிற்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே வாருங்கள், பயணத்தைத் தொடங்கலாம்’ என்று நடக்க ஆரம்பித்தான்.

பெரியவர் தன் சட்டைப் பையிலிருந்து மூன்று வேர்க்கடலை உருண்டைகளை எடுத்தார். வெல்லப்பாகில் செழுமையான வேர்க்கடலைப் பருப்புகள் திடமாக ஒட்டியிருந்தன. ஆளுக்கொன்று. ‘கடித்துத் தின்றுவிடாதீர்கள். வாயிலிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தால் அது முற்றிலும் கரைவதற்குள் நீங்கள் போகவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம்’ என்றார்.        

இனிப்பு வேர்க்கடலை உருண்டை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாயில் ஒருபக்கமாக அடக்கிக்கொண்டே பேசினேன். ‘தாமு, செய்யவேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் சரியாகச் செய்துவிட்டாய் அல்லவா?’

‘கவலை வேண்டாம் ஐயா! நமக்கு  மிகவும் வேண்டிய நண்பர்மூலம்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்றான் தாமு.

நாங்கள் மறைபொருளாகப் பேசுவதாகப் பெரியவருக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்.  ஒருவேளை நாங்கள் போவது வெள்ளிநிலாக் கப்பலைப் பார்ப்பதற்குத்தான் என்பதைத் தெரிந்துகொண்டிருப்பாரோ?

ஆண்டுதோறும் பதினைந்து நாட்கள் இறந்துபோன நமது முன்னோர்கள் பூமிக்கு அருகில்வந்து காத்திருப்பார்களாம். தத்தம் வாரிசுகள் அன்போடு அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் வார்க்கிறார்களா என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்பார்களாம். இதைத் ‘தர்ப்பணம்’ அல்லது ‘திதி கொடுத்தல்’ என்பார்கள். சிலருடைய வாரிசுகள் தினந்தோறும் திதி கொடுப்பார்கள். சிலர் பதினைந்துநாளில் இரண்டுமுறையாவது கொடுப்பார்கள்.  சிலரோ கடைசி நாளான ‘மாளய அமாவாசை’ அன்று மட்டுமாவது கொடுப்பார்கள். இவ்வாறு ஒருமுறையாவது திதி கொடுக்கப்பெற்ற முன்னோர்கள் தம் தாகம் தணிந்து, திருப்தியோடு தம் வாரிசுகளை வாழ்த்திவிட்டு மீண்டும் வானுலகம் சென்றுவிடுவார்கள்.

ஒரு சில முன்னோர்களுக்கு வாரிசுகள் இருந்தும் திதி கொடாமல் போனால் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டுத் தவிப்பார்களாம். நியதிப்படி திதி கொடுக்காத வாரிசுகளை அவர்கள் சபிக்கவேண்டுமாம். ஆனால் இறந்தபிறகும் தம் வாரிசுகள்மீது கொண்ட அன்பு குறையாத அம்முன்னோர்கள், தங்கள் சாபத்தால் வாரிசுகளுக்குத் துன்பம் வரக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில், அவர்களுக்குக்  கடைசி வாய்ப்பு வழங்கும்முகமாக இந்த வெள்ளிநிலாக் கப்பலில் அடுத்த அமாவாசை யன்று வந்து கூடுவார்களாம். ஆனால் இந்தக் கப்பல் இருக்குமிடம் அந்தந்த  வாரிசுகளுக்கு மட்டும் சூசகமாகத் தெரியப்படுத்தப்படுமாம்.  அநேகமாக   ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்மூலம்தான் இது நடக்குமாம்.

இளையதாமு, தனது கல்வியில் மேலும் முன்னேறவும், வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் தனக்கு செஃப் வேலை கிடைப்பதற்காகவும், ஃபிரெஞ்சு நாட்டு அழகி ஒருத்தி தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதற்காகவும் விழுப்புரம் அருகில்  வி-யில் ஆரம்பித்து டி-யில் முடியும் ஊரிலிருந்த ஓர்  ஆவியுலக ஆய்வாளரின் மகனைச் சந்தித்தபோது அவர்கொடுத்த ஆலோசனைதான் மேலே சொன்னது. (‘அப்பாவுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் நான்தான் அவருடைய அறிவுக்கும் ஞானத்திற்கும் வாரிசு. அதற்குரிய மந்திரச் சடங்குகள் எல்லாம் காசியில் சென்று செய்துவிட்டோம். அப்பாவின் சக்திகள் முழுமையாக எனக்குள் இறங்கிவிட்டன. ஆகவே நீங்கள் இனிமேல் என்னையே குருவாக ஏற்றுக்கொள்ளத் தடையில்லை.’)

இம்மாதிரி அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு ஆர்வம் இருப்பதை அறிந்தவுடன் என்னை வற்புறுத்தி அழைத்தான் தாமு. வெள்ளிநிலாக் கப்பல் இந்தமுறை முதுமலைக் காட்டில் இருப்பதாகவும், அங்குசென்று நிறைவேற்ற வேண்டிய பூசைகளுக்கான ஏற்பாடுகளை அந்த ஆவியுலக ஆராய்ச்சியாளரின் குடும்பமே செய்துவிட்டதாகவும் கூறினான். ‘நாம் வெறுங்கையோடு போனால் போதும்’ என்றான். முதலில் குறிப்பிட்ட பூங்காவில் நாம் நுழைந்தால் உடனே அந்த முன்னோர்களுக்குத் தகவல் சேர்ந்துவிடுமாம். குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் காட்டிற்குள் நடந்துசென்றால் நமக்கு வழிகாட்டுவதற்கு யாராவது வருவார்களாம். எல்லாம் முன்னோர்களின் விதிப்படி நடப்பதாம்.

‘பார்த்துக்கொண்டே இருங்கள்: அடுத்த வருடம் உலகின் மிகவும் சொகுசான கப்பலில் செஃப் ஆகத்தான் போகிறேன். பாரிஸ் துறைமுகத்தில் என்னுடைய காதலியைச் சந்திக்கத்தான் போகிறேன். என் முன்னோர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள்’ என்று குதூகலித்தான் இளைய தாமு.

இந்தப் பெரியவர் வேறு நம்மோடு சேர்ந்துகொண்டுவிட்டாரே, இவரை அந்தக் கப்பல்வரை அழைத்துப் போவது சரியா, தாமுவின் முன்னோர்கள் அனுமதிப்பார்களா என்ற ஐயம் திடீரென்று எனக்குள் எழுந்தது.      

காட்டினுள் நுழைந்துவிட்டோம். அமாவாசை இரவு என்பதால் கடும் இருட்டு.    
இருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருந்தும் சார்ஜ் தீர்ந்துவிட்டதால் அணைந்துபோய்விட்டன. பெரியவரிடம் அலைபேசி எதுவும் இல்லை. தட்டுதடுமாறி ஓர் ஒற்றையடிப்பாதை இருப்பதைக்  கண்டுபிடித்தோம். அதற்குப் பெரியவரின் அனுபவமே உதவியது.

