சனி, மே 21, 2022

இன்னதென்று அறியாமல்..

39   இன்னதென்று அறியாமல்..  

(இன்று கிழமை வெள்ளி -6 )  

அமெரிக்காவில் 39  ஆவது நாள் 

(விட்டுப்போன கட்டுரைகள்)


இன்றைய சமுதாயத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் மிகப் பரவலாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.  அவசரமாக எழுதுவதும், அதற்கு அவசரமாகப் பின்னூட்டம் (‘பதில்’) போடுவதும் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அண்மையில் ஓர் நிகழ்வின் மூலம் நான் தெரிந்துகொண்டேன்.  

எனது வலைத்தளம் தவிர,  வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும்  தான் நான் புழங்குகிறேன். தினமலரில் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும் ஆன்மிக மலரில் கோவில்கள், இதிகாசங்கள், பக்தி ஆகியவை  பற்றிய எளிமையான ஒரு குறுக்கெழுத்து போட்டி வெளியாகும். 



அதற்கான விடையை புகைப்படம் எடுத்து டெலிகிராம் என்ற ‘ஆப்’  மூலம்தான் அனுப்ப வேண்டும்.  பரிசு ஒரு லட்ச ரூபாய். (“ஆயிரம் பொன்னாச்சே!”)   ஆனால் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதே  வழக்கம்.  அதில் பல முறை பங்கெடுத்துக் கொண்டும்  அலைபேசி எண்ணை மாற்றி மாற்றிக் கொடுத்தும்  அந்த ஆயிரம் ரூபாய் கூட நமக்கு வருவதாய் இல்லை.  எனவே டெலிகிராம் ஆப்பை  அலைபேசியில் இருந்து  அகற்றி விட்டேன். (ஆனாலும் குறுக்கெழுத்தைப் பூர்த்திசெய்யத் தவறுவதில்லை). 


மற்றப்படி இன்ஸ்டாகிராம்,  ட்விட்டர்  ஆகியவற்றில் நான் இல்லை. முன்னது (அழகான) பெண்களுக்கானது, பின்னது அரசியல்வாதிகளுக்கானது என்று கேள்விப்படுகிறேன். 


சில ஆண்டுகளுக்கு முன்பு கோரா. காம் என்ற தளத்தில் கணினித் துறை பற்றிய கேள்விகளுக்கு விஷயம் தெரிந்த பலர் விடையளிப்பதாகக் கேள்விப்பட்டு அதை நிறுவிக்கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் ஆபாசம், ஜாதிவெறி, வீண் வம்பு இவைதான் அதில் அதிகம் வருகின்றன. எனவே எப்போதாவதுதான் அதில் நுழைவதுண்டு. அகற்றினாலும் அது போவதில்லை. ஜிமெயில் வழியாக ஆங்கிலத்தில் மட்டுமின்றித் தமிழிலும்  எப்படியோ வழுக்கிக்கொண்டு வந்துவிடுகிறது. 


பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்,  சக-ஓய்வாளர்கள் செய்ததுபோல் நானும் லிங்க்டு-இன்னில் பதிவுசெய்துகொண்டேன். அதை எப்போது  பில் கேட்ஸ் எக்கச்சக்க விலைக்கு வாங்கினாரோ அன்றுமுதல் அது அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை.


ஒரு நாள் ‘இன்று உங்களை மூன்று பேர் பார்த்தார்கள்’ என்று மெயில் அனுப்பும்.


ஆயிரத்துக்குமேல் குடும்பங்கள் வசிக்கும் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள சூப்பர்மார்க்கெட்டுக்கு தினமும் ஒருமுறையாவது சென்றுவரவேண்டிய தேவை இல்லறத்தானாகிய எனக்கு உண்டு என்று உங்களுக்குத் தெரியும்தானே! தவிரவும், மாலை நேரத்தில் என் வயதையொத்தவர்களும், மற்றும் ‘வாழ்த்த வயதில்லை- வணங்குகிறேன்’ வகையறாவைச் சேர்ந்தவர்களும் சுமார் பதினைந்து அல்லது இருபது பேர்,  கோவிட் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்து ஒரே இடத்தில் கூடி ஒருமணிநேரம் உரையாடுவதுண்டு. உலக நன்மைக்கான விஷயங்கள் அதில் இடம்பெறுவதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.            


