பழையதோர் உலகம் செய்வோம்
ஆம், நண்பர்களே, மீண்டும் பழையதோர் உலகம் செய்யும் முயற்சியை நாம் தொடங்கவேண்டியுள்ளது.
அது, 'யாதும் ஊரே- யாவரும் கேளிர்' என்று முழங்கிய கணியன் பூங்குன்றனின் உலகம் !
'அறிவு, அற்றம் காக்கும் கருவி' என்று அறிவியலின் அடிப்படையையும், 'செய்க பொருளை' என்று பொருளாதாரத்தின் அடிப்படையையும், 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று பகுத்தறிவின் அடிப்படையையும் நமக்கு வழங்கிய வள்ளுவனின் உலகம்!
'திறமான புலமை எனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்ற இலட்சியத்தை நமக்கு முன்னேற்றக் குறிப்பாக எழுதிவைத்த பாரதியின் உலகம்!
'தொண்டு செய்வாய் தமிழுக்கு - துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே' என்று போர்ப்பரணி பாடிய பாரதிதாசனின் உலகம்!
சொல்லிக்கொண்டே போகலாம்.
அப் பழைய உலகமே, இனிப் பொன்னுலகம். அப்பொன்னுலகைக் கணினிமயமான இன்றைய உலகில் மீண்டும் நிறுவும் நேரம் (installing time) வந்துவிட்டது.
இதுவே நடைபெறவிருக்கும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின் அடிநாதம்.
ஏற்கெனவே பயணத்திற்குப் பதிவு செய்துவிட்டவர்களும், திடீர் உத்வேகத்தில் கடைசிநேரத்துப் பேருந்தில் தொற்றிக்கொண்டு வரப்போகும் இலக்கிய -அறிவியல் ஆர்வலர்களும் மீண்டும் ஒருதரம் நினைவுபடுத்திக்கொள்ள இதோ அழைப்பிதழ்:
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பழையதோர் உலகம் செய்ய நம்மோடு கைகோர்த்து நிற்கப்போகும் நல்லிதயங்கள் யார் யார் தெரியுமா?
வலைப்பதிவர் நண்பர்களை
வருக வருகவென வரவேற்கிறோம்!
- இராய செல்லப்பா , சென்னை