‘இந்தக் காட்டில் நான் ஆறு வருடங்களாக இருக்கிறேன் ஐயா! எனக்குத் தெரியாத இடமே இல்லை. அதுமட்டுமல்ல, இப்போது நீங்கள் எங்கே போகவேண்டும் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்களாகவே விரும்பிக் கேட்டால் மட்டுமே அந்த இடத்திற்கு வழி காட்ட முடியும். இது எங்கள் குருவின் உத்தரவு. நானாக யாரையும் எங்கும் அழைத்துப்போக அனுமதியில்லை.’

நான் இளைய தாமுவின் கையைப் பிடித்துக்கொண்டேன். அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவன், ‘பெரியவரே, நாங்கள் வெள்ளி நிலாக் கப்பல் பார்க்க வந்திருக்கிறோம். என் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க விட்டுப் போயிற்று. அதனால்தான்...’ என்றான்.

பெரியவர் பேச்சில் சற்றே மகிழ்ச்சி தென்பட்டதாக உணர்ந்தேன். ‘நல்லது! முன்னோர்களுக்குத் திதி கொடுப்பவர்களின் குடும்பம் என்றுமே தாழ்ந்துபோகாது என்று குருநாதர் சொல்லுவார். வாருங்கள், அந்த இடம் எனக்குத் தெரியும். ஆனால் தற்செயலாக மழை வந்துவிடுமானால் அந்தக் கப்பல் மறைந்துவிடும். ஆகவே விரைவாகப் போகலாம் வாருங்கள். நான் முன்னால் போகிறேன்’ என்று அவர் வேகமாக நடந்தார். நாங்களும் நடந்தோம். என்றாலும் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிடையே மழைத்தூறல் எங்கள்மேல் விழுவதை உணர்ந்தோம். எனவே வேகத்தைக் கூட்டினோம். ஆனால் கும்மிருட்டில் எங்களால் ஓரளவுக்குமேல்  வேகம்கொள்ள முடியவில்லை.

ஆனால் மழை அதற்குமேல் வராது என்பதற்கு அடையாளமாகப் பெரும் காற்று வீசத் தொடங்கியது. மிகவும் எதிர்க்காற்றாக இருந்தது. நானும் தாமுவும் இறுகக் கட்டிக்கொண்டோம். அப்படியும் எதிர்த்து நிற்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

‘பெரியவரே’ என்று கத்தினோம். பதில் இல்லை. வெகுதூரம் முன்னால் சென்று விட்டாரோ?  ‘பெரியவரே, பெரியவரே’ என்று இன்னும் உரத்த குரலில் கத்தியபடி மெல்ல நடந்தோம். அப்போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. காற்று முற்றிலுமாக அடங்கிவிட்டது.

தூரத்தில் கப்பல் மாதிரியானதொரு வீடு கண்ணில்  தெரிந்தது. இரண்டு மாடிகள் கொண்ட வீடு. ஒரு நடுத்தரக் குடும்பம் அரசுடைமை வங்கியில் கடன் வாங்கிக் கட்டிய வீடு மாதிரி எளிமையாக இருந்தது.  ஆனால் பல அறைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் வெளிச்சம். ஒவ்வொன்றிலும் ஆள் நடமாட்டம். பெண்களும் இருந்தார்கள்.

பெரியவர் என்ன ஆனாரோ என்ற கவலையோடு நாங்கள் இருவரும் வீட்டின் வாயிலை அடைந்தோம். மரத்தால் கட்டிய வீடு. கதவைத் தட்டினோம்.

எங்களுக்கு வியப்பூட்டும் விதமாக அந்தப் பெரியவர்தான் வந்து கதவைத் திறந்தார்! ‘வாருங்கள், தாமு! வெள்ளி நிலாக் கப்பல் இன்னும் சற்று நேரம்தான் இங்கிருக்கும் என்று தகவல் வந்தது. ஆகவேதான் வேகமாக உங்களுக்கு முன்னால் வந்துவிட்டேன். சரி, உங்கள் முன்னோர்களின் பெயர்களை இந்தத் தாளில் எழுதிக்கொடுங்கள்’ என்று ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.  ‘வெறும் விரலால் எழுதினாலே போதும், தாளில் எழுத்துக்கள் தெரியும்.’

அது தாளல்ல, ஆப்பிளின் ஏதோ ஒரு புதுமாதிரியான மொபைல் ஸ்க்ரீன் என்று புரிந்துகொண்டேன். தாமு தன்னுடைய மூன்று தலைமுறைப் பெரியவர்களின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.

பெரியவர் அவனை மட்டும் உள்ளே அழைத்துப்போனார். அவர்கள் மரப்படிகளில் இரண்டாம் மாடிக்குச் செல்லும் காலடியோசை தெளிவாகக் கேட்டது. நான் வரக்கூடாதாம். ஏனெனில் என்னுடைய முன்னோர்கள் யாரும் அங்கு வரவில்லையாம். அதனால் எனக்கு உள்ளேவர அனுமதி இல்லையாம். வாசலிலேயே நின்றேன்.

சில மணி நேரத்திற்குப் பின் இளையதாமு இறங்கிவந்தான். ‘முன்னோர்களைப் பார்த்தாயா?’ என்றேன்.

‘சொல்கிறேன். சீக்கிரம் திரும்பிவிடச் சொன்னார்கள். அதிகநேரம் இங்கே இருக்கக்கூடாதாம். வா’ என்று என்னை வேகப்படுத்தினான் தாமு. பூங்காவை வந்தடைந்தபோது விடிந்துவிட்டது.

‘எல்லாரையும் பார்த்தேன்’ என்றான் தாமு. ‘இறந்துபோன என் அம்மா, என் அம்மாவின் தாய்-தந்தையர், என் அப்பாவின் அப்பா - என்று எல்லாரும் அங்கே இருந்தனர். எள்ளும் தண்ணீரும் கொடுத்தேன். திருப்தியோடு அவர்கள் மறைந்துவிட்டார்கள். என்னை நன்றாக ஆசீர்வதித்தார்கள். ஆனால். ஒரே ஒரு குறை...’

என்ன என்பதுபோல் அவனை ஏறிட்டு நோக்கினேன். ‘என்னுடைய பாட்டி – அதாவது அப்பாவின் அம்மா- அவர்கள் மட்டும் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை’ என்றான் தாமு.

அப்போது பெரியவர் எங்களை நோக்கி வந்தார். ‘நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள் இல்லையா?’ என்றார். எங்களுக்கு முன்பே அவர் திரும்பியிருக்கவேண்டும். அந்தக் காட்டை நன்றாக அறிந்தவர் அல்லவா?

தாமு சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘தாமு, உங்கள் பாட்டி இறந்துபோய் எத்தனை வருடம் ஆகிறது?’ என்றார்.

‘மூன்று வருடம்.’

‘அடடா’ என்ற அவரது குரலில் வருத்தம் காணப்பட்டது. ‘அதனால்தான் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் இறந்துபோய் ஆறு வருடம் ஆகிவிட்டதே!’ 

அந்தப் பெரியவரை அழைத்துப் போகச்சொல்லி சிபாரிசு செய்த பெண்மணியும் அப்போது அங்கே வந்துசேர்ந்தார். 'நான் இறந்துபோய் பதினைந்து வருடம் ஆயிற்று' என்றார்.

(குறிப்பு: இது ஒரு ‘பின்-நவீனத்துவ’ச் சிறுகதை.)
(c) இராய செல்லப்பா, சென்னை  

செவ்வாய், அக்டோபர் 16, 2018

உசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்


பதிவு 06/2018
உசிலம்பட்டி ரவுடியும் மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்

ஒருநாள் புதன்கிழமை. உசிலம்பட்டியில் வாரச்சந்தை. பயங்கரமான கூட்டம். பேருந்து நிலையத்திற்குப் பின்பக்கம்தான் சந்தை திடல். போலீஸ் கான்ஸ்டேபிள் இருளப்பன் (PC474)  பேருந்து நிலையைப் பணியில் இருந்தார். நல்லவர். மத்தியானம் சுமார் ஒருமணி. ஈ.கே.குருசாமி என்ற ரவுடி. மிகவும் கொடியவன். உசிலம்பட்டியில் பணியாற்றிய ஒரு சிறந்த சப்-இன்ஸ்பெக்டரை நடுவீதியில் வைத்து செருப்பால் அடித்துவிட்டு ஓடிவிட்டானாம். எனவே அவன் பெயரில் அந்தக் காவல் நிலையத்தில் ‘ரவுடி ஷீட்’ திறக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் சில மாதங்களில் அருகிலுள்ள ‘ஏழுமலை’ என்ற ஊருக்கு இடம் மாறிவிட்டான்.

அவனுக்கு இரண்டு மனைவிகளாம். அக்காளையும் தங்கையையும் கட்டாயக் கல்யாணம் செய்துகொண்டான். இருவரும்  ஆசிரியைகள். அதே ஊரில் வெவேறு பள்ளிகளில் பணிபுரிந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல்தேதியன்று அந்தந்தப் பள்ளிக்குச் சென்று சம்பளப் பணத்தைப் பலவந்தமாகப் பிடுங்கிக்கொண்டு சென்று கண்டபடி குடிப்பது, ரவுடித்தனம் செய்வது அவன் தொழில். எட்டாம் வகுப்புவரை படித்தவன். முன்னாள் இராணுவத்தினனும் ஆவான். அரசியலிலும் கொஞ்சம் செல்வாக்கு உடையவன்.


அன்றும் வழக்கம்போல் மனைவிகளிடம்  பணம் பறிக்கச் சென்றுள்ளான். மனைவிமார்கள் கெட்டிக்காரத்தனமாகத் தங்கள் தந்தையை அன்று வரவழைத்து அவரிடம் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். விஷயம் தெரிந்த குருசாமி, மாமனாரைத் தேடி அடுத்த பஸ்ஸைப் பிடித்து உசிலம்பட்டி வந்துள்ளான். அவர் உசிலம்பட்டியில் போலீஸ் இன்ஃபார்மராக இருந்தவர்.  ஆட்டந்துறை என்று பெயர். உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தான் குருசாமி.

மனைவிகளின் சம்பளத்தைத் தன்னிடம் தரும்படி கேட்டான். அவர் மறுக்கவே, தனது குடைக்கம்பியால்  அவரை அடித்து ரத்தகாயம் ஏற்படுத்திப் பணத்தைப் பிடுங்க முயற்சித்தான். அப்போது பேருந்து நிலையப் பணியில் இருந்த காவலர் இருளப்பன் பக்குவமாய்ப் பேசி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தார்.

‘பஸ் ஸ்டாண்டில் என்னடா கலாட்டா?’  என்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ரவுடி குருசாமியின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். அவனது கூலிங் கிளாஸ் கீழே விழுந்துவிட்டது. அவ்வளவுதான், குருசாமி அவரைப் பார்த்து முறைத்துவிட்டு, ‘ஸார், நான் ஒருமாதிரிப் பட்டவன். என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.  என்ன துணிவிருந்தால் என்மீது கை வைப்பீர்கள்?’ என்றான்.

உடனே அருகில் இருந்த காவலர் இருளப்பன், சப்-இன்ஸ்பெக்டரைத் தனியே அழைத்து, ‘எஜமான், இவனை அடிக்காதீர்கள். இவன்தான் அந்த எஜமானை (அதாவது சப்-இன்ஸ்பெக்டரை) செருப்பால் அடித்தவன். கேஸ் போடுங்கள். அடிக்கவேண்டாம். நானே பக்குவமாகப் பேசித்தான் அழைத்துவந்தேன்’ என்றார்.

(ஒரு நிமிடம் யோசித்த சப்-இன்ஸ்பெக்டர்) தனது உதவி சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ‘இந்த வழக்கை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார். அப்பாவி பொதுமக்களென்றால் புரட்டி எடுத்துவிடும் வழக்கமுள்ள அந்த  உதவி சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் ஃபிக்ரிடோ. ஆங்கிலோ-இந்தியர். கடும் கோபக்காரர். அவரோ, ‘ரைட்டர்! எஃப்.ஐ.ஆர். போட்டு இதை என்னவென்று பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.    

பயிற்சி எஸ்.ஐ. ஆக அங்கே இருந்தவர் திருக்குறள் பெருமாள். அவர் என்ன செய்தார் தெரியுமா? அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்:

நான் அங்கே இருந்தவன், இருளப்பனைப் பார்த்து, ‘என்னடா! எல்லாரும் ஓடுகிறார்கள். ரத்த காயத்துடன் ஆட்டந்துறை நிற்கிறார்.  சப்-இன்ஸ்பெக்டர் எல்லாரும் ஓடிவிட்டார்கள்’ என்றேன். அவர் விஷயத்தைச் சொல்லவே, லத்திக் கம்பை எடுத்து குருசாமியைக் கண்டபடி அடி(த்து) நொறுக்கினேன்.  ‘உனக்கென்னடா மீசை’ என்று அவனுடைய மீசையைப் பிடுங்கினேன். நான்கு மிதிமிதித்துத் தூக்கி லாக்கப்பினுள் எறிந்தேன்.  

பிறகு ஆட்டந்துறையிடம் புகார் பெற்று, தலைமை காவலர்கள் உதவியுடன்,  IPC Sec 324 இல் F.I.R. பதிவு செய்தேன்.  ஆட்டந்துறையை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினேன்.

மறுநாள் குருசாமியைக் கைவிலங்கிட்டு சங்கிலியில் கட்டித் தெருத்தெருவாக இழுத்தேன். உசிலம்பட்டி நகரமே, ‘நமது எஜமானுக்கு (அதாவது எஸ்.ஐ.க்கு) இவ்வளவு கோபம் வருமா என்று வியப்பில் ஆழ்ந்தது.

