புதன், ஜூன் 29, 2022

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 3

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 3  

(நான்கு தூண்கள் நகரம்-14 )

அமெரிக்காவில் 74  ஆவது நாள் (24 -6-2022)






மறுநாள் காலை. கார் நளினியின் பயிற்சி மையத்தை அடைந்தது. நான்  இறங்குவதற்குள் ஓடோடி வந்த நளினி, “இறங்கவேண்டாம் சார்! நானும் வருகிறேன். இன்னோர் இடத்திற்குப் போகவேண்டும்” என்று முன்சீட்டில் அமர்ந்தாள். டிரைவரிடம் “ஸ்கந்தகிரி கோவிலுக்குப் போங்கள்” என்று இந்தியில் கூறினாள்.


நான் அதிர்ச்சியுடன், “என்ன இது, நகரின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் போகிறீர்கள்?  பத்து மணிக்குள் பயிற்சி நிலையத்திற்குத் திரும்ப முடியாதே” என்றேன்.   


அவள் சிரித்தாள். “நீங்கள் பேப்பர் பார்க்கவில்லையா? இன்று ஹைதராபாதில் விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்- முன்னாள் முதல்வர் மரணம் அடைந்துவிட்டதால்!”


இது நேற்றே  இவளுக்கு எப்படித் தெரியும்? அவளுடைய வகுப்புத்தோழி ஒருத்தி ஐஏஎஸ் அதிகாரியாம். இந்த நபர் நேற்று காலையே இறந்துவிட்டாராம்.  விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் அறிவித்தால்தான் இவருடைய இறப்பை அக்கூடும்பத்தினர் அறிவிப்பார்கள் என்றாளாம். “எப்படி என்னுடைய தீர்க்கதரிசனம்?” என்று குதூகலமாகக் கேட்டாள்.


“நீங்கள் வித்தியாசமான பெண்ணாக இருக்கிறீர்கள். இருபது வருடம் முன்பே …” என்று சொன்னப்போனவன் சட்டென்று நிறுத்தினேன்.


அவள் கண்கள் வியப்பினாலும் திகைப்பினாலும் விரிந்தன. “என்ன, இருபது வருடம் முன்பே என்னைத் தெரியுமா உங்களுக்கு?”    


“ஹனுமாரின் அருள் இருந்தால் ஏன் தெரியாது?” என்றேன் சிரித்துக்கொண்டே. பிறகு “பெரிதாக ஒன்றுமில்லை. பள்ளி மாணவியாக உங்களைப் போல் ஒருத்தியைப் பார்த்ததுண்டு ஹனுமார் கோவிலில். குரலை வைத்து அடையாளம் கண்டுபிடித்தேன். என் காதுக்குத்தான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும்.”


அவள் ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றிக் கொண்டாள். "உங்களை அன்று பிர்லா மந்திரில் பார்த்தபோதே என் மனதில் ஒன்று தோன்றியது. பிறகு சொல்கிறேன்" என்றாள். டிரைவர் முன்பு பேச விரும்பவில்லை போலும்.


ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் ஆலயம், ஜயநகர் 9 வது பிளாக்  

ஸ்கந்தகிரி கோவில் இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. காலை நேரத்திலேயே கிட்டத்தட்ட ஐம்பது பேர் கூடி இருந்தார்கள். வடமொழியும் திருப்புகழும் கலந்த அர்ச்சனை  காதுக்கும் மனதுக்கும் நிறைவை அளித்தது.


நளினியைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்தேன். யார் இவள்? எதற்காக என்னிடம் பேச விரும்புகிறாள்? என்ன பேசப் போகிறாள்?


மலையிலிருந்து இறங்கினோம். அடுத்து எங்கே கூட்டிச் செல்கிறாள் என்று தெரியாத நிலையில் கார்  நிறுத்தத்தைப் பார்த்தேன். அங்கே கார் இல்லை!


"காரை அனுப்பி விட்டேன்" என்று சிரித்தாள் நளினி. "என் குழந்தையைப் பார்க்க வேண்டாம் என்கிறீர்களா?"


குழம்பினேன். என் குழப்பத்தைத் தீர்த்தவளாக,"என் சித்தி வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. பயிற்சிக்கு வரும்போதே என் அம்மாவும் குழந்தையும் என்னோடு வந்துவிட்டார்கள்" என்றாள் நளினி.


ஐந்தே நிமிடத்தில் அவள் சித்தி வீட்டை அடைந்தோம். நளினியைக் கண்டதும்  குழந்தை ஆசையாக ஓடிவந்து கட்டிக் கொண்டது. 


"வாங்க வாங்க" என்று வரவேற்றார் நளினியின் தாயார். "நீங்கள் வருவீர்கள் என்று நேற்று இரவுதான் சொன்னாள். ப்ரேக்பாஸ்ட் ரெடி.  பொங்கலும் கத்திரிக்காய் கொத்சும் கீரை வடையும். கை கழுவிக்கொண்டு வாருங்கள், சாப்பிடலாம்."


முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்திருக்கிறாள் நளினி. ஏதாவது சிக்கலில் என்னை மாட்டிவிடுவாளோ என்ற அச்சத்துடனேயே பொங்கலில் இருந்த இஞ்சியையும்  முந்திரியையும் கடித்தேன். முறுகலான கீரை வடை பொங்கலின் சுவையை மேலும் கூட்டியது.


"கொத்சு பிரமாதம் சித்தி" என்றாள் நளினி. "பொங்கலில் காரம் குறைவாக இருக்கிறதே,  குழந்தைக்காகக் குறைத்துப் போட்டாயா?"


ஆமென்று தலையசைத்த சித்தி,  "நான் மாடிக்குப் போய்,  குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்" என்று கிளம்பினாள்.


சாப்பிட்டு முடித்தபின் வரவேற்பறையில் அமர்ந்தோம். "நளினி, சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸாக வைக்கிறீர்களே! என்னை எதற்காக அழைத்தீர்கள்?  தயவு செய்து சொல்லிவிடுங்கள்" என்றேன் திடமான குரலில்.


கலகலவென்று சிரித்தாள் நளினி. "பயப்படாதீர்கள். உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன். இப்போது மட்டுமல்ல, மூன்று மாதம் கழித்த பிறகும்!"


"அதென்ன மூன்று மாதம் கணக்கு?"


"சரி, விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு உங்களிடம் ஓர் ஆலோசனை வேண்டும். அதற்காகத்தான் அழைத்தேன்" என்று நளினி, ஒரு காகித உறையை என்முன் வைத்தாள். அது என்னுடைய வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அவளுக்கு எழுதப்பட்ட கடிதம்!


வியப்புடன் அவளைப் பார்த்தேன்.


"ஆமாம் சார்! உங்கள் வங்கியிலிருந்து எனக்கு ஒரு 'ஆஃபர்' வந்திருக்கிறது. மூன்று மாதம் டைம் கொடுத்திருக்கிறார்கள். அது விஷயமாகத்தான் பேச வேண்டும். வேறு யாரிடமாவது பேசினால் செய்தி உங்கள் ஹெச். ஆருக்குப் போய், அதனால் காரியம் கெட்டுவிடலாம் என்று பயமாக இருந்தது. உங்கள் ஜிஎம் தான் உங்களிடம் மட்டும் பேசச் சொன்னார்" என்று ஜி.எம். பெயரைச் சொன்னாள். 


வேறு வங்கிகளில் இருந்து உயர்பதவிகளுக்கு ஆள் எடுக்கும் வழக்கம் அரசுத்துறை வங்கிகளில் அப்போது இல்லை. எங்கள் வங்கி  வேகமாக வளர்ந்து கொண்டிருந்ததனால், டிரஷரி, இன்வெஸ்ட்மெண்ட், ஷேர் புரோக்கிங், கிரெடிட் கார்டு ஆகிய துறைகளுக்கு மட்டும் அத்துறைகளில் முதன்மை வகிக்கும் சில வெளிநாட்டு வங்கிகளில் இருந்து எக்ஸிக்யூட்டிவ் பதவிகளுக்கு ஆள் எடுக்கலாம் என்று அனுமதி கிடைத்திருந்தது.


நளினியின் வங்கிக்கும் எங்கள் வங்கிக்கும் பத்தாண்டுகளுக்கு மேல் நல்ல தொடர்பு இருந்தது. அந்த வங்கியில் இருக்கும் நம்பிக்கையூட்டும் இளம் அதிகாரிகள் பற்றிய தகவல்களை என்னுடைய ஜிஎம் சேகரித்து வைத்திருந்தார். அப்படித்தான் நளினிக்கு அந்த ஆஃபர் வந்திருக்க வேண்டும்.


உறையைப்  பிரிக்காமலேயே அவளை வாழ்த்தினேன். "ஆனால் சம்பளம் குறைந்து போகும்; நீங்கள் சென்னையை விட்டு பெங்களூருக்குப் போகவேண்டி யிருக்கும். மற்றபடி எங்கள் வங்கியில் சர்வீஸ் கண்டிஷன் மிகவும் திருப்தியாகவே இருக்கும். நீங்கள் எந்தப் பதவியில் சேர்ந்தாலும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்" என்றேன் மகிழ்ச்சியுடன்.


கடிதத்தை அவளே பிரித்துக் காட்டினாள். ஜி.எம். - முக்கு அடுத்த நிலையில் வைஸ்-பிரசிடெண்ட் என்ற பதவி உருவாக்கப்பட்டு அவளுக்கு அளிக்கப்படுகிறது. புதிய துறைக்கு அவள் முழுப் பொறுப்பாளராக இருப்பாள். இப்போது போல் ஒரு லட்சம் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்களைப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவளுக்குக் கீழ்  பொறுக்கி எடுக்கப்பட்ட பதினைந்து இளம் அதிகாரிகள் இருப்பார்கள். எல்லாம் சரியாக இயங்குமானால், பத்து வருடத்திற்கு உள்ளேயே அவள் இன்னொரு வங்கிக்கு சேர்மன் ஆகவும் கூடும்.


"உங்களைச் சென்னையிலேயே சந்திக்க விரும்பினேன் ஆனால் அதற்குள் நீங்கள் ஹைதராபாத் கிளம்பி விட்டீர்கள். நல்லவேளையாக நானும் இங்கு வரும்படி ஆனது" என்றாள் நளினி சற்று தயக்கமான குரலில். 


"எல்லாம் அனுமார் செயல்" என்று நான் சொன்னதும் சிரித்தாள். அவளுடைய தாயாரும் சேர்ந்து  கொண்டார். "சின்ன வயசிலிருந்தே அவளுக்கு ஹனுமான் சாலிசா மனப்பாடம்" என்றார்.


நளினி எழுந்து போய் ஒரு ஃபைலை எடுத்து வந்தாள். எங்கள் வங்கியில் சேரும் முன்பு என்னென்ன முக்கியத் தகவல்கள் அவளுக்குத் தெரியவேண்டும் என்று இருபது கேள்விகளை எழுதியிருந்தாள். ஒவ்வொன்றாக என்னோடு விவாதித்தாள். (அவை நுட்பமான கேள்விகள் என்பதால் இங்கு வெளியிடவில்லை என்று நினைக்கவேண்டாம். சுத்தமாக மறந்து போய்விட்டது!). 


அவள் தாயாரும் சில கேள்விகளைக் கேட்டார். இந்தக் கேள்வி-பதில் செஷன் இரண்டு மணி நேரம் நீடித்து, மறுசூடாக்கப்பட்ட கீரைவடை,  ப்ரூ காபியுடன் இனிதே முடிவடைந்தது. 


"நீங்கள் சொன்னது போல் உங்களை நான் சந்திக்க முடிந்தது   அனுமார் அருளால் தான். பொதுவாகவே வெளிநாட்டு வங்கியில் இருந்து அரசுத்துறை வங்கிக்கு மாறுவதை முட்டாள்தனமான முடிவு என்றுதான் எல்லோரும் கூறுவார்கள். ஆனால் எனக்குக்  காகிதங்களோடு போராடி அலுத்துவிட்டது. நான் வாழ விரும்புகிறேன். அதனால் தான் உங்கள் ஜிஎம் என்னை போனில் அழைத்தபோது ஒப்புக் கொண்டேன்,  ஆனால் மூன்று மாதம் டைம் கேட்டேன். உடனே முடிவெடுக்க முடியாதபடி குழப்பம் ஏற்பட்டது. என் கணவரோ 'உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்' என்று சுதந்திரம் கொடுத்துவிட்டார். ஆனால் அனுபவம் உள்ள ஒருவரிடம் இருந்து சரியான அறிவுரையைக் கேட்க விரும்பினேன். நீங்கள் கிடைத்தீர்கள். ரொம்ப நன்றி" என்றாள் நளினி. 


"எனக்குச் சொல்ல வேண்டிய அறிவுரை ஏதாவது பாக்கி யிருக்கிறதா?" என்றாள்.


"இருக்கிறது. பெங்களூர் போனவுடன் ஜயநகர் 9 ஆவது பிளாக்கில் ராகிகுட்டா என்ற இடத்திற்குப் போங்கள்.  மலைமேல் அனுமார் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்" என்றேன். எல்லாரும் சிரித்தார்கள். நளினி மட்டும் முகவரியை ஃபைலில் குறித்துக் கொண்டாள்.


நளினியின் தாயார் என்னைப் பார்த்துக் கைகூப்பினார். "இவ்வளவு நேரம் இவளுடைய எல்லாக் குழப்பங்களையும் பொறுமையாகத் தீர்த்து வைத்ததற்கு ரொம்ப நன்றி. ஆனால் ஒன்று, இவள் உங்கள் வங்கியில் சேரும்வரை இந்த விஷயம் இவளுடைய வங்கியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்குத் தெரியவேண்டாம்" என்று வேண்டியவர், "உங்களைப் பார்க்கும் பொழுது அவளுடைய அப்பா ஞாபகம் தான் வருகிறது" என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.


"ஆமாம் சார்! அதைத் தான் நானும் அப்போதே சொல்ல நினைத்தேன். என் அப்பாவுக்குக் கோபமே வராது, உங்களைப் போலவே!" தாயாரின் கண்களை லேசாகத் துடைத்தாள்  நளினி.  திடீர் மாரடைப்பால் தந்தை மறைந்து பத்து வருடம் ஆகிறதாம். 


அந்த நினைவில் சடாரென்று என் காலில் விழுந்தாள். "என்னை ஆசீர்வதியுங்கள் அப்பா!" என்றாள். அம்மா விழுந்ததைப் பார்த்து குழந்தையும் ஓடிவந்து என் காலைத் தொடுவது போல் பாவனை செய்தது. 'தீர்க்க சுமங்கலி பவ' என்றேன்.


குழந்தையைத் தூக்கியபடி நளினி சொன்னாள்: "அப்பாக்களை  தத்து எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடம் இருந்தால், என் முதல் சாய்ஸ் நீங்கள் தான்!"


நாணத்தால் தலை குனிந்தபடி, "வேறு யாரிடமும் இப்படி உளறி வைக்காதேடி முட்டாள்" என்று அவள் தலையில் லேசாகக் குட்டினார் தாயார்.


இனிமேலும் அங்கிருந்தால் ஆபத்து என்பதால் அவசரமாக வாசலை எட்டிப் பார்த்தேன். அப்போது ஓர் ஆட்டோ வந்து நின்றது.  இறங்கியவள்  சந்தோஷி!


" என்னடி சொல்லாமல் கொள்ளாமல் சித்தி வீட்டுக்கு வந்து விட்டாய்? சார் வேறு  வந்திருக்கிறாரே என்ன விஷயம்?" என்றாள் சந்தோஷி பரபரப்புடன்.


"யாரையோ தத்து எடுக்கிறார்களாம்" என்று நளினியைப் பார்த்துக் குறும்பாகச் சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினேன். 

   -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து




 

செவ்வாய், ஜூன் 28, 2022

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 2

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 2 

(நான்கு தூண்கள் நகரம்-13)

அமெரிக்காவில் 73 ஆவது நாள் (23-6-2022)




தொண்ணூறுகளில் வங்கிகள் கணினிமயம் ஆக்கப்பட்டபோது எல்லா அதிகாரிகளுக்கும் அவர்கள் தேவைக்கேற்ப கணினித்துறையில் அவசரமாக அறிவு புகட்டுவதற்காக இந்திய ரிசர்வ் பேங்க்,  ஹைதராபாத்தில் ஒரு தொழில்நுட்ப மையத்தை நிறுவியது.  


முதல் கட்டமாக அரசுத்துறை வங்கிகளில் இருந்து அதிகாரிகளை அங்குப் பயிற்சிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி நானும் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு ஹைதராபாதில் ஒருவாரம் தங்கும் வாய்ப்பு அதனால் கிட்டியது.




சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஹைதராபாத் நகரை உலக நகரங்களில் ஒன்றாக ஆக்குவதற்கு மும்முரமாக உழைத்தார் என்று கேள்விப்பட்டது உண்மையே என்பதை நேரில் கண்டேன். 


அபீட்ஸ் முதல் நாம்பள்ளி ரயில் நிலையம் வரை, பப்ளிக் கார்டன் முதல் ஹுசேன் சாகர் வரை, அங்கிருந்து செகந்திராபாத் வரை- என்று ஹைதராபாத் நகரம் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏரியைச் சுற்றி வண்ண விளக்குகளும், வகை வகையான உணவுக் கடைகளும், ஒழுங்குபடுத்தப்பட்ட கார் நிறுத்தங்களும், அழுக்கில்லாத சாலைகளும் உலக அளவில் கணினித்துறையில் அந்நகரம் பெற்றிருந்த பெயருக்கு மெருகூட்டுவதாக இருந்தன. நெக்லஸ் ரோடு உண்மையிலேயே வைர நெக்லஸ் போல் மின்னியது.


பொதுவாகவே அரசுத்துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குச்  செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். குறிப்பாக வங்கிகளில் எந்த ஒரு ஊழியரும்  கிளார்க்,  ஆபீசர் எந்தப் பதவியில் இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு பயிற்சிக் கல்லூரியில் அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதை ரிசர்வ் வங்கி மிகுந்த கவனத்தோடு கண்காணிக்கும். எனவே பயிற்சிக்கான துணைப் பொருட்களும், பயிற்சி பெறுவோர் தங்குவதற்கான இடவசதியும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். 


அந்தந்தப் பயிற்சி நிலையத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறித்த தோல் பை ஒன்றும், பயிற்சி நிலையம் மற்றும் பயிற்சிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஃபோல்டர்  ஒன்றும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் வழங்கப்படும். பயிற்சி இறுதிநாளில் விருந்தும், குழு புகைப்படமும்,  ஔவையாருக்கு நெல்லிக்கனி மாதிரி சிறிய அளவிலான பரிசுப் பொருள் ஒன்றும் கட்டாயம் உண்டு.


முதல்முறையாக இந்தப் பயிற்சிக்கு வருபவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தோல்பையைப் பெருத்த வெகுமதியாகக் கருதி, தாங்கள் கொண்டு செல்லும் இடமெல்லாம் ஐடி கார்டுபோல் விடாமல் கொண்டு செல்வது வழக்கம். 


என்னுடன் சுமார் 20 பேர் வெவ்வேறு வங்கிகளில் இருந்து அங்கு பயிற்சி பெற வந்திருந்தார்கள். ஒரு நாள் மாலை பயிற்சி முடிந்தவுடன் ஹாஸ்டலுக்குச் செல்லாமல் ஓர் ஆட்டோ பிடித்து பிர்லா மந்திருக்குச் சென்றேன். எனவே பயிற்சியில் வழங்கப்பட்ட தோல்பை என் கையோடு ஊசலாடிக் கொண்டிருந்தது. 


20 ஆண்டுகள் ஆனாலும் பிர்லா மந்திர் இன்னும் புதிய கோயில் போலவே மெருகோடு காட்சி அளித்தது. அணுகுப் பாதையும் ஓரளவு செப்பனிடப்பட்டு இருந்தது. கார்களுக்கு என்று போடப்பட்டிருந்த வேறொரு நல்ல பாதை சற்றுத் தொலைவில் வந்து முடிந்தது.


ஜனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. என்றாலும் தரிசனத்திற்குச் செல்லும் கூட்டம் எப்போதும் போல ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாகவே இருந்தது.

 

மலையடிவாரத்தில் இருந்த அனுமார் கோயிலைப் பார்த்தேன். புதுப்பொலிவோடு  காட்சியளித்தது. இப்பொழுதெல்லாம் பெண்கள் தினந்தோறுமே குழுவாக அனுமான் சாலிசா பாடுவதாக அறிந்தேன். அன்றும் பாட ஆரம்பித்திருந்தார்கள். தொடர்ந்து பாடிப் பயிற்சி பெற்றவர்கள் குழுவில் அதிகம் இருந்திருக்க வேண்டும். சேர்ந்திசையின் லயம் பரவசமூட்டுவதாக இருந்தது.


மந்திரின் உச்சியில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளையும், படிகளில் சாரிசாரியாக மேலேறிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்தபடியே அந்த இசையில் மெய்மறந்து நின்று விட்டேன். அப்போதுதான்,  அன்றொருநாள் அதே அனுமார் கோயிலில் நான் கேட்ட  இனிய குரலை மீண்டும் கேட்டேன். 


திடுக்கிட்டு, குழுவில் இருந்த பெண்களை மேலோட்டமாகப் பார்த்தேன். தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அதே பெண்! 


இறைவன் படைப்பில் மனிதனின் மூளையும் மனமும் அற்புதமானவை. சில எண்ணங்களை, சில குரல்களை, சில காட்சிகளை, சில உணர்ச்சிகளை எத்தனை வருடங்கள் ஆனாலும் அவை தம்மிடமிருந்து  அழிப்பதில்லை. நேற்றைய நினைவுகள் இன்று அழிந்துவிடுகின்றன. ஆனால் இருபது வருடத்துக்கு முந்தைய நினைவுகள் அழியாமல் இருப்பது எப்படி?


பாடல் முடிந்து அந்தப் பெண் எழுந்து நின்றாள். அவள் வயதையொத்த இன்னொரு பெண்ணும் எழுந்தாள். இருவர் கையிலும் என்னிடம் இருந்தது போலவே பயிற்சியின் பெயர் பொறித்த தோல்பை இருந்தது. அப்படியானால்?


அந்த இருவரும் நிச்சயம் ஏதோ ஒரு வங்கியில் பணிபுரிபவர்கள் தான். என்னைப் போலவே பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பயிற்சி நிலையத்தில் அல்ல. அவர்களின் தோல் பையை  உற்றுப் பார்த்தேன். மாஸாப் டேங்க் என்ற இடத்தில் வேறொரு வங்கி நடத்தும் பயிற்சி மையம் அது. 


அனுமாருக்குக் காணிக்கையாகச் சில காசுகளை தட்டில் வைத்துவிட்டு,  மோதிர விரலால் தட்டில் இருந்த காவியைத் தொட்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு அந்தப் பெண்கள் மலை ஏறுவதற்கான படிகளை நோக்கி நடந்தார்கள். அப்போதுதான் தங்கள் கையில் இருப்பது போன்ற அதே தோல் பை என் கையிலும் இருப்பதை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். 


வரிசையைத் தவறவிடாமல் நடந்து கொண்டே என்னைப் பார்த்து புன்னகைத்தனர் இருவரும். என் வங்கியின் பெயரைச் சொன்னேன். அவர்கள் தங்கள் வங்கியின் பெயரைச் சொன்னார்கள். சென்னையில் உள்ள வெளிநாட்டு வங்கி. இருவரும் ஒரே கிளையில்  வேலை செய்பவர்கள். இருபது  வருடங்களாக என் காதில் ரீங்காரமிடும் குரலுக்குச் சொந்தக்காரியின் பெயர் நளினி. தன்னுடன் இருந்தவளை, "இவள் சந்தோஷி! ஹனுமான் சாலிசாவை அற்புதமாகத் தப்புத்தப்பாகப் பாடுவாள்" என்று சிரித்துக் கொண்டே அறிமுகப்படுத்தினாள் நளினி. சந்தோஷி சிரித்தாள்.


நளினிக்குத் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. வீடு அலுவலகம் இரண்டும் சென்னையில். தாயாரும் கூட இருக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் கணவர்,  அடிக்கடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்யக் கூடியவர். 


சந்தோஷிக்கு இன்னும் திருமணமாகவில்லை. முப்பதைத் தாண்டி இருக்கலாம். நல்ல கணவனைக் கண்டுபிடிப்பதற்கான அறிவியல் பூர்வமான வழியைத் தேடிக் கொண்டிருக்கிறாளாம்.  


லேசான மழைத் தூறல் விழ ஆரம்பித்த உடன் வரிசை வேகமாக நகர்ந்தது. எல்லாம் சில நிமிடம்தான். மீண்டும் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின.  திருவேங்கடவனை மனதார வணங்கிவிட்டு மூவரும் மேல்தளத்தில் காலார நடந்தோம்.  


அவர்களுக்கு என்னைவிடப் பலமடங்கு சம்பளம். ஐஐஎம் படித்தவர்களாயிற்றே! என்னுடைய அரசுத்துறையில் சம்பளம் குறைவு, ஆனால் பதவிப்பெயரும் பொறுப்புகளும் அதிகம். 


“உண்மைதான், சம்பளம் அதிகம், ஆனால் வேலைப் பளு மிக மிக அதிகம். அதிலும் நான் கிரெடிட் கார்டில் இருக்கிறேன். மாதந்தோறும் அந்த மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்டை அச்சடித்து உறையில் போட்டு கூரியரிடம் ஒப்படைப்பதற்குள் உடம்பே நொறுங்கிவிடும்” என்றாள் நளினி. ஆறுவகை கிரெடிட் கார்டுகள். மொத்தம் ஒரு லட்சம் ஸ்டேட்மெண்ட்கள்!

    

“உதவியாளர்கள் நிறைய பேர் இருப்பார்களே!”


“அதுதான் இல்லை. நானும் எனது வைஸ் ப்ரெசிடெண்ட்டும்தான்! கூரியர் பையன்களை வைத்துக்கொண்டுதான் தொழிலே நடக்கிறது! அதிக பட்சம் இன்னும் இரண்டு வருஷம்தான் இருப்பேன். ஒரே மாதிரி வேலை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைச் சுமை. ஆரோக்கியமே போய்விடும்” என்றாள் நளினி. 


அதை ஆமோதிப்பதுபோல்  தலையாட்டிய சந்தோஷி, “என் கசின் ஸ்டேட்பேங்கில் இருக்கிறான். எவ்வளவு ஜாலியான லைஃப் தெரியுமா? பொறாமையாக இருக்கிறது” என்றாள். 


வங்கிப் பணியாளர்கள் என்றாலே இதுதான் சங்கடம். பேசுபொருள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வேலைப்பளு, எட்ட முடியாத இலக்குகள், போதிய ஊழியர்கள் இல்லாமை, இருப்பவர்களும் கீழ்ப்படியாமை, இணக்கமற்ற மேலதிகாரிகள், தகுதியற்றவர்களுக்கு ப்ரோமோஷன், திடீர் இடமாற்றம்….


ஓரளவுக்கு இதையெல்லாம் மலைமேலேயே பேசிமுடித்துவிட்டோம். மலையிலிருந்து இறங்கும்போது மனப்பாரமும் இறங்கியிருந்தது. மூவருக்கும்தான்! 

  

நளினிக்காக அவளுடைய அலுவலகத்திலிருந்து வாகனம் வந்திருந்தது. வேண்டாம் என்று சொல்லியும் என்னை அதில் ஏறவைத்தார்கள் இருவரும். எனது ஹாஸ்டல் பக்கத்திலேயே இருந்தது. அவர்களுடையது சற்று தூரம்.  ஆகவே என்னை இறக்கிவிட்டு அவர்கள் போனார்கள். 


மணி பத்தரை இருக்கும். பொதுவாகவே நான் பதினொன்றரைக்கு முன் உறங்குவதில்லை. பயிற்சி நிலையத்தின் நோட்ஸ்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அறையிலிருந்த போன் மணி அடித்தது. நளினி!


“சார், உங்களிடம் ஒன்று பேசலாமா?”


சொல்லுங்கள் என்றேன். சொன்னாள்.


“ஒன்றும் கஷ்டமில்லை. நான் காலை ஆறு மணிக்கே ரெடியாக இருப்பேன். சரியா?” என்றேன்.


“ரொம்ப நன்றி. ஐந்தே முக்காலுக்கே எங்கள் கார் அங்குவந்து காத்திருக்கும்” என்றாள்  நளினி மகிழ்ச்சியுடன். (தொடரும்)




             -இராய செல்லப்பா  நியூ ஜெர்சியில் இருந்து 

திங்கள், ஜூன் 27, 2022

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர்-1

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 1

(நான்கு தூண்கள் நகரம்- 12 )

அமெரிக்காவில் 72 ஆவது நாள் (22-6-2022)



ஐதராபாத்தில் நான் இருந்த மூன்று வருடங்களில் வாரம் ஒரு முறையாவது நான் தவறாமல் சென்ற இடம் பிர்லா மந்திர்.


ரிசர்வ் வங்கியின் நேர் எதிரே சாலையைக் கடந்தால் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு சந்தின் வழியாக ஒரு குன்று இருக்கும் இடத்தை அடையலாம். அந்தக் குன்றின் மேல்தான் பிர்லா நிறுவனத்தினரால் கட்டப்பட்ட பாலாஜி வெங்கடேஸ்வரா ஆலயம் உள்ளது. மற்ற கோயில்களை எல்லாம் பிள்ளையார் கோயில், முருகன் கோயில், சிவன் கோயில் என்று சொல்லும்போது இந்தக் கோவில் மட்டும் கட்டிக்கொடுத்த பிர்லாவின் நினைவாக பிர்லா மந்திர் என்று வழங்கப்படுகிறது.


பளிங்குக் கற்களாலான ஆலயம். தரையில் இருந்து மலை வரை படிக்கற்களும் பளிங்குக் கற்களே. மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் திருப்பதியில் போலவே ஆஜானுபாகுவாகக் கரிய நிறத்தில் கண்மூடி நிற்கிறார் வெங்கடாஜலபதி.


இங்கு நாம் கொண்டு போகும் தேங்காய் பழங்களைப் பெற்றுக் கொண்டு அர்ச்சனை செய்வது கிடையாது. அவர்களே தங்கள் செலவில் அதைச் செய்கிறார்கள். பக்தர்களுக்குத் துளசியும் தேங்காய் விள்ளலும் பிரசாதமாகத்  தருகிறார்கள்.


மலை அடிவாரத்தில் ஒரு பழைய அனுமார் கோவில் இருக்கிறது. நிற்க வைத்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட அனுமான் உருவத்தின் மீது காவியும் சந்தனமும் குங்குமமும் பூசப்பட்டிருக்க, அருகில் ஊதுபத்தி எரிந்து கொண்டிருக்கும். தேங்காய் கொண்டு போயிருந்தால் நாம் இங்கு தான் உடைக்க வேண்டும்.


பக்தர்களின் கூட்டத்தை இவர்கள் அழகாக ஒழுங்குபடுத்தி நிற்க வைத்து அனுப்பும் பாணி போற்றத்தக்கது. 


பாலாஜி தரிசனம் முடிந்த பிறகு கோயிலைச் சுற்றி மலை மீது இருக்கும் அழகான பளிங்குத் தளத்தில் நேரம் போவதே தெரியாமல் நிற்கலாம். வேனில் காலத்திலும் தென்றல் வீசும். காரணம் எதிரே அமைந்திருக்கும் உசைனி சாகர் என்னும்  பிரம்மாண்டமான ஏரி.


நான் ஹைதராபாத்தில் இருந்த காலத்தில் அந்த ஏரி மிகவும் அமைதியாக இருக்கும். பின்னாளில் சந்திரபாபு நாயுடு அவர்கள் முதல்வரானபோது, 'நெக்லஸ் ரோடு' என்ற பெயரில் ஏரியும் அதன் சுற்றுப்புறங்களும் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் என்.டி.ராமராவ் முதல்வராக இருந்த பொழுது ஏரியில் நிறுவப்பட்டு அதற்குள்ளேயே தவறி விழுந்துவிட்ட புத்தர் சிலையும், மீட்டெடுக்கப்பட்டு மறுபடி நிறுவப்பட்டு நீண்ட நெடிய உருவமாக மலையில் இருந்து பார்க்கும் போது எழில்காட்சியை வழங்குகிறது.



அப்போதெல்லாம் மாலை ஆறு மணி போல நான் கோட்டியில் இருந்து கிளம்பி, அபீட்ஸ் வழியாக (சுமார் நாலரை கிலோ மீட்டர்) நடந்து சென்று மலையேறி பிர்லா மந்திரைத் தரிசிப்பது வழக்கம். கோவில் மூடும் வரை இருந்துவிட்டுக் கீழிறங்கி வருவேன். நெடுஞ்சாலையில் இருந்து கோவிலின் அடிவாரம் வரை உள்ள பாதை சிறியதாகவும் ஒழுங்கற்றும் இருந்ததுதான் ஒரே குறை. அந்தப் பாதையிலும் நிறைய ஆக்கிரமிப்பு குடிசைகள் இருந்ததாக ஞாபகம். ஆனால் கோவிலின் சுத்தமான  சூழ்நிலையும், ஏரிக் காற்றும், தென்றல் காற்றும், வானில் தெரியும் நட்சத்திரங்களும் அந்தச் சில மணி நேரங்களாவது நம்மை இயற்கையோடு இயைந்த வாழ்வுக்குக் கொண்டு செல்வதை நான் அணு அணுவாக ரசிப்பது வழக்கம்.


அங்கிருந்த 'காமத்' ஓட்டலில் இரவு உணவைச் சாப்பிட்ட பிறகு மீண்டும் அதே நாலரை கிலோ மீட்டர் நடக்க ஆரம்பிப்பேன். எந்தக் கட்டாயமும் இல்லாத இயற்கையான நடை. உணவும் செரிக்கும், அறையில் வந்து படுத்தால் அடுத்த நொடியே உறக்கமும் வந்துவிடும்.


அந்த அனுமான் கோவிலுக்கு அருகிலோ அல்லது எதிர்ப்புறத்திலோ தியானம் செய்வதற்கு ஒரு தனியறை இருந்ததாக ஞாபகம். நம்மூரில் பெண்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றைக்  கூட்டாக இசைப்பது போல், ஹைதராபாதில் அனுமார் முன்பு "ஹனுமான் சாலிசா" என்ற நாலடிப் பாடலைக் குழுவாகப் பாடுவார்கள். வட இந்தியாவில் இது இன்னும் பிரபலம். 


'முரடன் முத்து' என்ற படத்தில் அனுமார் பக்தனாக சிவாஜி கணேசன் வருவார். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் செய்வார். அவரை மடக்கிப் போட தேவிகா படாத பாடு படுவார். கடைசியில் தேவிகா ஜெயிப்பார். தன் பக்தனை இவ்வளவு மோசமாகக் கை விட்டதற்காக அனுமார் மீது  சிவாஜி ரசிகனான எனக்கு ஏற்பட்ட கோபம் மறைவதற்குப் பல நாட்கள் ஆயிற்று. 


ஆனால் பிர்லா மந்திரில் இருந்த அனுமார் மீது எனக்குக் கோபம் வரவில்லை. காரணம் அங்கு பாடப்பட்ட ஹனுமான் சாலிசாவின்  இனிமைதான். பதினைந்து இருபது நிமிடங்கள் அங்கேயே நின்று அந்த பாடலைக் கேட்டு ரசித்த பிறகுதான் மலை ஏறுவேன்.


வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசா பாடும் குழுவில் நிறையப் பெண்கள் கலந்து கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பாடுவது வழக்கம். என்னதான் குழுப்பாடலாக இருந்தாலும், அந்தக் கலந்திசையையும் மீறி ஒரு சில பெண்களின் குரல்கள் தெளிவாகவும் வித்தியாசமான கவர்ச்சி உடையதாகவும் இருப்பது உண்டல்லவா? அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்காரி தான் அந்தப் பெண்.


அவள் யார் என்று எனக்குத் தெரியாது. பள்ளி மாணவியாக இருக்கலாம். அதிக உயரமில்லை. இயற்கையான பொலிவோடு சராசரிக் குடும்பப் பெண்ணாக இருந்தாள். சாலிசாவின் வரிகளை அவள் உயிர்த் துடிப்போடு உச்சரித்தாள். எந்த வியாழக்கிழமை  போனாலும் அந்தப் பெண் தவறாமல்  பாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. 


ஆனால் அவளுடைய இந்தி உச்சரிப்பு மிகத் துல்லியமாக இருந்ததால் அநேகமாகத் தமிழ் பேசும் பெண்ணாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது. பின்னாளில் நான் டில்லியில் பணியாற்றியபோது இந்தி பேசும் நண்பர்களும் இதை உறுதி செய்தார்கள். அதாவது 'ஹிந்தி'-யர்களை விடத் தென் இந்தியர்கள் - அதிலும் தமிழர்கள் - பேசும் ஹிந்திதான் மிகத் தெளிவாகவும் இலக்கண சுத்தமாகவும் இருக்கும் என்றார்கள். வைஜயந்திமாலா வையும், ஹேமமாலினியையும், வாணி ஜெயராமையும் உதாரணம் காட்டினார்கள்.


இருபது வருடம் கழித்து அதே ஹனுமார் சன்னதியில் அவளையும் அவளுடைய இன்னொரு தோழியையும்  சந்திப்பேன் என்றோ உங்களுக்குச் சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும் என்றோ அப்போது எனக்குத் தெரியாது. (தொடரும்)




   -இராய செல்லப்பா நியூஜெர்சி யில் இருந்து 

வெள்ளி, ஜூன் 24, 2022

பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)

 பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)

(புதுடில்லிப் புராணம்- 7 )

அமெரிக்காவில் 71 ஆவது நாள் (21-6-2022)


நேற்று நடந்தது:

“இவளைத் தங்கை என்றுதானே அறிமுகப்படுத்தினான் பாபு?” என்று மெல்லக் கேட்டார் நண்பர். முதல்முறையாக பாபுவிடம் ஏதோ தவறு இருப்பதாக என் மனதில் ஒரு சந்தேகக்கீற்று தோன்றியது.      





சரி, நமது சந்தேகங்களைப் பிறகு வைத்துக் கொள்ளலாம், பாபு எப்படியிருக்கிறான் என்று பார்ப்பதல்லவா முக்கியம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன்.


பாமாவைப் பார்த்து "எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார்?" என்றேன். சொன்னாள். அங்கு விரைந்தோம்.


டில்லியில் அரசாங்க ஆஸ்பத்திரிகள் எப்படியிருக்கும் என்று தெரியுமா? சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரி மாதிரிதான் இங்கும். மத்திய அரசோ, ஒன்றிய அரசோ, ஆஸ்பத்திரிகள் மட்டும் மாநில அரசு மாடல்தான்.


காதல் திருமணம்- மற்றபடி கதைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை!


எங்கள் வங்கியின் மண்டல மேலாளருக்கு அதிகாரபூர்வ டிரைவர் ஒருவர் இருந்தார். 'கிஷண்' என்று பெயர். 'கிஷன்' என்றும் எழுதலாம். ஒரு சுழியில் என்ன ஆகிவிடப்போகிறது! கிருஷ்ணன் என்பதன் இந்தி வடிவமே அது. ஆசாமி இளைஞர். ஆறடி உயரம். இராணுவ அதிகாரிக்குரிய நடையும் பாவனையும் இருக்கும்.  வெள்ளைவெளேர் என்றிருப்பார்.  அவருக்குத் தன்னைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. ஆகவே, மண்டல மேலாளர் சொல்வதைக் கேட்கமாட்டார். ஆனால், தலைமை அலுவலகத்திலிருந்து வருபவர்களுக்கு உழவாரப்பணி செய்யவும் தயங்கமாட்டார். நிதி அமைச்சகம், ரிசர்வ் பேங்க், பாராளுமன்றக் கட்டிடம், பிரதமர் அலுவலகம் என்ற உயர்மட்ட அலுவலகங்களுக்கு மட்டும் அவர் இல்லாமல் போகமுடியாது. இவரைப் பார்த்ததும் இவர்தான் வங்கியின் சேர்மன் போலும் என்றே நம்பிவிடுவார்கள். அந்த அளவுக்கு 'மேக்னட்டிக் பெர்சனாலிட்டி!' 


அன்று எங்களுடன் வந்தவர் கிஷன் தான். சிக்கலான நிலைமைகளில் விரைந்து செயல்படுவார். டோக்கன் கொடுக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த பெருங்கூட்டத்தை 'ஹேய், சலோ சலோ' என்று சத்தமிட்டபடி தன் பெரிய கைகளால் கலைத்து எங்களை உள்ளே அழைத்துக்கொண்டு போனார். டோக்கனுக்கு ஐந்துரூபாய் இல்லாமல்  யாரையும் உள்ளே விடும் சரித்திரமே இல்லாத ஆஸ்பத்திரியாம் அது. 


15 ஆம் நம்பர் படுக்கை என்றார்கள். போனோம். அப்போது டாக்டர் உள்ளே இருந்ததால் வெளியில் நின்றோம். காப்பி, டீ எடுத்துக்கொண்டு கேனுடன் வந்த ஒருவனை கிஷன் இடைமறித்து ஐந்து டீ ஆர்டர் செய்தார். நாங்கள் மூன்றுபேர், பாபு ஒன்று ஆக நான்குபேர்தான். ஆனால் ஐந்து டீ ? கிஷனுக்கு எல்லாம் இரண்டு வேண்டுமாம். (மனைவியுமா என்பீர்கள். ஆஸ்பத்திரியில் பேசுகிற விஷயமா அது!)


டாக்டர் வெளியேறியதும் நாங்கள் உள்ளே போனோம். ஒரே அதிர்ச்சி. அங்கே காயங்களுடன் படுத்திருந்தது பாபு அல்ல, அவன் ஒன்றுவிட்ட தம்பியான முத்து! பட்டுச் சட்டையும் பட்டு வேட்டியுமாக இருந்தான். அப்படியானால் பாமாவுக்கும் முத்துவுக்கும்தான் கல்யாணம் ஆனதா!  இவனைத்தான் ‘அவர்’ என்றாளா பாமா! அப்படியானால் பாபுவிடம் எந்தத் தவறும் இல்லை. மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஆனாலும் வேறு கேள்விகள் இருந்தன. 


முத்துவின் கால்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கைகளில் சிராய்ப்புகளுக்கு ஏதோ கிரீம் தடவியிருந்தார்கள். நெற்றியில் காயம் இருந்தது. எங்களைப் பார்த்ததும் லேசாகப் புன்னகைக்க முயன்றான். பக்கத்திலிருந்த மலையாள நர்ஸ் 'அவரால் பேச முடியாது. தொந்தரவு செய்யாதீர்கள்' என்றாள். பேசாவிட்டால் பாபு எங்கிருக்கிறான் என்பதை எப்படி அறிவது?


டில்லி ஆஸ்பத்திரிகளில் அப்போதெல்லாம் மலையாள நர்ஸ்கள் அதிகம் இருப்பார்கள். அவர்களிடம் ஓர் ஒற்றுமை இருந்தது. எல்லோருமே பள்ளியில்  இந்தி படித்தவர்கள். அதனால் இந்தி பேசுபவர்களிடம் தன்மையாகப் பேசுவார்கள். தமிழர்கள் என்றால் இளக்காரமாக நடத்துவார்கள். நமக்குத்தான் இந்தி தெரியாதே! வேண்டுமென்றே நம்மிடம்  இந்தியில்தான் பேசுவார்கள். தமிழை அவர்களால் பேசமுடியும், புரிந்துகொள்ளவும்  முடியும். ஆனால் மாட்டார்கள். புரியாததுபோல் நடிப்பார்கள். சரியான நேரத்துக்கு மருந்து தரமாட்டார்கள். டாக்டர் வந்தால், நோயாளி ஒத்துழைக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டுவார்கள். இவர்களுக்கு கிஷன் தான் சரி. 


ஒரே அதட்டலில்  அவளிடமிருந்து விஷயத்தைக் கறந்துவிட்டார் கிஷன். பாபு என்பவர்தான் முத்துவை இங்கு கொண்டுவந்து அட்மிட் செய்தாராம். அவருடன் இன்னும் இரண்டு ஆண்களும்  காயங்களுடன் வேறொரு தளத்தில் அட்மிட் ஆகியிருக்கிறார்களாம். பாபு ஒருவேளை அவர்களுடன் இருக்கலாமாம். 


அது இரண்டாவது தளம். சற்றே மோசமான சூழலில் இருந்த ஒரு மூலையில் ஜன்னலருகே ஒரு கட்டிலின் முன்பு  பாபு நின்றுகொண்டிருந்தான். அந்தக் கட்டிலில் ஒரு பெரியவர் படுத்திருந்தார். அவரைப் பார்த்தால் அடிதடியில் இறங்குபவராகத் தெரியவில்லை. அதற்குப் பக்கத்துக் கட்டிலில் சுமார் முப்பது வயதுள்ள  ஓர் இளைஞன் தலையில் சிறிய பிளாஸ்திரியுடன் தெரிந்தான்.  பாபு இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.


“இங்க பாருங்க அய்யா, நடந்தது நடந்து போச்சு. முத்துவும் பாமாவும் திடீர்னு டில்லிக்கு வந்து நின்னப்ப எனக்குக் கையும் ஓடலை. காலும் ஓடலை. கடவுள் புண்ணியத்துல எனக்கு பாங்க்குல நல்ல ஆதரவு கெடைச்சு இப்போ டில்லியில கால் ஊனிட்டேன். மாசம் எப்படியும் செலவுபோக இருவதாயிரம் எனக்கு வருது. ரெண்டே வருஷத்துல இந்தர்புரில வீடுவாங்கிடுவேன். பேங்க்குல லோன் குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க. முத்துவும் பாமாவும் எங்க வீட்டுலயே இருக்கட்டும். அவங்களுக்கும் கடவுள் நல்ல வழி காட்டாமப் போகமாட்டான். அதனால நீங்க அவங்கள மன்னிச்சி வாழ்த்தணும். அவங்க எதிர்காலத்துக்கு நான் கேரண்ட்டி!...” என்று பாபு சொல்லிக்கொண்டிருந்தான். 


நான் சற்றே பின்வாங்கி நின்றேன். 

மலை மந்திர் முருகன் கோயில்-புதுடில்லி

அடுத்த கட்டிலில் இருந்தவன் எழுந்துகொள்ளாமல், அதே சமயம் கோபத்துடன் கத்தினான். “இங்க பாரு பாபு! உனக்கும் இவர்களுக்கும் என்னடா சம்பந்தம்? எதுக்கு நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறே?” என்றவன், பெரியவரைப் பார்த்து, “நைனா! இவன் நல்லவன்தான். தங்கமானவன். சந்தேகமில்லே. இவன் மட்டும் நம்ப பாமாவைத் திருட்டுத்தாலி கட்டியிருந்தாலும் நான் ஏத்துக்கிட்டிருப்பேன். ஆனா அந்த ஒண்ணுமில்லாத பய, முத்துவயில்ல அவ இழுத்துக்கிட்டு ஓடிவந்திருக்கா? நம்ம சாதிசனம் காறித் துப்பமாட்டாங்க? ரெண்டுல ஒண்ணு பாத்துட்டுதான் மறுவேலை!” என்றான்.


இப்போது எனக்கும் என்னுடன் வந்த தமிழ் நண்பருக்கும் விஷயம் விளங்கிவிட்டது. இது பாரதிராஜாவின் வழிகாட்டலில் நடந்த சினிமாப்பாணியிலான பள்ளிக்கூடக் காதல். முத்துவும் பாமாவும் வெவ்வேறு சாதி. அதில் முத்து கொஞ்சம் தாழ்ந்த சாதி. முத்துவின் பெற்றோர் தினக்கூலி ஊழியர்கள். பாமா வீடு வசதியான வீடு. தாயில்லை. தந்தையும் மணமாகாத அண்ணன் முருகேசனும் தான். முத்துவும் பாமாவும் ஒரே பள்ளியில் ஒன்பதாவது படித்தபோது ஏற்பட்ட காதல். வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் செய்தி கேட்டு அண்ணன் முருகேசன் ஊரில் இல்லாத சமயத்தில் சென்னை வந்து பெரியம்மா வீட்டில் தங்கி, அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் டில்லிக்கு வந்துவிட்டனர் இருவரும்.


பெரியவர் சற்றே  நிமிர்ந்து உட்கார்ந்தார். “பாபு! பாமா செய்த காரியம் தப்புதான். ஆனா நாங்க ஒன் பேங்க்குல வந்து லீவு நாளில ஒன்னைப் பத்தி விசாரிக்கறோம்னு தெரிஞ்சதுமே நீ அவசர அவசரமா மலை மந்திர் முருகன் கோவில்ல ஒரு நல்ல டைம் பாத்து இவங்களுக்குத்  தாலிகட்ட வெச்சே பாரு, அப்பவே நீ பாமாவுக்கு நிஜமான அண்ணனாயிட்டே!  எங்க சாதி சனம் எப்படியோ ஒழியட்டும். சோத்துக்கில்லேன்னா அவனுகளா வந்து போடுவாங்க?“ என்றார். பாபுவைத் தன் கைகளால் அள்ளி  அணைத்துக்கொண்டார்.


அண்ணன்காரன் பொருமினான். “நைனா, நமக்கு எவ்ளோ அவமானத்தை உண்டுபண்ணிட்டா இந்தப் பொண்ணு, அவள நீ மன்னிச்சாலும் நான் மன்னிக்கமாட்டேன்” என்று கத்தினான். 


“என்னடா பண்ணுவே? இது டில்லி, தெரிஞ்சிக்கோ! நம்ம ஊர் இல்ல. பொம்பளைகிட்ட தகராறு பண்ணினா, அவ ஒன் தங்கையாவே இருந்தாலும் உள்ள தள்ளிடுவாங்க! மரியாதையா நாளைக்கு ஊருக்கு கிளம்பணும். பாபு, எங்களுக்கு டிக்கட் வாங்கிடு. நான் பணம் தர்றேன்” என்று பெரியவர் அவனை அடக்கினார்.


“எம்பி கோட்டால டிக்கட் நான் வாங்கித் தர்றேன்” என்று முன்வந்தார் கிஷன். 


அப்போது பாபு செய்ததுதான் எல்லோரையும் நெகிழ வைத்தது. பாமாவின் அண்ணனிடம் நெருங்கி அவன் கைகளைப்  பிடித்துக்கொண்டான். “சாமி முன்னிலைல ஒங்க தங்கையும் முத்துவும் கணவன் மனைவி ஆயிட்டாங்க. அதைப் பிரிக்கப்போறீங்களா? வேண்டாங்க. அவங்க இங்கயே இருந்து முன்னேறி நல்லா வந்தப்பறம் ஊருக்கு வரட்டும். பெரிய மனசு பண்ணுங்க. நீங்க என் அண்ணன் மாதிரி!” என்றான்.  “வேணும்னா ஒங்க காலையும் பிடிக்கத் தயார்” என்று கண்களில் நீர்துளிக்க நின்றான். 


முருகேசன் சட்டென்று எழுந்துகொண்டான். அவனுக்கு உண்மையில் பெரிய காயம் ஒன்றுமில்லை. “இன்னைக்கு பொண்ணுங்கறதால எங்க நைனா அவ செஞ்சத சரின்னுட்டார். அதையே நான் செஞ்சிருந்தா ஒத்துக்கிடுவாரா?” என்றான். “அவங்க ஏழைங்க, நாம நாலு ஏக்கர் நெலம் வெச்சிருக்கோம்னு சொன்னீங்களா இல்லையா?”


பாபு ஒன்றும் புரியாமல் நின்றான். பெரியவரும் தம்மை ஒருவழியாக நிலைப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றார். “முருகேசா! வயசுக்கு வந்த பொண்ண வீட்டில வச்சுக்கிட்டு புள்ளைக்கு மொதல்ல கல்யாணம் பண்ணுவாங்களாடா? அதனால தான் அப்படிச் சொன்னேன்.”


“அப்படீன்னா பாபுவோட அக்காவை நான் பண்ணிக்கிறதுக்கு சம்மதம்னு சொல்றீங்களா” என்று வெளிப்படையாகவே கேட்டான் முருகேசன்.


ஆச்சரியத்தில் பாபுவின் விழிகள் உயர்ந்தன. அவனுடைய அக்காவைத்தான்  முருகேசன் விரும்புகிறானா? முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த சரோஜாவுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. எல்லாம் வைட்டமின் ‘ப’ இல்லாததுதான் காரணம். இப்போது கடவுள் அருளால் காரியம் கூடி வருகிறதா?


“முருகேசா! நீ உண்மையைத்தான் பேசுகிறாயா? அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுகிறேன்” என்றான் பாபு நம்பமுடியாமல். 


அதற்குள் ஒரு டாக்டர் உள்ளே நுழைந்தார். “இந்த ரெண்டுபேரையும் டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள். பெரிய கேஸ்களுக்கு பெட் கிடைக்காமல் தவிக்கிறார்கள்” என்று அங்கிருந்த மருத்துவ அட்டையில் ஏதோ எழுதிவிட்டுப் போனார். 


கிஷனுக்கு மொழி புரியாவிட்டாலும் கதை புரிந்துவிட்டது. “பாபு தோஸ்த்! தும் லக்கி லடுகா ஹோ” என்று  கை கொடுத்தார். பிறகு சொன்னார்: “இவர்களை டிஸ்சார்ஜ் செய்து நம்ம பேங்க்கு பக்கத்துல இருக்கும் ‘சதரன்’ ஹோட்டலுக்கு போவோம். அங்க ரெண்டுநாள் தங்கட்டும். நான் அட்டென்டன்சுல கையெழுத்து போட்டுவிட்டு  இவங்களுக்கு டில்லியைச் சுத்திக் காட்டறேன். அப்படியே எம்பி கோட்டால டிக்கட்டுக்கும் ஏற்பாடு பண்றேன். மத்த காரியங்களை நீ பாத்துக்க.” 


இப்படியாகத்தானே பாபுவின் கதையின் முதல் பாகம் முடிந்தது. இரண்டாம் பாகத்தை நான் நேரில் பார்க்கவில்லை. என்றாலும், கேள்விப்பட்டவரையில் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: 


சில மாதங்களில் பாபுவுடைய அக்காவுக்கும் முருகேசனுக்கும் அதே டில்லி மலைமந்திரில் திருமணம் நடைபெற்றது. முருகேசனின் தந்தை தன்னுடைய நிலத்தை விற்றுவிட்டு டில்லிக்கே வந்துவிட்டார். காரணம், முருகேசனுக்கு டில்லியில் நிரந்தரமான வேலை கிடைத்துவிட்டது! 


கிஷனுடைய உறவினன் ஒருவன் சிண்டிகேட் வங்கி மண்டல மேலாளருக்கு டிரைவராக இருந்தவன், திடீரென்று பம்பாய்க்குப் போய்விடவே, முருகேசனை அவருக்குத் தற்காலிக டிரைவராக வேலைக்கு அமர்த்திவிட்டார் கிஷன்.  தன்  தொழில் திறமையாலும் பழகும் தன்மையாலும், விரைவிலேயே இந்தி பேசக் கற்றுக்கொண்டு விட்டதாலும் நிரந்தர டிரைவராக ஆக்கப்பட்டான் முருகேசன்!     -சுபம்-


  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 






வாங்க, டில்லிக் குளிரில் டீ சாப்பிடலாம்!

வாங்க, டில்லிக் குளிரில் டீ சாப்பிடலாம்!

(புதுடில்லிப் புராணம்- 6 )

அமெரிக்காவில் 70 ஆவது நாள் (20-6-2022)


சுப்பையா சுப்பையா என்றொருவர் எங்கள் தெருவில் வசித்து வந்தார். ஊரில் இருந்த பிரிட்டிஷ் காலத்து தொழிற்சாலை தனது பணியாளர்களுக்காகப் புதிய நகரை உருவாக்கியபோது அங்கிருந்த பெரிய ஆலமரத்தை ஒன்றும் செய்யாமல் விட்டார்கள். அந்த மரத்தடியில்தான் சுப்பையா உட்கார்ந்திருப்பார். 


வயது நாற்பதுக்குமேல் இருக்கும் என்று தங்கவேல் சொன்னான். சக வகுப்பன். அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். சினிமா நடிகைகளின் படத்தை தினத்தந்தியில் பார்த்தே வயதைத் துல்லியமாகச் சொல்லும் அவன் திறமையை ஆசிரியர் ஸ்வாமிதாஸ் வியப்பார். எதிர்காலத்தில் சினிமாக்காரர்கள் வீட்டில் தோட்டக்காரனாகும் யோகம் அவனுக்கு உண்டு என்றும் ஆரூடம் சொன்னார்.


வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருப்பவர் சுப்பையா  என்று கேள்வி. சைக்கிள் வண்டியில் நடமாடும் டீக்கடை ஆசாமி வரும்போது எப்படியாவது தாஜா செய்து டபுள் டீ வாங்கிக் குடித்துவிடுவார். பணம் கொடுத்தாரா என்று தங்கவேலுவுக்குத்தான் தெரியும்.  


காலை எட்டரைமணிக்கு நாங்கள் புத்தகப் பையுடன் செருப்பில்லாத கால்களுடன் பள்ளிக்கு  ஓட்டமும் நடையுமாகச் செல்வதை அலட்சியமாகப் பார்த்துச் சிரிப்பார் சுப்பையா.


“பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை. நீங்களெல்லாம் மாங்கு மாங்கென்று ஓடுகிறீர்களே, உங்களுக்கு எதிர்காலத்தில் என்ன வேலை கிடைக்கும் தெரியுமா?” என்பார்.


நாங்கள் ஒருகணம் நின்று அவர் வாயையே பார்ப்போம்.


“நான் அடுத்த வருஷம் ஒரு டீக்கடை ஆரம்பிக்கப் போறேன். அதில் ஐந்து பேருக்குப் பயிற்சி அளிக்கப்போறேன்.   உங்களில் யாரெல்லாம் வர்றீங்க? அப்பா அம்மா கிட்ட கேளுங்க. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள சொல்லிடணும். இல்லேன்னா அப்புறம் இடம் காலி இருக்காது. டீ போடக்  கற்றுக்கொண்டால் வாழ்நாளில் உங்களுக்கு தோல்வியே கிடையாது” என்று கம்பீரமாகச் சிரிப்பார். 


அன்று முழுதும் பள்ளியில் இதே விவாதம்தான். டீக்கடைக்கு ஆளெடுக்கிறார் சுப்பையா என்று தலைமை ஆசிரியருக்குச் செய்தி போயிற்று. எங்களில் சிலபேருடைய பெற்றோர்களும் சுப்பையாவை வந்து பார்த்தார்கள்.


“படிக்கிற பிள்ளைகளைக் கெடுக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாயா?” என்று ஆளாளுக்கு அடி கொடுக்காத குறைதான்.   


ஆனால் சுப்பையா அதற்கெல்லாம் அசரவில்லை. எங்களை அவர் தொடங்கப்போகும் டீக்கடையில் சேருமாறு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.


எங்கள் சக வகுப்பாளிகள் யாரும் அவர் வலையில் சிக்காததுடன், நாங்கள் பள்ளியிறுதி முடித்து கல்லூரிக்குப் போகும் வரையில் அவருடைய டீக்கடை தொடங்கப்படவே இல்லை என்பதும் வரலாற்று உண்மையாகும்.

*** 

பாபுவுக்கும் அவனுடைய ஊரில் ஒரு சுப்பையா இருந்திருப்பார்போல. 


பாபுவின் தாய் சின்னாளப்பட்டியில் பிழைக்க வழியில்லாமல், இன்னும் சில பெண்களுடன் டில்லிக்கு ரயிலேறிவந்து கரோல்பாகிலும் மயூர் விகாரிலும் லஜ்பத்நகரிலும் வீட்டுவேலை செய்பவராகச் சில ஆண்டுகள் இருந்தார். ஒரு தேர்தல் சமயத்தில் உள்ளூர் காங்கிரஸ் எம்பி ஒருவர் இவளையும் இவளைப் போன்ற அனாதையான தமிழ்க் குடும்பங்களையும் இந்தர்புரி, திரிலோக்புரி மற்றும் சில ‘புரி’களில் திடீர்க் குடிசைகளை ஏற்படுத்தித் தங்கவைத்து, அவர்களுக்கு வாக்குச்சீட்டுகளுக்கும் வழிசெய்தார். தேர்தலில் அவர் சொல்லும் வேட்பாளருக்கு இவர்கள் வாக்களிக்கவேண்டும். செய்தார்கள்.


ஆனால் தேர்தலில் வென்றபிறகு அந்த வேட்பாளர் இவர்களைத் திரும்பிப் பார்க்க விரும்பாதத்துடன், போலீஸைக் கொண்டு குடிசைகளைப் பிரித்துப் போட்டு அவர்களைச்  சிதறிப்போகவும் காரணமானார். 


கரோல்பாகில் சாஸ்திரி பார்க் என்ற பூங்கா இருந்தது. நான் டில்லிக்கு வந்தபோது அது பூங்காத்தனத்தை முழுதும் இழந்து, ஓடாமல் நிற்கும் பழைய கார்கள், பைக்குகளின் புகலிடமாக மாறிவிட்டிருந்தது. நடுநடுவே இருந்த காலி இடங்களில் தார்பாலின் கூரையின் கீழ் இந்த அனாதைத் தமிழர்கள் பனி, வெயில், மழையென்று பாராமல், வீசி எறியப்பட்ட வெங்காயப் சிறகுகளைப்போல் சுருண்டும் உலர்ந்தும் சுருங்கியும் கிடந்தது கண்களில் இரத்தத்தை வரவழைப்பதாக இருந்தது. இவர்களில் பாபுவின் தாயும் ஒருவர். (தந்தை எப்பொழுதோ விட்டுப் பிரிந்துவிட்டாராம்). இந்த நிலையில்தான் தாய்க்கு உதவியாக டில்லிக்கு வந்தான் பாபு. எட்டாவது வரை படித்திருந்தான். ஏதோ ஒரு சுப்பையாவின்  கடையில்  டீ  போடவும் பாய்லரைக் கழுவவும் கற்றுக்கொண்டிருந்தது  டில்லியில் அவனுக்கு எங்கள் வங்கியில் டீ வழங்கும் வேலையைப் பெற்றுக்கொடுத்தது. அதாவது, காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் வங்கியில் நுழைய அனுமதி கொடுக்கப்பட்டது. டீ  மற்றும் பிஸ்கட் சப்ளை செய்யலாம். மற்ற நேரங்களில் எடுபிடி வேலையும் செய்யலாம். ஆனால் வங்கிக்கும் அவனுக்கும் அதிகாரப்பூர்வமாக சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்பட்டிருந்தது. 


எங்கள் வங்கியில் அப்போது சுமார் ஐம்பது பேர்களுக்கு மேல் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். எனவே, வங்கியில் ஒரு கேண்டீன் ஏற்படுத்தவேண்டும் என்று ஊழியர் சங்கம் வற்புறுத்தியது. ஆனால் அதை முறைப்படி செய்வதென்றால்  பல்வேறு அனுமதிகளைப் பெறவேண்டும். சிலசமயம் அனுமதி கிடைக்காமலும் போகலாம்.  எனவே கள நிலவரத்தைப் பொறுத்து மண்டல மேலாளர்கள்  முடிவெடுப்பதே வழக்கம். தலைமை அலுவலகத்திற்கும் இது ஏற்புடையதாகவே இருந்தது. ஏனென்றால், ஏதேனும் தவறு நிகழுமானால், மண்டல அலுவலகத்தைப் பொறுப்பாக்கிவிட முடியுமல்லவா?


பாபு இயற்கையிலேயே நல்ல பண்புடையவன். நேர்மையானவன். எல்லாருக்கும் இசைந்தவனாகப் பணி செய்தான். ஆகவே வங்கியின் மூன்று தளங்களில் அதிகம் பயன்படாமல் இருந்த ஒரு தளத்தின் மூலையில்  அங்கேயே தங்கி தேநீர் தயாரிக்கத்  தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள அதிகாரபூர்வமற்ற  அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஊழியர்களில் நொறுக்குத் தீனி மற்றும் சோடா,லஸ்ஸி போன்ற தேவைகளை உணரத் தொடங்கியதும் அவற்றையும்  அங்கேயே தயாரிக்க ஏற்பாடு செய்தான். இதனால் பாபுவிடம் செலவு போக மாதம்தோறும் சில ஆயிரங்கள் சேர ஆரம்பித்தன. எங்கள் எல்லோருக்கும் அதில் மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டது. அனாதையாக வந்த குடும்பம் இப்போது சக்தி நகரில் ஓரிடத்தில் வாடகைக்கு நல்ல குடிசை கிடைத்து வயிறார உண்ணமுடிந்தது. அவன் தாய்க்குப் பல வருடங்கள் கழித்து மகனின் உழைப்பால் நல்ல துணிமணிகள் கிடைத்தன. யார் கண்ணும் பட்டுவிடக் கூடாதே என்பதே என் கவலையாக இருந்தது.    


பனிக்காலம் தொடங்கினால் பாபுவுக்கு வேலை அதிகம் ஏற்பட்டுவிடும். தேநீர் கொதிக்க அதிக நேரம் வேண்டும். ஒரே நிமிடத்தில் ஆறிவிடும். இதற்கிடையில் ஆரிய ஸமாஜ் ரோடில் இருந்த இன்னும் இரண்டு மூன்று வங்கிக்கிளைகளிலும் பாபுவுக்கு தொடர்ந்து பிஸினஸ் கிடைத்தது. வருமானம் அதிகரித்தாலும் தனி ஒருவனாகச் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு யாரை வைப்பது என்று தவித்தான். ஏனென்றால் வேலை கற்றுக்கொண்டு தனக்கே துரோகம் செய்துவிட்டு தொழிலைப் பிடிங்கிக்கொண்டுவிட்டால் என்ன செய்வதென்ற பயம் எழுந்தது. 


டில்லியில் பாபுவுக்கு வேலை கிடைத்து ‘ராஜா மாதிரி’ இருப்பதாக யாரோ தம்பட்டம் அடித்துவிட,  அதனால் ஊரிலிருந்து இரண்டு பேர் - ஒரு பெண்ணும் ஒரு ஆணும்- அவனை நம்பி சாஸ்திரி பார்க்கில் படுத்து நட்சத்திரங்களைப்  பார்க்கும் ஆசையில் முன்தகவல் இல்லாமல் வந்துவிட்டார்கள். ஆனால் பாபுவின் அதிரஷ்டமே அது. அவன்  அவர்களைக் கைவிடவில்லை. அவர்கள் பாபுவுக்கு ஒன்றுவிட்ட தம்பியும் தங்கையுமாம். மறு நாள்முதல் அந்தப் பெண் - பாமா- பாபுவுக்கு உதவியாக எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிட்டாள். அந்தப் பையன் -முத்து- மற்ற மூன்று வங்கிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு பாபு  அவனுக்குப் பயிற்சியளித்தான்.


இது இரண்டு வருடக் கதை!


முன்பெல்லாம் எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரி வந்தாலும் அவர்களிடம் தனக்கு சிபாரிசு செய்து ஒரு கடைநிலை ஊழியன் பணியாவது வாங்கிக்கொடுக்குமாறு தொந்தரவு செய்வான் பாபு. இப்போதோ, தேநீர் வேலையிலேயே தனக்கு அதைப் போல மூன்று மடங்கு வருமானம் கிடைப்பதாகவும்  அதனால் எக்காரணம் கொண்டும் வேறு வேலைக்குப் போகமாட்டேன் என்றும் கூறினான். இன்னும் சில வருடங்களில் கரோல்பாகில் ஒரு சௌத் இண்டியன் ரெஸ்டாரண்ட் தொடங்குவதே தன்னுடைய கனவு என்றும் கூறினான். 


எல்லோரும் அவனை வாழ்த்தினோம். நல்லவன், உழைப்பாளி, இந்தி படிக்காதே என்று அறிவுறுத்தும் மாநிலத்திலிருந்து வந்து, தானாகவே இந்தியும் கற்று, சுயதொழிலும் செய்து முன்னேறிக்கொண்டிருப்பவனை யார்தான் வாழ்த்தாமல் இருக்க முடியும்!


ஆனால் ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு வந்த ஒரு விடுமுறை நாளில் எங்கள் மண்டல மேலாளருக்கு ஒரு தகவல் வந்தது. உடனே அவர் தன்னுடைய டிரைவரிடம் காரைக் கொடுத்தனுப்பி, ‘பாபுவைப் பார்த்து வாருங்கள்’ என்றார். நாங்கள் இருவர் கிளம்பினோம், சக்தி நகருக்கு. 


சரியான முகவரி இருந்ததால், குடிசைப் பகுதியாக இருந்தபோதும்   இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். பாபுவின் தாய் அழுதுகொண்டிருந்தார். சுற்றிலும் தமிழறியாத கூட்டம். ஒன்றும் புரியவில்லை. எங்களைக் கண்டதும் குடிசையில் இருந்த பாமா தயக்கத்துடன் வெளியில் வந்தாள். 


“அவரை  யாரோ அடித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்” என்றாள், அவளும் தன்பாட்டுக்கு அழுதுகொண்டே. எப்போதும் ‘பாபு’ என்று பெயர் சொல்லி அழைப்பவள், இன்று ஏன் ‘அவர்’ என்கிறாள் என்று மனதில் சுருக்கென்றது எனக்கு. 


“எல்லாம் இவளால் வந்ததுதான். பாருங்க இவ கழுத்துல தாலி தொங்கறதை!” என்றார் பாபுவின் தாய்.        


அப்போதுதான் கவனித்தோம். பாமாவின் முகத்திலும் கழுத்திலும் மஞ்சள்கோலம் பளபளத்தது. காலில் மெட்டி ஏறியிருந்தது. அணிந்திருந்த புடவையும் புதியதாக இருந்தது. 


“இவளைத் தங்கை என்றுதானே அறிமுகப்படுத்தினான் பாபு?” என்று மெல்லக் கேட்டார் நண்பர். முதல்முறையாக பாபுவிடம் ஏதோ தவறு இருப்பதாக என் மனதில் ஒரு சந்தேகக்கீற்று தோன்றியது.      


(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து