திங்கள், மே 30, 2022

“க.கொ.எ?” - கட்டுரையால் ஜெயிலுக்குப் போகும் அமெரிக்க நாவலாசிரியர் நான்சி

“கணவனைக் கொல்வது எப்படி” - கட்டுரையால் ஜெயிலுக்குப் போகும் அமெரிக்க நாவலாசிரியர் 

(இன்று கிழமை ஞாயிறு-7)

அமெரிக்காவில் 48 ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)



'உங்கள் கணவரைக் கொல்வது எப்படி' என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியர், அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தைச் சேர்ந்த (பெண்) எழுத்தாளர் நான்சி கிராம்டன் பிராப்பி (Nancy Crompton Brophy), நான்கு வருடங்கள் முன்பு உண்மையிலேயே தனது கணவர் டானியல் பிராப்பி (Daniel  Brophy) யைக் கொன்றவர்தான் என்று நீதிமன்றம் இப்போது (2022) தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு அநேகமாக 25 ஆண்டு சிறைத்தண்டனை (அதாவது ஆயுள் தண்டனை) வழங்கப்படலாம் என்று தெரிகிறது.


ஒரு சமையல் பள்ளியில் ஆசிரிய-சமையல்காரராகப் பணியாற்றியவர் 63 வயதான டானியல் பிராப்பி. 2018 ஜூன் 2ஆம் தேதியன்று சமையலறையிலிருந்த கைகழுவும் தொட்டியின்  அருகே தரைமீது இரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரது மாணவர்களே அக்காட்சியை முதலில் கண்டவர்கள். 


மூன்று மாதங்கள் கழித்தே கொலையுண்டவரின் மனைவியும் நாவலாசிரியருமான நான்சி கைதுசெய்யப்பட்டார்.  வேண்டாத கணவனை, தான் அகப்பட்டுக்கொள்ளாமல் கொல்வதற்கான  வழிகளை விவரிக்கும் அக்கட்டுரையை, தானே எழுதி, தானே  வெளியிட்டார் என்ற செய்தி அவருடைய கைதுக்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகக் கூறப்பட்டது.  


ஆனால் நான்சி மீது சூழ்நிலை சாட்சியங்களும் இருந்தன.  சம்பவம் நடந்த அன்று சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில் தன்னுடைய காரில் அந்த இடத்துக்குச் சென்றதும், திரும்பிவந்ததும் பதிவாகியிருந்தன; கணவரைக் கொல்லப் பயன்பட்ட அதே துப்பாக்கியின் மாடல்தான் இவரிடமும் இருந்தது; கணவரின்  பெயரால் எடுக்கப்பட்டிருந்த ஆயுள் இன்சூரன்ஸ் காப்பீடான 815,000 டாலர்களைப் பெறுவதற்காக அவர் விண்ணப்பித்திருந்தார். இவையெல்லாம் வலுவாக இருந்ததால், கணவரைக் கொல்வது பற்றிய அவரது 2011 ஆம் வருடத்துக் கட்டுரையை  ஒரு சாட்சியமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று விசாரணை நீதிபதி கூறிவிட்டார். 


நான்சியின் காதல் நாவல்களில் வரும் கிளைமேக்ஸ் காட்சிக்கு எந்த வகையிலும் குறையாதது, அவரது கணவரை அவர் கொன்றதாக போலீசாரால் வர்ணிக்கப்பட்ட நிகழ்வு: தன் கணவரை அவருடைய இதயத்தில் இரண்டு முறை சுட்டுக் கொன்றாராம். முதல் குண்டு தன் முதுகுத்தண்டை அறுத்துக்கொண்டு இதயத்தில் பாய்ந்தவுடன், அவரது கணவர், ஒன்றும் புரியாமல் மனைவியைத் திரும்பிப் பார்த்தாராம். கணவரின் அருகில் குனிந்து பார்த்து இன்னொரு குண்டையும் செலுத்தி அவரை உயிரிழக்கவைத்தாராம் நாவலாசிரியர். 


