திங்கள், நவம்பர் 25, 2013

“என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்கிறாள் ஆர்த்தி ( ‘அபுசி-தொபசி’- 12)

“என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்கிறாள் ஆர்த்தி (அபுசி-தொபசி- 12)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த  பி.மோகன் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெறப்பட்ட வெற்றி அது என்பது வாதம். இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்ட மோகன் உயிரிழந்ததால், அவரது தேர்தல் முகவரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான லாசர் வழக்கைத் தொடர்ந்து நடத்தினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு வழக்கு தோற்றுப்போய், அழகிரியின் வெற்றி நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலமே ஐந்தாண்டுகள் தான். அதிலும் அழகிரி தனது அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார். கட்சியிலும் அவருக்கு இன்று செல்வாக்கு குறைந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில் இந்த வழக்கின் வெற்றி அவருக்கு எந்த வகையில் பயன்படும் என்று தெரியவில்லை.

இதுகூடப் பரவாயில்லை. பன்னிரண்டு வருடத்துப் பழைய நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்போது நீதிமன்றத்தில் உயிரூட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது தான் விந்தை.

கடந்த 2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு  தொகுதிகளில் போட்டியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அல்லவா, அவ்வாறு  இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்குதல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று அப்போது தி.மு.க. எம்.பி.யாக இருந்த குப்புசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கைச்  சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றியது. அதன்படி வழக்கு நடைபெற்று வருகையில் குப்புசாமி காலமாகிவிட்டார். மனுதாரரின் மரணத்தைக் காரணம் காட்டி சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் தாக்கல் செய்துள்ள மனு இப்போது விசாரணைக்கு வந்துள்ளது.


 
விசாரணையின்போது (பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து) எந்த  அடிப்படையில் இம்மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

2001-ம் ஆண்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து மறைந்த குப்புசாமியுடன் இணைந்து ஏ.கே.எஸ்.விஜயனும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும் இந்த விஷயத்தில் தற்போதைய  மனுதாரர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இவ்வழக்கைத் தொடர அனுமதிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த மனுவின் மீது மேலும் விசாரணை தொடரும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீசு வழங்குமாறு உத்தரவிட்டனர். நான்கு வாரங்களுக்குப்பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்றார் பாரதிதாசன். நமது நீதியமைப்பிலோ பழையதோர் உலகை மீட்டெடுக்கவே பல வருடங்கள் தேவைப்படுகிறது.

இதுபற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “எப்படி மருத்துவர்கள் தொடர்ந்து பிழைப்பதற்கு ஏற்றாற்போல் நமது உடல் சிக்கலாகப் படைக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல, வாதிகளும் வழக்கறிஞர்களும் தொடர்ந்து பிழைப்பதற்கென்றே நமது அரசியல் சட்டம் சிக்கலாக அமைக்கப்பட்டுள்ளது!”

புத்தகம்
இந்த வாரத்திற்காக வேறு இரண்டு புத்தகங்களைக் குறித்துவைத்திருந்தேன். ஆனால் “என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்று  ஆர்த்தி கண்ணீர்விட்டுக் கெஞ்சும்போது நான் என்ன செய்வது? ஆர். வெங்கடேஷின் ‘இடைவேளை’ நாவலைத்தானே சொல்லியாகவேண்டும்?

‘இருவர்’ என்ற நாவலை முதல் முதலில் படித்தபொழுது (இணையத்திலா?) அதை எழுதியவர் நிச்சயம் இன்னொரு சுஜாதாவாகத்தான் ஆகப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் அப்போது நான் வலைத்தளத்தில் இல்லாததால் ஆர். வெங்கடேஷ் பற்றி யாரிடமும் விமர்சிக்க முடியாமல் போயிற்று. சினிமாவிலோ அல்லது பத்திரிகையிலோ நுழையவேண்டுமென்ற கனவுகளுடன்  சென்னை வந்த இரண்டு இளைஞர்கள் இவ்விரு கனவுத்தொழிற்சாலைகளிலும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தத்தை உஷ்ணவரிகளால் தகித்திருந்தார் வெங்கடேஷ்.     

‘இருவர்’, வெங்கடேஷின் முதல் நாவல். இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்குப் பின் வந்த முதல் நாவல். ‘புனைகதையின் ஊடாகச் சமகால வரலாற்றைப் பதிவுசெய்ய முயன்றதாக’த் தன் முன்னுரையில் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் அம்முயற்சியின் சவால்களையும் அவர் தெரிந்துகொள்ளாமல் இல்லை. “சமகால வரலாறு என்பதில் தீர்வுகளையோ, மதிப்பீடுகளையோ உருவியெடுக்க முடியாது. விமர்சனங்களை வைக்கவும் காலம் கனிந்திருக்காது. போக்குகளையும் திசைகளையும் மட்டுமே தொட்டுக்காட்ட முடியும்”.  

எனவே இவரது அடுத்த நாவலை நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ‘கல்கி’யில் தொடராக வந்தபோது ‘இடைவேளை’யைப் படித்தேன். ஆனால் தொடரமுடியவில்லை. அவ்வளவு வேகமாகக் காட்சிகளின் ஓட்டம். திரைப்படத்திற்கென்றே  எழுதிய மாதிரி பாத்திரங்கள் கண்ணுக்கு முன்னால் வந்து நின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இன்று நடமாடிக்கொண்டிருக்கும் ஐ.டி.த்துறை இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையில்லாமையை மில்லிமீட்டர்களில் அளக்கும் துல்லியம். அமெரிக்க நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்மையைத் தோற்றுவித்துவிட்ட ‘சப்-பிரைம் கிரைசிஸ்’ என்ற ஆக்டோபஸ், தன் எட்டுக்கரங்களால் ஐரோப்பாவில் தொடங்கி பெங்களூர் வரை   எட்டுத்திக்கிலும் ஐ.டி.ப்பணியாளர்களின் வேலையிழப்புக்குக் காரணமானதும் அதனால் சராசரி இந்திய இளம்குடும்பங்களின் சுயநம்பிக்கை சுரண்டப்பட்டதும்தான் இத்தொடர்கதையின் உயிரோட்டமான கருத்து. நாவலாகப் படிக்கிறபோது நெஞ்சம் கனக்கிறது.

கதையின் ஒரு சிறு பகுதியைக் கோடிட்டுக் காட்டாமல் முடிப்பதற்கில்லை. காதலனா, இல்லை, கணவனாகப் போகிறவனா என்று தெரியாமல், ஆனால் எல்லை மீறாமல் ஆர்த்தியுடன் பழகுகிறான் நோயல். அவள் ஒருத்திதான் குடும்பத்திற்கே படியளக்கவேண்டும். அவளுக்கு வேலை போய்விடுகிறது. தகப்பனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்....

“வேலையில் இருந்தவரை, அலுவலகத்தில் மெடிக்ளைம் இருந்தது. அப்பாவையும் அம்மாவையும் அதில் சேர்த்திருந்தாள். வெறும் அடையாள அட்டையை மட்டும் நீட்டிவிட்டு, மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி. இன்று இல்லை. சொந்தமாக மருத்துவக் காப்பீடு எதுவும் எடுத்திருக்கவில்லை. பர்சனல் லோன் போடலாம். கடுமையான வட்டிவிகிதம் பயமுறுத்தியது. முதலில் வேலையில் இருந்தால்தான் லோன் போடமுடியும்.

“யாரைப் போய் கேட்கமுடியும்? எவர் உதவுவார்கள்? திட்டமிடாமல், மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டோமா? சிக்கனம், சேமிப்பு என்று கையை இறுக்கிப் பிடித்து வாழ்ந்தவள் ஆர்த்தி. மனதோரம் இப்படி ஓர் இக்கட்டு எந்நேரமும் ஏற்படலாம் என்ற பயம் இருந்ததுண்டு. ஆனால், அதற்குத் தான் தயாராகவில்லை; முன்னேற்பாடுகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இத்தனை மாதங்களாக, தன்னுடைய சேமிப்பில் இருந்துதான் வாழ்ந்தாள். இன்று அதுவும் தீர்ந்து போயிருந்தது.

