செவ்வாய், மே 10, 2022

கடவுளிடம் கவிஞர் சொன்ன கண்ணன் கதை

 28 கடவுளிடம் கவிஞர் சொன்ன கண்ணன் கதை 

(இன்று கிழமை திங்கள் -4)

அமெரிக்காவில் 28ஆவது நாள் 

 

வடமொழி மூலத்தின் தமிழாக்கம்: இராய செல்லப்பா. 

(ஸ்ரீமன் நாராயணீயம்- 38, 39ஆம் பத்துகள்) 

கிருஷ்ணாவதாரம் – கண்ணன் பிறந்தான்

கவிஞர் நாராயண பட்டதிரி குருவாயூரப்பனுடன் பேசுகிறார்: 

இன்பமே வடிவாகிடப் பெற்ற இறைவனே! நீ அவதரிக்க வேண்டிய நன்னாள் நெருங்கியபொழுது, வானத்தில் கவிந்திருந்த மழைமேகங்களெல்லாம் நின் மேனிநிறமாகவே ஒளிர்ந்ததன்றோ? (38-1)

பூமியின் எல்லாத் திசைகளிலும் மழை பொழிந்து குளிர்ச்சியை ஊட்டியது. நல்லோர் மனமெல்லாம் தாம் விரும்பிய ஒன்று நிகழவிருக்கிறது என்று ஆனந்தம் கொண்டன. வானில் மேல்நோக்கி நிலவு எழுந்திடும் நடு இரவில், மூவுலகங்களின் துயரங்களையும் போக்கும்விதமாக நீ கிருஷ்ணனாக அவதரித்தனை.  (38-2)

சிறையில், குழந்தை வடிவில் வெளிவந்த நீ, அடுத்த கணமே, உலகின் அழகனைத்தும் கொண்டவனாய், ஒளிவிடும் மணிமுடியும், கைவளை, தோள்வளை,   முத்துமாலைகள் இவற்றுடன், சங்கு, சக்ரம், கதை, தாமரைப்பூ  ஆகியவற்றைக் கரங்களில் தாங்கி நீலவண்ணக் கண்ணனாக மிளிர்ந்தனை அன்றோ!  (38-3)

மகிமை பொருந்திய திருமகளாம் லக்ஷ்மி நினது மார்பினில் சுகமாக வீற்றிருந்தாள். நின்னையே நோக்கியிருந்த அவளது அழகிய கடைக்கண் பார்வையில் கொஞ்சிய நாணத்தின் ஒளியானது, சிறைச்சாலையின் அசாதாரணமான சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்குரியதாக்கியது.(38-4)

கண்ணா! சிறையில் இருந்த வசுதேவர், இத்தகைய மேன்மைமிக்க வடிவத்தில் நின்னைக் கண்டதுமே மயிர்க்கூச்செறிந்தார். ஆன்றவிந்த ஞானியர்க்கும் காணக் கிடைக்காத நின் எழில்வடிவம், தன் கண்ணெதிரே தோன்றியதும், அவரது குரல் தழுதழுத்தது. தேனைக் கண்ட வண்டுபோல் நின் வடிவத்தின் இனிமையைக் கண்களால்  பருகினார். பின் கனிவோடு நின்னை வணங்கினார். (38-5)

இறைவனே, எனது துன்பமாகிய கொடியினை நினது வாள் போன்ற விழிகளால் அறுத்தெறிய மாட்டாயா? , பரம்பொருளே, உனது கருணை பொங்கும் விழிகளால் எனது துயரங்களை நீக்க மாட்டாயா?’ என்று கண்ணீர் வழிய ஆனந்தக் கூத்தாடினார் வசுதேவர்.  (38-6)

அதுவரை நின்னைக் கருவில் தாங்கிப் பெற்றெடுத்த தேவகி, நின்னை மகனாகக் கொண்ட மகிழ்ச்சியில், ஆனந்தக் கண்ணீரால், மழையில் நனைந்த கொடிபோல் ஆனாள். நின் புகழைப் பாடினாள்.  நீ அவர்களின் முன்னிரண்டு பிறவிகளைப் பற்றிப்  பேசினாய்.   அவர்கள் இருவருக்கும் மகனாக நீ பிறக்கும் மூன்றாவது பிறவி இது என்று விளக்கினாய்.போதும், நீ மானிடக் குழந்தையாக மாறிவிடுஎன்று தேவகி கேட்டதால் உடனே அப்படியே ஆனாய். (38-7)

