வியாழன், ஜனவரி 15, 2015

பதிவு 04/2015 தமிழ் சோறு போடுமா?

பதிவு  04/2015

தமிழ் சோறு போடுமா?

எழுத்தாளர் லக்ஷ்மியின் சுயசரிதை


சென்னை புத்தகக் கண்காட்சியில் திடீரென்று சில அபூர்வமான முத்துக்கள் கிடைப்பதுண்டு. இந்த முறை எனக்குக் கிடைத்தது, அமரர் எழுத்தாளர் லக்ஷ்மியின் சுயசரிதையான ‘கதாசிரியையின் கதை- இரண்டு பாகங்கள்’.நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் லக்ஷ்மியின் மிதிலாவிலாஸ் நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன். மிதிலாவிலாஸ்–நாவல்–லக்ஷ்மி (http://chellappatamildiary.blogspot.com/2013/03/1_5.html). அவரது சுயசரிதை குங்குமத்தில் தொடராக வந்தபோது பார்த்திருக்கிறேன், ஆனால் படிக்க நேரவில்லை. இப்போதுதான் அந்த வாய்ப்பு கிட்டியது. அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்களை அவரது வார்த்தைகளிலேயே தெரிவிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் அவரது வாழ்க்கை, சில வரிகளில்:

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச்சு மாதம் 23ஆம் தேதி பிறந்த லக்ஷ்மியின் இயற்பெயர் திரிபுரசுந்தரி. பெற்றோர் திருச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.
தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். இண்டர் முடித்தவுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்தார். கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை 1955இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை. அவரும் மருத்துவர்.
1966இல் கணவர் மறைந்தபின் 1977இல் சென்னைக்கு வந்தார். 1987 ஜனவரி ஏழாம் தேதி சென்னையில் காலமானார் லக்ஷ்மி.
பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தைந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி. மற்ற முக்கிய எழுத்துக்கள்: பெண் மனம், மிதிலா விலாஸ்என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது கலைஞர் மு.கருணாநிதிஅவர்கள்.
எப்படி எழுத்தாளர் ஆனார்?
லக்ஷ்மி மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். கல்லூரி மற்றும் ஹாஸ்டல் செலவுகளுக்கு மாதம் அறுபது ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தந்தையால் முப்பது ரூபாய் மட்டுமே அனுப்பமுடிந்தது. ‘மேற்கொண்டு அனுப்ப இயலாது, எனவே நீ படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்துவிடு’ என்று தந்தை கண்டித்தார். பெரிய டாக்டராகவேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த லக்ஷ்மிக்கு வானமே இடிந்துவீழ்ந்ததுபோல் ஆகியது. அன்று மூர்மார்க்கட் போனபோது ஒரு பழைய அமெரிக்கப் பத்திரிகையை நான்கணாவுக்கு வாங்கினார். அதில் வந்த ஒரு கட்டுரைதான் அவரது வாழ்க்கையையே மாற்றியது. (‘ஒரு வைத்தியக் கல்லூரி மாணவன், படிக்கும் காலத்தில் பணத்தட்டுப்பாடு காரணமாக, இரவு நேரங்களில் காய்கறி லாரியை ஓட்டி அதில் கிடைத்த ஊதியத்தில் தன் படிப்பை முடித்து இப்போது பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாக இருக்கிறானாம்...”)
அதேபோல் தானும் சம்பாதிக்க வழியுண்டா என்று யோசித்தார் லக்ஷ்மி. பெண்களுக்கு உகந்ததாகவும் படிப்பைப் பாதிக்காததாகவும் இருக்கவேண்டுமே! அப்போது அவருடைய ஹாஸ்டலுக்கு அருகில் பிராட்வேயில் ஆனந்தவிகடன் அலுவலகம் இருந்தது. டிராமிலிருந்து இறங்கி நேராக விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசனைப் பார்க்கப் போனார். (1940 ஜனவரி முதல் வாரம்). எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்! அதுவரை லக்ஷ்மி கதையோ கட்டுரையோ எழுதியது கிடையாது. விகடனில் எழுதிப் பணம் சம்பாதிக்கலாம் என்று எப்படி அவருக்குத் தோன்றியதோ கடவுளுக்கே வெளிச்சம்.
வாசனின் செயலாளர் டி.வி.சுப்பிரமணியத்தைப் பார்த்தார்.
“நான் ஒரு வைத்தியக் கல்லூரி மாணவி. உபகாரச் சம்பளம் கிடைக்காது சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் படிப்பைத் தொடர, புத்தகங்கள் வாங்க எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனக்கு விகடனில் எழுத ஒரு வாய்ப்புத் தரமுடியுமா என்று நேரில் கேட்க விரும்புகிறேன். ஐந்து நிமிஷ அவகாசம் கிட்டினால் போதும்” என்றார் லக்ஷ்மி. வெகுநேர காத்திருப்புக்குப்பின் ஐந்தே நிமிடம் சந்திக்கலாம் என்ற அனுமதி கிட்டியது.
முழங்கை கீழ் வழிந்த கதர் சட்டையும் சிவப்புக் கரை வேட்டியும் – இடது தோள்மீது துண்டுமாக அலமாரியிலிருந்த ஃபைல் ஒன்றை ஆராய்ந்து கொண்டிருந்த மனிதர் சட்டென்று திரும்பினார்.
“உட்காருங்க அம்மா..உங்களைப் பத்தி டி.வி.எஸ். சொன்னார்” என்று புன்முறுவலித்துக்கொண்டு சுழல்நாற்காலியில்  அமர்ந்துகொண்டார். புகழ்பெற்ற ஆனந்த விகடனின் அதிபர் வாசன் இவர்தானா? எத்தனை எளிமையாக இருக்கிறார் என்று வியந்தவண்ணம் அமர்ந்தேன். கண்டிப்பான குரலில் கருணையாகப் பேசினார்.
“கதைகள் எழுதி ஏதேனும் அனுபவம் உண்டா?” எடுத்த எடுப்பில் கேட்டார்.
“பள்ளிப் பருவத்திலே எழுத ஆரம்பித்தேன். ஒன்றும் பிரசுரமாகவில்லை”.
“எங்கள் பத்திரிகையில் பிரசுரமாகும் என்று என்ன நிச்சயம்?” என்று சிரித்தார் வேடிக்கையாக.
“ஒரு மாணவிக்கு எழுத வாய்ப்புக் கொடுத்து உதவ வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்...பிரசுரிக்கலாமே?”
“நன்றாகப் பேசுகிறீர்கள். நன்றாக எழுதத் தெரிந்தால் கட்டாயம் வாய்ப்புக் கொடுப்போம். ஒரு காரியம் செய்யுங்கள் – நாளை காலைக்குள் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டு வர முடியுமா?”
