ஞாயிறு, மே 29, 2022

குங்குமப் பொட்டும் அமெரிக்கக் குழந்தையும்

குங்குமப் பொட்டும் அமெரிக்கக் குழந்தையும்

(இன்று கிழமை சனி-7)

அமெரிக்காவில் 47 ஆவது நாள்


(குடும்பம் ஒரு தொடர்கதை)

மஞ்சள் பூசிக் குளித்து, குங்குமம் வைத்து, மங்கலத் தோற்றத்துடன் பூஜையறைக்கு வரும்போதே மாமியார் முறைத்துப் பார்ப்பதன் காரணம் புரிந்துவிடுகிறது: நெற்றியில் வைத்த ஸ்டிக்கர் பொட்டைக் காணோம்! 


"இந்த ஸ்டிக்கர் பொட்டு சரியாக ஓட்டுவதில்லை" என்பது தமிழ்ப் பெண்களின்  நிரந்தரக் குற்றச்சாட்டாக உள்ளது. (மற்ற மொழிப் பெண்களோடுதான்  நமக்குப் பழக்கம் இல்லையே!)


பாண்டி பஜாரும் மயிலாப்பூர் வடக்கு மாடவீதியும்தான் இவள் குங்குமப் பொட்டு வாங்கும் வழக்கமான இடங்கள். சதுர வடிவான அட்டைகளுக்குள் பிளாஸ்டிக் தாளால் மூடப்பட்டு வெவ்வேறு வடிவில் பொட்டுக்கள் அடைபட்டிருக்கும்.  சிலவற்றில் 'ஞாலத்தின் மாணப் பெரிதான' பொட்டுக்கள் இருக்கும். எல் ஆர் ஈஸ்வரிக்காகவே செய்தது. சிலவற்றில் பொட்டுக்கள் இருப்பதே கண்ணுக்குத் தெரியாது. (என் பேத்திக்கு அதுதான் பிடிக்கும்). ஒவ்வொரு முறையும் இவள் வாங்கும் அட்டைகள் ஒரு வருடத்திற்கு வரும் என்று பார்த்தாலே தெரியும். ஆனால் ஒன்றிரண்டு தவிர மற்ற அட்டைகள் விசித்திரமாகக் காணாமல் போய்விடும். பிறகென்ன, மறுபடியும் பாண்டி பஜார், மயிலாப்பூர்…


ஆனால், காணாமல் போன அட்டைகள், பீரோவில் இருக்கும் புடவைகளை உதறும்போதோ, அல்லது போன வருடத்து மங்கையர் மலர், சக்தி விகடன் இதழ்களைப் புரட்டும்போதோ, அல்லது அஞ்சறைப் பெட்டியின் அடியில் வைக்கப்பட்ட ராணிமுத்து காலண்டர் அட்டையின் அடியிலிருந்தோ, அவ்வப்பொழுது  திடீரென்று வெளிப்பட்டு, புதையல் கிடைத்த  மகிழ்ச்சியை அவளுக்கு ஊட்டுவதை நான் பார்த்ததுண்டு. 


ஆனால் நிரந்தரமான அதிருப்தி என்னவென்றால், பொட்டின் கலரும் புடவையின் கலரும் 'மேட்ச்' ஆவதில்லை என்பதே. அதிலும் 'மெஜந்தா' கலரில்தான் எப்பொழுதும் மனக்குறை. (இன்றுவரை மெஜந்தா என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது).  புடவையோடு ரவிக்கையைச் சேர்த்து நெய்பவர்கள், அதன் ஓரத்தில் அதே நிறத்தில் ஸ்டிக்கர் பொட்டையும் ஒட்டி வைத்து விற்றால் வியாபாரம் பெருகாதோ! (நமக்குத் தோன்றி என்ன பயன், 'நல்லி', 'குமரனு'க்கு அல்லவா தோன்ற வேண்டும்?)


ஸ்டிக்கர் பொட்டு வேண்டாம் என்று சீலமிக்க துறவியர்கள் அறிவுரைத்தாலும், சைக்கிளுக்கு பதில் ஸ்கூட்டி மாதிரி, சேலைக்கு பதில் சுடிதார் மாதிரி, பொடிக் குங்குமத்துக்கு பதில் ஸ்டிக்கர் பொட்டு வந்திருப்பது அறிவியல் வளர்ச்சியே.  அதைத் தவிர்ப்பது தேவையற்றது. ஆனால் நெற்றியிலிருந்து உடனே விழாமலும் நெற்றிக்கு ஊறு விளைவிக்காமலும் அது தயாரிக்கப்படவேண்டியது அவசியம். இதற்கான தரக் கட்டுப்பாடுகளை யாராவது அமல்படுத்தினால் தேவலை. 

