அமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு
(இன்று கிழமை புதன் -6)
அமெரிக்காவில் 37 ஆவது நாள் (அட்லாண்டிக் கடலோரம்)
2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாதிகளின் இரு விமானங்களால் தாக்கப்பட்டு சிதைந்து போனபோது 3000க்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்பட்டன. ‘நைன்-லெவென்’ (‘9/11’) என்று இந்த நிகழ்வை அமெரிக்கர்கள் குறிப்பிடுவர்.
காலை எட்டு மணிக்கும் 9 மணிக்கும் இடையே நடந்த இத்தாக்குதலில் அகப்பட்டு உயிரிழந்தவர்களில் எல்லா நாட்டவரும் இருந்தனர். 107 மாடிகளைக் கொண்டிருந்த ‘உலக வர்த்தக மையம்’ (World Trade Centre) அமெரிக்காவின் கௌரவம் மிகுந்த கம்பெனிகளின் இருப்பிடமாக இருந்ததால், இந்தியாவின் முன்னணி மென்பொருள் கம்பெனிகளின் ஊழியர்கள் பலர் இங்கு வேலையில் இருந்தனர். அல்லும் பகலும் இயங்கும் (24x7) கம்பெனிகளும், இங்கு இருந்தன. இவற்றிலும் இந்தியர்கள் பணியில் இருந்தனர். எனவே இறந்தவர்களில் இந்தியர்களும் இருந்தனர்.
இரட்டைக் கோபுரங்களின் 107வது மாடிக்கு மேலிருந்த திறந்தவெளியில் கம்பீரமாக நடந்து வந்தது ‘விண்டோஸ் ஆஃப் தி ஒர்ல்ட்’ (WINDOWS OF THE WORLD) என்னும் மது வசதியுடன் கூடிய உணவங்காடி (‘ரெஸ்ட்டாரண்ட் & பார்’). சுருக்கமாக இது ‘விண்டோஸ்’ என்று அறியப்பட்டது. நியூயார்க்வாசிகளின் பிரபலமான உணவங்காடிகளில் இதுவும் ஒன்றாக விளங்கியது. 9/11ல் கட்டிடம் தரை மட்டமான போது இதுவும் மண்ணோடு மண்ணாகச் சரிந்தது.
சுமார் முன்னூற்று இருபத்து மூன்று பேர் இந்த உணவங்காடியில் ஊழியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் 73 பேர், உயிர் தப்புவதற்காகக் கீழே குதித்தனர். (சிலர் 107 வது மாடியிலிருந்தும் சிலர் 106வது மாடியிலிருந்தும்!) அனைவரும் நொறுங்கியும் எரிந்தும் போயினர். மீதியிருந்த 250 பேரில் பெரும்பாலோர் காலை எட்டு மணிக்குப் பின்னரே வேலைக்கு வருபவர்கள் ஆதலால் கட்டிடத்தில் நுழையாமல் உயிர் தப்பினர்.
அமெரிக்கப் பொருளாதாரத்தையே சில பத்தாண்டுகள் பின்னோக்கி நகர்த்திவிட்ட இந்த 9/11 நிகழ்வில், வேலை இழந்தவர்கள் சுமார் பத்தாயிரம் பேர். இவர்களில் கண்ணை உறுத்தும் உயர்பதவிகளில் இருந்தவர்கள் மிகுதி. அப்படியிருக்க, இந்த 250 ஊழியர்கள் எம்மாத்திரம்? வீதிக்கு வந்தனர். இவர்களில் அனேகமாக அமெரிக்காவின் அருகிலிருந்த மெக்ஸிக்கோ போன்ற ‘லத்தின்-அமெரிக்க’ நாட்டவர்கள் தான் மிகுதி.
இவர்கள் உரிய விஸா இல்லாமல் மெக்ஸிக்கோவுக்கும் அமெரிக்க மானிலமான அரிஸோனாவுக்கும் இடையில் மூடிய லாரியில் பயணமாகி, வழியில் இருந்த பாலைவனத்தைப் பலனாட்கள் கால்நடையாகக் கடந்து, ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைத்து ‘அமெரிக்கக் கனவு’ (‘THE AMERICAN DREAM’) என்னும் நல்வாழ்வுதேடி அமெரிக்க மண்ணுக்கு வந்த எழுத்தறிவில்லாத, ஸ்பேனிஷ் தவிர வேறு மொழியறியாத, ஆனால் உடல் உறுதியும் உழைக்கத் தயங்காத மனமும் கீழ்ப்படிதலும் கொண்டவர்கள். அமெரிக்காவின் பெரும்பாலான கடைகளில், பெட்ரோல் பம்ப்புகளில், வீதிப்பணிபுரியும் துப்புரவாளர்களில், பழங்கள்-காய்கறிகள்-உணவுப்பொருள்கள்-பதப்படுத்தும் தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரந்துகிடக்கும் விளைநிலங்களில், உணவங்காடிகளில் பணிபுரிபவர்கள் இவர்களே.