இறைவனே, பிறகு நந்தகோபரிடம் இக்குழந்தையைக் கொடுத்துவிட்டு, அங்கு பிறந்திருந்த பெண் குழந்தையைச் சிறைச்சாலைக்குக்  கொண்டுவருமாறு வசுதேவரைத் தூண்டினை அன்றோஞானியரின் நெஞ்சுக்கினிய நீ,   தாமரை மலரில் அமரும் அன்னப்பிள்ளைபோல், வசுதேவரின் கரங்களில் அமர்ந்துகொள்ள, அவர் சிறைச்சாலையில் இருந்து கிளம்பினார். (38-8)

அதே சமயம், நந்தகோபரின் மனையில் பெண் குழந்தையாகப் பிறந்திருந்த யோகமாயை யானவள், தனது யோகசக்தியால்  உடனே, அந்தப் பகுதியில் இருந்த எல்லா மனிதர்களையும் உறக்கத்தில் ஆழ்த்தினாள். வசுதேவர் குழந்தையோடு வெளியேறுவதற்கு வசதியாகச் சிறைச்சாலையின் கதவுகளும் தாமாகவே திறந்துகொள்ளச் செய்தாள். (38-9)

அந்த நள்ளிரவில், ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன் நின்மீது மழைத்துளி படாமல் தன் தலைகளையே குடையாக்கி, தலை மேலிருந்த நாகரத்னங்களையே விளக்காக்கி, வழிகாட்டிக்கொண்டு உடன்வர, வசுதேவர் நின்னைக் கோகுலத்திற்கு எடுத்துச் சென்றார். அத்தகைய மகிமைமிக்க செயல்கள் புரிந்த குருவாயூரப்பனே, எனது நோய்களை நீக்கி அருள வேண்டும். (38-10)

கண்ணா, நின்னைக் கையில் ஏந்திக்கொண்டு யதுகுலத் தலைவராகிய வசுதேவர் கோகுலத்தை நோக்கிச் செல்கையில், யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததைக் கண்டார். ஆயின், மந்திரஜாலம் செய்தாற்போல, யமுனையில் அவர் கால்வைத்த கணமே அது, அவரது கணுக்கால் அளவே ஆகுமாறு குறைந்தது.  என்னே வியப்பு! (39-1)

கோகுலத்தில் நந்தகோபர் வீட்டை வசுதேவர் அடைந்தபோது, கதவுகள் எல்லாம் திறந்தே கிடந்தன. பெண்டிர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஒரு பெண் குழந்தை மட்டும் அழுதுகொண்டிருந்தது. நின்னை அக் குழந்தையின் படுக்கையில் கிடத்திவிட்டு, அந்த மாயப் பெண்குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு விரைந்து நடந்தார், சிறைச்சாலையை நோக்கி.(39-2)

சிறைச்சாலையில் தேவகியின் கையில் குழந்தையைக் கொடுத்தார் வசுதேவர். அது உடனே அழ ஆரம்பித்துவிட்டது. அதைக் கேட்டவுடன்குழந்தை பிறந்துவிட்டதுஎன்று காவலர்கள் கம்ஸனிடம் தெரிவிக்கவும், அவன் அவசரமாகத் தலைவிரி கோலத்தில் ஓடி வந்தான். தன் தங்கையின் கையில் தான் எதிர்பார்த்த ஆண் குழந்தைக்குப் பதில் ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தான்.  (39-3)

தன்னை ஏமாற்ற விஷ்ணு செய்த மாயமே இது என்று கம்ஸன் ஐயம் கொண்டான். நீரிலுள்ள தாமரைத்தண்டை ஓர் யானை எவ்வாறு அலட்சியமாகப் பறிக்குமோ, அவ்வாறு மிகுந்த சினத்தோடு, அப்பெண் குழந்தையைத் தன் தங்கையின் கையிலிருந்து பிடுங்கினான். பிறகு, அக்குழந்தையைக் கல்சுவற்றின் மேல் மோதி அறைந்தான்.  (39-4)

இறைவனே, எப்படி நினது அன்பர்கள் மரணத்தின் பிடியில் இருந்து விரைவாகத் தப்புவார்களோ அதுபோல், அப் பெண்குழந்தையாக வந்த யோகமாயை, கம்ஸனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பூமியில் எங்கும் படாமல், வானத்தை அடைந்து, ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களை உடையவளாக இன்னொரு புதிய வடிவம் மேற்கொண்டாள். (39-5)

ஓ கம்ஸா, கொடியவனே! என்னை அறைந்து கொல்வதால் நீ அடையப்போவது என்ன? உன்னை அழிக்கப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான். நீ ஓடிப்போய் உன்னைக் காத்துக்கொள்என்று கூறிவிட்டு அந்த மாய உருவம் மறைந்துவிட்டது. அந்த யோகமாயை, பின்னர் கோவில்களில் வைத்து வழிபடும் தகுதி பெற்றாள். (39-6) 

