ஞாயிறு, செப்டம்பர் 30, 2018

கோலமாவு கோகிலாவின் ஏழாவது நாய்க்குட்டி


பதிவு 03/2018

கோலமாவு கோகிலாவின் ஏழாவது நாய்க்குட்டி

உத்தமர் குடியிருப்பு’ - நூறு குடும்பங்களைக் கொண்டது.  மினி-இந்தியா எனலாம். எதை எடுத்துக்கொண்டாலும் நூறு பேருக்கும் நூறு விதமான கருத்து இருக்கும். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் அவர்களிடம் ஒற்றுமை இருந்தது. எக்காரணத்தை முன்னிட்டும் விடிந்ததும் கோகிலாவின் முகத்தில் விழித்துவிடக் கூடாது என்ற ஒற்றுமை. விழித்தால் நிச்சயம் ஏதாவது தீமை உண்டாகுமாம். ஆனால் அவளை நான் இதுவரை பார்த்ததில்லை. என் மனைவியும் கூட. 
ஐயோ  பாவம்! இவ்வளவு நாளாக வலைப்பதிவு எழுதாத குற்ற உணர்வு
முகத்தில் தெரிவதைப் பாருங்கள்!

பணியில் இடமாற்றம் வந்ததால் அந்தக் குடியிருப்பில் நான் வாடகைக்கு வரவேண்டியதாயிற்று.  நான்கு மாடிக் கட்டிடம். அதில் நான் இருந்தது முதல் மாடி. வழக்கம்போல இம்மாதிரிக் குடியிருப்புகளில் லிப்ட் வேலை செய்யாது என்பது தெரிந்ததே. அதனால் எனக்குமேல் குடியிருந்தவர்களில் பலர் வாரத்தில் ஒருநாளாவது படிகளில் ஏறித்தான் தங்கள் இல்லங்களை அடையமுடியும். அப்போதெல்லாம் என் வீட்டுக்கதவு திறந்திருந்தால் சற்றே எட்டிப் பார்த்துக்கொண்டு போவார்கள். தெரிந்தமுகமாக இருந்தால், ‘வாங்க ஸார்’ என்று அழைப்பேன். நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தால் ‘வீட்டில் ஸார் சௌக்கியமா? பார்த்து நாளாயிற்றே !’ என்பேன். சிலபேர் வெட்கப்படுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு ‘ம்ம்..’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டு கடந்துபோவார்கள். அந்த ‘ம்ம்..’ கவர்ச்சியாக இருந்ததாக  தற்செயலாக அன்று என் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நண்பன் கருதினான்.

சில பெண்கள் இதுதான் சாக்கென்று ‘வணக்கம் ஸார்! மாமி வீட்டில் இல்லையா?’ என்றபடி வாசலில் நின்றுகொண்டு ஏதோ பேச முன்வருவார்கள். வீட்டின் உள்ளிருந்து ‘அவள்’ வந்து மேற்கொண்டு பேச்சைத் தொடருவாள்.  மற்றப்படி நானாக அவர்களிடம் அதிகம் பேசமாட்டேன். காரணம் உங்களுக்கே தெரியும்.

ஆனால் ஒருநாள் காலை ஆறுமணி அளவில் மஞ்சள் சேலையும், பூப்போட்ட மஞ்சள் ரவிக்கையும், கழுத்தில் மின்னும் மஞ்சள் தாலிக்கயிறும், மஞ்சள் ஹவாய் செருப்பும் அணிந்த மஞ்சள் நிறமான ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி, கையில் ஒரு மஞ்சள் நிறப் பையுடன் படியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘இந்தப் புதுமுகம் யாராயிருக்கலாம்?’ என்று யோசித்தபடியே ‘டைம்ஸ்’ தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அவளுடைய பையிலிருந்து மஞ்சள் நிறச் சாமந்தி மாலையொன்று எட்டிப் பார்த்ததைச் சொல்லாமல் விட்டால் நீங்கள் கோபிக்கக்கூடும். அவள் தானாகவே என் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

வரவேற்பறையில் நான் பனியன்போடாமல் கையில் பேப்பரோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் அவள் வேண்டுமென்றே அழைப்புமணியை வேகமாக அழுத்தினாள். அது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைக்கும்  வகையில் சத்தமிட்டது.  கோபத்தோடு எழுந்து நின்றேன் நான்.