எப்போது வேண்டுமானாலும் அரசு இவர்களை நாடுகடத்தி விட முடியும். அதனால் பயந்து பயந்து வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தவர்கள். (ஆனால் யாரும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். இவர்கள் போய்விட்டால், இம்மாதிரி வேலைகளுக்கு அமெரிக்காவில் ஆள் கிடையாதே!)
‘விண்டோஸ்’ முதலாளியின் நிலைமையும் கவலைக்கிடமானதே. பல மில்லியன் டாலர்கள் இழப்பு அவருக்கு. இறந்துபோன ஊழியர்களின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர், ‘உங்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்வேன், மீண்டும் உணவங்காடி தொடங்கினால் உங்களை மறுபடியும் வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன்’ என்று உருக்கமாகப் பேசினார். வேலையிழந்த 250 பேருக்கும் இது மிகுந்த நம்பிக்கையை ஊட்டியது.
அவர் எப்படியோ மீண்டும் சமாளித்துப் பொருள் திரட்டி, நியூயார்க்கிலேயே புதியதொரு உணவங்காடியைத் துவக்க முடிவு செய்து தேதியையும் அறிவித்தார். இரட்டைக் கோபுரங்களுக்கு அருகாமையில் இருந்த நியூயார்க்கின் மிகவும் விலைமதிப்பான இடமான ‘டைம்ஸ் ஸ்கொயரி’ல் (TIMES SQUARE) அமையப்போவது அது.
இழந்த வாழ்வு மீண்டும் கிடைத்துவிடும் என்ற ஆவலோடு இவர்கள் அவரை அணுகியபோது யாரையும் ஏற்க மறுத்துவிட்டார். ‘அது வேறு, இது வேறு. இங்கு பணிபுரிவதற்குத் தேவையான அனுபவம் உங்களுக்கு இல்லை’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
அன்றாடம் சோற்றுக்கே லாட்டரி அடித்துக்கொண்டிருந்த இவர்களின் கடைசி நம்பிக்கையும் இரட்டைக் கோபுரம் போன்றே சிதைந்து போனது. அப்பொழுது தான் இவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார், சாரு ஜெயராமன் (SARU JAYARAAMAN) என்ற தமிழ்ப்பெண். (பிறப்பு: ஏப்ரல் 03, 1975)
****
சாருவின் பெற்றோர் (ஜயராமன் தம்பதி) தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி நல்ல வேலையில் அமர்ந்தவர்கள். சாருவையும் சேர்த்து அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்.
இரட்டைப் பின்னலுடன் இம்மூன்று சிறுமிகளும் பெற்றோர் புடைசூழ வார விடுமுறைகளில் நியூயார்க் உணவங்காடிகளுக்குப் போனால் இவர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்களாம், மற்றவர்கள். ஆனால் சாருவுக்கோ அங்கு பரிமாறப்படும் வித விதமான பன்னாட்டு உணவுகளின் மேல் தான் ரசிப்பாம். அதற்கான வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை. ஏனென்றால், தமிழ்க் குடும்பங்கள் (ஏன், பெரும்பாலும் இந்தியர்கள்) தம் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதையே விரும்புபவர்கள் அல்லவா?
“எனவே என் பிறந்த வீட்டை விட்டு வெளிவந்த பிறகு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளியே போய் உணவருந்துவதையே தலையாய செயலாகக் கொண்டேன்” என்கிறார் சாரு.
பல நாட்டினர், பல இனத்தினர் வாழும் அமெரிக்காவில் பல்வேறு வகையான உணவுகளை வழங்கும் அங்காடிகளுக்கா பஞ்சம்? ஒவ்வொருவர் வாழ்விலும் சந்திப்பு, பிரியாவிடை, வேலை வாய்ப்பு, பிறந்தநாள், மணநாள் என்று பல்வேறு நல்ல காரியங்களுக்கு உணவங்காடிகள் காரணமாக இருப்பதை அவர் நினைவூட்டுகிறார்.
நமக்கு நல்லது செய்யும் இந்த உணவங்காடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் போதுமான சம்பளம் கிடைக்கிறதா, மருத்துவக் காப்பீடு உண்டா, இருக்க வீடு இருக்கிறதா என்று யாராவது கவலைப்படுகிறோமா என்று கேட்கிறார். இளம் வயதிலேயே எழுந்த இச்சிந்தனையின் விளைவாக அவர் எப்போது உணவங்காடிக்குப் போனாலும் ஊழியர்களை விசாரித்து விவரங்களைத் தெரிந்து கொள்வார். ஆனால் கிடைத்த விவரங்கள் தான் அதிர்ச்சி யூட்டுவதாக இருந்தது.
1. அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், மணிக்கு 2.13 டாலர் மட்டுமே.
2. அவர்களுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்துவிட்டு ஏதோ நம் சாம்ராஜ்ஜியத்தையே கொடுத்துவிட்டதுபோல நினைக்கிறோமே அது எவ்வளவு தவறு! ஏனெனில் அவர்களது வருமானமே அந்த டிப்ஸ் தான்.
3. பணமாக டிப்ஸ் கொடுத்தால் அதை ரெஸ்ட்டாரண்ட் மேனேஜரிடம் கொடுத்துவிடவேண்டும். கிரெடிட் கார்டில் சேர்த்துக் கொடுத்துவிட்டால் அது ரெஸ்ட்டாரண்ட் கணக்கில் வர ஒரு வாரம் ஆகும்.
4. அமெரிக்காவில் மாதச் சம்பளம் கிடையாது. இருவாரத்திற்கொரு முறை வழங்கப்படும். எனவே, தனக்கு வந்த டிப்ஸைப் பெறுவதற்கே இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டும்.
5. அப்படியும் இவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்றால், முதலாளி தன் இஷ்டம் போல் கொடுப்பது தான். பெரும்பாலும் அது மொத்த டிப்ஸில் கால்பங்கு தான் இருக்குமாம். கிரெடிட் கார்டுக்கு வங்கி என்ன பிடித்தம் செய்கிறதோ, அதை டிப்ஸிலிருந்து தான் கழித்துக்கொள்வார்களாம். இது என்னய்யா அநியாயம் என்றால், உன்னைக் காட்டிக்கொடுத்துவிடுவேன், விசா இல்லாமல் வந்தவன் என்பதால் நீ நாடு கடத்தப்படுவாய் என்று எச்சரிப்பார்களாம்.
6. இவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்று பெயர். ஆனால் காலை ஆறு முதல் இரவு பத்து வரை இருந்தாக வேண்டும். அதற்கு ஓவர்டைம் தருவதாக எழுதிக்கொண்டு அதை கண்ணில் காட்ட மாட்டார்களாம். குறிப்பிட்ட வேலை என்றில்லை. உணவுப்பொருளுக்கு ஆர்டர் எடுப்பது முதல், உணவு பரிமாறுவது வரை இருந்தால் பரவாயில்லை. சாப்பிட்ட தட்டை எடுப்பது முதல் அவற்றைக் கழுவி வைப்பதும், கடை மூடு முன்பு நாற்காலிகளைத் துடைத்து தரையைக் கழுவி வைப்பதும் செய்தாகவேண்டும். (இந்தியாவில் தனியார் துறையில் முக்கியமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இதைப் படிக்கும் போது பெருமிதப்படலாம்- ‘அட, அமெரிக்கா போகாமலேயே நம் நிலைமை அதே போல் இருக்கிறதே’ என்று).
7. வார விடுமுறை என்பது கிடையாது. ‘சிக் லீவ்’ கிடையாது. 365 நாளும் வரவேண்டும். இல்லையென்றால் வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது.
இக்காரணங்களால், உணவங்காடி ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையைப்பற்றி நம்பிக்கை கொள்ள வழியில்லாமல் இருந்தது. திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே வராது. ஏனெனில் தனக்கே தங்க வசதியில்லாதபோது, இன்னொருத்திக்கு எங்கே இடம் பார்ப்பது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இவர்கள் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. (இருக்கிறது).