பணத்திற்காகத் தன்  கணவரைக் கொன்றுவிட்டதாகக் கருதவேண்டாம், தான் விரும்பிய வாழ்க்கைத் தரத்தை கணவரால் வழங்கமுடியாததே கொலைக்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று, அவருடைய கடன் அட்டைப் பாக்கிகளை எடுத்துக்காட்டியது போலீஸ் தரப்பு.


ஆனால் அவருடைய வழக்கறிஞர்களோ, நான்சி அன்று காலை சம்பவ இடத்திற்கு காரோட்டிச் சென்றதை மறுக்கவில்லை. ஆனால், அது அவரது எழுத்துப்பணியோடு சம்பந்தப்பட்டது என்றும், அதை வாக்குமூலத்தில் குறிப்பிடாததற்குக் காரணம், தன் கணவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அவர் “சோகமயமான அதிர்ச்சி”யில் மூழ்கிவிட்டதால்,  “அதற்கு முன் நடந்ததை எல்லாம் மறந்துபோய்விடும்” ரெட்ரோகேட் அம்னீஷியா என்னும் பாதிப்புக்கு உள்ளானதே என்றும் வாதிட்டார்கள்.  


ஆனால் ஜூரிகள் ஒருமனதாக நான்சிதான் குற்றவாளி என்று எழுதிக்கொடுத்ததால், அவரது தண்டனை உறுதியாகிவிட்டது. (ஆனால் அவர் மேல்முறையீடு செய்தால் விளைவு என்ன ஆகுமென்று தெரியாது).   


தண்டனை பெறப்போகும் நாவலாசிரியருக்கு இப்போது வயது 71. தம்பதிகள் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், அவர் தன்  கணவனோடு ஒரு வெள்ளிவிழாக்காலம் இணைந்து வாழ்ந்ததை கவனிக்கவேண்டியிருக்கிறது.


கணவரைக் கொன்ற துப்பாக்கியை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் பேரலை நான்சி உடனடியாக  மாற்றி விட்டாராம். தடயவியல் சோதனையில் இருந்து தப்பவே நான்சி இப்படிச் செய்திருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. 


- இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

10 கருத்துகள்:

  1. இந்த செய்தியை நான் படித்த நினைவு உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அவர் கொன்றார் என்பதை விடுங்கள். ஆனால் ஏழுத்தாளர் அவர் இப்படி ஒரு புத்தகம் எழுதியதுதான் வியப்பு! அதையும் வெளியிட்டிருக்கிறார்களே!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. It seems, like a, Crime Thriller. Writer should have some restrictions , they cannot write like this.

    பதிலளிநீக்கு
  4. தூக்குத் தூக்கி வசனம் அவரும் கேட்டிருப்பாரோ...!

    பதிலளிநீக்கு
  5. பாவங்க, நம்மள மாதிரி இந்தக் கட்டுரையை அவர் தன்னுடைய வலைப்பதிவில்தான் எழுதியிருக்கிறாராம்! இப்போது அதை யாரும் பார்க்கமுடியாதபடி செய்துவிட்டாராம்!

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்காவில் விவாகரத்து என்பது பனியன் கழற்றி மாட்டுவது போல. வேண்டாத கணவனை விவாகரத்து செய்து இருக்கலாம் .அல்லது தனியாக வாழ்ந்து இருக்கலாம்.ஏதற்கு அனாவசியமாக கொலை எல்லாம் ??தண்டனை எல்லாம் ??

    பதிலளிநீக்கு
  7. அட ராமா. கொன்றதோடு நின்று தொலைந்திருக்கக் கூடாதோ..

    பதிலளிநீக்கு
  8. அசட்டுத் துணிச்சல். சரியாக சிந்திக்காமல் இருக்கும் மனோவியாதி. முட்டாள்தனம் இவை அவ்விடம் அதிகம் . Fargo serial பார்த்ததால் வந்த முடிவுகள். அவை உண்மை சம்பவங்கள். நான்கு சீஸன்கள் ஒவ்வொன்றும்பஒவ்வொன்றும் எபிசோட். பிரமிக்க வைக்கும் வக்கிரமான நிகழ்வுகள். அருமையான காமெரா இசை நடிப்பு இயல்பான படப்பிடிப்பு. இந்த சம்பவத்தையும் எடுத்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு