வெள்ளி, மே 20, 2022

மகா பெரியவரின் மகத்தான தரிசனம்

 38  மகா பெரியவரின் மகத்தான தரிசனம் 

(இன்று கிழமை வியாழன்-6 )  

அமெரிக்காவில் 38 ஆவது நாள் 


(மணித்திருநாடு)

குல்பர்கா என்ற இருள் நகரத்தில் நான் வங்கி மேலாளராகப் பணியில்  இருந்தது ஓராண்டு மட்டுமே. ஆனால் அந்த ஓராண்டில் தான் எத்தனை இனிய அனுபவங்கள்!


கருணைத் தெய்வமாய்க் காஞ்சியில் வீற்றிருந்த (அமரர்) மகாஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை, முதன் முதலில் நேரில்  தரிசிக்கும் பேறு பெற்றது அவ்வூரில் தான். 

 

(ஆறு வயதில், சிவப்புப் பட்டுடுத்தி, பச்சைப் பட்டு மேலாடையுடன் அவரை எங்கள் சொந்த ஊரான இராணிப்பேட்டையில் தரிசித்தேனாம். அம்மா சொல்வதுண்டு. ஆனால் ஞாபகம் வரவில்லை).

 

1980 ஜூன் 25ஆம் தேதி  சுவாமிகள்  மகராட்டிர மாநிலம் சத்தாரா அடைந்து சுமார் ஒரு வருடம் வாசம் கொண்டிருந்தார்கள். தில்லை நடராஜப் பெருமானுக்குச் சிதம்பரத்தில் உள்ளது போன்றே ஒரு திருக்கோயிலை சத்தராவில் எழுப்பிடத் திருவுள்ளம் கொண்டார்கள்.  அதற்குரிய ஏற்பாடுகளைத் தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைத்தார்கள்.  (1981இல் தொடங்கிய பணி மூன்றாண்டுகளில் நிறைவடைந்தது).


பின், காஞ்சியை நோக்கிப் பாத யாத்திரையாக அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது.


1982 ஜனவரி 31ஆம் தேதி துல்ஜாபூர் வந்தடைந்தார்கள். பிப்ரவரி 24ஆம் தேதி சித்தபல் என்ற இடத்தில் குரு ஆராதனை நடந்தேறியது. 1982 மே மாதம் 18ஆம் தேதி குல்பர்கா நகர எல்லையான மகாகாவ் என்ற இடத்திற்கு வருகை தந்தார்கள். அங்கு 256 நாட்கள் தங்கி, வியாச பூஜையும் சாதுர்மாஸ பூஜையும் முடித்துக்கொண்டு 1983 ஜனவரி 28ஆம் தேதி அன்று தமிழகம் நோக்கி நடந்தார்கள்.

 

ஆச்சாரியர்களின் பாதயாத்திரை அணி மஹாகாவுக்குள்  நுழையும் போது குல்பர்கா நகரத்தில் இருந்த சான்றோர்கள் அவர்களுக்குப் பூரணகும்ப மரியாதை சமர்ப்பித்து  ஆசி பெற்றனர். அவர்களில் நானும் ஒருவன்.

 

உத்தர நடராஜர் ஆலயம் சத்தாரா 

ஏற்கெனவே மெலிந்த திருமேனி. 89 வயது. அதிலும் சுட்டெரிக்கும் மே மாதத்துச் சூரியனின் தாக்கம் தொடர்ந்து பட்டதால் இன்னும் வாடிப் போயிருந்தது. எனினும்  தன் கனிவு சுரக்கும் திருப்பார்வையால் அனைவரையும் கை உயர்த்தி ஆசீர்வதித்தார் மகாபெரியவர்.  தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த சிறிய  ஓலைக்குடிலை நோக்கித் தன் நடைபயணத்தைத் தொடர்ந்தார். 

