பதிவு எண் 34/2017
தரமணியில் ஒரு நவமணி
-இராய செல்லப்பா
‘தரமணி’ என்ற இடம் சென்னையில் எங்குள்ளது என்று இப்போது கேட்டால்
எளிதாகச் சொல்லிவிடுவார்கள்: ஐ.ஐ.ட்டி.யின் பின்புறம், மத்தியகைலாஷ் அருகில்,
டைடல் பார்க்கின் பின்புறம், வேளச்சேரியில் இருந்து அடையார் போகும் வழியில் ...என்று.
ஆனால் இருபத்தைந்து வருடங்கள் முன்பு தரமணி என்ற பெயரைக் கேள்விப்பட்டவர்கள்
குறைவு. அவர்களில் நானும் ஒருவன்.
அடையாரில் வங்கி மேலாளராகப் பணிமாறுதல் பெற்று வந்த நிமிடமே,
தரமணியைத் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
****
வங்கி மேலாளரின் முக்கியமான கடமைகள் இரண்டு:
1 ஏற்கெனவே கொடுத்துள்ள கடன்களை வசூலித்தல்
2 புதிய கடன்களைக் கொடுப்பதற்காக டெபொசிட் சேகரித்தல்
வங்கியின் புதிய கிளையொன்றில் மேலாளராகப் பதவி ஏற்பவர்
பாக்கியசாலி. அவருக்கு முதல் கடமை இருக்காது. இரண்டாவது கடமைதான் படுத்தும். பழைய கிளையில் மேலாளராகப் பதவியேற்றால் முதல் கடமையே
முக்கியக் கடமையாகும்.
நமக்கு முன்னால் இருந்த மேலாளர்கள் கொடுத்துச் சென்ற
கடன்களை வசூலிப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும். ஏனென்றால், கடன்களை மூன்று வருடங்களுக்குள் வசூலிக்கவில்லை என்றால்,
அதன்பிறகு வசூலிப்பதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும். வங்கியில் கடன் வாங்கும்போது, புரோநோட்டு
எனப்படும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடன்தாரரின் கையொப்பம் பெறப்படும்.
இந்த புரோநோட்டின் ஆயுள் மூன்று வருடங்கள் மட்டுமே. எனவேதான், பெரும்பாலான வங்கிக்கடன்கள்
மூன்றாண்டுத் தவணைக்குள் செலுத்தும்படியாகவே தரப்படும். (கல்விக்கடன், வாகனக்கடன்,
வீட்டுக்கடன், தொழில்கடன்கள் போன்றவை மூன்றாண்டுகளுக்கு மேலும் செல்லக்கூடியவை
என்பதால் அந்தக் கடன்கள் வழங்கும்போது மூன்றாண்டுகளுக்கு மேலும் செல்லத்தக்கதான
வேறு சில ஆவணங்கள் கடன்தாரரிடமிருந்து பெறப்படும்.)
ஆனால், நடைமுறையில், பல்வேறு காரணங்களால், மூன்றாண்டுக்குள்
பல கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல்
இருக்கும். அந்த புரோநோட்டுக்கள் காலாவதியாகிவிடும் அபாயம் ஏற்படும். எனவே,
அவற்றின் ஆயுளை நீடிப்பதற்காக, கடன்தாரரிடமிருந்து இன்னொரு ஆவணத்தில் கையெழுத்து
வாங்கவேண்டும். அதற்குக் ‘கடன் உறுதி ஏற்பு’ ஆவணம் என்று பெயர். Acknowledgement
of Debt -சுருக்கமாக AOD என்று
ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதில் என்ன எழுதியிருக்கும்?
‘நான் தங்கள் வங்கியில்....தேதியில், ... என்ற கடன் எண்ணில்,
ரூபாய்.... ஐ, கடனாகப் பெற்றுக்கொண்டேன். அதற்காக மேற்படி தேதியில் புரோநோட்டு
எழுதிக்கொடுத்திருக்கிறேன். மேற்படி புரோநோட்டின் கீழ், இன்றைய தேதியில்......(தேதி)
இன்னும் ரூபாய்.....பாக்கித்தொகையாக உள்ளது
என்பதை இதன்மூலம் உறுதி செய்கிறேன்’ என்று இருக்கும். இதன் விளைவு என்னெவென்றால்,
இந்த AOD பெறப்பட்ட நாள் முதற்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேற்படி கடன் ஆவணங்கள்
நீட்டிக்கப்படும்.