(டிப்ஸ் பற்றி ஒரு முக்கிய தகவல்: இந்தியாவில் டிப்ஸ் தரப்படுகிறது என்றாலும் அதன் அளவு, கொடுப்பவரின் மனநிலையைப் பொறுத்தது. அமெரிக்காவில் அப்படியில்லை. ‘பில்’ எவ்வளவு தொகையோ, அதில் 15 சதம் டிப்ஸ் கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சில உணவங்காடிகளில் ‘டிப்ஸ் 15%’ என்று எழுதியே வைத்திருக்கும். அப்படியானால் அது எவ்வளவு பெரிய தொகை பாருங்கள்! இதிலும் பெரும்பகுதியை உரிமையாளர்கள் ஏப்பம் விடுவதோடு ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதில்லை என்பது தான் சங்கடம்).
****
இத்தகைய பின்னணியில் தான் சாரு ஒரு தொழிலாளர் தலைவியாக உருவெடுக்க வேண்டி வந்தது.
திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் கணவருடன் கலிஃபோர்னியாவுக்கு ஒரு உணவகத்தில் சாப்பிடப்போனார் சாரு. ‘வருக வருக’ என்று சொன்ன வரவேற்பாளர், வெள்ளைநிறத்தினர். ஆனால் உணவு பரிமாறியவர்கள், தரை துடைப்பவர்கள், தண்ணீர் வைப்பவர்கள் எல்லாரும் லத்தினோஸ்.(LATINOS). அதாவது குடியேறிகள். இந்த வித்தியாசம் அவருக்கு எதையோ உணர்த்துவதாகத் தெரிந்தது.
உடல் உழைப்பை நல்கும் இவர்களுக்கு மணிக்கு 2.13 டாலர் மட்டுமே. ஆனால் நின்று வரவேற்கும் அவர்களுக்கோ மணிக்கு 15 டாலர்கள். இவர்களுக்கு விடுமுறையே கிடையாது. கால நேரமும் கிடையாது. அவர்களுக்கோ எல்லாம் முறைப்படி நடக்கும். என்ன கொடுமை யிது!
பார்த்தார் சாரு. உரிமையாளரை அழைத்தார். ‘ஊழியர்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள்’ என்று கேட்டு அவர்களை அசிங்கப்படுத்தவில்லை. மாறாக, ‘இங்கே பரிமாறும் தொழில் செய்பவர்களுக்கு வரவேற்பாளராக ‘புரொமோஷன்’ கிடைக்குமா?’ என்றார்.
‘அதெப்படி, இவர்களுக்கு எழுத, படிக்கவே தெரியாதே!” என்றார் உரிமையாளர். ‘ஆனால் இவர்கள் விரும்பினால் நான் தருவேன். யாரும் இதுவரை அப்படி வந்து கேட்டதில்லையே’.
சாரு சொன்னார்: “எனக்கு என்று ஒரு கௌரவம் இருக்கிறது. நான் போய் உண்ணும் உண்வகங்களும் அதே கௌரவத்திற்குரியவையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவர்களுக்கு உரிய பயிற்சி கொடுத்து மேல்பதவிக்கு இவர்களைக் கொண்டு போகும் உணவகம் எதுவோ அதிலேயே இனி நான் வணவருந்துவேன். என் மகள் பெரியவளாக வளரும்போது, எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் ஊழியர்களுக்கு முன்னேறும் வசதி உண்டு என்பது அவளுக்குப் புலப்பட வேண்டும். அத்தகைய உலகத்தில் தான் அவளை நான் வளர்க்க விரும்புகிறேன்” என்றார்.
உரிமையாளருக்கு இது புதுமையான அனுபவம். தன் தொழிலைப்பற்றி எந்த வாடிக்கையாளரும் இதுவரை தெரிவிக்காத, ஆனால் நிச்சயம் ஆட்சேபிக்கமுடியாத கருத்துக்களை சாரு சொன்னதற்கு அவர் நன்றி தெரிவித்தார். தன்னால் முடிந்ததைச் செய்வதாக வாக்களித்தார்.
அப்போது தான் சாரு புரிந்துகொண்டார். உரிமையாளர்களில் நல்லவர்களும் உண்டு. யாரும் கேள்வி கேட்காததாலேயே அவர்கள் தம் வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தால் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்பிக்கை ஏற்பட்டது.
