தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்
-இராய செல்லப்பா
(கொஞ்சம் நீளமான பதிவு)
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமானது, செல்லப்பிராணிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்பது.
குறிப்பாக நாய்களை. (அமெரிக்காவில் போல் பூனைகள், அணில்கள், பாம்புகள் போன்றவற்றைச் செல்லப்பிராணிகளாகக் கொள்பவர்கள் இன்னும் இந்தியாவில் அதிகம் இல்லை எனலாம்.)
எங்களது ‘கதவு சாத்தப்பட்ட சமூகத்தில்’ ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உண்டு. சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்து இந்தப் புறநகர்ப் பகுதிக்கு நாங்கள் இடம் மாறியபோது ஒரு சில நாய்களே தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கும். அவையும் முன்னாள் ‘தெரு’ நாய்களே. குடியேறிகளில் எவரிடமும் சொந்த நாய்கள் இல்லை.
குடியிருப்புகளில் மிகவும் முதலில் குடிவந்த ஒருவர், தனக்குக் குழந்தைகள் இல்லாததால், அந்தத் தெருநாய்களைத் தத்து எடுத்துக்கொண்டாரென்று சொல்வார்கள். காலையும் மாலையும் அவற்றிற்குத் தவறாமல் பிஸ்கட் போடுவார். அவையும் நன்றி பிறழாமல் அவர் பின்னாலேயே போகும், வரும். ஆனால் குடியிருப்பில் இருந்த மற்றவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எனவே நாய் ஆர்வலர்கள் தங்கள் அன்பு மிகுதியை வெளிக்காட்டுவதற்குப் போதிய நாய்கள் இல்லாமல் அவதிப்பட்டார்கள்.
இருந்த ஒரு சில நாய்களும் அதிகம் சப்தம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நாய்-ஆதரவாளரைப் பிடிக்காத சிலர், நாய்களின் காலநேரமற்ற குரைப்பினால் தங்கள் தூக்கம் கெடுவதாக அவ்வப்பொழுது மனம் நொந்து பேசுவதுண்டு.
ஆகவே, அப்போதிருந்த குடியிருப்பின் சொந்தக்காரர்கள் கூடிப் பின்வரும் முடிவெடுத்தார்கள்: (1) தற்போது நாய்களுக்கு பிஸ்கட் போடுபவரிடம் அன்பாகப் பேசி, நாய்கள் எழுப்பும் அகால ஓசையைக் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டும். (2) குடியிருப்பில் மேலும் புதிய நாய்களை அனுமதிக்கக் கூடாது. சொந்தக்காரர்களே நாய்களுடன் குடிவருவதைத் தடுப்பதற்கில்லை என்பதால், அவர்களிடமும் அன்பாகப் பேசி, அவர்களின் நாய்களைப் பழைய இடத்திலேயே விட்டுவிட்டு வருமாறு ஊக்குவிக்கவேண்டும். (3) வாடகைக்கு வருபவர்கள் நாய்களை வைத்திருக்க அனுமதியில்லை. (4) கட்டிடக் தொகுப்பின் நாலு பக்கமும் சுற்றுச்சுவர்களை ஒழுங்காக எழுப்பி வெளி நாய்கள் உள்ளே வந்துபோகாதபடிக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும்.
இதில் நான்காவது அம்சம் மட்டுமே ஓரளவுக்குச் செயல்படுத்த முடிந்தது. பிஸ்கட் போடும் நாய் ஆர்வலரோ, “இவ்வளவு நாள் என்னை நம்பி வளர்ந்த நாய்களைத் திடீரென்று கைவிட முடியுமா?” என்றார். “வேறு யாராவது அவற்றைப் பொறுப்பாக வளர்க்க முன்வந்தால் கொடுத்துவிடத் தயார்” என்றார். யாரும் முன்வரவில்லை என்பதால் அவருடைய பிஸ்கட் வரலாறு தொடரவேண்டியதாயிற்று.