‘இங்கே நான் உட்கார்ந்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? எதற்காக மணியடிக்கவேண்டும்?’ என்றேன்.

அவள் நான் இருப்பதையே அங்கீகரிக்க விரும்பாதவள்போல் உள்ளேயிருந்து பெண்மணிகள் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கும்விதமாகக் கண்பார்வையை என்னைவிட்டு அகற்றினாள். ‘அக்கா’ என்று அழைத்தாள். 

அழைப்புமணியின் ஓசையில் அசராத என் மனைவி பாவனா, அக்கா என்ற அழைப்பைக் கேட்டதும் துணுக்குற்று ஓடிவந்தாள். ‘யாருடி அது, என்னை அக்கான்னு கூப்பிடறது?’

மஞ்சள் பெண் மிகவும் பவ்வியமாக, ‘நான்தான் அக்கா’ என்றாள். ‘என்னைத் தெரியாதா ஒங்களுக்கு? நான்தான் கோகிலா. கோலமாவு கோகிலா’ என்றாள். இரண்டுபேருக்கும் நடுவில் எதுவும் சொல்லத்தெரியாமல் நான் நின்றேன். இவள்தான் கோகிலாவா? 

தன்னைவிட இளமையான பெண்களைக் கண்டால் பொதுவாகவே இல்லத்தரசிகளுக்குப் பொறாமை உண்டாவது இயல்புதானே! அதிலும் இவள் எல்லாம் மஞ்சளாக இருக்கிறாள். இந்தக் குடியிருப்பில் வசிப்பவளா, அல்லது கோலமாவு விற்பவளா?

‘இந்தாம்மா, எனக்குக் கோலமாவு வேண்டாம். நான் அரிசிமாவில்தான் கோலம் போடுவது வழக்கம். அதிருக்கட்டும். நான் உன்னைப் பார்த்ததே இல்லையே!’ என்றாள் பாவனா.

அதிரடியாக உள்ளே நுழைந்தாள் கோகிலா. ‘என்னக்கா நீங்க, என்னயத் தெரியாதுன்னு சொல்றீங்க! தெனமும் ரெண்டுவேளையும் நம்ப குடியிருப்புல இருக்கிற பிள்ளையார் கோவில்ல நான்தான் கோலம் போடறேன்னு தெரியாதுங்களா? அதனாலதான் என்னைக் கோலமாவு கோகிலான்னு சொல்வாங்க’ என்றவள், நான் எழுந்ததும் காலியான நாற்காலியில் விசுக்கென்று உட்கார்ந்தாள். தன் கையிலிருந்த மஞ்சள் பையை அருகிலிருந்த டீபாயின்மீது வைத்தாள். 

‘என்னடி விஷயம், சீக்கிரம் சொல்லு. அடுப்புல கூட்டு வேகுது. அடிப் பிடிச்சிக்கும்’ என்று அவளை விரட்டுவதுபோல் முன்னால் நின்றாள் பாவனா.

கோகிலா அசரவில்லை. என்னைப் பார்த்து, ‘ஏன் ஸார், ஒங்க வீட்டுக்கு யாராவது வந்தா தண்ணி கூடக் குடுக்க மாட்டீங்களா?’ என்றாள்.     பாவனா என்னை உற்றுப் பார்த்தாள். ஓடிப்போய் ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து டீபாயில் வைத்தேன். கோகிலா ஒரே நொடியில் குடித்து முடித்தாள்.

‘அக்கா, நான் வந்த காரியம் என்னன்னு சொல்லட்டுமா?’ என்றாள்.

‘இருடி, அடுப்பைப் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று உள்ளேபோய் வந்தாள் பாவனா. ‘சொல்லு, என்ன விஷயம்?’

கோகிலா டக்கென்று எழுந்து வாசல் கதவைச் சாத்தித் தாளிட்டாள். ‘நல்ல விஷயம் சொல்லப்போறேன். யாருக்கும் தெரியக்கூடாது’ என்றவள், தன் மஞ்சள் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தாள். குழந்தைகள் விளையாடும் நாய்க்குட்டி பொம்மை மாதிரி ஒன்று. பாவனாவிடம் கொடுத்தாள்.