அவனைச் சங்கிலியில் கட்டி வீதிவீதியாக இழுத்தபடி திருமங்கலத்திற்கு நீதிமன்றக் காவலுக்குப் பேருந்தில் கூட்டிச்சென்றேன். அப்போது அவன் அருகில் அமர்ந்து, ‘குருசாமி! உனக்கும் எனக்கும் முன் பகை கிடையாது. எனது குடும்பத்தினர் அனைவரும் ராணுவத்தில்தான் உள்ளார்கள். உனக்குத் திறமையும், பலமும் இருந்தால் அதை மனைவிகளிடமும், மாமனாரிடமுமா காட்டுவது?  வள்ளுவர்,  ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை –என்கிறார்.  நீ ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவன் என்று எண்ணுகிறேன். தேவர் ஒரு சிறந்த ஆன்மிகவாதி. நீ ஒரு சப்-இன்ஸ்பெக்டரைத்  துன்புறுத்தி இருக்கிறாய். நானாக இருந்தால் உன்னை எப்போதோ சுட்டுக் கொன்றிருப்பேன்’ என்று பல அறிவுரைகள் கூறி அவனை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவிட்டேன்.

செய்தி ஆய்வாளருக்கும், துணை கண்காணிப்பாளருக்கும் (டி.எஸ்.பி.) தெரிந்து, உடனே ஆய்வாளர் நிலையம் வந்து என்னை அழைத்து விசாரித்தார். ‘பெருமாள் சின்னப் பையன். FIR எல்லாம் சரியா என்று பார்த்து அவனுக்குத் தேவையான அறிவுரைகள் கொடுங்கள்’ என்று டி.எஸ்.பி. ஆய்வாளரிடம் கூறினார். ஆய்வாளர், ‘நீ எப்படி அப்பா இப்படி அடித்தாய்?’ என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். நான் சிரித்துக்கொண்டே, ‘ஸார்! கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் –என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட கொடியவனைத் தண்டிக்காவிட்டால் காவல்துறையில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும் ஸார்!’ என்றேன்.

‘Very good. You have done a good thing. But be careful. Because he is a very bad element. He has got some political background also’ என்றார். நானும் ‘தேங்க்யூ ஸார்! அவ்வாறே செய்கிறேன்’ என்றேன்.

பிறகு, விசாரணை முடிந்து குற்றப் பத்திரிக்கை யார் தாக்கல் செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. எஸ்.ஐ. சிறிது(ம்) விருப்பம் இல்லாமல் இருந்தார். பிறகு ஆய்வாளர், டி.எஸ்.பி., அரசு வழக்கறிஞர் எல்லாரும் கலந்து (பேசி), ‘பெருமாளும் எஸ்.ஐ. தானே! எனவே பெருமாளே குற்றப் பத்திரிக்கை போடட்டும்’ என்றார்கள். நான் தயார் என்று நானே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தேன்.
***
இந்த வழக்கில் ரவுடி குருசாமிக்குத் தக்க தண்டனை கிடைத்தது. அவனது கொட்டம் அடங்கிவிட்டது. அவனால் பாதிக்கப்பட்டிருந்த ‘அந்த’ எஸ்.ஐ. (உடனே) பெருமாளுக்கு போன் செய்து, ‘என் மானம் மரியாதை மட்டுமல்லாமல் நமது காவல் துறையின் மானம் மரியாதையையும் காப்பற்றிவிட்டீர்கள்’ என்று பாராட்டினார்.
***
யார் இந்தத் திருக்குறள் பெருமாள்? அவருடைய பெயருக்குமுன்  ஏன் ‘திருக்குறள்’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது?  வாழ்நாள் முழுதும் அவர் திருக்குறளோடு சொந்தம் கொண்டாடினாரா? போலீஸ் துறையில் அவர் முன்னேற முடிந்ததா? இப்போது எங்கே இருக்கிறார்?

கடைசிக் கேள்விக்குப் பதில்: எங்கள் குடியிருப்பில் அண்மையில் அவர் குடியேறியிருக்கிறார்.  வயது எழுபத்தெட்டு.

மற்ற கேள்விகளுக்கான பதிலை ஒரு புத்தகமாகவே எழுதிவிட்டார் பெருமாள். ‘காவல் பணியில் ....கடமையும், களிப்பும், கசப்பும்’ என்ற பெயரில் தனது முப்பத்தாறு ஆண்டு காவல்துறை அனுபவங்களை அழகான தமிழில் கிட்டத்தட்ட ஒரு வரலாற்று ஆவணமாகவே  வடித்துவிட்டார்.  இராசபாளையம் அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அழகுக் கோனார் – மீனாட்சியம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் பெருமாள். இளமையிலேயே  பேச்சுத்திறமையில் சிறந்து விளங்கிய இவரைப் பெருந்தலைவர் காமராஜர் அரசியலுக்கு வரும்படி அழைத்தும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தன்னால் அரசியலில் முன்னேற இயலாது என்று அவரிடமே தெரிவித்து, பின்னர் காவல்துறையில் பயிற்சி எஸ்.ஐ. ஆக நுழைந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றினார். கடைசியாக புதுக்கோட்டையில் Addl. S.P  ஆக உயர்ந்து ஓய்வுபெற்றார்.