****
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசில் வி.பி.சிங்
நிதியமைச்சராக இருந்தபோது ஜனார்த்தன் பூசாரி என்ற மங்களூர்க்காரர் அவருக்குத் துணையமைச்சராக இருந்தார். வங்கித்துறைக்கு இவரே
தனியமைச்சர். அப்போது இவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.
ஒவ்வொரு வங்கியும் ஒவ்வோராண்டும் எவ்வளவு பேருக்குக் கடன்
வழங்கியாகவேண்டும் என்று இவர்தான் நிர்ணயம் செய்வார். அந்தந்த ஊரிலுள்ள காங்கிரசார்,
அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட
கிராமப் பஞ்சாயத்து, அல்லது, நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகள் மூலம்
குறிப்பிட்ட வங்கிகளுக்கு அனுப்புவர். உள்ளூர் நிலவரத்தைப் பொறுத்து, கேரளாவில்
கம்யூனிஸ்ட்டுகளும், தமிழ்நாட்டில் திமுக-வினரும் இந்தப் பட்டியலைத் தயாரிப்பதில் காங்கிரசாருக்கு
ஒத்துழைப்பு நல்கினர்.
பட்டியல் வந்தவுடன், வங்கி அதிகாரிகள் அப்பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களைச்
சந்தித்து உண்மை நிலையை ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் கடன் வழங்கவேண்டும்.
இல்லை, இல்லை, கடன்வழங்கியாக வேண்டும். மறுப்பதற்கு கிளைமேலாளர்களுக்கு
அதிகாரம் இல்லை என்று ஜனார்த்தன் பூசாரி தெளிவுபடுத்தியிருந்தார். அப்படி மறுப்பதானால்,
உரிய காரணத்தை எழுத்துமூலம் தன்னுடைய மண்டல மேலாளருக்குத் தெரிவித்து அவருடைய அனுமதி
பெறவேண்டும். நடைமுறையில் இது சாத்தியமில்லை. பட்டியல் வந்தவுடன், எல்லாருக்கும்
கடன் வழங்கிவிடு என்றுதான் மண்டலமேலாளர் உத்தரவிடுவார். மேலும், பட்டியல்
வரும்முன்பே, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் தமது ஆதரவாளர்களோடு திரண்டுவந்து வங்கியின் வாசலில் முழக்கமிடுவது
வாடிக்கையாக இருக்கும். எனவே மேலாளர்கள் இந்தப் ‘பட்டியல் கடன்’களை முணுமுணுக்காமல்
வழங்கிவிடுவது வழக்கம்.
வழங்கிவிடுவது என்றால் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பது என்று பொருளல்ல. ‘உங்களுக்கு
இந்தக் கடனை வழங்க ஒப்புக்கொள்கிறோம். வங்கிக்கு வந்து உரிய ஆவணங்களில் கையொப்பம்
இட்டுக் கடனைப் பெற்றுக்கொள்ளவும்’ என்ற கடிதத்தை வழங்குவது என்று பொருள்.
இப்படிக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியைத் தமது கட்சியை
வளர்க்கும் பணியாகப் பயன்படுத்திக்கொண்டார் ஜனார்த்தன் பூஜாரி. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும்
பெரிய விழாவாக ஏற்பாடுசெய்து, தாமே வந்து தலைமை தாங்கி, இந்தக் கடன்தாரர்களுக்கு
வங்கியின் கடிதத்தை வழங்கி, அதை ஊடகங்களில் பெரிதாக வெளியிடுவார்.
கடன்பெற்றவர்களும் தாங்கள் வங்கிகளுக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்துவிட்டதாகப்
பெருமிதம் கொள்வர். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகளைத் தன்னால் முடிந்தமட்டும்
அசிங்கப்படுத்துவார் பூஜாரி.
‘கடன் வழங்குவதற்கு வங்கி அதிகாரிகள் இலஞ்சம் கேட்டார்களா?’
என்று மேடையில் விண்ணப்பதாரர்களைக் கேட்பார். ‘அஞ்சவேண்டாம், உண்மையைச்
சொல்லுங்கள். அப்படி யாராவது இலஞ்சம் கேட்டிருந்தால் இந்த மேடையிலேயே அவர்களை
சஸ்பெண்டு செய்கிறேன்’ என்று மிரட்டுவார். அந்த வங்கியின் தலைவரும் மேடையில்
இருப்பார். அவரால் வெறுமனே முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமைச்சரின் முகத்தை
நோக்குவதை மட்டுமே செய்யமுடியும். மொத்தத்தில், வங்கி மேலாளர்களை அச்சுறுத்துவதற்காகவும்,
கடன் வழங்க முன்வராத அதிகாரிகளை மக்கள் மத்தியில் சிறுமைப்படுத்துவதற்காகவுமே விழா
ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றும். வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் எதிர்ப்பு
தெரிவித்தபோதும் அமைச்சரின் போக்கு மாறவில்லை.
இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில், வங்கியின் தலைமையகத்திற்கு
நூற்றுக்கணக்கில் புகார்க்கடிதங்கள் போய்ச்சேரும். (‘எனக்குக் கடன் வழங்க 500
ரூபாய் இலஞ்சம் கேட்டார் உங்கள்.... கிளை மேலாளர்’ போன்ற புகார்கள்.) தமிழ்நாட்டின்
பல கிராமங்களில் பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு
இம்மாதிரிப் புகார்க் கடிதம் எழுதிக்கொடுப்பதை
ஓர் இயக்கமாகவே நடத்தினார்கள்.
இந்தக் கடன்களில் பெரும்பாலானவை திரும்பிவராது என்று தெரிந்தே கொடுக்கப்பட்டவை என்பது புரிகிறதல்லவா? இன்னொரு
காரணமும் உண்டு. ‘யாரும் திருப்பிச் செலுத்தவேண்டாம். அரசாங்கமே தள்ளுபடி
செய்துவிடும்’ என்று கடன்தாரர்களுக்கு அரசியல்தலைவர்கள் முன்கூட்டியே வாக்குறுதி அளித்தபிறகுதான் கடன்விண்ணப்பத்தில் பலர்
கையொப்பம் இட்டிருந்தார்களாம். இதெல்லாம்
இன்றைய இளைஞர்களுக்குப் புதுமையாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு பலகோடிப் பேருக்குத்
திரும்பிவராத கடன்களை அளித்த சுமை, இன்னும் பல வங்கிகளின் அடித்தளத்தையே ஆடவைத்துக்
கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
****
சென்னையில் பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருந்த கிளைக்கு மேலாளராக நான் மாறுதலாகி வந்தபோது மேற்படிக்
கடன்கள் பலவற்றின் ஆயுள் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும் என்ற நிலை
இருந்தது. உடனடியாகக் கடன்தாரர்களைச் சந்தித்து, ஒன்று, கடனை முழுவதுமாக
வசூளித்துவிடவேண்டும், அல்லது, AOD வாங்கியாகவேண்டும். அம்மாதிரி சுமார் நூறு
கடன்கள் தரமணி என்ற பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தன. ஆகவே தரமணியைத் தெரிந்துகொள்ள
வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கடமை எனக்கு ஏற்பட்டது.
மேற்படி கடன்களை அடையாறு பகுதியில் வங்கியாளர்கள் ‘வைஜயந்திமாலா
கடன்கள்’ என்று பெயரிட்டிருந்தார்கள். காரணம், வைஜயந்திமாலா அவர்கள் தென்சென்னை
பாராளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது அவர்சார்பான காங்கிரஸ்
கட்சியின் அனுதாபிகளிடம் இருந்து இம்மாதிரி ஆயிரக்கணக்கில் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டனவாம்.