அடுத்த நாள் காலையில் கம்ஸன், தனது பூதகணங்களான பிரலம்பன், பாகன், பூதனை ஆகியோரிடம் இவ்விஷயத்தைக் கூறினான். உடனே அவர்கள் செயலில் இறங்கினார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகள் எங்கிருந்தாலும் உடனே கைப்பற்றிக் கொன்றார்கள். இரக்கம் என்பதே இல்லாதவர்கள் எதைத்தான் செய்யமாட்டார்கள்? (39-7)

முகுந்தனே! யாதவர் தலைவன் நந்தகோபனின் மனைவி  யசோதையின் படுக்கையில் கிடந்த நீ, இளம்கால்களை உதைத்துக்கொண்டு மென்குரலில் அழுதனை. உடனே, கோகுலமே விழித்துக்கொண்டது. அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதை அனைவரும் அறிந்துகொண்டனர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையுண்டோ?  (39-8)

கண்ணா, உன்னைக் காணவேண்டுமென்று தவம் செய்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், அவர்களுக்குக் கிட்டாத புண்ணியம்  இந்த யசோதைக்குக் கிடைத்துவிட்டதே! தன் அருகில்  புத்தம்புது  காயாம்பூப் போல் கிடந்த நின் மேனியை யசோதை கண்ணால் கண்டு மகிழ்ந்துகையில் எடுத்து ஆனந்தித்து, மார்பில் இட்டுப் பாலமுதம் ஊட்டினாள்.  தொட்டுத்தொட்டுக் கொஞ்சினாள். (39-9)

நந்தகோபன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. நினது நன்மையை முன்னிட்டு அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். அவனது குடிமக்களும் நின் பொருட்டு பல்வேறு யாகங்களையும் நற்கருமங்களையும் செய்வித்தனர். அப்படிப்பட்டமூவுலகிலும் இன்பத்தை வழங்கும் குருவாயூரப்பனேநோயிலிருந்து என்னைக் காப்பாயாக. (39-10)

புத்தகம் கிடைக்குமிடம்: தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை. 

வாட்சப்  & பேச : 7305776099 

இணையதளம்: http://ttptrunkpotti.com 

6 கருத்துகள்:

  1. பெயரில்லா10 மே, 2022 அன்று AM 7:57

    நாராயணீயத்தில் கிருஷ்ண அவதாரம் மிகவும் சிறப்பான ஒன்று! படிக்கப் படிக்க நம்மை அந்த யுகத்திற்கே அழைத்துச் செல்லும்! உங்கள் பொழிப்புரை மனதை வருடுவது போல் இருக்கிறது! வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
  2. ராமாவதாரத்துக் கோசலைதான் யசோதையாம்.  இராமனைப் பிரிந்த துக்கம் தீர பரிகாரமாக கண்ணனை வளர்த்தாளாம்.  சமீபத்தில் எங்கோ படித்தேன்.  என்ன, வாட்ஸாப் பகிர்வாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10 மே, 2022 அன்று AM 10:44

    நாராயண!நாராயண!
    குருவாயூரப்பா திருவருள்
    தருவாய் நீயப்பா!

    பதிலளிநீக்கு
  4. தங்களுடைய "ஸ்ரீ நாராயணீயம் " புத்தகம் படித்து மெய் மறந்தேன் . அற்புதமான தமிழ் உரை. அழகான புகைப்படங்கள். மனம் கவரும் வரை படங்கள், ஓவியங்கள்.

    தங்கள் மொழி பெயர்ப்பு எங்களுக்கு நாராயணீத்தை புரிந்து கொள்ள மிகவும் உபயோகமாக இருந்தது. கிருஷ்ணனை எங்களுக்கு மிகவும் அருகில் கொண்டுவந்து மனசில் அரியாசனம் ஏற்றியது.

    ஒவ்வொரு தசங்கங்களுக்கும் என்ன ராகம் என்று கொடுத்து இருந்தது என்னைப் போல நாராயணீம் பாராயணம் பண்ணுபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

    தாமரைப் பதிப்பகம் மிகவும் தரமான காகிதத்தில் அச்சிட்டு வண்ண படங்களை கண்ணைக் கவரும் வண்ணம் அமைத்து ஒரு ஆன்மீக பெட்டகமாக இந்த புதையலை தந்து இருக்கிறார்கள்.

    அனைவரும் வாங்கி பயனடைவோம். குருவாயூரப்பன் அருள் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  5. நூல் அறிமுகம் நன்று. விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வாங்கி படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு