5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்! (நியூஜெர்சி மடல் – 2)
(நியூஜெர்சி
மடல் – 2)
மே 30 , 2014 வெள்ளிக்கிழமை, நியூஜெர்சி
இன்று குளிர் குறைந்து, வெயில் வந்திருக்கிறது. என்றாலும்
வெந்நீர்தான் குடித்தேன். சளி பிடித்துவிடுமோ என்ற தயக்கமே காரணம். நாளை
கலிபோர்னியா செல்லவேண்டும். விமானத்தில் அமர்ந்து மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தால்
எப்படி?
டிவியில் ஏதோ ஒரு சானலில் SITUATION ROOM என்ற ஆவணப்படம் வந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் மயாமி (MIAMI)
நகரத்தின் சிறைச்சாலையில், 'உள்ளிருப்போர்' –அதாவது
கைதிகள் – எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் கருப்பொருள். சிறை அதிகாரிகள்
சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்று பேட்டி காணப்படுகிறது. உயர்ந்தபட்சத்
தண்டனை பெற்ற கைதிகளுக்கு விசேஷமான பாதுகாப்பு வழங்கப்படுவது பற்றிய விவரங்கள்
இடையிடையே வருகின்றன. ஓர் ஆயுள்தண்டனை கைதிக்கு இடுப்பில் ஒட்டியாணம்போல் சங்கிலியால் பிணைத்து அதன் இன்னொருமுனை
வலதுபாதத்தில் சென்று முடிகிறது. தொளதொளப்பான காவிநிற பைஜாமாவில் அவரைப்
பார்க்கும்போது உள்ளே அணிவிக்கப்பட்டுள்ள சங்கிலிகள் தெரியவில்லை.
சிறைச்சாலை, சுத்தமென்றால் அவ்வளவு சுத்தம். சென்னையிலுள்ள அப்போலோ அல்லது மியாட்
மருத்துவமனைகளின் ஆப்பரேஷன் தியேட்டர்களை விடச் சுத்தம் என்றாலும் மிகையில்லை. ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கப்பட்ட படுக்கைகள், நம்மூரின் சில அதிகப் பணம் வாங்கும் உறைவிடப்பள்ளிகளின்
படுக்கை அமைப்பை நினைவூட்டியது. வழங்கப்படும் உணவும், உணவருந்துகூடமும் மிகத்
தூய்மையான சூழ்நிலையைக் காட்டுகின்றன. கைதிகளின் ஆரோக்கியம் மலைப்பூட்டுகிறது.
இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான்
சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்?
****
கிழக்கிலிருந்து மேற்குநோக்கிப் பயணித்து வந்ததால் நேரம்
மிச்சப்படுகிறது. அதாவது, சென்னையில் இப்போது சனிக்கிழமை மாலை ஐந்து மணி ஆகிறது
என்று வைத்துக்கொள்வோம். நியூஜெர்சியில் இப்போதுதான் சனிக்கிழமை காலை ஏழரை மணி
ஆகிறது. அதாவது, சென்னையில் இருப்பவர்களைவிட, இங்கிருப்பவர்களுக்கு உழைப்பதற்கும்
அனுபவிப்பதற்கும் ஒன்பதரை மணிநேரம் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த
வித்தியாசத்தால்தான் அமெரிக்கர்கள் சில விஷயங்களில் நம்மைவிட முன்னேறி
இருக்கிறார்களோ?
****
‘இன்டர்நேஷனல் ரோமிங்’ எனது அலைபேசியில் இருப்பதால், இங்கே வந்திறங்கியவுடனே
ஓர் அழைப்பு வந்தது, இந்தியாவிலிருந்து. மூன்று நிமிடம் பேசினேன். 240 ரூபாய்
ஆயிற்று! உடனே ஏர்டெல்லிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி:
‘ட்டி-மொபைலுடன் தொடர்புகொள்ளுங்கள். இனிமேல் இந்தியாவிலிருந்து வரும்
அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30
ரூபாயும், நீங்கள் இந்தியாவிற்குச் செய்யும் அழைப்புகளுக்கு 40
ரூபாயும்தான் வசூலிக்கப்படும்’. ஆனால்
அதற்கு அவசியமில்லை என்றார்கள் குழந்தைகள். அவர்களுடைய அலைபேசியிலிருந்து இன்னும்
குறைந்த கட்டணத்தில் பேசிவிடமுடியுமாம். மால்தூசியன்
கொள்கையைப் பொய்யாக்கிவிடுகிறார்கள் குழந்தைகள்!
