புதன், ஜூலை 31, 2019

(2) அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலிசபெத் வாரன்?


(2) அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா இந்தி நடிகரின் மாமியார்? 
அமெரிக்காவின் ஓக்லஹாமா-வில் பிறந்தவர் எலிசபெத். அவருடைய தந்தை தரைவிரிப்புகளை விற்பவராகவும், கட்டிடங்களைப் பராமரிப்பவராகவும் இருந்தார். தாயார் குடும்பத்தலைவி மட்டுமே. எலிசபெத்துக்கு மூன்று அண்ணன்கள் உண்டு. மிகவும் கஷ்டமான வாழ்க்கைதான்.
 
தொலைக்காட்சி விவாதத்தில் எலிசபெத் வாரன்
எலிசபெத்துக்கு 12 வயதானபொழுது அவருடைய  தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் பணிக்குச் செல்ல முடியாமல் மருத்துவச் செலவுகள் குவிந்தன. அவர்களிடம் இருந்த ஒரே வாகனமான  ஸ்டேஷன் வேகனை விற்க வேண்டியதாயிற்று. வீட்டுக்கடனிலும் பாக்கி இருந்ததால் எந்த நிமிடமும் வீடும் பறிமுதல் செய்யப்படும் நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான் அவர் தாயார் துணிந்து வீட்டுக்கு வெளியே வந்தார். அருகிலிருந்த ஸியர்ஸில் (Sears) தொலைபேசி ஊழியராகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இதை அடிக்கடி தன்னுடைய சொற்பொழிவுகளில் குறிப்பிடும் எலிசபெத் வாரன், "அந்தக் குறைந்த ஊதியத்தைக் கொண்டு வீட்டுக் கடனை அடைத்து எங்கள் நான்கு பேரையும் அம்மாவால் முன்னுக்குக் கொண்டுவர முடிந்தது. அப்படிப்பட்ட அமெரிக்காதான் இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் கடன் இல்லாமல் வாழ முடியாத நிலைமைக்குக் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது" என்பார்.

எலிசபெத்தின் தாயார் அமெரிக்காவின் ஆதிக்குடிமக்கள் (Native Indian tribe) இனத்தைச் சேர்ந்தவர். ஆனால் அதை முன்னிட்டு இட ஒதுக்கீடோ வேறு சலுகைகளோ பெற முயற்சித்தது கிடையாது. இளைஞர்கள் ஆனபிறகு எலிசபெத்தின் மூன்று அண்ணன்களும் இராணுவத்திற்குப் போய்விட்டார்கள். எலிசபெத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் 19 வயதிலேயே தன் பள்ளிக் காதலர் வாரனைத்    திருமணம் செய்து கொள்வதற்காக அதைத் துறந்துவிட்டு வேலைக்குப் போனார். கூடவே அந்த வருமானத்தைக் கொண்டு இன்னொரு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். துப்புரவுத்  தொழிலாளியின் மகளாகப் பிறந்த எலிசபெத் வாரன் முதலில் ஆசிரியராகவும் பிறகு பேராசிரியராகவும் ஆனார். பிறகு அரசியலில் ஈடுபட்டுத் தன்னுடைய மாநிலமான மாசாசூசெட்ஸ் - இல் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எலிசபெத்  படித்தது சட்டம். திவால் சட்டத்தில் அவர் சிறப்பான திறமை கொண்டவர். ஹார்வர்டு சட்டப் பள்ளியில் பேராசிரியராக இருந்தார். நுகர்வோர் பாதுகாப்புக்காக   US Consumer Financial Protection Bureau என்ற அமைப்பு நிறுவப்பட அவர் காரணமாக இருந்தார். அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உதவியாளராகவும், அமெரிக்க நிதி அமைச்சருக்குச் சிறப்பு ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ:

இந்தியாவைப் பற்றியோ இந்தியப் பண்பாட்டைப் பற்றியோ ஏதேனும் தெரிந்து கொண்டு இருக்கிறீர்களா?