அப்போது காங்கிரசும் திமுகவும் ஒரே கூட்டணியில் இருந்ததால் இவ்விரு கட்சியைச்
சேர்ந்தவர்களே கடன்விண்ணப்பம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள். ஆனால்
வைஜயந்திமாலாவுக்கு இவர்களில் யாரையும் தெரியாது என்பதே உண்மைநிலை.
இந்தக் கடன்கள் ஒவ்வொன்றும் ஐயாயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம்
ரூபாய் வரையான கடன்கள். சிலர் ஓரளவு தவணைகளைக்
கட்டியிருந்தார்கள். சிலர் எதுவுமே கட்டவில்லை. இவர்களில் அடுத்த இரண்டு
மாதங்களில் காலாவதியாகப் போகும் புரோநோட்டுக்களுக்கு AOD வாங்குவதற்காகக்
கிளம்பினோம். நானும் எனது உதவியாளரான ஒரு அதிகாரியும். எனது லாம்பிரெட்டா ஸ்கூட்டரில்.
****
தரமணியில் அப்போது பெரும்பாலும் குடிசைகளே இருந்தன. தேர்தலை
முன்னிட்டு அவசரம் அவசரமாகப் போடப்பட்ட குடிசைகள். சாலைகள் இல்லை. ஒற்றையடிப்
பாதைகள்தான் இருந்தன. எங்குபார்த்தாலும் வேலிகாத்தான் எனப்படும் சீமைக்
கருவேலமரங்கள் கிளைபரப்பி ஒய்யாரமாக வளர்ந்திருந்தன. மாதாகோவில் ஒன்று இருந்த
ஞாபகம். தரமணி என்ற பெயர்ப்பலகையே இல்லை. எங்கள் ஆவணங்களில் தெருப்பெயர்கள்
இருந்தாலும், தரமணியில் எங்கும் தெருக்களின் பெயர்ப்பலகைகளைக் காண முடியவில்லை.
ஸ்கூட்டரை ஓரிடத்தில் நிறுத்தினோம். மேற்கொண்டு போனால் வண்டி
பங்க்ச்சர் ஆகிவிடும் அளவுக்கு முட்கள் கிடந்தன. மேலும் எங்களைப் பார்த்தவுடனேயே
ஒரு கும்பல் கைகளில் கட்டைகளோடு எங்களை நோக்கி வந்தது. எனவே ஒதுங்கினோம்.
‘யார் நீங்கள்? இந்த வேளையில் தரமணியில் உங்களுக்கு என்ன வேலை?’
என்றார் அவர்களில் அதிக முரடராகக் காணப்பட்ட ஒருவர். மற்றவர்கள் தம் கைகளில் இருந்த கட்டைகளைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டனர்.
‘வணக்கம் நண்பரே! நாங்கள் உங்களுக்கு மிக அருகில் உள்ள
இந்திராநகரில் இருந்து வருகிறோம்’ என்றேன். உதவியாளர் எங்கள் வங்கியின் பெயரைச்
சொன்னார்.’சார் தான் புது மேனேஜர்’ என்று அறிமுகப்படுத்தினார்.
முரடர் தலைவர் சற்றே பின்வாங்கினார். கும்பலைப் பார்த்துக்
கலைந்துசெல்லுமாறு உத்தரவிட்டார். அவர்களும் விலகிச் சென்றனர்.
‘நீங்க புது மேனேஜர் என்பதால் விடுகிறோம். இதுவே பழைய
மேனேஜராக இருந்தால் இவ்வளவு தூரம் கூட வந்திருக்க முடியாது. அதை விடுங்க. போனவரப்
பத்தி நாம்ப ஏன் பேசணும்? நீங்க வந்த விஷயம் சொல்லுங்க’ என்று அதிகார தோரணையில்
கேட்டார். சொன்னேன். கிட்டத்தட்ட நூறு பேரிடம் கடன் வசூலிக்கவேண்டும்.