****
மே 31 , 2014 சனிக்கிழமை, நியூஜெர்சிஇன்று மாலை கலிபோர்னிய பயணம். நியூஜெர்சி / நியூயார்க்கிலிருந்து ஐந்துமணிக்கும்
அதிகமான விமானப் பயணம். மொத்தம் ஆறுநாள் பயணம். சென்னையிலிருந்து வந்த துணிமணிகள்
இஸ்திரி கலையாமல் இருப்பதால் அதிக வேலையில்லை. இன்று குளிர் குறைவுதான். கனமான
மேலங்கிகள் தேவையில்லை.
****
சென்னையில் விமான நிலையத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் AT THE HELM என்ற புத்தகம் வாங்கினேன். இந்த வாரம்தான்
வந்ததாம். BHEL, MARUT UDYOG, STEEL
AUTHORITY OF INDIA என்னும்
மூன்று மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அற்புதமாக நிர்வகித்து, ஐந்து
பிரதமர்களின் பெருமதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றவரும், மத்திய அரசில்
தொழில்துறை செயலாளராகப் பணிபுரிந்தவருமான டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
சுயசரிதைதான் அது.
‘வி.கே.’ என்று பரவலாக அழைக்கப்படும் அவருக்கு வயது 90.(பழைய
தஞ்சை மாவட்டத்தின் கருவேலி கிராமத்தில் இவர் பிறந்த தேதி 1925ஜனவரி 14.
பொங்கல் தினமோ?) இப்போதும்
பதவியில் இருக்கிறார்: Chairman of
the National Manufacturing Competitiveness Council. ஒரு
கேபினெட் மந்திரியின் அந்தஸ்துள்ளது. இதற்குமுன் அவர் திட்டக் கமிஷனில்
உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
சாதாரணமாக அரசு ஊழியர்கள் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ஆண்டுகள்தான்
பதவியில் இருக்க முடியும். வி.கே. அவர்கள் அறுபது ஆண்டுகள் இருந்திருக்கிறார்/
இருக்கிறார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் முதலிய மூன்று விருதுகளைப்
பெற்றவர். IIM –Ahmedabad,
IIM-Bangalore, IIT-Delhi இவற்றின்
தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.
(இவருடைய மூத்த சகோதர் திரு வைத்தியநாதனும், ‘கல்கி’ சதாசிவமும் தான்
பங்குதாரர்களாக இருந்து ‘கல்கி’ வார இதழை நடத்தியவர்கள். இப்போது வைத்தியநாதன்
அவர்கள் சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.)
நம் காலத்தின் வெற்றிகரமான தமிழர்களில் வி.கே. அவர்கள் முதன்மையானவர்
என்றால் மிகையாகாது. இந்த நூலில் இருப்பது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல,
இந்தியத் துணைக்கண்டத்தின் அறுபதாண்டு காலத் தொழில் வளர்ச்சியின் சரித்திரம்.
கூடவே சில அரசியல் உண்மைகளும் உண்டு.
ஜூன் இறுதியில், அமெரிக்காவிலிருந்து வருவதற்குள் இந்த நூலைப் படித்து
முடித்துவிடுவேன். பிறிதொருநாளில் முழுதான விமர்சனம் வரும்.