துபாயில் தன் மகன் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது பேத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகம் முழுவதும் நேர்மை ததும்புகிறது. தான் செய்த விதிமீறல்களையும் விடாமல் பதிவுசெய்திருக்கிறார். உயர் அதிகாரிகளின் தவறுகளையும் இங்கிதமின்மையையும் எடுத்துக்காட்டி காவல்துறையில் சேரும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். இந்த நூலிலிருந்து சில சுவையான பகுதிகளைக் கீழே தருகிறேன்:
***
எனது 36  ஆண்டு கால காவல்பணியில் எத்தனையோ குற்றவாளிகளைக் கடுமையாக அடித்திருப்பேன். மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டிருப்பேன். ஆனால் வள்ளுவர் காட்டிய ‘பிறன்மனை நோக்கா பேராண்மை’யை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன். (சினிமாக் கவிஞர்கள் கவனிக்க!) அதுபோன்று கள்ளுண்ணாமையையும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன். அந்த வகையில் நான் அண்ணல்  காந்தியடிகளுக்குச் சமம் என்று கூட எண்ணுவேன். அவர்கள் குன்றின் மேலிட்ட விளக்கு. நான் குடமிட்ட விளக்கு. காந்தியடிகள் காவல் துறையில் பணியாற்றவில்லை. எனவே குற்றவாளிகளை அடிக்கும் வாய்ப்பை அவர்கள் பெறவில்லை. நான் காவல்துறையில் பணியாற்றியதால் வேறு வழியில்லை. அடித்திருக்கிறேன். (பக்கம்  204)
***  
ஒரு நண்பர் ‘நீங்கள் பொய் வழக்கே போட்டதில்லையா?’ என்று கேட்டார். போட்டிருக்கிறேன். நான் எஸ்.ஐ. ஆகப் பணியாற்றியபோது  காட்டில் மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை அடையாளம் தெரிந்த ஒருவன் பலவந்தமாகக் கற்பழித்துவிட்டான். அந்தப் பெண் இதை வெளியில் சொல்ல நாணி, புகார் கொடுக்க மறுத்தாள். செய்தி தெரிந்தவுடன் அந்தக் கொடியவனைப் பிடித்துவந்து நன்றாக அடித்து அவன்மீது கஞ்சா, சாராயம் வழக்குகள் போட்டேன். இது பொய் வழக்குத்தானே! (பக்கம் 205)
***
வேலூர் காவல்துறை பயிற்சிக் கல்லூரி, கோட்டைக்குள் இருந்தது. பிரம்மாண்டமான கோட்டைதான். ஆனால்  பயிற்சி எஸ்.ஐ.க்களான நாங்கள்தான் எடுபிடிகள். ஏவலர்களும் கோட்டை காவலர்களும் நாங்கள்தான். அன்றாடம்  சுத்தம் செய்யப்படவேண்டிய உலர்ந்த கழிப்பறைகள். மாடுகள் குளிக்கும் குளிப்பறைகள் போன்ற குளிப்பறைகள். மனிதனையே தூக்கிச் செல்லும் அளவுக்குச் சக்தி வாய்ந்த கொசுக்கள் நிறைந்த அறைகள். ஏனென்றால்  அது கோட்டை. அதைச் சுற்றிலும் ஆழமான பாதாளச் சாக்கடைத் தண்ணீர் வந்து பாயும் அகழிகள். அந்த அகழிகளில் பல கொசுப் பண்ணைகள். அங்கு வளரும் கொசுக்களுக்குப் பயிற்சியில் இருக்கும் காவலர்களும்  எஸ்.ஐ.க்களும்தான் ரத்ததானம் செய்யவேண்டும். (பக்கம் 6)
***
என்னிடம் எத்தனையோ நல்ல பழக்கங்கள் உண்டு, திருக்குறள் படித்ததால். அதில் முக்கியமானது நான் பணியாற்றிய காவல் நிலையங்களில் எல்லாம் காவல் துறைக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதிப் போட்டிருப்பேன்.எனவே போடி நகரக் காவல் நிலையத்திலும் எனது ஆசனத்திற்கு மேலே, பல குறள்களை எழுதிப் போட்டிருந்தேன். ‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்ற குறளை(யும்) எழுதிப் போட்டிருந்தேன். (பக்கம் 43)
***
நான் உத்தமபாளையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் இருந்த இந்திப் பலகையை உடைத்தார்கள். அச்சமயம் உத்தமபாளையம் சர்க்கிளுக்கு உட்பட்ட கூடலூரில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள்  (ஆக மூன்றுபேரை) எரித்துக் கொன்றுவிட்டார்கள். எனவே மாணவர்களை மிகவும் ஜாக்கிரதையாக நடத்தும்படி எனக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு. மாணவர்கள் சைக்கிளில் விளக்கு இல்லாமலும் இரண்டு பேர்கள், மூன்று பேர்களாகவும் சவாரி செய்து அட்டகாசம் செய்வார்கள். அவர்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தேன். அதற்கும் திருக்குறளைப் பயன்படுத்தினேன்.

(அப்படி அட்டகாசம் செய்யும்) மாணவர்களை நிறுத்தி, ‘ஏனப்பா இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்பேன். அவர்கள், ‘ஸார்! இனிமேல் இப்படிச் செய்யமாட்டோம்’ என்பார்கள். நான், ‘சரி. நாம் எல்லாம் பச்சைத் தமிழர்கள். இந்தியை எதிர்க்கிறோம். நீங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். மகிழ்ச்சி. தமிழ் மறை, உலகப் பொதுமறை திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு பத்து குறள்கள் – எந்த அதிகாரத்தில் இருந்தாலும் பரவாயில்லை – சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்பேன். அவர்களால் சொல்ல முடியாது. ‘ஏனப்பா, தமிழனாகப் பிறந்து தமிழனாகவே வளர்ந்து, இந்தி என்னும் செந்தீயை எதிர்த்து வாழும் நீங்கள் பத்து குறள்களைப் படிக்காதது தவறல்லவா? எனவே திருக்குறளைப் படிக்காததற்கு உங்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறேன். அபராதம் ரு.10  அல்லது 5 கட்டிவிடுங்கள்’ என்பேன். கெஞ்சிக் கூத்தாடிவிட்டு நீதிமன்றத்தில் வந்து அபராதம் கட்டுவார்கள்.

அதிலிருந்து என்னைப் பார்த்தாலே, ‘டே! அந்தத் திருக்குறள் நிற்கிறான். திருக்குறள் சொல்லச் சொல்வான். சொல்லாவிட்டால் ஃபைன் கட்டவேண்டும்’ என்று சொல்லி ஓடிவிடுவார்கள். ஆக மாணவர்கள் எனக்கு இட்ட பெயர்தான் ‘திருக்குறள்’ பெருமாள். (பக்கம் 65)
***
திருக்குறள் வாழ்வியல் நூல். அது படித்தால் மட்டும் போதாது.அதைப் பின்பற்றி நடந்தால் காவல் துறையில் உள்ளவர்கள் வெற்றிகரமான காவல்துறை அதிகாரிகளாக இருக்கமுடியும்  என்பது எனது ஆழமான கருத்தாகும். எனவேதான் நான் காவல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியில் இருந்தபோது ஏனைய சட்ட நூல்களுடன் திருக்குறளையும் ஒரு பாடமாக வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். (பக்கம் 88)
***
‘தொண்டுசெய்வீர் தமிழுக்கு – துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ –என்றார் பாரதிதாசன். தமது காவல் துறையில் திருக்குறளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது மட்டுமன்றி, தனது முப்பத்தாறு ஆண்டு காவல்துறை அனுபவங்களை அழகிய தமிழில் ஆவணப்படுத்தியும் இருக்கிறார் திருக்குறள் பெருமாள்.

காவல்துறையில் உள்ள ஒவ்வொருவரும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

‘காவல் பணியில்...கடமையும், களிப்பும், கசப்பும்’:
வெளியீடு: ‘காவ்யா’, 81, கே.கே.ரோடு, வெங்கட்டாபுரம், அம்பத்தூர், சென்னை-600053.  தொலைபேசி: 044-42105680   விலை ரூ.200/-
***

வெள்ளி, அக்டோபர் 12, 2018

இதுவும் ஒரு கொலுபொம்மை -2/2


பதிவு 05/2018
இதுவும் ஒரு கொலுபொம்மை -2/2

இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இரண்டு நாட்கள் கழிந்தபின்...

மூன்றாம் மாடி பால்கனியிலிருந்து தரையை நோக்கி யாரையோ அழைத்துக்கொண்டிருந்தாள் என் மனைவி. காலை பதினொன்றரை மணி.
காய்கறி வண்டிக்காரி, இஸ்திரி போடும் பெண் இருவரும் அவளோடு உரையாடலில் இருந்தது தெரிந்தது.