அடுத்த சில மாதங்களிலேயே நிறைய நாய்கள் குடியிருப்பில் சேர்ந்துவிட்டன. பெரும்பாலும் சொந்த நாய்கள். சொகுசான நாய்கள். ஓரிரண்டைத் தவிர மற்றவை ஓரடி உயரம் கூட இல்லாதவை. பூனையைக் கண்டாலும் பயந்து உரிமையாளரை அண்டிக்கொள்ளும் ரகம். பிறகு என்னத்திற்கு அவற்றை வளர்க்கிறார்களோ தெரியாது. சில நாய்களின் விலையில் ஒரு ஸ்கூட்டர் அல்லது பழைய காரே வாங்கிவிடலாமாம். தொலையட்டும். அந்த நாய்களால் யாருக்கும் தொல்லை இல்லைதான்.
ஆனால் ஒருமுறை சற்றே உயரமாயிருந்த ஒரு சொந்த நாயை அதன் உரிமையாளர் செல்லமாகக் கட்டவிழ்த்துவிட, அது எதிர்த்திசையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த சில சிறுவர்களில் ஒருவனைக் கடித்துவிட, மறுபடி விவாதம் தொடங்கியது. நாயின் உரிமையாளர் மருத்துவச் செலவைத் தானே மேற்கொண்டு விவாதத்தை முடித்துவைத்தார்.
ஆனால் சொந்த நாய்களைக் காலை வேளையில் வெட்டவெளிக்கு அழைத்துச் சென்று அவற்றை இயற்கையோடு ‘இயங்க’ விடுவதன்மூலம் உண்டாகும் அசுத்தத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு உரிமையாளர்கள் யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. எல்லாருமே மாதம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கும் 'பெரிய' மனிதர்களே. (அமெரிக்காவில், நாயை வெளியில் அழைத்துச் செல்பவர்கள், கூடவே அவற்றின் கழிவுக்காக ஒரு பிளாஸ்டிக் பையையும் கையோடு கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன்.)
சொந்த நாய்களால் வந்த இன்னொரு பிரச்சினை, நாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு அலுவலகத்திற்குப் போகிறவர்களைப் பற்றியது. மாலையில் வழக்கமான நேரத்திற்குள் உரிமையாளர் வந்துசேரவில்லை என்றால் அந்த நாய்கள் போடும் சப்தம் கொஞ்சமா?
ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை நாய்களின் ‘சினைக்காலம்’ என்கிறார்கள். அப்போது நேரம் காலம் இல்லாமல் தெருநாய்கள் காமக் களியாட்டத்தில் ஈடுபடும். விளைவு, அடுத்த பருவக்காலத்திற்குள் குடியிருப்பின் மறைவான பகுதிகளில் எல்லாம் நாய்க்குட்டிகள் மயம்! அவற்றை விரட்டியடிக்கத் தாய் உள்ளங்கள் அனுமதிக்காது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் காலையில் எழுந்ததும் அந்தக் குட்டிகளைப் பார்க்கவேண்டும் என்று ஆடம் பிடிக்கும். அப்போது சிறு சிறு தட்டுக்களில் நாய்களுக்குப் பாலும் வைக்கப்படும். மிக விரைவில் நாய்க்குட்டிகள் அந்தச் சிறுவர் சிறுமியரை அடையாளம் கண்டுகொண்டு அவர்களின் அடுக்கு வீடுகளுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்துவிடும். பிறகென்ன, வழக்கமான ‘நாய் -விவாதம்’ மறு உயிர்பெற்றுவிடும்.
பெரிய குடியிருப்பு என்பதால் சட்ட ஆலோசனை பெறப்பட்டது. உள்ளூர்ப் பஞ்சாயத்தின் உதவியை நாடுமாறு கூறப்பட்டது. அவர்களோ, நாய் பிடிக்கும் ஊழியர்களோ, அதற்கான கூண்டு வண்டியோ தங்களிடம் இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள். என்றாலும் சில மாதங்களில் எப்படியோ சில நாய்களைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
ஆனால் நாய்களின் எண்ணிக்கை குறைவதாயில்லை. காலியாக இருந்த மேலும் பல வீடுகளில் மக்கள் குடியேற ஆரம்பித்தவுடன், அவர்களின் கருணையால் தெருநாய்களும் வாழ்வில் வளம் பெற ஆரம்பித்தன. அடுத்த சினைப் பருவத்தின் பிறகு ஈனப்பட்ட குட்டிகள் அதிக ஆரோக்கியத்துடன் காணப்பட்டன.
நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால், டில்லியில் சஞ்சய் காந்தி புரிந்த சாதனையைப் பின்பற்றவேண்டும் என்று ஒரு விலங்கின ஆர்வலர் தெரிவித்த யோசனையைப் பரிசீலித்த சான்றோர்கள், நாய்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய ஒப்புதல் அளித்தனர். அதற்கான செலவுக்காக ஆர்வலர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. ஆனால் ஒரு நாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் தேவை என்பதால் அதிக நாய்களை வசப்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல, கு.க. செய்யப்பட்ட நாய்கள் விரைவிலேயே குடியிருப்பை விட்டு ஏனோ ஓடிவிட்டன. அவற்றின் இடத்தைப் புதிய தெரு நாய்களும், ஏற்கெனவே ஈனப்பட்ட குட்டிநாய்களும் பிடித்துக்கொண்டன.
இதற்கிடையில் ஒரு குழந்தையைக் கடிக்கப்போன நாயைப் பெரியவர் ஒருவர் அடித்துவிட, ‘பெஞ்சி’ல் இருந்த ஐ.ட்டி. ஊழியர் ஒருவர் ‘நீலச்சிலுவை’க்கு அலைபேசியில் தகவல் சொல்ல, அவர்கள் வந்து பெரியவரின் ‘அடாத செயலு’க்காக அவர்மீது வழக்குப் பதிந்துகொண்டார்கள். ஆனால், எதிர்காலத்தில் நாய்கள் அவ்வாறு கடித்தல் தொழிலில் ஈடுபடாது என்று உத்தரவாதம் அளிக்கும் கடமை தங்களுடைய சட்டத்தில் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்தார்கள்.
வேறு வழியின்றி, குடியிருப்பாளர்கள் நாய்கள் பிரச்சினையை இன்னொரு கொரோனா பிரச்சினைபோல் அலட்சியப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
****
சில பெரியவர்களைப் பொறுத்தவரை இன்னொரு பிரச்சினையும் ஏற்பட்டது. அதுதான் இரவு நேரம் அல்லது விடியற்காலையில் நாய்கள் ஊளையிடும் சப்தம்.
சிறு வயதில் என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்: யாருக்கு அடுத்த சில நாட்களில் மரணத்தைத் தரவேண்டும் என்று சித்ரகுப்தனின் ஆவணம் சொல்கிறதோ, அந்தத் தெருவுக்கு முன்கூட்டியே யமன் தன் எருமை வாகனத்தில் வந்து, சரியானவர் மீது அடையாளம் இட்டுச் செல்வானாம். ஆனால் யாரும் தன்மீது பழிசுமத்திவிடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருப்பானாம். அதையொட்டி அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு வியாதி அதிகரித்து மருத்துவமனைக்குப் போக நேருமாம். அல்லது பாத்ரூமில் வழுக்கி விழுதல் அல்லது அடிதடியில் ஈடுபட்டு காயம் படுதல், அல்லது தவறான காரணங்களுக்காக போலீசின் கவனத்தைப் பெறுதல் போன்றவை நேருமாம்.
இவர்களுக்கு மரணம் நேருமானால், மக்கள் யமதருமனைக் குறை கூற மாட்டார்கள் அல்லவா?
ஆனால் யமன் யாரைக் குறிவைத்து வருகிறான் என்பதை நாய்களால் பார்க்கமுடியுமாம். உடனே சம்பந்தப்பட்டவர்களுக்காகத் தன் வருத்தத்தைத் தெரிவிக்கும் விதமாக ஊளையிடத் தொடங்குமாம். மரணம் நடக்கப்போகும் நாள் வரை இந்த ஊளையிடல் தொடங்குமாம்.
இந்தக் கருத்தை நான் நம்பாவிட்டாலும் அது உண்மையானதைப் பலமுறை கண்டிருக்கிறேன். முக்கியமாக, வயதில் பெரியவர்களும் நீடித்த நோயாளிகளும் இதை நம்புவதாகவும் கேள்விப்படுகிறேன்.