 

காஞ்சி நகரில் அரசன் முதல் ஆண்டி வரை அவரைத் தரிசிக்க வரிசையில் காத்துக்கிடக்கும் போது, அதுவரை அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமே வராமல் இருந்தவன்பால்  கருணை கொண்டு தரிசனம் கொடுப்பித்த பேரன்பை என்னென்று சொல்வேன்! கண்ணில் நீர் வழிய அவரின் அடிச்சுவட்டைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

 

சுற்றி நின்ற கிராமத்து மக்கள் இவர் யார் என்பது கூடப் புரியாதவர்கள், இவ்வளவு வயதானவர், இந்த வெய்யிலில் கால் நடையாகவே ஆயிரக் கணக்கான மைல் நடந்து வந்திருக்கிறாராமே என்று பிரமித்து நின்றார்கள். அவரோடு தாங்களும் மஹாகாவ் வரை நடந்தார்கள்.

 

அலுவலகப் பணியால் கட்டுண்டிருந்த நான் மேற்கொண்டு தொடர முடியாமல் குல்பர்கா திரும்பினேன்.

 

என்னுடைய ஆறாவது வயதில் அவரைத் தரிசித்த நிகழ்ச்சியைக் கண் முன் கொண்டு வர முயன்றேன்:

 

ஓர் இளம்  துறவி, கையில் துறவுக்கோலுடன், சுற்றிலும் பூஜைத் திரவியங்கள் சூழ்ந்திருக்க, ஞானப் பெருமிதத்துடன் அமர்ந்திருக்கிறார். நகரத்துப் பணக்காரர்களும் முக்கியஸ்தர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு கை நிறைய பழங்கள், பட்டு வேட்டி, புடவை, அங்கவஸ்திரம், மற்றும்  தட்சிணை என வெற்றிலை தட்டில் வைத்துச் சமர்ப்பித்து ஆசி பெறுகின்றனர்.

 

ஆண்களுக்கான வரிசை முடிந்தவுடன், பெண்கள்.

 

அம்மா என்னைக் கையோடு அழைத்துச் சென்று ஆச்சாரியர்களின் முன் நிறுத்தி, 'நமஸ்காரம் பண்ணு'' என்கிறார். பட்டு வஸ்திரம் தரையில் புரளத் தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறேன். புன்சிரிப்போடு, பேர் என்ன என்கிறார். நான் சொல்வதற்குள், அம்மா  முந்திக் கொண்டு 'பரசுராமன்' என்கிறார். 'இல்லை இல்லை, என் பேர் செல்லப்பா' என்கிறேன் அவசரமாக. எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர் உள்பட.

 

'அது பள்ளிக்கூடத்திற்கு. இது சமஸ்காரங்களுக்கு' என்கிறார். கையில் கற்கண்டுக் கட்டிகளைத்  தந்து, 'நன்றாகப் படிக்கிறாயா பரசுராமன்?' என்கிறார். 'எப்போதும் நான் தான் பர்ஸ்ட்டு மார்க்கு' என்கிறேன். ஆமாம்  என்பது  போல் அம்மா அவரைப் பணிவாக நமஸ்கரிக்கிறார். மஞ்சள் குங்குமமும் மாங்கல்யச் சரடும் தவிர வேறு அணிகலன்கள் இல்லாததை ஆச்சாரியார் கவனிக்காமல் இருந்திருப்பாரா? 'காமாட்சி கை விட மாட்டாள்' என்கிறார். குங்குமம் தருகிறார். நிறைவோடு வெளியே வருகிறார் அம்மா. எனக்கும் இன்னதென்று தெரியாத மன நிறைவு தோன்றுகிறது.

 

அடுத்த சில நாட்களில் நான் குல்பர்காவிலிருந்து விடை பெற்றுக் கொண்டுவிட்டேன். ஆனால் மகாகாவில் ஏற்பட்ட மகத்தான அனுபவம் இன்றும் மனதிலேயே நிற்கிறது.

மகாஸ்வாமிகளுக்கு 1993 மே 7ஆம் தேதி, நூறாண்டு நிறைந்தது. 1994 ஜனவரி 8ஆம் தேதி அவர்கள் மகாசமாதி அடைந்தார்கள்.

 

முதல் கனகாபிஷேகம் முடிந்த சில நாட்களில் மகாஸ்வாமிகளை மீண்டும் தரிசிக்கும் பேறு பெற்றேன். புது டில்லியிலிருந்து எனது சிறந்த நண்பரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்பதி சமேதராக இதற்கெனவே காஞ்சிக்கு வந்தார்கள். அவர்களோடு நானும் தரிசனம் பெற்றேன். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். 


திருமதி ஆனந்தம் , திரு (அமரர்) எஸ் கிருஷ்ணமூர்த்தி 

ஆனந்தம் என்னும் தன் மனைவியின் பெயரைச் சேர்த்துக்கொண்டு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்ற எழுத்துலகப் பெயரை கொண்டிருந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 06-4-2019  அன்று  அமரர் ஆகிவிட்டார். கோவையில் தற்போது தனியாக வசிக்கும் திருமதி ஆனந்தம் அம்மையார் அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்லவிழைகிறேன். 


நியூ ஜெர்சியில் ஸ்ரீ மகாஸ்வாமிகளின்   பாதுகைகளை வைத்து ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.  விரைவில் சென்று தரிசிக்க வேண்டும். ‘ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல் அதற்கும் ஸ்ரீ மகா பெரியவரின் ஆசியை வேண்டுகிறேன். 


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 


10 கருத்துகள்:

 1. மகாபெரியவரின் அருளாலே அவர் பாதுகையை நீங்கள் விரைவில் தரிசிக்க எங்கள் பிரார்த்தனைகள் 🙏🏻🙏🏻

  பதிலளிநீக்கு
 2. உங்கள் அனுபவம் நன்று!
  காஞ்சியில் என் அத்தை இருந்த போது நான் அங்கு சென்றிருந்த போது சென்று வந்தேன். அப்போது அவர் மௌனவிரதத்தில் இருந்த சமயம். என்றாலும் மன நிறைவு.

  //நியூ ஜெர்சியில் ஸ்ரீ மகாஸ்வாமிகளின் பாதுகைகளை வைத்து ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. விரைவில் சென்று தரிசிக்க வேண்டும். ‘ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல் அதற்கும் ஸ்ரீ மகா பெரியவரின் ஆசியை வேண்டுகிறேன். //

  நிச்சயமாகக் கிடைக்கும் சார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. எனக்கு அவரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவேயில்லை.

  பதிலளிநீக்கு
 4. "1982 ஜனவரி 31ஆம் தேதி துல்ஜாபூர் வந்தடைந்தார்கள். பிப்ரவரி 24ஆம் தேதி சித்தபல் என்ற இடத்தில் குரு ஆராதனை நடந்தேறியது. 1982 மே மாதம் 18ஆம் தேதி குல்பர்கா நகர எல்லையான மகாகாவ் என்ற இடத்திற்கு வருகை தந்தார்கள். அங்கு 256 நாட்கள் தங்கி, வியாச பூஜையும் சாதுர்மாஸ பூஜையும் முடித்துக்கொண்டு 1983 ஜனவரி 28ஆம் தேதி அன்று தமிழகம் நோக்கி நடந்தார்கள்."

  இவ்வளவு துள்ளியமாக எப்படி அவருடைய பயணதேதிகளை தங்களால் கொடுக்க முடிகிறது...அதுவும் இவ்வளவு காலம் கடந்து..?

  சத்தாரா கோயிலில் நான்கு நுழைவாசல் கோபுரங்களில் ஒரு கோபுரம் MGR அவர்கள் sponsor செய்து கட்டப்பட்டது.MGR பெயர் பொறித்த கல்வெட்டை காணலாம்.

  பதிலளிநீக்கு
 5. மகா பெரியவா தரிசனம் பெற்ற மாதிரி ஒரு அனுபவம் கிடைத்தது தங்கள் இன்றைக்கு பதிவை படித்தவுடன். கண்களில் கண்ணீர் பனித்தது தானகவே.மிக்க நன்றி சார்.

  தங்கள் பெயரை பரசுராமன் என்றே வைத்து கொள்ளலாமே.? என் பெயருக்கு Match ஆக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பெயர் மாற்றத்திற்கு நீங்கள் அதிகவிலை கொடுக்க வேண்டி இருக்குமே பரவாயில்லையா?

   நீக்கு
 6. சிறப்பான கட்டுரை. நெய்வேலியில் இருந்தபோது ஒரு முறை அவரை தரிசித்து இருக்கிறேன். வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவில் வளாகத்தில்....

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா27 மே, 2022 அன்று 10:34 AM

  மஹா பெரியவரரை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய உமது அனுபவ கட்டுரைக்கு நன்றி. தொடரட்டும் உமது பணி.

  பதிலளிநீக்கு