‘மாமி, குட் மாணிங்’ என்றாள் இஸ்திரிப் பெண் சிந்தாமணி. காய்கறிப் பெண் கற்பகம் ‘வணக்கம் அம்மா’ என்றாள்.  தமிழில் பி.ஏ. படித்தவள்.

‘நீங்க ரெண்டுபேரும் எப்பவந்து வெத்தல பாக்கு வாங்கிக்கப் போறீங்க? நவராத்திரி ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆச்சே, ஆளையே காணோமேன்னு பாத்தேன்’ என்றாள் விஜி.
எங்கள் வீட்டு கொலு- 12-10-2018
இருவரும் வேகமாகத் தலையை ஆட்டினார்கள். ‘இன்னிக்குத்தான் வரணும்னு இருந்தேன் மாமி, இப்ப வரலாமா? சாயந்திரம் எனக்கு வேலை இருக்கு’ என்றாள் சிந்தாமணி. ‘நானும் அதே!’ என்றாள் கற்பகம்.

‘இப்பவே வாங்களேன்’ என்று அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, பெரிய தாம்பாளத்தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமப்  பொட்டலங்களை வரிசையாக அடுக்கி, தலா ஒரு ஆப்பிளையும் வைத்தாள். பிறகு மயிலாப்பூர் விஜயா ஸ்டோர்ஸில் வாங்கிய  ஜெர்மன் வெள்ளியிலான மயில்பொம்மை ஒன்றையும் ஆளுக்கு ஒன்று என்று எடுத்துவைத்தாள்.  இவை எல்லாவற்றையும் போட்டுக்கொள்வதற்கு ஆளுக்கொரு பிளாஸ்டிக் பையையும் தயாராக வைத்துக்கொண்டாள்.

சிந்தாமணியும் கற்பகமும் வந்தனர். சிந்தாமணி பிறந்ததுமுதல் அனுப்பக்கொட்டாம்பட்டி என்னும் கிராமத்தைத் தவிர வேறெந்த பெரிய ஊரையும் பார்த்திராதவள். திருமணமானபின் கணவனோடு சென்னைக்குக் குடித்தனம் வந்தவள். நவராத்திரி கொலுவை இப்போதுதான் பார்க்கிறாள். பிரமித்துப் போனாள்.

‘எப்படி மாமி, இவ்ளோ பொம்மைங்கள வாங்கினீங்க? ரொம்ப செலவாகியிருக்குமே! லட்ச ரூபாய் ஆகியிருக்குமா?’ என்று வெகுளியாகக் கேட்டாள்.

கற்பகம் அவளைத் தலையில் செல்லமாகத் தட்டினாள். ‘போடி, முட்டாள்! எல்லாம் ஒரு முப்பதாயிரம் ரூபாய்தான் இருக்கும்’ என்றாள். பி.ஏ. படித்தவளாயிற்றே!

சிந்தாமணிக்கு வெட்கமாகப் போயிற்று. ‘அய்யையோ, நான் வெறுமே  ஒரு லட்சம்னு நெனச்சேன். ஆனா முப்பாதாயிரம் வரையில ஆச்சா? அவ்ளோ ஆகுமா?’ என்றாள் இன்னும் வெகுளியாக. லட்சத்தை விட முப்பதாயிரம் பெரியதென்று அவளுக்கு  மனதில் பதிந்தது எப்படி என்று தெரியவில்லை.

என் மனைவி சிரித்தாள். கற்பகமும் சேர்ந்து சிரித்தாள். ‘சிந்தாமணி, ஒனக்கு ஒண்ணு, ரெண்டு, மூணு எதுவரைக்கும் தெரியும்?’ என்றாள். ‘சரி விடு, ஒன்னோட ரெண்டு கையிலயும் சேர்த்தா எவ்வளோ விரல் இருக்கும்?’ என்று கேள்வியை மாற்றினாள்.

சடக்கென்று பதில் வந்தது சிந்தாமணியிடமிருந்து. ‘ஒம்பது!’

இதுகூடத் தெரியாமல் இவள் எப்படித் தொழில்செய்யவந்தாள் என்று என்னவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘எங்கே ஒன் கையைக் காட்டு’ என்று அவளது இரண்டு  கைகளையும் பற்றினாள். ஆமாம், மொத்தம் ஒன்பது விரல்கள்தாம் இருந்தன! பிறக்கும்போதே இடதுகையில்  சுண்டுவிரல் இல்லையாம்.

‘அடடா’ என்று நொந்துபோனார்கள் இவளும், கற்பகமும். மேற்கொண்டு சிந்தாமணியை வருத்தப்படுத்த வேண்டாம் என்று விஷயத்தை மாற்றினாள் விஜி.

‘ஏண்டி சிந்தாமணி, கணக்கெல்லாம் போகட்டும். நீ செய்யறது ஒனக்கே நல்லா இருக்கா?’ என்றதும் சிந்தாமணிக்குப் புரியவில்லை. ‘ஏன் மாமி அப்டி சொல்றீங்க?’ என்று குழப்பத்தோடு கேட்டாள். ஒருவேளை இஸ்திரிக்குக் கொடுத்த புடவைகளில் ஏதாவது ஒன்று தவறிவிட்டதா, இல்லை, பட்டுப் புடவை இழை பிரிந்துவிட்டதா, இல்லை ஐயாவின் வெள்ளைச் சட்டையில் கறையேதும்  படிந்துவிட்டதா? கற்பகமும் வியப்போடுதான் இவளைப் பார்த்தாள்.

‘பின்னே என்னடி, அந்த சவிதா இருக்கிறாளே, அவளைப் பற்றி உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றியா? அவ வீட்டுக்கு நீதானே இஸ்திரி போடறே?’ என்றவள், கற்பகத்தையும் விடவில்லை. ‘நீ மட்டும் என்னவாம்? ஒன்கிட்டதானே அவள் காய்கறி வாங்கறா? நீயும் அவளப் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறியே’ என்று குற்றம் சாட்டினாள்.

சிந்தாமணிக்கு இப்போதுதான் குழப்பம் தெளிந்தது. ‘போங்க மாமி, நான் இந்த ஊருக்குப் புதுசு இல்லிங்களா, யாருகிட்ட  எதைப் பேசணும்னு இன்னும் புரிபடல மாமி. அதுக்குள்ளே எனக்கு மாலைமுரசுன்னு பேரு வெச்சிட்டாங்க. அதனால் இப்பல்லாம் நான் பேசறதே இல்லீங்க’ என்றாள். கற்பகம்  சற்றே நாணத்துடன் ‘எனக்கு தினத்தந்தின்னு பேரு மாமி. ஆனா அந்த சவிதாம்மாவப் பத்தி எனக்கு ஒண்ணும் புதுசா வெசயம் கெடைக்கல மாமி’ என்றாள்.

ஏதோ சுருக்கென்று தைத்தது என் மனைவிக்கு. ‘புதுசா இல்லேன்னா, பழைய வெஷயம் எதுவோ இருக்குன்னுதான அர்த்தம்? அது என்னன்னு சொல்லுடி’ என்றாள்.

கற்பகம் முகத்தில் சற்றே பயத்தை வரவழைத்துக்கொண்டு, ‘மாமி, நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க!’ என்றாள். ‘அந்த சவிதாம்மா வீட்டுல ஒரு வாரமா யாரோ ஒரு ஆம்பிளக் குரல் கேட்குதாம். ஆனா அந்த ஆள் வெளிய வந்து யாரும் பார்க்கலியாம்.’

அப்போது சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்தது. ‘மாமி, மெயின்ட்டனன்ஸ் ஆளுங்க வந்து செக் பண்ணுவாங்க. நாங்க போகணும்’ என்று நினைவுபடுத்தினார்கள். ‘இதோ வந்துட்டேன்’ என்று இவள் எழுந்தாள். 

தாம்பாளத்தட்டை அவர்களிடம் நீட்டினாள். சுண்டலை மட்டும் சிறிய பொட்டலமாகக் கட்டிக்கொடுத்தாள்.  ‘மாமி, நம்ப காலனியில ஒங்கவீட்டு கொலுவை அடிச்சிக்க ஆளே இல்ல மாமி’ என்று சான்றிதழ் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
****
எழுபத்துமூன்றாவது பிளாக்கில் இருந்து கோமளா கிருஷ்ணன் வந்தாள். தன் வயதில் இருபதைக் குறைத்துக் காட்டுவதை  வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவள். ஆங்கிலத்தில் எம்.ஏ. சுயதம்பட்டம் மட்டுமின்றி ஊர்வம்பிலும் கெட்டிக்காரி. ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே வம்புபேசுவாள். அதனால் அவளுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் என்றும் ஒரு  பெயர் உண்டு. 
  
‘ஹவ் ஆர் யூ விஜி?’ என்றவளிடம் வேண்டுமென்றே ‘அது ஒண்ணுதான் கொறைச்சல்’ என்று வரவேற்றாள் என் மனைவி.

அது போதுமே கோமளாவிற்கு! படபடவென்று கொட்டிவிட்டாள். ‘ஓ அந்த சவிதா விஷயமா? உங்களிடம்தான் முதலில் சொல்லவேண்டுமென்று இருந்தேன். ஆனால் யமுனா டீச்சர் எப்படியோ என் வாயிலிருந்து விஷயத்தைக் கறந்து விட்டாள். வெரி ஸாரி.’

கோமளா எப்போதுமே இப்படித்தான். அவசரமாகப் பேசுவாள். அவசரமாகக் கிளம்பிவிடுவாள்.  அதனால் அவளுக்கு முதலில் தாம்பூலம் கொடுத்தாள் விஜி. பிறகு பேச்சுக் கொடுத்தாள். ‘யமுனா டீச்சரிடம் நீங்கள் சொன்னதை ஒருவரி மாற்றாமல் என்னிடம் சொல்லவேண்டும், சரியா?’

தாம்பூல சாமான்களைப் பையில் வைத்தபடி சிரித்தாள் கோமளா. ‘அதொண்ணும் பெரிய விஷயமில்லை விஜி! அவள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறதாம். அதை வெளியில் விடுவதே இல்லையாம். ஒரு வாரம்போல இருக்குமாம். ஜாடையை வைத்துப் பார்த்தால் அவளுடைய குழந்தை மாதிரியே இருக்கிறதாம். ஆனால் அதைப் பற்றிமட்டும் யாரிடமும் பேசுவதில்லையாம்’ என்று கோமளா சொல்லிமுடித்துவிட்டு, ‘வரட்டுமா, இன்னும் சில வீடுகளுக்குப் போகவேண்டும். நவராத்திரி அல்லவா?’ என்று நடையைக் கட்டினாள்.
****
நாலைந்து நாளாகவே கொலுப்படியை ‘செட்டப்’ செய்ததிலும், பொம்மைகளை ஒன்பது படிகளிலும் அடுக்கிவைத்ததிலும், சோர்ந்து போயிருந்த விஜி என்னை அழைத்து, யாராவது வந்தால் தன்னை எழுப்புமாறு கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்தபடியே சற்று கண்ணயர்ந்தாள்.

மாலை ஆறுமணிக்குமேல்தான்  விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். எல்லாமே தாய்க்குலம்தான். சபரிமலையில்தான் ஜெயித்துவிட்டோமே, கேவலம் கொலுபார்ப்பதற்காவது ஆண்களை அழைத்துக்கொண்டு போவோமே என்ற அகன்ற மனம் ஒருவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. வந்தவர்களில் விஜிக்கு முக்கியமான ஒருத்தி,  சுந்தரி என்ற சமையல்பெண். அவளைச் ‘செவப்பு’ சுந்தரி என்றுதான் குடியிருப்பில் அழைப்பார்கள். (ஏனென்றால் இன்னொரு சுந்தரி- சற்றே மாநிறம் கொண்டவள்- சமையல் பணியில் இருந்தாள். அவள் ‘கருப்பு’ சுந்தரியாம்.) அந்தச் செவப்பு சுந்தரி,   விஜியிடம் சற்றே மறைவிடத்திற்குப் போய் இரகசியமாக ஏதோ சொல்லிவிட்டுப்  போனாள். அதை கேட்டதும் விஜிக்கு முகத்தில் இரண்டாயிரம் வாட்ஸ் பல்ப் எரிய ஆரம்பித்ததை நான் கண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அப்படி என்னதான் சொல்லியிருப்பாள்?
*****
சொன்னபடியே சவிதா எங்கள் நவராத்திரி கொலுவைப் பார்க்க வந்துவிட்டாள். இரவு எட்டுமணி யிருக்கும். இருங்கள், அவளோடு ஒரு ஆணும் இருந்தான். வயது என்ன தெரியுமா? இரண்டே இரண்டு!

விஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சவிதாவைப் பற்றி எல்லாரும் வம்புபேசிக் களித்திருந்த சமயம், அவளே ஒரு பையனோடு வந்தது துணிச்சலான செயலாகப் பட்டது.

‘வாம்மா சவிதா! யாருடி இந்தக் குட்டிப் பையன்?’ என்றாள் விஜி. ‘எங்கிட்ட வாடா கண்ணா’ என்று அவனை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டினாள். குழந்தை வேற்றுமுகம் என்பதால் வரமறுத்து ‘அம்மா’ என்று சவிதாவை இறுகக் கட்டிக்கொண்டது.    