2002 ஆம்
ஆண்டு அப்துல் கலாம் வி.கே. யிடம் கேட்டாராம்: உங்கள் நிர்வாகத்துறை சாதனைகளைப்
பற்றி ஏன் இன்னும் ஒரு நூல் எழுதவில்லை என்று. (அப்போது கலாம் அரசியலுக்கு வந்திராத
நேரம்.) அதே போன்ற கேள்வியைக் கேட்ட இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த கல்வியாளர் திரு
ஆர். சீத்தாராமன் அவர்கள். வி.கே. யின் ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது நூல்
வந்திருக்கிறது. அப்துல் கலாம் படிக்கலாம். ஆனால் சீத்தாராமன்? அவர் அமரராகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. (சீத்தாராமன்,
எனது மாமனார்.)
(வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ், விலை 599 ரூபாய்.)
© Y Chellappa
5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர் பிரமிக்க் வைக்கிறார்..
பதிலளிநீக்கு//நம் காலத்தின் வெற்றிகரமான தமிழர்களில் வி.கே. அவர்கள் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. இந்த நூலில் இருப்பது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் அறுபதாண்டு காலத் தொழில் வளர்ச்சியின் சரித்திரம். கூடவே சில அரசியல் உண்மைகளும் புத்தக விமர்சனம் படிக்க காத்திருக்கிறோம்..
இரண்டு வாரங்கள் பொறுங்கள் பிளீஸ்!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அமெரிக்காவில் உள்ள சிறைக்கைதிகள் பற்றியும் வீ.கே பற்றியும் மிக அருமையாக உள்ளகத் தகவல் அடிப்படையில்எழுதியுள்ளீர்கள் தாங்கள் படித்ததை மற்றவர்களும் படிக்கவேண்டும் என்ற சிந்தனை நோக்குடன் பதிவாக பதிந்தமைக்கு மிக்க நன்றிஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வீ.கே பற்றிய அறியாத செய்திகளை வழங்கியமைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குபொதுவாகவே, தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றிப் புகழ்பெறும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்தப் புத்தகம் வந்த பிறகாவது திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய பரவலான வெளிப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.
நீக்குதம 3
பதிலளிநீக்குவி.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அறிந்தேன். மதிப்புரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் இரண்டே வாரங்களில் நிறைவேற்றுவேன். நன்றி.
நீக்குமுழுதான விமர்சனத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குதிரு விகே அவர்களீன் பெயரைப் பார்த்ததும் வந்தேன். அவர் என் மாமனாருக்கு ஒன்று விட்ட சகோதரர். கருவிலிக் கோயிலை இவரும் திரு வைத்தியநாதனும் தான் திருப்பணி செய்வித்துக் கும்பாபிஷேஹமும் செய்வித்தார்கள். அங்கே தினசரி கால பூஜைக்கும் இவர் தான் ஏற்பாடு செய்திருக்கிறார். முன்னர் ராஜகோபுரம் எடுக்கப்படாமல் இருந்தது. பின்னர் கோவிலுக்கு ராஜ கோபுரமும் எடுத்தாகிவிட்டது. திரு வைத்தியநாதன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இப்போது பரவாயில்லை என்று கேள்வி. விகே சென்னையோடு வரப் போகிறார் என்றும் கேள்விப் பட்டேன்.
பதிலளிநீக்குஉங்கள் தகவல்கள் சரியானதே. அவர்களின் ஆரோக்கியத்திற்குக் கருவிலி-கருவேலி- சர்குணேஸ்வரரைப் பிரார்த்திப்போம்.
நீக்குதிரு.வி.கே பிஎச் இஎல்-ல் பொது மேலாளராக இருந்தவர். என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நினைவுத் திறன் கொண்டிருந்தார் A HARD TASK MASTER. .!
பதிலளிநீக்குமிக்க மகிச்சி ஐயா! தொழிலில் உயர்ந்த பலரைப் பார்க்கும்போது மக்களோடு பழகும் தன்மையும் நினைவாற்றலும் அவர்களுக்குப் பெரிதும் துணை புரிந்தததைக் கண்டிருக்கிறேன்.
நீக்குசுவையான புதிய தகவல்கள்.
பதிலளிநீக்கு[த. ம. 5]
//அ. முஹம்மது நிஜாமுத்தீன்1 ஜூன், 2014 10:05 பிற்பகல்
பதிலளிநீக்குசுவையான புதிய தகவல்கள்.
[த. ம. 5]
பதிலளி நீக்கு//
இதில் "10:05 பிற்பகல்" என்று வருகிறதே, அதை 'இரவு' என்று மாற்றமுடியாதா?
உங்கள் கணினியின் கடிகாரமும், time zoneம் மாறுபடுவது காரணமாக இருக்கலாம். மற்ற இயலாது.
நீக்கு" இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான் சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்? ... "
பதிலளிநீக்குரசித்து படித்த அதே நேரத்தில்,
" நம்மூரின் சில அதிகப் பணம் வாங்கும் உறைவிடப்பள்ளிகளின் படுக்கை அமைப்பை நினைவூட்டியது... "
உள்ளூரின் உண்மை மனதை சுடுகிறது !
" பொதுவாகவே, தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றிப் புகழ்பெறும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை... "
உண்மைதான் ஐயா, அரசியல் தலைவர்கள் அதிகமாக ஆராதிக்கப் படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பக்கபலமான நிர்வாக திறமைசாலிகளை பற்றிய செய்திகள் வெளியே வருவதில்லை.
நூல் விமரிசனத்தையும் படிக்க ஆவலாக உள்ளோம் !
நன்றி
சாமானியன்
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குஇப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான் சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்? //
பதிலளிநீக்குசார் நம்மூர்ல, அங்க போனா படுக்க ஒரு அறையும், கூழோ,களியோ கிடைக்கின்றதே மூன்று வேளையும் என்று ஜெயிலுக்குப் போகின்றவர்கள்தான் அதிகம்! அந்த அளவுக்கு வறுமை சார் இங்கு...நாங்களே கேள்விப் பட்டிருக்கின்றோம்! இனி இது போன்ற சில்லறைக் கைதிகளுக்கு எல்லாம் இடம் இல்லை என்று வெளியில் அனுப்பி விடலாம், ஏனென்றால் ஜெயிலில் இடம் இல்லையாம்! என்ற கவலையில் பல சில்லறைக் கைதிகள் இருப்பதாகத் தகவல்!
90 வயதிலும் பதவி! ஆச்சரியம்தான் சார்! பதவிக்காக அல்ல இந்த ஆச்சரியம்! அவரால் இந்த வயதிலும் மூளைத் திறனுடன் சிந்திக்க முடிகின்றதே என்று நினைத்துத்தான்! இங்கு 50 ஆனாலே ஏதோ வயதாகியது போல மூட்டு வலி, அந்த வலி என்று முடங்குபவர்கள் மத்தியில் இவர்களைப் போன்ற உழைக்கும் மனமும் தொழிலில் உயர்பவர்களையும் காணும்போது அவர்கள் நமக்கு நல்ல உதாரணங்களாகத் திகழ்வதை நினைத்து ஒரு நேர்மறை எண்ணம் உருவாகத்தான் செய்கின்றது! பகிர்வுக்கு மிக்க நன்றி!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
நீக்குகடந்த ஒரு மணி நேரத்தை கணினியில் செலவிட்டதற்கு பயனாய் நாளை என் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு அருமையான ரோல்மாடல்(வி.கே) கிடைத்திருக்கிறார். மிகவும் பயனுள்ளதாய் இருந்தது சார்,நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே ! இது போன்ற ஆளுமைகளை எடுத்துக்காட்டுகளாக வைப்பது, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும் .
பதிலளிநீக்குவணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_14.html
வி.கெ தஞ்சை தமிழர் என்ற செய்தி மகிழ்வு
பதிலளிநீக்குமுழு விமர்சனத்தையும் படிக்கக் காத்திருக்கிறேன்..
http://www.malartharu.org/search/label/oblivion
வி;கே.என்ற சாதனையாளரை அறிஞரைப் பற்றி இது வரை அறிந்ததில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன. அவரது நூல் பற்றிய உங்கள் மதிப்புரையை அறிய ஆவலாக உள்ளோம். நன்றி ஐயா.
பதிலளிநீக்குதிரு வை.கோபாலகிருஷ்ணன் தளது தளத்தில் இன்று உங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/