“வேலையும் சம்பளமும் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் சாதாரண மத்தியவர்க்க குடிமகள். பெரிய கனவுகளுக்கு இடமில்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததெல்லாம் வெற்றுத் திமிர்த்தனம்....

வாசலில் நோயலின் கார் நின்றது. ஆர்த்தியின் தந்தையிடம் போய்த் தேறுதல் சொன்னான். தாயிடமும் கைபிடித்து ஆறுதல் சொன்னான். “எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்திருந்தாள் ஆர்த்தி. இவனை என்னவென்று புரிந்து கொள்வது? இவனது கரிசனமும் கனிவும் பொய்யில்லை. அக்கறை போலியில்லை. ஆனால், மனத்துக்குள் என்னவோ குழப்பம்.

“அறையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டாள் ஆர்த்தி. ஜன்னலுக்கு வெளியே சாலையில் மாலை நேரத்து பிரகாசம். ஒன்றிரண்டு கார்கள் போகும்போது கூடுதல் வெளிச்சம் சாலையை அலசும். உள்ளடங்கிய சாலையின் மௌனம், அவளது சிந்தனைகளைப் போன்றே, காற்று மெல்ல கரைந்து சென்றது. சற்று நேரத்தில் நோயல் வந்து நிற்பது தெரிந்தது. மனத்தில் பொங்கிய உணர்வுகள் இன்னதென்று இனம்புரியாமல் தத்தளித்தன. தவறுகள், எதிர்பார்ப்புகள், பயம், ஆதரவு, கருணை,கனிவு என்று என்னென்னவோ காட்சிகள், காட்சிகள். தான் பெற்றதைவிட, இழந்தவையே அதிகம் என்ற எண்ணம் சட்டென மேலோங்கியது. தொடர்ந்து அடி, வழுக்கல், சரிவு. வாழ்க்கை, குவிந்த கையில் நழுவும் நீரென ஏமாற்றிக்கொண்டே இருந்தது.   

“ஏன் பேசமாட்டேன்கற ஆர்த்தி? என்னாச்சு?”

அவனுடைய அண்மை, அவள் வார்த்தைகளைத் தொலைக்க வைத்தது. நிமிர்ந்து பார்த்தவள், அவனைப் புதுசாகப் பார்ப்பது போல் பார்த்தாள். அப்பா, அம்மா போல்  (இவனும் நானும்) என்றும் நீடித்து வாழ முடியும் என்று அவள் மனது அழுத்திச் சொன்னது. உடலும் மனசும் கனிந்து குழைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. அவன் கைகளை எடுத்து விரல்களைக் கோத்துக்கொண்டவள், குரல் கம்ம, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினாள், “என்னைச் சீக்கிரம்  கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்”.

வேலை போனவுடன் தனி மனிதர்கள் எப்படிச் சிதறிப்போனார்கள் என்று சொல்வதுதான் வெங்கடேஷுக்கு முக்கியம். (ஐ.டி.த்துறையில்) “பல இளைஞர்களின் கற்பனைகள் தகர்ந்து போயின. திடீரென்று காலுக்குக் கீழே பூமியைச் சரித்துவிட்டார்கள். சிலர் மனநிலை பிறழ்ந்து போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். சுயபிம்பம் சுக்குநூறானது. சமூக மதிப்பு புரிந்துபோனது. கனவுகள் தொலைந்துபோனது.”

“குழப்பங்கள் நீடிக்கின்றன. பிரச்சினைகள் தொடர்கின்றன. மதிப்பீடுகளும் தம்மைப் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. என்னால் முடிந்ததெல்லாம் இவையனைத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவுசெய்வதே” என்று ‘இருவரி’ன் முன்னுரையில் வெங்கடேஷ் எழுதினார். ‘இடைவேளை’க்கும் அது பொருந்தும். வெங்கடேஷ் பதிவு செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது....

(‘இடைவேளை- நாவல்-  152 பக்கம், ரூபாய் 100, வெளியீடு: ‘நேசமுடன்’. கிடைக்குமிடம்: வேத பிரகாசனம்,  142 முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை- 600028. தொலைபேசி:   044-24641600.)  

சினிமா & தொலைக்காட்சி
புதுயுகம்’ என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியிடமிருந்து  புதியதொரு சேனல் கிளம்பியுள்ளது. இதற்கு நான் இன்னும் சந்தா செலுத்தவில்லை என்றாலும் திடீரென்று இன்று மாலை ரிமோட்டை அழுத்தியவுடன் திரையில் வந்தது. ஒருவேளை, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இலவசமாகக் காட்டுவார்களோ என்னவோ!

தமிழில் தொலைக்காட்சியின் தரத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டுசென்ற பெருமை, ‘புதிய தலைமுறை’யையே சாரும். அவ்வகையில் ‘புது யுகம்’ நிச்சயம் ஒரு புதுயுகத்தைப் படைக்கும் என்று நம்பலாம். ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமாவையே சார்ந்துள்ளதாகத் தெரிகிறது.      அடிக்கடி பெரியதிரையில் வர வாய்ப்பளிக்கப்படாத, இன்னமும் உடலமைப்பைக் கவர்ச்சிகரமாகக் கொண்டுள்ள, தமிழில் நல்ல பேச்சுத்திறனும் பார்வையாளர்களை ஈர்க்கும் சிரிப்பும் இயல்பாகக் கொண்ட,  அதிகம் வயதாகிவிடாத, முன்னாள் நடிகையர் சிலரும் புதுயுகத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ஆறுதலான விஷயமே.

பத்திரிகை
பொதுவாக ஆங்கில ‘இந்து’வின் சென்னைப் பதிப்பில் முன்பெல்லாம் தமிழைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை தந்ததில்லை என்பது தெரிந்ததே. (மாறாக, பெங்களூரில் வெளியாகும் இந்துவின் பதிப்பில் வாரம் ஒருமுறையாவது கன்னட மொழி பற்றியோ, கன்னட இலக்கியம் பற்றியோ, கன்னட எழுத்தாளர்களின் நிகழ்ச்சிகள் பற்றியோ பெரிய அளவில் வருவதை ஆறு ஆண்டுகள் பார்த்திருக்கிறேன்.) இதற்குப் பிராயச்சித்தமாகத்தானோ என்னவோ, தமிழ்’இந்து’வில் மொழியும் இலக்கியமும் பற்றி  வேறெந்த தினசரிகளைவிடவும் அதிக அளவிலும், வித்தியாசமாகவும், உலகத்தரமாகவும் கட்டுரைகளும் செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. விகடனும், குமுதமும், கல்கியும், இந்தியாடுடே-தமிழ்ப்பதிப்பும்   இனி போட்டியிடவேண்டியது தங்களுக்குள் அல்ல, தமிழ் இந்துவுடன் தான் என்று தோன்றுகிறது.  

தினத்தந்தி-சிந்துபாத் கதைக்குப் போட்டியாக இரண்டாம் பக்கம் மேல்பகுதியில் ஏழு-பத்தி அளவில் வெளியாகும்  சித்திரத்தொடரை
விரைவில் முடித்துவிட்டு, அதன் பிறகு,  ‘சிலப்பதிகாரம்’ அல்லது ‘மணிமேகலை’ போன்ற காவியக்கதைகளைச் சித்திரத்தொடராக வெளியிட்டால் ஆங்கில மீடியம் படிக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் விளக்கிச் சொல்லித் தமிழ் கற்பிக்க  உதவி செய்ததாகும். குறைந்தபட்சம், கண்ணகி மதுரையை எரிக்கும்வரை அல்லது மணிமேகலையின் அட்சயபாத்திரம் காலியாகும்வரை சந்தாதாரர்கள் தொடர்ந்து வாங்குவார்கள் என்பது உறுதி.

