ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

எது இலக்கியம்?


எது இலக்கியம்?

-இராய செல்லப்பா, சென்னை 

19-4-2020 அன்று காணொளிக் காட்சிவழியாக நடைபெற்ற குவிகம் இலக்கிய அளவளாவலில் வாசித்த கட்டுரை
**

ரிக்வேதத்தில் நாஸதீய சூக்தம் என்ற பகுதியில்  மூன்றாவது ஸ்லோகத்தில் இடம்பெறும் ஒரு வாக்கியத்தை உயர்ந்த இலக்கியத்திற்கு உதாரணமாகக் காட்டுகிறார் சுவாமி விவேகானந்தர்.

 'தம ஆஸீத் தமஸா கூட(goota)  மக்ர (magra) அப்ரகேதம் ஸலிலம் ஸர்வமா இதம்' - இந்தப் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன்பு எங்கும் இருட்டும் வெள்ளமுமாக இருந்ததாம். ஒன்றை மற்றொன்று அடையாளம் காண முடியாமல் இருந்ததாம். 'இருளை இருள் போர்த்திக்கொண்டிருந்தது' - என்று பொருள். 5000 வருடங்களுக்கு முந்திய இலக்கியம் இது. 

குவிகம்  பதிப்பகம் அண்மையில்  வெளியிட்ட எனது  புத்தகம்
ஐம்பது வருடங்களுக்கு முன்பு கண்ணதாசன் இதே போன்ற ஒன்றை எழுதினார். 'நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது' என்று. எத்தகைய கவித்துவம்!

உலகில் முதலில் தோன்றிய இலக்கிய வடிவம் கவிதையே என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லாக் கவிதைகளுமே இலக்கியம் தானா என்பதுதான் கேள்வி.

'இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை' என்ற ஒரே ஒரு இரண்டுவரிக் கவிதை மட்டும்தான் எ. அரங்கநாதன் எழுதினார். 1973இல். இன்றுவரை நினைக்கப்படுகிறார்.

'அவன் பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது' என்றார் வைரமுத்து 1982இல்.

'எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும்' என்றார் வாலி இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு.

'இருப்பதற்குத்தான் வருகிறோம், இல்லாமல் போகிறோம்' என்றார் நகுலன்.

'விளக்கு புதியது என்கிறாய், ஆனால் வெளிச்சம் பழையதல்லவா?' என்கிறார் அப்துல் ரகுமான்.

'நேற்றைக்கும் நாளைக்கும் நடுவில் நாம் நின்று தவிக்கின்றோம் இன்றைக்கு!' என்கிறார் எஸ் வைதீஸ்வரன்.

இந்தக் கவிதைகளை எல்லாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வதில் நமக்குத்  தயக்கம் இல்லை. ஆனால் கவிதை என்ற பெயரால் வெற்று வார்த்தைகளை  அடுக்குபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?

நாற்பத்தாறு வருடங்களுக்கு முன்பு இராணிப்பேட்டையில் இருந்து நான் சென்னைக்குக் குடிபெயர்ந்தேன். மேற்கு மாம்பலம் கோவிந்தன் ரோடு ஒன்பதாம் நம்பர் வீட்டில் ஆறு குடித்தனக்காரர்களில் நானும் ஒருவனாகச்  சேர்ந்து கொண்டேன். அப்போது அடிக்கடி கவிஞர் சுரதா அவர்களைச் சந்திப்பதுண்டு. ஒருமுறை சாகித்ய அகாடமி கருத்தரங்கில்  அவரைப் பார்த்தபோது அகாடமியை  அவர் மிகவும் புகழ்ந்தார். காரணம் அவர்கள்தான் விருந்தில் தவறாமல் அசைவ உணவு பரிமாறுவார்களாம்.