‘எனக்கு எதுக்கடி இந்த பொம்மை’ என்றபடி அதை வாங்கிய பாவனா, துள்ளிக் குதித்தாள். ‘பொம்மைன்னு நினைத்தேன். இது உயிருள்ள நாய்க்குட்டி! எவ்வளவு அழகா இருக்கு பாருங்க’ என்று என்னிடம் காட்டினாள்.

ஆம், அழகான நாய்க்குட்டிதான். அதுவும் மஞ்சள்நிறமாகவே இருந்தது. தன் அழகான கண்களைத் திறந்தும் மூடியும் கால்களை அசைத்தும் அது காண்பவர்களைக் கவருவதாக இருந்தது. 

கோகிலா பேசினாள். ‘அக்கா, இத நான் குடுத்தேன்னு யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. பிரச்சினை ஆயிடும். ஏன்னா இது ஏழாவது நாய்க்குட்டி’ என்றாள்.

பாவனாவுக்குச் சற்றே எரிச்சல் வந்தது. எத்தனையாவதா இருந்தா என்ன, நானா வேணும்னு கேட்டேன்? இதுவரை இவளைப் பார்த்ததே இல்லை நான்.

‘அக்கா, ஒங்களுக்கு நாய்க்குட்டிகளைப் பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்கிறேன். அதான் இப்படிப் பேசறீங்க. பொதுவா ஆறு குட்டிதான் போடும் நாய்கள். செலது பத்து கூடப் போடும். ஆனால் அதுல நாலஞ்ச தாயே சாப்பிட்டுடும். பிரசவிச்ச ஒடனே அதுக்கு அவ்ளோ பசியெடுக்குமாம். அதனால ஏழாவது நாய்க்குட்டி உயிரோட கெடைக்கறது அபூர்வம்னு பெரியவங்க சொல்வாங்க. அப்படிக் கெடச்சா அந்த நாய்க்குட்டியை வளர்க்கிறவங்க வீட்டுல ஒரே வருஷத்துல ஆண் குழந்தை பொறக்குமாம். எங்க பாட்டி சொல்வாங்க’ என்ற கோகிலா, என் மனைவியின் முகத்தைப் புன்முறுவலோடு பார்த்தாள். ‘ஒங்களுக்கு வேண்டாம்னா வேறே யாருக்காவது கொடுத்துவிடட்டுமா?’

அவள் வார்த்தைகளின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தவளாக, ‘நான் எங்கேடி வேண்டான்னு சொன்னேன்?’ என்று குதூகலத்துடன் துள்ளினாள் பாவனா. திருமணமாகி ஐந்து வருடம் ஆகியும் எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. ‘ஆனா நீ சொல்றதை எப்படி நம்பமுடியும்னு தெரியலே’ என்றவள் என் பக்கம் திரும்பி, ‘ஏங்க, இத நாம்பளே வச்சிக்கலாமா? அதிர்ஷ்டம் வருதான்னுதான் பார்ப்போமே, என்ன சொல்றீங்க?’ என்றாள். 

‘ஆஹா! அப்படியே செய்யேன்’ என்றேன் பெருமிதமாக. பாவனாவுக்கு மகிழ்ச்சி. கோகிலாவிடம் ‘சரி, இதுக்காக ஒனக்கு எவ்ளோ தரணும்? ஏங்க, பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே, பர்ஸ எடுத்துக்கிட்டு வாங்க’ என்றாள் என்னைப் பார்த்து.

நாய் வளர்ப்பது பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இருக்கவில்லை. விலை கொடுத்து ஒரு தலைவலியை வாங்குவதாகவே தோன்றியது. ஆனால் ஆண் குழந்தை பிறக்குமாமே!  பொறுத்திருந்து பார்க்கலாமே என்று தோன்றியது. மேலும் மனைவியின் ஆசைகளை மறுக்கும் துணிச்சலுள்ள கணவர்கள் சங்கத்தில் நான் உறுப்பினர் ஆகவில்லையே! 

ஐம்பது ரூபாய் கொடுத்தேன்.

கோபத்தோடு தன் பையை எடுத்துக்கொண்டு எழுந்தாள் கோகிலா. ‘அதைக்  குடுங்க அக்கா!  பொருளோட மதிப்பே தெரியலே ஒங்களுக்கு’ என்று நாய்க்குட்டியைப் பிடுங்க வந்தாள்.