எனவே இரவு நேரங்களில் நமக்கு மிக அருகில் கேட்கும் நாய்களின் ஊளையிடல் ஒருவிதமான பயத்தையே உண்டுபண்ணுகிறது. உடனே நமக்குத் தெரிந்து அபாய நிலையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களின் பெயர்கள் கண்ணில் தெரிவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒருவேளை, அடிபட்ட காயத்தாலோ, அல்லது வயிற்றுவலி, உடல்வலி காரணமாகவோ நாய்கள் இப்படி அழுமோ என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. உடனே நினைவுக்கு வந்தவர் திருமதி கீதா ரெங்கன் அவர்கள்தான். அவருடைய புதல்வர் விலங்கியல் மருத்துவர். ஆய்வுப் படிப்பிற்காக இப்போது அமெரிக்காவில் இருப்பவர்.
“அப்படியெல்லாம் நாய்கள் அழவே அழாது” என்று அடித்துச் சொன்னார் அவர். எப்படிப்பட்ட உடல் வலியையும் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை நாய்களுக்கு உண்டாம்.
“ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் அவை அழுவதுண்டு” என்றார். அதாவது, தன்னை வளர்த்தவர்கள் தன்னை ஒதுக்கிவைத்தாலோ, தனக்குத் தெரியாமல் விட்டுவிட்டுப் போய்விட்டாலோ அவை விடாமல் அழுமாம். ஆனால் அது வழக்கமான ஊளையிடும் ஓசைபோல் இருக்காது என்றார்.
அவர் சொன்னது உண்மை தான் என்பதை இரண்டு அமெரிக்கப் பயணங்களில் நான் புரிந்துகொண்டேன்.
முதல் பயணத்தின்போது, டில்லியில் இருந்து நியூஜெர்சி வந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். என் குடும்ப நண்பரின் சம்பந்தி அவர். மிக உயரமான உயர்வகை நாய் ஒன்றை அவர் வளர்த்துவந்தது எனக்குத் தெரியும். “ஆறு மாதங்கள் இங்கே இருப்பீர்கள் அல்லவா? உங்கள் நாயை என்ன செய்தீர்கள்?” என்றேன்.
அவர்கள் சிரித்துக்கொண்டே, “எங்கள் உறவினர் வீட்டில் பத்திரமாக இருக்கிறது” என்றார். செலவுக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் என்று ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மீண்டும் அமெரிக்காவில் சந்தித்தேன். வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு அவருடைய நாயைப் பற்றிய பேச்சு வந்தது. கணவன் மனைவி இருவர் முகத்திலும் மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அவர்கள் சொன்னது இதுதான்:
சென்ற பயணத்தின்போது யார் வீட்டில் விட்டு வந்தார்களோ அவர்கள் நாயைச் சரிவர கவனிக்கவில்லையாம். ஆறே மாதத்தில் மெலிந்துவிட்டதாம். எனவே இம்முறை வேறு யாரிடமாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று பேசிக்கொண்டார்களாம். அப்போதெல்லாம் இந்த நாய் மிகவும் கவனமாக அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்குமாம். சரி, இம்முறை ‘நீலச்சிலுவை’ காப்பகத்திலேயே விடுவதென்று முடிவுசெய்து, அந்த இடம் எப்படி இருக்கும் என்று பார்த்துவருவதற்காகத் தங்கள் நாயுடன் சென்றார்களாம். இடம் தருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்களாம். ஆனால் அங்கிருந்த ஏராளமான நாய்களைப் பார்த்தவுடன் இவர்களின் நாய் வண்டியிலிருந்து கீழிறங்கவே மறுத்துவிட்டதாம். ஆனால் அதை இவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
அமெரிக்காவிற்குக் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பு நீலச்சிலுவை அதிகாரி ஒருவர் இவர்கள் வீட்டிற்கு வந்து நாயின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்தாராம். அப்பொழுதே அது முரண்டு பிடித்ததாம்.
பயணத்திற்கான பெரிய பெட்டிகளில் சாமான்களை இவர்கள் அடுக்கிக்கொண்டிருப்பதைக் கண்கொட்டாமல் அது பார்த்துக்கொண்டிருந்ததாம். “டோன்ட் வொரி, கண்ணா! ஆறே மாதத்தில் வந்து விடுவோம். நீலச்சிலுவையில் உன்னை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள்” என்று அதனுடன் கொஞ்சிப் பேசினாலும் அதன் மறுமொழி திருப்தியாக இல்லையாம். வழக்கத்திற்கு மாறாக தன் விளையாட்டுத் தனத்தை எல்லாம் இழந்து சோகமாக இருப்பதாக இவர்களுக்குப் பட்டது.