சிரிப்பு
“என் நண்பருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது எழுப்பும் எல்லா ஓசைகளையும் பதிவுசெய்துகொண்டு வருகிறேன். ஏனென்றால் என்றாவது ஒருநாள் அவன் எழுப்பிய ஓசைகளுக்கு என்ன அர்த்தம் என்று  கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?” – ஸ்டீவன் ரைட், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியப் பதிப்பு, நவம்பர் 2013, பக்கம் 63. இருவருக்கும் நன்றி.  

சந்திப்பு
இந்த வாரம் மூத்த பதிவர்களில் ஒருவரான திரு எஸ். ரமணி (“தீதும் நன்றும் பிறர்தர வாரா”) அவர்களைச் சந்திக்கவும் உடனமர்ந்து உணவருந்தவுமான நல்வாய்ப்பு, வலைப்பூ  நண்பர் கவியாழி கண்ணதாசனின் தகவலால் கிடைத்தது. பின்னர் நாங்கள் மூவரும் இன்னொரு மூத்த பதிவரான புலவர் இராமானுஜம் அவர்களைச் சந்தித்தோம். இந்தச் சந்திப்பைப்பற்றித் தமது ‘கவியாழி’ வலைப்பூவில் கண்ணதாசன் அவர்கள் எழுதக்கூடும் என்று தெரிவதால், நான் அளவோடு நிறுத்திக்கொள்கிறேன். (புகைப்படங்களும் அங்கு வரும்.)

ரமணி அவர்கள், குடியிருப்பால் மதுரைவீரன். ஆனால் சரியான காரணங்களுக்காக அடிக்கடி பெங்களூருக்குப் பயணிப்பவர். (சென்னைக்கும், அதே காரணங்களுக்காக.) அவருடன் நான் இருந்த சிறிது நேரத்திற்குள் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள அவருக்கு வாய்ப்பில்லை என்றாலும் ஒரு முக்கியமான தகவல் அவரையும் மீறிக் கசிந்தது: அவர் ஒரு தேர்ந்த சோதிடராம்.  சொன்னதெல்லாம் பலிக்கிறதாம். (பதிவர்களுக்கு முன்னுரிமை உண்டா?)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

திங்கள், நவம்பர் 18, 2013

தமிழ்த் திரைப்படத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா? ( ‘அபுசி-தொபசி’- 11)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
(முக்கிய அறிவிப்பு: இந்த வாரம் முதல் மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்படுகிறது: ‘சந்திப்பு’.)

அரசியல் 
இந்த வாரம் வேண்டாமே! (‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!’-வடிவேலு)

புத்தகம்
கேள்வி: மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்பது நம்பிக்கை. இதுதான் கடைசிப் பிறவி என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?பதில்: மனிதன் இறைவனின் குழந்தை. ஆதலால் பக்தியால் பெருகும் அவனது கண்ணீரே அவனுக்குப் பலமான ஆயுதமாம். இறைவனது நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்சலெடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அதுவே கடைசி பிறவியாம். (சொன்னவர்: பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். –‘தினம் ஒரு தியானம்’ பக்கம்  181- இராமகிருஷ்ண மடம், சென்னை வெளியீடு- ரூபாய்  30).

சினிமா
தமிழ்த் திரைப்படத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா?
பிறந்தநாள் விழாக்களில்  “Happy Birthday to You” என்ற பாடலைப் பாடுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. ஆங்கிலம் பயிலும் மாணவர்களேயன்றி, கிராமப்புறத்துச் சிறுவர்கள் வீட்டிலும் இந்தப்பாடல் புகுந்துவிட்டது. தமிழ் சினிமாவில் இந்தப்பாடல் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அப்படிப் பயன்படுத்துவதற்கு ராயல்ட்டி கொடுக்கவேண்டும் என்பது திரைப்படத்துறையினருக்குத் தெரியுமா?

 
பேட்டி ஹில், மில்ரெட் ஹில் (Patty & Mildred Hill, Sisters) என்ற சகோதரிகளால் எழுதப்பட்டோ அல்லது இசை மட்டும் போடப்பட்டோ அல்லது இரண்டுமே செய்யப்பட்டோ, நூற்றி இருபது வருடங்களுக்கு முன்பு (1893) வெளியிடப்பட்ட இந்தப் பாடல்தான் ஆங்கில மொழியில் அதிகம் பாடப்பட்ட (பாடப்படும்) பாடல் என்கிறார்கள். (இதற்கு அடுத்தபடியாக வருவது He’s  a Jolly Good Fellow  என்ற பாடலாம்.)
இப்பாடலை 1935 இல் பதிப்புரிமை செய்துகொண்டது “ஸம்மி கம்பெனி” என்ற இசைவெளியீட்டு நிறுவனம். அக்கம்பெனியை  1988 இல் விலைக்கு வாங்கியது ‘வார்னர் மியூசிக் குரூப்’ நிறுவனம். எனவே இன்றைய தேதியில் இவர்களுக்கு ராயல்டி தராமல் சினிமாவில் யாரும் ஹேப்பி பர்த்டே பாடிவிட முடியாது. தவறினால் அடுத்த பர்த்டே அவர்களுக்கு ‘அன்ஹேப்பி பர்த்டே’ ஆகிவிடும்!

அது சரி, ராயல்டி எவ்வளவு என்கிறீர்களா? எழுநூறு டாலரில் ஆரம்பித்து இரண்டு மில்லியன் வரை போகுமாம்!
தொலைக்காட்சி
அப்பாடா, ஒருவழியாக சச்சின் ஓய்வு பெற்றுவிட்டார். வெறும் கையோடு அல்ல, ஒரு கையில் சிலகோடி ரூபாய்களும், மறு கையில் ‘பாரதரத்னா’ விருதுமாக. மும்பையில் பிறந்ததால் கிடைத்த வரம். ராஜாவீட்டுக் கன்றுக்குட்டி. சரத் பவாரும் ரிலையன்ஸ் அம்பானியும் கைகொடுக்கிறார்கள். இதற்கு முன்னால் லதா மங்கேஷ்கருக்கு பாரதரத்னா கொடுத்தார்கள். அதுவும் அம்மையாரோ அவர் சார்பாக யாரோ அழுதுபுரண்டு அடம்பிடித்ததால் கொடுத்ததுதான் என்கிறார்கள். (அந்தக் காலத்தில் வாணிஜெயராமுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர்களுக்குத் தான் பாடமுடியாது என்று மறுதலித்தவர் லதா  என்பதை நீங்களும் நானும்தான் நினைவில் வைத்திருக்கிறோம்.)
சச்சினுக்குக் கிடைத்த முக்கிய காரணம், கிரிக்கெட் ஊழல்களில் அவர் எப்போதுமே சம்பந்தப்பட்டது கிடையாது என்ற சுயநேர்மையைப் பாராட்டித்தான். மேலும்  பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்ட ஆட்டக்காரர் என்பதாலுமே. வாழ்த்துவோம்.
சச்சினை விட பெரியதான உலக சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்துக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பதிலும் நம்மிடமே இருக்கிறது. தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஆனந்த் ஓர் அநாதை. கலைஞரும்  அவருக்காகப் பேசமாட்டார். அம்மா பேசினாலும் டில்லியில் யாரும் கேட்கப்போவதில்லை.  சிதம்பரமோ வாசனோ எதுவும் செய்யப் போவதில்லை. தற்போது நடந்துகொண்டிருக்கும் கார்ல்சன்-ஆனந்த் உலக சாம்பியன் போட்டியில் ஆனந்த் ஒருவேளை தோற்றுப்போய்விட்டால் அவரை வசதியாக எல்லாருமே மறந்துவிடுவார்கள்.