“கொண்டு வருகிறேன். கடுமையாகப் பரிசீலனை செய்யாது கருணையோடு பார்த்து வாய்ப்புக் கொடுத்தால்...?” சொன்னதையே நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.....
இரவு முழுதும் மூளையைக் கசக்கி எப்படியோ ஒரு சிறுகதையைத் தயார் செய்துவிட்டார் லக்ஷ்மி. அடுத்த நாள் மாலை வாசன் அவர்களைச் சந்தித்தபோது விகடன் ஆசிரியராக இருந்த கல்கியிடம் அனுப்பினார், வாசன். அப்போது விகடனில் ‘கள்வனின் காதலி’ தொடர்கதையை எழுதிப் பிரபலமாக இருந்தார் கல்கி. அப்படிப்பட்ட இலக்கியமேதையிடம் தனது ‘அரைவேக்காடு படைப்பைக் கொடுக்க மிகவும் பயமாகவும் வெட்கமாகவும்’ இருந்ததாம் லக்ஷ்மிக்கு.
“கதையைப் படித்துவிட்டு பதில் எழுதுவோம். கவலைப்படாதீர்கள்” என்று அன்புடன் சொல்லி அனுப்பி வைத்தார், கல்கி. ஒரே வாரத்தில் பதில் வந்ததாம். “உங்கள் கதையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. அடுத்த வாரம் ஆனந்த விகடனில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றது கடிதம். (பக்கம் 32-37  பாகம் 2)
தான் எழுதுவது மற்ற மாணவர்ளுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, பத்து வயதிலேயே விதவையாகி, வாழ்க்கையில் சுகம் என்பதையே அறியாத தன் பாட்டியின் சகோதரியின் பெயரான  ‘லக்ஷ்மி’ என்பதையே தனது புனைபெயராகக் கொண்டார் அவர்.
தமிழ் எப்படி அவருக்குக் கைவந்தது?
(இன்டர்மீடியட் வகுப்பில்) ஆரம்பத்தில் சமஸ்கிருதத்தைத்தான் இரண்டாவது மொழியாகப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் சமஸ்கிருத ஆசிரியருக்குக் காய்ச்சல்வந்து படுத்துவிட்டதால் தமிழ் வகுப்பிற்கு மாற்றப்பட்டாராம்.  
முதல்நாளே எனக்குத் தமிழ் மிகவும் பிடித்துவிட்டது. வெள்ளைத் தலைப்பாகையும் – நெற்றியில் விபூதிப் பட்டையும் கறுப்புக் கொட்டும் – பின்சுற்று வேட்டியுமாக இருந்த தமிழ் ஆசிரியர்... மிகவும் சாந்தமானவராகத் தெரிந்தார்.
கம்பராமாயணத்திலிருந்து அழகான குரலில்...
“மன்னவன் பணியொன்றாகில் நின்பணி மறுப்பனோ.. என் பின்னவன் பெற்ற செல்வம்...” என்ற வரிகளைப் பாடி விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது..
நான் அப்படியே மயங்கிப் போனேன். கம்பன் கவிதையில் இத்தனை சுவை ஒளிந்து கொண்டிருக்கிறதா? தமிழ் மொழி இத்தனை இனிமையானதா?... என்று வியந்து அன்றே என் தந்தையிடம் என் ஆசையைச் சொல்லிவிட்டேன். “எனக்கு சமஸ்கிருதம் படிக்க விருப்பமில்லை. தமிழ் வகுப்புக்கு மாறிவிடப் போகிறேன்”.
அப்பா கோபத்துடன் வெறித்தார். பகவத்கீதையைப் படித்துப் பொருள்தெரிந்து கொள்ள வேண்டும் – காளிதாசனது காவியங்களை ரசிக்க வேண்டும்..என்று சமஸ்கிருதத்தை படிக்க உன்னை சேர்த்திருக்கிறேன். முட்டாள்தனமாகப் பேசறியே...சிடுசிடுத்தார்.
கம்பராமாயணத்தையும் – சிலப்பதிகாரத்தையும் படித்து மகிழ தமிழ் அறிவு தேவையாயிற்றே.. சொல்ல விரும்பினேன். ஆனால் திருதிருவென்று விழித்தேன்.
ஒழிஞ்சு போ – நாளையிலிருந்து தமிழுக்கு மாற்றிக்கொள். வீட்டிலே சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நீ தெரிஞ்சுக்கணும். தமிழ் சோறு போடாது. அதனால் இங்கிலீஷை நன்றாகப் படிக்கணும்...அதுதான் உதவும் என்றார்.
டில்லியில் சாகித்ய அகாதமி பரிசினைப் பெற மேடை ஏறியபோது – அன்றையதினம் என் தந்தையை நினைத்துக் கொண்டேன்.
தமிழ் எனக்குப் புகழையும் –பெருமையையும் வாங்கித் தந்ததோடு இன்னமும் சோறு போடுகிறது ..சொல்ல விரும்புகிறேன்.
அதைக் கேட்க அப்பா இப்போது உயிருடன் இல்லையே... என்று என் உள்ளம் வருந்தியது.
(பக்கம் 95-96 பாகம் 1)
****
லக்ஷ்மியின் கதைகளைப் போலவே அவரது சுயசரிதமும் சுவையானதும் உணர்ச்சிகரமானதுமாகும். ஒரே மூச்சில் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டேன். உங்களுக்கும் சிபாரிசுசெய்கிறேன். கிராத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி என்பதே எட்டாக்கொம்பாக இருந்தநிலையில், அதிலும் பெண்கல்வி என்பது பெரிதும் மறுக்கப்பட்டிருந்த காலத்தில், சுய முயற்சியில் ஒரு பெண் எழுத்தாளராகவும் மருத்துவராகவும் ஒரே சமயத்தில் உருவான கதையை நீங்கள் படிக்காமல் விடலாமா?
கதாசிரியையின் கதை – லக்ஷ்மி – இரண்டு பாகங்கள்: (நான்காம் பதிப்பு 2010 : விலை ரூ.75 + 70) பூங்கொடி பதிப்பகம் 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை 600004. தொலைபேசி 044-24943074.
(பின் குறிப்பு: தமிழ் சோறு போடுமா என்று லக்ஷ்மியின் தந்தை அன்று கேட்ட கேள்வி இன்றும் சாகாமல்தானே இருக்கிறது – கமல்ஹாசனும் பெருமாள்முருகனும் மறுக்கவா போகிறார்கள்?)

© Y Chellappa  (email: chellappay@yahoo.com).

சனி, ஜனவரி 10, 2015

பதிவு 3/2015 திருக்குறள் நாயக்கர்

பதிவு 3/2015
திருக்குறள் நாயக்கர்

அவரை நாயக்கர் என்றோ நாய்க்கர் என்றோதான் அழைப்பார்கள். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். காக்கி சட்டையும் காக்கி அரைக்கால் நிஜாரும் மிலிட்டரி பூட்சுகளும் மூன்று அங்குல அகலத்திற்குப் பளபளக்கும் தோல் பெல்ட்டும், பாதி வளைந்ததான கவ்பாய் தொப்பியுமாக அவர் ‘சர் சர் சர் ‘ என்று பலத்த ஓசையுடன் வீதியில் நடந்து செல்லும்போது சிறுவர்களாகிய நாங்கள் வியப்புடனும் அச்சத்துடனும் பார்ப்பது வழக்கம்.

வழியில் வேறு யாராவது பெரிய மனிதர்களைப் பார்த்துவிட்டால் சடக்கென்று நின்று மிலிட்டரி பாணியில் சல்யூட் வைக்கும் அழகு இருக்கிறதே, அப்பப்பா.... சாலையில் வாகனங்கள் தாறுமாறாக நின்றிருந்தாலோ அல்லது அவரது வழியை மறிப்பதுபோல் மாடுகளோ எருமைகளோ நின்றிருந்தாலோ தன்னிடமிருந்த நீண்ட பெரிய விசிலால் ஊதுவார். அவ்வளவுதான் எல்லாத் தடைகளும் விலகிப்போகும்.

படம்: நன்றி -கூகிள்

மாலை நேரங்களில் அலுவலகம் முடிந்து அவர் திரும்பும்போதும்  அவர் நடையில் சற்றும் தொய்வு இருக்காது. முகம் சற்று களைப்படைந்திருக்கும் என்றாலும் பள்ளிச் சிறுவர்களாகிய எங்களைக் கண்டால் ‘குட் ஈவினிங் சில்ரன்’ என்று கம்பீரமாகக் கூறுவார். பிறகு ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்’ என்று நடந்துபோவார். நாங்களும் அவருக்குத் தெரியாமல் அவர் பின்னாலேயே    ‘லெஃப்ட் ரைட்’ போட்டுக்கொண்டு சிறிது தூரம் போவதுண்டு.