எனது மருமகனும் என் மூன்று பேரக்குழந்தைகளுக்கும் தந்தையுமான திரு. தியாகி,    இளைஞனாக இருந்தபோது இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவர்தான். அவருடைய கதையும், அவரைப்போலவே இலட்சக்கணக்கான இந்தியர்கள் பல தலைமுறைகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்களே அவர்களுடைய  கதையும்  ஒன்றுதான். அமெரிக்காவின் சரித்திரத்தில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

தற்போதைய இந்திய அமெரிக்க உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவும் அமெரிக்காவும் மிக வலிமையானதும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதுமான  உறவைக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரம் அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் இன்னும் அதிக அளவு உறவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. அதன்மூலம் தெற்கு ஆசியாவில் சர்வதேசப் பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்த முடியும் என்று நம்புகிறேன்.


எனது மாசாசூசெட்ஸ் மாநிலம் மிக வலுவான, ஆரோக்கியமான இந்திய சமுதாயமும் தெற்காசிய சமுதாயமும் நிரம்பியுள்ள மாநிலமாகும். இவர்களால் இந்த மாநிலம் பல இலாபங்களை  அடைந்துள்ளது. அவர்கள் உழைப்பிற்கு ஏற்ப மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அந்த வெற்றியை அவர்களும் நாடும் நுகரவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.

(இங்கு உள்ள பாஸ்டன் நகரத்தில் தான் புகழ்பெற்ற தொழில் பல்கலைக்கழகமான MIT உள்ளது. அண்மையில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளது. மிகப் பெரிய தொழிலதிபர்கள் உருவாவதற்குக் காரணமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் இங்குதான் உள்ளது. அமெரிக்காவின் மருந்துக் கம்பெனிகளின் தலைமையகம் பாஸ்டன் தான். பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெறக் காரணமாக இருந்த "பாஸ்டன் டீ பார்ட்டி" இங்குள்ள துறைமுகத்தில் தான் நடைபெற்றது. மின்னஞ்சலை முதன் முதலில் கண்டுபிடித்த தமிழரான டாக்டர் சிவா அய்யாதுரை இங்கு தான் வாழ்கிறார். ஆனால் அரசியலில் அவர் எலிசபெத் வாரனுக்கு  எதிர்க்கருத்தைக் கொண்டவர். அவரை அடிக்கடி சீண்டிப் பார்ப்பவரும் கூட.)

வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவது அதிகமாகி வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அமெரிக்காவின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், காலம் காலமாகவே வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் அமெரிக்கா முன்னேறி உள்ளது. புதுமைகளையும் படைப்பாற்றல்களையும் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அவர்களைப் பொறுத்தவரை சட்டபூர்வமான குடியேற்றங்களை உற்சாகப்படுத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

உங்கள் பெற்றோர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டது ஏதேனும் உண்டா?

அவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் அவர்களை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களிடம் பணம் இருந்ததில்லை. உழைப்பு இருந்தது.  உழைப்பின் மூலமே தம் நான்கு குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார்கள். உழைப்பவர்களுக்கு அமெரிக்கா நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்கும்  என்று நம்பினார்கள்.

நீங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்யப்போகும் முக்கியமான சில காரியங்களைக் கூறுவீர்களா?

தாராளமாக!

வாஷிங்டனில் நடைபெறும் ஊழல்களை நிறுத்துவேன்.

இன்று வாஷிங்டன் அதாவது மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்கும், அதிகாரவர்க்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கும் மட்டுமே சேவை செய்து வருகிறது. இந்தப் பணக்காரர்களும் வர்த்தக நிறுவனங்களும் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் செலவு செய்வதன் மூலம் பொதுமக்களின் நலனை விடவும் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும்படி ஏற்பாடு செய்துவருகிறார்கள். இதைத்தான் நான் ஊழல் என்கிறேன்.

இந்த ஊழலை ஒழிப்பதற்கு என்னிடம் தீவிரமான திட்டம் உள்ளது. முதலாவதாக "லாபி" (Lobby) களை ஒழிப்பேன். ஒவ்வொரு ‘லாபி’யும் தன் நோக்கத்தையும் யாருக்காக வேலை செய்கிறேன் என்பதையும் அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்த ‘லாபி’களைப் பயன்படுத்திக்கொள்வதைச் சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும். அரசாங்கப் பதவியில் இருந்தவர்கள், பிறகு ‘லாபி’களுக்கு வேலைக்குச் செல்வதோ, அல்லது ‘லாபி’களில் இருந்தவர்கள் பிற்பாடு அரசு அரசு பதவிகளுக்கு வருவதோ முற்றிலும்  தடுக்கப்பட வேண்டும்.

இப்போது வாஷிங்டனுக்கும் நாட்டின் பங்குச் சந்தைக்கும் இடையே ஒரு சுழல் கதவு உள்ளது. இதனால் பதவியில் இருக்கும்போது செனட்டர்களும், காங்கிரஸின் பிரதிநிதிகளும் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே பங்குச்சந்தை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பதவி விலகிய பிறகு பங்குச்சந்தைக்கு "லாபி" யர்களாகி, ஆயுள்முழுதுவதும் பணத்தில் கொழிக்கிறார்கள். இது நிரந்தரமாகத் தடுக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பின்பற்றவேண்டிய நடவடிக்கை விதிகள் மற்றும் தார்மீக நெறிகள் பலப்படுத்தப்படும். அதனால் நீதி மன்றத்தில் உள்ள எல்லா நீதிபதிகளுக்கும் ஒவ்வொருவருக்கும் நியாயமான அளவில் வழக்குகள் கிடைக்கும்.

மத்திய அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக வேலை தேடும் எவரும் தங்களுடைய வருமான வரிப் படிவங்களை நேரலையில் மக்கள் முன்பு பார்வைக்காக தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் வகுப்போம்.

இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் பணத்தையும் அதிகாரத்தையும் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அந்த பொதுமக்களுக்குப் போய்ச் சேருமாறு செய்வோம்.

நடுத்தர வர்க்கத்தைத் தலைநிமிரச் செய்வோம்.

பல்லாண்டுகளாக மாறாமல் இருக்கும் சம்பள விகிதங்களும், ஆனால் உயர்ந்துகொண்டே இருக்கும் குடும்பச் செலவுகளும் மில்லியன் கணக்கான நடுத்தர மக்களை மூச்சுவிடாமல் செய்திருக்கின்றன. மேனி நிறத்தில் குறைந்தவர்கள் பல காலமாகவே பண பலம் பெற முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே பொருளாதாரக் கட்டமைப்பில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்து, அவற்றின் பயனாகப் பொருளாதார அதிகாரத்தை அமெரிக்க மக்களிடத்தில் திரும்பவும் ஒப்படைப்போம்.

அமெரிக்காவின் மிகப் பெரிய கம்பெனிகளில் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 40 சதம் பேரையாவது அந்த கம்பெனியின் தொழிலாளர்களே வாக்களித்துத்  தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் ஊதியம் தொடர்பான வேலை நிலைமைகளில் ஊழியர்களுக்கு நன்மை உண்டாகும்.பெரிய நிறுவனங்களின் ஏகபோக வர்த்தக நிலைமையை மாற்றுவதற்குச் சட்டம் கொண்டுவரப்படும்.

இன்று அமெரிக்காவின் மொத்தப் பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கும் 75 ஆயிரம் பேர் (அல்லது கம்பெனிகள்) மீது "அல்ட்ரா மில்லினர் டேக்ஸ்" எனப்படும் உயர் பணக்காரர்களுக்கான வரி விதிக்கப்படும். இதிலிருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் நலவாழ்வு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து ஆகியவை செய்து தரப்படும்.  ஏழை அமெரிக்கர்களுக்கு வீட்டு வசதி செய்வதற்கு அரசு மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும். அதனால் நாட்டில் வீட்டு வாடகைகள் 10 சதம் அளவுக்குக் குறையும். அத்துடன் 15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது எங்கேயாவது தொடர்ந்து யுத்தத்தை உண்டு பண்ணுவதன் மூலம் பணக்காரர்களுக்கும், உயர் அதிகாரத்தோடு தொடர்பு உள்ளவர்களுக்கும் இலாபத்தை ஏற்படுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். உள்நாட்டில் உள்ள உழைப்பாளர்களின் வலிமைதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் வலிமையாக மாறமுடியும். எனவே பணக்காரர்களுக்கு மட்டுமல்லாது எல்லா அமெரிக்கர்களுக்கும் நன்மையைச் செய்யும் கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம்.