கலிஃபோர்னியா மானிலத்தில் அவரால் இப்படித் தொடங்கப்பட்ட உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டத்தில் நல்ல விளைவுகள் ஏற்பட்டன. சிறு தொழிலாக நடத்திவந்த பலர் சாருவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு தம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தையும் வசதிகளையும் அதிகப்படுத்தினார்கள்.
ஆனால், பெரிய உணவகங்களை நடத்தி வந்தவர்களோ, ஊழியர்களின் சம்பளத்தை அதிகப்படுத்தினால் கட்டுப்படியாகாது பெண்ணே என்றனர். இல்லை, என்னால் அதை நிரூபித்துக் காட்ட முடியும் என்றார் சாரு.
நீண்ட ஆராய்ச்சிக்கும் முன்னேற்பாடுகளுக்கும் பிறகு தகுதியான தொழிலாளர்களைக் கொண்டு கூட்டுறவு முயற்சியில் ‘கலர்ஸ்’ (COLORS) என்ற புதிய உணவங்காடிகளைத் தொடங்க வைத்தார். நாட்டில் பல இடங்களில் இவை இயங்குகின்றன. இவற்றில் செயற்கை உரம் இடாத, பூச்சி மருந்து இடாத, இயற்கை முறை சாகுபடியில் விளைந்த பொருட்களைக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு மற்ற இடங்களை விடக் கூடுதலாகச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்காகப் பொருள்களின் விற்பனை விலை கூடுதலாக்கப்படவில்லை. நாடெங்கும் உணவங்காடித் தொழிலில் இருப்பவர் மத்தியில் சாருவின் புகழ் பரவியது.
******
இவரால் தான் தங்கள் வாழ்வுக்கு வழி காட்ட முடியும் என்று ‘விண்டோஸ்’ ஊழியர்கள் சாருவிடம் வந்ததன் பின்னணி இது தான்.
அப்போது 27 வயதான சாருவுக்கு, தான், ஒரு தொழிலாளர் தலைவியாக உருவெடுத்தாக வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டது. விண்டோஸில் தலைமை வெயிட்டராகப் பணியாற்றிய ஃபெக்காக் மம்டூ (FEKKAK MAMDOUH) என்ற மொராக்கோ நாட்டவர், சற்று துணிச்சல் மிக்கவர். போராடும் குணமுள்ளவர். விஷயம் தெரிந்தவர். விண்டோஸ் இயங்கிவந்த போதே இவர் தான் அவர்களின் அங்கீகரிக்கப்படாத பிரதிநிதியாக இருந்தாராம். தொழிலில் 17 வருட அனுபவம் கொண்டவர். அவரைச் சேர்த்துக்கொண்டு எல்லா விஷயங்களையும் நன்கு தெரிந்துகொண்டு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் சாரு.
ஏற்கெனவே கலிஃபோர்னியாவில் உணவங்காடித் தொழிலாளர்களின் நிலைமையை நன்றாக அறிந்திருந்த சாருவுக்கு, இனி, தன்னுடைய வாழ்க்கை, வெறும் விண்டோஸ் ஊழியர்களுக்காகப் போராடி வெற்றி பெறுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அமெரிக்காவில் வாழும் அனைத்து உண்வங்காடித் தொழிலாளர்களுக்குமே பயன் தருவதாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் ஏற்பட்டது.
எனவே ம்ம்டூ வுடன் சேர்ந்து ‘ரெஸ்ட்டாரண்ட் ஆப்பர்சுனிட்டீஸ் செண்ட்டர்’ (‘ROC’ - RESTAURANTS OPPORTUNITIES CENTER) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார் சாரு. (ஏப்ரல் 2002). ஊழியர்களை ஒன்றுபடுத்தலும், அவர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தலும் இதன் முக்கிய நோக்கங்களாகும். ஆனால் உடனடியான நோக்கம், விண்டோஸ் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவதே.
நிறுவனம் துவங்கி ஒரு மாதத்திற்குப் பிறகு, பணியிழந்த விண்டோஸ் தொழிலாளர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார். எல்லாரிடமும் அடிபட்ட வேங்கையின் கோபம் இருந்தது. ஏனெனில் அவர்களின் முன்னாள் உரிமையாளர் ‘உங்களுக்கு அனுபவம் இல்லை’ என்று கூறி அவமானப்படுத்தி விட்டாரல்லவா?
‘நாம் போராட வேண்டும்’ என்றார் சாரு. ஆனால் அவர்களுக்குப் போதுமான தைரியம் எழவில்லை. நாடு கடத்தப்பட்டுவிடலாம் என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஒருவாறு இறுதியில் விண்டோஸின் டைம்ஸ் ஸ்கொயரில் துவங்கப்போகும் புதிய உணவங்காடி முன்பு, துவக்க நாள் மாலையில் எல்லாரும் கூடி ‘எதிர் முழக்கம்’ (PROTEST) இடுவது என்று முடிவாயிற்று.
அன்று மாலை. வண்ண விளக்குகளின் ஒளிவெள்ளத்தில், சாரிசாரியாக முக்கிய விருந்தினர்களும் அரசியல் சினிமா பிரமுகர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் புதிய உணவங்காடிக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, அதன் எதிரே சாருவின் தலைமையில், மம்டூவும் அவரது 250 ஊழியர்களும் தத்தம் மனைவி, குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ‘இழந்த வேலையைக் கொடு’ என்று முழக்கம் இட்டார்கள்.
இது, அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸின் முதல் பக்கச் செய்தியாக ”Windows on the World Workers Say Their Boss Didn’t Do Enough” என்று வந்தது.
சாருவின் தலைமைக்கு முதல் வெற்றி இது. சில நாள் கழித்து, மம்டூவுக்கு விண்டோஸ் உரிமையாளரிடமிருந்து போன் வந்தது, சாருவுடன் வந்து என்னைச் சந்திக்கிறாயா என்று. இவர்களால் நம்பவே முடியவில்லை. அடுத்த கட்டப் போராட்டம் எப்படி நடத்துவது என்று திகைப்பில் ஆழ்ந்து இருந்தவர்களுக்கு, அவரே வரச் சொன்னது ஆச்சரியமான ஆனால் சந்தேகத்துக்கு இடமானதாகவும் இருந்தது. என்றாலும் இருவரும் போனார்கள். மனம் விட்டு பேசினார்கள்.
உரிமையாளர் ஒரு நல்ல செய்தியைச் சொன்னார். விரைவில் இந்த உணவங்காடியை விரிவுபடுத்தி, பெரிய விருந்துகள் பரிமாறும் வசதியை ஏற்படுத்தவிருப்பதாகவும், அனேகமாகத் தன்னுடைய பழைய ஊழியர்கள் எல்லாரையுமே வேலைக்கு எடுத்துக் கொள்ளக்கூடும் என்றும் சொன்னார். ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கிய வசதிகளுக்குக் குறைவு இருக்காது என்றும் சொன்னார். (மற்ற உணவங்காடிகளை விட சம்பளம் மற்றும் வசதிகளை அதிகமாகத் தான் கொடுத்துவந்ததாம், விண்டோஸ்).
சாருவுக்கும் ம்ம்டூவுக்கும் தம் கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை. முதல் முயற்சியிலேயே வெற்றியா? ‘இதில் ஏதோ சூது இருக்கிறது’ என்றார் சாரு. ‘இல்லை, இது நம் வெற்றி’ என்றார் மம்டூ. அவருக்குத் தெரியாதா தன் பழைய முதலாளியைப் பற்றி?
மறுநாள் சாருவின் படம் வராத பத்திரிகைகள் இல்லை. டி.வி.க்கள் இல்லை. அனைவருக்கும் சாருவின் இளைமையான தலைமை பெருமைக்குரியதாகப் பட்டது.
ஆனால் தமிழ்ப் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பெண்ணான சாரு ஜயராமனுக்கு இனிமேல் தான் தன் போராட்ட வாழ்வு துவங்கப்போகிறது என்று நிச்சயமாகத் தெரிந்தது.
இரண்டு குழந்தைகளுடன் ஹார்வர்டிலும் யேல் பல்கலையிலும் பயின்று பி.எச்.டி. பட்டத்தையும் சுமந்திருக்கும் சாரு ஜயராமன், பெர்க்கலியில் உள்ள யுனிவர்ஸிட்டி ஆஃப் கலிஃபோர்னியா- ‘உணவுத்தொழிலாளர் ஆராய்ச்சி மைய’த்தின் இயக்குனராக இருக்கிறார். (Director of Food Labour Research Centre). ஆர்.ஓ.சி.யின் கூட்டு நிறுவனர் (Co-Founder of ‘ROC’ - RESTAURANTS OPPORTUNITIES CENTER) என்ற பட்டமும் தொடர்கிறது.