அவர் ஏதேனும் போலீஸ் அதிகாரியாகவோ மிலிட்டரி ஆபீசராகவோ இருக்கலாம் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். அதெல்லாமில்லை, அவர் எங்கள் ஊரின் முக்கியத் தொழிற்சாலையாகிய ஈஐடி பாரி கம்பெனியில் தலைமை வாச்மேன் என்பது தெரியப் பல வருடங்கள் ஆயின.

ஆகஸ்ட்டு 15 இலும் ஜனவரி 26இலும் பாரி கம்பெனியின் திறந்தவெளி அரங்கில் இலவசாகத் திரைப்படங்கள் காட்டுவார்கள். வெறும் வாய்மொழியாகவே அத்தகவல் பரவும். இரவு ஏழுமணிக்குப் படம் ஆரம்பமாகும் என்றாலும் மாலை ஆறுமணிக்கே ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்ந்துவிடும். இரைச்சல் என்றால் அவ்வளவு இரைச்சல். அப்போதுதான் நாயக்கரின் சாமர்த்தியம் வெளிப்படும். ஒரு நீண்ட தடியைக் கையில் எடுத்துகொண்டு ‘ஆல் ஆப் யூ ஸிட் டவ்ன்’ என்று ஆயிரம் மைக் ஓசையைவிடப் பெரிதாகக் கூவுவார். அவர் எங்கே நிற்கிறார் என்பதே தெரியாது. இருட்டு. ஒரே நொடியில் கூட்டம் முழுதும் அமைதியாகிவிடும். மறந்தும் ஒரு வார்த்தை தமிழில் பேசமாட்டார்.

புரொஜக்டர் இயக்குபவர் வந்ததும் கூட்டம் முழுதும் மகிழ்ச்சியில் கைதட்டும். படம் ஆரம்பமாகும். அநேகமாக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ அல்லது ‘சிவகங்கைச் சீமை’ அல்லது ‘கப்பலோட்டிய தமிழன்’ தான் மீண்டும் மீண்டும் போடுவார்கள்.

திரைப்படம் முடிந்ததும் அடங்கியிருந்த கூட்டம் ஆக்ரோஷமாக வெளியேறத் தொடங்கும். பெண்களும் குழந்தைகளும் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னேறத் துடிப்பார்கள். அப்போது மீண்டும் நாய்க்கருக்கு வேலை வந்துவிடும். தன் நீண்ட கைகளை இருபுறமும் நீட்டி அதற்குள் பத்துப் பத்தாக ஆட்களை அடக்கி ஒரு பந்துபோல் முன்னே தள்ளுவார். இப்போது தமிழில்தான் பேசுவார். ‘யாரும் முந்தக் கூடாது. அவசரப் படாமல் போங்கள்’ என்பார்.

சிறுவர்களாகிய நாங்கள் சற்றுப் பின்தங்கிவிடுவோம். கூட்டம் கலைந்த பிறகு போகலாமே என்று நிற்போம். நாயக்கர் எங்களிடம் வருவார். சிலரிடம் பெயர் கேட்பார். திருக்குறள் படித்திருக்கிறாயா என்பார். இல்லை என்போம். திருக்குறளில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லியிருக்கிறது, கட்டாயம் படிக்கவேண்டும் என்பார். கூட்டமாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு போவது பற்றியும் திருக்குறளில் சொல்லியிருக்கிறது தெரியுமா என்பார். விழிப்போம்.  
    
உன்னை மற்றவர்கள் தள்ளினாலும் நீ அவர்களைத் தள்ளக் கூடாது என்று வள்ளுவர் சொல்கிறார் என்பார். ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார், அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என்பார். அன்றுமுதல் அவரைத் ‘திருக்குறள் நாயக்கர்’ என்றே அழைக்கலானோம். திருக்குறளை அவர் கரைத்துக் குடித்திருக்கிறார் என்று பேசிக்கொள்வோம்.