பாவனாவின் கோபம் என்மீது திரும்பியது. தன் கையில் இருப்பது நாய்க்குட்டியாகவே தெரியவில்லை அவளுக்கு. தனக்கு இவ்வளவு நாளாகப் பிறக்காத குழந்தையே அது என்று நம்புகிறாள் போல் தெரிந்தது. ‘இந்தாங்க, அவளுக்கு ஐந்நூறு ரூபாய் குடுத்துடுங்க’ என்று உத்தரவிட்டாள்.

‘நீங்க நல்ல இருப்பீங்கம்மா. சீக்கிரமா ஒங்க வீட்டுல ஒரு ஆம்பிளைப் பிள்ளை பொறக்கலேன்னா என் பேரு கோலமாவு கோகிலா இல்லே’ என்று சபதமிட்டுவிட்டுக் கிளம்பினாள். போகையில் என்னை அற்பமாகப் பார்த்து ஒரு கேலிப்புன்னகையை வீசத் தவறவில்லை.

லிப்ட்வரை போனவள் வேகமாகத் திரும்பிவந்து ‘ஸார், இதை யாருக்கும் சொல்லிடாதீங்க. ஏன்னா முப்பத்திரண்டாம் நம்பர் மாமி ரொம்பநாளா கேட்டுக்கிட்டிருந்தாங்க. அவங்க ரெண்டு பொண்ணுங்களுக்கும் கொழந்தையே இல்லை பாருங்க! என்னமோ ஒங்களுக்குக் கொடுக்கணும்னு எனக்குத் தோணிச்சி. அதான்..’ என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஒருமாதிரியாகச் சிரித்தாள். ‘நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களாமே? என்னயப் பத்தியும் எழுதுவீங்களா?’ என்று கேட்டவள் பதிலுக்கு காத்திருக்காமல் நகர்ந்தாள்.

அன்று மாலை நாற்பதாம் நம்பர் மாமி கையில் மைசூர்பாக்குடன் வந்தார். ‘எல்லாம் நல்ல விஷயம்தான். சீக்கிரம் எங்கள் வீட்டில் ஒரு பேரக் குழந்தை வரப்போகிறது’ என்றார். பாவனாவுக்கு ஆனந்தமான ஆனந்தம். மாமியின் பெண் சித்ராவும் இவளும் உயிருக்குயிரான  சினேகிதிகள். 

‘அப்படியா? ரொம்ப சந்தோஷம். நான் இப்பவே சித்ராவோட பேசறேன்’ என்று அலைபேசியை எடுத்தாள்.

‘சாயந்திரமா பேசுடி. ஏன்னா அவ இப்ப டாக்டர் கிட்ட போயிருக்கா’ என்றார் மாமி.

பாவனாவுக்கு இன்னும் அதிக சந்தோஷம். ‘அப்டியா? அவ்ளோ சீக்கிரமா? எப்ப மாமி டியூ டேட்?’ 

கலகலவென்று சிரித்தார் மாமி. ‘வெட்டரினரி டாக்டர் கிட்ட போயிருக்கா! நமக்கு வேண்டிய ஒருத்தர்கிட்ட இருந்து அதிர்ஷ்டமான ஏழாவது நாய்க்குட்டின்னு ஒரு நாய்க்குட்டியை வாங்கினோம். கொஞ்சம் விலை அதிகம்தான். மூவாயிரம் ரூபாய்! ஆனால் அந்தக் குட்டி வீட்டில இருந்தா அதே வருஷம் ஆண் கொழந்தை பிறக்குமாம். எப்டியோ, நல்லது நடந்தா சரி. அதை எடுத்துக்கிட்டுப் போய் மெடிக்கல் செக்-அப் பண்றதுக்குத்தான் போயிருக்கா சித்ரா’ என்றார் மாமி.

பாவனாவுக்குத் துணுக்கென்றது. ‘யார் கிட்ட வாங்கினீங்க மாமி?’ என்றாள் திகைப்புடன். 

‘சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்டி. அப்புறம் சொல்றேன். இப்ப என்ன அவசரம்?’ என்று நகர்ந்தார் அந்த மாமி.

நீங்களே சொல்லுங்க ஸார், ஒரு நாய்க்குட்டி எத்தனைமுறை ஏழாவது குட்டி போடும்?

(c) இராய செல்லப்பா, சென்னை