தனது அனுபவங்களை அவர் மூன்று புத்தகங்களாக வெளியீட்டிருக்கிறார்.
"BEHIND THE KITCHEN DOOR", "FORKED", "ONE FAIR WAGE" ஆகியவை. நான்காவதாக IMMANUVEL NESS என்பவருடன் இணைந்து அவர் எழுதி, அண்மையில் வெளிவந்திருப்பது "THE NEW URBAN IMMIGRANT WORKFORCE- INNOVATIVE MODELS FOR LABOUR ORGANISING" என்ற நூல். இதூவும் முக்கியமான நூலாகத் தெரிகிறது. இனிமேல்தான் நான் படிக்கவேண்டும்.
****
ஆனால் ஒன்று, தமிழ்நாட்டில் டிப்ஸ் கொடுக்கிறோமோ இல்லையோ, அமெரிக்காவில் ஓட்டலில் சென்று உணவருந்தும்போது மறக்காமல் டிப்ஸ் கொடுத்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள். பட்ட மேற்படிப்பு பயிலும் நம் நாட்டு மாணவர்களும் பகுதிநேர ஓட்டல் பணியாளர்களாக வேலைசெய்வதால் அவர்களும் நம்பயன்பெறுவார்கள்.
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
(2013 இல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி- இப்போதைய நிலைமைக்கு ஏற்ப திருத்தப்பெற்ற மீள்பதிவு)
ஓ... எனக்கு இந்திய ரெஸ்டாரண்டுகளில் டிப்ஸ் கொடுப்பதே கசக்கும். இது, வங்கி ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு லஞ்சம் தருவதுபோன்றதுதானே எனத் தோன்றும்
பதிலளிநீக்குபாதிக்கப்பட்டவர்கள் வாழ்வு நிலை மிகவும் வருந்த வைக்கிறது...
பதிலளிநீக்குபடித்து முடித்து அசந்து ஆச்சரியப்பட்டேன். என்ன ஒரு பரந்த அறிவு தங்களுக்கு என்று.
பதிலளிநீக்குஇது மாதிரியான புத்தகங்களைப் படிக்க தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ ?
முதல் பகுதி - அந்த நிகழ்வின் போது நாங்கள் அங்குதான் ஆனால் மேற்கில் இருந்தோம். இறங்கி 15 நாட்களில். நிகழ்வினால் நேரடி பாதிப்பு இல்லை ஆனால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களில் நாங்களும். செம அடி! அது.
பதிலளிநீக்கு(இந்தியாவில் தனியார் துறையில் முக்கியமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இதைப் படிக்கும் போது பெருமிதப்படலாம்- ‘அட, அமெரிக்கா போகாமலேயே நம் நிலைமை அதே போல் இருக்கிறதே’ என்று).
இதனை பல முறை டிட்டோ செய்கிறேன்!!! இதிலும் அடி உண்டே!!! ஹாஹாஹாஹா...இதுமட்டுமா இன்னும் நிறைய ஊழல்கள் உண்டு. பேசும் சம்பளம் ஒன்று கையில் கொடுக்கும் சம்பளம் ஒன்று. இப்போது கொரோனா காலத்தில் இன்னும் அடிமட்டம்.
சாருவின் எண்ணங்கள் உயர்ந்த எண்ணங்கள். மிகச் சிறந்த சிந்தனை. அவரது முயற்சிகளுக்கு உடனே வெற்றி கிடைத்ததும் பெரிய விஷயம்தான்.
சாரு வியக்க வைக்கிறார்.
நல்ல பதிவு.
கீதா
துணிச்சலான சாறு ஜெயராமன் பாராட்டப்பட வேண்டியவர். டிப்ஸ் அங்கெல்லாம் கட்டாயம் என்பது ஆச்சர்யம்.
பதிலளிநீக்குhttps://www.google.com/search?gs_ssp=eJzj4tVP1zc0TDaNN6wsqKo0YPTiK04sKlXISqxMLErMTcwDAJmQCls&q=saru+jayaraman&oq=saru+jaya&aqs=chrome.1.0i355i512j46i512j69i57j0i512l6.7571j0j7&client=ms-android-samsung-gs-rev1&sourceid=chrome-mobile&ie=UTF-8
பதிலளிநீக்குமிக நல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. விரிவான தகவல்கள்.
பதிலளிநீக்கு