சில ஆண்டுகள் கழித்து லிப்கோ வெளியிட்ட திருக்குறள் உரையைப் படித்தபோது ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்பதற்கு வேறு பொருள் இருப்பது தெரிந்தது. என்றாலும் திருக்குறள் நாயக்கர் என்ற பெயரை மாற்றவேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

பல ஆண்டுகள் கழித்து நான் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைதேடும் பணியில் தினம்தோறும் தபால் அலுவலகம் சென்றபோது மிகவும் வயதான தோற்றத்தில் அவரைப் பார்த்தேன். அறிமுகம் செய்துகொண்டேன். ‘மிகுந்த சந்தோஷம்’ என்றார். ‘உங்களால்தான் திருக்குறள் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது’ என்றேன். என் கைகளைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டவராக ‘எனக்கு ஒரு உதவி செய்வாயா? ஒரு திருக்குறள் புத்தகம் வாங்கித்தருகிறாயா? தேவாரம் திருவாசகம் எல்லாம் நீளமாக இருக்கிறது. படிப்பதற்குள் தூக்கம் வந்துவிடுகிறது. திருக்குறள் ரெண்டே வரிதானே! செய்வாயா?’ என்றார். ‘சாவதற்குள் திருக்குறள் புத்தகத்தை ஒருமுறையாவது படித்துவிடவேண்டும்‘ என்றார். பகீரென்றது எனக்கு. அப்படியானால் இதுவரை இவர் திருக்குறளைத் தீண்டியதே இல்லையா? ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ நினைவுக்கு வந்தது.

அடுத்தவாரம் வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிட்டேன். பஸ் நிலையத்தில் திருக்குறள் கிடைத்தது. அவரது முகவரிக்கு அனுப்பிவைத்தேன்.    பலநாட்களுக்குப் பிறகு அது எனக்கே திரும்பி வந்துவிட்டது, LEFT என்று தபால்காரர் குறிப்புடன். பின்னால்  ஊர் திரும்பியபோது விசாரித்ததில் இந்த உலகை விட்டே அவர் LEFT என்று தெரிந்தது. துக்கம் விசாரிக்கவும் அவருக்கு உறவினர்கள் யாரும் இருக்கவில்லை.  

பல வருடங்கள் அந்த லிப்கோ திருக்குறள் என்னிடமே இருந்தது.....
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com    

திங்கள், ஜனவரி 05, 2015

பதிவு 2/2015 நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

பதிவு 2/2015

நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

நாரத்தங்காயை நறுக்கி உப்பிட்டு நிழலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். கன்னங்கரேலென்று ஆகிவிடும்.  இரண்டுவருடம் ஆனாலும் கெடாது. தயிர்ச்சோற்றுடன்  சாப்பிட்டால் விண்ணோர் அமுதமும் அதற்கு ஈடாகாது.

சாகித்ய அகாதெமிக்காக முனைவர் இரா.மோகன் தொகுத்தளித்த ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ என்ற நூலைச் சென்ற வருடம் (2014) சென்னை புத்தகக் காண்காட்சியில் வாங்கினேன். இன்றுதான் படிக்க நேரம் கிடைத்தது. பழைய நாரத்தங்காய் ஊறுகாயை விடவும் சுவையான தொகுப்பு.

தமிழில் வெளியான  ஹைக்கூ கவிதை நூல்களில் நூறைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கவிதைகளைப் பொறுக்கியெடுத்து ஆயிரம் ஹைக்கூ கொண்ட இந்நூலைத் தொகுத்திருக்கிறார், மோகன். (144 பக்கம்  விலை ரூ.90.)   வெளியீடு: சாகித்ய அகாதெமி. (சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்).

நூறு கவிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகிறது இந்நூல். ஆயிரம் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் (நன்றியில்லாத) திருப்பணியை விடவும், மோகன் வழங்கியிருக்கும் அற்புதமான முன்னுரை மதிப்பு மிக்கது. ஹைக்கூ வின் தமிழ்நாட்டு நுழைவின் சரித்திரத்தை அவர் இப்படித் தருகிறார்:   

“1916இல் ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவியரசர் பாரதியார். 1968ஆம் ஆண்டில் ‘நடை’ முதல் இதழில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி.மணி. 1970ஆம் வாக்கில் தமிழ் மரபுப்படி இக்கவிதைக்கு ‘சிந்தர்’ எனப் பெயர் சூட்டி, தமிழில் சோதனை முயற்சியாகச் சில ஹைக்கூ கவிதைகளையும் முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் –‘வாமனக் கவிதைகள்’, ‘மின்மினிக் கவிதைகள்’ என்ற பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தவர் – கவிக்கோ அப்துல் ரகுமான்; ‘ஜப்பானிய ஹைக்கூ’ (1987), ‘இதுதான் ஹைக்கூ’ (1990) என்ற இரு நூல்களை வெளியிட்டு ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவர் முனைவர் தி.லீலாவதி; 1984-ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி; தொடர்ந்து 1985-ஆம் ஆண்டில்  ‘ஜப்பானிய ஹைய்கு வடிவக் கவிதைகள்’ என்ற அறிமுகக் குறிப்போடும், ‘வாசல் ஓர வாசகம்’ என்ற பதினான்கு பக்க ஆய்வு முன்னுரையோடும் ‘சூரியப் பிறைகள்’ என்னும் தொகுப்பினை வெளியிட்டவர் முன்னணிக் கவிஞர் தமிழன்பன்; 1988-ஆம் ஆண்டில் இலங்கையில் ‘கூடைக்குள் தேசம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகத் தமிழில் ஹைக்கூ வடிவக் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் சு.முரளிதரன். இன்று தமிழில் இருநூற்றுக்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன....”   

“ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் இயற்கையின் தரிசனமும், தத்துவப் பார்வையும், படிமப் பாங்கும் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஹைக்கூ கவிதைகளில் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளும், அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் முதலிடம் பெற்றுள்ளன...சுருங்கக் கூறின், அங்கதம், முரண், நகை ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்த ‘திரிவேணி சங்கமம்’ ஆகத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் காட்சியளிக்கின்றன....”

தமிழ் தெரிந்த அனைவர் கையிலும் இருக்கவேண்டிய முக்கியமான நூல் இது. ஆசிரியர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மேற்கோள் காட்டுவதற்கு இனிமையான ஹைகூக்கள் ஆயிரம் ஒரே இடத்தில் வேறெங்கே கிடைக்கும்? இந்த அருமையான தொகுப்பை நமக்கு வழங்கிய முனைவர் இரா மோகனுக்கு நமது வாழ்த்துக்கள்!

இனி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஆயிரத்திலிருந்து சில ஹைகூக்கள் இதோ உங்கள் பார்வைக்கு:   


ஒரு கன்னத்தில் அறைந்தான்
மறு கன்னத்தைக் காட்டினேன்
அங்கும் அறைந்தான்.
-கழனியூரன் (‘நட்சத்திர விழிகள்’ – 1990)

படித்துப் படித்துப்
பட்டம் வாங்கினோம்
எரியாத ஈரவிறகு.
-துறவி (‘சிறகுகளின் சுவடுகள்’-1993)

கருத்த பெண்
புகுந்தகம் வந்தாள்...
கலர் டிவியோடு!
-மு.முருகேஷ் (‘விரல் நுனியில் வானம்’-1993)

தென்றல் வீசுகிறது
அனுபவிக்க இயலவில்லை
நாளை இண்டர்வியூ.
-ஆர்.வி.பதி (‘ஹைக்கூ கவிதைகள்’-1994)

கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச் சாவி.
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

பெண் பிறக்கட்டும்
குடும்பத்தோடு பிரார்த்தனை-
பிரசவ வலியில் பசு!
-நவதிலக் (‘பூக்கள் பறிப்பதற்கில்லை’ – 1994)

கார்காலம் வந்தது
பனிக்காலம் வந்தது
நல்ல காலம்?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

எதிலும் சந்தேகம்
போலியோ சொட்டு மருந்து
போலியோ?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

இறுக்கிக் கட்டுங்கள்
இடுப்பு வேட்டியை
போகுமிடம் சட்டசபை!
-கவிமுகில் (‘சூரியத் துளிகள்’ -1998)