அடுத்த நாள், பிரயாண ஏற்பாடுகளுக்காக அவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு நாயிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்களாம். கடைகளில் வாங்குதலை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவாகிவிட்டதாம். வழக்கமாக கார் ஓசை கேட்டதும் குரைத்து ஜன்னல் வழியாகத் தன்னை வெளிப்படுத்தும் நாய் அன்று மௌனமாக இருந்ததாம். கதவைத் திறந்து உள்ளே வந்தால் நாய் இருப்பதற்கான அறிகுறியே இல்லையாம். பதறிப்போய் வீடு முழுவதும் தேடியதில், ஒரு பாத்ரூம் அருகில் கிடந்ததாம் அந்த நாயின் உயிர் இல்லாத உடம்பு!
“காலையில் நீங்கள் போனதில் இருந்தே உங்கள் நாய் அழுதுகொண்டே இருந்தது” என்று இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ஒரு மாது தெரிவித்தாராம்.
கணவன் மனைவியரின் அழுகை அடங்கச் சிறிதுநேரம் பிடித்தது.
****
இளம் வயதில் எனது எழுத்தார்வத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் தமிழ்வாணன். ‘கல்கண்டு’ வார இதழில் அவருடைய கருத்தாழமிக்க கேள்வி பதில் பகுதியும், ‘சங்கர்லால்’ துப்பறியும் மர்மத் தொடர்கதைகளும் அவற்றில் வரும் பாத்திரங்களின் அழகிய தமிழ்ப்பெயர்களும் என்னை மிகவும் ஈர்த்தன.
நாய்களின் ஒரு முக்கிய குணாதிசயத்தைப் பற்றி சங்கர்லால் கூறுவதாகத் தமிழ்வாணன் எழுதியது ஞாபகம் வருகிறது.
அக்காலத்தில் வீடு புகுந்து திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், குறிப்பிட்ட வீட்டின் அருகில் வந்தவுடன், அந்த வீட்டு நாய்க்கு ரொட்டித்துண்டோ அல்லது மாமிச உணவோ முதலில் கொடுப்பார்களாம். அதனால் அது குரைப்பதை நிறுத்திவிடுமாம். வந்த காரியம் முடிந்து அவர்கள் திரும்பிச் செல்லும்போது அந் நாயின் முகத்தில் சிறிது மிளகுத்தூளை வீசுவார்களாம். அதனால் மோப்பம் பிடிக்கும் சக்தியை அது தற்காலிகமாக இழந்துவிடுமாம்!
இதைச் செயல்முறையில் நான் கண்டதுண்டு.
ஒருமுறை என் சகோதரி வீட்டில் வாயிற்காவலனாய் இருந்த தெருநாய் ஒன்று அனைவரையும் அச்சுறுத்தி வந்தது. நாய்வண்டியாளர்கள் அதைப் பிடித்துக்கொண்டு போனாலும் சிலநாளில் மறுபடியும் அது இவள் வீட்டிற்கே வந்துசேர்ந்தது. அப்போதுதான் நான் தமிழ்வாணனின் யோசனையைச் சொன்னேன்.
கோவளத்திலிருந்து சவாரியை இறக்கிவிட்டுப் போகும் ஒரு ஆட்டோ ஓட்டுநர், அந்த நாயைத் தன்னுடன் அனுப்புமாறும் இருநூறு ரூபாய் கொடுத்தால் அதைக் கண்காணாத தூரத்தில் விட்டுவிடுவதாகவும் முன்வந்தார். “எக்காரணத்தைக் கொண்டும் நாயைக் கொலை செய்யக் கூடாது” என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு பணத்தையும் நாயையும் கொடுத்தோம்.
கிளம்பும் முன்பு, ‘ஒரு பொட்டலத்தில் மிளகுத்தூள் கொடுங்கள்’ என்று கேட்டுவாங்கிக்கொண்டார். நான் வியப்படையவில்லை. சங்கரலாலை அவர் படித்திருக்க மாட்டாரா என்ன?
அதன் பிறகு அந்த நாய் திரும்பி வரவேயில்லை!
(எல்லாரும் கொரோனாவைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாறுதலுக்காக நாய்களைப் பற்றி எழுதினேன். கோபம் இல்லையே?)
*****