****
எலிசபெத் வாரன்  மிகவும் துணிச்சலுடன் இன்னொன்றும் அறிவித்திருக்கிறார். அதாவது பெரிய கம்பெனிகளிடமிருந்து தேர்தல்  நிதியைப் பெற்றுத்  தருவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள  PAC எனப்படும் அமைப்புகளிடமிருந்து தேர்தல் நிதி பெற மாட்டோம் என்றும், ஏற்கனவே லாபி களாக இயங்குபவர்கள் இடமிருந்து நிதியுதவி பெற மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறார். ஆகவே பொதுமக்களிடம் இருந்து சிறு தொகையிலான தேர்தல் நிதியைத் தான் இவரால் பெற முடியும்.
*****

எலிசபெத் வாரன் ஓர் எழுத்தாளரும் கூட. பொருளாதார வல்லுநரான தன் மகள் அமீலியா தியாகியுடன் இணைந்து  The Two Income Trap என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய்ப்  பொருளீட்டினாலும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் பொருளாதார நிலை அம்போ என்று ஆகிவிடும்  நிலை அமெரிக்காவில் இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இருவரும் வேலைக்குப் போகும் நிலையில், பிறந்த குழந்தைக்கு Baby sitting முதல் பள்ளிக்கூடம், மருத்துவச் செலவுகள், விளையாட்டுக்கள், சுற்றுப்பயணங்கள் என்று  செலவுகள் பெருகிக் கொண்டே போவதை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. முற்காலத்தில் பெண்கள் வேலைக்குப் போகாமல் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே பொருளாதார நிலை இப்போது இருப்பதை விடத் திருப்திகரமாக இருந்தது என்பது இவர்கள் கருத்து. அதற்காக இன்றுள்ள நிலையில் வேலைக்குப் போகாமல் பெண்கள் இருக்க வேண்டும் என்று இவர்கள் சிபாரிசு செய்யவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
தாயும் மகளும் -படம் நன்றி: இணையத்திலிருந்து

All Your Worth என்ற இன்னொரு புத்தகத்தையும் இருவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். அமெரிக்கர்கள் எவ்வாறு படிப்படியாகத் தங்களுடைய சொந்த நிதி நிலைமையை மேம்படுத்திக் கொண்டு பணக்காரர்களாக மாற முடியும் என்பதற்கான வழிகளைக் கூறும் நூல் இது.

சிக்கனமாக இருப்பதால் செல்வந்தனாக முடியாது;

ரூபாய்களின் மீது கவனம் வையுங்கள், பைசாக்களின் மீதல்ல;

கடன் வாங்குவது, நாளைய வருமானத்தை இன்றே திருடிக் கொள்வதற்குச்  சமம். எனவே கடனைக் குறையுங்கள்;

சொந்த வீடு முக்கியமானதல்ல, வாடகை கொடுக்க வசதி இருந்தால் வாடகை வீட்டிலேயே இருங்கள்.

அமெரிக்காவின் வங்கித் துறையும் கடன் வழங்கும் நிறுவனங்களும்  தான் உங்களை ஏழையாக்கி வைத்திருக்கின்றன. அதற்காக அவர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இவையே மேற்படி நூலில் உள்ள முக்கியக் கருத்துக்கள்.

இவரைப் பற்றிய மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு இவருடைய தேர்தல் இணையதளத்தைப் பார்க்கலாம்: https://ElizabethWarren.com

இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள், மேற்படி தளத்தில் இருந்தும், எலிசபெத் ஆற்றிய பல உரைகளில் இருந்தும், நேற்று (ஜூலை 30) CNN தொலைக்காட்சிக்காக ஜனநாயக கட்சி யின் பத்து முக்கிய வேட்பாளர்களுடன் நடத்திய கேள்வி பதில் பகுதியிலிருந்தும் தொகுக்கப்பட்டவை ஆகும்.

பொறுப்புத் துறப்பு: நான் எலிசபெத் வாரனுக்கு உறவினர் அல்லன். அவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன் அல்லன். அவருடைய கட்சியில் உறுப்பினர் அல்லன். மக்கள் நலனுக்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இதன் நோக்கம் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதோ அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதோ அல்ல.

அதே சமயம் சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்  சென்றிருந்த பொழுது MoMA எனப்படும் நவீன அமெரிக்க மியூசியத்தில் எங்கள் குடும்பத்தினர் காட்சிப் பொருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு தற்செயலாக எலிசபெத் வாரன் நடந்து கொண்டிருந்ததைப்  பார்த்தோம். நாங்கள் இந்தியர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, முகமலர்ந்து வரவேற்று, விசாரித்து, என் 5 வயது பேரனுடன் இனிமையாகப் பேசினார் என்பதை இங்கு தெரிவிக்க வேண்டுமா என்று தெரியவில்லை.

© இராய செல்லப்பா


செவ்வாய், ஜூலை 30, 2019

(1) அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா இந்தி நடிகரின் மாமியார்?


(1) அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா இந்தி நடிகரின் மாமியார்? 

2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது.

அமெரிக்காவில் இருப்பது இரண்டு முக்கிய கட்சிகள் தான் குடியரசுக்  (ரிபப்ளிகன்) கட்சியும்,  ஜனநாயகக் (டெமாக்ரடிக்) கட்சியும் தான்.

இரண்டு முறை ஜனநாயகக் கட்சியின் பாரக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த பிறகு, அவருக்கு  நேர்மாறான குணாதிசயம் கொண்டவராகக் கருதப்பட்ட வர்த்தகர்  டொனால்டு டிரம்ப் 2016இல் ஜனாதிபதி ஆனார். அவரது நான்காண்டுப் பதவிக்காலம் 2020 நவம்பர் உடன் முடிகிறது.

அமெரிக்காவில் தேர்தல் முறை விசித்திரமானது. கட்சிகளின் நடைமுறை அதைவிட விசித்திரமானது.

இங்கு எந்தக் கட்சியின் தலைவரும் தன் மகனையோ மகளையோ மருமகனையோ மருமகளையோ தனக்கு வாரிசாகப் பதவிக்குக் கொண்டு வந்துவிட முடியாது. அது மட்டுமல்ல பதவிக்குரிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூடக் கட்சித் தலைவருக்குக் கிடையாது.

அதாவது ஜனாதிபதி பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிட முன் வரலாம். இரண்டு திறமைகள் தான் இருக்க வேண்டும். ஒன்று தன்னுடைய கட்சியில், தான் இருக்கும் ஊரின் கிளையிலிருந்து முதலில் ஜனாதிபதிக்கான வேட்பாளராக விதிக்கப்பட்ட குறைந்தபட்ச வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி எத்தனை பேர் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். பிறகு அடுத்த கட்டமாக (உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால்) மாவட்ட அளவில் இவர்களில் யாராவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிறகு தங்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு 50 மாநிலங்களில் இருந்தும் (உதாரணத்திற்கு) குறைந்தபட்சம் 50 வேட்பாளர்கள் வரக்கூடும். அதன்பிறகு அவர்களிலிருந்து யாராவது சில பேர் தேசீய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (அதற்கென்று ஒவ்வொரு கட்சியிலும் பெரிய வழிமுறை உண்டு.)

ஜனாதிபதி பதவிக்கு வரும் வேட்பாளர் "ஜோடியாக" போட்டியிட வேண்டும். அதாவது, தனக்கு யார் உதவி ஜனாதிபதியாக வரவேண்டும் என்று ஒருவரை அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டு இறுதி முடிவு கிடைக்கும் வரை ஜோடி பிரியாமல் நிற்க வேண்டும்.

கடைசியில் நாடு முழுவதும் சேர்த்து இறுதியான உள்கட்சித் தேர்தலில் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் முக்கியமானவையாக வந்து நிற்கும்.
அப்போதுதான் கட்சித் தலைமை தலையிடும். அந்த இரண்டு, மூன்று ஜோடிகளில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள - முக்கியமாகப் பணபலம் உள்ள - ஒரு ஜோடி எதுவென்பதைக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களும்  தேசீய மாநாட்டின் உறுப்பினர்களும் முடிவு செய்வார்கள்.  சில சமயம் இரண்டு ஜோடிகளில்  ஒரு ஜோடியில் இருந்து  ஒருவரை  ஜனாதிபதிக்கும், இன்னொரு ஜோடியில் இருந்து ஒருவரை துணை ஜனாதிபதிக்கும் நிற்குமாறு கட்சி அவர்களை சமாதானப்படுத்த க்கூடும். 2008 தேர்தலின்போது, ஒபாமா ஜோடிக்கும் ஹில்லரி கிளிண்ட்டன் ஜோடிக்கும் கடும் போட்டி வந்தபோது, கட்சித் தலைமை தலையிட்டு ஒபாமாவை ஜனாதிபதியாகவும், ஹில்லரியை துணை ஜனாதிபதியாகவும் நிற்பதற்கு முயற்சி  செய்தார்கள். ஆனால் ஹில்லரி ஒப்புக்கொள்ளவில்லை. பிற்பாடு ஒபாமா வெற்றி பெற்று ஜனாதிபதி ஆன பிறகு, அவரை சமாதானப்படுத்தும் விதமாக ஒபாமாவின் கீழ்  உள்துறை அமைச்சராக சக்தி வாய்ந்த பதவி வழங்கப்பட்டது. 

ஆனால் ஒன்று, வேட்பாளர்களுக்குக் கட்சியில் இருந்து பணம் கிடைக்காது. அதேபோல் வேட்பாளராக நிற்பதற்கும்  கட்சித் தலைவருக்கு வேட்பாளர் கப்பம்  கட்ட வேண்டியதில்லை. எந்த வேட்பாளரையும் போட்டியில் இருந்து விலகுமாறு செய்வதற்கு ஆட்டோ அனுப்புவதோ, அரிவாள் அனுப்புவதோ இங்கு வழக்கத்தில் இல்லை. தனி நபருக்கு சமுதாயத்தில் உள்ள அந்தஸ்து, மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, தேர்தல் நிதியைத் தானே திரட்டிக் கொள்வதற்கான திறமை, இதற்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினராக அல்லது மாநில கவர்னராக இருந்த அனுபவம், எந்தப் பிரச்சினையிலும் சிக்காதவர் ஆக இருத்தல், நாட்டை உலுக்கும் முக்கியமான கேள்விகளுக்குத்  தனக்கே உரிய விதத்தில் தீர்வுகளைத் தெரிவித்து இருத்தல் - என்பது போன்ற தகுதிகள் தான் இறுதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும்.

அமெரிக்காவில் பிறந்தவர் மட்டும்தான் அமெரிக்க ஜனாதிபதியாகப் போட்டியிட முடியும். பெரும்பாலும் கிறிஸ்தவராக இருந்தால்தான் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உண்டு. வெள்ளையர்கள், வெள்ளையர் அல்லாதவர்கள் என்ற இன வேற்றுமை முக்கியப்  பங்கு வகிக்கும். பொதுவாக ரிபப்ளிகன் கட்சி வெள்ளையர்களின் கட்சி என்றும் டெமாக்ரடிக் கட்சி மற்ற நிறத்தவர்களால் ஆதரிக்கப்படும் கட்சி என்றும்  ஒரு கருத்து நிலவுகிறது. வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து தங்கிவிடுபவர்களைப் பற்றி ரிபப்ளிகன் கட்சி, நீண்ட நாட்களாகவே மக்களிடையே ஒரு கருத்தாக்கத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்கர்களுக்கான வாய்ப்புகளை வெளிநாட்டினர் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள் என்று. ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் "அமெரிக்கர்களுக்கே வேலை" என்ற முழக்கம் முன்கூட்டியே கிளம்பிவிடும்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் இன்னொரு முக்கிய குணாதிசயமும் உண்டு. ரிபப்ளிகன் கட்சி பணக்காரர்களின் கட்சி என்றும், டெமாக்ரடிக் கட்சி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கட்சி என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே இதையொட்டியும் இரண்டு கட்சிகளும் தங்களுடைய தேர்தல் முழக்கங்களைத் தயாரித்துக் கொள்கின்றன.

இன்னொன்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமான உண்மையாக இருக்கிறது. இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதியானதில்லை. குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை இதுவரையில் பெண் வேட்பாளர்கள் யாருமே ஜனாதிபதிக்குப் போட்டியிட முன்வந்ததில்லை. ஜனநாயகக் கட்சியில் தான்  ஹில்லரி கிளிண்ட்டன் முன்வந்தார். 2016 இல் டிரம்ப்பை  எதிர்த்து நின்று தோற்றவர் அவர் தான்.

இன்னொரு முக்கியமான விஷயம், “மக்கள் வாக்கு”களால் (Popular Vote)  மட்டுமே அமெரிக்காவில் யாரும் ஜனாதிபதி ஆகிவிட முடியாது. உதாரணமாக 2016 தேர்தலில் டிரம்ப்பை விட 28 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றும் தோற்றுப் போனார் ஹில்லரி. காரணம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வேறொரு கணக்கீட்டின் அடிப்படையில் வேட்பாளர்கள் பெறவேண்டிய "தேர்ந்தெடுக்கும் வாக்கு"  (Electoral Vote) அவருக்கு 227 தான் கிடைத்தது. டிரம்ப்புக்கு 304 கிடைத்துவிட்டதால் டிரம்ப்  ஜனாதிபதியானார்.

2008 இல் ஒபாமா முதல் முறை ஜனாதிபதியான போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி யைச் சேர்ந்த ஜான் மெக்கெயினை விட 95 லட்சம் “மக்கள் வாக்கு”களைக் கூடுதலாகப் பெற்றிருந்தார். அத்துடன்  “தேர்ந்தெடுக்கும் வாக்கு”கள் அவருக்கு 365 கிடைத்தன. மெக்கெயினுக்கு 173 தான் கிடைத்ததால் ஒபாமா ஜனாதிபதியாக முடிந்தது.

2012இல் ஒபாமா இரண்டாவது முறை ஜனாதிபதி ஆனபோது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியை விட 50 லட்சம் “மக்கள் வாக்கு”களைக் கூடுதலாகப் பெற்றிருந்தார். அத்துடன் “தேர்ந்தெடுக்கும் வாக்கு”கள் 332 கிடைத்தன. எதிர் வேட்பாளருக்கோ 206 தான் கிடைத்தது. எனவே ஒபாமா மீண்டும் ஜனாதிபதியானார்.

துரதிஷ்டவசமாக, “மக்கள் வாக்கு”களை அதிகமாகப் பெற்றும், “தேர்ந்தெடுக்கும் வாக்கு”களைக் குறைவாகப் பெற்றதால் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாமல் போனவர்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம்  இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

1876, 1888, 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இது போன்ற நிலைமை ஏற்பட்டது.

2000இல் குடியரசுக்  கட்சியின்  ஜார்ஜ் புஷ்-ஐ விட, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அல் கோர் 5,43,895 மக்கள் வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். ஆனால் இவரை விடத்  “தேர்ந்தெடுக்கும் வாக்கு”கள் ஐந்தே ஐந்து கூடுதலாக புஷ் -க்குக் கிடைத்துவிட்டதால் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

நாடு முழுமைக்குமான “தேர்ந்தெடுக்கும் வாக்கு”களின் எண்ணிக்கை 538 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (மக்கள் தொகை கணக்கீட்டின் படி இது மாறுதலுக்கு உட்படும்.)

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட்டர்கள் உண்டு. (நம் ராஜ்யசபா உறுப்பினர்கள் மாதிரி). ஆகவே மொத்தம் 50 x 2 = 100 செனட்டர்கள். இவர்களுக்கு தலா ஒரு தேர்ந்தெடுக்கும் வாக்கு உண்டு. தவிர, எல்லா மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் உண்டு. (நமது லோக்சபா எம்.பி. க்கள்  மாதிரி.) இவர்களுக்கும் தலா ஒரு தேர்ந்தெடுக்கும் வாக்கு உண்டு. ஆக 535 ஆயிற்று அல்லவா? இனி ஜனாதிபதி அமரும்  இடமான வாஷிங்டன் டி.சி. எனப்படும் கொலம்பியா மாவட்டம் சிறப்பான அந்தஸ்துடைய ஒன்றாகும். அதற்கு மட்டும் தனியாக 3 தேர்ந்தெடுக்கும் வாக்குகள் உண்டு. ஆக 535 + 3 = 538. இதில் 50 சதத்துக்கும்  அதிகமாக, அதாவது  குறைந்த பட்சம் 270 வாக்குகளையாவது யார் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். நம் நாட்டில் ஒரு கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு, அந்தக் கட்சியில் உள்ள எல்லா உறுப்பினர்களும் வாக்களித்தே  தீரவேண்டும் என்பது சட்டம். இதை சட்டபூர்வமாக அமல்படுத்துவதற்கு "கொறடா" என்று ஒருவர் எல்லாக் கட்சியிலும் உண்டு. எனவே எதிர்த்து வாக்களிப்பவர்களை அவர்களின் பதவியில் இருந்து நீக்க கொறடாவால் சிபாரிசு செய்ய முடியும். கட்சியில் இருந்தும் அவர்கள் நீக்கப்படுவார்கள். இதெல்லாம் இந்தியாவில் உள்ள அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் இது நடக்காது. கட்சி கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது செனட்டர்களை அக்கட்சி வற்புறுத்துவதற்கு அதிகாரம் இல்லை. எனவே எந்தக் கட்சி உறுப்பினரும் எந்தக் கட்சியின் சார்பில் நிற்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கும் வாக்களிக்க முடியும். (ஆனால் இதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. அதை விவரித்தால் கட்டுரையின் நீளம் அதிகம் ஆகும்.)

ஆக, ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதியாகப் போட்டியிடுபவர்களுக்கு  இயற்கையாகவே இரண்டு விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டு விடுகிறது. ஒன்று, தேர்தல் நிதி கிடைப்பது கடினம். அதிக வருமான வரி செலுத்தும் தனிநபர் அல்லது நிறுவனங்களில் சுமார் 75 ஆயிரம் பேரின் வசம் நாட்டின் பொருளாதாரம் சிக்கியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாகவே குடியரசுக் கட்சிக்கு நிதி உதவி செய்யபவர்கள். எனவே  ஜனநாயகக் கட்சி,  நடுத்தர மற்றும் ஏழை மக்களிடமிருந்து தான் நிதி உதவி பெற்றாக  வேண்டும். இரண்டாவது, ஜனநாயகக் கட்சியானது வெளிநாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் பணியாற்றும் (முக்கியமாக  ஸ்பானிஷ்) மக்களுக்கு ஆதரவாக இருப்பதால் உள்நாட்டில் இருக்கும் பழமைவாதிகளான வெள்ளையர்கள் அந்தக் கட்சியை ஆதரிக்க விரும்புவதில்லை என்றுகூறப்படுகிறது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வந்து பல ஆண்டுகளாகக்  குடியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி போராடுவதையும் இவர்கள் விரும்புவதில்லை.

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராகத் தானே மீண்டும் நிற்கப் போவதாக குடியரசுக்  கட்சியிலிருந்து இப்போதைய ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருக்கிறார். இவருக்கு சவால் விடக்கூடிய வேறு செல்வாக்குள்ள வேட்பாளர்கள் யாரும் அவருடைய கட்சியில் இருந்து இன்னும் முன்வரவில்லை.

ஆனால் ஜனநாயகக் கட்சியில் இருந்து செல்வாக்குள்ள பலர் போட்டியிட முன்வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடன் ஒருவர். இன்னொருவர் சென்ற முறை உள்கட்சித் தேர்தலில்  ஹில்லரிக்குக் கடும் போட்டியை உண்டாக்கிய பெர்னி சாண்டர்ஸ். மற்றவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பெண்கள்.

அவர்களில் ஒருவர், ஒரு இந்தி நடிகரின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி அந்த நடிகரைப் பற்றி முதலில் பார்த்து விடலாமா?

அவர் இந்தியாவில் பிறந்தவர். திரைப்படத்திலும் பின்னர் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்த அவருக்குப் பெரும்புகழ் தந்தவை அவருடைய தயாரிப்பும் இயக்கமும் தான்.  Sea Quest 2032 (1993), Dead Connection (1994), Hari Om (2004), Journey Across India (2007), Najva Ashorai (2008), Samsara (2011)  ஆகியவை  இவரை  அமெரிக்க மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தின. Bare Foot to Herat என்ற ஈரானியப்  படத்தின் தயாரிப்பிலும் இவருக்குப் பங்கு இருந்ததாகத் தெரிகிறது.

ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இவருடைய பொது வாழ்வில் இவர் மாமியார் எந்தப் பங்கும் வகிக்கவில்லை. அதேபோல்  மாமியாரின்  அரசியல் விஷயங்களிலும் இவர் பங்கெடுத்துக் கொண்டதில்லை. தான் உண்டு, தன்  மனைவி அமீலியா உண்டு, தன் மூன்று குழந்தைகள் உண்டு என்று இருப்பவர்.  

கட்டுரை நீண்டு விட்டதால், சுஷீல் தியாகியுடன் இப்போது நிறுத்துகிறேன். அவரது மாமியாரைப் பற்றி அடுத்த பதிவில் பார்த்துவிடலாம். எனென்றால் எலிசபெத் வாரன் அம்மையாரைப் பற்றி நிறைய எழுதவேண்டி இருக்கிறது.

© இராய  செல்லப்பா