பெண்பார்க்கும் படலம்
வீடு கடத்தப்பட்டாள்
அழகான தங்கை!
-பாரதி மணியன் (‘ஹைக்கூ 50’ – 1999)

ஓய்வெடுத்தன
பறவைகள்
உழைப்பாளர் சிலைமேல்
-ந.முத்து (‘எடை குறைவாய்...’ -1999)

பஷீர் வீட்டு
முருங்கைக் கீரை...
மாரியாத்தா கூழுக்கு!
-கா.ந.கல்யாணசுந்தரம் (‘மனித நேயத் துளிகள்’ – 1999)

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா!
-பால பாரதி (‘இதயத்தில் இன்னும்’ -2000)


தொலைந்த மோதிரத்தை
தேடினாள் சகுந்தலை
அடகு வைக்க.
-வண்ணை சிவா (‘ஒற்றைக் கல் சிற்பம்’ -2002)

பெண் உரிமை பற்றி
முழக்கமிட்டாள்
கணவன் அனுமதியுடன்.
-சோலை இசைக்குயில் (‘சூரியனுக்கு வெட்கமில்லை’ -2002)

இரவெல்லாம் குளித்தும்
கறை போகவில்லை
குளத்தில் நிலா.
-இளந்தென்றல் (‘ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலம்’ – 2003)

நிறையப் பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை.
-ஆலா (‘உயிர் வேலி’ – 2003)

நெடுநேரமாய்ப் பேசும் நண்பன்
போகையில் கேட்பானோ...
கடன்!
-இரா.அ.தென்றல் நிலவன் (‘முதல் ரோஜா’ – 2003)

இரவுப் பேருந்துப் பயணம்
தூங்கவேயில்லை
சில்லறை பாக்கி.
-சு. சேகர் (‘முள்ளின் முகவரி’ – 2003)

சக்கையாய்ப் பிழிகிறான்
சாறு விற்பவன்
பாவம், கரும்பு.
-சி.கே.சந்திர மோகன் (‘அல்வாத் துண்டுகளும் சில அணுகுண்டுகளும்’-2004)

கோயிலில்
பக்தர்கள் கூட்டம்
நெரிசலில் கோரிக்கைகள்.
-ராஜசேகர் (‘நதியில் சிறகுகள்’ – 2004)

வீடு நிறையப் பொருள்
பெட்டி நிறையப் பணம்
அயல்நாட்டில் கணவன்.
-மரியா தெரசா (‘துளிப்பா தோப்பு’ – 2004)

இறந்த அப்பா
இன்னும் வழிகாட்டுகிறார்
அலமாரியில் புத்தகங்கள்.
-கம்பம் மாயவன் (‘மின்மினியின் வெளிச்சத்தில்’ -2005)

மகனின் கடிதத்தில்
என்றென்றும் அன்புடன்
காப்பகத்தில் தாய்.
-கன்னிக்கோவில் இராஜா (‘தொப்புள் கொடி’ – 2005)

கோட்டு சூட்டுடன்
திருஷ்டிப் பொம்மை
கோவணத்தில் தொழிலாளி.
-வெ.கலிவரதன் (‘ஒத்திகை’ – 2006)

நாற்காலியைத்
தூக்கியெறிந்து சண்டை
நாற்காலிக்காக.
-சி.விநாயக மூர்த்தி (‘புன்னகை மின்னல்’ -2007)

பேராசிரியர் இரா மோகன், 1972இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக அடியெடுத்துவைத்து, படிப்படியாக முன்னேறி பேராசிரியர் ஆனார். ஆட்சிக் குழு உறுப்பினராகவும் ஆனார். அண்மையில் ஓய்வு பெற்றவர். இதுவரை 88 நூல்களை வெளியிட்டிருக்கிறார். சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

(மேற்கோள் கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்!)

-இராய செல்லப்பா, சென்னை.
(c)  Y Chellappa               
email: chellappay@yahoo.com