இருங்கள், யூடியூபில் ஏதோ பாட்டு வருகிறது: "குங்குமப்பொட்டின் மங்கலம்- நெஞ்சம் இரண்டின் சங்கமம்" என்று. அது எப்படி ஐயா, நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே மோப்பம் பிடித்து அதற்கு ஒத்த கருத்தில் பாடலைக் கொண்டுவருகிறது கூகுள்?  அது மட்டுமல்ல, "நெற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே" என்று இன்னொரு பாடலும், "குங்குமம்- மங்கல மங்கையர் குங்குமம்" என்று இன்னொன்றுமாக வரிசை கட்டி நிற்கின்றன. இந்த அளவு செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence -  தேவைதானா? அது கூடப் பரவாயில்லை, வீட்டிலேயே குங்குமம் எளிதாகத் தயாரிப்பது எப்படி என்று நான்கைந்து வீடியோக்களும் அணிதிரண்டு பின்னால் நிற்கின்றன. 


46 நாட்களுக்கு முன்பு நாங்கள் அமெரிக்கா வந்திறங்கியபோது விமான நிலையத்தில் ஒரு கணம் பார்த்து புன்னகைத்துவிட்டு அழத்தொடங்கிவிட்ட எங்கள் குடும்பத்தின் புது வரவான என் பேரன் தியான், அடுத்த சில நாட்களில் என் மனைவியோடு (அதாவது தன் பாட்டியோடு) மிகச் சரளமாக இழைந்துகொள்ள ஆரம்பித்துவிட்டான். ஆனால் என்னிடம் வர மேலும் சில நாட்கள் ஆயின.. 


ஆனால் அவன் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் பாட்டியோடு ஒட்டிக்கொண்டான் என்று சீக்கிரமே தெரிந்துவிட்டது. முகமெல்லாம் மயக்கும் புன்னகையுடன்  கன்னத்தில் கை வைத்துக் கொஞ்சுவதுபோல் பாவனை செய்வான். கண் இமைகளை வருடுவான். திடீரென்று தலைமயிரை இழுப்பான். ஆனால்  புன்னகை மட்டும் மறையாது. இன்னும் பேச்சு வரவில்லை. ஆனால் பேச்சு மாதிரி ஏதோ ஓசை எழுப்புவான். திடீரென்று தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய நெற்றியிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டைத் தூக்கிவிடுவான்! அதுவும், அவளுக்குத் தெரியாமலேயே! 


கையில் பிசுபிசுக்கும் பொட்டை எடுத்துக்கொண்டு அரக்கப் பரக்கக் கீழிறங்கும்போதுதான் பேரன் செய்த விஷமம் இவளுக்கு உறைக்கும். பொட்டு போனால் போகட்டும், அது அவன் வாய்க்குள் போய்விடக் கூடாதே, அதல்லவா முக்கியம்?


உடனே நான் களத்தில் இறங்குவேன். என்னைக் கண்டதும் தன் சாதனையை விவரிப்பதுபோல் விரலில் ஒட்டிக்கொண்ட பொட்டை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் காட்டுவான். ஆனால் தரமாட்டான். அதற்கு நான் வேறு மாதிரியான விலை கொடுத்தாகவேண்டும். உடனே அவனைப் பலவந்தமாகத் தூக்கிக்கொள்வேன். அதுதான் சாக்கென்று அவன் என்னுடைய மூக்குக்கண்ணாடியைக் கைப்பற்றுவான். உடனே இவள் லபக்கென்று ஸ்டிக்கர் பொட்டை மீட்டு விடுவாள். ஆனால் என் மூக்குக்கண்ணாடியை அவனுடைய குரங்குப்பிடியில் இருந்து மீட்பது அவ்வளவு சுலபமாய் இருப்பதில்லை. 


ஆனால் ஒன்று, எவ்வளவு கவனமாகக் குழந்தையைக் கையாண்டாலும், ஸ்டிக்கர் பொட்டை வசமாக்குவதற்கு அவனிடம் புதுப்புது வழிகள் இருந்ததைக் காண முடிந்தது. அது  செயற்கை நுண்ணறிவு அல்ல, இயற்கை நுண்ணறிவு தான்! 


'.... தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்' என்றார் வள்ளுவர் (குறள் 64). கூழுக்கு பதில் 'ஸ்டிக்கர் பொட்டு' என்று எழுதிக்கொள்ளலாம்! மழலையின் இன்பம்தான் என்னே!