குறைந்தபட்சம் AOD யாவது வாங்கவேண்டும் என்றேன். அவ்வளவுதான். மனிதர் பொரிந்துதள்ளி
விட்டார்.
‘கடனை வசூல் பண்ணணுமா? பண்ணிடுவீங்களா? நான் இருக்கிற வரையில்
அது நடக்குமா? சரி, போய் வசூல் பண்ணிக்குங்க...’ என்று ஆக்ரோஷமாகக் கூறியவர், ஒரு
விசில் அடித்தார். உடனே கலைந்துபோன கும்பல் மீண்டும் வந்து சூழ்ந்துகொண்டது. கைவசம்
கட்டைகள் தயார் நிலையில்.
என் உதவியாளருக்கு இந்த அனுபவம் பழகியிருக்கவேண்டும். என்
காதருகே வந்து ‘இவனுங்களோட இதே ரோதனை சார். ஊருக்குள்ளே விடமாட்டங்க. பேசாம
சமாதானமாப் போயிடலாம். இன்னொருநாள் வரலாம்’ என்றார். ஆனால் அது சரியாகப் படவில்லை
எனக்கு.
‘வழியை விடுங்க. நாங்க அரசாங்க வங்கியிலிருந்து வருகிறோம்.
எங்களைத் தடுப்பது சரியில்லை. அதோட, கடன் வாங்கினவங்கள மட்டும்தான் நாங்க
பார்க்கப்போகிறோம். மத்தவங்களுக்கு என்ன வேலை? தயவுசெய்து எங்களோட வந்து
தெருக்களையாவது அடையாளம் காட்டுங்க’ என்றேன்.
உடனே முரடர் தலைவன் இளக்காரமாகத் தனது நண்பன் ஒருவனைப்
பார்த்து ‘சார் சொல்றதும் சரிதாண்டா. கூட்டிக்கினு போய் அடையாளம் காட்டு. ஒன்னு
ரெண்டு காட்டு. போதும்’ என்று உத்தரவிட்டான். பின்னாடியே நாங்கள் போனோம்.
கும்பலும் பின்தொடர்ந்தது.
அவர்கள் மட்டும் இல்லையென்றால் சத்தியமாகப் பத்தடி கூட
நடந்திருக்க முடியாது. குடிசைகளில் இருந்து கழிவுநீரானது சாலைகளில் வழிந்து
பாசிபடிந்திருந்தது. கால்வைத்த இடமெல்லாம் வழுக்கியது. தவறினால் முள்வேலிமீதுதான் விழவேண்டும். அல்லது கொர்..கொர் என்று முனகியபடி கூட்டமாக நடமாடிகொண்டிருந்த பன்றிகளின்
மீதுதான் விழவேண்டும்.
எங்கள் ஆவணங்களில் வீட்டு எண், தெருப்பெயர் முதலியன
இருந்தாலும் அவை பயன்படவில்லை. குடிசைகளில் எந்த அடையாளமும் இல்லையே. எனவே கடன்தார்களின்
பெயர்களைப் படிக்க ஆரம்பித்தேன்.
‘செல்வி’ என்றதும் இரண்டு செல்விகள்
வந்தனர். ஒரு ஆள் ஓடிவந்து ‘நீ ஏம்மே வர்றே, ஒன்னயா கூப்பிட்டாங்க?’ என்று ஒரு
செல்வியைப் பின்னுக்கிழுத்தார். இதுதான் சமயம் என்று இரண்டாவது செல்வியும்
பின்வாங்க முயன்றார். ‘ஒங்க பேங்கு எங்க இருக்குதுன்னே தெரியாதே. எவ்ளோ கடன்
குடுக்கப் போறீங்க?’ என்றார். பாவம், புதிதாகக் கடன் கொடுப்பதற்காக வந்திருப்பதாக
நினைத்துவிட்டார் போலும். அவரிடம் உண்மைநிலையை விளக்கினோம். புரோநோட்டை
காட்டினோம். தன்னுடைய கையெழுத்துதான் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் தான் கடன் வாங்கவேயில்லை என்று
சாதித்தார். பலமுறை எடுத்துச் சொன்னபிறகு, ஒரு முதிய பெண்மணியை நோக்கி, ‘ஒம் புள்ள
வரட்டும், என் பேரச் சொல்லி ஊரெல்லாம் கடன் வாங்கி இருக்கு’ என்று முனகினார்.