அப்போது சுரதா அவர்களைக் கேட்டேன் கவிஞன் என்பவன் யார், கவிதை என்பது என்ன என்று. காரணம், அப்போது மேகம், வானம், ஜன்னல், நிலவு என்று மெட்டுக்குப்  பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு புதுக் கவிஞருக்கு அதீதமான விளம்பரம் கிடைத்துவிட்டதைப் பார்த்து மு.மேத்தாவும், நா.காமராசனும், தமிழன்பனும் இன்னும் பல வானம்பாடிக் கவிஞர்களும் கூட திரைப்படங்களுக்குப் பாட்டெழுதிப் பிறவிப்பயனை எய்திவிடப்   போராடிக்கொண்டிருந்தார்கள். கவிதை என்பதும்  இலக்கியம் என்பதும் திரையுலகை மட்டுமே சார்ந்த விஷயம்போல ஒரு பிரமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். சுரதாவும் திரைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால் ‘அமுதும் தேனும் எதற்கு’ போன்ற சில பாடல்கள்தான்.   

வெந்த கோழிக்குஞ்சின் சதைப்பகுதியை அனுபவித்து மென்றுகொண்டிருந்த சுரதா என்னைத் தீர்க்கமாக நோக்கி, "தம்பி, தாய் என்பவள் யார்?" என்று கேட்டார். கேள்வியின் நோக்கம் புரியாமல் நான் விழித்தேன்.

அவரே பதில் சொன்னார்: "ஒரே ஒரு குழந்தை பெற்றிருந்தாலும் அவள்  தாய்தான். குறைப்பிரசவத்தில் கருவை இழந்திருந்தாலும் அவள் தாய்தான். ஏனென்றால் அடுத்த முறை அவள் முழு பிரசவத்தைத் தரக் கூடும் அல்லவா?" என்றார்.

என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. தான் பெற்ற குழந்தையைப்  பெருமையோடும் பெருமிதத்தோடும் அனைவருக்கும் காட்டி மகிழும் தாய்போல, எந்த ஒருவன் தன்னுடைய எழுத்தைத் துணிச்சலோடும், பெருமையோடும், சுயகௌரவத்தோடும் வாசகனுக்கு அளிக்க முன்வருகிறானோ அவன் படைப்பதற்குப் பெயர்தான்  இலக்கியம்.
***

நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் விகடனில் ஜெயகாந்தன் அறிமுகமாகிக் கொண்டிருந்தார். 'அக்னிப்பிரவேசம்', 'யாருக்காக அழுதான்?', 'இனிப்பும் கரிப்பும்', 'புது செருப்பு கடிக்கும்', 'தேவன் வருவரா?' போன்ற அவருடைய முத்திரை கதைகளை பிரமிப்போடு படித்துக்கொண்டிருந்த  காலம். ஆனால் அண்மையில் அதே கதைகளை நான் மீண்டும் படித்தபோது, இந்த பிரமிப்புக்குக் காரணம் அவருடைய எழுத்து வன்மையை விடவும், எனது இளம்வயதுக்கே உரிய அறியாமையும், அனுபவமின்மையும், அறிவுத்தேடலும்தாம்  என்று தெளிவாகத் தெரிந்தது.

அதேசமயம், 'குறிஞ்சி மல'ரில் வரும் பூரணியும் அரவிந்தனும்,  'பொன் விலங்கி'ல் வரும் மோகினியும் சத்தியமூர்த்தியும் பல ஆண்டுகள் கழித்து அண்மையில் படித்தபோதும் என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை. 'மணிமொழி நீ என்னை மறந்துவிடு' என்று தமிழ்வாணன் கூறினாலும் அவளை மறக்க முடியவில்லை. சுஜாதாவும் பாலகுமாரனும் அப்படியே. கல்கியும் விக்ரமனும் சாண்டில்யனும் கோவி மணிசேகரனும் அகிலனும் மாயாவியும் சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமய்யா உள்ளிட்ட மணிக்கொடி பரம்பரையும் அதே போன்ற இன்னும் பலரையும் எத்தனை முறை படித்தாலும் அதே பிரமிப்பை மீண்டும் பெற முடிகிறதே அது எப்படி?