பத்திரிகை
கரிசல் எழுத்தாளர் சோ.தர்மனுடன் ஒரு பேட்டியை வெளியிட்டிருக்கிறது தமிழ் இந்து. (நவம்பர் 9, பக்கம் 10). இதற்கு முன் இவரது பேட்டியை நான் படித்ததில்லை. மிக விவரமாகவும் தைரியமாகவும் பேசியிருக்கிறார் தர்மன். ‘தூர்வை’ நாவல் மூலம் தலித் இலக்கியத்தின் சிறப்பான குரலாக அறியப்படுகிறவர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார்.

பேட்டி கண்டிருப்பவர் ‘மண்குதிரை’. (இயற்பெயர் என்னவோ?)  உலகத்தரமான இவரது பேட்டிகளைப் படிப்பவர்களுக்கு இவர் மண்குதிரை அல்ல, பொன்குதிரை என்பது விளங்கும்.


கேள்வி: உங்களுடைய ‘தூர்வை’ நாவல் இதுவரை காட்டப்பட்ட தலித் வாழ்க்கைக்கு மாறுபட்ட ஒன்றைச் சித்திரிக்கிறது.....

சோ.தர்மன்: இந்த நாவலை வாசித்த பலரும் இதைச் சொன்னார்கள். எங்களுக்கு இதுவரை காட்டப்பட்ட தலித், தலைக்கு எண்ணெய் தடவாமல் பரட்டைத் தலையுடன் இருப்பான். அழுக்காக, நாற்றமுடையவனாக, வன்முறை விரும்பியாக இருப்பான். தலித் பெண்கள் எளிதில் சோரம் போகிறவர்களாக இருப்பார்கள். இப்படித்தான் தலித்துகள் குறித்து சித்திரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கதையில் வரும் தலித், நிலங்கள் வைத்திருக்கிறான், உழவு மாடுகள் வைத்திருக்கிறான், மாட்டுவண்டி கட்டிப் போகிறான். இது என்ன முரணாக இருக்கிறதே எனச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இதுவரை காண்பிக்கப்பட்ட தலித் வாழ்க்கை ஒருபக்கச் சார்புடையவை. ஏற்கெனவே காட்டப்பட்டுள்ள தலித் குறித்தான சித்திரங்கள் எல்லாம் இடதுசாரி மார்க்சிய எழுத்தாளர்களால் காட்டப்பட்டவையே. தலித் எழுத்தாளர்களும் இதைத் தொடர்ந்தார்கள். என்னுடைய கதைகள் இவை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின. தலித்துகளுக்குத் தொடக்க காலத்தில் நிலங்கள் கிடையாதுதான். ஆனால் பின்பு அவர்கள் நிலவுடைமையாளர்களாகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த வாழ்க்கையைத்தான் என் கதைகளில் பதிவு செய்தேன்.

கேள்வி: தொடக்கத்தில் நிலங்கள் இல்லை என்றால் தலித்துகள் எப்படி நிலவுடைமையாளர்கள் ஆனார்கள்?

சோ.தர்மன்: முன்பெல்லாம் ஊரின் நிலங்கள் அத்தனையும் அந்த ஊரில் உள்ள பிராமணர்களுக்குச் சொந்தமாகவே இருக்கும். அதில்தான் எல்லோரும் விவசாயக் கூலிகளாகப் பாடுபடுவார்கள். அந்தப் பிராமணர்கள் அரசு வேலை கிடைத்து பட்டணங்களில் குடியேறத் தொடங்கினர். அவர்கள் சென்ற பிறகு அந்நிலங்களை நிர்வகித்தவர்கள் பெரும்பாலும் தலித்துகளே. பிற்காலத்தில் அந்நிலங்களை அதில் பாடுபட்ட தலித்துக்களுக்கே பிராமணர்கள் கையளித்துவிட்டார்கள். பிராமணர்கள் சிலர் இலவசமாகவும் கொடுத்தார்கள். கொடுப்பதைக் கொடு எனச் சிறு தொகைக்கு நிலத்தைக் கொடுத்துச் சென்றவர்களும் உண்டு. இப்படித்தான் தலித்துகளுக்கு நிலங்கள் கிடைத்தன. எங்கள் பகுதியைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. இன்று பிராமணர்கள் தலித்துகளுக்கான எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு.

கேள்வி: தலித் எழுத்துக்களை வாசிக்கிறீர்களா?

சோ.தர்மன்: தலித் எழுத்துகள் மட்டுமல்ல, பலரின் எழுத்துக்களை இன்று என்னால் வாசிக்க முடியவில்லை. தனக்குத் தெரிந்த விஷயங்களை அம்பாரமாகக் குவித்து வைக்கிறார்கள். சில பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை....... (சாகித்ய அகடமி விருது பெற்ற) ‘தோல்’ என்னால் வாசிக்கவே முடியவில்லை. ‘காவல் கோட்ட’த்திலும், ‘அஞ்ஞாடி’யிலும் எனக்கு வாசிக்கச் சில பக்கங்களே உள்ளன. மற்றவை எல்லாம் எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்கள்தாம். அதை வரலாற்றுப் புத்தகங்களிலே படித்துக் கொள்வேன். எதற்கு நாவல் வாசிக்க வேண்டும்? புனைவு என்பது தனக்குத் தெரிந்த விஷயங்களைக் கொட்டிவைப்பதல்ல. அதை நெய்யவேண்டும்.

சிறு பத்திரிகைகளில் மட்டுமே வரக்கூடிய தீவிரமான இலக்கிய விவாதங்கள் தமிழ்இந்துவில் வரத்தொடங்கியிருப்பது தமிழுக்கு ஓர் ஆரோக்கியமான ஆரம்பம். வாழ்க அவர்களின் முயற்சி!

சிரிப்பு
“தரிசா இருந்த நிலத்துல எப்படி இவ்வளவு விளைச்சலை கொண்டு வந்தீங்க?”

“இந்த இடத்துல தங்கம் இருக்குன்னு புரளிய கிளப்பிவிட்டேன். ஊரெல்லாம் சேர்ந்து தோண்டிப் பார்த்தாங்க. அப்படியே விவசாயம் பண்ணிட்டேன்..”
(17-11-2013 தினமலர் வாரமலரில் பக்கம் 24இல்- ப. உமாமகேஸ்வரி எழுதிய துணுக்கு. இருவருக்கும் நன்றி.)

சந்திப்பு
இந்த வாரம் மூத்த பதிவர்களில் ஒருவரான திரு ஜி.எம்.பி. எனப்படும் ஜி.எம்.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்திக்க முடிந்தது. பெங்களூர்வாசி. மகனைப் பார்க்கவேண்டி சென்னை வந்தவரை நானும் மனைவியும் சென்று சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த நாள் மேலும் சில பதிவர்கள் சந்திக்கவிருப்பதாகச் சொன்னார்.பதினோராம் வகுப்பு முடித்தவுடனே அரசுத்துறையில் பணியில் சேர்ந்து அதிலேயே நீடித்து பின் விருப்ப ஓய்வுபெற்றவர். இரண்டு பிள்ளைகள். பணிவும் புரிதலுமுள்ள துணைவி. எழுபத்து ஐந்து வயதிலும் எழுத்தில் துள்ளும் வேகம். எதையோ சாதிக்கவேண்டும் என்ற வெறி. வேறென்ன வேண்டும்?

தனது முதல் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருகிறார். 144  பக்கம். அறுபது ரூபாய்.   2014 புத்தகத் திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தில் கிடைக்கும். ”வாழ்வின் விளிம்பில்” என்பது தலைப்பு. பதினாறு சிறுகதைகள். இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. ஒருகதை மட்டும் படித்தேன். ‘மனசாட்சி’ என்ற புரட்சிகரமான கதை. மனதை என்னவோ செய்கிறது. உண்மையின் இயல்பே அதுதானே! (அது என்ன உண்மை? நீங்களும் படித்தால் தானே தெரியும்!)

பெங்களூர் வரும்போது தம் இல்லத்திற்கு வரவேண்டுமென்று அன்போடு அழைத்தார்கள் தம்பதியர். அவர்கள் விருப்பம் விரைவில் நிறைவேறலாம்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

திங்கள், நவம்பர் 11, 2013

வயதான பிறகு நாவல் எழுதுவதிலுள்ள சங்கடங்கள் ( ‘அபுசி-தொபசி’- 10)

  (“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த அளவுக்குப் பணி செய்திருக்கிறார்கள் என்று ஜூனியர் விகடன் வாரம் ஒரு எம்.பி. வீதம் மதிப்பெண் போட்டுவருகிறது. இதில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண் வாங்கியவர்கள் மிகவும் குறைவு. சமீபத்திய இதழில் கடலூர் எம்.பி. யான கே.எஸ்.அழகிரிக்கு ஜூவி கொடுத்திருக்கும் மதிப்பெண் வெறும் முப்பத்திரண்டு தான்! இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எனவே இவரைச் செயல்படவிடாமல் தமிழக ஆளும்கட்சி முடக்கியுள்ளது என்பது தெளிவு. இவர் மீதான ஜூவியின் ஒரு முக்கியக் குற்றச்சாட்டு, கடலூர் புதுநகரில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நான்கு வருடங்களாகியும் இன்னும் முடியவில்லை என்பதாகும்.

சுரங்கப்பாதை அமைப்பது கடலூர் நகராட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அங்கு காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை. சுரங்கப்பாதை அமையப்போகும் இடத்திலுள்ள உள்ளூர்ப் பெரியமனிதர்களின் கடைகள், இடங்கள் இவற்றைத் தமிழக ஆளும்கட்சியும் தி.மு.க.வும் பாதுகாக்க முனைந்திருக்கும் நிலையில் எங்கிருந்து வரும் சுரங்கப்பாதை? (கடலூர் மேல் உனக்கு என்ன அக்கறை என்கிறீர்களா? எனது மாமியார் ஊர் ஐயா!) 

புத்தகம்
வயதானவர்கள் நாவல் எழுதுவதில் பல சங்கடங்கள் உண்டு என்று தெரிகிறது- அவர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் தான்.

‘ஹிந்து’ ஆங்கிலப் பதிப்பில் 08-11-2013 Friday Review  பக்கம் 4 இல் ஒரு தமிழ் நாவலைப் பற்றி இவ்வாறு விமர்சனம் வந்துள்ளது:

மூன்று தலைமுறைக் கதை என்றாலே சிக்கலானதுதான். ஆகவே, கதைக்கருவானது, கதை நிகழ்வதாகச் சொல்லப்படும் காலத்துச் சரித்திரத்தில் கவனத்தோடு இணைக்கப்படவேண்டும். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும். உதாரணத்திற்கு இந்நாவலில் காணப்படும் சில குழப்பங்களைக் கூறலாம்:

  1. ரங்கன் தனது இருபதுகளில் திருமணம் செய்துகொண்டதாகவும், மணமான பத்துவருடம் கழித்தே குழந்தை பிறந்ததாகவும் பக்கம் 938இல் வருகிறது. ஆனால், அவனுக்கு  85 வயது ஆகும்போதுதான் அவனுடைய இரண்டு குழந்தைகளும் கல்லூரிக்குப் போகிறார்கள் என்று பக்கம்  885 இல் வருகிறது.
  2. 'நல்லி' கடை 1928இல் தொடங்கப்பட்டதாகப் பட்டாபி, வேதாவிடம் கூறுகிறான். (பக்கம் 179) அப்போது மைதிலி என்ற கதாபாத்திரம் குழந்தையாக இருக்கிறது. ஆனால்   1921இல் அதே மைதிலி தனது மூன்றாவது குழந்தையைச் சுமந்திருப்பதாக பக்கம் 531இல் வருகிறது.
இதிலிருந்து பெறும் பாடம் என்ன?
எழுபது வயதுக்குமேல் யாரும் நாவல் எழுதாதீர்கள். அப்படி எழுதினால் ஆயிரம் பக்கம் வரும்படி எழுதாதீர்கள். அப்படியும்  எழுத நேர்ந்தால் மூன்று தலைமுறைக் கதையை எழுதாதீர்கள். நினைவாற்றல் தேய்ந்துவரும்பொழுதில் தேவைக்குமேல் ரிஸ்க் எடுப்பதில் என்ன லாபம்?

(ஜெயகாந்தன் எழுதுவதை ஏன் நிறுத்தினார் என்று புரிகிறதா?)

 அதுசரி, மேற்படி நாவலின் பெயர் என்ன, யார் எழுதியது என்கிறீர்களா? கடைசியில் பாருங்கள்.

சினிமா

தீபாவளியன்று விஜய் டிவியில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஒளிபரப்பினார்கள். அதற்கு ஒருநாள் முன்புவரை, வலைப்பதிவுகளில் இப்படத்தைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று எழுதியிருந்ததை நானும் நம்பிவிட்டேன். படம் பார்த்த பின்னால்தான் தெரிந்தது, அதெல்லாம் ஆதிசங்கரர் சொன்ன மாயை என்று. முதல் பதினைந்து நிமிடம், இப்படத்தை யாராவது எழுந்துவிடாமல், தொடர்ந்து, பார்க்கக்கூடுமானால், அவர்களை உலகில் எந்தச் சக்தியாலும்  எழவைக்க முடியாது என்பது சத்தியம். இனிமேல் பிரபல பதிவர்கள் கொடுக்கும் சர்ட்டிபிகேட்டை நம்பிப் படம் பார்ப்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று புரிந்துவிட்டது.

தொலைக்காட்சி

நவம்பர் மாதம் வந்தால்போதும், வேளுக்குடியார், காலண்டர் விற்கத் தொடங்கிவிடுகிறார். (தூர்தர்ஷன், விஜய் டிவி புகழ்...). (அருகிலுள்ள அவரது படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதை முதலில் வெளியிட்டவருக்கு நன்றி.)

பேராசிரியர் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களுடைய வைணவம் பற்றிய உரைகள் அற்புதமானவை என்பதில் இரண்டு கருத்து இருக்கமுடியாது.  இந்து சமயம் செல்வம் துறத்தலை வாழ்வின் ஒரு நோக்கமாக வலியுறுத்தினாலும், இன்றைய சூழ்நிலையில் பணமில்லாதவன் பிணம் என்பது உண்மையன்றோ! எனவே தமது அறிவுத்திறமையைப் பணமாக்கத் தெரிந்த எவரும் நமது மரியாதைக்குரியவர்களே. 

ஸிட்டி யூனியன் வங்கியின் எந்தவொரு கிளையிலும்போய், ரூபாய் இருநூறு செலுத்திப் பதிவு செய்துகொண்டால், ஜனவரி முதல் வாரம் பெருமாள் காலண்டரும், நான்கு டிவிடிக்களும் கூரியர் மூலம் அனுப்பிவைக்கப்படுமாம். யாருடைய வீட்டிலெல்லாம் வேளுக்குடியாரின் சொல்மழை பொழியப்போகிறதோ, அவர்களுக்கெல்லாம் எனது வாழ்த்துக்கள். (அதுசரி,  பக்திதான் எப்போதுமே சூடாக விற்பனையாகும் பொருள் என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறதோ?)