  -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.    


வீட்டில் குங்குமம் தயாரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.  (இதை விடவும் சிறப்பான வீடியோக்கள் யூடியூபில் இருக்கலாம்). நெற்றியில் அணிந்து கொண்டால், ஸ்டிக்கர் பொட்டை விட இது அதிக நேரம் நீடிக்கிறதா என்ற தகவலையும் எனக்குத் தெரிவிக்கலாமே!

https://www.youtube.com/watch?v=S4MAzfIa5A4&ab_channel=Samayalulagam

16 கருத்துகள்:

 1. பொட்டு வைத்த முகமோ.
  .ஒரு அருமையான பாட்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், குங்குமமும் பொட்டும் எத்தனையோ திரைபாடல்களைப் பிரசவித்துள்ளன!

   நீக்கு
 2. பதிவில் உள்ள பாடல்கள் அனைத்தும் ரசித்தவை...

  கூழ் என்றவுடன் ஞாபகம் வந்தது :-

  கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
  சூழாது செய்யும் அரசு

  செங்கோலன், கொடுங்கோலன் ஆகும் போது இந்த குறளின் விளக்கம் பலருக்கும் "உரைக்கலாம்...!" அடுத்து நம்மூர் வெங்கோலன் பற்றி மறக்க வேண்டாம்...

  இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், தங்களைப் பொறுத்தவரை "கூழும்" என்பதின் பொருள் என்ன...? கூழ் அதாவது உணவு - இதற்கும் நம்ம 8+8=7 கணக்கியல் உண்டு... அதனால் கூழும் எனும் கணக்கைப் பொறுத்து தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம், அப்போது தான் நம்மூரில் இருப்பது வெங்கோலன் என்று உறுதி செய்யலாம்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பேரன் ஸ்வீட்!! குழந்தைகளுக்குப் பொட்டும் மூக்குக் கண்ணாடியும் மிகவும் பிடிக்கும்!!!
  மொபைல் ஃபோன் நம் கையில் இருந்தால் அதுவும்.

  குழந்தைகளின் குறும்புகள், சிரிப்பு எல்லாமே ரசனையானவை.

  தாத்தாவும் பாட்டியும் எஞ்சாய்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. "அவனுடைய குரங்குப்பிடியில் இருந்து மீட்பது அவ்வளவு சுலபமாய் இருப்பதில்லை. "

  குழந்தையின் குறும்பு (அன்பு) பிடியை குரங்கு பிடி என்று எப்படி நீங்கள் சொல்லலாம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா, இன்னொரு முறை குழந்தை அழும்போது அதன் கையிலுள்ள பொருளைப் பிடிங்கிவிடுங்களேன் பார்க்கலாம், அது என்ன பிடி யென்று தெரிந்துவிடும்!

   நீக்கு
 5. சுவாரஸ்யமான விவரணம்.  சிலையுடன் அதே நிறத்தில் ஸ்டிக்கர் போட்டும் வைத்துக் கொடுப்பது நல்ல ஐடியா.  எவ்வளவு தருவார்கள்?

  பதிலளிநீக்கு
 6. மழலை இன்பம் மாசிலா இன்பம்

  பதிலளிநீக்கு
 7. Sticker பொட்டு வைத்து ஒரு பதிவு...... நன்று! என் நண்பர் ஒருவர் வீட்டில் சுவர் முழுவதும் நெற்றியிலிருந்து எடுத்த பொட்டுக்கள் ஒட்டி இருக்கும் - அது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 8. பொட்டு அம்மன் என்று ஒரு படமே வந்திருக்கும் பொழுது, பதிவு வந்தால் ஆகாதா?
  குங்குமப் பொட்டின் மங்கலம் பாட்டை எழுதியது ஒரு இஸ்லாமியப் பெண் என்பது தெரியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியும், ஆனால் அவர் அதற்கப்புறம் திரைப்படங்களுக்கு எழுதினாரா என்று தெரியாது.

   நீக்கு
 9. இன்றைய பெண்கள் ஜீன்சுடனும் பேண்டுடனும் பொட்டு வைப்பதில்லை வயதானவர்களுக்கு இது பெரிய குறை

  பதிலளிநீக்கு
 10. சகஜமாக வீட்டில் நடக்கும் இந்த தாத்தா- பாட்டி -பேரன்- பேத்தி பரிமாற்றங்கள் பற்றி சுவையாக விவரித்த செல்லப்பாவிற்கு பாராட்டுக்கள். நாங்களும் இந்த மாதிரியான அனுபவங்களை பெற்று வருகிறோம்.

  பதிலளிநீக்கு