எனவே, மூன்றே பேர்தான் என்னைப் பார்த்தார்கள் என்று சொன்னால் அது நியாயமா? லிங்க்டு-இன் உள்ளே சென்று பார்த்தால், அரைமணி நேரம் சுற்றிக்கொண்டே இருந்தாலும் அந்த மூன்று பேரைக் கண்டுபிடிக்கமுடியாது.


“நான் பத்து மாதமாக வேலையில்லாமல் இருக்கிறேன், உதவிசெய்யுங்கள்” என்று நான்கு புலம்பல்கள் தெரியவரும். அதற்கு பதில் சொல்வதாக ஏழெட்டு பேர்களிடமிருந்து “.... என்ற கம்பெனியில்...  என்ற பொசிஷன்  காலியிருக்கிறது. விண்ணப்பிக்கலாம்”  என்று ஆதரவுக்குரல் எழும்பியிருக்கும். “நான் ராஜினாமா செய்ததால்தான் அந்த இடம் காலியாகியிருக்கிறது” என்ற உண்மையையும் அவர்களில் யாராவது ஒருவர் பெருந்தன்மையாகச் சொல்லியிருப்பார். ஆகவே இந்த ஊடகத்தில் என்னுடைய பெயர், மற்றும் பழைய அனுபவங்கள் தவிர வேறெந்த சங்கதியும் புதுப்பிக்கப்படாமலே இருக்கும் என்பதை அறியவும். 


இப்போது விஷயத்துக்கு வரலாம்.  வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் இப்போதெல்லாம் இரண்டு பக்கம் முதல் இருநூறு பக்கம் வரை எழுதுகிறார்கள் அல்லது ஃபார்வேர்ட் செய்கிறார்கள்.  எல்லாமே இலவசம் என்பதால் பழைய சினிமா பாடல்கள் அல்லது நண்பர்களின் யூடியூப் இணைப்புகள் அடிக்கடி வந்து விழுகின்றன.  ‘விருட்சம்’,  ‘குவிகம்’, ‘உரத்தசிந்தனை’  போன்ற சில நல்ல குழுக்களில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் வருகின்றன. சில சமயம், அழகான பெண்களின் புடவை கட்டிய படம் போட்டு அதற்குக் கவிதை எழுதும் போட்டிகளும் வருகின்றன. (கவிதையைப் போலவே அந்தப் புடவை கண்டாங்கியா  நைலக்ஸா  என்ற விவாதமும் அருமையாக இருக்கும்).


ஆனால் தனக்கு வரும் எல்லா செய்திகளையும்  ஒன்றுவிடாமல் படிப்பதென்பது என்னைப் போன்ற சராசரி மனிதனால் ஆகாத காரியம்.  ஆகவே அவ்வப்பொழுது மட்டுமே நான் படிப்பேன்.  அந்த நிமிடம் கண்ணில்படும் நல்ல விஷயத்திற்கு உடனே பாராட்டுரை  எழுதிவிடுவேன். 


இப்படித்தான் அந்த ஊடகத்தில் ஒருமுறை, ஒரு கவிதை மிகச் சிறப்பாக இருந்தது.  அதைப் பாராட்டாமல் விடுவது நியாயமில்லை என்று தோன்றியதால் மனப்பூர்வமாக வாழ்த்தி எழுதினேன். நான் எழுதியதைப் பார்த்து மேலும் நான்கைந்து பேர் கைதூக்கினார்கள் அல்லது கைகூப்பினார்கள். அந்தக் கவிஞர் நன்றி உணர்வால் திக்குமுக்காடிவிட்டார் போலும்.  பதிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா! உணர்ச்சிவசப்பட்டு “நன்றி அம்மா”  என்று பதில் எழுதினார். 


சில நாள் கழித்து இன்னொரு ஊடகத்தில் யாரோ ஒருவர் ஃபார்வேர்ட் செய்த ஒரு விஷயமும் மிக மிக உயர்வானதாக இருந்தது. ஆகவே நல்ல முறையில் அதற்குப் பாராட்டு வழங்கியிருந்தேன். இந்த முறையும் எனக்குக் கிடைத்த நன்றிச் செய்தி:   “நன்றி அம்மா” என்பதே! அவரே இவர்! 