விஜிக்குத் திகைப்பாக இருந்தது.  அந்தக் குழந்தைக்கு இவள் அம்மாவா? எப்போது இவள் கர்ப்பமானாள்?  அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவாள். ஆனால் ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது விடுமுறையில் இந்தியா வந்துவிடுவாளே! எப்போது பார்த்தாலும் டயட்டில் இருப்பவள்போல் ஒல்லியாகத்தானே இருந்தாள்! வயிறு வீங்கிப் பார்த்ததில்லையே! இந்தக் குழந்தையை எப்போது பிரசவித்திருக்கமுடியும்? அப்படியே இருந்தாலும் ஒரு குழந்தையை இரண்டுவருடங்கள் யாருக்கும் தெரியாமல் எப்படி மறைத்துவைத்திருக்க முடியும்?

‘உட்கார் சவிதா, உன் பிள்ளை உன்னைப்போலவே நல்ல கலராக இருக்கிறான்! என்ன பெயர் வைத்திருக்கிறாய்?’ என்று குழந்தையின் கன்னத்தில் தட்டினாள். குழந்தை மீண்டும் எச்சரிக்கை உணர்ச்சியோடு, ‘அம்மா..’ என்று சவிதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

‘பார்த்திபன் என்று பெயர். மகம் நட்சத்திரம். சிம்ம ராசி’ என்றாள் சவிதா மகிழ்ச்சியோடு. ‘இல்லேடா கண்ணா?’ என்று அவனைக் கொஞ்சினாள். குழந்தை பதிலுக்கு அவளை ஆசையோடு முத்தமிட்டது.

சுண்டலை பிளாஸ்டிக் கப்புகளில் நிரப்பும் பணியில் தீவிரமாக இருந்த என்னிடம், உள்ளே வந்த விஜி, மெல்லிய குரலில், ‘என்னங்க இது, ஒண்ணுமே புரியலே! இவளை அந்தக் குழந்தை அம்மான்னு கூப்பிடுது. ஆனா செவப்பு சுந்தரி வேற மாதிரியில்லே சொன்னா?’  என்றாள்.

‘வேற மாதிரின்னா?’

‘அந்த அசிங்கத்த ஏன் கேட்கிறீங்க! இந்தப் பையன் சவிதாவுக்குக் கூடப் பிறந்த தம்பி ஆகணுமாம்!  அறுவது வயசு அம்மாவுக்குப் பொறந்திருக்கான் இந்தப் புள்ளை! வெவஸ்தை கெட்ட ஜென்மங்க’ என்று விஜி சொன்னதும் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உண்மையில் சவிதாவின் அம்மாவை இந்தக் குடியிருப்பில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  வெளிநாட்டில் இருந்ததாகக் கேள்வி.

மகனா, தம்பியா?

இந்த சஸ்பென்சை உடைக்காதவரையில் விஜி தூங்கப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். அதனால் மெதுவாக அவளுக்கு ஆலோசனை சொன்னேன். ‘சவிதாவிடமே இலைமறை காய்மறையாய்க் கேட்டுவிடலாமே!’  

என்னைப் பார்த்து முறைத்தாள் விஜி. ‘ஏன் நேரடியாகவே கேட்கலாமே!’ என்றாள்.

தாம்பூலமும் சுண்டலும் கைமாறிக்கொண்டிருக்கும்போது மெல்லப் பேச்சுக் கொடுத்தேன் சவிதாவிடம். ‘இப்போது பிராஜக்ட் எல்லாம் எப்படிப் போகிறது? ஆர்ட்டிஃபீஷியல் இண்ட்டலிஜென்ஸ்  தான் இப்போது டிமாண்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே!’ என்றேன்.

அதைப் பற்றி விளக்கம் கொடுத்தாள். கணினித் துறையில் ஐந்தாண்டுக்குமேல் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிலேயே இன்னொரு புதியதுறையைக் கற்றுக்கொள்வதில் அதிக சிரமம் இருக்காது என்றாள்.  யாருக்கும் வேலை பறிபோகாது என்றாள். போனாலும் அது ஒருசில மாதங்களுக்குத்தான் என்றாள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நூற்றுப்பன்னிரண்டாவது பிளாக்கிலிருந்து தாயம்மா பாட்டி வந்தார். வயது எண்பதுக்குமேல் இருக்கும். அவருடைய கண்ணுக்கு அதைப்போல இரண்டுமடங்கு ஆயுள் என்பார்கள். யாரையும் ஊடுருவிப் பார்த்து ரகசியங்களைக் கண்டுபிடித்துவிடுவதில் கில்லாடி.

சவிதாவையும் குழந்தை பார்த்திபனையும் பார்த்த தாயம்மா, ‘ஏண்டி பொண்ணு, இந்தப் பையனைப் பார்த்தா ஒன் ஜாடையாவே இருக்கானே, ஒருவேளை ஒன்னோட தம்பியோ?’ என்றாள்.

விஜியும் நானும் சவிதா என்ன சொல்லப்போகிறாளோ என்று தீர்க்கமாக நோக்கினோம்.

கலகலவென்று சிரித்தாள் சவிதா. ‘அப்படியும் வைத்துக்கொள்ளலாம் பாட்டி!’ என்றாள்.

இதுதான் சமயம் என்று நான் ‘தயவு செய்து புரியும்படியாகச் சொல்லுங்கள் சவிதா! இந்தப் பார்த்திபன் உங்கள் மகனாக இருந்தால் தம்பியாக இருக்கமுடியாது. தம்பியாக இருந்தால் மகனாக இருக்கமுடியாது. ஆனால் இவன் உங்களை அம்மா என்று அழைக்கிறானே!  இது என்ன புதிர்?’ என்றேன்.

‘அது பெரிய கதை அங்க்கிள்! ‘ என்று தொடங்கினாள் சவிதா.

சவிதாவின் அக்கா சாரதா ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். சவிதாவின் அம்மாவும் அவளுக்குத் துணையாக அங்குதான் வசிக்கிறாள். சாரதாவுக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை.  எவ்வளவோ டாக்டர்களிடம் பார்த்தும் பயனில்லை. கடைசியில் சோதனைக்குழாய் முறையில் கருத்தரிக்க முயற்சிசெய்தால் வெற்றி கிடைக்கும் என்றார்களாம். ஆனால் அதிலும் சிக்கல் வந்ததால், வாடகைத்தாய் முறையில் கருத்தரிக்க ஏற்பாடுசெய்யுமாறு  ஆலோசனை தரப்பட்டதாம். சவிதாவின் தாயே தன் மகளின் குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்க முன்வந்தாளாம். அப்படிப் பிறந்தவன்தான் இந்தப் பார்த்திபன்.

‘என் அம்மா வயிற்றில் பிறந்ததால் இவன் எனக்குத் தம்பி முறைதானே! அதே சமயம் என் அக்காவிற்குப் பிறந்ததால் இவன் என்னை அம்மா என்று அழைப்பதும் சரிதானே! சித்தி என்று அழைக்க இவனுக்கு இன்னும் வார்த்தை வரவில்லை’ என்று சிரித்தாள் சவிதா.

இன்று இரவு விஜி நன்றாகத் தூங்குவாள் என்பது உறுதி.

(c) இராய செல்லப்பா, சென்னை 
****