பத்திரிகை

விகடன் தீபாவளி மலர் – 2013 இல் பிரபஞ்சன் ஒரு அற்புதமான கதை எழுதியிருக்கிறார். (பக்கம் 276-283)(நிறைவோடு இருக்கிறேன்”).பழைய காதலர்களான மூர்த்தியும் சுமதியும் தத்தமக்குக் குழந்தைகள் பிறந்த பிறகு ஒருநாள் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். தம் குழந்தைகளுக்கு இவர்கள் ஒருவரையோருவர் எப்படி அறிமுகப்படுத்துவார்கள்?
சுமதி தன் மகளிடம் இப்படிச் சொல்கிறாள்: “உனக்குச் சொல்லி இருக்கேன்ல, நான் அந்தியூர்ல கொஞ்ச காலம் வேலை பார்த்தேன்னு. அப்போ இவர் பழக்கம். இவரோட நெருங்கின நண்பர்  கோபி என் ஆபீஸுக்கு வருவார். அப்போ அறிமுகம்”.
சாமர்த்தியமான, பாதுகாப்பான பொய். சுமதியின் அலுவலகத்தில் மூர்த்தி பணியாற்றியதில்லை. அவள் அலுவலகத்தில் அவனுக்கு நண்பனும் இல்லை. இப்போது மூர்த்தியின் முறை. (தன் மகனிடம் சொல்கிறான்.)
“தம்பி, என் ஆபீஸ்ல ரீட்டான்னு ஒருத்தங்க வொர்க் பண்ணாங்க. அவங்களைப் பார்க்க இவங்க வருவாங்க. அப்போ பழக்கம்.”

பெண்ணும் பையனும் தலையசைத்துக்கொண்டார்கள். ‘ஹலோ’ சொல்லிக்கொண்டார்கள்.

எப்படியிருக்கிறது அறிமுகம்? சரி, மேற்கொண்டு என்ன ஆகும்?

ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ மாதிரி, சுஜாதாவின் ‘நகரம்’ மாதிரி, தி.ஜானகிராமனின் ‘துணை’ மாதிரி, பிரபஞ்சனின் பேர்சொல்லும் கதை இது. படிக்க மறந்தால் ஒரு அற்புதமான அனுபவத்தை இழந்தவராவீர்கள்.

சிரிப்பு
“தலைவருக்கு சினிமா பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்.”

“அதுக்காக ஊதா கலரு ரிப்பனை வெட்டித்தான் திறப்புவிழாவை நடத்துவோம்னு சொல்றது கொஞ்சம் ஓவர்.”

(நன்றி: 10-10-2013 தமிழ் இந்து – பக்கம் 12. படித்தவுடன் சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பல்ல.)
======================================================================
 
விடை:
திருமதி விஜயலட்சுமி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ என்ற நாவல் தான் அது.

சில நாள் முன்பு தான் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. ஆயிரம் பக்கங்கள்-விலை ரூபாய் நானூற்றுத் தொண்ணூறு.

ஆசிரியர், அகில இந்திய வானொலியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

சு.சமுத்திரத்தின் நாவல் ஒன்றை ஹிந்திக்கு மொழிபெயர்த்தவர்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com.

திங்கள், நவம்பர் 04, 2013

விசிறி சாமியாரும் நானும் (அல்லது) தமிழ் ‘இந்து’வின் தலை தீபாவளி ( ‘அபுசி-தொபசி’- 9)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று காங்கிரசல்லாத கட்சிகள் (அதாவது தமிழ்நாட்டில் கலைஞர்) முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வேறு யாராவது அமைச்சரை அனுப்பிவிடக்கூடும் என்று தெரிகிறது. உள்ளூர் அரசியல் வேறு, சர்வதேசிய அரசியல் கடமைப்படுகள் வேறு என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன?  வயதான காலத்தில் 2-ஜி யும் அழகிரியும் கொடுக்கும் தொந்தரவுகளைத் திசைதிருப்ப அவருக்கு வேறு என்னதான் வழி, சொல்லுங்கள்?  தமிழர்களை இனியாவது இனப்படுகொலைகளிலிருந்து காப்பாற்றவேண்டிய தார்மிகக் கடமை ஒருபுறமும், அதே சமயம், இந்துமாக்கடலில் பெருகிவரும் சீன ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்வகையில் இலங்கையை வெகுவாக அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயமுமாக இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் மன்மோகன் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.  

புத்தகம்

தீபாவளி மலர் என்றாலே விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமணி, தினகரன் ஆகிய ஆறு தான் நினைவுக்கு வரும். இப்போது தமிழ் ‘இந்து’வும் சேர்ந்துகொண்டிருக்கிறது. விகடனை வீழ்த்திவிடத் திட்டம்போட்டுக் காய் நகர்த்தியிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் எனலாம். இந்துவுக்கு இது தலை தீபாவளி வேறு. உற்சாகத்திற்குக் கேட்கவா வேண்டும்? ஏழு கதைகள், 10 கவிதைகள், 33 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கட்டுரைகள் ஆன்மிகம், பெண்கள், சினிமா, வாழ்வு இனிது, உயிர்மூச்சு என்ற தலைப்புகளில் அமைந்துள்ளன. இஃதன்றியும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு சிறப்பான தலம்/பொருள் என்று 29 ஒருபக்கக் கட்டுரைகளும், 'புத்தாயிரத்தின் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் வளர்ந்து வரும் சினிமா நடிகர்-நடிகைகள் இருபது பேர் பற்றிய அரைப்பக்கப் புகைப்படத்தகவல்களும், 'புத்தாயிரத்தின் படைப்பாளிகள்' என்ற தலைப்பில் வளர்ந்துவரும் சாதனை படைத்த சினிமா இயக்குனர்கள் 9 பேர் பற்றிய ஒருபக்கக் கட்டுரைகளும் இம்மலரின் சிறப்பு அம்சங்களாகும்.

(எனது ஒரே வருத்தம், எனது ஊரான இராணிப்பேட்டைக்கு அருகில் ஆற்காட்டில் அமைந்துள்ள ‘டில்லி கேட்(Gate) என்னும் ஆற்காட்டு நவாபின் கோட்டை பற்றிய செய்தியில் அதன் படத்தை வெளியிடாமல்போனார்களே என்பது தான்.)  

‘விசிறி சாமியார்’ என்று அழைக்கப்பட்ட திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களைப்பற்றி பாலகுமாரன் எழுதியுள்ள கட்டுரையைக் குறிப்பிட்டாகவேண்டும்.

பாலகுமாரன், விசிறி சாமியாரின் அணுக்கத்தொண்டர் என்பது நாம் அறிந்ததே. குருவைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் நெஞ்சம் நிரம்பிய உணர்ச்சி வெள்ளத்தில் நம்மை மூழ்கடித்துவிடுகிறார். ஒருமுறை அவரைச் சந்திக்கப் பாலகுமாரன் சென்றிருந்தபோது, அவர் கூறினாராம்: “பால்குமார்! இந்தப் பிச்சைக்காரன் குளிப்பதில்லை. மாற்று உடைகள் உடுத்துவதில்லை. நகங்களை வெட்டுவதில்லை. தலையைச் சீர்செய்துகொள்வதில்லை. ஆனாலும் இந்தப் பிச்சைக்காரனை நோக்கி மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தப் பிச்சைக்காரன் சிகரெட் குடிக்கிறான். ஆனால் நாற்றமே எடுப்பதில்லை என்று இங்கே வருகிற ஜனங்கள் சொல்கிறார்கள். பாலகுமார், இது பற்றி இந்தப் பிச்சைக்காரனுக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் என் அப்பாவின் அருள். எனவே, நாம் இருவரும் பேசவேண்டாம். சிகரெட் குடிப்போம்” என்று உட்காரவைத்தாராம்.

இதை படித்துக்கொண்டிருக்கும்பொழுது, முதன்முதலில் விசிறி சாமியாரை நான் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பம் ஓடிவந்து ‘என்னைப் பற்றி எழுது’ என்றது.  

அது 1986-87இல் ஏதோ ஒரு நாள். திருவண்ணாமலை நகர எல்லைக்குச் சற்றே அப்பால் ஒரு கிராமத்தில் அப்போதுதான் துவக்கப்பட்டிருந்த எங்கள் வங்கிக் கிளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு ஆவனசெய்யும்பொருட்டு  மண்டல மேலாளர் கிளம்பியபோது, சென்னையிலிருந்து என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார். காலையில் ஏழுமணி சுமாருக்குத் திருவண்ணாமலை  போய்ச் சேர்ந்தோம். 

உள்ளூர் வங்கியின் மேலாளர் எங்களை முதலில் இரமணாசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். காலை உணவாக ஒரு இட்டிலியும் ஒரு வாழைப்பழமும் (‘சாத்விக உணவு’) தந்து உபசரித்து, ஆசிரமத்தைச் சுற்றிக்காட்டினார்கள். பிறகு அவர்களின் வங்கித் தேவைகளைப் பற்றி ஒருமணிநேரம் உரையாடினார்கள். வெளியே வந்தபோது பசியெடுத்தது. உள்ளூர் மேலாளரோ சாப்பிட நேரமில்லை என்றார். மண்டல மேலாளர் சற்றுக் கோபத்துடன் அவரை ஏறிட்டுப் பார்த்தார். “விசிறி சாமியார் என்று ஒருவர் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். நேற்றுத்தான் இளையாராஜா வந்து பார்த்துவிட்டுப்போனாராம். அவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை முதலில் கவனிக்கலாமா?” என்றார்.

அப்போது விசிறி சாமியார் அவ்வளவு பிரபலமாகாத நேரம். சன்னதித் தெருவில் ஒரு பழைய வீட்டில் அவர் குடியிருந்தார். “வாசல் கதவு எப்போதும் மூடியே இருக்கும். மணிக்கொரு முறை கதவைத் திறந்து பார்ப்பார். அப்போது யார் கண்ணில் படுகிறார்களோ அவர்களை உள்ளே வரச் சொல்வார்” என்றார் உள்ளூர் மேலாளர். ஆன்மிகவாதிகள் என்றாலே சாமான்யர்களுக்கு பக்தி கலந்த எதிர்பார்ப்பு உண்டல்லவா? சரியென்று போனோம்.

பதினைந்து நிமிடங்கள் காத்திருந்தபிறகு கதவு திறந்தது. கையில் விசிறியுடன், நீண்ட தாடி, தலைப்பாகை, அழுக்கான பஞ்சகச்ச உடையின் மேல் சிவப்பு சால்வை போர்த்தியவண்ணம் ஒருவர் வந்தார். தெருவில் இருந்த எல்லாரும் சாமி, நமஸ்காரம் என்றார்கள். அவர் யாரையும் குறிப்பாகக் கவனிக்காமல் புன்னகைத்தார். பின் விரல்களை மடித்து சிகரெட்டை ஓர் இழு இழுத்தார். பின் உள்ளூர் மேலாளரைப் பார்த்து, “So, you have brought your Regional Manager to meet this Beggar?” என்று பெருத்த குரலில் சிரித்தார். விசிறி சாமியார் தன்னை எப்பொழுதும் ‘பிச்சைக்காரன்’ என்றும், கடவுளை ‘மை ஃபாதர்’ என்றும் குறிப்பிடுவார் என்று அப்போதுதான் தெரிந்தது. உள்ளே வரச்சொல்லி சைகை காட்டினார். நாங்கள் மூவரும் நுழைந்தவுடன் கதவைச் சாத்திவிட்டார்.

“Please sit down” என்றார். எப்படி உட்காருவது என்று புரியாமல் திகைத்தோம். ஏனெனில் அந்த வீட்டில் ஒரு நீண்ட தாழ்வாரம் மட்டுமே தெரிந்தது. அதில் அவர் உட்கார்ந்தார். தரை முழுதும் சற்றும் இடைவெளியின்றி, அணைந்த சிகரெட் துண்டுகள் எங்கு பார்த்தாலும் இரைந்து  கிடந்தன. ஏராளமான வாழைப்பழத்தோல்கள் பல நாட்களாக அகற்றப்படாமல் கிடந்ததால்  தரை பிசிபிசுக்குப்பட்டிருந்தது. கொட்டங்கச்சிகள் (‘சிரட்டை’) நிறைய சிதறிக்கிடந்தன. அவற்றில் பால் வழிந்துகொண்டிருந்தது. எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு பூனையா நாயோ ஒரு மூலையில் அமைதியாகப் படுத்திருந்ததாக நினைவு. தரையில் பாயோ வேறு அமர்வதற்கான ஆசனங்களோ இருக்கவில்லை. சூழ்நிலை ஒருமாதிரியாக இருந்ததால் மூவரும் அதிர்ச்சியும் வியப்புமாக அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்று நின்றுகொண்டே இருந்தோம்.

பேச்சு ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது. (விசிறி சாமியாருக்குத் தமிழ் தெரியாது). வங்கியைப் பற்றிக் கேட்டார். சொன்னோம். “இந்தப் பிச்சைக்காரனுக்கு வங்கிக் கணக்குகள் கிடையாது” என்று சிரித்தார். ‘உங்கள் உள்ளூர் மேலாளருக்கு ஏதோ தொந்தரவு இருக்கும்போலிருக்கிறதே, கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?’ என்றார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மண்டலமேலாளர் கண்ணில் சினத்தோடு என் பக்கம் திரும்பினார். ‘இவன் என்ன, தனது பெர்சனல் விஷயத்திற்காக இவரிடம் சிபாரிசுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டானா?’ என்று கண்ணாலேயே கேட்டார். நானும் ‘பொறுங்கள்’ என்று கண்ணாலேயே பதில் கூறினேன். சாமியார் ஆளுக்கொரு வாழைப்பழம் பிரசாதமாக வழங்கினார். அதை அங்கேயே உரித்துச் சாப்பிடச் சொன்னார். தோலைத் தானே வாங்கி அங்கேயே வீசி எறிந்தார்.  ஒரு கொட்டங்கச்சியில் பாலை ஊற்றி ஓசையுடன் குடித்தார். பிறகு நாங்கள் இருப்பதையே மறந்தவராக அங்கிருந்த அணைந்து போன சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டார். உள்ளூர் மேலாளர் அதன் உட்குறிப்பைப் புரிந்துகொண்டவராக, ‘நாம் போகலாம்’ என்றார். வெளியே வந்தோம்.

நான் ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற கோட்பாட்டைப் பின்பற்றுபவன். ஆன்மிகவாதிகளைப் புரிந்துகொள்வது சாமானியர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதில் எனக்கு மரியாதை உண்டு. எனவே விசிறி சாமியாரை மனத்தால் வணங்கிவிட்டு வெளியே வந்தேன். வாசலில் ஒருவர் சாமியார் படம்போட்ட கேலண்டர் கொடுத்தார். வாங்கிக்கொண்டோம். மண்டல மேலாளர் மட்டும் கோபத்துடனே இருந்தது புரிந்தது. உள்ளூர் மேலாளரிடம் முகம்கொடுத்தே பேசவில்லை. விசிறி சாமியாரைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவர் உண்மையில் ஆன்மிகவாதியாக இருப்பின், ஒரு தனி நபரின் விஷயத்திற்குச் சிபாரிசு செய்தது சரியா என்ற கேள்வியும் அவர் மனதில் எழுந்திருக்க வேண்டும். இப்போது பசி இன்னும் அதிகரித்துவிட்டபடியால் அருகிலிருந்த ஓட்டலுக்குப் போனோம்.

உள்ளூர் மேலாளர் அப்போது அலுவலக விஷயமாக ஒரு சிக்கலில் மாட்டியிருந்தார். பொதுவாக வங்கி மேலாளர்களுக்கு வரும் சிக்கல் தான். Technical Issue எனலாம். ஆனால் உடனடியாக அதிலிருந்து அவரை விடுவிக்க இயலாத சிக்கல் அது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர், விசிறி சாமியாரிடம் ஆறுதலுக்காகச் சென்றிருக்கலாம். சாமியாரும் அக்காலத்தில் பலருடன் பேசிப் பழகிக்கொண்டிருந்த நேரம் அது என்பதால் இவரிடமும் பிரச்சினை பற்றிய விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம். அதன் விளைவாகவே மண்டலமேலாளரிடம் சிபாரிசு செய்திருக்கலாம்.

ஆனால் விசிறி சாமியாரைச் சந்தித்துவிட்டு வந்ததன் பின்விளைவு உள்ளூர் மேலாளருக்குப் பெரிதும் பாதகமாகவே அமைந்தது. அந்தப் பாதக விளைவுகளிலிருந்து வெளிவர மேலும் பத்து ஆண்டுகள் ஆயின.

இப்போதும் விசிறி சாமியார் என்றால் அவர் கொடுத்த வாழைப்பழம் தான் நினைவுக்குவருகிறது. அவரிடம் எனக்குத் தனிப்பட்ட பிரார்த்தனைகள் எதுவும் இல்லை என்பதாலும், நான் ஏற்கெனவே அரவிந்த அன்னையின் சக்தியால் ஈர்க்கப்பட்டு மன அமைதி பெற்றிருந்ததால் இன்னொரு குருவை நாடவேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை  என்பதாலும், விசிறி சாமியாரின் தரிசனம் எனக்குப் புதிதாக எதையும் தரவில்லை. உணர்த்தவுமில்லை.  ஆனால் எந்தவொரு ஆன்மிகப் பெரியவரையும் இறையருள் இருந்தாலன்றிச் சந்திக்க இயலாது என்பதை நம்புகிறவன் நான். அவ்வகையில் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் திடீர் தரிசனம் எனக்குக் கிடைக்கக் காரணமாயிருந்த இருவரையும் நான் நன்றியோடு பார்க்கிறேன்.

பாலகுமாரனின் கட்டுரை புனிதத்துவம் வாய்ந்தது. படிக்க மறவாதீர்.

சினிமா
பள்ளிப்பருவத்தில் என் மகள் தன் வகுப்புத்தோழியரை எங்கள் வீட்டிற்கு அழைத்துவருவதுண்டு. அவர்களில் ஒருத்தியின் தகப்பனார் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்தார். ஆனால் தனக்குத் திரைப்படத்துறையில் நாட்டமில்லை என்றாள் அந்தப் பெண். பின்னாளில் அவள் பல் மருத்துவரானாள். அவளுடைய சகோதரரோ திடீரென்று திரைத்துறையில் நடிகராக நுழையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் பிறகு நாடறிந்த நடிகரானார். நாடறிந்த நடிகரின் மருமகனும் ஆனார். அந்த நடிகர் தான் தனுஷ்.

நடிகர் என்பதற்கான வழமையான கட்டுடலோ முகலட்சணங்களோ பிற ஆளுமை அம்சங்களோ ஏதும் இல்லாததொரு வீதிச்சிறுவன் தோற்றம் கொண்ட தனுஷ், சிவாஜியும் எம்ஜியாரும் ரஜினியும் கமலும் செங்கோலோச்சிய திரை சாம்ராஜ்ஜியத்தில் மகுடம் சூட்டப்பட்டிருப்பது அவரைப்போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டுகிறது. தமிழிலும் இந்தியிலும் வெற்றிப்பட நாயகராகத் திகழும் தனுஷைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ஒன்றுண்டு: “இப்படி ஆவேசமாக வெற்றி தேவதையைத் தழுவுகின்றீர்களே, ஒய் திஸ் கொலவெறி?”

தொலைக்காட்சி
ஏர்டெல் டிஜிட்டல் டிவி என்னும் மூதேவி

ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு வைத்திருக்கிறேன். சென்ற மாதம் netbanking வழியாக ரீசார்ஜ் செய்யும்போது ‘refresh’ என்ற பட்டனைத் தெரியாத்தனமாக அழுத்திவிட்டேன். அவ்வளவு தான் ஸ்டார் விஜய் சேனல் வராமல் போய்விட்டது. (அது தான் என் இல்லத்தரசி ஆழ்ந்து பார்க்கும் ஒரே சேனல்). என்னுடையது ala karte  என்னும் ‘இஷ்டம்போல் சேனல்களைத் தேர்ந்தெடுக்கும்’ பேக்கேஜ் ஆகும். வெளிநாட்டு சேனல்கள் பல அடங்கிய பேக்கேஜ் அது. அவ்வளவும் மாறி, இது நாள் வரை பார்க்காத சேனல்கள் இப்போது வந்தன. தமிழ் சேனல்கள் மொத்தமே ஏழெட்டு தான் இப்போது கிடைத்தன.

ஏர்டெல் கால்சென்ட்டருக்குப் புகார் செய்தேன். எனது பழைய பேக்கேஜை மீண்டும் அமுல்படுத்துங்கள் என்று கேட்டேன். இது சின்ன விஷயம், உடனே செய்கிறோம் என்றார்கள். என்னுடைய நேரத்தைச் செலவுசெய்து அவர்களுடன் உரையாடியதற்கு நன்றி தெரிவித்தார்கள். பேச்சை முடிக்கும்போது கேட்டேன்: “எப்போது என் புகார் தீர்க்கப்படும்?” என்று. “இட் வில் டேக் சம் டைம்“ என்றார்கள்.

அந்த ‘சம் டைம்’ வருவதற்குள்  நாள்தோறும் காலையிலும் மாலையிலும் புகாரைப் புதுப்பிக்கவேண்டியிருந்தது. மொத்தம் பதினைந்து நபர்களிடம் நான் பேசியிருப்பேன். ஒவ்வொருவரிடமும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. இது toll-free அல்ல என்பதால் ஒவ்வொருமுறையும் எனக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குறையாமல் போன் பில் வந்தது. அதைவிடவும் முக்கியமான நிகழ்வு என்னவென்றால்,   இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக ஸ்டார் விஜய் சேனலை வரவழைத்துக் கொடுக்காமல்,  சூப்பர் சிங்கர் பார்க்கவிடாமல் செய்துவிட்ட என் இயலாமை உலகளவில் பிரபலமாக்கப்பட்டு, அனைவராலும் அனுதாபத்திற்கு உரியவனானேன் என்பதை அறிக..

சரியாக இருபத்தைந்து நாட்கள் கழிந்தபிறகு, திடீரென்று ஒருநாள் ஸ்டார் விஜய் வந்தே விட்டது! சரி தான், பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று பார்த்தால், நான் கேட்காத சேனல்கள் வருகின்றன. கலைஞர் டிவியும் ஜெயா பிளஸ்சும் இன்னமும் வர மறுக்கின்றன. தொலையட்டும் விடுங்கள் என்கிறது சமையலறை. உங்கள் அனுபவம் எப்படி?

பத்திரிகை
ஆங்கிலத்தில் வெளியாகி நாற்பது வருடங்கள் ஆன பிறகு தமிழ் டப்பிங்கில் வந்திருக்கிறது, இஸ்லாம் மதத்தின் வரலாற்றைச் சொல்லும் ‘தி மெசேஜ்’ என்னும் டிவிடி. (ஜூனியர் விகடன் 23.10.2013-பக்கம் 10.)  புகழ்பெற்ற ‘உமர் முக்தார்’ படத்தை இயக்கிய முஸ்தபா அக்காட் தான் இதன் தயாரிப்பாளராம்.  கவிஞர் அப்துல் ரகுமானால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ள இந்த டிவிடியைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறேன்.

முக்கியமாக இளைஞர்கள் பார்க்கவேண்டும். இஸ்லாம் மதம், வன்முறையின் மூலம் மட்டுமே பரவிய மதம் என்று தான் இன்னமும் நம்பப்படுகிறது. இது சரியான கருத்தா என்பதை மறுஆய்வுக்கு உட்படுத்த இதுபோன்ற டிவிடிக்கள் நிச்சயம் உதவும். தெளிந்த அறிவினைப் பரப்புவதன் மூலம் மதம் சார்ந்த வன்முறைகளைத் தவிர்த்திட இம்மாதிரியான கலைமுயற்சிகள் அதிகம் தேவை.  

சிரிப்பு
 
தீயா வேலை செய்யணும் குமாரு!”
ஏங்க ...பார்த்துப் பேசுங்க. இது பட்டாசுக்கடை!”
      (எழுதியவர்: அ.ரியாஸ். விகடன் தீபாவளி மலர் பக்கம் 291)

© Y.Chellappa