யார் நல்லது செய்தாலும் வஞ்சனையின்றிப் போற்றிப் பாராட்டுவது அடிப்படையில் ஒரு தாய்மைப் பண்புதானே என்று  புன்முறுவலுடன் அவருடைய பதிலை ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் மறுபடியும் அதே தாய்மை உணர்வை எதிர்காலத்தில் காட்டவேண்டாம்  என்று எதிர்பார்க்கிறேன். பெயரைப் பார்த்து ஆணா பெண்ணா என்று தெரிந்து பதிலளிப்பது பலவகையிலும் பாதுகாப்பானது. 


(இருந்தாலும் அவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும், இன்று வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று விழித்துக்கொண்டிருந்தபோது எனக்குக் கைகொடுத்தது அவருடைய வாசகம் அல்லவா!)


 -இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து. 

10 கருத்துகள்:

  1. பெயரில்லா21 மே, 2022 அன்று 8:34 AM

    தவம் வார மின்னிதழ் ஆரம்பித்ததில் இருந்து செவ்வாய், புதன், வியாழன் நாள்களில் முகப்புத்தகம், வாட்ஸப் புலனத்தைப் பார்ப்பதில்லை... வெள்ளி, சனிகளில் முக்கால்வாசி நேரம் இதில் விரயம்தான்!!!

    அப்படி படிக்கும் போது... ஆணா பெண்ணா எனத்தெரியாது நமக்கு வரும் பாராட்டோ திட்டோ... அவர்கள் எதையாவது பார்த்திருப்பார்களா என்கிற சந்தேகத்தைக் கிளப்பும்!

    பதிலளிநீக்கு
  2. அருமை...அருமையைத்தவிர வேறில்லை...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. "நன்றி அம்மா" என்று சொல்லாமல் " நன்றி ஐயா " என்று சொன்னேன் கவனித்தீர்களா?

      நீக்கு
  4. வாட்ஸாப்பில் வரும் நீளமான எதையும் நான் படிப்பதே இல்லை!  குடும்ப க்ரூப்பில் பேசுவதே இல்லை!  பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி அம்மா சொல்லாமல் நன்றி ஐயா சொன்னேன் .....கவனித்தீர்களா ?

    பதிலளிநீக்கு
  6. சில மாதங்களாக பதிவு எதுவும் எழுதவில்லை... அதற்கு காரணம் தங்களுக்கு தெரியும்... ஆனால் கருத்துரைகள் ஆங்கிலத்தில் பல வரும்... பாராட்டுகள் வானளவு வேறு இருக்கும்... அனைத்தும் அவரவர் தளத்தை சொடுக்கி பார்க்குமாறு கருத்துரை வரும்...! அதனால் பூட்டியே வைத்துள்ளேன்...

    வலைப்பூவிற்கு என்று தனியாக மின்னஞ்சல் இருந்தால் நல்லது...
    (எளிதாக (convert to another mail id) மாற்றலாம்...)) இல்லையென்றால் அங்கும் தொல்லை தான்...

    பதிலளிநீக்கு
  7. நல்லது..... பல தளங்களில் நான் இருந்தாலும் அதிகம் பயன்படுத்துவது வலைப்பூ மட்டுமே.

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா பொதுவாக நன்றி என்று சொல்லிவிட்டால் பிரச்சனையே இல்லை!!!! அதாவது குழுவிலும்.

    சில சமயம் நாம் அனுப்புவது அதுவும் ஸ்மார்ட் ஃபோன், தொடு திரை என்பதால் அது ஸ்மார்ட்டாகத் தவறி வேறு நபருக்கு அல்லது குழுவில் கொண்டு போடுவது நடக்கிறது. ஆமாம் அவசரமும் காரணம் என்றாலும் கூட...காணொளிகள் வரும் போது அது பிக்சர் இன் பிக்சரைத் தேரெந்தெடுத்துப் பார்க்கும் போது அது அப்படியே இருந்தாலும் நடக்கும் வாய்ப்பு உண்டு. தபால்காரர் தவறான முகவரியில் தபாலைப் போடுவது போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. //இன்ஸ்டாக்ராம் அழகான இளம் பெண்களுக்கானது..// ஹாஹா! எங்கள் குடும்பத்தில் பேரன் பேத்திகள் எல்லாம் இண்ஸ்டாதான். FB வயதானவர்களின் தளமாம்..
    எல்லா சப்ஜெக்ட் பற்றியும் சிறப்பாக எழுதும் உங்களுக்கு பாராட்டுகள் அம்மா, சாரி, ஐயா! பதிவின் பாதிப்பு நாக்கு குறுகியது.

    பதிலளிநீக்கு