‘கற்புள்ள பெண்கள் நாலு பேர் பெயரைச் சொல்லுங்கள்’ என்று ஒரு திரைப்பத்தில் பாக்யராஜ் கேட்பார். உடனே ‘நளாயினி, வாசுகி, சீதை, கண்ணகி…’ என்று எல்லாரும் கூறுவார்கள். உடனே பாக்யராஜ், ‘அப்படீன்னா ஒங்க பெண்டாட்டிகள் எல்லாம் கற்புள்ளவர்கள் இல்லையா?’ என்று கேட்டு அதிரவைப்பார். ஆகவே ஒப்புக்கொண்டு விடுகிறேன்: இந்தக் கருத்தரங்கில் பங்குபெறுபவர்களிலும் இலக்கியவாதிகள் நிச்சயம் உண்டு! 
***

திருக்குறள் போன்ற சங்க நூல்களையும் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களையும் இலக்கியங்கள் தாமென்று தமிழ் உலகம் புரிந்து கொள்வதற்குப் பதினெட்டு நூற்றாண்டுகளும் ஓர் உ.வே.சா.வின் வரவும்  தேவைப்பட்டன. பாரதியாரின் கவிதைகள்  பொதுவெளியில் உலாவருவதற்கு அவர் இறந்து ஐம்பது  ஆண்டுகள் தேவைப்பட்டன. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கூட, எழுதப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகே விற்பனையில் சாதனை படைக்கத் தொடங்கியது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, காலத்தால் அழியாது நிற்பதே இலக்கியத்திற்கான சரியான  அளவுகோல் என்று தோன்றுகிறது. 
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நிகழ்கால வாசகர்களை விடவும் எதிர்கால வாசகர்களாலேயே இலக்கியம் எது என்பது தீர்மானிக்கப்படுகிறது எனலாம்.

ஒருவேளை எழுத்தாளன் உயிரோடு இருக்கும்பொழுதே அவனது எழுத்திற்கு இலக்கியம் என்ற அங்கீகாரம்  கிடைக்குமானால் அது அவனுடைய  நல்வினைப்பயனே. ப்படிப்பட்டவர்களைத்தான் ‘வாழும்போதே வரலாறானவர்கள்’ என்கிறார் வலம்புரி ஜான்.

நன்றி, வணக்கம்.
**** 
(குவிகம்  அமைப்பாளர்களான கிருபானந்தன் - சுந்தரராஜன் இருவருக்கும், ZOOM வழியாக இந்த அளவளாவலில் பங்குபெற்ற 21 இலக்கிய ஆர்வலர்களுக்கும் நெறியாளர் டாக்டர் ஜெ. பாஸ்கரன் அவர்களுக்கும்  
எனது சிறப்பான நன்றிகள் உரித்தாகுக.)

வெள்ளி, ஏப்ரல் 17, 2020

உலகை உலுக்கும் மரணங்கள்


BLOG-17 April 2020

உலகை உலுக்கும் மரணங்கள் 

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு  25-3-2020 முதல் அமலில் உள்ளது.
நாள்தோறும் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் இறந்தோரின் எண்ணிக்கை பெரிதாகக்  காட்சிப்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைவதாகவும், அந்த உடல்களைப் பாதுகாத்துவைக்க இடமின்மையால், வீதிகளிலெல்லாம் தார்பாலின் கொட்டகை அமைத்து சவப்பெட்டிகள் இடப்பட்டிருப்பதாகவும் தெரியவரும்போது நெஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகிறது. 


நமது பிள்ளைகளும் தெரிந்தவர்களின் பிள்ளைகளும் இரண்டு வீட்டிற்கு ஒருவராவது அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் நல்ல செய்தி வரவேண்டுமே என்பதைவிடவும், தீய செய்தி வந்துவிடக்கூடாதே என்றுதான் எண்ணவேண்டி இருக்கிறது. 