அப்பெண்மணி முன்வந்து, ‘பாவங்க, இதுக்கு ஒண்ணும் தெரியாது.
ஒரு லாரிக்காரனை லவ் பண்ணிட்டு வூட்டை விட்டு வந்திடுச்சி. அவன் பாதியிலே வுட்டுட்டு
போயிட்டான். என் தம்பிதான் இவள வச்சிக் காப்பாத்தறான். இப்ப வூட்டுல இல்லே.
நாளைக்கி வந்தவொடனே பேங்க்கிக்கு அனுப்பிவெக்கறேன் சார்’ என்றார். ‘இந்த அம்மா
தாங்க கையெழுத்து போடணும். இவங்களையும் அனுப்பிவையுங்க’ என்றேன்.
அதற்குள் கும்பலில் சிலர், ‘அதெல்லாம் வரமாட்டாங்க சார்! குடுக்கும்போதே
கடனைத் திருப்பவேண்டாம்னு சொல்லித்தானே குடுத்தாங்க! அப்ளிகேஷனுக்கே ஐநூறு ரூபாய்
குடுத்தமே’ என்றனர். இன்னொருவன் முன்வந்து, ‘நாங்க வாங்கின கடன்ல கூட ஆளுக்கு
முன்னூறு ரூபா பிடிச்சிட்டுதானே குடுத்தாங்க’ என்றான்.
‘இவனுங்க இப்படித்தான் சார் சொல்லுவாங்க’ என்றார் என்
உதவியாளர்.
‘தவமணி’ என்று அடுத்த கடன்தாரரைக் கூப்பிட்டேன். ‘எம்
பொஞ்சாதி தாங்க’ என்றார் ஒருவர். ஒரு பக்கம் திரும்பி ’ஏய்’ என்று கூவினார். முப்பது
வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஓடிவந்தார். புரோநோட்டைக் காட்டினேன். ‘என் கையெழுத்து
தாங்க’ என்றாள். அவள் கணவன் அதை வாங்கிப் பார்த்து, ‘ஏம்மே, ஒனக்கு புத்தி
இருக்குதா? இதுல தவமணின்னு கையெழுத்து இருக்குது. ஒம்பெரு நவமணி இல்லியா? மூதேவி’
என்றான்.
அவனை இடக்கையால் குத்தியபடி நவமணி பேசினாள்: ‘நீ எல்லாத்தையும்
மறந்துடுவே. ஏற்கெனவே கனரா பேங்க்குல நவமணிங்கற பேர்ல லோன் வாங்கிட்டமில்ல. இந்த பேங்க்குல
தவமணின்னு பேர் போட்டுக்கலாம்னு நீதான சொன்ன. இப்ப இல்லேன்னு ஏமாத்தலாமா?’ என்றாள்.
நான் உதவியாளரைப் பார்த்தேன். இது பெரிய சிக்கலில்
கொண்டுவிடுமே என்று பயந்தேன். அவர் உடனடியாக ‘இந்தாம்மா, இது ஒன் கையெழுத்துதானே,
இதோ, இந்தப் பேப்பர்ல அதே மாதிரி கையெழுத்துப் போடு’ என்றார். அந்த பெண்ணும்
நியாயத்திற்குக் கட்டுப்பட்டவராக ‘தவமணி’ என்று கையெழுத்து போட்டார். அப்பாடா, ஒரு கடன் காலாவதியிலிருந்து தப்பியது.
அடுத்ததும் ஒரு பெண் பெயர்தான். அமுதா. வயது எழுபது
இருக்கும். ‘சத்தியமா நான் தாங்க ஒங்க பேங்குல வந்து கடன் வாங்கினேன். ஆனா
கட்சிக்காரங்க பாதிப் பணத்தை வாங்கிட்டானுங்க சார். நான் எப்படிங்க கட்டுறது?
தள்ளுபடி பண்ணிடுங்க சார்’ என்றாள்.
‘இதுல கையெழுத்து போட்டா தான் தள்ளுபடி குடுக்கறத பத்தி
நடவடிக்கை எடுப்பாங்க’ என்று கூறியபடி கையெழுத்து வாங்கினார் உதவியாளர்.
இப்படியாக சுமார் இருபதுபேரிடம் AOD வாங்கினோம். ஏழெட்டுப்பேர்
அடுத்தநாள் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்து போடுவதாக வாக்களித்தார்கள். ‘இங்க
வேண்டாங்க, பிராப்ளம் ஆயிடும்’ என்றார்கள். மனைவிக்குத் தெரியாமல் கணவன் லோன்
வாங்கியதை பிராப்ளம் என்று அவர்கள் சொன்னதாக மறுநாள் ஒருவர் சொன்னார்.
இருட்டிவிட்டது. ஓரிரு தெருவிளக்குகள் தவிர, குடிசைகளில்
எங்கும் மின்விளக்கு இல்லை. எனவே நன்றி சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தோம். இப்போது
எங்களைத் தொடர்ந்து யாரும் வரவில்லை, இரண்டு பேரைத் தவிர.
அவர்களில் ஒருவர் கேட்டார். ‘நாளைக்கு எல்லாரையும் நான் பேங்குக்கு
அழைத்துவருகிறேன். ஒரு AODக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்றார். ‘கனரா பேங்கில்
ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள். இந்தியன் பேங்கில் நூறு ரூபாய் கொடுத்தார்கள்...’
பாவிகளா! மூன்று வருடமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல்,
இப்போது வெறும் கையெழுத்து போடுவதற்கு அதே பேங்க்கில் இருந்து லஞ்சம் கேட்கிறீர்களே,
இது அடுக்குமா?
அந்த இன்னொருவர் என்ன கேட்கப்போகிராறோ என்று பயத்துடனேயே
நடந்தேன். அவர் பேசவேயில்லை. கையில் ஒரு காலி சாக்குப்பை வைத்திருந்தார்.
ஸ்கூட்டர் வைக்கும் இடம் வந்தது. வண்டியின் மீது சகதி படிந்து
ஒரே நாற்றமாக இருந்தது. சாக்குப்பை நண்பர் ஓடிவந்து, ‘இருங்க சார். இந்தப் பன்றிகள்
படுத்துற பாடு சொல்லி மாளாதுங்க’ என்றபடி, தனது சாக்குப் பையால் வண்டியைத் துடைத்தார்.
பிறகு கண்ணில் விஷமத்துடன் ‘வண்டியை இப்ப மூவ் பண்ணுங்க சார்’ என்றார். முடியவில்லை.
பின் சக்கரம் பன்ச்சர் ஆகியிருந்தது.
‘இதற்காகத்தான் நான் வந்தேன்’ என்று சிரித்தார் அவர். என்னிடம்
சாவியை வாங்கி டூல்பாக்சை திறந்தார். பத்து நிமிடத்தில் ஸ்டெப்னியை
மாற்றிக் கொடுத்தார். ‘AOD வாங்கறதுக்கு யார் வந்தாலும் இப்படித்தான் பன்ச்சர்
பண்ணிடுவோம். தரமணியில இதாங்க வழக்கம். கனரா பேங்க்குன்னா ரெண்டு சக்கரமும் பண்ணுவோம். ஒங்க பேங்க்குன்னா ஒரு
சக்கரம் மட்டும்தான்’ என்றார்.
‘ஏன்னா, நமக்குப் பக்கத்துல இருக்கீங்க. கிழிஞ்ச நோட்டு மாத்தணும்னா
ஒங்க பேங்க்குலதான் முடியும்.’
அடுத்தமுறை தரமணியில் AOD வாங்குவதற்கு ஸ்கூட்டரில் போகவில்லை.
ஆட்டோவில் போய் இறங்கினோம்.
****
© Y Chellappa