வரிசை வரிசையாக சவப்பெட்டிகளைப் பார்த்தேன். நியூயார்க்கில் மட்டுமின்றி ஸ்பெயினிலும்  இத்தாலியிலும் இராணுவ வண்டிகளில் சவங்கள் எடுத்துச்செல்லப்படுவதைக் கண்டேன். ஏன், நமது விழுப்புரத்திலேயே ஒரு காட்சி வந்தது. டில்லி மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனாவைப் பெற்றுக்கொண்டு விழுப்புரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துபோன ஒருவரின் உடலை உறவினர்கள் பதினைந்தடி தூரத்தில் இருந்துகொண்டே, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாகவே சவக்குழிக்குள் வழியனுப்பிவைத்ததைப்  பார்த்தபோது, இந்திய ரூபாயின் மதிப்பை விடவும் மனித வாழ்வின் மதிப்பு  எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

வாய்விட்டு அழவும் முடியாமல், கைதொட்டு உடலைத் தூய்மைப்படுத்தவும்  முடியாமல், மத வழக்கங்களின்படி சடங்குகளைச் செய்யவும் முடியாமல், சவப்பெட்டியின் மீது கூடக்  கைவைக்க முடியாமல்….என்ன ஒரு துரதிர்ஷ்டம்! 

இறந்துபோனவர்களில் நல்லவர்கள் இருக்கலாம், வாய்மையாளர்கள் இருக்கலாம், சாதனையாளர்கள் இருக்கலாம், சமுதாயத்தின் நன்றிக்குப் பாத்திரமானவர்கள் இருக்கலாம். பட்டாசுகள் முழங்க, பறையடித்துக்கொண்டும் கூத்தாடியும் வழியனுப்பிவைக்க ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் தயாராக இருக்கலாம். ஆனால் யாருக்கும்  எந்த வாய்ப்பும் அளிக்காமல் கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சி மனித சமுதாயத்தின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டதை  என்ன சொல்வது!

கொரோனா இல்லாமலே தினமும் பலபேர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி ஊர்வலங்களின் கதியும் இதேதான். என்னுடன் வங்கியில் நாற்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த நண்பர் ஒருவர் இந்த  கொரோனா காலத்தில் இயற்கை மரணம் எய்தினார். அது ஒன்றுதான் அவர் செய்த பாவச்செயல். ஏனெனில் அவர், எறும்புக்கும் தீங்கு விளைவித்ததில்லை. உடன் பணியாற்றியவர்களுக்கு அவர் என்றுமே தொல்லை தந்தவரில்லை. வீண் வம்பு பேசாதவர். பொய்யான தகவல் சொல்லிப் பயணப்படி பெற்றதில்லை. தன் நெற்றியில் மெல்லிய கோடாக மின்னிய விபூதியைப் போலவே மென்மையான மனம் படைத்தவர்.

அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு நாங்கள் யாருமே போகமுடியாதபடி கொரோனா ஊரடங்கு சதிசெய்துவிட்டது. அவருடைய முகத்தையும் இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

எனக்கு அருகாமையில் இருந்த இன்னொருவீட்டில் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த தாயார், ஊரடங்கு நாளில் மரணம் அடைந்துவிட்டார். ஒரே மகன் வெளிநாட்டில் இருக்கிறார். விமானப் பயணங்களுக்குத் தடை இருப்பதால், பாவம், பெற்ற தாய்க்கு இறுதிச் சடங்கு செய்யவும் பேறிழந்தவரானார் அவர்.

நல்ல இடத்தில் திருமணம் ஆகவேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல பிள்ளைகள் பிறக்கவேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல வேலை, நல்ல பதவி, தேர்தலில் வெற்றி ..கிடைக்க வேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். தொலையட்டும். 

செத்துப் போவதற்குமா அதிர்ஷ்டம் வேண்டும், ஐயா?

எல்லா வசதிகள் இருந்தும், கொள்ளிவரை வருவதற்குக்  கூட்டம் தயாராக இருந்தும், அனாதை பிணம்போல் மரணிப்பதை வேறெப்படிக் காரணப்படுத்துவது?

விரைவில் விலகட்டும் கொரோனா என்று வேண்டுவோமாக. அரசின் கெடுபிடிகளுக்கு உட்படுவோமாக.  சமூக விலகலைக் கடைப்பிடிப்போமாக. மூக்கையும் வாயையும் மூடுதுணியால் இறுக்குவோமாக. நம்மால் யாருக்கும் கொரோனா பரவாமல் இருப்பதாக.

நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்களின் நினைவுகளுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்துவோமாக.

-இராய செல்லப்பா, சென்னை